07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label 'பரிவை' சே.குமார். Show all posts
Showing posts with label 'பரிவை' சே.குமார். Show all posts

Sunday, October 26, 2014

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...



வணக்கம்.

கடந்த ஒரு வார காலமாக வலைச்சர ஆசிரியனாய் உங்களுடன் கலந்திருந்தது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. என்னை எழுத்துலகுக்கு அழைத்து வந்த எனது பேராசான், எழுத ஆரம்பித்த போது திட்டினாலும் அப்புறம் நல்லா எழுதுறான்னு மனசார வாழ்த்திய அப்பா மற்றும் அம்மா, நான் கிறுக்குபவைகளை எல்லாம் நல்லாயிருக்கு என்று சொல்லும் என் மனைவி, பள்ளி செல்லும் முன்னே என் எழுத்துக்கள் வந்த பத்திரிக்கைகளை வீதியெங்கும் காட்டி மகிழ்ந்த அன்பு மகள், எங்கப்பா எழுதுனதுன்னு சொல்லும் செல்ல மகன் என அனைவருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

இது என்னையும் எழுத வைத்து உலகளாவிய நட்பைக் கொடுத்த இறைக்கான நன்றி.

நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை


வலைச்சர ஆசிரியர் பணி குறித்து முதலில் சீனா ஐயா என்னிடம் கேட்டபோது அலுவலக வேலைச் சூழலில் பொறுப்பேற்கும் எண்ணம் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்காகவும் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும் யோசனையோடுதான் ஒத்துக் கொண்டேன்.

காலை 5 மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் சென்று தொடர்ந்து 11 மணி நேரங்கள் கணிப்பொறியோடு மல்லுக்கட்டிவிட்டு அறைக்கு வந்து ஊருக்குப் பேசி, சமையல் செய்து சாப்பிட்டுப் படுக்கும் போது மணி இரவு பதினொன்றுக்கு மேலாகிவிடும். இந்தச் சூழலில் தினம் ஒரு பகிர்வு சாத்தியப்படுமா என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. ஜோதிஜி அண்ணன் அவர்கள் உன்னைவிட பணிச்சுமையில் நான் இருக்கிறேன். இது போன்ற சந்தர்ப்பங்கள்தான் உன்னை மெருகேற்றும்... செய் என்று சொன்னார்கள். சரி... சென்ற முறை போல் அதிகம் சிரமமின்றி ஓரளவு பகிர்வு தேத்திப் போட்டாப் போச்சு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு காரியத்தையும் செய்கிறேன் என்று சொல்லிவிட்டால் அதை கடமைக்கு செய்யாமல் கடமை உணர்வுடன் செய்ய வேண்டும். இது எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நேர்த்தி இருக்க வேண்டும்... முழுத் திருப்தி இருக்க வேண்டும் கடமைக்குச் செய்யக்கூடாது என்பார். அதன்படி நம்பிக்கையை வீணாக்காமல் முடிந்தளவுக்கு நன்றாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் இருந்து வந்ததும் முதல் நாள் இரவே எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து ஊருக்குப் பேசிக் கொண்டே பதிவு எழுத ஆரம்பிப்பேன். பூவாக இருக்கும் பகிர்வு மொட்டாகி... காயாகி... கனியாகும் போது இரவு 1 மணியைத் தொட்டு விடும். அதன் பிறகு தூக்கம் கண்ணைக் கட்ட ஆரம்பித்து விடும். அப்படியே வைத்து விட்டு நித்திரையை அணைத்துக் கொள்வேன். மறுநாள் காலை குளித்து வந்ததும் அவசர அவசரமாக பதிவை பகிர்ந்து விட்டு கிளம்பி விடுவேன். மாலை வந்து பதிவருக்கெல்லாம் விவரம் தெரிவித்து பின்னூட்டம் போட்டு விடுவேன். தீபாவளி அன்று மதியம் வந்து விட்டதாலும் வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதாலும் கொஞ்சம் நேரம் கிடைத்தது.

இந்த வாரத்தில் பதிவு இடும்போது அதிகம் பின்னூட்டம் வரவாய்ப்பில்லை என்று தோன்றியது. காரணம் தீபாவளி விடுமுறை, பதிவர் மாநாடு என நம் மக்கள் அனைவரும் ரொம்ப பிஸி. இருந்தாலும் எனக்குக் கிடைத்த வாய்ப்பை உங்கள் மனதில் நிற்கும் வண்ணம் நிறைவாய் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு இணங்க முடிந்தளவு சிறப்பாக செய்திருப்பதாய்த்தான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு பதிவின் தலைப்பும் ஒரு படப்பாடலின் முதல் வரியாகவும் பதிவுக்குப் பொறுத்தமான பாடலையும் பகிரும் எண்ணம் முதல் பகிர்வை பகிரும் போதுதான் தோன்றியது. அதுவும் நல்லாத்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.

எனக்கு வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த சீனா ஐயாவுக்கும் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், ராஜி அக்கா இருவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது பகிர்வுகளை தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களால் எனக்கு ஊக்க உரமிட்ட அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.

இனி எப்பவும் போல மனசு வலைப்பூவின் மூலமாக உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கும் வரை இந்த கிராமத்தானை நினைவில் நிறுத்தி வையுங்கள். முடிந்தால் என்னோட மனசுக்கு வாங்க...

எப்பவும் போல் இன்றும் நன்றி சொல்ல ஒரு பாடல்... கேளுங்கள் ரசிப்பீர்கள்...
நன்றி சொல்ல உனக்கு



ஒரு வாரம் என்னை ஆசிரியனாய் ஆக்கிப் பார்த்த வலைச்சரத்துக்கும் என்னோடு பயணித்த வலை நட்புக்களுக்கும் மீண்டும் நன்றி.
நட்புடன்
-சே.குமார்
பரியன் வயல்
தேவகோட்டை
(இ) அபுதாபி

மனசு வலைத்தளம்.
மேலும் வாசிக்க...

ஒரு வானவில் போல...

நேற்றைய பகிர்வான ‘உன் சமையல் அறையில்’ என்ற பகிர்வுக்கு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி
--------------------
ன்றைய பகிர்வாக நாம் பார்க்க இருப்பது உலக வலைப்பூ நண்பர்கள் அனைவரும் அறிந்த முகங்கள் பற்றித்தான் என்பதை தலைப்பே சொல்லும் . இந்த அறிந்த முகங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருப்பினும் நான் விரும்பி வாசிக்கும் சிறப்பான பகிர்வர்களுக்காக ஒரு பகிர்வு போட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இப்பகிர்வு. இதில் எல்லோரையும் குறிப்பிடமுடியாது என்பது தெரியும். அதனால் சிலரைப் பற்ரி இங்கு பார்ப்போம். அதற்கு முன்னர் கொஞ்சம் பேசிக்கலாம்.

நம்ம நாட்டைப் பொறுத்தவரை நாலு பேருக்கு நல்லது செய்யிறவனை நாலு ஊருக்குத்தான் தெரியும். நடிகனையும் அரசியல்வாதியையும் நாய்க்கும் தெரியும் என்று எனது நண்பன் சொல்லுவான். ஆம்... அது உண்மைதான் என்ற போதிலும் தமிழ் எண்ணும் உயிர் இன்று முகம் பார்த்து அறியாவிட்டாலும் உலகமெங்கும் நட்பைக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட பிரபல முகம் கிடைக்க காரணமாய் இருந்தது... இருப்பது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் வலைப்பூ.

கல்லூரியில் படிக்கும் போதும் தேவகோட்டையில் கணிப்பொறி மையம் நடத்திய போதும் அம்மாவை சைக்கிள் கூட்டிக் கொண்டு கடைக்குப் போகும் போது எதிர்படுபவர்களில் பலர் கையைக் காண்பித்துச் செல்வார்கள். அதையெல்லாம் கவனித்துக் கொண்டே வரும் அம்மா, வீட்டிற்கு வந்ததும் தம்பி சம்பாரிச்சி சொத்துச் சேர்த்து வச்சிருக்கோ இல்லையோ ஆனா ஆளுகளை நல்லாப் பழகி வச்சிருக்குன்னு சொல்லுவாங்க. உண்மைதான் இன்றும் தேவகோட்டையில் எனக்கு ஒரு உதவி என்றால் உறவுகளைவிட நட்புக்களே முன் நிற்பார்கள். இப்பவும் காசு பணம் இருக்கோ இல்லையோ வலைப்பூ மூலமாக உலகளாவிய உறவுகளாய்... ஐயா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, தோழன், தோழி என எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்களை இறைவன் எனக்களித்து இருக்கிறான். அப்படி எனக்குக் கிடைத்த உறவுகளில் சிலரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இது முழுக்க முழுக்க எனது உறவு வட்டம்தான். இன்றைய பதிவில் புதியவர்கள் இல்லை... ஆனால் பல புதியவர்கள் அறிய வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும் என்று சொல்லி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் உலகளாவிய சூப்பர் ஸ்டார் அண்ணன் திண்டுக்கல் தனபாலன், செல்லமாக DD, நிறைய விஷயங்களை நிறைவாய்ப் பகிர்வார். இப்போ வலைப்பதிவர் மாநாட்டு வேலைகளில் ரொம்ப பிஸி என்பதால் வலைப்பக்கம் வருவதில்லை. இவரின் எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் என்ற பகிர்வில்...
“இந்தப் பாடல்களை சில பேர் கேட்டு இருப்பீர்கள்... சில நண்பர்கள் கேட்கவில்லை, பிளேயர் தெரியவில்லை. லோட் ஆக நேரம் ஆகிறது. பாடலின் திரைப்படம் தெரியவில்லை. அதனால் பணத்தைப் பற்றி எழுதிய மாயா... மாயா... எல்லாம் சாயா... சாயா... பதிவைப் போல் வரிகளாக எழுதுங்கள் என்று சொன்னதால் இதோ உங்களுக்காக...”


ந்த உலகம் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையென்றால்... நான் ஆச்சர்யப்படமாட்டேன், இந்த உலகத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால்... ஆச்சர்யம் மட்டுமல்ல... வருத்தமும் அடையேன் என்ற எஸ்.எஸ்.வாசனின் வரிகளை தலைப்பில் மேற்கோள்காட்டி தேவியர் இல்லம் என்னும் வலைத்தளத்தை நடத்திவரும் எங்கள் மண்ணின் மைந்தரும் திருப்பூர் மாநகரில் வசிப்பவருமான எனதன்பு அண்ணன் ஜோதிஜி அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் விவரித்து மேற்கோள்கள் வைத்து நீண்ட பதிவாகத்தான் கொடுப்பார். தற்போது கூட ஒரு தொழிற்சாலையின் குறிப்புக்கள் என்ற தலைப்பில் பனியன் கம்பெனிக்குள் நடக்கும் அறியாத தகவல்களை அறியத் தருகிறார். அதில் ஒரு பகுதியான கொள்ளையடிப்பது தனிக்கலை என்ற பகிர்வில்....
“இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள்.”


சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே!!! என்று தனது வலைப்பூவான சும்மாவின் தலைப்பின் கீழ் சொல்லி வைத்திருக்கும் எங்க காரைக்குடிகாரரான பாசமிகு தேனம்மை லெஷ்மணன் அக்கா அவர்கள் பிரபல எழுத்தாளர், புத்தக் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர், இதையெல்லாம் விட வாஞ்சையாய் அன்பு செலுத்தும் பாசக்காரர். நிறைய எழுதுவார்... நிறைவாய் எழுதுவார். இவரின் சாட்டர்டே ஜாலி கார்னரில் பல பிரபலங்களிடம் கேள்விக்கான பதிலைப் பெற்று பதிவிடுவார். அதற்கு நல்ல வரவேற்பு. அதில் என்னையும் பிரபலம்ன்னு நினைச்சு போட்டுட்டாங்க. (ஐ... எப்படியோ நம்ம பதிவு ஒண்ணு அக்கா தளத்தில் இருக்குன்னு சொல்லியாச்சு) இவரின் ஸ்வரமும் அபஸ்வரமும் என்ற பகிர்வில்...
“மிகச்சிறப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு விஷயம்/ கவிதை/கட்டுரை/ கதை/ பகிர்வு தனக்கான வாசகர்களைக் காலம் கடந்தேனும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்தே விடுகிறது. அப்போது அந்த விஷயத்தின் கனமும் மனமும் ஒன்றியிருக்க கருந்துளையும் பெருவெடிப்பும் மரணமும் பிறப்பும் துன்பமும் இன்பமும் ஒருசேர உணரமுடிகிறது.. விழிப்பற்ற நிலையா விழிப்பாவெனப் பகுபடாத ஒரு நிலையில் புத்தகம் சரணம் கச்சாமி.”


வன் ஜெயிக்கப் பிறந்தவன்  என்று சொல்லி WARRIOR என்னும் தளத்தில் எழுதும் எனது அண்ணன் தேவா சுப்பையா அவர்கள் எழுதிப் பழகுபவன் என்று சொல்லிக் கொள்வார். ஆனால் எப்படி எழுத வேண்டும் என்பது இவரின் தளத்தை வாசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். எடுக்கும் தலைப்பில் இப்படியும் எழுத முடியும் என்று வாசித்தால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். இலக்கியமாய் விரித்தும் நடையில் அதே உணர்வுகளோடு நம்மையும் பயணிக்க வைக்கும் ஒரு சிலரின் இவரும் ஒருவர். செம்மண் பூமியில் (நம்ம பக்கந்தேன்) இருந்து வந்த பூங்காற்று இவர். இவரது பூங்காற்று புதிரானது...! பகிர்வில்....
“எப்போதுமே சுவையான நினைவுகளோடுதான் படு சுமாரான எல்லாவற்றையும் நாம் கடந்து வரவேண்டி இருக்கிறது. இருளான ராத்திரியின் கற்பனையோடு நான் நகரத்து வெளிச்சமான இராத்திரிக்குள் நடந்து கொண்டிருந்தேன். இருப்பதற்குள் இல்லாததை தேடி எடுத்து இருக்கிறது என்றே நினைத்துக் கொள்வது போலத்தான். புத்திக்குள் மூன்றாம் பிறை ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்திருப்பேன் ஒருவேளை நான் சீனு என்னும் பாத்திரமாக இருந்திருந்தால்....”

  
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்று சொல்லி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் அன்பிற்குரிய அண்ணன் கே.ஆர்.பி. செந்தில் அவர்கள் மிகச் சிறப்பான எழுத்தாளர். இப்போ முகநூலில் எழுதுகிறார். அவ்வப்போது வலைக்கும் தீனி போடுகிறார். இவர் எழுதும் கவிதைகள் சிறப்பானவையாக இருக்கும். இவரின் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போ!... என்ற பகிர்வில்...
“கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் போற்றி பாதுகாத்து வைத்திருந்த உன்னதமான தருணங்கள் இனி வாழ்வில் எப்போதும் வராது என்பதே வாழ்வின் நீட்சியை நினைத்து பெருங்கவலை கொள்ள வைக்கிறது. சம்பிராதாயங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள் செத்துவிடலாம். காதல் போயின் சாதலே பெரிது. நாம் சந்தித்தோம், பேசினோம், காதலித்தோம், கலந்தோம் என்பதே வாழ்வின் உச்சமாக முடிந்துவிட்டது. அது அவசரமாக ஒரு பகல் நேர கனவைப்போல் எல்லாம் கலைந்துவிட்டது.”


ன்மீகப் பகிர்வென்றால் எனக்குப் பிடித்த இருவரில் முதலாமவர் அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் என்று சொல்லி தஞ்சையம்பதி என்னும் வலைத்தளத்தில் எழுதும் மரியாதைக்குரிய ஐயா துரை.செல்வராஜூ அவர்கள், எந்த ஒரு பகிர்வென்றாலும் நாம் அறியாத விஷயங்களை நிறைவாய்ச் சொல்வதுடன் அழகிய படங்களையும் இணைத்து... இத்தனை பொறுமையாக ஒரு பதிவை எழுதும் இவரைப் போன்றோரைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுவேன். அழகழகான படங்களுடன் அற்புதப்படைப்புக்கள் ஐயாவுடையது. அதில் துளசி தளம் என்னும் பகிர்வில்
“பவித்ரமான துளசியின் தளிரில் பிரம்மனும் மத்தியில் மஹாவிஷ்ணுவும் வேரில் சிவபெருமானும் நிலைத்திருக்கின்றனர். அதனால் - மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் துளசியை  ஏனைய முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னிரு சூரியரும் பதினோரு ருத்ரரும் அஷ்ட வசுக்களும் அஸ்வினி தேவர் இருவரும் சூழ்ந்து துதித்திருப்பதாக ஐதீகம். “


ன்மீகப் பகிர்வில் எனக்குப் பிடித்த மற்றொருவர் அன்பிற்குரிய அம்மா திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் வாசிப்பது என்பது சுவாசிப்பது!! வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!! என்ற வரிகளுடன் மணிராஜ் என்னும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். செல்வராஜூ ஐயா போலவே தலவரலாறு, இறைவனின் சிறப்பு, பாடல்கள் என எல்லாம் விவரமாக எழுதி அழகழகாய் படங்கள் இணைத்தும் அற்புதமான பகிர்வாய்த்தான் தருவார். பெரும்பாலான நாட்களில் இருவரும் ஒரே ஆலயத்தைப் பற்றியோ... இறைவனைப் பற்றியோ... எழுதியிருப்பார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இவரின் வெற்றி நலம் அருளும் மஹா கந்த சஷ்டி என்ற புதிய பகிர்வில்...
“முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவனன்.”


செங்கோவி என்னும் தளத்தில் பல்சுவையாய் கலக்கிய நண்பன் செங்கோவி (புனைப்பெயர்) அவர்கள், இன்றைய தேதியில் ஒரு படத்தை உறிச்சு... உறிச்சு... சிறப்பான விமர்சனம் எழுதி வலையுலகில் சினிமா விமர்சனத்தில் முக்கியபுள்ளியாக வலம் வருகிறார். திரைக்கதை இப்படித்தான் எழுத வேண்டும் என்பதை தொடராக எழுதி வருகிறார். அருமையான தொடர். இவரின் திரைக்கதை சூத்திரங்கள் என்னும் பகிர்வில்...
“தமிழில் Suspense என்பதை ஆவலுடன் கூடிய தவிப்பு என்று மொழிபெயர்க்கலாம். Surprise என்பது ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கும். ஹிட்ச்காக் கொடுத்த பேட்டியில் இதை அழகாக விளக்கி இருப்பார். அவர் சொன்ன விளக்கம் பாம் தியரிஎன்ற பெயரில் அழைக்கப்படுகிறது.”


கோதரர் பரிதி முத்துராசன் அவர்கள் தனது பெயரில் வைத்திருக்கும் வலைத்தளத்தில் சினிமாவும் சினிமா செய்திகளும் என்று சொல்லியிருப்பதால் சினிமா விமர்சனம், கருத்துக்கணிப்பு என சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து பகிர்வுகளும் அருமையாகப் பகிர்வார். இவரின் மெட்ராஸ் - சினிமா விமர்சனம் என்ற பகிர்வில்...
“படத்தில் நிறையக் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக உலாவருகின்றன. அதில் மனதில் நிற்பவர்கள் காளியின் நண்பனாக வரும் அன்பு, அன்புவின் மனைவி மேரி, கண்ணனின் ஆதரவாளர்களாக வரும் விஜி, மாரி, கண்ணன், காளியின் அம்மா, பைத்தியமாக வந்து கலகலப்பூட்டும் பரட்டைத்தல ஜானி...”


சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... என்று சொல்லும் நான் மாடக் கூடலில் பிறந்த சகோதரர் பகவான்ஜி அவர்கள் தனது ஜோக்காளி என்னும் வலைத்தளத்தில் நகைச்சுவைகளை அள்ளிக் கொடுக்கிறார். ரசிக்க ரசிக்க பதிவுகளைக் கொடுப்பதில் வல்லவர். இன்றைய தேதியில் தமிழ் மணத்தில் முதலாமிடத்தில் இருக்கும் எழுத்தாளர். இவரின் புருஷனுக்கு ரொம்ப ஆசைதான் என்ற நகைச்சுவையில்...
போலீஸ்  சார்ஜ்ன்னா  இவருக்கு  தெரியாது போலிருக்கு  !''போலீஸ்காரன் என்கிட்டே எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க ?''
''நீங்க சார்ஜ் பண்ணுவீங்க என்று எல்லோரும் சொன்னாங்களே”


கரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் பிரபல முகமான ஈரோடு கதிர் அண்ணன் அவர்கள், நிஜமாய் வாழ கனவைத் தின்னு என்ற பதத்துடன் கசியும் மௌனம் என்னும் வலைப்பூவில் எண்ணங்களை வண்ணங்களாக்கித் தருகிறார். இவரின் படைப்புக்கள் எல்லாம் வாழ்வியல் பேசும். இவரைப் போலவே இவரின் கீச்சுக்களும் மிகப் பிரபலம். இவரின் ஆடிய ஆட்டமென்ன என்ற பகிர்வில்...
“முன்பெல்லாம் வகுப்பில் குறும்பு செய்யும் பசங்களைப் பேர் எழுதிக்கொடுப்பதுபோல், அடங்கவில்லை, மிக மிக அடங்கவில்லை என அவர்களின் பெயர்களை எழுதிக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. யாரிடம் கொடுப்பது, மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தாவிடமா கொடுக்க முடியும்.கொடுக்க வேண்டுமெனத் தோன்றியது. சிலநாட்களுக்கு முன்பு அவர் வாசித்த ரயில்வே பட்ஜெட் நினைவுக்கு வந்தது.”


ன்னும் நிறைய... நிறையச் சொல்ல ஆசை பதிவின் நீளம் கருதி சில பிரபலங்களின் தள முகவரி மட்டும் இணைக்கிறேன். இது வலைச்சர விதிகளுக்கு மாறானது என்றாலும் நிறைய அறிமுகங்களைக் கொடுத்ததால் சீனா ஐயா அடியேனை மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் இதோ சிலரின் பக்க இணைப்புக்கள்.


திரு. பால கணேஷ்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்! 

திரு. முனைவர் இரா.குணசீலன்

மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை 

திரு. கில்லர்ஜி

பூவைப் பறிக்கக் கோடாரி எதற்கு? 

திரு. கோவை ஆவி




திரு. வெங்கட் நாகராஜ்
சந்தித்ததும் சிந்தித்ததும்


திரு. டி.என்.முரளிதரன்

மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா? 

திரு. சிபி. செந்தில்குமார்




திரு. பிரபாகரன்
காற்றில் கனிகள் விழுந்திடும் வரையில் காத்திருக்காதே... கல்லடி கிடைக்கும் 

திரு. சென்னை பித்தன்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் 

திரு. அ. பாண்டியன்
என் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில் 

கவிஞர். கி.பாரதிதாசன்

தமிழ் இலக்கண இலக்கிய மின்வலை 

திரு. சரவணன்
கல்விக்கான சிறப்பு வலை


திருமதி. மனோ சாமிநாதன்

கலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே!! 

திருமதி. அனிதாராஜ்
மனதில் உதிர்க்கும் எண்ணங்களை கிறுக்கல்களாய் இங்கே படைக்கிறேன் 

திருமதி. ராமலெஷ்மி ராஜன்
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாக கோர்த்தபடி


இங்கு என் நட்புவட்டத்தில் இருக்கும்  அனைத்து எழுத்தாளர்களையும் சொல்லத்தான் ஆசை. அதற்கான கால நேரம் வரும்போது கண்டிப்பாக மற்றவர்களைப் பற்றியும் பகிரலாம்.

இன்றைய பகிர்வு ரொம்ப நீளமாகிவிட்டது. படித்த உங்களுக்கு மூச்சு வாங்கியிருக்கும்.  அதனால அப்படியே இந்தப் பாட்டைப் பாருங்க... கொஞ்சம் உற்சாகம் வரும்.

ஒரு வானவில் போல


மதுரையில் இன்று நடக்கும் வலைப்பதிவர் மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்.

நன்றி. 

-'பரிவை' சே.குமார்.
மேலும் வாசிக்க...

Saturday, October 25, 2014

உன் சமையல் அறையில்...


நேற்றைய பகிர்வான 'கதை சொல்லப் போறேன்' குறித்து தங்களது கருத்துக்களைச் சொன்ன உறவுகளுக்கு நன்றி.

----------------------------------------

மையல் செய்வது என்பது ஒரு கலை. அந்தக் கலை எல்லாருக்கும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. ஆண்களை விடுங்கள்... பெண்களில் கூட எல்லாரும் நல்லாச் சமைப்பதில்லை. மீன் குழம்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்றாலும் ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தால் நான்கு பேரின் கைவண்ணமும் ஒன்றாக இருப்பதில்லை. சமையலில் கைப்பக்குவம் மிகவும் முக்கியம். எங்க ஐயா (அப்பாவின் அப்பா) ஒரு சமையல் மேஸ்திரி. மிகச் சிறந்த சமையல்காரர். இவரின் கைப்பக்குவத்துக்கே தனி மரியாதை இருந்தது. எங்கப்பாவுக்கும் சித்தப்பாவும் சமையல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம்.

எங்க வீட்டில் அக்காக்கள் சமையல் அப்போது அருமையாக இருக்கும். இப்போது பிள்ளைகளுக்காக காரம் குறைத்து உணவில் சுவை குறைத்து விட்டார்கள். எங்கள் நால்வரில் தம்பி தவிர மற்ற மூவரும் நன்றாகச் சமைப்போம். சும்மாவே செட்டிநாட்டுக்காரர்கள் என்றால் சாப்பாட்டுப் பிரியர்கள் என்பார்கள். விதவிதமாக சமைப்பதில் எங்க ஆளுங்க கில்லாடிங்க. விருந்து உபச்சாரத்திலும் குறை வைக்க மாட்டார்கள். இப்போ இங்கு கூட நான் சமைக்கப் போனால் பக்கத்து அறை நண்பர்கள் செட்டிநாட்டு வாசனை மூக்கைத் துளைக்குது என்று சொல்லியபடி இன்று என்ன சமையல் என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

சாப்பாட்டு விஷயத்துல கடவுள் நமக்கு குறையே வச்சதில்லை. திருமணத்துக்கு முன்பு வரை அம்மாவுடன் அதிகம் இருந்தது நான்தான். அம்மாவின் கைப்பக்குவம் சான்ஸே இல்லை. என்ன செய்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது வாரச்சந்தைக்குப் போவது நான்தான். எனவே இப்போது ஊருக்குப் போனாலும் காய்கறியாக இருந்தாலும் மீனாக இருந்தாலும் தம்பிய போய் வாங்கிட்டு வரச்சொல்லுங்க நல்லா பாத்து வாங்கிக்கிட்டு வருவான்னு சொல்லுவாங்க. திருமணத்துக்குப் பின் மனைவியின் சமையல்.... அம்மாவின் சமையல் செட்டிநாட்டுச் சுவை என்றால் மனைவியின் கைப்பக்குவமோ மதுரைச்சுவையுடன் செட்டிநாட்டுப் பாணி... ஆஹா... என்ன செய்தாலும் சூப்பரா இருக்கும். இப்போ விஷாலின் ஆசிரியைக்குப் பிடித்துப் போய் தினமும் விஷாலின் சாப்பாட்டில் ஒரு வாயாவது அவன் கையால் வாங்கி சாப்பிட்டு விடுவாராம். அந்தளவுக்கு ருசி.... மதுரை அம்சவல்லிபவான் கைவண்ணமாச்சே... சும்மாவா.

இன்றைக்கு வலையில் சாப்பாடு குறித்துப் பகிரும் ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. எத்தனை விதமான சமையல்களை எத்தனை கோணங்களில் சொல்கிறார்கள் என்பதை சில தளங்களை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட சில தளங்களைப் பற்றியும் அவற்றில் பகிரப்பட்ட சமையல் குறிப்புக்களைப் பற்றியும் இன்றைய பகிர்வில் பார்க்கலாம்.

முதலில் எப்பவும் போல் நட்புக்கு மரியாதை...

மீரகத்தில் இருந்து சமைத்து அசத்தலாம் என்ற வலைப்பூவில் சமையல் குறிப்புக்களை பகிர்ந்து வரும் ஆசியா அக்கா அவர்கள், அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிடுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் கூட நெத்திலி மீனின் முள்ளை எப்படி நீக்குவது என்பதை அழகான வீடியோ பகிர்வாகத் தந்திருந்தார். இவர் ஒவ்வொரு குறிப்பையும் செய்து பார்த்து அதை படிப்படியாக போட்டோ எடுத்து ஆர்வமுடன் அருமையாகப் பகிர்ந்து வைப்பார். இவர் மனோ அம்மாவின் பகிர்வில் பார்த்து இவர் வைத்த மீன் குழம்பு குறித்த பகிர்வில்...
புளியை 2 கப்  கொதி நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி ரெடியாக வைக்கவும்.மீன் குழம்பு வைக்கும் பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும்.எண்ணெய் சூடானவுடன் வெந்தயம் போடவும்,பொன்னிறமாக சிவந்து வரும் பொழுது வெங்காயம்,கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.


பிரான்சில் இருந்து Sashiga Kitchen என்ற வலைப்பூவில் சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வரும் சகோதரி மேனகா சத்யா அவர்கள், விதவிதமான சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வருகிறார். இவரது வலைப்பூவில் எண்ணற்ற சமையல் குறிப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. இவரின் சோயா உருண்டைப் பிரியாணி எப்படிப் செய்யலாம் என்பது குறித்த பகிர்வில்...
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து குளிர்ந்த நீரில் 2-3 தடவை கழுவவும்.உருண்டைகள் பெரிதாக இருந்தால் 2-ஆக நறுக்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


தெரிந்து கொண்ட விஷயங்களுக்காக சமையல் எக்ஸ்பிரஸ் என்னும் வலைப்பூவில் சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வரும் ஆமினா அக்கா அவர்கள், பெருசா சொல்ற அளவுக்கு எந்த விஷயமும் இல்லைங்க.... எல்லாமே அரைகுறை தான். பதிவு பார்த்தா உங்களுக்கே தெரியும் என்று சொல்லி மிகச் சிறப்பான சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வருகிறார். இவர் நூனே ஓங்காய் அதாவது ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய் எப்படிச் செய்யலாம் என்பது குறித்த பகிர்வில்...
கடாயில் எண்ணெய்விடாமல் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.நிலக்கடலையை தனியாக வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.


ஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும் என்று சொல்லி சமையல் அட்டகாசங்கள் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் ஜலீலா அக்கா அவர்கள், ஏகப்பட்ட சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வைத்திருக்கிறார். இவரது ஹெல்தி காய்கறி குருமா / வெஜ் குருமா / காய்கறி சால்னா / பரோட்டா சால்னா என்னும் பகிர்வில்...
காய் கறி வகைகளை பொடியாக அரிந்து அத்துடன் ,புரோக்கோலி,காலிப்ளவர், கார்ன் சேர்த்து நன்கு அலசி , இரண்டு முன்று தண்ணீரில் அலசி வடித்து வைக்கவும். ( முடிந்தால் லேசான வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு அலசவும்)அடுப்பில் சட்டியை ஏற்றி காயவிட்டு, தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கருகாமல் தாளித்து காய்கறிகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.


புதுகைத் தென்றல் என்ற வலைப்பூவில் எழுதும் சகோதரி (புதுக்கோட்டை) தென்றல் , வீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி?  என்றும் நீங்கள் படித்துக்கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ என்றும் சொல்லியபடி சிறப்பான சமையல் குறிப்புக்களைத் தருகிறார்.  இவரின் தற்போதைய வாசமோ ஆந்திராப்பக்கம். சிவகங்கைப் பக்கம் அடுப்படியில் போடுவதற்காக கருப்புக்கலரில் ஒரு கல் வாங்குவார்கள். அது இப்போது மார்பிள்ஸ், டைல்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. முன்னர் ஆத்தங்குடி பக்கமிருந்து வாங்கி வருவார்கள். அதை கடப்பா கல்லுன்னு சொல்வார்கள். இவரு என்னடான்னா கடப்பான்னு ஒரு உணவு வகையைப் பற்றி பகிர்கிறார். எங்க ஊரு கடப்பா என்கிற பகிர்வில்...
பரோட்டாவுக்கு குருமாவும் நல்லா இருக்குன்னாலும் கடப்பாவோட ருசியே ருசிதான். ஊருக்கு போகும்போதெல்லாம் பசங்க கண்டிப்பா ஒரு கை பாத்துடுவாங்க. எங்க ஊர்ல ராதாகபேன்னு ஒரு ஹோட்டல் இருக்கு, பிருந்தாவனம் ஸ்டாப் பக்கத்துல இருக்கு. அங்கே ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டும் இட்லியோட சட்னி, சாம்பார் ஏதும் கிடையாது. கடப்பா மட்டும்தான் தருவாங்க. இங்கயும் கூட்டம்னு சொல்லணுமா என்ன?


ம்முவின் சமையல் என்ற தளத்தில் எழுதும் சகோதரி அம்மு (பெயர் பதியப்படவில்லை) இது சைவ சமையல் குறிப்புகளுக்கான தளம் என்று சொல்வதுடன் சமையலில் அனுபவம் இரண்டு வருடங்கள் தான். பல விதமான சைவ உணவுகளை தெரிந்து கொண்டு செய்து பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் செய்து ருசித்தவற்றை உங்களுடன் பகிரவே இந்தத் தளம் என்று சொல்கிறார். இவர் சௌ சௌ கூட்டு எப்படி வைக்கலாம் என்று சொல்லும் பகிர்வில்...
சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.


மையல் என்னும் கலை என்ற வலைப்பூவில் மூன்று பேர் சேர்ந்து சமையல் குறிப்புக்களைப் பகிர்கிறார்கள் என்று நினைக்கிறேன். இம்மூவரில் சகோதரி சித்ரா அவர்கள் நிறையக் குறிப்புக்களைப் பகிர்ந்திருக்கிறார். அனைத்தும் அருமையான குறிப்புக்கள். அதில் தக்காளி பொரிச்ச குழம்பு எப்படி வைப்பது என்ற பகிர்வில்...
தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


பெட்டகம் என்னும் வலைப்பூவில் எழுதும் சகோதரர் முகமத் அலி அவர்கள் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற சமூக சிந்தனை வரிகளுடன் சமையல் குறித்த சின்னச் சின்ன குறிப்புக்களை அருமையாக பகிர்ந்திருக்கிறார். இவரின் டிப்ஸ்... டிப்ஸ்... சமையல் குறிப்புகள் என்ற பகிர்வில்....
வெள்ளை மற்றும் மஞ்சள் பூசணிக்காய் துண்டுகளை ஒரு வாரம் வரை பாதுகாக்க வேண்டுமா? காய்களைத் தோல் நீக்கிவிட்டு, விதையுள்ள மென்மையான மேல் பாகத்தையும் களைந்து, சதை பாகத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் பூசணித் துண்டுகளை மூழ்கவிட்டு, பாத்திரத்தை மூடாமல், ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். பல நாட்கள் அப்படியே இருக்கும்.


சிக்க ருசிக்க என்னும் வலைப்பூவில் எழுதும் பிரியா ராம் அவர்கள், நாம் ரசிக்க மட்டும் அல்ல அந்தக் குறிப்புக்களைப் படித்து அதை செய்து ருசிக்கவும் அருமையான விளக்கங்களுடன் அழகான குறிப்புக்களைப் பகிர்கிறார். இவர் வைத்த பொடி போட்ட வத்தக்குழம்பு பற்றிய பகிர்வில்...
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு  போட்டு தக்காளி, கத்தரிக்காய் போட்டு வதக்கி, புளி தண்ணீர் கரைத்து விட்டு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக கொதிக்க விடனும். திக்காக வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி,
3  ஸ்பூன் வறுத்து பொடி பண்ண பவுடர் போட்டு, 2  ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு கிளறினால், பொடி போட்ட வத்த குழம்பு ரெடி....


மையல் களஞ்சியம் என்னும் தளத்தில் எழுதிய சகோதரி சித்ரா அவர்கள், 2008-ல் தளம் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் மட்டுமே வலைப்பூவில் இருந்திருக்கிறார். இட்ட இடுகைகள் மொத்தம் 9. இவரும் சமையல் என்னும் கலையில் மூவரில் ஒருவராக எழுதும் சகோதரி சித்ராவும் ஒன்றுதானா என்பது தெரியவில்லை. இவரது லட்டு என்ற பகிர்வில்...
கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.


இங்கு நமக்கு சமையல் கலைகளை அள்ளித் தரும் அன்பு உள்ளங்களின் தளங்களில் இருந்து கொஞ்சமாக சுவைக்கக் கொடுத்துள்ளேன். இதை வாசிக்கும் அனைத்து உறவுகளும் அந்தந்த தளங்களுக்குச் சென்று விருந்து சாப்பிட்டு வாருங்கள். அதுக்கு முன்னால எப்பவும் போல இந்த பாட்டையும் மதுரை வலைப்பதிவர் மாநாட்டு நிகழ்ச்சிநிரலையும் பார்த்துட்டுப் போங்க...

உன் சமையல் அறையில்


மதுரை வலைப்பதிவர் மாநாடு-2014 நிகழ்ச்சி நிரல் உங்கள் பார்வைக்கு... நாளை மதுரை தெப்பக்குளத்தில் பதிவர் உற்சவம்...



நன்றி.

-'பரிவை' சே.குமார்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது