07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 9, 2007

க‌விதைக‌ளும்,நாவலும் நானும் - கென்

க‌விஞ‌ர்ன்னு என்னை ம‌தித்து அழைப்பு ( என்னையும்) கொடுத்த‌மைக்காய் இது வ‌ரை வ‌லைப்பூ, குழும‌ம் என்று எங்கேயும் ப‌தியாத‌ என் சில‌ க‌விதைக‌ள் உங்க‌ளின் பார்வைக்காய்


1.சுவடுகள் படிந்தழிந்தபடி ஈரம் கசியும் நீள்வெளியில்
வலைப்புகும் நண்டினை ரசித்து அமர்ந்திருக்கிறேன்

எங்கிருந்தோ வந்துப்போகும் வலசைப்பறவையின் இயல்பாய்
துறைமுகம் நுழைய நங்கூரமிட்டு மிதக்கும் கப்பல்கள்
மினுக்கத்துவங்குகின்றன இரவின் வெளிச்சப்பூச்சிகளாய்
வெட்கப்பூச்சு மல்லிகை மணத்தோடு விரல் கோலமிட்டு
வருகிறாள் கருமைப்பெண்

ஏதோ ஒரு நாளின் வேட்கை வெறியேறி
உற்று நோக்க சைகையால் அழைக்கிறாள்
கரையுடைக்கத்துவங்குகிறது அலை இப்போதும்

விலைகொள்ள முடியா பொருளை
தொட்டுக்கொள்ளும் இயல்பில்
பேரம் இயலாமல் போக
மணல் தட்டி எழுகிறேன் என் தடய‌ங்களையும்


2.வெள்ளை உடல் நிறமும் கருமை வாலுமான
குட்டிப்பூனை ஒன்று
பளிங்கு விழிகள் உருட்டி மெல்ல
பாதம் நகர்த்தி
என் காலோடு நேசம் கொண்டாடுகிறது
நாவால் நக்கி

அதன் நாவின் வெம்மை என் மூளைச்சேருமுன்
ஏதோவென எட்டி உதைத்திட
வலிதாளாமல் கதறி தெரித்து விழுந்தோடி
மறைகிறது

இனி எப்படி சொல்ல எனக்கு அதன்
நாவின் வெம்மை மிகப்பிடித்தமானதாய் இருந்ததென்பதை


3.சோம்பலில் குடை மறந்துப்போன
ஒரு நாளில் வானம் உடைகிறது
முகம் அறையும் மழை ரசிக்க இயலாமல்
உள்ளுணர்வு தன்னைத்தானே திட்டிக்கொள்கிறது

உடலோடு ஆடை ஒட்டிக்கொண்ட பெண்
முகம் சுழித்தப்படி வானம் வெறிக்கிறாள்
பக்கம் நிற்பவனின் கழுகுப்பார்வையில்
இருந்து தப்பிட வழியேதுமில்லாமல்

இனி சலித்துக்கொள்ள ஏதுமில்லை
மழையோடு ரசிக்கலாம்

குடை மறந்ததையும்

4.மொழி புரியா அண்டை மாநிலத்தின்
பேர்த்தெரியா உணவுண்கையில்
கடிபட்ட மிளகாய்க்காய் அழுகும் கண்களோடு
தண்ணீர் தேடி அமர்ந்திருக்கையில்

உணவை உருண்டை பிடித்து கதை சொன்ன‌ அம்மாவிடம்
இல்லாத மிளகாய் கடித்ததாய் பொய் சொல்ல
பதறி எழுந்து தண்ணீர் உப்பு எனத்தேடி
ஊட்டி விட்ட ஞாபகம் வர

காரம் குறைந்த பின்னும் கண்ணீர் நிற்பதாயில்லை5.பூங்காக்கள் பொருத்தமற்றவைதான்
நெடுங்கதை சீரியல்களின் மருமகளைப்பற்றி பேசி
பெருமிதம் கொண்டு நடைப்பயிலும் மாமியார்கள்

அங்க‌ங்க‌ள் குலுங்க ஓரக்கண்ணில்
உற்று நோக்கி அலட்சியத்துடன்
ஓட்டமாய் நகரும் நாகரீக சிறுசுகள்
அப்பனின் சிபாரிசில் ஆடும் ஊஞ்சலில்
இடம்பிடிக்க நிற்கும் மழலைகள்
பார்வைக்கணைகள் மறந்து இருவரும்
ஒருவராய் சிணுங்கிடும் காதல்கள்
மறைவுகளே இல்லாதபோதும் இயங்கும்
உலக தொடர்பற்று
அவனும் அவளுக்குமான‌ காமம்

எல்லாம் மீறி முகம் ஏறும் எறும்பை
மெல்ல ஊதிட முயல
பக்கத்து இருக்கை பெருசு தன் வயது
செய்த அரசு வேலை உலக இயல்பு
சேதுசமுத்திரம் ராமர்பாலம் என
எல்லாவற்றுக்கும் என்னை சாட்சியாய்க்கொள்கிறார்

கிளம்பும்தன் கடைசி நிமிடத்தில் யார் நீங்கள்
என என்னை வினவ
வேறொரு எறும்பை தேடிக்கொண்டிருக்கிறேன்


##############################################################################


வாசிக்கையில் சில நாவல்கள் மட்டுமே உள்ளுக்குள் புகுந்து ஏதோ செய்யும். சில நாட்களுக்கேனும் மனம் அரிக்கும்.

வெகு சமீபத்தில் வாசித்த " காடு " நாவலும் அத்தகைய ஒன்றுதான்.

காடு ‍ ஜெயமோகன்

சிறு அறிமுகம் :

ரப்பர் நாவலின் எழுத்து நடையில் சற்றுக்கடினமான வார்த்தைப்பிரயோகங்களுடன் மலையாள நெடியடிக்கும் காடு நாவலை சற்று மெல்ல வாசிக்க வாசிக்க

கண்முன் விரிகிறது குறிஞ்சி நிலமும் அது திரிவதால் உண்டாகும் பாலையும்

சிறு வயதில் பெருமழைப்பொழுதில் தேக்குக்காட்டினுள் நுழைந்து மழைப்பார்க்க உச்சிக்கிளையேறி மழைப்பார்த்தது ஞாபகத்திற்கு வருகிறது ஜெயமோகனின் காட்டுப்பெருமழை வர்ணிப்பை வாசிக்கையில்

காதல் சுமந்தலையும் கிரிதரன் நாமாகி நாவல் முழுதும் காட்டில் சுற்றியலைகிறோம் ஜெயமோகன் கரம்பற்றி,

தீராக்காமமும் மாறான பாலுறுவுகள் நிறைந்த பெருங்காம மனம் நிறைந்த மனிதர்களை குறிஞ்சி நில அழகோடு வெகு அழுத்தமாய் தம் தனித்துவ எழுத்து நடையில் கட்டுண்டுளார் ஜெயமோகன்.

நகரமயமாக்களால் காடுகள் தொலைத்து கான்கிரீட் சிறைகளுக்குள் சிக்குண்டுட்டோம், விலங்குகளை சிறையடைத்து நாமும் சிறைகளுக்குள் இருந்தபடி வாழப்பழகிக்கொண்டோம்.

நவீனத்துவ நாகரீக சமுக கட்டுப்பாடுகளால் அவர்வரும் தம் நீலியைத்தொலைத்து விட்டு தேடி அலைந்த படிதான் இருக்கிறார்கள்.


காமமற்ற மனிதர்கள் என்று எவருமேயில்லாத உலகம் இது. எல்லா ஆண்களுக்குமான பெண் குறித்தான வேட்கையில் காமம் கண்மறைக்கையில் தோன்றும் உணர்வுகளை அப்பட்டமான விலங்கின் மனநிலையை, முதல் காதலை அதன் வலியை வாழ்வின் முடிவின் வரை தொடர்ந்த படி இருக்கும் மனம் பிறழ்நிலையை வெகுத்தெளிவாய் தம் காடு நாவலில் பதிவு செய்திருக்கிறார்.

வாசிக்க சற்றுக்கடின நடைதான் என்றாலும் மெல்ல வாசித்துப்பாருங்கள் கிரிதரன் , நீலி, குட்டப்பன் , சினேகம்மை, ரெசாலம் என்று நாமும் அவர்களோடு காட்டில் பயணிக்கலாம் .

1 comment:

  1. அன்பு நண்பரும் கவிஞருமான கென் இந்த வார வலைச்சரத்தை வெற்றிகரமாக திகழவைப்பார் என நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது