வலைச்சரத்தில் மூன்றாம் நாள்!-காரஞ்சன்(சேஷ்)
வலைச்சர வாசகர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்! கடந்த இரு நாட்களிலும் கருத்துரை வழங்கி என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் நல்லிதயங்களுக்கு என் உளமார்ந்த நன்றி! இந்த நாள் நம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் நாளாக அமையட்டும்!
இன்று உங்களுடன் ஒரு படக்கவிதையை பகிர்ந்துள்ளேன்.
நிஜமல்ல நிழல்!
கையில் மலரேந்தி
கண்மூடி நிற்கின்றாய்!
நிழலாய்க் கரமொன்று
நீள்கிறதே உன்முன்னால்!
வாழ்க்கைப்
பயணத்தில்
வழியெங்கும் நிழல்வலைகள்!
வீழாமல் இருப்பதற்கு
விழித்திரு கண்ணே நீ!
-காரஞ்சன்(சேஷ்)பட உதவி: கூகிளுக்கு நன்றி!
தினமணி கதிர் அக்டோபர் 7 ம் தேதி இதழில் வெளிவந்த இந்தக் கதை மாறும் சமூக மதிப்பீடுகள் குறித்த மிகவும் சிறந்த வெளிப்பாடு....வாசியுங்கள்...
பாரதி வேண்டிய காணி நிலம் போல இல்லாட்டியும், எனக்கு அதுதான் மனசுக்கும், உடலுக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய இந்த பூமியின் ஒரு துளி துண்டு நிலம். சின்ன வயசுலயே கொழும்பு சென்று, தொழில் கற்று, சிறுக சிறுகச் சேமித்து, சொந்த வீடு கட்ட வாங்கிய நிலம்.
ஊரு பழக்கத்துலேயும், அனுபவ அறிவிலும் ஞானஸ்தன் எங்க தகப்பனார் . அவர் அடிக்கடி சொல்வார், ""இந்த பூமி இருக்கே, அது கடவுள் நமக்கு கொடுத்த மிக பெரிய கொடைடா. ஒண்ணு நாம வாழ பயன்படனும், அல்லது வாழ்வதற்கு பயன்படணும்''
நான் எடம் வாங்குனவுடனே அவர் சொன்னார், ""எடம் முழுக்க கான்க்ரீட் போட்றாத. மரஞ்செடி போக, நடக்க ஏதுவா மண் பாத இருக்கட்டும்டா. அதுல நடந்து பாரு. நமக்கு சொந்தமான மண்ணுல வெறுங்காலோட நடடா. அப்ப ஒரு கர்வம் வரும் பாரு, உலகே ஆண்டுபுட்டாப்லே'' தலையாட்டினேன். பேரன் பேத்தி ஆசையோடயே இருக்கிற எங்க தாயார் சொன்னார்: ""நம்ம குடும்பம் தழச்சு பேரப்புள்ளலாம் ஓடி ஆடி திரியறாப்ல வீடு கட்றா. விசாலமா இருக்கணும்டா; சூரியனும் வாயுவும் தங்கு தடை இல்லாம நுழையணும்டா'' தலையாட்டினேன். அம்மான் மகளான என் மனைவி சொன்னாள்: ""ஏங்க வீடு கட்றப்ப, வாச விரிவா இருக்கனுங்க, முன்னாலையும் பின்னாலையும். முன்வாசல்ல அக்கம்பக்கதோட பேசறாப்லையும், மார்கழி மாசம் பூக்கோலம் போடறாப்லையும், பின்னாடி அரிசி பருப்பு காய வைக்றாப்லையும் இருக்கட்டுங்க. ரொம்ப ஒசத்தி கட்டவேணாங்க, மாமா அத்தைக்கெல்லாம் வயசாகிட்டே போகுது. அவங்க சுளுவா நடமாடனுங்க''தலையாட்டினேன்.
வாழ்க்கையிலே பல மாதிரி கஷ்டநஷ்டமெல்லாம் அனுபவிச்சவரு எங்க அம்மான். அவர் சொன்னார், ""மாப்ளே கட்றதுதான் கட்றீங்க, ஒரு மாடி வீடும் சேத்து கட்டி விட்ருங்க. அதுக்கு தனி பாதை வச்சுருங்க. ஏன்னா, இடம் ஊருக்கு வெளியே தள்ளி இருக்கு. மேல ஒரு துணைக்கு குடி வைக்கலாம்ல. வருமானத்துக்கு இல்லாட்டியும், ஒரு நல்ல மனுசாள குடில்ல வச்சா, அவசர ஆத்திரத்துக்கு இருப்பாகள்லே. நீங்களும் அடிக்கடி ஊரு பேருன்னு அலையிறவரு. அப்புறம் நாளைக்கு ஏதும்னாலும், ஒரு கைச்செலவுக்கு தோதா இருக்கும்ல'' தலையாட்டினேன்.
பின்புறத்துல கேணி வெட்டுனா, தண்ணி சில அடியிலயே வந்துருச்சு. இனிப்புன்னா இனிப்பு அப்படி ஒரு இனிப்பு. நிலையா இருக்கணுமுன்னு நல்ல நாள் பாத்து நிலையும் வச்சு, கட்டடம் கட்டறவங்களுக்கு விருந்தும் வச்சோம். இடத்துக்கு நட்ட நடுவுல வீடு கட்டி, முன்னாடியும் பின்னாடியும் வாசல் வச்சு, மாடி வீடும் கட்டி, சொந்த பந்தமெல்லாம் வரவழச்சு , பால் காய்ச்சி குடி போன நாள்ல இருந்த முழுமையான உணர்வு, இதுவரைக்கும் திரும்பவும் அமையலை.
சரி நம்மால முடிஞ்சது, மரஞ்செடிகொடியாவது வீட்ட சுத்தி வளப்போம்னு முடிவு செஞ்சு தோட்டம் போட்டேன். தென்னை மரம் மாதிரியெல்லாம் வேணுவளர்த்து நம்மால ஏற இறங்க முடியாதுன்னு, மாமரம், வாழைமரம் வச்சு காய்கறிச்செடிபோட்டேன். என் மனைவி சில பூச்செடியும், துளசிச்செடியும், கற்பூரவள்ளி, மணத்தக்காளி செடிகளும் வளர்த்தா. ஆரம்ப பள்ளிக்கூடத்துல படிச்ச ஞாபகம், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதின்னு. ஆலமரம் வளக்க இடமில்லாட்டியும், வீடு முன்புறம் ஒரு வேப்பங்கன்று நட்டு வச்சேன்.
புது வீடு கட்டி குடி வந்த நேரமோ என்னமோ, மரஞ்செடிகொடி நட்டு வளர்த்த பலனோ என்னவோ, வாரிசில்லாம தரிசா இருந்த எங்க தாம்பத்திய வாழ்க்கையில, தளிரா ஒரு மகன் பொறந்தான். மரஞ்செடிகொடியோடு, நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமா அவனும் வளந்தான். பள்ளிக்கூடம் போயி நல்லாவே படிச்சான்.
தெனமும் முன் வாசல்ல அரிசி மாவு கோலம் போட்டு எறும்புக்கு தீனி வச்சோம், பின் வாசல்ல மூதாதையர் நினைவா காக்கைக்கு சோறு வச்சோம். சொந்தபந்தங்களுக்கும், திருவிழா படையலுக்கும் வாழை இலையில விருந்து வைப்போம். அப்பல்லாம் எம்பையன் நுனி இலைதான் ம்பான். மத்த நாள்ல காய்கறி சாப்பிட அடம் புடிக்கிற பய, நம்ம தோட்டத்துல அவன் தண்ணி ஊத்தி வெளஞ்ச காய்கறின்னா உடனே சாப்புடுவான். துளசி இலய பிச்சு பிச்சுத் திம்பான். வாய்ப் புண்ணு வந்தா மணத்தக்காளியும், சளி புடிச்சா கற்பூரவள்ளியும் பக்குவம்மா ஆக்கி தருவா எம்மனைவி. சட்டுன்னு கேக்கும்.
எம்பையன் தான் சிநேகிதன்களுடன் வீட்டை சுத்தி விளையாடும்போது, ""எங்க வீடே ஒரு பார்க்குடா'' அப்படின்னு பெரும பேசுவான். என்ன மாயமோ தெரியல, எங்க வீட்டு மாமரத்துல வருசம் முழுக்க காய் காய்க்கும். அந்த மரத்துக்கு அவன் பேரு வச்சிருந்தான், "ஏ.டி.எம்' - எனி டைம் மேங்கோ மரம் ன்னு.
அதுக்கு எம்பையன் சொன்னான், ""அப்பா கவலையே படாதிங்க. நம்ம வீட்டுக்கே வந்து மினரல் வாட்டர் சப்ளை பண்ண ஏற்பாடு பண்ணிருக்கேன்''. தலையாட்டினேன்.
எங்களையும் சேத்து மொத்த குடும்பமாய் போய்வறதுக்கு தோதா ஒரு பெரிய காருக்கு, அட்வான்ஸ் கட்டிட்டு எம்பையன் சொன்னான்,""அப்பா இன்னும் ஒரு மாசத்துல கார் டெலிவரி கொடுத்துருவாங்க. கார் நிப்பாட்ட எடம் வேணும்ப்பா. அதனால ஒரு பக்கம் தோட்டத்த சுத்தம் செஞ்சிட்டு, கார் ஷெட் போட்ருவோம்ப்பா. இன்னொரு விஷயம், நம்ம வீட்டுக்கு பக்கத்திலயே ப்ரஷ் காய்கறி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வந்துருச்சு. வேணுங்கிறத போன்ல சொல்லிட்டா போதும். எப்ப வேண்ணாலும் வீட்லே வந்து குடுத்துருவாங்க'' . தலையாட்டினேன்.
எம்பையன் சொன்னான், ""ரொம்ப வருசமா மாடி வீட்ல வாடகைக்கு இருந்தவங்க அடுத்த மாசம் காலி பண்ண போறாங்களாம். எனக்கு தெரிஞ்ச ஒரு ம்யூச்வல் பண்ட் கம்பெனிக்காரங்க, ஒரு ஆபீசுக்கு இடம் வேணுங்றாங்க. நல்ல அட்வான்சும், வாடகையும் தரேங்றாங்க. அத வச்சே நம்ம வீட்டையும் கொஞ்சம் மராமத்துபண்ணிடலாம்ப்பா. மேல்வீட்ட கொஞ்சம் ரீமாடல் செஞ்சா போதும். அதுவும் அவங்களே செஞ்சுக்கிறாங்களாம்''. தலையாட்டினேன்.
எம்பையன் சொன்னான், ""மேல இருக்கிற கம்பெனிக்காரங்களுக்கு வண்டிகள் நிறுத்த எடம் வேணுமாப்பா. இந்த பக்கம், நான் மாடிவீட்டு பிள்ளைகள்லாம் பார்க்குன்னு சொல்லி விளையாடுவோம்ல, அந்த எடத்த பார்க்கிங் ஸ்லாட்டா கொடுத்துருவோம்ப்பா. அதுக்கு தனியா வாடகை தருவாங்க''. தலையாட்டினேன்.
எம்பையன் சொன்னான்,""பக்கத்துல ஒசரம் ஒசரமா கட்டடம் வந்துட்டதனால, வெயில் சரியா படாம துணிமணியெல்லாம் காயமாட்டேங்குது. அதனாலே வாஷிங் மெஷினும் ட்ரையரும் வாங்கிட்டேம்ப்பா. இனிமே நாமவீட்லே நிம்மதியா துணிமணிகளைப் பராமரிக்கலாம்'' . தலையாட்டினேன்.
எம்பையன் சொன்னான், ""ஏம்பா வீட்டை இடத்துக்கு நட்ட நடுவுல கட்டினீங்க? எதுக்கும் பயன்படாம சுத்தி காலி இடம் வேஸ்டா கிடக்குது. வீட கொஞ்சம் ஒரு பக்கமா கட்டி இருந்தா, நாலு கடை கட்டி வாடகைக்கு விட்ருக்கலாம். சரி அது போகட்டும். அந்த ஏ.டி.எம் - மாமரம் இடத்துல, நான் ஆலோசகராக இருக்கிற பேங்க்காரங்க, ஒரு ஏ.டி.எம் சென்டர் வச்சுக்கிறேங்றாங்க. நல்ல வாடகையும் தருவாங்க. அந்த சென்டருக்கு ஷிப்ட்டு முறையில இருவத்துநாலுமணி நேரமும் செக்யூரிட்டி போட்ருவாங்க. நமக்கு வருமானத்துக்கு வருமானம். பைசா செலவு இல்லாம செக்யூரிட்டியும் அமைஞ்சுரும். நாங்க இல்லாதப்ப, நீங்க மட்டும் தனியா இருக்கிறப்ப, உங்களுக்கும் ஒரு பாதுகாப்புக்கும் ஆச்சு. மரத்துப்பக்கம் பூச்சி அட்டையெல்லாம் வேற வருது''. தலையாட்டினேன்.
எம்பையன் சொன்னான், ""அப்பா நமக்கு நெறைய பணம் சேந்துருக்கு. எனக்கு மேலும் பேங்க்ல லோன் எவ்வளவு கேட்டாலும் தருவாங்க. இப்பல்லாம் லேண்ட்ல இன்வெஸ்ட் பண்றதுதான் பெஸ்ட். அதனால புயூச்சர்ல நல்ல ப்ராஸ்பெக்ட் இருக்கிற இடமா பாத்து இன்வெஸ்ட் பண்ணபோறேன்''. அதுக்கு நான், ""அதுல பயிர் விளைவிக்க போறியா இல்ல தோட்டம் கீட்டம் போட போறியா?'' ன்னேன்.
எழுதியவர் சுப.திருப்பதி.
(மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்ட என் நண்பருக்கு நன்றி!)
III) சிந்திக்க:
ஓடிக்கொண்டிருப்பதால் ஒல்லியாக உள்ள முள்!
இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்ப்போமா?
1. தனது சொல்லாற்றலால் மரபுக் கவிதைகள் படைத்துவரும் புலவர் சா. இராமாநுசம் ஐயா அவர்கள் சொல்லுதல் யார்க்கும் எளிய என்பதை எப்படி விளக்குகிறார் எனப் பாருங்கள்.
2. அரசன் சே அவர்கள் அழகை ஆராதிக்கிறார் இப்படி!
3. வானம் எனக்கொரு போதிமரம் என்பது போல் வானும்-நானும் கவிதை படைத்துள்ளார் சீனி அவர்கள்!
4. காத்திருப்பு குறித்து திருமதி உஷா அன்பரசு அவர்களின் கருத்தைக் கேளுங்களேன். முக்கியமான மூன்று சொற்கள் மற்றுமொரு முக்கியப்பதிவு!
5. மார்கழியின் சிறப்பு அறிய
–கோமதி அரசு அவர்களின் திருமதி பக்கங்கள்!
6. பழையன கழிதலும் புதியன புகுதலும் பற்றி-சேக்கனா M. நிஜாம் அவர்களின் ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?
7. நலம்தரும் சொல்லைக் காண வாருங்கள்! திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைப் பக்கத்திற்கு!
இன்றைய பகிர்வுகள் பிடித்திருக்கிறதா? பகிருங்கள் உங்கள் கருத்துக்களை!
மீண்டும் நாளை சந்திப்போம்!
என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)






