மின்னும் புதியவர்கள்..
சில மாதங்களாகவே தமிழ்ப்பதிவுகளுக்குப் புதுவரவுகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் பலவகையான எழுத்துக்கள் காணக் கிடைக்கின்றன. வலையுலகில் பெண்மொழி இன்றைய தொலைக்காட்சி சீரியல்கள் போல் ஒரே விதமான சோக கீதங்களாக இல்லாமல், விளையாட்டு, வம்பு, உரிமைக்குரல், விழிப்புணர்வு என்று பலவிதங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்வதிலும், தொடர்பே இல்லாத இன்னொரு உயிருக்காக வருந்தும் இரக்க உணர்விலும் முன்னணியில் இருக்கும் பெண்களின் பண்பாக, பிரார்த்தனை நேரம் என்று தாயுள்ளத்தோடு தனிப் பதிவே தொடங்கி செயல்பட்டு வரும் கௌசி பற்றி முதலில்... சின்னச் சின்னக் கவிதை இடுகைகளுடன் நுழைந்த கௌசி, சாந்தியின் பாலின சர்ச்சை பற்றிய பதிவில் தான் முதன்முதலில் கவனம் பெற்றார். அந்த நேரத்துப் பதிவுகளில் வராத விவரங்கள் பலவற்றைத் தேடி ஆராய்ந்து எழுதிய இவரது இடுகை, சாந்தியையும் தாண்டி ஒலிம்பிக்கின் வேறு பல பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றது. பெண்ணுரிமை பற்றிய கௌசியின் பார்வையும் ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களும், பாரதி பிறந்தநாளைப் பற்றிய பதிவும் பெரிய அலைகளை எழுப்பவல்ல, சின்னச் சின்னக் கற்கள். வைரமுத்துவின் நூறுவண்ணக் கனவைப் பற்றிய இவரது இடுகை எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமானது. பெரிய அறிவாளியோ, அறிந்தவளோ இல்லை என்று சொல்லிக் கொண்டே பலவிசயங்களைப் பற்றிப் பரவலாக எழுதிக் கொண்டிருக்கும் கௌசி இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் வேண்டுகோள் வைக்கிறேன். கொஞ்சம் லைட்டாகவும் ஏதாச்சும் எழுதுங்களேன் கௌசி...
அடுத்தபடியாக, புதிதாக வந்து, சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பவர் கண்மணி. பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது பொதுவாக சமூகத்தில் புழங்கும் ஒரு கருத்து. ஒரு மனோரமா, ஒரு கோவை சரளாவுக்குப் பின் காமெடி நடிகைக்கான இடம் கூட தமிழ்ச் சினிமாவில் பல நாள் காலியாகத் தான் இருந்தது. அப்படி இருக்கையில், விளையாட்டாக, சின்னச் சின்ன வாழ்க்கை நிகழ்வுகளில் தானும் சிரித்து, அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கும் சில பெண்கள் வியப்புக்குரியவர்களாகிறார்கள். இந்த விதத்திலேயே, எனக்கு கண்மணியை மிகவும் பிடிக்கும். போன டிசம்பரில் வலைக்கு வந்து, நான்கு மாதங்களில், அரைசதத்தைத் தொடப் போகும் கண்மணியின் ஒவ்வொரு பதிவுமே ஒவ்வொரு விதமான நகைச்சுவை தான். சாய்பாபா-கலைஞர் சந்திப்பை ஒட்டி, இவர்கள் பாபாவைச் சந்தித்தால், தமிழ்மண பின்னூட்ட உயரெல்லையை ஒட்டி, 24ஆம் புலிகேசியை 30ஆக்கிய கதை, ஜோதியில் சேருவதற்காக கண்டாக்டரிடம் போன பதிவு, மதன்ஸ் திரைப்பார்வை என்று உள்குத்து வெளிக்குத்து கவலையில்லாமல், அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார் கண்மணி. சமீபத்தில் சுப்பிரமணிக்கு இனிஷியல் வைத்தது படித்து சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருந்தேன்.
"அம்மணி கண்மணி, ரெண்டு வாண்டுக்கு அம்மாவா நீங்க? கல்யாணம் ஆன பின்னும் சிரிச்சிகிட்டிருக்கீங்களா?!! அதிசயமாக்கீதும்மா..!! இன்னும் நல்லா சிரிச்சி எங்களையும் சிரிக்க வையுங்க :) "
அடுத்து நான் தவறாமல் படித்துவிடும் மற்றொரு பதிவர் "மை பிரெண்ட்". பலநாட்களாக எழுதிக் கொண்டிருந்தாலும் டிசம்பர் போலத்தான் எல்லாம் தமிழில் எழுதத் தொடங்கி இருக்கிறார் மை பிரெண்ட். இவருடைய உலகை அழிக்கும் ரப்பர் பதிவை நண்பர் ஒருவர் பரிந்துரைத்ததால் இவரின் இடுகைகளைப் பார்க்கத் தொடங்கினேன். தோஹாவின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மலேசிய அரியணை மாற்றங்கள், இயற்கைப் பேரிடர்கள் என்று தன் நாட்டின் பல்வேறு நிகழ்வுகளையும் செய்திப் பகிர்வுகளும், திரைப்பட விமர்சனங்களும் என்று பலவும் காணக் கிடைக்கிறது இவரின் நட்புலகில் (The World of My Friend). கதையல்ல நிஜம் என்ற மை பிரெண்டின் குழந்தைப்பருவத் தொடர், விறுவிறுப்பான திருப்பங்களைக் கொண்ட வித்தியாசமான மர்மத்தொடராகவும், நகைச்சுவை கலந்த ஜாலியான தொடராகவும் இருக்கிறது. அமைதியான பெண்குரல் ஒன்றும் ஒளிந்திருக்கிறது மை பிரெண்டின் பதிவுகளில். மை ப்ரெண்டின் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவு இது. இந்தப் பதிவு படித்த பின் கேட்ட அந்தப் பாடலும் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.. அந்த மர்மத் தொடரை சீக்கிரம் முடிங்க தாயி..
ஒரு தாயாக, தன் குழந்தைகளின் மொழியை முன்வைக்கும் சிறுமுயற்சிகள், ஏற்கனவே நாம் படித்திருக்கும் உலக சினிமா விமர்சனங்களைத் தன்பார்வையில் தரும் மனிதம், பெண்களே அதிகம் சிறுநீரக தானம் செய்கிறார்கள் என்பது போன்ற செய்தி விமர்சனங்கள், கௌசியை எழுத வைத்த பெண்ணுரிமை பற்றிய பதிவு, சமையல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துக் கொண்டே வருகிறார் முத்துலட்சுமி. அம்மாவுடன் கொண்டாடிய பண்டிகைகள் பற்றிய பதிவும் அண்டை வீட்டாராக புறாக் குடும்பமொன்றை வளர்த்த பகிர்வும் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள். இடைவெளியின்றி சீராக எழுதிக் கொண்டிருக்கும் முத்துலட்சுமி இன்னும் பரவலான விசயங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. (கவிதை எழுதி காலத்தை வீணடிக்காதீங்க லட்சுமி :)))) )
நான் படிக்கும் புதுப் பதிவர்கள் இவர்கள் என்பதைத் தவிர, இன்னும் சில புதிய பதிவர்கள் விட்டுப் போயிருக்கலாம். இன்னும் இன்னும் அதிக பதிவர்கள், ஆரோக்கியமான பதிவுகளுக்காக வலைப்பதிவுலகம் என்றென்றும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.