07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கென். Show all posts
Showing posts with label கென். Show all posts

Saturday, October 13, 2007

ப்ரியங்களுடன் - கென்

காதலும் அதன் வலியுமான வாழ்வில் வெறும் புலம்பல்களும் , கூச்சல்களுமான அதன் நகர்வில்,
கட்டற்ற அன்பை , இனி எவராலும் எப்போதும் தந்திடா இயலா பாசத்தை,
அக்கறையை , கவனத்தை, தோழமையை , நேசத்தை

எப்படி சொன்னாலும் சரியாய் பொருந்திடா உணர்வைத்தரும் தோழமைக்கு என் வணக்கங்கள்.

(எனக்கே நன்றி சொல்ற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டியாடா எனத்திட்டுவாய் இருந்தும் சொல்றேன்)

நன்றிகள் திரு.பொன்ஸ்,திரு.ப்ரியன்,திரு.முத்துலெட்சுமி,வாசித்த உங்கள் அனைவருக்கும்?

இத்துடன் விடைப்பெற்றுக்கொள்கிறேன்.

ப்ரியங்களுடன்
கென்
மேலும் வாசிக்க...

Wednesday, October 10, 2007

குழந்தைகளின் உலகம் - கென்

குழந்தைகளின் உலகம் எத்தனை புதிரானது, ஆழமானது, வண்ணங்களாலானது, அழகானது என்று அவர்களை அருகிலிருந்து ரசிக்கும்போதுதான் புரிகிறது. குழந்தையாகவே இருந்துவிட்டிருக்கலாமோ என்று சின்ன பொறாமை கூட தொற்றிக் கொள்கிறது.

நேற்று கடைத்தெருவில் பார்த்த ஒரு குழந்தையின் விரல் ஸ்பரிசம் இன்னும் அகலாத நிலையில், குழந்தைகளை பற்றி பதித்திருக்கும் வலைப்பூக்களைப்பற்றி இங்கு எழுதுகிறேன்.

குழந்தைகளை பற்றி மட்டுமே எழுதும் நோக்கத்தோடு வீணாப்போனவன் என்ற பெயரில் வலைப்பதியும் முகுந்த் நாகராஜன், குழந்தை கவிதை எழுதுவதில் தேர்ந்தவர். இவரது இரண்டு கவிதை தொகுப்புகள் "அகி" மற்றும் "ஒரு இரவில் 21 செ.மீ மழை பெய்தது" பெரும் கவனம் ஈர்த்தன. குறிப்பாய் பெண் குழந்தைகளின் உணர்வுகளை மிக ந‌யத்தோடு இவரால் கவிதையாய் வடிக்க முடிகிறது. உரைநடை வடிவத்தில் சற்றே மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு இருந்தாலும் காட்சிகளை கண்முன் நிறுத்தும் விதமும் குட்டிப்பெண்களின் அழுகையும் சிரிப்பும் உணர முடிவதால் ரசிக்க வைக்கிறது.

இவரது கவிதை ஒன்று இங்கே :

நீர் தெளித்து விளையாடுதல்

முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்-களும்
மிகக் குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும் போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.

(c) veenaapponavan@yahoo.com

###############################


ராஜா சந்திரசேகர் , கவிதை , குறும்படம், வசனம் , விளம்பரப் பட உலகம் என விரிந்த தளத்தில் இயங்கி வரும் படைப்பாளி. இதுவரை மூன்று கவிதைத் தொகுதிகள்

(கைக்குள் பிரபஞ்சம் , என்னோடு நான் , ஒற்றைக் கனவும் அதை விடாத நானும் ) வெளிவந்துள்ளன.

இவரது வலைப்பூவில் எழுத்தின் எளிமையும் கவிதை முடிகையில் பரவும் அதிர்வையும் உணர முடிகிறது. குழந்தையாகவே மாறி இயற்கையோடு பேசும் ராஜாவின் கவிதைகளை படித்து பாருங்கள்.

சந்தோஷ் சிவன் இயக்கிய 'டெரரிஸ்ட்' (Terrorist) 'மல்லி','நவரசா' ஆகிய மூன்று படங்களுக்கும் இவர்தான் வசனம்.

எண்களின் வலை


கணித பாடத்தின்
விடை கேட்டு வந்த குழந்தை
உம்மென்று
முகத்தை வைத்திருந்தாள்

எண்களுக்குள்
சிக்கிக் கிடந்த அவளை
வெளியில் எடுக்க
பெரும் சிரமமாயிற்று

பென்சிலைக் கடித்தபடி
சொல்லித்தரச் சொன்னாள்

என் பால்ய பூஜ்யத்தை
மறைத்துப் போட
கிடைத்தது
சரியான விடை

சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து
முத்தம் கொடுத்துப் போனாள்
பிரம்பின் பயம் நீங்கி

அவள் மேல்
விளையாடிய எண்கள்
காலடியில் கிடந்தன
சத்தங்கள் அற்று
மேலும் வாசிக்க...

Tuesday, October 9, 2007

க‌விதைக‌ளும்,நாவலும் நானும் - கென்

க‌விஞ‌ர்ன்னு என்னை ம‌தித்து அழைப்பு ( என்னையும்) கொடுத்த‌மைக்காய் இது வ‌ரை வ‌லைப்பூ, குழும‌ம் என்று எங்கேயும் ப‌தியாத‌ என் சில‌ க‌விதைக‌ள் உங்க‌ளின் பார்வைக்காய்


1.சுவடுகள் படிந்தழிந்தபடி ஈரம் கசியும் நீள்வெளியில்
வலைப்புகும் நண்டினை ரசித்து அமர்ந்திருக்கிறேன்

எங்கிருந்தோ வந்துப்போகும் வலசைப்பறவையின் இயல்பாய்
துறைமுகம் நுழைய நங்கூரமிட்டு மிதக்கும் கப்பல்கள்
மினுக்கத்துவங்குகின்றன இரவின் வெளிச்சப்பூச்சிகளாய்
வெட்கப்பூச்சு மல்லிகை மணத்தோடு விரல் கோலமிட்டு
வருகிறாள் கருமைப்பெண்

ஏதோ ஒரு நாளின் வேட்கை வெறியேறி
உற்று நோக்க சைகையால் அழைக்கிறாள்
கரையுடைக்கத்துவங்குகிறது அலை இப்போதும்

விலைகொள்ள முடியா பொருளை
தொட்டுக்கொள்ளும் இயல்பில்
பேரம் இயலாமல் போக
மணல் தட்டி எழுகிறேன் என் தடய‌ங்களையும்


2.வெள்ளை உடல் நிறமும் கருமை வாலுமான
குட்டிப்பூனை ஒன்று
பளிங்கு விழிகள் உருட்டி மெல்ல
பாதம் நகர்த்தி
என் காலோடு நேசம் கொண்டாடுகிறது
நாவால் நக்கி

அதன் நாவின் வெம்மை என் மூளைச்சேருமுன்
ஏதோவென எட்டி உதைத்திட
வலிதாளாமல் கதறி தெரித்து விழுந்தோடி
மறைகிறது

இனி எப்படி சொல்ல எனக்கு அதன்
நாவின் வெம்மை மிகப்பிடித்தமானதாய் இருந்ததென்பதை


3.சோம்பலில் குடை மறந்துப்போன
ஒரு நாளில் வானம் உடைகிறது
முகம் அறையும் மழை ரசிக்க இயலாமல்
உள்ளுணர்வு தன்னைத்தானே திட்டிக்கொள்கிறது

உடலோடு ஆடை ஒட்டிக்கொண்ட பெண்
முகம் சுழித்தப்படி வானம் வெறிக்கிறாள்
பக்கம் நிற்பவனின் கழுகுப்பார்வையில்
இருந்து தப்பிட வழியேதுமில்லாமல்

இனி சலித்துக்கொள்ள ஏதுமில்லை
மழையோடு ரசிக்கலாம்

குடை மறந்ததையும்

4.மொழி புரியா அண்டை மாநிலத்தின்
பேர்த்தெரியா உணவுண்கையில்
கடிபட்ட மிளகாய்க்காய் அழுகும் கண்களோடு
தண்ணீர் தேடி அமர்ந்திருக்கையில்

உணவை உருண்டை பிடித்து கதை சொன்ன‌ அம்மாவிடம்
இல்லாத மிளகாய் கடித்ததாய் பொய் சொல்ல
பதறி எழுந்து தண்ணீர் உப்பு எனத்தேடி
ஊட்டி விட்ட ஞாபகம் வர

காரம் குறைந்த பின்னும் கண்ணீர் நிற்பதாயில்லை



5.பூங்காக்கள் பொருத்தமற்றவைதான்
நெடுங்கதை சீரியல்களின் மருமகளைப்பற்றி பேசி
பெருமிதம் கொண்டு நடைப்பயிலும் மாமியார்கள்

அங்க‌ங்க‌ள் குலுங்க ஓரக்கண்ணில்
உற்று நோக்கி அலட்சியத்துடன்
ஓட்டமாய் நகரும் நாகரீக சிறுசுகள்
அப்பனின் சிபாரிசில் ஆடும் ஊஞ்சலில்
இடம்பிடிக்க நிற்கும் மழலைகள்
பார்வைக்கணைகள் மறந்து இருவரும்
ஒருவராய் சிணுங்கிடும் காதல்கள்
மறைவுகளே இல்லாதபோதும் இயங்கும்
உலக தொடர்பற்று
அவனும் அவளுக்குமான‌ காமம்

எல்லாம் மீறி முகம் ஏறும் எறும்பை
மெல்ல ஊதிட முயல
பக்கத்து இருக்கை பெருசு தன் வயது
செய்த அரசு வேலை உலக இயல்பு
சேதுசமுத்திரம் ராமர்பாலம் என
எல்லாவற்றுக்கும் என்னை சாட்சியாய்க்கொள்கிறார்

கிளம்பும்தன் கடைசி நிமிடத்தில் யார் நீங்கள்
என என்னை வினவ
வேறொரு எறும்பை தேடிக்கொண்டிருக்கிறேன்


##############################################################################


வாசிக்கையில் சில நாவல்கள் மட்டுமே உள்ளுக்குள் புகுந்து ஏதோ செய்யும். சில நாட்களுக்கேனும் மனம் அரிக்கும்.

வெகு சமீபத்தில் வாசித்த " காடு " நாவலும் அத்தகைய ஒன்றுதான்.

காடு ‍ ஜெயமோகன்

சிறு அறிமுகம் :

ரப்பர் நாவலின் எழுத்து நடையில் சற்றுக்கடினமான வார்த்தைப்பிரயோகங்களுடன் மலையாள நெடியடிக்கும் காடு நாவலை சற்று மெல்ல வாசிக்க வாசிக்க

கண்முன் விரிகிறது குறிஞ்சி நிலமும் அது திரிவதால் உண்டாகும் பாலையும்

சிறு வயதில் பெருமழைப்பொழுதில் தேக்குக்காட்டினுள் நுழைந்து மழைப்பார்க்க உச்சிக்கிளையேறி மழைப்பார்த்தது ஞாபகத்திற்கு வருகிறது ஜெயமோகனின் காட்டுப்பெருமழை வர்ணிப்பை வாசிக்கையில்

காதல் சுமந்தலையும் கிரிதரன் நாமாகி நாவல் முழுதும் காட்டில் சுற்றியலைகிறோம் ஜெயமோகன் கரம்பற்றி,

தீராக்காமமும் மாறான பாலுறுவுகள் நிறைந்த பெருங்காம மனம் நிறைந்த மனிதர்களை குறிஞ்சி நில அழகோடு வெகு அழுத்தமாய் தம் தனித்துவ எழுத்து நடையில் கட்டுண்டுளார் ஜெயமோகன்.

நகரமயமாக்களால் காடுகள் தொலைத்து கான்கிரீட் சிறைகளுக்குள் சிக்குண்டுட்டோம், விலங்குகளை சிறையடைத்து நாமும் சிறைகளுக்குள் இருந்தபடி வாழப்பழகிக்கொண்டோம்.

நவீனத்துவ நாகரீக சமுக கட்டுப்பாடுகளால் அவர்வரும் தம் நீலியைத்தொலைத்து விட்டு தேடி அலைந்த படிதான் இருக்கிறார்கள்.


காமமற்ற மனிதர்கள் என்று எவருமேயில்லாத உலகம் இது. எல்லா ஆண்களுக்குமான பெண் குறித்தான வேட்கையில் காமம் கண்மறைக்கையில் தோன்றும் உணர்வுகளை அப்பட்டமான விலங்கின் மனநிலையை, முதல் காதலை அதன் வலியை வாழ்வின் முடிவின் வரை தொடர்ந்த படி இருக்கும் மனம் பிறழ்நிலையை வெகுத்தெளிவாய் தம் காடு நாவலில் பதிவு செய்திருக்கிறார்.

வாசிக்க சற்றுக்கடின நடைதான் என்றாலும் மெல்ல வாசித்துப்பாருங்கள் கிரிதரன் , நீலி, குட்டப்பன் , சினேகம்மை, ரெசாலம் என்று நாமும் அவர்களோடு காட்டில் பயணிக்கலாம் .
மேலும் வாசிக்க...

Monday, October 8, 2007

இந்த வாரம் ‍ - கென் -

வணக்கம்,

இந்த வாரம் வலைப்பதிவுக்காய் கடந்த மாதமே பொன்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். பணிச்சுமை என்னை இட்லிக்குக்கராய் அவிப்பதால் ( சூரியப்பனி எல்லாம் வேற ஆளுங்க உபயோகிப்பதால்) இப்போது வலைப்பதிய நேரம் கிடைத்திருப்பதால் இனி என் பார்வையில் படித்தது பிடித்தது என்று ஒரு வாரம் நானும் பதிய வருகிறேன்.
என் இடுகைக்கான சில சுட்டிகளை த‌ருவ‌தை விட‌ நீங்க‌ளே ப‌டித்து பார்த்து உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ங்க‌ளைத்தாருங்க‌ள்.

இனி நான் ரசித்த சில வலைப்பதிவுகள் பற்றி:

மற்றபடி அறிமுக இடுகை போதும் இனி எனக்கு தெரிந்த சில வலைப்பதிவுகள் பற்றி
குறிப்பிடத்தகுந்த சில எழுத்தாளர்கள் எழுதி காணக்கிடைக்காத கவிதைகள் மற்றும் கதைகள் அடங்கிய வலைப்பூக்கள் பற்றி இன்று பதிக்கிறேன்.

புள்ளி :

எழுதி வரும் ரகு, சித்திரன் என்ற பெயரில் சிறுகதைகள் எழுதுகிறார். இவரது கதைகள் "மனதில் உந்தன் ஆதிக்கம்" என்ற பெயரில் சிறுகதை தொகுப்பாய் வெளிவந்திருக்கிறன. சின்ன சின்ன சம்பவங்களும் சம்பாஷணைகளுமாக கதைகள் சுவாரஸ்யமாக நகர்கின்றன.
சிறுகதைகள் மட்டும் இல்லாமல் திரைப்பட விமர்சனங்களும் நிகழ்வுகளும் மிக எளிமையாகவும் நகைசுவையுடனும் பதித்திருக்கிறார்.
மரத்தடி.காமி லும் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார்.

************************************************************
நாதாரி :


நாதாரி என்பது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெயர் என்றும் அதை நாம் திட்டுவதற்காக கட்டமைத்துக்கொண்டோம் என்றும் மிக அழுத்தமாக கூறி, நாதாரி என்ற பெயரிலேயே பதிக்கிறார் இந்த நண்பர். இவரது சமூக பார்வையும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் பழகிய அனுபவங்களும் கூரிய வார்த்தைகளாக வந்து விழுகின்றன.

கவிதைகளும் கட்டுரைகளும் நிறைந்திருக்கும் இவர் வலைப்பூவில் நாம் பார்க்க தவறுகிற அல்லது மறுக்கிற நுணுக்கமான நிகழ்வுகளின் ஆழங்கள் தெரிகின்றன.

இவரது கவிதை ஒன்று :

மீன் அரித்து
மிச்சமிருந்த
நிலவின் மேல்
பொத்தென்று குதித்து
தின்றது
தவளை

***************************************************************
உயிர்மை :

உயிர்மை எல்லோருக்கும் பரிச்சயமான தரமான சிறுபத்திரிக்கை. துவங்கிய நான்காண்டுகாளில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கும் இந்த பத்திரிக்கையின் வலைப்பூ இது. மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவித்துவமான நடையிலேயே கட்டுரைகளும் அமைந்திருக்கின்றன. அவரது கவிதைகளில் சிலவும், அவர் ரசித்த கவிதைகளும் இங்கே படிக்க கிடைக்கும். அவர் கவிதைகளில் எனக்கு பிடித்த ஒன்று :

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன

ஒரு மீன்
துள்ளுகிறது.

சும்மா
துள்ளுகிறது.

யாரும் பதட்டமடையத்
தேவையில்லை.

எனக்கு உறுதியாகத் தெரியும்

ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.

இல‌க்கிய‌த்துறையில் ஆற்றிய‌ ப‌ணிக்காக‌ "க‌ரிச‌ல் விருதும் " த‌ம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்ப‌த‌ற்காக‌வும் வாழ்த்துங்க‌ள் உயிர்மை ம‌னுஸ்ய‌ப்புத்திர‌னை

****************************************************************
ஸ்ரீபதி பத்மநாபா :

தமிழிலும் மலையாள‌த்திலும் எழுதி வரும் எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபா அவர்களும் இப்போது வலைப்பூ துவங்கி இருக்கிறார். திரைப்பட விமர்சனங்களும் கவிதைகளுமாய் சுவையோடு எழுதும் ஸ்ரீபதியின் கவிதைகளில் ஒன்று :

ஆறுதல் பரிசு

எறும்பு தின்னிகள் மிகவும் சாதுவானவை.
ரொம்ப நல்லவை.

பசிக்கிற நேரம்
கொஞ்சம் எறும்புகளை மட்டும் விழுங்கி
அவை பாட்டுக்கு ஊர்ந்து கொண்டிருக்கும்.

எப்பொழுதாவது முட்டையும்
கொஞ்சம் பாலும்
கிடைத்தால் மிக உசிதம்.

முகத்தின் அருகே மெதுவாய் நகரும்
நிலமே உலகம்.
அவ்வப்போது மூக்கில் கொஞ்சம் மண்
ஒட்டிக்கொள்ளும்.

அதனாலென்ன, பரவாயில்லை.
பதிக்கிற சிறு காற்சுவடுகளை
திரும்பிப் பார்ப்பது இல்லை.
அடுத்து வைக்கப் போகும் சுவட்டை
எண்ணிப் பார்ப்பதும் இல்லை.

எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது
என்றவளே,
என்னைப் போலவே ஒரு எறும்பு தின்னியைப்
பரிசாய்த் தருகிறேன்.
படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.


ந‌ன்றி : திரு.ரகு, திரு.ம‌னுஸ்ய‌ப்புத்திர‌ன், திரு.நாதாரி,திரு. ஸ்ரீபதி பத்மநாபா ம‌ற்றும்

வாசிக்கும் உங்க‌ள் அனைவ‌ருக்கும்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது