07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 25, 2014

உன் சமையல் அறையில்...


நேற்றைய பகிர்வான 'கதை சொல்லப் போறேன்' குறித்து தங்களது கருத்துக்களைச் சொன்ன உறவுகளுக்கு நன்றி.

----------------------------------------

சமையல் செய்வது என்பது ஒரு கலை. அந்தக் கலை எல்லாருக்கும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. ஆண்களை விடுங்கள்... பெண்களில் கூட எல்லாரும் நல்லாச் சமைப்பதில்லை. மீன் குழம்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்றாலும் ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தால் நான்கு பேரின் கைவண்ணமும் ஒன்றாக இருப்பதில்லை. சமையலில் கைப்பக்குவம் மிகவும் முக்கியம். எங்க ஐயா (அப்பாவின் அப்பா) ஒரு சமையல் மேஸ்திரி. மிகச் சிறந்த சமையல்காரர். இவரின் கைப்பக்குவத்துக்கே தனி மரியாதை இருந்தது. எங்கப்பாவுக்கும் சித்தப்பாவும் சமையல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம்.

எங்க வீட்டில் அக்காக்கள் சமையல் அப்போது அருமையாக இருக்கும். இப்போது பிள்ளைகளுக்காக காரம் குறைத்து உணவில் சுவை குறைத்து விட்டார்கள். எங்கள் நால்வரில் தம்பி தவிர மற்ற மூவரும் நன்றாகச் சமைப்போம். சும்மாவே செட்டிநாட்டுக்காரர்கள் என்றால் சாப்பாட்டுப் பிரியர்கள் என்பார்கள். விதவிதமாக சமைப்பதில் எங்க ஆளுங்க கில்லாடிங்க. விருந்து உபச்சாரத்திலும் குறை வைக்க மாட்டார்கள். இப்போ இங்கு கூட நான் சமைக்கப் போனால் பக்கத்து அறை நண்பர்கள் செட்டிநாட்டு வாசனை மூக்கைத் துளைக்குது என்று சொல்லியபடி இன்று என்ன சமையல் என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

சாப்பாட்டு விஷயத்துல கடவுள் நமக்கு குறையே வச்சதில்லை. திருமணத்துக்கு முன்பு வரை அம்மாவுடன் அதிகம் இருந்தது நான்தான். அம்மாவின் கைப்பக்குவம் சான்ஸே இல்லை. என்ன செய்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது வாரச்சந்தைக்குப் போவது நான்தான். எனவே இப்போது ஊருக்குப் போனாலும் காய்கறியாக இருந்தாலும் மீனாக இருந்தாலும் தம்பிய போய் வாங்கிட்டு வரச்சொல்லுங்க நல்லா பாத்து வாங்கிக்கிட்டு வருவான்னு சொல்லுவாங்க. திருமணத்துக்குப் பின் மனைவியின் சமையல்.... அம்மாவின் சமையல் செட்டிநாட்டுச் சுவை என்றால் மனைவியின் கைப்பக்குவமோ மதுரைச்சுவையுடன் செட்டிநாட்டுப் பாணி... ஆஹா... என்ன செய்தாலும் சூப்பரா இருக்கும். இப்போ விஷாலின் ஆசிரியைக்குப் பிடித்துப் போய் தினமும் விஷாலின் சாப்பாட்டில் ஒரு வாயாவது அவன் கையால் வாங்கி சாப்பிட்டு விடுவாராம். அந்தளவுக்கு ருசி.... மதுரை அம்சவல்லிபவான் கைவண்ணமாச்சே... சும்மாவா.

இன்றைக்கு வலையில் சாப்பாடு குறித்துப் பகிரும் ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. எத்தனை விதமான சமையல்களை எத்தனை கோணங்களில் சொல்கிறார்கள் என்பதை சில தளங்களை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட சில தளங்களைப் பற்றியும் அவற்றில் பகிரப்பட்ட சமையல் குறிப்புக்களைப் பற்றியும் இன்றைய பகிர்வில் பார்க்கலாம்.

முதலில் எப்பவும் போல் நட்புக்கு மரியாதை...

அமீரகத்தில் இருந்து சமைத்து அசத்தலாம் என்ற வலைப்பூவில் சமையல் குறிப்புக்களை பகிர்ந்து வரும் ஆசியா அக்கா அவர்கள், அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிடுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் கூட நெத்திலி மீனின் முள்ளை எப்படி நீக்குவது என்பதை அழகான வீடியோ பகிர்வாகத் தந்திருந்தார். இவர் ஒவ்வொரு குறிப்பையும் செய்து பார்த்து அதை படிப்படியாக போட்டோ எடுத்து ஆர்வமுடன் அருமையாகப் பகிர்ந்து வைப்பார். இவர் மனோ அம்மாவின் பகிர்வில் பார்த்து இவர் வைத்த மீன் குழம்பு குறித்த பகிர்வில்...
புளியை 2 கப்  கொதி நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி ரெடியாக வைக்கவும்.மீன் குழம்பு வைக்கும் பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும்.எண்ணெய் சூடானவுடன் வெந்தயம் போடவும்,பொன்னிறமாக சிவந்து வரும் பொழுது வெங்காயம்,கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.


பிரான்சில் இருந்து Sashiga Kitchen என்ற வலைப்பூவில் சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வரும் சகோதரி மேனகா சத்யா அவர்கள், விதவிதமான சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வருகிறார். இவரது வலைப்பூவில் எண்ணற்ற சமையல் குறிப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. இவரின் சோயா உருண்டைப் பிரியாணி எப்படிப் செய்யலாம் என்பது குறித்த பகிர்வில்...
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து குளிர்ந்த நீரில் 2-3 தடவை கழுவவும்.உருண்டைகள் பெரிதாக இருந்தால் 2-ஆக நறுக்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


தெரிந்து கொண்ட விஷயங்களுக்காக சமையல் எக்ஸ்பிரஸ் என்னும் வலைப்பூவில் சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வரும் ஆமினா அக்கா அவர்கள், பெருசா சொல்ற அளவுக்கு எந்த விஷயமும் இல்லைங்க.... எல்லாமே அரைகுறை தான். பதிவு பார்த்தா உங்களுக்கே தெரியும் என்று சொல்லி மிகச் சிறப்பான சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வருகிறார். இவர் நூனே ஓங்காய் அதாவது ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய் எப்படிச் செய்யலாம் என்பது குறித்த பகிர்வில்...
கடாயில் எண்ணெய்விடாமல் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.நிலக்கடலையை தனியாக வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.


இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும் என்று சொல்லி சமையல் அட்டகாசங்கள் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் ஜலீலா அக்கா அவர்கள், ஏகப்பட்ட சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வைத்திருக்கிறார். இவரது ஹெல்தி காய்கறி குருமா / வெஜ் குருமா / காய்கறி சால்னா / பரோட்டா சால்னா என்னும் பகிர்வில்...
காய் கறி வகைகளை பொடியாக அரிந்து அத்துடன் ,புரோக்கோலி,காலிப்ளவர், கார்ன் சேர்த்து நன்கு அலசி , இரண்டு முன்று தண்ணீரில் அலசி வடித்து வைக்கவும். ( முடிந்தால் லேசான வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு அலசவும்)அடுப்பில் சட்டியை ஏற்றி காயவிட்டு, தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கருகாமல் தாளித்து காய்கறிகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.


புதுகைத் தென்றல் என்ற வலைப்பூவில் எழுதும் சகோதரி (புதுக்கோட்டை) தென்றல் , வீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி?  என்றும் நீங்கள் படித்துக்கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ என்றும் சொல்லியபடி சிறப்பான சமையல் குறிப்புக்களைத் தருகிறார்.  இவரின் தற்போதைய வாசமோ ஆந்திராப்பக்கம். சிவகங்கைப் பக்கம் அடுப்படியில் போடுவதற்காக கருப்புக்கலரில் ஒரு கல் வாங்குவார்கள். அது இப்போது மார்பிள்ஸ், டைல்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. முன்னர் ஆத்தங்குடி பக்கமிருந்து வாங்கி வருவார்கள். அதை கடப்பா கல்லுன்னு சொல்வார்கள். இவரு என்னடான்னா கடப்பான்னு ஒரு உணவு வகையைப் பற்றி பகிர்கிறார். எங்க ஊரு ”கடப்பா” என்கிற பகிர்வில்...
பரோட்டாவுக்கு குருமாவும் நல்லா இருக்குன்னாலும் கடப்பாவோட ருசியே ருசிதான். ஊருக்கு போகும்போதெல்லாம் பசங்க கண்டிப்பா ஒரு கை பாத்துடுவாங்க. எங்க ஊர்ல ராதாகபேன்னு ஒரு ஹோட்டல் இருக்கு, பிருந்தாவனம் ஸ்டாப் பக்கத்துல இருக்கு. அங்கே ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டும் இட்லியோட சட்னி, சாம்பார் ஏதும் கிடையாது. கடப்பா மட்டும்தான் தருவாங்க. இங்கயும் கூட்டம்னு சொல்லணுமா என்ன?


அம்முவின் சமையல் என்ற தளத்தில் எழுதும் சகோதரி அம்மு (பெயர் பதியப்படவில்லை) இது சைவ சமையல் குறிப்புகளுக்கான தளம் என்று சொல்வதுடன் சமையலில் அனுபவம் இரண்டு வருடங்கள் தான். பல விதமான சைவ உணவுகளை தெரிந்து கொண்டு செய்து பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் செய்து ருசித்தவற்றை உங்களுடன் பகிரவே இந்தத் தளம் என்று சொல்கிறார். இவர் சௌ சௌ கூட்டு எப்படி வைக்கலாம் என்று சொல்லும் பகிர்வில்...
சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.


சமையல் என்னும் கலை என்ற வலைப்பூவில் மூன்று பேர் சேர்ந்து சமையல் குறிப்புக்களைப் பகிர்கிறார்கள் என்று நினைக்கிறேன். இம்மூவரில் சகோதரி சித்ரா அவர்கள் நிறையக் குறிப்புக்களைப் பகிர்ந்திருக்கிறார். அனைத்தும் அருமையான குறிப்புக்கள். அதில் தக்காளி பொரிச்ச குழம்பு எப்படி வைப்பது என்ற பகிர்வில்...
தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


பெட்டகம் என்னும் வலைப்பூவில் எழுதும் சகோதரர் முகமத் அலி அவர்கள் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற சமூக சிந்தனை வரிகளுடன் சமையல் குறித்த சின்னச் சின்ன குறிப்புக்களை அருமையாக பகிர்ந்திருக்கிறார். இவரின் டிப்ஸ்... டிப்ஸ்... சமையல் குறிப்புகள் என்ற பகிர்வில்....
வெள்ளை மற்றும் மஞ்சள் பூசணிக்காய் துண்டுகளை ஒரு வாரம் வரை பாதுகாக்க வேண்டுமா? காய்களைத் தோல் நீக்கிவிட்டு, விதையுள்ள மென்மையான மேல் பாகத்தையும் களைந்து, சதை பாகத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் பூசணித் துண்டுகளை மூழ்கவிட்டு, பாத்திரத்தை மூடாமல், ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். பல நாட்கள் அப்படியே இருக்கும்.


ரசிக்க ருசிக்க என்னும் வலைப்பூவில் எழுதும் பிரியா ராம் அவர்கள், நாம் ரசிக்க மட்டும் அல்ல அந்தக் குறிப்புக்களைப் படித்து அதை செய்து ருசிக்கவும் அருமையான விளக்கங்களுடன் அழகான குறிப்புக்களைப் பகிர்கிறார். இவர் வைத்த பொடி போட்ட வத்தக்குழம்பு பற்றிய பகிர்வில்...
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு  போட்டு தக்காளி, கத்தரிக்காய் போட்டு வதக்கி, புளி தண்ணீர் கரைத்து விட்டு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக கொதிக்க விடனும். திக்காக வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி,
3  ஸ்பூன் வறுத்து பொடி பண்ண பவுடர் போட்டு, 2  ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு கிளறினால், பொடி போட்ட வத்த குழம்பு ரெடி....


சமையல் களஞ்சியம் என்னும் தளத்தில் எழுதிய சகோதரி சித்ரா அவர்கள், 2008-ல் தளம் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் மட்டுமே வலைப்பூவில் இருந்திருக்கிறார். இட்ட இடுகைகள் மொத்தம் 9. இவரும் சமையல் என்னும் கலையில் மூவரில் ஒருவராக எழுதும் சகோதரி சித்ராவும் ஒன்றுதானா என்பது தெரியவில்லை. இவரது லட்டு என்ற பகிர்வில்...
கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.


இங்கு நமக்கு சமையல் கலைகளை அள்ளித் தரும் அன்பு உள்ளங்களின் தளங்களில் இருந்து கொஞ்சமாக சுவைக்கக் கொடுத்துள்ளேன். இதை வாசிக்கும் அனைத்து உறவுகளும் அந்தந்த தளங்களுக்குச் சென்று விருந்து சாப்பிட்டு வாருங்கள். அதுக்கு முன்னால எப்பவும் போல இந்த பாட்டையும் மதுரை வலைப்பதிவர் மாநாட்டு நிகழ்ச்சிநிரலையும் பார்த்துட்டுப் போங்க...

உன் சமையல் அறையில்


மதுரை வலைப்பதிவர் மாநாடு-2014 நிகழ்ச்சி நிரல் உங்கள் பார்வைக்கு... நாளை மதுரை தெப்பக்குளத்தில் பதிவர் உற்சவம்...



நன்றி.

-'பரிவை' சே.குமார்.
மேலும் வாசிக்க...

Friday, October 24, 2014

கதை சொல்லப் போறேன்


வலைச்சர நான்காம் நாள் பகிர்வான 'கவிதை அரங்கேறும் நேரம்' குறித்து தங்கள் கருத்துக்களைச் சொன்ன உறவுகளுக்கு நன்றி.

*********

இன்றைய வலைச்சர பகிர்வாக சிறுகதை ஆசிரியர்கள் சிலரைப் பற்றிப் பார்க்கலாம். அதுக்கு முன்னால எப்பவும் போல கொஞ்சம் கதையளக்கலாம் வாங்க.

"முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவமே சிறுகதை என்று சொல்வார்கள். உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள். தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல்சிறுகதை என்பார்கள், ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும். தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும்." (நன்றி தமிழ் விக்கிப்பீடியா)

சிறுகதையில் சொல்ல வந்ததை சிறப்பாக சொல்லி முடித்தால் அந்தக் கதை வாசகனைக் கவரும் என எங்கள் ஐயா சொல்லுவார். அவரின் கதைகள் பெரும்பாலும் வாழ்வியலோடு பயணிக்கும். நான் கதை எழுத ஆரம்பித்தது ஒரு நாள் மாலை ஐயாவுடன் பேசியபடி நடந்து சென்றபோது அவர் நீங்களும் எழுதுங்க என்று சொன்ன பிறகுதான்... முதல் கதை காதல் கதை... அப்ப அப்புறம் என்ன கதை எழுத வரும். அதையும் படித்து... நல்லாயிருக்கு... இன்னும் நல்லா முயலுங்க... என்று சொன்னார். அதன் பின் எழுதிய கதைகளில் கொஞ்சம் மாற்றம் இருக்க... விட்டு விட்டுத் தொடர்ந்தாலும் தற்போதைய எழுத்தில் வாழ்வியலோடு பயணிக்க ஆரம்பித்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்... இருந்தும் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும்... நிறைய எழுத வேண்டும் என்பதே எனது எண்ணம். இப்போ சில வாரங்களாக தோன்றும் கருவெல்லாம் சோர்வில் கலைகிறது.

ஆமாங்க... அதேதான்... எப்பவும் போல முதலில் நட்பு வட்டத்தில் இருக்கும் கதையாசிரியர்கள் சிலரின் படைப்புக்கள் உங்களின் பார்வைக்காக.

மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான கனடாவில் வாசம் செயும் மதுரைக்காரர் ராகவன் அண்ணா அவர்கள் தனது பெயரிலேயே வலைப்பூ வைத்துள்ளார். இதில் எழுதும் கதைகள் எல்லாம் உயிர்ப்புடன் இருக்கும். அந்தக் கதைகளுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். இவற்றைப் படிக்கும் போது நாமும் எப்போது இவரைப் போல் கதை எழுதுவோம்ன்னு நினைத்துக் கொள்வேன். அவரது பரிவர்த்தனை என்ற சிறுகதையில்... 

“எலே கூரு கெட்ட மூதி, முன்னாடி வந்து நிக்க, சோலி பாத்துகிட்டிருக்குது தெரியல? தள்ளுலே வெளிச்சத்த மறிக்காமே! என்று கைக்குத் தோதாய் கிடந்த புருசுக் கட்டைய எடுத்து ஆடுசதையில் அடித்தான். அடி உரைப்பாய் விழ, காலை உதறியவன் இழுத்துக் கொண்டிருந்த கம்பியை மிதித்து விட்டான்.

*
வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்று சொல்லும் குடந்தை சரவணன் அண்ணன் குடந்தையூர் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் சிறப்பாக இருக்கும். ‘இளமை எழுதும் கவிதை’ என்ற நாவலை வெளியிட்டு நாவலாசிரியராய் இருக்கும் இவர், பதிவர் சந்திப்பில் 'சில நொடி சிநேகம்'  என்னும் குறும்படத்தை வெளியிட்டு இயக்குநராகிறார். அவரை வாழ்த்துவோம். இவரின் மருமகளான மாமியார் என்ற சிறுகதையில்... 

"என் கண்ணாடியை எடு " என்ற அடுத்த அதட்டலுக்கு செவி சாய்த்தவள் உடனே கொண்டு வந்து நீட்டினாள். பாத்ரூமிலிருந்து வெளி வந்த மாமனார் " குட் மார்னிங் மா "என்றவர் அவள் கொடுத்த காபி யை வாங்கி பருகி கொண்டே "உன் புருஷன் எழுந்துட்டானா "என்று கேட்டார்
*
எனக்கு ஆலோசனைகள் சொல்லும் அன்பு அக்கா காயத்ரி அவர்கள் "தூரிகைச் சிதறல்...." என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரின் கதைகள் மிக அருமையாக இருக்கும். பெரும்பாலும் இவர் பதிவிடும் முன்னரே வாசிக்கும் பாக்கியசாலி நான்... தம்பி இதைப்பாரேன் என்ற குறுஞ்செய்தி வந்துவிடும். நான் இரண்டாவது தொடர்கதை ஆரம்பிக்கும் போது நண்பன் தமிழுடன் தலைப்பு குறித்துப் பேசி அவன் சொன்ன தலைப்பு ஓகே ஆக,  அக்காவிடம் இதுதான்... இப்படித்தான் எழுதப் போறேன் என்றதும் 'ஏம்ப்பா எல்லோரும் மருமகளை கெட்டவள்ன்னு சொல்றீங்க... என்றார். பின்னர் இப்படி அக்கா என்று சொன்னதும் சரி எழுது என்றார். அப்புறம் அக்கா நமக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் 'பரிவை' பாரதிராஜா. (ஹி... ஹி.... ஒரு விளம்பரம்தான்). சரி... சரி... அக்காவின் கதைகள் எல்லாமே பிடிக்கும். அவரின் மௌனமாய்..!! சிறுகதையில்... 

எனக்கும் அந்த வீட்டில வேலை செய்யறோம்ன்ற நினப்பே இல்லாம  நம்ம வீடுமாதிரியே இருக்கும். அந்த உரிமையில சிலநேரம் எங்க போறீங்க எப்ப வருவீங்க.. நேரத்துக்கு வாங்கன்னு சொல்வேன். முன்னெல்லாம் அத சந்தோசமா ஏத்துக்கிட்ட அந்தம்மா, இப்ப கொஞ்ச நாளா அவங்க சுதந்திரத்துக்கு இடைஞ்சலா நினைச்சுட்டாங்க போல. இப்பல்லாம் அதிகம் அப்படி உரிமையா அன்பா பேசறது இல்ல. எதும் வேலைன்னா சொல்வாங்க..நானும் செஞ்சுட்டு வந்திடறேன்.  இருந்தாலும் என்ன அறியாமையே ஏதோ என் மனச சஞ்சலப்படுத்துது. எங்கனா கொஞ்ச நாள் அமைதியா போயிடமாட்டமானுகூட தோணுது.
*
விமலன் அண்ணா தனது சிட்டுக்குருவி என்னும் தளத்தில் வாழ்வில் எதிர்நோக்கும் எல்லா விஷயங்களையும் கவிதையாக... கதையாக... வடிக்கிறார். படிப்பவரை கட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரர். அப்படியே நம்மையும் கதையோட்டத்தோடு கொண்டு செல்வதில் கில்லாடி. இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு கதை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... ஐந்து என்ன ஐநூறு புத்தகம் போடலாம். இவரை வாழ்த்துவோம். இவரின் கொடக்கம்பி சிறுகதையில்... 

“அவ என்னடான்னா ஒத்தப்பொண்ண பெத்து வச்சிகிட்டு பொண்ணக்கட்டிக்கோ, கட்டிக்கோ ஒத்தக்கால்ல நிக்கிறா,அங்க போகுபோதெல்லாம் இது ஒரு பெரிய பஞ்சாயத் தா இருக்கு.இதுக்குதான் அக்கா இல்லாத வீடாப்பாத்து பொறக்கணும்ங்குறது, ஏங்மச்சான் என்னடான்னா நைட் 11மணிக்கு எழுப்பி கொத்துக்கறி வச்சிருக்கேன் சாப்புடுங்கன்றாரு,
 எதுக்கு மச்சான் இதெல்லாம் வேணாத வேலையா,கொத்துக்கறி சாப்பிடுற நேரமா இதெல்லாம் அப்படின்னா “ஏங் பொண்ணக்கட்டும் போது தெம்பா இருக்க வேணாமான்றாரு என்ன செய்ய சொல்லுங்க
*
பிரான்சில் வசிக்கும் அக்கா அருணா செல்வம் அவர்கள் அருணா செல்வம் -கதம்ப வலை- என்ற தளத்தில் எழுதுகிறார். நிமிடக்கதைகளை நிறைய எழுதுவார்... அத்தனையும் அருமையான கதைகள். சமீபத்தில் கூட ஒரு பதிவுத் திருடர் (வயசுக்கு மரியாதை) இவரின் படைப்புக்களைச் சுட்டு பகிர்ந்திருந்தார். அப்பன்னா இவரின் எழுத்தின் ஈர்ப்பு எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சிக்கங்க. இவரின் பொறுப்பு!! சிறுகதையில்...

“குமுதா.... நான் பத்து மணிக்கு வீட்டுக்கு வர்றேன். நீ கிளம்பி ரெடியா இரு“ என்றார் மாமா காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டுக்கொண்டே. “எங்க மாமா போறோம்....?“ குமுதா கேட்டாள். “ரிஜிஸ்டர் ஆபிசுக்குமா. இப்போ கடைக்குப் பக்கத்திலேயே ஒரு அப்பாட்மெண்ட் வாங்க இருக்கிறேன் இல்லையா... அதை உன் பேருக்குத் தான் ரிஜிஸ்டர் பண்ணப் போறேன். நீ கிளம்பி இரு. நான் வந்து அழைச்சிக்கினு போறேன்“ என்று சொல்லிபடி கையலம்பினார்.
 *
ஆரணியில் வசிக்கும் ஆசிரியை மற்றும் எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார் அவர்கள் தனது பெயரிலான வலைப்பூவில் நிறைய எழுதி வருகிறார். இவரின் சிறுகதைகள் அனைத்தும் அருமையாக இருக்கும். இவரின் யாரும் படிக்கக்கூடாத டைரி பக்கங்கள்... என்ற சிறுகதையில்... 

ஜனவரி 1
    ஒரே வீட்டில் முன்பு கணவன் மனைவியாக இருந்ததைவிட நல்ல நண்பர்களாக இருப்பது அவ்வளவு சிரமமாக இல்லை.  ஜஸ்ட் இன்ட்ரஸ்டிங். இரவு நேர சண்டைகளுக்கு விடிவு கிடைத்ததில் என்னைவிட அருணுக்குத்தான் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.  இரவு பத்துக்கெல்லாம் அவர் குறட்டை விடும் சத்தம் என் அறையை சுத்தி வட்டமிடுகிறது.  அஞ்சலியிடம் எங்கள் பிரிவை மறைப்பதில் தான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.  பத்து வயதில்லையா, துறுதுறுவென எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.
 *
இனி எனக்குப் புதியவர்களாகத் தெரியும் சில சிறந்த படைப்பாளிகளின் படைப்பைப் பார்ப்போம்.

இலங்கையைச் சேர்ந்த ஜே.கே (ஜெயக்குமாரன்) என்னும் நண்பர் படலை என்னும் வலைத்தளத்தில் எழுதுகிறார். இவரின் கதைகள் எல்லாம் இலங்கைத் தமிழ் பேசும். இவரின் கதைகள் சிலவற்றை முன்னர் வாசித்த ஞாபகம் இருக்கிறது. இந்த மண்ணெண்ணெய் கதையையும் வாசித்திருக்கிறேன். நல்ல நடை... வாசிப்பவரை ஈர்க்கும் எழுத்து. இவரின் மண்ணெண்ணெய் சிறுகதையில்...

ஒருநாள் மா இடிக்க வந்த மனிசியிடம் "கிழடு செத்து துலயுதில்ல" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அப்போது இவர் கக்கூஸ் உள்ளே இருந்தார். அது தெரிந்தே கேட்கட்டும் என்று சொல்லியிருக்கலாம். இவருக்கு அவமானமாக போய்விட்டு. சத்தம் போட்டு உள்ளே இருப்பதை காட்டாமல் இருந்தார். தண்ணி ஊத்தி கழுவினால் சத்தம் கேட்கும் என்று அவள் அப்பால் போகும்வரை பொறுத்திருந்தார். போன பின்னர் வெளியே வந்தபோது மா இடிக்கும் மனிசி இவரை இளக்காரமாக பார்த்தது. நமசிவாயம் எதையுமே மறக்கவில்லை.
 *
வலைப்பதிவர் மட்டுமின்றி ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ என்ற நூல்களின் ஆசிரியருமான தாட்சாயிணி அவர்கள் மார்கழி மாதத்துப் பனித்துளிகள் (தாட்சாயணியின் படைப்புக்கள்) என்னும் தளத்தில் எழுதுகிறார். இவர் எதுவுமில்லை சொல்வதற்கு... இந்த எழுத்துக்கள் தவிர்த்து..! என்று சொல்கிறார். இவரின் கதைகள் மிக நன்று. சாட்சிகள் எதுக்கடி? சிறுகதையில்... 

கத்த வேண்டும் போலிருந்தது.. இந்த மழையை நிறுத்தச்சொல்லி... அது முடியாது. அவ்வாறெனின் இந்தக் கட்டிலை மாற்ற வேண்டும். ஒழுக்குகள் இல்லாத இடம் பார்த்து அதுவும் முடியாது. வீடெங்கும் பரந்துபட்ட ஒழுக்குகள். அவர் எப்படித்தான் விலகிப் போக முயன்றாலும்... அவரது அமைதியை வேரறுத்து, உயிர் வளையை நெரிக்கப் போவதாய் அச்சுறுத்தி... அச்சுறுத்தி... மனதை இறுக்கிக் கொண்டிருக்கின்ற அந்த நரக வேதனை... அந்தச் சத்தம் தருகின்ற துன்பம்... "பட்... பட்.. " மீண்டும் மீண்டும்...
*
தமிழ் சிறுகதைகள் (Tamil Short Stories) என்னும் தளத்தில் எழுதிய சக்தி அவர்கள், நீண்ட நாட்களாக தளத்தை அடைத்து வைத்திருக்கிறார். ஆம் 2009-ல் ஆரம்பித்து 2010-ல் போதுமென நினைத்துவிட்டார் போலும். இவர் சிறுகதைகள் தவிர சிறுகதைகளின் வளர்ச்சி குறித்தும் பகிர்ந்திருக்கிறார். இவரின் குப்பனின் கனவு என்று சிறுகதையில்... 

குப்பன் வண்டியை இழுத்துக் கொண்டு போகிறான். முகத்தில் பன்னீர் தெளித்த மாதிரி ஓயாமல் தூறல் விழுந்து சொட்டிக் கொண்டிருக்கிறது. சில சமயம் மூக்கில் போகாமல் தும்மிக் கொள்கிறான்... வண்டியும் சடசடவென்று அவன் எண்ணத்திற்குத் தாளம் போடுகிறது.  'அந்த டிராமிலே ஏர்ன ஆசாமி மாதிரியிருந்தால்..." அவ்வளவுதான்...
* 
வாழ்வின் பிற்பகுதியை சுவராஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தரமுடியும். அவளை நானாக அடையாளப்படுத்திக் கொள்வதை தவிர? என்று கேட்கும் அமிர்தவர்ஷினி அம்மா மிகச் சிறந்த கதைகளுக்குச் சொந்தக்காரர். இவரின் சாமிவேலுவின் மகன் சிறுகதையில்... 

ஹூம் அம்மாவுக்கு அப்பாவ விட பை மேலதான் கவனம் என்றவாறே சின்ன மகள் பெரிய மகள் காது கடித்தாள். பஸ் பாதிக்கும் மேல் நிறைந்திருந்தது. மத்தநாட்களில் இப்படியிருக்காது, இப்போது தன் ஊரில் நடக்கும் நெருப்புத்திருவிழாவை முன்னிட்டே பஸ்ஸில் பாதி சீட்டு ஃபுல் ஆகியிருக்கு என்று நினைத்துக்கொண்டார். பஸ் புறப்பட எப்படியும் இன்னும் கால் மணி நேரத்துக்கு மேலே ஆகும். அதற்குள் இன்னும் நிறைய ஊர் ஜனம் வரும் என்று நினைத்துக்கொண்டே தனக்கு தெரிந்த முகம் எதாவது இருக்கா என்று நோட்டம் விட்டார்.
 *
மனதில் உதிக்கும் அழகான எண்ணங்களுக்கு உருக்கொடுக்க முயன்று கொண்டே இருக்கும் ஒரு எளியன்... வாழ்க்கையை ரசித்துக்கொண்டே பயணிக்கும் ஒரு ரசிகன் என்று சொல்லும் பதிவர் மாதவன் இளங்கோ அவர்கள் ரசிக்கிறேன்.. ருசிக்கிறேன்.. என்னும் தளத்தில் எழுதுகிறார். இவர் ரசித்து எழுதி நமக்கு ருசிக்கத் தருகிறார். இவரின் அமைதியின் சத்தம் சிறுகதையில்... 

ஒருவேளை என் மனைவிதான் சமையலறையில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறாளோ என்று ஹாலுக்கு வந்தால், அவள் எனக்குமேல் பதைபதைத்துக் கொண்டு ஓடிவந்து, “என்ன சத்தம்?” என்று கேட்டாள். “தெரியல அர்ச்சனா. பக்கத்து வீட்லர்ந்து யாரோ சொவத்த இடிக்கற மாதிரி தெரியுது.” என்றேன். “ஒருவேளை நீங்க மூணுபேரும் ரொம்பச் சத்தம் போட்டு விளையாடினதால வார்ன் பண்றாங்கன்னு நெனெக்கிறேன் சத்யா. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து பார்க்கலாம்.” என்றாள் என் மனைவி.
*
வரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள் என்ற வரிகளோடு விழியன் பக்கம் என்ற தளத்தில் எழுதும் விழியன் அவர்கள், வரம்பு மீறாமல் நல்ல கதைகளைப் பகிர்ந்திருக்கிறார். இவரின் நெஞ்சுக்குள்ளே தூறல் என்னும் சிறுகதையில்...
“என்ன ஆச்சுங்க”
 “இங்கே பள்ளம் இருக்கும்னு தெரியல சார். செகண்டு கிராஸ்ல ஒருத்தருக்கு அட்டாக் வந்துருக்கிறது.வேகமா வந்தேன் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. போகிறவன் வருகிறவன் எவனும் கண்டுக்கல. இதனைக்கும் சிகப்பு விளக்கு , சைரன் எல்லாம் போட்டுருக்கேன்”. அலுத்துக் கொண்டார் ஓட்டுனர்.
 *
சரிங்க... இன்றைக்கு இவர்கள் போதும் என்று நினைத்து கடையை மூட நினைக்கும் போது இப்போதுதான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து வெற்றி பெற்றிருக்கும் தம்பி மனசில் வந்து போகிறார். யார் அவர்? அப்படின்னு கேக்குறீங்களா... இந்தாச் சொல்றேன்... முதுகலை படிக்கும் மாணவர், சிறந்த சிந்தனையாளர், அன்புத் தம்பி ஜெயசீலன் அவர்கள் புதுகை சீலன் என்ற பெயரில் எழுதுகிறார். இவரின் எழுத்தை வாசியுங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்... இவரின் குலசாமி சிறுகதையில்... 

ஏண்டி  வந்த ஒடனேயே அந்த ஆட்டுக்குட்டியை கொஞ்ச போய்ட்ட,துணிய கழட்டிவச்சுட்டு வாடி காப்பி குடிக்கலாம்." என்று." இந்தா வரேன்ம்மா" என்றபடி கைகால் அலம்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.அம்மா கொடுத்த கருப்பட்டி காப்பியை அவளும் அவளுடைய‌ வீராவும் பகிர்ந்து உண்டனர். வீரா வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது, வீராவின் மேல் வள்ளி வைத்திருந்த பாசமும் தான்.
 *
ஏங்க கோவிச்சிக்காதீங்க இன்னைக்கு பதிவு நீளமாத்தான் இருக்கும். காரணம் சீனா ஐயா சொன்ன மாதிரி சிறுகதைகள் எழுதுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றால் வாசிப்பதும் பிடிக்கும். இன்னும் நிறையப் பேரைச் சொல்லணும்ன்னு ஆசை... ஆனா இது பதிவா... இல்லை... ரெயிலான்னு நீங்க திட்டக்கூடாது பாருங்க... அதனால அவர்களை எல்லாம் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பகிரலாம். சரி பாட்டை ரசிச்சிட்டுப் போங்க. 
கத சொல்லப் போறேன்


மதுரை வலைப்பதிவர் மாநாடு-2014 நிகழ்ச்சி நிரல் உங்கள் பார்வைக்கு... மதுரை குலுங்கக் குலுங்க பதிவர் கூட்டம் நிறையட்டடும்...

 நன்றி. 

-'பரிவை' சே.குமார்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது