வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள்
அன்பின் வணக்கம்.
ஆன்மீகம் என்பதை விட்டு கலை என்கிற நோக்கில் பார்த்தாலும் ஸ்ரீரங்கம் கோவில் நம் கண்ணுக்கு விருந்தாகவே அமைகிறது. இன்றும் பல லட்சம் மக்கள் ஆர்வமாய் வந்து போகிற ‘பெரிய கோவில்’ என்றே அழைக்கப்படுகிற ஸ்ரீரங்கம் கோவிலினுள்ளே சிற்பக் கலைக்கு சாட்சியாய் சேஷராயர் மண்டபத் தூண்கள்.
ஒற்றைக்கல்.. எத்தனை உயர.. அகலம்.. எந்த ஒட்டு வேலையும் இல்லை. அதில் வடிக்கப்பட்ட சிற்பம்.. குதிரை வீரன்.. எத்தனை நுணுக்கங்கள்.. அழகிய வேலைப்பாடுகள். பிரமிப்பில் வார்த்தைகள் வராது நேரில் பார்த்தால்.
இந்தப் பிராகாரத்தில் தான் பார்த்தசாரதி சந்நிதியும் உள்ளது. கண்ணன் தேரோட்டியாய்.. அர்ஜுனனுக்கு. தேரில் கண்ணன்.. எதிரே அர்ஜுனன்.. கண்ணனின் வலது கையில் சங்கு.. இடது கையில் சக்கரம் என்று இடம் மாறிய உற்சவர் விக்ரஹம்.
பொதுவாய் விஷ்ணுவின் வலது கையில் ஸ்ரீசுதர்சனம் என்கிற சக்கரம்.. இடது கையில் பாஞ்சசந்யம் என்கிற சங்கு.. இங்கோ ஏன் இடம் மாறியது.. அழகான விளக்கம்..
கண்ணன் இப்போது தேரோட்டி.. வலது கையில் சங்கிருந்தால் தான் யுத்த பூமியில் முழங்க இயலும்.
வைணவர்களுக்கான சமாச்ரயணம் என்கிற முத்திரை பதிக்கும் சடங்கிற்கு இடம் மாறியிருந்தால் தான் வலது தோளில் சக்கரக் குறியும் இடது தோளில் சங்கையும் பதிக்க முடியும். கண்ணன் ஆசார்யன் அல்லவா.
இந்த சந்நிதிக்கு நேர் எதிரே ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி. கண்ணன் இடம் மாற்றி வைத்ததால் எதிரே இருக்கும் சுதர்சனர் தம் உக்கிரம் தணிந்து கட்டுப்பட்டு இருப்பதாகவும் ஐதீகம்.
கோவில்களோ.. வெளி இடங்களோ.. எங்கே பயணம் மேற்கொண்டாலும் அந்த இடத்திற்கான சுவாரசியமான தகவல்களைக் கேட்டறிந்து பார்வையிடுவது கூடுதல் இன்பம் என்கிற நோக்கில்தான் சில தகவல்களை உங்களோடு பகிர்கிறேன்.
இனி இன்றைய பதிவர்கள்..
சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள் சுப்பு தாத்தா முந்தைய வலைச்சர பதிவிற்கு பின்னூட்டமிட.. அதற்கு பதில் தர.. அந்த மூன்று வார்த்தைகள் எப்படி ஒரு அழகான பதிவாகவே மாறி விட்டது.. பாருங்கள். பதிவர்களில் சுவாரசியமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு பல்லாண்டு பாடலாம்.
திண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தெரியாத பதிவர் இருக்க முடியாது. வலைச்சரத்தில் என்னைப் பற்றி அந்த வார ஆசிரியர் குறிப்பிட்டிருந்தால் என் வலைப்பூவிற்கு வந்து தகவல் தெரிவித்துப் போகும் பண்பாளர். எனக்கு மட்டுமல்ல.. இப்படி எல்லாப் பதிவர்களுக்கும் இனியவர். சுறுசுறுப்பாய் இயங்கும் இவர் என்றும் பதினாறாய் இருக்க பிரார்த்தனை.
வல்லிசிம்ஹன் அவர்களும் சுறுசுறுப்பாய் பதிவிடும் பதிவர்களில் ஒருவர்.
கண்டது.. கேட்டது.. நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது என்கிற முகப்பு வரியுடன் அவர் தளத்தில் பல சுவாரசியமான பதிவுகளைப் படித்து ரசிக்கலாம்.
நாம் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட்டால் மட்டுமே அவர்கள் நம் பதிவைப் படிப்பார்களா.
எழுத்தின் தரம் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது.
சென்சேஷன்?
சுவை?
இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இப்படி ஒரு பதிவிட்டிருக்கிறார். இது உண்மைதானா.. உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.
என்னைப் பொறுத்தவ்ரை என் கண்ணில் படுகிற பதிவுகளை தவறாமல் படித்து விடுவேன். ஆனால் எனக்குப் பின்னூட்டமிடுகிறவர்.. அப்போதுதான் எனக்கு அறிமுகமாகிறவர் என்றால் உடனே ஆர்வமாய் போய் படிப்பேன். எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்களை நான் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு வகை யுக்திதான் என்பதே என் கருத்து.
நினைவின் விளிம்பில் கவிநயாவின் வலைத்தளம். தமிழ் பிடிக்கும் படிப்பேன் எப்போதும்..எழுதுவேன்.. அப்பப்ப.. என்கிற அறிமுக வரி அவருக்கு
ஆன்மீக விருந்தளிக்கும் இவரது பதிவுகள் தமிழ் மணமும் பரப்புவதைக் காணலாம்.
கறந்து வெச்ச பாலு தாரேன்
கடைஞ் செடுத்த வெண்ணெ தாரேன்
கலந்து வெச்ச மோரு தாரேன்
கண்ணா ஓடி வா!
குளுகுளுன்னு தயிருந் தாரேன்
கண்ணா ஓடி வா!
பட்டுப் போல பாதம் வெச்சு
சிட்டுப் போல சிரிச்சுக் கிட்டு
தத்தித் தளர் நடை நடந்து
கண்ணா ஓடி வா!
தண்டை காலில் குலுங்கக் குலுங்க
கண்ணா ஓடி வா!
திராட்சக் கண்ணு மினுமினுங்க
கன்னக் குழி எனை விழுங்க
கனி வாயில் தே னொழுக
கண்ணா ஓடி வா!
கட்டி முத்தம் தாரேன் செல்லக்
கண்ணா ஓடி வா!
கால் வெரல சூப்ப வேணாம்
ஆல எலையில் படுக்க வேணாம்
அம்மா மடியில் படுத்துக்கலாம்
கண்ணா ஓடி வா!
ஆரிரரோ கேட்டு றங்க
கண்ணா ஓடி வா!
-கவிநயா
வாழ்த்துகள் கவிநயா !
இனி இன்றைய முகநூல் கவிஞர்.. திருமதி கல்பனா ரத்தன்
கிளையமர்ந்த வெயில் கீற்று
பிடி தவறி விழுந்தது காற்றசைவில்
இலைகளை அசைத்தசைத்து
ஆதுரமாய் வருடுகிறது கிளை
வெயிலுக்கும், நிழலுக்குமான வினோத நடனத்தை
குறுங்கழுத்து சாய்த்து
ஓரக்கண்ணால் பார்க்கும் காக்கையின் நிழலை
கொத்திப் பசியாறுகிறது வெயில்.
பிடி தவறி விழுந்தது காற்றசைவில்
இலைகளை அசைத்தசைத்து
ஆதுரமாய் வருடுகிறது கிளை
வெயிலுக்கும், நிழலுக்குமான வினோத நடனத்தை
குறுங்கழுத்து சாய்த்து
ஓரக்கண்ணால் பார்க்கும் காக்கையின் நிழலை
கொத்திப் பசியாறுகிறது வெயில்.
நாளை சந்திப்போம்...





