புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்...
➦➠ by:
கீதமஞ்சரி
மனிதரெலாம்
அன்புநெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித
தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,
இனிதினிதாய்
எழுந்துஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச்
சாலை;
புனிதமுற்று
மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.
பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப
நூலகங்கள் பல அற்புதமான வாழ்க்கைத் தருணங்களை நமக்கு உருவாக்கித் தருகின்றன. இப்போது
இணைய வழி நூலகங்கள் பல விரல் சொடுக்கிலேயே நம் வாசிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
1. தமிழ் இணையக் கல்விக்கழகம் அவற்றுள் பிரதானமானது. எந்த வித லாப நோக்குமின்றி அரிய சேவையாற்றும்
அதில் ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. வாசித்து மகிழவிரும்புவோர்க்கு
வரமாகும் தளமது.
2. பஞ்சுவெட்டுங்கம்படோ என்னும் விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் தமிழ்நாட்டில் விளையாடப்பட்ட
விளையாட்டுகளில் அதுவும் ஒன்றாம். குதிரைக்கு காணங்காட்டல், கிளிதட்டு, கால் தூக்குகிற
கணக்கப்பிள்ளை, பூக்குதிரை, பச்சைக்குதிரை, ஓயாக்கட்டை, பேய்ப்பந்து, பிள்ளையார் பந்து,
மரக்குரங்கு என்று இன்று நாம் அறிந்திராத பல விளையாட்டுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்
தேவநேயப் பாவாணர் தனது தமிழ்நாட்டு விளையாட்டுகள் கட்டுரையில். தேவநேயப் பாவாணர் எழுதிய அனைத்துப் படைப்புகளையும் தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாய் வாசித்து மகிழலாம்.
3. சென்னை நூலகம் என்ற தளத்தில் குறைந்த அளவு உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றாலும் சங்க
கால இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை பல நூல்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. கல்கி,
நா.பார்த்தசாரதி, மு.வரதராசனார், பாரதியார், பாரதிதாசன், ராஜம் கிருஷ்ணன், சு.சமுத்திரம்,
அறிஞர் அண்ணா போன்றவர்களுடைய நூல்கள் பிடிஎஃப் வடிவில் கிடைக்கின்றன. சாவி அவர்கள் எழுதிய வாஷிங்டனில் திருமணம் வாசித்து மகிழ வாருங்கள்.
4. மதுரை மின்தொகுப்புத் திட்டத்தால் உருவான பல பயனுள்ள நூல்களைத் தெரிந்துகொள்ளவும் தேவையானவற்றைத் தரவிறக்கிக் கொண்டு பயனடையவும் தமிழகம் தளத்துக்கு வாரீர். தேவாரப் பாடல்கள்
முதல் திருவிவிலியம் வரை அனைத்து நூல்களையும் நம் வாசிப்பின் வசப்படுத்தச் செய்யும்
வகையான திட்டம்.
5. Anorexia
Nervosa – கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குளறுபடியான உண்ணல் நோய் என்கிறார் மருத்துவர்
எம்.கே.முருகானந்தன் அவர்கள். இந்நோய்க்கான அடிப்படைக் காரணம் தமது உடல் சம்பந்தமான
தவறான கருதுகோள்தான். இது பொதுவாக இளம் பெண்களிடையே காணப்படும் பிரச்சனையாகும். இளைஞர்களிடையே
காணப்படலாம் என்ற போதிலும் பெரும்பாலும் பெண்களே பாதிப்படைவது அதிகம் என்று கூறி நோய்
குறித்த ஒரு விழிப்புணர்வை உண்டாக்குகிறார்.
நீரிழிவு பற்றிய தவறான கருத்துகளையும் மேற்கொள்ள வேண்டிய சரியான தகவல்களையும் பகிர்ந்துள்ளார். நீரிழிவு
நோயாளிகள் அனைவருக்குமான பயனுள்ள பகிர்வு இது. ஹாய் நலமா என்பது மருத்துவம் தொடர்பான எந்த ஒரு ஐயத்தையும்
நிவர்த்தி செய்யக்கூடிய மிக்க பயன்பாடு மிக்கதான வலைப்பூ என்பதை விடவும் மருத்துவக்
கையேடு என்பதே பொருத்தம்.
6. கொக்குச்
சத்தகம், பிளா, கொட்டப்பெட்டி, கள்முட்டி, மூக்குப்பேணி, தட்டுவம், கால்தட்டம் இவையெல்லாம்
என்ன? நம் முன்னோர் பயன்படுத்திய அன்றாடப் பொருட்களான, இன்று வழக்கிலிருந்து ஒழிந்துகொண்டிருக்கும் இவற்றைப்
பற்றி அறிந்துகொள்ள விருப்பமா? வாருங்கள் இலங்கையின் தகவல் களஞ்சியமான யாழ்ப்பாணம் தளத்துக்கு.
7. உலகின் மிகச்சிறிய உயிரினங்கள் பற்றி தமிழன்
சுவடு தளத்தில் DR. சாரதி அவர்களின் கட்டுரையில் சுண்டுவிரல் அளவுள்ள குரங்கு, 17 அங்குல
உயரக் குதிரை போன்றவற்றைப் பார்த்து ரசிக்க இங்கு வாருங்கள். தாயுமான விலங்கின பறவைகள் பற்றிய பல அற்புத தகவல்களை அறிந்துகொள்ள இங்கு வாருங்கள்.
8. அரைகுறையாய் விட்டுவைத்தக் காரணத்தால் மனம்விட்டு அகலாத ஒன்று காலங்கடந்து முழுமையாய்க் கொண்டாடப்படும்போது எழும் உளக்கிளர்ச்சியை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார் மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள்.
9. இந்தோனேஷியத் தீவுகளில்
ஒன்றான மேடானுக்குப் பயணித்த தன் அனுபவத்தை அழகாக விரிவாக படங்களுடன் பதிவிட்டுள்ளார்
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி அவர்கள். இயற்கை அழகு சூழ்ந்த இந்தோனேஷியத் தீவு பற்றியும், நாய்க்கறி
உண்பது, இறந்தவர்களைப் புதைத்து, பின் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தோண்டியெடுத்து
எலும்புகளை தனியிடத்தில் சேகரிப்பது போன்ற விநோத கலாச்சார பழக்கவழக்கங்கள் கொண்ட பாத்தாக்
இன மக்கள் பற்றியும் ஒரே மூச்சாய் வாசிக்கத் தூண்டும் பதிவு.
10. எனது ஓவியத்தையும் அதன் பின்னணியையும் பதிவு
செய்யவே இத்தளம் என்கிறார் ரஞ்சித்
பரஞ்ஜோதி தனது விதானம் தளம்
குறித்து. மேலே உள்ள ஓவியத்தைப் பாருங்கள். எவ்வளவு ரசனையுடன் வரையப்பட்டுள்ளது! இதைக் குறித்து ஓவியர் சொல்வதாவது - யு. ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காராநாவலில் வரும் ஒரு நிகழ்வு wacom tablet மூலம் வரைந்தது. விதானம் தளத்தில் இதைப் போன்ற பல ஓவியங்களைக் கண்டு மகிழலாம்.
11. பெரும்பாலானோரின்
பார்வையில் நாகரிகமற்றவர்களாகவும் அசுத்தப் போக்கைக் கொண்டவர்களாகவும் பழங்குடியினர் வரையறுக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக் காட்டியே
நகர வாழ் மக்கள் இவர்களை
வன்மையாக ஒதுக்குவதுண்டு. இடைப்பட்ட காலத்தில் மலேசிய பழங்குடியினரைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க முற்பட்டேன் என்ற முன்னுரையுடன் பழங்குடியினர்
பற்றிய தகவல்களையும் அவர்களுடைய காலம், வாழ்க்கை முறை, மொழி போன்றவற்றைப் பற்றிய ஆய்வலசலை
முன்வைக்கிறார் நவீன் செல்லங்கலை அவர்கள் வல்லினத்தில்.
13. அப்புசாமி சீதாப்பாட்டியைத் தெரிந்தவர்களுக்கு
பாக்கியம் ராமசாமி அவர்களைத் தெரிந்திருக்கும். அவர் எழுதிய ஆனியன் ரவாவும் மெனுதர்ம சாத்திரமும் வாசித்திருக்கிறீர்களா? ஆனியன் ரவாவின் நீள அகலங்களோடு கலை அழகை வர்ணித்து அதன் சிறப்பை சிலாகிக்கும் அழகை என்னவென்று சொல்வது? அப்புசாமி.காம் தளத்தில் அநேக நகைச்சுவைக் கதைகளை ஆசைதீர வாசிக்கலாம். அப்படியே எம்.பி.மூர்த்தி எழுதிய அப்பாவின் அரிவாள்மனை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள். வாழையிலையில் சாப்பிட்டிருக்கிறோம். வாழைப்பட்டையில் சாப்பிட்டதுண்டா? கதையை வாசித்துப்
பாருங்கள். உங்கள் வீட்டு அரிவாள்மனையை நேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
எனக்களிக்கப்பட்ட
ஆசிரியப் பணியின் கடைசிநாளான இன்று உங்களிடமிருந்து நிறைவுடன் விடைபெறுகிறேன். இதுவரை
நான் தொகுத்தளித்த தளங்கள் பலவும் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
விடைபெறுமுன் ஒரு நினைவூட்டல்.
நம் பதிவுலகின்
சாதனைத் திலகம் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்கள் தளத்தில் வாராவாரம் சிறுகதை விமர்சனப்போட்டி
நடைபெற்று வருவதை அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளலாம்.
இந்தவார சிறுகதை எலிஸபத் டவர்ஸ். எலியால் கிலிபிடித்து
எலிபிடிக்க முயன்ற கதையை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார். அதற்கான விமர்சனம் எழுதி
அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் வியாழன் அன்றே ஆகும். இன்னும் ஐந்து வாய்ப்புகளே உள்ளன.
இதுவரை பங்கேற்காதவர்களும் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகள்.
இதுவரை என்னுடன்
பயணித்து கருத்திட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் என் அன்பான நன்றி.
(படங்கள்:நன்றி இணையம்)