07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 30, 2008

மாமனிதர் புதுகை.அப்துல்லா

ரமலான் பெருநாளை கொண்டாடும் என் அன்பு உறவுகளுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் ஒரு மாமனிதரைப் பற்றி எழுதுவது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


இந்தப் புன்னகை பூ புதுக்கோட்டை அப்துல்லாவை நான் அறிமுகப்படுத்தித் தான் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று இல்லை. இவர் ஏற்கனவே எல்லோருக்கும் மிகவும் தெரிந்த, பலருக்கும் நெருங்கிய நண்பராய் இருக்கும் ஒரு பிரபலம் தான்.

இவரைப் பற்றி நமக்கெல்லாம் தெரிந்தது கொஞ்சம் தான். இவர் குறித்தப் பல தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

மிக உயர்ந்தப் பதவியில் இருந்தாலும், எந்த வித பந்தாவும் இல்லாமல் எல்லோருடனும் மிக எளிமையாய் பழகுபவர். தனது படிப்பாலும், திறமையாலும் முன்னேறியிருந்தாலும் எளிமையை விரும்பும் இவரது பதிவுகளில் கொஞ்ச நஞ்ச மொக்கையல்ல, மெகா மொக்கைகளை காணலாம். அகில உலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் வலையுலக‌ ரசிகர் மன்றத்தின் பொருளாளராக பெறுப்பேற்றுத் தன் பணியை திறம்பட செய்கின்றார் என்றால் அதற்கு மேல் இவரது மொக்கைகளைப் பற்றி நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன?

இடதுகை கொடுப்பது வலதுகைக்கு தெரியக்கூடாது என பைபிளில் ஒரு வசனம் உண்டு. அதை முழுமையாகக் கடைபிடிப்பவர் இந்த மாமனிதர். சமீபத்தில் ( சமீபத்தில்னா,போன மாசம்தான்) பரிசல்காரரின் வலைப்பூவில் வளரும் இளம் சதுரங்க வீராங்கனை செல்வி. மோகனப்பிரியாவுக்கு, பயிற்சிக்கும், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் நிதியுதவி வேண்டி ஒரு வேண்டுகோள் அறிவிப்பு காணப்பட்டது. பிறர் யோசிக்கும் முன்னர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தனது நிறுவனத்தாருடன் பேசி அந்தப் பெண்ணிற்கு அனைத்து உதவிகளையும் செய்து முடித்துவிட்டார் அண்ணண் அப்துல்லா. இனி செல்வி.மோகனப்பிரியாவிற்கு சர்வேதச பயிற்சியாளர் அமைத்து பயிற்சியளிப்பதில் இருந்து, அவரது போட்டிக்கான அனைத்து செலவுகளையும் அண்ணண் வேலைபார்க்கும் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். இத்தனை நாட்கள் மோகனப்பிரியாவின் தந்தையார் பட்ட சிரமங்களுக்கு ஒரு விடுதலை. திறமையுள்ள அப்பெண் தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேற வேண்டியதுதான்.

இதுவரை எந்த பயிற்சியாளரும் இல்லாமல் தனது சொந்த முயற்சியாலேயே பல வெற்றிகளை குவித்த மோகனப்பிரியா, இனி அப்துல்லா அவர்களின் மூலமாக கிடைத்த உதவிகளால் முறையான பயிற்சியும் பெற்று வெற்றி பெறுவார் என்பது திண்ணம். இது குறித்து பரிசல்காரர் எழுதிய பதிவு. இந்த செய்தி கூட பரிசல்காரரின் பதிவின் மூலம் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாமல் இவர் செய்த உதவிகள் மிக ஏராளம்.

ஒரு சக பதிவருக்கு அவரது உடல்நிலையைக் கருதி ஒரு சில வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அய்யா அவர்கள் முயற்சி மேற்கொண்ட போது, சிங்கைப் பதிவர்களாகிய நாங்கள் எல்லோரும் சேர்ந்து உதவலாம் என பேசி முடிவு செய்தோம். அதை செயல்படுத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நான் சீனா அய்யாவுடன் பேசிய போது தேவைக்கு அதிகமாகவே உதவிகள் வந்து குவிந்துவிட்டன. எனவே இனி யாரிடமும் பணம் பெற எங்களால் இயலாது என்று அய்யா சொல்லிவிட்டார். பின்னர் தான் தெரிந்தது, எவ்வளவு குறைகிறது என்று கேட்டுவிட்டு, உடனே 20 நிமிடத்தில் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டுமோ அங்கு கொண்டுபோய் கொடுத்தவர் நம் அப்துல்லா என்று. இப்படி இவர் செய்யும் உதவிகள் ஏராளம்.

அப்துல்லாவால் பிறருக்கு உதவ முடியும், மொக்கையாய் பல பதிவுகளை எழுத முடியும் வேறு என்ன இருக்கு அவரைப்பற்றி சொல்ல என்று நினைப்பவர்கள் கட்டாயம் மோகன் கந்தசாமியின் வலைப்பூவை படிக்காதவர்கள் என்றுதான் அர்த்தம். மோகனின் வலைப்பூவில் இவர் எழுதிய திராவிடமும், கம்யூனிசமும் என்ற ஆராய்சிக் கட்டுரை இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. அதைப் படித்தால் இவரது வாசிப்பின் ஆழமும், எளிய நடையில், எல்லோருக்கும் புரியும் வண்ணம் கருத்துக்களை தொகுத்து எழுதிய இவரது திறனும் புரிபடும்.

அக்கட்டுரையில் எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் கம்யூனிசம் என்பது பொருளாதார சமநிலையை வேண்டுவது, திராவிடம் என்பது சமூக அல்லது சாதிய சமநிலையை வேண்டுவது என்ற ஒரு வரி விளக்கம். எனக்கு இந்த வரிகளைப் படித்த போது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. இதைவிட எளிதாய் கம்யூனிசத்தையும், திராவிடத்தையும் விளக்க இயலாது.

இத்தனை ஆழமான வாசித்தலும், எழுதும் திறனும் கொண்ட இவர் இனி மொக்கையாக மட்டுமே எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இடையிடையே பல நல்லப் பதிவுகளையும் தர வேண்டும் என்று உரிமையோடு அவரை கேட்டுக்கொள்கிறேன்.

அறுவடையோ அதிகம் வேலையாட்களோ மிகக் குறைவு என்ற பைபிள் வசனத்தைப் போல நம் நாட்டில் உதவித் தேவைபடுவோர் எண்ணிக்கை மிக அதிகம். உதவுபவர்களின் எண்ணிக்கை குறைவு. அப்துல்லாக்கள் இன்னும் அதிகமாக வேண்டும். இவரைப் போல பலரும் இருக்கின்றார்கள். வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அய்யாவும் அந்த நல்ல உள்ளங்களில் ஒருவர் தான். எனக்கு நன்கு தெரிந்தவற்றை மட்டும் எழுதியுள்ளேன். மேலும் பலர் இருப்பார்கள். உங்களுக்கு தெரிந்த நல்ல உள்ளங்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் ரமலான் வாழ்த்துக்கள். அப்துல்லாவை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்த வாருங்கள். ஒரு வாரம் விடுமுறையில் சென்றிருக்கும் அப்துல்லா திங்கட்கிழமை தான் திரும்புவார் என்றாலும் உங்கள் பின்னூட்டங்களின் மூலம் வாழ்த்த வாருங்கள்.
மேலும் வாசிக்க...

Monday, September 29, 2008

மனசுக்குள் மத்தாப்பும், பொடிப் பொண்ணும்.

என் மனம் கவர்ந்த இருபதிவர்களை குறித்த பதிவு இது.
இவர்களை உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். ஆனாலும் இவர்களைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

மனசுக்குள் மத்தாப்பு

மென்பொருள் துறையில் இருப்பதாலோ என்னவோ மிக மென்மையான காதல் கதைகளை எழுதி குவிக்கிறார் இந்த பதிவர். மிக எளிய நடையில், சரளமான ஓட்டத்தில் கதை எழுதும் இவரது தனிச்சிறப்பே கதையின் இடையே வரும் கவிதைகளும் அந்த கதைக்கும், கவிதைக்கும் ஏற்றப் படங்களும் தான்.

இவரது கதாப்பாத்திரங்கள் எல்லாம் மிக சரளமான எளிய நடையில் உரையாடுவது போல் கதையை அமைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு. அத்தோடு இவரது கதைகளில் எல்லாம் முடிவுகளும் எப்போதும் இனிமையான முடிவுகளாகத்தான் இருக்கும். தன் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்தைக் கூட கதைக்குள் ஒரு அழகிய கவிதையை பொதிந்து வைத்து அதற்கும் சில அழகிய படங்களை சேர்த்து அழகாய் வாழ்த்துச் சொல்லும் பாசக்கார அக்கா இவர்.

தந்தையின் நினைவில் இவர் வடித்துள்ள இந்தக் கவிதை அனைவரின் உள்ளங்களையும் கட்டாயம் உருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மனைவியின் மனதைக் கவர்வது எப்படி, பெண்களின் மனதைக் கவர்வது எப்படி என்றும் பல நல்ல பதிவுகளையும் இட்டு ரங்கமணிகளுக்கும், ரங்கமணியாக முயற்சிப்பவர்களுக்கும் பல பயனுள்ள ஆலோசனைகளையும் அள்ளித்தெளித்துள்ளார். இந்தப் பதிவுகளில் கூட உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் அழகிய படங்களின் அணிவரிசை உண்டு.

அழகிய பாடல் வரிகளை தலைப்பாக கொண்ட பல தொடர்கதைகளை எழுதியுள்ள இவரது, அத்தனை கதைகளிலும் கதையின் ஓட்டத்திற்கு தகுந்த அழகிய கவிதைகளும், படங்களும் இருக்கும் என்று நான் தனியே சொல்லவும் வேண்டுமோ? எனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ??? என்ற‌ த‌லைப்பில் இவ‌ர் எழுதிய‌ அழ‌கிய‌ தொட‌ர்க‌தையும், அந்த‌க் க‌தையில் அவ‌ர் எடுத்துக் கொண்ட‌ க‌தைத் த‌ள‌மும், கதையை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் நகர்த்திய விதமும், கவித்துமான‌ முடிவும் மிக‌வும் இனிமையாய் இருக்கும். படிக்காதவர்கள் படித்து இன்புறுங்களேன்.


கவிதை எழுதுபவர்களுக்கு கவிதாயினி எனப் பட்டமளிக்கின்றார்களே, நல்ல கதையும், கவிதையும் அதற்கு ஏற்ற படங்களையும் சேர்த்துத் தருபவர்களுக்கு என்ன பட்டம் அளிக்கலாம் என்று பின்னூட்டமிடுங்கள் , கட்டாயம் இந்த கதாசிரியருக்கு ஒரு சிறந்த பட்டம் அளிக்க வேண்டும்.


இத்தனைச் சிறந்த படைப்புகளுக்கு சொந்தக்காரரான இவர் சமீபகாலமாய் பணிச்சுமையின் காரணமாக எழுத இயலாமல் இருப்பது வருத்தமளிக்கும் செய்தி, பணிச்சுமையிலிருந்து விடுபட்டு, விரைவில் மீண்டும் சிறந்த படைப்புகளை அளிக்க வாழ்த்துவோம்.

பொடிப் பொண்ணு

நம்ம பக்கத்து வீட்டுல வாலுத்தனம் செஞ்சுகிட்டு இருக்க ஒரு சின்னப் பெண்ணைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவது தான் இந்த பொடிப் பொண்ணோட பதிவுகள். போதாத குறைக்கு இந்த பொடிப் பொண்ணுகிட்ட ஒரு கேமரா வேற மாட்டிகிடுச்சு. அத வைச்சுக்கிட்டு பறக்கிற பட்டாம்பூச்சி, தும்பி எல்லாத்தையும் படுத்துற பாடு இருக்கே, அத ஒரு பதிவ போட்டு வைச்சுருக்கு இந்த பொண்ணு. அதையும் பாருங்களேன்.

சொந்த ஊருக்கு பயணம் செய்யிறது சுகமான ஒன்னுதான், ஆனா தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்துல பயணம் செஞ்ச, எப்ப எங்க பேருந்து நிக்கும்னு தெரியாது, அப்டி ஒரு சோதனை பயணம் போனத கூட இந்த பொடிப் பொண்ணு எவ்வளவு சுவையா சொல்லியிருக்குன்னு பாருங்களேன்.

என்ன அந்த டண்டணக்க கவிதைகளும் , அந்த கவிதைகளுக்கு போட்ருக்க டி.ஆர் படமும்தான் கொஞ்சம் பயமா இருக்கு. என்னை போல் இளகிய மனம் படைத்தவர்கள் பொடிப் பொண்ணிண் டண்டணக்கா கவிதைகளை பார்க்காமல் விட்டுவிடுவது நலம்

இந்த வாலுப் பொண்ணு, இப்டி ஒரு ஆராய்சியா என ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த பொண்ணு எழுதியிருக்க ஒரு ஆராய்சி கட்டுரையப் பாருங்களேன். பழையப் பாடல்களிலும், புதியப் பாடல்களிலும் காட்சியமைப்பிலும், எடிட்டிங்கிலும் இருக்கும் துல்லியமான வேறுபாடுகளை அலசி ஆராயும் இந்த கட்டுரை, உங்களையும் கட்டாயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
எல்லாத்துக்கும் மேல இந்தப் பொடிப் பொண்ணு எங்க ஊரு பொண்ணுங்க.

மனசுக்குள் மத்தாப்பு திவ்யா, பொடிப் பொண்ணு இருவரையும் அறிமுகப்படுத்தும் பதிவல்ல இது. அவர்கள் ஏற்கனவே எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் தான். இது அவர்களின் படைப்புகளில் எனக்குப் பிடித்தவைகளை சொல்லும் ஒரு பதிவு மட்டுமே. வாருங்கள் என்னோடு சேர்ந்து இவர்களை நீங்களும் பாராட்டுங்கள், அதற்கு முன் அவர்களின் படைப்புகளை படித்துவிடுங்கள்.
மேலும் வாசிக்க...

Sunday, September 28, 2008

லதானந்த் அவர்களுக்கு பகிரங்க கடிதம்.

பகிரங்க கடிதம் என்பதை தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கே நான் ஒரு பகிரங்க கடிதம் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

பரிசல்காரருக்கு நீங்கள் எழுதிய பகிரங்க கடிதம் பின்னர் பலருக்கும் பலரால் எழுதப்பட்டு சில வார காலங்களுக்கு தமிழ் மணத்தின் சூடாண இடுகைகளை நிரப்பியிருந்ததை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.

கோயம்புத்தூர் என்றதும் என் நினைவுக்கு வருபவை குடிப்பதற்கிணிய சிறுவானி ஆற்று நீரும், கேட்பதற்கிணிய கொங்குத் தமிழும் தான். பார்ப்பதற்கு இனிய பல விசயங்கள் அங்கு இருப்பதாலும், பார்வை ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால் அதை நான் குறிப்பிடவில்லை. அந்த இனிய கொங்கு தமிழை எழுத்து வடிவில் வடித்து நீங்கள் எழுதும் போது அதன் சுவையில் மயங்காதோர் யாரும் இருப்பர் என எனக்குத் தோன்றவில்லை. அத்தனை சுவைபட எழுதிவந்த நீங்கள் சில காலங்களாய் எழுதுவதில்லை.

வ‌ட்டார‌ பேச்சு வ‌ழ‌க்கில் எழுதுவ‌தில் என் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌வ‌ர்க‌ள் இருவ‌ர். ஒன்று நெல்லை வ‌ட்டார‌ வ‌ழ‌க்கில் எழுதி த‌ள்ளும் ஆசிப் மீரான் அண்ணாச்சி அவ‌ர்க‌ள், அடுத்து கொங்கு வ‌ழ‌க்கில் எழுதும் நீங்க‌ள். உங்க‌ள‌து ப‌திவுக‌ள் எல்லாம் மிக‌ எளிய‌ ந‌டையில் ச‌ர்வ‌ சாதார‌ண‌மாய் போகிற‌ போக்கில் ப‌ல‌ செய்திக‌ளை அள்ளித் தெளித்துச் செல்லும் ப‌திவுக‌ள்.

உங்கள் பதிவுகளில் இருந்து தெரிந்து கொண்ட‌ கொங்குத் தமிழின் வார்த்தைகள் பலவற்றின் மேல் பலரும் விருப்பம் கொண்டு அவற்றை அவர்களும் உபயோகிக்கும் அளவுக்கு உங்களது எழுத்தின் வீச்சு வீரியம் கொண்டது. எடுத்துக்காட்டாக இப்ப எல்லாம் நெம்ப பேரு, ரொம்ப என்பதை நெம்ப என்றுதான் சொல்கிறார்கள் (நான் உட்பட).

உங்களுக்கு இருக்கும் தீவிரமான வாசிப்பு அனுபவங்களைக் உங்கள் பதிவுகளில் நீங்கள் காட்டும் மேற்கோள்கள் எடுத்துரைக்கும். ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரான உங்களது படைப்புகள் வராத தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனும் அளவுக்கு எழுதும் உங்களது கதைகளின் கடைசி வரியில் வரும் அந்த "லதானந்த் டச்" பல வாசகர்களை உங்களுக்கு பெற்றுத் தந்திருக்கும். இந்த கடைசி வரி டச் உங்கள் சிறுகதைகளில் மட்டுமல்ல, உங்கள் பதிவுகளிலும் உண்டு. உதாரணம் எழுத்தாளர் ஜெயமோகனுடன் உங்களது பயணத்தை நீங்கள் விவரித்த பதிவு.

நகைச்சுவை என்பது ஒரு மிகப் பெரிய வரம். எத்தனையோ சுவைகள் இருப்பினும், எல்லோராலும், எல்லா வயதிலும் அனுபவிக்க முடிந்த சுவை நகைச்சுவைத் தான். அந்த சுவை படைக்கும் திறன் உங்களுக்கு சர்வசாதாரணமாய் வருகிறது.என் அலுவலகத்தில் ஒரு நாள் நீங்கள் எழுதிய நான் கடவுள் திரைப்பட விமர்சனம் படித்துவிட்டு நான் குலுங்கி குலுங்கிச் சிரித்தது கண்டு என் மேலாளரும், மற்றவர்களும் வந்து என்ன எனக் கேட்டதை ஒரு தனிப் பதிவாகவே எழுதலாம். அந்த அளவுக்கு உங்கள் நகைச்சுவை மிகச் சிறப்பு வாய்ந்தது.

புதுமாப்பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுத்த ஐடியாவாகட்டும், இங்கிதம் எனும் தலைப்பில் நீங்கள் எழுதிய தொடராகட்டும், அனைத்துமே ஒரு நல்ல செய்தியை நகைச்சுவைக்கும் பொதிந்து தரப்பட்ட பதிவுகள். இப்படி ஒரு அருமையான எழுத்தாளாரை வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் இவ் வேளையில் மீண்டும் எழுத வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வசனம் இது,"Heard melodies are sweet but those of unheard are sweeter" அதையே உங்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எழுதிய பதிவுகள் எல்லாம் ஸ்வீட் என்றால் இன்னும் எழுதாத பதிவுகள் அனைத்தும் ஸ்வீட்டர் தான். எனவே அன்புக்குறிய லதானந்த் மாமா அவர்களே, உங்கள் ஓய்வுக்கு ஓய்வளித்துவிட்டு வீறு கொண்டொழுந்து வந்து மீண்டும் உங்களின் இனிய பதிவுகளின் வாயிலாக எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

எனது இந்த கடிதத்திற்கு நீங்கள் பதில் கடிதம் எழுத விரும்பினால் கூட அதை உங்கள் பதிவின் வாயிலாக எழுதுவீர்களேயானால் அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாக எண்ணிப் பெருமிதம் கொள்வேன். இனியும் இந்த http://lathananthpakkam.blogspot.com வலைப்பூ புதிய பதிவுகளின்றி ஓய்ந்திருக்க கூடாது. இன்றே உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ்.
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம்.

திறமைமிக்க பலரும் வகித்த இப்பொறுப்பிற்கு அடியேன் என்னையும் தேர்ந்தெடுத்த வலைச்சர குழுவினருக்கும், சீனா அய்யாவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு என் பணியை ஆரம்பிக்கிறேன்.

என‌க்கு முன் இப் பொறுப்பை வ‌கித்த‌ க‌விதைச் சாலையின் உரிமையாள‌ர் அன்புக்குறிய‌ சேவிய‌ர் அவ‌ர்க‌ள்,ப‌ணிச் சுமையின் கார‌ண‌மாக‌ இடையில் திடீர் என‌ விடை பெற்றுவிட்டாலும், இடைப‌ட்ட‌ குறுகிய‌ கால‌த்திலும் த‌ன‌து முத்திரையை அழுத்த‌மாக‌ ப‌திவிட்டுத் தான் சென்றிருக்கின்றார்.

என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகே வெண்ணாற்றின் கரையில் அமைந்துள்ள மாரநேரி எனும் கிராமம் தான் எனது சொந்த ஊர். எங்கள் குலத் தொழில் விவசாயம். பிறக்க ஒரு ஊர், படிக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர் என்ற தமிழனின் தலை எழுத்திற்கிணங்க, மாரநேரியில் பிறந்து தஞ்சையில் படித்து தற்போது சிங்கப்பூரில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறேன்.

எனது வலைப்பூவை http://maraneri.blogspot.com நான் 2007 டிசம்பரிலேயே தொடங்கியிருப்பினும், முழு வீச்சுடன் வலைப்பூ எழுத ஆரம்பித்தது 2008 ஜீன் மாதக் கடைசியில் இருந்து தான். இயல்பாகவே எனக்கு இருக்கும் கோபம் சில சமூகப் பிரச்சனைகளைப் பற்றி படிக்கும் போதும் எனக்கு எழும் எண்ணங்களைத்தான் பெரும்பாலும் எனது பதிவுகளாக எழுதியிருக்கிறேன்.

என்னைப் பொருத்தவரை நாம் எழுதுவது ஏதாவது ஒரு வகையில் பிறருக்கு உபயோகமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இப்படி நினைப்பதாலோ என்னவோ அன்பு அண்ணண் புதுகை அப்துல்லா என்னை ஜே கே ரித்தீஷ் மன்றத்தில் சேர்க்க மறுக்கிறார். அதோடு நான் மொக்கை பதிவுகள் எழுதினால் கல்லெடுத்து அடிக்க ஒரு கூட்டமே தயாராகிவிடுகின்றது.

இன்னும் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் வண்ண மலர்களில் என்னுடைய பங்கையும் கோர்க்க இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
மேலும் வாசிக்க...

வழி அனுப்புதல் - வரவேற்றல்

அன்பின் பதிவர்களே !

ஒரு வார காலம் ஆசிரியப் பொறுப்பினை சிறப்பாகச் செய்து - கொடுத்த பணியினை சீராக நிறைவேற்றி - பணியின் அழுத்தம் காரணமாக விடை பெறுகிறார் அருமை நண்பர் சேவியர்.

அவர்களும் ஏழு பதிவுகள் - சுய அறிமுக முன்னுரை, பல படிக்க வேண்டிய கவிதைப்பூக்களின் அறிமுகம், அறிவியலில் தமிழ் - வலைப்பூக்களின் அறிமுகம், காதல், புரட்சி, பெற்ற தாய் பற்றிய பல புதிய பதிவுகளின் அறிமுகம் என அரிய பதிவுகளைப் படைத்து விட்டுச் சென்றிருக்கிறார். அவர்களுக்கு வலைச்சரம் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து நல் வாழ்த்துகளுடன் விடை அளிக்கிறோம்.

அடுத்து 29ம் நாள் துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் ஜோசப் பால்ராஜ். இவர் மாரநேரி என்னும் வலைப்பூவினையும் மூன்றாம் கண் என்னும் வலைப்பூவினையும் நிர்வகித்து வருகிறார். பல நல்ல பதிவுகள் இட்டிருக்கிறார். சிங்கையில் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்.

அவர் பல நல்ல படிக்க வேண்டிய பதிவுகளை அறிமுகப் படுத்த இருக்கிறார். கேட்பவர்களுக்கு கொடுக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். அவரை வருக வருக - பதிவுகளைத் தருக தருக என வரவேற்கிறேன்.

சீனா

மேலும் வாசிக்க...

Friday, September 26, 2008

ஒரு அவரச பிரியாவிடை


காலையில் வந்த உடனேயே அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் வாஷிங்டன் மியூட்சுவல்ஸ் வங்கியை ஜெ.பி மார்கன் வாங்கியதால் தான் இந்த பரபரப்பு.


ஒரு உயரதிகாரி எனும் முறையில் காலையிலிருந்தே விவாதங்களும், என்ன நடக்கும் எனும் ஊகங்களும், தேவையற்ற மீட்டிங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.


இன்றைய பொழுது வலைத்தளம் பக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என்பதால்,


ஒரு வாரத்தை முழுமையாய் பயன்படுத்த முடியவில்லையே எனும் வருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும்,


மனதுக்கு திருப்தி தரக்கூடிய நான்கைந்து பதிவுகளையேனும் தர முடிந்த மகிழ்வுடன் விடைபெறுகிறேன்.


இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயா அவர்களுக்கும், வருகை புரிந்து ஊக்கமளித்த, வருகை புரியப் போகிற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


மீண்டும் ஒரு வாய்ப்பில் சந்திப்போம்.

பிரிவு என்பதே
உறவுக்காகத் தான்,
ஆரம்பப் பாடம்
கருவறை வாசலிலேயே
கண்விழிக்கிறதே.


அன்புடன்
சேவியர்
மேலும் வாசிக்க...

Thursday, September 25, 2008

கவிஞர்கள் பார்வையில் அம்மா !
ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!என கவிப்பேரரசு வைரமுத்து தன் அன்னையைப் பற்றி கவிதை வரிகளில் கண்ணீர் வடித்திருப்பார்.

அன்னையைப் பற்றி எழுத கவிப்பேரரசு முதல் கவிதை எழுதத் துவங்கும் கவிக் குழந்தைகள் வரை எல்லோருமே பிரியப்படுகின்றனர். காரணம் உலகில் எப்போதும் கலப்படமின்றிக் கிடைக்கும் ஒரே பொருள் தாயின் நேசம் மட்டும் தான்.


காய்ச்சலில்
நெற்றிதொடும்போதும்,
மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்
தோல்விகளில்
தட்டிக்கொடுத்து
உற்சாகப்படுத்தஆளில்லாதபோதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.

என அம்மாவின் அருகாமை இல்லாத நிலையைச் சொல்லும் நிலாரசிகனின் கவிதை தாயின் நினைவுகளைக் கிளறி விடுகிறது.

தூர தேசத்தில் இருப்பவர்களுக்கு எங்கோ கிராமத்து மூலையில் பிள்ளைகளின் நினைவாய் தேயும் தாயின் ஏக்கங்கள் தெரியாது என்பது தான் பலரின் எண்ணம்.

ஆனால் தாயின் அன்பையும், அருகாமையையும் உணர்ந்தவர்களால் எத்தனை கடல்களுக்கு அப்பால் வசித்தாலும் தாயின் நினைவுகளுக்கு அப்பால் வசிக்கவே முடியாது.

நீண்ட வருடங்களுக்கு முன்பு அமெரிக்க வாழ்க்கையின் தனிமை வறுத்தெடுத்த பொழுதில் வார்த்தெடுத்த எனது அம்மா கவிதை இன்னும் எனக்கும் என் எழுத்துக்களை ரசிக்கும் தோழர்களுக்கும் பிரியமான கவிதையாய் இருக்கிறது.

நகரத்தின் வெப்பத்தில் வசிக்கும் எனக்கும், கிராமத்தின் மரங்களுக்கிடையே வசிக்கும் என் அம்மாவுக்குமான தொடர்பு இன்னும் அவ்வப்போதைய சந்திப்புகளும், அடிக்கடி நிகழும் தொலைபேசி உரையாடல்களும் தான் எனும் வாழ்க்கை நிர்ப்பந்தம் வலியூட்டுகிறது.
ஆயிரம் சொல்லுண்டு அகிலத்தில்
ஆனாலும் ஒன்றுண்டு நெஞ்சத்தில்
அன்பிற்குமுண்டு பலவகை
அம்மாவின் வகையொன்றேதான்
அணைப்புகள் கொடுத்திடும் சுகங்கள்
அன்னையின் அணைப்பிற்குண்டோ ஈடு
அன்றவள் இருக்கையில் இல்லை
அறிவு ஏழை என் வசம்
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகுது இதயம் வெறுமையாகவே
அன்னையர் தினம் வரும் வேளையிலே
அனுபவம் தன்னிலே ஒரு சொல் கேளீர்
அருமையாய் பேணி அம்மாவைக் காத்திடும்
ஆவியாய் அவள் மறைந்த பின்னாலே
அழுது புரளுவதும் ஆயிரம் பேசுதலும்
அமைதியத் தராது
அடித்தே சொல்லுவேன்

என இணையத்தில் காணக்கிடைத்த அமல் என்பவரின் அம்மா கவிதை அம்மாவை பேணுங்கள் என மோனை முத்திரையுடன் விண்ணப்பம் விடுக்கிறது. இருக்கும் வரைக்கும் அம்மாவின் அருமை தெரிவதில்லை.
பார்வை இழந்தபின் ஐயோ எனக் கதறுவதில் பயனில்லை. இருக்கும் போதே அம்மாவைப் பேணுவதும், பெருமைப்படுத்துவதும், அம்மாவின் வார்த்தைகளுக்கு முன்பாகவே அவளுடைய தேவைகளை நிறைவேற்றுவதும், அன்பின் அருகாமையை அன்னையின் கரம் தொட்டு உணர்த்துவதும் என நிஜமான நேசங்கள் பரிமாறப்பட வேண்டும்.

தாயின் அருகாமை திருமணமான பெண்களின் உள்ளத்தில் அதிகமாகவே எழுவது கண்கூடு. அன்னையைப் பிரிந்து கணவனுடன் வாழும் சூழல் பாதங்களில் தீ மிதிப்பதாகவும், இதயத்தில் தீ மிதப்பதாகவும் பெண்களுக்கு காயம் ஏற்படுத்தும்.

உன் மடியில் உறங்கி
நீ ஊட்ட உண்டு
உன் வசவில் சிணுங்கி
உடன் பிறப்போடலைந்து
உனை ஏய்த்து மகிழ்ந்து
சின்னவளாகவே இருந்திருந்தால்..

சுற்றங்களை விடுத்து
மணமொன்று புரிந்து
மறுதேசம் நுழைந்து
நிதமும் உனைத்தேடி
நினைவினில் நீராடி
ஏங்காது இருந்திருப்பேன்

எனும் கீதா வின் கவிதை அனுபவத்தின் வெளிப்பாடாய் இருக்க சாத்தியங்கள் நிறையவே உண்டு.

வெள்ளைத் தேங்காயும்
கருப்பு மிளகும்
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய்
தால லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையிலே
அழகருக்கும் வாயூரும்

என தோழி வைகைச்செல்வி சொல்வது கூட திருமணமாகி நகர வாழ்க்கைக்கு வந்து விட்ட ஒரு பெண்ணின் கிராமத்துத் தாயின் நினைவலைகள் தான்.

அந்த நினைவலைகள் பெண்களுக்கு மட்டுமானதல்ல என்பதை

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

எனும் கவிப்பேரரசின் வரிகள் நிரூபிக்கின்றன.

புரியவில்லையே அம்மா எனும் எனது கவிதை ஒன்று ஒரு பெண்ணின் ஏக்கம் எப்படியிருக்கும் எனும் ஆணின் கற்பனைக்குப் பிறந்தது.

அம்மாவின் பிரிவு உயிரிலிருந்து உயிரைப் பிரித்தெடுப்பது போன்றது. ஜனனத்தில் தாய் எனும் உயிரில் இருந்து மழலை எனும் இன்னோர் உயிர் பிரிந்து வருகிறது. தாயின் மரணத்தின் அந்த பிரிந்து வந்த மழலை உயிரின் ஒரு பாதி இறந்து போகிறது. தாயின் பிரிவு கவிதைகளின் வாசிக்கும் போதெல்லாம் அம்மாவைக் கட்டிக் கொண்டு உறங்கவேண்டும் எனும் ஏக்கத்தை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது.

தமிழ்ராஜாவின் அம்மா உன் நினைவுகள் என்னும் கவிதை உயிரை உலுக்குகிறது.


சுந்தர ராமசாமி அவர்களின் கவிதை ஒன்றும் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது

கொல்லிப்பாவை
ஸ்டேஷன்
ஒருமரம்
அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது
கடைசிக்கவிதை

என ஒரு தனிமையின் சூழலையும், ஏக்கத்தையும் கவிதைகளில் கொண்டுவருகிறார். நவீன மொழி அவருடையது.“புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,
அப்போதான் காலம் தள்ளமுடியும்!”
அக்காவிற்குச் சொன்ன
அதே அம்மாதான்
என்னிடம் சொன்னாள்.

“உன் பொண்டாட்டி,
தலையணை மந்திரம் ஓதுவா.
அவ முந்தானைல சிக்கிக்காத
நீ ஆம்பளைடா!”

எனும் நந்தாவின் கவிதை மெலிதான நகைச்சுவையையும் மீறி ஒரு தாயின் கரிசனை தன் பிள்ளைகள் மீது எப்படியெல்லாம் படர்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. அக்காவின் கணவனின் அம்மா என்ன சொல்லியிருப்பாள் என்றும், தனது மாமியார் மகளிடம் என்ன சொல்லியிருப்பார் என்றும் கவிஞனின் பார்வை ஒரு தொடர்சங்கிலி ஓட்டத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும் என நம்பச் செய்கிறது இந்தக் கவிதை.

அம்மா!
நம் வறுமைதான்
உன்னை பிழைக்கவைத்தது
இல்லையென்றால்
மம்மியாகியிருப்பாய் !

எனும் கோட்டை பிரபு வின் கவிதை ஒன்று வறுமை தமிழைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதையும் வசதிகள் ஆங்கிலக் கதவுகளுக்குள் அடைபடுகின்றன என்பதையும் பளிச் என புரிய வைத்து நகர்கிறது.

அன்பு அவள் மொழி
ஆறுதல் அவள் வார்த்தை
இன்முகம் அவள் முகவரி
ஈடில்லாதது அவள் பாசம்
உயர்வானது அவள் பண்புநலன்
ஊக்கமளிப்பாள் உயர்வு பெற
எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம்
ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம்
ஐயங்களின் எல்கைக்கப்பால் அவள்ஆன்மா
ஒற்றுமையே அவள் வேதம்
ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை
ஔரவமானது அவள் சக்தி
அஃதே அவளே அம்மா.

எனும் கலையரசனின் அ..ஆ..இ…ஈ… கவிதை வருடங்கள் கடந்தபின்னும் ரசிக்க வைக்கிறது.

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?
-
வைரமுத்து.
மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Wednesday, September 24, 2008

வலையுலகப் புரட்சியாளர்கள்

சமூகக் கட்டமைப்பின் மீதும், மனித நேய மறுதலிப்புகள் மீதும் கோபம் கொண்டும், சக மனித கரிசனையின் வெளிப்பாடாகவும் பல கட்டுரைகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன.
பெரும்பாலான கட்டுரைகள் சமூகத்தின் கறைகளை எப்படியேனும் அகற்றவேண்டும் என்றும், அதன் குறைகளை குறைந்த பட்சமேனும் குறைக்க வேண்டும் எனவும் மும்முரம் காட்டுகின்றன.


இத்தகைய சமூக, சக மனித அக்கறை ஒட்டு மொத்த மனித குலத்தின் நம்பிக்கையை அணையாமல் காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.


அந்த வகையில் வருகின்ற எழுத்தாளர்களில் ஒருவர் வே.மதிமாறன். பெரியார் கொள்கைகளின் மேல் தீராப் பிடிப்புடைய இவருடைய தளம் பல புரட்சிகரமான சிந்தனைகளை துணிச்சலுடன் சபைமுன் வைத்து சவால் விடுகிறது. பெரியாரின் பிரியன் என்பதால் இவரிடம் இயல்பாகவே மதங்களைக் கடந்த மனிதநேயப் பார்வை நிரம்பி இருக்கிறது.


இவர் சில கவிதைகளும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக என்ன செய்து கிழித்தார் பெரியார் என்பது அவருடைய கவிதைகளில் ஒன்று !


மதிமாறன் படைப்புகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. பாரதீய ஜனதா என பாரதி குறித்த எதிர்விமர்சனங்களை நூலாக வெளியிட்டிருக்கிறார். அது பல தளங்களில் சலசலப்பை (கூடவே கைகலப்பையும்) ஏற்படுத்திய நூல். மத அமைப்புகள், சாதீய அடக்குமுறைகள், சமூக ஏற்றத்தாழ்வு எதிர்ப்பு போன்ற உணர்வுகளும், பெரியார் சிந்தனைகளின் இணை சிந்தனையும் உங்களிடம் இருந்தால் இந்தத் தளம் உங்களுக்குப் பிடிக்கும்.


அசுரன் அவர்களின் போற்பறை எனும் தளம் பல்வேறு சீர்திருத்தச் சிந்தனைகளை விரிவாகவும், பரவலாக ஏற்றுக் கொள்ளும் வகையிலும் வகைப்படுத்துகிறது. அவருடைய சிந்தனைகளோடு பலருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம், எனினும் தெளிவான பார்வையும், ஆழமான பதிவுகளும் அவருடைய தளத்தின் வலிமை என்றால் அது மிகையல்ல.


இயற்கையோடு இணையாத வாழ்வின் சிக்கல்களும், மேனாட்டு கலாச்சார தாக்கங்களும், இன்னும் ஆழ்மன அளவில் விடுதலை பெறாத அரசியல் அமைப்புகளும், சாதீய அடக்குமுறைகள், அத்துமீறல்கள், மத வெறி என பல விஷயங்கள் இவருடைய எழுத்துகளின் முதுகெலும்பாக இருக்கின்றன.


ஜமாலனின் தளம் ஆரோக்கியமான பல கட்டுரைகளால் நிரம்பி வழிகிறது. இவருடைய கட்டுரைகளும் ஆழமான பார்வையுடனும் தெளிவான அணுகுமுறையுடனும் இவருடைய சமூகத்தின் சீர்கேடுகளின் மீது சாட்டையாய் இறங்குகின்றன. தீவிர வாசகர்களுக்கு நிறைவளிக்கும் தளம் இது.


பட்டினியின் கொடுமை தாங்காமல் தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்று தப்பிய தாயின் பரிதாப சூழலின் பின்னணியில் சமூக அமைப்பை விமர்சிக்கும் ஆதிரையின் பதிவு மனதை கனக்கச் செய்கிறது. மனிதனின் ஆழ்மனக் கிடங்கில் உறங்கியே கிடக்கும் கரிசனை, மனிதநேயம் இவற்றை சற்று ஆக்ரோஷமாகவே உலுக்கி எழுப்புகிறது இந்தப் பதிவு.


அற்புதனின் தாய்நாடு தளமும் சமூக அவலங்களை விளக்கி, சில மாற்றங்களை முன்னிறுத்துகிறது. மனதைத் தொடும் பதிவாக பல பதிவுகள் இருக்கின்றன.


ஜெகத் அவர்களின் கைமண் அளவு அவ்வப்போது நான் உலவும் இடம். அவருடைய பதிவுகளில் சமூக அக்கறையும், உலகப் பார்வையும் தெரிகிறது சுதந்திரம் எனும் அவரது பதிவு இது !


சட்டம், சமூகம், மனித உரிமை குறித்த பதிவுகளால் வலுவாக இருக்கிறது மக்கள் சட்டம் எனும் தளம். தெரியாத, தெரிய வேண்டிய பல விஷயங்கள் அங்கே உண்டு ! இப்படியெல்லாம் கூட இருக்கிறதா என நினைக்க வைத்த தளம் இது.


உறையூர் காரனின் பல பதிவுகள் விரிவாகவும், தெளிவாகவும் ஆழமாகவும் இருக்கின்றன. ஒரு சோறு பதமாக இந்தக் கட்டுரை.


என்னுடைய இந்தக் கட்டுரையை சீரியஸ் எழுத்து வகையில் நீங்கள் எடுத்துக் கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே.


நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையும் வசதியும் நம்மை இலக்கியம், தொழில் விஞ்ஞானம், பயணம் என பல தளங்களுக்குப் பக்குவப்படுத்தியிருக்கிறது. ஆனால் வேர்களில் இருந்து பிடுங்கி எடுத்திருக்கிறது. இயற்கையிலிருந்தும், குடும்ப உறவு எனும் ஆரோக்கியமான கட்டமைப்பிலிருந்தும் சிதறி ஓடச் செய்திருக்கிறது.


இந்தச் சூழலில் நமது வாழ்க்கையை அவசரமாய் ஒரு மறுபரிசீலனைக்கு உட்படுத்துதல் அவசியம்.


மதிப்பீடுகள் முக்கியமா ? வெறும் கரன்சிகள் முக்கியமா என்னும் வினாவை உள்ளுக்குள் ஒருமுறை எழுப்புவோம்.


சிந்தனை திருத்தப்பட்டால், வாழ்க்கை அர்த்தப்படும்.


மீண்டும் சந்திப்போம்
மேலும் வாசிக்க...

Tuesday, September 23, 2008

செம்புலப் பெயல் நீர் : கவிதையும் காதலும்

கவிதைகளிலிருந்து காதலையும், காதலில் இருந்து கவிதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. சங்கம் முதல் இன்று வரை கவிதைகள் காதலையும், காதல் கவிதையையும் ஒன்றுக்குள் மற்றொன்றை ஊற்றி நிரம்பியிருக்கின்றன.
காதலியை மனக்கண்ணுக்கு முன்னால் நிறுத்தினால் போதும் கவிதைத் தமிழ் காதலனின் விரல்களில் வழிந்தோடும். அதே நிலை தான் காதலனை நினைக்கும் காதலிக்கும். எனவே தான் இணையத்திலும் காதல் கவிதைகளுக்குப் பஞ்சம் இருப்பதில்லை.

ஆதலினால் … எனும் வலைத்தளம் காதல் சிணுங்கல்களால் நிரம்பி வழிகிறது. நீங்கள் சேவியரா ? எனும் வினாவோடு ஒரு முறை என்னிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார் நவீன். அந்த அறிமுகத்துக்கு முன்பே நாங்கள் வலைத்தளங்கள் மூலம் நன்றாகவே பழகியிருந்ததால் நிகழ்ந்த அந்த சிறு உரையாடல் சுவாரஸ்யமாய் இருந்தது.

ஏன் நிறைய எழுதுவதில்லை, நீண்ட இடைவெளி விட்டு விட்டு எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். கவிதை எழுதவேண்டுமென்று அமர்ந்து எழுதும் பழக்கம் எனக்கில்லை. கவிதையே வந்து என்னை எழுதிக் கொள் என்று சொல்லும் போது தான் எழுதுகிறேன் என்றார். கவிதையாய் ! காதலை மட்டுமே பிரதானப்படுத்தி எழுதினாலும்


எப்படி எப்படிஎல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமேஉணர்த்துவார்
அப்பா.


என ஆங்காங்கே தெரியும் கவிதைகள் நவீன் காதல் கவிதைகளுக்கு மட்டும் உரியவர் அல்ல அதையும் தாண்டி பயணிக்கும் திறமை கொண்டவர் என்பது நிரூபணமாகிறது.

அருட்பெருங்கோ வை எனக்கு இணையம் தவிர்த்து தொலைபேசியில் சில முறை உரையாடிய பழக்கம் உண்டு. நேரில் சந்தித்ததில்லை.


இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள்
என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்


என வசீகரமாய் குறும்புகளுடன் காதல் கவிதை எழுதுகிறார் அருட்பெருங்கோ. அவருடைய தளத்தில் இன்றைய பெரிய கவிஞர்களுக்குச் சவால்விடும் கற்பனைகள் நிரம்பவே இருக்கின்றன.

நீ
சிந்தும்வெட்கத்தை
சேலையென
உடுத்திக் கொள்கின்றன
என் கவிதைகள்!


என காதலுடன் குதிக்கின்றன பிரியனின் கவிதைகள். ஒரு முறை பிரியனைச் சந்தித்திருக்கிறேன். துருதுரு இளைஞர். கவிதைகளைச் சுமப்பது போல கூடவே சில காதல்களையும் சுமப்பவராய் இருக்கலாம் :)

தெரியவில்லை. அவருடைய பிரியன் கவிதைகள் எனும் வலைத்தளம் காதல் கவிதைகளின் சரணாலயம்.

பாலபாரதியின் வலைத்தளத்தில் கவிதைகள் பகுதியைச் சென்று ஒரு முறை பாருங்கள்.

ஒற்றையடிப்பாதையில்
தனித்துப் போகாதே என்றேன்
கேட்டாயா
இப்போது பார்
பயமற்று ஆடைகளைக் களைய முயல்கிறது
காற்று


என தபு சங்கரின் பிம்பம் அங்கே பிரதிபலிப்பாகிக் கொண்டிருக்கிறது. கவிதைகள் குறைவாகவே எழுதுகிறார் போலிருக்கிறது.


எத்தனை தடவையடா
உன்னிடம் கெஞ்சுவது
அம்மா
பக்கத்தில்இருக்கும்போது
முத்தம் கேட்காதே என்று
உன் மரமண்டைக்கு
எப்போதுதான்உறைக்குமோ?


என கவிதைகளால் கொஞ்சும் புனிதாவின் வலைத்தளம் சுவாரஸ்யம்.

குறைவாகவே எழுதினாலும் விக்கியின் குளிர்கால காதல் எனக்குப் பிடித்தமான காதல் கவிதைகளின் வரிசையில்.

காதல் கவிதைகளைப் பற்றி எழுதினால் வருடங்களுக்கே வயதாகிப் போகும் என்பதும், அது நிறுத்த முடியா நயாகரா என்பதும் என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்.


போகிற போக்கில் நேரமிருந்தால் நில் நிதானி காதலி . முத்தக் கவிதைகள் காதலும், காதலி சார்ந்தவைகளும் இவற்றை ஒரு முறை எட்டிப்பார்த்து விட்டுச் செல்லுங்கள்.

உங்களைப் போல
எனக்குக்
கவிதை எழுதத் தெரியாது…
காற்றில் கேசம் மெலிதாய் புரள
தலையை அசைத்துப்
புன்னகைக்கிறாய்…
அடடா என்ன அழகான கவிதை !!!
மேலும் வாசிக்க...

அறிவியல் வீதியில் தமிழ்


கலை கலைக்கானது எனும் விவாதங்களை விட்டு இலக்கியம் இன்று வெகுதூரம் விலகி வந்து சமூகத்தோடு இணைந்து விட்டது. இலக்கியம் இணைந்த அளவுக்கு நமது தமிழ் சமூகத்தோடு இணைந்ததா என்பது கேள்விக்குறியே.


அறிவியல் என்றாலும், புதிய மேனாட்டு கண்டுபிடிப்புகள் என்றாலும், அறிவியல் விதிகள் என்றாலும் ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்பட முடியும் எனும் குருட்டுத் தனமான விவாதங்கள் நமது மொழித் திண்ணைகளில் அலசப்படுவதுண்டு.


அத்தகைய புலம்பல்களையெல்லாம் புறந்தள்ளின் இன்று பல்வேறு அறிவியல் கட்டுரைகள் தமிழின் கரம்பிடித்து நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் தகவல்களை தமிழ்படுத்தும் பணி ரொம்பவே கடினமானது. ஆனாலும் பல தளங்கள் முடிந்தவரை புரியும் வகையில் தமிழ்ப்படுத்தித் தருகின்றன. இவை தகவல் பரிமாற்றம் எனும் நிலையையும் தாண்டி மொழியின் செழுமையயும், ஆளுமையையும், தனித் தன்மையையும் நிலைநாட்டும் என்பதில் ஐயமில்லை.


விஞ்ஞானக் குருவி வலைத்தளம் நான் அவ்வப்போது உலவும் இடம். அறிவியல் தகவல்களை பெரும்பாலும் உடனுக்குடன் பதிப்பிக்கும் தளமாக இது இருக்கிறது. அவ்வப்போது கொஞ்சம் தொய்வு நேர்ந்தாலும் இடைவிடாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தளம் இயங்கிக் கொண்டிருப்பதே ஒரு இனிமையான செயல் தான். இந்தத் தளத்தின் சிறப்பு தகவல்களை சுருக்கமாக, நல்ல விஞ்ஞானத் தமிழில் தருவது தான்.


கவிஞர் ஜெயபாரதன், கனடாவில் வசிப்பவர். அவருடைய கவிதைகளை திண்ணையில் அடிக்கடி படித்திருக்கிறேன். ஆனால் அவர் பிரமாதமாக விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதுவார் என்பது எனக்கு தெரியாமலேயே இருந்தது. சமீபத்தில் தான் அவருடைய அறிவியல் கட்டுரை ஒன்றைப் படித்தேன். உயிரின் முதல் துகளைத் தேடும் அறிவியல் முயற்சிக் கட்டுரை அது. மிகவும் விரிவாக சிறப்பாக எழுதியிருந்தார்.


கடவுளின் துகளைத் தேடும் பயணம் என நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நானும் ஒரு சிறு அறிமுகக் கட்டுரை எழுதியிருந்தேன். ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரையுடன் ஒப்பிடுகையில் நமது கட்டுரை பாமரர்களுக்கான ஒரு அறிமுகக் கட்டுரையே.


அதே தளத்தில் அவருடைய மற்று சில விஞ்ஞானக் கட்டுரைகளும் காணக் கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவல். உதாரணத்துக்கு ஒன்று இங்கே பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !!


வலையில் இலக்கியங்களும், கலாட்டாக்களும் வளர்ந்த அளவுக்கு அறிவியல் குறித்த பதிவுகள் வளரவில்லை என்பதே உண்மை. விமானம் எப்படிப் பறக்கிறது என விளக்கும் செம்மலர் பதிவு போல இடையிடையே சில பதிவுகளே அகப்படுகின்றன.


எனது அலசல் வலைத்தளத்தில் மருத்துவம், விஞ்ஞானம், புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த பதிவுகள் நிறைய போடுவதுண்டு.


அறிவியல் கட்டுரைகள் இன்னும் நிறைய தமிழில் எழுதப்படவேண்டும் எனும் எதிர்பார்ப்பு உங்களைப் போல என்னிடமும் நிரம்பவே இருக்கிறது !


மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Monday, September 22, 2008

கவிதையாகிக் கசிந்துருகி


இலக்கிய வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது கவிதை. ஒரு நாவலின் கனத்தை ஒரு நான்கு வரிக் கவிதை எழுதிவிட முடியும்.


இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்


என்னும் அமுதபாரதியின் கவிதை இன்னும் நினைவுகளின் இடுக்கில் நிலைத்திருப்பதற்கு அதன் எளிமையும் அது சொல்லும் வலிமையான கருத்துக்களுமே காரணம் எனலாம்.


இன்னொன்று கவிதையில் நீங்கள் கட்டுரையின் விஷயத்தையும் சொல்லலாம், சிறுகதையையும் சொல்லலாம், நாவலையும் சொல்லலாம், நகைச்சுவையையும் சொல்லலாம். ஆனால் கவிதையை வேறு எந்த வகையிலும் நீங்கள் சொல்ல முடியாது என்பதே நிஜம்.


புனிதப் பயணம்
என்பது
நாம் செல்வதல்ல
நமக்குள் செல்வது

என சட்டென ஒரு கருத்தை பளிச் எனச் சொல்வதற்கு (எனக்கு) கவிதை வசதியாகவும், அழகாகவும் இருக்கிறது. சிலர் கவிதையை சோம்பேறிகளின் வாகனம் என்பார்கள். உண்மையில் ஒரு நான்கு வரியைச் செதுக்க ஆகும் நேரம் எவ்வளவு என்பதை கவிதை படைப்பாளிகளே அறிவார்கள்.


கவிதையில் ஏராளம் வகைகள் உண்டென்றும், ஒவ்வொன்றும் மோதிக்கொள்ளும் என்றும் எழும் விவாதங்கள் அர்த்தமற்றவை. எத்தனையோ வகையான மலர்கள் இருக்கலாம், கட்சிதமான அழகான மலர்கள் எப்போதுமே நேசிக்கப்படுபவை தான். தோட்டம் மாறியது என்பதற்காக பூக்களை யாரும் புறக்கணிப்பதில்லை.


என்னைப் பொறுத்தவரையில் எந்த வகைக் கவிதையானாலும் புரிந்து விட்டால் மிகவும் நேசிப்பேன். இதை அப்படி எழுதியிருக்கலாம் என்றோ, அதை இப்படி எழுதியிருக்கலாம் என்றோ கவிதைகளை இடம்மாற்றி அமரவைத்து யோசித்துப் பார்க்க மாட்டேன்.


கவிதை நூல் என எது கிடைத்தாலும் வாசிக்கும் ஒரு வெறி எனக்குள் இப்போதும் உண்டு. அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணிபுரிய நேர்ந்த காலத்தில் குளிர் என்னும் ஒரு கவிதை மூலம் நண்பராய் அறிமுகமானவர் புகாரி. பின்னர் அந்த நட்பு விரிவடைந்து, அவருடைய நூல் வெளியீட்டு விழாவுக்காக நான் ஆஸ்திரேலியாவிலிருந்து பறந்து வந்ததும், கனடாவிலுள்ள அவருடைய இல்லத்துக்குச் சென்று அருமையாய் மட்டன் வெட்டியதும் தனிக்கதை.


அவர் ஒரு கவிதைப் பிரியர். கவிதையை எழுதுவதோடு நின்றுவிடாமல் அந்தக் கவிதையின் ஒவ்வோர் எழுத்திலும் தனது சுவாசத்தை ஊட்டி வைப்பவர். சந்தத்தின் சந்துகளிலும் அவருடைய எழுத்துக்கள் துள்ளி விளையாடும். சந்தேகமெனில் ஒருமுறை அவருடைய வலைத்தளத்துக்குச் சென்று பாருங்கள்.


நதியலை என்றொரு வலைத்தளம் நான் அடிக்கடி உலவும் இடம். இவருடைய கவிதைகளில் உமிழ்ந்து விட்டுச் செல் போல சட்டென அடிக்கும் கவிதைகள் பல.


முபாரக் என்பவரின் முடிவற்ற அன்பின் தேடல் வலைத்தளம் தனியே ஒருவித வாசனை கொண்டிருக்கிறது. உனக்கெனவும் என்பதைப் போன்ற பளிச் கவிதைகள் மனதைக் கவர்கின்றன.


மணிகண்டனின் பேசலாம் வலைத்தளத்தில் கவிதைகள் பல உலவுகின்றன. தீராப்பிரியங்களில் கவிதை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று.


கடற்கரய் பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. அவருடைய வலைத்தளத்தில் கவிதைகள் கிடைப்பதை விட கவிதைகள் குறித்த உரையாடல்கள் நிறைய கிடைக்கின்றன.


தனிமையின் இசை தளத்தில் கிடைக்கும் சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும் சுவாரஸ்யமாய் உள்ளது.


DISPASSIONATED DJ வலைத்தளம் போயிருக்கிறீர்களா ? கவிதைகள் கொஞ்சமே ஆனால் மனதுக்குள் நிற்கும்…நீ

யாரையோ பார்த்து பிரமிக்கும்

அதே வினாடியில்

யாரோ

உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

ஒரு முன்னுரை


ஒரு வாரம் அழுத்தமான எழுத்துக்களும், வாசிப்புகளும் வாய்க்கப்பற்ற விக்னேஷ் அசத்திக் கொண்டிருந்தார். இந்த வாரம் அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


இந்தச் சவாலான, சுவாரஸ்யமான பணியை எனக்கு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.


என்னைக் கவர்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன். அதற்கு முன் எனது எழுத்துலக அனுபவத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.
எப்படி பிளாக் ஆரம்பிப்பது என்பதே தெரியாமல் அதைப் பற்றி கவலையும் படாமல் படைப்புகளை இதழ்களுக்கோ, தினம் ஒரு கவிதை போன்ற இணைய குழுக்களுக்கோ அனுப்பிக் கொண்டிருந்த காலம் 1998 ஐத் தொடர்ந்த வருடங்கள்.


சமீபத்தில் தான் அறிமுகமானது போல் இருக்கிறது வேர்ட்பிரஸ். அதுவும் ஆயிற்று இரண்டு வருடங்களும் ஐந்து மாதங்களும். இந்த காலம் எனது படைப்புகள் பலவற்றை இணையப்படுத்தி வைக்கவும், புதிதாய் எழுதவும் தூண்டுகோலாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை.


எனினும் என்னைப் பொறுத்தவரை நான் வலைத்தளங்களின் வெற்றி எனக் கருதுவது புதிய எழுத்தாளர்களுக்கு எழுதும் பயிற்சி கிடைப்பதும், வாசிப்பு வசதிகள் கூடுவதும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இணைய நட்பு வலை உருவாவதுமே.


கவிதைச்சாலை மட்டும் தான் முதலில் நான் ஆரம்பித்த வலைப்பூ. இலக்கியத்தின் வகைகள் மட்டுமே அதில் இருக்கவேண்டும். கவிதை, கட்டுரை, சிறுகதை, கவிதை நாவல், நல்ல விமர்சனங்கள் இவை மட்டுமே இந்தத் தளத்தில் இருக்க வேண்டும் என முடிவு கட்டி விட்டேன். அதையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக் காத்தும் வருகிறேன்.


இதுவரை வெளியாகியுள்ள எனது பதினோரு நூல்களில் ஒரு சில நூல்களைத் தவிர மற்ற நூல்களிலுள்ள பல படைப்புகள் இந்த இணைய தளத்தில் உள்ளன.


எழுத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே சாதாரண சிறு கவிதைகள் தவிர்த்து, சலனம் போன்ற நெடுங்கவிதைகளும், ஹெய்தி போன்ற வித்தியாசமான கட்டுரைகளும், யோபு போன்ற விவிலியக் கவிதைகளும், மச்சு பிச்சு போன்ற உலக அதிசயங்களும் , கவிதை நூல் போன்ற சிறுகதைகளும் என கலந்து கட்டி எழுதி வருகிறேன்.


இந்த வலைத்தளம் நடத்திக் கொண்டே இருந்தபோது புரிந்த ஒரு விஷயம், இலக்கியம் தாண்டியும் பல சுவாரஸ்யமான உரையாடல்கள், மருத்துவத் தகவல்கள், நகைச்சுவைகள், சினிமா சார்ந்த விஷயங்கள் இவை இருக்கின்றன. இவற்றைக் குறித்தும் ஒரு தளம் ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.


நகைச்சுவை விஷயங்கள் மட்டும் எழுதலாம் என நினைத்து அலசல் வலைத்தளத்தை ஆரம்பித்தேன். முதலில் இதன் பெயர் சிரிப்பே சிறப்பு. பின்னர் வலைப்பூவின் முகம் மாறியது. பலரும் விரும்பும் ஒரு ஜனரஞ்சகத் தளமாக ஆகிப் போனதால் அதை அலசல் ஆக மாற்றினேன். அதுவும் ஆயிற்று இரண்டு வருடங்கள். இதிலும் தேவையற்ற தனி நபர் கூச்சல்கள், கும்மிகள், சண்டை ஏதும் இல்லாமல் இருப்பது நிறைவளிக்கும் விசயம்.
ஒரு நிம்மதி மட்டும் இருக்கிறது.


எங்கோ இருக்கும் உண்மையான வாசகர்கள் நல்ல எழுத்துக்களைப் படித்தபின் ஓரிரு வரிகளேனும் எழுதி விட்டுப் போகிறார்கள். மனதுக்கு மிகவும் நிறைவான விஷயம் அது.ஒரு எழுத்தாளன் அவனுடைய எழுத்து விரும்பப்பட்டதா என்பதை அறிய ஆசைப்படுவான். குறைந்த பட்சம் வாசிக்கப்பட்டதா என்பதையேனும் அறிந்து கொள்ள பிரியப்படுவான். அந்த எதிர்பார்ப்பை வாசகர்கள் இன்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரும்பாலான வாசகர்கள் எழுத்தாளர்களே !!!


போதும் என நினைக்கிறேன் ஒரு அறிமுக உரை.


என்னைப் பற்றி ஏதேனும் அறிய வேண்டும் என ஆசைப்பட்டால் கிளிக்குங்கள்.


இனி..... தொடர்கிறேன்....
- சேவியர்
மேலும் வாசிக்க...

Sunday, September 21, 2008

வழி அனுப்புதலும் வரவேற்பதும்

அன்பின் சக பதிவர்களே

15ம் நாள் துவங்கி ஒரு வார காலத்திற்கு ஆசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றிய அருமை நண்பர் விக்கி எனச் செல்லமாக அழைக்கப்படும் விக்னேஷ்வரன் அடைக்கலம் இன்று பொறுப்பை ஒப்படைக்கிறார். அருமையான ஆறு பதிவுகள் இட்டு விடை பெறுகிறார். அருமையான கதைகளின் அறிமுகம், இனிய கவிதைகளின் அறிமுகம், சக பதிவர்களின் பொழுதுபோக்கு பற்றிய பதிவுகள், பல பதிவர்களைப் பற்றிய சிறு அறிமுகம் எனப் பல பதிவுகள் இட்டு கொடுத்த பொறுப்பினைச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்.

15ம் நாள் ஆசிரியப் பொறுப்பேற்க வேண்டியவர் தனது இயலாமையைத் தெரிவித்த பொழுது, குறுகிய அவகாசத்தில் தொடர்பு கொண்ட பொழுது, உடனடியாக இணக்கம் தெரிவித்து பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு வலைச்சரம் குழுவின் சார்பாக நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி விக்கி,
---------------------------

அடுத்து நாளை தொடங்கும் ( 22.09.2008) வாரத்திற்கு ஆசிரியராக அருமை நண்பர் சேவியர் அவர்கள் பொறுப்பேற்கிறார். இவர் கவிதைச் சாலை, அலசல் என இரு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். ஏறத்தாழ 1000 பதிவுக்ள் இட்டிருக்கிறார் எனச் சொன்னால் அது மிகையாகாது. அவரைப்பற்றிய ஒரு அறிமுகப் பதிவும் இட்டிருக்கிறார். ஆறு கவிதைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுதியும், ஒரு கட்டுரைத்தொகுப்பும், இரு வரலாற்று நூல்களும் எழுதி இருக்கிறார். அயலகங்களிலும் இவரது கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. உலகின் புகழ் பெற்ற கவிஞர்களைக் கவர்ந்த இவரது கவிதைகள் பலப்பல. பரிசுகளும் பட்டங்களூம் பெற்றவர். இணைய இதழ்கள் உட்பட்ட பலப்பல இதழ்களில் கைவண்ணத்தினைப் பதித்தவர்.

இவர் ஆசிரியப்பொறுப்பேற்பது நமக்கெல்லாம் பெருமை.

அன்பின் சேவியரை வாழ்த்தி வரவேற்கிறேன்

நல்வாழ்த்துகள் சேவியர்

சீனா
மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன்... எல்லோருக்கும் நன்றி பாஸூ

கண்மூடி கண் திறப்பதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டது (நீ என்ன அவ்வளோ நேரம் தூங்குறியானுலாம் கேட்கப்படாது). புகழ் பெற்ற பல பதிவர்கள் எழுதிய இந்த வலைச்சரத்தில் நானும் ஒரு வார காலமாக ஆசிரியராக இருந்துவிட்டேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

முன் பின் அறிந்திருக்காத என்னையும் நம்பி, ஒரு வார காலமாக ஆசிரியர் பொருப்பை ஒப்படைத்த சீனா ஐயாவிற்கும், என்னை எழுத அழைத்த சஞ்சய் அண்ணாவிற்கும் மிக்க நன்றி.

உடனடி அழைப்பு என்பதினால் என் பதிவுகளில் சுவாரசியம் குன்றியும், (இல்லனா மட்டும் ஒழுங்கா எழுதி கிழிச்சியானு கேட்கக் கூடாது), தகவல்கள் குறைந்தும், விதிமுறைகளை மீறியும் காணப்படலாம். என் தவறுகளுக்கு சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கோட்டுக் கொள்கிறேன்.

இரண்டு நாள் அவகாசத்தில் அதிகாமாக தகவல்களை சேமிக்க முடியவில்லை. என் விருப்ப தளங்கள் பலவும் விட்டுப் போனது மிகவும் வருந்துகிறேன்.

கடந்த ஒரு வாரமாக என் பதிவை படிக்க வந்தவர்களுக்கும், தமிழ்மணத்தில் தலைப்பை பார்த்து வந்தவர்களுக்கும், பதிவை படித்தவர்களுக்கும், பார்த்துவிட்டு படிக்காமல் சென்றவர்களுக்கும், பின்னூட்டம் போட்டவர்களுக்கும், போட நினைத்தவர்களுக்கும், இனி பின்னூட்ட நினைப்பவர்களுக்கும், பின்னூட்ட வேண்டாம் என நினைப்பவர்களுக்கும் எனது மனம் கனிந்த கோடான கோடி நன்றி.

விடைகளை கூறி நன்றி பெற்றுக் கொள்கிறேன்... ச்சே சாரி... பிரியாவிடை சோகத்தில் தட்டச்சு பிசகிவிட்டது.

நன்றி கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.

அன்புடன்.
விக்னேஷ்வரன் அடைக்கலம்.
NO6, மலேசியா குறுக்குச் சந்து,
மலேசியா மெயின் ரோடு,
மலேசியா.

பி.கு: நாளை ஆசிரியராக வரும் _ _ _ பா_ரா _ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க...

Saturday, September 20, 2008

உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப்பூ உலகம்

இன்று நம் சுற்றத்தை பற்றிய சிறு பார்வை. பதிவர்களுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள். பதிவுலகில் பிரவேசித்து பல நல் உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் சம்பாதித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நான் பிளாக்கரில் எழுத வந்த அதே சமயத்தில் எழுதத் தொடங்கியவர் பரிசல்காரன் . பூ போன்ற மனதுடையவர் (புத்தகம் வாங்கி அனுப்பி வச்சிருக்காருப்பா), கள்ளம் கபடம் தெரியாதவர், அடுத்தவரை கலாய்க்கவோ அல்லது மொக்கை போடவோ எள் முனை அளவும் நினைத்துப் பார்த்திராதவர்.

ஒரு வாரத்திற்கு முன் ஒரு கிசுகிசுப்பில் சிக்கியவர் பதிவர் அதிஷா. பரிசல்காரனை விட ஒரு படி மேல் என்றே சொல்ல வேண்டும். தெய்வ நம்பிக்கை மிகுந்த பக்தி பதிவர். 'கவர்ச்சினா திரிஷா, கவுச்சினா அதிஷா' எனக் கோடான கோடி மக்கள் இவரை விமர்சித்தாலும். அஞ்சா நெஞ்சன் அண்ணன் எப்போதுமே 'கன்' மாதிரி 'ஸ்டெடி'யாகவே இருப்பார்.

அடுத்ததாக வலையுலக புயல், பின்னூட்ட சூறாவளி, தமிழ்மண கலக்கல் நாயகன், புரட்சித்தளபதி, கவிதைக் கம்பன் தமிழ் பிரியன். ''ஏய் என்னப்பா நீயும் அவர மாதிரியே 'ப்' போடாம பெயரை சொல்ற'' என நினைக்க வேண்டாம். ஏற்கனவே அப்படி ஒரு பதிவர் இருப்பதால் இந்தப் பெயர். பிரித்து எழுதுவதால் 'ப்' போட தேவை இல்லை எனச் சொல்கிறார். இம்மாமனிதர் எழுதிய வைகையின் புதல்வன் எனும் தொடரினால் நல்ல நட்பு உண்டானது. இத்தொடரை இன்று வரை எழுதி வருகிறார். தற்சமயம் 345வது அத்தியாயம். ஆனால் இன்னமும் நந்தினி யார் என தெரியவில்லை. இத்தொடரை முடிக்க விடாமல் அவரை விடுவதாக இல்லை.

வலைப்பதிவில் ஒரு பூச்சாண்டி இருக்கிறார். தற்சமயம் வ.வ.சங்கத்தில் சிங்கமாக இருக்கிறார். எல்லோருக்கும் பூச்சி காமிக்கிறது இவருக்கு பிடிக்குமாம். ''உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப்பூ உலகம்'' அப்படினு அவர் பதிவில் போட்டு வைத்துள்ளார். இந்தப் பொன் மொழியை நானூறு வருடங்களுக்கு முன் எங்கயோ படித்ததாக ஞாபகம். எனக்கு 'short term memory loss' இருப்பதினால் அதை எங்கே எப்போது படித்தேன் என்ற ஞாபகம் இல்லை. வீட்டில் தாய்மார்கள் இவரது 'ஃப்ரோபைல்' படத்தைக் காண்பித்துதான் பிள்ளைகளுக்கு சோறு கொடுக்கிறார்களாம். பதிவர் ச்சின்னப்பையன் அறிந்த ஜே.கே.ரித்திஷ் அவர்களின் மகா தீவிர இரசிகர்.

சூது வாது தெரியாத சொக்கத் தங்கம் நமது வால்பையன். கதை, விமர்சனம், அரசியல் எனக் கலக்குகிறார். கடந்த ஒரு வார காலமாக உடல் நலம் இல்லாமல் தற்சமயம் தேறி வருகிறார். அவருடைய நேற்றைய பதிவை இரு முறை வாசிக்காதர்வர்கள் இருந்திருக்க முடியாது. வாலுக்கு வால் ஒன்றுதான் இல்லையென இவ்வரியை குசும்பன் போட சொன்னார்.

அடுத்ததாக பதிவர் ஹரி. புபட்டியன் எனும் பெயரில் எழுதி வருகிறார். தற்சமயம் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. நீண்ட காலமாக காணவில்லை. அவரின் சிறுகதைகள் மிக சுவாரசியமாக இருக்கும். சிறுகதை பற்றி எழுதிய பதிவில் அவருடைய சிறுகதைகள் விடுபட்டுவிட்டது. அவரின் டயானா என்றொரு பைத்தியகாரி சூப்பர் சிறுகதை.

வடகரை வேலன் எழுத்துப்பிழைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டித் திருத்துபவர். எல்லோரைப் போலவும் இவரின் கதம்பம் எனக்குப் பிடித்தமான ஒன்று.

அடுத்ததாக நான் சித்தப்பு என அழைக்கக் கூடிய விஜய கோபால்சாமி . இவர் நான் 'வெட்பிரஸ்' தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அறிமுகமானவர். நகைச்சுவையாக எழுதக் கூடியவர். சமீபத்தில் இவர் திருமணம் நடந்தது. அவருக்கு இவ்வேளையில் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்.

வெண்பூஅவர்களின் தளமும் சிறுகதைகளுக்கு பெயர் போனது. நல்ல சிறுகதை திறன் அவரிடம் காணக் கிடக்கிறது. திடீரென கடுப்பாகி சின்ன கதைகள் எழுதினார். கடந்த செப்டம்பர் ஐந்திற்கு பிறகு பதிவுகளை காணவில்லை. கூடிய விரைவில் பதிவெழுதவில்லையென்றால் சென்னையில் நடக்க இருக்கும் முக்கிய நிகழ்வில் அவரை சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என பரிசல்காரன் பகிரங்க அறிக்கை விடுக்க இருக்கிறார்.

அடுத்ததாக சஞ்சய். நிறைய விடயங்களை எழுதுகிறார். அவருக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது. பொடியன் எனும் பெயர் காரணம் என்னவாக இருக்கும்?

மேலும் பலர் உள்ளனர். இன்றய பதிவில் விடுபட்டிருப்பின் மன்னிக்கவும்.

மீண்டும் சந்திப்போம்....

அன்புடன்,

விக்னேஷ்வரன்
மேலும் வாசிக்க...

Thursday, September 18, 2008

சும்மா இருக்கிறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா?

பதிவுலகம் ஒரு பயன் மிக்க பொழுதுபோக்கு மையம் எனக் கூறினால் அது மிகையாகது என்றே நினைக்கிறேன். வேண்டியத் தகவலை சுலபமாகத் தேடிப் பிடித்துப் படிக்க முடிகிறது.

பொழுதுபோக்கு என்பது நாம் விருப்பம் கொண்டு செய்யும் செயல். அதில் ஒரு நிறைவு இருக்கும். மனதின் முழு ஈடுபாடும் அதில் திலைத்திருப்பதை ஒரு செயல்பாட்டின் முடிவிலும் அதன் முழுமையினிலும் நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

பொழுதுபோக்குகளை பல வகையாகப் பிரிக்கலாம். படிப்பது, எழுதுவது, தபால்தலை அல்லது நாணயங்கள் சேகரிப்பது, மீன் பித்தல், பேனா நட்பு, பயணங்கள், இன்னும் எவ்வளவோ.

அவ்வகையில் பதிவுலகில் நமது சக பதிவர்களின் ஏனய பொழுதுபோக்குகள் என்னவெனவும் அது தொடர்பான சில பதிவுகளையும் காண்போம்.

பொதுவாகவே காண்கையில் நமக்கு மிக தெரிந்த விடயம் நமது பதிவர்களின் புகைப்பட திறன். புகைப்பட திறனை வளர்த்துக் கொள்ள அடிக்கடி வைக்கப்படும் திறனாய்வுகளும் அவர்களிடையே ஆரோக்யமான போட்டியையும் திறமையையும் வளர்க்கிறது.

திருமதி.கோமதி அவர்கள் 'ஸ்னாப்பி' எனும் தளத்தில் அவர் சுட்ட படங்களை தேர்வு செய்து பதிவேற்றி வைத்திருக்கிறார். பல அழகான படங்கள் இங்கு இருப்பதைக் காண முடிகிறது.

அடுத்ததாக எனது வலையுலக முதல் நண்பர் வெங்கட்ராமன். இங்கு கிடைக்காத அல்லது விலைமிகுந்த புத்தகங்களை தமிழகத்தில் இருந்து அனுப்பி உதவி செய்தவர். ஆரம்ப காலத்தில் 'வெட்பிரஸ்' தளத்தில் எழுதும் போது அறிமுகமான நண்பர். இராஜபாட்டை எனும் தளத்தில் எழுதி வருகிறார். சமிபத்தில் புகைப்படங்களை பதிவேற்றுவதற்காக எனது க்ளிக்குகள் எனும் வலைதளத்தை ஆரம்பித்துள்ளார். திறம்பட படங்களை சுட்டுப் போட்டு வைத்திருக்கிறார். மேலும் பல அழகான இதமான படங்களை நமக்களிக்க வாழ்த்துக்கள்.

பள்ளி பருவத்தின் போது வெளிநாட்டு நண்பர்களோடு பேனா நட்புக் கொண்டிருக்கிறேன். ஸ்வீடன், ஆஸ்த்ரேலியா, பிலிபைன்ஸ், துர்க்கி போன்ற நாடுகளில் பேனா நண்பர்கள் இருந்தார்கள். பேனா நட்புக் கொள்பவரிடையில் பெரும்பாளும் தபால்தலை சேகரிக்கும் பழக்கமும் இருக்கும். பல நாட்டு தபால்தலைகளை சேகரித்து அழகு பெற அடுக்கி ஒப்பிட்டு பார்க்கையில் கிடைக்கும் மகிச்சியே அளாதி.

முதல் நாள் வெளியீடு காணும் தபால்களை வாங்கி, அதன் வெளியீடு காரணங்களை முதன் முதலில் அறிந்துக் கொண்டு நண்பர்களோடு பகரும் தருணங்களின் இனிமை மறவாதது. நம்மிடம் அதிகமாக இருக்கும் தபால்தலைகளை நண்பரிடம் கொடுத்து மாற்றி புதிய தபால்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

தபால்தலை சேகரிப்பில் ஈடுபாடு உள்ள பதிவர் கைப்புள்ளை. அவரின் சேமிப்புகளை பற்றி மூன்று பாகங்களாக எழுதியுள்ளார். மிகவும் சுவாரசியமான பதிவு. தபால்தலை சேமிப்பு பற்றிய அவரது பதிவு.

கோபி எனும் இவர் தமது வாழ்க்கை பயணம் எனும் தளத்தில் கார்களை சேமிப்பது அவரது பொழுதுபோக்கு எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனது தளத்திற்கும் அவரது தளத்திற்கு ஒரு 'ப்' என்ற வார்த்தை மட்டுமே வித்தியாசம். பதிவுலக சீனியரும் கூட. எனது வலைபதிவின் பெயர் அவரை பார்த்து வந்ததல்ல. தற்செயலான ஒன்றுதான் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

சில பெண்மணிகள் ஓய்வு வேலைகளில் எதையாகினும் சமைத்து புதிய சமையல் யுக்தியை கண முனைப்புக் கொள்வார்கள். சமையல் ஒரு கலை. அதிகமான தமிழ்ப்படங்களில் வரும் வசனம் ஒன்று, 'எல்லோராலயும் நல்ல காபி போட முடியாது' என்பதுதான். சுடு நீர் சமைக்கத் தெரியாதவர்கள் இருக்கும் இக்காலத்தில் சமையல் போற்றுபவர்களின் மனப்பாங்கு மதிக்கதக்கது.

என் சமையல் அறையில் எனும் 'வெட்பிரஸ்' தளத்தில் கீதா அவர்கள் சமையல் குறிப்புகளை எழுதி வருகிறார்.

அடுத்ததாக பலரும் அறிந்த தூயாவின் சமையல் கட்டு. மிகவும் எளிமையான முறையில் சமையல் குறிப்புகளை விளங்கக் கூறியுள்ளார்.

பதிவர் ஜெயஸ்ரீ அவர்கள் தாளிக்கும் ஓசை எனும் தளத்தில் சமையல், பலகாரம் என பலவகை குறிப்புகளை எழுதிவருகிறார். இவர் எழுதியிருக்கும் கேரட் அல்வா பதிவை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுகிறது.

நான் பதிவுலகத்தில் எழுத ஆரம்பித்த போது திரு.செல்வேந்திரன் நட்சத்திர பதிவராக வலம் வந்துக் கொண்டிருந்தார். அவருடைய பயணக் கட்டுரைகள் மிகவும் நன்றாக இருக்கும். அவருடைய காட்டின் ஒரு துண்டு படித்துப் பாருங்கள்.

இவைபோக தையல்கலை, வீடு அலங்காரம் போன்ற அங்கங்கள் தொடர்பாக யாரும் எழுதுவதாக அறிய முடியவில்லை. பொழுதுபோக்குகள் மனிதனின் ஓய்வு நேரத்தை நல்வழியில் இட்டுச் செல்லும் கருவி. மேலும் பல தளங்களில் தமது பொழுதுபோக்குகளை பற்றி எழுதுவது படிப்பவர்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என பெரிதும் நம்புகிறேன்.

இன்றைக்கு இவ்வளவுதான்.

மீண்டும் சந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Wednesday, September 17, 2008

கிளுகிளுப்புக் கவிதைகள் என்றால் என்ன?

கவிதை என்பது என்ன? இது இன்று வரை நம்மைக் குழம்பச் செய்யும் கேள்வியாகவே அமைகிறது. கவிதையின் வரையறை என்னவென விவாதிக்கப்பட்ட வாதங்கள் இன்றளவில் சிலருக்கு திருப்தி இல்லாமலே இருக்கிறது.

மரபுக் கவிதை, புதுக் கவிதை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். மரபின் அடிப்படையில் இன்று எழுதினால் அது புதுக் கவிதையா இல்லை பழைய கவிதையா? சற்று சிக்கலான கேள்வி இல்லையா?

சரி, இதைப் பற்றிய நமது கவிஞர்களின் பதில் என்னொன்று நோக்குவோமே:

திருத்தி எழுதிய தீர்ப்புகள் எனும் எனும் தனதுக் கவிதைத் தொகுப்பு நூலில் இப்படிச் சொல்கிறார் வைரமுத்து:

புதுக்கவிதை
என்பது

சொற்கள் கொண்டாடும்

சுதந்திர தின விழா.


யாப்பு எனும் குதிருக்குள்

இலக்கணம் போட்ட

உத்தரவுக்குப் பயந்து உறங்கும்

சோம்பேறிச் சொற்களுக்கா

நீங்கள்

கவிதை என்று கட்டியங் கூறுவீர்?


ஒன்று கேட்கிறேன்:

உறைக்குள் இருந்தால்தான்

அதற்கு
வாள் என்று பெயரா?

புதுக்கவிதை
எனும் போர்வாள்

இலக்கண உறையிலிருந்து

கவனமாகவே

கழற்றப்பட்டிருக்கிறது

ஏனெனில்

'சுவர்கோழிகள் கூவிப்

பொழுது விடியாது'
என்பதந்தப்
போர்வாளுக்குப் புரிந்தே இருக்கிறது.

மரபுக் கவிதைகள்-

மண்ணில் இருந்தாலும்

விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும்

மலர்வர்க்கங்கள்!


புதுக்கவிதைகள்-

விண்ணிலிருதாலூம்

மண்ணையே
பார்த்துக் கொண்டிருக்கும்

சூரிய சந்திரர்கள்.


கவிப் பேரரசு புதுக்கவிதையை இவ்வாறு விமர்சிக்கிறார். புதுக்கவிதை என்பது கட்டுப்பாடுகளை கட்டுடைத்த சுதந்திர இலக்கணம் எனச் சொல்கிறார்.

அதுவே முனைவர் தமிழ்குயிலார் க.கலியபெருமாள் தமிழ்க்குயில் எனும் தமது கவிதைத் தொகுப்பில் இவ்வாரு குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் ஞாயிறு மாலைப் போது
ஓய்வாய் வீட்டில் அமர்ந்து இருந்தேன்

அறிமுகம் இல்லா நண்பர் ஒருவர்

அருகில் வந்து வணக்கம் என்றார்

தானொரு புதுக்கவி என்று மிடுக்காய்

தன்னை தானே அறிமுகம் செய்தார்

"என்ன செய்தி' என்று கேட்டு

எதிரில் அவரை அமரச் சொன்னேன்


"பழைய புதிய கவிதைப் பற்றி
கர வேண்டும்" என்று சொன்னார்

"கவிதை யாப்பில் பழசு புதுசு

கல்வி பேதம் எதுவும் இல்லை

நேற்று எழுதியது பழைய கவிதை

இன்று எழுதினால் புதிய கவிதை

என்று கூறி அவரைப் பார்த்தேன்

ஏனோ அவர் முகம் வாடி விட்டது.


உந்து ஓட்டவும் பயிற்சி வேண்டும்

ஊசி போடவும் பயிற்சி வேண்டும்

ஆடிப்பாடவும் பயிற்சி வேண்டும்

ஆக்கிப் போடவும் பயிற்சி வேண்டும்

பயிற்சி இருந்தால் உயர்ச்சி அடையலாம்

பயிற்றிப் பலரை வழியும் நடத்தலாம்

முயற்சி இன்றியும் பயிற்சி இன்றியும்

முனைப்பு ஆர்வம் எதுவும் இன்றியும்


வரியை மடக்கி வார்த்தை அடக்கி

வந்தது கவிதை வரகவி என்றால்

எந்த விதத்தில் சான்றோர் ஏற்பர்

எங்ஙனம் அஃது கவிதை யாகும்?

எதுகை மொனை என்பதை அறிந்து

ஏற்ற சொல்லால் பொருளைச் சொரிந்து

சொல்லில் இன்பம் பொருளில் இன்பம்

சொல்லும் முறையில் ஒலியில் இன்பம்


சிந்தனை உவமை செம்பொருள் துலங்கவும்

சீரொளிர் சந்தம் சேர்ந்து விளங்கவும்

நினைத்து மனதில் நெட்டுரு போடவும்

நிரவி நிற்பதே எதுகை மோனை!

கொஞ்சம் முயன்றால் கவிதை பாடலாம்

கூர்ந்து பயின்றால் காவியம் இயற்றலாம்

என்று கூறி நிமிர்ந்து பார்த்தேன்

என்ன பதிலோ என்று கேட்டேன்.


நின்று ஒருகணம் நிமிர்ந்து பார்த்தார்

நெருப்பில் அவர்முகம் நீந்தி வந்தது

"கருத்தைச் சொல்ல இலக்கணம் எதற்கு
?
கவிதை நிலையில் எல்லாம் மயக்கு
பழமை போக்கி புதுமை நோக்கப்

பாடுங் கவிதை புதுக்கவி" என்றார்

எதுகை மோனை என்றால் என்ன?

என்று கேட்டும் வியப்பில் அழ்த்தினார்


இப்படியாக இரு கவிஞருக்கும் இரு மாறுபட்ட சிந்தனை வடிவங்கள் உள்ளன. காசி ஆனந்தன் புதுக் கவிதைகள் எனும் சொல்லை விடுத்து துணுக்குகள் அல்லது நறுக்குகள் எனக் குறிப்பிடுகிறார்.

கவிதை என்பது மரபிற்குற்பட்டு இருப்பதென்றால் எதற்காக புதுமை எனும் சொல்லை குடைந்து அதனுள் வைக்க வேண்டும். பழயது கவிதையாகவும் புதியதுக்கு புதுப் பெயரிட்டும் அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

நமது பதிவுலகில் மரபுக் கவிதைகள் எழுதுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். திரு. அகரம் அழுதா வெண்பாக்களை எழுதிக் குவிப்பதோடு வெண்பா பயிற்சி வகுப்பையும் நடத்தி வருகிறார். இது பாராட்ட தக்கது.

நான் தவறாமல் கவிதை வாசிக்கும் இடம் திரு.சேவியர் அவர்களின் கவிதைச் சாலை. பதிவுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே அறிமுகமான பதிவு. அவரின் பல கவிதைகள் பிடிக்கும். அவற்றுள் ஒன்று மழலை ஏக்கங்கள்.

நான் பார்த்தவரை, பதிவுலகில் பெண்களே அதிகமாகக் கவிதைகளை எழுதிக் குவிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? கவிதை எழுத மெல்லிய மனது வேண்டும் என்பார்கள். பெண்கள் மெல்லிய மனம் கொண்டவர்களாக இருப்பதினாலா?

அப்படி அறிமுகமானவர்களில் ஒருவர் ஹேமா. இவர் சுவிஸ் நாட்டில் இருக்கிறார். திறம்பட பல கவிதைகளை எழுதியுள்ளார். குழந்தை நிலா எனும் தளத்தில் இவர் கை வண்ணத்தைக் காண முடிகிறது.

பதிவுலகில் ஆரம்பக் காலத்தில் அறிமுகமானவர் சத்தியா. இவர் கவிதைகளை படித்து பொறாமைபட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வளவு அருமையாக கவிதைகளை எழுதுகிறார். இவர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். கடந்த வருடம் தன் குடும்பத்தோடு மலேசியா வந்திருந்தார். இனிமையாகப் பழகக் கூடியவர். சத்தியாவின் நிசப்தம் எனும் தளதில் இவரது கவிதைகள் காணக் கிடக்கின்றன.

அடுத்ததாக நான் அடிக்கடி கவிதைகளை படிக்கச் செல்லுமிடம் இனியவள் புனிதாவின் தளமாகும். இவர் என் ஊர்க்காரர். ஒரே மாநிலத்தில் 30 நிமிட பயண வித்தியாச குடியிருப்புகளில் வசிக்கிறோம். இவரை கவிதைக் காதலி இனியவள் புனிதா எனக் குறிப்பிடுவதும் உண்டு. அவருடைய இதமான கவிதைகள் ஈரமான நினைவுகள் எனும் தளத்தில் இனிமையோடு உள்ளன.

அடுத்ததாக நவின் பிரகாஷ் என்பவரின் தளம். இவர் தளத்தில் படிப்பதோடு சரி. பின்னூட்டமோ அல்லது அவரை பற்றி அறிந்துக் கொண்டதோ இல்லை. இவரின் காதல் கவிதைகளும் நல்ல கலக்கலாக இருக்கிறது. கிளுகிளுப்பாகவும் இருக்கிறது. இவரின் கவிதைகள் ஆதலினால் எனும் தளத்தில் எழுதப்பட்டு வருகிறது. அவருக்கு இவ்வேளையில் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

மேலும் சில கவிதை தளங்கள்:

எம்.ரிஷான் ஷெரீப் கவிதகள் ரிஷான் எழுதும் பதிவுகளின் பட்டியலை பார்த்தாலே மிதமாக தலைச் சுற்றல் வருகிறது. அவர் ஒரு புஜபல பராக்கிரமசாலி. வாழ்த்துக்கள் ரிஷான்

கொலைவெறி கவுஜைகள் இந்தப்பக்கம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிரபல்யமான வலையுலக புலிகள் எழுதும் கவிதைகள். மரபற்ற பாணி என்பதினால் கவுஜை என குறிப்பிடுகிறார்கள் எனக் கருதுகிறேன்.

சத்தீஸ். இவரும் நிறைய காதல் கவிதைகளை எழுதியுள்ளார்.

மேலும் பலர் கவிதைக்கென வலைபதிவுகள் தொடங்கி வெற்றிகரமாக எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் யாருடைய பதிவாகினும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

பி.கு: நாளை வெளியூருக்கு பயணம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதின் காரணமாக வலைச்சர பொறுப்பாசிரியரிடம் விடுமுறை கோருகிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.

மீண்டும் நாளை மறுநாள் சந்திப்போம்...
மேலும் வாசிக்க...

Tuesday, September 16, 2008

முடிஞ்சா இத படிங்க... சவால்...

சிறுகதை எழுதுவதென்பது எல்லோராலும் இயலாதது என்று தான் கூற வேண்டும். நாம் எழுதுவது இரசிக்கும் படியாக இருக்க வேண்டும். அடுத்தவரின் நடை நம் எழுத்தில் எட்டிப்பார்க்காமல் இருக்க வேண்டும். மாறுபட்ட சிந்தனையும் அவசியம் வேண்டும். எழுதியதையே திரும்ப எழுதாமல் புதிய கோணத்தை தந்திருக்க வேண்டும். இவை சிறுகதையை படிப்பவர்கள் எதிர்பார்ப்பது.

சடுதியில் தோன்றும் எண்ணத்தை அழகுபெற எழுத்தாக வடித்து வாசகர்களுக்கு கொடுத்திட நினைப்பது ஒரு சிறுகதை எழுத நினைப்பவனின் எண்ணம். எழுதும் சமயம் ஏற்படும் தடுமாற்றங்கள் கதாசிரியனுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடுவது உண்மை. இதனை கருச்சிதைவு எனும் தலைப்பில் புதுமைப்பித்தன் எழுதி இருப்பார். கீற்று இணையத்திலும் அக்கதையைக் கண்ட ஞாபகம். இப்பதிவிற்காக தேடிய போது கிடைத்தது. படித்துப்பாருங்களேன்.

நான் முதலில் எப்போது சிறுகதை படிக்க ஆரம்பித்தேன் என சற்றும் நினைவு கூற முடியவில்லை. சிறுகதைகளை படிக்க ஆர்வம் தோன்றியது திரு.ஜெயகாந்தனின் எழுத்துக்களின் வழியாகதான்.

பதிவுலகில் சிறுகதைகள் படிப்பவர்கள் மிகக் குறைவு என்றே கூறலாம். காரணம், சிறுகதைகள் நீளமாக இருக்கும். ஒரு சிறுகதையை படிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சராசரியாக 5 பதிவுகளை படிக்க எடுத்துக் கொள்ளும் நேரமாகும். அதிகமாக கதாபாத்திரங்கள் புகுத்தப்பட்ட கதைகள் வாசகர்களுக்கு ஒரு வித மயக்கத்தை கொடுக்கும். ஒரே மூச்சாக பிடித்து படிக்க முடியாமல் செய்துவிடும்.

அதிகமாக கருத்துக்கள், அதிகமான கதாபாத்திரங்கள், அதிகமாக சூழல்கள், அதிகமான இடங்களை கொண்டப் பலக் கதைகள் திறம்பட எழுதி இருந்தாலும், வாசகர்கள் குழம்பிப் போவதின் காரணமான தோல்வியடைகிறது.

கதையின் முதல் பத்தியையும் கடைசி பத்தியையும் படித்து கதையை விமர்சிக்கும் மகான்களையும் கண்டதுண்டு. சிறுகதைகளை விரைவாக படித்திடவே நினைக்கிறார்கள். அதனால் சிறுகதையில் உள்ள வாக்கியங்கள் குட்டையானதாகவும், அடுத்தடுத்து படித்திட சுலபமாகவும் இருந்திடில் படிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து.

பதிவுலகில் நான் முதன் முதலாக படித்து இரசித்தது வாத்தியார் சுப்பையா ஐயாவின் சிறுகதைகள் தான். அதன் பிறகே பல சிறுகதைகளை பதிவுலகில் தேடிப்படிக்க ஆரம்பித்தேன். அப்படி படித்ததில் சிலவற்றை இங்கு பட்டியலிட்டுச் செல்கிறேன்.

1) மதிப்பும் மரியாதையும் ஒருவனின் எப்படிபட்ட நடவடிக்கையில் இருக்க வேண்டும் என்பதை சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் வாத்தியார் ஐயா. படித்துப் பாருங்கள்.

2) அடுத்ததாக நம்ம ஜீ அண்ணாச்சி என்ன எழுதி இருக்காருனு பாருங்களேன். தேவைகள் தேடிப்பிடிக்க வேண்டியவை. சில சமயம் அவை நம் பக்கம் வந்து நகைத்துச் செல்வதாக எவ்வளவு அழகாக வடித்திருக்கிறார். புரசைவாக்கம் நெடுஞ்சாலை.

3) சரித்திர நாவல்கள் மீது இருக்கும் மோகம் சரித்திர சிறுகதைகள் மீது இருந்ததில்லை. அம்புலிமாமா கதைகளை போல மாறுபட்ட எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் இருந்ததுண்டு. ஆனால் திரு.மோகந்தாஸ் எழுதிய சோழர் சிறுகதை இந்த எண்ணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. நட்சத்திரம் எனும் தலைப்பில் அவர் எழுதிய சோழர் கால சிறுகதை. பகுதி ஒன்று. பகுதி இரண்டு.

4) சமீபத்தில் அறிவியல் சிறுகதைகள் போட்டி தமிழ்மணத்தில் களைக்கட்டிக் கொண்டிருந்தது. கதைகளை தங்களது இரசனைக்கேற்ப பலரும் வடித்திருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில் திரு.சேவியர் எழுதிய ‘உண்மையா அது என்ன?’ கதையை நான் இரசித்தேன். அக்கதையின் நாயகன் விக்கி.

5) பி. ந பதிவுகள் இன்னமும் எனக்கு அவ்வளவு பரிச்சயம் ஆகவில்லை. பி. ந பதிவுகளை படிக்கும் போது ‘என்னய்யா இப்படி உளருகிறார்கள்’ என நொந்துக் கொண்டும் இருக்கிறேன். ஆனால் திரு.சென்ஷி எழுதிய வெந்து தணிந்தது காடு எனும் இந்த பி.ந சிறுகதையை படித்துப்பாருங்களேன். சூடுபட்ட வடு என்றும் ஆறாமல் இருந்துவிடும்.

மொத்தம் பத்து கதைகளை தேடி வைத்திருந்தேன். அவை அதிகபட்சமாகி ஒரு சளிப்பை ஏற்படுத்திவிடும் எனும் நோக்கில் ஐந்தை மட்டும் எழுதுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Monday, September 15, 2008

பதிவர் குசும்பனின் இரகசியம் அம்பலமாகிறது

சனிக்கிழமை காலையில் சஞ்சய் அண்ணன் கேட்டாரு.

“விக்கி வலைச்சரத்தில் எழுதுறியாப்பா”.

பதில் கூட சொல்லவில்லை. இன்னுமொரு அரட்டை சன்னல் திறந்தது,
“வலைச்சரத்தில் எழுதுறிங்களா?" எனக் கேட்கப்பட்டிருந்தது.

அட என்ன இது ரொண்டு பேரு ஒரே கேள்விய கேட்குறாங்களே என யோசித்தேன்.


சஞ்சய் அண்ணன் சொன்னாரு, “வரும் திங்கள் முதல் ஒரு வாரத்துக்கு எழுதனும்”.

“திங்களா? எப்படிங்க? இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. அட் ‘லிஸ்ட்’ ஒரு வாரம் டைம் கொடுங்க. நான் எழுதும்போது ரொம்ப பிழை செய்வேன். சரி பார்த்துப் போடனும்.”

“அதுலாம் பிரச்சனை இல்லை. எழுது”.

“சரி”.

சஞ்சய் அண்ணன் 'ஓகே' சொல்லிட்டு விதிமுறைகளை மின்மடலில் அனுப்பினார்.

எழுதுகிறாயா எனக் கேட்ட இன்னொருவரோடு பேசினேன். வேறு யாரும் இல்லை. நம்ம ஜெகதீசன் அண்ணாச்சிதான். அவருக்கு எப்படி தெரியும் எனக் கேட்கிறீங்களா. அழைப்பு வந்தது அவருக்கு. மாட்டிவிட்டது என்னை. ஜெகதீசன் அண்ணாச்சிக்கு நன்றி.

எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக மகிழ்கிறேன். சீனா ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஒரு வருடமாக, 18.06.2007 முதல் வலையில் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எழுதியது ‘வெட்பிரஸ்’ தளத்தில். இரண்டு மூன்று மாதம் எழுதி இருப்பேன், நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 4 மாதங்களாக மீண்டும் ‘பிளாகர்’ வலைபதிவில் எழுதிவருகிறேன்.

எனது இந்த சுயபுராணத்தை வலைபதிவும் ஒரு வருட நிறைவும் எனும் பதிவில் எழுதி இருக்கிறேன். இதுவரை எழுதிய பதிவுகள் மொத்தம் ஐம்பது.

ஐம்பது என்பது குறைவான எண்ணிக்கை. இதில் எனக்கு பிடித்த சில பதிவுகளை சொல்வதற்கு சிரமம் உண்டாகிறது.

நான் எழுதியதில் எனக்கு பிடித்த கட்டுரைகள்:

முதலாவதாக பாரோ மன்னனின் மர்மக் கல்லறை இக்கட்டுரைச் சில மாதங்களுக்கு முன் மலேசிய நண்பன் நாளிகையில் வந்தது. ‘அதுக்கு என்ன இப்போனு’ கேக்குறிங்களா? தமிழர்கள் பழம் பெருமை பேசுவதில் பிரியம் கொண்டவர்களாம். அதான் சொல்லிவிட்டேன்.

அடுத்தது மாயாக்கள் இருந்தார்களா? எனும் கட்டுரை. இந்தப் பதிவிற்கு ஒரு அனானிமஸ் பின்னூட்டம் வந்தது. விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னதான் சொல்ல வருது இந்த அனானினு யோசித்தேன். பிறகு புரிந்தது. எல்லோருக்கும் தெரிந்ததை ஏன்டா எழுதித் தொலைக்கிறனு கேட்டிருக்கு அந்த அனானி. என்னா ஒரு வில்லத்தனம்? ஹூம்ம்ம்.

நான் எழுதுவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டக் கட்டுரை ஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம். அதற்கான முயற்சியும் வீண் போகவில்லை. ஏறக் குறைய ஒருவார காலமாக தமிழ்மணத்தின் சூடான இடுகையில் இருந்தது. ‘பெண் கொடுமை’ என தலைப்பிட்டிருப்பின் அன்றே தமிழ்மணத்தில் மறைந்து போயிருக்குமோ என்னவோ? தலைப்பில் இருக்கும் ‘கவுச்சி வாடை’ மட்டும் இதை வெற்றி கொள்ள செய்ததென்றால் நான் மிகவும் வருந்துகிறேன்.
என் சுயபுராணம் அளவிற்கு அதிகமாகவே இருக்கிறதாக உணர்கிறேன். மீண்டும் நாளை மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்.

எச்சரிக்கை: >

1) விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும்’ என பின்னூட்டக் கூடாது

2) அதையே இன்னொருவர் காப்பி பேஸ் செய்து ‘ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்’ போட கூடாது.பி.கு: நேற்று குசும்பன் என்னிடம் ‘மொக்கை’ போடுகிறேன் எனக் கூறி வாய் தவறி ஒரு இரகசியத்தைச் சொல்லிவிட்டார். நான் பதிவில் போட்டுவிடுகிறேன் என சொல்லிய போது வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இருந்தாலும் என் ‘ஓட்டை வாய்’யை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் சொல்லிவிட்டேன். என்ன விடயம் என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் குசும்பன் அதிக நேரம் ‘ஆன் லைனில்’ இருப்பதில்லை.

நாராயணா… நாராயணா….
வருகிறேன்.
மேலும் வாசிக்க...

Sunday, September 14, 2008

நன்றியும் வரவேற்பும்

அருமை நண்பர் கைலாஷி என்ற முருகானந்தம் வித்தியாசமான முறையில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றி விடை பெற்றிருக்கிறார். வழக்கமாக ஒரு வார காலம் ஆசிரியராக இருப்பதற்குப் பதிலாக இரு வார காலம் ஆசிரியர் பதவியை வகித்திருக்கிறார். ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் அரிய புகைப்படங்கள் - திருக்கயிலாயம் பற்றியது இணைத்திருந்தார். அரிய செயல் - வித்தியாசமான சிந்தனை. பலரும் தரிசனம் செய்தனர். தனது கயிலாய யாத்திரை பற்றிய குறுந்தகடு / புத்தகம் வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க என அறிவித்தவர்.

25 பதிவுகள் இட்டு பல புதிய பதிவர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். பதிவுகள் அத்தனையும் அருமை. படங்கள் அத்தனையும் அனைவரும் பார்க்க வேண்டியவை.

நாதன் தாளின் துணையுடன் நற்பதிவுகள் பதிந்த நல்ல நண்பர் முருகானந்தம் என்ற கைலாஷிக்கு நல்வாழ்த்துகள் கூறி நன்றியுடன் விடை அளிப்பதில் பெருமை கொள்கிறேன்.

அடுத்து இவ்வாரத்திற்கு ( 15ம் நாள் முதல் ) ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் நண்பர் விக்னேஷ்வரன் அடைக்கலம் அவர்கள். மிகக் குறுகிய முன்னறிவிப்பினை ஏற்றுக் கொண்டு இணக்கம் தெரிவித்தவர். வாழ்க்கைப் பயணம் என்றொரு பதிவினின் உரிமையாளர். இது போக இன்னும் மூன்று பதிவுகளிலும் எழுதி வருகிறார். அவருக்கு நல்வாழ்த்து கூறி வருக வருக என வரவேற்கிறேன்.

சீனா .......
மேலும் வாசிக்க...

Saturday, September 13, 2008

மீண்டும் சந்திப்போம் அன்பர்களே
பொன்னிறத்தில் எம்பெருமான்ஆடுகின்றானடி திருக்கயிலையிலே ( விஷ்ணு மத்தளம் கொட்ட, பிரம்மா தாளம் தட்ட, அம்மை பார்வதி, கணேசன், முருகனுடன் ஐயன் உடுக்கையை ஒலித்துக்கொண்டு திருக்கயிலையில் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டே சகல புவனத்தையும் ஆட்டி வைக்கும் அற்புதக்காட்சி.)இன்று வரை தாங்கள் தரிசித்த திருக்கயிலாய மானசரோவர் தரிசனம்
(படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)நம்மூர்ல எல்லாவற்றையும் மங்களகரமா சொல்ல வேண்டுமென்பதற்காக இவ்வாறு கூறுமாறு அமைத்துள்ளனர், எனவே கவலைப்பட வேண்டாம் மீண்டும் வந்து தொல்லை தருவேனோ என்று. ஆயினும் வலைச்சர்ம் மூலமாக இல்லாவிட்டாலும் அடியேனது வலைப்பூக்கள் மூலம் சந்தித்துக் கொள்ளலாம்.இந்த ரெண்டு வாரமா அடியேன் பெரிய அம்மிணியோடயும், சின்ன அம்மிணியோடயும் கிறுக்குன கிறுக்கலகளை வந்து படிச்ச்வங்க எல்லாருக்கும் பெரிய கும்பிடுங்கோ.

ரொம்ப நல்லா போச்சுதுங்க ரெண்டு வாரம், KRS சார் வந்து நெறைய பட்டம் கொடுத்தாருங்க. துளசி டீச்சர் வந்து ஐடியா கொடுத்தாங்க, யாரைப் பத்தி எழுதனனோ அநேகமா எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க.ரொம்பப் பேரு வந்து கயிலை நாதரை தரிசிச்சாங்க, அருமையான தரிசனம் கெடச்சுத்துன்னும் சொன்னாங்க அதுக்காக சந்தோஷங்க. ஒரு வருஷமா 70 பதிவுகள்ல முடியாதது இரண்டு வாரத்துல 20 பதிவுகள்ல கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷங்க.
திருக்கயிலாய யாத்திரை CD/DVD/புத்தகம்(தமிழில்) வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmailல் தங்கள் முகவரியுடன் மின்னஞ்சல் செய்தால் அவர்க்ளுக்கு அனுப்பி வைக்கிறேன். திருக்கயிலாயம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்தவித உதவி வேண்டுமென்றாலும் அடியேனை அணுகலாம்.
எப்படியோ 25 பதிவுகள் எழுதிட்டேன், சீனா ஐயா கொடுத்த எல்லா வேலைகளையும் முடிச்சாச்சுன்னு ஒரு திருப்தி.
இன்னும் நெறையப்பேரைப் பத்தி எழுத நெனைச்சிருந்தேன், குறிப்பு கூட எடுத்து வெச்சிருந்தேன், இரண்டு வாரமா எழுதியும், கிடச்ச நேரத்துல இவ்வளவுதான் முடிஞ்சது அதனால் தான் பல பதிவுகள்ல உங்களோட அறிமுக சுட்டி மட்டும் குடுத்திருக்கேன். ஏதாவது குறை இருந்தால் மன்னிச்சுக்கோங்கோ.


எவ்வளவோ புதுப் புது வலைப்பூக்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அடியேனுக்கு இந்த வாய்ப்பை அளித்த சீனா சாருக்கும், வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் நன்றி, இவர்கள் சேவை மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவரிடமும் இருந்து நன்றி கூறி விடைபெற்றுக் கொள்பவர்கள் உங்கள் பெரிய அம்மிணி, சின்ன அம்மிணி, கைலாஷி.நன்றி வணக்கம்.
------------------------------------------

மேலும் வாசிக்க...

வெட்டிப்பய புள்ளைக சங்கம்

இந்தக் காலத்துல எல்லாம்மே தலை கீழா மாறிப்போச்சுங்க, காலம் கெட்டுப்போச்சுன்னு இதைத்தான் சொல்றாங்களோ. எங்க காலத்துல வெட்டிப்பசங்கன்ன ஒரு "தனி மரியாதை" இருந்துங்க அதை இவங்க கெடுத்துட்டாங்க.

வெட்டி பய புள்ளைக சங்கம்!!!

இதுல இவங்க ரெம்ப உருப்படியா நேரம் செலவழிச்சு எழுதறதைப் படிக்கப்போனா,ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு!!! ன்னு சொல்லறாங்க.

இப்படி உருப்படியான வேலை செய்யறவங்க

சுட்டிப்பய புள்ள

ஆல் இன் ஆல் அழகுராஜா

பேரின்ப பேச்சுக்காரன்

பாசக்கார பயபுள்ள...

Pulipandi

கொருக்குபேட்டை கஜா

இருக்குங்க கடையா ஒரு missile ( ஆப்பூ)

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...

இதைப்படிச்சுட்டு என்னால சிரிக்காம இருக்க முடியல்ல ரொம்ப டமாஸ்தான் போங்க. நேரம் கெடைக்கறப்ப நீங்களும் போங்க.
------------------------------------
இன்றைய தினம் மேக மூட்டத்தின் நடுவில் எம்பெருமான் எப்படி காட்சி தருகின்றார் என்பதைப் தரிசனம் செய்கின்றீர்கள் அன்பர்களே.

எம்பெருமானுக்கு எதிரில் நந்தி எப்படி தன் மூச்சுக்காற்றால் பொன் மயமான ஊஞ்சலில் கமனீயமாக ஆடும் பவள நிற எம்பிரானையும், பச்சை பசுங்கொடி பர்வத ராஜ குமாரியையும் குளிவிக்கிறார் என்பதை காணுகின்றீர்கள்.( ஐயனுக்கு எதிரே உள்ள சிறிய மலைதான் நந்தியெம்பெருமான்)


கருணா மூர்த்தி எம்பிரானின் ஜடாமுடி, தேவலோகத்திலிருந்து கங்கை பூலோகத்திற்க்கு ஐயனின் ஜடாமுடியின் வழியாகத்தானே இறங்கினாள்.


ஐயனின் ச்த்யோஜாத முகம் மேக மூட்டத்தில்.
மானசரோவர் தடாகம்


இராக்ஷஸ் தால் ஏரி
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது