07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label எம்.ஏ.சுசீலா. Show all posts
Showing posts with label எம்.ஏ.சுசீலா. Show all posts

Sunday, December 9, 2012

பதிவுலகம்-சில அனுபவக்குறிப்புகள்

வலைச்சரத்திலிருந்து நான் விடைபெறும் முன்,உங்களிடம் சில வார்த்தைகள்...

நான்காண்டுக் காலமாகப் பதிவுலகில் நான் பெற்ற அனுபவச்சேமிப்புக்களின் குறிப்புக்களே இவை. இதன் வழி,எவருக்கும் ஆலோசனை வழங்குவதோ,அறிவுரை அளிப்பதோ என் நோக்கமில்லை;வலையுலகில் சற்று அதிகமான பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் புழங்கும் இந்தத் தளத்தில் இச்செய்திகளை வைத்தால்  அவை பலரிடம் சென்று சேரக்கூடும் என்னும் நோக்கமே இவற்றை இங்கே பதிவு செய்வதற்கான மனத் தூண்டுதலை எனக்கு அளித்திருக்கிறது.

பதிவுலகம் ஒரு பரந்த வானம்.அங்கே சிறகு பரப்பித் திரியும் விருப்பம், இணையமும்,தமிழும் வசப்பட்டு...ரசனையும் எழுத்தார்வமும் கொண்ட பலருக்கும் எழுவது இயற்கைதான். பத்திரிகைகளின் மாற்று வடிவங்களைப்போலவே பெரும்பாலான வலைப்பூக்களும்,தளங்களும் இருந்தாலும்..பத்திரிகைத் துறையில் உள்ள தணிக்கை(censor) மற்றும் செம்மையாக்கம்(editing)செய்ய இங்கே எவருமில்லை.பதிவுலகுக்கு வாய்த்த மிகப்பெரிய வரம் அது; அதைச் சாபமாக்கி விடாமல் இருப்பதும் நம்மைச் சார்ந்ததே.
‘’வரங்களே சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே தவங்கள் எதற்காக’’என்கிறது அப்துல் ரகுமானின் கவிதை ஒன்று.

வானமே எல்லையெனக் கொண்டு...நாம் பார்த்ததை,நாம் உணர்ந்ததை,நாம் ஆழ்ந்து தோய்ந்ததை,நம்மைப்பாதிப்புக்குள்ளாக்கியதை என எதை வேண்டுமானாலும் எழுதும் விடுதலைவெளி நமக்கு வாய்த்திருக்கிறது.ஆனால்...அந்த சுதந்திரத்தின் மீது நமக்கும் சற்று சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போகும்போது பதிவுகளின் முகங்கள் கோரமாக,அருவருப்பாக மாறிப்போய்ப் பிறர் மீதான காழ்ப்புணர்வை,தூஷணைகளை வாரித் தூற்றும் யுத்த களமாகப் பதிவுலகை ஆக்கி விடுகின்றன.அவற்றால்,எழுதுவோருக்கும் பெருமையில்லை;வாசகருக்கும் பயனில்லை.வலை எழுத்தென்பது வம்பு மடமாக மாறும் அந்தத் தருணம் தவிர்க்கப்படுவதே ஆரோக்கியமான பதிவுகளுக்கான வாயில்களைத் திறந்து வைக்கும்.

அடுத்து...பின்னூட்டங்கள் பற்றி.
பதிவுலகில் தொடர்ந்து செயல்பட ஊக்கம் நல்கி உற்சாகமளிப்பவை அவற்றைப்படிக்கும் வாசகர்கள் அவ்வப்போது இடும் கருத்துரைகளே. எழுதிய படைப்புக்கு உடனுக்குடன் கிடைக்கும் எதிர்வினை என்பது இந்த இணைய ஊடகத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடியது; அச்சு ஊடகத்தில் காணக்கிடைக்காதது. அதுவும் கூட வலையெழுத்தின் வரங்களில் ஒன்றுதான். பிறரைப்பாராட்டியோ புகழ்ந்தோ ஒரு சொல் கூடக்கூற மனம் வராதவர்களே மலிந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அபாரம்,அற்புதம்,வாழ்த்துக்கள் போன்ற ஒற்றைச் சொற்களும் கூடக்  கிடைத்தற்கரியவைதான்! மதிப்புக்கு உரியவைதான்! எனினும் நேரம் சற்றுக்கூடுதலாகக் கிடைக்கும்போது பதிவிலுள்ள ஏதேனும் ஒரு அம்சத்தைக் குறிப்பாக முன்னிறுத்தி அதைப்பாராட்டுவதாகவோ,விமரிசிப்பதாகவோ,அதன் மீதான மாற்றுக் கருத்தையோ கேள்வியையோ எழுப்புவதாகவோ பின்னூட்டங்கள் அமையுமானால் தங்கள் பதிவுகளை மெய்யாகவே வாசித்து விட்டுத்தான் கருத்திட்டிருக்கிறார்களென்ற எண்ணம் பதிவர்களுக்கும் பிறக்கும். எழுதப்பட்ட பொருளின் மீதான விவாதம் தொடர்ந்து மேலெடுத்துச் செல்லப்படவும் அது உதவும்.

கையிலிருக்கும் ரிமோட்டை இயக்கித் தொலைக்காட்சிப் பெட்டியின் சேனல்களை ஓயாமல் மாற்றி மாற்றிப் பார்ப்பதைப்போல இணையத்தில் உலவும்போதும் பலப்பல வலைகளுக்குள் மாறி மாறிக் கூடு பாய்ந்து கொண்டிருக்கும் வேக சஞ்சாரிகளின் கவனம் பெறுபவை பெரும்பாலும் சிறிய பதிவுகளாகவே இருந்து விடுகின்றன. உழைப்பைக் கொட்டி ஆழ்ந்து நுணுகி எழுதப்படும் சற்று நீண்ட பதிவுகளைக் கண்டால்,பாம்பைக்கண்டதைப்போல தூர விலகிப்போய் விடுபவர்களே பலர். இன்றைய வாழ்வுப்போக்கின் அவசர கதியில் நேரம் கிடைக்காமலிருப்பதும் அதற்கு ஒரு காரணம் என்றாலும் அதன் காரணமாகவே சில நல்ல பதிவுகளையும் நாம் தவற விட நேர்கிறது.அது பற்றியே,கடந்த ஆறு நாட்களாகக் கவனம் பெறக்கூடியவையும்,கவனம் பெறாமல் நழுவிப்போனவையுமான அத்தகைய பல பதிவுகளை நான் பெரிதும் முன்னிலைப்படுத்த விரும்பினேன்.

இறுதியாக நான் விரும்பி வாசிக்கும் - அடிக்கடி செல்லும் பிற தளங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டு என் பணியை நிறைவு செய்கிறேன்.....
அரசியல்,சமூகம் சார்ந்த கட்டுரைகளைத் தருக்க பூர்வமான வாதங்களோடும்,துணிவோடும்,நடுநிலையோடும் அளிக்கும்ஞாநியின் ’ஓ’ பக்கங்கள்,
தீம்தரிகிட’இதழின் ஆசிரியரும்,பரீக்‌ஷா நாடக அமைப்பை நடத்தி வருபவருமான இதழியலாளர் ஞாநி

பெண்ணியக் கருத்துக்களை மையப்படுத்தி அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரலாகப் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப்பெண்கள் நடத்தி வரும்ஊடறு,


நாட்குறிப்புக்களைக் கூடக் கதை போன்ற சுவாரசியத்துடன் சொல்லும் கனடா எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் தளம்,

இணையம் கற்போம் என்ற நூலை எழுதியவரும் கல்வித் துறையில் இருப்போரை இணைய வெளிக்குள் ஈர்ப்பதில் வல்லவருமான 

பேராசிரியர் மு.இளங்கோவனின் தளம்,

ஜோதிஜியின் தேவியர் இல்லம்,

நல்ல பதிவுகள் பலவற்றை அளிக்கும் இப்படிக்கு இளங்கோ,

சமையல்குறிப்புக்களைக் கூட இலக்கிய ரசனையோடும்,நகைச்சுவை உணர்வோடும் இணைத்து வழங்கும் தாளிக்கும் ஓசை( இதில் இப்போது பதிவுகள் ஏன் வருவதில்லை தெரியவில்லை;ஆனாலும் இதிலுள்ள பதிவுகளே அதிகம்தான்),

சமூகஅக்கறை சார்ந்த கட்டுரைகளை எழுதும் எட்வினின்  
நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை,

எட்வின்
இணையத்திலும் வலைப்பதிவு எழுதும்போதும் கையாளக்கூடிய உத்திகளை மிக இலகுவாக முன் வைத்து அவற்றை நாம் கற்றுக்கொள்ள உதவும் வந்தேமாதரம் 

சமூகச்சிந்தனை கொண்ட எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி கவிஞர் திலகபாமாவின் சூரியாள்,

சிங்கப்பூர் பெண் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனின் கமலகானம்,

மதுரையைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் உஷாதீபனின் வலைப்பூ

ஆனந்தவிகடனில் பணியாற்றுபவரும்,வெட்டுப்புலி நாவலாசிரியருமான தமிழ்மகனின் தளம்,

தொடர்ந்து பல ஆன்மீகப் பயணக்கட்டுரைகளைப்பதிக்கும்http://natarajar.blogspot.in,
மற்றும்,
கோமதி அரசின் திருமதி பக்கங்கள்

பி.கு;
எல்லாக் கட்டுரைகளுக்கும் சில வரையறைகள் உண்டென்பதால் நான் செல்லும் எல்லா  வலைத் தளங்களையும் என்னால் குறிப்பிட இயலவில்லை என்பது சிறிது மனக்குறைதான்!

இறுதியாக.....
இந்த மாய உலகின் சஞ்சாரத்தில் நான் சந்தித்த  சில மனிதர்களையும்,அவர்களின் படைப்புக்கள்,மற்றும் அனுபவங்களையும் பலரோடும் பகிர்ந்து கொள்ள வலைச்சரத்தை அரங்கமாக்கி எனக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்த நண்பர் திரு சீனாவுக்கும்,வருகை புரிந்து ஊக்க மொழிகளால் நாளும் உற்சாகமளித்த உள்ளங்களுக்கும் நன்றி....நன்றி...




மேலும் வாசிக்க...

Saturday, December 8, 2012

இலக்குகளை நோக்கி....


அச்சு ஊடகத்தை விடவும் இணைய எழுத்தே பரவலான வாசிப்புக்குரியதாக ஆகி வரும் காலகட்டம் இது. கண் இமைக்கும் நேரத்துக்குள் ஒரு வலைப்பூவை உருவாக்கி வடிவமைத்து விட முடிகிற தொழில் நுட்பம் நமக்கு வசப்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் வலைப்பூக்களும் வலைத் தளங்களும் புதிது புதிதாகப் பெருகிக் கொண்டே செல்கின்றன.

எழுதும் ஆர்வம் கொண்டோர்க்குக் கட்டற்ற சுதந்திரத்தை அளிப்பவை வலைப்பூக்கள். அச்சு இதழ்களுக்கு அனுப்பி அவை பிரசுரமாகுமா ஆகாதா எனக் காத்திருக்க அவசியமில்லாதபடி உடனுக்குடன் வெளியிடும் வசதி...,எழுதியதற்கான எதிர்வினையை நொடி நேரத்தில் பெற்று நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும்போது கிடைக்கும் பரவசம் எனப் பலவற்றையும் அளிப்பவை வலை எழுத்துக்கள்.

அச்சிடப்படும் இதழ்களைப்போலச் சிறுகதை,கவிதை,கட்டுரை,திரைவிமரிசனம்,பயணம் எனப் பலவகைச் செய்திகளை உள்ளடக்கியதாகவே வலைப்பூக்கள் பலவும் வடிவமைக்கப்படுகின்றன.எல்லா வகையான எழுத்துக்களையும் எழுதிப்பார்க்கும் பயிற்சிக்களங்களாகவே இவற்றைக் கொள்ளலாம்.

கால் போன போக்கிலெல்லாம் அலைந்து பார்ப்பது ஒரு வகையான சுகம் என்றால்..குறிப்பிட்ட ஒரு இலக்கை மட்டும் வைத்துக் கொண்டு அதை நோக்கியே செல்வதும் கூட இன்பம்தான்...
ஒற்றை இலக்கு நோக்கிய அத்தகைய சில தளங்கள் இன்றைய பார்வைக்கு....

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உரிய மாமனிதர்களில் ஒருவர் மகாத்மா காந்தி.

அவரைப்பற்றிய சிந்தனைகள்,கண்ணோட்டங்கள்,பார்வைகள் ஆகியவற்றை இன்றைய தலைமுறைக்கு உரித்தான நோக்கோடு மறுவாசிப்புக்கு உட்படுத்தி அவர்களிடம் கொண்டு சேர்க்கும் தளம் காந்தி இன்றுஅன்னா ஹசாரே தொடங்கிய அறப்போராட்டத்தின்போது அவருக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் தளம்,பின்பு காந்தியை இன்னும் கூடப்  புரிந்து கொள்ளவும் அவர் மீது வைக்கப்படும் அவதூறுகளை எதிர்கொண்டு பதில் உரைக்கவும் உகந்த தளமாக மாற்றம் பெற்றிருக்கிறது.

காரைக்குடியில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவர் சுனில்கிருஷ்ணன் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காந்தி பற்றிய பழைய புகைப்படங்கள், செய்திகள்,கட்டுரைகள்,ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் அவரே மேற்கொண்டிருக்கிறார். இந்தப்பணியைத் தொடங்கிய பிறகு  எதுவுமே தப்பில்ல என்னும் தனது தனித் தளத்தை விடவும்(அதுவும் தரமான ஒரு தளம்தான்-சான்றுக்கு அதிலுள்ள மருத்துவ அறம் - விவாதம்கட்டுரையைப்படித்துப் பார்க்கலாம்.)காந்தியின் மீதே அவரது ஆர்வம் மையம் கொள்ளத் தொடங்கி விட்டிருக்கிறது.என் மதிப்பிற்குரிய எழுத்தாளர்களில் ஒருவரான  திரு பாவண்ணன், காந்தி பற்றி எழுதியுள்ள உண்மையின் உருவம்என்னும் கட்டுரையை காந்தி இன்று தளத்திலிருந்து அறிமுகம் செய்கிறேன்.


சாகித்திய அகாதமி பரிசு பெற்ற மதுரை திரு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல், வாழ்த்துக்களையும்,வசைகளையும் ஒருசேரப் பெற்ற ஒரு பெரும் படைப்பு. அந்நாவல் குறித்த தகவல் சேமிப்புக்காகவே ஒரு தனித் தளம் தொடங்கப்பட்டிருக்கிறது.  



காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் என்னும் எஸ்.ராவின் கட்டுரையையும்,அதற்கு நேர் எதிரான  பார்வையோடு எழுதப்பட்ட மேலாண்மை பொன்னுசாமியின் காவல்கோட்டம் : மீள் விசாரணை - ஆயிரம் பக்க அதிசயம் என்னும் பாராட்டையும் ஒரே இடத்தில் ஒருங்கே பார்க்க முடிவது இந்தத் தளத்தின் சிறப்பு.

பலவகையானதத்துவத்தேடல்கள்நிறைந்ததும்,ஆழ்ந்தவாசிப்புக்கு உரியதுமான ஜெயமோகனின் நாவல்,விஷ்ணுபுரம்.அதுகுறித்த புரிதலுக்காகவும்,அதுசார்ந்தவாசிப்புக்குமாகவே தொடங்கப்பட்டிருக்கும் தளம் விஷ்ணுபுரம்.காம்.

விஷ்ணுபுரம் நாவல் குறித்த வாசிப்பனுபவங்கள்,விவாதங்கள்,வினாக்கள்,திறனாய்வுகள் எனப் பலவற்றையும் தொகுத்து வழங்கும் இத் தளத்தில் பதிவுகள்.காமில் வெளிவந்த வ.ந.கிரிதரனின் திறனாய்வுக்கட்டுரையும்  உண்டு; முற்றிலும் நேர் எதிரான பார்வையோடு அதன் மீதான விமரிசனங்களை 
மாற்றுத் தளத்தில் கூறும் பொ.வேல்சாமியின் நிறப்பிரிகைக் கட்டுரையும் இங்கே உண்டு.

போற்றுதல்,தூற்றுதல் இரண்டையும் சமநிலையில் நோக்கும் படைப்பாளிகளைப் பாராட்டுவதோடு - இந்தத் தளங்களில் உள்ள அறிமுகக்கட்டுரைகளின் வழி அவர்களின் நூல்களுக்குள்ளும் நுழைய வலை வாசகர்களை வேண்டுகிறேன்.

ஒரு படைப்பாளியாக என்னை ஈர்ப்பவை மேற்சொன்ன தளங்கள் என்றால் ஒரு ஆசிரியராக,கல்வியாளராக என் கவனிப்புக்கு உள்ளான தளம் கல்விக்கான சிறப்பு வலையாகவே மதுரை சரவணன் நடத்தி வரும் அவரது வலைத்தளம்.கவிதை,கட்டுரை,சிறுகதை எனப் பல பதிவுகள் இந்தத் தளத்தில் இருந்தபோதும் அவற்றுள் பெரும்பாலானவை சிறுவர்களை,அவர்களின் பள்ளி வாழ்வை,அங்கே அவர்கள் பெறும் கல்வியை அவற்றின் மீதான அவரது அக்கறையை நோக்கிக் குவிபவை மட்டுமே. வளரும் தலைமுறை மீது சமூகக்கரிசனங்கள் கொண்ட பதிவுகளை வெளியிடும் சரவணனைப்பாராட்டுவதோடு அவரது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு,மாணவனை தண்டிக்கக் கோரும் அதிகாரம் –ஆசிரியரின் இயலாமையே! ஆகிய இரு கட்டுரைகளும் பெற்றோர்களான நம் அனைவருக்கும் மிகவும் தேவை என்பதால் அவற்றை வலைச்சர வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

இன்றைய உலகமயச் சூழலில்- பல நாடுகளிலும் சிதறிக்கிடக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு நல்ல தமிழ்ப்படைப்புக்களின் மீதான ஆர்வமும் தேடலும் அதிகரித்து வருவதால் அவற்றை உரியபடி  கொண்டு போய்ச் சேர்க்கும் வகையில் மதுரை பாத்திமாக் கல்லூரியின் [நான் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்லூரி] ஆங்கிலம் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் ஓர் ஆய்வுத் திட்டத்தைத் http://www.classicsintamil.com/ )தொடங்கிச் செயல்படுத்தி வருகின்றனர்.நல்ல தமிழ்ப்படைப்புக்களைத் தேர்வு செய்து வலை ஏற்றுவது, அவற்றை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது, இந்திய மொழியின் தரமான படைப்புக்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து அளிப்பது ,இன்னும் மொழியாக்கம் செய்யப்படாமல் இருக்கும் தரமான படைப்புக்களைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றோடு அயல் மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் வாழும் -தமிழ்  எழுத்தை வாசிக்க அறியாத அடுத்த தலைமுறையினரின் வசதிக்காகக் குறிப்பிட்ட படைப்புக்களை ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் ஒலிபெயர்ப்பாகத்-transliteration-தருவது என அனைத்தும் அடங்கியது அந்த ஆய்வுத் திட்டம்.சங்கப்பாடல்களில் தொடங்கி வண்ணதாசன்[கல்யாண்ஜி] போன்றோரின் கவிதைகள் வரை பலரின் ஆக்கங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் ஒலிபெயர்ப்பாகவும் வாசிக்கக் கிடைக்கும் இத் தளத்தில் தரவிறக்கம் [DOWNLOAD] செய்து படித்தால் விரியும் மூன்று பத்திகளில் மூலம்,மொழிபெயர்ப்பு,ஒலிபெயர்ப்பு என ஒரு படைப்பு சார்ந்த அனைத்தையும் ஒருசேரப்பார்க்க முடியும்.படித்து ஒப்புநோக்க முடியும்.
இது கல்வித் துறை சார்ந்து எடுக்கப்படும் ஒரு சிறிய முயற்சி!

மரணம், மனிதம், ஆன்மா ஆகியவை பற்றிய ஆழ்ந்த தத்துவச் சிந்தனைகளைக் கொண்ட தொன்மையான வேதநூலாகிய கடோபனிஷதத்தின்  கருத்துக்களை எல்லோருக்கும் புரியும் எளிய தமிழ் வெண்பாக்களில் அளிக்க முன் வருவதே ஒரு பெரும் பணி. அதற்கு அடுத்த கட்டமாக- அதன் பொருட்டாகவே நசிகேத வெண்பா என்னும் தனித் தளம் அமைத்து அவ்வெண்பாக்களைப் பதிவு செய்வதென்பது அதை விடவும் மிகத் துணிவான பெருமுயற்சி. அதனை முழுமையாக நிறைவு செய்து இந்தியத் தத்துவ நூல் ஒன்றைப்பொதுத் தளத்தில் கொண்டு சென்றிருக்கும் மூன்றாம் சுழி  திரு அப்பாதுரை அவர்களின் பணியை எத்தனை போற்றினாலும் தகும். அந்த வெண்பாக்கள் வலையில் வெளிவந்து கொண்டிருந்தபோது நூல்வடிவில் அவை தொகுக்கப்பட்டே ஆக வேண்டும் எனத் தனிப்பட்ட முறையில் நான் அவருக்கு விடுத்த கோரிக்கையை இப்போது வலைச்சரத்தின் வழியாக மீண்டும் வைக்கிறேன்.


மேலும் வாசிக்க...

Friday, December 7, 2012

தில்லியிலிருந்து....



மதுரையிலிருந்து தில்லி வந்தபோது ஏதோ புலம் பெயர்ந்து வந்தது போன்ற தவிப்பெனக்கு. வெயிலைக்கூடச் சமாளித்து விடலாம்.காரணம் மதுரை மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் கூட அசாதாரணமாகக் கடந்து போகிறவர்கள். ஆனால்..நடுக்கும் குளிர்....! இதோ இந்தப்பதிவையும் கூட இப்போது உறைய வைக்கும் குளிருக்குள் இருந்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால்....இங்குள்ள மக்களோ குளிர்காலத்தைக் கொண்டாடுகிறார்கள்.வியாபாரிகளுக்கு விதம் விதமான கம்பளி ஆடைகளின் விற்பனை சூடு பிடிக்கிறது.வெயிலில் சருகாய் வற்றி உலர்ந்த காய் பழங்களையே பார்த்துப்பழகிய மக்கள் செழிப்பான புதுமையோடு வீற்றிருக்கும் காய் கனிகளைக் கண்டும் உண்டும் மகிழ்கிறார்கள்.

சிற்றுண்டிக் கடைகளில் சுடச்சுடத் தயாரிக்கப்படும் பல வகையான'சாட்'வகைகளும் நொடிநேரத்துக்குள் மாயமாகிப்போகின்றன.சிறுகுழந்தைகள்‍‍‍--- --, ஏன் - பெரியவர்களும் கூடத்தான்... ஐஸ்கிரீமில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் விதம் விதமாய் ருசிக்கிறார்கள். தயிரைக் கோப்பை கோப்பையாய் வாங்கிக் குடிக்கிறார்கள்.குளிருக்கு அவையெல்லாம் சூடேற்றக்கூடியவை என்கிறார்கள்....!

இங்கே பெரும்பாலும் குளிர்காலத் திருமணங்கள்தான்..!அதுவும் நடுங்க வைக்கும் நள்ளிரவுப்பொழுதுகளில் ஆடல்பாடல்களுடன்....

வேனல்காலத்து நோய்கள் போல - வெயிலுக்கும்,மழைக்கும் இடைப்பட்ட காலத்து வியாதிகள் போலக் கடும் குளிர்காலத்தில் நோய்கள் அதிகமாகத் தாக்குவதில்லை என்பது வரவேற்கத்தக்க அம்சம்தான்....! ஆனாலும் கவச உடை அணிவது போல...முகமூடிக்கொள்ளையர்களைப்போல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்ற ஆடைகளால் நாம் நம்மைப் பாதுகாப்புச் செய்து கொண்டால் மட்டுமே அது பொருந்தும்.

அகன்ற வீதிகளும் ஆடம்பர மாளிகைகளும் மட்டுமல்ல தில்லியின் அடையாளங்கள். உயிரையே உருக்குலைத்துப் போடும் பனிப்பொழிவில் தெருவோரங்களில்..பாலத்தடிகளில் ’’கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவிக்’’குளிரிலிருந்து தங்களைக்காத்துக்கொள்ளப்போராடும் சாமானியர்களின் கூட்டமும்,சிக்னல்களில் ஊதுபத்தி உறைகளையும்,செய்தித்தாள்களையும் கையில் பிடித்தபடி அவற்றை வாங்கிக்கொள்ள இறைஞ்சும் சிறுவர் பட்டாளமும் கூட தில்லியின் ’மறு’வான அடையாளங்கள்தான்.

தில்லியின் குளிர் ஒரு புறம் இருக்க, இங்குள்ள நல்லவற்றையும் சொல்லியே ஆக வேண்டும்.ஒன்று...மூத்த குடிமக்களுக்கு சிறுகுழந்தைகள் முதல் சகல வயதினரும் செலுத்தும் இயல்பான மரியாதை,மதிப்பு...!'பெருசு என்ன சொல்லுது..'என்ற குரலையே கேட்டுப்பழகிய நம் செவிகளில் 'மாதாஜி'என்ற விளி காதில் தேன் பாய்ச்சும். நெடுந்தூரப்பயணங்களையும் இலகுவாக்கி விரைவாக்கும் மெட்ரோ ரயில் தடங்கள் தில்லியின் தொப்பியில்  சூட்டப்படும் இறகுகள்.இங்குள்ள ஆட்டோக்கள் தமிழகத்தில் இருப்பதைப் போன்ற சுத்தத்துடன் பராமரிக்கப்படாவிட்டாலும் பெரும்பாலான ஆட்டோவாலாக்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள்.இரவு பத்து மணிக்கு மேலும் கூட அவர்களை நம்பித் தனியே வர முடியும். ஆட்டோக்களின் கட்டணமும் கூட மிக மிக நியாயமானதுதான்...

தமிழ‌கத்தின் பலதுறைப்பிரபலங்களையும் அவர்களின் தில்லி வருகையின்போது இங்கே தமிழ்ச்சங்கத்தில் மிகச்சுலபமாகப் பார்த்து விடவும், அணுகி விடவும் முடியும் என்பது இங்கு வாழும் தமிழர்களுக்கு வாய்த்த ஒரு வரம்.

தமிழ் நாட்டை விட்டு விலகியிருந்தாலும் தமிழ் மீதான காதலை விட முடியாத தமிழர்கள் இங்கே ஏராளம். இணைய வழி தமிழோடு ஊடாடும் 
தில்லியின் தமிழ்ப்பதிவு வட்டத்திலிருந்து சில தளங்களும் பதிவுகளும் இன்றைய அறிமுகமாக....

தில்லியில் எனக்கு முதலில் அறிமுகமான இலக்கிய‌ நண்பர் வடக்கு வாசல் இதழ் மற்றும் தளத்தின் ஆசிரியர் யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்கள்.
சனிமூலை என்னும் தனது வலைப்பக்கத்தில்

ராகவன் தம்பி என்னும் புனைபெயரில் சமூகம் சார்ந்த கட்டுரைகள்,சிறுகதைகள்,மொழிபெயர்ப்புக்கள்,தனது நாடக வாழ்க்கை அனுபவங்கள் எனப்பலவற்றையும் எழுதி வரும் இவரது தனிச் சிறப்பு அங்கதம்.ஒரு சிலருக்கே எளிதாகக் கை வரக்கூடிய மெல்லிதான‍கிண்டலும் நையாண்டியும் இவரிடம் நயம்படக்கூடி வந்திருப்பதை இவரது சனிமூலைக்கட்டுரைகள்  வழியாகப்புரிந்து கொள்ள முடியும். தற்போது திண்ணை இணைய இதழில் இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் பலவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இஸ்மத் சுக்தாயின் மச்சம் என்னும் சிறுகதையை மிகச்சரளமான நடையில் உருதுவிலிருந்து நேரடியாக மொழியாக்கி வழங்கியிருக்கிறார் இவர்.

தில்லி வலைப்பதிவர்களைக் குழுவாக ஒருங்கிணைக்கும் பணியைத் திறம்பட ஆற்றி வரும் நண்பர் வெங்கட் நாகராஜின் தனித் தன்மை சிறப்பாக மிளிர்வது அவரது பயணப்பதிவுகளிலும்,அவர் இடும் அற்புதமான புகைப்படங்களிலும்.காசி‍ ‍ அலகாபாத் பயணம் குறித்து அண்மையில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் சுவையானவை.

வெங்கட்டின் மனைவி ஆதி வெங்கட்டும் தில்லியின் வலைப்பதிவர்களில் ஒருவர்.கோவையில் வளர்ந்து தில்லியில் குடியேறியதால் தன் வலைப்பூவை கோவை 2 தில்லி ஆக்கி விட்ட இவரது கை வண்ணத்தை வெறும் சமையல் குறிப்புக்களுக்குள் மட்டும் அடக்கி விட முடியாது. தான் ரசித்த பாடல்களின் இணைப்பை அவ்வப்போது வழங்கியபடி - நம் மனப்பதட்டத்தையும், அவசர வேகத்தின் அலைக்கழிவையும் நீக்கி இளைப்பாற்றல் கொள்ள இசையென்னும் மாமருந்திடுபவை இவரது பதிவுகள்.

புதியவன் பக்கங்களை எழுதி வரும் திரு ஷாஜகான் ஒரு புத்தகக்காதலர்.சிறந்த கவிஞர்.


தில்லியில் நிகழ்ந்த புத்தகக்கண்காட்சி போன்ற  பல நிகழ்வுகளையும் பதிவுகளாக்கி வெளியிட்டிருக்கும் இவர் அறச் சீற்றத்தோடு கூடிய பல சமூகப் பதிவுகளையும்  கூட எழுதி வருகிறார். அவற்றுள் நான் பரிந்துரைக்கும் பதிவுகள், கூடங்குளம் பிரச்சினையை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் படித்தவர் சூதும் பாவங்களும்..., மற்றும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு பற்றிய விமரிசனங்களை வைக்கும் பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ...ஆகியவை.

என்னிடம் மகன் போன்ற நேசம் கொண்டிருக்கும் தில்லிப்பதிவர் தேவராஜ் விட்டலன் இராணுவத்தில் பணியாற்றுபவர்; அவரது படைப்பார்வமும் வாசிப்பில் அவர் காட்டும் தீவிரமும் பிரமிக்க வைப்பவை.கவிதையில் தொடங்கிச் சிறுகதை நோக்கி நகர்ந்து செல்லும் அவர் ஏற்கனவே கைக்குட்டைக் கனவுகள் என்னும் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

விருதுநகர்ப்பகுதியிலிருந்து வெளியாகும் பயணம் இதழுக்கும் பொறுப்பேற்றிருக்கும் விட்டலனின் கவிதைகள் பலவும் வடக்கு வாசல் இதழில் வெளிவந்திருக்கின்றன. கோடுகள்,ஒரு கனவின் எச்சம் ஆகிய அவரது கவிதைப்பதிவுகளை வலைச்சர வாசகர்களுக்கு என் அறிமுகங்களாக அளிக்கிறேன்.

கையளவு மண்என்று தன் வலைப்பூவுக்குப் பெயர் சூட்டிக் கொண்டாலும் கடலளவு செய்திகளை அள்ளித் தர முனைபவர் தில்லிப்பதிவரான வேங்கட சீனிவாசன்.இந்திய சீனப்போர் பற்றி இவர் எழுதி வரும் தொடர் கட்டுரைகள் சிறந்த வரலாற்றுத் தகவல்களை அளிப்பவை.


கவிதை வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமான உயிரோடை லாவண்யா சுந்தரராஜன்,சோமாயணம் என்ற பெயரில் தன் படைப்புக்களை வழங்கும் கலாநேசன், வார்த்தைச்சித்திரங்களை வடிக்கும் ஜீஜி, கவிஞர் ஜோதிப்பெருமாள் ஆகிய தில்லி வாழ் தமிழ்ப்பதிவர்களும் கவனம் பெறத் தக்கவர்களே.


பி.கு;
தில்லியின் பிற பதிவர்களான சிறுமுயற்சி முத்துலட்சுமி,சந்திரமோகன்,கணேஷ் ஆகியோர் குறித்த அறிமுகமும் அவர்களது பதிவுகள் குறித்த செய்திகளும் வெவ்வேறு  தலைப்புக்களிலான என் வலைச்சரக்கட்டுரைகளில் முன்னரே இடம்பெற்றிருக்கின்றன. இவர்களைத் தவிர விடுபட்டுப்போயிருக்கும் தில்லிப்பதிவர்கள் எவரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் நினைவுபடுத்தினால் நலமாக இருக்கும்.

மேலும் வாசிக்க...

Thursday, December 6, 2012

வலையும்,திரையும்



மெத்தப் படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினரையும் ஈர்ப்பது திரைப்படக்கலை.  இணையத்தில் இன்று வெளிவரும் பதிவுகளில் [கிட்டத்தட்ட எண்பது விழுக்காடு என்று கூடச்சொல்லி விடலாம்] திரைப்படங்கள் குறித்த பதிவுகளே பெரும்பான்மை இடத்தைப்பெற்றிருக்கின்றன. இந்தப் பதிவுகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தபோதும் தர அடிப்படையில் கணிக்கும்போது பெரும்பாலானவை கொஞ்சம் பின் தங்கித்தான் போய் விடுகின்றன .இவ்வாறு சொல்வது ஒரு சிலருக்கு சற்றுக் கசப்பாகக் கூட இருக்கலாம்...என்ன செய்வது..? உண்மை என்பது எப்போதும் சுடுவதுதானே ...!

கதை,திரைக்கதை,இயக்கம்,இசை,ஒளிப்பதிவு,கலைக்காட்சிகள் போன்ற பலவற்றின் கூட்டுக் கலவையும்,பலதுறை வல்லுநர்களின் முயற்சியும்தான் திரைப்படம் என்னும் ஊடகத்தை சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் பிடித்த நடிகர்களையும்,ஒரு சில கொச்சையான,தட்டையான சொற்களையும் முன் வைத்தே ஏராளமான திரைப்பதிவுகள் இன்று வலையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எல்லோருக்கும் எல்லா நுட்பமும் தெரிந்திருக்க முடியாது; அதற்கான அவசியமும் இல்லைதான்...ஆனாலும் விமரிசனம் என்று வரும்போது சொந்த விருப்பு வெறுப்புக்களச் சற்றே ஒதுக்கி வைத்து - எது தரமானது,எது தரமற்றது..அதற்கான காரணங்கள் என்ன என்று தர்க்க பூர்வமாக அலசும் திரை சார்ந்த பதிவுகளும்,தமிழின் தரமான படங்களோடு பிறமொழிப்படங்களையும், உலகப்படங்களையும் அறிமுகம் செய்து வைக்கும் பதிவுகளுமே திரைக்கலை பற்றிய புரிதலுக்கு வழியமைக்கும்.

அத்தகைய பதிவுகள் சில இன்றைய அறிமுகமாக....
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எனக்கு அறிமுகமான இரு பேராசிரியர்கள் திரு.மு.ராமசுவாமியும்,திரு அ.ராமசாமியும்.இருவருமே நாடகக் கலையில் தேர்ந்தவர்கள்.அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் திரைக்கலையில் ஆர்வம் காட்டுபவர்கள்.திரை சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நுட்பமான தேர்ச்சி பெற்றவர்கள்.

மதுரை நகரில் நிஜநாடக இயக்கத்தைத் தோற்றுவித்துப் பல புது நாடக முயற்சிகளை நிகழ்த்திக் காட்டியிருக்கும் திரு மு.ராமசுவாமி அவர்கள், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர்;நாடகத் துறையின் தலைவர். கன்னத்தில் முத்தமிட்டால், நான் கடவுள்,சண்டக்கோழி,பருத்திவீரன் போன்ற சில படங்களிலும் கூட அவரைப் பார்த்திருக்கலாம். அண்மையில் டிராமாசுவாமி என்னும் தளம் தொடங்கித்  தன் எழுத்துக்களைப்பதிவு செய்து வரும் அவர் வாகைசூட வா,

மற்றும் வழக்குஎண்18/9 ஆகிய திரைப்படங்களைக் குறித்த அருமையான விமரிசனங்களைத் தன் தளத்தில் வழங்கியிருக்கிறார்.வழக்குஎண்18/9 பற்றிய அவரது விமரிசனம் காணொளியாகவும்...அதே தளத்தில் கிடைக்கிறது.

அ.ராமசாமி எழுத்துக்கள் என்னும் பெயரில்தன் கட்டுரைகளை எழுதி வரும் பேரா.அ.ராமசாமி அவர்களும் நாடக ஆர்வலரே. புதுவை நாடகப்பள்ளியிலிருந்து திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலை சென்ற இவர், இப்போது வருகைதரு பேராசிரியராகப்பணி புரிவது போலந்து நாட்டின் வார்சாவில்.இலக்கிய விமரிசனக்கட்டுரைகளோடு திரைப்படங்கள் குறித்த ஆழமான கட்டுரைகளையும் இவரது தளத்தில் அடிக்கடி காணலாம். உயிர்மை போன்ற சிற்றிதழ்களில் வெளியான சினிமா சார்ந்த கட்டுரைகளையும் வலையில் வெளியிட்டு வரும் அ.ராமசாமியின் அண்மைக்கட்டுரையான
நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம் என்னும் பதிவு, தமிழ்த் திரைப்படம் குறித்த ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை முன் வைக்கிறது.


வணிகப்படம்,கலைப்படம் என்று பிரித்துக் கொள்ளாமல், தமிழ்ப்படம், பிற இந்தியமொழிப்படம், உலகத் திரைப்படம் எனப் பல மொழிப்படங்களையும் அலசிப் பிழிவதோடு திரைப்படம் சார்ந்த பொதுவான பார்வைகளையும் எந்தச் சமரசமும் அற்ற கறாரான பாணியில் பதிவு செய்யும் தளம் சுரேஷ் கண்ணனின் பிச்சைப்பாத்திரம். இவரது அண்மைப்பதிவுகளான நீர்ப்பறவையும்,  

இங்கிலீஷ்-விங்கிலீஷ் திரைப்படம் பற்றிய சசியின் இந்திய லட்டும் அமெரிக்க ஆங்கிலமும் என்னும் கட்டுரையும் உங்கள் பார்வைக்கு.

மேலோட்டமான பார்வை தவிர்த்து ஆழமான திரைப்படக் கட்டுரைகளை வழங்கும் மற்றொரு பதிவர் தில்லியில் வசிக்கும் நண்பர் வெ.சந்திரமோகன்.மிகச் சிறந்த ஓவியரும்,இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவருமான  இவரது திரைப்பார்வை கூர்மையான அவதானிப்புக் கொண்டது.சந்தனார் என்னும் வலைப்பூவில் தன் கட்டுரைகளை எழுதி வரும் இவரது களவாடும் கலையா சினிமா? என்னும் பதிவு தமிழ்த் திரை பற்றிய பல உண்மைகளைத் துணிச்சலாக விண்டு வைக்கிறது.
இளையராஜா : உயிரில் கலந்த இசை..என்னும் சந்திரமோகனின் கட்டுரையும் திரை இசை குறித்த கட்டுரைகளில் சிறந்த ஒன்று.

மாற்று சினிமாவுக்கான தேடல் உள்ளவர்கள் விரும்பும் தளமான தமிழ்ஸ்டூடியோ.காம். திரைப்படம்,குறும்படம் பற்றிய பற்பல தகவல்களையும் தொகுப்புக்களையும் தரும் ஆவணக்காப்பகம் போல விளங்கி வருகிறது. குறும்பட ஆர்வலர்கள் எடுத்த தரமான படங்களும் இத் தளத்தில் உண்டு. சான்றுக்கு ஈழத் தமிழ்க்கவிஞர் சுமதி ரூபனும் அவர் கணவர் ரூபனும் எடுத்துள்ள மனுஷி என்னும் குறும்படம்....இங்கே .

குற்றப்பரம்பரை என்றே முத்திரை குத்தப்பட்ட இனம் பற்றித் தெரியாதவர்கள் காவல் கோட்டம் நாவல் மூலம் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம்.அந்த இனத்தின் ஒடுக்கம் குறித்த ரேகை என்னும் குறும்படத்தை அறிமுகம் செய்திருக்கிறார் தில்லியிலிருந்து ராகவன் தம்பி என்னும் புனை பெயரில் எழுதும் வடக்கு வாசல் ஆசிரியர் யதார்த்தா பென்னேஸ்வரன்.

4/12 தேதியிட்ட சொல்வனம் இதழில் மிக அற்புதமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எறும்புகளின் கதறல் என்ற ஈரானியப்படம் குறித்த பதிவும் உலகப்படம் பற்றிய புரிதலுக்கு ஏற்றது.

பி.கு;
நல்ல தரத்திலான வேறு சில திரைவிமரிசனப்பதிவுகளை வாசகர்களாகிய  நீங்களும் பின்னூட்டங்களில் பகிர்ந்து கொள்ளலாமே....


மேலும் வாசிக்க...

Wednesday, December 5, 2012

கதையும் கதை சார்ந்ததும்....

’’எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்...’’
வாசிப்பு வசப்பட்ட நாள் முதல் என்னை வசீகரித்த ஒரு வடிவம் சிறுகதை.சொல்வது குறைவாகவும்,உணர்த்துவது மிகுதியாகவும் நறுக்குத் தெறித்தாற்போன்ற கச்சிதமான வடிவ ஒழுங்கு கொண்ட நல்ல சிறுகதைகள் வாழ்வின் மிகச்சிறிதான ஒரு கணத்தின் தரிசனத்தை மிக அற்புதமாக சாத்தியப்படுத்தி விடுகின்றன. அடர்ந்த இருள் கப்பியிருக்கும் நேரத்தில் வெட்டும் கீற்றுமின்னல் சின்னதொரு காட்சியை நொடியில் காட்டிவிட்டுப்போவதைப்போல வாழ்வின் மகத்தான உண்மைகளைக்கூட ஒரு சில சொற்களால்..நிகழ்வுகளால் சிறுகதைகள் முன்வைத்து விடுகின்றன. மிகப்பெரிய கான்வாஸில் மிக அதிகமான வண்ணங்களைச் சேர்த்து விஸ்தாரமாகத் தீட்டப்படும் மிகப்பெரிய ஓவியம் போன்றது நாவல் என்றும் ‘ஸ்கெட்ச்’எனப்படும் கோட்டுச் சித்திரம் போல இருப்பது சிறுகதை என்றும் விமரிசகர்கள் குறிப்பது இது பற்றியதுதான்...

சிறுகதை என்பது 100மீட்டர் ஓட்டம்;நாவல் ஒரு மராத்தான் ரேஸ்.
சிறுகதை ஒரு புகைப்படம்;நாவல் ஒரு மூவி....
சிறுகதை ஒரு மாலைநேரச் சிற்றுண்டி; நாவல் ஒரு திருமணவிருந்து...
என்று இதை இன்னும் கூட அடுக்கிக் கொண்டே போகலாம்...

பொதுவாக எழுத்துக் கிறுக்குப் பிடித்து எழுத ஆரம்பிப்பவர்கள் கவிதையில் தொடங்கி,சிறுகதைக்கு நகர்வார்கள்.நான் சிறுகதையில் தொடங்கிக் கொஞ்ச காலம் கவிதைக்கு வந்து பிறகு சிறுகதையில் நிலைப்பட்டேன்...

சிறுகதை வடிவம் தமிழுக்கு அயல்நாட்டிலிருந்து வந்த கொடை என்றபோதும் புதுமைப்பித்தன் தொடங்கி

இன்றைய சமகால எழுத்தாளர்கள் வரை பலரும் தமிழ்ச்சிறுகதைக்கு வளம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.புகழ்பெற்றவர்களும் - பரவலான தளத்தில் அறியப்பட்டவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புக்களென்றால் அவற்றை நாமே தேடிப்படித்து விடுவோம். ஆனால்...ஆர்வத்தோடும்,தாகத்தோடும் சிறுகதை உலகில் தங்கள் சுவடுகளைப்பதிக்க விரும்புகிற...பதிக்கத் தொடங்கியிருக்கிற சில இளம் நண்பர்களும் இணைய வெளியில் நிறையவே உண்டு. அவர்களை ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தும் கடப்பாடு நமக்கு உண்டு என்பதால் அவர்களில் சிலரது படைப்புக்கள் குறித்த அறிமுகம் இந்தப்பதிவில்.....

உண்மை வாழ்வில் நாம் கேள்விப்படும் செய்திகள்..எதிர்ப்படும் நபர்கள்..,நிகழ்வுகள் இவற்றோடு நம் புனைவும் கலக்கும்போது அவை நம்பகத்தன்மை வாய்ந்த படைப்புக்களாகி விடுகின்றன.அவ்வாறான ஒரு சம்பவம் பெங்களூரில் வசிக்கும் இலக்கிய ஆர்வலரான நண்பர் ஆர்.கோபியின்"தண்ணி குடிங்க"என்னும் சிறுகதையாக உருப்பெற்றிருக்கிறது.முதலில் ஒரு கட்டுரை போல,சம்பவ விவரிப்புப்போலத் தொடங்கினாலும் சற்றுச் சூடு பிடித்தபின் மனதைக்கலங்கடித்து விடும் கதை.புனைவாக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் உடல்நலத்துக்கும் தேவையான ஒரு செய்தியையும் கூடச் சிறிதளவு பிரசார நெடியுமின்றி அநாயாசமாக முன் வைத்து விடுவதே இதன் சிறப்பு.

மிகச் செறிவான நடையில் சிறுகதையின் குறுகத் தரித்த குணம் நயமாகக் கூடி வந்திருக்கும் சிறுகதை , இணைய உலகிற்குப் பெரிதும் பரிச்சயமான சிறுமுயற்சி முத்துலட்சுமியின் விடுதலை என்கிற சிறுகதை. தில்லியைச்சேர்ந்த இவர் , தில்லியின் புறநகர்ப்பகுதி ஒன்றில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை ஒட்டி எழுதிய இந்தக்கதையைப் படித்த போது, தேர்ந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புப் போல என்னுள் ஆனந்த அதிர்ச்சியூட்டியது  இது. மிகச்சிறிய கதைதான் என்றாலும் அவரது படைப்பாற்றல் திறனை  அதற்கான தகுதியை உறுதிப்படுத்தியிருக்கும் படைப்பு இது.உண்மைச்சம்பவ அடிப்படை இதற்கும் உண்டென்றாலும் அதைப் புனைவாக்கித் தந்திருக்கும் பாணி சிறப்பானது.பெண் எழுத்தில் இதுவும் ஒரு மைல்கல்தான்!

பிரகாஷ்தென்கரை என்னும் பெயரில் எழுதிவரும் பிரகாஷ் சங்கரன், செக் குடியரசில் தற்போது உயிரியியல்துறையில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருபவர்; தீவிர எழுத்துக்களின் தீவிர வாசகர்.விமரிசகர்; இந்தியத் தத்துவ ஞானங்களில் தெளிந்தவர்; ஆழமான அறிவியல் கட்டுரைகளைக் கூடப் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் முன் வைக்கக்கூடியவர்.இவற்றோடு அசாதாரணமான ஒரு கதை சொல்லியும் கூட அவருள் இருக்கிறார் என்பதை உணர வைக்கும் அவரது சிறுகதை அன்னதாதாபசி என்பதை ஓர் உருவகமாக்கி வாழ்வியலின் சாரத்தையே கண் முன் கொணரும் அருமையான முயற்சி இது.

தன் சிறுகதைப் படைப்புக்கள் சொல்வனத்தில் அடிக்கடி வெளிவருமளவுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டிர்ப்பவர் தில்லி இலக்கிய நண்பரும்- பதிவருமான வி.கணேஷ் . கவிதை,சிறுகதை எனப் படைப்பிலக்கியத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் அவரது ஆக்கம் ஜன்னல்கள் .சற்று சுஜாதா பாணி அவ்வப்போது தலை காட்டினாலும் சிறுகதை வடிவம் இவருக்கு நன்றாகவே பிடிபட்டிருக்கிறது.

கதைகளை..புனைவுகளை எழுதுவது ஒரு புறமிருக்க அவை சார்ந்த விமரிசனங்களை ஆழமாக முன் வைப்பதும் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாகும் ஓர் அம்சம்தான்.ஒரு படைப்பை உருவாக்குவது எத்தனை கடினமோ அதை விடக் கடுமையும்,கடினமுமானது அதன் மீதான  விமரிசனம் அல்லது திறனாய்வை முன் வைத்து எழுதப்படும் பதிவு. அது ரசனை சார்ந்ததாகக் கூட இருக்கலாம்....ஆனால்..இதுவரை அந்தப்படைப்புக்குள் பயணப்படாதவர்களை அவற்றைப்படித்தே ஆக வேண்டும் என்னும் ஆர்வத்தைக் கிளர்த்துவதாக அது இருக்க வேண்டுமென்பதே அதற்கான முதல் தகுதி.

அவ்வாறான சில விமரிசன இணைப்புக்கள்....

மூத்த நாவலாசிரியர் பூமணி [வெக்கை,பிறகு போன்ற தொடக்க கால தலித் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்] அண்மையில் எழுதிய மிகப்பெரிய நாவல் அஞ்ஞாடி.இதை முழுவதும் வாசித்து முடிக்கவே பல நாட்கள் தேவைப்படும்.இத்தனை பெரிய பிரம்மாண்டமான நாவலை வாசித்து உள்வாங்கிக்கொண்டு அருமையான ஆய்வுக்கட்டுரையையும் தன் தளத்தில் எழுதியிருக்கிறார் திரு ஸ்ரீனிவாசன்.இவர் தமிழ் கற்றவர்; தற்போது தமிழக அரசின் வேறு பணியில் இருந்தாலும் தொடர்ந்து தமிழோடு உறவு பூண்டிருப்பவரும் கூட. திருவிருப்போன்  என்னும் இவரது வலையில் அஞ்ஞாடி – வரலாற்றின் புதுமொழி என்னும் அந்த விமரிசனக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. தொடர்ந்து தன் தளத்தில் பல கட்டுரைகளை இவர் எழுத வேண்டும் என்பதே  நம் ஆவல்.

புத்தகம்,ஆம்னிபஸ் ,சிலிகான் ஷெல்ஃப் ,நான் வாசித்த தமிழ்ப்புத்தகங்கள் 
ஆகிய தளங்கள் பெரும்பாலும் நூல்  அறிமுகங்களுக்கும்,நூல்கள் சார்ந்த விமரிசனக்கட்டுரைகளுக்குமே முன்னுரிமை அளித்து வெளியிட்டு வரும் தளங்கள்.

அவற்றிலிருந்து சில பதிவுகளுக்கான இணைப்புகள்...

நாஞ்சில் நாடனின் மிதவை நாவல் பற்றிய சுனில்கிருஷ்ணனின் பதிவு.

நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி  நாவல் குறித்த சிலிகான் ஷெல்ஃப், மற்றும் சொல்வனப்பதிவுகள்.

சமகாலத் தமிழின் சிறந்த விமரிசகரும் இப்போது நூற்றாண்டு காண்பவருமான க.நா.சு.அவர்களின் மொழிபெயர்ப்பில் உருவான அன்பு வழி [பாரபாஸ்-ஃபேர்லாகர் குவிஸ்ட்டின் நோபல் பரிசு பெற்ற படைப்பு]
பற்றி கிருஷ்ணபிரபு செய்திருக்கும் அறிமுகம்.

பி.கு;
பண்டை இலக்கியம் பற்றிய பதிவில் குறிப்பிட்டது கதைகளுக்கும் பொருந்தக்கூடியதுதான்.புத்தகம் வாங்கக் கடைகளுக்கோ,புத்தகக் கண்காட்சிக்கோ செல்ல நேரம் வாய்க்கவில்லையே என வருத்தம் கொள்ளத் தேவையில்லாதபடி இணையத்திலேயே கொட்டிக் கிடக்கும் கதைகளும் இன்னின்ன கதைகள் படிக்க வேண்டும் என்னும் பரிந்துரைகளும் ஏராளம்.அவற்றில் ஓரளவு படித்தாலே தமிழ்க்கதை உலகத்துக்குள் கால் வைத்து விடலாம்.
கதைகள் கிடைக்கும் சில தளங்கள்;
அழியாச்சுடர்கள்..
சிறுகதைகள்
நூலகம்
இவற்றைத் தவிர சிறுகதை நாவல்- அவை சார்ந்த கட்டுரைகளுக்கான இன்னும் வேறு தளங்கள்,இணைப்புக்கள் தெரிந்தால் இக் கட்டுரை படிக்கும் வலைச்சர வாசகர்களும் தங்கள் பின்னூட்டங்களில் குறிப்பிடலாம்;அது அனைவருக்கும் பயனளிக்கும் என்பதால் அவற்றை அன்போடு வரவேற்கிறேன்.எதிர்பார்க்கிறேன்.

.
மேலும் வாசிக்க...

Tuesday, December 4, 2012

பண்டைய தமிழின் இன்றைய முகவரிகள்


தமிழர்களைப்போல மொழியை ஆராதித்து ஆனந்தமடையும் வேறு இனக் குழுக்கள் உண்டா என நான் எப்போதுமே ஆச்சரியம் கொள்வதுண்டு.
வாழ்வின் சகல அம்சங்களோடும் கலந்து பிணைந்து ஐக்கியமானது மொழி. அதனால்தான் அதனைத் தாய் என்று அழைக்கிறோம்...! ''தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்''என்று பூரித்துப் புளகாங்கிதமடைகிறோம். தமிழ்த் தாய்க்குக் கோயிலெடுத்துக் கரம் கூப்பித் தொழுகிறோம்.



‘’கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி’’[புறப்பொருள் வெண்பாமாலை]
என்று பெருமிதம் கொள்கிறோம். செம்மொழித் தகுதியை நம் மொழி அடைந்தபோது நாம் கொண்ட மகிழ்வுக்கு அளவே இல்லை....
ஆனாலும்...உணர்ச்சி பூர்வமான இந்தக் கட்டத்தோடு நம்மில் பலரின் தேடல்கள் முடிந்து விடுகின்றன.ஒரு மொழியை உணர்வுபூர்வமாக அணுகுவதென்பது  ஒரு சிறிய பகுதி மட்டுமே.... அதன் பெருமைகளை நாமும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்த வேண்டுமென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் அந்தத் தமிழ்ப்பாதையில் ஒரு சில மைல்கற்களையாவது தொட்டுப்பார்க்க வேண்டும்தானே?

இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த உரைநடைப் படைப்புக்களான கட்டுரைகளையும்,கதைகளையும் அவை நமக்குப் பழக்கமான சொற்களிலும்,நடையிலும் அமைந்திருப்பதால் ஓரளவு எளிமையாக அணுகி விட முடிகிறது.பழந்தமிழ் இலக்கியம் என்றால் மட்டும் பதவுரை பொழிப்புரைக்கு ஆள் தேடி சற்று மலைத்துப் போய் நின்று விடுகிறோம். எந்த ஒரு உலக மொழியிலும் கால ஓட்டத்தில் சொற்கள் வெவேறு வகையாக மாற்றமடைவதும் புதுப்புதுச் சொற்கள் வந்து சேர்வதும் - ‘’பழையன கழிதலும் புதியன புகுதலும்’’ இயற்கை. 2000 ஆண்டுக்கால நெடிய பயணத்தில் எத்தனை இலட்சம் சொற்களின் ஊடாகத் தமிழ் பயணப்பட்டிருக்கும் என்பதைச் சற்றே எண்ணிப்பார்த்தால் அது குறித்த பெருமை மட்டுமே நம்மில் மேலோங்கி எழ வேண்டும்.

பழந்தமிழைப் பொறுத்தவரையிலும் கூட  நம்மை மலைப்படைய வைப்பவை அந்தச் சொற்களே. சொற்களைத் தாண்டிக்கொண்டு பாடல்களுக்குள் சென்றுவிட்டால் இன்றைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அதே உணர்வுகளின் கணங்களைத்தான் அன்றைய புலவர்களும் தரிசனப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எளிதாகப்புரிந்து கொண்டு விடலாம்.

”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”
 – செம்புலப் பெயல்நீரார்
[என் தாயும், உன் தாயும் - என் தந்தையும், உன் தந்தையும்,  ஒருவருக்கொருவர் எந்த வகையில் உறவினர்? நானும் நீயும் இதற்கு முன் ஒருவரையொருவர் முன் அறிந்தது கூட இல்லையே? ஆனாலும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைப்போல அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன.]
என்ற குறுந்தொகைப்பாடலில் இடம் பெற்றிருக்கும் ஒரு குறிப்புத்தான் 
இன்றைய திரைப்பாடலில்,
‘’உன் பேரும் என் பேரும் அறியாமலே உள்ளங்கள் இடம் மாறுதே’
[‘’கண்ணாளனே...’’பம்பாய்-வைரமுத்து]
என்ற இலகுவான சொற்களில் சொல்லப்பட்டு எல்லோராலும் முணுமுணுக்கப்படுகிறது;விரும்பப்படுகிறது.

’’இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு
நோய் நோக்கு; ஒன்று அந் நோய் மருந்து’’

என்ற திருக்குறளைத்தான் கொஞ்சம் வேறுவகையாக மாற்றி,
’’நீ ஒரு முறை பார்த்தாய்
என் உள்ளத்தில் முள் பாய்ந்தது
எங்கே இன்னொரு முறை பார்..
முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்’’ 
என்று புதுக்கவிதையாக எழுதிப்பார்த்தார் கவிஞர் மீரா.

வாழ்க்கையோடும்,வாழ்க்கையின் சில தருணங்களோடும் இணைத்துப் பார்க்கும்போதும் வாசிக்கும்போதும், சங்கக்கவிதைகள் அடிக்கரும்பாய் இனிப்பதை....என்றென்றும் அழியாத பல நிலைத்த உண்மைகளை நமக்குச் சொல்லிக்கொண்டே இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

சங்க இலக்கியம் படிக்க வேண்டும்..அது பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இன்று பல இளம் தலைமுறையினரிடம் புதுப்பிக்கப்பட்டிருப்பதை நான் பெருமகிழ்வோடு அவதானித்து வருகிறேன். தமிழிலக்கியத்தோடு சம்பந்தப்படாத பிற துறை சார்ந்தவர்கள்.... தமிழிலக்கியம் கற்காதவர்கள் எனப் பலரிடமும் இந்த எழுச்சி மேலோங்கிக் கொண்டிருக்கிறது.அவர்களது ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில்...
பண்டைத் தமிழ்ப்பாக்களைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் சில தளங்களும் பதிவுகளும் இன்றைய பார்வைக்கு....

’’பழந்தமிழ் இலக்கியங்களின் பழமை அவற்றின் வயதில் இருக்கிறதேயன்றி அவை காட்டும் வாழ்க்கையில் இல்லை’’ என்று சொல்லும் காயத்ரியும் அவரது கணவர்  சித்தார்த்தும் இணைந்து எழுதும் அணிலாடு முன்றில் என்னும் தளம் சங்க இலக்கியத்தோடு கை குலுக்க விரும்புவோருக்கு அற்புதமான வாசிப்பனுபவங்களை விரித்தளிக்கும் தளம். இன்றைய வாழ்வியலோடு இணைத்து சங்கக்கவிதைகளை விளக்க முயலும் இந்தத் தளத்தில்..குறுந்தொகைப்பாடல் சார்ந்த
'உறக்கமற்ற காத்திருப்புஎன்னும் பதிவும்,


புறநானூற்றுப்பாடலை ஒட்டிய
போர்க்களத்தில் பூத்திருக்கும் ஒற்றைப் பூ!வும் என் பரிந்துரைகள்.

மாயக்கூத்தனின் சொல்வனப்பதிவான 'முத்தொள்ளாயிரத்தில் யானைகள்'  ஒரு கருத்தை மையமாகக் கொண்ட செய்தியைக் குறிப்பிட்ட இலக்கியத்தின் அடிப்படையில் ஆழமாக முன் வைக்க முயலும் ஆக்கம்

சங்க இலக்கியம் குறித்த பதிவுகளைத் தங்கள் தளங்களில் அடிக்கடி வெளியிடும் பேராசிரியர் குணசீலனின் முத்தொள்ளாயிரம் மற்றும் புறநானூறு சார்ந்த  'பிடிநாண...'என்னும் பதிவு,சங்க இலக்கியத்தின் மீது ஆறாக் காதலை நம்முள் கிளர்த்தக்கூடியது.
சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களின் பட்டியலைத் தொகுத்துத் தந்திருக்கும் பேராசிரியரின் பதிவு பெண்கல்வி தழைத்திருந்த சங்கச் சமுதாயத்தின் மேன்மைக்குக் கட்டியம் கூறுவதோடு ஆய்வாளர்களுக்கும் பயன் தரத்தக்கது.

இந்தத் தலைமுறையைத் தாண்டி அடுத்து வரும் தலைமுறைக்கும் சங்க இலக்கியத்தைக் கொண்டு செல்லும் மிக அருமையான முயற்சி, ஐந்திணைப்பதிப்பகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களை எளிய கவிதை நடையில் அப்பதிப்பகத்தார் கொண்டு வந்திருப்பதையும் கல்பனா சேக்கிழார்  தன் அண்மைப்பதிவான முல்லைப் பாட்டில் சுட்டியிருக்கிறார். எளிமையான அந்தக்கவிதை வரிகளையும் பதிவில் ஏற்றியிருக்கிறார்.தமிழிலக்கியம் கற்ற பேராசிரியர்களைக் கூட மலைக்க வைக்கும் கடுமையான நடை கொண்ட முல்லைப்பாட்டை எளிய கவிதை நடையில் வாசிக்க வைத்து உதவும் இவ்வகை முயற்சிகளே தமிழை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லக் கூடியவை.அவ்வகையில் அது பெரிதும் பயனுள்ள ஒரு பதிவாகிறது.
சங்க இலக்கியத்தின் வித்தியாசமான சொல்லாட்சிக்குச் சான்றாகும் பெரும் பிறிதாதல்’என்னும் கல்பனாவின் பதிவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.


பூவிடைப்படுதல் என்னும் தலைப்பிலான ஜெயமோகனின் ஐந்து தொடர் கட்டுரைப் பதிவுகளும் தீவிர இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமன்றிப் பண்டை இலக்கிய தாகம் கொண்டோர் அனைவருக்குமே குறுந்தொகை குறித்த மிக அற்புதமான திறப்பை அளிக்கக்கூடியவை. அக்கட்டுரையின் காணொளியும் கூடக் கிடைக்கிறது.



பின் குறிப்பு;
பண்டை இலக்கியம் படிக்கக் கை வசம் நூல் இல்லையே, உரை இல்லையே என்று சாக்குப்போக்குச் சொல்லி அதைப் படிப்பதன் இன்பத்தை ஒத்திப்போட்டுவிடத் தேவை இல்லாதபடி, பாடல்களின் மூலம், உரை எல்லாம் கொஞ்சம் முயன்று பார்த்தால் இணையத்திலேயே கிடைக்கிறது.
அவ்வாறான சில தளங்கள்
http://sangailakkiyam.blogspot.in/
http://www.tamilvu.org
http://ilakkiyam.com/
http://www.thoguppukal.in/ என்னும் தளமும் பண்டை இலக்கியங்களின் அறிமுகத்துக்கு மிகவும் பயன்படும் இன்னொரு தளம்.




மேலும் வாசிக்க...

Monday, December 3, 2012

மாய உலகில் ஒரு சஞ்சாரம்


வலைச்சரத்துக்கு என் வணக்கம்.

வலைச்சரத்தில் நான் அறிந்து இருமுறை என் பதிவுகளும் தளமும் அறிமுகமாகியிருக்கின்றன. முதல் முறை இலக்கியத் தமிழ் என்னும் பிரிவில் வேர்களைத் தேடும் பேராசிரியர் குணசீலனால்.... அடுத்து மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் என்னும் தலைப்பில் தேவியர் இல்லத்தின் காவலர் திருப்பூர் ஜோதிஜி அவர்களால்.(ஒரு வேளை வேறு சிலரும் அறிமுகம் செய்து நான் தவற விட்டிருந்தால் பிழை பொறுக்க!)

தற்போது என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக  அழைத்து வந்து, நான் ரசித்துப் படித்த தளங்கள்...,வியந்து பாராட்டிய பதிவுகள், பலரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பும் இணைப்புக்கள் எனப் பலவற்றையும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறார் திரு சீனா அவர்கள்.
அவருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியைக் கையாள்வதும்,...அதற்குள் உலவுவதென்பதும் ஏதோ ஒரு மாய உலகத்தின் சஞ்சாரம் போலவும், நிறைவேறாத, நிறைவேற்றிக்கொள்ள முடியாத  ஒரு கொடுங்கனவு போலவுமே எனக்குத் தோன்றி வந்திருக்கிறது.பணிக்காலத்தில் அதற்கான வாய்ப்பும் நேரமும் எனக்கு வாய்க்கவுமில்லை.சங்கம் முதல் சமகாலப்படைப்புக்கள் வரை தமிழிலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் நான் கொண்டிருக்கும் தீராத தாகம்...தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியான இணையத் தமிழை நோக்கி என்னை உந்தித் தள்ளியது. தீவிர இலக்கிய வாசிப்புக்கான வாய்ப்பு அச்சில் குறைந்து இணையத்தில் பெருகத் தொடங்கியிருந்த காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

 நவீன இலக்கியத்தைப்பொறுத்தவரை ஜெயகாந்தனுக்குப் பிறகு என்னைப்பெரிதும் பாதித்த எழுத்தாளர் திரு ஜெயமோகன் இணையத்தில் புனைவுகளாகவும், அபுனைவுகளாகவும் பதிவுகளை எழுதிக் குவிக்கத் தொடங்கியிருந்தார்.

அவற்றை உடனுக்குடன் வாசிக்க வேண்டுமென்பதற்காகவே இணையத்தில் உலவவும், மின் அஞ்சல் அனுப்பவும் நான் முதலில் கற்றுக் கொண்டேன். அப்போதும் கூடப் பிடித்த பதிவுகளுக்கான பின்னூட்டங்களைத் தமிங்கிலிஷில்தான் எழுத முடிந்ததே தவிரத் தமிழிலேயே நேரடியாக எழுதுவது வசப்பட்டிருக்கவில்லை.நான் அனுப்பிய கருத்துரைகளைக்கண்ட திரு ஜெயமோகன், மற்றும் எஸ்.ரா இருவரும் ஒரே நேரத்தில் நானும் ஒரு வலைப்பூ எழுத வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டனர்; அதற்கு ஏற்ற உதவிகளைக் கவிஞரும் எழுத்தாளருமான நிழல்கள்’ ஹரன்பிரசன்னாவைக் கொண்டு நண்பர் ஜெயமோகன் செய்து தர, நவ.2008இல் என் வலைப்பூ பிறந்தது. எனக்கு முற்றிலும் புதிதான புதிதான ஒரு தளத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்பிய என்னைப் பங்கேற்பாளராக்கிய முழுப்பெருமையும் ஜெயமோகனையே சாரும்.அதற்கு என் நன்றிகள் என்றென்றும் அவருக்கு...!

சமகாலத் தமிழின் நீரோட்டத்தோடு இணைய வேண்டுமென்பதற்காகவே இணையத்திற்குள் தொடர்ந்து நிலைப்பட நான் எடுத்த முயற்சிகள்,அதற்கு உறுதுணையாக நின்றவர்கள் பற்றிய குறிப்புக்கள் ஆகிய அனைத்தையும் ஏற்கனவே வலைப்பூ என்னும் வரம் என்னும் பதிவிலும் நுழைவாயிலிலும்  விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.குறிப்பாகத் தட்டச்சே தெரியாத எனக்குத் தமிழ் எழுதியை எளிமையாக்கிச்சொல்லி என்னை ஊக்குவித்த என் பேராசிரிய நண்பர்கள் குணசீலன்,கல்பனா சேக்கிழார் 
ஆகிய இருவரின் பொறுமை கலந்த அன்புக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.

கற்பித்தல் என்னும் காலகட்டம் என் வாழ்வில் ஒரு முடிவுக்கு வந்து விட்டாலும் கற்றல் என்பதை ஒரு போதும் நிறுத்தி விடாமல் இருப்பதற்கு....இந்த இணையமும் வலை எழுத்தும் நாள்தோறும் எனக்கொரு போதிமரமாய் எதையாவது கற்பித்துக் கொண்டே இருக்கின்றன.

இதழியல்துறையில் ஈடுபட்டு இயங்க வேண்டும் என்று என்றோ கண்ட கனவை நிறைவேற்றிக் கொள்ள..., இலக்கியம்,திறனாய்வு, சமூகம்,திரைப்படம்,பயணம் எனப்பல வகை எழுத்துக்களை முயன்று பார்க்க இந்த வலைத் தளம் எனக்கு வாகனமாகியிருக்கிறது. ஒத்த அலை வரிசையிலும்...நேர்மாறான திசையிலும் பயணப்படும் நண்பர்கள் பலரைப்பரிச்சயம் செய்து கொள்ளவும், அவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்வதன் வழி என் எழுத்தைக் கூர் தீட்டிக் கொள்ளவும் இந்த வலை எழுத்து எனக்கு உதவியிருக்கிறது. இதனால் கிடைத்த நல்ல தோழமைகள்,பாசத்தைப்பொழியும் உள்ளங்களோடான உறவாடல்கள் என் வாழ்க்கைக்கு மேலும் பொருள் சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

தினமணி நாளிதழில் (1.1.2010)-திரு மணிகண்டன் அவர்கள் எழுதியுள்ள 
வலையுலகப் படைப்பாளிகள்என்னும் கட்டுரையிலும்,
ஆனந்த விகடனின் -13.06.12 -வரவேற்பறை பகுதியிலும் 
உலகத் தமிழ்ப் படைப்பாளிகளை இணைக்கும் தளம் ஆகியவற்றிலும் இந்த வலைத் தளம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.தமிழ்ச்சிறுகதைகளைத் தொகுக்கும் சிறுகதைகள்’என்னும் தளத்தில் என் சிறுகதைகள் பலவும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும்....,கிட்டத்தட்ட நானூறு பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட ஒவ்வொரு பதிவை எழுதும்போதும் புதிதாக எதையோ எழுதிப்பார்க்கும் முயற்சியாகத்தான் அது தோன்றுகிறதே தவிர முழுமையான நிறைவு இன்னும் ஏற்படவில்லை. சுருதி மீட்டுவதிலேயே காலம் போகிறதோ என்று தாகூர் சொன்னது போல....சுருதியை மீட்டிக் கொண்டே இருக்கிறேன்...நாதத்தின் தரத்தைக் காலம் கணிக்கட்டும் என்றபடி....!

வலைச்சரத்தின் வாசகர்கள் பலரும் என் தளத்துக்குப் புதியவர்கள் அல்லர் என்றபோதும் அறிமுகப்பதிவில் என் பதிவுகளைப்பகிர வேண்டும் என நண்பர் சீனா கேட்டுக் கொண்டதால். எனக்கு ஆர்வமுள்ள துறைகளில் நான் பகிர எண்ணும் சில பதிவுகள்.கீழே..;
சிறுகதை
1979 முதல் சிறுகதை எழுதி வரும் நான் இதழ்களில் வெளியான கதைகளில் பலவற்றை அவ்வப்போது வலையேற்றிக்கொண்டும் வருகிறேன்.அவற்றில் பரவலான வாசிப்புப்பெற்றது பொம்பளை வண்டி..என்றாலும் நான் உங்கள் வாசிப்பைக்கோருவது இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான நேரமில்லை..யை ...[இன்னும் நேரமிருப்பவர்கள் பிற கதைகளையும் படித்தால் எனக்கு மகிழ்ச்சிதான்]
சங்கம்
சங்கப்பாடல் அறிமுகத்தில் காமர் மந்தியும்,காதல் தலைவியும் பலரையும் கவர்ந்தாலும் தீராக்காதலனையும் அன்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்குமான வேறுபாடு காட்டும் சங்கக்காதலையும் சற்றுப்படித்துப் பார்க்கலாம்.
பயணம்
பயணம் சார்ந்த பல பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வரும் எனக்கு மனநிறைவும் மகிழ்வும் தந்த பதிவு பத்ரிநாத் பயணம் பற்றி இமயத்தின் மடியில் என நான் எழுதிய தொடர்ப் பதிவுகளும்,அவற்றில் இடம் பெற்றிருந்த  (நான் எடுத்த)இமயத்தின் புகைப்படங்களும்தான். அதே போல இன்னொரு பயண அனுபவத்தில் கிடைத்த செய்தியே சிற்பியின் நிழல் பதிவுக்கு வித்தாக அமைந்தது.
திரைப்படம்
நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்யும் என் பதிவுகளில் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட மலையாளப்படமான ஆதாமிண்ட மகன் அபு பற்றி எழுதப்பட்ட   இவன்தான் மனிதன்,  இயக்குநர் வசந்தபாலனின் அங்காடித்தெருவுக்கு எழுதிய விமரிசனம் ஆகியன எனக்கு உவப்பானவை.
சமூகம்
சமூக அவலம் கண்டு கொள்ளும் அறச்சீற்றம் என் கதைகள் பலவற்றுக்குக் கருப்பொருளானதைப்போன்றே என் பதிவுகளுக்கும் அடிப்படையாகியிருக்கிறது.அவற்றில் குறிப்பிடத்தகுந்தவையாய் நான் நினைப்பவை இரண்டு பெண்கள் மற்றும் யாருக்கும் வெட்கமில்லை.
புத்தகப்பார்வை
நல்ல நூலைப்படித்ததும் உடன் அதை அறிமுகப்படுத்தி விட நான் தவிப்பதற்கு ஏற்ற வடிகால் என் வலைப்பூ.அந்த  விமரிசனங்களுக்குச் சில சான்றுகள் முதல்சபதமும்,ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதமும்

இன்றைய பதிவை நிறைவு செய்வதற்கு முன் இறுதியாக ஒன்று.
பதிவுலகத்தில் மிகப்பரவலாக அறியப்பட்டவரும்,அத் துறையில் மிகச்சிறப்பாகத் தன் முத்திரையைப்பதித்து வருபவருமான ’சும்மா’ தேனம்மை லட்சுமணன் மதுரையில் என் மாணவியாக இருந்தவர் என்பதும் 

அவரது வளர்ச்சியில் அணிலாக என் பங்கும் உண்டு என்பதும்தான் அந்தச் செய்தி.! தம்மில் தம் மக்கள் அறிவுடைமை காண்பதுதானே ஈன்றோர்க்கும்,வளர்த்தோர்க்கும் பெருமிதம் தருவது?அந்தப்பெருமிதப்பூரிப்புடன் எங்கள் பாசப்பிணைப்பு பற்றி நான் எழுதிய பதிவு  மகளாய்..மாணவியாய்.....

இந்த அனுபவப்பதிவோடு என் கதையை முடித்துக் கொண்டு....தொடரும் அடுத்தடுத்த பதிவுகளில் நான் பரிந்துரைக்க விரும்பும் தளங்களையும்,பதிவுகளையும் அறிமுகம் செய்கிறேன்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது