07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஊஞ்சல்- கலையரசி. Show all posts
Showing posts with label ஊஞ்சல்- கலையரசி. Show all posts

Sunday, February 1, 2015

வலைச்சரம் - ஏழாம் நாள்- பதிவர்கள் புத்தகங்கள் - சிறு அறிமுகம்

இப்புத்தாண்டில் என் நூலகக் காட்டில் அடைமழை!

அன்பளிப்பாக பெற்ற நூல்கள் சில!  புத்தகக் காட்சியில் வாங்கியவை பல.

என் அலமாரியில் புதிதாக இடம் பெற்றவைகளுள், பதிவர்களின் நூல்களை மட்டும் சிறு அறிமுகம் செய்வதே, இன்றைய பதிவின் நோக்கம்.

முழுமையாக வாசித்த பின்னர், இவை பற்றிய பார்வையை, என் வலைப்பூவான ஊஞ்சலில் வெளியிட எண்ணியிருக்கிறேன்.

தம் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்ற எழுத்தாளருக்கேயுரிய தணியாத வேட்கையால், தம் சொந்தப் பணத்தைச் செலவழித்தாவது, பல சிரமங்களுக்கிடையில், புத்தக வெளியீடு செய்யும் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டியே இப்பதிவு.

புத்தகம் வாங்குவதில் மட்டும் கடுமையான கஞ்சத்தனத்தைச் கடைபிடிக்கும்  நம்மவர்கள்,  இப்பதிவைப் பார்த்த பிறகு,  ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கினால் கூட என் நோக்கம் நிறைவேறும்.


1. என்றாவது ஒரு நாள்ஆஸ்திரேலிய மொழி பெயர்ப்புச்  சிறுகதைகள்
ஆசிரியர்:-   கீதா மதிவாணன் 
வலைப்பூ:- கீதமஞ்சரி
முதற் பதிப்பு  டிசம்பர் 2014  விலை:- ரூ.150/- 
மூலம் ஹென்றி லாசன் (Henry Lawson) 

(காடுகளில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த முன்னாள் கைதிகளும், சுரங்கத்துக்குள் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடிக் கொண்டிருந்தவர்களும் தாம், ஹென்றி லாசனின் கதை மாந்தர்கள்.    நமக்கு முற்றிலும் புதுமையானதும், பரிச்சயமில்லாததுமான இந்த ஆஸ்திரேலிய காடுறை மனிதர்களின் கதைகளைச் சரளமான நடையில், மொழியாக்கம் என்று தெரியாதவாறு படைத்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் ஆசிரியர். 
களமும், கருவும் தமிழுக்குப் புதிது.  வல்லமை இணைய இதழின் வல்லமையாளராகத் தேர்வு பெற்றவர்.  அவ்விதழ் நடத்திய கடித இலக்கியப்போட்டி, என் பார்வையில் கண்ணதாசன் போட்டி ஆகியவற்றில்  வென்ற பரிசுகள், இவரது இலக்கியத் தரமான எழுத்துத் திறமைக்குச் சான்று பகர்வன.)


2. அம்மாவின் தேன்குழல் -  சிறுகதைகள்
ஆசிரியர்:-  மாதவன் இளங்கோ 
வெளியீடு:-  அகநாழி பதிப்பகம் சென்னை  முதற்பதிப்பு:- டிசம்பர் 2014  விலை ரூ.130/-

(வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியில் இலக்கிய விமர்சகர் வெ.சாமிநாதன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஆகியோரால் இவரது கதைகள் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவரும் வல்லமை இதழின் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.)





3. தாயுமானவள்  -  சிறுகதைகள்-  வானதி பதிப்பகம் சென்னை முதற்பதிப்பு:-ஆகஸ்டு 2009  விலை ரூ45/-
4.  வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்  -  சிறுகதைகள் -திருவரசு புத்தக நிலையம் சென்னை.  முதற்பதிப்பு ஆகஸ்டு 2009 விலை ரூ.35/-
5.  எங்கெங்கும் எப்போதும் என்னோடு  - சிறுகதைகள் - மணிமேகலைப் பிரசுரம்  முதற்பதிப்பு 2010  விலை ரூ.55/-
இவை மூன்றின் ஆசிரியர்:- வை.கோபாலகிருஷ்ணன்  
(பதிவுலகில் பிரபலமான இவர், நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்.   கடந்த ஆண்டு பத்து மாதங்கள் வெற்றிகரமாகத் தொடர்ந்து இவர் நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டி பதிவுலகில் பிரசித்தி பெற்றது. 
முதல் நூல் பழனியம்மாள் அரங்கநாதன் தமிழிலக்கிய அறக்கட்டளை,பாரதி தமிழ்ச்சங்கம் &  திருக்குறள் பேரவையால் முதற்பரிசு பெற்றது.  இரண்டாவது திருச்சி மாவட்ட பொதுநலப்பணி நிதிக்குழுவால் மாவட்ட அளவில் 2009 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பரிசு பெற்றது.மூன்றாவது புத்தகமான 'எங்கெங்கும், எப்போது, என்னோடு' உரத்த சிந்தனை எனும் தன்னம்பிக்கையூட்டும் மாத இதழால் முதல் பரிசுக்குத் தேர்வானது.  பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இந்தப் பரிசை 15/05/2011 ல் சென்னையில் நடைபெற்ற விழாவில் கொடுத்தார்.  இவ்விழா பற்றிய விபரங்கள் படங்களுடன் இங்கே:-http://gopu1949.blogspot.in/2011/07/4.html- )



6.  கவியரசு கண்ணதாசன் பாடல்கள் -  காலத்தின் பதிவுகள்
ஆசிரியர்:  கவிஞர் காவிரிமைந்தன்
இவரது தளம்:-  தமிழ் நதி
வெளியீடு கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், சென்னை
முதற்பதிப்பு:-  அக்டோபர் 2006
விலை: ரூ 70/-
(கவிஞர் கண்ணதாசனுக்குச் சென்னையில் திருவுருவச்சிலை அமையக் காரணமானவர்.  கவிஞர்பால் மாளாக்காதல் கொண்டுள்ள இவர் காலத்தின் பதிவுகள் என்னும் தலைப்பில் அகவை எண்பதைக் கவிஞர் கண்ணதாசன் எட்டிய நாளில் எண்பது கவிதைகளைக் கட்டுரையாகவும் ஆய்வாகவும் எடுத்துக் கண்டிருக்கிறார் என்று கவிஞர் வாலி வாழ்த்துரையில் கூறுகிறார்.  தமிழ்நதியோடு வல்லமையிலும்  தொடர்ந்து எழுதி வருகிறார்)     




7.  ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்  -  கவிதைகள்
ஆசிரியர்:-  உமா மோகன்
வலைப்பூ:- குரல்
முதற்பதிப்பு:- டிசம்பர் 2014
விலை:-  ரூ70/-
(இவரது கவிதைகளில் பாரதி, பாவேந்தர் மூச்சுக்காற்று படிந்துள்ளது; கால்களில் இந்த மகாகவிகள் மிதித்த புழுதி மண்.  புதுவை எனும் பூஞ்சோலையின் மண் மகளாய், இரண்டாவது பூக்கூடை ஏந்தி.  இவரது கவிதைகள் கார்பரேட், கணிணி யுகச் சூறாவளிக்கு நடுவேயும் அடக்கமான இனிய வாழ்க்கை உண்டு என்பதைக் காட்சிப் படுத்தும் வண்ணக்கவிதைகள் என்கிறார் கவிஞர் புவியரசு.  எழுதிய பிற நூல்கள் டார்வின் படிக்காத குருவி & வெயில் புராணம்.) 




8.  சிறகு விரிந்தது  -  கவிதைகள்
ஆசிரியர்:-  சாந்தி மாரியப்பன்
வலைப்பூ:  அமைதிச்சாரல்
முதற்பதிப்பு:-  ஜனவரி 2014  விலை ரூ80/-
(சாந்தி மாரியப்பனின் கவிதைகள் மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன.  அன்றாட வாழ்வில் கவனிக்கத்தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிப்பாடு என தனித்துவம் வாய்ந்த பார்வையுடன் புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை இவை என்கிறார், வல்லமையின் நிறுவனர் அண்ணா கண்ணன்.)




9.  இலைகள் பழுக்காத உலகம் -  கவிதைகள்
ஆசிரியர்:- ராமலெஷ்மி
வலைத்தளம்:-  முத்துச்சரம்
முதற்பதிப்பு:- ஜனவரி 2014  விலை ரூ 80/-
(அன்பு, பரிவு, நேசம் இவைகளுக்காக ஏங்கும் மனிதருக்குத் தமது பேரன்பைக் கவிதையெனக் கொட்டிக்கொடுக்கிறார்கள் கவிஞர்கள். கவிதை மரத்தில் இலைகள் ஒரு நாளும் பழுப்பதில்லை;  அப்போது தான் விடிந்த விடியலின் வாசனையோடும், பிறந்த குழந்தையின் எதிர்பார்ப்போடும் அது  காத்திருக்கிறது.  அப்படியான இலைகள் பழுக்காத உலகம் ஒன்றை கவிதை பரிசாக நமக்குத் தந்திருக்கிறார் ராமலெஷ்மி என்கிறார் க.அம்சப்பிரியா)




10.  அன்னபட்சி -  கவிதைகள்
ஆசிரியர்:-  தேனம்மை லெஷ்மணன்
வலைப்பூ:- சும்மா
முதற் பதிப்பு:- ஜனவரி 2014  விலை ரூ.80/-
(தேனம்மையின் கவிதைகள் சமூகப்பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்து, வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதால் சங்கத்தில் தூது சென்ற அன்னங்களும், நீரை ஒதுக்கிப் பாலை மட்டும் பருகும் அன்னங்களும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பது போலத் இவரது அன்னபட்சியிலிருக்கும் அருமையான சொல்லாட்சிகளும் பொருள் நுட்பங்களும், நம் உள்ளங்களில் என்றென்றும் கல்வெட்டாய் உறைந்திருக்கும் என்கிறார் எம்.ஏ.சுசீலா.)   





11.  யாருடைய எலிகள் நாம்? -  கட்டுரைகள்
ஆசிரியர்:- சமஸ்
வலைத்தளம்:- சமஸ்
வெளியீடு:- துளி   thuliveliyeedu@gmail.com
முதற்பதிப்பு:- டிசம்பர் 2014  விலை ரூ.300
(சமஸுடைய மொழிநடை அபூர்வமானது.  ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது.  அது போலத்தான் சமஸுடைய எழுத்தும்.  ஆர்ப்பாட்டமில்லாமல் ஆழத்தில் பாயும். அ.முத்துலிங்கம்)
மேலே குறிப்பிட்டவைகளுள் ஆறு புத்தகங்கள் அகநாழிகை பதிப்பகம் வெளியீடு.  இதன் பதிப்பாளர் பொன்.வாசுதேவன் அவர்களும் சிறந்த எழுத்தாளராக விளங்குகிறார். 
அண்மையில் இவரது சாம்பல் வாசனைசிறுகதையை வாசித்தேன்.  சாவுக்குச் செல்பவனின் மனவோட்டத்தைத் தேர்ந்த நடையில் கதையாக்கித் தந்திருக்கிறார். 
அவரது வலைத்தளம்:-      அகநாழிகை பொன் வாசுதேவன்             சரி நண்பர்களே!  ஒரு விதத் தயக்கத்துடனே ஆசிரியப் பொறுப்பை ஏற்ற என்னை, இந்த ஒரு வாரமும் என்னுடன் கூடவே பயணித்துத் தினமும் கருத்துக்கள் மூலம் ஊக்கமும் உற்சாகமும் அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்தவரை இப்பணியைச் செய்தேன் என்பதில் எனக்குத் திருப்தியே.  தொகுப்புக்காக வலைப்பூக்கள் பலவற்றிக்குப் போய் வாசித்ததில் பலருடைய எழுத்து எனக்குப் பரிச்சயமாயிருக்கிறது.  பதிவர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்திருக்கிறது.

இப்பணியை நான் ஏற்கக் காரணமான திரு கோபு சார் அவர்களுக்கும் திரு சீனா சார் அவர்களுக்கும், திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். 

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபனின் எழுத்துப் படைப்பு வலைத்தளத்தில் நடைபெறவிருக்கும் உலகளாவிய சிறுகதை போட்டிக்கான இறுதி நாள் 15/02/2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு போட்டியைச் சிறப்பியுங்கள்.   

நன்றியுடன்,

ஞா.கலையரசி
மேலும் வாசிக்க...

Saturday, January 31, 2015

வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து



வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்ற இரண்டாம் நாள் முதல் நேற்று வரை,  நான் தேர்வு செய்த தலைப்புக்களில் அமைந்த பதிவுகளாகத் தேடிப் பிடித்துத் தொகுத்த நான், எனக்குப் பிடித்த பல்சுவை பதிவுகளை இன்று குறிப்பிட விரும்புகின்றேன்:- 

1  எம்.ஏ.சுசீலாவின் தப்பவிடக்கூடாத சிறுகதைகள் தொகுப்பிலிருந்து மிகவும் பிடித்த ஒன்று:-
கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார்

2.  வீட்டின் மூலையில் ஒரு சமையலறை-  அம்பை அழியாச்சுடர்கள் தொகுப்பிலிருந்து.


3.  பெண்மை வாழ்கவென்று - சிறுகதை -  ஜீ.ஜீ  -  பூவனம்
 தன்னில் தன்னைக் காண்பது- தமக்குள் பார்வையைச் செலுத்திக் கறாராகத் தம்மைச்  சுயவிமர்சனம் செய்து மேம்படுத்திக்கொள்ள விழைவோருக்கான சுய தேடல் பதிவுகள்.  

4.  சிவப்பி  -  சிறுகதை கீதா மதிவாணன் - கீதமஞ்சரி 
(இவர் கதைகளுள் எனக்கு மிகவும் பிடித்தது)

5. மரணத்துள் வாழ்பவர்கள் – கவிதை - ஹேமா- வானம் வெளித்த பின்னும் (மனதைத் தொட்ட பதிவு)

6.  வன்மம் தவிர்-  கவிதை - நிலாமகள் – பறத்தல்- பறத்தல் நிமித்தம்


7. வில்விசை வித்தையிலே-  மகேந்திரன் -  வசந்த மண்டபம் (அழிந்து வரும் தமிழர் கலையைப் பற்றிய அருமையான பதிவு)

8. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் -  வை.கோபாலகிருஷ்ணன்
சுவையான பள்ளி நினைவலைகள் (பள்ளிக்கூடம் பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு) 

9.  பேந்தா, கொந்தம், முக்குழி -  சிறுவயது விளையாட்டுக்கள் பற்றிய பதிவு – இலக்கியச்சாரல் – சொ.ஞானசம்பந்தன் (தமிழர் விளையாட்டு பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு)

10. தஞ்சை பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் –முனைவர் ஜம்புலிங்கம் (சோழர் ஓவியம் குறித்த புரிதலுக்குப் பயன்படும் கட்டுரை )


10.  எஸ் ராமகிருஷ்ணன் - இன்னொரு பயணம்  -  போலிஷ் திரைப்படம் இடாவின் விமர்சனம். 

11.  ஜெர்மன் ஓவியர் காஸ்பர் டேவிட் பிரெடரிக் வரைந்த ஓவியம் நிலா பார்ப்பவர்கள் பற்றிய பதிவு. 

12.  முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே -  தந்தை மகளுக்கு எழுதிய கடிதம் (என்னை மிகவும் கவர்ந்த ஒன்று)  நா.முத்துநிலவன்.- வளரும் கவிதை (கல்வியாளர்களும், பெற்றோர்களும், இளந்தலைமுறையினரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கடித இலக்கியம்)  

ஊமைக்கனவுகள் -  (பிரான்சு நூலகத்தில் 135(?) அதிகாரங்கள் கொண்ட திருக்குறள் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடும் பதிவு)

14.  நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும் -  குழல் இன்னிசை – புதுவை வேலு - 


16.  தாய்மை-  துளசிதளம் – என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்  


17.   சிலந்தி வலைகள் -  மனோ சாமிநாதன் -  முத்துச்சிதறல்
  

மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பதிவும் என்னைக் கவர்ந்த விதம் குறித்து இரண்டு வரிகளாவது எழுத ஆசை தான்.  நேரமின்மை காரணமாக இணைப்பை மட்டும் கொடுத்து விட்டேன்.   

நாளை சந்திப்போம்,
நன்றியுடன்,
ஞா.கலையரசி.
மேலும் வாசிக்க...

Friday, January 30, 2015

வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"




தமிழின் பேச்சுவழக்கில் அறுபது சதவீதத்துக்கு மேல் பிற மொழிகளின் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், உலகின் அழிவின் பாதையில் இருக்கக் கூடிய  மொழிப் பட்டியலில் நம் தமிழும் இருப்பதாகவும், உலகின் மொழி ஆய்வு மையம் தெரிவிக்கும் கருத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.

என்ன ஆச்சரியம்!  என் மனத்துயரை அப்படியே படம் பிடித்தாற் போல் வெளிப்படுத்துகிறது எனது மனவெளியில் வேதாவின் வலையில் இடம் பெற்றுள்ள நூலறுந்த பட்டமென ஆகுமோ? என்ற கவிதை. அதிலிருந்து சில வரிகள்:- 

“நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்
பட்டுத் தமிழ் அழியுமோவென்று ஆய்வுகள்
ஒட்டிய கிலியால் மனவுளைச்சல்”

பாமரர்களின் பேச்சில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஆங்கிலக் கலப்பு மிக அதிகமாக உள்ளது.  எங்கும் எதிலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது.

இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது? 

“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸு வைச்சிட்டேன்.  ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான்,  சன்னுக்கு  எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான்.  அப்புறம் ஹஸ்பண்ட் பைக்ல கூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு. 

அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள்.   ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன்.  ரெண்டு சிக்னல்வெயிட் பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக்ஒன் அவர் லேட்டாயிடுச்சி..  அதுக்கப்புறம் தேர்டு புளோர் இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணி செட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி.  லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”     

பார்த்தீர்களா?  இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்!  நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. 

“வண்டிக்காரன் கேட்டான், லெப்டா ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான், என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான், கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ், இப்படிக் கேட்டா?” (காசி ஆனந்தன்)

ஒரு மொழியின் ஆயுள் இலக்கியவாதிகளாலேயோ, மெத்தப் படித்தவர் களாலேயோ  தீர்மானிக்கப் படுவதில்லை; பாமரர்களால் பேசப்படும் போது தான், அதன் ஜீவன் நிலைக்கும்.

பேச்சு மொழி வழக்கிழந்ததால், ஏராளமான இலக்கிய வளம் இருந்தும்  லத்தீனும், சம்ஸ்கிருதமும் அழிந்துவிட்டனவே!

இக்காலத்தில் இருபது சதவீத பெயர்கள் மட்டுமே தமிழில் உள்ளன.
உலகில் மக்களனைவரும் அவரவர் மொழியில் பெயர் வைத்திருக்கும் போது, தமிழன் மட்டும் வடமொழியாய், அரபியாய், பாரசீகமாய்ப் பெயர் வைத்து அடையாளம் இழப்பதைச் சுட்டிக்காட்டி வருந்துகிறார் தமிழகம் மா.தமிழ்ப்பரிதி:-  

தமிழகத்தில்
பெயரளவில் தமிழ்
எனக் கொதிக்கின்றேன்!
அடடா!
தமிழரின் பெயரிலும்
தமிழ் இல்லை! 
இவரது தமிழகம் வலைப்பக்கத்தில் ஏராளமான தமிழ்ப் பெயர்கள் தொகுக்கப் பெற்றுள்ளன.

 

தமிழன் என்று சொல்லடா! தமிழில் பேசடா!" என்னை மிகவும் கவர்ந்த  பதிவு.  ஊடகங்கள் அனைத்தும் தமிழைச் சகட்டு மேனிக்குத் துவம்சம் செய்கின்றன.  சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம்; தமிழைத் தமிழாகப் பேசினாலே போதும்; தமிழ் தானாக வளர்ந்துவிடும் என்கிறது சாமானியனின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூ.
கொன்ச்சம், கொன்ச்சம் டமிள்,’ பேசும் நடிகைகளை வைத்துத் தமிழ்ச்சேவை(?) செய்யும் தொலைக்காட்சியைக் காட்டமாக தாக்கி யிருக்கிறார் இப்பதிவில்.

ஆங்கிலக் கலப்பு செய்து வருங்கால தலைமுறையினரிடம் தமிழை அழிப்பது நியாயமா?  பொறுப்பை உணர்ந்து தமிழைக் காப்பாற்றுங்கள் என்று தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கிரி.

அந்நிய மொழிகளின் ஊடுருவல், அந்நிய நாகரிக வளர்ச்சி மோகம், மொழி இன ரீதியான ஒடுக்கு முறை ஆகியவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள்.  இந்தக் காரணிகளைத் தமிழ்மொழியும் பெற்றுவிட்டது.  அந்நியமொழிகளின் ஆக்ரமிப்பு ஆழமாக ஊடுருவி தமிழை அழித்துக் கொண்டிருக்கின்றது.  அழிவை நோக்கிய பாதையில் தமிழ் பயணிக்கிறது என்று கவலை தெரிவிக்கிறார் ஆலிவ்.


நாம் எங்கே போகிறோம்?,’ என்ற பதிவில், உலகின் அழிந்த மொழிகளின் பட்டியலில் தமிழை இணைக்கப் போகிறோமா?” நாமே நம் தாய் மொழியைப் புதைகுழியில் தள்ளப் போகிறோமா?  என்ற நியாயமான கோபத்துடன், கேள்விக்கணை தொடுக்கிறார் தமிழுடன் வலைப்பூவின் தமிழன்.  


கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
என்னில் தரித்திடுமோ   உயிர்?. என்றும்

அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
 நன்மை செய்வேன் நாளும் !  என்றும் தமிழின்றி வாழ்வேது? என்ற கவிதையில் சொல்லி வேருக்கு நீர் ஊற்றுகிறார் அம்பாளடியாள்.  


அன்னையிட்ட தீயென அடிவயிற்றுள் மூண்டெழவே
உன்னைநினைக் கின்றேன் உயர்தமிழே! – முன்னைப்
பிறந்தவளே! என்னுள் நிறைந்தவளே! யாப்பில்
சிறந்தவளே! காப்பாய் செழித்து!
என்று அழகு தமிழில் பாமாலை சூட்டுகிறார் இளைய நிலா அன்னையிட்ட தீ என்ற கவிதையில். 

மரபு தமிழில் கவிதைகள் பாடி அசத்தும் தென்றல் சசிகலாவின் 'வரவேற்போம் புத்தாண்டை என்ற கவிதையிலிருந்து சில வரிகளைச் சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்:
"அன்பை நாளும் விதைத்திடுவோம்
அகத்தே தூய்மை அடைந்திடுவோம்
அன்னைத் தமிழை அரவணைத்து
அறிவை வளர்த்து மகிழ்ந்திடுவோம்"

இறுதியாக என்னைப் பாதித்த தமிழ் இனி என்ற குறும்படம்.  அனைவரும் அவசியம் காண வேண்டிய படம்.


நாளை சந்திப்போம்,
நன்றியுடன்,
ஞா.கலையரசி



மேலும் வாசிக்க...

Thursday, January 29, 2015

வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'

மங்கையராய்ப் பிறப்பதற்கு 
மாபாவம் செய்திருக்க வேண்டும்!


பெண்சிசுக்கொலை, பெண்கள் & குழந்தைகள் வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு போன்ற கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் இக்காலத்தில் மங்கையராய்ப் பிறப்பதற்கு, மாதவமா செய்திருக்க வேண்டும்?

தாய்மையைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இந்நாட்டில், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை செய்தி, இடம் பெறாத நாளேடுகளே இல்லை என்றாகி விட்டது இன்றைக்கு. 


இக்கொடுமை தற்போது 792 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பெண்ணியம் இணைய இதழின் கட்டுரை சொல்லும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  


பாலியல் கொடுமைகள் முன்பும் நடந்து கொண்டு தானிருந்தது.  ஆனால் அவை வெளிச்சத்துக்கு வரவில்லை. இப்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக, அதிகளவில் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன; என்று சிலர் வாதிட்டாலும், இன்றுங்கூட எல்லாக் குற்றங்களும் பதிவு செய்யப்படுவதில்லை என்பது தான் உண்மை.  


பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலான பெண்கள்,  நம் சமூகத்தின் கேவலமான பார்வைக்கும், புறக்கணிப்புக்கும் அஞ்சி தமக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் சொல்லாமல் மூடி மறைத்து விடுகின்றனர்.


மேலும் குடும்பத்துக்கு ஏற்படும் அவமானம், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாதல், போதுமான வசதியின்மை, சட்ட நிவாரணம் குறித்து விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களாலும், பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.    


இதனால் தவறு செய்தவர்கள் தண்டனை ஏதுமின்றிச் சுலபமாகத் தப்பவும், மென்மேலும் இது போன்ற குற்றங்களைத் துணிந்து செய்யவும் வழி ஏற்படுகின்றது. 


பதிவு செய்யப்படும் குற்றங்களே இத்தனை சதவீதம் என்றால் பதிவு செய்யப்படாத குற்றங்கள் எத்தனை சதவீதம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.


பாலியல் கொடுமை தவிர காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இளம்பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், இப்போது அதிகரித்து வருகிறது. 

ஆசிட் வீச்சு, பாலியல் வன்முறையை விட மகளிருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிட் அரக்கர்கள் என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருக்கிறார் இமானுவேல் நூறு பூக்கள் மலரட்டும் என்ற தமது வலைப்பூவில். 

தஞ்சையம்பதி மகளிர் தினம் என்ற கட்டுரையில் உலகில் 2014 ஆம் ஆண்டின் மிகவும் தைரியமான பெண் என்ற
விருதை   லஷ்மி என்பவர் மேக்கேல் ஒபாமாவிடம் வாங்கிய நிகழ்வு குறித்து எழுதியிருக்கிறார்.   


அச்சமயம் லஷ்மி கூறிய சொற்கள், முட்களாய் நம் நெஞ்சைக் கீறுகின்றன:-

“என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்தது என் முகம் மட்டுமல்ல;  என் கனவுகளும் தாம். இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் இதயத்தை அன்பால் நிரப்பப் பாருங்கள்; ஆசிட்டால் அல்ல!”


சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை உடனுக்குடன் நிறைவேற்றப்பட வேண்டும்.  பெண்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை.


இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குரல் கொடுக்க  வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. 


இனி வலைப்பூக்களில் மங்கையருக்கும், குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகள் பற்றிச் சகபதிவர்கள் எழுதியுள்ள பதிவுகள் உங்கள் பார்வைக்கு:--

“ஒரு உள்ளார்ந்த துயர்
கேவிக்கொண்டே இருக்கிறது
வன்பாலுறவுள்ளாக்கப்பட்ட பெண்கள்
வாழும் தேசத்தில்…”

என்கிறார் சைக்கிள் வலைப்பூ மிருணா புறம் அகம் கவிதையில்.


அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன என்று மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி பாடசாலையில் விளக்கமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.   

பாலியல் வன்முறை நடைபெறும் போதெல்லாம் குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும், சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கொந்தளிக்கிறோம்.  சமூகத்தின் ஒழுக்கக் கேட்டிற்குக் கண்டிப்பாக உளவியல் காரணம் இருக்கிறது; அதிலும் ஆண் பெண் உடல் தொடர்புடைய பிரச்சினை என்றால் அதற்கு முதல் காரணம் உளவியல் தான் என்கிறார் இவர். 


பெண் பலவீனமானவள்; அவளை நல்லபடியாகக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி பண்ணும் நாம், பையன் அவளை விட பலவீனமானவன்; அவனை நல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று உணராமல் இருந்து விட்டோம்.  எனவே ஆண் குழந்தைகளின் வளர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற இவரது கருத்து ஏற்புடையதாயிருக்கிறது. 


அதிகளவில் குற்றங்கள் நிகழ என்ன காரணம் என்பதை உளவியல் நோக்கில் ஆராய்ந்து, அதை நிகழாமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம்; அவசரமும் கூட.  


பெண்கள் மீதான வன்முறைஎன்ற கட்டுரையில் பெண் எனும் புதுமை கோவை சரளா இக்கொடுமையினைச் சாடியிருக்கிறார்:-


பொறுப்பற்ற பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் தாம்  இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.  வளர்ப்புச் சூழல் சரியாக அமையாத பிள்ளைகள் பின்னாளில் ஒழுக்கமுள்ள குடிமகன்களாக எப்படி விளங்க முடியும்? என்று கேட்கிறார் இவர். 


பெண்கள் வன்முறையிலிருந்து காக்கப்படுவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதம் இல்லாத நிலையில், நவம்பர் 25 ஆம் நாள் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு நாளாகக் கொண்டாடுவது கேலிக் கூத்தாக அல்லவோ இருக்கிறது?.  .


‘நான் ஒரு பெண், நான் பாதுகாப்பாக இல்லை,’ என்ற கட்டுரையில்  கணவனை விட அதிகம் படித்த மனைவி மற்றவரை விட 1.4 மடங்கும்,  பெண் மட்டுமே சம்பாதிக்கும் குடும்பத்தில் 2.44 மடங்கும் அதிகமாக வன்முறையை அனுபவிப்பதாக ஆய்வு ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார் ரஞ்சனி நாராயணன். 


மனைவி அதிகமாக படித்திருந்தாலோ, சம்பாதித்தாலோ வன்முறையால் மட்டுமே அவளை அடக்க முடியும் என்று கணவன் நினைக்கிறானாம்.


 பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும் என்ற கட்டுரையில் ஒரு பெண்ணிற்குத் தன் மேல் விருப்பமிருக்கிறதா இல்லையா என ஆராய்ந்து பார்க்காமல், தனக்குப் பிடித்தால் அவளுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்குத் தரங்கெட்ட திரைப்படங்களும் 99% பெண்ணைப் போகப்பொருளாகக் காட்டும் ஊடக விளம்பரங்களும் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டுகிறார சும்மா வலைப்பூவின் தேனம்மை லெட்சுமணன்.


இவரது பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும் என்ற இன்னொரு பதிவில் குழந்தைகளிடம் உடலின் தொடக்கூடிய பகுதி, தொடக்கூடாத பகுதி என்பதைச் சொல்லி வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் தேனம்மை.  

அண்மை காலங்களில் குழந்தைகளின் மீதும், இத்தகைய பாலியல் வன்முறைகள் பெருகி வருவதை நம்மால் ஜீரணிக்கவே இயலவில்லை
குழந்தைகளைக் குறி வைக்கும் பாலியல் வன்முறை பற்றி விரிவாக அலசுகிறது கவிதைச் சாலை.

இந்தியாவில் சமீபத்து ஆய்வொன்றில் 48 விழுக்காடு பெண் குழந்தைகள் தாங்கள் ஆண்களாய்ப் பிறக்காததற்காக வருத்தப் பட்டிருக்கிறார்கள்.  காரணம் பாலியல் தொல்லைகள்.  . 
பெண்களை மதிப்பதாகவும், துதிப்பதாகவும் இனியும் கதை அளந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை குழந்தைகளைப் பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் அவலம் இந்தியாவில் தான் மிக அதிகம் என்கிறார் கவிதைச்சாலையின் சேவியர். . 


உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? என்ற பதிவில் இன்றைய இக்கட்டான சூழலில் நாம் எப்படிப் பயணப்பட வேண்டும் என்பதை விளக்குவதுடன் குழந்தைகளுக்கான பாலியல் கல்வி வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் எழுத்தாளர் சமஸ்.    பெற்றோர் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.


ஆடை குலைக்கும் கைகள்
அப்படியே துண்டாக,
நெறிகெட்ட நினைப்பு வந்த
நெஞ்சு இரண்டாக,
தொட்டதும் தலைவெடிக்க,
தொடருமுன்
தொடைகிழிக்க
அவளுக்குப் பலம் தரவோ
அடுக்காக வரம் தரவோ
ஆரு சாமி இருக்கீங்க ..
குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா...
தவழும்போதே
தற்காப்புக் கலை சொல்லவா
..

என்று வேதனையோடு குமுறுகிறார் கவிஞர் சக்தி 'நெஞ்சு இரண்டாக' என்ற தம் கவிதையில்.  


தீதும் நன்றும் பிறர் தர வாரா திரு ரமணி அவர்கள் எழுதியுள்ள  இளங்கன்றே நீ பயமறிவாய்என்ற கவிதை என்னை மிகவும் பாதித்தது.  

குட்டிக்கும் பசுவுக்கும்
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்
....
குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....

இளம் கன்றே
  நீ உலகறிவாய் 


ஆற்ற முடியாத வேதனையுடனும், தாங்க முடியாத கோபத்துடனும் ஆறறிவு மிருகங்களைச் சாடி விழிப்புணர்வு ஊட்டும் இக்கவிதை என்னைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. 


இதனை ஏற்கெனவே பலர் படித்திருந்தாலும், இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கவிதையின் சில வரிகளை இங்கே குறிப்பிட்டிருக்கின்றேன்.

பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம் இவற்றைத் துறந்து நம் சமுதாயம் விலங்கு நிலையை எய்துவதற்கு முன், நம் சந்ததியிடம்  இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மென்மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, நம் அனைவர்
கையிலும் உள்ளது.


நாளை சந்திப்போம்!


நன்றியுடன்,
ஞா.கலையரசி  

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது