07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சேவியர். Show all posts
Showing posts with label சேவியர். Show all posts

Friday, September 26, 2008

ஒரு அவரச பிரியாவிடை


காலையில் வந்த உடனேயே அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் வாஷிங்டன் மியூட்சுவல்ஸ் வங்கியை ஜெ.பி மார்கன் வாங்கியதால் தான் இந்த பரபரப்பு.


ஒரு உயரதிகாரி எனும் முறையில் காலையிலிருந்தே விவாதங்களும், என்ன நடக்கும் எனும் ஊகங்களும், தேவையற்ற மீட்டிங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.


இன்றைய பொழுது வலைத்தளம் பக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என்பதால்,


ஒரு வாரத்தை முழுமையாய் பயன்படுத்த முடியவில்லையே எனும் வருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும்,


மனதுக்கு திருப்தி தரக்கூடிய நான்கைந்து பதிவுகளையேனும் தர முடிந்த மகிழ்வுடன் விடைபெறுகிறேன்.


இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயா அவர்களுக்கும், வருகை புரிந்து ஊக்கமளித்த, வருகை புரியப் போகிற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


மீண்டும் ஒரு வாய்ப்பில் சந்திப்போம்.

பிரிவு என்பதே
உறவுக்காகத் தான்,
ஆரம்பப் பாடம்
கருவறை வாசலிலேயே
கண்விழிக்கிறதே.


அன்புடன்
சேவியர்
மேலும் வாசிக்க...

Thursday, September 25, 2008

கவிஞர்கள் பார்வையில் அம்மா !




ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!



என கவிப்பேரரசு வைரமுத்து தன் அன்னையைப் பற்றி கவிதை வரிகளில் கண்ணீர் வடித்திருப்பார்.

அன்னையைப் பற்றி எழுத கவிப்பேரரசு முதல் கவிதை எழுதத் துவங்கும் கவிக் குழந்தைகள் வரை எல்லோருமே பிரியப்படுகின்றனர். காரணம் உலகில் எப்போதும் கலப்படமின்றிக் கிடைக்கும் ஒரே பொருள் தாயின் நேசம் மட்டும் தான்.


காய்ச்சலில்
நெற்றிதொடும்போதும்,
மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்
தோல்விகளில்
தட்டிக்கொடுத்து
உற்சாகப்படுத்தஆளில்லாதபோதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.

என அம்மாவின் அருகாமை இல்லாத நிலையைச் சொல்லும் நிலாரசிகனின் கவிதை தாயின் நினைவுகளைக் கிளறி விடுகிறது.

தூர தேசத்தில் இருப்பவர்களுக்கு எங்கோ கிராமத்து மூலையில் பிள்ளைகளின் நினைவாய் தேயும் தாயின் ஏக்கங்கள் தெரியாது என்பது தான் பலரின் எண்ணம்.

ஆனால் தாயின் அன்பையும், அருகாமையையும் உணர்ந்தவர்களால் எத்தனை கடல்களுக்கு அப்பால் வசித்தாலும் தாயின் நினைவுகளுக்கு அப்பால் வசிக்கவே முடியாது.

நீண்ட வருடங்களுக்கு முன்பு அமெரிக்க வாழ்க்கையின் தனிமை வறுத்தெடுத்த பொழுதில் வார்த்தெடுத்த எனது அம்மா கவிதை இன்னும் எனக்கும் என் எழுத்துக்களை ரசிக்கும் தோழர்களுக்கும் பிரியமான கவிதையாய் இருக்கிறது.

நகரத்தின் வெப்பத்தில் வசிக்கும் எனக்கும், கிராமத்தின் மரங்களுக்கிடையே வசிக்கும் என் அம்மாவுக்குமான தொடர்பு இன்னும் அவ்வப்போதைய சந்திப்புகளும், அடிக்கடி நிகழும் தொலைபேசி உரையாடல்களும் தான் எனும் வாழ்க்கை நிர்ப்பந்தம் வலியூட்டுகிறது.
ஆயிரம் சொல்லுண்டு அகிலத்தில்
ஆனாலும் ஒன்றுண்டு நெஞ்சத்தில்
அன்பிற்குமுண்டு பலவகை
அம்மாவின் வகையொன்றேதான்
அணைப்புகள் கொடுத்திடும் சுகங்கள்
அன்னையின் அணைப்பிற்குண்டோ ஈடு
அன்றவள் இருக்கையில் இல்லை
அறிவு ஏழை என் வசம்
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகுது இதயம் வெறுமையாகவே
அன்னையர் தினம் வரும் வேளையிலே
அனுபவம் தன்னிலே ஒரு சொல் கேளீர்
அருமையாய் பேணி அம்மாவைக் காத்திடும்
ஆவியாய் அவள் மறைந்த பின்னாலே
அழுது புரளுவதும் ஆயிரம் பேசுதலும்
அமைதியத் தராது
அடித்தே சொல்லுவேன்

என இணையத்தில் காணக்கிடைத்த அமல் என்பவரின் அம்மா கவிதை அம்மாவை பேணுங்கள் என மோனை முத்திரையுடன் விண்ணப்பம் விடுக்கிறது. இருக்கும் வரைக்கும் அம்மாவின் அருமை தெரிவதில்லை.
பார்வை இழந்தபின் ஐயோ எனக் கதறுவதில் பயனில்லை. இருக்கும் போதே அம்மாவைப் பேணுவதும், பெருமைப்படுத்துவதும், அம்மாவின் வார்த்தைகளுக்கு முன்பாகவே அவளுடைய தேவைகளை நிறைவேற்றுவதும், அன்பின் அருகாமையை அன்னையின் கரம் தொட்டு உணர்த்துவதும் என நிஜமான நேசங்கள் பரிமாறப்பட வேண்டும்.

தாயின் அருகாமை திருமணமான பெண்களின் உள்ளத்தில் அதிகமாகவே எழுவது கண்கூடு. அன்னையைப் பிரிந்து கணவனுடன் வாழும் சூழல் பாதங்களில் தீ மிதிப்பதாகவும், இதயத்தில் தீ மிதப்பதாகவும் பெண்களுக்கு காயம் ஏற்படுத்தும்.

உன் மடியில் உறங்கி
நீ ஊட்ட உண்டு
உன் வசவில் சிணுங்கி
உடன் பிறப்போடலைந்து
உனை ஏய்த்து மகிழ்ந்து
சின்னவளாகவே இருந்திருந்தால்..

சுற்றங்களை விடுத்து
மணமொன்று புரிந்து
மறுதேசம் நுழைந்து
நிதமும் உனைத்தேடி
நினைவினில் நீராடி
ஏங்காது இருந்திருப்பேன்

எனும் கீதா வின் கவிதை அனுபவத்தின் வெளிப்பாடாய் இருக்க சாத்தியங்கள் நிறையவே உண்டு.

வெள்ளைத் தேங்காயும்
கருப்பு மிளகும்
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய்
தால லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையிலே
அழகருக்கும் வாயூரும்

என தோழி வைகைச்செல்வி சொல்வது கூட திருமணமாகி நகர வாழ்க்கைக்கு வந்து விட்ட ஒரு பெண்ணின் கிராமத்துத் தாயின் நினைவலைகள் தான்.

அந்த நினைவலைகள் பெண்களுக்கு மட்டுமானதல்ல என்பதை

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

எனும் கவிப்பேரரசின் வரிகள் நிரூபிக்கின்றன.

புரியவில்லையே அம்மா எனும் எனது கவிதை ஒன்று ஒரு பெண்ணின் ஏக்கம் எப்படியிருக்கும் எனும் ஆணின் கற்பனைக்குப் பிறந்தது.

அம்மாவின் பிரிவு உயிரிலிருந்து உயிரைப் பிரித்தெடுப்பது போன்றது. ஜனனத்தில் தாய் எனும் உயிரில் இருந்து மழலை எனும் இன்னோர் உயிர் பிரிந்து வருகிறது. தாயின் மரணத்தின் அந்த பிரிந்து வந்த மழலை உயிரின் ஒரு பாதி இறந்து போகிறது. தாயின் பிரிவு கவிதைகளின் வாசிக்கும் போதெல்லாம் அம்மாவைக் கட்டிக் கொண்டு உறங்கவேண்டும் எனும் ஏக்கத்தை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது.

தமிழ்ராஜாவின் அம்மா உன் நினைவுகள் என்னும் கவிதை உயிரை உலுக்குகிறது.


சுந்தர ராமசாமி அவர்களின் கவிதை ஒன்றும் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது

கொல்லிப்பாவை
ஸ்டேஷன்
ஒருமரம்
அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது
கடைசிக்கவிதை

என ஒரு தனிமையின் சூழலையும், ஏக்கத்தையும் கவிதைகளில் கொண்டுவருகிறார். நவீன மொழி அவருடையது.



“புருஷனை கைக்குள்ள போட்டுக்கோடி,
அப்போதான் காலம் தள்ளமுடியும்!”
அக்காவிற்குச் சொன்ன
அதே அம்மாதான்
என்னிடம் சொன்னாள்.

“உன் பொண்டாட்டி,
தலையணை மந்திரம் ஓதுவா.
அவ முந்தானைல சிக்கிக்காத
நீ ஆம்பளைடா!”

எனும் நந்தாவின் கவிதை மெலிதான நகைச்சுவையையும் மீறி ஒரு தாயின் கரிசனை தன் பிள்ளைகள் மீது எப்படியெல்லாம் படர்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. அக்காவின் கணவனின் அம்மா என்ன சொல்லியிருப்பாள் என்றும், தனது மாமியார் மகளிடம் என்ன சொல்லியிருப்பார் என்றும் கவிஞனின் பார்வை ஒரு தொடர்சங்கிலி ஓட்டத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும் என நம்பச் செய்கிறது இந்தக் கவிதை.

அம்மா!
நம் வறுமைதான்
உன்னை பிழைக்கவைத்தது
இல்லையென்றால்
மம்மியாகியிருப்பாய் !

எனும் கோட்டை பிரபு வின் கவிதை ஒன்று வறுமை தமிழைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதையும் வசதிகள் ஆங்கிலக் கதவுகளுக்குள் அடைபடுகின்றன என்பதையும் பளிச் என புரிய வைத்து நகர்கிறது.

அன்பு அவள் மொழி
ஆறுதல் அவள் வார்த்தை
இன்முகம் அவள் முகவரி
ஈடில்லாதது அவள் பாசம்
உயர்வானது அவள் பண்புநலன்
ஊக்கமளிப்பாள் உயர்வு பெற
எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம்
ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம்
ஐயங்களின் எல்கைக்கப்பால் அவள்ஆன்மா
ஒற்றுமையே அவள் வேதம்
ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை
ஔரவமானது அவள் சக்தி
அஃதே அவளே அம்மா.

எனும் கலையரசனின் அ..ஆ..இ…ஈ… கவிதை வருடங்கள் கடந்தபின்னும் ரசிக்க வைக்கிறது.

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?
-
வைரமுத்து.




மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Wednesday, September 24, 2008

வலையுலகப் புரட்சியாளர்கள்

சமூகக் கட்டமைப்பின் மீதும், மனித நேய மறுதலிப்புகள் மீதும் கோபம் கொண்டும், சக மனித கரிசனையின் வெளிப்பாடாகவும் பல கட்டுரைகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன.
பெரும்பாலான கட்டுரைகள் சமூகத்தின் கறைகளை எப்படியேனும் அகற்றவேண்டும் என்றும், அதன் குறைகளை குறைந்த பட்சமேனும் குறைக்க வேண்டும் எனவும் மும்முரம் காட்டுகின்றன.


இத்தகைய சமூக, சக மனித அக்கறை ஒட்டு மொத்த மனித குலத்தின் நம்பிக்கையை அணையாமல் காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.


அந்த வகையில் வருகின்ற எழுத்தாளர்களில் ஒருவர் வே.மதிமாறன். பெரியார் கொள்கைகளின் மேல் தீராப் பிடிப்புடைய இவருடைய தளம் பல புரட்சிகரமான சிந்தனைகளை துணிச்சலுடன் சபைமுன் வைத்து சவால் விடுகிறது. பெரியாரின் பிரியன் என்பதால் இவரிடம் இயல்பாகவே மதங்களைக் கடந்த மனிதநேயப் பார்வை நிரம்பி இருக்கிறது.


இவர் சில கவிதைகளும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக என்ன செய்து கிழித்தார் பெரியார் என்பது அவருடைய கவிதைகளில் ஒன்று !


மதிமாறன் படைப்புகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. பாரதீய ஜனதா என பாரதி குறித்த எதிர்விமர்சனங்களை நூலாக வெளியிட்டிருக்கிறார். அது பல தளங்களில் சலசலப்பை (கூடவே கைகலப்பையும்) ஏற்படுத்திய நூல். மத அமைப்புகள், சாதீய அடக்குமுறைகள், சமூக ஏற்றத்தாழ்வு எதிர்ப்பு போன்ற உணர்வுகளும், பெரியார் சிந்தனைகளின் இணை சிந்தனையும் உங்களிடம் இருந்தால் இந்தத் தளம் உங்களுக்குப் பிடிக்கும்.


அசுரன் அவர்களின் போற்பறை எனும் தளம் பல்வேறு சீர்திருத்தச் சிந்தனைகளை விரிவாகவும், பரவலாக ஏற்றுக் கொள்ளும் வகையிலும் வகைப்படுத்துகிறது. அவருடைய சிந்தனைகளோடு பலருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம், எனினும் தெளிவான பார்வையும், ஆழமான பதிவுகளும் அவருடைய தளத்தின் வலிமை என்றால் அது மிகையல்ல.


இயற்கையோடு இணையாத வாழ்வின் சிக்கல்களும், மேனாட்டு கலாச்சார தாக்கங்களும், இன்னும் ஆழ்மன அளவில் விடுதலை பெறாத அரசியல் அமைப்புகளும், சாதீய அடக்குமுறைகள், அத்துமீறல்கள், மத வெறி என பல விஷயங்கள் இவருடைய எழுத்துகளின் முதுகெலும்பாக இருக்கின்றன.


ஜமாலனின் தளம் ஆரோக்கியமான பல கட்டுரைகளால் நிரம்பி வழிகிறது. இவருடைய கட்டுரைகளும் ஆழமான பார்வையுடனும் தெளிவான அணுகுமுறையுடனும் இவருடைய சமூகத்தின் சீர்கேடுகளின் மீது சாட்டையாய் இறங்குகின்றன. தீவிர வாசகர்களுக்கு நிறைவளிக்கும் தளம் இது.


பட்டினியின் கொடுமை தாங்காமல் தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்று தப்பிய தாயின் பரிதாப சூழலின் பின்னணியில் சமூக அமைப்பை விமர்சிக்கும் ஆதிரையின் பதிவு மனதை கனக்கச் செய்கிறது. மனிதனின் ஆழ்மனக் கிடங்கில் உறங்கியே கிடக்கும் கரிசனை, மனிதநேயம் இவற்றை சற்று ஆக்ரோஷமாகவே உலுக்கி எழுப்புகிறது இந்தப் பதிவு.


அற்புதனின் தாய்நாடு தளமும் சமூக அவலங்களை விளக்கி, சில மாற்றங்களை முன்னிறுத்துகிறது. மனதைத் தொடும் பதிவாக பல பதிவுகள் இருக்கின்றன.


ஜெகத் அவர்களின் கைமண் அளவு அவ்வப்போது நான் உலவும் இடம். அவருடைய பதிவுகளில் சமூக அக்கறையும், உலகப் பார்வையும் தெரிகிறது சுதந்திரம் எனும் அவரது பதிவு இது !


சட்டம், சமூகம், மனித உரிமை குறித்த பதிவுகளால் வலுவாக இருக்கிறது மக்கள் சட்டம் எனும் தளம். தெரியாத, தெரிய வேண்டிய பல விஷயங்கள் அங்கே உண்டு ! இப்படியெல்லாம் கூட இருக்கிறதா என நினைக்க வைத்த தளம் இது.


உறையூர் காரனின் பல பதிவுகள் விரிவாகவும், தெளிவாகவும் ஆழமாகவும் இருக்கின்றன. ஒரு சோறு பதமாக இந்தக் கட்டுரை.


என்னுடைய இந்தக் கட்டுரையை சீரியஸ் எழுத்து வகையில் நீங்கள் எடுத்துக் கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே.


நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையும் வசதியும் நம்மை இலக்கியம், தொழில் விஞ்ஞானம், பயணம் என பல தளங்களுக்குப் பக்குவப்படுத்தியிருக்கிறது. ஆனால் வேர்களில் இருந்து பிடுங்கி எடுத்திருக்கிறது. இயற்கையிலிருந்தும், குடும்ப உறவு எனும் ஆரோக்கியமான கட்டமைப்பிலிருந்தும் சிதறி ஓடச் செய்திருக்கிறது.


இந்தச் சூழலில் நமது வாழ்க்கையை அவசரமாய் ஒரு மறுபரிசீலனைக்கு உட்படுத்துதல் அவசியம்.


மதிப்பீடுகள் முக்கியமா ? வெறும் கரன்சிகள் முக்கியமா என்னும் வினாவை உள்ளுக்குள் ஒருமுறை எழுப்புவோம்.


சிந்தனை திருத்தப்பட்டால், வாழ்க்கை அர்த்தப்படும்.


மீண்டும் சந்திப்போம்
மேலும் வாசிக்க...

Tuesday, September 23, 2008

செம்புலப் பெயல் நீர் : கவிதையும் காதலும்

கவிதைகளிலிருந்து காதலையும், காதலில் இருந்து கவிதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. சங்கம் முதல் இன்று வரை கவிதைகள் காதலையும், காதல் கவிதையையும் ஒன்றுக்குள் மற்றொன்றை ஊற்றி நிரம்பியிருக்கின்றன.
காதலியை மனக்கண்ணுக்கு முன்னால் நிறுத்தினால் போதும் கவிதைத் தமிழ் காதலனின் விரல்களில் வழிந்தோடும். அதே நிலை தான் காதலனை நினைக்கும் காதலிக்கும். எனவே தான் இணையத்திலும் காதல் கவிதைகளுக்குப் பஞ்சம் இருப்பதில்லை.

ஆதலினால் … எனும் வலைத்தளம் காதல் சிணுங்கல்களால் நிரம்பி வழிகிறது. நீங்கள் சேவியரா ? எனும் வினாவோடு ஒரு முறை என்னிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார் நவீன். அந்த அறிமுகத்துக்கு முன்பே நாங்கள் வலைத்தளங்கள் மூலம் நன்றாகவே பழகியிருந்ததால் நிகழ்ந்த அந்த சிறு உரையாடல் சுவாரஸ்யமாய் இருந்தது.

ஏன் நிறைய எழுதுவதில்லை, நீண்ட இடைவெளி விட்டு விட்டு எழுதுகிறீர்கள் என்று கேட்டேன். கவிதை எழுதவேண்டுமென்று அமர்ந்து எழுதும் பழக்கம் எனக்கில்லை. கவிதையே வந்து என்னை எழுதிக் கொள் என்று சொல்லும் போது தான் எழுதுகிறேன் என்றார். கவிதையாய் ! காதலை மட்டுமே பிரதானப்படுத்தி எழுதினாலும்


எப்படி எப்படிஎல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமேஉணர்த்துவார்
அப்பா.


என ஆங்காங்கே தெரியும் கவிதைகள் நவீன் காதல் கவிதைகளுக்கு மட்டும் உரியவர் அல்ல அதையும் தாண்டி பயணிக்கும் திறமை கொண்டவர் என்பது நிரூபணமாகிறது.

அருட்பெருங்கோ வை எனக்கு இணையம் தவிர்த்து தொலைபேசியில் சில முறை உரையாடிய பழக்கம் உண்டு. நேரில் சந்தித்ததில்லை.


இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள்
என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்


என வசீகரமாய் குறும்புகளுடன் காதல் கவிதை எழுதுகிறார் அருட்பெருங்கோ. அவருடைய தளத்தில் இன்றைய பெரிய கவிஞர்களுக்குச் சவால்விடும் கற்பனைகள் நிரம்பவே இருக்கின்றன.

நீ
சிந்தும்வெட்கத்தை
சேலையென
உடுத்திக் கொள்கின்றன
என் கவிதைகள்!


என காதலுடன் குதிக்கின்றன பிரியனின் கவிதைகள். ஒரு முறை பிரியனைச் சந்தித்திருக்கிறேன். துருதுரு இளைஞர். கவிதைகளைச் சுமப்பது போல கூடவே சில காதல்களையும் சுமப்பவராய் இருக்கலாம் :)

தெரியவில்லை. அவருடைய பிரியன் கவிதைகள் எனும் வலைத்தளம் காதல் கவிதைகளின் சரணாலயம்.

பாலபாரதியின் வலைத்தளத்தில் கவிதைகள் பகுதியைச் சென்று ஒரு முறை பாருங்கள்.

ஒற்றையடிப்பாதையில்
தனித்துப் போகாதே என்றேன்
கேட்டாயா
இப்போது பார்
பயமற்று ஆடைகளைக் களைய முயல்கிறது
காற்று


என தபு சங்கரின் பிம்பம் அங்கே பிரதிபலிப்பாகிக் கொண்டிருக்கிறது. கவிதைகள் குறைவாகவே எழுதுகிறார் போலிருக்கிறது.


எத்தனை தடவையடா
உன்னிடம் கெஞ்சுவது
அம்மா
பக்கத்தில்இருக்கும்போது
முத்தம் கேட்காதே என்று
உன் மரமண்டைக்கு
எப்போதுதான்உறைக்குமோ?


என கவிதைகளால் கொஞ்சும் புனிதாவின் வலைத்தளம் சுவாரஸ்யம்.

குறைவாகவே எழுதினாலும் விக்கியின் குளிர்கால காதல் எனக்குப் பிடித்தமான காதல் கவிதைகளின் வரிசையில்.

காதல் கவிதைகளைப் பற்றி எழுதினால் வருடங்களுக்கே வயதாகிப் போகும் என்பதும், அது நிறுத்த முடியா நயாகரா என்பதும் என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்.


போகிற போக்கில் நேரமிருந்தால் நில் நிதானி காதலி . முத்தக் கவிதைகள் காதலும், காதலி சார்ந்தவைகளும் இவற்றை ஒரு முறை எட்டிப்பார்த்து விட்டுச் செல்லுங்கள்.

உங்களைப் போல
எனக்குக்
கவிதை எழுதத் தெரியாது…
காற்றில் கேசம் மெலிதாய் புரள
தலையை அசைத்துப்
புன்னகைக்கிறாய்…
அடடா என்ன அழகான கவிதை !!!
மேலும் வாசிக்க...

அறிவியல் வீதியில் தமிழ்


கலை கலைக்கானது எனும் விவாதங்களை விட்டு இலக்கியம் இன்று வெகுதூரம் விலகி வந்து சமூகத்தோடு இணைந்து விட்டது. இலக்கியம் இணைந்த அளவுக்கு நமது தமிழ் சமூகத்தோடு இணைந்ததா என்பது கேள்விக்குறியே.


அறிவியல் என்றாலும், புதிய மேனாட்டு கண்டுபிடிப்புகள் என்றாலும், அறிவியல் விதிகள் என்றாலும் ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்பட முடியும் எனும் குருட்டுத் தனமான விவாதங்கள் நமது மொழித் திண்ணைகளில் அலசப்படுவதுண்டு.


அத்தகைய புலம்பல்களையெல்லாம் புறந்தள்ளின் இன்று பல்வேறு அறிவியல் கட்டுரைகள் தமிழின் கரம்பிடித்து நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் தகவல்களை தமிழ்படுத்தும் பணி ரொம்பவே கடினமானது. ஆனாலும் பல தளங்கள் முடிந்தவரை புரியும் வகையில் தமிழ்ப்படுத்தித் தருகின்றன. இவை தகவல் பரிமாற்றம் எனும் நிலையையும் தாண்டி மொழியின் செழுமையயும், ஆளுமையையும், தனித் தன்மையையும் நிலைநாட்டும் என்பதில் ஐயமில்லை.


விஞ்ஞானக் குருவி வலைத்தளம் நான் அவ்வப்போது உலவும் இடம். அறிவியல் தகவல்களை பெரும்பாலும் உடனுக்குடன் பதிப்பிக்கும் தளமாக இது இருக்கிறது. அவ்வப்போது கொஞ்சம் தொய்வு நேர்ந்தாலும் இடைவிடாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தளம் இயங்கிக் கொண்டிருப்பதே ஒரு இனிமையான செயல் தான். இந்தத் தளத்தின் சிறப்பு தகவல்களை சுருக்கமாக, நல்ல விஞ்ஞானத் தமிழில் தருவது தான்.


கவிஞர் ஜெயபாரதன், கனடாவில் வசிப்பவர். அவருடைய கவிதைகளை திண்ணையில் அடிக்கடி படித்திருக்கிறேன். ஆனால் அவர் பிரமாதமாக விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதுவார் என்பது எனக்கு தெரியாமலேயே இருந்தது. சமீபத்தில் தான் அவருடைய அறிவியல் கட்டுரை ஒன்றைப் படித்தேன். உயிரின் முதல் துகளைத் தேடும் அறிவியல் முயற்சிக் கட்டுரை அது. மிகவும் விரிவாக சிறப்பாக எழுதியிருந்தார்.


கடவுளின் துகளைத் தேடும் பயணம் என நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நானும் ஒரு சிறு அறிமுகக் கட்டுரை எழுதியிருந்தேன். ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரையுடன் ஒப்பிடுகையில் நமது கட்டுரை பாமரர்களுக்கான ஒரு அறிமுகக் கட்டுரையே.


அதே தளத்தில் அவருடைய மற்று சில விஞ்ஞானக் கட்டுரைகளும் காணக் கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவல். உதாரணத்துக்கு ஒன்று இங்கே பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !!


வலையில் இலக்கியங்களும், கலாட்டாக்களும் வளர்ந்த அளவுக்கு அறிவியல் குறித்த பதிவுகள் வளரவில்லை என்பதே உண்மை. விமானம் எப்படிப் பறக்கிறது என விளக்கும் செம்மலர் பதிவு போல இடையிடையே சில பதிவுகளே அகப்படுகின்றன.


எனது அலசல் வலைத்தளத்தில் மருத்துவம், விஞ்ஞானம், புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த பதிவுகள் நிறைய போடுவதுண்டு.


அறிவியல் கட்டுரைகள் இன்னும் நிறைய தமிழில் எழுதப்படவேண்டும் எனும் எதிர்பார்ப்பு உங்களைப் போல என்னிடமும் நிரம்பவே இருக்கிறது !


மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Monday, September 22, 2008

கவிதையாகிக் கசிந்துருகி


இலக்கிய வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது கவிதை. ஒரு நாவலின் கனத்தை ஒரு நான்கு வரிக் கவிதை எழுதிவிட முடியும்.


இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்


என்னும் அமுதபாரதியின் கவிதை இன்னும் நினைவுகளின் இடுக்கில் நிலைத்திருப்பதற்கு அதன் எளிமையும் அது சொல்லும் வலிமையான கருத்துக்களுமே காரணம் எனலாம்.


இன்னொன்று கவிதையில் நீங்கள் கட்டுரையின் விஷயத்தையும் சொல்லலாம், சிறுகதையையும் சொல்லலாம், நாவலையும் சொல்லலாம், நகைச்சுவையையும் சொல்லலாம். ஆனால் கவிதையை வேறு எந்த வகையிலும் நீங்கள் சொல்ல முடியாது என்பதே நிஜம்.


புனிதப் பயணம்
என்பது
நாம் செல்வதல்ல
நமக்குள் செல்வது

என சட்டென ஒரு கருத்தை பளிச் எனச் சொல்வதற்கு (எனக்கு) கவிதை வசதியாகவும், அழகாகவும் இருக்கிறது. சிலர் கவிதையை சோம்பேறிகளின் வாகனம் என்பார்கள். உண்மையில் ஒரு நான்கு வரியைச் செதுக்க ஆகும் நேரம் எவ்வளவு என்பதை கவிதை படைப்பாளிகளே அறிவார்கள்.


கவிதையில் ஏராளம் வகைகள் உண்டென்றும், ஒவ்வொன்றும் மோதிக்கொள்ளும் என்றும் எழும் விவாதங்கள் அர்த்தமற்றவை. எத்தனையோ வகையான மலர்கள் இருக்கலாம், கட்சிதமான அழகான மலர்கள் எப்போதுமே நேசிக்கப்படுபவை தான். தோட்டம் மாறியது என்பதற்காக பூக்களை யாரும் புறக்கணிப்பதில்லை.


என்னைப் பொறுத்தவரையில் எந்த வகைக் கவிதையானாலும் புரிந்து விட்டால் மிகவும் நேசிப்பேன். இதை அப்படி எழுதியிருக்கலாம் என்றோ, அதை இப்படி எழுதியிருக்கலாம் என்றோ கவிதைகளை இடம்மாற்றி அமரவைத்து யோசித்துப் பார்க்க மாட்டேன்.


கவிதை நூல் என எது கிடைத்தாலும் வாசிக்கும் ஒரு வெறி எனக்குள் இப்போதும் உண்டு. அமெரிக்காவில் சில ஆண்டுகள் பணிபுரிய நேர்ந்த காலத்தில் குளிர் என்னும் ஒரு கவிதை மூலம் நண்பராய் அறிமுகமானவர் புகாரி. பின்னர் அந்த நட்பு விரிவடைந்து, அவருடைய நூல் வெளியீட்டு விழாவுக்காக நான் ஆஸ்திரேலியாவிலிருந்து பறந்து வந்ததும், கனடாவிலுள்ள அவருடைய இல்லத்துக்குச் சென்று அருமையாய் மட்டன் வெட்டியதும் தனிக்கதை.


அவர் ஒரு கவிதைப் பிரியர். கவிதையை எழுதுவதோடு நின்றுவிடாமல் அந்தக் கவிதையின் ஒவ்வோர் எழுத்திலும் தனது சுவாசத்தை ஊட்டி வைப்பவர். சந்தத்தின் சந்துகளிலும் அவருடைய எழுத்துக்கள் துள்ளி விளையாடும். சந்தேகமெனில் ஒருமுறை அவருடைய வலைத்தளத்துக்குச் சென்று பாருங்கள்.


நதியலை என்றொரு வலைத்தளம் நான் அடிக்கடி உலவும் இடம். இவருடைய கவிதைகளில் உமிழ்ந்து விட்டுச் செல் போல சட்டென அடிக்கும் கவிதைகள் பல.


முபாரக் என்பவரின் முடிவற்ற அன்பின் தேடல் வலைத்தளம் தனியே ஒருவித வாசனை கொண்டிருக்கிறது. உனக்கெனவும் என்பதைப் போன்ற பளிச் கவிதைகள் மனதைக் கவர்கின்றன.


மணிகண்டனின் பேசலாம் வலைத்தளத்தில் கவிதைகள் பல உலவுகின்றன. தீராப்பிரியங்களில் கவிதை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று.


கடற்கரய் பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. அவருடைய வலைத்தளத்தில் கவிதைகள் கிடைப்பதை விட கவிதைகள் குறித்த உரையாடல்கள் நிறைய கிடைக்கின்றன.


தனிமையின் இசை தளத்தில் கிடைக்கும் சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும் சுவாரஸ்யமாய் உள்ளது.


DISPASSIONATED DJ வலைத்தளம் போயிருக்கிறீர்களா ? கவிதைகள் கொஞ்சமே ஆனால் மனதுக்குள் நிற்கும்…



நீ

யாரையோ பார்த்து பிரமிக்கும்

அதே வினாடியில்

யாரோ

உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

ஒரு முன்னுரை


ஒரு வாரம் அழுத்தமான எழுத்துக்களும், வாசிப்புகளும் வாய்க்கப்பற்ற விக்னேஷ் அசத்திக் கொண்டிருந்தார். இந்த வாரம் அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


இந்தச் சவாலான, சுவாரஸ்யமான பணியை எனக்கு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.


என்னைக் கவர்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன். அதற்கு முன் எனது எழுத்துலக அனுபவத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.
எப்படி பிளாக் ஆரம்பிப்பது என்பதே தெரியாமல் அதைப் பற்றி கவலையும் படாமல் படைப்புகளை இதழ்களுக்கோ, தினம் ஒரு கவிதை போன்ற இணைய குழுக்களுக்கோ அனுப்பிக் கொண்டிருந்த காலம் 1998 ஐத் தொடர்ந்த வருடங்கள்.


சமீபத்தில் தான் அறிமுகமானது போல் இருக்கிறது வேர்ட்பிரஸ். அதுவும் ஆயிற்று இரண்டு வருடங்களும் ஐந்து மாதங்களும். இந்த காலம் எனது படைப்புகள் பலவற்றை இணையப்படுத்தி வைக்கவும், புதிதாய் எழுதவும் தூண்டுகோலாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை.


எனினும் என்னைப் பொறுத்தவரை நான் வலைத்தளங்களின் வெற்றி எனக் கருதுவது புதிய எழுத்தாளர்களுக்கு எழுதும் பயிற்சி கிடைப்பதும், வாசிப்பு வசதிகள் கூடுவதும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இணைய நட்பு வலை உருவாவதுமே.


கவிதைச்சாலை மட்டும் தான் முதலில் நான் ஆரம்பித்த வலைப்பூ. இலக்கியத்தின் வகைகள் மட்டுமே அதில் இருக்கவேண்டும். கவிதை, கட்டுரை, சிறுகதை, கவிதை நாவல், நல்ல விமர்சனங்கள் இவை மட்டுமே இந்தத் தளத்தில் இருக்க வேண்டும் என முடிவு கட்டி விட்டேன். அதையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக் காத்தும் வருகிறேன்.


இதுவரை வெளியாகியுள்ள எனது பதினோரு நூல்களில் ஒரு சில நூல்களைத் தவிர மற்ற நூல்களிலுள்ள பல படைப்புகள் இந்த இணைய தளத்தில் உள்ளன.


எழுத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே சாதாரண சிறு கவிதைகள் தவிர்த்து, சலனம் போன்ற நெடுங்கவிதைகளும், ஹெய்தி போன்ற வித்தியாசமான கட்டுரைகளும், யோபு போன்ற விவிலியக் கவிதைகளும், மச்சு பிச்சு போன்ற உலக அதிசயங்களும் , கவிதை நூல் போன்ற சிறுகதைகளும் என கலந்து கட்டி எழுதி வருகிறேன்.


இந்த வலைத்தளம் நடத்திக் கொண்டே இருந்தபோது புரிந்த ஒரு விஷயம், இலக்கியம் தாண்டியும் பல சுவாரஸ்யமான உரையாடல்கள், மருத்துவத் தகவல்கள், நகைச்சுவைகள், சினிமா சார்ந்த விஷயங்கள் இவை இருக்கின்றன. இவற்றைக் குறித்தும் ஒரு தளம் ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.


நகைச்சுவை விஷயங்கள் மட்டும் எழுதலாம் என நினைத்து அலசல் வலைத்தளத்தை ஆரம்பித்தேன். முதலில் இதன் பெயர் சிரிப்பே சிறப்பு. பின்னர் வலைப்பூவின் முகம் மாறியது. பலரும் விரும்பும் ஒரு ஜனரஞ்சகத் தளமாக ஆகிப் போனதால் அதை அலசல் ஆக மாற்றினேன். அதுவும் ஆயிற்று இரண்டு வருடங்கள். இதிலும் தேவையற்ற தனி நபர் கூச்சல்கள், கும்மிகள், சண்டை ஏதும் இல்லாமல் இருப்பது நிறைவளிக்கும் விசயம்.
ஒரு நிம்மதி மட்டும் இருக்கிறது.


எங்கோ இருக்கும் உண்மையான வாசகர்கள் நல்ல எழுத்துக்களைப் படித்தபின் ஓரிரு வரிகளேனும் எழுதி விட்டுப் போகிறார்கள். மனதுக்கு மிகவும் நிறைவான விஷயம் அது.ஒரு எழுத்தாளன் அவனுடைய எழுத்து விரும்பப்பட்டதா என்பதை அறிய ஆசைப்படுவான். குறைந்த பட்சம் வாசிக்கப்பட்டதா என்பதையேனும் அறிந்து கொள்ள பிரியப்படுவான். அந்த எதிர்பார்ப்பை வாசகர்கள் இன்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரும்பாலான வாசகர்கள் எழுத்தாளர்களே !!!


போதும் என நினைக்கிறேன் ஒரு அறிமுக உரை.


என்னைப் பற்றி ஏதேனும் அறிய வேண்டும் என ஆசைப்பட்டால் கிளிக்குங்கள்.


இனி..... தொடர்கிறேன்....
- சேவியர்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது