07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label நந்தா. Show all posts
Showing posts with label நந்தா. Show all posts

Sunday, March 30, 2008

நன்றி சொல்லிக் கொள்கிறேன்

ஒரு வாரம் ஓடியேப் போய் விட்டது. வலைச்சரம் என்ற பெயரில் எனக்குப் பிடித்த, என் மனதுள் பல சலனங்களை ஏற்படுத்திய பதிவுகளை சரம் சரமாய் தொடுத்தும் விட்டாயிற்று. சொல்லப்போனால் இதில் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் நல்ல புத்தக விமர்சனங்களைப் பற்றிய பதிவுகள், சிறந்த திரை விமர்சனங்கள் பற்றிய பதிவுகள் என்று வகை தொகையில்லாமல் எழுதித் தள்ள ஆசைப்பட்டதுண்டு. இருப்பினும் நேரம் என்ற ஒன்று என் குரல் வளையைப் பிய்த்து நெறிப்பதாலும், ஒரு வாரம் முடிந்து விட்டதாலும், இத்துடன் எனது பகிர்தலை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி.
மேலும் வாசிக்க...

அழகியல் சார்ந்தவை

அது ஒரு காலம். வலைப்பதிவுகளை வெறுமனே பார்வையளனாய் மட்டுமே இருந்து வந்த ஒரு காலம். தமிழ் வலையுலக அரசியலையோ, போலி என்றொரு வார்த்தையையோ, தெரிந்து வைத்துக் கொண்டிராததோர் காலம் அது. கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் பத்திரிக்கைகளின் மூலமும், சிற்றிதழ்களின் மூலமும் மட்டுமே படித்து வந்த ஒரு காலம் அது. அப்படி ஒரு நாளில் ஏதேச்சையாய் ஃபார்வேர்டு மேசேஜாய் வந்த ஒரு மெயிலில் இருந்த தமிழ்மணம் லிங்கை கிளிக்கிப் பார்த்ததுதான் நான் வலையுலகை எட்டிப்பார்ப்பதற்கு முதல் காரணமாய் இருந்த ஒன்று.

அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்காமலிருந்திருந்தால் ஒரு வேளை நான் பதிவுலகிற்கு பார்வையாளனகவோ, படைப்பாளியாகவோ வந்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு வேளை தாமதப்படுத்தப்படிருக்கலாம். இந்த இடத்தில் என் தன்னடக்கத்தை வெளிப்படுத்த வேண்டி “நீங்களும் தப்பித்திருக்கலாம்” என்று நான் சேர்க்க வில்லையென்றால், என்னை பெரும் கர்வக்காரன் என்று நீங்கள் எண்ணி விடும் அபாயமிருப்பதால் அதை இங்கே சேர்த்துக் கொள்கிறேன். நீங்களும் தப்பித்திருக்கலாம்.

காலங்கள் செல்லச் செல்ல நாம் நம்மை ஏதேனும் சில விஷயங்களில் நம்மை மேம்படுத்திக் கொண்டே போகிறோம்.அது நமது டெக்னிக்கல் நாலெட்ஜாக இருக்கலாம்.அல்லது வாசிப்பனுபவமாய் இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்பிருந்த வாசிப்புகளிற்கும், இப்போதிருக்கும் வாசிப்புகளிற்குமான வித்தியாசத்தையே என் பரிணாம வளர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது பதிவுலகமும், இலக்கிய உலகமும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கும் ஃபோபியாவின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம். எடுத்துக் கொள்ளக்கூடிய ஆட்களைப் பொறுத்து நிலைப்பாடுகள் மாறிக் கொண்டே இருக்கிறது.

வாசிப்புகளைப் போலவே வாசிப்புகளைப் பற்றிய பகிர்தலும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாய் இருக்கிறது. நான் இந்த இந்த புத்தகங்களைப் படித்தேன் என்று சொல்வது படித்ததை பறை சாற்றிக்கொள்ளவா? அல்லது தேடலும், தேடலைப் பற்றிய பகிர்தலின் வேட்கையா? சொல்லப்போனால் இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. வெளிப்படுத்துகின்ற முறைகளே இவற்றை தீர்மானிக்கின்றன. நான் சொல்லப்போகும் சிலவையும் அப்படிப்பட்ட ஒரு வேட்கையின் வெளிப்பாடுதான்.

அருள்குமார்:

தனது நிறுவனத்தை முழு மூச்சில் நடத்த வேண்டியோ என்னவோ, இவர் இப்போதெல்லாம் வலையுலகில் காணப்படுவதேயில்லை. ஆனால் இவரது ஒரு சில பதிவுகள் என்ன காரணத்தினாலோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

மரணம் என்றொரு நிகழ்வ தேன்கூடு போட்டிக்காக எழுதப்பட்ட இந்த கதையில் எல்லா உணர்வுகளும் பொதிந்து கிடக்கின்றன. கதையின் இறுதியில் மெல்லியதாய் நிலவோடும் காதல் உணர்வும் ஒரு வித சந்தோஷத்தைத் தருகிறது.

மங்கையர்க்கரசி என்ற இவரது கவிதையில் இருக்கும் யதார்த்தம் மனதைச் சுடுகிறது.

இவர் தொடர்ந்து எழுதினால் இன்னும் பல நல்ல படைப்புகளை தரலாம்தான். கால ஓட்டத்தில் இவர் திரும்பி வரலாம்.

பத்மப்ரியா:

இவர் இப்போ சுத்தமாய் எழுதுவதே இல்லை. இருந்தாலும் நான் வலையுலகிற்கு வருவதற்கு முன்பு படித்த அழகியல் சார்ந்த கதைகளில் இவருடையதும் ஒன்று. வயதின் காரணமாயோ என்னவோ சில காலங்களாகவே காதல் சார்ந்த படைப்புகள் மிக எளிதில் என் மனதை கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் இவர் தொடராக எழுதிய நிலா கதை எனக்கு மிகவும் பிடித்ததாய் இருக்கின்ற ஒன்று.

தேவ்:

தேவ்வின் பல கதைகள் எனக்கு ஒரு வகை இனம் புரியா சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. பல கதைகள் மெலோ டிராமேடிக் வகையைச் சேர்ந்தவைதான், இந்த இடத்தில் இந்த சம்பவம் நடைபெறும் என்பதை ஒரு தேர்ந்த வாசகனால் கண்டுப்[இடித்து விட முடியும்தான் என்றாலும், இவரது இந்தக் கதைகள் ரொம்பவே பிடித்துதான் இருக்கின்றது.

நட்பெனும் தீவினிலே
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
ஒரு சாரல் பொழுது...

வெட்டிப்பயல்:

வலையுலகில் ரொம்பவே அறிமுகமான இவரின் ஆரம்பகால கதைகளில் உள்ள காதல் உணர்வும், ஏன் என்ற கதையில் உள்ள சோக உணர்வும் ரொம்பவே பிடித்துப் போனது. இவரது கதைகளில் உள்ள ஃபேண்டஸி தன்மை ஒரு வித குதூகலத்தைத் தருகிறது.

ஏன்???
கொல்ட்டி
H-4

திவ்யா

வலையுலக கும்மி ப்ரியர்களில் ஒருவரான இவரின் சில கதைகள் ஏற்கனவே சவலையுலகில் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம். இருந்தாலும் அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்வதில் சந்தோஷமே.

ரயில் சிநேகம்
கல்லூரி கலாட்டா


நான் மேலே குறிப்பிட்டிருப்பவற்றில் பெரும்பாலானவை அழகியல் சார்ந்த கதைகளே. தீவிர வாசகர்களுக்கும் எதிர் அழகியலை கொண்டாடுபவர்களுக்கும், இலக்கியத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்த முனைபவர்களுக்கும் ஒரு வேளை இது போன்ற படைப்புகளின் ஃபேன்டசி தன்மை சாதாரணமானதாய் இருக்கலாம். ஆனால் வாசிப்பனுபவத்தில் எவரும் இது போன்ற படைப்புகளை ஒரேயடியாக தாண்டிச் சென்றிருக்க முடியாது. தேவையில்லாமல் ரொம்ப வாசிக்கிரோமோ என்றோ, அட என்னத்தை படிச்சு என்னத்தை கிழிக்கிறது என்றோ எரிச்சல் கொள்ளும் போது ஆசுவாசப் படுத்துவது போல இது போன்ற சில படைப்புகள் அடுத்த கட்ட் தளத்திலும் இது போன்ற பல உணர்வுக்குவியல்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கைய ஏற்படுத்தி வாசகனின் முதுகில் கை வைத்து தொடர்ந்து உந்தித் தள்ள வைக்கின்றன. இவற்றை நினைவு கூர்வதில் பெருமையே.
மேலும் வாசிக்க...

Saturday, March 29, 2008

பாப்லோ நெரூதா,கவிதைகள், இணைய கவிகள் - சில தொடர்பற்ற குறிப்புகள்

”இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞன் நெரூதாதான்” -காப்ரியேல் கார்சியா.

நெஃப்தாலி 1904 ஜூலை12ல் பிறந்தான்.தனது 13வது வயதில் நெஃப்தாலி உள்ளூர் நாளிதழான “லா மனானா”வில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தான். நெஃப்தாலியின் முதல் கவிதையும், அதில்தான் வெளியாகியது. 1920களில் “செல்வா ஆஸ்த்ரால்” எனும் இலக்கிய ஏட்டில் தொடர்ந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தான். இதைத் தொடர்ந்து “அந்தி வெளிச்சம்” என்ற தனது முதல் கவிதைத்தொகுப்பை நெஃப்தாலி வெளியிட்டான். இதற்கு அவன் தனது அப்பா வாங்கிக் கொடுத்திருந்த கடிகாரத்தையும், அச்சுக்கூலிக்காக கொடுத்திருந்த வீட்டுச் சாமான்கள் சிலவற்றையும், கவிஞன் என்று பொது அரங்கில் அறிமுகப்படுத்தப் படும் போது போட வைத்திருந்த தனது ஒரே ஒரு கோட்டையும் விற்க வேண்டியிருந்தது.

செக்கோஸ்லோவியக் கவிஞரான யான் நெரூதாவின் நினைவாக நெப்தாலி தனக்கு 'பாப்லோ நெரூதா” என்ற புனை பெயரை வரித்துக் கொண்டான். 1924ல் வெளியான “இருபது காதல் கவிதைகளும், ஒரு நிராசைப் பாடலும்”என்ற தொகுப்பு நெரூதா என்ற கவிஞனை உலகுக்கு அறிமுகப் படுத்தியது. அவரை மாபெரும் புகழுக்குள்ளாகியது. இன்றும் அதிகம் சிலாகிக்கப்படுவதும், அதிகப் பதிப்புகளில் வெளியானதும், அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதுமான நூல் அவரது இந்த இருபது வயது படைப்புதான்.

1927 முதல் 35 வரையிலான எட்டாண்டுகள் இவர் பல நாடுகளில் பணியாற்றினார். “தனிமைத் துயரங்களின் காலம்” என்று நெரூதா கசந்து கொள்ளும் இந்தக் கட்டத்தில்தான் “பூமியின் வசிப்பிடம்” கவிதைகள் உருவாயின. 1936ல் ஸ்பானிய உள்நாட்டுப் போர் வெடித்தது. லோர்க்கா படுகொலை செய்யப்பட்டார். தன்னுணர்வும், சர்ரியலிச அணுகுமுறையும் மையமாயிருந்த நெரூதாவின் படைப்பு மெல்ல அரசியல் சார்ந்து இயங்க ஆரம்பித்தது. “என் இதயத்தில் ஸ்பெயின்” என்ற கவிதைத் தொகுப்பும் வெளியானது. யுத்தத்தால் அடைக்கப்பட்டிருந்த குடிமக்களின் நாவில் நெரூதாவின் கவிதைகள் மொழியாயின.

”காண்டோ ஜெனரல் ஆஃப் சிலி” என்ற அவரது நீண்ட கால முயற்சி 1950ல் அப்போது வெளியிடப்பட்டது. மெக்ஸிகோ உள்ளிட்ட பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் வரவேற்புப் பெற்ற இந்த நூல் நெரூதாவின் தனது சொந்த நாடான சிலியில் தடை செய்யப் பட்டது. தனது அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாய் சொந்த நாட்டிலேயே இரண்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை நடத்தினார்.1954ல் வெளியான “திராட்சையும் காற்றும்” தொகுப்பு அவரது தலை மறைவுக்கால நாட்குறிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது.

1958ல் வெளியான “எக்ஸ்ட்ராவகாரியோ” நெரூதாவின் இன்னொரு பரிமாணத்தை முன்வைத்தது. சார்புநிலை அரசியலால் மனங்கசந்து போன போன கவிஞனின் துக்கச்சாயலை வெளிப்படுத்தியது.இதைத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட பயணங்களும், அரசியல் நிலைப்பாடு சார்ந்த செயல்களும் பலத்த முக்கியத்துவம் பெற்றது.

1971ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு”ஒரு கண்டத்தின் விதியையும், மக்களின் கனவுகளையும்” கவிதைகளில் நிரந்தரமாக்கிய பாப்லோவுக்கு வழங்கப்பட்டது.

1973 செப்டபர் 23 ஆம் தேதி ஞாயிறு இரவு பத்தரை மணி, மருத்துவமனைப் படுக்கையில் ”நான் போகிறேன்” என்ற வாசகத்துடன் அவரது உடல் சலனமற்று அடங்கியது. நெரூதாவின் இறுதி ஊர்வலம் சிலியின் சர்வாதிகாரி அகஸ்டோ பினோஷோவுக்கு எதிரான மக்கள் எழுச்சியுடன் தொடங்கியது.

பாப்லோ நெரூதாவின் கவிதைப்பரப்பை பொருளடிப்படையில் ஆறு பகுதிகளாகப் பிரித்து விடலாம். காதல், தனிமை, இயற்கை, மரணம், அரசியல், வரலாறு என்ற பெரும் பகுப்புகளுக்குள் அடக்கி விடலாம்.இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் நெரூதாவின் கவிதை சாட்சியாக இருந்திருக்கிறது. ரஷ்யப் புரட்சி, ஸ்பானிய உள்நாட்டுப் போர், நாஜிசம், ஸ்லாலினிசம், இரண்டாம் உலகப் போர், கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள், ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மறைமுகப் போர்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார நெருக்கடிகள், ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி, வியட்நாம் போர், மாணவர் கொந்தளிப்பு, சொந்த மண்ணில் சோஷலிச வருகை, அதற்கெதிரான ராணுவக் கலவரம் - சம காலச் சரித்திரத்தை நெரூதா தனது கவிதைகளில் பதிந்தது போல நவீனக் கவிஞர் வேறு எவராவது செய்திருக்கக் கூடுமென்பது சந்தேகமே.

-------------------------------------
கவிதையுலகில் நெரூதா அறிமுகமானதும், இடத்தை நிறுவிக் கொண்டதும் ஓர் இளங்காதலனாக.பெண் மீதும், பெண்ணுடல் மீதுமான அவரது குதூகலம், இயற்கை மேலுள்ள மோகத்தின் இன்னொரு சாயல். அவரது அந்தரங்கம் பெண்களால் நிரம்பியது. மூன்று மனைவியர், அநேக தோழியர், கணக்கிலடங்கா படுக்கையறைப் பங்காளிகள். அவர் துய்த்து வீசிய பெண்கள் பலர். ஜோஸி ப்ளீஸ் அவர்களில் ஒருவர். பர்மியப் பெண்ணான அவர் நெரூதாவை விரட்டி விரட்டிக் காதலித்தவர். தன்னை மணந்து கொள்ளும் படி வற்புருத்தியவர்.

வெறி கொண்ட ஜோஸியின் காதல் வதைக்குப் பயந்து அவர் பர்மாவை விட்டே வெளியேறியனார். நெரூதாவின் உணர்ச்சிக் கொந்தளிப்பான காதல் கவிதைகளில் அந்த அசட்டு காதலியை முன்னிறுத்தி எழுதிய “மனைவி இழந்தவனின் டாங்கோ” தனியிடம் பெறும்.வெவ்வேறு காலகட்டத்தில் பாப்லோ உறவு கொண்டு விலகிய பெண்கள் ஏராளம்.

எப்போதும் விவாதங்களின் மையமாகவும், விமர்சனங்களின், இலக்காகவும் இருந்தவர் நெரூதா.காப்ரியேலைப் பொறுத்தவரை அவர் “நூற்றாண்டின் மகத்தான கவிஞர்”. நோபல் பரிசு பெற்ற யுவான் ரமோன் ஜிமனேஸைப் பொறுத்தவரை “மகத்தான மட்ட ரகக் கவிஞர்”. போர்ஹே அவரை “முதல் தரக் கவிஞர், ஆனால் மனிதர் என்ற முறையில் அவ்ர் மீது மதிப்பில்லை” என்றார்.

நெரூதா தனது விமர்சகர்களோட் உதாசீன மனப்போக்கையும், அருவருப்பும் காட்டியவர். இலக்கியவாது செயல்பாட்டாளனாவதில் மிரட்சியடையும் மத்திய தர வர்க்கத்தின் சக்கிப்பின்மைதான் இந்த விமர்சனக்கள் என்று புறம் தள்ளியவர் அவர்.

இந்த விமர்சன்ங்கள் இன்றும், இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்துக் கொண்டுதன் இருக்கின்றன. இவற்றில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு, வீக்லி ஸ்டாண்டர்டு இதழில் வெளிவந்த ஸ்டீபன் ஸ்வார்ட்சின் கட்டுரையே இதற்கு உதாரணம். அதன் தலைப்பு, “மோசமான கவிஞன், மோசமான மனிதன்”.

---------------------------------------------------------------------
தமிழிலும் பாப்லோவை ஆய்வுக்குட்படுத்தி பல கட்டுரைகள் பல்வேறு தளங்களில் அவ்வப்போது வந்துக் கொண்டுதான் இருக்கிறது. உயிர்மையிலும், திண்ணை இணையத் தளத்திலும், யமுனாராஜேந்திரனாலும், இன்னும் பலராலும் பாப்லோவை ஆதரித்தும், எதிர்த்தும், கடுமையாய் விமர்சித்தும் பல கட்டுரைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

பொடிச்சியின் பாப்லோவைப் பற்றிய பாப்லோ நெரூதா மற்றும் பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டு காலத் துரோகம் எனும் கட்டுரைகள்தான் அவரது தளத்தில் முதன் முதலில் படித்தவை. அதற்குப் பிறகு மாய்ந்து மய்ந்து பொடிச்சியின் எல்லா எழுத்துக்களையும் படித்து வருகிறேன். இவரது எழுத்துக்கள் படு தீவிரத்தன்மை கொண்டவை. கவிஞர்கள், தீவிர விமர்சகர்கள் இவரது பாப்லோவைப் பற்றிய இந்த கட்டுரைகளை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது. என்னைப் பொறுத்த வரை கண்டிப்பாகப் படிக்கப் பட வேண்டியவை இவை.

இதைத் தொடர்ந்து இவரது சிறந்த கட்டுரைகளில் ஒரு சில:
எழுத்து வன்முறை
நான் நீ நினைக்கும் பெண்ணல்ல
இரு ஆளுமைகளைச் சந்தித்தல் - 1
இரு ஆளுமைகளைச் சந்தித்தல் - 2

--------------------------------------------------

பாப்லோ தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை எளிமையாக இப்படிச் சொல்லி இருக்கிறார் மீனாக்ஸ் இங்கே பாப்லோ நெரூதா என்ற பதிவில்.

---------------------------------------

கவிதைகளைப் பற்றிப் பேசுகையில் எப்போதும் என் நினைவில் வந்து நிற்கும் பதிவாய் இருந்திருக்கிறது வா.மணிகண்டனின் இந்த பலருக்கும் பிடிக்காத ஒன்று!!! பதிவு.

கவிதைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும் முயற்சியாய்,மறு வாசிப்புக்குட்படுத்தவும், வெங்கட் சாமிநாதன், போன்ற சில விமர்சகர்களும், மொழிபெயர்ப்புக் கவிஞர்கள் சிலரும் பல காலமாகவே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிற்றிதழ்களிலும், இலக்கிய பத்திரிக்கைகளிலும் பரவலாய் காணப்படும் கவிதைகளுக்கும், விமர்சனக் கட்டுரைகளுக்கும் சற்றும் குறைவில்லாது, நல்ல கவிதைகளும், விமர்சனங்களும் இணைய உலகிலும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அய்யனார், சுகுணா, வா.மணிகண்டன்,கென்,அனிதா,ஜ்யோவ்ராம், தமிழ்நதி,காயத்ரி, நிவேதா இவர்களில் எவர் வேண்டுமானாலும் தமிழ்க் கவிதையுலகில் ஒரு அசைக்க முடியா ஆளுமையாய் இனி வரும் காலங்களில் உருவெடுக்கலாம்.
-----------------------------
பி.கு: பாப்லோவைப் பற்றிய விவரங்கள் சுகுமாரன் அவர்களின் பாப்லோ மொழிபெயர்ப்பு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

கவிதைகளைப் பற்றியோ, கவிஞர்களைப் பற்றியோ கருத்து சொல்லுமளவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எவரேனும் கேட்கலாம்.இதை எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்று நான் ஒரு சேஃப்டிக்கு என்று டிஸ்க்ளெய்மர் போட்டுக்கொள்ளலாமா அல்லது இவை என் உணர்வுகள் இதை எங்கு வேண்டுமானலும் நான் சொல்வேன, அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று மல்லுக்கு நிற்கலாமா என்ற குழப்பத்துடனேயே முடிக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Thursday, March 27, 2008

விட்டுத்தள்ளு ரோஜாவுக்கு பெயரா முக்கியம்.

"நாங்க காலேஜ் லைஃப்ல எஞ்சாய் பண்ணி இருக்கிற மாதிரி வேற யாரும் பண்ணி இருக்க முடியாது". ஆண் பெண் வித்தியாசமில்லாமல், கல்லூரி வாழ்க்கையை முடித்தவர்கள் எல்லாரும் தங்கள் நிகழ் கால வாழ்க்கையின் வெம்மை தாங்காமல், நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரத்தனம் பொறுக்க முடியாமல், கூட்டதோடே இருந்தாலும் அவ்வபோது தனித்து விடப்படும் கழிவிரக்கம் தாங்காமல் எப்போதாவாது "ம்" கொட்ட ஒருவர் கிடைக்கும் போது, வேகமாய் பழசை அசை போடும் தருணங்களில் வந்து விழும் வார்த்தைகளில் ஒன்றாய் இவை நிச்சயம் இருக்கக் கூடும். நானும் இதை அவ்வப்போது சொல்லித் திரிந்திருக்கிறேன்.

நான், செந்தில், விஜய், மாத்யூ, என்று ஒரு க்ரூப்பாய் கடைசி பெஞ்சுகளில் உட்கார்ந்துக் கொண்டு நாங்கள் செய்து வந்த குறும்புகளை எண்ணிப் பார்க்கும் எங்களில் எவருக்கும் சரவணன் நினைவில் வந்து போவான். பல நேரங்களில் நாங்கள் சிரித்துக் கொண்டிருந்ததற்கு காரணமாய் அவனே இருந்திருக்கிறான். நாங்கள் செமினார் எடுக்கும் போது எல்லாம் தூங்கி வழியும் வகுப்பு சரவணனின் செமினார் அன்று இருக்கிறது என்றால் மட்டும் வெகு உற்சாகமாய் இருக்கும். "Peer to peer Networking" என்ற தலைப்பில் செமினார் எடுக்கும் போது கூட சுத்தமாய் சம்பந்தமில்லாமல் "அன்றொரு நாள் நான் அமெரிக்க தெருக்களில் நடந்து கொண்டிருந்தேன்" என்றதொரு சுய தம்பத்துடன் ஆரம்பிப்பான். 40 நிமிட செமினாரில் 35 ந்மிடங்கள் தான் இதுவரை பார்த்திராத அமெரிக்காவையும், சிங்கப்பூரைப் பற்றியும் பேசி விட்டு கடைசி ஐந்தாவது நிமிடத்தில் ஆகவே யுவர் ஆனர் இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் என்று டாபிக்கை எப்படியாவது கோர்த்து விட்டு இறங்குவான்.

எங்கள் வகுப்புப் பெண்களில் ஒரு சிலர் நிஜமாலுமே அவன் பல நாடுகளைச் சுற்றி விட்டு வந்திருக்கிறான் என்று கடைசி வரை நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்து அவன் சோகமாய் இருந்தோ, ரொம்ப வருத்தப்பட்டு பேசியோ பார்த்ததேயில்லை. எங்களுடைய மற்றும் அவனுடைய உலகம் என்பது எப்போதும் சிரிப்பு என்ற ஒன்றைச் சார்ந்ததாயே இருந்திருந்தது. கல்லூரி முடிந்து வேலை தேடி நாங்கள் எல்லாம் சென்னைக்கு குடி பெயர்ந்த போது, அவன் மட்டும் ஏனோ மறுத்து விட்டான். கேட்டதற்கு ஒரு சில பிரச்சினைகள் என்று பொதுவாய்ச் சொல்லி விட்டான்.

இது நடந்து ஒரு ஏழு மாதமிருக்கும். எப்படியோ அடித்து பிடித்து ஒரு வேலை வாங்கி விட்ட இறுமாப்பும், நாங்களும் சம்பாதிக்கிறோம் என்ற கர்வமும், எதிர்ப்படும் எவரையும் அலட்சியமாய் பார்க்க ஆரம்பித்திருந்த திமிருமாய் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த காலத்தின் ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் எனக்கு ஒரு போன் வந்தது. அடடடடடா இந்த க்ரெடிட் கார்டுகாரனுங்க தொந்தரவு தாங்கலைப்பா. எப்படித்தான் நம்ம நம்பர் எல்லாம் இவங்களுக்கு கிடைக்குதோ என்று ஒரு கர்வத்துடன் சுற்றி இருப்பவர்களிடம் சொல்லி விட்டு, Ya.. This is Nandha என்று ஆரம்பித்தேன். "மச்சான் நான் சரவணன் பேசறேண்டா" என்று பிண்ணனியில் பலத்த இரைச்சல்களுடன் அவன் பேசினான். ஏதோ ஒன்று அவனுடைய குரலில் இடறியது. நினைவு தெரிந்து அவன் இவ்வளவு அமைதியாய் பேச ஆரம்பித்ததில்லை.

நான் திருச்சி ஏர்போர்ட்ல இருந்து பேசறேண்டா.நாங்க எங்க ஊருக்கே போகலாம்னு இருக்கோம். இங்க எங்க அப்பாவாலயும் ஏதும் தொழில் பண்ண முடியலை. நிறைய பிரச்சினை வருது. எங்க சொந்தக்காரங்களும் இங்க வா பார்த்துக்கலாம்னு கூப்பிட்டுட்டே இருக்காங்க. அதனால கிளம்பிட்டோம். உங்ககிட்ட சொல்ல வேணாம்னுதான் பார்த்தேன். ஆனால் அங்க போய்ட்டா மறுபடி உங்களை எல்லாம் நான் எப்ப பார்ப்பேன், பேசுவேன்னு தெரியலை. அதான் இங்க ஏர்போர்ட் பூத்திலிருந்து போன் பண்றேன்டா என்று சொன்னான்.

என்ன சொல்வதென்று கூட அப்போது எனக்கு தெரிந்திருக்க வில்லை. என்னடா மச்சான் திடீர்னு இப்படி சொல்ற. டேய் அப்ப உங்க சொத்தை எல்லாம் என்னடா பண்ணீங்க. பணம் இருக்கா? அங்க தங்கறதுக்கு என்னடா பண்ணப் போறீங்க??? என்று வரிசையாய் கேள்விகளை அடுக்கினேன்.

என்னத்தை பெரிய சொத்து. வர்ற விலைக்கு இருக்கிறதை எல்லாம் வித்துட்டோம். போற இடத்துலயும் சொத்துன்னு எதுவும் இல்லை. கைல கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்பித்தான் போறோம். மீதி எங்க சொந்தக்காரங்களைத்தான் நம்பணும்.

டேய் உங்க அப்பா அம்மா வேணா அங்க போகட்டுமே. நீ வேணா இங்க சென்னை வந்திடேண்டா என்று நான் சொன்னேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் நான் கேட்டது எவ்வளாவு கிறுக்குத் தனம் என்று புரிகிறது. கையில் பேகுகளுடன் திருச்சி ஏர்போர்ட்டில் விமானத்திற்காய் காத்துக் கொண்டிருந்த ஒருத்தனைப் பார்த்து "மச்சான் நீ இங்க வந்திடுடா" என்று சொன்னால் கேட்பவர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பெரிய சிந்தனைகள் எல்லாம் எதுவும் அப்போது இல்லை. ஏதாவது நடந்து அவன் வாழ்க்கை விடியாதா என்ற ஆதங்கத்தில் விழுந்த வார்த்தைகள் அவை. சோகமான தருணங்களில் நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு பிடிக்க ஆரம்பித்தால் நாம் எல்லாரும் பைத்தியக்காரர்களே.

அப்படி ஒரு நாள் அவன் எங்களை விட்டுப் போய் விடுவான் என்று எங்களில் எவரும் அறிந்திருக்க வில்லை. வேலை தேடி சென்னை வந்ததற்கப்புறம் வாழ்க்கை ஓட்டத்தில் அவனைச் சற்றே மறந்து விட்டோமே என்று அவ்வபோது ஆதங்கப் படவும், சென்னை வந்த பின்பு அவனிடம் அடிக்கடி போனாவது பேசி இருந்திருக்கலாம் என்று எங்கள் மீது நாங்களே கோபம் கொள்ளவும் மட்டுமே எங்களுக்கு தெரிந்திருந்தது.

அதற்கடுத்த இந்த மூன்றரை வருடங்களில் அவனிடமிருந்து யாதொரு தொடர்பும் இல்லை. எங்கேயோ அவன் நன்றாய் இருந்துக் கொண்டிருக்கிறான் என்று எங்களை நாங்களே திருப்திப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படி அவன் போவதாய் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்ற அந்த அவனது அந்தச் சொந்த ஊர் இலங்கை.

இது நான் குறிப்பிட்ட ஒருவனது வாழ்க்கை. இது போன்ற பலரது வாழ்க்கைகள் இங்கே சொல்லாய் வடிக்கப் பட்டுள்ளது. தமிழ்நதியின் சோகம் தோய்ந்த வார்த்தைகள் எனக்கு இன்னும் நன்றாய் நினைவிருக்கிறது.

"இன்னமும் இது போன்று திருவான்மியூர் கடற்கரையிலும், மெரீனா சாலையிலும், வற்றிப் போன கண்களுடனும், இருள் அப்பிய முகத்துடனும், துயரம் நிரம்பிய மனதுடனும் எங்கள் இளைஞர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் செய்து கொண்டிருப்பதுதான் ஒன்றே ஒன்றுதான். அது உயிருடன் இருப்பது."

இருப்பற்று அலையும் துயரையும், எதுவுமில்லாத சூன்யமாய் மனம் வெறிச்சிட்டிருப்பதையும், இவரது கவிதைகளில் நாம் காணப் பெறலாம். நல்ல வேளையாய் இலக்கியவாதிகளின் அரசியல் இவர்களுக்கு புரியாததாலோ என்னவோ இவர் தனது கவனத்தை கவிதைகளில் மட்டும் செலுத்திக் கொண்டிருக்கிறார். அதனாலேயே நல்ல கவிதைகளை இவரால் படைக்க முடிகிறது.

பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது
இருப்பற்று அலையும் துயர்
மீண்டும் அகதி

என்று இவரது கவிதைகளில் எனக்கு பிடித்தமானவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

"சூரியன் தனித்தலையும் பகல்" பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இவரது கவிதைத் தொகுப்பு. இதற்கான விமர்சன கூட்டம் கூட சமீபத்தில் நடந்தது. போக முடியாமல் போனவர்களில் ஒருவன். இந்தக் கூட்டத்தில் என்ன விமர்சனம் செய்தார்கள் என்று எனக்கு தெரிய வில்லை. "தமிழ் நதி இது வரை கவிதையே எழுத வில்லை. இனி வரும் நாட்களில் இவர் நல்ல கவிதைகளை எழுதலாம்" என்று குட்டி ரேவதிக்கு (வெ.சா என்று நினைக்கிறேன்) சொன்ன மாதிரி இவரையும் சொல்லி இருக்கலாம். அல்லது "தமிழ் கவியுலகின் அசைக்க முடியாத ஆளுமை தமிழ்நதி" என்று புகழ்ந்திருக்கலாம். எது வேண்டுமானாலும் சொல்லி இருந்திருக்கலாம். எனக்கு தெரிய வில்லை. ஆனால் அவை எதுவுமே இவரது கவிதைகளைப் படித்த உடன் என் விழிகளில் ஏற்படும் கசிவையும், மனதில் ஏற்படும் சூனியத்தையும் தடுக்க முடியாது.

"யாரும் வராமல் பசித்து பட்டினியாய் யாருமற்ற இந்த மணல்காட்டிற்குள்ளேயே நால்வரும் சாகப்போகிறோமா. விடியட்டும் ஏதேனும் படகுகள் வரும் காலடியில் சொரிந்து கிடந்த நம்பிகையைக் கூட்டி அள்ளி நிமிர்த்த முயன்றேன். அவன் கரையென்று காட்டிய திசையைப் பார்த்தேன் இப்போதும் கரை தெரிகிற மாதிரித்தான் இருந்தது. கரை கிட்டத்தான் இருக்கிறது. எப்படியும் போய்விடலாம் யாரேனும் வருவார்கள் அல்லது இந்தியன் நேவியாவது வராதா: மனசுக்குள் பிரார்த்தித்தேன். அம்மா ஏற்கனவே அழுது ஓய்ந்து செபமாலையோடு இருந்தாள். நான் சூரியனுக்காக காத்திருந்தேன். கரையின் தொலைவைக் கண்களால் அளந்தேன் மனசுக்குள் நம்பிக்கையை நிரப்பினேன். நாளைக்கு நிரஞ்சனியைப் பார்க்கலாம் ரகசியமாய் யாருக்கும் தெரியாமல் அவளுக்கு கொஞ்ச முத்தங்களைப் பரிசளிக்கலாம் நம்பினேன்."

த.அகிலனின் கரைகளிற்கிடையே பதிவும் அதே போன்ற ஒன்றை தொட்டுச் செல்கிறது.இதை படித்து முடித்ததும் நம்மால் கையாலாகாத ஏதோ ஒன்றை நினைத்து நமக்கு கோபம் வருவது நிச்சயம். இவரது பதிவுகளிலும் இதே போன்று பல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. மரணத்தின் வாசனை என்ற பகுப்பின் கீழ் இருக்கும் இவரது அனுபவங்களை படியுங்கள். இன்னும் இரண்டு நாளைக்கு உங்கள் உறக்கம் தொலைத்துப் போங்கள்.

"நீங்களும் வலியைத்தான் நினைக்கிறீர்கள் மாலன். இந்துராம் எனும் அறிவுசீவியை இப்படியெல்லாம் திட்டினால் அவருக்கு வலிக்காதா என்று அவரின் வலியை நினைக்கிறீர்கள். நானும் வலியைத்தான் நினைக்கிறேன். குழந்தையின் உயிரைமட்டுமாவது காப்பாற்றிக்கொள்ளலாம் எனப் படகில் ஏறியும் இந்தப்புறம் கொண்டுவந்து சேர்ப்பதற்குள்ளாகவே அதையும் பறிகொடுத்த அவலத்தின் வலியை, ஏழுகடல்தாண்டி எங்கோ ஒரு புலம்பெயர்ந்தநாட்டில் இருந்தபடியே தன்னோடுவராமல் தாய்மண்ணிலேயே தங்கியிருந்த தமையன் செத்த செய்திகேட்டும் "இன்று இவன், நாளை எவனோ" என்ற பயத்துடனேயே வாழநேருகின்ற தலைமுறைகளின் வலியை , பாலுக்கழுகிறதா, போர்முடியாப் பூமியிலே பிறந்ததற்கு அழுகிறதாவெனத் தெரியாமல் பிறந்த குழந்தையையும் அழுதுகொண்டே அணைக்கவேண்டிய தாய்களின் வலியை, மக்களைக் காக்கவெண்டிய அரசின் இராணுவத்தாலேயே வன்புணரப்பட்டுத் தூக்கிவீசப்பட்ட பெண்களின் வலியை எல்லாம் நினைத்தால் இந்துராம்களுக்கு அவர்களின் செயல்பாடுகள்மீதான ஆற்றாமையை வெளிப்படுத்திய வார்த்தைகளே வலிக்குமென்று நான் நினைக்கவில்லை"

செல்வநாயகியின் இந்த கோபம், மாலன் அவர்களுடனான உரையாடலின் நீட்சியாய், அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் பதிவில் எழுதப்பட்டது. திரும்பத் திரும்ப பல முறை என்னை வாசிக்கத் தூண்டியது. அப்படி என்ன இதில் இருக்கிறது என்ரு நீங்கள் கேட்டால் எனக்கு சொல்லத்தெரியாது. தனது எல்லாப் பதிவுகளிலும் தனது ஆளுமையை பலமாய் நிரூபிக்கும் திறமை செல்வநாயகி அவர்களுக்கு மிக எளிதில் கைகூடப் பெறுகிறது.

"ஒரு நல்ல புத்தகம் படித்து முடிக்கும்போது. ஒரு மாலையில் சந்திக்கும் நபர் தன் குரல்கிழித்து, வியர்வை துடைத்துப் பேசிக்கொண்டிருந்தாலும் நான் "நீ என்ன பேசினாலும் என்னை ஒன்னும் செய்யமுடியாது" என்ற பாவனையில் அமர்ந்திருந்தால் மனதுக்குள் அன்று படித்துத் தொலைந்த புத்தகம் பேசிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அடிக்கும் தொலைபேசியில் உயிர்நண்பன் அழைத்தாலும் அது அவனுக்குரிய எண்ணென்று தெரிந்தாலும் எடுக்காமல் அதேபோல் பார்த்துக்கொண்டிருப்பேன். "இன்று குடித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு ஒருவரிடம் சிலவிடயங்களைப் பேசும் அல்லது பேசாத முடிவெடுப்பதுபோல், உன்னிடம் படித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு எதையும் செய்யவேண்டியிருக்கிறது"

"இவ்வளவு பளுவானாலும் தூக்கிவிட முடியும் என்ற திமிர் உண்டு. ஆனால் இரண்டு சொற்களைச் சொல்லப்படவேண்டிய இடத்தில் சொல்லாது விட்டுவிட்டால் அது மனதில் பெரும்சுமையாக இருந்து அழுத்தும். ஒருவருக்கு அதைச் சொல்லாது விட்டதை ஒரு பத்துப் பேருக்காவது சொல்லிப் பாரம் குறைக்க முயன்றாலும் விடாது கனக்கும் அவை. அவை மன்னிப்பு, நன்றி என்ற இரண்டும்தான்."

""Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான். அதன்பின் அவர் தலைதடவிக்
கொடுத்ததோ இந்த நன்றியைக் காலைவரை சுமந்திருக்க முடியாத அவசரக்காரியா இவள் என்று அவர் நகையாடிச் சென்றதோ எதுவும் தெரியாத உணர்வற்ற நிலைக்கே மீண்டும் பலமணி நேரங்கள் பயணம்."


அவர்களின் இந்த கிறுக்கியாக வாழும் ஆசை பதிவு பல நாட்கள் என்னை அழைக்கழித்த ஒன்று. தனது கிறுக்குத் தனங்களைக் கூட ஒருவரால் இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா என்று கிறங்க வைத்த பதிவு இது.

"இவை வெறும் இரண்டு உதாரணங்கள்தான். மிகச்சமீபத்தின் ஈராக் போரில் இதுபோன்று நடந்தவைகளையோ, இராணுவத்தின் தொடரும் அத்துமீறல்களாய் இலங்கையில் நடந்ததை, நடப்பதை சமீபத்தில் தன் பதிவில் தமிழ்நதி எழுதியதையோ நான் இங்கு மீள்பதிப்புச் செய்யாமலே தினம் உலகச்செய்திகள் படிக்கிற யாரும் அறியமுடியும். வீரப்பனைப் பிடிக்கப் போகையில் வழியில் அகப்பட்ட சின்னாம்பதி கிராமத்துப் பெண்களைச் சின்னாபின்னம் செய்தவர்களின் கதையைத் தமிழகச் செய்திகளை நினைவில் வைத்திருக்கும் யாரும் மறக்க முடியாது.

இந்தப் பெண்கள் செய்த குற்றமென்ன? உறங்கிக்கொண்டிருப்பவர்களையும், உணவருந்திக்கொண்டிருப்பவர்களையும் வீடுபுகுந்துஇழுத்துக்கொண்டுபோய் வன்புணர்ந்த ஆண்களின் கண்களுக்கு முன்னால் தங்களை மூடிக்கொள்ளாமல் வந்து மோகினி ஆட்டம் ஆடியா அந்த ஆண்களின் காம உணர்வை எழுப்பிவிட்டார்கள்? மூடிக்கொண்டிருப்பது பெண்களுக்கு நல்லதாம், பேசுகிறார்கள் எம் கற்றறிந்த நண்பர்கள்."


சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் எனும் அவரது இப்பதிவில் பெண்கள் அணிய வேண்டிய உடை குறித்து மதவாதிகள் கற்பித்து வரும் போலித்தனங்களை கடும் கோபத்துடன் சாடுகிறது. மனசாட்சியுள்ள எவரும் இதில் கூறி இருக்கும் உண்மையை வெறுமனே மதத்தின் பெயரைச் சொல்லி மறுத்து விட முடியாது.

கூட்டத்தினருடன் இருக்கும் போதும் தனது தனித்தன்மை தொலைந்து விடாது என்பதை அவரது இந்த ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள் பதிவின் மூலம் இனங் கண்டுகொள்ள முடியும். ஒட்டு மொத்த வலையுலகமும், ஞானி யின் பூணூலை விமர்சித்துக் கொண்டிருக்க, தனது தனித்துவமான கருத்தை இந்த பதிவின் மூலம் ஆணித்தரமாய்ச் சொன்னவர். இதே கருத்தாக்கத்தை தருமியும் தனது பாணியில் சொல்லி இருக்கும் பதிவு ஞாநியும் என் நண்பர்களும்.

பதிவுலகில் திடீர் திடீரென்று ஒரு ஃபோபியா வந்து விடும். ஒட்டு மொத்த பதிவுலகமே அந்த ஃபோபியாவினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாய் பதிவுகளை எழுதிக் குவித்து கொண்டிருக்கும் வேளைகளில், தனது தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் இது போன்ற ஒரு சில பதிவுகளும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை எனக்குள் பல நம்பிக்கைகளை விதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இது போன்று நான் அறிவிக்கத்துடிக்கும் பல பதிவுகள் இன்னும் வரிசையில் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக சரத்தை பெண்ணியச் சரம், காதல் சரம், கவிதைச் சரம் என்று பிரித்து பிரித்து தொடுப்பார்கள். ஆனால் என்னால் இப்பதிவை எந்த வித சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு தொடுக்க முடியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். இந்த பதிவுகள் என்னுள் தங்கிப்போனவை. இவற்றுள் சில என்னை உலுக்கிப் போட்டவை.

இப்படி எந்த வித சட்ட திட்டங்ககளுக்கும் பொருந்தாத பதிவுகள் நிரம்பிய இந்தச் சரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம். எனக்கு பிடித்த பதிவுகள் என்றா? இல்லை இப்படி வைக்கலாமா? "என்னுடன் தங்கி விட்ட மேகக் கூட்டங்கள்" என்று. ஹ்ம்ம்ம்ம் வேறு எப்படித்தான் சொல்வது. "தொடர்பற்றதாய்ச் சில பதிவுகள்" என்று கூடத்தான் வைக்கலாம். அட விட்டுத் தள்ளு. "ரோஜாவுக்குப் பெயரா முக்கியம்". (உபயம்: விஜய் மில்டன்).
மேலும் வாசிக்க...

Wednesday, March 26, 2008

மகளிர் சக்தி

எதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நேரம் யோசித்து, இதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்து சில வரிகள் எழுதி கொஞ்ச நேரம் போன பின்பு இன்னும் கொஞ்சம் நன்றாய் ஆரம்பித்திருக்கலாமே என்று சண்டித்தனம் பண்ணும் மனசு, இந்த முறையும் தன் கடமையில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடிக்க மரத்தில் ஏறத் தொடங்கிய கதையாய் இந்த பதிவிலும் வழக்கம் போல சண்டித்தணம் செய்ய ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் எட்டாவது முறையாக எழுதிய வரிகளை அழித்து விட்டு, இப்படி எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

வலைப் பதிவில் கோலோய்ச்சிய, கோலோய்ச்சிக் கொண்டிருக்கும் பெண் பதிவர்களை, அடையாளப்படுத்த (ம்ஹூம் யாருக்கு யார் அடையாளம் தருவது? வார்த்தையை மாத்து),முன்னிலைப்படுத்த(டேய் ராசா, அவங்க ஏற்கனவே முன்னிலையிலதான் இருக்காங்க. வேற வார்த்தையைப் போடு), சரி பிரகடனப் படுத்த(மொக்கை வார்த்தை இது. ஏன் ரொம்ப யோசிக்கிற? சிம்பிளா எதாவது போடு) அறிமுகப்படுத்த(கண்ணு அவங்க பதிவுகளை ஏற்கனவே பலபேரு படிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. நீ என்ன அறிமுகம் பண்றது?)............கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாராவது என்னை பாடாய் படுத்தும் என் மனசாட்சியிடமிருந்து காப்பாத்துங்களேன்....

சரி இப்போ ஃப்ரெஷ்ஷா ஸ்டார்ட் பண்றேன்.

வேற ஒண்ணுமிலைங்க இன்னிக்கு பெண் பதிவர்களைப் பற்றி வலைச் சரத்தில் எழுதப் போகிறேன்.அவ்ளோதாங்க. (அடக் கண்றாவி பிடிச்சவனே இதுக்கா இந்த சீன் விட்ட)

சூரியாள்: பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். செறிவான கருத்துக்களுக்குச் சொந்தக்காரர். உடல் அரசியல், பெண் மொழி, இலக்கியம் என்று பல்வேறு துறைகளிலும், வெகு தீவிரமாய் இயங்கி வருபவர். பொதுவாக மற்றவர்களது வலைப் பதிவுகளில் காணப்படமாட்டார். ஆனால் என்னைப் பொறுத்த வரை கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டியவர்.

இம்சை அரசி: இவங்களுக்கு மொக்கை மன்னி என்று பெயர் வைக்கலாம். சூப்பரா மொக்கை போடுவாங்க. கும்மின்னு வந்துட்டா வீடு கட்டி அடிப்பாங்க. சைலண்டா நல்ல நல்ல கதைகளையும் எழுதுவாங்க. இவங்களோட எடுத்த சபதம் முடிப்பேன் அக்மார்க் மொக்கை என்று சான்றிதழ் பெற்ற பதிவு. இவங்களுக்கு இருக்கிற ஒரே பிரச்சினை இவங்க சீரியஸ ஏதாவது எழுதினா கூட அதை பின்னூட்டங்களில் ஒண்ணாம் நம்பர் காமெடி பதிவாக மாற்றி விடும் நட்பு வட்டாரம்தான்.

லட்சுமி: இவங்களைப் பத்தி அதிகம் எதுவும் சொல்லத் தேவையே இல்லை. இவங்க பொதுவாவே பிரச்சினையா போர்வையா போத்திக்கிட்டு தூங்கற ஆளு. இவங்க எதை பத்தி எழுதினாலும் அது விவாதத்துலதான் முடியும். இவங்க பதிவுகள்லயே இவங்க எழுதி யாரும் சண்டைக்கு வராத ஒண்ணே ஒண்ணு இருக்குதுன்னா அது இவங்களோட ப்ரொஃபைல் பேஜாத்தான் இருக்கும். இவங்களோட படித்ததில் பிடித்தது மூலமாய் பல நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.

காட்டாறு: கவிதை, அனுபவங்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் எழுதும் இவர்களின் சமீபத்திய இடுகையான மரணத்தின் சுவடுகள் ஏனோ என்னை ரொம்பக் கவர்ந்து விட்டது.

ராதாஸ்ரீராம்: இவர் பல புத்தகங்களை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்திருக்கிறார். மிகவும் சொற்பமாகவே வலைப் பதிவுகளில் எழுதினாலும், புத்தகங்களைப் பற்றி எழுதும் போது இவரது தீராக்காதல் வெகு எளிதில் நமக்கு புலப்பட்டு விடும். மனதை அறுத்துப் போட்ட புத்தகம்,சிறுவர் புத்தகம்இரண்டையும் எனது வாட்ச்லிஸ்டில் போட்டு வைத்திருக்கிறேன்.

அனாமிகா: இவரது http://meysun.blogspot.com/2008/02/blog-post.html கர்வம் மற்றும் http://meysun.blogspot.com/2007/11/blog-post_24.html ஆயிரம் ஜன்னல் கவிதையும் எனக்கு பிடித்திருந்தது. வலையுலகில் இப்போது இவர் அதிகம் நடமாடா விட்டாலும், எதேச்சையாக ஒரு முறை இவரது பதிவிற்கு போனதிலிருந்து, தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருகிறேன்.

பவித்ரா: பெண்பதிவர்களில் அதிகபயணக் கட்டுரைகள் எழுதுபவர்களிலில் இவரும் ஒருவர் என்றும் சொல்லலாம். இவரது கங்கை கொண்ட சோழபுரம் தொடர் பதிவுகள் மிக அருமையானவை. ஃபோட்டோ மற்றும் வரலாற்று பிரியர்களுக்கு பெரிதும் பயனளிப்பவை.

தாரா: இவர் பயணக்கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள், சிறுகதை, செய்தி விமர்சனம் என்று பல துறைகளில் கலக்கிக் கொண்டிருப்பவர். இவரது திரைப்படங்களில் போர்/யுத்தம்/கலவரம் என்ற பதிவு எனக்கு பிடித்திருந்தது. ஓரளவு எனக்கும் பிடித்த படங்களை இதில் லிஸ்ட் செய்து இருப்பார்.

தாணு: வெகு சீரியஸான பதிவர். சமுதாயப் பிரச்சினைகள் குறித்த விவாதம், கட்டுரைகள் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர். இவரது கட்டுரைகள் மனிதத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கும். இவரது காண்டேகரின் கிரெளஞ்சவதம் தான் நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்த பதிவு.

அருணா ஸ்ரீநிவாசன்: இவர் வலைப்பதிவில் எழுதி ரொம்ப நாள் ஆகிறது. ஆனால் இவரது கடைசி இடுகையான http://aruna52.blogspot.com/2007/10/blog-post_02.html காந்திஜி & கஸ்தூரி பா மிகச் சிறந்ததாய் இருந்தது. ஏன் இப்போது எழுதுவதில்லை என்று தெரிய வில்லை.

ஜெயந்தி சங்கர்: நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் காலங்களில், இணையமும், வலைப்பதிவுன்னா என்னா என்று நான் தெரிய ஆரம்பித்திருந்த காலங்களிலும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தவர்களில் இவரும் ஒருவர். இவருடைய கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்) இடுகை இவரது பதிவுகளில் மிகவும் பிடித்த ஒன்று. இப்போ இவர் வலைப் பதிவுகளில் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கலாம்.

கிருத்திகா: இவர் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு உடையவர் என்பதை இவரது இடுகைகளை படிக்கும் எவரும் சொல்லி விடலாம். சமீப காலமாய் மொக்கைப் பதிவுகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தீவிர வாசிப்பனுபவம் உடையவர் என்பதும் இவரது யாமம் பதிவில் அறிய முடிய முடிகிறது.

வேதா: கவிதைகளில் கலக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது மொக்கையிலும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தனது வலைப்பதிவின் டெம்ப்ளேட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை இவரது கடைசி இரண்டு டெம்ப்ளேட்களை வைத்துச் சொல்லி விடலாம்.

காயத்ரி: இவங்க இப்போ எல்லாம் பொது வெளியில் பரவலாய் னடமாடுவதில்லை. அனேகமா இவங்க ரொம்ப பிஸியா இருக்கணும்னு நினைக்கிறேன். கடைசி பதிவுக்கு தலைப்பு கூட போட முடியாத அளவுக்கு பயங்கர வேலையில இருப்பாங்க போல. மிக சிறந்த கவிதாயினி என்று தைரியமாய்ச் சொல்லலாம்..

இதையும் தாண்டி மதி அவர்களையோ, ஆனையக்கா அவர்களையோ, பத்மா அரவிந்த் அவர்களையோ, கீதா சாம்பசிவம்,போன்றவர்களை நான் தனியாக வரிசைப்படுத்த தேவையில்லாத அளவிற்கு அவர்கள் வலையுலகில் மிகப் பரவலாய் அறியப்பட்டிருப்பதால், அவங்க கிட்ட நான் டூ விட்டுக்கிறேன்.

நான் குறிபிட்ட பதிவர்கள் எல்லாரையுமே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது ஒரு சிலரை மட்டும் தெரியாமல் போய் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை தவற விடப்படாத பதிவர்கள் இவர்கள் என்பதால் எவரேனும் வாசிக்காமல் இருந்திருந்தால், இது அவர்களுக்கு தொடக்கப் புள்ளியாய் அமையக் கூடும் என்ற எண்ணத்தில் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, March 25, 2008

காதல் என்ற தலைப்பின் கீழ் எழுதப்படும் எதையும் கவிதை என்று சொல்லலாம்

அணு ஆயுத ஒப்பந்தம், நந்திகிராம், ஈழத்தமிழர்கள், பேரரசுவின் பேட்டி, ஹவுஸ்லோன் பாக்கி, அடுத்த உலகக்கோப்பை, பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலி, தசாவதாரம் ரிலீஸ் தள்ளிவைப்பு, சமஸ்கிருதம் தேவ பாஷையோன்னோ, சார் சாப்ட்டு நாலு நாள் ஆச்சு சார், ஜெயமோகன் மன்னிப்பு கேட்க வேண்டும், சுஜாதா செத்துட்டார், தமிழக பட்ஜெட்...........

ஒவ்வொரு நாள் விடியலிலும், உட்கார்ந்து அழவும், கோபப்படவும், காறி உமிழவும், அய்யோ பாவம் என்று பரிதாபப்படவும் ஏதேனும் சில நிகழ்ச்சிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தனை பிரச்சினைகளுக்கும் நடுவிலும் அடிக்கடி சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். துன்பத்தை நினைவுபடுத்தும், நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நடுவில் சிலீரென்று மனதை வருடிச் செல்லவும், அடுத்த நாளுக்கான நமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளவும், இனி வரும் நாட்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவும்,

"இன்னிக்கு ஃபுல்லா எனக்கு நீ ஒரு மெசேஜ் கூட அனுப்பலை. போடா உன்கிட்ட பேச மாட்டேன் போ"

"சீக்கிரம் குட் நைட் சொல்லு, நான் தூங்க போகணும்"

"நைட் 10 ஆச்சு. இன்னுமா ஆஃபிஸ்ல இருக்க. சரி வீட்டுக்கு வந்துட்டு சொல்லு.
இல்லைமா நான் வர லேட் ஆகும். நீ தூங்கு.
...
...
...
ஹல்லோ சார் சொல்றதை மட்டும் செய்யுங்க. நாங்க முழிச்சுக்கிட்டு இருந்தா ஒண்ணும் குறைஞ்சு போய்ட மாட்டோம்."

"டேய் டேய் டேய் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு அந்த பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுடா... என் செல்லம் இல்லை"

"சரி நேரமாச்சு. இதே லேட் நீ தூங்கு. வெச்சுடட்டுமா.

ஹ்ம்ம்ம்.குட் நைட்.

ஏய் ராட்சஸி. இன்னும் ஒரு மாசத்துலதான் கல்யாணம் நடக்க போகுதே.
இப்பவாவது குட் நைட்டுக்கு பதிலா ஒரு முத்தம் கொடுத்து வெக்க்கறியா. கடன்காரி.

ஹ்க்கும் நான்தான் வெக்கப் படறேன்னு தெரியுது இல்லை. நீதான் கொடுத்துட்டு வெக்கறது.
போடா லூசு."

இது போன்ற சில உணர்வுகள் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றன. காதல் என்ற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால் நம்மில் பலர் பைத்தியமாகி இருக்கக் கூடும். அஃப்கோர்ஸ் காதலால் பைத்தியமானவர்களும் இருக்கத்தான் செய்கின்றோம். இருப்பினும் இந்த மூன்றெழுத்துச் சொல் நம் வாழ்விலும், உடலிலும் ஏற்படுத்தி இருக்கும் ரசாயன மாற்றங்களை பட்டியலிட்டு கூற முடியாது. அதைவிட மிக முக்கியமான ஒன்று தமிழ் சினிமா நாசமத்துப் போயிருக்கும். (இப்போ மட்டும் என்னவாம் என்று கேட்காதீர்கள்)

சங்க கால இலக்கியங்கள் பல வகையான காதல்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. களவொழுக்கத்தையும் கூட காதலில் வகைப்படுத்தி பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குறுந்தொகை, வள்ளுவனின் காமத்துப்பால், ஆண்டாள் என்று எல்லாரும் காதலைக் கொண்டாடித்தான் இருக்கிறார்கள்.

"உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே"

இதைப் படித்ததற்கப்புறம் ஆண்டாளின் அனைத்து பாசுரங்களையும் வாசித்துத் தள்ள வேண்டும் என்று உன்மத்தம் கொண்டுத் திரிந்திருக்கிறேன்.

எந்த காலத்திலும் காதல் புதுப் புது அவதாரங்களை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. சங்ககால கவிதைகளுக்கும் சற்றும் குறைவில்லாது இப்போதும் காதலைப் பற்றிக் கவிதைகள் அதே அழகுணர்ச்சியுடன், இன்னும் பல பரிணாமங்களுடன் வலையுலகில் ஒரு இளவரசியைப் போல ஏகபோகமாய் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கின்றது.

காதலைப் பற்றி பேசும் போதெல்லாம் இவர் ஞாபகம் வராமல் இருக்காது என்று சொல்லுமளவுக்கு சராமரியாக காதலைப் பற்றி எழுதிச் சென்றிருக்கிறார் அருட்பெருங்கோ. இவரது கவிதைகளில் சிறந்த கவிதைகளை எடுத்துக் காட்ட விரும்பி தேடிக் களைத்துப் போய் விட்டேன். பார்த்தீபன் தனது கவிதைகளில் சொல்லி இருப்பார். "இந்த மூங்கில் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்?" என்று. ஆனால் இவரது மூங்கில் காட்டில் எல்லா மூங்கில்களுமே புல்லாங்குழலாய்த்தான் இருக்கின்றன.

காதலைப் பற்றி எழுதி இருக்கும் கவிதைகள் எல்லாமே தானே அழகு பெறுவது போல, முத்தத்தைப் பற்றி எழுதும் எவையும் அழகாகவே இருக்கின்றன. இதற்குக் காரணம் நிறைவேறா பாலின ஏக்கமா? இல்லை இயல்பாய் நமக்குள் ஒளிந்திருக்கும் ரசனையுணர்ச்சியா என்று அடிக்கடி கேட்டுக் கொள்ள நேரிடுகிறது. கோபாலின் நித்தம் ஒரு முத்தம் முத்தத்தின் சுவையை நமக்கு அழகாய் சொல்லி இருக்கிறது.

"காதலைப் பற்றி எழுதுகிறவர்கள் எல்லோரும் கவிஞர்களாய் மட்டுமே இருக்கிறார்கள். வாசிப்பவர்கள்தான் காதலர்களாய் இருகிறார்கள்" என்ற வார்த்தை எங்க ப்ரியனுக்குப் பொருந்தாது. தலைவர் தனது வலைப்பூ முழுதும் காதலை தோரணங்களாய்த் தொங்க விட்டிருக்கிறார்.

"காதல்
மயக்கத்திலிருக்கும்போது
என்னைவிட அவனுக்கு
ஒத்துப்பாடும் தோடையும்!
சீண்ட சீண்ட
சிணுங்கலுக்கு
என்னோடு போட்டிக்கு நிற்கும்
கொலுசையும்!
கழற்றி வீசியெறியவேண்டும் முதலில்!"

"மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!"

"விடுமுறை நாளொன்றில்
நண்பிகளுடன் சுற்றி அலைந்து
களைத்து திரும்புமிவளுக்கு
பிடித்த பட்சணத்தை தயாரித்து
சுட சுட பரிமாறுகிறாய் -
ஒரு தாயின் கரிசனத்தோடு
டேய்!உனதன்புக்கு இணையாய்
என்னடா தந்துவிடுவேன் உனக்கு!
வா!வந்து
எனை முழுதும் எடுத்துக் கொள்!"

இந்த மூன்றுக் கவிதைகளையும் பார்த்து விட்டும் நீங்கள் ப்ரியன் தளத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால் உங்களிடம் ஏதோ கோளாறு :) என்று நான் அர்த்தப் படுத்திக் கொள்வேன்.

நவீன் ப்ரகாஷின் கவிதை வரிகளை ரசிப்பதா அல்லது அவரது கவிதைப் படங்களில் உள்ள குறும்புத்தனங்களை, விடலைத் தனங்களை ரசிப்பதா என்ற குழப்பம் ஒவ்வொரு முறை அவரது பதிவிற்கு போகும் போதும் எனக்கு ஏற்படும். மனுஷன் சும்மா பின்னிப் பெடலெடுத்திருக்காரு. இவரது கவிதைகளை படித்தால் எவருக்கும் தனது வயதில் ஒரு 10 குறைந்துவிட்டாற் போன்று ஓர் உணர்வு தோன்றுவது சர்வ நிச்சயம்.

"பெறாத முத்ததிற்காக
நீயும்
கொடுக்காத முத்ததிற்காக
நானும்
வெட்கப்படுகொண்டிருக்கிறோம்
மெசெஞ்சரில் !"

"ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்கமாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்னதான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்டபோது
தைரியம் இருந்தா பண்ணிட்டு சொல்லுடா
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?"

"இந்த மொபைலை பார்க்கிறபோ
எல்லாம் உனக்கு என்ன தோணுது
என நீ கேட்டதற்கு நான் சொன்ன
பதிலுக்குப்பிறகு முறைத்துக் கொண்டே
மறைத்துக்கொண்டாயே
ஞாபகம் இருக்கிறதா ?"

ப்ராக்டிக்கல்லி ஒரு அட்வைஸ். உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் சண்டையா? கவிதைகளுக்கு நடுவே பயங்கரமா டிப்ஸ் கொடுத்திருப்பாரு மனுஷன். உபயோகப் படுத்திக்கோங்க. நவீன் வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் தொண்டு.

சேவியரின் கவிதைகள் நான் வலையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே படித்துக் கொண்டு வந்திருக்கிறேன். அவருடைய எழுத்துக்கள் இன்று பல தளங்களில் இயங்க ஆரம்பித்து விட்டாலும் அவரது சில கவிதைகள் ரம்மியமாய் நம் முகம் வருடிச்செல்லும். அந்த வகையில் அவரது முத்தக் கவிதைகள் இதோ.

நித்யகுமாரன் காதலை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது அவரது சில இடுகைகளைப் பார்க்கையில் தெரிந்து விட்டது. அவரது இந்த காதோரக் கவிதைகள் சிறியதாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறது.

இங்கே நான் குறிப்பிட்டிருக்கும் எல்லாமே சாம்பிள்தான். இதில் நான் காதல் கதைகள் எழுதுபவர்களை சேர்க்கவே இல்லை. சேர்த்திருந்தால் உண்மைத்தமிழனை தோற்கடித்த நந்தா என்ற தலைப்பில் லக்கி நாளைக்கு ஒரு பதிவு போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என்பதால் இதனுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆனாலும் இன்னும் ஒரு முழு திருப்தியை அடையவில்லை எனது மனம். எதையோ மறந்து விட்டாற்போன்று ஏதோ ஒன்று இந்தப் பதிவில் நெருடத்தான் செய்கிறது. அது சரி காதலைப் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் நாம் திருப்தி அடைந்து விடுகிறோமா என்ன????
மேலும் வாசிக்க...

Monday, March 24, 2008

என்னைப் பற்றி நானே...

My name is N.Nandhakumar. I am studying 6th std. My father's Name is........

நினைவு தெரிந்ததிலிருந்து என்னைப் பற்றி நானே பிரஸ்தாபித்து பேச
ஆரம்பிக்கும் விஷயங்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே இருந்திருக்கிறது.
மாமாவுக்கு நீ எப்படி இங்கிலீஷ் பேசுவேன்னு பேசிக்காட்டு பார்க்கலாம்
என்பதற்கோ Well Mr.Nandha Tell me about Yourself??? என்று காலம் காலமாய்
இன்டர்வியூக்களில் ஆரம்பிக்கப்படும் கேள்விகளுக்கோவான எதிர்வினைகளாகவே
அவை இருந்திருக்கின்றன.

இவற்றைத் தாண்டி தனக்கான ஒருத்தியை உறுதி செய்த பின்பு, அவளுடன் தனித்து
இருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் இது போன்ற ஒரு கேள்வியை வெகு நிச்சயம்
நம்மில் பலர் எதிர்கொள்ள நேரிடும். போலிப்பூச்சுகளையும், போதையினையும் கலந்து அந்த
தருணங்களில் வந்து விழும் வார்த்தைகள் நம்மில் பலருக்கு பெரும்பாலும்
தமிழில்தான் இருக்கக்கூடும். நம்முடைய முதல் தமிழ் சுய பிரசங்கம்
அதுவாகக் கூட இருக்கலாம்.

முகத்திற்கு நேராய் ஒருவர் நம்மை புகழும் போது நாம் காட்டும் ரீயாக்ஷன்
என்னவாய் இருக்க வேண்டும் என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்
கிடைக்கும் பதில்கள் எதுவுமே திருப்தி தருவதாய் மட்டும் இருப்பதில்லை.
நான் என்ன பெரிசா பண்ணிட்டேன்.என்னை ரொம்ப புகழறீங்க" என்று பொய்யாய்,
தன்னடக்கத்துடன் நெளியலாம்.... இதெல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம் என்று
ஒரு சாதனையாளனைப் போல் கர்வமாய் முகத்தை வைத்துக் கொள்ளலாம்.... அதுவும்
இல்லையா நீங்க பண்ணி இருப்பதோட ஒப்பிடறபோ நான் பண்ணது எல்லாம் எந்த
மூலைக்கு" என்று திருப்பிப் புகழ ஆரம்பிக்கலாம். தன் சுயம்
திருப்திப்படுத்தப்பட்ட சந்தோஷத்துடன் எதிராள் ஒரு வேளை நகர்ந்து
விடக்கூடும். எது எப்படியாயினும் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று
அந்த விநாடிகளில் நாம் உணர்ந்துதான் இருப்போம்.

வேறு ஒன்றுமில்லை. உங்களைப் பற்றி நீங்களே ஒரு சுய அறிமுகம் செய்து
விட்டு வலைச் சரத்தை ஆரம்பியுங்கள் என்று வெகு எளிதாய் சரப்பொறுப்பாளர்கள்
சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்கள்.ஆனல் உட்கார்ந்து யோசிக்கையில்தான்
புலப்படுகிறது இது எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது என்று. புகழ்ச்சியோ,
சுயபுராணமோ,கிண்டலோ,லிப்ஸ்டிக்கோ எதுவுமே கண்களை உறுத்தாத வரையில்தான்
நமக்கு நன்றாய் இருந்து வந்திருக்கிறது. விஞ்சி நிற்கும் எதுவும் வெகு எளிதில் கேலிக்குரியதாய் மாறிவிடுகிறது.

யாரோ ஒருத்தியுடன் தனித்திருக்க நேர்கையில் ஆரம்பித்திருக்க வேண்டிய என் சுய புராணத்தை, இதோ இங்கே, அதிகம் கண்ணை உறுத்தா மேல்பூச்சுகளைக் கலந்தே ஆரம்பிக்கிறேன்.

நந்தாவின் கிறுக்கல்கள் இது என் வலைப்பதிவு.

எரிச்சலும் கோபமும் நிறைந்த ஒரு சில கணங்களில், பெரிதாய் இதில் என்ன எழுதி சாதித்து விட்டேன் என்ற கேள்வியை எனக்குள் நானே அவ்வப்போது எழுப்பிக் கொள்வதும் கனத்த மவுனத்தை பதிலாய் பெற்றுக் கொள்வதுமாய் இருந்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் நம் பெரும்பாலாரின் வலை எழுத்துக்கள் பெரிதாய் எதையும் சாதித்து விட வில்லைதான் என்றாலும் அட்லீஸ்ட் நம் சிந்தனைகளில் கொஞ்சமேனும் தெளிவு பெறுவதற்கேனும், நம் தமிழ் அறிவை சற்றே விசாலப் படுத்திக்கொள்ளவேனும் இவை பெரிய அளவில் உதவி செய்துதான் இருக்கின்றன.

என் வலைப்பதிவுகளில் நான் எழுதிய எல்லா எழுத்துக்களுமே எனக்குப் பிடித்துதான் இருந்திருக்கின்றன. எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு கவிதை என்றால் இந்த பத்தினிப் பெண்கள் கவிதையைச் சொல்லலாம். இதில் படிமங்கள், இன்னபிற இத்யாதிகள் எதுவும் இருக்காது என்பதால் இதை வசன கவிதை என்றோ, கவிதை மாதிரி என்றோ ஏதேனும் ஒரு பெயரில் அழைத்துக் கொள்ளலாம்.

ஒற்றை முத்தம் என்ற கான்செப்டில் நான் எழுதிய சில கவிதைகளும்,கதைகளும் (ஒற்றை முத்தம் - கதை, கவிதைகள், சமாதானமாய் ஒரு முத்தம் காதல் எனப்படுவது யாதெனின்) என்னை வலையுலகில் காதல் பற்றி பிதற்றித்திரியும் கூட்டத்தில் ஒருத்தனாயும், நண்பர்களின் நடுவே வேறு ஒரு மொக்கைப்பெயரை வைத்து கூப்பிடும் அளவுக்கும் மாற்றி இருக்கிறது.

வலையுலகிலும் சரி சமூக வெளியிலும் சரி பெண்ணியம் பேச முற்படுபவர்களை கலாச்சார எதிரியாகவே துவேஷம் பாவித்து வரும் சூழலில் என்னை சுற்றியுள்ள, நான் பார்த்த சில பெண்கள் என் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் அவ்வப்போது கட்டுரைகளாக உருமாற்றம் பெற்று வந்திருக்கின்றன. பெண்ணியம் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரைகள், கதைகள் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடித்தவையாயும், ஆத்ம திருப்தியத் தருவதாயும் இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கருத்தியல் ரீதியில் நான் சொல்வது மிகச் சரிதான் என்ற இறுமாப்பையும், இது தொடர்பான கருத்து மோதல்கள் எங்கே நடந்தாலும் போய் களத்தில் குதிக்கும் தைரியத்தையும் தந்திருக்கிறது. அந்த வகையில் எனது சில இடுகைகள்
காலம் காலமாய் மனைவிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள்
கனவுகளைத் தொலைத்தவள்
நல்லதோர் வீணை செய்தே


இதைத் தாண்டி இன்றும் நான் வருந்தும் ஒரு விஷயம் பலத்த வெற்று விளம்பரங்களுடன் ஆரம்பித்த என் இந்திய வரலாறு தொடர் பதிவை இன்னும் தொடராமல் இருப்பதுதான். இதற்கான முழு முயழற்சிகளும் பிண்ணனியில் நடந்தேறி வருகின்றன. கூடிய சீக்கிரம் இவை அரங்கேறலாம்.

இதற்கு மேலும் பேசினால் ஓவராய் இருக்கும் என்பதால் இத்தோட ஜகா வாங்கிக்கறேன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது