07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மஞ்சூர் ராசா. Show all posts
Showing posts with label மஞ்சூர் ராசா. Show all posts

Sunday, August 19, 2007

மாலையை அலங்கரிப்பவை

வலைச்சரத்தின் நாராக இருந்து இந்த ஒரு வாரத்தில் ஒரு மலர்மாலை தொடுக்க முயற்சி செய்தேன் அந்த முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேனா என்பது உங்களுக்கு தான் தெரியும். இறுதி நாளான இன்று முத்தமிழ் குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ள சில நண்பர்களின் வலைமலர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

நிலாரசிகனின் கவிதைகள் பொதுவாகவே இளம் நெஞ்சங்கள் பலராலும் விரும்பப்படும் கவிதைகள். காதல் கவிதைகளை தனக்கே உரித்தான விசேஷ நடையில் எழுதிவருபவர். உதாரணமாக:

*இந்த ஊரில் யாருக்கும்
இரக்கம் இல்லை.
உன் பாதச்சுவடுகளை
மிதிப்பவர்களைத்தான்
சொல்கிறேன்.

காதலை மட்டும் அல்லாது வேறு பல நல்ல கவிதைகளையும் நிலாரசிகன் எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக:
விபத்தில் கிழிந்த உடலின்
வலியை விட
எப்போதும் அதிகமாகவே
இருக்கிறது மருத்துவமனையின்
சூழல் தருகின்ற மனவலி!
மனவலி


“தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்தது பாரில் நீடிய பெருமை சேர்பதி பழையாறை”. பெரிய புராணம் புகழ்ந்த இந்த பழையாறை எங்க இருக்கு? என்று கேட்டு அதை பற்றி விவரமாக ஒரு தமிழனின் பதிவுகள் என்ற தன் பதிவில் எழுதியிருக்கும் ஹலோ தமிழா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகைப்பட வல்லுனர். திருத்தலங்களை பற்றிய இவரது கட்டுரைகள் மிகவும் புகழ்பெற்றவை. அதிகம் எழுதாமல் இருக்கும் இவர் தொடர்ந்து எழுதவேண்டும்.


வேண்டாத வளர்ச்சி

ஆடாமல்
அசையாமல்
ஒட்ட வைத்தாற் போல
ஓரிடத்தில் பச்சென அமர்ந்து
காலால் நடப்பதை மறுத்து
படிக்கட்டுகளை மறந்து
குப்பை உணவால்
ஊரில் வளருது
வித வித அளவில்
சின்னதாகவும் பெரியதாகவும்
வட்ட வட்ட தொப்பைகள்
வல்லுனர் குறிப்புகள் என தனது விழியன் பக்கம் என்ற பதிவில் தொடர்ந்து எழுதிவரும் விழியன் வளர்ந்துவரும் பதிவாளர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட. இவரது தோழியே உன்னை தேடுகிறேன் என்னும் முதல் படைப்பு பரவலான வாசகர்களை இவருக்கு பெற்று தந்திருக்கிறது. சிறுவர்களுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ள இவர் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞரும் கூட.


"ஆதாம் ஏவாள் கம்யூனிஸ்டா? என்ன சொல்றீங்க தோழர்?" என்றார் பாண்டியன்.
"அட ஆமாம் பாண்டியா...அவங்க ரெண்டுபேருக்கும் உடுத்த ஒட்டுதுணியில்லை. காலில் போட செருப்பில்லை. தலைக்கு மேலே கூரை இல்லை. சாப்பிட இருந்தது ரெண்டு பேருக்கு ஒரே ஆப்பிள். இப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்தும் கூட சொர்க்கத்தில் இருப்பதா நம்பினாங்களே? இவங்க கம்யூனிஸ்ட் இல்லைன்னா வேற யாரு கம்யூனிஸ்டு?" என்று ஆவேசத்துடன் கேட்டார் மாவோ. மாவோவும் பேண்டேஜ் பாண்டியனும்

சுவையாகவும், விறுவிறுப்பாகவும், விவரமாகவும் எழுதும் நண்பர் செல்வனின் உலகின் முதல் கடவுள் என்னும் வலைப்பதிவில் அவர் தொடாததே இல்லை என்னும் அளவிற்கு பல விசயங்களை எழுதியிருக்கிறார். அடிக்கடி பரப்பரப்பாக விவாதிக்கப்படும் பதிவுகளில் இவரது பதிவும் ஒன்று.

நான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்! நான் வில்லனல்ல! நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி! என்று கூறும் ரசிகவ் ஞானியார் எந்த ஒரு விசயத்தையும் நகைச்சுவையுடன் மனதில் தைக்கும் வண்ணம் எழுதுவதில் வல்லவர்.
"தம்பி! நேத்து ஒரு பிணம் வந்துச்சு ஆளைப்பார்த்தா முறுக்கு மீசையோடு சும்மா திடகாத்திரமா இருந்தார். ஆனால் சாதாரணமாக நாங்கள் கிழித்து தைத்துக்கொண்டிருந்தோம். வாழும்பொழுதுதான் நீ நான் என்று மல்லுக் கட்டிக்கொண்டு நிற்கின்றோம். ஆனால் இப்ப பாருங்க எல்லாருக்கும் இந்த நிலைமைதான்" என்று அவர் சாதாரணமாக சொன்னாலும் அவருடைய பேச்சில் நிறைய பக்குவம் தெரிந்தது.
பிணத்தோடு விளையாடி..பிணத்தோடு உறவாடி..

இவரது கவிதைகளும் அப்படியே..

எங்கள்
கரடுமுரடான
சாலைகள் எல்லாம்...
சரியாக வேண்டும்!
மத்திய அரசே! ஒரு
மந்திரியை மட்டும்...
ஊருக்குள் அனுப்பு!

நியூட்டனின் மூன்றாவது விதி என்னும் கவிதையே அதற்கு சாட்சி.


தில்லை நகருக்கு "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்னும் காரணப் பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து உணவு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை செய்யவோ என்னமோ, ஒருமுறை துர்வாச முனிவர் நடு இரவில், தன் சிஷ்யர்களுடன் தில்லைச் சிற்றம்பலம் வந்தடைகிறார். வரும்போதே நல்ல பசி முனிவருக்கு. கோவிலின் அர்த்தஜாம பூஜையும் அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே துர்வாசரின் பசியைப் போக்க யாருமே முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர். அப்போது அன்னை தானே முன் வந்து அவர் பசிப்பிணி தீர்க்க வரவும், துர்வாசர் நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார்.
சிதம்பர ரகசியம் -கோபுர வாசலிலே!
எப்படித்தான் இவ்வளவு விசயங்களையும் புள்ளிவிவரங்களையும் மனதிற்குள் வைத்திருக்கிறாரோ என்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கீதா சாம்பசிவம் மிகவும் நகைச்சுவை உணர்வுள்ளவரும் கூட. என்ன சொன்னாலும் கோவித்துக்கொள்ளாமல் தான் சொல்லவந்ததை சொல்லிவிடும் இவரது ஆன்மீக கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.

பிரியன் கவிதைகள் என தன் வலைமலரை குறிப்பிடும் பிரியன் என்னும் விக்கி வளர்ந்து வரும் கவிஞர்களில் ஒருவர். இவரது ஆரம்பக்கால கவிதைகளுடன் ஒப்பிடும்பொழுது இவரிடம் ஏராளமான மாற்றங்கள் தெரிகிறது.
இவரது காதல் கவிதைகள் பலராலும் பாராட்டப்பட்டவை.

என்னுடன் ஓடிவருவதானால் -
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
மேலும் படிக்க

ராமாயணமும் மகாபாரதமும் ஒரு கற்பனைக் கதை என்பது என் கருத்து.
என்னையும் ராமாயணமும் மகாபாரதமும் செம்மை படுத்தின என்பதினை மறக்க முடியாது என்றாலும் கூட வேதாத்திரி மகரிஷி சொன்னது போல் இவைகள் கட்டுக்கதை என்பதில் நானும் உடன்படுகின்றேன்.
என்று சொல்லும் ரிஷி ரவீந்திரனின் கிறுக்கல்கள் என்னும் தன் பதிவில் பல நல்ல விசயங்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இதை தவிர மேலும் பல பதிவுகள் நடத்திவரும் இவர் தனது இணைய பக்கத்தில் பல முக்கியமான வணிகசம்பந்தமான விசயங்களையும் எழுதிவருகிறார்.

நிறைவு பெறுகிறது. அனைவருக்கும் நன்றி.
மேலும் வாசிக்க...

Friday, August 17, 2007

ஒரு சில தனி மலர்கள்

மாலையில் தொடுக்காமல் இருந்தாலும் தங்கள் அழகான வர்ணத்தால் கவர்ந்து இழுக்கும் தனி மலர்களையும் நாம் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறோம் அவற்றில் சில இன்று:

"மிகவும் நீளமானது எது தெரியுமா..? நைல் நதியோ, கங்கை நதியோ அல்ல.. வேலை இல்லாதவனின் பகல் பொழுது..."
- எங்கேயோ படித்த வரிகள், என் வாழ்க்கையின் மேல் வர்ணம் பூசிக் கொண்டிருக்கின்றன.

கதவை இறுக்கச் சாத்திய பின், உள் நுழைகின்ற இருளில் என்னை மறைத்துக் கொள்கிறேன். பண்பலையின் பகல் நேரப் பாடல்கள், நகராப் பகல் பொழுதின் கனத்தை என் மேல் அழுத்துகின்றன.
மூச்சுத் திணறி, முனகி, தத்தளித்து, தான் தவித்து இயல்பிற்குத் திரும்புகையில், வெல்ல முடியாத அரக்கனின் நிழலாய் என்னைச் சூழ்கின்றன, காலியான வயிறும், காற்றில் படபடக்கும் வெற்றுப் பாக்கெட்டும்..! காலையின் நீர்த்துளிகள், நிறைத்த வயிற்றின், காலிப் பகுதிகளை மதியத்தின் அகோரப்பசி கொல்கின்றது.
கொம்பு முளைத்த வறுமை - வெறுமை என்னும் தனது ஒரு இடுகையில் எழுதியிருக்கும் பவானி வசந்தக்குமார் சமீபத்தில் வலைப்பதிய ஆரம்பித்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் வருங்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளனாக வரமுடியும் என பறைச்சாற்றுகிறார்.


எச்சில் ஒழுகும் வேட்கையோடு
போதையில் குழறிக்கொஞ்சி
வெறிகொண்டு என் மேற்படரும்
உன் மோகத்தில்
அழுத்தும் தாலிக்கயிற்றை
அதிகவலியோடு உணர்கின்றேன்.
சுருக்கென்று தைக்கும் வரிகளை கொண்டிருக்கும் அந்திமக் காலம் என்னும் கவிதை கணேஷ் குமார் ஜோதிராஜனின் கவிதைத்திறமைக்கு ஒரு சிறிய உதாரணமாகும். தொடர்ந்து தனது கவிதைப் பக்கங்கள் பதிவில் எழுதிவரும் இவர் வளர்ந்து வரும் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

தரவுத் தளம் என்றால் தகவல்களை சேர்த்து வைக்கும் முறை.
* நம் சட்டைப் பை குறிப்பேட்டில் தொலைபேசி எண்களைக் குறித்து வைத்திருப்பதும் தரவுத்தளம்தான். அதிலிருந்து தகவலைப் பெறுவது, புதிய தகவலைச் சேர்ப்பது ஒவ்வொன்றுக்கும் வழிமுறைகள் வைத்திருப்போம்.
* விரிதாள் (spreadsheet) மென்பொருளில் தரவுத் தளம் இருக்கலாம்.
* அல்லது ஒரு உரைக் கோப்பாகக் (text file) கூட வைத்திருக்கலாம்.
தரவுத் தள வடிவமைப்பு என்னும் தொடர்கட்டுரையில் உள்ள இந்த எளிய தமிழ் வரிகளே நம்மை அக்கட்டுரை தொடர் முழுவதையும் படிக்க தூண்டுகிறது. மிக அழகான எளிய தமிழில் கணினி சம்பந்தமான பல சிறந்தக் கட்டுரைகளை மா.சிவக்குமார் தனது பொருள் செய்ய விரும்பு என்னும் பதிவில் தொடர்ந்து எழுதி வருகிறார். மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு அதி முக்கிய சேவையாகும் இது.

கடலில் மட்டும் தான் அலைகள் வருமா? மலர்ச்செடிகள் காற்றில் ஆடுகையில் அவற்றிலிருந்தும் சுகந்தமான அலைகள் வரும். ஆம் 2003 முதல் தொடர்ந்து எழுதிவரும் அருணா சீனிவாசனின் அலைகள் வலைமலர் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
"எங்களது சரியான வெளி நாட்டு இந்தியர் வாழ்க்கை; வார இறுதியில் தவறாமல் நண்பர்களுடன் "இந்தியாவைப் பற்ற்யும் அதன் பிர்ச்சனைகளைப் பற்றியும் பேசிவிட்டு - ' இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவென்றால் - என்கிற ரீதியில்.' முடியும். ஆனால் இத்தனைக்கு அடியிலும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. அடுத்த நாளைப் பற்றி யோசிக்காமல் தொலை தூரத்தில் மனப் பார்வையை ஓட விட்டால், ஏதோ ஒரு வெறுமை தெரிந்தது. அந்த உண்மை முகத்தில் அறைவதுபோல் இருந்தது." என்று தனது ஒரு பதிவில் எழுதியிருக்கும் அருணா அவர்கள் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர். நிர்வாகவியலைப்பற்றிய அவரது தொடர் கட்டுரை மிகவும் பிரசித்தமானது மேலும் படிக்க Management Mantras


தெருவின் மூலைகளில் பூக்கள்
சுமந்து காத்திருக்கிறார்கள்,
நவீன யுகத்து கண்ணகிகள்
காற்சிலம்பிற்கு பதிலாய் உடலை விற்றபடி...
நள்ளிரவு நகரம் என்னும் கவிதையிலுள்ள இவ்வரிகள் நகரின் நள்ளிரவின் நிதர்சனத்தை படம்பிடித்து காடுகின்றன. இக்கவிதையை எழுதிய கென்னின் திருவிளையாட்டம் பதிவில் உள்ள பல கவிதைகளும் நிதர்சனங்களே.

விரைவில் முடியும்
மேலும் வாசிக்க...

Thursday, August 16, 2007

கவிதை பாடும் சில மலர்கள்

இதழ்கள் இல்லாத மலர்களா? வளர்ந்து வரும் கவிதாயினி அனிதாவின இதழ்கள் வெறும் மலர்களின் இதழ்களன்று. இதில் வித்தியாசமான பல்வேறு இதழ்களும் இருக்கின்றன.
கரிசனம்
அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.

திறமை வாய்ந்த இக்கவிதாயினி மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய எழுதவேண்டும். சமீபத்தில் இவரது கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்தன என்பது கூடுதல் செய்தி. இவரது ஒற்றை ரோஜா என்னும் கவிதையை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் ! நிறமில்லாத மலர்களா? நிறங்கள் என தன் வலை மலரை குறிப்பிடும் செல்வநாயகி சக்தி என்ற மற்றொரு வலைமலரையும் நடத்திவருகிறார்.
அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
என வித்தியாசமாக ஆசைப்படும் செல்வநாயகி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். இவரது நான் ரசித்த பயணம் படிக்க வேண்டிய ஒரு நல்லப் படைப்பு.

காகித மலர்கள் என்று தன் வலைமலரை தன்யா குறிப்பிட்டாலும் அவை உண்மையிலேயே காகித மலர்களல்ல. ஓலமடங்கிய வெளிகளில் என தொடங்கும் கவிதையில்
குளிர் இரவுகளில்
மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற
மிருதுவான உன் உடலை,
என்னைப் போர்த்தும் விரல்களை
கதகதப்பான வார்த்தைகளை
தேடித் தேடி
சலிப்புறுகிறது மனசு
என்னும் வரிகளே எடுத்துக்காட்டு. தொலைவில் கேட்கும் உன் குரலை என் வீட்டுச் சாளரங்கள் தடுக்கின்றன என்னும் கவிதையும் படிக்கவேண்டிய ஒரு கவிதை.


விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்
என கவிதை மூலம் விழித்துக்கொள்ளவைக்கும் ஸ்வாதியின் மைத்துளிகள் மலரிலிருந்து உதிரும் உதிரிப்பூக்களை போல. தொடர்ந்து எழுதிவரும் இவர் நல்லதொரு கவிதாயினியாக விரைவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கலாம். இவருடைய தமிழ் பிரவாகம் என்னும் பதிவில் தமிழ் பிரவாகம் குழுமத்தில் பலரும் எழுதிவரும் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்! என கண்ணம்மா என்ற தன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாதி இங்கும் பல எழுச்சியூட்டும் கவிதைகள எழுதியிருக்கிறார்.

உலகிலுள்ள அனைவரும் எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும். என இருந்தால் எப்படி இருக்கும். அந்த எண்ணத்தையே தன் வலைமலரின் தலைப்பாக்கியிருக்கும் ஷைலஜாவின் வலைமலரில் உங்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை என கதம்பமாலையாக எல்லாம் கிடைக்கும். அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஒரே நோக்கில் எழுதிவரும் இவரது ஒவ்வொரு படைப்பும் படிக்கும் ஒவ்வொருவருடைய முகத்திலும் புன்னகையை தோற்றுவிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதுவே இவரின் வெற்றியின் ரகசியமும் கூட. தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை உள்ள இவர் ஒரு சிறந்த பாடகி என்பதும் வர்ணனையாளர் என்பதும் கூடுதல் தகவல்கள். உன்னை நினைக்கையிலே என்னும் இவரது கவிதை சமீபத்தில் அன்புடன் குழுமத்தில் நடந்த ஒலிவடிவ கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஷைலஜாவின் சிறு கவிதை ஒன்று:
மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நில மகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.

மலர்கள் அதிகமாக மலர்வது இளவேனில் காலத்தில் தான். இளவேனில் என தன் வலைமலரை குறிப்பிடும் தமிழ் நதி ஒரு வளர்ந்து வரும் கவிதாயினி. இவரது கவிதை தொகுப்பு சமீபத்தில் மதுரை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். ஆனந்த விகடனிலும் இவரது கவிதைகள் வந்துள்ளன. சமீபக்கால ஈழத்து கவிதாயினிகளில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மெல்லிய சோகம் இழையோடும் இவரது கவிதைகளை படித்தப்பின் ஒரு கணமாவது நம்மை அதிர செய்யும் என்பது நிதர்சனம்.
காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை
இவரது நதியின் ஆழத்தில் என்னும் கவிதையை பாருங்கள் புரியும்.

மலர்களை ரசிக்க ஒரு மனம் வேண்டும் அதுவும் மனம் நமது உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தது. அதையே தன் வலைமலரின் தலைப்பாக வைத்திருக்கும் வேதாவின் மனம் - உண்மை முகம் வளர்ந்து வரும் ஒரு கவிதாயினியை நமக்கு வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்கிறது. தனது மனதில் தோன்றுபவற்றை கவிதைகளாக கொட்டிவிடும் இவரது சமீப கால கவிதைகளில் நல்ல முதிர்ச்சியும் வளர்ச்சியும் தெரிகிறது. சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை என்னும் அவரது கவிதையில்:
அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விடுகின்றன
என கவிமொழி பேசுகிறார். இவரது வேதா என்னும் மற்றொரு வலைமலரில் பல சுவையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இன்னும் வரும்.

http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்: http://groups.google.com/group/muththamiz
மேலும் வாசிக்க...

Wednesday, August 15, 2007

நாருக்கு மேலும் அழகூட்டும் மலர்கள்

மலரில் தேன் இருப்பது இயற்கையே அதனால் தான் தேன்துளி என தன் வலைமலரை பத்மா அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன். அவரது பதிவிலிருந்து:
இந்திய அறிவியல் கழக கூட்டம் மதுரையில் நடந்த போது சிறந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி பதக்கங்கள் வழங்க, அன்று மாலை பிரதமருடன் நடந்த விருந்தில் இளம் விஞ்ஞானிகள் சார்பாக என்னை பேச சொல்ல அழைத்தார்கள். ஐந்து நிமிட பேச்சு இருபது நிமிடமாக ஆனதும், ஆராய்ச்சிக்கழகங்களில் ஆய்வகங்களில் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களின் உடல்நலம் பாதிக்க கூடிய வகையில், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து எடுக்கும் இரத்தம் செல்களை அகற்றிய பிறகு கழிவுநீர்க்குழாயில் கொட்டப்படுவதும், ரேடியோ கதிர்வீசும் வேதிப்பொருட்கள் பயன்படுத்திய சாதனங்கள் சுத்தம் செய்யப்படுவதும் எத்தனை முறைகேடானது என்பது தொடங்கி, அறிவியல் திட்டங்களுக்கான நிதியில் எத்தனை முறைகேடு நடக்கிறது என்பதற்கு AIIMs இல் நடப்பதை சொன்னதும், மறுநாள் வட இந்திய பத்திரிக்கைகள் young scienctist uproar என்று எழுத, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக, என்னை நீக்கிவிடுவார்கள் என்று அண்ணன் பயப்பட, பெற்றொர் கடிந்துகொள்ள இவை யாவும் நடவாமல், ராஜீவுடன் நெருங்கி பழகவும், பாதிக்கப்பட்ட கடைநிலை ஊழியர் சிலருக்கு மருத்துவ உதவி தரவும், அதன் பின் AIIMSஇல் சில மாற்றங்கள் ஏற்பட்டதும் மறக்க முடியாதது.

பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ள பத்மாவின் தேன்துளி கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய ஒரு வலைமலராகும்.

பதினெட்டு வயதில் வீட்டை விட்டு ஓடி, பின் கட்சியை விட்டு, அதன் பின் தமிழ் அறிவு'சீவி' 'குழாத்தை' விட்டு, சீக்கிரமே தமிழ் கல்லை ... மன்னிக்க ... மண்ணை விட்டு ... என தன்னைப்பற்றி கூறும் வளர்மதியின்
வினையானதொகையில்
அரசியல் கட்டுரைகள், நவீன கவிதைகள் என படிக்கவும் யோசிக்கவும் ஏராளமான விசயங்கள் இருக்கின்றன.

அமெச்சூர் கலை ரசிகனாகப்பட்ட நான் என்னைக் கவர்ந்த, கவரும் கலைப் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவே இந்த வலைப்பதிவு என்னும் அறிமுகத்துடன் தொடங்கப்பட்டுள்ள பிறழ்வு என்னும் வலைமலரில் மிகவும் அரிதான பல ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன . சாத்தான் (புனைப்பெயர் என நினைக்கிறேன்) பின்குறிப்பாக எழுதியுள்ளது:
தமிழ்ப் பதிப்பகங்களுக்கு: உங்கள் புத்தகங்களுக்கு அட்டைப் படம் போட இந்தப் படங்களை தயவுசெய்து சுடாதீர்கள். இங்குள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். ஆம் உண்மை தான் சுடுவதும் அல்லாமல் எங்கிருந்து சுட்டோம் என்றும் கூட பலர் குறிப்பிடுவதில்லை என்பது மிகவும் வேதனையான ஒரு விசயம்.

இந்த வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்கள் மற்றும் படைப்புகளின் பட்டியல் இங்கே.

நெருப்பாக கொதிக்கும் மலர்களும் உண்டோ என சிலருக்கு சந்தேகம் வரும் அசுரனின் வலைமலரை பார்த்தால் அது உண்மையென்று புரியும். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் அக்னி துண்டங்கள் என்றால் மிகையாகாது. சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தொடர்ந்து எழுதிவரும் அசுரனின் படைப்புகள் நிதர்சனத்தை வெளிச்சப்படுத்துகின்றன.

ஈழத்து வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் பொடிச்சி. அவர் கூறுவதை கேளுங்கள்:
2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள…. ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாது சிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்கு ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல.

என்று சொல்லும் பொடிச்சியின் வலைமலரில் ஈழத்து செய்திகளுடன் வேறு பல முக்கிய படைப்புகளும் அடங்கியுள்ளன. மேலும் படிக்க: பொடிச்சியின் பெட்டைக்குப் பட்டவை அல்லது பெட்டை அலசல்


இன்னும் வரும்.
மேலும் வாசிக்க...

Tuesday, August 14, 2007

நாரில் தொடுத்த சில மலர்கள்

'மரணம் உங்கள் வீட்டு வாசற்படியைத் தட்டும்போது
அதனை எந்த பிரார்த்தனை கொண்டு அலங்கரிப்பீர்கள்?' என்று கேட்கிறது தாகூரின் கவிதை வரிகள்.

என தொடங்கி தன் மீளா துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நண்பர் ஆசிப்பின் மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!!
வலைப்பூவில் அவர் எழுதியிருப்பது:
" யாஸ்மினிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வருகிறது. "இன்றைக்கு ஒருநாள் மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கம்மா. இனிமேல் வாழ்நாள் முழுக்க உனக்கு வலிக்கவே வலிக்காது" எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி நான் என்று நினைக்கும்போது மனது மரத்துப் போகிறது. வலியோடேனும் அவள் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது."

இணைய உலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ஆசிப்பின் சாத்தான் குளத்து வேதம் அனைத்துவித மணம், நிறங்கள் எனக்கூடிய பல வண்ண வலைமலராகும்.

நுனிப்புல் மேய்வதைப் பற்றி நேற்று எழுதியதை தனது வலைப்பூவின் தலைப்புடன் இணைத்து வாழ்த்தி பின்னூட்டம் இட்டிருக்கும் உஷா ராமச்சந்திரனின் நுனிப்புல் நான் தொடர்ந்து படித்து வரும் ஒன்று. நுனிப்புல் என அவர் தலைப்பிட்டிருந்தாலும் அதில் உண்மையில்லை. ஆரம்பத்திலிருந்தே அவரது பல படைப்புகளை படித்துவருவதால் இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். நீண்டக்காலமாக இணைய உலகிலும் ஊடகங்களிலும் எழுதிவரும் இவரின் மலர் அரங்கத்திற்குள் நுழைந்தாலே உங்களுக்கு அது புரிந்துவிடும். தோழியர்களுடன் இணைந்து முதன் முதலில் பெண்களுக்கான வலைப்பதிவு ஆரம்பித்தவர்களில் இவர் முக்கியமானவர் என்பது கூடுதல் செய்தி.

பின்நவீனத்துவம் என்றாலே பலர் ஓடிஒளிந்துக்கொள்ளும் இந்த காலத்தில் விடாமல் அதில் தீவிர ஆர்வம் காட்டுவதுமட்டுமல்லாமல், நவீனக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என முழுவதும் வித்தியாசமான தளத்தில் இயங்கி வருபவரும், பல அருமையான திரைப்படங்களை பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதிவருபவருமான நண்பர் அய்யனாரின் தனிமையின் இசை என்னும் வலைமலர் அடர்ந்த வனாந்தரத்தில் எங்கோ பூத்து தன் மணத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அற்புதமான ஒரு வலைப்பூவாகும்.

ஜெசிலாவின் கிறுக்கல்கள் என தன் வலைப்பூவை குறிப்பிட்டிருந்தாலும் அதில் அவர் கிறுக்கியுள்ளவை கிறுக்கல்களல்ல என்பதை நாம் படிக்கும் போது தெரிந்துக்கொள்ளலாம். தொடர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பெண்ணியம் பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் குரல்கொடுத்து எழுதிவரும் இவர் கவிதைகளிலும் கலக்குகிறார் என்பதை நீங்கள் அவரது வலைப்பூவிற்கு சென்று பார்த்தால் தெரிந்துக்கொள்வீர்கள்.

அரசியல் கட்டுரைகள் மட்டும் தான் இவர் எழுதுவார் என நான் நினைத்திருக்கும் பொழுது அருமையான கதைகளும் எழுதி என்னை திகைக்கவைத்தவர் பினாத்தல் சுரேஷ். பினாத்தல்கள். மெல்லிய நகைச்சுவை இழையோட இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளில் மறைந்திருக்கும் கருத்துக்கள் இவரது ஆழமான பார்வையை வெளிப்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்களும் அமீரக பதிவர்கள். ஒரு சிலர் விட்டும் போயிருக்கலாம். இதில் உஷா மட்டும் இப்பொழுது துபாயில் இல்லை என நினைக்கிறேன்.

இன்னும் வரும்.
மேலும் வாசிக்க...

Monday, August 13, 2007

வலைச்சரத்தின் நார்!

என்னடா இவன் வலைச்சரத்தின் நார் என தலைப்பு கொடுத்திருக்கானேன்னு யோசிக்கிறிங்க போல. அது ஒண்ணும் இல்லீங்க, எவ்வளவோ முக்கியமான அழகான பூக்களால் தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வலைச்சரத்தில் நானெல்லாம் நாராக கூட இருக்க தகுதியிருக்கான்னு தெரியலெ அதான்.

நுனிப்புல் மேய்பவர்களில் ஒருவனான என்னை வலைச்சரத்திற்கு அழைத்தது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அதிகமாக எதுவும் எழுதாமலிருக்கும் எனது வலைப்பதிவை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ஒற்றை வரி ராசா என்றுக்கூட கிண்டல் அடிக்கின்றனர். ஆனாலும் மதித்து அழைத்ததற்கு நன்றி.

எனது வலைப்பூவில் வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது ஆசையாகவே தான் இன்னும்.

முக்கியமாக முத்தமிழ் மடலாடற் குழுவின் நிர்வாகத்தில் இருப்பதால் பதிவுகள் பக்கம் வர அதிக நேரம் இருப்பதில்லை.
அதிகமாக எழுதவில்லை என்றாலும் சில மொழிப்பெயர்ப்பு முயற்சிகள் செய்துள்ளேன்.
எனது பதிவில் நான் எழுதியுள்ள முன்னிறுத்தல் என்னும் கட்டுரை உங்களுக்கு பயன்படலாம்.

மேலும் சில மொழிப்பெயர்ப்பு கவிதைகளும், நகைச்சுவை கட்டுரைகளும் உள்ளன. நேரம் இருந்தால் பாருங்கள்.

அரசியல், இலக்கியம், வணிகம், விளையாட்டு என பல துறைகளில் ஆர்வம் இருந்தாலும் எல்லாவற்றிலும் மேலோட்டமாகத்தான் சுற்றி வருவதே வாடிக்கையாக போய்விட்டது.

வலைப்பூக்கள் என்னும் தமிழ் பதிவுகள் மற்றும் குழுமங்கள் மூலம் நட்பு வட்டம் விரிவடைந்துள்ளதும் பல புது விசயங்கள் அறிந்துக்கொள்ள முடிவதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

கட்டற்ற சுதந்திரம் இருப்பதனால் தனி மனித இன மத தாக்குதல்கள் அதிகமாக இருப்பது வருத்தத்தை அளித்தாலும் அதையும் தாண்டி பல நல்ல படைப்புகளும் புதிய பல படைப்பாளிகளும் தங்கள் திறமையினால் கவனிக்கத்தக்கவர்களாக வளர்ந்துவருவதை மறுப்பதற்கில்லை.

சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக நடந்த பதிவர் பட்டறை மூலம் அது மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் இது போல பல பட்டறைகள் நடத்தப்படவேண்டும் அதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக தொடர்ந்து உழைத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நன்றிகள்.

இனி நான் தொடர்ந்து படித்தும் ரசித்தும் வரும் ஒரு சில பதிவுகளை பற்றி நாளை.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது