07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கில்லாடி ரங்கா. Show all posts
Showing posts with label கில்லாடி ரங்கா. Show all posts

Wednesday, May 21, 2014

வளர்ந்து வரும் இளம் சினிமா பதிவர்கள்

இன்றைக்கு என் சக சினிமா பதிவர்கள் பற்றிய அறிமுகங்களைப் பார்ப்போம். அவர்களில் ஒருசிலர் ஏற்கனவே பிரபலமான பதிவர்கள் தான். இருந்தாலும் நான் விரும்பிப் படிக்கும் பதிவர்கள் என்ற முறையில் இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.


1.இயல் இசை நாடகம் சமூகம் - கருணாநிதி அர்ஜித்

இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். தான் ரசித்த திரைப்படங்கள், புத்தகங்கள் பற்றியும் தன் வாழ்வில் நடந்த அனுபவங்களையும் சுவைபட எழுதி வருகிறார். பழகுவதற்கு மிக எளிமையானவர். மற்றவர் மனம் புண்படும்படி ஒருவார்த்தை கூட பேசமாட்டார். அதனாலேயோ என்னவோ இன்னும் பிரபலமாகாமல் இருக்கிறார் :) :). தான் ஒரு அஜித் ரசிகன் என்று இவர் தன்னைப்பற்றிக் கூறிக்கொண்டாலும் பொதுவாக தமிழ்ப்படங்களின் ரசிகன் என்று சொல்லலாம். தமிழ்ப்படங்களின் மீது அவ்வளவு அக்கறை கொண்டவர். கிட்டத்தட்ட வாரத்திற்கு 2 படங்களுக்கு மேல் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து, தமிழ் திரையுலகை வாழவைத்துக்கொண்டிருக்கும் ஒருசில ஆட்களில் ஒருவர்.

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர் என பன்முகங்கள் கொண்ட இவரின் பதிவுகளில் என்னைக்கவர்ந்த ஒருசில பதிவுகள் இதோ


2.பேயெழுத்து! - உமர் ஷெரீப்

இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். எப்போது பார்த்தாலும் பயத்தின் அழகியல், திகிலின் பயத்தியல் என்று திகில் படங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் ஒரு திகிலான ஆள். ஆனால் நட்புடன் பழகுவதற்கு இனிமையானவர். "I'm not a horror fan. I'm the horror" என்று தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் இவர் தீவிர கியர்மோ டெல்டோரோ விசிறி. வெறும் மூன்றாந்தர திகில் படங்களைப் பற்றியல்லாமல், உண்மையான க்ளாஸிக் திகில் படங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்து தமிழில் யாருமே இப்படி திகில் படங்களைப் பற்றி எழுதவில்லை. இவர் ஒருவர் தான் அந்த வேலையைச் செவ்வனே செய்து வருகிறார். விமர்சகராக மட்டுமல்லாமல் நல்லதொரு சிறுகதை எழுத்தாளராகவும் மின்னுகிறார்.

காமிக்ஸ், திரைப்படம், இலக்கியம், சிறுகதைகள், நாவல்கள் என நல்ல படைப்புகள் எதுவாயினும் ஆர்வமுள்ள இவரின் பதிவுகளில் "நாட்டாரியல், தொன்மங்களின் அழகியல்" போன்ற வார்த்தைகளை அடிக்கடி பார்க்க முடியும். :) இவரின் பதிவுகளில் எனக்குப் பிடித்த சில இதோ,


3.Blog about movies,music and much more... - சரண்குமார்

இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். நல்ல சிறுகதை எழுத்தாளரான இவர் வலைப்பூவில் சினிமா பற்றி மட்டுமே எழுதி வருகிறார். நல்ல இலக்கியம், திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர். தனிப்பட்ட முறையில் இவரது சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் அவற்றையும் வலைப்பூவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன். நல்லதொரு திரைப்படக் கதாசிரியராக வரக்கூடியவர்.

இவரது பதிவுகளில் ஒருசில,
ஹாரி பாட்டர். உங்களை குழப்பும் சில கோட்பாடுகள்.
Mad Detective (San taam) [2007] -- Hong kong
The Shining


4.Thirst For Cinema - பரத்

இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். திரைப்படங்களின் மீது அளவுகடந்த ஆர்வமும், வெறியும் கொண்டவர். இவருக்குத் தெரியாத உலகத் திரைப்படங்களே கிடையாது என்று கூறுமளவுக்கு அபரிமிதமான திரைப்பட அறிவு கொண்டவர். எந்தவகையான (Genre) திரைப்படங்களைக் கேட்டாலும், எந்த மொழியில் கேட்டாலும் அதில் உள்ள நல்ல படங்களின் பட்டியலை, நொடியில் சொல்லிவிடுவார். காப்பி அடிக்கும் இயக்குனர்கள் இவரை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். :) வலைப்பூ மட்டுமல்லாமல் முகநூலில் Thirst For Cinema என்ற பெயரில் ஒரு குழுமத்தையும் நடத்தி வருகிறார். திரைப்படங்கள் பற்றிய ஆரோக்கியமான விவாதங்களில் பங்கெடுப்பதை கௌரவமாகக் கருதுகிறவர். திரைப்படங்கள் பற்றி யார் என்ன கேட்டாலும் முகம் சுளிக்காமல், மகிழ்ச்சியுடன் பதில் அளிக்கக் கூடியவர்.

ஆங்கிலத்தில் இவர் எழுதிவரும் வலைப்பூவிலிருந்து சமீபத்திய பதிவுகள் ஒருசில இதோ,
The Objective ( 2008 )
The Amazing Spiderman 2
Doll Master ( 2004 ) Korean


5.By Paradox - Lijoe Jason

இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். இணையத்தில் நான் பார்த்ததிலேயே மிக மிக இளம்வயது பதிவர் இவர் தான். முகநூல் கணக்குப்படி வெறும் 14 வயதே ஆன இளம் பதிவர். தற்போது தான் புதிதாக வலைப்பூ தொடங்கி எழுதி வருகிறார். இவரது பதிவுகளில் சில,

WADJDA (film)-2012-Saudi Arabic- ‘பெண்களின் நிழல்கள்…’
the BOOK THIEF (2013)-Film-‘‘ புத்தகங்களின் குரல்கள்…’’
Memento- A Nonlinear Masterpiece!

நாளை மற்றுமொரு 5 பதிவர்களின் வலைப்பூக்களோடு சந்திக்கிறேன்.

நன்றி.
ஆண்டிச்சாமி.
கில்லாடிரங்கா
மேலும் வாசிக்க...

Tuesday, May 20, 2014

பதிவுலகில் என் மானசீக குரு

அவ்வளவாகப் பிரபலமில்லாத வலைப்பூக்களை, வலைப்பதிவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்வதுதான் வலைச்சரத்தின் முக்கிய நோக்கம் என்பதை நன்றாக அறிந்துள்ளேன். இருந்தாலும் அதை ஆரம்பிப்பதற்கு முன்னர் எனது மானசீக பதிவுல குருவைப்பற்றி இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன். அவரின் பதிவுகளில் எவையெல்லாம் என்னைக் கவர்ந்தவை, எவையெல்லாம் என்னை முற்றிலுமாக ஆட்கொண்டவை என்பதையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஹாலிவுட் பாலா

தமிழ் (சினிமா)பதிவுலகில் இவரைத் தெரியாமல் ஒரு பதிவரோ அல்லது வாசகரோ இருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் செவ்வாய்கிரகத்தில் இருந்துகொண்டு தான் பதிவிடுகிறார் அல்லது படிக்கிறார் என்று அர்த்தம். இங்கே வலைச்சரத்திலே 2008-10 காலகட்டங்களில் அதிக முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பதிவர் இவராகத்தான் இருப்பார். அன்னாரின் பெருமை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்பதால் நான் நேரடியாக விடயத்திற்கு வந்துவிடுகிறேன்.

முதன்முதலில் தமிழில் நான் படித்த வலைப்பூ ஹாலிவுட் பாலா எழுதிய "அக்கரைச்சீமை" தான். திரைப்படங்களிலும், திரைப்படத்துறையிலும் ஆர்வம் அதிகமிருந்ததால், இணையத்தில் பெரும்பாலான நேரங்களில், அது தொடர்பாகத்தான் உலாவிக்கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் உலகசினிமா பற்றித் தெரிந்துகொள்ள ஆங்கில வலைத்தளங்களைத்தான் பெரிதும் நம்பியிருக்க வேண்டியிருந்தது. தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் அத்திபூத்தாற்போல ஏதாவது கட்டுரைகளைப் பார்க்க முடியும். அதுவும் இலக்கிய எழுத்தாளர்கள் புரியாத தமிழில் எழுதி நம்மை ஓட ஓட விரட்டுவார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் வந்து, எளிமையான தமிழில் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழிப்படங்கள் என அனைத்தையும் பற்றி எழுதி, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார் ஹாலிவுட் பாலா என்றால் அது மிகையில்லை.

Following (1998) என்ற பதிவுதான் நான் முதலில் படித்த பதிவு என்று நினைக்கிறேன். அதைத்தொடர்ந்து அவரின் எழுத்தில் மயங்கிவிட்டேன் என்றுதான் கூற வேண்டும். தொடர்ந்து அவர் எழுதிய மற்ற பதிவுகளையெல்லாம் அட்டவணை போட்டு வைத்துக்கொண்டு இரவு பகலாகப் படித்தேன். இவ்வளவு எளிமையாக சுவாரசியமாக ஒரு படத்தைப் பற்றி அறிமுகப்படுத்துவதற்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும். ஹாலிவுட் பாலாவுக்கு நிகர் அவரே.

Full Metal Jacket (1987) குப்ரிக்கின் முத்துக்களில் ஒன்றான இந்தப்படத்தின் விமர்சனம் ஹாலிவுட் பாலாவின் முத்துக்களில் ஒன்று.

BoЯat (2006) இப்படி ஒரு நகைச்சுவைப் படத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை எனலாம். விழுந்து விழுந்து சிரிக்க இந்தப்படமும் இந்த விமர்சனமும் கேரண்ட்டி.

Lost (2004-Present) திரைப்படங்களையே பார்த்துக்கொண்டிருந்த என்னை முதன்முறையாக ஒரு தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க வைத்த விமர்சனம்.

District 9 (2009) வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி வந்த படங்களில் முதன்மையான படம்.

Cannibal Holocaust (1980) இப்படிப்பட்ட கொடூரமான படங்களும் இருக்கிறதா என அதிர்ச்சி + ஆச்சரிமூட்டக்கூடிய படம். இந்த விமர்சனத்தின் மூலம் தான் எனக்கு தெரிய வந்தது.

Saw I – VI ரொம்பவே பிரபலமான இந்தப்படத்தின் 7 பாகங்களைப் பற்றியும் விரிவான அலசல். வேறெங்கும் கிடைக்காது.

The Hunter (2009) என்னது இப்படி ஒரு பெயரில் படம் வந்திருக்கிறதா என்று IMDB-யில் தேடினால் கிடைக்காது. ஏனென்றால் இது ஒரு தமிழ்ப்படம். கலாய்த்தலின் உச்சகட்டம் என்னவென்று இந்தப்பதிவைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Taken 2 (2012) ஒரு வார்த்தை கூட விமர்சனம் எழுதாமல் ஒரே ஒரு படத்தை மட்டும் போட்டு பதிவை வெளியிட்டு வாசகனை சிரிக்க வைக்க முடியுமா ? இந்தப்பதிவைப் பார்த்துவிட்டு நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

வெறுமனே சிரிக்கவைக்க மட்டும் பதிவு எழுதாமல் Kamal On Demand போன்ற பதிவுகளில் தனது ஆணித்தரமான கருத்தை முன்வைத்தது தான் என்னை இவரின் தீவிர வாசகனாக்கியது.

அதேபோல இவரளவுக்கு வேறு எவரும் டாகுமெண்டரி படங்களைப் பற்றி எழுதியுள்ளதாக தோணவில்லை. வெறுமனே பாடாவதி ஹாலிவுட் படங்களைப் பற்றி மட்டுமே எழுதும் பதிவர்களுக்கு மத்தியில் பல பயனுள்ள டாகுமெண்டரிகளைப் பற்றியும் எழுதியுள்ளார். அதில் என் மனதைக் கவர்ந்தது Food, Inc (2008) டாகுமெண்டரி தான். அதைப்படித்துவிட்டு கிட்டத்தட்ட 90% துரித உணவகங்களில் சாப்பிடுவதையே விட்டுவிட்டேன். அதைப்போல இன்னும் பல டாகுமெண்டரிகளை அவரின் எழுத்திலிருந்துதான் தெரிந்து கொண்டேன்.

Oscar அரசியல் ஆஸ்கார் விருதுகள் எந்த அடிப்படையில் தரப்படுகின்றன என்பதை இதைவிட எளிமையாக யாராலும் புரிய வைத்துவிட முடியாது.

தற்போது கருந்தேள் ராஜேஷ் அண்ணனின் "War of the Ring", செங்கோவி அண்ணனின் "மன்மதன் லீலைகள்" போன்ற மின்நூல்கள் எல்லாம் பிரபலமாக இருப்பதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது ஹாலிவுட் பாலா அண்னனின் Pixar Story – EBook மின்நூல் தான் என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு இரண்டு பக்கங்கள் படிக்கலாம் என்று அமர்ந்தவன் தொடர்ந்து ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டுத்தான் மூடிவைத்தேன். அப்படி ஒரு வேகம், சுவாரசியம் நான் எங்குமே கண்டதில்லை.

FX – 01 அதற்குப் பிறகு visual effects பற்றி மிக எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படியான நடையில் ஒரு தொடரை ஆரம்பித்தார். நானும் சரியான வேட்டை காத்திருக்கிறது என்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஏனோ சில காரணங்களால் 4 அத்தியாயங்களுக்கு மேல் அந்தத்தொடரை தொடரவில்லை.

Avatar – டெக்னாலஜி திரைப்படத்துறையில் ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் படித்து இன்புற வேண்டிய தொழில்நுட்பத்தொடர் இது. இந்தத்தொடரிலிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

தற்போது Hollywood – Few Random Chapters என்ற பெயரில் அதியற்புதமான தொடர் ஒன்றை எழுதிவருகிறார். படிக்கப் படிக்க பரவசமூட்டும் இப்படி ஒரு தொடரை எழுதி வருவதற்காக அண்ணனுக்குக் கோடான கோடி நன்றிகள்.

இப்படியெல்லாம் தான் அவரின் எழுத்து என்னை ஆக்கிரமித்தது. இன்னும் அந்த மாயவலையிலேயே சிக்கவைத்திருக்கிறது. ஆரம்பகாலத்தில் எழுதப்பட்ட என் பெரும்பாலான பதிவுகளில் இவரின் பாதிப்பு நன்றாகத் தெரியும். அதனால் தான் என் மானசீக குரு என்று சொன்னேன். (இந்த விடயம் அவருக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை)

திரைத்துறை தொடர்பான அவருடைய அபாரமான அறிவு நம் தமிழ்ப் பதிவுலகத்திற்குக் கிடைத்தது உண்மையில் வரம் தான். அண்ணன் நெடுங்காலம் வாழ்ந்து இன்னும் பல அற்புதமான தகவல்களை தனக்கேயுரிய பாணியில் பதிவுகளாக வெளியிட்டு சேவை செய்ய இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.

பி.கு:
1.இந்தப்பதிவை எழுதச்சொல்லி அண்ணன் எனக்கு ஒரு கம்மர்கட்டு கூட வாங்கித்தரவில்லை. :)
2.நான் தான் இதைக்காரணமாக வைத்து அமெரிக்காவிலிருந்து அவர் வரும்போது சாக்லேட் வாங்கி வரச்சொல்லலாம் என்றிருக்கிறேன். :) :)
மேலும் வாசிக்க...

Monday, May 19, 2014

ஆண்டிச்சாமி (கில்லாடி ரங்கா) - என்னைப்பற்றி

அனைவருக்கும் வணக்கம்,

வலைச்சரத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு, பதிவுகளை எழுத வாய்ப்பளித்த தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் அவர்களுக்கும், சீனா ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி.

முதல் பதிவு சுயஅறிமுகப்பதிவாக இருக்க வேண்டுமென்பதால் என்னைப்பற்றி சில வார்த்தைகள்,

பெயர் : G.ஆண்டிச்சாமி
புனைப்பெயர் & வலைப்பூ : கில்லாடி ரங்கா

பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு தற்போது பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். மேலதிக விவரங்களுக்கு முகநூலில் இங்கே என்னை அணுகலாம்.

நான் ஏன் பதிவுலகிற்கு வந்தேன், எப்படி வந்தேன், அந்த இனிய விபத்து (இப்போ பதிவர்களும் இந்த வார்த்தைய யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்களா பலே பலே) எப்படி நடந்தது என்று அறிய விரும்பினால் இந்தப்பதிவில் சென்று தெரிந்துகொள்ளலாம். அங்கே என்னைப்பற்றிய முழுமையான அறிமுகமும் இருக்கிறது.

பதிவுலகில் காலடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளே முடிந்த குட்டிப்பையன் நான். என்னைக் கவர்ந்த திரைப்படங்களைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததே இந்த கில்லாடி ரங்கா வலைப்பதிவு. ஆரம்பகாலத்தில் பேச்சு வழக்கில் மட்டுமே எழுதினேன். அதுதான் என் பாணியாகவும் இருந்தது. அதுதான் சில படங்களைக் கலாய்ப்பதற்கும் வசதியான மொழியாக இருந்தது. நீதானே என் பொ(பு)ன்வசந்தம் (2012) என்ற பதிவுதான் நான் முதல் முதலாக எழுதியது. அதைத்தொடர்ந்து A History of Violence(2005) (18+) - பாட்ஷா ரீமேக், சூது கவ்வும் (2013) - செம ரகளை மாமா..!!, சிங்கம் 2 (2013) - வாங்கல்லேஏஏஏஏ போன்ற பல பதிவுகளை பேச்சுவழக்கிலேயே எழுதியிருந்தேன்.

ஆனால் போகப்போக எனக்கே அது தவறாகப்பட்டது. பேச்சுவழக்கில் எழுதுகிறேன் பேர்வழி என்று தத்துப்பித்தாக தமிழை எழுதியது மட்டுமில்லாமல், ஆங்கிலத்தையும் வடமொழிச்சொல்லையும் கலந்து எழுதிக்கொண்டிருந்தேன். பிற்பாடு புத்தி வந்தபிறகு, என் பொறுப்பை உணர்ந்து, என்னால் முடிந்தவரை தூய தமிழில் எழுத ஆரம்பித்தேன். இன்றுவரை அதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதவும், முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறேன்.

ஆரம்பகாலத்தில் என்னுடைய கருத்துக்களைப் பதிவாக எழுதி வெளியிட்டுவிட்டு, அதை எவ்வளவு பேர் படிக்கின்றனர் என்ற கவலையே இல்லாமல் என்பாட்டுக்கு இருப்பேன். பிறகு சினிமா சினிமா வலைப்பூ எழுதிவரும் ஹாலிவுட் ராஜ் அண்ணன் அவர்கள் தான், முயற்சி செய்து எழுதுவதை நாம்தான் பலருக்குச் சென்றடைய வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறி பலவகையில் அதற்கு நிறைய உதவிகளும் செய்தார். கில்லாடி ரங்காவின் வளர்ச்சியில் அவருக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. மிக்க நன்றி அண்ணே. அதேபோல ஆரம்பகாலத்தில் முகநூலில் பதிவுகளைப் பகிர்ந்து, ஒரே நாளில் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுத்தந்த கொழந்த அண்ணன் அவர்களுக்கும், கருந்தேள் ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

அதே போல இங்கே வலைச்சரத்திலும் நண்பர்கள் பிரேம்குமார்.சி மற்றும் சே.குமார் இருவரும் என்னை அறிமுகம் செய்து வைத்து பலரைச் சென்றடைய வைத்தனர். அவர்களுக்கும் என் நன்றிகள்.

இனி கில்லாடிரங்காவில் சில பதிவுகளைப் பார்ப்போம். நான் எழுதியதில் எனக்குப் பிடித்த, மற்றவர்களுக்கு உபயோகப்படும் என்று மனதுக்கு நிறைவான சில பதிவுகள்,
1.Magnolia (1999) (18+)
2.டைம் ட்ராவல் தொடர்
3.The Stoning of Soraya M. (2008) - இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் ?
4.Disconnect (2012) - இணைய அரக்கன்
5.Band of Brothers (2001) Mini Series
6. The Hunt (2012) - விரிவான அலசல்
7.An American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை

சுயஅறிமுகம் சுயசொரிதலாக மாறுவதற்குள் இந்தப்பதிவை முடித்து விடுகிறேன். நாளையிலிருந்து எனக்குப் பிடித்த, நான் தொடர்கிற வலைப்பதிவாளர்கள் பற்றிப் பார்க்கலாம். ஆதரவிற்கு மிக்க நன்றி.

ஆண்டிச்சாமி.
கில்லாடிரங்கா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது