பெண்ணின் பெருந்தக்க யாவுள?
➦➠ by:
கவிஞர் கி. பாரதிதாசன்
வலைச்சர
நண்பர்களுக்கு வணக்கம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள?
வெண்பாக் கொத்து
குறள் வெண்பா
பெண்ணின் பெருமையைப் பேணும் உலகினில்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!
நேரிசைச் சிந்தியல் வெண்பா
பெண்ணின் அழகால் பெருகிவரும் பாட்டாறு!
கண்ணுள் புகுந்து களிப்பூட்டும்! - தண்மலரின்
வண்ணம் மணக்கும் மலர்ந்து!
இன்னிசைச் சிந்தியல்
வெண்பா
பெண்ணின் விடுதலையைப் பேணாத் திருநாட்டில்
நண்ணும் இருளே! நரிகள் அரசாண்டால்
மாண்பு வருமோ மலர்ந்து?
நேரிசை வெண்பா
பெண்ணின் சிறப்பால் பெருகும் வளம்ஏற்பீர்!
பண்ணின் இனிய பயனேற்பீர்! - விண்ணருளின்
ஆட்சி மணக்கும் அழகேற்பீர்! அந்தமிழின்
மாட்சி மணக்கும் மலர்ந்து!
இன்னிசை வெண்பா
பெண்ணின் தவமுணர்ந்து பேசும் நிலத்தினிலே
எண்ணிலா ஏற்ற எழில்மேவும்! நல்லியற்கைத்
தண்மை தழைக்கும்! தமிழ்காட்டும் வள்ளலென
வண்மை தழைக்கும் மலர்ந்து!
பஃறொடை வெண்பா
பெண்ணின் வடிவமாய்ப் பேசும் மொழிகொண்டோம்!
மண்ணின் வடிவமாய் மாண்பளித்தோம்! - தண்ணதிக்கு
அன்னை பெயர்படைத்தோம்! அன்பு வயலென்றோம்!
பொன்னை நிகர்த்த பொலிவென்றோம்! - உன்னை
அளித்த அருமறையே அம்மா! இதனை
உளத்துள் பதித்தால் உயர்வாய்! - வளமெய்தக்
கண்ணின் மணியாய்க் கருந்தேந்தும்! இங்குரைத்த
உண்மை உணர்ந்தே உலகம் உருண்டால்
நலங்கள் மணக்கும்! நறுஞ்சோலை போன்று
வளங்கள் மணக்கும் மலர்ந்து!
இலக்கண விளக்கம்
வெண்பாத் கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல்
வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா
இடம்பெறவேண்டும்.
அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும்
ஒன்றாக வரவேண்டும்.
மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணின்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன.
'மலர்ந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் சிமோன் இராசசேவரி - பிரான்சு
வலைப்பூ: பிரான்சு
கம்பன் மகளிர் அணி
செம்மைத் தமிழ்ப்பூ! சிறக்கும் வழிகாட்டும்!
தம்மை அளித்துத் தமிழ்காக்கும் - கம்பன்
கழக மகளிர் நடத்துகின்றார்! காண்க
அழகின் சிகரம் அது!
http://francekambanemagalirani.blogspot.fr
------------------------------------------------------------------------------------------------------------
மாலதி -
புதுக்கோட்டை
வலைப்பூ: Malathi
மணக்கும் தமிழ்த்தாயின் மாண்புகளை அள்ளி
இணைக்கும்! இனிமை இசைக்கும்! - குணமிகுந்த
மாலதி பின்னும் வலைப்பூ! செழுந்தமிழின்
பாலதில் ஊறும் படி!
------------------------------------------------------------------------------------------------------------
மு. கீதா - புதுக்கோட்டை
வலைப்பூ: Thendral
வண்ணத் தமிழை வலம்வரும் மு.கீதா!
எண்ணம் முழுதும் எழில்தமிழே! - தண்ணிலவு
பாட்டரங்கம் பாடிப் படைத்திடுவார்! பண்ணிசை
மீட்டரங்கம் என்பேன் வியந்து!
http://velunatchiyar.blogspot.com/2015/08/blog-post_7.html
------------------------------------------------------------------------------------------------------------
மைதிலி கஸ்துாரி
ரங்கன் - புக்கோட்டை
வலைப்பூ: மகிழ்நிறை
மகிழ்நிறை வண்ண வலைகண்டேன்! அங்குப்
புகழ்நிறை ஆக்கம் புசித்தேன்! - அகழ்வினை
ஏந்தி அளித்த எழுத்துக்குள், இன்றமிழாள்
நீந்திக் குளிப்பாள் நெகிழ்ந்து!
------------------------------------------------------------------------------------------------------------
ஞா. கலையரசி
வலைப்பூ: ஊஞ்சல்
கலையரசி நற்பதிவைக் காணும் மனத்தார்
வலையரசி என்றுபுகழ் வார்ப்பார்! - மலையரசி
நற்றாள் திருவருளால் பொற்றமிழ்ச் சீர்யாவும்
கற்[று]ஆள் சிறப்பினைக் காண்!
------------------------------------------------------------------------------------------------------------
தேனம்மை லெக்ஷ்மணன்
வலைப்பூ: சும்மா
தேனம்மை பூவலை! தென்தமிழின்
பாவலை!
வானொண்மை கொண்ட மணிவலை! -
நானும்மைக்
காண அழைத்தேன்! கவிதைக் கலையழகைப்
பேண அழைத்தேன் பிணைந்து!
------------------------------------------------------------------------------------------------------------
வேதா. இலங்காதிலகம்
வலைப்பூ: வேதாவின் வலை
வேதா தரும்எழுத்துள் வெல்லும்
வியன்தமிழ்
மாதா இருந்து மகிழ்திடுவாள்!
- ஓதுவதில்
காட்சி அளிப்பாள்! கனிக்கவிதை
வந்தொளிர
மாட்சி அளிப்பாள் மணந்து!
------------------------------------------------------------------------------------------------------------
மகேசுவரி பாலச்சந்திரன்
வலைப்பூ: பாலமகி பக்கங்கள்
கோலமிகும் வண்ணம் குளிர்தமிழ்
கொண்டொளிரும்
பாலமகி பக்கங்கள் பார்த்துவந்தேன்!
- ஞாலமிதில்
தொன்மை நிலையுணர்த்தும்! சொல்லும்
சுவையுணர்த்தும்!
நன்மை நிலையுணர்த்தும் நன்கு!
------------------------------------------------------------------------------------------------------------
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
வலைப்பூ: தேன் மதுரத் தமிழ்
தேமதுரச் செந்தமிழைச் செப்புகிறார்!
உண்டுநான்
மாமதுரம் என்றே மயங்குகிறேன்!
- பா..மதுர
பாரதி சொல்கின்றேன்! பாவை
கிரேசிடம்
சீரதிகம் பொங்கும் செழித்து!
------------------------------------------------------------------------------------------------------------
மனோ சாமிநாதன்
வலைப்பூ: முத்துச்சிதறல்
முத்துச் சிதறல்! முகங்காட்டும் கண்ணாடி!
கொத்து மலர்குவிப்பு! கொஞ்சுதமிழ் - கத்துகடல்
போல்தொடரும்! கற்ற புலவரின் ஆற்றலுக்கு
மேல்படரும்! இன்பெய்த மேவு!
------------------------------------------------------------------------------------------------------------
உமையாள் காயத்ரி
வலைப்பூ: R.Umayal
Gayathri
புதுக்கவிதை பூக்கும்! மதுக்கவிதை ஏந்தும்!
பொதுப்புவியைக் காணநடை போடும்! - புதுமையொளிர்
மின்பூவை மீட்டும் வியன்உமையாள் காயத்ரி
இன்பூவைக் காண்பீர் இனி!
------------------------------------------------------------------------------------------------------------
கீத மஞ்சரி
வலைப்பூ: கீத மஞ்சரி
நற்கீத மஞ்சரி நன்வலை! நற்றமிழின்
பொற்கீத மஞ்சரி! போற்றிடுவேன்! - கற்பனைக்கு
எட்டாத காட்சிகளை ஏந்தும்! மிகவிரைவில்
கிட்டாத தேனின் கிடங்கு!
------------------------------------------------------------------------------------------------------------
பவித்ரா நந்தகுமார்
- ஆரணி
வலைப்பூ: பவித்ரா
நந்தகுமார்
ஆரணி வாழும் அரும்பவித்ரா நந்தகுமார்
சீரணி கொண்ட செழும்மறத்தி! - பேரணிபோல்
கொஞ்சும் கவிதைகள் கோல விழாநடத்தும்!
நெஞ்சம் நெகிழும் நினைந்து!
------------------------------------------------------------------------------------------------------------
கோமதி அரசு
வலைப்பூ: திருமதி பக்கங்கள்
திருமதி பக்கங்கள்! தீந்தமிழ்த் தாயின்
பெருமதி பக்கங்கள்! பேணும்! - அரும்மதியார்
கோமதியார் தீட்டும் குளிர்ந்த எழுத்தெல்லாம்
பா..மதியார் தீட்டும் படைப்பு!
------------------------------------------------------------------------------------------------------------
மாலதி - சென்னை
வலைப்பூ: மாலதியின்
சிந்தனைகள்
மாலதியின் சிந்தனைகள் மாண்புடைத்து! போராடும்
வேலதின் கூர்மை மிகுவுடைத்து! - ஆலதில்
உள்ள வலிமை உடைத்து! வலைமுழுதும்
அள்ளச் சுரக்கும் அமுது!
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி மலர் துாவுகிறேன்
நல்ல கருத்து நறுங்கவிகள் நல்கினார்
வல்ல வலைப்பணி மாண்பேந்த! - சொல்லரிய
ஊமைக் கனவோதும் ஒண்சோசப்! என்நன்றி
ஆமை அடக்கம் அணிந்து!
நாளும் வருகையை நல்கிய அன்பர்முன்
தோளும் உயர்த்தித் தொழுகின்றேன்! - மூளும்
மொழியுணர்வு தந்தேன்! முதுதமிழ் காக்க
வழியுணர்வு தந்தேன் வடித்து!
புதுவை நகர்வேலு பொற்பணி யாற்றப்
புதுமைக் கவியெனைப் போந்தார்! - எதுகையொளிர்
பாக்கள் படைத்தேன்! பசுந்தமிழால் நன்றியெனும்
பூக்கள் படைத்தேன் புகழ்ந்து!