07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 2, 2014

சில பிரபல பதிவர்கள்

வலைச்சரம் இரண்டாம் நாள்   2-12-2014 செவ்வாய்க்கிழமை


எனக்கு தற்பெருமை அடித்துக்கொள்ளப் பிடிக்காது. அதனால் என் தளத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இருந்தாலும் என் போட்டோ இருக்கட்டுமே என்று போட்டிருக்கிறேன்.

இன்று என் மனதைக் கவர்ந்த சில பிரபல பதிவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவர்கள்தான் ஏற்கெனவே பிரபலமானவர்களாயிற்றே, அவர்களுக்கு அறிமுகம் எதற்கு என்று சிலர் நினைக்கலாம். பூக்கடைக்கும் விளம்பரம் வேண்டிய காலம் இது.
பிரபல பதிவர்களாயிற்றே என்று அவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டால் அவர்களுக்கு உற்சாகம் குறைந்து விடும். பிறகு நஷ்டம் நமக்குத்தான்.

ஒரு சிறு குறிப்பு: வலைச்சரப் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு மறுமொழி இடும்போது பின்னூட்டமிட்டவர்களின் பெயரையும் சேர்த்தே மறுமொழி இடுகிறேன். ஆனால் அவர்கள் பெயருக்குப் பின்னால் "அவர்களே" என்ற அடைமோழி சேர்க்கவில்லை. இரண்டு காரணங்கள்-ஒன்று கூடுதலாக தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம். இரண்டாவது பெரும்பாலானவர்கள் எனக்கு இளையவர்களே. அவர்களுக்கு இப்படி அடைமொழி சேர்த்தால் அந்நியோன்யம் இல்லாமல் போகும் என்ற எண்ணம். என் கருத்து தவறாக இருந்தால் தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறேன்.

1. திருமதி இராஜராஜேஸ்வரி  அவர்கள்.

தினமும் சூரியன் உதிக்க மறந்தாலும் மறக்கலாம். ஆனால் இவர்களின் பதிவு தவறாது.
தளத்தின் பெயர் : மணிராஜ்”
லிங்க்: http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_30.html

இவருடைய தளத்தின் அடையாளம்



இவர் கோவையில்தான் இருக்கிறார் என்றாலும் தன்னை இது வரையில்  எங்கும் வெளிப்படுத்திக்கொண்டதேயில்லை. இவருடைய புகைப்படமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இவர் பதிவுகள் முழுவதும் ஆன்மீகப் பதிவுகளே. அநேகமாக இவர் தொடாத ஆன்மீக விஷயங்களும் எழுதாத கோவில்களும் இருக்காது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் பல முழுமையான விவரங்களும் நிறைய புகைப் படங்களும் இருக்கும். இந்தப் பதிவுகளைத் தயார் பண்ண ஒரு ஆபீசே நடத்துகிறார் என்று நம்புகிறேன். 

இது வரை ஆயிரத்தி ஐந்நூறு பதிவுகள் போட்டிருக்கிறார். இந்த அளவு பதிவுகள் போட்டவர்களை நான் பார்க்கவில்லை.

இன்னொரு விஷயம். இவர் பதிவுகளிலிருந்து ஒரு துரும்பைக்கூட யாரும் எடுத்துக்கொண்டு போக முடியாது. அவ்வளவு டைட் செக்யூரிடி.

வாழ்க இவர் தொண்டு.

2. திரு ஜோதிஜி அவர்கள்


ராமநாதபுரத்திலிருந்து திருப்பூருக்கு வந்தவர். திருப்பூரின் பின்னலாடைத் தொழிலை முழுமையாக அறிந்தவர். நல்ல சிந்தனாவாதி.
இவருடைய தளம்:
இவருடைய மேலாண்மைத் தத்துவங்கள் நடைமுறைக்கு மிகவும் ஏற்றவை. திருப்பூரின் தொழில் நுணுக்கங்களைப் பற்றி பதிவுகளில் எழுதி வருகிறார். இவருடைய எழுத்தார்வம் மெச்சத்தகுந்தது.
பல புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறார். அதில் “டாலர் நகரம்” என்ற புத்தகம் மிகவும் அருமையானது. இவருடைய பதிவுகளை தொழில் நடத்தும் ஒவ்வொரும் தவறாது படிக்கவேண்டும்.

3. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

                                           

தளத்தின் பெயர்: அவருடைய பெயரே


மிகக் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமானவர். இவர் பிரபலமாகக் காரணம் இவரது அசாத்திய உழைப்பு.
ஒரு சமயத்தில் இவருடைய பின்னூட்டங்கள் இல்லாத தமிழ்ப் பதிவுகளே இல்லை என்ற நிலை இருந்தது. வேலைப் பளு காரணமாக இதை இப்போது கொஞ்சம் குறைத்திருக்கிறார்.

4. திரு ஸ்ரீராம் அவர்கள்

இவருடைய படம் கிடைக்காததினால் அவருடைய பிளாக்கிலிருந்து ஒரு இனிப்பான படத்தைப் போட்டிருக்கிறேன். இந்த இனிப்பைப் போலவே அவரும் இனிமையானவரே.



தளத்தின் பெயர்: “எங்கள் Blog”
லிங்க்: http://engalblog.blogspot.in/

இவர் ஒரு குழுவாக இந்தத் தளத்தை நடத்தினாலும் இவரே அதிகம் பொறுப்புகளைச் சுமக்கிறார் என்று நினைக்கிறேன்.
தன் போட்டோ எதையும் தளத்தில் போடவில்லை. வாழ்க்கைக்கு பயனுள்ள செய்திகளைப் பிரசுரிக்கிறார்.

5. திரு ரமணி அவர்கள்

       My Photo

“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற தலைப்பில் சமூகப் பிரச்சினைகளை அலசி வருகிறார். பயனுள்ள பதிவுகள். கட்டாயம் படிக்கவேண்டியவை.

6. திரு வே.நடனசபாபதி அவர்கள்


          எனது புகைப்படம்

நினைத்துப்பார்க்கிறேன்
என்ற பிளாக்கை நடத்திக்கொண்டு வருகிறார். 

லிங்க்: http://puthur-vns.blogspot.com/

விவசாயப்படிப்பு படித்துவிட்டு பேங்கில் சேர்ந்து பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
தன்னுடைய தளத்தில் பேங்கிங்க் சம்பந்தப்பட்ட அனுபவங்களை பகிர்கிறார். 

இவருக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட சொந்தம் இருக்கிறது. இவருடைய மூத்த சகோதரரும் நானும் ஒன்றாகப் பணி புரிந்தவர்கள்.

அவர் ஒரு ஸ்லைடு புரொஜக்டர் வைத்திருந்தார். அதில் ஒரு ரிப்பேர். நான் அதை சரி செய்து கொடுத்தேன். அது இப்போது அவர்கள் குடும்பத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. (நான்
ஒரு சகல கலா வல்லவன் என்பதை எப்படி நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறேன், பாருங்கள்) 

7. திரு தமிழ் இளங்கோ அவர்கள்

          My Photo

"எனது எண்ணங்கள்" என்ற தளத்தில் தனது கருத்துகளைப் பதிகிறார்.

லிங்க்: http://tthamizhelango.blogspot.com/

இவரது பதிவுகள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை. இவரது பதிவுகளில் வரும் போட்டோக்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

8. திரு வெங்கட்நாகராஜ் அவர்கள்


பதிவுலகத்தின் இளம் தாரகை இவர் என்று சொன்னால் மிகையாகாது. தன் பெயரையே தன் தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர் எழுதாத சப்ஜெக்ட்டே இல்லை. டில்லியில் மத்திய அரசு உத்தியோகத்தில் இருக்கிறார்.


லிங்க்:http://venkatnagaraj.blogspot.com/

இவர்தான் நான் முதல்முதலில் நேரில் சந்தித்த பதிவர். நான் என் குடும்பத்துடன் “சார்தாம்” யாத்திரை போவதை என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்து இவர் என்னுடன் தொடர்பு கொண்டு என் பயண நேரங்களைத் தெரிந்து கொண்டு பழைய டில்லி ரயில் நிலையத்தில் சந்தித்தார். அதன் பிறகு பல முறை சந்தித்திருக்கிறோம்.

இவருடைய துணைவியார் பிறந்து வளர்ந்த ஊர் கோவை என்பதால் கொஞ்சம் ஒட்டுதல் அதிகம். தன் துணைவியார் பெயரிலும் தன் மகள் பெயரிலும் பதிவுகள் ஆரம்பித்து அவர்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கு எனது பாராட்டுகள்.

9. திரு என். கணேசன் அவர்கள்

                                      My Photo
தளத்தின் பெயர்: என்.கணேசன்
லிங்க்: http://enganeshan.blogspot.in/
தன்னுடைய பெயரையே தன் தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர் ஒரு பேங்க் ஆபீசர். பேங்க்குக்காரர்களுக்கு கணக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு இவரைப் பற்றித் தெரிந்தால் ஆச்சரியப்படுவார்கள்.

நல்ல கதாசிரியர். தன் பதிவுகளில் தொடர் பதிவுகளாக பல க்ரைம் நாவல்களை எழுதி வருகிறார். அவை பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதை விறுவிறுப்புக்கு இணையானவை.

சமீபத்தில் அத்தகைய தொடர் ஒன்றை நிறைவு செய்து அதை புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார். பரம(ன்) ரகசியம் என்று அதற்குப் பெயர். அந்த தொடர் பிளாக்கில் வெளிவரும்போது (வியாழன் மாலை 6 மணிக்கு வெளி வரும்) காத்திருந்து அதைப் படித்தேன். மேலும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்

ஆன்மிகத்திலும் மிகுந்த நாட்டம் உள்ளவர். சித்தர்களைப் பற்றி இவர் எழுதும் தொடர் தினத்தந்தி வார இதழில் தொடர்ந்து வெளியாகிறது.


இவர் தற்போது கோவையில் வசிக்கிறார் என்பது எனக்குப் பெருமை.

10. திரு பகவான்ஜி அவர்கள்



அவர்களின் தளம்.

ஜோக்காளி

லிங்க்:  http://www.jokkaali.in/

தமிழர்களின் நகைச்சுவை உணர்வுகளுக்கு தீனி போடுவதென்பது எளிமையான காரியம் அன்று. அதில் திரு பகவான்ஜி வெற்றி பெற்றுள்ளார் என்பதை அவர் தளத்தின் தமிழ்மணம் ரேங்க் காட்டுகிறது.
எனக்கு இவர் அறிமுகமில்லாவிடினும் இவர் பதிவுகளின் ரசிகர்களில் நானும் ஒருவன். ஆபாசமில்லாமல் நகைச்சுவையைத் தருவது கடினமான செயல். அதை இவர் அனாயாசமாக செய்து கொண்டு வருகிறார். பாராட்டுகள்.

தமிழ்மணம் தர வரிசையில் நெம்பர் ஒன் ஆகத் திகழ்பவர்.

11. திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்

தமிழ்வாசி பிரகாஷ்

வலைச்சர ஆசிரியர் குழுவில் சேவை செய்யும் இவர் அமைதியாகப் பதிவிட்டுக் கொண்டு இருக்கிறார். கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் வல்லுநர். வலைச்சரத்தில் இவர் பங்கு பாராட்டிற்குரியது.

இவரின் தளம்

! தமிழ்வாசி !

லிங்க்: http://www.tamilvaasi.com/


இவரை எனக்கு இப்போதுதான் அறிமுகம். 
மேலும் வாசிக்க...

சீனியர் பதிவர்கள்

வலைச்சரம் முதல் நாள்  1-12-2014 திங்கட்கிழமை


நேயர்களுக்கு அன்பான வணக்கம். 

இந்தப் பதிவு நேற்றே வெளிவந்திருக்கவேண்டியது. காலத்தின் அருமையைப்  போற்றுபவர்களும் செயல்களை தள்ளிப்போடக்கூடாதென்று சொல்பவர்களும் அடிக்கடி சொல்லும் வசனம் "இன்று செய்ய வேண்டிய வேலையை நாளைக்கென்று தள்ளிப்போடாதே" என்பதாகும். ஆனால் நம் வழிதான் தனி வழியாயிற்றே. அதனால் என் கொள்கை என்னவென்றால் நேற்றைய வேலையை இன்று செய்தால் போதும் என்பதாகும். இதில் என்ன சௌகரியம் என்றால் அநேக சந்தர்ப்பங்களில் அடுத்த நாள் அந்த வேலையைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். எப்படி என் லாஜிக்.

ஆனால் இந்த வலைச்சர ஆசிரியர் வேலை அப்படி மறைந்து போவதாகக் காணோம். அது என் காலைச் சுற்றியே நிற்கிறது. வேறு வழியில்லை. ஆகவே நேற்றைய பதிவை இன்று போடுகிறேன்.

இந்தப் பதிவில் பல சீனியர் பதிவர்களை அறிமுகப்படுத்தப் போகிறேன். இனம் இனத்தோடு கலக்கிறது. அதில் என் இனத்தைச் சேந்தவர்கள் சிலரை முதலில் அறிமுகப் படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

1.கடுகு அகஸ்தியன் அவர்கள்.

இவருடைய பிளாக்க்கின் முகப்பு


பிளாக்கின் பெயர் “கடுகு தாளிப்பு” லிங்க்: http://kadugu-agasthian.blogspot.in/+
இவருடைய பிளாக்க்கின் முகப்பு
இவர் தனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் படம்.


இவரைப் பற்றி கூறவேண்டுமானால் ஒரு பதிவு போறாது. இன்றைய பதிவர்களில் இவர்தான் மூத்தவர் என்று நம்புகிறேன். இவரது வயது என்னவென்று சரியாகத் தெரியவில்லை.

இவர் மிக இளம் வயதிலேயே சென்னையில் தபால் இலாக்காவில் சேர்ந்து பிறகு டில்லிக்குப் போய் பணி ஓய்வு பெறும் வரையில் அங்கே இருந்து விட்டுப் பிறகு சென்னையில் இருக்கிறார்.
நான் 8 வயது முதல் வாரப் பத்திரிக்கைகளான ஆனந்தவிகடன் கல்கி ஆகியவைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதைய வாரப் பத்திரிக்கைகளில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரைகள், செய்தித் துணுக்குகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவை வெளியாகும். சினிமா செய்திகள் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் இருக்கும்.
அப்போது இருந்த கதாசிரியர்களில் கடுகு அவர்கள் நகைச்சவையாக எழுதுவதில் தலை சிறந்தவராக இருந்தார். நான் இவர் கதைகளை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். புத்தக்ப பிரியர். இவரைப்பற்றிய பல தகவல்களை இவரே தன்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறார். இவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
பழைய நினைவுகளை தற்போது தன்னுடைய பதிவில் பகிர்ந்து கொண்டு வருகிறார். பழமை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் தளம்.

2.புலவர் ராமானுஜம் அவர்கள்.


இவருடைய பிளாக்கின் பெயர்:
பிளாக்கின் லிங்க்: http://www.pulavarkural.info/2014/10/blog-post_24.html

இவர் தமிழாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஆசிரியராக பணி புரிந்த காலத்தில் தமிழாசிரியர்களுக்காக தனி சங்கம் அமைத்து அவர்களுக்காக பல சலுகைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். மற்ற பாட ஆசிரியர்களுக்குச் சமமான நிலையை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார்.

முதல் இரண்டு பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு சென்னையில் வெற்றிகரமாக நடத்தியவர். மதுரை மூன்றாம் சந்திப்பிற்கு உடல் நிலை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை.

இந்த வயதிலும் ஐரோப்பா மற்றும் கிழக்கு நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுலா போய் வந்திருக்கிறார். பெரும்பாலும் கருத்தாழம் மிக்க கவிதைப் பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறார். இவர்தான் பதிவுலகில் எனக்குத் தெரிந்து இரண்டாவது சீனியர் பதிவர்

3.திரு. தருமி அவர்கள்.

லிங்க்: http://dharumi.blogspot.in/

தருமி

கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!


                       
கம்பீரமாகக் காட்சியளிக்கும் இவர் மதுரைக்காரர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். போட்டோ எடுப்பதில் ஆர்வம் மிக்கவர்.

கருத்தாழமும் சிந்தனைத் துணிவும் கொண்டவர். பதிவுலகத் தவறுகளை தைரியமாகச் சாடுபவர். எனக்கு ஒரு இனிய நண்பர்.

இவரின் பதிவுகள் மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் வாழ்க்கைக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். புதிய பதிவர்கள் இவருடைய பதிவுகளைக் கட்டாயம் படிக்கவேண்டும்.

4.திரு.ஜி.எம்.பாலசுப்பிரமணியன் அவர்கள்.


அவருடைய பிளாக்கின் பெயர் :

gmb writes

பிளாக்கின் லிங்க்: http://gmbat1649.blogspot.in/

இவர் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள பதிவர் இவரது பதிவுகள் உங்கள் சிந்தனையைத் தூண்டும்.

இவர் மத்திய அரசின் பல நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் பெங்களூருவில் வசிக்கிறார். அவர் வீட்டிற்கு நான் ஒரு முறை சென்றிருக்கிறேன். தம்பதிகள் இருவரும் விருந்தோம்பலில் இணையற்றவர்கள். பாசத்துடன் பழகக் கூடியவர்கள்.
இவருடைய பதிவுகள் அனைத்துத் தரப்பினரும் வாசிக்கவேண்டியவை.

5.திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


பதிவின் தலைப்பு : VAI. GOPALAKRISHNAN

லிஙுக்: http://gopu1949.blogspot.in/

இவர் பதிவையும் இவர் நடத்திய சிறுகதை விமரிசனப்போட்டியைப் பற்றியும் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவருடைய சிறுகதைகள் கலை நயம் மிக்கவை. வாழ்க்கையின் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுபவை. இவரின் கதை எழுதும் திறன் அபூர்வமானது.

பழகுவதற்கு அன்பான மனிதர். gனக்கு இனிய நண்பர். இவர் பதிவுலகில் ஒரு மைல் கல்லாக விளங்குகிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவரின் உழைப்பைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

பதிவுலகில் யாரும் செய்யாத ஒரு போட்டியை உருவாக்கி, தன் சொந்தப் பணத்தை கணிசமாகச் செலவழித்து, பல பரிசுகள் பல பதிவர்களுக்கு கொடுத்திருப்பது ஒரு இமாலய சாதனை என்றுதான் சொல்லவேண்டும். சிறுகதைகளை யாரும் ஆழ்ந்து படிப்பதில்லை என்பது ஒரு உலகியல் உண்மை. ஆனால் சிறுகதைகளை ஆழ்ந்து படிக்கவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்த விமரிசனப் போட்டியை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கறார்.

இப்படி ஒரு போட்டி நடத்தும் அளவிற்கு இவர் அவ்வளவு சிறுகதைகள் எழுதியிருப்பது ஒரு வியப்பு. அந்தக் கதைகளுக்கு விமர்சனம் எழுத ஒரு போட்டி வைக்கலாம் என்பது இவர் மனதில் உதித்த ஒரு அபூர்வ எண்ணம். இதை ஒரு ஒழுங்கு முறையாக நடத்தி, அதை பரிசீலனை செய்ய ஒருவரைக் கண்டுபிடித்து அந்த விமரிசனங்களில் பல பரிசுக்குரியவைகளைத் தேர்ந்தெடுத்து, பரிசுகளை திட்டமிட்டபடி விநியோகித்த திறமை அவருடைய மேலாண்மைத் திறனுக்கு ஒரு சாட்சி.

இவரை அறிமுகப்படுத்திப் பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன்.

6.திரு.சுப்புத் தாத்தா அவர்கள்


இவரின் தளம்: இவரின் பெயரேதான்
தன்னை தாத்தா என்று அழைத்துக் கொள்ளும் தைரியமும் மனநிலையும் எல்லோருக்கும் சீக்கிரம் வந்து விடாது. அதற்கு ஒரு மனமுதிர்ச்சி தேவை. இவருக்கு அது இருக்கிறது. போன சென்னை பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்தேன்.
இவருடைய பதிவுகள் புது மாதிரியானவை. என்னை மாதிரி பெரிசுகளுக்கு மிகவும் பிடித்தமானவை. பழங்காலத்து சினிமா பாடல்கள், அந்தக் காலத்து செய்திகள் ஆகியவை இவருடைய பதிவுகளில் காணலாம்.

7.திரு சீனா ஐயா அவர்கள்


இவரைப்பற்றி முன்பே கூறியிருந்தாலும் இவரும் ஒரு சீனியர் பதிவர் ஆதலால் இங்கும் குறிப்பிடுகிறேன். அமைதியும் ஆழமும் கொண்டவர். இவரைப்பற்றி அறியாத பதிவர் எவருமிலர். ஆகவே அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

8.அமரரான இரு பதிவர்கள்

பல பிரபல பதிவர்கள் அமரராகி விட்டார்கள். அவர்களை எனக்குப் பரிச்சயமான இருவர் பற்றி இங்கு நினைவு கூர்கிறேன்.

      i) டோண்டு ராகவன்.

நான் பதிவுலகத்திற்குள் பிரவேசித்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இவர். வேறு யாரோ ஒருவர் இவர் பெயரை உபயோகித்து இவர் பதிவில் சில விஷமங்கள் செய்து வந்தார். அந்த நபர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு இந்த சில்மிஷம் செய்து வந்தார். டோண்டு ராகவன் பல முயற்சிகள் செய்து அவரை கண்ணி வைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

இவர் ஒரு மொழி பெயர்ப்பாளர். அதை முழுநேரத் தொழிலாகச் செய்து வந்தார்.

இவருடைய பதிவுகளில் நாட்டு நடப்புகளை கடுமையாக சாடுவார்.இவர் மறைவு பதிவுலகத்திற்கு பேரிழப்பாகும்.

      ii) பட்டாபட்டி வெங்கிடபதி

இவர் கோவைக்காரர். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். பட்டாபட்டி என்ற பெயரில் பதிவு இட்டு வந்தார். பழகுவதற்கு இனிமையானவர். மலேசியா போயிருந்தபோது மாரடைப்பால் மறைந்தார்.

இந்த இரண்டு பேருக்கும் என் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்த பதிவில் சில பிரபல பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்..



மேலும் வாசிக்க...

Monday, December 1, 2014

வலைச்சரத்திற்கு ஒரு திருஷ்டி கழிப்பு


வலைச்சரப் பதிவுகள் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. திரு.சீனா ஐயா அவர்கள் இதை கனகச்சிதமாக உருவாக்கி எங்கும் தடையில்லாமல் ஆற்றின் நீரோட்டம் போல் ஓடுமாறு செய்திருக்கிறார்.

இப்படியே போய்க்கொண்டு இருந்தால் திருஷ்டி விழுந்து விடும் இல்லையா? அந்த திருஷ்டி விழாமலிருக்க என் ஆசிரியப் பொறுப்பு உதவியதில் எனக்கு மகிழ்ச்சி.

இன்று என்னுடைய அறிமுகப்பதிவு காலையிலேயே வந்திருக்கவேண்டும். அடுத்ததாக சில மணி நேரம் கழித்து என் முதல் பதிவு வந்திருக்கவேண்டும். இதுதான் வலைச்சரத்தின் வழிமுறை. ஆனால் நாம்தான் எப்போதும் எல்லோரும் போகும் வழியை விட்டு விலகி, தனி வழியில் போவதுதானே வழக்கம். ரஜனிகாந்த் ஏதோ ஒரு படத்தில் "என் வழியே தனி வழி" என்று சொல்வதாக ஒரு வசனம் வரும். நானும் அந்த வர்க்கம்தான்.

வலைச்சர ஆசிரியராக நியமித்தவருக்கு வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை இரவுக்குள் வலைச்சர ஆசிரியர் குழுவிடமிருந்து ஒரு அழைப்பு மின்னஞ்சலில் வரும். அதில் Accept Invitation என்று ஒரு சிவப்பு பின்னணியில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் இன்னொரு பக்கம் திறக்கும். அதிலும் இதே மாதிரி ஒரு பட்டன் இருக்கும். அதையும் அழுத்தினால் உடனே உங்கள் பிளாக் டேஷ்போர்டில் வலைச்சரப் பதிவு தெரியும்.

நாம் வழக்கமாக பதிவு போடுவது போலவேதான் வலைச்சர பதிவுகளையும் போட ஆரம்பித்து விடலாம். சிறு பிள்ளை விளையாட்டு போலத்தான். இந்த முன் வேலைகள் இரண்டு நிமிடத்தில் முடிந்து விடும்.

ஆனால் உங்களுடைய நல்ல காலத்தினால் எனக்கு வந்த மின்அஞ்சலில் இந்த பட்டன் வேலை செய்ய மறுத்து விட்டது. யாரோ சூனியம் வைத்து விட்டார்கள். என் சந்தேகம் எல்லாம் போனவாரம் ஆசிரியர் பொறுப்பில் இருந்த திருமதி மஞ்சுபாஷிணி பேரில்தான். தனக்குப் பிறகு ஒரு பிரபல பதிவர் (நான்தான்)ஆசிரியராகப் பொறுப்பேற்று தான் பெற்ற புகழைத் தட்டிக்கொண்டு போகப் பார்க்கிறாரே என்ற நல்ல எண்ணம்தான் அவரை இப்படிச் செய்ய தூண்டியிருக்கும் என்று நம்புகிறேன்.

நான் திங்கட்கிழமை முழுவதும் சந்தோஷமாக இருந்தேன். ஆஹா, நம்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து கழட்டி விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இனி ஜாலிதான் என்று இருந்தேன். அந்த எண்ணத்திற்கு "தமிழ்வாசி பிரகாஷ்" அவர்கள் ஆப்பு வைத்து விட்டார்கள். திங்கட்கிழமை மாலை என்னுடன் தொலை, இல்லை இல்லை தொல்லை பேசியில்  பேசியவர் இதோ மறுபடியும் அழைப்பு அனுப்புகிறேன் என்று சொல்லி இரண்டு நிமிடத்தில் மறு அழைப்பு அனுப்பிவிட்டார்.

அதில் உள்ள பட்டனைத்  தொட்ட உடனே வேலை செய்தது. அடுத்த நிமிடம் என்னுடைய டேஷ்போர்டில் வலைச்சரம் தெரிய ஆரம்பித்தது. இது உங்களுடைய துரதிர்ஷ்டமே. ஒரு வாரம் என்னுடைய அறிமுகப் பதிவுகளைப் படிக்கவேண்டும் என்று உங்கள் தலையில் எழுதியிருந்தால் அது விட்டுப் போகுமா?

ஆகவே இப்படி ஒரு திருஷ்டி பரிகாரம் நடந்து, இந்த வார வலைச்சர பதிவுகள் லேட்டாக வருவதற்கு காரணமாகி விட்டது. என் அறிமுகப் பதிவை திங்கள் மாலை போட்டு விட்டேன். திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும். எப்படியும் ஏழு நாட்களுக்குப் போடவேண்டிய ஏழு பதிவுகளையும் உங்கள் தலையில் கட்டியே தீருவேன்.

அன்பர்கள் பொறுமை காக்கவேண்டும்.
மேலும் வாசிக்க...

என்னைப் பற்றி...


ஒரு சினிமாவில் வடிவேலு “நானும் ரவுடிதான்” என்று சொல்லிக்கொண்டு போலீஸ் ஜீப்பில் போய் தானாக ஏறிக்கொள்வார். உலகத்தில் ரவுடி என்ற அங்கீகாரம் இருப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.அது போல தமிழ் பதிவுலகத்தில் “நானும் பதிவர்தான்” என்று சொல்லிக்கொள்ள ஒரு அளவுகோல் உண்டு. அவர் “வலைச்சரத்தில்” ஒரு முறையாவது ஆசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். வலைச்சரம் அவ்வளவு பிரபலமான பெயர் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை எனக்களித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர பொறுப்புக் குழுவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்பே எனக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அனைத்து நண்பர்களுக்கும், சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.சீனா ஐயா பதிவுலகத்திற்கு ஒரு பெரும் தொண்டு ஆற்றி வருவது அனைவரும் அறிந்ததே. வலைச்சரத்தைப் பற்றி கேள்விப்பட்டிராத தமிழ் பதிவர்கள் யாரும் இருக்க முடியாது. அதை ஆரம்பித்தது பலரின் கை வண்ணமாக இருந்தாலும் அதை 2007 லிருந்து பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தி வருவது திரு. சீனா ஐயா அவர்களே. அவர்களின் துணைவியாரும் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள்.
              

(திருப்பூர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தக வெளியீட்டு விழாவில் 27-1-2013 ல் எடுத்தது.)

பல நாட்களுக்கு முன்பே இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள திரு. சீனா ஐயா எனக்கு அழைப்பு விடுத்தார். அப்போது எனக்கு கொஞ்சம் வசதிப்படாததால் மறுக்க வேண்டியதாய் விட்டது. இப்போது மறுபடியும் அன்புடன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதையும் மறுத்தால் நான் பதிவராக இருக்க அருகதையற்றவனாவேன். ஆகையால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டேன். இந்தப் பொறுப்பு டிசம்பர் 1 ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு, அதாவது ஏழு நாட்கள்.

என்னைப் பற்றிய ஒரு அறிமுகப் பதிவு போடவேண்டுமென்பது ஒரு மரபு. அதனால்தான் இந்தப் பதிவு. நான் 2009 ல் பதிவுகள் பதிய ஆரம்பித்தேன். என் நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் பதிவுகள் போட்டுக்கொண்டு இருந்தார். அதைப் பார்த்த நானும் பதிவுகள் போட ஆரம்பித்தேன். முதலில் ஆங்கிலத்தில்தான் ஒரு சில பதிவுகள் போட்டேன். பிறகுதான் தமிழ் பதிவுகளைப் பார்த்து நானும் தமிழ் பதிவுகள் போட ஆரம்பித்தேன். இது வரை ஏறக்குறைய 700 பதிவுகள் போட்டிருக்கிறேன்.

என்னுடைய தளத்தின் பெயர் “ மன அலைகள்”. முதலில் “சாமியின் மன அலைகள்” என்று பெயர் வைத்திருந்தேன். என் பெயரிலேயே சாமி இருக்கிறதே, பிறகு தளத்தின் பெயரிலும் “சாமி” எதற்கு என்று சாமியை நீக்கி விட்டேன். என் பெயரையும் மாற்றி “பழனி.கந்தசாமி” என்று வைத்துக்கொண்டேன். பழனி என்பது என் தந்தை பெயரான பழனிச்சாமி என்பதின் சுருக்கம். மற்றபடி பழனிக்கும் எனக்கும் தொடர்பில்லை.

நான் கொஞ்சம் அதிக சுயமரியாதை அதாவது தலைக்கனம் கொண்டவன். யாரிடமும் எந்த தயவிற்கும் போக மாட்டேன். இந்த பதிவு போட ஆரம்பித்ததும் யாரையும் உதவி கேட்கப்போகவில்லை. நானே தூக்கம் விழித்துக் கற்றுக்கொண்டேன். அடுத்ததாக மிகுந்த சோம்பேறி. ஆமையும் முயலும் கதை கேட்டிருப்பீர்கள். அதில் வரும் முயல் போல திடீரென்று வேகம் கொள்வேன். பிறகு படுத்துக் கொள்வேன்.

என்னுடைய இந்த கல்யாண குணத்தினால் இந்த ஆசிரியப் பொறுப்பு வகிக்கும்போது பல குற்றங்கள் புரியும் வாய்ப்புகள் உண்டு. அதில் முக்கியமாக பல நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்தாமல் போவது. என் வயதைக் கருத்தில் கொண்டு என் குற்றங்களைப் பொறுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அப்படிப் பட்ட பொறுமை இல்லாதவர்கள் எனக்கு “சீக்கிரமே மோக்ஷப் பிராப்திரஸ்து” என்று சாபம் கொடுத்தால் ஜன்ம சாபல்யம் அடைந்து என்றென்றும் (அதாவது மறுபிறவிகளிலும்) நன்றியுடையவனாக இருப்பேன்.

ஆனாலும் இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை தூங்காமல்@ நிறைவேற்றி விடலாம் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். உங்கள் ஆதரவுடன் இந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.

@ தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
   தூங்காது செய்யும் வினை - குறள்


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது