07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 5, 2015

தொன்மையும் வன்மையும்
தொன்மையும் வன்மையும்

1.
முந்தும்சீர் பாட்டேந்தி மூப்பில்லாத் தொகையேந்தி
     மூவேந்தர் தமிழாண்ட நாடு!
        மொழிகள்தம் தாயாக முல்லைப்பூ வனமாக
            முப்போதும் கவிபூக்கும் காடு!

சந்தம்சீர் தேவாரம் தண்ணாழ்வார் பாவாரம்
     தழைத்தோங்க வாயாரப் பாடு!
        தந்தான புகழ்மாலை தலைமீது நீ..சூடித்
            தமிழென்று.. தமிழென்று.. ஆடு!

சொந்தம்..இவ் வுலகாகத் துயர்போக்கும் உறவாகச்
     சொல்லும்..நம் நூலுக்கே தீடு!
        சுடர்கின்ற சிலம்பென்ன? தொடர்கின்ற மணியென்ன?
            சொர்க்கத்தை இம்மண்ணில் சூடு!

சிந்தைப்பூ பூத்தாட விந்தைப்பூ கூத்தாடச்
     சேர்ந்திங்குத் தமிழ்காக்கக் கூடு!
        வித்தாக நான்தந்த முத்தான கவியுண்க!
             விளையாது.. ஒருநாளும் கேடு!

2.
பூவேந்தும் புகழேந்தும் புதுமைச்சீர் பலவேந்தும்
     பொற்கம்பன் கவிமாட்சி சொல்லு!
        பொன்னேந்தும் ஒளியாகப் பொருளேந்தும் அருட்பாவைப்
            புவியெங்கும் நீ..ஓதிச் செல்லு!

காவேந்தும் வண்ணத்தில் கவிதந்த குயில்காரன்
     கருத்தேந்தி உலகத்தை வெல்லு!
        கனியேந்தும் வண்ணத்தைக் கழையேந்தும் எண்ணத்தைக்
            களிப்பேந்த எந்நாளும் கொள்ளு!

நாவேந்தர் உரைகேட்டு நடைபோடும் நெஞ்சத்துள்
     நன்கூறும் நற்போதைக் கள்ளு!
        நரியான பகையென்ன? அரியான பகையென்ன?
            நாராகக் கிழித்திங்குத் தள்ளு!

மூவேந்தர் போலிங்குப் பாவேந்தர் தமிழ்தந்தார்
     முன்வந்து தமிழ்காக்க நில்லு!
        முன்வந்த இனமன்றோ? அன்பீந்த மொழியன்றோ?
            முறுக்கோடு கவி..பாடித் துள்ளு!

-----------------------------------------------------------------------------------------------------


இலக்கணச்செல்வர் சோசப் விஜீ - திருச்சி
வலைப்பூ: ஊமைக் கனவுகள்


தொன்மைச்சீர் காக்கின்ற வன்மைச்சீர் வலைப்பூவாம்
     சுடர்கின்ற நம்ஊமைக் கனவு!
        தொல்காப்பி யம்கண்டு பல்காப்பி யம்சொல்லும்
            தொடரூட்டும் மொழியேந்தும் துணிவு!

தன்மைச்சீர் பன்மைச்சீர் தாமாய்ந்து கவிபாடத்
     தந்தோங்கும் யாப்பென்னும் உணவு!
        தான்கண்ட நல்லாய்வைத் தேன்கொண்டு பதிவிட்டுத்
            தலையாட்டம் இல்லாத பணிவு!

மென்மைச்சீர் மனங்கொண்டு மேன்மைச்சீர் அறங்கொண்டு
     வினையாற்றும் சோசப்..என் உறவு!
        வெண்பாவில் விளையாடித் தண்பாவில் கவிபாடி
            விளைக்கின்ற எழுத்தோதும் கனிவு!

நன்மைச்சீர் நான்கண்டு நாட்டுக்குச் சொல்கின்றேன்
     நலங்காண நீ..அங்கே உலவு!
        நன்னூலும் தொன்னூலும் பன்னூலும் நீ.கற்று
            நடைபோட்டுத் தமிழோடு குலவு!

http://oomaikkanavugal.blogspot.com/2014/09/blog-post.html

-----------------------------------------------------------------------------------------------------


கவிஞர் நா. முத்துநிலவன் - புதுக்கோட்டை
வலைப்பூ: வளரும் கவிதைகள்


பேச்சாற்றல் எழுத்தாற்றல் தமிழொன்றே தன்னெஞ்ச
      மூச்சாற்றால் நம்முத்து நிலவன்!
ஏச்சாற்றல் கொண்டிங்கே ஏமாற்றும் நபர்மாற
      எழிலாகக் கவிபாடும் புலவன்!
பாச்சாற்றல் தான்கொண்டு பகைசாய்க்கும் வகைகண்டு
      பழிநீக்கிக் கொடிநாட்டும் வலவன்!
பாச்சூட்டிப் பயனூட்டிப் பாருக்கு வளமூட்டிப்
      பண்பாட்டை விளைக்கின்ற உழவன்!

http://valarumkavithai.blogspot.com/2012/01/blog-post_23.html

-----------------------------------------------------------------------------------------------------


முனைவர் ஜம்புலிங்கம் - தஞ்சாவூர்
வலைப்பூ: முனைவர் ஜம்புலிங்கம்


நம்நாட்டு வரலாற்றை நன்காய்ந்து தருகின்ற
      நல்லாற்றல் ஒளிர்சம்பு லிங்கம்!
செம்பாட்டு நூலாய்ந்து செம்மாந்த நெறியாய்ந்து
      செழித்தோங்கச் தமிழேந்தும் சிங்கம்!
எம்பாட்டுச் சிறப்பாக ஈடில்லாச் சுவையூறும்
      இவர்பூவும் தமிழ்த்தாயின் அங்கம்!
வெம்பட்டு மலர்தூவிக் கும்பிட்டு மகிழ்கின்றேன்
      கொடுத்துள்ள பதிவெல்லாம் தங்கம்!

http://drbjambulingam.blogspot.com/2015/03/blog-post.html

-----------------------------------------------------------------------------------------------------


முனைவர் இரா. குணசீலன் - திருச்செங்கோடு
வலைப்பூ: வேர்களைத் தேடி


மொழிகொண்ட வேர்தேடி வினையாற்றும் தமிழ்வாணர்
      முனைவர்.இரா குணசீலர் என்க!
இழிகொண்ட பகையோட இவர்தீட்டும் எழுத்தெல்லாம்
      இனங்காக்க மருந்தாகும் உண்க!
வழிகண்டு சொல்கின்ற வல்லாய்வுச் செல்வர்தம்
      வலைப்பூவை நாள்தோறும் தின்க!
விழிகொண்ட பயனாக எழில்கண்டு மகிழ்ந்தாட
      விரைவாக நீயங்குச் செல்க!

http://www.gunathamizh.com/2010/04/blog-post_06.html

-----------------------------------------------------------------------------------------------------


கொ.சுப. கோபிநாத் - திண்டுக்கல்
வலைப்பூ: இலக்கணத் தேறல்


சீரேந்தும் தமிழ்த்தாயின் பேரேந்தும் ஆய்வீந்து
      செயலாற்றும் சுப.கோபி நாத்தே!
ஊரோங்க, உலகோங்க, உயர்ஞான நிலையோங்க,
      உரமாகும் மின்பூக்கள் பூத்தே!
தாரோங்கும் தமிழாட்சி தந்தோங்கும் ஆக்கங்கள்
      தேரேந்தித் தாமாடும் கூத்தே!
போரேந்தும் மாவீரன் பேரேந்தும் வலைப்பூவைப்
      போய்ப்பார்ப்பீர்! சுரக்கும்தேன் ஊற்றே!

http://www.ilakkanatheral.blogspot.in/2014/04/blog-post.html

-----------------------------------------------------------------------------------------------------

78 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  முத்தான அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் தொடருகிறேன் ஐயா. பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம!

   வலைப்பூவின் தேனீயாய் வாழும்நம் ரூபன்!
   கலைப்பூவின் பொன்மாது காப்பாள்! - மலைப்பூவாய்
   நல்கும் நறுந்தமிழை நன்குண்டு வாழ்ந்திடுக!
   பல்கும் நலங்கள் படர்ந்து!

   கவிஞர் கி. பாரதிதாசன்
   தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
 2. வணக்கம் !

  சிறப்பான அறிமுகங்கள் !அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
  மெய் சிலிர்க்க வைக்கின்றது ஐயா நீங்கள் அறிமுகப் படுத்தும் விதம் !
  வாழ்த்துக்கள் மென் மேலும் சிறப்பாகத் தொடருங்கள் .

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   மெய்சிலிர்க்கும் வண்ணத்தில் மேன்மைக் கவிதைகளைச்
   செய்!சிலிர்க்கும் இவ்வுலகே! சீர்கண்டு - மொய்கின்ற
   அம்பாள் அடியாள் அளிக்கும் கருத்தெல்லாம்
   செம்பால் இனிப்பின் திரட்டு!

   Delete
 3. தமிழ் பாடும் கவிஞர்களை தங்கள் பாட்டால் சிறப்பித்தீர்கள். இவர்கள் பலரின் உள்ளம் கவர் பதிவர்கள்

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   உள்ளம் கவர்கின்ற ஓங்குதமிழ் வாணர்களின்
   இல்லம் இனிக்கட்டும்! என்றென்றும் - வெள்ளமெனச்
   செம்மைத் தமிழாறு சிந்தனையில் பாயட்டும்!
   அம்மை திருவருளில் ஆழ்ந்து!

   Delete
 4. அறிமுகம் அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   அறனகம் பெற்றார்! அரும்வலைப் பூவில்
   அறிமுகம் முன்பே அடைந்தார்! - குறளக
   மேன்மை உரைத்தல் எளிதோ? வியப்பேந்திப்
   பான்மை உரைக்குமென் பாட்டு!

   Delete
 5. தமிழுக்கான உங்களது போற்றிப்பாமாலை மிகவும் அருமையாக இருந்தது. எனது தளம் அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து மகிழ்ச்சி. தனி நடையில் தங்களது பதிவுகள் எங்களது மனதை ஈர்க்கின்றன. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   போற்றும் வகையுணர்ந்து! பொங்கும் தமிழுணர்ந்து!
   ஆற்றும் கடனுணர்ந்து! அந்தமிழில் - சாற்றுகிறேன்
   பாமாலை! பாவலன் பாடிப் படைக்கின்ற
   பூமாலை வாடாப் புகழ்!

   Delete
 6. பாமாலை சூட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதிவர்களில் கவிஞர் கோபிநாத் அவர்களின் வலைப்பதிவு தான் எனக்கு புதியது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   பாமாலை சூடிப் பதிவர் எழிலுரைத்தேன்!
   வா..மாலை இட்டு வரவேற்போம்! - மாமாலை
   வேண்டி அளித்தேன்! வியன்தமிழை என்னுள்ளே
   துாண்டி அளித்தேன் தொடர்!

   Delete
 7. ஆலையோடு கடலலை சேர்ந்தது நம்மூரு
  வலை மாலைச் சூடி மாண்பை பெற்றதாரு?
  தமிழ்ச் சோலையிலே நீ!கட்டும் தேன்கூடு
  அமிழ்தாக இனித்திடுமே கவிபாடு!

  வலை மாலைச் சூடிய இன்றைய வலைஞர்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   கொஞ்சும் தமிழ்வீடு! கோல மலர்க்காடு!
   நெஞ்சுள்அதைச் சூடு! நினைந்தாடு! - விஞ்சுசுவைத்
   தேன்கூடு! தீட்டும் கவியேடு! நீ..பாடு!
   வான்பீடு! வண்டமிழ் நாடு!

   Delete
 8. மெய் சிலிர்க்கின்றது.. ஐயா!..

  இப்படியெல்லாம் அறிமுகப்படுத்தப்படுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  வாழ்க நலம்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   கொடுத்துச் சிறந்தவர்கள்! கோலக் கவிகள்
   தொடுத்துச் சிறந்தவர்கள்! துாய்மை - படுத்தும்
   பணியேற்று நன்மை படைப்பவர்கள்! என்றன்
   அணியேற்று வாழ்க அவர்!

   Delete
 9. Replies
  1. ஐயா வணக்கம்.

   மோனமி ருப்பவ னித்தரை வந்துதித்
        தானதன் நற்கதி பெற்றான்
     மேகம ழைபொழி மத்தள வித்தைகள்
        முத்திட முத்திட இன்பம்!
   கானவி சையொலி கொண்டவர் கேட்டவர்
        கன்னித் தமிழ்வளர்க் கின்றோர்
     காட்டுமி டத்தினில் கண்டவன் தன்பெயர்
        கண்திரை மூடுத லென்னே?
   ஏனல ரும்மர புப்புலம் காப்பவர்
        என்னையு மோர்பொருட் டாக
     இங்குரை செய்தனர் என்தவம் என்தவம்
        எண்ணிட எண்ணிட நெஞ்சம்
   தானம டைந்தவ னத்திறம் வித்தக
        தத்தையாய்ச் சித்தமும் நித்தம்
     தாய்த்தமி ழாய்வளர் பாரதி தாசநின்
        தேன்கவி யெங்குமொ லிக்கும்!


   இப்பொழுதுதான் கண்டேன். பணிக்குச் செல்லும் அவசரம்.

   மீண்டும் வருகிறேன்.

   நன்றி.

   Delete
  2. பெரும்புலவர் அய்யா பாரதிதாசன் அவர்களின் கவனத்திற்கு, எனது பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்ட எழுத்தளவு இதே. இந்த அளவில் தங்கள் பாக்களை அமைத்தால் வரிமுறிப்பு வாராமால் காக்கலாம் என்பதற்கும் நண்பர் விஜூவின் எழுத்தளவை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இருவருக்கும் நன்றி.

   Delete

  3. வணக்கம்!

   சந்தக் தமிழினில் சாற்றிய எண்ணங்கள்
   சிநதை புகுந்து சிலிர்ப்பூட்டும்! - அந்தமிலா
   ஆற்றலைப் பெற்றீர்! அடியேன் வியக்கின்றேன்!
   காற்றென வீசும் கவி!

   Delete

  4. வணக்கம்!

   முத்து நிலவர் மொழிந்த கருத்திற்குக்
   கொத்து மலர்கொடுத்தேன்! கோலமுடன் - இத்திரையில்
   வண்ணத் தமிழொளிர வல்ல வழிசென்னார்!
   அண்ணார் அறத்தின் அரண்!

   Delete
 10. எழுசீர் வண்ணத்தில் எதுகை மோனை விளையாட, என்னையும் அறிமுகப் படுத்திய தங்கள் அன்பிற்கு நன்றி அய்யா.
  எழுத்தளவை (Font Size) சற்றே சிறிதாக்கினால் பாவகை வரிமுறிப்பு இல்லாமல் பார்வையாளர்க்குக் கிடைக்கும் என நினைக்கிறேன். பாவகை அனுபவமில்லாதவர்க்கு வரிமுறிப்புக் குழப்பம் வரும்.
  தங்களின் அன்பிற்கும், தகுந்த பல அறிமுகத்திற்கும் நன்றி அய்யா.

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   எதுகையுடன் மோனை எழுந்தாடும் சந்தம்
   புதுமையுடன் இன்பம் புகுத்தும்! - பொதுமையுடன்
   இந்த உலகோங்க என்றும் எழுதுவதே
   வந்த பிறப்பின் வளம்!

   Delete
  2. எழுத்தளவை மிகுதியாக்கக் கணினியிலே வழியுண்டு.
   எழுதிய தலை எழுத்தினை மாற்றத்தான் இறைவனுக்குமோர் வழியில்லை.

   வலது பக்க கோடியிலே சதுரம் ஒன்று தொன்றுமே !!
   வருடி அதை நிமிண்டினால் வார்த்தை அளவு காணுதே !!

   வலப்பக்கம் சுட்டிடவே கூடுமே அளவு நிலை.
   இடப்பக்கம் அழுத்திட்டால் இருக்கும் அளவும் குறையுமே !!

   எதற்கும் ஒரு சாதனம் விண்டோசில் இருக்குது.
   எறும்பையும் யானையாக்கும் தந்திரம் சொல்லுது.

   எட்டு தேதி வாக்கிலே நீவிர் எட்டிப்பார்ப்பீர் அல்லவா !!
   எட்டியவரை எடுத்துரைப்பேன்.

   சுப்பு தாத்தா.

   Delete
 11. பேரறிஞர் பாரதி தாசன் அய்யா அவர்களாலும், மற்றும் இங்கு அறிமுக படுத்தபட்ட பல தமிழ் அறிஞர்களாலும் பாடப்படும் தமிழ் பாட்டுகளை பார்க்கும் போது மீண்டும் ஒரு சங்க காலம் பிறக்கும் என்று நினைக்க படும் அளவிற்கு மிக மிக சிறப்பாக தமிழ் மரபு கவிதைகள் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அது கடல் போல் விரியும் என்று நம்புகிறேன். இளையர்கள் இதில் ஆர்வம் காட்ட, போட்டி போட, பின் காவியம் எழுத , கன்னி தமிழ் என்று இளமை காட்டி எழில் பூக்கும். வாழ்க அனைவரின் தமிழ் தொண்டு.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
   "கன்னித் தமிழ் என்றும் இளமையுடன் எழிலாய் பூக்கும் என்பதில் ஐயமில்லை. "
   தங்களின் அறிமுகம் தங்களின் அறிமுகம் கிடைத்ததிலும் மகிழ்ச்சிங்க.

   Delete

  2. வணக்கம்!

   மீண்டும் தமிழாள வேண்டும் எழுத்துக்கள்
   துாண்டும் எனக்குள் தொடருணர்வை! - தோண்டச்
   சுரக்கின்ற நீர்போன்று துாயகவி யூறும்!
   திரள்கின்ற எண்ணம் செழித்து!

   Delete
 12. கவிதையால் அறிமுகம்! அருமை.
  வாழ்த்துக்கள் ஐயா.
  இன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   மாமதி போன்றிங்குக் கோமதி வந்துள்ளார்!
   பாமதி என்னழகைப் பாராட்ட! - பாமலர்
   கண்டு படைத்த கருத்தெல்லாம் நான்பாட
   மொண்டு கொடுக்கும் மொழி!

   Delete
 13. வணக்கம் ஐயா!

  தொன்மையும் வன்மையும் தோள்கொண்ட சீரென்று
  இன்றொரு சந்தப்பா இங்கிட்டீர்! - பொன்போன்ற
  அற்புத ஐம்பதிவர்! கண்டேன் அறிமுகமாய்!
  பற்றினேன் பாதம் பணிந்து!

  அருமையான பாக்களால் இன்றும் உங்கள் அறிமுகம் மிளிர்கிறது!
  அறிமுகம் செய்த உங்களுக்கும் பதிவர்கள் ஐவருக்கும்
  பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   இளமதி வந்தே எழுதிய வெண்பா
   உளமதில் நின்றே ஒளிரும்! - வளநதி
   யாக வலம்வரும்! என்னுள் கவியென்னும்
   மேகம் பொழியும் விரிந்து!

   Delete
 14. வணக்கம் அய்யா,
  இன்றைய அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
  தங்கள் கவிமழைத் தொடரட்டும்,
  நன்றி.

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   என்றன் கவிமழையில் இன்புற்றீர்! இங்குரைத்த
   உன்றன் கருத்திற் குயர்நன்றி! - இன்றுபோல்
   நாளையும் வந்திடுக! நல்ல கருத்திடுக!
   காளைநான் உய்வேன் களித்து!

   Delete
 15. சென்னையிலே நேற்றும் இன்றும் மழையோ மழை.
  இன்று கணினியைத் திறந்தேன்.
  இங்குமோர் மழை..கவிதை மழை.
  ஆனந்தமோ ஆனந்தம்.

  தமிழின் சிறப்பு, தமிழ் நாட்டின் சிறப்பு,
  தமிழ் அன்னையின் வனப்பு பொலிவு.

  படித்துக்கொண்டே இல்லை பாடிக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

  ஆனந்த பைரவி ராகத்தில் பாடி இருக்கிறேன்.

  வாருங்கள். கேளுங்கள்.

  சுப்பு தாத்தா.
  www.vazhuvuneri.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஐயா பாடலைக் கேட்க அங்கு செல்ல இயலவில்லையே?

   Delete
  2. www.youtube.com/watch?v=M9Ey7lvSbnM

   சுப்பு தாத்தா.
   www.vazhuvuneri.blogspot.com

   Delete

  3. வணக்கம்!

   பாடும் பணியாற்றிப் பாவலர் நெஞ்சத்துள்
   சூடும் சுவைக்கு நிகரேதாம்? - ஆடுகிறேன்
   துள்ளிநான் ஓடுகிறேன்! துாய இசைபருகி
   அள்ளிநான் ஊட்டுகிறேன் அன்பு!

   Delete
 16. சந்தங்கள் பலபாடி தரமான பதிவர்கள்
  சங்கமிக்க அழைத்திட்ட விந்தை
  சரமாகப் பாச்செண்டை பாமாலை வடிவாகத்
  சந்தித்து மயங்குதெந்தன் சிந்தை.

  சிந்தைக்குள் புகுந்தேதான் சிறக்கின்ற பாட்டாலே
  செழிக்கின்ற வளங்களதும் கோடி
  தெள்ளமுதப் பாவகையை தெவிட்டாது தருமுந்தன்
  தேடல்கள் வருமேதான் தேடி.

  விந்தையென விழிநோக்கி விடுக்கின்ற கவிச்சாரல்
  மெல்லெனவே இசையாகும் பாட்டில்
  மின்னலது தாக்கியதாய் வியப்பெய்தி நானிருக்க
  மீட்டெடுத்து சேர்த்திடுதே கூட்டில்.

  எந்தனது மனச்சிறையில் எழிலாக அமர்ந்திருக்கும்
  இன்னமுதத் தமிழ்த்தாயே வந்து
  இன்னலினைத் போக்கிடவே என்னகத்தில் வலையாகி
  என்னுயிரில் கலந்ததிந்த சிந்து.

  அற்புதமாக சந்தப்பாடல்களை பாடி பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதம் மிகவும் சிறப்புங்க ஐயா. இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வடிவம் மாறிவிட்டது மன்னிக்கவும்.

   Delete

  2. வணக்கம்!

   சந்தக் கவிபாடி விந்தை புாிந்துள்ளீர்!
   சிந்தை மகிழ்ந்துருகிச் செப்புகிறேன்! - செந்தமிழின்
   செல்ல மகளாக வல்ல திறன்பெற்றீர்!
   சொல்லச் சுவைக்கும்உம் சொல்!

   நான் பாடி பாட்டின் சந்த அமைப்பு
   மாங்காய்ச்சீர் ஆறு - மாச்சீர் ஒன்று

   Delete
  3. ஐயா வணக்கம்.

   சொல்லுகின்ற சொல்லெல்லாம் சுடர்விளக்கு சுவைதனிலோ
      சிந்திடுதேன் இன்பத்தின் ஊற்று!
     சீர்யாப்பிற் குறையிருப்பின் சுட்டுகின்ற வாளெடுத்துச்
      சுழற்றிடவே வருங்கவிதைக் காற்று
   கொல்லுகின்ற தமிழ்ப்பகையின் கொழுப்பெரித்ததே அடக்கியதில்
      கொப்புளிக்கும் மறத்தமிழின் பாட்டு!
     கோழைகளின் அழுபடைகள் கூச்சலினைச் சாய்த்தெழவே
      கிளம்பியபோர்ச் சங்கின்ப வேட்டு!
   ஒல்லுகின்ற வகையெல்லாம் உயர்தமிழை வாழ்த்தியதில்
      ஓடுகின்ற பெருநதிபா ராட்டு
     உலகுசிறு பந்தெனவே உதைத்துவகை கொள்ளுகின்ற
      ஒருகுழந்தை சின்னவிளை யாட்டு!
   வெல்லுதமிழ் நெல்விளையும் சொல்விளையும் பல்கதிராய்
      விருத்தவெண் பாக்கவிதைச் சீட்டு,
     விரும்பிகின்ற மனங்களுக்குக் கரும்பிற்பால் தேன்சேர்த்து
      வடித்தூட்டுஞ் செழுந்தமிழக் கூட்டு!

         நன்றி ஐயா!


   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. Song of Sasikala Madam can be heard here:
   www.subbuthathacomments.blogspot.com

   Delete
 17. ஐயா வணக்கம்.

  பூக்கின்ற மலர்தாவும் வண்டுண்ணும் தேன்போல
     படைக்கின்ற உம்பாடல் எங்கும்
    பொழுதெல்லாம் பொருள்தேடிப் போகின்ற வழிகண்ட
     புதையல்சேர்த் தெம்முள்ளே தங்கும்!
  தீக்குள்ளே விரல்விட்டுத் தீண்டும்மவ் வின்பத்தைத்
     துய்த்தன்று சொன்னானே அங்கும்
    தெளிகின்ற சுவைகாட்டத் தீர்கின்ற சொல்லெல்லாம்
     தேடித்தான் தோற்கின்றேன் இங்கும்
  பாக்காடு முதிர்கின்ற பழந்தேடி உண்டாலும்
     பசிதீராத் துன்பத்தீக் கங்கும்
    பதிலாகப் பழங்கள்ளைப் புதுப்பானை தனிலிட்டுப்
     பாராட்டின் உலைதுள்ளப் பொங்கும்!
  வாக்கோடு மனங்காயம் என்பார்கள் எல்லாமே
     வசமாகாத் தமிழோடு மங்கும்
    வடிக்கின்ற சூட்டிற்கும் வார்க்கின்ற சேர்ப்பிற்கும்
     வதைபட்டால் அணியாகும் தங்கம்!


        நன்றி!

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   என்னென்று நான்சொல்ல? இன்பத்தில் நான்துள்ள
     ஈடின்றிப் படைத்துள்ளீர் சந்தம்!
      எப்போதும் எனக்குள்ளே இன்தேனைத் தானள்ளி
        ஈந்தாடிக் கொண்டாடும் சொந்தம்!

   பொன்னென்றும் பூவென்றும் புனைந்திட்ட பாட்டுக்குள்
     பொலிகின்ற கருத்தெல்லாம் தந்தம்!
      புலமைக்கு விருந்தாகப் புவியோங்க மருந்தாகப்
        பொழுதெல்லாம் வீசும்நற் கந்தம்!

   நன்றென்று பாரோர்கள் நற்பாட்டின் புகழ்கூட
     நன்னுாலின் சீரெல்லாம் சிந்தும்!
      நடைகண்டு வியக்கின்றேன்! அடையென்று தின்கின்றேன்!
        நலிந்தோடும் எனைவிட்டு மந்தம்!

   முன்னோரின் மாண்பாகத் தன்னேரில் தேர்செய்தே
     மொழித்தாயை இழுக்கின்ற பந்தம்!
      மூவாத தமிழூண்டு நாவார நான்பாட
        மூளைக்குள் உம்பாட்டு முந்தும்!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. ஐயா வணக்கம்.

   முந்தும்நற் பாட்டென்று மரபென்றும் காக்கும்நின்
      மூச்சிற்குள் நிறைகின்ற ஒன்று
     முன்னோடித் தமிழ்பாடி மூத்தோரின் வழிநின்று
      முளைவித்துத் தருகின்ற தொன்று
   வந்தும்நம் மொழிசாய வளர்கின்ற களைநீக்கி
      வளரச்செய் தருள்கின்ற தொன்று
     வழுகண்டால் சுடுதீயில் இடுகின்ற மனம்கொண்டு
      வடிவாக்கிக் கொடுக்கின்ற தொன்று
   சொந்தம்செந் தமிழென்று சகமெல்லாம் ஒளியூட்டிச்
      சுடர்கின்ற விளக்கென்றே ஒன்று
     சொல்லுக்குள் சுவையூட்டிச் சீராக்கிப் பாவாக்கிச்
      செய்யுங்கை வனைகின்ற தொன்று
   முந்தித்தான் அவைநின்று மூத்தோரை முன்னோரை
      மூர்ச்சிக்க வைக்கின்ற தொன்று
     முனைகூராம் அன்பெய்து முயற்சிக்கச் செய்யும்பா
      ரதிதாச ரேயெல்லாம் நன்று!

         நன்றி.

   Delete
  4. வணக்கம்!

   நன்றென்னும் பாட்டீந்தே அன்பென்னும் தேன்தந்தீர்
     நான்சொக்கிக் நிற்கின்றேன் ஓரம்!
   பொன்னென்றும் மணியென்றும் பூக்கின்ற மலரென்றும்
     பொலிவோடு செய்தீர்..பா வாரம்!
   என்னென்று பாத்தீட்ட? இங்குன்றன் எழுத்தின்முன்
     இன்புற்று நிற்கும்என் வீரம்!
   மின்னென்றே எனக்குள்ளே விளைகின்ற எழுத்தெல்லாம்
     வியன்நன்றி பண்பாட்டின் சாரம்!

   Delete
  5. வணக்கம்!

   சந்தத்தில் விளையாடும் விந்தைச்சீர் நம்..சோசப்
     எந்தம்சீர் உள்ளத்துள் நின்றார்!
   சொந்தத்தில் இருக்கின்ற சுவைத்தேமா மரமாகத்
     தென்பாக்கள் பறித்திங்குத் தின்றார்!
   பந்தத்தில் கட்டுண்டு பண்புத்தேன் நன்குண்டு
     பாப்பாடி வலைப்பக்கம் வென்றார்!
   சிந்தைக்குள் அடக்கத்தைச் சிறைகொண்டு வாழ்கின்றார்!
     சிறப்பெல்லாம் வந்தேகக் கண்டார்!

   Delete
 18. இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.கவியிழே ஒரு புதுமை கலகலப்பூட்டும் கற்றவர் பணி கவர்ந்த்து நெஞ்சம்.

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   நாளும் கருத்திட்டு நற்றேன் அளிக்கின்றீர்!
   தோளும் புடைத்துத் துணிவேந்தும்! - மேலும்..நான்
   பாடி களிக்கப் படைகொடுக்கும்! உம்வரவால்
   ஆடிக் களிக்கும் அகம்!

   Delete
 19. இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்

  கில்லர்ஜி

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   அன்புடன் வந்தே அழகுரைத்தீர்! நன்றியைப்
   பண்புடன் பாரதி நான்பகன்றேன்! - வண்ணமுடன்
   தந்த வலைச்சரத்தைத் தாங்கி மகிழ்கின்ற
   இந்தக் கிழமை இனிது!

   Delete
 20. ஏடெடுத்து நானெழுத ஏங்குகின்ற பேதை
  எனக்களித்தாய் வரமாக நல்லதொரு பாதை
  காடென்று நான்நினைத்து கலங்குகின்ற போது
  கமழுகின்ற நறுஞ்சோலை காட்டுகிறீர் ஓதி
  பாடென்று சொன்னதுடன் பற்பலதும் ஊட்டி
  பாடாத பாட்டெல்லாம் பாடுகிறீர் கூட்டி
  ஆடுகின்ற மயில்போன்று அழகான சொல்லாம்
  அலைபோல வருகிறது அணிதிரண்டு எல்லாம்

  அருமை ஐயா அருமை! அழகுற கவிமாலை கோர்த்து கவிச்சரத்தால் வலைச்சரத்தை நிறைகின்றீர்கள். வாய்பிளந்து நிற்கின்றேன் நான். வெல்லும் தமிழ் இனி!
  சந்தக் கவிகளை எல்லாம் இன்று அறிமுகம் செய்தமை சிறப்பு. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   எண்சீர் விருத்தத்தில் இங்குக் கருத்திட்டார்
   பண்சீர் படைத்த பசும்இனியா! - மண்சீர்
   அழகெல்லாம் வாய்க்கும்! அளிக்குமவர் பாட்டில்
   பழமெல்லாம் காய்க்கும் படர்ந்து!

   Delete
 21. வணக்கம் கவிஞர் அண்ணா !

  வற்றாத நதியைப்போல் வலைச்சரத்தில் கவியெல்லாம்
  வடிக்கின்ற பாவலரே வாழ்க !
  கற்றாலும் உம்மிடமே கற்கின்ற வரம்வேண்டும்
  கனிவோடு அணைத்தெம்மை ஆழ்க !

  இசையோடு பாடிட்டால் இதயத்தில் தேனூறும்
  இன்பாட்டின் பொருளாட்சி பொங்கும்
  தசையின்றிக் காய்கின்ற தள்ளாத வயதாயும்
  தரும்பாக்கள் உயிருள்ளே தங்கும் !

  கார்கால மழைகண்டு காற்றாடும் பூப்போலே
  கருத்தோடு வந்திட்டேன் நானே !
  தேரோடும் வீதிக்குள் தெருப்புல்லாய் நசிபட்டும்
  அடையோடு கொணர்ந்திட்டேன் தேனே !

  அருங்கவிகள் ஆற்றுகின்ற விசு'அய்யா சந்தத்தில்
  அசையாத மலைகூட ஆடும் !
  அருந்தமிழாள் இளமதியும் அளித்திட்ட இன்பாவில்
  அகிலத்தின் எழிலின்னும் கூடும் !

  இன்றமிழின் மெல்லிசையாள் இனியாவின் விருத்தத்தில்
  இலைகூட மலராகித் துள்ளும் !
  இளந்தென்றல் போல்வீசும் ஏந்திழையாள் சசிகலாவின்
  இதமூட்டும் கவிநெஞ்சை அள்ளும்!  இன்றைய அறிமுகங்களை இனிமைப் படுத்திவிட்ட ஐயா பாவேந்தருக்கு என் இனிய நன்றிகள் அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சீராளரே!

   நீங்கள் என்மேற் கொண்ட அன்பினுக்கு நன்றி.


   அள்ளும்நெஞ் சத்தின்வேர் ஆழத்தில் செல்லத்தான்
      ஆள்கின்ற சீராள…! நாதம்
     அடங்கித்தான் உம்கைக்குள் அகப்பட்ட தெவ்வாறோ
      அறியத்தான் எண்ணங்கள் மோதும்!

   துள்ளும்சேல் விழியாளைத் தோற்காத கவிகொண்டு
      துதிக்கின்ற வண்ணத்தி லேதும்
     துளியேனும் கிடைக்காதோ பெண்ணாகப் பிறவாத
      துயரத்தை அடைந்தேனிப் போதும்

   உள்ளத்தில் நல்லுள்ளம் உருகத்தான் கரையத்தான்
      உணராளோ நினைவுத்தேன் தாதும்
     உருவாக்க நீர்பட்ட உயிர்ப்பூட்டல் அறியாளே
      உதிர்க்கும்வெங் கண்ணீர்‘அப் பாதம்

   வெள்ளத்தைக் கடலுக்கு விலைபேச முயல்வோனாய்
      வீணாக்கும் சொற்கூட்டும் போதும்
     விரும்பித்தான் உம்பாட்டில் விழுகின்றேன் நானுந்தேன்
      வண்டாக, உம்காதல் வேதம்!

   மீண்டும் என் நன்றி சீராள!

   Delete
  2. இலைகூட நல்ல மரமாகும் என்றீர்
   சிலைபோல நானிங்கு நின்றேன் - கலைவாணி
   உம்மை பிடித்திட்டாள் ஓடுவதும் எங்கே சொல்
   நம்மைப் பிணைக்கும் தமிழ்!

   என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணி எழுதிடவே என் நெஞ்சம் துள்ளுகின்றது மிக்க நன்றி சீராளா !வாழ்க நலமுடன் ...!

   Delete
  3. வணக்கம் பாவலரே !

   என்காதல் வேதத்தின் எழுத்தாணி உடைந்தன்று
   இதயத்தில் போட்டதொரு கோடு
   அன்றோடு வலியேந்தி அடைபட்ட என்'ஆன்மா
   அழிந்தாலும் மணம்கொள்ளும் காடு !

   புகழேந்திப் புனைகின்றீர் புடம்போட்ட தங்கத்தின்
   போலிவாகக் கவித்தேனில் கொட்டி !
   அகமேந்தி அழுகின்றேன் அன்பிற்கும் விலையுண்டோ
   அறிந்தாலென் உயிர்தருவேன் எட்டி !

   பெண்ணாகப் பிறக்கின்ற பேராசை இனிவேண்டாம்
   பிறவாமை நான்கொண்டால் போதும் !
   மண்ணாகப் பிறந்தாலும் மலர்பூக்கும் நிலமென்னும்
   மரியாதை தினம்தோறும் மோதும் !

   ஏதோ என்னால் முடிந்த எசப்பாட்டுப் பாவலரே தங்கள் இனிய கவிதைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !
   Delete
  4. வணக்கம் சகோ இனியா !

   தமிழுண்ணும் பேராசைத் தவிப்புக்கள் உனைமேவத்
   தருகின்றாய் தளைதட்டாப் பாக்கள்
   அமிர்தத்தின் சுவையாகி அடிநெஞ்சில் எனைத்தாவும்
   அழகான விளையாட்டுப் பூக்கள் !


   மிக்க நன்றி தங்கள் அன்புக்கும் ஆறுதலுக்கும் என்றும் என் உயிரில் நிறைந்த உங்களுக்கு என்றென்றும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

   Delete

  5. வணக்கம்!

   பெண்ணாக நீவேண்டாம்! பேராசை இனிவேண்டாம்!
     பிறப்பெல்லாம் தமிழ்நுாலில் ஆழ்வாய்!
   மண்ணாக பிறந்தாலும் மலையாக நின்றாலும்
     மங்காத தமிழ்தாங்கி வாழ்வாய்!
   விண்ணாக ஒளிர்கின்ற தண்தாயின் புகழ்பாடி
     வேல்கொண்டு நற்காவல் சூழ்வாய்!
   பண்ணாக நீ..மாறிப் பசுந்தேனின் சுவைசூடிப்
     பாட்டன்னைப் பாதத்தில் வீழ்வாய்!

   Delete

  6. வணக்கம்!

   சிலைபோல நிற்கின்ற சிங்காரச் சொற்கள்!
   மலைபோல ஊட்டும் மகிழ்வை! - அலைபோல
   உன்னுள் தமிழ்பாயும்! ஓங்கும் நலமேவும்!
   என்னுள் உரைக்கும் இதை!

   Delete

  7. சீராளன் பாக்கேட்டுக் சிங்காரத் தமிழ்தந்தீர்!
     சிந்தைக்குள் தேன்வந்து பாயும்!
   வேராளும் மரமாக விண்ணோக்கி நின்றாலும்
     விளிக்கின்ற கவிகேட்டுச் சாயும்!
   போராடும் இவ்வாழவில் பொழுதெல்லாம் சந்தத்தைப்
     பொலிவோடு பாடும்..நம் வாயும்!
   தீராத பேராசை தாராடும் தமிழ்மீது!
     சீர்பாட்டில் மனம்வண்டாய் மேயும்!

   Delete

  8. வணக்கம்!

   வற்றாத தமிழ்கண்டு பற்றோடு பகர்கின்றேன்
     மனமேங்கும் உன்சீரைக் கேட்டு!
   கற்காத பேருக்கும் கவியாசை தான்துள்ளும்
     கணக்காகச் செய்கின்றாய் பாட்டு!
   ஒற்றோடு உயிர்சேரும் ஒப்பில்லா உறவாக
     உன்னோடு நான்கொண்டேன் கூட்டு!
   நற்றாயின் நலங்காக்கச் சற்றேனும் நிற்காமல்
     நடைபோட்டு உன்வீரம் காட்டு!

   Delete
  9. சீராளன் வாழ்த்தை சிறம்தாழ்ந்து ஏற்கின்றேன்
   பேரன்பைக் கண்டேதான் போற்று.
   மிகவும் மகிழ்ந்தேன் சீராளம். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும்.

   Delete
 22. பாட்டுக்குப் பாட்டெடுத்துப் பாவலர்கள் பேசிக்கொள்ள நான் என்ன சொல்லட்டும்? வியப்பில் விழி மலர்த்தி நிற்கின்றேன்! அனைவருக்கும் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   பாட்டுக்குப் பாட்டெழுதும் பாவலர்கள் தம்மோடு
   போட்டிக்கு நிற்காமல் போவதுமேன்? - மீட்டும்
   கலையரசி கன்னல் கவிகற்று மின்னும்
   வலையரசி யாகவென் வாழ்த்து!

   Delete
 23. அனைவரும் நான் விரும்பித் தொடரும்
  பதிவர்கள்.அற்புதமான வித்தியாசமான
  அழுத்தமான அறிமுகம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   அருமையாய்க் கிட்டிய அழகொளிர் வாய்ப்பைப்
   பெருமையாய்ப் பேணி முடிப்பேன்! - உரிமையாய்ச்
   சொல்லும் கவியெல்லாம் சூட்டும் தமிழழகை
   வெல்லும் புகழை விளைத்து!

   Delete
 24. கவிப் பூக்களால் பா நெய்து,
  வலைச்சரம் கோர்த்து,
  வீசுது மணம்;
  மகிழுது மனம்!

  பதிவர்களுக்குப் பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies

  1. வணக்கம்!

   வீசும் கவிக்காற்று! விந்தை பலசெய்து
   பேசும் தமிழ்ஊற்று! பேணுமனம் - மாசகற்றும்!
   மின்வலைப் பாக்களின் நன்றிலை நல்கினாய்!
   உன்னிலை ஓங்கும் உயர்ந்து!

   Delete
 25. song of Madam sasikala can be heard
  at
  www.subbuthathacomments.blogspot.com
  (chandhangal pala paadi......)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்களின் வலைப்பக்கம் சென்று பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.
   என்னென்று சொல்ல தங்கள் தமிழ் ஆர்வத்தை!
   தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.
   தங்கள் வலையில் எனக்கு கருத்திட முடியவில்லை.

   Delete
  2. வணக்கம்!

   நாடித் தமிழ்கேட்ட நங்கேயே! உன்பற்றைப்
   பாடி மகிழ்கின்றேன் பாங்குடனே! - கோடிமலர்
   கொட்டியுனை வாழ்த்துகிறேன்! கோலமிகு வெண்பாவில்
   இட்டுமுனை வாழ்த்துகிறேன் இங்கு!

   Delete
 26. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும் ஐயா! பயணத்தில் இருந்ததால்...

  வலைச்சரம் கவிச்சரமாய் மாறி
  மலர்சரமாய் வலைதனை அலங்கரிக்க
  பலரும் கவிச்சரங்கள் தொடுக்க
  வலைச்சரம் மாறியதே கவிச்சோலையாய்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   வலைச்சரம் இன்று கவிச்சரமாய் மின்னும்!
   கலைச்சரம் மிக்க கருத்தால்! - மலைச்சர
   நீர்வீழ்ச்சி போன்று நெடுந்தமிழ் பாய்ந்திங்குச்
   சீர்மாட்சி மேவும் செழித்து!

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது