07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 31, 2015

வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்துவலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்ற இரண்டாம் நாள் முதல் நேற்று வரை,  நான் தேர்வு செய்த தலைப்புக்களில் அமைந்த பதிவுகளாகத் தேடிப் பிடித்துத் தொகுத்த நான், எனக்குப் பிடித்த பல்சுவை பதிவுகளை இன்று குறிப்பிட விரும்புகின்றேன்:- 

1  எம்.ஏ.சுசீலாவின் தப்பவிடக்கூடாத சிறுகதைகள் தொகுப்பிலிருந்து மிகவும் பிடித்த ஒன்று:-
கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார்

2.  வீட்டின் மூலையில் ஒரு சமையலறை-  அம்பை அழியாச்சுடர்கள் தொகுப்பிலிருந்து.


3.  பெண்மை வாழ்கவென்று - சிறுகதை -  ஜீ.ஜீ  -  பூவனம்
 தன்னில் தன்னைக் காண்பது- தமக்குள் பார்வையைச் செலுத்திக் கறாராகத் தம்மைச்  சுயவிமர்சனம் செய்து மேம்படுத்திக்கொள்ள விழைவோருக்கான சுய தேடல் பதிவுகள்.  

4.  சிவப்பி  -  சிறுகதை கீதா மதிவாணன் - கீதமஞ்சரி 
(இவர் கதைகளுள் எனக்கு மிகவும் பிடித்தது)

5. மரணத்துள் வாழ்பவர்கள் – கவிதை - ஹேமா- வானம் வெளித்த பின்னும் (மனதைத் தொட்ட பதிவு)

6.  வன்மம் தவிர்-  கவிதை - நிலாமகள் – பறத்தல்- பறத்தல் நிமித்தம்


7. வில்விசை வித்தையிலே-  மகேந்திரன் -  வசந்த மண்டபம் (அழிந்து வரும் தமிழர் கலையைப் பற்றிய அருமையான பதிவு)

8. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் -  வை.கோபாலகிருஷ்ணன்
சுவையான பள்ளி நினைவலைகள் (பள்ளிக்கூடம் பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு) 

9.  பேந்தா, கொந்தம், முக்குழி -  சிறுவயது விளையாட்டுக்கள் பற்றிய பதிவு – இலக்கியச்சாரல் – சொ.ஞானசம்பந்தன் (தமிழர் விளையாட்டு பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு)

10. தஞ்சை பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் –முனைவர் ஜம்புலிங்கம் (சோழர் ஓவியம் குறித்த புரிதலுக்குப் பயன்படும் கட்டுரை )


10.  எஸ் ராமகிருஷ்ணன் - இன்னொரு பயணம்  -  போலிஷ் திரைப்படம் இடாவின் விமர்சனம். 

11.  ஜெர்மன் ஓவியர் காஸ்பர் டேவிட் பிரெடரிக் வரைந்த ஓவியம் நிலா பார்ப்பவர்கள் பற்றிய பதிவு. 

12.  முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே -  தந்தை மகளுக்கு எழுதிய கடிதம் (என்னை மிகவும் கவர்ந்த ஒன்று)  நா.முத்துநிலவன்.- வளரும் கவிதை (கல்வியாளர்களும், பெற்றோர்களும், இளந்தலைமுறையினரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கடித இலக்கியம்)  

ஊமைக்கனவுகள் -  (பிரான்சு நூலகத்தில் 135(?) அதிகாரங்கள் கொண்ட திருக்குறள் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடும் பதிவு)

14.  நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும் -  குழல் இன்னிசை – புதுவை வேலு - 


16.  தாய்மை-  துளசிதளம் – என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்  


17.   சிலந்தி வலைகள் -  மனோ சாமிநாதன் -  முத்துச்சிதறல்
  

மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பதிவும் என்னைக் கவர்ந்த விதம் குறித்து இரண்டு வரிகளாவது எழுத ஆசை தான்.  நேரமின்மை காரணமாக இணைப்பை மட்டும் கொடுத்து விட்டேன்.   

நாளை சந்திப்போம்,
நன்றியுடன்,
ஞா.கலையரசி.
மேலும் வாசிக்க...

Friday, January 30, 2015

வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
தமிழின் பேச்சுவழக்கில் அறுபது சதவீதத்துக்கு மேல் பிற மொழிகளின் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், உலகின் அழிவின் பாதையில் இருக்கக் கூடிய  மொழிப் பட்டியலில் நம் தமிழும் இருப்பதாகவும், உலகின் மொழி ஆய்வு மையம் தெரிவிக்கும் கருத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.

என்ன ஆச்சரியம்!  என் மனத்துயரை அப்படியே படம் பிடித்தாற் போல் வெளிப்படுத்துகிறது எனது மனவெளியில் வேதாவின் வலையில் இடம் பெற்றுள்ள நூலறுந்த பட்டமென ஆகுமோ? என்ற கவிதை. அதிலிருந்து சில வரிகள்:- 

“நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்
பட்டுத் தமிழ் அழியுமோவென்று ஆய்வுகள்
ஒட்டிய கிலியால் மனவுளைச்சல்”

பாமரர்களின் பேச்சில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஆங்கிலக் கலப்பு மிக அதிகமாக உள்ளது.  எங்கும் எதிலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது.

இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது? 

“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸு வைச்சிட்டேன்.  ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான்,  சன்னுக்கு  எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான்.  அப்புறம் ஹஸ்பண்ட் பைக்ல கூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு. 

அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள்.   ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன்.  ரெண்டு சிக்னல்வெயிட் பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக்ஒன் அவர் லேட்டாயிடுச்சி..  அதுக்கப்புறம் தேர்டு புளோர் இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணி செட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி.  லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”     

பார்த்தீர்களா?  இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்!  நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. 

“வண்டிக்காரன் கேட்டான், லெப்டா ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான், என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான், கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ், இப்படிக் கேட்டா?” (காசி ஆனந்தன்)

ஒரு மொழியின் ஆயுள் இலக்கியவாதிகளாலேயோ, மெத்தப் படித்தவர் களாலேயோ  தீர்மானிக்கப் படுவதில்லை; பாமரர்களால் பேசப்படும் போது தான், அதன் ஜீவன் நிலைக்கும்.

பேச்சு மொழி வழக்கிழந்ததால், ஏராளமான இலக்கிய வளம் இருந்தும்  லத்தீனும், சம்ஸ்கிருதமும் அழிந்துவிட்டனவே!

இக்காலத்தில் இருபது சதவீத பெயர்கள் மட்டுமே தமிழில் உள்ளன.
உலகில் மக்களனைவரும் அவரவர் மொழியில் பெயர் வைத்திருக்கும் போது, தமிழன் மட்டும் வடமொழியாய், அரபியாய், பாரசீகமாய்ப் பெயர் வைத்து அடையாளம் இழப்பதைச் சுட்டிக்காட்டி வருந்துகிறார் தமிழகம் மா.தமிழ்ப்பரிதி:-  

தமிழகத்தில்
பெயரளவில் தமிழ்
எனக் கொதிக்கின்றேன்!
அடடா!
தமிழரின் பெயரிலும்
தமிழ் இல்லை! 
இவரது தமிழகம் வலைப்பக்கத்தில் ஏராளமான தமிழ்ப் பெயர்கள் தொகுக்கப் பெற்றுள்ளன.

 

தமிழன் என்று சொல்லடா! தமிழில் பேசடா!" என்னை மிகவும் கவர்ந்த  பதிவு.  ஊடகங்கள் அனைத்தும் தமிழைச் சகட்டு மேனிக்குத் துவம்சம் செய்கின்றன.  சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம்; தமிழைத் தமிழாகப் பேசினாலே போதும்; தமிழ் தானாக வளர்ந்துவிடும் என்கிறது சாமானியனின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூ.
கொன்ச்சம், கொன்ச்சம் டமிள்,’ பேசும் நடிகைகளை வைத்துத் தமிழ்ச்சேவை(?) செய்யும் தொலைக்காட்சியைக் காட்டமாக தாக்கி யிருக்கிறார் இப்பதிவில்.

ஆங்கிலக் கலப்பு செய்து வருங்கால தலைமுறையினரிடம் தமிழை அழிப்பது நியாயமா?  பொறுப்பை உணர்ந்து தமிழைக் காப்பாற்றுங்கள் என்று தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கிரி.

அந்நிய மொழிகளின் ஊடுருவல், அந்நிய நாகரிக வளர்ச்சி மோகம், மொழி இன ரீதியான ஒடுக்கு முறை ஆகியவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள்.  இந்தக் காரணிகளைத் தமிழ்மொழியும் பெற்றுவிட்டது.  அந்நியமொழிகளின் ஆக்ரமிப்பு ஆழமாக ஊடுருவி தமிழை அழித்துக் கொண்டிருக்கின்றது.  அழிவை நோக்கிய பாதையில் தமிழ் பயணிக்கிறது என்று கவலை தெரிவிக்கிறார் ஆலிவ்.


நாம் எங்கே போகிறோம்?,’ என்ற பதிவில், உலகின் அழிந்த மொழிகளின் பட்டியலில் தமிழை இணைக்கப் போகிறோமா?” நாமே நம் தாய் மொழியைப் புதைகுழியில் தள்ளப் போகிறோமா?  என்ற நியாயமான கோபத்துடன், கேள்விக்கணை தொடுக்கிறார் தமிழுடன் வலைப்பூவின் தமிழன்.  


கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
என்னில் தரித்திடுமோ   உயிர்?. என்றும்

அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
 நன்மை செய்வேன் நாளும் !  என்றும் தமிழின்றி வாழ்வேது? என்ற கவிதையில் சொல்லி வேருக்கு நீர் ஊற்றுகிறார் அம்பாளடியாள்.  


அன்னையிட்ட தீயென அடிவயிற்றுள் மூண்டெழவே
உன்னைநினைக் கின்றேன் உயர்தமிழே! – முன்னைப்
பிறந்தவளே! என்னுள் நிறைந்தவளே! யாப்பில்
சிறந்தவளே! காப்பாய் செழித்து!
என்று அழகு தமிழில் பாமாலை சூட்டுகிறார் இளைய நிலா அன்னையிட்ட தீ என்ற கவிதையில். 

மரபு தமிழில் கவிதைகள் பாடி அசத்தும் தென்றல் சசிகலாவின் 'வரவேற்போம் புத்தாண்டை என்ற கவிதையிலிருந்து சில வரிகளைச் சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்:
"அன்பை நாளும் விதைத்திடுவோம்
அகத்தே தூய்மை அடைந்திடுவோம்
அன்னைத் தமிழை அரவணைத்து
அறிவை வளர்த்து மகிழ்ந்திடுவோம்"

இறுதியாக என்னைப் பாதித்த தமிழ் இனி என்ற குறும்படம்.  அனைவரும் அவசியம் காண வேண்டிய படம்.


நாளை சந்திப்போம்,
நன்றியுடன்,
ஞா.கலையரசிமேலும் வாசிக்க...

Thursday, January 29, 2015

வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'

மங்கையராய்ப் பிறப்பதற்கு 
மாபாவம் செய்திருக்க வேண்டும்!


பெண்சிசுக்கொலை, பெண்கள் & குழந்தைகள் வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு போன்ற கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் இக்காலத்தில் மங்கையராய்ப் பிறப்பதற்கு, மாதவமா செய்திருக்க வேண்டும்?

தாய்மையைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இந்நாட்டில், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை செய்தி, இடம் பெறாத நாளேடுகளே இல்லை என்றாகி விட்டது இன்றைக்கு. 


இக்கொடுமை தற்போது 792 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பெண்ணியம் இணைய இதழின் கட்டுரை சொல்லும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  


பாலியல் கொடுமைகள் முன்பும் நடந்து கொண்டு தானிருந்தது.  ஆனால் அவை வெளிச்சத்துக்கு வரவில்லை. இப்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக, அதிகளவில் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன; என்று சிலர் வாதிட்டாலும், இன்றுங்கூட எல்லாக் குற்றங்களும் பதிவு செய்யப்படுவதில்லை என்பது தான் உண்மை.  


பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலான பெண்கள்,  நம் சமூகத்தின் கேவலமான பார்வைக்கும், புறக்கணிப்புக்கும் அஞ்சி தமக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து விடுகின்றனர்.


மேலும் குடும்பத்துக்கு ஏற்படும் அவமானம், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாதல், போதுமான வசதியின்மை, சட்ட நிவாரணம் குறித்து விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களாலும், பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.    


இதனால் தவறு செய்தவர்கள் தண்டனை ஏதுமின்றிச் சுலபமாகத் தப்பவும், மென்மேலும் இது போன்ற குற்றங்களைத் துணிந்து செய்யவும் வழி ஏற்படுகின்றது. 


பதிவு செய்யப்படும் குற்றங்களே இத்தனை சதவீதம் என்றால் பதிவு செய்யப்படாத குற்றங்கள் எத்தனை சதவீதம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.


பாலியல் கொடுமை தவிர காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இளம்பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், இப்போது அதிகரித்து வருகிறது. 

ஆசிட் வீச்சு, பாலியல் வன்முறையை விட மகளிருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிட் அரக்கர்கள் என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருக்கிறார் இமானுவேல் நூறு பூக்கள் மலரட்டும் என்ற தமது வலைப்பூவில். 

தஞ்சையம்பதி மகளிர் தினம் என்ற கட்டுரையில் உலகில் 2014 ஆம் ஆண்டின் மிகவும் தைரியமான பெண் என்ற
விருதை   லஷ்மி என்பவர் மேக்கேல் ஒபாமாவிடம் வாங்கிய நிகழ்வு குறித்து எழுதியிருக்கிறார்.   


அச்சமயம் லஷ்மி கூறிய சொற்கள், முட்களாய் நம் நெஞ்சைக் கீறுகின்றன:-

“என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்தது என் முகம் மட்டுமல்ல;  என் கனவுகளும் தாம். இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் இதயத்தை அன்பால் நிரப்பப் பாருங்கள்; ஆசிட்டால் அல்ல!”


சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும்.  பெண்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.


இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குரல் கொடுக்க  வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. 


இனி வலைப்பூக்களில் மங்கையருக்கும், குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகள் பற்றிச் சகபதிவர்கள் எழுதியுள்ள பதிவுகள் உங்கள் பார்வைக்கு:--

“ஒரு உள்ளார்ந்த துயர்
கேவிக்கொண்டே இருக்கிறது
வன்பாலுறவுள்ளாக்கப்பட்ட பெண்கள்
வாழும் தேசத்தில்…”

என்கிறார் சைக்கிள் வலைப்பூ மிருணா புறம் அகம் கவிதையில்.


அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன என்று மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி பாடசாலையில் விளக்கமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.   

பாலியல் வன்முறை நடைபெறும் போதெல்லாம் குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும், சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கொந்தளிக்கிறோம்.  சமூகத்தின் ஒழுக்கக் கேட்டிற்குக் கண்டிப்பாக உளவியல் காரணம் இருக்கிறது; அதிலும் ஆண் பெண் உடல் தொடர்புடைய பிரச்சினை என்றால் அதற்கு முதல் காரணம் உளவியல் தான் என்கிறார் இவர். 


பெண் பலவீனமானவள்; அவளை நல்லபடியாகக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி பண்ணும் நாம், பையன் அவளை விட பலவீனமானவன்; அவனை நல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று உணராமல் இருந்து விட்டோம்.  எனவே ஆண் குழந்தைகளின் வளர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற இவரது கருத்து ஏற்புடையதாயிருக்கிறது. 


அதிகளவில் குற்றங்கள் நிகழ என்ன காரணம் என்பதை உளவியல் நோக்கில் ஆராய்ந்து, அதை நிகழாமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம்; அவசரமும் கூட.  


பெண்கள் மீதான வன்முறைஎன்ற கட்டுரையில் பெண் எனும் புதுமை கோவை சரளா இக்கொடுமையினைச் சாடியிருக்கிறார்:-


பொறுப்பற்ற பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் தாம்  இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.  வளர்ப்புச் சூழல் சரியாக அமையாத பிள்ளைகள் பின்னாளில் ஒழுக்கமுள்ள குடிமகன்களாக எப்படி விளங்க முடியும்? என்று கேட்கிறார் இவர். 


பெண்கள் வன்முறையிலிருந்து காக்கப்படுவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதம் இல்லாத நிலையில், நவம்பர் 25 ஆம் நாள் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு நாளாகக் கொண்டாடுவது கேலிக் கூத்தாக அல்லவோ இருக்கிறது?.  .


‘நான் ஒரு பெண், நான் பாதுகாப்பாக இல்லை,’ என்ற கட்டுரையில்  கணவனை விட அதிகம் படித்த மனைவி மற்றவரை விட 1.4 மடங்கும்,  பெண் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பத்தில் 2.44 மடங்கும் அதிகமாக வன்முறையை அனுபவிப்பதாக ஆய்வு ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார் ரஞ்சனி நாராயணன். 


மனைவி அதிகமாக படித்திருந்தாலோ, சம்பாதித்தாலோ வன்முறையால் மட்டுமே அவளை அடக்க முடியும் என்று கணவன் நினைக்கிறானாம்.


 பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும் என்ற கட்டுரையில் ஒரு பெண்ணிற்குத் தன் மேல் விருப்பமிருக்கிறதா இல்லையா என ஆராய்ந்து பார்க்காமல், தனக்குப் பிடித்தால் அவளுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்குத் தரங்கெட்ட திரைப்படங்களும் 99% பெண்ணைப் போகப்பொருளாகக் காட்டும் ஊடக விளம்பரங்களும் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறார சும்மா வலைப்பூவின் தேனம்மை லெட்சுமணன்.


இவரது பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும் என்ற இன்னொரு பதிவில் குழந்தைகளிடம் உடலின் தொடக்கூடிய பகுதி, தொடக்கூடாத பகுதி என்பதைச் சொல்லி வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் தேனம்மை.  

அண்மை காலங்களில் குழந்தைகளின் மீதும், இத்தகைய பாலியல் வன்முறைகள் பெருகி வருவதை நம்மால் ஜீரணிக்கவே இயலவில்லை
குழந்தைகளைக் குறி வைக்கும் பாலியல் வன்முறை பற்றி விரிவாக அலசுகிறது கவிதைச் சாலை.

இந்தியாவில் சமீபத்து ஆய்வொன்றில் 48 விழுக்காடு பெண் குழந்தைகள் தாங்கள் ஆண்களாய்ப் பிறக்காததற்காக வருத்தப் பட்டிருக்கிறார்கள்.  காரணம் பாலியல் தொல்லைகள்.  . 
பெண்களை மதிப்பதாகவும், துதிப்பதாகவும் இனியும் கதை அளந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை குழந்தைகளைப் பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் அவலம் இந்தியாவில் தான் மிக அதிகம் என்கிறார் கவிதைச்சாலையின் சேவியர். . 


உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? என்ற பதிவில் இன்றைய இக்கட்டான சூழலில் நாம் எப்படிப் பயணப்பட வேண்டும் என்பதை விளக்குவதுடன் குழந்தைகளுக்கான பாலியல் கல்வி வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் எழுத்தாளர் சமஸ்.    பெற்றோர் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.


ஆடை குலைக்கும் கைகள்
அப்படியே துண்டாக,
நெறிகெட்ட நினைப்பு வந்த
நெஞ்சு இரண்டாக,
தொட்டதும் தலைவெடிக்க,
தொடருமுன்
தொடைகிழிக்க
அவளுக்குப் பலம் தரவோ
அடுக்காக வரம் தரவோ
ஆரு சாமி இருக்கீங்க ..
குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா...
தவழும்போதே
தற்காப்புக் கலை சொல்லவா
..

என்று வேதனையோடு குமுறுகிறார் கவிஞர் சக்தி 'நெஞ்சு இரண்டாக' என்ற தம் கவிதையில்.  


தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு ரமணி அவர்கள் எழுதியுள்ள  இளங்கன்றே நீ பயமறிவாய்என்ற கவிதை என்னை மிகவும் பாதித்தது.  

குட்டிக்கும் பசுவுக்கும்
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்
....
குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....

இளம் கன்றே
  நீ உலகறிவாய் 


ஆற்ற முடியாத வேதனையுடனும், தாங்க முடியாத கோபத்துடனும் ஆறறிவு மிருகங்களைச் சாடி விழிப்புணர்வு ஊட்டும் இக்கவிதை என்னைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. 


இதனை ஏற்கெனவே பலர் படித்திருந்தாலும், இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கவிதையின் சில வரிகளை இங்கே குறிப்பிட்டிருக்கின்றேன்.

பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம் இவற்றைத் துறந்து நம் சமுதாயம் விலங்கு நிலையை எய்துவதற்கு முன், நம் சந்ததியிடம்  இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மென்மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, நம் அனைவர்
கையிலும் உள்ளது.


நாளை சந்திப்போம்!


நன்றியுடன்,
ஞா.கலையரசி  

மேலும் வாசிக்க...

Wednesday, January 28, 2015

வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!


இயற்கையை நேசிப்போம்!
இயற்கையோடியைந்து வாழ்வோம்!

விடிந்தும் விடியாத கருக்கலில், பனித்துளி முத்துக்கள் பட்டுச் சிலிர்த்து நின்று, விரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன், ஒன்றிரண்டு இதழ்களை மட்டும் மெல்ல அவிழ்த்து, ஒரு பக்க அழகைக் காட்டும் ரோஜாவின் தரிசனம் கிடைத்துப் பரவசப்பட்டதுண்டா நீங்கள்?

ஆங்காங்கே வைர மணிகள் ஜொலிக்க, ஆரஞ்சுக் கம்பளம் விரித்துக் கதிரவனைத் தினந்தினம் வரவேற்கத் தயாராகும், கீழ்வானைக் கண்டு சிலிர்த்ததுண்டா என்றாவது?

அதிகாலையிலும், அந்திமாலையிலும் புள்ளினங்களின் ஒருங்கிணைந்த இனிய கானம் செவிமடுத்து மெய்மறந்ததுண்டா?  

குட்டிக் குட்டி அலகுகளில் ஓயாமல் நாள் முழுக்க குஞ்சுக்கு இரை எடுத்து வந்து ஊட்டும் தாய்மையின் சிறப்பு கண்டு அதிசயித்ததுண்டா? அன்றாட வாழ்வில், நம் வீட்டைச் சுற்றிலும் பணங்காசு செலவின்றி இயற்கையை ரசிக்க செடி,கொடி, மரம், மலர், பறவை, வண்ணத்துப் பூச்சி, விண்மீன், நிலா, மழை என எத்தனையோ விஷயங்கள் உள்ளன.  தேவை ரசனையும், ரசிக்கக்கூடிய மன நிலையும், ஓரிரு நிமிடங்களும் மட்டுமே


மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியுடன் வாழ்வைக் கழிக்க நகைச்சுவை உணர்வு மிகவும் முக்கியம் என்று நேற்றுப் பார்த்தோம் அல்லவா?

அடுத்ததாக இயற்கையில் மனமொன்றி ரசிப்பதும், அதனுடன் இயைந்து வாழ்வதுமே நம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மனநோய்களுக்கும் மறதி நோய்க்கும் மாற்று மருந்தாகத் தோட்ட வேலை திகழ்வதாகவும் அதை ஹார்டிகல்சர் தெராபி (Horticultural therapy) என்று அழைப்பதாகவும் சொல்கிறார் மணிமிடைபவளம் மேகலா இராமமூர்த்தி. மனமே மகிழ்ச்சி கொள் என்ற கட்டுரையில்.

அமெரிக்க டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி, தோட்ட வேலை செய்பவர்கள், செய்யாதவர்களை விட அதிக திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களாம். 

வீட்டுத் தோட்டம் ரொம்ப ரொம்ப ஈஸி தான் என்ற இப்பதிவில் மனதோடு மட்டும் கெளசல்யா தோட்டம் போடுவது பற்றி அருமையாக விளக்குகிறார். 
உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாகப்படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா, அது தோட்டம் போடுவது தான்...காய்கறிகள், பூக்களைப் பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம், மனதைச் சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்...!!என்று  இவர் சொல்வதை நானும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 


வாங்க பறிச்சிக்கிலாம் தோட்டம்  என்ற தலைப்பில் முத்துச்சரம் ராமலெஷ்மி வெளியிட்டிருக்கும் புகைப்படங்களைப் பார்க்கும் போது, சமைக்க வேணாம்; அப்பிடியே  சாப்பிடலாம் என்று ஆசையாக இருக்கிறது. நிழற்பட கலைஞரான இவர் வலையில் அவ்வப்போது வெளியிடும் மலர்கள், வண்ணத்துப்பூச்சிகள் புகைப்படங்களைக் காணக் கண்கோடி வேண்டும்! 

தோட்டம் பற்றிய அரிய தகவல்களைப் பதிவிடுகிறார் சிவா தோட்டம் என்ற தம் வலைப்பூவில்.  
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேளாண்மை தகவல்கள் அடங்கிய களஞ்சியமாகத் திகழ்கிறது பசுமை தமிழகம்

மாடித்தோட்டம் அமைப்பது பற்றியும், இயற்கை பூச்சிக்கொல்லிகளைத் தயாரிப்பது பற்றியும் விரிவாக விளக்குகிறது நான்கு பெண்கள் தளம்.  


ஜன்னலில் கூட காய்கறி வளர்க்க முடியும் என்கிறது இயற்கை வரம்

எங்கள் தோட்டத்துப் பறவைகள் என்ற தலைப்பில் கீதமஞ்சரி கீதாமதிவாணன் ஆஸ்திரேலிய பறவைகளின் அருமையான படங்களோடு, அவற்றின் வித்தியாசமான குரல்களையும் ஒலிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளது மிகவும் அருமை!

அவற்றில் காக்கட்டூவின் குரல் கர்ண கடூரமாக ஒலித்துக் காதுகளைப் புண்ணாக்க, அடுத்து வரும் மேக்பையோ இன்னிசை மழை பொழிந்து காதுகளில் இன்பத் தேனைப் பாய்ச்சுகிறது!


ஊர்க்குருவிகள் என்ற கட்டுரையில் திருமதி பக்கங்கள் கோமதி அரசு சிட்டுக் குருவி பற்றிய அருமையான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

அலமாரி கண்ணாடி ஜன்னலைக் கொத்தும் குருவிக்கு, அலகு வலிக்குமே எனக் கவலைப்பட்டு அவர் அம்மா, அது அடுத்த முறை வருவதற்குள் திரைச்சீலை தைத்து மாட்டி விட்ட செயல், மனதை நெகிழ்விக்கிறது.  

சில அரிய வகைப் பறவைகளின் சென்னை பித்தன் புகைப்படங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கின்றன.  அவசியம் பார்க்க வேண்டிய பதிவு:- பறவைகள் பலவிதம் அரியவை

மலர்களில் வெள்ளைப் புறா,குரங்கு, வெளவால், உதடு, நடனமாடும் பொம்மை போன்ற உருவங்களை நீங்கள் பார்த்ததுண்டா?  இதுவரை பார்த்திராத வித்தியாசமான உருவங்களில் எவ்வளவு அழகான மலர்கள்? 

உள்ளம் கொள்ளை போகுதே! உனைக் கண்ட நாள்முதல்!,’ என்று பாடத்தோன்றுகிறது மணிராஜ் (திருமதி இராஜராஜேஸ்வரி) வலைப்பூவின் அழகு மலர்களின் அணிவகுப்பைப் பார்த்து! 'அழகு மலர்களின் கொண்டாட்டம்'


இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தாவரம், மரங்கள், பறவைகள் பற்றிய பல பதிவுகளை கொண்ட வலைப்பூ கூவலப்புரம்.
  
வலைப்பூவின் பெயரே ரம்யமாயிருக்கிறது. பனி விழும் மலர்வனம்  ‘பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தான் ஆசை,’ போன்ற அருமையான திரையிசைப் பாடல்களின் தலைப்புக்களில் வெளியிட்டுள்ள மலர்களின் படங்கள் அழகு!  

தமிழில் இயற்கை எழுத்து (Nature writing) எனும் தலைப்பில் மு.வி. நந்தினி எழுதியுள்ள கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.  இதன் மூலமே காட்டுயிர் எழுத்தாளர் ப.ஜெகநாதன் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். 

நந்தினி கூறுவது போல் இயற்கையை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே சிறந்த இயற்கை எழுத்தை உருவாக்க முடியும்.  இப்பதிவைப் படித்தவுடன் ஜெகநாதன் அவர்கள் எழுதிய க்ரியாவின் பறவைகள் அறிமுகக் கையேடு என்ற நூலை சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிவிட்டேன்.  அருமையான புகைப்படங்கள்! நம்மூர் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள நல்லதொரு வழிகாட்டி! 

ப.ஜெகநாதன் அவர்களின் வலைத்தளத்தில் உயிரியல் பற்றி இயற்கை ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன.  எடுத்துக் காட்டுக்கு நீங்களும் விஞ்ஞானி தான் என்ற பதிவைப் படித்துப் பாருங்கள்.  இயற்கைக்கும் தமிழுக்கு அரிதான இயற்கை எழுத்துக்கும் அவரது மகத்தான பங்களிப்பு புரியும்.  


“சாலையில் விரிந்து கிடக்கிறது
ரத்தினக் கம்பளம்
வசந்த காலம்”
என்ற அழகான மொழிபெயர்ப்பு  ஹைக்கூவுடன் துவங்கும் ஒரு மாநகரில் வசந்த கால ஆசுவாசங்கள் என்ற கட்டுரை வாகை மலர் பற்றி நாம் அறியாத தகவலைச் சொல்கிறது.  போரில் வெற்றி பெறும் மன்னர்கள் வாகை மலர் சூடுவது மரபு.  அதையொட்டித் தான் வெற்றி வாகை சூடினான் என்ற சொற்றொடர் உருவானதாம்! 

முடிவாக புலவர் சா.இராமநுசம் அவர்களின் காலச்சுவடுகள்என்ற கவிதையிலிருந்து சில வரிகள் சொல்லி இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்:- 
“இயற்கைக் காட்டும்
இணையில் காட்சி-கண்
இமைக்க மறக்கும் தகையதன் மாட்சி
செயற்கை மிகமிக செழிப்பினை அழிக்கும்-என
செப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே…”
 

சரி நண்பர்களே!  எனக்குப் பிடித்த இன்றைய பதிவுகள், உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.   அவசியம் உங்கள் கருத்துக்களை நான் அறியத் தாருங்கள்.

எனக்குப் பிடித்த வேறு சில பதிவுகளின் அறிமுகத்தோடு நாளை சந்திப்போம்!

நன்றியுடன்,

ஞா.கலையரசி.  

(முதல் படம் மட்டும் இணையத்திலிருந்து எடுத்தது.)
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது