வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-8
➦➠ by:
மோகன்ஜி
அன்பின் வலைச்சொந்தங்களே!
வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியப் பணியை நான் ரசித்தே செய்தேன். வழக்கமான பணிச்சுமைகளோடே இன்னமும் சில முக்கிய பொறுப்புகள் இந்த வாரம் சேர்ந்த போதிலும், வலைச்சரத்தின் பதிவுகளையும் அறிமுகங்களையும் இயன்றவரையில் முழு அர்ப்பணிப்போடு செய்து முடித்த திருப்தி இருக்கிறது.
நிறைய புதுப்பதிவர்களின் வரவும் வலையில் அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் என எனக்குத் தோன்றிய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் .
பல முக்கிய பதிவர்களை என்னால் சேர்க்க முடியவில்லை. அதற்கு காரணம் நேரமின்மையே தவிர வேறொன்றில்லை.
வலையை நாம் எதற்கு உபயோகிக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. புது நட்புகளும் சொந்தங்களும் இங்கே கண்டிப்பாய்க் கிட்டும்.. நம் குடும்பத்தின் நீட்சியாக பதிவர்கள் அமைந்து விடுகிறார்கள். இலக்கியம் நுகர ,பொழுது போக்க, சமையல் கலை அறிய, அரட்டைத் தளமாக, தொழில் நுட்பம் அறிய ,இசை பகிர என அத்துணையும் வலையுலகில் இருக்கிறது.
பதிவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். வலை மேய்வதை ஒரு தளையாக உங்களைச் சுற்றி பின்னிக் கொண்டு, உங்களைச் சார்ந்தவர்களுடனான உறவை பாதிக்கும் ஒரு தொல்லையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எதற்குமே ஒரு அளவு உண்டல்லவா?. வலையின்பம் நுகர, வாழ்க்கை இன்பம் தொலைக்கப் போமோ? இதை அறிவுரையாய் இல்லாமல் உள்ளார்ந்த அன்பால் நான் சொல்வதாகவே புரிந்து கொள்ளுங்கள்.
வானவில்லுக்கு வருகை தந்து பதிவுகளை படிக்கும் அன்பர்களுக்கும் ,பின்னூட்டங்கள் இட்டும், மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் அன்பு செலுத்தும் நட்பு நெஞ்சங்களுக்கும், இந்த ஒரு வாரத்தில் முதன் முறையாய் அறிமுகமான பதிவர்களுக்கும் என் நன்றி கூடிய வணக்கங்கள் .
இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சரத்துக்கும், சகோதரர் சீனா அவர்களுக்கும் என் நன்றியும் அன்பும். திரு. சீனா அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. பதிவுகளுக்கும் படிப்பவர்களுக்கும் இடையே பாலமாய் விளங்கும் 'வலைச்சரம்' பதிவுலகில் ஒரு பள்ளிக் கூடம்.
மீண்டும் சந்திப்போம் சொந்தங்களே.. வானவில்லுக்கும் அடிக்கடி வாருங்கள்.. காத்திருப்பேன் அங்கே...
என்றென்றும் அன்புடன்
மோகன்ஜி
ஹைதராபாத்.
பட உதவி :Google Image


