07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜோதிஜி. Show all posts
Showing posts with label ஜோதிஜி. Show all posts

Monday, December 31, 2012

அறிமுகம் - ஜோதிஜி திருப்பூர்


எனக்கு சீனா அய்யா கடிதம் அனுப்பியதும் இரண்டு நிமிடம் வரிகளை படித்து முடித்து விட்டு யோசித்துக் கொண்டே இருந்தேன்.  ஏற்கனவே இதே வலைச்சரத்தில் நாம் ஆசிரியராக இருந்துள்ளோம். பலரும் நம்மை இதே வலைச்சரத்தில் அறிமுகமும் செய்துள்ளார்கள். மீண்டும் நாம் வருவதை விட வேறு எவரையாவது பரிந்துரைக்கலாமா? என்று யோசித்தபோது அப்போது வேறு சில நினைவுகளும் வந்தது. நான் பரிந்துரைத்தவர்கள் நேரமில்லை என்று அப்போது மறுத்து விட்டார்கள்.

சின்ன வயதில் முயல் ஆமை ஓட்டப்பந்தயம் கதை படித்து இருப்பீர்கள் தானே?

என் வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரையை வெளியிட்டுக் கொண்டேயிருப்பேன். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு என்று மாற்றுவேன். திடீரென்று ஒரு மாதம் முழுக்க அந்த பக்கமே செல்வதில்லை. காரணம் தொழில், குடும்பம் என்ற இரண்டு தண்டவாளத்தில் மேல் ஓடினால் தான் இந்த எழுத்து என்ற பயணம் சுகமாக இருக்கும். தண்டவாளங்கள் சரியில்லை என்றால் வண்டி எப்போதும் கடமுடா தான்.

குறிப்பிட்ட சில பதிவுகளை தவிர்த்து மற்ற அத்தனை ஒவ்வொரு பதிவுகளும் 20 நாளைக்கு முன் திட்டமிடப்படுகின்றது 15 நாட்களுக்கு முன் எழுத்தாக மாறுகின்றது. அடுத்த 10 நாளில் அதை மற்நது விடுவேன். அதன் பிறகே சமயம் பார்த்து வெளியிடப்படுகின்றது. .பத்து நாளைக்கு முன்பாக என் எழுத்துப் பயணம் இருந்து கொண்டேயிருப்பதால் எந்த எழுத்துப் பயணம் இனிதாக இன்று வரையிலும் இருக்கின்றது.

இதே போல் தினந்தோறும் கிடைக்கும் ஒய்வு நேரத்தில் ஏதோவொன்றைப் பற்றி அறியத் தொடங்கும் போது அது குறித்த புரிதலுடன் என் பயணம் தொடங்குகின்றது. புரியாத விசயங்களுடன் சண்டை போட்டு அதனை எப்படி மற்றவர்களுக்கு புரிய வைக்கலாம் என்பதில் கவனம் செலுத்த நானும் இந்த சமயத்தில் பலவற்றையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. 

பத்திரிக்கைகள் கட்டுரையில் பக்கம் முக்கியம். அதை விட அவர்களின் கொள்கை முக்கியம். எனக்கோ வலையுலக வாசிப்பில் வந்த விமர்சனங்கள் முக்கியம். எவர் என் தளத்தில் படிக்கின்றார்கள். அவர்கள் விமர்சனம் எப்படி இருக்கின்றது என்பதை வைத்து என்னை நானே ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொண்டே வருகின்றேன்.  ஆனால் உண்மைகளை முடிந்த வரைக்கும் புடம் போட்டுப் பார்கின்றேன். முழுமையாக இல்லாவிட்டாலும் கூட என் அனுபவ அறிவுக்கு எட்டியவரைக்கும் முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றேன். என் குடும்ப, தொழில், எழுத்து வாழ்க்கையில் முயலாமை, இயலாமை என்ற வார்த்தைகளுக்கு இடமே இருந்ததில்லை.

தேடல் தான் நம்மை மனிதராக வைத்து இருக்கின்றது. 

உண்மையான மனிதராகவும் மாற்ற முயற்சிக்கின்றது.

சீனா அவர்களை முதன் முதலாக டீச்சர் துளசி கோபால் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சியில் சந்தித்தேன். உள்ளே நுழைந்த நான் முன்னால் அமர்ந்திருந்த அவர் இருந்த இருக்கைக்கு அருகே சென்று அமர்ந்தேன். என்னை அவருக்குத் தெரியாது. ஆனால் அவரை நன்றாக எனக்குத் தெரியும். என்னுடன் நண்பரும் வந்திருந்தார். 

நண்பரிடம் சீனா அவர்கள் காதில் கேட்கும்படி வலையுகில் நீங்கள் பார்த்தவரைக்கும் நேர்முறை எண்ணங்கள், அமைதியான ஆர்ப்பபாட்டம் இல்லாத நதி போல ஒரே நேர்கோட்டில் அடுத்தவருக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்து எவரையாவது பார்த்து இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு அவர் தான் இவர் என்று சீனா அவர்களிடம் கைகுலுக்கி நான் தான் ஜோதிஜி என்றேன். ஒரு கணம் திகைத்து நெகிழ்ந்து விட்டார்.

அப்போது தான் என் முகம் அவருக்குத் தெரிந்தது.

பொறுமை, விடாமுயற்சி, ஆழ்கடல் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை என்றால் அது எப்படி இருக்கும் என்பதை சீனா அவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரின் வயதில் நாம் இப்படி ஆரோக்கியமாக இருக்க முடியுமா? என்று பலமுறை யோசித்துள்ளேன். 

அவரிடம் அவருக்குத் தெரியாமலேயே நான் நிறைய கற்றுக் கொண்டிருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கிகளை தீர்த்து விடும் பொருட்டு இந்த வாய்பை எடுத்துக் கொண்டுள்ளேன்.

இந்த வலைச்சரத்தில் அறிமுகமான, அறிமுகமாகப் போகும் பலருக்கும் என்னை அறிமுகம் செய்து கொள்வதை விட என்னை இந்த வலைச்சரத்தின் வாயிலாக அறிமுகம் செய்துவைத்த திரு. அப்பாத்துரை அவர்களின் வரிகளை இந்த இடத்தில் இணைத்து விட்டுச் செல்கின்றேன். 

கடந்த நான்கு வருடங்களாக வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு கிடைத்த பல அங்கீகாரத்தில் இந்த இடத்தில் இதைத் தவிர வேறு எதையும் சுட்டிக்காட்ட தெரியவில்லை. இந்த சமயத்தில் தேவியர் இல்லம் திருப்பூர் என்ற வலைபதிவிற்கு கோடை விடுமுறை. சீனா அவர்கள் கடிதம் அனுப்பிய நாள் முதல் எழுதி வைத்து விட்டேன்.  

இந்த வாரம் முழுக்க இங்கே இரவு நேரத்தில் மட்டுமே இங்கே வர முடியும். ஒவ்வொரு நாளும் என் பதிவில் உள்ள சிலவற்றை ஒவ்வொரு நாளும் தரும் எண்ணமும் உண்டு. என் வலைபதிவு அனுபவங்களையும் தினந்தோறும் எழுதி வைத்து விடுகின்றேன். தினந்தோறும் நான் அறிமுகம் செய்யப் போவது இரண்டு பதிவுகள் மட்டுமே. ஆனால் அதனை என் விமர்சனப் பார்வையில் வைக்கப் போகின்றேன். பஞ்சாயத்தை கூட்ட விரும்பவர்கள் திருப்பூரில் காந்தி நகரில் உள்ள காந்தி வஸ்திராலயம் அலுவலகத்தில் உள்ள ஆலமரத்தடிக்கு அருகே வந்து விடவும்.

உணர்ந்தவர்கள் பெறுவீர்களாக.

வலை என்றால் இணையம். அதென்ன பதிவுகள் என்றொரு வார்த்தை வருகின்றதே என்று யோசித்து இருக்கின்றீர்களா

ஒரு தகவல் நம் மனதில் ஆழ்மனத்தில் பதிவாக படிந்து போய் இருந்தால் அதை எந்த காலத்திலும் அழித்து விட முடியாது.  நவீன விஞ்ஞானம் இதை மனநல மருத்துவத்தில் வைத்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றது. நம் விருப்பங்களை, ஆசைகளை, எண்ணங்களை, நோக்கத்தினை நம்மால் எழுத்துப் பதிவுகளாக மாற்ற முடியும். 

காகிதம் எதிர்காலத்தில் அழிந்தாலும் இந்த வலைபதிவுகள் இன்னும் பல தலைமுறைகள் கழித்தும் பலரின் கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த அரிய வசதியை கண்டு பிடித்து தந்தவர்களுக்கும் இதை இன்று பரவலாக்கிய கூகுள் என்ற அமைப்பை உருவாக்கித்தந்தவர்களுக்கும், இந்த வலைபதிவுகளை அதன் பரிணாம வளர்ச்சியை தந்தவர்களுக்கும்முதலில் நாம் வணக்கத்தை வைத்து விடுவோம்.  

ஆனால் இந்த தமிழை உலகமெங்கும் கொண்டு சேர்ந்த ஈழத் தமிழர்களை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

வலைபதிவுகளில் யார் எழுதுகின்றார்கள்? யாருக்குப் போய்க் சேர்கின்றது? யாருக்கு முக்கியமானது? என்ன பலன்? எப்படி மாறும்?

1. அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் பாதி நேரம் பயத்தோடு, பல நேரம் உழைக்க அக்கறையின்றி இருக்கும்  புத்திசாலிகளுக்கு .....

2. என் எழுத்தை அங்கீகரிக்க பத்திரிக்ககை உலகம் மறுக்கின்றது. நானே எனக்கு ராஜா. என் திறமையை இந்த உலகத்திற்கே கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்று நம்பி எழுதுபவர்களுக்கு...........

3. உண்மையான விசயங்களை பத்திரிக்கை உலகம் பொருட்படுத்துவதே இல்லை. அவரவர் சுயநலம் தான் முக்கியமாக இருக்கின்றது. போட்டு உடைத்து கிழித்து மேய்ந்து எழுத கற்றுக் கொண்டவர்களுக்கு.........

4. என் ரசனைகளுக்கு பத்திரிக்கைகள் தீனி போடுவதில்லை. ஒவ்வொருவர் அனுபவங்களையும் அவர்கள் எழுத்தின் மூலமாக நான் அதிகம் வாசிக்க விரும்புகின்றேன்..........

5. உலகம் முழுக்க பரவியுள்ள தமிழர்களைப் பற்றி நான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்ள....

6. எனக்கு வயதாகி விட்டது. ஓய்வு பெற்று விட்டேன். பரபரப்பான உலகில் பேச பழக ஆட்கள் கிடைப்பதில்லை. நான் வாசிக்கும் புத்தகங்களையும் மீறி எனக்கு ஒரு ஆறுதல் வேண்டும் என்பவர்களுக்கு...

7. பதிவுகள் என்பதெல்லாம் ஒன்றுமில்லை.  எனக்கு எப்போதுமே ஜாலியோ ஜிம்கானாதான்.  நானும் நல்ல விசயங்களை தேடிப்போக மாட்டேன். தேடிவருபவர்களையும் முழு நேரமாக கலாய்த்துக் கொண்டிருப்பதே எனது முழு நேர தொழில் என்பவர்களுக்கு................

8. எனக்கு தினந்தோறும் அலுவலகம் முடியும் போது முடிந்த பிறகு ஒரு மணி நேரம் தான் கிடைக்கும். அந்த சமயத்தில் எவன் சொல்லும் அறிவுரையும் எனக்குத் தேவையில்லை.  நான் எப்போதுமே கும்மி ஆதரவாளன். மொக்கை சங்கத்தின் பொதுச் செயலாளர். அந்த சமயத்தில் தூள் கிளப்பிட்டு தூங்க போயிடுவேன் என்பவர்களுக்கு.....

9. பெற்ற அம்மா ஒரு பெண் என்ற போதிலும் உடன் வாழும் மனைவி, கூடப்பிறந்த சகோதரி, பெற்ற மகள்கள் இருந்த போதிலும் பெண்களை ரசிக்க, ரசித்ததை வார்த்தைகளில் கூச்சமின்றி எழுத அதை பீற்றிக் கொள்ள கூடவே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு.....

10. ஆழமான கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளைத் தேடுவேன். அற்புதமான தொழில் நுட்ப வசதிகளை அறிந்து கொள்ள விரும்புவேன். ரசனையான படங்களை பார்க்க விரும்புவேன். அரசியல், ஆன்மீகம், சமூகம் குறித்த அக்கறையை எழுத்துக்களின் மூலம் உள்வாங்க விரும்புகின்றேன் என்பவர்களுக்கு......

11. அலுவலகத்தில் வீட்டில் இணையம் வசதி படைத்தவர்களுக்கு .................. தமிழ்நாட்டில் யூபிஎஸ் வசதி பெறற புண்ணிய ஆத்மாக்களுக்கு...........

12. பொழைக்கின்ற பொழைப்பை பார்ப்பதை விட்டு விட்டு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்டதை பார்த்துகிட்டு இருக்கானே(ளே) என்று திட்டு வாங்கிக் கொண்டும் இந்த உலகில் பயணிக்க ஆசைப்படுவர்களுக்கு..................

13. தற்போது இணையத்தில் அரசாங்கத்திற்கு பிடிக்காத கருத்துக்களை(?) எழுதுபவர்களை அடக்க 66 ஏ என்ற சட்டம் தற்போதைய புனித தலைவியின் ஆட்சியில் குண்டா சட்டமாகவும் மாறியுள்ளது. அய்யோ நாம் எழுதினால் களி திங்க வைத்து விடுவார்களோ என்று மனதளவில் பயந்து கொண்டே வேடிக்கை பார்க்க மட்டும் நினைப்பவர்களுக்கு ......

14. யாருக்கு ஓட்டுப் போட்டால் நமக்கு வந்து போடுவார்கள். யாருக்கு பகிர்வுக்கு நன்றி எழுதி வைத்தால் நம் பதிவுக்கு வருவார்கள் என்ற பிழைப்புவாதிகளுக்கு................

எதிர்கால உலகம் இந்த வலையின் பின்னால் மட்டும் அணிவகுத்து நிற்கும் போது பலருக்கும் பலவிதமான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.

தகுதியிருப்பவர்கள் பிழைப்பீர்களாக.

அடுத்த வருடம் சந்திப்போம்.
ஜோதிஜி திருப்பூர்.
படங்கள் 4 தமிழ்மீடியா.காம்


மேலும் வாசிக்க...

Sunday, July 25, 2010

வெளிச்சம் (வலைச்சரம் ஜோதிஜி 7வது நாள்)

குரு வணக்கத்தில் தொடங்கி ஆறு போல் நகர்ந்து இன்று விடைபெறும் நேரம்.

நான் வாசிக்கும் பலரும், என் இடுகையில் எழுதும் எழுத்துக்களை ஆதரித்த வர்களும், புதிய முகங்கள் பலரும் ஒன்று சேர்ந்து இந்த வலைச்சர பணியில் நல்ல அனுபவத்தை தந்தமைக்கு நன்றி. அன்பென்ற சவுக்கால் என் விவேகத் தை அதிகமாக்கிய சீனா அவர்களுக்கு முக்கிய நன்றி.தினந்தோறும் செய்தி ஓடையின் மூலமாகத்தான் தேவியர் இல்லத்தை படிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுருக்கிறது. அவர்களுக்கும், இந்த நேரத்தில் மற்ற நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி.
எனக்குள்ளும் இன்று வரையிலும் ஏராளமான இருள் அப்பிக்கிடக்கிறது. மூளையில் இருக்கும் ந்யூரான்களில் எனக்கு முன்னால் வாழ்ந்த தலைமுறை களின் பாதிப்பு இன்னமும் இருக்கிறது. இறை வெறுப்பு, இறை மறுப்பு என்று வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அனுபவங்கள் கொடுத்த பாதிப்பில் இன்று இறை என்பது இப்போதும் தேடலாகத் தான் இருக்கிறது. நடிகர் சிவகுமார் போலவே கோவிலுக்கு செல்வதை விட என்னுள்ளேயே தேடிக்கொண்டு இருக்கின்றேன். கோவிலுக்குச் சென்றாலும் அங்கு நடக்கும் பல நிகழ்வுகள் மொத்தமாக யோசிக்க வைக்கின்றது.

அச்சத்தை உருவாக்கி பிழைப்பு நடத்தும் மனிதர்களையும், வெளியே கை ஏந்திக்கொண்டு பிழைக்க வழியில்லாமல் வாழும் மனிதர்களையும் தான் ஆதங்கமாய் பார்க்க வைக்கின்றது. இந்த இரண்டு மனிதர்களைப் பற்றியும், சமூகத்தில் உள்ள இடைவெளியையும் இன்று வரைக்கும் எனக்கு அடையாளம் காட்டிக்கொண்டுருப்பவர்கள் வால்பையன், வினவு தளங்கள்.

எதையும் கேள்விகள் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் குறைந்த பட்சம் அமைதி கிடைக்கலாம். அடுத்த மனிதனைப் பற்றி யோசிக்க வைக்க முடியுமா?

அதைத்தான் இருவரும் செய்து கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம், வெறுப்பு, குழுமனப்பான்மை, குறுகிய நோக்கம் போன்ற அத்தனையும் தூக்கி எறிந்து பார்த்தாலும் இருவரின் படைப்புகள் மூலம் என்னையும் என்னைச் சுற்றியுள்ள சமூகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன். என்னால் நீக்க முடியாத இருள் என்பது என் குழந்தைகளுக்காவது வராமல் இருக்க வேண்டும்.

நான் கடந்த ஒரு வருடத்தில் வலைதளத்தில் வாசித்த பல ஆக்கபூர்வமான கட்டுரைகளுக்கு மத்தியில் இந்த பெண்மணி எழுதிய கட்டுரை என்னுள் சாகும் வரைக்கும் ஞாபகத்தில் இருக்கும். இதைவிட எளிமை சிறப்பு என்று என்னால் வேறு எதையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. உணர்ந்தவர்களால் படைக்கப் பட்ட படைப்பு என்பது எப்பொழுதுமே என்பது சகாவரம் பெற்றது.

மதநம்பிக்கை உள்ளவனின் எண்ணத்தில் இந்த வால்பையன் அடுத்த சம்மட்டி அடிகள் எவராலும் மறுக்க முடியாது.

"எனக்கு எல்லா மதமும் ஒன்று தான், எல்லா கடவுளும் ஒன்று தான், உங்க ளுக்கு பல பல வடிவங்களிலும், பல பல பெயர்களில் இருந்தாலும் எனக்கு குழுமனப்பான்மையை உருவாக்கி மக்களிடயே அமைதியை குழைத்து அடிச்சி கிட்டு சாவுங்கடான்னு உருவாக்கப்பட்டதே கடவுள்! அப்படிபட்ட கடவுளை என்னால் எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரை மனித சமுதாயத் திற்கு எள் ளலவும் பயனில்லாத கடவுளை நான் எப்படி வணங்கமுடியும்!"
திருப்பூரில் பணம் கொழுத்தவர்களின் மத்தியில் வாழும் வாழ்க்கையில் பயமே அறியாதவனின் வாழ்க்கை தேவியர்கள் அறிமுகமானதற்குப் பிறகே அத்தனை பயமும் வந்தது. எழுதத் தொடங்கிய பிறகே மொத்த விவேகமும் வந்துள்ளது. சீனா போன்றவர்களால் இன்னமும் வளர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது என்பதை புரிந்து கொண்டேன்.

வலைச்சரம் ஆசிரியர் பணி என்பது எத்தனை முள்படுகை போன்றது என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். வலைச்சரம் தமிழ் மண மணிமகுடத்தில் வராமல் இருக்கலாம். ஆனால் வாசிப்பு அனுபவத்தை தேடிக் கொண்டு இருப்ப வர்களுக்கு இந்த தளம் வாழ் நாள் பொக்கிஷம்.

இலங்கை குறித்து நான் கொடுத்த தலைப்புகள் போல என்னால் நூறு அற்புத தளங்களை சுட்டிக்காட்ட முடியும். மற்ற தலைப்புகளைச் சுட்டிக் காட்ட எனக்கு உதவிய நண்பர்கள் போல் இல்லாமல் நானே உணர்ந்துபடித்த தளங்கள் அது. ஆனால் அத்தனையும் இங்கு சுட்டிக்காட்ட முடியவில்லை என்ற ஆதங்கம் அதிகம் உண்டு. பல நண்பர்களின் தளங்களையும் சுருக்கம் கருதி என்னால் சுட்டிக் காட்ட முடியவில்லை.

நான் எழுதிய ஈழம் குறித்த கட்டுரைகள் இன்று வரைக்கும் பலருக்கும் தேட லாய் இருக்கிறது. எட்டு வருடங்கள் மீதம் உள்ள ஈழ வரலாற்றை இப்போது என்னுடைய மதிப்புக்கு உரியவர் கொடுத்த தாக்கத்தால், உதவியால் புத்தகத் திற்கான வேலைகள் நடந்து கொண்டுருக்கிறது.

அந்த புத்தகம் இதுவரையிலும் வெளியில் சுட்டிக் காட்டப்படாத ஈழ மக்களின் சமூக வாழ்க்கையை சுட்டிக்காட்டும். இது குறித்து எழுதிய முதல் வருட இறுதி கட்டுரை இது.
தேவியர் இல்லம் இடுகையை உருவாக்கித் தந்த நாகா மூலமாக இந்த நல்ல பயணம் இன்று வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. அன்று முதல் இன்று வரையிலும் என் எழுத்துலக வளர்ச்சியில் தனிப்பட்ட அக்கறை காட்டு வலையுலக குருஜீ ராகவன் நைஜீரியாவுக்கு (பின்னூட்ட சுனாமி நன்றி கார்த்திகை பாண்டியன்)என்னுடைய குரு வணக்கம்.

ஏழு நாட்களும் தொடர்ந்து வந்து வாசித்த, பின்னூட்டமிட்ட, ஓட்டு அளித்த, பாராட்டிய, எண்ணங்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. படங்களை தந்த 4தமிழ்மீடியாவுக்கும் நன்றி.

ஜோதிஜி

தேவியர் இல்லம். திருப்பூர்

23.07.2010

நாம் தமிழர்
மேலும் வாசிக்க...

Saturday, July 24, 2010

கரும்புலி (வலைச்சரம் ஜோதிஜி 6ம்நாள்)

எழுத்தாளர் சுஜாதா தேடலை அதிகப்படுத்தியதுடன் நிறைய ஆச்சரியங்களையும் அறிமுகப்படுத்தியவர். சரித்திரம், பூகோளம், வேதியியல்,தொழில்நுட்பம், போன்றவற்றை வெகுஜனமும் படிக்கும் அளவிற்கு எழுதுபவர்கள் மிகக்குறைவு. இவர் தொழில் நுட்பம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தாலும் இவரின் எழுத்தாற்றலும், நகைச்சுவையில் நகர்த்தும் மெல்லிய நீரோடை போல் உள்ள நடையும் நம்மை ஆச்சரியப்படுத்தும். வலைதளத்தில் தொழில் நுட்பம் குறித்து எழுதுபவர்கள் கூட பின்னோட்டத்தில் உங்களைப் போல எழுத முடியவில்லை என்று வருத்தப்பட்டுருக்கிறார்கள். வெகுஜன வாசிப்பு. மக்கள் தொலைக்காட்சி வரைக்கும் பாராட்டுரைகள் வந்தாலும் சுயம்பு போல குறுகிய காலத்தில் வளர்ந்தவர். இவரை ஜுனியர் சுஜாதா என்று அழைக்கலாம். தப்பில்லை. சொந்த பெயரைப் போலவே, பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளும் மொத்தத்திலும் சிறப்பு.
சுடுதண்ணி
வலைதளத்தில் இந்த விசயம் கிடைக்குமா என்று தேடி அலைந்து கொண்டு இருப்போம். நான் வலை உலகத்தை பார்த்த வரைக்கும் நான் பல மாதங்களாகத் தேடிக் கொண்டுருந்த ஒருவரைப் பற்றி எங்கு தேடியும் காணவில்லை. இவர் பின்னூட்டத்தை ஒரு தளத்தில் கண்டபோது கிராமத்தில் இருந்து சென்றவர். எப்படி எழுதுகிறார் என்பதை பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்த போது நான் தேடிக் கொண்டுருந்த நபருக்கு உதவியாளராகவே இருந்துள்ளார். இன்று இந்தியாவில் ஏற்பட்ட தொலை தொடர்புக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த (Dr.Sam Pitroda) முனைவ்ர். சாம் பிட்ரோடா பற்றி எழுதியுள்ளார்.

பன்னிக்குட்டி ராம்சாமி. இந்த பெயரை உச்சரிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு தடவை இவர் இடுகைக்குச் சென்றே ஆக வேண்டும். வயிறு புண்ணாகிவிடும். ஆனால் அத்தனை சிரிப்புக்குப் பின்னாலும் நீங்கள் சிந்தித்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு வாழைப்பழ ஊசி போல் ஒவ்வொன்றையும் நாசூக்காக சுட்டிக் காட்டுகிறார்.

இவரைப்பற்றிய அறிமுகம், வலைதள பெயர் என்று ஒவ்வொன்றுமே அற்புதம் பன்னிக்குட்டி மன்னிக்க சில்பா குமார். வலையில் எவருக்கு ஆப்பு அடிக்க லாம் என்று அடிக்க காத்துக் கொண்டுருக்கும் பலருக்கு மத்தியில் மாப்பூ நீங்கள் சூப்பரரு.

இவர் தன்னைப்பற்றி பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் என்று சொல் கிறார். அதைப் போலவே இடுகையின் தலைப்பும் வெண்ணிற இரவுகள். நடுத்தர வர்க்கம் அல்லது பலவற்றையும் பார்த்து நம்மை காத்துக் கொள்ள வேண்டிய நடுங்கும் வர்க்க மாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். ஆனால் எழுதக் கிடைத்த வலைதள வாய்ப்பைக் கூட சுகமாய் சொறிய பயன்படுத்தாமல் ஒவ்வொரு இவருடைய ஒவ்வொரு சிந்தனைகளும், நோக்கங்களும் படிப்பவரை பிடித்து உலுக்கும் அல்லது நாம் வாழ்வது வாழ்க்கையா என்று யோசிக்க வைக்கும்.

நம்முடைய அரசியல் வியாதிகள் தமிழ் வளர்க்கும் லட்சணத்தையும் கொஞ்சம் பார்த்து விடுங்களேன். எடுக்கும் எந்த துறையையும் பற்றி நோண்டி நொங்கெடுப்பது இவரின் கை வந்த கலை. கீதையைப் போலவே இவரின் ஒவ்வொரு தலைப்புகளும். வாழ்த்துகள் கார்த்திகேயன்.

நான் ஈழம் தொடர்பாக எழுதிக் கொண்டுருந்த போது பல விஷயங்களைத் தேடி அலைந்த போது இராஜராஜன் அறிமுகப்படுத்திய தளம் இது. பிரபாகரன் குறித்து நிறை குறையாக எத்தனையோ விஷய்ங்கள் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் பின்னால் உறுதியுடன் அணிவகுத்து நின்ற கரும்புலிகள் குறித்து எத்தனை பேர்களுக்குத் தெரியும். அவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அவர்களின் குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட எண்ணங்கள் வரைக்கும் இந்த தளத்தில் நீங்கள் உணரலாம். ஈழம் தொடர்பாக தேடல் உள்ளவர்களுக்கு இது பொக்கிஷ ஆவணம். சந்திரவதனாவுக்கு வாழ்த்துகள்.

உலகத்தில் உள்ள தமிழர்களில் ஈழ மக்களின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பானது. அதைப் போலவே தீவுக்குள் நான்கு திசைகளாக இன்று வரையிலும் ஒற்றுமையில்லாமல் வாழும் மக்களும் தமிழ்நாட்டு தமிழ்ர்களைப் போலத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களை கொண்ட ஈழ வலைதளங்களில் பற்பொடி பெயர்களும் இருப்பதும் ஆச்சரியமே. பெரும்பான்மையான எதிர்ப்புகளை கடந்தும் இவர்கள் இருவருமே இன்னமும் செயல்பட்டுக் கொண்டுருப்பது மொத்தத்தில் அதிசயமே. எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று வரலாற்று நிகழ்வுகளை படைத்துக் கொண்டுருப்பவர்கள்.

சந்துருவின் பக்கங்கள். கிருத்தியம்.

புத்தகத்தைப் பார்த்து நான் எழுதிய பல விசயங்களை ஹேமா எழுதிய இந்த தலைப்பு அவரின் திறமைக்கு மற்றொரு உதாரணம். பெயர் சொன்னால் போதும். தரம் எளிதில் விளங்கும்.

உலக வானொலி முதல் உள்ளுர் செய்திகள் அறியும் ஆவல் உள்ளவர்களுக்கும் இந்த இரண்டு இணைப்புகளும் உதவும்.

ஒன்று. இரண்டு.



கலைஞர் அடுத்து கை வைக்கப் போவது இவரைத்தான். காரணம் நீங்களே இதைப் பார்த்து விடுங்கள்.


ஒரே ஒரு முறை இவர் மேல் குத்து விட்டு நகர்ந்து விடுங்கள். காரணம் உங்கள் மனதிற்குள் இருக்கும் விசயம் தான்.
மேலும் வாசிக்க...

Friday, July 23, 2010

நிர்வாண அழகு (வலைச்சரம் ஜோதிஜி 5வது நாள்)

நேற்றைய 4 வது நாளில் சட்டம் தன் கடமைமையச் செய்து விடும் என்று சொல்லியிருந்தது இத்தனை சீக்கிரம் பலிக்கக்கூடும் என்று கனவிலும் கூட யோசிக்கவில்லை. உண்மைகள் என்பது நிர்வாணம் போன்றது தான். சவுக்கு என்ற தளத்தை தொடர்ந்து வாசிக்கும் போது மனதில் பயத்துடன் ஆச்சரியமும் தந்தது. முந்தைய அரசாங்கத்துடன் போராடிய நக்கீரன் போல இப்போது எவரும் இல்லை. இப்போது சவுக்கு தளத்தில் எழுதி வந்த சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைப்பற்றி முழுமையாக எழுதுவதற்கு இந்த தளம் சரியானது அல்ல. கலைஞர் குறித்து அதிகமாக எழுதி வரும் கிருஷ்ணகுமார் அவர் புரிந்துணர்வை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றேன். இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு. இடையில் புகுந்து லாவணியை மற்றவர்கள் தொடங்கி விடக்கூடாது என்பதற்காக வலைதளத்தைக் இங்கு என்னால் குறிப்பிடமுடியவில்லை. இதன் நோக்கத்தை அவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரின் உண்மையான பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன். செய்வாரா? இதை தான் நான் தொடக்கத்தில் கலைஞரை புரிந்து கொண்ட வகையில் நான் எழுதிய அய்யாவுக்கு அடி வாங்கும் தமிழன் எழுதுவது?

இடுகையில் எழுதத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் எது குறித்தும் கவலைப்படாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதன் முழுமையான அர்த்தமாய் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டுருப்பவர். இவர் வாழும் நாட்டில், பழகும் மனிதர்களுடன் முக்கால்வாசி நேரம் ஆங்கிலத் தில் தான் உரையாட வேண்டும். ஆனால் எழுதும் சிந்தனைகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு ருப்பாரோ என்று யோசிக்கத் தோன்றும். வாழ்த்துகள் செந்தில்.
அறியாத பல தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதுடன் தமிழ் ஆசிரியர் போலவே அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு சாதித்துக் கொண்டுருக்கும் மணிவாசகம்,
இவரை மறுபடியும் யாராவது கோபப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர் எழுதிய இந்த தலைப்பு நாலைந்து நாட்கள் மனதிற்குள் திடும் திடுமென்று அடிக்க வைத்தது. கலாச்சாரம் போன்ற கருமாந்திரங்களை விட முடியாமல் சுமந்து கொண்டுருக்கும் மனம் இந்த தலைப்பில் வந்த வார்த் தைகள் அத்தனையும் நிதர்சனமாய் உரைக்க வைத்தது.

என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்... நம்பறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே... வெத்து வேட்டுன்னு தோணுமே.................................................... ..



பெண்குழந்தைகளின் முற்போக்குத்தனமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பல முறை தவிப்பதுண்டு. இவர் கொடுத்த சவுக்கடியை பார்த்து விட்டு உண்மையும் இது தானே என்று வீட்டில் படித்து விட்டு வக்காலத்து வாங்கினது தான் இவரின் வெற்றி? இது புலம் பெயர்ந்தவர்களுக்கு உண்டான வலி மட்டுமல்ல. இங்கும் இப்படித்தான் ஆகி விடும் போலிருக்கு???????
ரௌத்திரம் பழகிக் கொண்டுருப்பவர் கண்டதுண்டமாய் ஆக்கிவிட்டார்.
மாலன் சிவசங்கரி தலைமையில் அக்னி என்ற அமைப்பின் சார்பாக சென்னை யில் ஒரு விழா நடந்தது. கலைஞர்(சங்கத்தமிழ்)குமரி அனந்தன்(இடைக்காலத் தமிழ்) வலம்புரி ஜான் (தற்காலிகத்தமிழ்) என்று ஒவ்வொரு வரும் ஒரு மணி நேரம் பேசினார்கள். மயங்கிய அந்த பேச்சுக்குப் பிறகு பாலாசி எழுதிய இந்த தலைப்பு கிறங்க வைத்தது.

இராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் என்று படித்து இருப்போம். முழு விபரங்கள் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அற்புதமான படங்களுடன் எளிமை யான விளக்கத்தையும் தந்துள்ளார். வரலாற்றுத் தகவல்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சுவராஸ்யம் தரக்கூடிய பல விசயங்களும் உண்டு.

இவர் திரைப்பட இயக்குநர். தமிழ் தட்டெழுத்து சிரமத்தை அவரின் ஓய்வற்ற உழைப்பைப் பற்றி பலமுறை பேசியுள்ளார். ஆனால் நிரந்தரமாய வலை உலகத்தில் எழுதுவதை நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. இவர் கொடுக்கும் ஓரு பின்னோட்டம் என்பது ஓன்பது இடுகைகள் எழுத உத்வேகம் கொடுக்கும். புத்தாண்டு என்பதை இவர் பார்வையில் படித்துப் பாருங்கள். ரொம்பவே வருத்தப்படுகின்றேன் ஷண்முகப்பிரியன் அவர்களே.................

திருப்பூரில் இருந்து எழுதிக் கொண்டுருப்பவர்களுக்கு முக்கிய பாலமாக இருக்கும் வெயிலான் ரமேஷ் போல வலைதளத்தில் தொழில் நுட்ப பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் திரு. வடிவேல் அவர்களின் மற்றொருமொரு முக்கிய மகத்தான சேவை தெரிந்த தெரியாத முக்கியமான தலைப்புகளை. தளங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்வது. வாழ்த்துகள் வடிவேல். நீங்கள் Google Buzz ல் பயணம் செய்தால் போதும்?

சில சமயம் இவர் மாவு பிசையும் போது தண்ணீர் அதிகமாக (A) போய்விடும். ஆனா இவர் இப்படி எழுதும் போது எந்த Q வும் வந்து நிற்காது. அப்புறம் Y ன்னு வந்து நிற்பாங்க?

இன்றைய மனிதன் பெற்ற பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா? பயன்படுத்து, தூக்கி எறி? எளிமையான ஆங்கிலத்தை பொறுமையாக உணர்ந்து கொள்ளுங்கள்.

2002 முதல் அலுவலக பணியின் காரணமாக சராசரியாக தினந்தோறும் 12 மணி நேரம் கணினியுடன் வாழ வேண்டிய வாழ்க்கை. இப்போது தொழில் வாழ்க்கையில் மடிக்கணினி வந்து கக்கூஸ், குளியல் தவிர கட்டிய பொஞ்சாதி போலவே உடன் இருந்தாலும் வலைதளம் என்பதை தொழில் சார்பாக பார்த்து பழகியவனுக்கு 2009 மே மாதத்தில் தான் தமிழ் வலைஉலகம் அறிமுகமானது. தொடக்கத்தில் நண்பர் கொடுத்த எச்சரிக்கையும் மீறி முதல் இரண்டு மாதங்கள் கண் வலிக்க பார்த்து பார்த்து தேடிய போது இதன் உண்மையான ரூபம் புரிந்தது. நான் உணர்ந்தவற்றை இவரும் புரிந்துள்ளார்.

மேலும் வாசிக்க...

Thursday, July 22, 2010

பிரபல்யம் (வலைச்சரம் ஜோதிஜி 4ம் நாள்)

எழுதிப் பார்க்கலாம் என்று ஒரு வலைதளத்தை தொடங்கி விடுகிறீர்கள். சில தலைப்புகள் பரவலாக வாசிக்கவும் செய்ய அடுத்து என்ன தோன்றும். எப்படி மற்றவர்களைப் போல நாமும் பிரபலம் ஆவது என்று நகரத் தொடங்கி கண்டதையும் எழுத நினைத்தால் என்ன ஆகும்? சில சமயம் சட்டம் தன் கடமையைத் செய்து விடக்கூடும். இது போல் வாய்ப்பு இருக்கிறதா? என்று யோசிப்பதை விட எழுதும் போது எல்லாவிசயங்களையும் கவனத்தில் கொண்டு எழுதினால் சிறப்பு.
வலைதளத்தில் எழுதுபவர்கள் சங்கம் என்று ஒவ்வொரு முறையும் கிளம்பும் போது உருவாகும் நிகழ்வுகள் ஏதோ ஒரு இடுகைக்குத் தான் உதவியாய் இருக்கிறது. ஆனால் எத்தனை பேர்களுக்கு கண்ணாவின் உழைப்பு தெரியும்? நீங்கள் இந்த ஒரு தளத்தில் நுழைந்தாலே போதும். தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மட்டும் தான் உங்களுடையது. அந்த அளவிற்கு ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து அசாத்தியமான பணியை உருவாக்கி சாதித்து காட்டியுள்ளார். .
தமிழ்நாட்டில் இந்தியாவில் உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேர்கள் வலை தளத்தில் எழுதிக் கொண்டுருக்கிறார்கள் என்பது இவர் சொல்லும் கணக்கைப் பாருங்கள். மதிப்புக்கு உரியவர் எனக்கு தெரிவித்த கணக்கை விட கண் மண் தெரியாமல் தோழர்களின் தமிழ் ஆர்வம் மேலேறிக் கொண்டுருக்கிறது. ஏதோ ஒரு வழியில் கூகுள் இன்று தமிழால் மிதந்து கொண்டுருப்பதைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது. இதில் இவர் சேர்கக மறந்த திருப்பூர்.
இந்தியாவில் உள்ள அரசியல் வியாதிகளுக்கு இந்தியா என்பது விவசாய நாடு என்பதே ஏறக்குறைய மறந்து விட்டது. வலைதளத்திலும் விவசாயம் குறித்து எழுதுபவரும் மிகக் குறைவு. இந்த தளத்தைப் பாருங்கள். வீட்டுக்காவது உதவும்.
இவர் சீயான் விக்ரம் கந்தசாமி அல்ல. கோயமுத்தூர் கந்தசாமி. வயது 75. மற்றொரு சிறப்பு ஓய்வு பெற்ற ஆசிரியரும் விஞ்ஞானியும் கூட. இவர் பார்வையில் வலைதள உலகம் எப்படி இருக்கிறது தெரியுமா?

" தினமும் ஒரு மணி நேரமாவது பதிவுலகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், என்னைத்தவிர மற்ற பதிவர்கள் எல்லோரும் மிக மிக சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் எழுதும் அளவைப் பார்த்தால் இந்த பதிவு எழுதுவதைத்தவிர அவர்கள் வேறு எந்த வேலையையும் (தூங்குவது உட்பட) பார்க்க முடியாது என்பது என் கணிப்பு. அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்று பல இரவுகளில் தூக்கம் வராத சமயங்களில் யோசித்திருக்கிறேன். 75 வயதில் என்ன தூக்கம் வரப்போகிறது ! "


நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி என்பார்கள். அறுபது வயது என்றால் நம்முடைய உடம்பே நமக்கு எதிரியாய் தெரியும். ஆனால் இவரின் வலை தளத்தில் உள்ளே நுழைந்து மொத்த தலைப்புகளையும் பாருங்கள்.

நக்கல்,நையாண்டி, கலகல என்று எதற்கும் பஞ்சம் இல்லை. முடிந்த வரைக் கும் கிராமம் முதல், குடும்பம் வரைக்கும் அத்தனை தலைப்புகளிலும் சும்மா புகுந்து விளையாடியுள்ளார். அத்துடன் வயது என்பது ஒரு குறையே அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். எத்தனை அறிவுரை சொன்ன போதும் அவரையும் பிரபல்யம் என்ற பலாப்பழம் ஆட்டிப்படைக்க ஆளைவிட்டால் போதும் என்று ஜகா வாங்கிவிட்டார்.

பிரபல்ய தல பாலாவுக்கு இதை சமர்பிக்கின்றேன்.
மேலும் வாசிக்க...

Wednesday, July 21, 2010

மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் (வலைச்சரம் ஜோதிஜி 3ம் நாள்)

ஒவ்வொரு முறையும் தமிழ்மணத்தில் சில அறிவிப்புகள் வரும். கண்களை இடுக்கிக் கொண்டு அந்த சிறிய எழுத்துக்களை படிக்கும் போது ஆச்சரியமாய் இருக்கும். தெரியாத பல புதிய வார்த்தைகள். மற்ற அத்தனை திரட்டிகளிலும் விளம்பரங்கள் உண்டு. ஆனால் இன்று வரைக்கும் தமிழ்மணம் தளராத மனமாய் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் திரு. செல்வராஜ். ஆனால் செல்வராசு என்று தான் எழுதுகிறார்.
இவருடைய தளம் எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் தெரிய வந்தது. முடிந்தவரைக்கும் தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதி வரும் எனக்கு இவருடைய இடுகையில் எழுதியுள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் இவர் பயன் படுத்தும் தமிழ் வார்த்தைகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வேதியியல் துறையைச் சார்ந்தவர். தள வடிவமைப்பும் மிகச் சிறப்பு. கடைசியாக எழுதியுள்ள தலைப்பு மட்டுமே சற்று ஆதங்கமாய் படைத்துள்ளார்.

இவர் கிராமத்துவாசியாக வாழ்க்கையைத் தொடங்கி தொடர் உழைப்பினால் இன்றைய உச்சத்தை தொட்டுள்ளார். இவர் எழுதும் நடை என்பது சமகாலத்தில் எவரின் தளத்திலும் பார்க்காத ஒன்று. ஆர்ப்பாட்டம் இல்லாத அக்கறையான ஒவ்வொரு சிந்தனைகளும் ஏராளமான ஆச்சரியத்தை உருவாக்கும். அரசியல் முத்தமிழ் காவலர் அல்ல. மொழி வளர்க்கும் உண்மைத் தமிழன்.

தமிழ் படித்தால் சுய வாழ்க்கைக்கு சோறு போடுமா? இவருக்கு கற்ற தமிழே சோறும் போடுகிறது. மற்றவர்கள் உணர வேண்டிய அளவிற்கு சுய ஒழுக்கத் தையும் போதித்தும் உள்ளது. நான்கு தலைப்புகள் எழுதி விட்டு கூட்டமாய் வந்த ஈ மொய்க்கவில்லையே என்று கருதாமால் தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டுருப்பதற்கே முதல் வணக்கத்தை சொல்ல வேண்டும். சமகாலத்தில் ஆங்கிலத்தை நோக்கி படையெடுக்கும் அத்தனை மனிதர்களும் படிக்கப்பட வேண்டிய தளம் இது. கிராமத்தில் தொடங்கிய இவரின் பயணம் இன்றும் நம்மால் மறந்து போய்க் கொண்டுருக்கின்ற தமிழ் மொழியின் வேர்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியை அற்புதமாக செய்து கொண்டு இருக்கிறார். தள வடிமைப்பு, எளிமை, சுருக்கம், நோக்கம் என்று எல்லா விதங்களிலும் முதன்மையான முக்கிய மனிதராகத் தெரிகிறார். வலை உலகம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் வரையிலும் இவரால் படைக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றிக் கடன் பட்டவர்கள்.

தனது பெயரையே கல்பனா சேக்கிழார் என்று வைத்துள்ளார். நூலகத்தில் யாராலும் தொடப் படாமல் தூசி அடைந்த பொக்கிஷம் போல இவரின் இடுகை இருக்கிறது. முழுக்க ஆய்வுக் கட்டுரையாகவே படைத்துள்ளார். கல்லூரியில் தமிழ் மொழி பயிலும் நண்பர்களுக்கும், குறிப்பிட்ட விசயங்களைத் தேடி அலைபவர்களுக்கும் இவரின் உழைப்பு நிச்சயம் பலன் அளிக்கும்.

இவர் இடுகை தொழில் நுட்பத்தையும் அவஸ்யம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இடுகைக்கு ஆடம்பர அலங்காரம் தேவையில்லை, ஆனால் அதுவும் முக்கியமானதே. வெகுஜன பத்திரிக்கைகளின் ஆதரவையும் பெற்ற உங்கள் போன்றவர்களின் பணி தேங்கி விடக்கூடாது. தமிழர்களால் போற்றப் பட வேண்டிய தமிழ்மகள்.
இவர் சிலப்பதிகாரத்தை மட்டும் தான் படைக்கவில்லை. ஆனால் அதற்குச் சமமான உழைப்பு அத்தனையும் இவர் இடுகையில் உண்டு. சுவராஸ்யம், எளிமை, தமிழ் குறித்த மற்ற தளங்கள், உலக அறிவு, என்று தொடங்கி இவரும் ஒரு பிரபல்ய வட்டத்தில் இருப்பதால் இவரின் உழைப்பு அத்தனையும் சரியான பாதையில் பயணித்துக் கொண்டுருக்கிறது. தீராநாதி, காலநதி போல வற்றாத வளம் கொழிக்கும் இவர் தமிழ்நதி.
சுசீலா என்ற பெயரே தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானதே. குரலால் நம்மை மயக்கியவரைப் போலவே இவரும் தன்னுடைய இலக்கியம் முதல் அக்கறையான நிகழ்வுகளைப் படைத்து நம்மை வாசிக்க வைப்பதே தனிச்சிறப்பு. இவர் வெகுஜன எழுத்தாளரும் கூட. பக்கவாட்டில் தெரியும் தலைப்புகளை தேர்ந்தெடுக்க உருவாக்கிய அமைப்பும் மிகச் சிறப்பு.
சமீபத்தில் நடந்த தமிழ் மொழிக்காக நடத்தப்பட்ட மாநாடு குறித்து நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சிந்தனைகள் தோன்றியிருக்கும். உபி என்று தெரியாமல் அது குறித்து கேட்கப் போய் ஆளப்பிறந்தவர் கடைசியில் ஆத்திரப்பட்டே விட்டார்.

ஆனால் தமிழர்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ள கலைஞரைப் போலவே மாநாட்டில் கலந்து கொண்ட பத்ரி அவர்கள் எழுதிய இந்த தலைப்பும் அதன் பின்னோட்டமும் பார்த்து இரண்டு நாட்கள் சிரித்துக் கொண்டே இருந்தேன். தமிழ்மணம் காசி கூட குமுறியிருந்தார். அவர் சொல்வதில் நியாயம் இருந் தாலும் கூட இதை நான் இங்கு சராசரி வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு இருப்பதால் ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இந்த தலைப்பிற்கு வந்த பின்னோட்டங்கள் முழுமையும் நீங்கள் படித்தால் பொதுவான மனித குணாதியங்களையும் உணரமுடியும். இந்த வலைதளம் ஒரு கலைக் களஞ்சியம். உணர்பவர்களுக்கு உத்தமம்.

சங்ககால இலக்கிய காதல் நமக்கு இப்போது தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தாமரையின் காதல் வரிகள் உங்களை மயக்காமல் இருக்குமா?

உங்கள் வருகைக்கு நன்றி.
மேலும் வாசிக்க...

Tuesday, July 20, 2010

நான்கு திசைகள் (வலைச்சரம் ஜோதிஜி 2 வது நாள்)

ஆயிரம் தலைப்புகளை கடந்து வந்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்றும் எழுதும் ஒவ்வொரு பதிவும் இளமையாய் இருக்கிறது. கோவில்,குளம், கடைத்தெரு என்று தொடங்கி இவர் செல்லும் ஒவ்வொரு இடத்தையும் புகைப்படமாய் பார்க்கும் போது நாம் அந்த இடத்திற்கே சென்ற அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் என்ற இணைப்பு இல்லாத இவரின் இடுகை யில் தொடரும் உறவுக் கூட்டம் கணக்கில் அடங்காதது. பின்னூட்டம் என்பது கடித வழி தொடர்பு போலவே வருபவரை வரவேற்பது முதல் அவர்களிடம் உரையாடுவது வரைக்கும் ஒரு குடும்ப சந்தோஷத்தை உணர முடிகிறது. அக்கா, மேடம், டீச்சர் போன்ற பல ஆகுபெயர்கள் இவருக்கு உண்டு.

புதிதாக எழுத வருபவர்களையும் ஊக்குவித்தல் இவரின் முக்கிய சிறப்பு. வாசிப்பவர்களுக்கு தொல்லை தராத நடையில் எழுதுபவர். தொடர்ச்சியாக பல புத்தகங்களும் எழுதி வெளியிட்டு பல வெற்றிக் கோடுகளைத் தொட்டவர். இந்த நிமிடம் எந்த கோவில், எந்த ஊரில் இருந்து கொண்டு என்ன மாதிரியான படங்கள் எடுத்துக் கொண்டுருப்பார் என்பது அவருக்கே தெரியுமா? என்பது புரியாத மர்மம்.
கடவுள் என்பது இல்லவே இல்லை என்பவர்கள் கூட தைரியமாக இவரின் இடுகையில் உள்ளே நுழையலாம். பல ஊர்கள், கோவில்கள், மக்களின் கலாச் சாரம் தொடங்கி சாலையில் பார்த்த ரசித்த சின்ன சம்பவங்களைக் கூட படங் களாக மாறி இவரின் வலைதளத்தில் ரசிக்க முடியும். இவரின் இடுகையில் நாம் பார்க்கும் படங்கள் நமக்கு கவிதையாய் மாற வாய்ப்புண்டு. நீண்ட காலம் நியூசிலாந்து நாட்டில் வசித்தவர். தொடக்க கால இவரின் எழுத்தில் ஆங்கிலம் படுத்திய பாடும், எழுதும் தமிழில் அதை தவிர்க்க எடுத்த முயற்சிகளும், வாங்கிய குட்டுகளும் இருந்தாலும் அத்தனையும் மீறி இன்று வரைக்கும் கீரிடம் சூட்டாத மகாராணியாக வலம் வரும் துளசிதளம்.


ஜாதகமென்பது பொய். முட்டாள்களின் முயலாமைக்கு மிகப் பெரிய உதாரணம். வளர்ந்த விஞ்ஞானத்தை பார்த்து திருந்துங்கப்பா என்கிறீர்களா? வலைதளத்தில் அதிக நண்பர்கள் தொடர்வது இவரைத்தான். இதை நீ பின் பற்றித் தான் ஆக வேண்டும் என்று கட்டளையிடுவதும் இல்லை. இந்த கலையை வைத்துக்கொண்டு பணம் சம்பாரிக்க விரும்புவதும் இல்லை. நான் எழுதுவதைப் பார்த்து உன் ஜாதகத்தை கொண்டு வந்து என்னிடம் நிற்காதே. அது என் தொழில் அல்ல என்கிறார். நான் உணர்ந்தது இது. உன்னால் உணர முடிந்தால் சந்தோஷம். ஒரே வார்த்தை. எந்த வம்பு தும்புக்குள்ளும் சிக்காமல் பரபரப்பு படபடப்பு இல்லாமல் இன்றும் இளமையும் தீராத தாகமாய் எழுதுவது மிகுந்த ஆச்சரியம்.
வலைதளத்தில் எழுதுபவர்கள் எவ்வாறு எழுத வேண்டும்? வைக்கும் தலைப்பு க்கு என்ன முக்கியத்துவம்? போன்ற பல விஷயங்களை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டிய விதம் பிரமிப்பாய் இருக்கிறது. விரும்புபவர்களும் தொடர்பவர் களும் தினந்தோறும் முண்டியடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஜாதகம் மட்டுமல்ல மண் சார்ந்த பழக்கவழக்கங்கள் என்று தொடங்கி அத்தனை துறை களையும் அற்புதமாக கையாள்கிறார். இவர் வெளியிட்டுயுள்ள பல புத்தகங்கள் இவரின் ஆளுமைக்குச் சான்று. வகுப்பறை வாத்தியார் மட்டுமல்ல. வலை உலக வாத்தியாரும் கூட.


சாகும் வரையில் உங்களிடம் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த பயமே பலவற்றையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்ற இக் கட்டான சூழ்நிலைக்குச் கொண்டு செல்லும். நான் பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்யும் வியாதியஸ்தர்களையும், திரைப்பட நடிக குடும்பத்தையும் நன்றாக உற்றுக் கவனித்துப் பாருங்கள். அவர்களின் குடும்ப குத்துவிளக்குகள் மண்சோறு சாப்பிடாத குறையாக கோவில் கோவிலாக அலைந்து கொண்டு இருப்பார்கள். தங்கள் குடும்ப பெண்களையே திருத்த முடியாதவர்கள் தான் சமூக மூட நம்பிக்கைச் சீர்கேடுகளை திருத்த பாடுபட்டுக் கொண்டுருப்பவர்கள். ஆனால் இவர்?

ஆத்திகம், நாத்திகம் என்று தொடங்கி இவர் தொடாத துறைகளே இல்லை. ஆயிரம் தலைப்புகள் பார்த்தாலும் சிந்தாமல் சிதறாமல் இன்றும் எழுதிக் கொண்டேயிருக்கிறார். நானும் வலைதளத்தில் எழுதுகின்றேன் என்ற பேச்சே இல்லை. கருத்துக்களை சொல்லும் விதம் படிப்பவர்களுக்கு ஏராளமான சிந்தனைகளை உருவாக்கும். இவரும் நீ இதை நம்பித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் இல்லை. கடவுள் மறுப்பாளர் என்பதால் காண்பவர்களை காய்ச்சி எடுப்பதும் இல்லை.

ஈழம் தொடர்பாக எழுதும் போது ரத்த அடி வாங்காமல் வந்தவர்கள் மிகக் குறைவு. இவரின் ஈழம் சார்ந்த தலைப்புகளில் உள்ளே நுழைந்தவர்கள் ரணகளப் படுத்தியிருந்தாலும் அத்தனை பந்துகளையும் அநாயசமாக அடித்து விளையாடி இன்றும் களைத்துப் போகாமல் களத்தில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டுருப்பவர். தொடர்ச்சியாக புத்தகங்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள், குறிப்பிட்ட தேதியில் இந்த விசயம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று தேடி அலைபவர்களுக்கு இவர் ஒரு அமுத சுரபி. இவரின் தனிப்பட்ட கொள்கைகள் என்னவோ?

ஆனால் எடுத்த கொள்கையில் எழுதும் எழுத்துக் களில் சமரசம் செய்து கொள்ளாத சன்மார்க்க நெறியாளர். ளளிப் பருகினாலும் தீராத தாகத்தை தந்துகொண்டு காலம் தந்த மனிதம்.

" ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்றெல்லாம் பார்த்து அவரைப் பற்றி நாம் முடிவு செய்வதை விட அவர் எப்படி வாழ்கிறார் என்று கவனித்து முடிவு செய்வது தான் ஏமாறாமல் தடுக்க உதவும் "

கடவுள் என்பவர் உன் உள்ளே இருக்கிறார்? நீ ஏனப்பா வெளியே போய்த் தேடி கண்டவர்களிடம் சிக்கிக் கொள்கிறாய் என்பதை உள் மன ஆற்றல் மூலம் வெளிப்படுத்துகிறார் கணேசன். ஏறக்குறைய 300 தலைப்புகளுக்கு அருகே வந்து கொண்டு இருக்கிறார்.

" சாமி,,பூதம்,மாடசாமி,முனுசாமி,எல்லைச்சாமி எதுவும் வேண்டாம். நீ நம்பும் எந்த உணர்வும் உனக்குள்ளே தான் இருக்குது. அதப்பாருடா மொதல்ல " என்று இவரின் எழுத்துக்கள் நம் கழுத்தை பிடித்து மட்டும் தள்ளவில்லை. சமயத்தில் உந்து சக்தியாய் நம் முன் வாழ்ந்து கொண்டுருக்கும் கழுகு மூலம் உதாரணம் காட்டுகிறார். ஆற்றல் என்பது எங்கிருந்து தொடங்குகிறது, வாழ்வில் நல்ல பாதையை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெற வேண்டிய அனுபவம், சிரத்தைகள், எண்ணங்கள் இவரின் எழுத்தைப் படிக்கும் போது உருவாகக்கூடும். இவரின் எழுத்துக்கள் சிலருக்கு ஆச்சரியம் பலருக்கு அதிசயம். கொஞ்ச பேருக்கு ஆ..........வ். காரணம்

மேலும் வாசிக்க...

Sunday, July 18, 2010

பா. ராகவன் அவர்களுக்கு (ஜோதிஜி வலைச்சரம் முதல் நாள்)

இந்த வலை உலகம் எனக்கு அறிமுகமானதும், எழுதத் தொடங்கியும் ஒரு வருடம் முடிந்துள்ளது. வேர்ட் ப்ரஸ் ல் தொடங்கிய பயணம் நல்ல நண்பர்களால் இப்போது இடுகை வாயிலாக எழுதிக் கொண்டுருக்கின்றேன். 210 தலைப்புகள். எல்லாத் துறை சார்ந்த அத்தனை விசயங்களையும் முடிந்த வரைக்கும் முயற்சித்துள்ளேன். எழுதும் இந்த தலைப்பு வரைக்கும் புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டே இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் உரையாடும் நண்பர்கள் வாயிலாக நான் எழுதும் எழுத்தின் பலவீனங்களை உணர்ந்தபடி மாறுதல் செய்தபடியே இருக்கின்றேன். இன்னும் நிறைய மாறுதல்களை உருவாக்க வேண்டும்.


வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பில் இருந்த கோவையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் முதன் முதலாக செப்டம்பர் 11 2009 அன்று தேவியர் இல்லத்தை அறிமுகம் செய்த போது அந்த அதிகாலை வேளையில் தொடர்ச்சியாக என்னுடைய தளத்திற்கு வந்து கொண்டுருந்தவர்களைப் பார்த்து தான் வலைச்சரம் எனக்கு அறிமுகம் ஆனது.


என்னுடன் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் பின்னோக்கி, கீதப்ப்ரியன் (கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்). இப்போது மூவருமே ஒரே வட்டத்தில் இருக்கின்றோம்.


சுரேஷைத் தொடர்ந்து பாலாஜி அய்யா, ஆசிரியர் ஜெரி ஈசானந்தா .கடைசியாக
செந்தில் என்று நான்கு திசைகளால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளேன். நான்கு பிரம்மாக்களுக்கும் இந்த வாய்ப்பளித்த சீனா அவர்களுக்கும் நன்றி.


ஆகஸ்ட் 30 2009 அன்று தான் ஒரு தொடர் போல் வேர்ட்ப்ரஸ் மூலம் இந்திய சுதந்திரத்தைப் பற்றி எழுதியது நான் புரிந்து கொண்ட சின்னச் சின்ன குறிப்பு கள். அதற்கு முன்னால் வலைதளத்தில் தொடர் போல் எவரும் பகிர்ந்து உள்ளார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது அதிக தளங்கள் தொடர்களாக எழுதிக் கொண்டுருக்கிறார்கள்.

1992 முதல் திருப்பூர் வாழ்க்கையில் இப்போது ஆய்த்த ஆடை ஏற்றுமதி யாளராகவும் தொழில் சார்ந்த பணிகளுக்கிடையே இந்த எழுத்துப்பணியும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த காலத்தில் பயணித்த மாநிலங்கள், நாடுகள், வாசித்த புத்தகங்கள், பார்த்த சமூகம் மூலம் பெற்ற அனுபவங்கள் எழுத உதவியாய் இருந்தது.

அமெரிக்காவைப் பற்றி திருப்பூரில் நான் பார்த்த கேட்ட பாதித்த பல விசயங் களின் காரணமாக அந்த நாட்டைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற இடைவிடாத தேடல் இருந்து கொண்டேயிருந்தது. ஆறாவது படிக்கும் காலத்தில் ஆரம்பித்த வாசிப்பு அனுபவம் திருப்பூருக்குள் வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நின்று விட்டது. பத்திரிக்கைகள், வார இதழ்களின் வாசிப்பு மட்டுமே மிச்சமாய் ஒட்டியிருந்தது. புத்தக வாசிப்பு மீண்டும் ஒரு அழகான ராட்ச ஆளுமை மூலம் தொடர்ந்தது. அன்று முதல் நடிகர் அர்ஜுன் ரசனையாய் காதலித்து பாடிய அழகான ராட்சஸியான மனிஷா கொய்ரா லாவைப் போலவே நானும் அவரின் எழுத்துக்களை இன்று வரை விரும்பி வாசித்து கற்றுக் கொண்டுருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்பாராத விதமாக புத்தகக்கடையில் பார்த்த அந்த டாலர் தேசம் என்ற கனமான புத்தகத்தை சராசரி வாசகன் யோசிக்கும் விலைகொடுத்து வாங்கி வந்தேன். அடுத்த இரண்டு நாட்கள் எந்த வேலையும் செய்யாமல் பா.ராகவன் உருவாக்கிய மாயமும், வசீகரமும், வார்த்தைகளின் ஆளுமையும் நம்பகத்தன்மையும் என்னை கிறங்கடித்து மதி மயக்கியது.

தொடர்ந்து அவரின் பல புத்தகங்களை வாங்கி வந்து படிக்க படிக்க பலவற்றை யும் உணர்ந்து கொண்டேன். முப்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை தாண்டி வந்த பாதையில் இறுதியில் வந்து நின்ற பாலகுமாரன், சுஜாதா மூலம் உணராத " நம்மாலும் எழுத முடியும் " என்ற நம்பிக்கை என்பது பா. ராகவன் புத்தகங்கள் தான் கொடுத்தது.

2008 இறுதியில் ஏற்பட்ட தொழில் வாழ்க்கை சூறாவளி பல பாடங்களை கற்றுக் கொடுக்க என்னை மீட்டெடுக்க வேண்டும் என்று எழுதிப் பார்க்கலாம் என்று எழுதத் தொடங்கினேன். எழுதிய, எழுதிக்கொண்டுருக்கும், எழுதப்போகும் அத்தனை எழுத்துக்களையும் பா.ராகவன் அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

பல முறை மின் அஞ்சல் வாயிலாகவும், சமீபத்தில் கலைஞர் கோவையில் நடத்திய பொருட்காட்சிக்கு வந்து இருந்த போதும் தொலைபேசியில் பேச முடிந்தது. தலையில் கீரிடம் எதையும் சுமக்காத பா.ராகவன் அவர்கள் இன்றும் பலரையும் நேரிடையாக மறைமுகமாக வளர்த்துக் கொண்டுருக்கிறார்.

" திருப்பூரில் வலைதளத்தில் எழுதிக் கொண்டுருக்கும் அத்தனை பேர்களை யும் சந்திக்க ஆசை " என்று அவர் விடுத்த அழைப்பைக் கூட ஏற்றுச் சென்று அவரை சந்திக்க முடியவில்லை. தொழில் நகரம் மொத்த வாழ்க்கையையும் தன்னுடைய பிடிமானத்தில் தான் வைத்துள்ளது. இந்த வலைச்சர ஆசிரியப் பணியின் முதல் நாளில் திரு. பாரா அவர்களுக்கு என்னுடைய குரு வணக்கம்.
வாழ்வில் தோன்றும் பல நெருக்கடிகள் தான் நம்மை நமக்கே அறிமுகம் செய்கிறது. ஆனால் உன்னிடம் இந்த திறமை உள்ளது என்று எனக்கு அடை யாளம் காட்டியது பா.ராகவன் எழுதிய பல புத்தகங்களே. வணிக நோக்கம் தேவையில்லாமல் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் பாரா வின் வலைதளம் இது.


இதுவரையிலும் இந்த வலைசரத்தில் ஆசிரியர்களாக வந்தவர்கள் வலை தளத்தில் எழுதிக் கொண்டுருப்பவர்களை அறிமுகம் செய்தனர். நான் வாசிக்கும் அத்தனை பேர்களும் என்னை வளர்த்த பலரும் இதில் ஆசிரியர் களாக வந்து உள்ளனர். என்னுடைய இந்த ஒரு வார பணியில் நான் பார்த்த, என்னை பாதித்த தளங்களை முழுமையான அந்த தளம் குறித்து விமர்சனப் பார்வையின் மூலம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

சொந்த விஷயங்களைப் பற்றி சுவையாக எழுதக் கற்றுக் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் அடுத்த கட்ட நகர்வாக சமூகம் குறித்து சிந்திக்கத் தொடங்கி னால் மட்டுமே அவர்களின் தனிப்பட்ட திறமையை பலரும் உணர முடியும். இல்லாவிட்டால் தேங்கிய குட்டை போல் ஒரு கால கட்டத்தில் எழுதிக் கொண்டுருப்பவர்களுக்கு அலுப்பு வந்துவிடக்கூடும்.

இதில் தெரிந்த, தெரியாத தளங்கள் என்பது முக்கியமல்ல. மொத்த தளம் குறித்தோ, குறிப்பிட்ட தலைப்பு குறித்தோ என்னுடைய விமர்சனம் உங்களுக்கு புதிய கோணத்தை உருவாக்கலாம். நீங்கள் சொல்லும் கருத்துக் கள் அடுத்து ஆசிரியர் பொறுப்பில் வருவர்களுக்கும், சீனா அவர்கள் எடுக்கப் போகும் முடிவுகளுக்கும் உறுதுணையாய் இருக்கட்டும். வருகை தந்த உங்களுக்கு நன்றி.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது