07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 17, 2007

புதுசு கண்ணா புதுசு..

சில பதிவர்கள் வலைபதிய ஆரம்பித்து சில பதிவுகளிலேயே பல பேர் இதயங்களில் இடம் பிடித்துவிடுவார்கள். அது அவர்களின் எழுத்து திறனும், மற்றவர்களுடன் சகஜமாக பழகும் திறனும் காரணமாக இருக்கலாம்.

மற்ற சிலர் நன்றாக எழுதியிருந்தாலும் படித்து ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல் ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுடைய வலையை பூட்டுப்போட்டு பூட்டிட்டு செல்ற நிலை கூட இருக்கும். ஊக்கமும், பாராட்டுக்களும் ஒருத்தருக்குள் தன்னம்பிக்கை வளர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது.

என்னுடைய ஆரம்பக்காலத்தில் கிடைத்த ஊக்கங்களால்தான் இன்று இங்கே வலைச்சரம் ஆசிரியராக உட்கார்ந்திருக்க முடிந்திருக்கிறது. இன்று என்னுடைய பங்குக்கு ஒரு சில புதிய பதிவர்களை இங்கே கௌரவ படுத்த வேண்டும் என்று எழுதுகிறேன்.

புரியல.. தயவு செய்து விளக்கவும் என்று தலைப்பில் வலைப்பதிவை தொடங்கிய TBCDக்கு என்னத்தை விளக்குவது? அவர் சொல்லும் பல விஷயங்கள் எனக்கு புதிதாக இருக்கின்றது. அவர்தான் எனக்கு விளக்க வேண்டும். அரசியல் மற்றும் சமூக பதிவுகளில் மிகவும் ஈடுபாடு வைத்திருக்கும் இவர் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வேலை சம்பந்தமாக வந்திருக்கும் இவர் எழுதிய தமிழன தமிழனே ஏசுறாண்டா தம்பி பயலே.. இது மாறுவது எப்போ தீருவது எப்போ நம்ம கவலை என்ற பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. சமீபத்தில் எழுதிய கற்றது தமிழின் விமர்சனமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது.

ரியாத்திலிருந்து வலைப்பதியும் அக்கா வித்யா கலைவாணி. களவானி எப்படி கலைவாணி ஆனாள் என்பதே ஒரு சுவாரஸ்யமான பதிவு. இப்போது வலைப்பதிவர்களுக்குள் கிரிக்கேட் போட்டி நடத்தி இப்போதெல்லாம் சீரியஸ் பதிவுகள் எழுத ஆரம்பிச்சுட்டார். உதாரணத்திற்கு ஏ.சி செய்யும் கொடுமைகள்.

அடுத்து எங்க நாட்டு காரர் ஒருத்தரோட அறிமுகம். பேராக் மாநிலத்துல இருந்து வலைப்பதிகிறார் விக்னேஷ்வரன் அடைக்கலம். ஒரு வருடம் வலையுலகில் இருந்தும் நான் சாதிக்காத பல விஷயங்களை குறுகிய காலத்தில் சாதித்திருக்கிறார் இந்த நண்பர். பொதுவாக இயற்கை, மற்றும் அறிவியலில் இவருக்கு நாட்டம் அதிகம். இவர் எழுதிய திருடியது யார்? என்ற சிறுகதை மலேசிய நாளிதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டதுக்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பொழுது இவர் ஜில்லென்று ஒரு மலேசியாவிலும் இணைந்து மலேசிய வரலாறை மிக விறுவிறுப்பாக எழுதுகிறார்.

கோலங்கள் கோலங்கள் என்ற அசத்தல் பதிவு எழுதியவர் மங்களூர் சிவா. ஒரு நாளைக்கு 2-3 பதிவுகளையும் போட்டு எல்லா பதிவுகளில் கும்மியும் அடிக்கிறார். எங்கிருந்துதான் இவருக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதுன்னு தெரியவில்லை. சிவா, கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்.. இவருடைய Think Big என்ற வலைப்பூவையையும் படிக்கவும்.

அனுராதா என்ற பெயரை பார்த்தவுடனேயே, "ஆஹா, என் பெயரிலே ஒரு வலைப்பூ" என்று ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் சென்றேன். அங்குள்ள பதிவுகளை படித்ததும் எனக்கு மிஞ்சியது சோகம்தான். ஒரு கேன்சர் நோயாளி தன் அனுபவங்களையும் கேன்சருடன் நடத்தும் யுத்தத்தையும் பகிர்ந்துக்கொள்கிறார். ஒவ்வொன்றும் நரக வேதனை. ஆனாலும், இதை படிக்கும்போது நமக்கும் அந்த நோயைப் பற்றி பல உண்மைகள் தெரிய வருகிறது. இனி நம்மை சுற்றி யாருக்காவது அதே நோய் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம். அவர் குணமடைய இத்தருனத்தில் இறைவனை பிரார்த்திப்போமாக..

பாசக்கார குடும்பத்தில் சகோதரனாக இருக்கும் குட்டிப்பிசாசு @ அருண் சிவா வந்து புதுசுலேயே பல பேருடைய கவனத்தை ஈர்த்தவர். சிறிது காலமாய் வலைப்பக்கம் அவரை காணாவிட்டாலும் நகைச்சுவை மற்றும் சீரியஸ் பதிவுகளை அவ்வப்போது எழுதிக்கொண்டேதான் இருக்கிறார். பாசக்கார குடும்பம் என்ற தலைப்பில் எழுதிய அத்தனை பதிவுகளும் அருமையா அமைந்த பதிவுகள்: பாசக்கார முதவன் ரீமேக், நான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து, பாசக்கார குடும்ப சுற்றுலா.

புதுசா வந்திருக்கேன் ஃபிரண்ட். வந்து என் பதிவையும் பாருங்கன்னு ரசிகன் கூப்பிட்டதும் நான் அங்கே போனேன். சும்மா சொல்ல கூடாதுங்க.. நான் மட்டும்தான் ஆரம்பக்காலத்திலிருந்து இப்போது வரைக்கும் தடுமாறிக்கிட்டு இருக்கேன். ஆனால், இவங்கெல்லாம் வரும்போதே ஸ்டெடியா வர்றாங்க. தீபாவளியா? தீபா "வலி"யா? படித்து பாருங்களேன்.

புதுசா வந்து கலக்கிக்கிட்டு இருக்கிற இன்னொருவர் பொடியன் அங்கிள். இந்த காலத்து குட்டீஸ்.. ஒரூ போட்டி மாதிரி பதிவில் அவர் எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. இதே போல் பல பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்.

புதுசு புதுசுன்னு சொல்லி இந்த பூவுலகின் புதுசாய் மலர்ந்த சின்ன குட்டிகளை அறிமுகப்படுத்தாமல் இருக்க முடியுமா?

கொஞ்ச நாளா எல்லா இடத்துலேயும் கும்மின்னா துண்டை விரிச்சு உட்கார்ந்திருக்கிற வள்ளல் நிலா குட்டி. இவ போடுற சில பின்னூட்டங்கள் நமக்கே கண்ணை கட்டுதுப்பா. (சில நேரம் இவளோட அப்பாவே இவ பேர்ல பின்னூட்டங்கள் போடுகிறார்..) அப்பப்போ புகைப்படங்களாய் போட்டிடுட்டிருந்த நிலா, இப்போது புதுசா அவளோட மொழின்னு சொல்லி பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டா.. (எழுதுறது அவ அப்பான்னு தெரிஞ்சாலும் குட்டி பொண்ணு எழுதுற மாதிரி நமக்கெல்லாம் ஒரு சந்தோஷம்.)

அடுத்து முக்கியமான ஒரு செல்லக்குட்டி.. என்னுடைய தம்பி.. பவன் கண்ணாதான். நாமெல்லாம் பள்ளிகூடத்துக்கு போய் கரெக்ட்டா அட்டெண்டன்ஸ் போடுறோமோ இல்லையோ.. ஆனால் என் தம்பி தினமும் மறக்காமல் அவனுடைய புகைப்படங்களை 2 வருடமா போட்டுட்டிருக்கான். உனக்கு இருக்கிற அந்த பொருப்புணர்ச்சி உன் அக்கா எனக்கில்லையே ராசா..

நான் வித்யா கலைவாணியின் மகன் என்ற வலைப்பதிவை திறந்துவிட்டு அதிரடியாய் களமிறங்கியிருக்கிறான் அப்ராஜித் என்ற கார்த்திக். அறிமுகத்துக்கு பிறகு எந்த பதிவும் போடலையா தம்பி?

இந்த மூன்று குட்டீஸ்களும் இனி வரும் குட்டீஸ்களும்தான நாளைய தலைமுறைகள். இப்போதிலிருந்தே இவர்களை ஊக்குவிப்போம்... வாருங்கள்..
மேலும் வாசிக்க...

Friday, November 16, 2007

சீரியஸாய் ஒரு பதிவு

கதை காமெடின்னு மட்டும் இருந்தால் போதாது. நம்மை சுற்றி என்ன நடக்குது என்றும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாளிதழ் படிக்கும் பழக்கமே எனக்கு குறைவுதான். திறந்தாலே கொலை, கொள்ளை, கட்சிக்கும் கட்சிக்கும் சண்டை, etc etcன்னுதான் செய்தியாய் வருகின்றன. மீறி வரும் ஒன்றிரண்டு நல்ல செய்திகளும் விருவிருப்பாக எழுதப்படாததால் இரண்டே வரிகள் படித்ததும் தூக்கம் கண்களை சொக்கி நாளிதழை கையில் பிடித்தபடியே தூங்கிவிடுவேன்.

அப்படிப்பட்ட நான் நண்பர்கள் எழுதும் சில சமூதாய சிந்தனை தகவல்கள் விருவிருப்பாக அமைந்ததால் ஈர்க்கப்பட்டும் இருக்கிறேன்.

ஏதோ கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க என்று கோவை ஸ்டைலில் பேசும் அனுசுயா ஒரு நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். ஆனால், அவருடைய பதிவுகளில் சமூக சிந்தனைகள் நிறைந்ததாகவே இருக்கும். கோவை சுற்று வட்டாரத்தில் நடக்கும் விஷயங்களையும் தனது ஆதங்கத்தையும் வெளிக்காட்டுகிறார் இவர். நான்கு வருடத்துக்கு முன்பு ஆரம்பித்த பாலம் இன்னும் இணையாத பாலமாகவே இருப்பதையும், போராட்டங்களும் அதில் இருக்கும் நன்மை தீமைகளையும் எழுதியிருக்கிறார்.

இன்றைய தலைமுறையினர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டுமா? நாம் செல்ல வேண்டியது ராஜப்பாட்டைக்குத்தான்.

நாம் சென்று கொண்டிருக்கிற பேருந்தை சரியாக இயங்க வைக்க கூட நாம் முன் வராத போது நம்முடைய சமுதாயம் நல்ல முறையில் நடக்க நாம் என்ன செய்ய போகிறோம்.”

நாம் ஏன் இப்படி? என்ற பதிவில் வெங்கட்ராமன் கேட்கும் கேள்வி. பதில் சொல்ல முடியுமா நம்மால்? நாளிதழில் வரும் செய்திகள்.. தினம் தினம் வெளிவரும் செய்திகள்.. ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் பின்னப்பட்டவை போலவே ஒரே மாதிரி செய்திகள். இந்த கருமங்களைத்தானா தினமும் படிக்கிறீங்க?

பேருந்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன இப்பொழுது. அதில் ஒன்று எப்போதும் கோபமாகவே இருப்பாங்க போல என்று முத்துலட்சுமி அக்கா எழுதியிருக்காங்க. பேருந்து, ரயில் டிக்கேட் எடுக்கும்போது நாம் டிக்கேட்டில் எழுதியுள்ள தேதியை பார்ப்பதே இல்லை. எல்லாம் சரியாத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை. டிக்கெட்டை பார்த்து வாங்குங்கப்பா படிக்க மறவதீங்க. Kitar Semula என்று மலாயில் சொல்வார்கள். தமிழில் மறுசுழற்ச்சி முறை என்று சொல்வாங்க. இங்கே மலேசியாவில் அது அமலில் இருந்தும் மாற்றங்கள் பெரியளவில் நிகழவில்லை. விளம்பரங்களும் அதற்கான நடவடிக்கைகளும் குறைவு என்று சொல்லலாம். தலையை சுற்றி ஒளிவட்டம் என்ற பதிவில் இந்த முறையை விளக்கியுள்ளார். ஞாபக மறதி என்னைப்போல உள்ளவங்க படிக்க வேண்டியது இன்று என்ன கிழமை?

விஞ்ஞானியை பற்றி இந்த பதிவில் சொல்லவில்லையென்றால் இந்த பதிவுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். யாரந்த விஞ்ஞானின்னு நீங்க கேட்கலாமா? அவர்தான் சி.வி.ஆர்-ன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்? இவர் எழுதும் அனைத்துமே நட்சத்திர தகுதியுடையவை. காதலைப்பற்றி இவர் செய்த ஆரய்ச்சி, வானுக்குள் விரியும் அதிசயங்கள் என்று விண்வெளி சம்பந்தப்பட தகவல்கள், படம் புடிக்கலாம் வாங்க, சினிமா காரம் காப்பி என்று பல விஷயங்களிலும் தன் அறிவை வளர்த்து நமக்கும் சொல்லிக்கொடுக்கிறார் விஞ்ஞானி.

தூக்கத்தைப் பற்றி அறிய வேண்டுமா? தூக்கம் கண்களை தழுவட்டுமே என ஆய்வு செய்கிறார் சினேகிதி. ஆரம்பத்தில் சொந்த கதை, கற்பனை கதைன்னு எழுதிக்கொண்டிருந்த சினேகிதி, பிறகு ஆய்வியல் கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். அவருடைய சைக்கோலோஜி படிப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மல்டிபள் பெர்சனலாட்டி டிஸோர்டர், உன்னை எனக்கு பிடிக்கும் என்னை உனக்கு பிடிக்கும் இவ்வகையை சேர்ந்ததுதான்.

இந்த வார நட்சத்திரம் சந்தோஷ் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களிலும் நல்ல அக்கறை காட்ட கூடியவர். உலக அதிசயங்கள் ஓட்டு நடக்கும்போது எல்லாரும் ஓட்டு போட்டோம். ஆனால், அதில் ஏமாற்றம் அடைந்தது நாம்.. சம்பாதிக்கிறது அவர்கள் என்று அவர் கருத்தை உலக புதிய அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும் என்று எழுதியிருப்பார்.

ஈழத்து மக்கள் அவர்களின் அனுபவத்தைப் பற்றி எழுதினால் அதில் சோகங்களும் துயரங்களுமே மிஞ்சி இருக்கும். தூயாவின் நானும் என் ஈழமும் என்ற தொடரில் தன்னுடைய அனுபவத்தையும் தாண்டி உணர்வு சம்பந்தப்பட்டதை எழுதுகிறார்.

இணையத்துல விவசாயம் பண்ற இவர் பல சமயம் வித்தியாசமாக ஏதாவது பண்ணனும்ன்னு நினைப்பவர். எல்லாரும் நக்கலா பதிவெழுதும்போது இவர் மொக்கையா பதிவெழுதுவார். எல்லாரும் மொக்கை போடும்போது இவர் சீரியஸா பதிவெழுதுவார்.. ஆனால் அந்த சீரியஸ் பதிவையும் சீரியஸாய் காட்டாத மாதிரி நகைச்சுவையும் கலந்தெழுதுவார். வவா சங்கத்தின் முக்கிய முதுகெலும்பு இளாதான் இவர். ஆண் - பெண் நட்பு சரியா தவறா என்று கொசுவர்த்தி சுற்றிய பதிவு, Acquisition & Merger, பலி கெடா - சைவமா? அசைவமா?, வேட்டையாடு விளையாடு - My Take போன்றவைகள் இவர் எழுத்துக்களுக்கு ஒரு சான்று.

தம்பியை பற்றி எழுதவேண்டும் என நினைக்கும்போது எந்த பிரிவில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. கதையும் எழுதுகிறார், நகைச்சுவையிலும் பிண்ணுகிறார். அதே வேளையில் அவருடைய பதிவுகளில் நமக்கு சேர வேண்டிய கருத்துக்களும் திணித்திருப்பார். எனக்கு இவருடைய எழுத்து நடை மிகவும் பிடிக்கும். நாமெல்லாம் ஏதோ ஒரு பிராணியின் மேல் பிரியம் வைத்திருந்தாலும் இந்த அளவுக்கு எழுத முடியுமா என்று தெரியவில்லை. பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் அனுபவம் எவரையும் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடாதே என்று அருமையாக சொல்லியிருப்பார். முடிந்தால் எல்லா பதிவுகளை ஆராய்ந்து பாருங்களேன்...

புதுசா வருது நாளைய சரம். காண மறவாதீர்கள். ;-)
மேலும் வாசிக்க...

Thursday, November 15, 2007

காற்றாக.. கவிதையாக..

பொதுவாக கவிதை எழுதணும் என்றால் அதுக்கு தமிழ் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்று சொல்வாங்க. இந்த கண்டிஷன்ல ஆரம்பத்துலேயே நான் ஃபெயில் மார்க்தான்.

காதலித்துப்பார்.. கவிதை வரும்ன்னு வைரமுத்து சொல்லியிருக்காராம்ல. காதல் வலையில் சிக்காததுனால் கவிதையும் எழுத வரலை.

ஒவ்வொருத்தரும் கனவு காணனும்ன்னு அப்துல் கலாம் சொன்னாராம். தூக்கமே சரியாய் வராதபோது கனவு எங்கிருந்து வர்றது? எப்போ நான் கவிதை எழுதுறது?

எனக்கு கவிதை எழுத வரவில்லையென்றால் என்ன? மற்றவர்கள் எழுதுறதையாவது படிக்கலாம்ன்னு போனா...... எல்லாரும் கொலைவெறியுடன் புலி கவுஜ, சிங்க கவுஜன்னு எழுதுறாங்க. அய்யனார், காயத்ரி, ராம்ன்னு ஒரு பக்கம் கொலைவெறி கவிதைகள் எழுதினால், இளா, சிபி, குசும்பன்னு எதிர் கவுஜ எழுதுறாங்க. எழுதுறதுல ஒரு வரியும் எனக்கு புரியிறது இல்லை. நீங்களே வந்து பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லுங்க.. என்ன பண்ணும் இந்த சின்ன குழந்தை?

ஆனாலும், சிலர் இருக்காங்க. எனக்கும் புரியிற மாதிரி சுலபமான வார்த்தைகளைக் கொண்டு ரசிக்கும்படியாக எழுதும் கவிதைகள்.

காதல் முரசு அருட்பெருங்கோவின் ஒரு நொடி கவிதைகள் நான் ரசிப்பவை. அதில் சில:




என் காதல் கேள்விகளுக்கு நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி என்னிடமிருந்து,
'விடைபெற்றாய்'

*****
களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!

*****

நீ,
நான்,
நம் காதல்
சந்தித்தப் புள்ளியில்
கோலமிட ஆரம்பித்தது காலம்.

*****

என்னை அடிக்க நீ கை ஓங்கும் போதெல்லாம்
கண்களை மூடிக்கொண்டு சுகிக்கதான் நினைக்கிறேன்.
ஆனால் நீ அடிக்க வரும் அழகைக் கண்டதும்
இமைக்காமல் நிற்கின்றன என் கண்கள்.

*****

அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்...
நீ!

*****

உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது...
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!

*****

ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!

*****

காதலியின் சுகம்
காதல் கவிதையில்...
என் காதலின் சோகம்
இந்தக் காயக் கவிதையில்!

இம்சை அரசியின் கைவண்ணத்தில் என்னை கவர்ந்தவை:

என் காதல்
மலர்ந்த நாள்...
அன்று முதல்
என் இதயம் இங்கு
கருவறையானது!
என் முதல் குழந்தை
உன்னை
சுமக்க ஆரம்பித்ததால்!!
****

நீண்ட நேரம்
நின்றிருந்தேன்
நீல ஓடையிலே.......
நிலவினை எதிர்பார்த்து!
நினைவில்லாமல்.......
அன்று அமாவாசையென!!


****

உறைய வைக்கும்
மார்கழிப் பனியில்
கொழுந்து விட்டெரியும்
தீயின் அருகிலிருக்கும்
சுகம் வேண்டாம்...

அன்பே!
ஆதரவாய்
என் கரம் பற்றும்
உன் உள்ளங்கையின்
வெப்பம் போதும் எனக்கு...

****

இளைத்து
கொண்டே போகிறாயோ??!!!
இதயம் லேசாகி
கொண்டே வருகிறது!!!

****

தோல்வியே
வெற்றிக்கு முதல் படியாம்
ஒத்து வருமோ
காதலுக்கு???


கனவில் வாழ்வதாலோ என்னவொ தெரியவில்லை. ட்ரீம்ஸ் ஒரு கவிஞர் என்று சொல்லுமளவு பல கவிதைகளை எழுதியுள்ளார். காணவில்லை சுதந்திரதேவி என உணர்ச்சி பொங்க ரத்தம் துடிக்க அவர் எழுதிய கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று:

அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
என முழங்கி வாங்கின சுதந்திரம்..
மிச்சமில்லை மிச்சமில்லை
மிச்சம் வைப்பதில்லையே
என கொள்ளை அடிக்குது ஒரு கூட்டம்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்றில் கிடைத்தது
கத்தி கதறி ரத்தம் சிந்தி
அர்த்த நெறியில் கிடக்குது

நாட்டு கொடியை
மறந்து விட்டு
கட்சிக் கொடிகள்
பறக்க..
தேசப்பாடல் பாடக்கூட
மதங்கள் தடை செய்ய..

காந்தி வாங்கி கொடுத்ததாம்
சுதந்திர நாள் மட்டும்..
சாந்தி தியேட்டரில் கூட்டம்
கொடி கட்டி பறக்குமாம்..

தனிமனித சுதந்திரம்
தனியே சென்று விட
பொது மனித அங்கீகாரம்
போதை ஏறி நடக்குது...

ஜாதியென்ன மதமென்ன
பண்பாடென்ன மொழியென்ன
ஆண்னென்ன பெண்னென்ன
எதில் பிடித்தாலும் வெறி தான்..

காதலர் பேச கூட
தாய் மொழியில் பேச கூட
தடை விதிக்கும்
கூட்டத்தில் காணாமல் போன சுதந்திரம்..

நம் கைக்கு எட்டிய சுதந்திரம்
போனது யார் வாய்க்கோ?

ஒட்டுங்கப்பா போஸ்டர..
கிடைத்தற்றிந்த அந்நாளே
அரசியலில் தொலைந்தவள்
மத ஜாதி சண்டைகளில்
வீழ்ந்து போய் மறந்தவள்
நம் வாழ்க்கை சோம்பலில்
மறந்து போய் கரைந்தவள்..
கிடைப்பாளா மீண்டும்?
காணவில்லை: சுதந்திரதேவி.


ஆதலினால் காதல் செய்வோம் என்று காதல் கவிதைகளாக கொட்டிக்கொண்டிருக்கிறார் நவின் பிரகாஷ். அவருடைய ஒரு நொடி கவிதைகளில் சிலவற்றை பார்ப்போமா?

கருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?


****

"சாதிகள்
இல்லையடி
பாப்பா"
கேட்டதும்
கேட்கிறோம்
சொன்னவர்
என்ன சாதி ?


****

தாலி
மெட்டி
குங்குமம்
எப்படியெல்லாமோ
வேலி போட்டு
அனுப்புகிறாய்
உன் சக ஆண்குலத்தின்
மீது அப்படியொரு
நம்பிக்கையா ?? !!

****

ஆசிரியருக்கு தெரியாமல்
'பிட்' அடிக்கும்போது
கிடைக்கும் 'த்ரில்'
நீ பார்க்காத போது
உன்னை 'சைட்'
அடிக்கும்போது கிடைக்கிறது
தெரியுமா?


பூவாகவே என்ற வலைப்பூவில் பதியும் ராஜியின் மனசும் ஒரு பூதான். இவரின் கவிதகளும் ஒரு பூதான். இவரின் முதல் பதிவே ஒரு கவிதைதான் - "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா ப்லீஸ்"

"பிரசவ வலியில் துடிக்கும்-லட்சுமிக்கு
மாட்டு வண்டி மாடசாமி
கொடுத்ததும் லிப்ட் - அந்த சிசுவின் உயிருக்கு"

முதல் பாராவே ரொம்ப touching-ஆ இருந்தது. நல்ல படைப்புக்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு நல்ல முயற்சி. இதையும் அழகாய் இந்த வரியில் சொல்லியிருக்கார் பாருங்கள்

"என் முதல் கவிதை உங்கள் வலைப்பூவில் வந்தால்
என் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்க
கொடுக்கும் லிப்ட் - என் மகிழ்ச்சிக்கு"

இவரின் மற்ற படைப்புகள்:

ஆயிரம் ஆண்டுகள்
தவமிருக்க காத்திருகிறேன்
மீண்டும் உன் கருவறையில்
இடம் கிடைக்குமா?-அம்மா

****

புள்ளிகளாய் நான்
கோடுகளாய் நீ
வந்து அணைத்துக் கொ(ல்)ள்
என் வாழ்க்கை கோலம்
முற்று பெற!!

****

சூரியனாக நீ
சூரியகாந்தியாக நான்
உன் பாதை தொடர
உன்னையே நோக்கிருப்பேன்!!

****

உனக்கென்ன கடலோரம் நடந்து சென்று விட்டாய்
நானல்லவா சண்டையிடுகிறேன்
எனக்கு முன் உன் கால் தடஙகளைத்
தொட்டு செல்ல வரும் அலைகளுடன்!!



ப்ரியன் அவர்களின் ஒரு நொடி கவிதைகளில் சில:

உந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
எந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
கலந்து எழுதும்
எதுவுமே
கவிதை!
****

சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!
வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!
சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!


குட்டிப்பொண்ணு ரம்யாவும் கவிதை எழுதுவாங்க. ஆனால், இப்போதெல்லாம் வலைப்பக்கம் வருவதற்கே அவங்களுக்கு நேரமில்லை. இவருடையதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க:

என்னடா இது நியாயம்?
என் இதயத்தை திருடியவன் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா??

****

ஒய்யாரப் புன்முறுவலுடன்
லிஃப்ட்-ல் சாய்ந்து
விழியோரங்களில்
டிஜிட்டல் நாணம் வழிய
டி-ஷர்ட் மங்கைyiடம் கேட்டேன்
"மனதில் லிஃப்ட் கிடைக்குமா"??

அவள் இதழோரம் வழிந்தது
இருபதாம் நூற்றாண்டின்
நம்பிக்கை சிரிப்பு

அட
மனசில் லிஃப்ட் கேட்ட
எனக்கு
லிஃப்ட்-ல் மனம் கிடைத்துவிட்டதே!!!!


நிலா ரசிகனின் விழித்துப்பார் மகனே:


ரசிகவ் ஞானியரை மட்டும் நாம் மறக்கலாமா? அவருடைய சில ஹைக்கூ:

தமிழ்தான் மூச்சு
தமிழ்தான் பேச்சு
தமிழ்தான் ஊற்று
தமிழ்தான் காற்று
"அட ஆங்கிலம் புரியலப்பா! "

****

கடைசி வரை புரியவேயில்லையடி ...
உனது
காதல் !
அந்தடாக்டரின் கையெழுத்துப்போலவே !

****

சிக்கெடுத்த கூந்தலை
கிராப்பாக்கினாய்
சிக்குண்ட இதயத்தை
கிறுக்காக்கினாய்

****

இப்பொழுது
உன் தோள் மீது
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு...
பெயர்வைக்க நீ
அடம்பிடித்ததாய்
உன் கணவன் சொல்கின்றான்!
அவனுக்கெப்படி தெரியும்?
அந்தப்பெயர் என்
செல்லப்பெயரென்று!

****

"ஏலே நொண்டி"

சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!

அட..
அங்கே ஓர்
இதய நொண்டி

ரெண்டு மூனு நாளா ஜாலியா ஜல்லியடிச்சு இருந்துட்டேன். அதனால நாளைக்கு ஒரு சீரியஸ் பதிவு.. பதிவை படிச்சுட்டு யாரும் சிரிக்க கூடாது. சொல்லிட்டேன்.. :-P

மேலும் வாசிக்க...

Wednesday, November 14, 2007

கதை கேளு.. கதை கேளு..

சின்ன குழந்தையை அதட்டி, மிரட்டி சோறு ஊட்டினால் சாப்பிடவே சாப்பிடாது. அதுவே ஒரு கதை சொல்லி ஊட்டி பாருங்க. சாப்பிடுறோம் என்று அறியாமலேயே கதையை கேட்டுட்டே எல்லாத்தையும் சாப்பிட்டு முடித்துவிடும். தூங்க போற குழந்தைக்கும் கதை சொல்லி தூங்க வைக்கிற பெற்றோர்கள் நிறைய பேர் இருக்காங்க. சின்ன குழந்தை முதல் வயதான முதியோர் வரை யாருக்குமே கதை என்றால் பிடிக்காது என்று சொல்லி நான் கேட்டதில்லை. கதை என்றால் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. நமது நண்பர்களில் பலர் மிக மிக அருமையாக கதை எழுதுகிறார்கள். ஒவ்வொருத்தராய் பார்ப்போம் வாருங்கள்...

ஒரு கதை படிக்கும்போதே நம் மனதில் அந்த காட்சி ஓடுற மாதிரி தோண்றுவதுதான் அந்த கதையின் முதல் வெற்றி. தேவ் அண்ணாவின் மௌனம் பேசியபொழுது என்ற கதை படித்தபோது அது ஒரு நிஜ கதை என்று நம்பினேன். எழுதியவரே வந்து இது கற்பனைன்னு சொன்னால் கூட நம்பாத அளவுக்கு எனக்கு இது ஒரு நிஜமாக பட்டது. உடனே அவருடைய பழைய இடுகைகளை நோண்டி எல்லா கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய படிப்புகளில் என்னை ரொம்பவும் கவர்ந்தது நானும் என் கவிதையும் என்ற கதைதான். ஒவ்வொரு கதையும் படிக்க படிக்க தித்திப்பு மூட்டும் விதமாக அமைந்தவை. இவரின் மனதில் நிற்கும் மற்ற கதைகள்:

நட்பெனும் தீவினிலே
நன்பனின் காதலி

ஒரு சாரல் பொழுது
சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

கதை என்று சொன்னாலே இம்சை அரசிக்கு கண்டிப்பாக என் ஓட்டு உண்டு. அவரை இம்சை அரசின்னு சொல்வதை விட எழுத்து அரசின்னுதான் சொல்ல வேண்டும். இவருடைய ஒவ்வொரு கதையிலும் உயிரோட்டம் இருக்கும். அத்தை மகனே! அத்தானே! அனேகமாக அனைவரையும் கவர்ந்த ஒரு தொடர்கதை. இரண்டு சுட்டித்தனமான கேரக்டர்களுக்கு வரும் காதலையும் அதை சொல்லிய விதமும் மிகவும் அழகாக சித்தரித்திருக்கிறார். காதலி தனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சுன்னு சொல்லும்போது தன்னோட காதலை சொல்ல முடியாமல் திணறிய மனோவின் வலியை அறிய இதையும் படிக்கவும்.

அழுகையுடன் ஆரம்பமானது முதலிரவு... தலைப்பே எவ்வளவு இண்ட்ரெஸ்டிங்-ஆ இருக்கிறது என்று யோசிக்கிறீங்களா? அப்படின்னா மறவாமல் நீங்க காதல் முரசு அருட்பெருங்கோவின் இந்த கதையை படித்தே ஆகவேண்டும். "டீனேஜ்" வயதில் அரும்பும் காதலையும் அதன் தாக்கத்தையும் ப்ளஸ் 2 காதல் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் இவர்.

அமேரிக்க மாப்பிள்ளை என்றாலே சிலர் ஒன்றும் யோசிக்காமலேயே திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கின்றனர், மகள் அமேரிக்காவில் சந்தோஷமாக இருப்பாள் என்ற குருட்டு நம்பிக்கையுடன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பெண்ணின் அமேரிக்க கணவனை பற்றியும் அவளின் வாழ்க்கையை பற்றியும் எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய ப்ரியாவின் கண்ணாளனே கதை கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

ஜி. ராகவன் எழுதிய கள்ளியிலும் பால் தொடர்கதை பற்றி சொல்லணுமா? பெரிய பெரிய எழுத்தாளர்களே படித்துட்டு சூப்பர்ன்னு சொன்ன கதை. எனக்கெல்லாம் ஒரு கதை எழுதவே வர மாட்டேங்குது. ஆனால் 12 பாகங்களையும் விறுவிறுப்பாக எழுதி முடித்துட்டுவிட்டு இப்போ காதல் குளிர் என்ற தொடர்கதையை ஆரம்பித்திருக்கிறார்.

கொல்டின்னு ஒரு சூப்பர் கதை எழுதி பலரோட பாராட்டைப்பெற்றவர் வெட்டிப்பயல் பாலாஜி. ஒரு தமிழ் பையனுக்கும் தெலுங்கு பொண்ணுக்கும் ஏற்படும் காதல். அதை சொல்லாமலேயே பிரிந்த சோகம்ன்னு எல்லாவற்றையும் அருமையான நடையில் எழுதியிருப்பார். தனிமைதான் உலகம்ன்னு நினைச்சிட்டு இருந்த கார்த்திக்கு ஆர்த்தியின் நட்பால் அடைந்த மாற்றங்கள் உண்மையிலேயே ஒரு தூரல்தான்.

பொதுவாவே நட்பு சம்பந்தமா எது எழுதியிருந்தாலும் நான் விரும்பி படிப்பேன். அதுவும் கதை என்றால் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு தடவையும் படிக்கும்போது புது கதை படிப்பதுபோலவே தோன்றும். அறிவுஜீவி கப்பிபய ஒரு நண்பனின் மரணத்தைப் பற்றி மரணமும் மரணத்தை சார்ந்தும் என்ற சிறுகதை எழுதியிருப்பார். காதலில் பிரச்சனை வரும்போது முன் பின் யோசிக்காமல் அவசரமாக எடுக்கப்படும் முடிவு சரியல்ல என்பதை தெளிவு என்ற கதையில் புரியவைத்திருப்பார்.

என்ன நினைச்சு சவுண்ட் பார்ட்டின்னு பேரு வச்சாரோ தெரியவில்லை.. நிஜமாலுமே இவர் எழுதுற கதைகளுக்கு இவர் தன்னோட சட்டை கோலரை தூக்கிவிட்டு சவுண்ட் விட்டுக்கலாம்.. நல்லா எழுதுறாரு. ஆனால், சில காலம் சவுண்டே கேட்கலை. இப்போது நான் வலைச்சரம் எழுதும் நேரம் அவர் திரும்பி வந்திருக்காரு. அவரை மீண்டும் வருக என்று வரவேற்போம். இவர் பல கதைகள் எழுதியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது நிஜமல்ல கதை, வாசுவும் வெடைக்கோழியும் மற்றும் கருவாச்சி காவியம். என்னடா கவிச்சு வாடை அடிக்குதேனு நினைக்காதீங்க. ஒரு தடவை முகர்ந்து பாருங்க. எப்போதும் விட மாட்டீங்க..

பாரதி கண்ணாம்மாவில் வலைப்பதியும் கார்த்திக் பிரபுவின் நான் கணவனான போது என்ற அவருடைய அனுபவங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவருடைய ஒவ்வொரு பதிவாக முன்னும் பின்னும் படித்து ரசித்தவள் நான். கதைகளில் ஒரு டாக்டர் இஞ்சினியரான கதையும் சினிமாவைப்பற்றி எழுதிய தமிழ் சினிமா கேரக்டர்கள் - ஒரு அலசல், நீங்க மிஸ் பண்றீங்களா? மற்றும் அத்தை பெண்கள் என்ற அழகிகள், அத்தை பையன்கள் என்ற அழகன்கள் கவிதைகளும் நான் மிகவும் ரசித்தவைகளில் சில.

கணவன் தன் மேல் பாசம் இல்லைன்னு நினைக்கும் ஒரு மனைவியின் மனப்போராட்டத்தையும், அதே காதல் மனைவிக்கு எல்லாம் செய்து மகிழ்ச்சியூட்ட வேண்டும் என சிந்திக்கும் கணவனைப்பற்றியும் அழகிய கவிதையாய் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற கதயில் சொல்லியிருக்கிறார் பல மாதங்களாய் காணாமல் போய் திரும்பி வந்திருக்கும் திவ்யா. இனி தொடர்ந்து பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

ஒரு தடவை ராம் ஒரு கதையை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்து, "ஒரு கதை இருக்கு. படிச்சு பாரு"ன்னு சொன்னார். அப்பவே ப்ரிண்ட் எடுத்து வைத்து படித்தேன். இது ஒரு காதல் கதைதான். கதையில் தலைப்பு வெண்ணிலா கேக். கதை நல்லா இருந்துச்சு. "ராம், கதை சூப்பர். எப்போ பப்ளிஷ் பண்ண போறீங்க"ன்னு கேட்டதுக்கு, "அது நான் எழுதியது அல்ல. கொங்கு ராசா எழுதியது. கீழே அவர் பெயரு இருக்குமே?"ன்னு சொல்லி கொங்குராசாவின் முகவரியை கொடுத்தார். அன்றிலிருந்து நான் சுற்றித்திரியும் இன்னொரு இடமாக ஆகிவிட்டது இவரின் தளம்.

சின்ன பசங்க எங்களுக்கு இல்லாத வேகம் துளசி டீச்சருக்கு இருக்கு. அவங்க பதிவெழுதுற வேகத்தை எவ்வளவு விரட்டினாலும் பிடிக்க முடியலை. ஒரு பதிவு படிச்சு முடிச்சு பின்னூட்டம் போடுறதுக்குள் இவங்க இரண்டு பதிவுகளை போட்டுடுறாங்க. டீச்சர், என்னைக்கு இருந்தாலும் ஆமை வேகத்திலாவது உங்க பதிவை படிச்சு முடிப்பேன். பார்த்துட்டே இருங்க. நீங்க இப்போது அவங்க கதையாக எழுதும் வீடு ‘வா வா’ங்குது தொடரை படிங்களேன்.

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம் என்று சொல்வார்கள். பிரசவ வலி என்பது அந்த பெண் மட்டுமே அனுபவிக்கும் வலி அல்ல. அது அவள் கணவனும் அனுபவிக்கும் வலி என்பதை ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார் அண்ணன் டுபுக்கு அவர்கள். படிக்கும்போது நாமே அந்த வலி அனுபவிக்கும்படி சூழ்நிலையை அவர் கதையில் உருவாக்கியுள்ளார்.

இந்த பதிவை எழுதும்போதே முதலில் இந்த கதை பற்றிதான் எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எப்போதும் பெஸ்ட் என்பதை கடைசியாக எழுதுவது சிறந்தது என்று சொல்வார்கள். (அதுக்குன்னு மேலே உள்ளது சிறந்தது இல்லைன்னு தப்பா நினைச்சிடாதீங்க). ஒரு கதை எனக்கு பிடித்திருந்தால், அந்த கதை படித்து முடிக்கும்போது அந்த கதையின் தாக்கமும் கூடவே என்னுடன் இருக்கும். அப்படிப்பட்ட கதைகளைத்தான் இந்த பதிவில் நான் வரிசைப்படுத்தியிருக்கிறேன். ஆனால், இந்த கதை something special for me. இந்த கதையை படித்து முடிக்கும்போது நான் அழுதேன். ரூபியின் மரணம் ஒரு உண்மை சம்பவம் என்று அறிந்ததாலா இல்லை ராம் அவர் உருகி அவருடைய மனதில் இருப்பதை அப்படியே கொட்டினதில் அந்த சம்பவம் நேரில் நடப்பது போல் தோன்றியதாலா என்று சொல்ல தெரியவில்லை. அது எனக்கே நடந்ததுபோலவும் மாணிக்க மலர் ரூபி என் சொந்த தங்கச்சி போலவும் அந்த கதையில் உணர்ந்தேன். ராம் இனி எத்தனை கதை எழுதினாலும் இந்த கதைதான் THE BEST OF THE BEST.

நான் எழுதவே மாட்டேன்னு நீங்க நினைக்கிற ஒன்றைப்பற்றி நாளை.. காத்திருப்பீர்களா??
மேலும் வாசிக்க...

Tuesday, November 13, 2007

காமெடி சரவெடி..

"ஹாஹாஹாஹாஹாஹா"

ஒன்னுமில்லைங்க.. நான் சிரிச்சேன். அவ்வளவுதான். :-)
யாருப்பா அங்கே லூசு தனியா சிரிக்குதுன்னு சொல்றது?? அப்போ நீங்க கண்டிப்பாக இந்த பதிவில் இணைக்கப்பட்டிருக்கிற சுட்டிகளை படிக்க வேண்டும். நீங்களும் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க நீங்க லூசுன்னு நினைக்கிற அளவுக்கு சிரிக்க போறீங்க.

லவ்வர்ஸ் டேயில் பல்ப் பாண்டி.. இந்த நகைச்சுவை கதையை எத்தனை தடவை நான் படித்திருக்கிறேன்; மத்தவங்களுக்கு படித்து காட்டியிருக்கிறேன்; மின்னஞ்சல் மூலமாக மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கிறேன் என்று என்னாலேயே கணக்கு பண்ண முடியாது. எத்தனை தடவை படித்திருப்பேன். திரும்ப திரும்ப படிக்கும்போதும் கண்ணில் கண்ணீர் வர, வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன். ஒவ்வொரு வரியும் ரசித்து சிரிக்கும்படி எழுதியிருக்கார் அண்ணன் ஜி அவர்கள். :-) எந்த கதை எழுதினாலும் அந்த கதைப்பாத்திரமாகவே மாறிவிடுவார். லவ்வர்ஸ்டேயில் பல்ப் பாண்டியில் பல்ப் பாண்டியாய் அவதரித்தவர், யாருலே இங்கே சண்டியன் என்ற கதையில் 100% அக்மார்க் திருநெல்வேலி காரனாய் மாறினார். ஆண் என்ற அன்பானவன் கதையில் அப்படியே செண்டியால் தாக்கியிருப்பார்.

ஒருத்தர் இருக்காரு.. சாதாரணமா பதிவு போட மாட்டாரு. பதிவு போட்டால் அதுல கொஞ்சமாவது காமெடியுடன் கலந்த நையாண்டியும் இருக்காமல் இருக்காது. வலையுலகம் மூலமாகவே தன்னுடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக்கொண்டவர். அவர் தங்கமணி பதிவுகளை சனிக்கிழமைதான் படிப்பார் என்பதால் அவர் வெள்ளிக்கிழமை மட்டுமே பதிவு போடுபவர். யாருன்னு இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க. அம்பிதான் அவர்! பார்த்த முதல் நாளே, தீராத விளையாட்டு பிள்ளை, பாட்டு பாடவா, வாழ்க ஜனநாயகம், மலையேற போனாலும் மச்சினன் தயவு வேணும், கப்பல் ஓட்டிய கேப்டன் எல்லாம் காமெடி & காமெடி மட்டுமே! காட்டுக்குயில்-கருகுமணிமாலை இவரோட டாப் இடுகைகளில் ஒன்று. காமெடியில் கருத்தும் சொல்லலாம் என்று சுதந்திர தினத்துக்காக எழுதிய இன்றைய சுதந்திரம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

இங்கே போனால் காமெடிக்கு 100% கியாரண்டி என்று சொல்லும் அளவுக்கு சரவெடியாய் எழுதுபவர் வெடிமணி.. கண்மணி டீச்சர். தன்னை ஒரு டீச்சராக அறிமுகப்படுத்தி, பிச்சு, கிச்சு, ச்சுப்ரமணி, பங்கஜம் மாமி என்ற பல கேரக்டர்களை உருவாக்கி நமக்கு காமெடி ஊட்டுபவர். ச்சுப்ரமணிக்கு என்ன இனிஷியல் என்பதுதான் இங்கு நான் படித்த முதல் இடுகை. அதன் முன்னரும் பின்னரும் இவர் எழுதியதில் பல என் மனதை கவர்ந்ததாக இருந்தாலும் ஜெயிக்க போவது டைகரா ச்சுப்ரமணியா என்கிற போஸ்ட்ல கோபியோட சோனி கெலிச்ச போஸ்ட்டை நான் மறக்க மாட்டேன்.

அடுத்து அபி அப்பா. தன்னோட மகளை மையமாக கொண்டு இவர் எழுதும் காமெடி பதிவுகள் எல்லாமே முதல் ரகம். அபிராமி இ.ஆ.ப, அஞ்சு ஜார்ஜ்ச்சும் அபி பாப்பாவும், பாரதிக்கும் பாரத மாதாவுக்கும் என்ன பிரச்சனை, பத்மா சுப்ரமணியம் அவர்களே சவாலை சந்திக்க தயாரா என்று அபி பாப்பாவை மையமாக வைத்து எழுதிய அனைத்தும் சூப்பர்.

சந்திரமுகில ரஜினியும் வடிவேலுவும் பேய் கதையும் ஞாபகம் இருக்கா? அதே மாதிரி ஒரு கதை சின்சினாட்டி ரோட்டுல நட்ந்துச்சு. முருகேசு @ வடிவேலுவா ஆக்டிங் கொடுத்து நானும் சின்சினாட்டி மாமாவும் என வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் க்லீவ்லேண்ட் அருண்குமார்.

அடுத்து சொல்லபோறவங்க பத்தி நான் டிஸ்கி கொடுத்தால் நீங்களே கண்டுபிடிச்சிடுவிங்க. இவங்க மேலே ஒரு கும்பலே வெறியுடன் இருக்கு. ஈரோட்டுக்கு ஆட்டோக்கள் அனுப்புற அளவுக்கு வெறின்னா பாருங்களேன். அப்ப்டி ஒரு கொலைவெறியுடன் சோகக்கவிதையா எழுதி தள்ளுவாங்க. அவங்களுக்கு நகச்சுவை பகுதியில என்ன வேலைன்னு கேட்குறீங்களா? இவங்க கவிதை மட்டும்தான் சோகக்கடலே தவிர காமெடினு வந்துட்டா சிவகாசிதான். முக்கியமாக படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுவாங்க பாருங்க. இதை படிச்சீங்கன்னா கண்டிப்பா படம் பார்க்கவே மாட்டீங்க. கண்ணில் கண்ணீர் வர்ற அளவுக்கு சிரிப்பீங்க. கவிதாயினி காயத்ரியின் சில படைப்புகள்: பேய்கிட்ட பேசியீருக்கீங்ளா?, சமயற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை, புலம்ப வச்சிட்டியே பரட்டை.

இவரைப்பற்றி சொல்லியே ஆகணும். மாசத்துக்கு ஒரே ஒரு பதிவு மட்டுமே போடுவார். ஆனால் அந்த ஒரு பதிவு கண்டிப்பாக ஒரு பயனுள்ள, ரசிக்க கூடிய பதிவாய்தான் இருக்கும். அந்த ஒரே ஒரு பதிவுக்கு பிறகு, அவரே அவர் வீட்டு பக்கம் போக மாட்டார். ஆனால், மற்றவர்கள் பதிவு அனைத்தையும் படித்து, பின்னூட்டம் இட்டு, நல்ல பதிவுகளுக்கு மற்றவர்களிடம் இலவசமாக விளம்பரம் கொடுப்பார். இப்படி எனக்கே பல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் கோபிநாத் அண்ணா. அவருடைய நாங்களும் ஓட்டுவோம்ல என்ற இடுகையில் தன்னுடைய சிறுவயது சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை படித்திருக்கிறீர்களா? கூட்டாஞ்சோறு நினைவுகள் வேண்டுமா?

“பொண்ணுங்க எல்லாம் தெய்வம் மாதிரின்னு சொல்றாங்க. சரினு நின்னு தரிசனம் பண்ணனா மட்டும் ‘டீஸிங்’னு சொல்லி உள்ள தள்ளுறாய்ங்க!! என்ன கொடுமை இது கடவுளே!!” என்று ஃபீல் பண்ணி ஜொல்லு விடுவதற்கென்றே ஜொல்லுப்பேட்டையை உருவாக்கியிருக்கார் ஜொல்லுப்பாண்டி. ஜொல்லுவது தப்பில்லை என்பதிலிருந்து ஜொல்லுவது எப்படி என்று வகுப்பு நடத்துமளவு பல விதமாய் பதிவுகள் ஜொல்லியிருப்பார். எந்த பதிவுகளை விவரிபது… எது விடுவது என்றே தெரியவில்லை. அனைத்தும் ரசிக்கும்படியான எழுத்து முத்துக்கள். அதனால் எல்லா பதிவுகளையும் நீங்க இங்கேயே போய் படிங்க

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா கைப்புள்ளன்னு சொல்லுவாங்க. இங்கே லேடி கைப்புள்ள ஒருத்தவங்க இருக்காங்க. எவ்வளவு ஆப்பு வாங்குனாலும் சளைக்காமல் நின்னு அடுத்த ரவுண்ட் எப்போ ஸ்டார்ட்ன்னு கேட்ப்பாங்க. G3 என்ற பெயருக்கு சொந்தக்காரங்க. இவங்க வாங்கிய ஆப்புகளும் வாங்கிய ட்ரீட்களும் எண்ணனும்ன்னா அதுக்கு ஒரு கணக்கு புள்ளையை வேலைக்கு வச்சி லெட்ஜர் புத்தகத்துல எழுதி கால்குலேட்டர்லதான் கணக்கு பண்ணனும். ட்ரீட் வாங்கிய பதிவுகளை இங்கே வரிசைப்படுத்தினா நாளைக்கு வரையில் இந்த பதிவு முடியாதுங்கிறதுனால எல்லா பதிவுகளையும் இங்கே நேரடியாக போய் படித்துக்கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோல் விடுக்கப்படுகிறது. இங்கு ஒரு இடுகைக்காவது ஒரு சுட்டியை தர வேண்டும் என்பதால் நம்மளை வச்சி காமெடி பண்றதே இவங்களுக்கு பொழப்பா போச்சு என்பதை இங்கு இணைக்கிறேன். ;-)

நாமக்கல் சிபி என்றாலே முதலில் தோணுவது கலாய்த்தல் மன்னன் என்றுதான். ஒரு தடவை அவர் வெள்ளை அறிக்கை விட்டார். என்ன ஒரு கருத்து! இப்போதுள்ள சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ள அறிக்கை. கண்டிப்பாக படிக்க சிபியின் வெள்ளை அறிக்கை. (இது ஏன் நகைச்சுவையில சேர்த்திருக்கிறேன் என்று நீங்களே அந்த பதிவுக்கு போய் பாருங்க). கவிதைகளுக்கு எதிர் கவுஜ எழுதுவார் இவர். படிக்க ரொம்ப சுவாரஸ்யமாய் இருக்கும். ;-)

எதிர்கவுஜன்னதும் இன்னொருத்தர் நினைவுக்கு வருகிறார். குசும்பு! குசும்பை தவிர்த்து வேறெதுவுமில்லைன்னு சொல்பவர். சாட்சாத் குசும்பனேதான். எதிர்கவுஜ ஸ்பெஷலிஸ்ட் என்று ஒரு அவார்டே கொடுக்கலாம் இவருக்கு. கவிதாயினி எழுதிய முன்னாள் நன்பனுக்கு என்ற கவிதைக்கு (என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியலை எனக்கு! :-( ) குசும்பன் எழுதிய எதிர்கவுஜ இன்னாள் நண்பனுக்கு, இதோட முடிந்ததா? இல்லையே.. இன்னும் மூன்று எதிர்கவுஜ வந்ததே: இளாவின் நண்பனான சூனியன், ராமின் விவாஜிக்கு எதிர்கவுஜ மற்றும் ஜி.ராகவனின் சூனியமான நண்பன். குசும்பனின் அய்யனாரின் மகிமை, ஒரு அப்பாவி நம் வலைப்பதிவர்களிடம் விலாசம் கேட்கிறார் படிக்க மறவாதீர்கள்.

அடுத்து நாம் பார்க்கபோவது கேடி என்று செல்லமாக அழைக்கப்படும் பொற்கொடி. வலைபதிவு ஆரம்பித்து படிப்பு, வேலை, திருமணம்ன்னு எல்லாம் விரைவாக முடிந்து அமேரிக்காவுக்கு குடிபெயர்ந்த ஒரு சின்ன பொண்ணு. ஆனால், அவள் பண்ற கூத்துக்கு ஒன்றாம் நம்பர் கேடி என்று அவார்ட் கொடுக்கலாம். தன்னோட மூன்றாவது பதிவையே 5-ஆவது பதிவுன்னு போட்ட பெரிய கேடி. நல்ல காமெடி சென்ஸ். கண்ணு பட்டுப்போச்சே மற்றும் இச்சுத்தா இச்சுத்தா இவருடைய காமெடிக்கு அடையாளங்கள். வியர்டா? நானா? என்ற போஸ்ட் பாருங்களேன். இப்படி கூட எழுதலாமான்னு நானே ஆச்சர்யப்பட்ட பதிவு இது. ரூட் 16 முதல் அறை 267 வரை என்ற தொடர் எழுத தொடங்கினார். ரெண்டே பாகத்தோட பாதியிலேயே நிக்குது. தங்கச்சிக்கா, எப்போ அடுத்த பாகம் வெளியிடப்போறீங்க? இப்படி காமெடி பண்றவ பொறுப்பா ஏதாவது எழுதுவாளா என்று கேட்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு ஒ(இ)ரு வழிப் பாதை என்று கொடி செய்த ஆராய்ச்சி.

சென்ஷியின் கலாட்டா குடும்பமும் கலக்கல் டாக்டரும் படிச்சதுண்டா? பாகம் 1, பாகம் 2 & பாகம் 3..

பரணி என்ற பெயரில் அழைப்பதை விட பாவனா கிறுக்கன் என்று அழைப்பதில் பெருமைப்படும் ஒரு ஜீவன் பாட்டா பாடுவாரு. ஆங்காங்கே கவிதை G3 பண்ணுவாரு. வேதா proffesor-ஐ குருவாக கொண்டு கவிதை எழுத ஆரம்பிச்சுட்டாரு. ஆனாலும், நான் அவருடைய நகைச்சுவையை விரும்பி படிப்பேன். குடும்பத்துக்கு குண்டு வைப்போம் படிச்சுட்டீங்களா? இனி ஒரு tag செய்வோம்ன்னு ஒரு தொடர்கதை ஆரம்பிச்சார். அதுக்கூட அருமையா இருக்கும்.

பக்கா தமிழன் என்ற பெயர்ல ஒருத்தர் சொல்ற ஒவ்வொன்னுகும் எதிர்சொல் பேசாமல் ஓயமாட்டார். நாம் பேசுறதுக்குதான் திருப்பி நிறுத்தாமல் ஓட்டுராருன்னு பார்த்தால், அவரு பேசுறதுக்கும், மனசாட்சி பேசுனது போல எதிர்சொல் பேசுவாரு. வாய் ஓயாமல் பேசிட்டே இருந்தாலும், அவர் செய்யுற அந்த நகைச்சுவைகள் ரசிக்கும்படிதான் இருக்கிறது. காப்பி வித் கோபின்னு கோப்ஸ் ஒரு நிகழ்ச்சி நடத்துறார். அதுல இவர் பண்ற காமெடிக்கு அளவே இல்ல. லீவு லெட்டர் எழுதியிருக்கீங்களா நீங்க? இவரு எழுதியிருக்கார் பாருங்க இங்கே.

மலேசியா மாரியாத்தா மற்றும் மை ஃபிரண்டின் போலி என்று அழைக்கப்படும் ஒரு சின்ன பொண்ணு துர்கா. நான் மை ஃபிரண்ட் இல்லை.. நான் அவள் இல்லைன்னு ஒரு பதிவு போட்டாள். ஃபீல் பண்ணி எழுதியிருந்தாள். ஆனால் அதுவே நகைச்சுவையாய் அமைந்துவிட்டது. இப்படி நகைச்சுவை பண்றேன்னு சீரியஸா ஆனதும் சிரியஸா எழுதுறேன்னு காமெடியாய் எழுதியதும் சூப்பரோ சூப்பர். மலேசிய வலைபதிவர் சந்திப்பு ஒன்று எழுதியிருப்பாள் பாருங்க. மறவாமல் அதையும் படிங்க.

ரொம்ப எழுதிட்டேனோ??? சரி சரி.. ஒரு சின்ன இடைவெளி விட்டு நாளைக்கு வாரேன்.. அதுவரை பின்னூட்ட பதிவில் சந்திப்போம்... வர்ட்டா..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது