07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சிவகாசிக்காரன். Show all posts
Showing posts with label சிவகாசிக்காரன். Show all posts

Sunday, June 16, 2013

உன் கதை முடியும் நேரம் இது..

இன்று வலைச்சரத்தில் என் இறுதி நாள்.. என்னிடம் அன்பின் சீனா சார் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முதலில் அழைத்த போது மிகவும் தயங்கினேன். என்னால் முடியுமா என தெரியவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒத்துக்கொண்டேன்.. இன்று வரை அதை எப்படி செய்திருக்கிறேன் என தெரியவில்லை.. உங்களுடைய பின்னூட்டங்கள் சம்பிரதாயமானதாக இருக்காது என நம்பி என் தோளில் நானே என்னை தட்டிக்கொள்கிறேன் சில நேரம்.. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.. என்னுடைய இறுதி அறிமுகங்களை இன்று பதிகிறேன்.. 

என்னை எழுத வைத்த எழுத்தாளர்களில் நண்பர் டான் அசோக்கை பற்றி சொல்லியிருந்தேன்.. அவரது தம்பி இளஞ்செழியனும் ஒரு ப்ளாக்கர் தான்.. டான் அசோக் போன்று மிக சீரியஸ் பதிவர் இல்லை என்றாலும், இவரின் நகைச்சுவை உணர்வு அந்த வயதிற்கே உரிய குத்தல்களும் நக்கல்களும் நிறைந்தது..

இந்த சமூகம் தன் கேள்விகளால் நம்மை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்துகிறது என்று இவரது அண்ணன் சீரியஸாக சொன்ன விசயங்களை, தம்பி, மிக மிக அசால்ட்டாக ‘போங்கடா நீங்களும் ஒங்க கேள்வியும்’ என்பது போல் அணுகியிருப்பார்.. இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு மங்கூஸ் மண்டையன் என்கிற உலகத்தர பட்டமும் கொடுத்திருப்பார்.. நல்ல காமெடியாக இருக்கும், படித்துப்பாருங்கள்..

சினிமாவில் ஒவ்வொரு நடிகனும் தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க, அதை கட்டிக்காக்க ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிப்பார்கள்.. அப்படியும் இமேஜை விட டேமேஜ் அதிகமாய் கிடைத்த நடிகர்கள் தான் இங்கு அதிகம்.. ஆனால் ஒரு நடிகன் தன் முதல் படம் முடிந்து இரண்டாம் படம் வரும் போதே, ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகரான இமேஜை தன் சொந்த காசை செலவழித்து உருவாக்கினார்.. முதலில் அவரை ஒரு மனித ஜன்மமாய் கூட மதிக்காத இந்த தமிழ் கூறும் நல்லுலகம் இன்று அவர் போகும் இடமெல்லாம் விசில் வானை கிழிக்கும் அளவிற்கு சப்போர்ட் செய்கிறது.. அவர் ஜெயிலுக்கு போனால் மக்கள் ஃபேஸ்புக்கில் வருந்துகிறார்கள்.. ம்ம்ம், யாரென்று கணித்திருப்பீர்களே? ஆம் நம்ம பவர் ஸ்டார் தான் அவர்.. இன்று அவர் அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கான காரணத்தை நம் தம்பி அலசும் பதிவு.. பவர், இன் ஃப்யூச்சர் தி தமில் நாட் இஸ் யுவர்ஸ்...

ஒரு 7,8 வருடத்திற்கு முன்பு நம் தெருவில், சொந்தத்தில் என எங்கும் பார்ப்பவன் எல்லாம் software companyல இருக்கேன் என்பான் பந்தாவாய்.. ஆனால் இன்று இந்த ஸாஃப்ட்வேர் ஆட்களை விட அதிகமாய் ரியல் எஸ்டேட் ப்ரோக்கார்கள் தான் நரசிம்மன் போல் தூணிலும் துரும்பிலும் இருக்கிறார்கள்..  நீங்கள் புது வீடு கட்டலாம் என நிலத்துகு வாஸ்து பண்ணும் போது, அது உங்கள் கொத்தனாருக்கு தெரியுமுன் இவர்கள் வந்து விடுவார்கள்.. அவ்வளவு ஷார்ப்.. இந்த ரியல் எஸ்டேட் ஆட்களால் என்னென்ன பாதிப்புகள் வருகின்றன என தம்பி கொஞ்சம் சீரியஸாக எழுதிய பதிவு..

என் பதிவுகளுக்கு King Viswa என்பவர் அடிக்கடி கமெண்ட் போடுவார்.. நான் அவரை என்னுடன் B.Sc., படித்த விஸ்வநாதன் என்று தான் பல நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தேன்.. பின்பு தான் ஒரு நாள் தெரிய வந்தது, அவர் இருப்பது சென்னையில் என்று.. அவர் மிகத்தீவிர லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் வெறியர் என்று.. 20ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தக்கால சிறுவர்களை கட்டிப்போட்ட அந்த காமிக்ஸ் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது எங்கள் சிவகாசியில் தான் என்பதை நான் அவர் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.. அந்த பிரஸ் உரிமையாளரை அடிக்கடி பார்க்க சிவகாசி வருவாராம்.. ஒரு நாள் சிவகாசி வரும் போது நிச்சயம் பார்க்க வேண்டும்..

தலைவர் சுஜாதாவின் நாவல் ஒன்று காமிக்ஸ் கதையாக வந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? அவரின் முதல் நாவலான “நைலான் கயிறு”, “என் இனிய இயந்திரா” இரண்டும் காமிக்ஸ் புத்தகமாக வந்தது எனக்கு இவரின் ‘சுஜாதாவின் பிறந்த நாளுக்கான பதிவை’ பார்க்கும் போது தான் தெரிந்தது.. இவரின் பதிவுகளை இது தான் அது தான் என்று குறிப்பிட்டு என்னால் கூற முடியவில்லை.. எல்லாமே முழுக்க முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள் பற்றியவை தான்.. அதனால் ஒன்றை சொன்னால் மற்றொன்றை விட்டது போல் இருக்கும்.. So, நீங்கள் அதை முழுதாக படித்து உங்கள் சின்ன வயது ஞாபகங்களுக்கு சென்று வாருங்கள்.. எனக்கு விபரம் தெரிந்து நான் கடைசியாக படித்த காமிக்ஸ், என் 6 வயதில் விருதுநகரில் என் ஐயம்மா வீட்டில் இரும்புக்கை மாயாவி.. அதன் பின் நான் காமிக்ஸ் கதைகளை பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை..

இப்போது மீண்டும் திருப்பூர் தொழிற்களம் சந்திப்புக்கு செல்வோம்.. அங்கு எனக்கு அறிமுகமான இன்னொருவர் நண்பர் மணிவண்ணன்.. பழகுவதற்கு மிக மிக இனிமையானவர்.. நம்ம மதுரைக்காரர்.. இப்போது எழுதுவதில்லை என்றாலும் இவர் எழுதிய ஒரு கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் தங்கள் பிள்ளைகள் வளர்ந்த பின் பிள்ளைகளை நம்பி வேலைக்கு போகாமல் இருந்தால், அந்த பிள்ளைகள் தங்கள் தாயையும் தந்தையையும் எந்த அளவில் மதிப்பார்கள் என்பதற்கு இந்த கதை தான் சாட்சி.. கதாநாயகனின் தாத்தா, அவனுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து வேலைக்கே போனது இல்லை.. ஆனால் அவர் வேலைக்கு போகும் ஒரு சூழ்நிலை வருகிறது.. அது என்ன மாதிரி சூழ்நிலை என்பதை அறியும் போது தான் இந்த சமூகம் என்ன மாதிரியான மனிதர்களை உருவாக்குகிறது என்னும் கேள்வி நம் மனதை வருத்தப்படுகிறது..\

என்னை போன்றே இவரும் ரஜினி ரசிகர் தான் என இந்தப்பதிவை படிக்கும் போது தான் தெரிந்தது.. ரஜினியின் சிறந்த பத்து படங்களை வரிசைப்படுத்தியிருப்பார்.. என்னால் அப்படியெல்லாம் வரிசைப்படுத்த முடியாது.. எப்படி சுஜாதா ஒரு பேப்பரில் சும்மா மையை தெளித்து வைத்தாலே கவனம் சிதறாமல் ரசித்து பார்த்துக்கொண்டே இருப்பேனோ, அது போல் ரஜினி திரையில் வந்தால் வேறு எங்கும் கவனம் போகாது.. ரஜினி படங்களில் இருக்கும் இன்னொரு விசயம் அவர் எல்லா படங்களிலும் ரஜினியாகத்தான் இருப்பார்.. அதாவது ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் போன்று.. அவர்களுக்காவது ஸ்பைடர் மேன் 1,2,3 என்று ஒரே பெயரில் படம் வரும்.. ஆனால் நம்ம ஆளுக்கு பாட்ஷா, முத்து, சிவாஜி, படையப்பா என்று படத்திற்கு பெயர் மாறினாலும், படத்தில் அவர் முந்தைய படத்தில் செய்த அதையே தான் செய்வார்.. ஆனால் நாம் முந்தைய படத்தில் ரசித்ததை விட இந்த படத்தில் அவரை அதிகம் ரசிப்போம்.. வேறு நடிகர் ஒரே மாதிரி தொடர்ந்து இரண்டு மூன்று படம் நடித்தாலே அவரின் நான்காவது படத்தை SMS ஜோக் வரை இழுத்து அசிங்கப்படுத்துவோம்.. ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இதை தான் செய்கிறார் ரஜினி, நாமும் ஒவ்வொரு படத்தை விட அடுத்த படத்தை இன்னும் விரும்புகிறோம்.. அது தான் ரஜினி..

மக்கள் கடன் வாங்கவே கூச்சபப்ட்ட காலம் என்று ஒன்று இருந்தது.. பின், வெளியில் தெரியாமல் கடன் வாங்கி, கடன்காரன் திருப்பி கேட்கும் முன் கொடுத்துவிடும் காலம் வந்தது.. அடுத்ததாக கடன் வாங்கி, கடன்காரன் வந்து 2,3 முறை சண்டையிட்டால் திருப்பி கொடுக்கும் காலம் வந்துவிட்டது.. ஆனால் இப்போது நம் மக்களுக்கு கடன் வாங்கும் போது கூச்சமும் இருப்பதில்லை, அதை கடன் கொடுத்தவன் திரும்ப கேட்கும் போது, கொடுக்க வேண்டுமே என்கிற குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை.. வங்கிகளும், தனியார் கடன் கொடுக்கும் நிறுவனங்களும் கூவிக்குவி கடன் கொடுக்கின்றன. ஆனால் அந்த கடனை அவர்கள் திரும்ப வாங்கும் விதம், கவனக்குறைவால் நாம் சிறு தவறு செய்தாலும் அதற்கு கொடுக்க வேண்டிய விலை என தேவை இல்லாவற்றிற்கு கடன் வாங்கி பாடு படுவதை அழகாக சொல்லும் பதிவு,.,.

எனக்கு தெரிந்த முக்கியமான பதிவர்களையும், அவர்களின் சிறப்பான பதிவுகளையும் இத்தனை நாள் பகிர வாய்ப்பு கொடுத்த அன்பின் சீனா சார் அவர்களுக்கும், வலைச்சரத்திற்கும் இந்த சிவகாசிக்காரனின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. 

பி.கு: 
எங்கள் கல்லூரி இயக்குனர் அடிக்கடி ஒரு வாசகம் சொல்வார்.  "There might be thousands of reasons for not doing something.. But only one reason to do the work. It is dedication".. ஒரு வேலை செய்யாமல் இருக்க 1000 காரணங்கள் இருக்கலாம்.. ஆனால் செய்து முடிக்க ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும். அது, ‘நான் இந்த வேலையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு & ஈடுபாடு. அவருக்கு காரணங்கள் சொல்வது பிடிக்காது.. இருந்தாலும் நான் இப்போது காரணம் சொல்லி மன்னிப்புகும் கேட்க வேண்டும்..

எப்படியாவது குறைந்த பட்சம் ஏழு பதிவுகளாவது எழுதிவிட வேண்டும், இருபது பதிவர்களையாவது அறிமுகப்படுத்த வேண்டும் தான் என்று நினைத்திருந்தேன்.. வலைச்சர விதிமுறையின் படி அதை எப்படியாவது செய்ய முயன்றேன்.. ஆனால் எனது மேனேஜர் மூன்று நாட்கள் எனது மார்க்கெட்டிற்கு டூர் பிளான் போட்டு விட்டதால் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது.. அதனால் அன்பின் சீனா சார் என்னை மன்னிக்க வேண்டும்.. இன்னொரு சமயம் இதை விட சிறப்பாக செய்து தருகிறேன் சார்.. எட்டு வைக்கும் பிள்ளை ரெண்டு மூனு எட்டில் இடறி விழுந்துவிட்டது.. கொஞ்சம் வளர்ந்த பின் நீங்கள் எதிர்பார்ப்பதை போல் ஓடும் சார்.. 

முடிந்த வரை இந்த வேலையை சிறப்பாக செய்திருப்பதாகவே நம்புகிறேன்.. எனக்கு ஊக்கம் அளித்த நண்பர்களுக்கும் well wisherகளுக்கும் என் நன்றிகள்.. இவர்களிடமும் ஒரு மன்னிப்பு கேட்க வேண்டும்.. நீங்கள் போடும் பின்னூட்டத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்கும் நேரக் குறைபாடு தான் காரணம்.. மன்னித்துக்கொள்ளுங்கள்..

எனக்கு நல்ல நண்பர்களையும், சிவகாசிக்காரனை பல நல்ல ரசிகர்களை கொடுத்த இந்த ஒரு வாரத்தை நான் என்றும் மறக்க மாட்டேன்.. மிக்க நன்றி.. வணக்கம் :-)
மேலும் வாசிக்க...

என் நண்பரும், ஒரு புதியவரும், சிரிப்பு ப்ளாக்கரும்...

என் கடந்த பதிவு அந்த மூன்று பேரையுமே மிகவும் எமோசனலாக டச் செய்திருப்பது நானே எதிர்பாராதது.. இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது தான் என் மனதில் அவர்களைப்பற்றி நான் நினைப்பதை கூற முடிகிறது.. பேசும் போதும், சாட்டிலும் இது மாதிரி செண்டிமெண்ட் விசயங்களை சொல்ல மிகவும் கூச்சமாக இருக்கும்.. அப்படியே சொன்னாலும் அது நடிப்பு போல் இருக்கும்.. நேற்று எழுதி முடிக்கும் போது எனக்கு ஒரு திருப்தி இருந்தது.. அந்த திருப்தி, அந்த மூவரின் சந்தோசத்தை பார்த்து இன்னமும் அதிகரித்துவிட்டது.. ரத்னவேல் சார், டான் அசோக் & செல்வக்குமார் நண்பா உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...

இன்றும் என் மனதை ஒவ்வொரு வகையில் கவர்ந்த மூன்று பேரைப்பற்றித்தான் சொல்லப்போகிறேன்.. அதுவும் என் வழக்கமான சொந்த கதை, சோக கதைகளோடு தான்..

அது 2012 டிசம்பர் மாதம்.. திருப்பூரில் தொழிற்களமும் தாய்த்தமிழ் பள்ளியும் இணைந்து திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை அழைத்து நடத்திய ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு பதிவர்கள் பலரும் போவதாகவும், தன்னால் போக முடியாததால், என்னை அங்கு போய் கலந்து கொள்ள சொன்னார் திரு.ரத்னவேல் ஐயா அவர்கள். எனக்கு அங்கு ஒருவரையும் தெரியாது.. பதிவர் கண்மணி மட்டும் சொந்த ஊர் என்பதால் லேசாய் அறிமுகம் உண்டு.. ஒரு வழியாய் அங்கு போய் சேர்ந்தால், அங்கிருக்கும் ஒரு முகமும் எனக்கு தெரியவில்லை.. பதிவர், பெற்றோர், மைக்செட் ஸ்பீக்கர் ஆள் என எல்லோரும் ஒரே மாதிரி இருந்தார்கள்.. ‘சரி நாம பாட்டுக்க ஒரு மூலையில போயி ஒக்காருவோம்’ என அமர்ந்தேன்.. என் அருகில் அமர்ந்திருந்த ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தார்கள். அப்போது அறிமுகமானவர்கள் தான் அண்ணன் வீடு சுரேஷ் குமார், அண்ணன் திண்டுக்கல் தனபாலன் எல்லாம்..

இவர்கள் எல்லோர் மேலும் ஒரு மதிப்பும், ‘அய்யோ பெரிய ஆள்ப்பா’ என்கிற பயமும் இவர்களிடம் என்னை சகஜமாக பேச விடவில்லை.. அப்போது ஒருவர், சராசரி இந்திய உயரத்தில், என்னை விட அழகான கண்ணாடி அணிந்து கொண்டு, என்னை போல் ரெண்டு நாள் வளரவிட்ட தாடி மீசையோடு வந்து பேசினார்.. “நான் ஸ்ரீநிவாசன்.. ’திடங்கொண்டு போராடு’னு எழுதிட்டு வரேன்” என்றார்.. ப்ளாக் பெயரை கேட்டால் ஏதோ புரட்சிக்காரர் மாதிரி இருந்தது.. ஆனால் ஆள், நாம் சைட் அடிக்கும் பெண்ணின் தம்பி போல் பார்த்தவுடன் பிடித்தவரானார்...

இவரை எல்லோருக்கும் தெரியும்.. ஆனாலும் இங்கு சொல்லக்காரணம் இவர் எனக்கு என் ப்ளாக்கை எப்படி promote செய்வது, தமிழ்மணம் என்றால் என்ன என்பது போன்ற பல முக்கிய marketing strategyக்களை சொல்லிக்கொடுத்தவர். லார்டு லபக்கு தாஸ் மாதிரி நைட்டு ரெண்டு மணிக்கு கூட இவரிடம் ப்ளாக் சம்பந்தமாக டவுட் கேட்கலாம்.. இன்னொரு முக்கிய காரணம், ப்ளாக்காக இருந்த என் பக்கத்தை, வெப்சைட்டாக மாற்றிக்கொடுத்தவரும் இவர் தான்..

பொதுவாகவே நம்ம சீனுவிற்கு பயணக்கட்டுரைகள் மிக மிக அற்புதமாக வரும்.. அதில் அவருக்கே உரிய நகைச்சுவையும் பாயாசத்தில் போட்ட முந்திரி மாதிரி சூப்பராக இருக்கும்.. ஒவ்வொரு ஊரில் முக்கிய இடம் என்று ஒன்று இருக்கும். அதற்கு சரித்திர முக்கியத்துவமோ அரசியல் முக்கியத்துவமோ இருக்கும்.. ஆனால் நமக்கு அதை பற்றிக்கூட தெரிந்து கொள்ள ஆரவமோ, அதை பகிரும் எண்ணமோ இருக்காது.. நம்ம ஆள் இங்கிருந்து மெனக்கட்டு காஷ்மீருக்கு சென்று, தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக அங்கிருக்கும் ராணுவ முகாமையும், சில ராணுவ ரகசியங்களையும் கசிய விட்ட ஒரு பதிவு இது.. ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இந்த பதிவிற்காக இன்னும் ஏன் இவரை மிலிட்டரி கோர்ட் தண்டிக்கவில்லை என எனக்கு மிகப்பெரிய டவுட்..

என்ன பதிவின் கடைசி வரி பார்த்து உங்களுக்கும் என்னைப்போலவே டவுட் வருகிறதா? சரி அது கிடக்கட்டும், தனுஷ்கோடியில் 1964ல் மிகப்பெரிய புயலும் கடல்சீற்றமும் வந்து ஒரு ஊரையே மொத்தமாக தன் வாயில் போட்டு சென்றதே, அப்போது காதல் மன்னன் ஜெமினி தன் காதல் மனைவியுடன் அங்கு தான் இருந்தாராம்.. மாலையே சுதாரித்து கிளம்பிவிட்டதால் அவர்கள் தப்பித்தார்கள்.. அந்த இருவர் தப்பித்தாலும் எத்தனை ஆயிரம் பேர் அங்கு சடலமாகக்கூட கிடைக்காமல், இருக்கிறாரா இறந்தாரா என்று கூட தெரியாமல் போய்விட்டனர்?ஜெமினி அங்கு இருந்த தகவலையும், இப்போதைய தனுஷ்கோடியின் நிலையையும் நேரடியாக விசிட் அடித்து சீனு அருமையாக பதிந்த பதிவு இது.. இதில் உங்களுக்கோ எனக்கோ நிச்சயம் டவுட் வராது..

நம்ம ஆளு கதையும் வெளுத்து கட்டுவார்... அவர் சமீபத்தில் எழுதிய ஒரு கதை என்னை மிகவும் பாதித்து விட்டது.. மருத்துவமனை என்கிற பெயரில், பிணத்தை கூட விலை பேசும் கொடூரமும், அந்த கொடூரர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளும் என கதை ரொம்ப சீரியஸாக கொஞ்சம் திகிலாக போனாலும் அவர் சொல்ல வந்த கருத்து சூப்பர். அவர் எழுதிய கதைகளில் the best என்று நான் இதைத்தான் சொல்வேன்.. ஒரு திருவிழா கதையும் அழகாக நகைச்சுவையோடு எழுதியிருப்பார்.. அது இவரின் வழக்கமான நகைச்சுவை என்பதால் அதை விட இது எனக்கு மிகப்பிடித்திருந்தது..

தலைவர் சுஜாதாவின் பிறந்த நாள் அன்று நான் எழுதிய பதிவில் ஒரு வரி வரும்.. "எல்லோராலும் சுஜாதா போல் எழுதிவிட முடியாது.. ஆனால் எழுதும் எல்லோருமே சுஜாதாவால் தான் எழுதுகிறார்கள்” என்று... சற்றே மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்றாலும், சுஜாதா ரசிகர்களைப்பொறுத்தவரை இது ஒரு இயல்பு நவிற்சி கூற்று தான்.. நண்பர் சீனுவும் என்னைப்போல் தலைவரின் மிகப்பெரிய வெறியர் தான்.. சுஜாதாவின் கணேஷ் - வசந்த பாத்திரங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ஒரு மிக மிக சூப்பரான பதிவு.. கணேஷும் வசந்தும் என்னைப்பொறுத்தவரை சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் மாதிரியான ஆட்கள்.. இந்த உலகிற்கு வயதானாலும் அவர்களுக்கு ஆகாது.. 1970களிலும் 18 வயது பொண்ணை சைட் அடித்தவன் வசந்த்.. 2008, ஃபெப்ரவரி 27 வரையும் கூட வசந்த் அதை தான் செய்தான்.. கணேஷும் ரிட்டையர் ஆகாமல் ஒரு சூப்பர் லாயராகவே இருந்தான்.. காலங்கள் மாறினாலும் வசந்த் கடைசி வரை கணேஷுக்கு ஜூனியராகவே இருக்கிறான்..

சீனுகுரு இன்று எனக்கு முகநூல், பளாக் என்பதையும் தாண்டி ஒரு நல்ல நண்பராக இருந்துவருகிறார்.. அவர் மூலம் அறிமுகமானவர் தான் நண்பர் ரூபக் ராம்.. ராம் என்கிற பெயர் இருப்பதால் எனக்கு இவரை டக்கென்று பிடித்துவிட்டதா என தெரியவில்லை. எங்கள் இருவரை விட கொஞ்சம் சிறியவர் வயதில்.. எங்களை மிஞ்சுபவர் எழுத்தில்.  இவரின் மொழி ஆளுமை நன்றாக இருக்கும்.. முடிந்த வரை தமிழிலேயே எழுதுவார்.. இவரும் பொதுவாக பல விசயங்கள், சிறுகதைகள் என எழுதினாலும், நான் குறிப்பிட்டு சொல்ல நினைப்பது இவரின் உலக சினிமாக்கள் பற்றிய பதிவுகளைத்தான்..

அந்தக்கால ஓர் இரவு, பத்து வருடங்களுக்குள் வந்த விருமாண்டி, ஆய்த எழுத்து போன்ற படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கும்.. அதாவது ஒரே சம்பவங்கள், பல்வேறு பாத்திரங்களின் வாயிலாக அவரவர்களுக்கு ஏற்றாற்போல் சொல்லப்படும். விருமாண்டியில் பசுபதி, “எல்லாத்தையும் தாங்கிட்டு ஒரு இடி தாங்கியா நின்னேன்” என்று சொல்லும் போது, ‘இவன் நல்லவனா இருப்பானோ’னு ஒரு டவுட்டு வரும்.. அதே படத்துல கமல், “நா அன்னலெச்சுமிய கெடுத்து கொன்னுட்டேன்னு சொல்லிருப்பாய்ங்களே?”னு கேக்கும் போது, ‘ஒக்கா மக்க, இவன் நல்லவன்டா அந்த கொத்தாளத்தேவன் தான் கெட்டவன்’ என வேறு ஒரு நினைப்பு வரும்.. இந்த மாதிரி ஒரே விசயத்தை பல பாத்திரங்கள் மூலம் ஒவ்வொரு விதமாக சொல்லும் திரைக்கதை முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அகிரா குரசவா.. ஏதோ சாத்தூர் கார சேவுனு நினைத்துவிடாதீர்கள்.. ஆள் பெரிய ஆள்.. அவரின் ’ராஷோமோன்’ தான் நமது ஓர் இரவில் இருந்து விருமாண்டி வரை அனைத்திற்கும் முன்னோடி.. அதைப்பற்றிய நண்பரின் பதிவு..

நீங்கள் ஆள் அரவமே இல்லாத ஒரு நெடுஞ்சாலையில் வேலை நிமித்தமாக வேகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள்.. உங்களுக்கு முன் ஒருவன் வழி விடாமல் சென்று கொண்டிருக்கிறான் அவன் வண்டியில். நீங்கள் ஓட்டுவது ஒரு சாதா கார்.. அவன் ஓட்டுவது ஒரு மிகப்பெரிய ட்ரக். வழி விடாத அவனுக்கு விடாமல் ஹார்ன் அடிக்கிறீர்கள்.. அப்போதும் அவன் வழிவிடவில்லை. வேறு வழி இல்லாமல் அவனை சைடு எடுத்து முந்தி செல்கிறீர்கள். இது நம் வாழ்வில் அடிக்கடி நடக்கும் சம்பவம். ஆனால் இப்படி ஒரு நாள் செல்லும் போது அப்படி நீங்கள் சைடு வாங்கிய ட்ரக்காரன், நீங்கள் அவனை முந்தியது பிடிக்காமல் உங்களை கொல்ல பின் தொடர்ந்து வருகிறான். என்ன செய்வீர்கள்? இப்படி ஒரு கதையை ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாக வில்லனின் முகத்தையே காட்டாமல் நம்மை சீட் நுனியில் அமர வைத்து பரபரக்க வைத்திருப்பார் ஸ்பீல்பெர்க்.. இது அவர் சினிமாவில் புகழ் பெரும் முன் எடுத்த படம்.. படத்தில் பெயர் டூயல். இதைப்பற்றிய விமர்சனத்தையும் பாருங்கள்..

நான் MBA படிக்கும் போது (அடடா இவன் இந்த MBA படிச்சத விட மாட்டானானு டென்சன் ஆகாதீங்க.. படிப்பை தாண்டி நிறைய கற்றுக்கொண்டது அப்போது தான்), பேச்சாளுமை குறித்த ஒரு வகுப்பில் எனக்கு ஒரு படம் போட்டுக்காட்டினார்கள்.. அதாவது ஒரு சிறுவன் மீது கொலைப்பழி சுமத்தப்படுகிறது. 12 பேர் கொண்ட குழு அதைப்பற்றிய தங்கள் முடிவை நீதிபதிக்கு கொடுக்க வேண்டும்.. அந்த 12 பேரில் 11 பேர் பையன் தான் குற்றவாளி என்று பேச்சை ஆரம்பிக்கிறார்கள். ஒருவர் மட்டும் இல்லை அவன் நிரபராதி என்கிறார். அந்த ஒருவர் தன் பேச்சுத்திறமையால் எப்படி மீதி 11 பேரையும் தன் முடிவை ஒத்துக்கொள்ள வைக்கிறார் என்பதே "2 Angry men" என்னும் இந்தப்படத்தின் கதை. இந்த கதையில் என்ன அழகு என்றால், சாட்சி, ஃப்ளாஷ்பேக் என்று எதுவுமே கிடையாது. நிஜத்தில் அந்த பையன் தான் கொலை செய்தானா இல்லையா என்பது கூட யாருக்கும் தெரியாது. ஆனால் தங்களின் பேச்சின் மூலம் அவர்களாக ஒத்த முடிவுக்கு வருவார்கள்.. படத்தில் மொத்தமே மூன்றே மூன்று காட்சிகள் தான்.. முதல் கோர்ட் சீன். ரெண்டாவது ரூம் சீன், இடையில் ஒருவர் தம் அடிக்க போகும் சீன். படத்தின் 90% ஒரே அறையில் நடக்கும். ஒரு ஆக்‌ஷன் படம் பார்ப்பது போல் இதை அவ்வளவு சுவாரசியமாக பார்க்கலாம்.. ஆரம்பம் முதல் கடைசி வரை போர் அடிக்காது. நண்பர் தன் பாணியில் இந்த படத்திற்கு கொடுத்திருக்கும் விமர்சனம்..

இந்த மூன்று படங்களில் முதல் படத்தை தவிர மற்ற இரண்டையும் நான் பார்த்திருக்கிறேன்.. மிக மிக அருமையான படங்கள்.. ரூபக் ராம் அவர்கள் தேடிப்பிடித்து நல்ல படங்களாக பார்த்து நமக்கும் அதைப்பார்க்க ஆர்வத்தை தூண்டும் விதமாக எழுதுவது மிகவும் அருமையாக இருக்கிறது.. வேற்று மொழிப்படங்கள் மட்டும் அல்லாது தன்னை பாதித்த தமிழ்ப்படங்களையும் உலக சினிமா லிஸ்டில் சேர்ப்பதாக சொல்லியிருந்தார் என்னிடம் ஒரு முறை.. பார்க்கலாம்....

சரி, இனி உங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்,.. நேற்று நான் சொன்ன டான் அசோக் மூலம் எனக்கு பழக்கமானவர் தான் நண்பர் முத்து சிவா.. தீவிரமான ரஜினி ரசிகர்.. அதே அளவில் மிகத்தீவிரமான கவுண்டமணி ரசிகர்.. காமெடி சினிமா ரசிகர்.. இவர் பதிவுகள் பெரும்பாலும் சினிமா சார்ந்தும், நகைச்சுவை சார்ந்துமே இருக்கும்.. அதிகமாக கவுண்டமணியின் வசனங்களை தன் பதிவுகளில் சேர்ப்பார்.. அதுவே இவரின் எழுத்துக்களுக்கு இன்னும் நிறைய ரசனையை ஏற்றும்..

சனி, ஞாயிறுகள் ஆகிவிட்டாலே மாலை நேரங்களில் குடும்பத்துடன் டிவி பார்க்க முடிவதில்லை.. ஒவ்வொரு சேனலிலும் ஒருத்தன் பொண்டாட்டி இன்னொருத்தியின் புருசனோடு ஆடிக்கொண்டிருக்கிறாள்.. ஆடி முடித்ததும் அவளின் புருசன், “என் பொண்டாட்டிக்கு மிஸ்டர்.X கூட கெமிஸ்ட்ரி சூப்பரா வொர்க் அவுட் ஆச்சி”னு சொல்லுவான்.. ஜட்ஜஸ் கை தட்டி ரசிப்பார்கள்.. மார்க் போடுவார்கள்.. இந்த மாதிரி அரை குறை ஆடைகளுடன் கோர்த்து விடும் நிகழ்ச்சிகள் தான் பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் நம் இல்லங்களை அல்லோலகல்லோலப்படுத்திக்கொண்டிருக்கும் (ஆத்தாடி எம்மாம் பெரிய வார்த்த!!!).. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் நண்பர் துவைத்து காயப்போட்ட பதிவு..

இப்பலாம் ப்ளாக்கில் மாய்ந்து மாய்ந்து எழுதுவது குறைந்து கொண்டே வருகிறது.. எல்லோரும் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் ரெண்டு வரியில் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.. லைக்கும் கமெண்ட்டும் வாங்குகிறார்கள்.. ஒரு பிரபலமாக மாறிவிடுகிறார்கள்.. நாலே வரியில் நான் சொல்வதற்கு எளிதாக இருக்கும் இந்த விசயத்தை நிஜத்தில் சாதிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஃபேஸ்புக்கில் ஒருத்தன் பிரபலமாக என்னென்ன தகிடுதத்தோம் எல்லாம் பண்ண வேண்டும் என சீரியஸாக உண்மையை சொல்லியிருக்கும் அடுத்த நகைச்சுவை அணுகுண்டு...

சரி ஃபேஸ்புக்கில் பிரபலமாக மேற்சொன்ன எல்லாவற்றையும் செய்ய நான் ரெடி.. ஆனா ஆஃபிஸ்ல ஓப்பி அடிச்சாத்தான் இந்த கருமத்தை எல்லாம் பண்ணி ஃபேஸ்புக்குல நாம ஃபேமஸ் ஆக முடியும். ஆஃபிஸ்ல ஒழுங்கா வேலை பாத்தா ஃபேஸ்புக்குல நமக்கு என்ன வேலை? சரி, இப்ப ஆஃபிஸ்ல ஓப்பி அடிக்கணும்.. அதுக்கு என்னவெல்லாம் செய்யலாம்?இருக்கே, அதுக்கும் நம்ம ஆள் கிட்ட ஐடியா நிறைய இருக்கே.. ’வேணாம்டா இந்த மானங்கெட்ட பொழப்பு’னு சொல்றவங்க இப்பயே கிளம்பி போயிரலாம்.. தியாகம் தான் நம்மை உயர்த்தும்னு புரிஞ்சவங்க மேலே சொன்ன ரெண்டு விசயங்களையும் பின்பற்றுங்க, பேஸ்புக்குல பெரிய இடத்துக்கு வரலாம்.. வேலையிலயும், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பின்னலாம் போங்க...

இன்று கூட நான் ஃபேஸ்புக்கில் ஒரு நகைக்கடை, விளம்பரம் என்கிற பெயரில் லோக்கல் கேபிள் சேனலில் செய்யும் டார்ச்சரை பற்றி கூறியிருந்தேன்.. நம்ம நண்பருக்கும் அந்த மாதிரி நேர்ந்த ஒரு அனுபவத்தை பாருங்கள்.. ஒரு நடிகர், நல்லா காது குத்தி, UKG படிக்குற மாதிரி இருக்குற பிள்ளைக்கு பேரு வைக்குற மாதிரி ஒரு விளம்பரம்.. அத பத்தி நம்ம ஆளு ஒரு லாஜிக் கேள்வி கேப்பாரு பாருங்க, இப்ப படிக்கும் போது கூட விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.. 

நகைச்சுவை உணர்வு என்பது ஒரு வரம்.. அது நமது நண்பர் முத்து சிவாவிற்கு மிக சூப்பராக வருகிறது.. அவர் ப்ளாக்கில் 100க்கு 90% நகைச்சுவை பதிவுகள் தான் இருக்கும்.. படிக்கும் போது கேர்ஃபுல்லாக இருங்கள்.. நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து, ‘பாவம் பிள்ளைக்கு என்னமோ ஆயிருச்சி’னு பயந்து பக்கத்து மசூதிக்கு கூட்டிட்டு போயிற போறாங்க...

இன்று அறிமுகப்படுத்தியவர்களில் சீனு குருவை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.. ரூபக் ராம் இப்போது தாம் 6மாதங்களாக எழுதுகிறார்.. மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.. நிச்சயம் பெரிய ப்ளாக்கராக வருவார்.. நண்பர் முத்துசிவாவை சினிமா சம்பந்தமான, நகைச்சுவை விசயங்கள் படிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் என நம்புகிறேன்.. கடந்த 5நாட்களில் இன்று உங்களை அதிகமாக சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தியிருப்பேன் என நம்புகிறேன்.. 

நாளையோடு என் பயணம் முடிகிறது.. அதற்குள் மிச்சம் இருக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்த முயல்கிறேன்.. :-)
மேலும் வாசிக்க...

Saturday, June 15, 2013

என்னை எழுத வைத்த எழுத்தாளர்கள்...

வணக்கம் வலைச்சர நண்பர்களே, என்ன ஒரு நாள் கேப் விழுந்துருச்சோ? சரி அத எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிரலாம்.. திருநெல்வேலி டூ அமெரிக்கா பயணம் இனிதே முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்கு பத்திரமாக திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன்.. நான் இதுவரை அறிமுகப்படுத்திய ப்ளாக்கர்கள் அனைவருமே என்னிடம் பழக்கத்தில் இருப்பவர்கள் தான்.. யாரென்றே தெரியாத ப்ளாக்கர் யாரையும் நான் இது வரை அறிமுகப்படுத்தியதில்லை.. இனியும் அப்படி செய்வேனா என்பது கொஞ்சம் சந்தேகமே.. எனக்கு தெரிந்தவர்களை மட்டுமே சொல்லிவருகிறேன்.. அந்த வகையில் இன்று, எனக்கு எழுத ஊக்கமும், என்னை எழுத வைக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் ப்ளாக்கர்களை பற்றி சொல்லலாம் என்றிருக்கிறேன்.. இவர்கள் அனைவருமே எனக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானவர்கள்.. ஆனால் மிக மிக நெருக்கமானவர்கள்..

முதலில், என் அப்பா போல் நான் மதிப்பு வைத்திருக்கும் திரு.ரத்னவேல் ஐயா அவர்கள்... இவரை தெரியாதவர்கள் ப்ளாக் உலகிலும் ஃபேஸ்புக்கிலும் மிக மிக சொற்பம். ஐயா அவர்கள் எனக்கு ஃபேஸ்புக் மூலம் தான் முதலில் அறிமுகம் ஆனார். அப்போதே நான் ப்ளாக்கில் எழுதி வந்தாலும், ஐயா அவர்களின் அறிமுகத்திற்கு பிறகு தான் என் எழுத்தில் ஒரு கவனமும் நிதானமும் மெனக்கெடலும் வந்தது.. அந்த அளவுக்கு என் எழுத்தை என்னையே ரசிக்க வைத்தவர். என்னை விட என் மேலும் என் எழுத்தின் மேலும் அக்கறை கொண்டவர். ஃபேஸ்புக் நட்பு ஒரு குடும்ப உறவு போல் இருக்கும் என்பதை இவர் மூலம் தான் உணர்ந்து கொண்டேன்.. சென்ற மாதம் அண்ணன் பிரகாஷின் (ரத்னவேல் ஐயாவின் இளைய மகன்) திருமண வரவேற்புக்கு சென்றதும் ஒரு இனிய அனுபவம், நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்..

ஐயா அவர்களின் பெரும்பாலான பதிவுகள், பகிர்வுகளாகத்தான் இருக்கும்.. யார் எந்த நல்ல கருத்தை சொன்னாலும் அதை வாழ்த்தி பகிர்ந்துவிடுவார்.. யாழ்ப்பாண பேச்சுத்தமிழ் பற்றி, கிட்டத்தட்ட ஒரு பி.எச்.டி. தீசிஸ் போல் எங்கள் ஃபேஸ்புக் நண்பர் ராம்குமார்.G.க்ரிஷ் அவர்கள் எழுதியதை ஐயா பகிர்ந்திருப்பதை பாருங்கள்.. கிட்டத்தட்ட யாழ்ப்பாண தமிழும், நெல்லை, தூத்துக்குடி, குமரி பகுதி தமிழும் பேச்சில், நடையில் ஒரே மாதிரி இருப்பதை நீங்கள் அறியலாம்...

வாழ்வில் நாம் ஒவ்வொருவரையும் பார்த்து ஒவ்வொரு வகையில் பொறாமைப்படுவோம்.. ஒன்னாம் கிளாஸில் பென்சிலின் அடியில் ரப்பரும் இணைந்திருந்த புது வகை பென்சிலை வைத்திருந்தவன் மீது ஆரம்பித்த பொறாமை, இப்போது என் வயதில் என்னை விட அதிக சம்பளம் வாங்குவனை பார்க்கும் போது வரை தொடர்கிறது.. நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு ஸ்பெசல் விசயம் இருந்து கொண்டே இருக்கிறது.. தெரிந்தோ தெரியாமலோ அது நம்மை பொறாமைப் பட வைத்துக்கொண்டே இருக்கிறது.. அப்படி ஐயா அவர்களைப் பார்த்து நான் பொறாமைப்படும் விசயங்கள் ரெண்டு.
1. தலைவர் சுஜாதா, தன் கைப்பட ஐயாவுக்கு எழுதியிருக்கும் நன்றிக்கடிதம்...
2. “ரத்தம் ஒரே நிறம்” கதையை ஆரம்பத்தில் வேறு பெயரில் எழுதிய போது அதில் வந்த நாயகனுக்கு, ஐயாவின் உதவியை மனதில் கொண்டு, “ரத்னம்” என பெயர் வைத்தது.. 
இப்போது கூட மனதை தேற்றிக்கொள்வது உண்டு, சுஜாதா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், தன் கதையில் அட்லீஸ்ட் வசந்திடம் பல்பு வாங்கும் ஒரு கப்பி பாத்திரத்திற்காவது என் பெயரை வைக்கும் அளவிற்கு ஏதாவது செய்திருப்பேன் என்று..

நம் எல்லோருக்கும் நம் ஊரில் தலை முடி வெட்டுவதில் இருந்து, புதுத்துணி எடுப்பது, பலசரக்கு சாமான் வாங்குவது, கறி எடுப்பது, புத்தகம் வாங்குவது, டீ குடிப்பது என்று ஒவ்வொன்றிற்கும் பிடித்த கடை என ஒன்று இருக்கும்.. என் அப்பா ஒவ்வொரு வருடமும் பள்ளி திறந்த முதல் நாளில் என்னையும் என் தம்பியையும் எங்கள் ஊரில் இருக்கும் “சரோஜினி ஸ்டோர்ஸ்”க்கு தான் நோட்டு புத்தகம் வாங்கித்தர அழைத்து செல்வார்.. மிக மிக சிறிய இடத்தில் அமைந்திருக்கும் அந்த கடையில் தான் அன்று சிவகாசியின் பாதி மாணவர்கள் தங்கள் பெற்றவர்களோடு வந்திருப்பார்கள்.. நாங்கள் எழுதி கொண்டுபோயிருக்கும் லிஸ்டில் எதாவது ஒரு புத்தகம் கண்டிப்பாக ஸ்டாக் இருக்காது. “எப்பா மிஸ் நாளைக்கு கண்டிப்பா புக் வாங்கிட்டு வர சொல்லிருக்காங்க.. வேற கடைலனாச்சும் வாங்கி குடுங்கப்பா” என்பேன் நான் பாவமாய்.. “தம்பி, ஒங்க மிஸ்ட்ட சொல்லு, சரோஜினி ஸ்டோர்லயே புஸ்தோம் இல்லையாம்.. அடுத்த வாரம் எங்கப்பா வாங்கித்தருவாங்கனு சொல்லு” என்பார்.. அதாவது மற்ற கடைகளில் அந்த புத்தகம் இருக்கிறதா இல்லையா என்பதை பற்றிக்கூட அவருக்கு கவலை இல்லை. சரோஜினி ஸ்டோரில் இல்லை, அதனால் எங்கும் இருக்காது.. வாங்கினால் அங்கு தான் வாங்க வேண்டும் என்பது அவரின் எண்ணம். அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பலசரக்கு கடை இருக்கிறது ஏ.கே.சி. ஸ்டோர்ஸ் என்று.. தான் எப்படி அந்தக்கடையில் loyal customer ஆனேன் என்பதில் இருந்து, எப்படி அவர்களால் இந்த மாதிரி ஒரு வெற்றிகரமான கடையை நடத்தி வர முடிகிறது என்பது வரை மிக மிக அழகாக சொல்லியிருப்பார்.

நான் அப்போது, சிவகாசியில் B.Sc., படித்துக்கொண்டிருந்தேன். ஜான்சன் என்றொரு விரிவுரையாளர் இருந்தார். NSSல் இருக்கும் மாணவர்களை அழைத்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் சதுரகிரி மலைக்கு சென்றார். மலை ஏறியதும் அவருக்கு நெஞ்சு வலி.. அங்கேயே சுயநினைவை இழந்து சரிந்து விட்டார். நாங்கள் அனைவரும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதட்டத்தில் கையை பிசைந்து கொண்டிருந்தோம்.. சிலர் அழவே ஆரம்பித்துவிட்டார்கள்.. அப்போது அங்கு கையில் கம்புடன் பிச்சைக்காரர் போல் ஒருவர் வந்தார். எங்களிடம் எதுவுமே பேசாமல், ஜான்சனின் வாயில் திருநீறு போன்று ஒன்றை போட்டார்.. விரிவுரையாளர் லேசாக கண் திறந்தார். “எப்படி இருக்க?” என்றார் அந்த பிச்சைககாரர். “ஹ்ம் நல்லாத்தான் இருக்கேன்” என்றார் ஜான்சன்.. “இல்ல, நீ அர மந்நேரத்துக்குள்ள எதாவது ஆஸ்பத்திரிக்கு போ” என்று கட்டளையிட்டு விட்டு அந்த பிச்சைக்காரர் தன் வழியில் அமைதியாக போய்விட்டார்.. பயந்து போன விரிவுரையாளரும் வேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவரை டெஸ்ட் செய்த டாக்டர்கள் பயந்துவிட்டார்களாம், “எப்படி சார் இந்த சிவியர் ஹார்ட் அட்டாக்கில் பைக் ஓட்டிட்டு வந்தீங்க?” என்று.. ஆம், தன் இதயம் வலிப்பதை அவரால் உணர் முடியாத ஏதோ ஒன்றை, உடலில் டக்கென்று சுறுசுறுப்பு வரும் ஒரு வஸ்துவை அந்த பிச்சைக்காரர் இவருக்கு கொடுத்திருக்கிறார். அவர் பிச்சைக்காரரா அல்லது சித்தரா? எங்களுக்கு தெரியாது.. ஆனால் இன்றும் சதுரகிரி மலையில் சித்தர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.. மிகவும் வயதானவர்கள் கூட இந்த மலையில் சர்வ சாதாரணமாக ஏறி சாமியை தரிசனம் செய்துவிட்டு சந்தோசமாக வருகிறார்கள்.. அந்த அருமையான மலையை பற்றிய ஐயாவின் நேரடி ரிப்போர்ட்...

ஏன் என்று தெரியவில்லை, ஐயாவும் இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிஸியாகிவிட்டார்... அவர் மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய ஆசை..

நான் பெண்ணாக பிறந்திருந்தால் கண்டிப்பாக இந்த ஆளை காதலித்திருப்பேன். சொல்ல வந்த விசயத்தை காமெடியாகவும் சொல்லத்தெரியும், அதில் இருக்கும் சீரியஸ்னஸையும் புரிய வைக்க முடியும்.. ரஜினி, விஜய் பற்றியும் எழுதுவார், ஜென், திராவிட அரசியலும் எழுதுவார். அவர் தான் நண்பர் டான் அசோக் என்னும் இளவரசன்.. 

நான் ஃபேஸ்புக்கிற்கு வந்த புதிது.. ஒருவரின் நிலைத்தகவலில் கடவுள் இருக்கிறாரா இல்லையா, கடவுள் வேண்டுமா இல்லையா என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது (எப்போதும் தான்) டான் அசோக் நாத்திகத்திற்கு மிக அழுத்தமாக ஆதரவு கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்.. நான் ஆத்திகத்திற்கு ஆதரவு. சரியான சண்டை. அப்போது தான் முதல் முறை இருவரும் அறிமுகமாகிறோம்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பேசிப்பழகி நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்..

இவரெல்லாம் சிறுகதை எழுதியதை நிறுத்தியதால் தான் நான் தைரியமாக கதைகள் எழுத ஆரம்பித்தேன். இந்தக்கதையை படித்துப்பாருங்கள்.. சுப்புத்தாத்தாவை உங்களுக்கும் மிக மிக பிடித்துவிடும்.. இவரின் எழுத்து நடையும், எதார்த்தமாக சொல்லிவிட்டு போகும் மிகப்பெரிய விசயங்களும் கதையை தூக்கி நிறுத்தும்.. இவர் மீண்டும் கதைகள் எழுத வேண்டும்..

பிறக்கும் போது பிள்ளை 3கிலோவுக்கு கம்மியாக இருக்கிறது என டாக்டர் சொன்ன நொடியில் இருந்து ஆரம்பிக்கிறது, இந்த சமூகம் நம் மீது செய்யும் வன்முறை.. சமூகத்திற்காக நாம் ஒவ்வொரு விசயமாக மாற வேண்டியிருக்கிறது.. கால் கிளாஸ், அரை கிளாஸ் - இப்படி சொன்னால் இன்று புரியுமா என தெரியவில்லை - L.K.G, U.K.G படிக்கும் பிள்ளைகளை சொந்தக்காரர்கள் முன் ரைம்ஸ் ஒப்பிக்க வைக்க ஆரம்பிப்பதில் இருந்து, வகுப்பில் முதல் ரேங்க், பத்தாம் வகுப்பில் நல்ல மார்க், பதினொன்றில் நல்ல குரூப், பெண்ணாய் இருந்தால் அழகுப்பிரச்சனை, ஆணாய் இருந்தால் பணப்பிரச்சனை என்று இந்த சமுதாயம் எதிர்பார்ப்பு என்கிற பெயரில் நம்மை நாமாக வாழ விடாமல் நம்மின் சுயத்தை எவ்வாறு கொல்கிறது என மிக மிக அருமையாக சொல்லியிருக்கும் ஒரு படைப்பு...

நம்மிடம் வெகு பரவலாக பேசப்படும் கெட்ட வார்த்தையில் இருந்து, நம் குடும்ப கௌரவம், சினிமா, பிட்டுப்படம் என எங்கும் முதன்மைப்படுத்தப்படுவது பெண்களும், அவர்களின் நடத்தையும் தான்.. பெண்கள் மட்டும் தான் கலாச்சாரத்தின் தூண் என்பது நமக்கு பிறப்பில் இருந்தே சொல்லி வரப்பட்டிருக்கும் ஒரு முட்டாள்தனமான கருத்து... ஒரு ஆண், ஒரு பெண்ணின் காதலை புறக்கணித்தால் அந்த ஆணை யோக்கியன் என சொல்லும் அதே சமூகம் தான், ஒரு பெண் காதலை புறக்கணித்த காரணத்திற்காக ஆசிட் வீச்சிற்கு ஆளாக்கப்படும் போதும் ஆணிற்கே வக்காலத்து வாங்குகிறது. அப்படிப்பட்ட நம் கலாச்சாரத்தையும், அதன் மீதான மக்களின் ஒரு பக்கமான ஆதரவையும் கிழித்து தொங்க விடும் பதிவு..

வாழ்வில் படிக்கும் காலத்திலோ, வேலை செய்யும் நேரத்திலோ, எங்கோ எப்போதோ, அட்லீஸ்ட் ஒரு முறையாவது நமக்கு ஒரு ஒன் சைடு லவ்வாவது வந்திருக்கும்.. அப்படி இருக்கும் போது, அந்த ஒன் சைடு ஆண், தான் காதலிக்கும் பெண்ணிடம் பேசுவதே கெட்ட காமெடியாக இருக்கும்.. அவனின் “அம்பித்தனமான” பேச்சே அவன் காதலுக்கு வேட்டு வைக்கும்.. அடுத்து நண்பர்கள்.. ஒருவன் ஒன் சைடு லவ்வில் இருந்தால் அவன் நண்பர்களுக்கு கொண்டாட்டம். ஆர்மபத்தில் இருந்து காதலை இழுத்து மூடும் வரை ட்ரீட் கேட்டே, அவர்களுக்கு ட்ரீட் வேண்டும் என்பதற்காகவே, ஒன் சைடு லவ்வை டூ சைடாக மாற்றுவார்கள்.. அந்த காதலை பாதுகாக்க நாம் படும் பாடு, அந்த அவஸ்தைகள் என பக்காவாக காதலுக்கு தேவையான அனைத்து ஐடியாக்களும், மிக காமெடியாக சொல்லப்பட்ட பதிவு இது..


நான் MBA படித்துக்கொண்டிருந்த நேரம்.. அப்போது நான் தமிழ் வலைத்தளங்களை தமிலிஷில் (தற்போதைய இண்ட்லி) வாசிக்க ஆரம்பித்திருந்த காலம் அது.. என் மனதிலும் ‘நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்’ என்கிற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருந்த நேரம். அப்போது நான் படித்த ஒரு சில சிறுகதைகள் என் மனதை விட்டு என்றுமே நீங்காதவைகள்.. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நண்பர் செல்வக்குமார் வினையூக்கியிடம் நான் அப்போது படித்த இரண்டு சிறுகதைகள் பற்றி மிக மிக சிலாகித்து பேசியிருந்தேன். அவர் இரண்டின் சுட்டியையும் அனுப்பியிருந்தார்.. பார்த்தால் ரெண்டுமே அவர் எழுதிய கதைகள் தான்.. எனக்கு மிகுந்த ஆச்சரியம்.. செல்வகுமாரை அறியுமுன்னே அவரின் கதைகள் எனக்கு அறிமுகமாகிவிட்டன. இன்னொரு முக்கிய விசயம், நான் கதைகள் எழுத ரத்னவேல் ஐயாவிற்கு அடுத்து என்னை அதிகம் ஊக்குவிப்பது இவர் தான்.. படிக்கும் காலத்தில் நான் படித்து வியந்த சிறுகதை ஆசிரியர் ஒருவரே இன்று என்னை ஊக்குவிப்பது உண்மையிலேயே என் பாக்கியம் தான்..

இவரின் கதைகள் பெரும்பாலும் கடைசி இரண்டு மூன்று வரிகளில் மேஜிக் செய்து விடும் சுஜாதா பாணி கதைகள்.. இந்தக்கதையை வாசித்துப்பாருங்கள், நாம் அனைவரும் இதை நம் தினப்படி வாழ்வில் செய்துகொண்டிருப்பது தான்.. அதை அவர் நுட்பமாக கையாண்டிருக்கும் விதம் மிகவும் அழகாக இருக்கும்..

இந்த நாத்திகர்கள் எல்லாம் ஓவராக பேசுகிறார்களே, அவர்களுக்கு பதில் சொல்ல்வாவது கடவுள் வர வேண்டும்.. அல்லது கடவுள் இருக்கிறார் என்பதை நாம் நாத்திகர்களுக்கு உணர்த்தும் வகையிலாவது ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நிகழ வேண்டும் என நான் பல முறை நினைத்தது உண்டு.. அதை எப்படி செய்யலாம் என எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்கு, நாத்திகரான நண்பரே தன் கதையின் மூலம் சொல்லியிருக்கும் அழகான பதில்..  பேண்டஸி கதையும், சயின்ஸ் ஃபிக்சன் கதையும் நான் இந்த அளவு விழுந்து விழுந்து ரசித்து படித்தது இவருக்கு முன் சுஜாதாவை மட்டும் தான்.. இந்த மனுசனுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க வருகிறது என எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது எப்போதும்..

ஃபேண்ட்ஸி, சயின்ஸ் ஃபிக்சன் மட்டும் அல்ல, திகில் கதைகளிலும் அய்யா கில்லி தான்.. இவரின் திகில் கதைகள் எல்லாம் ஃபேஸ்புக்கில் நம் இந்திய நேரப்படி இரவு 12மணிக்கு மேல் தான் பகிரப்படும்.. படித்துவிட்டு அவனவன் இழுத்து போர்த்திக்கொண்டு, நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, எல்லா லைட்டையும் பளீர் என எரிய விட்டுக்கொண்டு தூங்க வேண்டியது தான்.. திகில் கதைகளிலும் கடைசி இரு வரிகளில் தான் உச்சபட்ச பன்ச் இருக்கும்..
நான் MBA  படித்த போது வியந்த ஒரு கதை என்று சொன்னேனே அது இது தான்.. தயவு செய்து கொஞ்சம் திடமான மனதுடன் படிக்கவும்.. கடைசி வரியை ஒரு முறைக்கு மேல் மனதில் யோசித்துப்பார்க்க வேண்டாம்...


நான் இன்று குறிப்பிட்ட இந்த மூவரும் ஒவ்வொரு வகையில் என்னை எழுத தூண்டியவர்கள்.. பல நேரங்களில் மறைமுகமாக, நான் டான் அசோக்கையும், செல்வகுமார் அவர்களையும் ஒரு ஏகலைவன் போல் பார்த்து கதைகள்/கட்டுரைகள் எழுத பழகியிருக்கிறேன், பழகிக்கொண்டிருக்கிறேன்.. ரத்னவேல் ஐயா நேரடியாக இருக்கும் ஒரு உந்து சக்தி.. இவர்கள் மூவரையும் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம்.. இருந்தாலும் இப்படிப்பட்ட எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பில் இவர்களை சொல்லாமல் இருந்தால், நான் எழுதுவதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பதால், இவர்களின் பதிவுகளை இன்று பகிர்ந்திருக்கிறேன்.. நாளை அடுத்த சில பதிவர்களோடு உங்களை சந்திக்க வருகிறேன்..
மேலும் வாசிக்க...

Wednesday, June 12, 2013

திருநெல்வேலி முதல் அமெரிக்கா வரை இருக்கும் பெண் ப்ளாக்கர்கள்...

சென்ற பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு என் நண்பர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. மூவருமே இனி தொடர்ந்து எழுதப்போவதாக சொல்லியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.. வலைச்சரம் உண்மையிலேயே ஒரு ஊக்க சக்தி தான்.. பேசப்பழகும் பிள்ளைகளை கை தட்டி உற்சாகப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.. இனி அது என்னவெல்லாம் பேசப்போகிறதோ ஆண்டவா... 

ப்ளாக் என்பது ஆண்களுக்கான (அறிவாளிகளுக்கான) ஒரு தளம் என்று தான் நான் பல நாட்கள் திமிராக நினைத்துக்கொண்டிருந்தேன்.. நான் படித்து முடிக்கும் காலம் வரை, பெண்களைப்பற்றி என்னிடம் கேட்டால், “அவளுகளுக்கு ஜென்ரல் நாலெட்ஜ் கெடையாது, மனப்பாடம் பண்ணித்தான் பரிச்சையே எழுதுவாளுக, அரசியல், சினிமா பத்தி சுத்தமா தெரியாது.. மொத்தத்துல ஒன்னுமே தெரியாது” - இப்படித்தான் மிக மிக மேம்போக்காக மரியாதையே இல்லாமல் சொல்லியிருப்பேன் அவர்களைப்பற்றி..

வேலைக்கான என் நேர்முகத்தேர்வின் குரூப் டிஸ்கசனில் என்னை பேச விடாமல், பாயிண்ட் மேல் பாயிண்ட்டாக பேசி பொளந்து கட்டிய பெண் தான் என் கருத்தை மாற்ற முதல் எட்டு வைத்தவள்.. அன்றே அடுத்த அதிர்ச்சி, என்னை இண்டர்வியூ செய்தவரும் ஒரு பெண் தான்.. அவரிடம் மிகச்சாதாரணமாக (லேசான திமிருடன் என்று கூட சொல்லலாம்)“my hobbies are reading books" என்றேன்.. அடுத்த அரை மணி நேரம் தமிழ், ஆங்கிலம் என்று முக்கியமான புத்தகங்கள், எழுத்தாளர்கள், அவர்களின் கருத்துக்கள், அதன் அரசியல் தாக்கம் எல்லாம் பேசிவிட்டு, "You know anything about those people?" என்றார்.. ’அவ்வளவு தான்.. நமக்கு வேல கெடைக்காது’னு முடிவு பண்ணிட்டேன்.. பின் அந்த பெண், வாசிப்பு சம்பந்தமாக பல அறிவுரைகள் சொல்லி, என்னை வேலைக்கு தேர்ந்தெடுத்தது வேறு விஷயம்.. ஆனால் இதில் இருந்து நான் புரிந்து கொண்டது, பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாகவும் தெரியும் என்பதைத்தான்.. அதற்கு பின், ஃபேஸ்புக், ப்ளாக் என்று பல தளங்களில் பெண்கள் தங்கள் அறிவார்த்தமான பல கருத்துக்களை சொல்லி வருவதும் நாம் இன்று கண் கூடாக காண்பது தான்.. ஒரு விசயம், நான் ஒரு செமி ஆணாதிக்கவாதி.. அதனால் ’என்னடா இவன் பெண்களை இப்படி பேசுகிறான்?’ என கோவிக்க வேண்டாம்.. என் மனநிலையை நான் இப்போது சொல்லப்போகும் சிலர் மாற்றி வருகிறார்கள்..

இன்று அந்த வகையில் சில பெண் பதிவர்களைக்காணலாம்.. இதில் என்ன சிறப்பு என்றால் இந்த பதிவர்கள் எல்லோரும் எனக்கு திரு.ரத்னவேல் ஐயா அவர்களால் அறிமுகமானவர்கள்.. 

முதலில் சுபத்ரா பற்றி.. இவர் அகமதாபாத்தில் வங்கியில் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே ஐஏஎஸ் கனவால் அந்த வேலையை உதறிவிட்டு, இப்போது சென்னையில் ஐ.ஏ.எஸ்.ற்கு படித்து வருகிறார். அவர் சென்னை வந்த போது, தங்குவதற்கு சரியான இடம் தேடி அலைந்து கொண்டிருந்தார்.. ரத்னவேல் ஐயாவிடம் உதவி கேட்டிருந்தார் போல.. அவர் என்னிடம் சென்னையில் யாராவது பெண் தோழி இருந்தால் (அவருக்கு நாம பண்ணுறது எல்லாம் சோலோ பெர்ஃபாமென்ஸ்னு தெரியாது) அவர் மூலம் இவருக்கு உதவ சொன்னார். அப்போது என்னுடன் படித்த சில பெண்களிடம் விசாரித்து இவருக்கு சொன்ன போது தான் அறிமுகம் கிடைத்தது. பின் தான் இவர் ஒரு ப்ளாக்கர் என்பது தெரிய வந்தது.

பெண்கள் ஐ.ஏ.எஸ் படிக்கும் அளவுக்கு அறிவானவர்களா என்கிற எண்ணத்தில் தான் இவரின் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன்.. உண்மையை சொல்ல வேண்டுமானால் பல ஆண்களை விட, இவர் எழுதுவதும், பேசுவதும் நறுக்& சுருக்.. அத்தனை விசயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார்.. அதிலும் தமிழ் மொழி பற்றி இவர் பல விசயங்களை ஆதாரத்தோடு பேசுவது மிகவும் பெருமையாகவும், நம் மொழியை பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கிறோமே என்கிற குற்றவுணர்வையும் கூட்டியது..

பெண்களை பற்றி நான் குறையாக சொல்லும் இன்னொரு விசயம் அவர்களின் நட்பு.. ஆண்களின் நட்பு போல் அது எதையும் எதிர்பாராமல், விட்டுக்கொடுத்து நீடித்து இருப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு தான் அது.. ஆனால் நாங்கள் அப்படியெல்லை.. ஒரு காதலை போல, பல பெற்றோர்கள் நட்பையும் எப்படியெல்லாம் கவுக்கலாம் என யோசிப்பார்கள்.. அந்த அளவு நண்பர்கள் வீட்டிலும் ஊரிலும் அட்ராசிட்டி செய்து கொண்டிருப்பார்கள்.. பெண்களும் அப்படிப்பட்ட நட்பில் சளைத்தவர்கள் அல்ல.. எங்களிடம் அது போன்ற ஸ்ட்ராங் ஃப்ரெண்ட்ஷிப் உண்டு என அவர் பொட்டில் அறைந்தாற் போல் சொன்ன பதிவையும் பாருங்கள்..

கவிதைகளும் அழகாக படைப்பார்.. ஆனால் என்ன, இரண்டு மூன்று முறை அதை வாசித்தால் தான் புரியும்.. மிக தேர்ந்த வார்த்தைகளும், உள்பொதிந்த அர்த்தங்களும் இருக்கும்.. ஒரு படைப்பு உருவாவதை அவர் எவ்வளவு ஆழமாக அழகாக கவித்துவமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.. இவர் எழுத்தின் ஆளுமை எனக்கு இந்த ஒரு கவிதையில் விளங்கிவிட்டது...

உங்களுக்கு ஔவையாரின் ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கிறதா? மிஞ்சி மிஞ்சி போனால் அறம் செய்ய விரும்பில் இருந்து ஔவியம் பேசல் வரை தெரியும்.. இந்தப்பதிவில் மொத்த ஆத்திச்சூடியும் இருக்கிறது பாருங்கள்..

நாம் வாழும் இந்த பூமியை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? இதில் இயற்கையாக அமைந்த ஆச்சரியங்கள் எவ்வளவு? இந்த அண்டவெளியில் பூமி என்பது என்ன? ஒரே பூமியில் ஒரு ஊரில் இருந்து அதற்கு அடுத்த ஊருக்கு நீங்கள் சென்றால் ஒரு நாள் பின்னோக்கி சென்று விடுவீர்கள்.. என்ன குழப்பமாக இருக்கிறதா? இதை படித்துப்பாருங்கள் பூமியின் ஆச்சரியங்களை தெரிந்து கொள்ள.. படிக்க படிக்க வாய் பிளப்பது உறுதி..

சுபத்ராவின் சொந்த ஊர் திருநெல்வேலி.. பொதுவாகவே சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை செய்யும் தென் பகுதி மக்களுக்கு தங்கள் ஊர் மீதும், தங்கள் பகுதி மொழி, பேச்சு வழக்கு மீதும் காதல் வந்துவிடும்.. எனக்கு எப்படி சிவகாசியும், மதுரைத்தமிழும் இருக்கின்றனவோ, அது போல் சுபத்ராவிற்கு நெல்லை தமிழ்.. சினிமாவில் மிகவும் கேவலாய் பேசப்படும் பேச்சு வழக்கு நெல்லை வழக்கு தான்.. இது வரை ஒருத்தரும் சரியான நெல்லை, நாகர்கோவில் வழக்கில் பேசி படம் எடுத்ததில்லை. தன் பகுதியின் பெருமையை பேசி அவர் படைத்த ஒரு படைப்பு..

சரி, திருநெல்வேலியில் இருந்து அப்படியே 90கி.மீ பயணித்து சிவகாசிக்கு வாருங்கள்.. ஒரு நாள் ரத்னவேல் ஐயா ஃபேஸ்புக் மூலம் ஒரு பெண்ணின் லின்க்கை அனுப்பினார்.. “இவர் உங்கள் ஊர் தான்.. மிகச்சிறிய பெண்.. கல்லூரி தான் படித்துக்கொண்டிருக்கிறார்.. என்னமாய் எழுதுகிறார் பாருங்கள்!” என சிலாகித்து அனுப்பினார்.. எனக்கு ரத்னவேல் ஐயா யாரையாவது புகழ்ந்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.. அது அவர் மேல் எனக்கிருக்கும் possessiveness & பாசத்தால்.. சரி அந்த குட்டிப்பெண் (என்னை அங்கிள் ஆக்கிவிடாதீர்கள், நானும் குட்டிப்பையன் தான், என்னை விட சிறியவர் என்பதால் அவர் குட்டிப்பெண்) அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார் என பார்த்தால், உண்மையிலேயே சொல்கிறேன், great.. இந்த வயதில் அவருக்கு இருக்கும் தெளிவான சிந்தனைகளும், குடும்பத்தின் மீது இருக்கும் பாசமும் (அது எங்க ஊர் ஸ்பெசல்), அதே நேரத்தில் படிப்பின் மீது இருந்த ஆர்வமும் என்னை மிகவும் வியக்க வைத்துவிட்டன.. அவர் தான் கண்மணி.. 

தீபாவளியோ பொங்கலோ, நீங்கள் ஆசை ஆசையாக பலகாரம் செய்து உங்கள் பக்கத்து வீட்டு உறவுகளுக்கு கொடுக்கிறீர்கள்.. அவர்கள், “அய்யோ இதெல்லாம் நீங்க சாமி முன்னாடி வச்சது, நாங்க சாப்புட மாட்டோம்” என்று முகத்தில் அறைவது போல் பேசினால் நமக்கு எப்படி இருக்கும்? அதாவது நம் அன்பை வேண்டாம் என்று புறக்கணித்த அவர்கள் குற்றவுணர்வே இல்லாமல் இருப்பார்கள், ஆனால் அன்பை காட்ட நினைத்த நாம் மனதிற்குள் கூனிக்குறுகி விடுவோம்.. இப்படி நம்மை கூனிக்குறுக வைத்து, அண்டை அயலாரிடம் மனஸ்தாபத்தை உருவாக்கும் பண்டிகைகள் தேவையா என மிகவும் நொந்து போய் அவர் எழுதிய பதிவு இது..

பொதுவாகவே பலருக்கும் தங்கள் விடலைப்பருவத்தில் இருந்து, வேலைக்கு போய் கல்யாணம் ஆகி குழந்தை குட்டி பொறுப்பு என்று வரும் வரை கடவுள் நம்பிக்கையில் பல கேள்விகள், சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கும்.. இப்படி தன் மனதில் இருக்கும் குழப்பங்களை அவர் தெளிவாக சொன்ன பதிவு இது..

கணவன் மனைவிக்கான உறவு பற்றி முத்தான 50 விசயங்கள் பற்றி அவர் வீட்டில் ஒரு புத்தகம் இருந்ததாம்.. அதில் இருக்கும் ஒவ்வொரு முத்தாக எடுத்து, அவர் வீட்டு சம்பவங்களோடு சொல்லி, அவர் விளக்கியிருக்கும் தொடர் பதிவு இது.. இதை படிக்கும் போது, ‘அட நம்ம வீட்லயும் இதே சங்கதி தான?’ என உங்கள் மனது ஒரு முறையாவது எண்ணி குதிக்கும்..

நான் அடிக்கடி பால் சோறு, பக்கோடா என்று சொல்வதை பலரும், ‘அப்படி என்னப்பா அதுல இருந்திறப்போகுது?’ என ஆச்சரியமாக கேட்பார்கள்.. எங்கள் ஊர் பால் சோறு/பழைய சோறு பாரம்பரியத்தை மிக நேர்த்தியாக எடுத்து சொன்ன பதிவு.. இதில் விடுதி வாழ்க்கையையும் லேசாக தொட்டுவிட்டு போயிருப்பார்.. என்ன தான் கறியும் சோறும் வெளியில் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடும் பழைய சோறோ பால் சோறோ தான் எங்களுக்கு ஒஸ்தி..

சிவகாசியில் பால் சோறும் பழைய சோறும் உண்ட பிறகு அப்படியே ஒரு ஆம்னி பஸ்சை பிடித்து பெங்களூருவுக்கு வந்து விடுங்கள்.. அங்கு தான் கீர்த்திகா அவர்கள் இருக்கிறார்.. இவரும் ரத்னவேல் ஐயா மூலம் ஃபேஸ்புக் வழி அறிமுகமானவர் தான்.. ப்ளாக் உலகிற்கு மிக புதியவர்.. கடந்த 3 மாதங்களாகத்தான் எழுதுகிறார். இவருடைய பெரும்பாலான பதிவுகள் குழந்தைகள், கல்வி சார்ந்தவைகளாகவே இருக்கும்..

எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறை, குழந்தைகள் மீது நடக்கும் கொடூரங்கள் என தினமும் செய்தித்தாள்கள் பக்கத்தை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.. இதை தடுக்க நம்மாலான முயற்சிகளை ஆரம்பத்தில் இருந்து, நம் வளர்ப்பு முறை மூலம் குழந்தைகளுக்கு போதித்து வளர்க்க வேண்டும்  என்பதை பல முக்கிய சுட்டிகளுடன் தெளிவாக கொடுத்திருப்பார்..

படிப்பு என்றால் என்ன? ஒரு 200பக்க புத்தகத்தை பத்து மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு எழுத்தாக மூளையில் இருக்கும் குப்பைத்தொட்டிக்குள் அனுப்பி, பத்தாவது மாத முடிவில் தேர்வு என்கிற கருமத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அந்த குப்பை தொட்டியில் இருந்து கேள்விகளுக்கு ஏற்றவாறு சரியாக வாந்தி எடுப்பது என்று தான் நம் கல்வி முறை நமக்கு கற்பித்து வருகிறது.. ஒரு பள்ளி இருக்கிறது.. அங்கு மாணவர்களே, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணத்திற்குள் காய்கறி வாங்கி, சமைத்து, பாத்திரங்களை சுத்தம் செய்து, பள்ளி வளாகத்தில் விவசாயம் செய்து, ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து, முக்கியமாக மனப்பாடம் என்கிற குப்பை அறவே இல்லாமல் சொந்தமாக யோசிப்பது என பல நல்ல விசயங்கள் மூலம் சிறப்பாக இயங்கி வருகிறது.. அதை பற்றி படிக்க படிக்க நமக்கும் மீண்டும் ஒரு முறை பள்ளிக்காலத்திற்கு செல்லலாமா என ஆவல் பிறக்கும்...

கஞ்சா - தமிழ் சினிமா மட்டும் இல்லையென்றால் இந்த வார்த்தை என்னவென்றே நமக்கு புரிந்திருக்காது.. இப்போதெல்லாம் கேட்டாலே லேசாக மனதில் ஜிவ்வென்று ஒரு கிறக்கம் வரலாம் பலருக்கும்.. அந்த கஞ்சாவின் வரலாறும், அதை தடை செய்யப்பட்ட பின்னணியும், கஞ்சாவின் நற்குணங்களும் (!!!!!!) இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கின்றன..

போன மாதம் ப்ளஸ்2 தேர்வு முடிவுகள் வந்ததும் என் டீலர்கள் பலரும் என்னிடம், “சார் உங்களுக்கு தெரிஞ்ச இன்ஜினியரிங், மெடிக்கல் காலேஜ்ல எதாவது சீட் இருந்தா ‘வாங்கி’ குடுங்க”னு ஏதோ பஸ்ல சீட் பிடிச்சி குடுக்குற மாதிரி ஈசியாக கேட்டார்கள்.. இன் ஜினியரிங். மெடிக்கல் தாண்டியும் பல நல்ல படிப்புகள் இருக்கு என்று நான் அவர்களுக்கு என்ன தான் விளக்கி சொன்னாலும், அதை காதில் வாங்காமல், அவர் பிள்ளைகள் பெரிய இடத்திற்கு உயர்வதை நான் விரும்பவில்லை என கோவித்துக்கொண்டார்கள்.. அதை விட ஒருத்தர், “ஒங்களுக்கு ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் ஆள் தெரியும்னா ஓபனா சொல்லுங்க சார், அத விட்டுட்டு எம் பொண்ண மெடிக்கல் சேக்க வேண்டாம்னு ஏன் சொல்றீங்க?”ன்னார்.. ’ஊர் பூரா கவ்ர்மெண்ட் ஓங்க கொல தெய்வத்த தான்டா ஒரு மைலுக்கு ஒருக்க நட்டு வச்சிருக்கு’னு மனதிற்குள்ளே புலம்பி வந்துவிட்டேன்.. அது போன்ற பெற்றவர்களுக்கு ஏற்ற ஒரு நல்ல பதிவு தான் இது..

உங்களை பெங்களூரு வரை கூட்டி வந்தவன் அதோடு விட்டுவிட மாட்டேன்.. அப்படியே என்னோடு ப்ளைட் ஏறினால் உங்களை அமெரிக்காவும் அழைத்து செல்வேன். இவரும் பெண் பதிவர் தான்.  தன் பெயரையோ அடையாளத்தையோ சொல்ல விரும்பாதவர். என்னிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் அவர் பெயரோ வேறு எந்த விபரமோ என்னால் சொல்ல இயலாது.. 

இங்கு எழுத்தாலான பதிவுகள் பற்றி மட்டும் தான் சொல்ல வேண்டுமா என எனக்கு தெரியவில்லை.. ஆனால் இது பாடல்கள் சம்பந்தமான பக்கம்.. திருநெல்வேலிக்காரர் தான்.. இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.. பல அருமையான பாடல்களின் பெண் குரல்களுக்கு மட்டும் குரல் கொடுத்து ஆண் குரல்களை அநாதையாக தவிக்க விட்டிருப்பார் தன் ப்ளாக்கில்.. இவரின் பெரும்பாலான பாடல்கள் ஜானகியின் பாடல்களாக இருக்கும்.. குரலும் கேட்க இனிமையாக இருக்கும்... மன அமைதியை விரும்பும் போதெல்லாம் கேளுங்கள்..

அப்படியே அமெரிக்காவையும் கொஞ்ச நேரம் சுற்றி பார்த்துவிட்டு அவரவர் வீடுகளுக்கு செல்லுங்கள்.. மீண்டும் அடுத்த பதிவில் உங்களை வேறு எங்கு டூர் அழைத்து செல்லலாம் என ப்ளான் பண்ணிவிட்டு வருகிறேன்...
மேலும் வாசிக்க...

Tuesday, June 11, 2013

ப்ளாக்கர் அறியாத ப்ளாக்கர்கள்...

என் அறிமுகப்பதிவிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த வரவேற்பு ஒரே நேரத்தில் 4 கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருப்பவனை போல் பெருமையாகவும், பயமாகவும், பதட்டமாகவும் ஒரு கலவையான ஃபீலிங்கை கொடுத்திருக்கிறது.. நன்றிகள் பல..

இன்று நான் சில பதிவர்களையும், அவர்களின் நல்ல பதிவுகளையும் சொல்லப் போகிறேன்.. இது வழக்கமான ஒன்று தானே, என்ன சிறப்பு இருந்து விடப்போகிறது என்கிறீர்களா? இருக்கிறது.. இவர்கள் தங்கள் ப்ளாக்கில் எழுதியிருப்பது மொத்தமே பத்து பதிவுகளுக்குள் தான் இருக்கும்.. ஆனாலும் மிக அருமையாக எழுதக்கூடியவர்கள்.. இவர்கள் தொடர்ந்து எழுதாதற்கு காரணம், ரெண்டு.. முதல் காரணம், இவர்களுக்கு தங்கள் எழுத்தை, தங்கள் ப்ளாக்கை எப்படி பலரும் படிக்குமாறு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தெரியவில்லை.. இரண்டு, சரியான ஊக்குவிப்பு இல்லை.. ஆனால் இனி அவர்களுக்கு அந்த இரண்டுமே கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் நான் அவர்களை பற்றி சொல்கிறேன்.. பி.கு.: ஒருத்தர் தன் வலைப்பக்கத்தை போன வாரத்தோடு மூடிவிட்டார் :-( 

சரி, இருப்பவர்களை பற்றி பார்க்கலாம்...

முதலில் ராஜேஷ்.. இவர் திரலிவாசன் என்கிற பெயரில் எழுதி வருகிறார்.. இவரை நான் முதல் முறை பார்த்ததை கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்கிறேன்.. அது ஒரு வெயில் கொழுத்தும் மதிய வேளை.. கல்லூரியின் லன்ச் பிரேக்கில் நான் ஹாஸ்டல் மெஸ்ஸில் நுழைகிறேன்.. உள்ளே என் தட்டை எடுக்கும் போது தான் கவனிக்கிறேன், ஒரு டேபிளில் ஒருவரை சுற்றி 7,8 பேர் அமர்ந்து கொண்டு அவர் சொல்வதை, ஒரு சமத்தான மாணவன் கேட்பதை போல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. அவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, இடக்கையை தன் மடியிலும், வலக்கை முட்டியை டைனிங் டேபிளில் ஊன்றி விரல்களை காற்றில் வீசி வீசி, எஸ்.குருமூர்த்தியின் ஒரு கட்டுரை பற்றிப்பேசிக்கொண்டிருந்தார்.. எஸ்.குருமூர்த்தி, ஒரு தேர்ந்த economist, charted accountant, பத்திரிகையாளர், பி.ஜே.பி ஆதரவாளர்.. ரிலையன்ஸ் திருபாய் அம்பானியின் வியாபார “யுக்திகளை” கிழித்து தொங்க விட்டவர். சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், மணிரத்னம் எடுத்த குரு படத்தில், மாதவன் வருவாரே, அதன் ரியல் லைஃப் வெர்சன் தான் எஸ்.குருமூர்த்தி.. நான் கூட ராஜேஷை யாரோ கொஞ்ச வயசு வாத்தியார் என்று தான் நினைத்தேன்.. பின்பு தான் தெரிந்தது, பொறியியல் முடித்து சில ஆண்டுகள் வேலை செய்து பின் MBA வந்தவர் என்று.. கால் மேல் கால் போட்டு கம்பீரமாக தெளிவாக அவர் பேசிய தோரணை இப்போதும் என் கண் முன் நிற்கிறது..

அவர் ஆரம்பித்த ப்ளாக் தான் திரலிவாசன்.. நானும் அவரும் கிட்டத்தட்ட ஒன்றிரண்டு மாத இடைவெளியில் தான் ப்ளாக் ஆரம்பித்தோம்.. இவரின் கவிதைகளும், அதில் இருக்கும் அரசியல் பொருளாதார நையாண்டிகளும் மிக நன்றாக இருக்கும்.. 

சில்லரை வர்த்தகம் பற்றி இவர் சமீபத்தில் (6மாதம் முன்) எழுதிய இவரின் கடைசி பதிவில், ஒரு தெருமுக்கு பலசரக்கு கடைக்காரருக்கும் நமக்கும் இருக்கும் உறவை, நட்பை மிக சாதாரணமாக அழகாக சொல்லியிருப்பார்.. அந்த கடைசி வரி, ”வால்மார்ட்டில் எல்லாம் கிடைக்குமாம் , அடிமைகளும் கிடைப்பார்களாம் ” படிக்கும் போது கவனியுங்கள் அதில் இருக்கும் ஆதங்கத்தையும் கோவத்தையும் நக்கலையும்..

அடுத்து அவர் ஸ்பெக்ட்ரம் பற்றி நாலே வரியில் ஒரு சிறு கவிதை எழுதியிருப்பார்.. 
\
என் பக்கத்து

வீட்டுக் குழந்தை
எழுத்துக் கூட்டிப் படிக்கும்
போதுதான் தெரிந்தது
SPECTRUM எவ்வளவு
கஷ்டமான விஷயம் என்று...”

 அவ்வளவு தான்.. நச்..

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை “வாங்கி” ஒரு பாட்டு எல்லா பக்கமும் ஒலித்ததே, செம்மொழியான தமிழ் மொழியாம் என்று, அதில் தனக்கு இருந்த ஆதங்கத்தை  கொட்டியிருப்பது தான் இந்த பதிவு.. கேள்விகள் அனைத்தும் எனக்கு மிக மிக ஞாயமானதாகத்தான் படுகிறது.. உங்களுக்கு?

நம்ம திடங்கொண்டு போராடு சீனு வைத்திருக்கும் காதல் கடிதம் போட்டிக்கு இவரையும் தயாராக்கலாமா? என நான் இந்த கவிதையை இப்போது மறுபடி வாசித்த போது நினைத்தேன்.. ஒரு பெண்ணை என்னமாய் வர்ணித்து விட்டு, கடைசியில், அவள் அபப்டி ஒன்றும் அழகில்லை என்று குசும்பாக சொல்லியிருப்பார்.. 

ராஜேஷ் பற்றி சொல்லியாகிவிட்டது.. அடுத்து அவரின் தம்பி பற்றி.. ஆமா, குடும்பத்துல ஆளாளுக்கு செல்ஃபோன், ஃபேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருந்த காலம் எல்லாம் போயி, இவுக ஆளாளுக்கு ப்ளாக் வச்சிருக்காக...

இவர் பெயர் கிரி பிரசாத்.. கண்டிப்பாக என் வயதில் ஒன்றோ இரண்டோ தான் கூட குறைய இருப்பார்.. ஆனால் ஆள் எழுதுவது எல்லாமே ஆன்மிகம் சம்பந்தமாக.. நம்ம குரூப்ல இவரு ஒரு வித்தியாசமான டைப்பா இருக்காரேனு இவரு ப்ளாக்ல ஒரு ரவுண்ட் அடிச்சேன்..

கடவுள் எப்படி இருப்பார்? இருக்கிறாரா இல்லையா? என்கிற பகுத்தறிவு கேள்விக்கு முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் கொடுத்த பதிலை  பாருங்கள்.. தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று இவர் சும்மா சொலல்வில்லை என்பது புரியும்..

குறள் வெண்பா/ஈரடி வெண்பாவில் நம்ம கிரி பிரசாத் எழுதி பரிசு வாங்கிய ஒரு செய்யுள்.. இன்றைய இளைஞர்கள் இலக்கியம் சார்ந்தும், சமயம் சார்ந்தும் நிறைய படிக்கிறார்களா இல்லையா என்பது ஒரு கேள்வியாக பலரால் வைக்கப் படுகிறது.. இவர் ஒருவரை மட்டும் அங்கு சோலோவாக அனுப்பி பதில் கூறிவிடலாம் போலிருக்கிறது..

ராம்னு பேர் இருந்தாலே கலர் கொஞ்சம் தூக்கலாத்தான் இருக்கும் போல.. ராமபிரானை பற்றியும், அவரின் கலர் பற்றியும், மதுரை விளக்குத்தூண் அருகே கிடைக்கும் கைத்தறி நெசவுச்சேலைகள் பற்றியும் இவர் இலக்கிய சான்றோடு எழுதியிருக்கும் பதிவு.. 


சரி, ஆன்மிகம் எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸாகி விட்டது... மூன்று பதிவுக்கே இப்படியா என்று கேட்காதீர்கள்.. அவர் ப்ளாக்கை போய் பாருங்கள்.. ரவுண்டு கட்டி ஆன்மிகம் அடிக்கும் உங்களை.. மாலை 6,7 மணிக்கு  மேல், வீட்டில் இருக்கும் பேரன் பேத்திகளை கூட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் முன் அமர வைத்து தாத்தா பாட்டிகள் இந்த கதைகளை எல்லாம் தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம்.. உண்மையிலேயே மிக வித்தியாசமான இளைஞர் கிரி பிரசாத்...

அடுத்து நான் சொல்லப்போகும் ஆள், என் வாழ்வில் மிக மிக முக்கியமான ஆள்.. ஒருவரின் தோளில் இன்னொருவர் கை போட்டு, மிக சத்தமாக கெட்ட வார்த்தையில் பேசிக்கொண்டும், கமெண்ட் அடித்துக்கொண்டும், எந்த கவலையும் இல்லாமல் சிவகாசி தெருக்களில் சுற்றிக்கொண்டு, ஒரு ஆசிரியரின் மகளுக்கே லவ் லெட்டர் கொடுக்க என்னைப்போன்ற வீரனை துணைக்கு அழைத்துக்கொண்டு போன என் நண்பன் பால் பவுன் ராஜ் பற்றியது..

உங்கள் வீட்டில் நீங்கள் பதினைந்து வருடம் தவமிருந்து பெற்றெடுக்கப்பட்ட ஒரே பிள்ளை.. கேட்டதெல்லாம் கிடைக்கும்.. செல்லம் அதிகம்.. அம்மாவும் அப்பாவும் வேலைக்கு செல்பவர்கள்.. கையில் இல்லை என்று சொல்லாத அளவுக்கு பணம் உண்டு.. என்ன செய்வீர்கள்? நானெல்லாம் கெட்டு சீரழிந்து நாசமாய் போயிருப்பேன்.. ஆனால் இவன் நன்றாக படித்தான்.. ஊரே இன்ஜினியரிங், மெடிக்கல் என்று போகும் போது தனக்கு பிடித்த தாவரவியலை எடுத்து படித்தான்.. இன்று அதே துறையில் கிருமி கண்ட பாண்டியனாய் மைக்ராஸ்கோப்பில் கிருமிகளை பார்த்துக்கொண்டிருக்கிறான் கனடாவில் தன் காதல் மனைவியோடு.. அவன் மனைவியும் அவனைப்போலவே ஒரு ஆராய்ச்சியாளர் என்பது கூடுதல் தகவல்.. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு 30 வயசுக்காரன் போல் பேசுவான்.. பிஞ்சிலேயே பழுத்தது என்பதன் பாசிடிவ் சைட் இவன்.. 

பள்ளி படிக்கும் போது நன்றாக மிமிக்ரி செய்வான்.. கனடா போய் அங்கிருக்கும் தமிழர்களையும், தலைவர் மிமிக்ரி என்னும் பெயரில் கலவரப்படுத்தியதை பாருங்கள்..

ப்ளஸ் 2 படிக்கும் போது வாத்தியார், போர்டில் சைன் தீட்டா, காஸ் தீட்டா கிறுக்கி கொண்டிருக்கும் போது, நாங்கள் இங்கு மாற்றி மாற்றி G.K. கேள்வி கேட்டு விளையாடிக்கொண்டிருப்போம்.. இருவரும் சரி சமமாக வெற்றி பெற்று போய்க்கொண்டிருப்போம்.. நாட்டின் தலைநகரம், அரசியல் தலைவர் பெயர், நடிகரின் முதல் படம் என்று சீரியஸாக போய்க்கொண்டிருக்கும்.. டை பிரேக்கரில் என்னிடம் விளையாட்டு சம்பந்தமாக ஏதாவது கேள்வி கேட்பான்.. நான் அவுட் ஆகி தோற்று விடுவேன்.. அதற்கு பின் எங்கள் GK போட்டியில் விளையாட்டு சம்பந்தமாக கேள்வி கேட்கக்கூடாது என்னும் புது ரூல் போட்டோம்.. எனக்கு விளையாட்டு விளையாட மட்டும் இல்லை, அதை பார்க்கவோ, பேசவோ, கேள்வி கேட்கவோ, பதில் சொல்லவோ கூட பிடிக்காது.. ஆனால் விளையாட்டு இவன் உடம்பில் ஊறியது..  டென்னிஸ், ஆக்கி, சாக்கரும் பார்ப்பான்.. கிரிக்கெட்டை போதை ஊசி மூலம் நரம்பில் ஏற்றியவன்..

கிரிக்கெட்டின் ஆட்டக்காரர் யாருக்காவது பெண் பார்த்தால் இவனிடம் தாராளமாக அவரை பற்றி கேட்கலாம். ஜாதகம் முதற்கொண்டு தெரிந்து வைத்திருப்பான்.. “ஒழுங்காவே ஃப்ரெண்ட் ஃபூட் வெளாட தெரில, அவனுக்கெல்லாம் ஒங்க பொண்ண குடுக்காதீங்க. கண் கலங்க விட்ருவான்”னு கூட சொல்லுவான்... ஒவ்வொரு விளையாட்டும் அதன் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் முதற்கொண்டு பார்ப்பவன்.. அப்படிப்பட்டவன் 2011ம் உலக கோப்பைக்கு முன் எழுதிய கணிப்பு துல்லியமாக பழித்தது.. எப்படி ஒருவனால் இப்படி பிரித்து மேய்ந்து எழுத முடியும் என்று எனக்கு தெரியவில்லை.. இந்த பதிவை படித்துவிட்டு அதுவும் பழித்துவிட்ட பிறகு, நான் டிவியில் கூட கிரிக்கெட் பார்ப்பதில்லை.. அவ்வளவு குற்ற உணர்வு.. நாம் பார்க்க மட்டும் தான் செய்கிறோம்.. அதை விட அழகாக விமர்சனம் என்னும் பெயர்களில் வீர்ர்களை ஏசுகிறோம்.. ஆனால் ஒருவன் அதை அறிவார்த்தமாக அணுகுவது எனக்கு ரொம்ப ரொம்ப புதுசானது.

2012ல் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் சீரிஸ் நடைபெற்ற போது, அதை பற்றி எழுதிய பதிவை பாருங்கள்.. இப்படி ஒரு பதிவு எழுத அதில் எப்படி ஊறிப்போயிருக்க வேண்டும்? இந்த பதிவை எழுத அவன் படித்த ஒவ்வொரு சுட்டியையும் கொடுத்திருப்பான்.. அதாவது தன் சொந்த சரக்கு என்று ஃபிளிம் காட்ட விரும்பாமல் (உண்மையிலேயே சொந்த சரக்கு தான்), அதற்கான சுட்டியை அளித்ததற்காகவே பாராட்டுக்கள் உண்டு..

”என்ன ஒங்க ஃப்ர்ண்ட் வெறும் கிரிக்கெட் பத்தி மட்டும் தான் எழுதுவாப்லயா?”னு கேக்க நினைக்குறவங்க அப்படியே ஸ்டாப்.. நான் சும்மா இருங்கப்பா என்று பிள்ளைகள் வேலைக்கு சென்ற பின் அப்பாக்களுக்கு நேரும் கஷ்டங்களை பற்றி ஒரு கதை எழுதியிருந்தேன்.. அம்மாக்களை பற்றி நமக்கெல்லாம் அதிகமாக தெரியும்.. எதையும் அழுது கொண்டோ, நம் தலையை கோதிக்கொண்டோ எப்படியோ நம்மிடம் சொல்லிவிடுபவர் அம்மா.. ஆனால் அப்பா நம்மிடம் தன் கஷ்டங்களை என்றாவது சொல்லியிருக்கிறாரா? அப்பா கஷ்டப்படாமல் இருந்தால் நாம் எல்லாம் இப்போது இருக்கும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது..  அப்பாக்களை பெரும்பாலான பிள்ளைகள் ஆரம்பத்தில் புரிந்து கொள்வது இல்லை.. புரிந்து கொண்ட பின், நாம் அவரை என்ன பாடு படுத்தியிருக்கிறோம் என்கிற குற்ற உணர்வு நம்மை கொன்றுவிடும்.. ஒரு அப்பாவை பற்றியும் அவரின் பாசம் பற்றியும் ஒரு மகன் எழுதிய பதிவு இது..  கிரிக்கெட் பற்றி மட்டும் அல்ல, மனதை வருடும், உறவை போற்றும் சீரியஸ் பதிவுகள் கூட எழுத முடியும் என என் நண்பன் நிரூபித்த பதிவு இது..

நண்பன் ஒரு தீவிர தி.மு.க விசுவாசி ஆரம்ப காலத்தில்.. அரசியல் விசயங்களை, ஒவ்வொரு ஊரிலும் எந்த கட்சி எம்.எல்.ஏ இருக்கிறார், எந்த துறைக்கு எந்த அமைச்சர், அவர் மீது என்னென்ன கேஸ் இருக்கிறது என்கிற வரை அரசியல் விசயம் அறிந்தவன். அது அவன் அப்பாவிடம் இருந்து ஜீன் வழியாக வந்த வரம்.. கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம் பற்றி மிக அருமையான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தான்.. 

அதே போல் 2011 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒரு வேளை அ.தி.மு.க வந்து விடுமோ என்கிற பயத்தில் அவன் எழுதிய பீதி பதிவு.. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்தா விடுகிறது? அந்தோ அ.தி.மு.க ஆட்சி வந்தே விட்டது..

அவ்வளவு தான் இன்றைய புதிய பதிவர்கள் பற்றிய பதிவு.. இவர்களை பதிவுலகில் யாருக்குமே தெரியாது என சத்தியம் செய்து சொல்லலாம்.. தன் ப்ளாக்கையே மூடிவிட்ட அந்த நண்பர் மீண்டும் ஆரம்பிக்க விரும்பாததால் அவரை பற்றி சொல்ல்வில்லை. ஆனால் ஒவ்வொருவரும் உண்மையான திறமை கொண்டிருப்பவர்கள்.. சரியான தூண்டுதல் இவர்களிடம் இருந்திருந்தால் இன்னும் பல நல்ல பதிவுகளை, கருத்துப் பரிமாற்றங்களை உண்டு பண்ணும் அளவுக்கு எழுதுவார்கள் என்கிற நம்பிக்கையில் இங்கு சொல்லியிருக்கிறேன்.. அவர்களை மீண்டும் எழுத வைக்கலாமா நண்பர்களே? உங்கள் கைகளில் தான் இருக்கிறது..
மேலும் வாசிக்க...

ஒரு வெளம்பரம்.... நாம வாங்காத அஞ்சு பத்துக்கும் இது தேவை தான்...

ஒரு அருமையான மூன்றாம் பிறை நாளில், என்னை வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க வைத்திருக்கும் வலைச்சரத்திற்கும், ஐயா அன்பின் சீனா அவர்களுக்கும் முதல் நன்றி.. ஆரம்பமே ஏதோ மேடை பேச்சு மாதிரி இருக்கு.. சரி ஒரு ஃப்லோவா போய்ட்டு இருக்கும் போது அப்படியே மெயிண்டெயின் பண்ணுவோம்.. வளர்பிறை என்பது மற்றவர்களுக்கு எபப்டி என்று தெரியாது, சேல்ஸ் வேலையில் இருப்பதாலும் சில வியாபாரிகளைப் பற்றி தெரிந்திருப்பதாலும் சொல்கிறேன், அமாவாசை & மூன்றாம் பிறை நாட்களில் தான் முக்கியமான காரியங்களை ஆரம்பிப்பார்கள்.. சிவகாசிக்காரன் என்கிற ஒரு வலைப்பக்கத்தை வைத்துக்கொண்டு நான் உண்டு, பால் சோறும் பக்கோடாவும் போடும் என் சிவகாசி உண்டு என்று இருந்தவனை, இந்த மூன்றாம் பிறை நாள் கொஞ்சம் உயர்த்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.. ஏதோ சும்மா கிறுக்கிக்கொண்டிருக்கிறோம் என நினைத்துக்கொண்டிருந்தவனிடம், இந்த பொறுப்பை ஒப்படைத்திருப்பது தன்னம்பிக்கையையும் கொஞ்சம் கர்வத்தையும் கூட கொடுக்கிறது..  

சரி, இன்னும் ஆறு நாள் மற்ற பதிவுலக நண்பர்களைப் பற்றியும் அவங்க பதிவுகளைப் பற்றியும் தானே பேசப்போகிறோம்? அதுக்கு முன்னாடி நம்மள பத்தி பேச, நம்ம பதிவப்பத்தி பேச ஒரு சான்ஸ் கிடைச்சா விட்டு வைப்போமா?  என் ப்ளாக்ல நானே பேசுனா, பாசமிகு உடன்பிறப்புகள் “நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவையா?”னு வாரி விடுவார்கள்.. அதனால் கிடைச்ச இந்த சான்ஸை நான் விடவே மாட்டேன்.. 

நான் MBA படிச்சிட்டு இருந்தப்போ, “ஓசிலயே வெப்சைட் மாதிரி ஒன்னு ஆரம்பிக்கலாமாண்டா. நாம நெனைக்குற எல்லாத்தையும் எழுதலாமாம்.. ஒலகத்துல இருக்குற எல்லாரும் படிப்பாய்ங்கலாம்.. நா ஒன்னு ஆரம்பிக்கப்போறேன்”னு என்னிடம் ஒருத்தன் சொன்னான்.. என்னிடம் சொன்னவன் இன்று வரை எதுவும் ஆரம்பிக்கவில்லை.. ஆனால் அவனை பிடித்து நச்சரித்து, கை காலில் விழுந்து, கேண்டீனில் 4,5 சமோசாவும் 7அப்பும் வாங்கி கொடுத்து ப்ளாக்கரில் ஆரம்பிக்கப்பட்டது தான் சிவகாசிக்காரன்.. 

எங்கள் கல்லூரியில் டமில் பேஸ்வத் எல்லாம் இண்டீசண்ட் என்பதால் ஆரம்பத்தில் நான் எழுதிய மொக்கை பதிவுகளை கூட அவர்கள், “வாவ், ராம் யூ ஆர் சோ கிரேட் யார்” என்று பூரித்துப்போய்விட்டார்கள்.. பிறகு தான் தெரிந்தது ஒரு பக்கிக்கும் எதுவும் வாசிக்க தெரியாது என்று.. பிறகு ஒரு சிறு தாமதத்திற்கு பின், என் படிப்பு முடிந்து, வேலை என்னும் பணம் சார்ந்த நிஜ உலகில் வந்த பிறகு தான் எழுத்தை கொஞ்சமாவது புரிந்து எழுதினேன் என்று சொல்லலாம்.. ஆனாலும் அப்போதும் எதை எழுதலாம் எப்படி எழுதலாம் என்றெல்லாம் தெரியாது.. முன்பை விட ஓரளவு தெளிவாக இருந்தேன் என்று சொல்லலாம்..

அந்த மொக்கை காலத்தில் கூட நான் எழுதிய ஒரு உருப்படியான கதை இது.. வழக்கமான முடிவு தான் என்றாலும் எனக்கு கொஞ்சம் டச்சிங்காக இருக்கும் கதை. ஆரம்பத்தில் என் கதைகளில் ராம் என்று என் பெயரை தான் கொடுத்திருப்பேன் பாத்திரங்களுக்கு.. அதில் இருந்த சௌகரியம், என் பெயர் பலருக்கும் தெரியப்பட்டது.. அசௌகரியம், அந்த பாத்திரத்தை கிண்டல் செய்வது போல் என் இமேஜை டேமேஜ் செய்து கிழித்து தொங்க விட்டார்கள் நண்பர்கள்.. “இந்த ராம் பரதேசி இருக்கானே, சரியான பொறம்போக்கு நண்பா.. ஒரு ஃபிகர விட்டு வைக்காம பல்ப் வாங்குறான் பாரேன்” - என்பது கெட்ட வார்த்தை இல்லாத ஒரு  சாம்பிள்.. 

சரி, உங்கள் வீட்டில் எந்த பொருளை ரொம்ப நாள் காத்திருந்து கஷ்டப்பட்டு, ஏக்கத்தோடு எதிர்பார்த்து வாங்கியிருப்பீர்கள்? எத்தனை ஆண்டுகள் அதற்காக காத்திருந்திருப்பீர்கள்? 1 வருசம்? 2? அட்லீஸ்ட் 5 வருசம்? எங்க வீட்ல நானும் என் தம்பியும் 17ஆண்டுகள் ஏக்கத்தோடு காத்திருந்து, பக்கத்து வீடுகளில் அசிங்கப்பட்டு, அடம் பிடித்து ஒரு வழியாக எங்கள் வீட்டிலும் வாங்கிய டிவி பெட்டியின் கதை தான் இது.. ஒரு டிவிக்கு இவ்ளோ பில்ட்-அப்பா என கேட்கலாம்? ஊரெங்கும் இருக்கும் ஒரு விசயம் நம்மிடம் இல்லாமல் இருப்பதன் ஏக்கம் அது.. “என்னது ஒங்க வீட்ல டிவி இல்லையா?” ஆச்சரியத்தோடு இந்த கேள்வியை என்னை பார்த்து கேட்காத ஆசிரியர்களே இல்லை.. 

வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து சினிமா & அரசியல் பதிவுகள் போடாவிட்டால் நாம் பிரபல பதிவர் ஆக முடியாதே? அதனால் நான் மாய்ஞ்சு மாய்ஞ்சு என் கற்பனையை கொட்டி அரசியலை அதில் மிகஸ் செய்து எழுதிய பதிவு தான் ”நீங்களே சொல்லுங்க”.. கலைஞரின் அப்போதைய அரசியல் ஸ்டண்டுகளை நையாண்டியாக எழுதிய பதிவு.. முதல் முதலாக நான் அதிக டோஸ் வாங்கிய பதிவும் இது தான்.. என்ன செய்வது, அரசியல்வாதிகள் என்றாலே தியாகிகள் தானே?

பின் 2010ம் ஆண்டின் இறுதியில் எங்கள் ஊரின் வரலாற்றை, சிவகாசி கலவரத்தின் பின்னணியாகக் கொண்டு, ஊர் முன்னேறியது போல் இரண்டு உண்மை காய்கறிகளை, கற்பனை மசாலா சேர்த்து எழுதிய கதை தான் வம்சம்.. இன்று சிவகாசி இவ்வளவு பெரிய அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்றால், அதற்காக இந்த மக்கள் பட்ட ஏச்சுக்களும், பேச்சுக்களும், அதில் இருந்து கிடைத்த வைராக்கியமும் தான் இந்தக்கதை.. சிவகாசி கலவரம் பற்றி வேறு யாரும் விரிவாக எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் இணைக்கவும்.. நான் இதை கதையாக படைத்ததால் நிறைய விசயங்களை சொல்லவில்லை.. ஊரே ஒரு போருக்கு தயாராவது போல் ஆகியிருந்தது.. எனக்கு சிவகாசி கலவரத்தை படிக்கும் போது, ’வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகத்தில், முகமதியர்கள், ராஜபுத்திரர்கள் மீது படை எடுத்து வந்த போது, அதற்கு ராஜ புத்திரர்கள் தயாரான சம்பவம் தான் ஞாபகம் வந்தது.. யாராவது சிவகாசி கலவரம் பற்றிய பதிவு இருந்தால் கண்டிப்பாக பகிருங்கள்..

நான் கேள்விப்பட்ட, அனுபவப்பட்ட காதல்களால் பெண்களின் மீது வெறுப்பின் உச்சத்தில் இருந்த போது எழுதிய கதை இது.. மிக மிக சீரியஸாக எழுத வேண்டும் என நினைத்தேன்.. ஆனால் என்னால் காதல் கதைகளை எப்போதுமே சீரியஸாக எழுதவே முடிந்ததில்லை (என் முதல் கதை மட்டும் விதிவிலக்கு).. இப்போதும் கூட சில தோழிகள் இதைப் படித்து என்னிடம் சண்டை போடுவதுண்டு.. சில தோழர்கள் ‘அருமை’ என பாராட்டுவதுண்டு.. ஆனால் ஒரு நல்ல நகைச்சுவை கதை என்பதில் மட்டும் மாற்றம் இல்லை.. நான் எழுதியதில் அதிக ஹிட்ஸ் கிடைத்த சிறுகதையும் இது தான்..

2009ல் இருந்து 2011 வரை நான் எழுதியதில் உருப்படியானவை இவைகள் தான்.. இவைகளைக்கூட ரொம்ப கஷ்டப்பட்டு தான் உருப்படியானவை என்று சொல்லலாம்.. எழுத்துக்காக மெனக்கட்டு, விசயங்களை தேடி அலைந்து, தூக்கத்தை இழந்து நான் எழுத ஆரம்பித்தது என்றால் அது 2012 முதல் தான்.. சிறு வயது முதலே எனக்கு சினிமா, அது சம்பந்தப்பட்ட் செய்தி என்றால் மிகவும் விருப்பம்.. எங்களை போன்ற காய்ஞ்ச பூமி ஆட்களுக்கு சினிமா மட்டும் தானே ஒரே பொழுது போக்கு? என் கல்லூரிக்காலம் வரை ரிலீஸ் ஆன முக்கியமான படங்களை, அது ரிலீஸ் ஆன தேதி முதற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறேன் இப்போது வரை.. அந்த ஞாபகங்களையும், அஜித் மீதான என் பார்வையையும் ஒன்றாக கலந்து நான் எழுதிய பதிவு தான் “அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?”.. இது வரை நான் எழுதிய எந்த ஒரு பதிவும் இது அளவிற்கு ஹிட்ஸ் அடித்தது இல்லை.. இந்த பதிவு, ஃபேஸ்புக், பல கம்பெனி, கல்லூரி குரூப் மெயில்கள், சில பல ப்ளாக்குகளில் காப்பி என்று பல விதங்களில் இன்று வரை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.. ஒரு நடிகனுக்காக நான் எழுதிய பதிவு என்று இதை சொல்வதை விட, ஒரு நல்ல மனிதனை பற்றி நான் எழுதிய பதிவு என்று சொல்லலாம்..

கடந்த ஆண்டு செப்டம்பரில் எங்கள் ஊர் பட்டாசு ஆலை ஒன்றில் கோர விபத்து நடந்தது.. நம் மக்களும் மீடியாவும் விபத்துக்கான ஆராய்ச்சிகளில் தங்களுக்கு தெரிந்த யூகங்களை எல்லாம் கிளப்பி விட்டுக்கொண்டிருந்தனர்.. அந்த ஊரில் அலைந்து திரிந்தவன் என்பதாலும், என் அப்பா அது சம்பந்தமான வேலையில் தன் உடலையும் மனதையும் முழுதான அர்ப்பணித்தவர் என்பதாலும், சிவகாசியில் நடக்கும் விபத்துக்களுக்கு என்ன காரணம், அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி நான் எழுதிய பதிவு இது.. செல்ஃபோன் இல்லாத காலத்தில் எல்லாம், என் அப்பா தாமதமாக வீடு வரும் ஒவ்வொரு திக் திக் மாலையும் சொல்லும், சிவகாசியில் எந்த மாதிரி தொழிலில் நாங்கள் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை.. வீட்டு ஆம்பளை வீடு வந்து சேரும் வரை எதுவும் உறுதி இல்லை..

பின் கலர்க்காதல் என்கிற கதையில் கறுமையாக பிறந்த ஒரு பெண் படும் கஷ்டங்களை எழுதியிருந்தேன்.. இந்தக்கதை நான் பெங்களூருவில் training programல் இருந்த போது எழுதியது.. நான் ஏதோ நோட்ஸ் எடுத்துக்கொண்டிருப்பது போல் நினைத்து விட்டுவிட்டார்கள்.. 

தலைவர் சுஜாதா பாணியில் ஏதாவது எழுதி விட வேண்டும் என்கிற நப்பாசையில், அவர் இறந்து விட்டார் என்கிற தைரியத்தில் நான் எழுதிய சற்றே நீ............................ளமான சிறுகதை தான் “டைம் மிஷின்”.. தலைவர் என்னை சொர்க்கத்தில் கும்பி பாகம் கொடுத்து தண்டிக்கலாம் இந்த கதையை அவர் பாணி என்று சொன்னதற்காக.. ஆனால் நானும் சயின்ஸ் ஃபிக்சன் எழுதிவிட்டேன் என்று காலரை தூக்கி விட்டு கணக்குக்காட்ட ஒரு கதை உள்ளது.. பெர்சனலாக எனக்கு பிடித்த கதை இது..

பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்ட வீடுகளில், அப்பாக்கள் என்னவாகிறார்கள், அவர்களது ஆளுமை என்னவாகிறது என்று கொஞ்சம் சீரியஸாக நான் எழுதிய கதை இது.. நண்பர்கள் பலரும் அவர்கள் வீட்டில் இப்படித்தான் இருப்பதாக வாசித்து விட்டு சொன்னார்கள். எழுதிய என் வீட்டில் எப்படி என்பது என் வீட்டு ரகசியம்.. ஆனால் குடும்பத்தில் இன்று நாம் இவ்வளவு சம்பாதிக்க காரணம் அந்த மனிதரின் உழைப்பு தான் என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.. அப்பாக்கள் என்றுமே தியாகிகள் தான்..

ஊரில் பார்ப்பதையும், அங்கிங்கு கேள்விப்பட்டதையும், என்றோ எங்கோ படித்ததையும் எழுதியாகிவிட்டது.. லட்சம் லட்சமாக செலவழித்து படித்த MBAவுக்கு பிரயோஜனமாக ஏதாவது ஒன்றை எழுதினால் தானே அந்த படிப்புக்கு மதிப்பு.. நான் இருக்கும் சேல்ஸ் வேலையையும், படித்த படிப்பையும் மிகஸ் செய்து எழுதிய பதிவு தான் “சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள்”... ஐந்து பாகமாக வந்த இது கிட்டத்தட்ட சேல்ஸ் வேலைக்கு தேவையான எல்லா முக்கிய விசயங்களையும் பேசியது.. மற்ற வேலைகளுக்கும் இதில் கூறியிருப்பது முக்கியம்.. அடுத்து நமது பொருளாதார கொள்கை, அரசியல் திட்டங்கள் எப்படி நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன என்பது பற்றி எழுதிய பதிவு.. 

படித்த MBAவிற்கும் மரியாதை செய்தாகிவிட்டது என்று பழைய படி மீண்டும் கதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன்.. கல்லூரிகளுக்குள் நடக்கும் யூத் ஃபெஸ்டிவலில் இருக்கும் நுன் அரசியல் பற்றியும், வயதான நடமாட முடியாத முதியவர்களை போட்டுத்தள்ளுவது பற்றியும் எனது சமீபத்திய கதைகள் அமைந்தன..

கதைகள் எழுதுவது தான் பிரச்சனை இல்லாதது.. யாரும் சண்டை போட முடியாது.. சினிமா, அரசியல், ஜாதி, மதம், என்று எதை எழுதினாலும் உங்களுக்கு எதிர் கோஷ்டி கண்டிப்பாக இருக்கும்.. ஆனால் கதையில் நீங்கள் மட்டும் தான் ஆதரவு கோஷ்டியும், எதிர் கோஷ்டியும்.. அதனால் கதை எழுதுவது என்பது எனக்கு என்னமோ மிக பிடித்திருக்கிறது.. இனியும் பெரும்பாலும் கதைகள் மட்டும் தான் என் பதிவுகளில் இருக்கும்.. ஜாதி, சினிமா, அரசியல் என்றெல்லாம் எழுதி டோஸ் வாங்கியது தான்.. சரி, நம்ம ஒடம்பு கதை எழுதுறதுக்கு தான் லாயக்கி, அடியெல்லாம் தாங்காதுனு சரியான நேரத்தில் முடிவெடுத்து விட்டேன்.. 

சரி இது தான் என்னுரை.. கொஞ்சம் ஓவரா பெருசா போயிருச்சில? அதான் சொல்லிடோம்ல, ஒரு வெள்மபரம்னு? இனி நான் படித்து வியந்த, என்னை எழுத தூண்டிய, நன்கு எழுதும் திறமை இருந்தும் ஊக்குவிப்பு இல்லாமல் சோர்ந்து போயிருந்த, எல்லா துறையிலும் பின்னிப்பெடலெடுத்த பல பதிவர்களை அவர்களின் பதிவுகளை பார்க்கலாம்.. ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு வாங்க.. 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது