07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 9, 2015

பெண்ணின் பெருந்தக்க யாவுள?வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்


பெண்ணின் பெருந்தக்க யாவுள?வெண்பாக் கொத்து
குறள் வெண்பா

பெண்ணின் பெருமையைப் பேணும் உலகினில்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் அழகால் பெருகிவரும் பாட்டாறு!
கண்ணுள் புகுந்து களிப்பூட்டும்! - தண்மலரின்
வண்ணம் மணக்கும் மலர்ந்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் விடுதலையைப் பேணாத் திருநாட்டில்
நண்ணும் இருளே! நரிகள் அரசாண்டால்
மாண்பு வருமோ மலர்ந்து?

நேரிசை வெண்பா

பெண்ணின் சிறப்பால் பெருகும் வளம்ஏற்பீர்!
பண்ணின் இனிய பயனேற்பீர்! - விண்ணருளின்
ஆட்சி மணக்கும் அழகேற்பீர்! அந்தமிழின்
மாட்சி மணக்கும் மலர்ந்து!

இன்னிசை வெண்பா

பெண்ணின் தவமுணர்ந்து பேசும் நிலத்தினிலே
எண்ணிலா ஏற்ற எழில்மேவும்! நல்லியற்கைத்
தண்மை தழைக்கும்! தமிழ்காட்டும் வள்ளலென
வண்மை தழைக்கும் மலர்ந்து!

பஃறொடை வெண்பா

பெண்ணின் வடிவமாய்ப் பேசும் மொழிகொண்டோம்!
மண்ணின் வடிவமாய் மாண்பளித்தோம்! - தண்ணதிக்கு
அன்னை பெயர்படைத்தோம்! அன்பு வயலென்றோம்!
பொன்னை நிகர்த்த பொலிவென்றோம்! - உன்னை
அளித்த அருமறையே அம்மா! இதனை
உளத்துள் பதித்தால் உயர்வாய்! - வளமெய்தக்
கண்ணின் மணியாய்க் கருந்தேந்தும்! இங்குரைத்த
உண்மை உணர்ந்தே உலகம் உருண்டால்
நலங்கள் மணக்கும்! நறுஞ்சோலை போன்று
வளங்கள் மணக்கும் மலர்ந்து!

இலக்கண விளக்கம்

வெண்பாத் கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணின்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மலர்ந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.


------------------------------------------------------------------------------------------------------------

கவிஞர் சிமோன் இராசசேவரி - பிரான்சு

வலைப்பூ: பிரான்சு கம்பன் மகளிர் அணி

செம்மைத் தமிழ்ப்பூ! சிறக்கும் வழிகாட்டும்!
தம்மை அளித்துத் தமிழ்காக்கும் - கம்பன்
கழக மகளிர் நடத்துகின்றார்! காண்க
அழகின் சிகரம் அது!

http://francekambanemagalirani.blogspot.fr

 

------------------------------------------------------------------------------------------------------------மாலதி - புதுக்கோட்டை
வலைப்பூ: Malathi

மணக்கும் தமிழ்த்தாயின் மாண்புகளை அள்ளி
இணைக்கும்! இனிமை இசைக்கும்! - குணமிகுந்த
மாலதி பின்னும் வலைப்பூ! செழுந்தமிழின்
பாலதில் ஊறும் படி!------------------------------------------------------------------------------------------------------------


மு. கீதா - புதுக்கோட்டை

வலைப்பூ: Thendral

வண்ணத் தமிழை வலம்வரும் மு.கீதா!
எண்ணம் முழுதும் எழில்தமிழே! - தண்ணிலவு
பாட்டரங்கம் பாடிப் படைத்திடுவார்! பண்ணிசை
மீட்டரங்கம் என்பேன் வியந்து!

http://velunatchiyar.blogspot.com/2015/08/blog-post_7.html------------------------------------------------------------------------------------------------------------


மைதிலி கஸ்துாரி ரங்கன் - புக்கோட்டை
வலைப்பூ: மகிழ்நிறை

மகிழ்நிறை வண்ண வலைகண்டேன்! அங்குப்
புகழ்நிறை ஆக்கம் புசித்தேன்! - அகழ்வினை
ஏந்தி அளித்த எழுத்துக்குள், இன்றமிழாள்
நீந்திக் குளிப்பாள் நெகிழ்ந்து!------------------------------------------------------------------------------------------------------------


ஞா. கலையரசி
வலைப்பூ: ஊஞ்சல்

கலையரசி நற்பதிவைக் காணும் மனத்தார்
வலையரசி என்றுபுகழ் வார்ப்பார்! - மலையரசி
நற்றாள் திருவருளால் பொற்றமிழ்ச் சீர்யாவும்
கற்[று]ஆள் சிறப்பினைக் காண்!------------------------------------------------------------------------------------------------------------

தேனம்மை லெக்ஷ்மணன்

வலைப்பூ:  சும்மா

தேனம்மை பூவலை! தென்தமிழின் பாவலை!
வானொண்மை கொண்ட மணிவலை! - நானும்மைக்
காண அழைத்தேன்! கவிதைக் கலையழகைப்
பேண அழைத்தேன் பிணைந்து!------------------------------------------------------------------------------------------------------------வேதா. இலங்காதிலகம்
வலைப்பூ: வேதாவின் வலை

வேதா தரும்எழுத்துள் வெல்லும் வியன்தமிழ்
மாதா இருந்து மகிழ்திடுவாள்! - ஓதுவதில்
காட்சி அளிப்பாள்! கனிக்கவிதை வந்தொளிர  
மாட்சி அளிப்பாள் மணந்து!------------------------------------------------------------------------------------------------------------


மகேசுவரி பாலச்சந்திரன்
வலைப்பூ: பாலமகி பக்கங்கள்

கோலமிகும் வண்ணம் குளிர்தமிழ் கொண்டொளிரும்
பாலமகி பக்கங்கள் பார்த்துவந்தேன்! - ஞாலமிதில்
தொன்மை நிலையுணர்த்தும்! சொல்லும் சுவையுணர்த்தும்!
நன்மை நிலையுணர்த்தும் நன்கு!------------------------------------------------------------------------------------------------------------


தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
வலைப்பூ: தேன் மதுரத் தமிழ்

தேமதுரச் செந்தமிழைச் செப்புகிறார்! உண்டுநான்
மாமதுரம் என்றே மயங்குகிறேன்! - பா..மதுர
பாரதி சொல்கின்றேன்! பாவை கிரேசிடம்
சீரதிகம் பொங்கும் செழித்து!------------------------------------------------------------------------------------------------------------


மனோ சாமிநாதன்
வலைப்பூ: முத்துச்சிதறல்

முத்துச் சிதறல்! முகங்காட்டும் கண்ணாடி!
கொத்து மலர்குவிப்பு! கொஞ்சுதமிழ் - கத்துகடல்
போல்தொடரும்! கற்ற புலவரின் ஆற்றலுக்கு
மேல்படரும்! இன்பெய்த மேவு!------------------------------------------------------------------------------------------------------------


உமையாள் காயத்ரி
வலைப்பூ: R.Umayal Gayathri

புதுக்கவிதை பூக்கும்! மதுக்கவிதை ஏந்தும்!
பொதுப்புவியைக் காணநடை போடும்! - புதுமையொளிர்
மின்பூவை மீட்டும் வியன்உமையாள் காயத்ரி
இன்பூவைக் காண்பீர் இனி!------------------------------------------------------------------------------------------------------------


கீத மஞ்சரி
வலைப்பூ: கீத மஞ்சரி

நற்கீத மஞ்சரி நன்வலை! நற்றமிழின்
பொற்கீத மஞ்சரி! போற்றிடுவேன்! - கற்பனைக்கு
எட்டாத காட்சிகளை ஏந்தும்! மிகவிரைவில்
கிட்டாத தேனின் கிடங்கு!------------------------------------------------------------------------------------------------------------


பவித்ரா நந்தகுமார் - ஆரணி
வலைப்பூ: பவித்ரா நந்தகுமார்

ஆரணி வாழும் அரும்பவித்ரா நந்தகுமார்
சீரணி கொண்ட செழும்மறத்தி! - பேரணிபோல்
கொஞ்சும் கவிதைகள் கோல விழாநடத்தும்!
நெஞ்சம் நெகிழும் நினைந்து!------------------------------------------------------------------------------------------------------------


கோமதி அரசு
வலைப்பூ: திருமதி பக்கங்கள்

திருமதி பக்கங்கள்! தீந்தமிழ்த் தாயின்
பெருமதி பக்கங்கள்! பேணும்! - அரும்மதியார்
கோமதியார் தீட்டும் குளிர்ந்த எழுத்தெல்லாம்
பா..மதியார் தீட்டும் படைப்பு!------------------------------------------------------------------------------------------------------------


மாலதி - சென்னை
வலைப்பூ: மாலதியின் சிந்தனைகள்

மாலதியின் சிந்தனைகள் மாண்புடைத்து! போராடும்
வேலதின் கூர்மை மிகுவுடைத்து! - ஆலதில்
உள்ள வலிமை உடைத்து! வலைமுழுதும்
அள்ளச் சுரக்கும் அமுது!------------------------------------------------------------------------------------------------------------


நன்றி மலர் துாவுகிறேன்

நல்ல கருத்து நறுங்கவிகள் நல்கினார்
வல்ல வலைப்பணி மாண்பேந்த!  - சொல்லரிய
ஊமைக் கனவோதும் ஒண்சோசப்! என்நன்றி
ஆமை அடக்கம் அணிந்து!

நாளும் வருகையை நல்கிய அன்பர்முன்
தோளும் உயர்த்தித் தொழுகின்றேன்! - மூளும்
மொழியுணர்வு தந்தேன்! முதுதமிழ் காக்க
வழியுணர்வு தந்தேன் வடித்து!

புதுவை நகர்வேலு பொற்பணி யாற்றப்
புதுமைக் கவியெனைப் போந்தார்! - எதுகையொளிர்
பாக்கள் படைத்தேன்! பசுந்தமிழால் நன்றியெனும்
பூக்கள் படைத்தேன் புகழ்ந்து!

43 comments:

 1. வணக்கம் !

  வாழ்த்துக்கள் ஐயா !மிகச் சிறப்பாக அனைவரும் கண்டு களிக்கும் வண்ணம்
  தங்களின் வலைச்சர ஆசிரியர் பணியினைச் செவ்வனே செய்து முடித்துள்ளீர்கள் !
  ஒவ்வொரு நாளும் இங்கு வந்து இந்த வலைச்சரத்தைப் பார்வையிட்ட அனைவருக்கும் இரட்டிப்பான மகிழ்வு கிட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
  மென்மேலும் தங்களின் புகழ் ஓங்கட்டும் !இன்று அறிமுகமான அன்பு நெஞ்சங்கள்
  அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !
  வாழ்க வளமுடன் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   முத்தாய் மொழிந்த முதல்கருத்து! பூத்தாடும்
   கொத்தாய் மணத்தைக் கொடுத்ததுவே! - சத்தாகத்
   தந்த கவிதைகள்! தண்டமிழின் நல்லருளால்
   வந்த கவிதைகள் வாழ்த்து!

   Delete
 2. வலைச்சரப்பணியில் இதுவரை நான் இப்படி கவிதையில் ஒரு வாரம் ஆசியராக பணி யாற்றியவலைச்சர ஆசிரியர் தங்களைப்போல யாரையும் கண்டதில்லை ஐயா! வாழ்த்துக்கள். இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்கள் வலையில்இனி சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   தனிமரம் தந்த தகையுடைய சீர்கள்
   கனிமரம் போன்று கமழும்! - இனியதமிழ்ப்
   பற்றேந்தப் பண்டை மரபேந்தப் பாக்கலையைக்
   கற்றேந்தச் செய்தேன் கவி!


   Delete
 3. அருமையாக கவியால் என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி ஐயா.
  தொடர்ந்து உங்கள் கவி மழையை ரசிக்க முடியவில்லை ஊருக்கு போய் விட்டதால்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வாரம் முழுவதும் கவிமழையால் வலைச்சரத்தை குளிரவைத்த உங்களுக்கு வாழத்துக்கள்.,நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   கோமதி வந்து கொடுத்த கருத்துண்டு
   பாமதி ஓங்கும் படந்தென்பேன்! - மாமதியோல்
   மின்னும் வலைவானில் என்றன் வியன்கவிதை
   என்றும் தமிழை இசைத்து!

   Delete
 4. கவிஞரின் பாகண்டு ஆஅவென உள்ளம்
  களித்துச் சிதறும் எழுத்துக்கள் அள்ளி
  சரம்தொடுக்கச் சேர்ந்தது நன்றிநன்றி அன்றி
  பிரிதொரு சொல்லேதும் இல்

  இனிய பாக்களில் அறிமுகங்கள்! மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   ஆகா வெனக்கருத்தை அள்ளி அளித்துள்ளீர்!
   ஓகோ எனவுள்ளம் ஊர்ந்தாடும்! - வா..வா
   வெனத்தமிழை என்றும் வரவேற்பீர்! நன்றே
   இனப்புகழை என்றும் இசைத்து!

   Delete

 5. இந்த வாரம் முழுதும் கவிதை நடையிலேயே வலைப்பதிவர்களை அறிமுகம் செய்து வலைச்சர ஆசிரியார் பணியில் புதுமை படைத்தமைக்கு வாழ்த்துக்கள்! அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   நடன சபாபதியார் நற்றமிழை உண்டு
   திடமனம் கொண்டொளிரும் தீரர்! - கடமையென
   நாளும் வருகையை நல்கினார்! என்கவிதை
   ஆளும் அழகை அணிந்து!


   Delete
 6. ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்தீர்கள் ஐயா... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   தந்த பணியைத் தகைமணக்கச் செய்துள்ளேன்
   சந்தத் தமிழளித்தச் சால்புடனே! - சிந்தையுள்
   பாட்டின் நலமிருக்கும்! பாங்குடன் நான்பிறந்த
   நாட்டின் நலமிருக்கும் நன்கு!

   Delete
 7. மிகச்சிறப்பாக பணி நிறைவு செய்திருக்கின்றீர்கள்..
  என்றும் நினைவில் நிற்கும் தங்களது பணி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   நினைவில் நிலைக்க நெடுந்தமிழை நெய்தேன்!
   கனவில் கவியே கமழும்! - மனமகிழ்ந்து
   சொன்ன கருத்தைச் சுவைத்தேன்! இதைவிட
   என்னவேண் டும்சொல் எனக்கு!

   Delete
 8. ஒரு வாரம் முழுவதும் வலைச்சரத்தை கவிதையால் வார்த்தெடுத்து, அழகு சேர்த்த கவிஞர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! சிறப்பாக ஆசிரியர் பணியை நிறைவு செய்துள்ளீர்கள். நன்றி அய்யா!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   அழகு தமிழ்நாடி ஆசை பெருகிப்
   பழகும் மனத்தைப் பணிந்தேன்! - ஒழுகும்தேன்
   கூடாகக் கட்டினேன் கொண்ட வலைச்சரத்தை!
   ஈடாக இல்லை இனி!

   Delete
 9. அன்பு வணக்கங்கள்!

  சிறப்பான தங்கள் ஆசிரியப்பணிக்கு மனமார்ந்த‌ நல்வாழ்த்துக்கள்!!
  என் வலைத்தளத்தினை இங்கே தங்களின் அழகிய கவிதை வரிகளால் அடையாளம் காட்டிச் சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   நற்சாமி நாதன் நவின்ற கருத்தெண்ணிப்
   பொற்சாமி பூந்தமிழைப் போற்றுகிறேன்! - பற்றுடன்
   பெண்ணின் பெருமையைப் பேசும் பதிவீந்தேன்!
   பண்ணின் சுவையுள் படைத்து!

   Delete
 10. வணக்கம் ஐயா !
  சிறப்பாக தங்கள் பணியை நிறைவுசெய்தீர்
  பிறந்த பயனால் சிறப்பு !

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies

  1. சிறப்பாக இங்குச் செழுந்தமிழைத் தந்தேன்!
   நிறைவாக உண்டு நெகிழ்ந்தீர்! - மறைவாக
   உள்ள மரபுகளை உள்ளம் உவந்திடவே
   அள்ளி அளித்தேன்! அருந்து!

   Delete
 11. பெரும்பாலான அறிமுகங்கள் அறிமுகமானவர்களே. முற்றிலும் கவிதை நடையில், அதுவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், தங்களது பதிவுகள் வித்தியாசமானவையாகவும் மனதில் பதிவனவாகவும் உள்ளன. வலைச்சரத்தில் உங்களது பணி சிறப்பாக அமைந்தமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களது வலைத்தளத்தில் சந்திப்போம்.
  தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பது தொடர்பான எனது முதல் பதிவை http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html இணைப்பில் காண அழைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   நாளும் எனக்கு நலமாக கருத்தளித்தீர்!
   மூளும் எனக்குள் மொழிவளமே! - வாளுடைய
   கூர்மை எழுத்துகள் கொண்டொளிர் நண்பரே
   சீர்மை பெறுவீர் செழித்து!

   Delete
 12. வணக்கம் ஐயா!

  பெண்கள் வலைப்பதிவை வெண்பாவிற் பின்னியே
  கண்கள் மலர்ந்திடக் காட்டினீர்! - விண்மேகம்
  தானிறங்கி வந்துமழை தந்ததுபோல் உம்கவித்
  தேன்மாரி கண்டோம் தினம்!

  உள்ளத்திற் தோன்றி உதட்டில் உதிர்ந்திடும்
  அள்ளிச் சொரிய அழகாகும்! - தெள்ளுதமிழ்
  கொள்ளை இனிமையொடு கூட்டிய பாக்களை
  வள்ளலாய் வார்த்தீர் வடித்து!

  தன்னல மில்லாது தாய்மொழி காத்திடும்
  மென்குண மிக்க கவிஞரே! - உன்னாலே
  பொன்னாய் வலைச்சர வாரம் பொலிந்ததே!
  என்னாளும் காணா எழில்!

  உன்னதம் மிக்க உங்கள் பணி மிகச்
  சிறப்பாக நிறைவேறியுள்ளது கூடவே நாமும்
  இங்கு நாளும் கற்றிடவும் வகையானது.
  மிக்க மகிழ்ச்சி ஐயா!
  உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  இன்று இங்கு அறிமுகமாகும் அனைத்துச் சகோதரிகளுக்கும்
  அன்பு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   முத்தாக மூன்று கவிதைகள்! என்னுயிர்ச்
   சொத்தாகக் கொண்டு சுவைகொண்டோம்! - கொத்தாகப்
   பூக்கொடுத்தோம்! பொங்கும் புகழ்த்தமிழால் நன்றியெனும்
   பாக்கொடுத்தோம் இன்பம் படர்ந்து!

   Delete
 13. வான் மேகம் வலம் சூழ்ந்தென்
  ஊண் உறக்கம் தொலைத்தது காண்
  மான் போல் மருண்டு நின்றேன்
  தேன்கவி மழையை வலைச்சரத்தில்!

  நன்றி அய்யா!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   தேன்போன்று தந்தேன் செழுந்தமிழை! மாண்புகளை
   வான்போன்று தந்தேன் வளமாக! - மான்போன்று
   என்றன் நடையிருக்கும் துள்ளி! தமிழ்காத்து
   வென்ற படையிருக்கும் வேர்த்து!

   Delete
 14. வணக்கம்,
  பாலமகி பக்கங்களைத் தங்கள் பா சரத்தில்
  பார்த்து பரவசப் பட்டது மனம்
  சிறு புல் புலவர்கள் மத்தியில் எனும் போது
  தங்கள் கவிமழையில் வலைச்சரம் நனைந்தது முழுதாய்
  இனி தங்கள் பக்கத்தில் நனைவோம்,
  பணிக்கும் பாவிற்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   ஞாலலெலாம் நம்மின் நறுந்தமிழ்ச் சீரோங்கப்
   பாலமகி பக்கங்கள் மின்னுகவே - காலமெலாம்
   கன்னல் தமிழோடு காதல் கமழுகவே!
   இன்பம் நிறைகவே இங்கு!

   Delete
 15. இவ்வாரம் முழுவதும் தங்களின் கவிமழையில் நனைந்து விளையாடினோம்!
  வித்தியாசமான அறிமுகங்கள் ஐயா!!

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   விந்தை கவியுள் விளையாடி உன்னுடைய
   சிந்தை கவியுள் செழிக்கட்டும்! - சொந்தமென
   வந்துகருத் தீந்தாய்! வளமார் தமிழினிமை
   தந்துகருத் தீந்தாய் தழைத்து!

   Delete
 16. அனைவரும் சிறப்பான பதிவர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ஒருவார காலம் கவிமழையில் வலைப்பூக்களை அறிமுகம் செய்தமை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   ஒருவாரம் ஓங்கும் தமிழுக்கு மின்னும்
   திருவாரம் செய்தளித்தேன் சீா்த்தே! - இரு..ஓரம்
   என்றுளம் எண்ணாமல் இன்றும் கருத்தளித்தீர்!
   பொன்னுளம் கொண்ட பொலிவு!

   Delete
 17. ஐயா வணக்கம் தங்களின் வலைப்பூவின் தேடலில் நானும் உள்ளேன் என்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன் . தங்களின் பாஇயற்றும் தன்மையால் மிகச் சிறப்பாக பா மாலையிட்டு அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் எல்லாவற்றையும் தொகுத்து தனித்தனியாக பா இயற்றி தொகுத்தமை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   வெல்லும் கவிகள் விளைக்கின்ற மாலதியின்
   சொல்லும் செயலும் சுவையுடைத்தாம்! - பல்லாண்டு
   வாழ்கவென வாழ்த்துகிறேன்! வண்ணத் தமிழ்வளங்கள்
   சூழ்கவென வாழ்த்துகிறேன் தோய்ந்து!

   Delete
 18. இன்று வலைச்சரத்தில் ‘ஊஞ்சல்’ ஆடக்கண்டேன்
  நன்றி நவில்வேன் உமக்கு - என்தமிழில்
  வார முழுதும் கவிதை அடைமழை
  யாரும் முயலாப் புதுமை!
  கவிஞர் அவர்களுக்கு வணக்கம். உங்கள் சிறப்பான கவிதை வரிகளால் என் வலைப்பூவும் அறிமுகமாக நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   வல்ல தமிழ்ப்பற்று வாய்த்திட்ட உம்செயலைச்
   சொல்ல நினைத்தேன் சுவைகொடுத்தேன்! - தொல்லுலகில்
   பல்லாண்டு வாழ்க! படைக்கின்றேன் நல்வாழ்த்து!
   சொல்லாண்டு வாழ்க சுவைத்து!

   Delete
 19. வலைச்சரம் இந்த வாரம் முழுவதும் கவிதை மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமாக அணை போட்டுத் தேக்கி வைத்து மகிழ்ந்திடும் வகையில், பின்னூட்டங்களும் கவிதைகளாய் ...தமிழ் வளர்த்த மதுரைத் தமிழ் சங்கம் போல் வலைச்சரமும் ஆகியதோ என்று எண்ணி வியந்தோம். நனைந்தோம். திளைத்தோம்...

  மிக்க நன்றி ! தாங்கள் மிகச் சிறப்பாக நடத்திச் சென்றீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். சகோதரிகளை இங்கு காண்பதில் மிகவும் மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   ஓடும் நதியாகப் பாடும் கவிகண்டீர்!
   சூடும் கருத்தேற்றுச் சொக்குகிறேன்! - பீடுடன்
   ஏற்ற பணியை இனிதே நிறைசெய்தேன்!
   போற்றும் தமிழைப் பொழிந்து!

   Delete
 20. வணக்கம் கவிஞர் அண்ணா !


  பெண்ணரிய பேறில்லை என்னும் உண்மை
  ............பெருமையுறச் சொல்கின்ற வெண்பாக் கொத்தில்
  மண்கமழ மலர்தூவி வைத்தார்ப் போன்று
  ..........வலைச்சரத்தில் மகிழ்ந்தளித்தீர் மாட்சி பொங்கப்
  பண்ணிறைந்த பாதொடுத்துப் படைத்த தெல்லாம்
  ..........பார்முழுதும் வீசிவரத் தென்றல் போன்று
  எண்ணரிய சிந்தனைகள் என்னுள் வீசும்
  ...........எழுதிவிட வழியின்றிக் கண்கள் பேசும் !

  ஒருவாரம் எல்லோர்க்கும் ஓதும் நாளாய்
  ..........ஒண்டமிழில் உரைத்திட்ட பாக்கள் எல்லாம்
  திருவாச கம்போலத் தேனாய்த் தந்தும்
  ..........தித்திக்க வைத்தெம்மை விடைபெற் றாலும்
  விருப்போடு உவந்தளித்த வலைப்பூச் சொந்தம்
  ..........விழிமுட்டி நீர்கசியும் வாழ்த்துச் சொல்லி
  குருவாகத் தொழுகின்ற கோவே உங்கள்
  ..........குளிர்தமிழில் மகிழ்ந்துள்ளம் கொள்வோம் மேன்மை !


  காடுள்ளே மலர்கந்தம் வீணாய்ப் போகக்
  ........கட்டியதை வாழ்மனையில் சேர்த்தார்ப் போன்று
  ஏடுள்ளே இருக்கின்ற எழுத்தை எல்லாம்
  .........எழில்தமிழில் பாட்டாக்கி எம்முள் சேர்த்தீர்
  ஓடுள்ளே மறைந்துள்ள முத்தை எல்லாம்
  .........உலகறியச் சிப்பியதை உடைத்தார்ப் போன்று
  நாடுள்ளே நன்மக்கள் வாழும் வாழ்வின்
  ........நடைமுறைகள் கடைந்துபாக்கள் நாளும் சொன்னீர் !

  இனிய பாக்களுடன் யாப்பிலக்கணங்களும் கற்றுத் தந்து இனிதே ஒருவார வலைச்சர ஆசிரியப் பணியினை நிறைவு செய்து விடைபெறும் எம் குரு கவிஞர் ஐயா கி,பாரதிதாசன் அவர்களுக்கும் இன்றைய அறிமுகப் பதிவர் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 21. Venba vaazhthukku nandri kavingare 😃

  ReplyDelete
 22. ஐயாவணக்கம் என்தளம் அறிமுகம் செய்ததை நான் அறியாமல்
  இருந்துவிட்டேன் நன்றிஐயா.

  ReplyDelete
 23. ஐயாவணக்கம் என்தளம் அறிமுகம் செய்ததை நான் அறியாமல்
  இருந்துவிட்டேன் நன்றிஐயா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது