07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 1, 2015

மாம்பழங்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு ருசி...

பிரயாசைகள் ஏதுமில்லாமல் நப்பாசைக்காக வலைப்பூவில் எழுதுகின்றவனாக உங்கள் முன்னே நின்றுகொண்டிருக்கிறேன். வலைதளங்களின் ஆளுமைகளாக விளங்கும் அத்தனை பேருக்கும் வணக்கம்.
***************

அப்போது ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்துவீட்டுச் சன்னல் கண்ணாடியை ரப்பர் பந்தினால் பதம் பார்த்துவிட, “இரு இரு உங்கம்மா வரட்டும் தோலை உரிக்கச் சொல்றேன்” என்ற கிருபா அக்காவின் மிரட்டலை சாதாரணமாகக் கடந்து போயிருக்கலாம் தான். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் ஸ்கூல் பேக்கைத் தூக்கிக்கொண்டு திருநெல்வேலி பாளையங்கோட்டையிலிருந்து கால்நடையாகவே திருச்செந்தூர் பேரூந்துகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடக்கத் துவங்கிவிட்டேன்.


அப்போது அரைடிக்கெட் 4ரூபாயும் 50பைசாவும்.  அவ்வளவு பெரிய தொகையெல்லாம் நம்மிடம் ஏது. பஸ் பாஸைக் காண்பித்து திருச்செந்தூர் கடற்கரையில் இறங்கிவிட்டேன். தைப்பூசம் மண்டபத்தில் ஸ்கூல் பேக்கை வைத்துவிட்டு கடலில் ஒரே குளியாட்டம் தான். மதியநேரம் பரிசோதனைக்கு வந்த காவலர்கள் அனாதையாகக் கிடந்த பையைச் சோதித்து எடுத்துச் சென்றுவிட, குளித்துவிட்டு வந்து பக்கத்திலிருந்த ஆச்சியிடம் “இங்க என் ஸ்கேல் பேக் இருந்தது பார்த்தீங்களான்னு” கேட்க அந்த ஆச்சி போலீஸ் ஸ்டேஷனைக் கைகாட்டியது. அவர்களாவது ஒழுங்காக விசாரித்து ஊருக்கு அனுப்பி வைத்திருக்கக் கூடாதா. சாமர்த்தியமாகப் பேசி பையை வாங்கிக்கொண்டு  மண்டபத்திற்கே வந்துவிட்டேன்.

தனியாக வந்த என்னை பக்கத்தில் அழைத்து போலீஸில் என்ன விசாரித்தார்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்ட ஆச்சி , “சரி வா என் வீட்டுக்குக் கூட்டிட்டுப்போறேன்” என்று அழைத்துப் போனது. திருச்செந்தூரிலிருந்து சில மைல் தொலைவில் இருந்த ஆத்தூருக்கு பஸ்ஸும் நடையுமாகச் சென்றடைந்தோம்.

ஆச்சிக்கு இரண்டு மகள்கள். மூத்தவரான சுமதி அக்கா நர்ஸிங் முடித்துவிட்டு மருத்துவமனையில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார். இரண்டாவது பெண் வள்ளிக்கு படிப்பு வரவில்லை ஆடு மேய்த்துக்கொண்டு விவசாய வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். ஆச்சி ஏதோ வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆத்தூருக்கு வந்து ஐந்துநாளில் அவர்கள் வீட்டில் கடைசிப்பிள்ளையாக நான் பாட்டுக்கு, வாழைத் தோட்டங்களில் குருத்து இலை வெட்டி, தண்ணீர் மடையில் மீன் பிடித்து விளையாடி, மூன்று குட்டிகள் ஈன்ற வெள்ளாட்டுக்குப் பிரசவம் பார்த்து, ஊர் மையத்திலிருந்த ஆலமர விழுதில் வள்ளியக்காள் தள்ளிவிட ஊஞ்சலாடி, பக்கத்து ஊர் டூரிங் கொட்டகையில் இரவுக்காட்சிக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ படத்துக்குக் எல்லோருமாகப் போய்வந்து,  கிராமச் சூழலை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தேன்.

வீட்டு நினைப்பு வந்தபோதெல்லாம் அம்மாவின் அடியும் சேர்ந்தே நினைவுக்கு வர, வீட்டுக்கே போகாமலிருந்துவிட்டால் என்ன என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். சரியாக ஏழாம் நாள் காலையில் என் வாயிலிருந்து மெல்ல மெல்ல வீட்டு முகவரியை கேட்டுக்கொண்ட ஆச்சி எனக்கே தெரியாமல் பாளையங்கோட்டைக்குப் போய் அம்மாவை அழைத்துக் கொண்டு சாயந்திரம் போல ஆத்தூருக்கே வந்துவிட்டது.

இந்த ஏழுநாள் வனவாசத்தில் ஆச்சியின் மகள்களுக்குச் செல்லத் தம்பியாகி இருந்த என்னை விடுவதற்கு மனமில்லாமல் ஓவென்று அழுது தீர்த்துவிட்டார்கள்.  அம்மா ஒரு வார்த்தைகூட திட்டவில்லை. சத்தமில்லாமல் என்னை அழைத்துக்கொண்டு முதலில் ஊர் எல்லையைத் தாண்டி வந்ததும் கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டது. நம்ம அம்மாவா இது என்று அந்த வயதில் நினைத்திருப்பதில் ஆச்சர்யமில்லை.

பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் போய் யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று அவர்களே ஜோடித்த கதையில் கையொப்பம் போட்டு வீட்டுக்குத் திரும்பினோம்.  திருச்செந்தூர் மண்டபத்தில் போலீஸ் அப்படியென்ன விசாரித்தது என்பதை அம்மாவிடம் சொன்னேன். அம்மா சொன்னதையும் ஆச்சி வீட்டிலிருந்த பெரிய பெரிய பானைகளையும், குமட்டிக்கொண்டு வரும் குப்பென்ற வாடையையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் அது ஆச்சிதான் அந்த சாராயம் விற்கும் பெண்ணாக இருக்கக்கூடும்.

அது பற்றியெல்லாம் நான் யோசிக்கவோ கவலைப்படவோ இல்லை. பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு ஆத்தூருக்குச் சென்று அந்த சின்ன வீட்டை அடையாளம் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டு அந்த ஏழு நாட்களில் டிவி பார்க்கச் செல்லும் நாட்டாண்மை வீட்டில் விசாரித்தேன். ஆச்சி இறந்து போய்விட்டது. சுமதி அக்கா திருச்செந்தூரில் கட்டிக்கொண்டு போயிருந்தார். வள்ளியக்காவும் அவர் வீட்டுக்காரரும் தான் அங்கே குடியிருந்தார்கள். வயல்வேலைக்குப் போய்விட்டு அவர்கள் சாயந்திரம் தான் திரும்புவார்கள் என்றார் நாட்டாண்மை பெஞ்சாதி.

கருக்கலுக்கு முன்னே வந்த வள்ளியக்காவுக்கு என்னை அடையாளம் தெரியாமல் போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் என் பெயரைச் சொன்னதும் அப்படியே அதற்குப் பழசெல்லாம் நினைவு வந்து சிரித்தபோது வாயெல்லாம் பல்லாகிப் போயிருந்தது.

****


இப்படி ஒவ்வொரு வருடமும் எங்காவது ஒரு திசைக்கு நான் பெட்டியைக் கிளப்பவும் என்னைத் தேடி அலைவதுமே அம்மாவுக்கு வேலையாகிப் போக ஒரு கட்டத்தில் இந்தா பிடி தண்ணீரைத் தலைக்கு என்று தெளித்து விட்டு விட்டார்கள்.  அதுமுதல் தேசாந்திரியாக மாற்றிக் கொண்டேன் என்னை.

தமிழ்நாட்டின் இண்டு இடுக்கு, மூலை முடுக்கு என்று ஒரு இடம் விடாமல் சுற்றும் மார்கெட்டிங் வேலை வரமாகவே மாறிப்போனது.  எல்லா மாவட்டங்களையும் அவர்களது மொழிவழக்கையும், மனிதர்களையும் மனிதர்களின் கதைகளையும் அதுமுதல் படிக்கத் தொடங்கினேன்.

மாவட்ட வட்டார மொழி வழக்குகளின் மீது என் கவனம் திரும்ப இந்த அலைதல் தான் முக்கிய காரணமாக இருந்தது. அரிசனங்களின் பேச்சுத்தமிழ், கொங்கு தமிழ், குமரித்தமிழ், கரிசல் தமிழ், நெல்லைத்தமிழ், நாஞ்சில் தமிழ், தஞ்சைத்தமிழ், மதுரைத்தமிழ் என்று வட்டார வழக்காற்றியலின் மீது என் பார்வைகள் திரும்பியதற்கும் அம்மொழிகளில் வழக்குக்கு ஒரு சிறுகதை எழுதவேண்டுமென்ற எண்ணம் உருவானதற்கும் காரணமாக இருந்தது.

கரிசல் இலக்கிய கர்த்தாவான கி.ராவிடம் வாஞ்சையோடு ஒருதடவை கேட்டேன். இப்படி எழுதும் போது கொச்சையா எழுதுறவங்கன்னு ஒருசிலர் சொல்லுறாங்களே என்ன செய்யட்டும்ன்னு...

மாம்பழம் ஒன்னுதான் அது ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொரு வகை. ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு ருசி. நீ உன் மரத்தை நட்டு வச்சுட்டு போய்கிட்டே இருன்னார்.

***

அந்தவகையில் எழுத்துக்கும் மொழிக்கும் இடையிலான கருத்தியலைப் கொஞ்சம் தெளிவாக விளக்குவதென்றால்  தமிழ்த் தொகுப்புகளில் வெளிவந்த காலச்சுவடின் இந்தக் கட்டுரையை மிக முக்கியனாதகாகவே கருதுகிறேன்.

சுட்டி 
**************

புத்தகம் வாசிப்பது என்பதைத்தாண்டி நாம் வாசித்தப் புத்தகத்தைப் பற்றிய உரையாடலை யாரோடாவது தொடங்குவது என்பது எத்தனை இன்பமானது. அப்படி ஒரு உரையாடலை இந்த வலைப்பூவில் கண்டடைந்தேன்.
   

வெகு சமீபத்திலே தான் இந்தக் குரலைக் கேட்கத் தொடங்கினேன். பதிவர் ஜோஸ்பினின் குரல்.  இவரது பதிவுகளின் சாரத்தில் ஒரு ஆய்வு மாணவனை வழிநடத்துகிற ஆசிரியரின் மிக நுண்ணிய பார்வையை கவனித்திருக்கிறேன். சமீபத்தில் எழுதிய  “கொற்கை” நாவல் பற்றிய திறனாய்வுப் பதிவை அப்படித்தான் வாசித்தேன். 

 ஆயிரத்துச் சொச்சம் பக்கங்களையுடைய கொற்கை நாவல் அத்தனை ஒன்றும் எளிய வாசிப்புக்கான நூலாக இருக்கமுடியாது. பாண்டிய மன்னர் வம்சத்தின் கடைசித்  துயரத்தில் தொடங்கி   வட்டார வழக்கியலும், பரதவ இன மக்களின் வாழ்வியலும், கடல் போக்குவரத்து சார்ந்த வணிகமும், மேற்கத்திய நாகரீகம் உட்புகுந்த மேட்டுக்குடி மக்களையும், பாதிரிமார்கள் மேலெழும்பும் விமர்சனங்களையும் மிக முக்கியமாய் காலமாற்றத்தையும் பதிவு செய்திருக்கும் கொற்கை  என்னுடைய ஆசான் ஜோடிகுரூஸ் அவர்களின் பெரும் உழைப்பில் உருவாக்கப்பட்ட மிக முக்கய ஆவணம். 

ஆழி சூல் உலகு படித்து முடித்த கனத்தை இறக்கி வைக்கும் முன் கொற்கைத் துறையின் தோணியி மனதில் ஏற்றிக் கொண்டு, மத்தியான வெயிலில் கடலிலிருந்து ஒதுங்கிப் போய்விட்ட  “காயலில்”  அலைந்து திரியுமளவுக்கு பித்துப் பிடித்தவனாகி இருந்தேன்.  மக்களின் வரலாற்றை இம்மாதிரி நூல்கள் தானே இனிவரும் நூற்றாண்டுகள் தாங்கிப் பிடிக்கும். நீங்கள் வாழ்ந்த வீதிக்கு இப்படியொரு பெயர் இருந்ததென்று அறிந்துகொள்வதில் இருக்கும் பேரார்வம் எத்தனை மிகையானது. அப்படிப்பட்ட மிக முக்கியமான சமூக நாவலை முழுதும் படித்து முடிக்க எனக்கு மூன்று மாதங்களும் சிலமணி நேரங்களும் தேவைப்பட்டது. 

 அந்த 'பரதவர் மலிந்த பயங்கெழு  கொற்கை”யைப்  பற்றி காலத்தின் கலைப்பொக்கிஷம் என மனம் திறந்து ஒரு ஆழம் மிக்க அலசலை அரவிந்தனிடம் படித்த பிறகு ஜோஸ்பின் கதைக்கிறேன் தளத்தில் வாசித்தேன். நீங்களும் வாசிக்க சுட்டி இங்கே . 


ஒரு  “பாலியல் தொழிலாளியின் சுய சரிதை-நளினி ஜமீலா”  என்ற நூல் பற்றிய இவரது பதிவும் மிக முக்கியமானதாகவேப் பட்டது எனக்கு.  தான் ஒரு நூலைப் பற்றிய திறனாய்வு எழுதுகின்றோம் என்பதில் மிகக் கவனமாகத் தொடங்கி அப்படியே நிறைவு செய்யும் இவரது எழுத்துநடை கச்சிதமான கத்திரி வெட்டு.  எங்கேயும் நூலையோ ஆசிரியரையோ தூக்கிப்பிடிக்கும் பிரச்சார பானி இருக்காது. ஒருமுறை, “ நீங்கள் ஒரு ஆசிரியரின் பேனாவைப் போல் எழுதுகிறீர்கள்” என்றேன். உண்மையிலே தான் ஒரு ஆசிரியர்தான் என்று பதில் வந்தது.   மிக நுண்ணிய பார்வையோடு எழுதப்படும் இவரது நூல் அறிமுகம்/ விமர்சனம்/ திறனாய்வு/ பதிவுகள் வாசிப்புதளத்தில் எனக்கு முக்கிய கையேடு என்றுதான் சொல்வேன்.

மேலும் படிக்க

பெண்கள் முன்னேற்றம் எவ்வழியில்..........

திருமணம் என்ற பிச்சைத்தொழில் !

வன்மையான உண்மை!

*********

கொஞ்சம் வெட்டிப்பேச்சு 

அப்போது நான் பாளையங்கோட்டை கதீட்ரலில் படித்துக் கொண்டிருந்தேன். சரி ஒரு கடமைக்காக பள்ளிக்கூடம் போய் வந்துகொண்டிருந்தேன்.  பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதைப்போட்டிகள் மாவட்ட அளவில் எங்கே நடந்தாலும் என்பெயரைக் கொடுத்தனுப்பி விடுவார் எங்கள் தமிழ் வாத்தியார். போட்டிக்கு இரண்டு நாள் அல்லது மாலையில் போட்டி நடக்கிறதென்றால் காலையில் தான் எனக்குத் தகவலே வரும் அப்படி ஒரு நம்பிக்கை என்மீது அவருக்கு..

அரையாண்டு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது, பரீட்சை முடிஞ்சதும் வீட்டுக்குப் போய்டாதே ஒரு பேச்சு சாயந்திரம் ஒரு பேச்சுப்போட்டி இருக்கிறது என்று அழைத்துப் போய் தேசிய நூலக வாரவிழாவில் நூற்றுச் சொச்சம் பேர் கலந்துகொண்ட போட்டியில் முதல் பரிசு வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தபோது, “ஊர் சுத்திட்டு வருது பாரு கழுதை” என்று அம்மாவிடம் திட்டு வாங்கியதெல்லாம் உண்டு. அப்படி என்னை/ எங்களை மெருகேற்றிய வாத்தியார் மேடைப் பேச்சுகளுக்குப் தமிழ் படிக்கக் கொடுத்த புத்தகங்கள் பொ.ம.இராசமணி அவர்களுடையது. முப்பத்தைந்து ஆண்டுகாலம் தூய சவேரியர் பள்ளியில் கணக்கு வாத்தியாராக இருந்தார்.



எழுபதுக்கும் மேல் புத்தகங்கள்,  நகைச்சுவை பட்டிமன்றங்கள் என்று பாடப்புத்தகத்தைத் தாண்டி வாசிப்பதில் எனக்குக் கிடைத்த  முதல் திறப்பு எங்கள் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் குடிக்கும் நல்லிக்குப் பக்கத்தில் முதல் மாடியில் அழுக்குப் பிடித்து திறந்து கிடந்த நூலகத்தில்கிடைத்த இராசமணி வாத்தியாரின் புத்தகங்கள் தான்.

எதற்கு வாத்தியாரையும், கூடவே என்னுடைய தற்பெருமை ஜம்பங்களையும் இத்தனை எழுதுகிறேன் என்று திட்டவேண்டாம். சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். இணையத்தில் நான் முதன்முதலில் (2009) வாசிக்கத் தொடங்கிய வலைப்பூ சித்ரா சாலமோன் அவர்களுடையது தான். யார் என்னவென்றே தெரியாமல் இந்த வலையில் (தற்போது எழுதுவதில்லை என நினைக்கிறேன்) உள்ள பதிவுகளை வாசித்து வாய்விட்டுச் சிரித்ததுண்டு.

ஷோசியல் பயோகிராபி போல தன்னுடைய அமெரிக்க வாசத்தின் அனுபவங்களைப் போகிறபோக்கில் கொட்டிச் சிதறும் இன்னார் ம.பொ.இராசமணி வாத்தியாரின் மகள் என்பதை முகநூல் வந்துதான் தெரிந்துகொண்டேன்.  செய்வினை செயப்பாட்டு வினைபோல தொடக்கங்களெல்லாம் எங்குவந்து முடிந்திருக்கிறது பாருங்கள்.
பழைய நினைவுகளையும் சில நன்றிகளையும் இங்கே வந்து எழுதும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்த வலைச்சரத்திற்குத்தான் நன்றிகள் சொல்லியாக வேண்டும்.

நன்றி.

மற்றபடி வாசிக்க வேண்டுமென எனக்குப் பட்ட இவரின் சில பதிவுகள்

ஒன்று
இன்று
நன்று

*******************
நாளை  மீண்டும்  சந்திப்போம் 

19 comments:

  1. மார்கெட்டிங் வேலையுடன் உங்களின் ஆர்வத்தையும் அறிய முடிகிறது... இனிய நினைவுகள்...

    அனைத்தும் தொடரும் தளங்கள்... (முகநூல் இணைப்பை தவிர) அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. முகநூல் இணைப்பு கொடுக்கலாமா என்று தெரியவில்லை. இருந்தாலும் பதிவரை தொடர்ந்து செல்ல முகநூலும் ஒரு வழி தானே. நன்றி அண்ணா

      Delete
  2. ஜோஸ்பின் மிகப் பெரிய ஜர்னலிஸ்டாக வரவேண்டும் என்பது என் ஆசை...அவரின் ஆரம்பகால எழுத்துகளை படித்து அவருக்கு நான் சொல்லுவதும் இதுதான்...

    சித்ரா நான் வலைத்தளம் தொடங்கிய போது உச்சத்தில் இருந்தவர் இப்போது பேஸ்புக்கில் சிறு சிறு கருத்துகளை மட்டும் இட்டு செல்லுகிறார். இவரை போல உள்ள பெண்கள் எழுதாதது ஒரு இழப்புதான்

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் எழுதாதது இழப்பு தான்.

      Delete
  3. சிறப்பான இரு பதிவர்கள்.

    சித்ரா சாலமன் பதிவுகள் எழுதாமலிருப்பது பெரிய இழப்பு தான்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டமைக்கு நன்றி

      Delete
  4. வாசிக்கும் பொழுது, கண்ணில் நீர் மறைக்க வந்தது உண்மைதான். தங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் மிக்க நன்றிங்க. அப்பாவின் நகைச்சுவையும் , அறிவார்ந்த பேச்சும், மற்றவர்களை ஊக்கமளிக்கும் குணமும் என்னை மிகவும் கவர்ந்தவை.

    வேலைப் பளு மற்றும் பயணங்கள் காரணமாக , என்னால் பதிவுகள் எழுத முடியாமல் போனது. தொடர்ந்து எழுத முயற்சிப்பேன். நன்றிங்க.

    ReplyDelete
  5. ஹஹா.. நன்றி.. நீங்க மீண்டும் பழைய பன்னீர்செல்வமா வரணும் என்றெல்லாம் நாஸ்டோலஜிக் பேசனும்ன்னு நினைத்து இதை எழுதவில்லை. உண்மையிலே சில பழைய கிளறல்கள் நினைத்துப் பார்க்கும் போது பழ திறப்புகள் மனங்களில் எழுமல்லவா. அப்படியாக இந்த நன்றியை எழுதியிருக்கிறேன். அன்பும் நன்றியும்.... அக்கா.

    ReplyDelete
  6. ஜோசபின் அவர்களின் தளம் சென்றதில்லை! சித்ரா அவர்களின் தளத்தில் சில பதிவுகள் வாசித்து இருக்கின்றேன்! வித்தியாசமான முறையில் விரிவான அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அனைவரின் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் பொழுது வாசியுங்கள். நன்றி

      Delete
  7. வெட்டிப்பேச்சு சித்ராவின் பதிவுகள் பரிச்சயம் உண்டு. அவரது தளத்தின் இணைப்பாளன் நான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மற்றவரின் வலைதளத்தையும் பார்வையிட வேண்டுகிறேன்

      Delete
  8. இண்டு இடுக்கு, மூலை முடுக்கு என்று ஒரு இடம் விடாமல் சுற்றும் மார்கெட்டிங் வேலை வரமாகவே மாறிப்போனது//

    இப்பத்தான் புரியுது. முதல் பதிவில் நீங்கள் வர்ணித்த
    மென்மையான பொய்கள் எங்கே கற்கத் தேவையாக இருந்தது என்று.

    அது சரி.

    கற்க. கசடற கற்க. கற்றப்பின்
    நிற்க அதற்குத்தக.

    என்றாரே . வள்ளுவர்

    அது இந்த மார்கெடிங் டெக்னிக் ஆன மென்மையான பொய்கள்
    அதற்கும் பொருந்துமோ ?

    இப்ப எங்கே போனாலும் பியூட்டி பார்லர் லேந்து பயோ மெடிகல் வரை எந்த ஒரு பொருளும் மார்கெட் நிலவரம், மார்கெடிங் டெக்னிக் இவை இரண்டையும் பொறுத்துத்தான் இருக்கிறது.

    அது எல்லாம் இருக்கட்டும்.

    இந்த மாதிரி ஒரு அழகு தமிழ் நடை படித்து, அதுவும்
    நமது வலைப்பதிவுகளில் குறிப்பாக,
    நீண்ட நாள் ஆகிவிட்டது.

    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா சூட்சுமத்தை கண்டுபிடிச்சிட்டீங்க. உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி தாத்தா

      Delete
    2. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...!தங்கள் பயணங்கள் பற்றி கூறியது சுவாரஸ்யமாக இருந்தது மார்கெட்டிங் தொழிலும் அதற்கேப வசதியாகி விட்டது அனைவரையும் தொடர்கிறேன். நன்றி! வாழ்த்துக்கள்...! ....!.

      Delete
  9. சித்ரா அக்காவின் பகிர்வுகள் ரசிப்ப்டித்தவை என் ஆரம்ப கால பகிர்வில் ஊற்சாகமான பின்னூட்டம்மிட்டவர் இப்போது ஓய்வின்றி அவரின் தனிப்பட்ட வேலையில் மூழ்கிவிட்டார் போல

    இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நப்பாசைக்கு எழுதுவதாகச் சொன்னாலும் நன்றாகவே எழுதுகின்றீர்கள். நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களின் தளங்களைக் கண்டேன். நாளை சந்திப்போம்.
    வாய்ப்பிருக்கும்போது தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண வாருங்கள்.

    ReplyDelete
  11. உங்கள் எழுத்து அருமையாக உள்ளது! நல்ல அனுபவம் தந்த பாடம் இல்லையா?!!!

    தொடர்கின்றோம். உங்களால் அடையாளப்படுத்தப்பட்ட பதிவர்களின் தளத்திற்குச் செல்கின்றோம்...வாழ்த்துகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது