07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆரூர் மூனா செந்தில். Show all posts
Showing posts with label ஆரூர் மூனா செந்தில். Show all posts

Sunday, January 22, 2012

நாள் 7 : கருவூர்த் தேவர் வரலாறும், பதிவுகள் அறிமுகமும்



எங்கள் தஞ்சை அரசின் வரலாற்றில் நடந்த சம்பவங்களில் ஒன்று. கருவூர்த் தேவர் கருவூரில் பிறந்தவர். தேவர் என்ற அடைமொழி, உயர்வு கருதி மக்களால் வழங்கப்பெற்றது. இவருடைய இயற்பெயர் மறைந்து கருவூர்த் தேவர் என்ற நாமமே நிலைபெற்றது. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான ஒன்பதாம் திருமுறையில் கருவூர்த் தேவர் பாடிய திருப்பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. அவைகளில் ஒன்று தஞ்சை இராசராசச்சரம் என்னும் தஞ்சைப் பெரிய கோயிலைப்பற்றியது.

முதலாம் ராஜராஜ சோழன் காலத்திலும் அம்மண்ணனின் மகன் ராஜேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர். எனவே இவருடைய காலம் கி.பி 10 நூறு்றாண்டின் பிற்பகுதி தொடங்கி 11ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை என்று கருதப்படுகிறது. அந்தணர் குலத்தில் பிறந்த இவர் தமிழிலிலும், வடமொழியிலும் பெரும் புலவராக விளங்கினார். முதலாம் ராஜராஜ சோழனின் நட்பைப் பெற்று அவருடைய ஆன்மீக குருவாக விளங்கினார் என்று கருதப்படுகிறது.

இவரைப் பற்றிய புராண வரலாறுகளில் மிக முக்கியமானவை, 1, பழநிமலையில் யோகநாதரின் சீடராக இருந்து அட்டமாசித்திகள் பெற்றது. 2, மற்றும் அவர் அருளால் காயகல்பத்தை உண்டு நீண்ட நாள் வாழும் திறம் பெற்றது. 3, தஞ்சையில் பெரிய கோயிலை கட்டி முடித்து குடமுழுக்குக்கு ராஜராஜன் ஏற்பாடு செய்த போது பெருவுடையாரை தாபிக்கச் சாற்றிய மருந்து இளகிய போது கருவூர்த் தேவர் தம் சித்தியால் மருந்தைக் கெட்டிப்படச் செய்தது ஆகியவையாம்.

நாடெங்கும் பயணம் செய்து திருத்தலங்களைத்த தரிசித்து திருப்பாடல்களை பாடி வந்த கருவூரார் இறுதியாக, கருவூரில் ஆனிலையப்பர் கோயிலில் தென்மேற்குப் பகுதியில் நிட்டை கூடி சிவானந்த பெருவாழ்வை எய்தினார். தேவாரம் பாடிய மூவரைப் பின்பற்றியே இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன.

------------------------------

இன்றுடன் என்னுடைய ஆசிரியர் பணி நிறைவடைகிறது. வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கும், தமிழ் பிரியன் தமிழ்வாசி பிரகாஷ்க்கும் நன்றிகள் பல.
அதே போல் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

------------------------------

இன்றைய அறிமுகங்கள்

தமிழாரன் இணைய மஞ்சரியில் வந்துள்ள என்னுடைய போதிமரங்கள் - மு.மேத்தா என்ற கவிதைத் தொகுப்பு அருமை.

புரட்டிப் போட்ட படைப்புகள் என்ற பதிவில் வந்த பாரதியின் ஒரு பாட்டு (சாமியாட்டம் - பாலபாரதி)அருமை.

தமிழ்தொட்டில் வலைப்பூவில் வந்துள்ள பிரிவு என்பது துயரமல்ல ஆனந்தம் என்ற கவிதையும் அருமை.

அன்னைத் தமிழ் என்ற வலைப்பூவில் வந்துள்ள என் உயரின் கீதம் நீ. என்ற கவிதை நன்றாக உள்ளது.

கலகலப்பிரியா என்ற வலைப்பூவில் வந்துள்ள இவ்விதமாக என்ற கவிதை நன்றாக உள்ளது.

எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள் என்ற வலைப்பூவில் வந்துள்ள நான் குருடனான கதை என்ற கவிதை நன்றாக உள்ளது.

இடிமுழக்கம் என்ற வலைப்பூவில் வந்துள்ள சக்கரை மேல் எறும்புகள் என்ற கவிதை நன்றாக உள்ளது.


அதீத கனவுகள் என்ற வலைப்பூவில் வந்துள்ள இது எல்லாம் கவிதைகள் என்ற கவிதை நன்றாக உள்ளது.


ஆரூர் மூனா செந்தில்

மேலும் வாசிக்க...

Saturday, January 21, 2012

நாள் 6 : சென்னை புறநகர் மக்கள் மற்றும் பதிவர் அறிமுகம்.

நான் கிராமத்தான், வாழ்ந்தது படித்தது எல்லாம் கிராமத்தில் தான். வேலைக்கு வந்தது சென்னை, அதன் பின் நகர வாழ்க்கை தான். சிலர் இருக்கிறார்கள் பிறந்ததிலிருந்து சென்னை போன்ற நகரத்திலேயே இருந்து வெளிநாட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்னும் சிலர் கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வேலை பார்த்து வாழ்ந்து கொண்டிருப்பர். சென்னையைப் பொறுத்த வரையில் என்னைப் போன்றோர் தான் அதிகம் உள்ளனர். அதாவது வசிப்பது சென்னையின் புறநகரில் உள்ள கிராமத்தில், வேலை பார்ப்பதும், படிப்பதும் சென்னையில். இவர்கள் வித்தியாசமானவர்கள். சென்னையில் நீங்கள் பார்க்கும் கிராமத்தான்கள்.

நான் திருவாரூரில் பள்ளிப்படிப்பு முடித்த பின்பு பட்டயப் படிப்பு படிப்பதற்காக சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலைக்கு வந்து விட்டேன். எனது வகுப்பில் மொத்தம் 56 பேர் படித்தனர். என்னைத் தவிர என்னுடன் படித்தவர்கள் அனைவரும் ரயில்வே தொழிலாளர்களின் வாரிசுகளே. நான் மட்டுமே தவறிப் போய் முதல் தலைமுறையாக ரயில்வேயின் உள் வந்தவன். நான் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். என்னுடன் படித்தவர்களில் பெரும்பாலானோர் வேப்பம்பட்டு மற்றும் அதற்கு பிறகு உள்ள ஊர்களான திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார் பேட்டையிலிருந்தெல்லாம் வருபவர்களே. நான் அனைவரின் வீட்டிற்கும் போயிருக்கிறேன். வீடு ஏதாவது கிராமத்தில் இருக்கும். வீட்டில் மாடு இருக்கும். விவசாயமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். விடியற்காலை இது போன்ற ஊர்களிலிருந்து கிளம்பி சென்னைக்கு வேலைக்கு வந்து நள்ளிரவு வீட்டிற்கு திரும்புபவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களின் வாழ்வு முறையே வித்தியாசமாக இருக்கும். காலை மதியம் இரவு மூன்று வேளையும் சாப்பாடு வீட்டிலிருந்து கட்டிக் கொண்டு வந்து வெளியிலேயே சாப்பிடுவர். ஞாயிறு மட்டும் தான் இவர்கள் வீட்டில் இருப்பார்கள். இவர்களின் சம்பளமும் மிகச்சில ஆயிரங்களில் தான் இருக்கும்.

என்னுடன் ஏழுமலை என்ற நண்பன் படித்தான். அவனது வீடு கடம்பத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் உள்ளே உள்ள தண்டலம் என்ற கிராமமாகும். அவனது அப்பா அரக்கோணத்தில் உள்ள ரயில்வே ஷெட்டில் வேலைப் பார்த்து வந்தார். அவர்களுக்கு நிலமும் இருந்தது. அவன் வீட்டிலிருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு வில்லிவாக்கம் வந்து சேருவான். வேலைநேரம் 7 மணியிலிருந்து 04.30 வரையிருக்கும். அதன் பிறகு புறப்பட்டு வீட்டிற்கு செல்ல 8மணியாகி விடும். நான் சென்னையிலேயே தங்கியிருந்ததால் இது போன்ற அவர்களின் வழக்கமான நடவடிக்கைகள் எனக்கு வித்தியாசமாகவே இருக்கும். அவனது வீட்டில் அப்படியே கிராமத்தானாவே வாழ்வார்கள். மாடு, வயல், விவசாயம் எல்லாம் அவர்களது வழக்கமான வாழ்க்கையாக இருக்கும். ஆனால் அவர்கள் சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள்.

எனக்கு கிராமம் என்றால் சென்னையிலிருந்து புறப்பட்டு ஒரு இரவு பயணம் செய்து மறுநாள் காலை செல்லும் ஊர்களில் வருவது தான். கிராமத்தில் வசித்து சென்னையில் வேலை பார்க்கும் இவர்கள் உண்மையில் வித்தியாசமானவர்கள் தான்.

----------------------------------------------

இனி பதிவர் அறிமுகம். வெறும் பதிவர் மட்டுமல்ல என் நல்ல நண்பர்கள் கூட.

கண்டிப்பாக நான் இவரை அறிமுகப்படுத்த யோசித்தேன். ஏனென்றால் எனக்கு பதிவுலகில் சீனியர். இருந்தாலும் எனக்கு இனிய நண்பர். இவரைப்போல் பதிவர்களை கலாய்ப்பதில் மற்றவர்கள் பின்வரிசையில் தான் நிற்க வேண்டும். அவர் என் சிறந்த நண்பர் சிவக்குமார். அவரின் மெட்ராஸ்பவன் மற்றும் நண்பேன்டா. அது மட்டுமில்லாமல் கவுண்டமணிபேன்ஸ் என்ற வலைத்தளத்திலும் எழுதி வருகிறார். தனக்கு ஹிட்ஸ் தேவையில்லை என்று இன்று வரை தன்னுடைய பதிவுகளை திரட்டியில் இணைக்காத நேர்மையான பதிவர்.

அடுத்தது கலாய்ப்பாளர் நண்பர் நாய் நக்ஸ் நக்கீரன். இவர் பதிவு அதிகம் எழுத மாட்டார். ஆனால் நண்பர்கள் எந்தப் பதிவுபோட்டாலும் அவர்களை கலாயத்து பின்னூட்டமிடுவதில் மன்னர்.

அடுத்த நண்பர் ஆணிவேர் என்ற பதிவு எழுதி வரும் சூர்யஜீவா. இவர் கம்யூனிச கொள்கையை சார்ந்தவர். நானே, எனக்கு ஏன் பின்னூட்டமிடவில்லை என்று கேட்டால் எனக்கு சினிமா பதிவுகள் மற்றும் குடி பற்றிய பதிவுகள் பிடிக்காது எனவே நான் பின்னூட்டமிட மாட்டேன் என்று சொன்ன நேர்மையாளர்.

தஞ்சை சங்கர் என்ற பெயரில் எழுதி வரும் சங்கர நாராயணன் புதியவர், அவரிடமிருந்து நிறைய பதிவுகள் பண்பட்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

நான் எழுதிய நண்பன் படத்திற்கு எழுதிய விமர்சனத்தை அடுத்த அரைமணிநேரத்தில் அதனை காப்பி செய்து போட்டு அதன் மூலம் ஹிட்ஸ் பெற்று எனக்கே போன் செய்து உங்கள் பதிவால் தான் எனக்கு ஹிட்ஸ் கிடைத்தது என்று சொல்லிய தைரியசாலி தஞ்சை குமணன்.

ஆரூர் முனா செந்தில்

மேலும் வாசிக்க...

Friday, January 20, 2012

நாள் 5 திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் மற்றும் பதிவர் அறிமுகம்





மதம், கடவுள் என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை. அது போல் கடவுள் இல்லை என்ற நம்பிக்கை என்னுடையது. ஆனால் அதனை கூறுவதற்காக நான் இந்த பதிவை இடவில்லை. எந்த சூழ்நிலையிலும் எந்த கொள்கைக்காகவும் என் ஊர் கோயிலை மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். தஞ்சை பெரிய கோயிலுக்கு சில நூற்றாண்டுகள் முன்பே கட்டப்பட்டது திருவாரூர் பெரிய கோயில். என்னுடன், என் இளம்வயதில் என் நண்பனாக என் நிழலாக என்னுடன் இருந்தது திருவாரூர் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமி திருக்கோயில் தான். என் வீடு கோயிலின் மிக அருகில் அதாவது 100 மீட்டருக்குளேயே உள்ளது. முன்பெல்லாம் கோயிலில் அந்தஅளவுக்கு கூட்டம் இருக்காது ஆனால் மிகப்பெரிய கோயில். கோயிலின் மொத்தப் பரப்பளவு 5 ஏக்கர். கமலாலய குளம் அந்த அளவுக்கு பெரியது தான்.





சிறு வயதிலிருந்து எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு ஓதுவார் இருந்தார், அவருக்கு கோயிலில் தான் வேலை. விடியற்காலை 4 மணியிலிருந்து கோயிலில் அவர் தான் பாடுவார். காலை நேரத்து பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வந்து மாலை 6 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜையிலும் தினந்தோறும் அவரே பாடுவார். கோயில் மைக் செட் வைத்து கட்டியிருப்பார்கள். அதனால் மொத்த திருவாரூர் நகர் முழுவதும் அவர் பாடுவது கேட்கும். அவர் மிகச்சிறு வயதில் அதாவது என்னுடைய 4 வயதிலிருந்து அவர் காலை கோயிலுக்கு போகும் போது என்னையும் அழைத்து சென்று விடுவார். அவருடனே காலையிலிருந்து கோயிலில் இருந்து விட்டு எட்டு மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்து பள்ளிக்கு புறப்படுவது எனது அந்த வயதில் அன்றாட பழக்கம்.







அது மட்டுமில்லாமல் எங்கள் தெருவில் உள்ள நண்பர்கள் அனைவரும் கால் பரிட்சை, அரைப் பரிட்சை மற்றும் முழுப் பரிட்சை காலங்களில் கோயிலில் அமர்ந்து தான் படிப்போம். காலையிலிருந்து மதியம் சாப்பாட்டு நேரம் வரை கோயிலில் தியாகராயருக்கு இடப்புறம் அதாவது நீலோத்பலாம்பாள் சன்னதிக்கு வலப்புறம் சிறு சிறு கோயில்களாக நிறைய லிங்கங்கள் இருக்கும். அதில் ஆளுக்கொரு சிறு கோயிலின் உள் அமர்ந்து படிப்போம். மதியம் புறப்பட்டு பள்ளிக்கு சென்று தேர்வழுதுவோம்.

அதே போல் நாங்கள் முதன் முதல் கிரிக்கெட் விளையாடியதும் கோயிலில் வெட்டவாசல் கோபுரத்தின் உட்புறம் உள்ள புல்வெளிகளில் தான். அங்கு ஒரு நெல்லிக்காய் பிள்ளையார் என்று ஒரு கோயில் இருக்கும். தரையிலிருந்து ஒரு சாண் உயரமே இருக்கும். அதனருகில் தான் ஸ்டம்பு நட்டு கிரிக்கெட் விளையாடுவோம். இப்பொழுது போல் ரெடிமேட் பேட் கிடையாது. பேட் வேண்டுமென்று என் தாத்தாவிடம் அடம் பிடித்து அவர் ஆசாரியிடம் சொல்லி செய்து கொடுத்த பேட் அது. நீண்ட நாட்களுக்கு 8ம் வகுப்பு படிக்கும் வரை அதனை வைத்து தான் கிரிக்கெட் விளையாடுவோம். ரப்பர் பந்து மட்டுமே. துவக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளிக்கு மாறிய பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு கோயிலில் வெட்டவாசல் கோபுரத்தின் வழியாக உள்நுழைந்து ராஜகோபுரத்தின் வழியாக வெளி வந்து தான் பள்ளிக்கு செல்வோம்.







பதின் வயதில் முதன் முதலாக சைட் அடிக்க ஆரம்பித்ததும் கோயிலில் தியாகராஜ சுவாமிக்கு நடக்கும் சாயட்சை பூஜையின் போது தான். இன்னும் நிறைய, நிறைய இருக்கிறது. அதனை பொதுவிடத்தில் சொல்வது நன்றாக இருக்காது. அதனால் அது வேண்டாம்.

என்னுடன் கலந்து விட்ட கோயில் எனக்கு அங்குலம் அங்குலமாக அத்துப்படி. இன்றும் சரி திருவாரூருக்கு சென்றால் முதல் நாளே கோயிலுக்கு சாயரட்சை பூஜைக்கு செல்வது எனது வழக்கம். ஆனால் இப்பொழுதெல்லாம் கூட்டம் அதிகமாகி விட்டதால் அதன் தனித்தன்மையை இழக்க ஆரம்பித்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.



--------------------------------------------------


இனி வலைப்பதிவுகள் அறிமுகம்.

எதைஎதையோ எழுதி விட்டு சமையலை மட்டும் விட்டு விடுவோமா. எனக்கு மிகவும் பிடித்தது சாப்பிடுவது தான். அதற்காக எந்த அளவுக்கு ரிஸ்க்கையும் நான் எடுப்பேன். நான் காதல் திருமணம் புரிந்தவன் தான். என் மனைவியிடம் நன்றாக சமைக்கத் தெரிந்தவள் என்று தெரிந்த பின்பே காதலை சொன்னவன். ஏனென்றால் என் மனைவி சொந்தங்களின்றி என்னை திருமணம் செய்யும் வரை ஹாஸ்டலிலேயே வளர்ந்தவள், அதனால் தான்.

கோவை2தில்லி என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் ஆதி அவர்களின் வாழைப்பூ பருப்புசிலி என்ற ரெசிபியை நானே சமைத்து வீட்டில் சபாஷ் வாங்கியவன். காஜர் ஹல்வாவும் சூப்பர் தான். தக்காளி தோசை பட்டைய கிளப்புது போங்கோ.

மீராவின் கிச்சன் என்ற வலைத்தளத்தில் வரும் ரெசிபிக்கள் அட்டகாசம். அதிலும் இந்த குழிப்பணியாரம் ஏ ஒன். ஆப்கான் ரெய்தாவும், மாங்காய்-வேப்பம் பூ பச்சடியும் சூப்பரோ சூப்பர். இன்னும் நிறைய உள்ளது அவரது வலைத்தளத்தில் சென்று படித்து பாருங்கள்.

பிதற்றல் என்ற வலைத்தளத்தில் வரும் சமையல் குறிப்புகள் அட்டகாசம். அதில் முதலாவதாக பெப்பர் சிக்கன் அசைவப் பிரியர்களுக்கு சூப்பர் டிஷ். வித்தியாசமான சிக்கன் பொறியல்… மற்றும் சிக்கன் போண்டா செய்து பாருங்கள்.

மரகதம் என்பவர் எழுதி வரும் வலைத்தளத்தில் உள்ள சமையல் குறிப்புகளை முயற்சித்து விட்டு பேசுங்கள். அதில் ரவா பொங்கல் என்ற ரெசிபி உள்ளது. நான் சிறு வயதில் பாபநாசத்தில் உள்ள ஒரு அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டது. இப்பொழுது அந்த கடை இல்லை. எனக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது. அப்புறம் பால் போளி. நான் நினைக்கிறேன். இவர் தஞ்சாவூர்க்காரராக இருப்பார் என்று. முந்திரி அமிர்தம் என்ற இந்த ரெசிபியும் சூப்பரோ சூப்பர்.





ஆரூர் மூனா செந்தில்



மேலும் வாசிக்க...

Thursday, January 19, 2012

நாள் 4 டிராவல்ஸின் அடாவடியும் பதிவுகள் அறிமுகமும்

சாதாரணமாக திருவாரூரிலிருந்து சென்னை வர டிராவல்ஸ் பஸ்ஸில் 300ரூபாய் டிக்கெட் வாங்குவார்கள். நேற்று நான் 600 ரூபாய் கொடுத்து சென்னை வந்தேன். சாதாரணமாக என் காரில் 500ரூபாய்க்கு பெட்ரோல் சென்னையிலும் 500ரூபாய்க்கு பாண்டியிலும் பெட்ரோல் போட்டால் சென்னையிலிருந்து திருவாரூர் வந்து விடுவேன். என்னையும் என் மனைவியும் சேர்த்து இரண்டு டிக்கெட்டுக்கு400ரூபாய் ஏன் தண்டம் பண்ணனும் என்று நினைத்து பஸ்ஸில் வந்தால் அதை விட அதிகமாக புடுங்குகிறான்கள். எல்லாம் நம்ம நேரம். நானாவது பரவாயில்லை. இந்த காசை கொடுக்க முடியாமல் அரசுப்பேருந்துக்காக காத்திருந்த எவ்வளவோ பேரை நேற்று நான் திருவாரூர் பேருந்து நிலையத்தில் கண்டேன். அவர்களெல்லாம் எவ்வாறு சென்னை வந்து சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது வாழ்க ஜனநாயகம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

---------------------------

பேருந்து நிலையத்தில் அடாவடி தாங்க முடியவில்லை. சென்னையிலிருந்து ஊருக்கு போகும் போது நேரமாகி விட்டதால் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் என் பைக்கை பார்க் செய்து விட்டு சென்றிருந்தேன். நான் விட்ட நாளிலிருந்து கணக்கு செய்தால் ஒரு நாளைக்கு 20ரூபாய் வீதம் 120ரூபாய் தான் ஆனது. ஆனால் இவர்கள் ஏதோ கணக்குப் போட்டு 160 ரூபாய் கேட்டார்கள். நான் என் மனைவியுடன் நின்று சண்டை போட தயக்கமாக இருந்ததால் கேட்ட காசை கொடுத்து விட்டு நகர்ந்தேன். எவன்தான்டா இவனுங்களையெல்லாம் கேக்கிறது.

-------------------------

பதிவுகள் அறிமுகம்

தெட்சிணா என்ற பதிவரின் பதிவுகள் மிகவும் புரட்சிகரமாக இருக்கிறது. இவர் நான் தமிழன் கட்சியின் அபிமானி என்று நினைக்கிறேன். இவரின் டாம் 999 மத்திய அரசு நிலைப்பாடு கண்டனத்திற்குரியது – சீமான் அறிக்கை , மற்றும் லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! , மற்றும் மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம்

வீடு சுரேஸ் குமார், இவர் புதிய பதிவர் அல்ல, எனது பதிவுலக நல்ல நண்பர். அவரது இடுகைகளும் கவனிக்கத்தக்கவை. நான் எழுதாவிட்டாலும் அவருக்கென்று பதிவுலகில் நல்ல மதிப்பு இருக்கிறது. இவரின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியும் தமிழனின் கோவணத்தை உறுவும் தந்திரமும் என்ற பதிவு குறிப்பிடத்தகுந்தது.

இப்படிக்கு இளங்கோ என்ற பெயரில் எழுதும் இளங்கோ அவர்களின் சினிமா : 12 ஆங்ரி மென் (12 Angry men ) என்ற உலகப்பட விமர்சனம் நன்றாக இருந்தது.


Chilled Beers என்ற பெயரில் எழுதி வரும் பதிவர் பல்சுவைகளில் கலக்குகிறார்.
செம ஹாட்டாக ஹன்சிகா, குஷ்பூ பற்றியெல்லாம் எழுதி ஈர்க்கிறார் அதேமாதிரி மதுரக்காரைங்க சினிமா என்ற பதிவில் சினிமாக்காரங்க அடிக்கும் லொள்ளைப் பற்றி எழுதியுள்ளார். ஒஸ்தி, மெளனகுரு என்று சமீப சினிமாக்களுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அதே சமயம் சாருவின் எக்சைல், வெற்றிலைக்கு அந்த வாசம் வந்த கி.ராவின் கதை என்று இலக்கியத்திலும் புகுந்து விளையாடுகிறார். இவர் எழுத்தைப்பார்த்தால் இவர் அறிமுகப்பதிவர் அல்ல என்றும் பழைய பதிவர் புதிய பெயரில் வந்து விளையாடுகிறார் என்றும் தோன்றுகிறது. இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நமது பிலாசபி பிரபாகரன் அவர்கள்.

ஆரூர் மூனா செந்தில்

மேலும் வாசிக்க...

Wednesday, January 18, 2012

நாள் 3 : மாட்டுப்பொங்கலும் இடுகை அறிமுகமும்

மக்களே வணக்கம், அனைவரும் என்னை மன்னிக்கவும். நேற்று என்னால் இணையத்திற்கு வரமுடியவில்லை. சென்னையில் இருந்தால் நான் பொதுவாக ஒரு நாளில் குறைந்தது 15 மணிநேரம் இணையத்தில் இருப்பேன். பொங்கல் பண்டிகைக்காக நான் திருவாரூர் வந்துள்ளேன். இங்கு நான் எனது கடைக்கோ, கடை திறக்காத நாட்களில் பிரவுசிங் சென்டருக்கோ சென்று தான் இணையத்தில் வருவேன். நேற்று என் தம்பியின் திருமண விஷயமாக பெண் வீட்டார் எங்களது வீட்டிற்கு வந்து விட்டனர். எனவே நேற்று முழுவதும் நான் வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயம். இன்றும் ஒரு பதிவு மட்டுமே. இன்றிரவு புறப்பட்டு நாளை சென்னை சென்று விடுவேன். நாளை முதல் நமது பக்கம் களைகட்டும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

பொங்கலெல்லாம் நல்லபடியாக இருந்திக்கும் என்று நினைக்கிறேன். நான் கிராமத்தான். எங்கள் வீட்டில் பொங்கல் மற்றும் இதர மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தான் மற்ற விஷேசங்களை விட சிறப்பாக இருக்கும். அதிலும் மாட்டுப் பொங்கலன்று எங்கள் வீட்டு மாடுகளையெல்லாம் சிறப்பாக குளத்தில் குளிப்பாட்டி விட்டு நாங்களும் அவற்றுடன் நீந்தி விளையாடி விட்டு மாட்டின் கொம்புகளுக்கு வர்ணமடித்து மாலைகள் சூட்டி ஊரில் உள்ள மற்ற மாடுகளுடன் ஊர்வலம் நடத்தி அவற்றுக்கென பிரத்யேகமாக செய்யப்பட்ட பொங்கலை படைத்து விட்டு மாட்டுக்கு சாப்பிடக் கொடுப்போம். அதற்குள் எங்கள் வீட்டில் அன்றிறவு எங்கள் தாத்தாவுக்கு படைப்பதற்காக அனைத்து வகை அசைவங்களையும் சமைத்திருப்பர். மட்டன், சிக்கன், மீன், நண்டு, இறால், கருவாடு, காடை, பயிறு பாயசம், முருங்கைக்கீரையுடன் எங்கள் தாத்தாவுக்கு மிக்வும் பிடித்த சார்மினார் சிகரெட், ஒரு குவாட்டர் ஆகியவற்றை படைத்து நாங்கள் சாப்பிட்டோம். ஆகா மீண்டும் அடுத்த மாட்டுப்பொங்கலுக்காக காத்திருக்கும் அளவுக்கு இருக்கும் அந்த விருந்து.

--------------------------------------------------

இன்று கவிதைப் பதிவுகள்

முதலாக எனது மதிப்பிற்குரிய அண்ணன் திரு. கேஆர்பி அவர்களின் அவர்களுக்கு வீடென்று எதுவும் இல்லை. அடுத்த கவிதை பாழாய்ப் போகும் நிலங்கள் (ஒரு பின் நவீனத்துவ கவிதை?). அடுத்த கவிதை மழை நாட்கள்...

மதிப்பிற்குரிய பெரியவர் புலவர் ராமனுசம் அவர்களின் எத்தனை காலம் ஆனாலும் !, அடுத்ததான என்றும் இளமை குன்றா மொழியே. அடுத்த கவிதையான மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே.


குருசு சாக்ரடீசின் உள்ளங்கை தீவுகள்.



ராஜா சந்திரசேகரின் மழையில்.

நாகேந்திர பாரதியின் வயதும் வருடமும்.

நன்றி.

ஆரூர் மூனா செந்தில்


மேலும் வாசிக்க...

Monday, January 16, 2012

எனது பதிவுகள்.



நாம் எழுதிய நன்றாக ரசிக்கப்படும் என்று நாம் எழுதிய சில பதிவுகள் சில சமயம் வெத்து வேட்டாக போவதுண்டு. அது போல் நான் ரசித்து சிலாகித்து எழுதியவை சில, அவை என் பதின் வயதுகளில் என்னுடைய குறும்புகளின் தொகுப்பாக இருக்கும்.

ஒரு முறை என் பெரியம்மா வீட்டுக்கு போய் திருவிழாவுக்காக ஒரு கிராமத்திற்கு வாங்கி வந்த பரபரப்பான பல்பு. ஆனால் அது அதிக பதிவர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது.

பிறகு ஏதோ ஒரு தலைவரின் கடைசி நாளை எழுதப்போக அது நன்றாக மற்ற பதிவர்களால் கவனிக்கப்பட்டு அதன் பிறகு மாதம் 10 தலைவர்களின் கடைசி நாட்களை எழுதி வருகிறேன்.

அதன் பிறகு திரை விமர்சனங்கள். எப்பொழுதும் சிபி அண்ணன் தான் முதல் விமர்சனத்தை எழுதுவார். ஆனால் நான் சென்னையில் இருப்பதால் சில பெரிய படங்களுக்கு சிறப்புக்காட்சிகள் அதிகாலையிலேயே நடக்கும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு எழுதிய சினிமா விமர்சனங்கள் தான் அதிக ஹிட்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.

ஆரூர் மூனா செந்தில்


மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஆரூர் மூனா செந்திலாகிய நான் இன்று முதல்.

சக பதிவர்களுக்கு என் இனிய வணக்கங்கள்,

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்கும் நான், இந்த பொறுப்பிற்கு என்னை பரிசீலித்து நியமனம் செய்த அன்பின் சீனா அய்யா அவர்களுக்கும், திரு. தமிழ்பிரியன் அவர்களுக்கும், சகா. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு என் இனிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சக வலைப்பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். திமுகவினருக்கு மட்டும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (துவங்கியவுடனே உள் குத்தா).

இன்று என்னைப் பற்றிய சுய அறிமுகம் என்று சொன்னார்கள். எனக்கெல்லாம் தேவையா என்று நினைத்தாலும் பெரியோர்களுக்காக அவையடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.

என் இயற்பெயர் செந்தில் குமார். கடந்த ஒரு வருடமாக தோத்தவன்டா என்ற வலைப்பதிவை ஆரூர் மூனா செந்தில் என்ற பெயரில் நடத்தி வருகிறேன். இதனால் எனக்கு கிடைத்த பலன் அறிவு சார் நண்பர்கள் மட்டுமே.

எனது பூர்வீகம் திருவாரூர். பிழைக்க சென்னை. ஆனால் என் அப்பாவுக்கு பூர்வீகம் பட்டுக்கோட்டை. பிழைக்க திருவாரூர். சரி என் பாட்டனாரை எடுத்துக் கொணடால் பூர்வீகம் திருக்காட்டுப்பள்ளி, பிழைக்க பட்டுக்கோட்டை. முப்பாட்டனார் நீடாமங்கலம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் பிழைக்க வந்தது திருக்காட்டுப்பள்ளிக்கு. இதனால் என்ன தெரிகிறது என்றால் யாருடைய பூர்வீகத்தை எடுத்துக் கொண்டாலும் இரு தலைமுறைகளுக்கு மேல் ஒரே ஊராக இருந்திருக்க வாய்ப்பில்லை. (போதும்டா மொக்கை என்பவர்களுக்காக இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.)

நான் திருவாரூரில் உள்ள வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவன். பட்டயப்படிப்பிற்காக சென்னையில் உள்ள ஐசிஎப்பில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து முடித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக 10 வருடம் வேலை பார்த்தவன். தற்போது ரயில்வேயில் பொறியாளராக பணியில் சேர இருக்கிறேன்.

நாளை முதல் இரண்டு பாராவாக எழுத இருக்கிறேன். முதல் பாரா என்னுடைய பதிவு, இரண்டாவது பாரா புதிய பதிவர்கள் பற்றிய அறிமுகம். தினம் ஒருவராக அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன்.

மீண்டும் நாளை சந்திப்போம்.

ஆரூர் மூனா செந்தில்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது