எங்கள் சரவெடி 4
பெரியதிரை சின்னத்திரை இரண்டு விமர்சனமும் எழுதுவார். சட்ட சம்பந்தமான கேள்விகள் கேட்டால் விடை தேடித்தருவார் உணவக அறிமுகங்கள் மற்றும் பயணக் கட்டுரைகள் இவரது ஸ்பெஷல். பயணக் கட்டுரைகளில் அழகான படங்களுக்கு நடுவே வீடியோ இணைப்பது இவரது இன்னொரு ஸ்பெஷல். உதாரணத்துக்கு ஒன்று.
கோவில் கோவிலாகச் சுற்றி அங்குலம் அங்குலமாக ரசித்து அணுஅணுவாக படம் பிடித்து நம்மையும் ரசிக்க வைக்கும் ஸ்ரீ. கோவிலை ஏகாந்தமாக படமெடுப்பதில் அலாதிப் பிரியம் இவருக்கு.மாநில வாரியாக ஊர்வாரியாக திவ்ய தேசங்கள் தனியாக என்று தொகுத்து வைத்திருக்கிறார். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு தாராசுரம்
31) ஹுஸைனம்மா
நேர்மையான பதிவுகளுக்குச் சொந்தக்காரர். படைப்பாற்றல் மிக்கவர். வெளிப்படையான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். டிரங்குப்பெட்டி யைத் திறந்தார் என்றால் ஏகப்பட்ட விஷயங்கள் லிங்க் சாட்சியுடன் எடுத்து விடுவார்! இவர் தொடாத சப்ஜெக்டே இருக்காது. பெண்ணுரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுப்பவர்! (ஆண் பதிவர்களே! ஹுசாரா இருங்க! :))
32) பால கணேஷ்! சின்னக் கடுகு என்று அன்புடன் அழைக்கப் படுபவர். மின்னல் வரிகளுக்குச் சொந்தக்காரர். ஒருமேய்ச்சல் மைதானமும் வாங்கி சில பொக்கிஷங்களை அங்கு போட்டு வைத்திருக்கிறார். இன்றைய பல பிரபல எழுத்தாளர்களுடன் நட்பில் இருக்கும் கணேஷ் பிரபல நாவல்களைகேப்சூல் நாவல் என்று சுருக்கித் தருவதில் வல்லவர். கதை விமர்சனம், சிரிப்புத் தொடர்கதை, எழுத்தாளர்கள் உடனான தன அனுபவங்களை நடைவண்டியாய்த் தந்து சுவாரஸ்யம் கூட்டியவர். ஆறு பந்துகளிலும் சிக்சர் அடித்த யுவராஜ் சிங் போல, வலைச்சரத்தில் இவருடைய வாரத்தில் ஒவ்வொரு நாளிலும் சிக்சர் அடித்து சிறப்பான பதிவுகள் இட்டவர்.
33) தீராத விளையாட்டுப் பிள்ளை வலைப் பக்கத்துக்குச் சொந்தக்காரரான RVS மன்னார்குடி மைனர் என்று அன்புடன் நண்பர்களால் அழைக்கப்படுபவர். மிகவும் கவர்ச்சியான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். நகைச்சுவை, மலரு ம் நினைவுகள், தமிழின் சிறப்பு..... எதில் வேண்டுமானாலும் கலக்குவார்
34) கீதா சாம்பசிவம் பொதுவான எண்ணங்களை இங்கு எழுதினாலும் இவரது திறமையைச் சொல்ல நான்கு வரிகள் போதாது. கண்ணன் பெருமை பேச ஒரு தளம். ஆன்மீகப் பயணங்களுக்கு ஒரு தளம். என் பயணங்கள் என்று பிறிதொரு தளம். தான் சுவைத்த சுவையை எல்லோரும் பெற்றிட இன்னொரு தளம் சாப்பிடலாம் வாங்க!
35) அப்பாதுரை.
மூன்றாம்சுழியின் சொந்தக்காரர். வலை மூலம் அறிமுகமாகிய எங்கள் இனிய நண்பர். வயது வந்தோருக்கான கதையும் எழுதுவார். நசிகேத வெண்பாவும் எழுதுவார். இதுவும் இவரின் அபிராமி அந்தாதியும் இவரின் மிகப் பெரிய சாதனைகள். இதை பாதியில் நிறுத்தி விட்டது என்போன்ற வாசகர்களுக்கு வருத்தம்.
36) R. கோபி படிப்பதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. பயணத்திலும் என்று நிரூபிக்கிறார் இந்தப் பதிவுகளில்! இலக்கியவாதி. வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட்டை இவர் தரும்போது மலைப்பாக இருக்கும்!
37) சேட்டைக்காரன் நகைச்சுவையா ய் எழுதுவது எப்படி என்று இவரிடம் டியூஷன் எடுக்க வேண்டும்! இவருடைய அரசியல் அலசல் பதிவு சமீபத்து சிறப்புப் பதிவுகளில் ஒன்று.
38) வானம் வெளித்தபின்னும் ஹேமா. கவிதாயினி. இவர் என்ன சொல்ல வருகிறார் என்று பலசமயம் பின்னூட்டங்கள் பார்த்தே புரிந்து கொள்வோம்! வார்த்தைகள் இவர் கையில் வந்து விளையாடும். இவரின் சேமித்த கணங்களில் மிகவும் ரசித்த ஒன்று.
39) நண்பர் சிவ பாலசுப்பிரமணியன், ஆரம்பத்தில் மோ.சி.பாலன் கவிதைகள் என்று பதிவெழுதினார். சில (பல) வருடங்களுக்கு முன்பு குமுதம் இதழில், அப்பொழுது ஆசிரியராக இருந்த சுஜாதா அவர்கள் ஹைக்கூ கவிதைப் போட்டி அறிவித்த போது, இவருடைய ஹைக்கூ ஒன்றும் பிரசுரமானது. இப்பொழுது அவர் வலைப்பதிவின் பெயர் மோ சி பாலன் பதிவுகள். படைப்பாற்றல் மிக்கவர். தனியார் தகவல் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். நேரமின்மை காரணமாக எப்பொழுதாவதுதான் பதிவிடுவார். பல்சுவைப் பதிவர், கவிஞர்.
40) நண்பர் வெ பாலமுரளி முகநூலில் அருமையான புகைப்படங்களைப் பகிர்ந்து, கலக்குபவர். கென்யாவில் இவருடைய காமிராவில் சிறைபடுவதற்காகவே பல விலங்குகள், பறவைகள் இவரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ என்று நாங்கள் எப்பொழுதும் நினைப்போம். இவர் எடுத்த பல படங்கள் எங்கள் ப்ளாக் ஞாயிறு பகுதிகளில் வெளியாகி வருகின்றன. நகைச்சுவைப் பதிவுகளில் இவருடைய முள்ரியின் டயரி பதிவுகளுக்கு, தனி இடம் உண்டு. படங்கள் எடுப்பதில் பிசியாக உள்ளதால், பதிவுகள் எப்பொழுதா வதுதான் எழுதுவார். ஆனால் என்ன? ஆயிரம் வார்த்தைகள் கூறாததை, இவர் எடுத்த ஒரு படம் கூறிவிடுமே!
41) திருமதி ஜெயந்தி ரமணி இந்த ஆண்டு, மே மாதத்தில்தான் மணம் (மனம்) வீசும் வலைப்பூ தொடங்கியுள்ளார். அவ்வப்போது உலகமகா ஒற்றுமை போன்ற பதிவுகள் இடுகின்றார். கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுகின்றார். வரும் நாட்களில் இன்னும் நிறைய எழுதுவார், எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
42) குறுங்கவிதைகள், கவிதைகள், எழுதுகின்ற சசிகலா அவர்களின் வலைப்பூ தென்றல், உதாரணங்களாய் ... ஒன்று! கவிதை மட்டும் அல்ல, பொருத்தமான படங்களும் ஆங்காங்கே இணைத்து எழுதிவருகிறார்.
====================== ========================== =====================
விரியும் வலையுலகம்
Blog என்பது, Web Log என்ற இரு வார்த்தைகளின் சுருக்க வார்த்தை என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வலைப்பதிவு: மக்கள் தங்கள் சொந்த அனுபவங்கள் மற்றும் பொழுதுபோக்கு பற்றி தினசரி பதிவுகளில் இடுகையிட முடியும், ஒரு பகிரப்பட்ட ஆன்லைன் பத்திரிகை. (Blog: A shared on-line journal where people can post daily entries about their personal experiences and hobbies.).
ஆன் லைன் பத்திரிகை என்று கூறப்பட்டாலும், அச்சுப் பத்திரிகைகளுக்கு இல்லாத பல சௌகரியங்கள், வலைப் பதிவில் உண்டு. இன்றைய, இப்போதைய எண்ணம் உடனே வெளியிடப்பட்டு, உலகத்தின் எல்லா இடங்களிலிருந்தும் விருப்பப்பட்டவர்களால் உடனே பார்க்கப்பட்டு, படிக்கப்பட்டு, உடனுக்குடன் அந்தப் பதிவு பற்றிய அபிப்பிராயங்களும், எழுதுபவருக்குக் கிடைத்துவிடும்! காணொளிக் காட்சி, ஒலி வடிவ பகிரல் எல்லாம் வலைப்பதிவுகளில்தான் சாத்தியம்.
முதல் தமிழ் வலைப்பதிவு, திரு கார்த்திக் ராமசாமி அவர்கள், 2003 ஆம் வருடம், ஜனவரி ஒன்றாம் தேதி இட்ட ஒவ்வொரு கணத்திலும் என்னும் பதிவு.
தமிழ்ப் பதிவர்கள், கூகிள் ப்ளாகர் அல்லது வோர்ட் பிரஸ் தளங்களை தங்கள் வலைப்பூக்கள் அமைக்கப் பயன்படுத்துகின்றார்கள். பத்து கூகிள் ப்ளாகர் தளத்துக்கு ஒரு வோர்ட் பிரஸ் தளம் என்னும் விகிதத்தில், பயன்பாடு உள்ளது. அதாவது, ஆறாயிரத்து எண்ணூறு கூகிள் ப்ளாகர் வலைப்பூக்கள் இருந்தால், அறுநூற்று எண்பதுக்கும் கீழேதான் வோர்ட் பிரஸ் வலைப்பூக்கள் உள்ளன.
மீண்டும் நாளை சந்திப்போம்!

