07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 6, 2013

நெசவுத் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். - மூன்றாம் நாள்



ஆரம்பத்தில் உடையில்லாமல் திரிந்த மனிதன், தட்பவெப்ப நிலை காரணமாக மரவுரி தரிக்க ஆரம்பித்து, பின்பு விலங்குகளின் தோலிலான உடையை அணிய ஆரம்பித்து, பின் பருத்தி உடைக்குத்  தாவினான் என்கிறது மனித வரலாறு.  மனிதன் ஆடை அணிய ஆரம்பித்து 1.00.000 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள் .இதில் மாற்றுக் கருத்து தெரிவிப்பாரும் உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில், அதாவது ஹரப்பா நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்தே, பருத்தியால் ஆன ஆடைகள் உபயோகத்தில் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

ஆரம்பத்தில் பெண்கள் புடவையையும், ஆண்கள் வேட்டியையும் உடுத்திவந்த நிலையில், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தபட்ட நூற்பாலைகள் வந்தவுடன் மேலை நாகரீகம் தலை தூக்கி, பெண்கள் உடையிலும் ஆண்கள் உடையிலும் அநேக மாற்றங்கள் ஏற்பட்டன.

மேலும் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டு நெசவுத்தொழிலை மேம்படுத்துவதற்கு நமது நெசவுத்தொழிலை அழிக்கும் வேலையில் ஈடுபட்டதும் நடந்தது. அன்று ஆரம்பித்த அந்த அழிவு நடவடிக்கைகளால் நம்முடைய பாரம்பரிய கைத்தறி ஆடைகளுக்கான மவுசு படிப்படியாக குறைந்தது என்பது நிஜம். ஆங்கிலேயர் விட்டுச் சென்ற அந்த பணியை நாம் இப்போது தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் வருந்தக் கூடிய செய்தி.

இந்தியாவில் உழவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவுத்தொழில் என்பதும், இதில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 124 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் அதிலும் 60 விழுக்காடு பெண்கள் என்பதும் அரசு தருகின்ற புள்ளி விவரங்கள்.

இந்தியாவில் தயாராகும் துணி உற்பத்தியில் கைத்தறித்துறையின் பங்கு மட்டும் சுமார் 22 விழுக்காடு என்றும் ஏற்றுமதியாகும் துணிகளில் சுமார் 25 விழுக்காடு கைத்தறித்துணிகள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி இருந்தும் இந்த தொழிலில் ஈடுபடுவோர் சந்திக்கும் கஷ்டங்கள் சொல்லில் அடங்கா. மூலப் பொருள் கிடைக்காததும், தேவையான நிதி உதவி கிடைக்காததும், அப்படி கிடைப்பதும் போதுமான அளவு இல்லாததும், தரகர்களின் சுரண்டலும், விசைத்தறிகளால் ஏற்பட்டுள்ள போட்டியும், சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமமும் அவைகளில் சில.

ஆனால் அரசின் ஆதரவு இல்லாததால், இன்று கைத்தறி நசித்துப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது பரிதாபமே.அரசு நெசவாளர்களுக்கு, மூலப்பொருளான நூல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், உற்பத்தியில் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்தும், தேவையான அளவு வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்தும், இவர்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த வழிவகை செய்து நல்ல விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்தால்தான், நமது கைத்தறி நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை திறக்கும் அவலம் மறையும்.

நாமும் கைத்தறி ஆடைகளை வாங்கி அவர்களை ஆதரிப்போம்.

                              -------------

1.நெசவுத்தொழில் வருமானம் வாய்க்கும்,வயிற்றுக்கும் எட்டாக்கனியாக இன்றுமட்டுமல்ல திருப்பூர் குமரன் காலத்திலும் இருந்தது என்பதை சொல்லும், வெற்றி நாயகன் அவர்கள் எழுத்து.காம் என்ற வலைப்பதிவில் எழுதிய கொடி காத்ததிருப்பூர் குமரன்...! என்ற  இந்த கவிதையே போதும்.

2. 2010 ஆம் ஆண்டிலிருந்து பதிவுலகில் கரைசேரா அலை ... என்ற வலைப்பதிவில் எழுதிக்கொண்டு இருக்கும் அரசன் சே அவர்கள் கவிஞர் எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்டவர். உகந்த நாயகன் குடிக்காடு... என்ற இவரது ஊரின் தலைப்பின் கீழ்  இவரது ஊரை எழுத்து மூலமும் புகைப்படங்கள் மூலமும் அறிமுகப்படுத்தியிருக்கும் விதமே அருமை. இருந்தாலும்  நெசவுத்தொழில் பற்றி இவர் எழுதிய  நெ(வ)சவுத்தொழில் என்ற இந்த கவிதையை படித்தால் கலங்காமல் இருக்கமுடியாது.  நெசவுத்தொழில் செய்கின்ற வாரியங்காவல் என்ற ஊருக்கு அருகே இவரது ஊர் உள்ளதால்தான், தான் பார்த்ததை கவிதையில் வடித்திருக்கிறார் என நினைக்கிறேன்.



இனி இன்று கவிதைகளால் பதிவுலகை கலக்கி வரும் சில பதிவர்கள் பற்றி பார்ப்போம்.

3.மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து நம் உள்ளம் புகும் இவர் இதுவரை தன் பெயரிலேயே வைத்திருந்த வலைப்பதிவின் பெயரோடு மூங்கில் காற்று என்பதையும் சேர்த்திருக்கிறார்  T.N.முரளிதரன் அவர்கள்.இவர் பல தலைப்புகளில் பதிவிட்டாலும் எல்லாவற்றையும் விட இவருள் இருக்கும் கவிஞரே மேலோங்கி நிற்கிறார்.இதுவரை 41 கவிதைகள் எழுதியிருந்தாலும் எதிரியே!எதிரில் வா! என்ற கவிதையில் இருக்கும் இடத்தை விட்டு  இல்லாத இடங்களில் நாம் எதிரியைத் தேடுவதை நயத்தோடு சொல்லியிருப்பதே எனக்குப் பிடித்தது.

4. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவிபாடும் என்பார்கள். கவியரசரின் பெயர் கொண்ட இவர் கவிதை பாடுவதில் வியப்பேதும் இல்லை. கண்ணதாசன் அவர்களின்  ‘கவியாழி’ வலைப்பதிவில் பல்வேறு தலைப்புகளில் இதுவரை வெளியிட்ட  கவிதைகளில் இளமை இருப்பது சில காலம் என்ற கவிதை நேர்மறை கருத்துகளை சொல்வதால் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

5. 'தமிழைப் தமிழை நேசிக்கும் தமிழாள்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் கோவைக்கவி என்கிற கவிதாயினி வேதா இலங்காதிலகம் அவர்கள். யாழ்பாணத்தில் பிறந்த இவர்   தற்சமயம் இருப்பது டென்மார்க்கில் உள்ள ஓகுஸ் நகரில். வானொலி, தொலைக்காட்சிகளில் விமர்சனம், கவிதை, அனுபவக் கட்டுரைகள் எழுதி வாசித்தவர் இன்னும் வாசித்துக்கொண்டு இருக்கிறார்.  பயணக்கட்டுரைகள் ஆன்மீகம், கவிதைகள், பா மாலிகை என தலைப்புகளில்‘வேதாவின் வலை’  என்ற வலைப்பதிவில் தினம் கவிதைகள் படைக்கும் இவரின் எல்லா படைப்புக்களுமே அருமை என்றாலும் படிப்படியாய் என்ற இந்த கவிதை எல்லாவற்றையும் விட ஒரு படி மேல் என்பது என் கருத்து.

6. கவிஞன் எழுத்தாளன் மென்பொறியாளன் என்று இவர் தன்னைப்பற்றி வரிசைப்படுத்தி சொல்லும்போதே இவருள் உள்ள கவிஞனுக்கே முதலிடம் தருகிறார் என்பதை அறிகிறோம். கவிதைகள், நட்புக் கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் என இவரது பதிவு முழும் கவிதைகள் மயம் தான். ரிஷ்வன் கவிதைத் துளிகள் என்ற வலைப்பதிவுக்கு சொந்தக்காரரான கவிஞர் சுரேஷ் சுப்ரமணியன் அவர்களின் சிரிக்கும் பூக்கள்- ஹைக்கூ கவிதை  உண்மையிலேயே ‘ஹை கிளாஸ்’ தான்.

7. கவிதைப் பூக்களின் நந்தவனத்திற்கு சொந்தக்காரரான இவர் நடுநிலைக்கருத்துகளின் தாயகமாகவும் உள்ளேன் என்கிறார் ‘கவிதை வீதி சௌந்தர் அவர்கள். இவரது கவிதை நந்தவனத்தில் கண்டனக் கவிதைகள், காதல் கவிதைகள், பிரிவுக் கவிதைகள் திருக்குறள் கவிதைகள், பெண் கவிதைகள்,குழந்தைக் கவிதை,  வசன கவிதை, வித்தியாசமான கவிதை, நெடுங்கவிதை SMS கவிதைகள் என பல கவிதைப் பூக்கள் தான் நம்மை வரவேற்கின்றன. இவரது ‘கவிதைவீதி’ வலைப்பதிவில்  பல்வேறு  தலைப்புகளில் வேறு விஷயங்களை எழுதினாலும் இந்த கவிதைப் பூக்களின் வாசமே தூக்கலாக இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படிக் கூடவாநடக்கும் என அப்பாவித்தனமாய் கேட்கும் காதலனின் மன உணர்வை நீங்களும் இரசியுங்களேன்.

8. தமிழ்க் கவிதைகள் ..! என்ற பெயர் தாங்கிய வலைப்பதிவில் கவிதைகள் படைத்து வரும்  மோகனன் அவர்கள், மோகனனின் வலைக்குடில், தமிழ் கானா பாடல்கள், வசன கவிதை, இனிய தமிழ் பாடல்கள் என இன்னும் நான்கு வலைப் பதிவுகள் வைத்துள்ளார்.  2008 இல் தொடங்கி இன்று வரை 350 கவிதைகள் படைத்துள்ளார். கவிதையே இவரது சுவாசம் என்பதை  இவர் இந்த 350 ஆவது கவிதையை அவரை நேசித்துக்கொண்டு இருக்கும் கவிதைக்கே சமர்ப்பித்திருப்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். காதலியின் குரல் கைபேசியில்   ஒலிக்காததால் அவர் தவித்த தவிப்பை எங்களின்செல்பேசி..! என்ற இந்த 350 ஆவது கவிதையில் மிக அருமையாக பகிர்ந்திருக்கிறார் என்பதை  நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.  

9. தமிழடிப் பொடியான் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் கவிஞர் கி.பாரதிதாசன் கம்பன் கவியழகில் பற்று கொண்டு பாரிசில் இருந்து கவிதை பாடி வருபவர். கவிஞர் கி.பாரதிதாசன் கவிதைகள் என்ற இவரது வலைப்பதிவில் காணக் கிடைப்பது அருமையான மரபுக் கவிதைகள். காதல் ஆயிரம் என்ற  தலைப்பில் தினம் பத்து வெண்பாக்கள் வீதம் இதுவரை 43 பகுதிகளில் மட்டும் 430 வெண்பாக்களை படைத்துள்ளார். வெண்பாப் பிரியர்களுக்கு இவர்  படைப்புக்கள் ஒரு விருந்து. வெண்பா எழுத விரும்புவோருக்கு இவர் வலைப்பதிவு ஒரு பயிற்சிக்கூடம். பாரிசில் உள்ள கம்பன் கழகம் நடத்தும் திங்கள் கவியரங்கத்தில் தலைமை ஏற்று இவர் பாடிய மீண்டுமோர்ஆசை என்ற கவிதையைப் படிக்கும்போது நமக்கும் இவர் போல கவிதை எழுத ஆசை மீண்டும் மீண்டும் பிறக்கும்!

10.தமிழில் முதுகலை பட்டம் பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தி.தமிழ் இளங்கோ அவர்கள் தான் சொல்ல நினைத்ததை ‘எனது எண்ணங்கள்’ என்ற பெயர் தாங்கிய வலைப்பதிவில் 2011 ஆம் ஆண்டிலிருந்து பதிவிட்டு வருகிறார். இவர் பலவகை தலைப்பில் பதிவிட்டிருந்தாலும், ‘கற்றது தமிழ்’ அல்லவா அதனால் கவிதைகள் பலவும்  படைத்திருக்கிறார். யாரிடம் கோளாறு? என்ற கவிதை போல, இந்திர சித்து வேலைகள்  என்ற கவிதையும் சிரிக்கவும் ஆதங்கப்படவும் வைக்கிறது. 
11.’பிறந்ததுஈழ மண்ணில் கற்றது யாழ் மண்ணில் தொலைந்தது வேற்றினமண்ணில் தொடரும் பணி தமிழ் மண்ணில்’ என அறிமுகப்படுத்திக்கொள்கிறார்தமிழ்க்கிறுக்கன் நடா சிவா அவர்கள்.இவரதுவலைப்பதிவின் பெயர் சின்ன சின்ன தூறல்கள் என்றாலும் இவர்கவிதைகள்,வாழ்த்துப்பாக்கள்,புதுக்கவிதைகள்,என கவிதை மழையையே பொழிந்திருக்கிறார். இதுவும்அழகு என்றகவிதையில் ஒவ்வொரு வரியும் அழகுதான்!  

மற்ற பதிவர்கள் பற்றி நாளை பார்ப்போம்.

மேலும் வாசிக்க...

Tuesday, March 5, 2013

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்! – இரண்டாம் நாள்



ஒரு சராசரி மனிதனுக்கு முக்கிய தேவைகளான, உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இடம் ஆகிய மூன்றில் நாம் உண்ணும் உணவுக்கான தானியங்களை பயிரிட்டுத்தரும் வேளாண் பெருமக்களைப் பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறோமா என்றால் இல்லை என்பேன் நான்.



நம் இந்திய திருநாட்டில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காடுக்கு மேல் வேளாண் தொழிலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கொண்டுள்ளனர் என்கிறது புள்ளி விவரம். பருவமழையையே நம்பி பயிரிடுவதும், அது சரியான அளவு பெய்யாதபோது  நஷ்டப்படுவதும், பின் கடன் வாங்கி கஷ்டப்படுவதும் தான் அவர்களது வாழ்க்கை. உழவர்களுக்கு உழவுத்தொழிலே ஒரு சூதாட்டம்  போலத்தான்.



ஒரு விவசாயி பயிர்த்தொழிலை முழுமையாய் நம்பியிருந்தால் கையில் ஒன்றும் மிஞ்சாது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.



பருவமழை பொய்த்துப் போகும்போது ஏற்படுகின்ற வறட்சியும், கிடைக்கின்ற குறைந்த மகசூலும், அந்த விளைபொருட்களை அடி மாட்டுக்கு வாங்கி அவர்களுக்கு நஷ்டத்தை உண்டாக்குகின்ற  இடைத்தரகர்களுமே, வேளாண் பெருமக்களை மேலே முன்னேற விடாமல் கீழ் மட்டத்தில் வைத்திருக்கின்றன என்பது நிதர்சனம்.



கடன் வாங்கி வேளாண்மை செய்து ஏற்படுகின்ற நஷ்டத்தை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்ற வேளாண் பெருமக்கள் பற்றி, நாளும் ஊடகங்கள் நமக்கு அறிவிக்கின்ற செய்திகள்.



துரதிருஷ்டவசமாக, தொலை நோக்குப் பார்வை இல்லாத நமது மய்ய மற்றும் மாநில அரசுகள் இவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம்.



என்றைக்கு அரசு வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தடையில்லா பயிர் பாசனத்திற்கு வழி வகை செய்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை (Inputs) உரிய நேரத்தில் கிடைக்க வழி செய்து, விலை பொருட்களை இடைத்தரகர் இல்லாமல், நல்ல விலைக்கு விற்க வழி செய்கிறதோ அன்றுதான் வேளாண் பெருமக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். நமது நாட்டின் பொருளாதாரமும் உயரும்.



நினைத்துப் பாருங்கள் உழவர்கள் இந்த இடர்ப்பாடுகளுடன் தொழிலை மேற்கொள்ளவேண்டுமா என நினைத்து விட்டுவிட்டால் என்ன ஆகும்? இதைத்தான் அய்யன் திருவள்ளுவர் சொல்கிறார். 


“உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.”
 

என்று. அதாவது உழவர்கள் தொழில் செய்யாமல் இருந்தால் பற்றற்ற துறவிகளுக்கும் வாழ்வு இல்லையாம். துறவிகளுக்கே இந்த கதி என்றால் நமது நிலை என்ன?



‘சேற்றில் அவர்கள் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும்.’ என்பதை இனியாவது உணரவேண்டியவர்கள் உணர்வார்களா?

                        ------------------------


இனி வேளாண்மை பற்றிய தகவல்கள் தரும் வலைப்பதிவுகளைப் பார்த்துவிட்டு, பின் என்னை வியக்கவைத்த பதிவர்களின் வலைப்பதிவுகளைப் பார்ப்போம். 


1.இயற்கை வேளாண்மையைப் பற்றி Natural Farming என்ற வலைப்பதிவில் எழுதும் சிவம் ஜோதி அவர்கள்  மென்பொருள் துறையில் ஒரு தொழில் நுட்ப வல்லுனர். இந்த ஆண்டு தான் எழுத ஆரம்பித்திருக்கிறார் என்றாலும் நிறைய தகவல்களைத் தர முயற்சித்திருக்கிறார். இயற்கை வேளாண்மையை அறிய விரும்புவோர் பார்க்கவேண்டிய வலைத்தளம் இது.


2. பசுமைஇந்தியா  என்ற வலைப்பதிவில் வேளாண்மை பற்றியும் கால் நடைகள் பற்றியும் அதற்காகும்  செலவுகள் பற்றியும் விளக்கமாகத்தரும் இவர் மதுரையில் வேளானமைத் தொழில் செய்து வருகிறார். ஏனோ இவர் தன் பெயரை வெளியிடவில்லை. வேளாண் பெருமக்களுக்கு உபயோகமான வலைப்பதிவு இது.


3.’நீலகிரி உயிர்க்கோளம்’ என்ற வலைப்பதிவில் பதிவிடும் இயற்கை உயிரியல் வல்லுனர் B.இரத்தினசபாபதி அவர்கள் நமக்குத்தெரியாத அநேக தாவரங்களை இவரது வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இயற்கை ஆர்வலர்கள் விரும்பும் வலைப்பதிவு இது.


4. மண், மரம், மழை, மனிதன் என்ற  இன்னொரு வலைப்பதிவு வேளாண் பெருமக்களுக்கு மட்டுமல்ல வீட்டுத் தோட்டம் போட விரும்புவோருக்கும் பயனுள்ள பதிவு.கோவையிலிருந்து வின்சென்ட் அவர்கள் இந்த வலைப்பதிவோடு ‘இது நம் பூமி’  என்ற இன்னொரு வலைப்பதிவிலும் எழுதி வருகிறார் ஆனால் ஏனோ 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதில் புதிதாய் எதுவும் பதிவிடவில்லை.




நான் இங்கே குறிப்பிடும் பதிவர்களின் பதிவுகள் என்னை வியக்கவைத்ததால் அவர்களின் பதிவுகளில் பிடித்தவைகளை கீழே  தந்துள்ளேன்.பிரபலமான இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்பது என் கருத்து. 


5.‘புலவர் கவிதைகள்’ என்ற பெயர் தாங்கிய வலைப்பதிவில் தினம் ஒரு மரபுக்கவிதை எழுதி நம்மை திகைக்க வைத்துக்கொண்டிருக்கும் புலவர் சா.இராமாநுசம் ஐயா அவர்கள், மழையே மழையே நீ வாரோயோ என ‘வான் சிறப்பு வேண்டுதலும்’ என்று கவிதை மூலம் வருந்தி அழைத்த அன்றே மழை பொழிந்தது. புலவர்கள் வாக்கு பொய்க்காது என்பது உண்மைதான்.


6. நினைக்கின்ற அத்தனையும் சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம்தான் சொல்ல முடிகிறது என்ற ஆதங்கத்தொடு ‘நான் பேச நினைப்பதெல்லாம்’  என்ற வலைப்பதிவில் நிறைய எழுதுபவரும், சகலகலா வல்லவருமான  ‘அடையாறு அஜீத்’ என அன்போடு அழைக்கப்படும், ‘சென்னைப்பித்தன் அவர்கள் நாம் காணும் செய்திகளை கதைகளாக மாற்றும் வல்லமை பெற்றவர். ‘அண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை’ என்று வித்தியாசமான தலைப்புக்களில் பதிவெழுதி நம்மை ஏமாற்றுபவர்.ஓய்வு என்ற பெயரில் தற்காலிக வனவாசம் கொண்திருந்த இவர், புலி பதுங்குவது பாய்வதற்கே என்பது போல் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 


7.தினம் தினம் புதிய தலைப்புகளில் வெவ்வேறு விஷயத்தை ‘சாமியின் மன அலைகள்’ என்ற பெயர் கொண்ட வலைப்பதிவில் எழுதி நம்மை திக்குமுக்காட வைக்கும் முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் ஒரு வேளாண் விஞ்ஞானி. இவர் எழுத்தில் குறும்பும் நகைச்சுவையும் இழைந்தோடினாலும் அதனுள்ளே கருத்தும் ஒளிந்திருக்கும். இவரது பதிவுகளில் பல புதிய தகவல்களையும் அறிவுரைகளையும் எச்சரிக்கையையும் காணலாம்.  ‘புரதச்சத்தின் அவசியமும் மருந்துக்கம்பெனிகளின் ஏமாற்று வித்தைகளும்’ என்ற பதிவு அப்படிப்பட்ட ஒன்று.



8.கதை,கவிதை,கட்டுரை,கல்வி, அரசியல் நாட்டு நடப்பு,சினிமா என அனைத்தையும் ‘தூரிகையின் தூறல்’ என்ற பெயருள்ள வலைப்பதிவில் எழுதி  பதிவுலகை கலக்கி வரும் பன்முகக் கலைஞர், கவிஞர் மதுமதி அவர்கள்.எனக்குத் தெரிந்து இத்தனைத் தலைப்புகளில் பதிவிடுவது இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும். தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருப்போருக்கு, இவர் பாட குறிப்புகளையும் மாதிரி வினாக்களையும் பதிவிட்டு சத்தமில்லாமல் ஒரு சமூகப் பணியை செய்து வருகிறார்.  ‘TNPSC தேர்வுக்கு படிக்கும் தோழர்களே .. நீங்கள் எந்த வகை’

என்ற பதிவில் ‘வெற்றி நிச்சயம்-3’ என்ற காணொளியையும் இணைத்து வெளியிட்டுள்ள பதிவே அதற்கு சான்று.



9. ‘தென்றல்’ என்ற வலைப்பதிவில் தினம் ஒரு கவிதை பதிவிடும் சசிகலா அவர்களை ஆசுகவி எனலாம். இவரது கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகளாய் இருப்பதால் தென்றலை வீசினாலும், சமூக அவலங்களைப் பற்றி இவர் பாடும் போது அந்த கவிதைகள் தீயாகவும் சுடும். உழவன் படும் பாட்டை விளக்கும் ‘தூரத்து பசுமை’ என்ற இவரது கவிதையும், தாவரங்களின் வலியைச் சொல்லும் ‘வேரின் வலிகள்’ என்ற கவிதையுமே இதற்கு சான்று.



10. இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு? என்று சொல்லும் ‘வீடு திரும்பல்’ வலைப்பதிவின்  மோகன் குமார்  அவர்களுக்கு சிற்றிடமென்ன பெரிய இடமே உண்டு. 2012 ஆம் ஆண்டில் மட்டும் 365 நாட்களில் 348 பதிவுகளிட்டு, பதிவுலகில் சாதனை படைத்திருக்கிறார். அதனாலேயே தமிழ்மண வரிசையில் முதல் இடத்தில் இன்னும் நிற்கிறார். பயணக்கட்டுரை, பேட்டிகள், திரை விமரிசனங்கள் என  இவர் எழுதாத விஷயங்களே இல்லை. எப்படி இவருக்கு நேரம் கிடைக்கிறது என்பதுதான் ஆச்சரியம். ‘சிம்லா-குளூ-மணாலி  பயணக் கட்டுரையில்’ படங்களோடும் காணொளியோடும் இவர் தரும் விவரங்களைப் படிக்கும்போது நாமே அவரோடு பயணிப்பது போன்ற பிரமை ஏற்படுவது நிஜம்.



11. பதிவுலகத்தில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. திண்டுக்கல் என்றால் பூட்டு என்பார்கள். ஆனால் நமக்கோ திண்டுக்கல் என்றால் தனபாலன்  அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். எப்படி இவரால் எல்லா பதிவுகளுக்கும் செல்ல நேரம் கிடைக்கிறது என யோசிப்பதுண்டு. ‘திண்டுக்கல் தனபாலன்’என்ற பெயரிலேயே வலைப்பதிவு எழுதிவரும் இவர் தற்காலிக இடமாற்றம் காரணமாக பதிவிடுவதை சில நாட்கள் நிறுத்தியிருந்து, திரும்பவும் பதிவுலகை கலக்க வந்திருக்கிறார்.. திரைப்பட பாடல்களோடு அதற்குத் தகுந்த எதிர்பாட்டும் கலந்து DDMIX என்று தருவது  இவரது Speciality. அட...அவ்வளவுதானா ...! ISO என்ற தலைப்பில் ஐந்து பகுதிகளாக வெளியிட்டுள்ள பதிவுகள் ISO பற்றி அறியாதவர்களுக்கு ஒரு அரிய தகவல் தொகுப்பு.



இனி நாளை மற்ற பதிவர்கள் பற்றி பார்ப்போம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது