07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 12, 2013

திருநெல்வேலி முதல் அமெரிக்கா வரை இருக்கும் பெண் ப்ளாக்கர்கள்...

சென்ற பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு என் நண்பர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. மூவருமே இனி தொடர்ந்து எழுதப்போவதாக சொல்லியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.. வலைச்சரம் உண்மையிலேயே ஒரு ஊக்க சக்தி தான்.. பேசப்பழகும் பிள்ளைகளை கை தட்டி உற்சாகப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.. இனி அது என்னவெல்லாம் பேசப்போகிறதோ ஆண்டவா... 

ப்ளாக் என்பது ஆண்களுக்கான (அறிவாளிகளுக்கான) ஒரு தளம் என்று தான் நான் பல நாட்கள் திமிராக நினைத்துக்கொண்டிருந்தேன்.. நான் படித்து முடிக்கும் காலம் வரை, பெண்களைப்பற்றி என்னிடம் கேட்டால், “அவளுகளுக்கு ஜென்ரல் நாலெட்ஜ் கெடையாது, மனப்பாடம் பண்ணித்தான் பரிச்சையே எழுதுவாளுக, அரசியல், சினிமா பத்தி சுத்தமா தெரியாது.. மொத்தத்துல ஒன்னுமே தெரியாது” - இப்படித்தான் மிக மிக மேம்போக்காக மரியாதையே இல்லாமல் சொல்லியிருப்பேன் அவர்களைப்பற்றி..

வேலைக்கான என் நேர்முகத்தேர்வின் குரூப் டிஸ்கசனில் என்னை பேச விடாமல், பாயிண்ட் மேல் பாயிண்ட்டாக பேசி பொளந்து கட்டிய பெண் தான் என் கருத்தை மாற்ற முதல் எட்டு வைத்தவள்.. அன்றே அடுத்த அதிர்ச்சி, என்னை இண்டர்வியூ செய்தவரும் ஒரு பெண் தான்.. அவரிடம் மிகச்சாதாரணமாக (லேசான திமிருடன் என்று கூட சொல்லலாம்)“my hobbies are reading books" என்றேன்.. அடுத்த அரை மணி நேரம் தமிழ், ஆங்கிலம் என்று முக்கியமான புத்தகங்கள், எழுத்தாளர்கள், அவர்களின் கருத்துக்கள், அதன் அரசியல் தாக்கம் எல்லாம் பேசிவிட்டு, "You know anything about those people?" என்றார்.. ’அவ்வளவு தான்.. நமக்கு வேல கெடைக்காது’னு முடிவு பண்ணிட்டேன்.. பின் அந்த பெண், வாசிப்பு சம்பந்தமாக பல அறிவுரைகள் சொல்லி, என்னை வேலைக்கு தேர்ந்தெடுத்தது வேறு விஷயம்.. ஆனால் இதில் இருந்து நான் புரிந்து கொண்டது, பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாகவும் தெரியும் என்பதைத்தான்.. அதற்கு பின், ஃபேஸ்புக், ப்ளாக் என்று பல தளங்களில் பெண்கள் தங்கள் அறிவார்த்தமான பல கருத்துக்களை சொல்லி வருவதும் நாம் இன்று கண் கூடாக காண்பது தான்.. ஒரு விசயம், நான் ஒரு செமி ஆணாதிக்கவாதி.. அதனால் ’என்னடா இவன் பெண்களை இப்படி பேசுகிறான்?’ என கோவிக்க வேண்டாம்.. என் மனநிலையை நான் இப்போது சொல்லப்போகும் சிலர் மாற்றி வருகிறார்கள்..

இன்று அந்த வகையில் சில பெண் பதிவர்களைக்காணலாம்.. இதில் என்ன சிறப்பு என்றால் இந்த பதிவர்கள் எல்லோரும் எனக்கு திரு.ரத்னவேல் ஐயா அவர்களால் அறிமுகமானவர்கள்.. 

முதலில் சுபத்ரா பற்றி.. இவர் அகமதாபாத்தில் வங்கியில் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருக்கும் போதே ஐஏஎஸ் கனவால் அந்த வேலையை உதறிவிட்டு, இப்போது சென்னையில் ஐ.ஏ.எஸ்.ற்கு படித்து வருகிறார். அவர் சென்னை வந்த போது, தங்குவதற்கு சரியான இடம் தேடி அலைந்து கொண்டிருந்தார்.. ரத்னவேல் ஐயாவிடம் உதவி கேட்டிருந்தார் போல.. அவர் என்னிடம் சென்னையில் யாராவது பெண் தோழி இருந்தால் (அவருக்கு நாம பண்ணுறது எல்லாம் சோலோ பெர்ஃபாமென்ஸ்னு தெரியாது) அவர் மூலம் இவருக்கு உதவ சொன்னார். அப்போது என்னுடன் படித்த சில பெண்களிடம் விசாரித்து இவருக்கு சொன்ன போது தான் அறிமுகம் கிடைத்தது. பின் தான் இவர் ஒரு ப்ளாக்கர் என்பது தெரிய வந்தது.

பெண்கள் ஐ.ஏ.எஸ் படிக்கும் அளவுக்கு அறிவானவர்களா என்கிற எண்ணத்தில் தான் இவரின் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தேன்.. உண்மையை சொல்ல வேண்டுமானால் பல ஆண்களை விட, இவர் எழுதுவதும், பேசுவதும் நறுக்& சுருக்.. அத்தனை விசயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார்.. அதிலும் தமிழ் மொழி பற்றி இவர் பல விசயங்களை ஆதாரத்தோடு பேசுவது மிகவும் பெருமையாகவும், நம் மொழியை பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கிறோமே என்கிற குற்றவுணர்வையும் கூட்டியது..

பெண்களை பற்றி நான் குறையாக சொல்லும் இன்னொரு விசயம் அவர்களின் நட்பு.. ஆண்களின் நட்பு போல் அது எதையும் எதிர்பாராமல், விட்டுக்கொடுத்து நீடித்து இருப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு தான் அது.. ஆனால் நாங்கள் அப்படியெல்லை.. ஒரு காதலை போல, பல பெற்றோர்கள் நட்பையும் எப்படியெல்லாம் கவுக்கலாம் என யோசிப்பார்கள்.. அந்த அளவு நண்பர்கள் வீட்டிலும் ஊரிலும் அட்ராசிட்டி செய்து கொண்டிருப்பார்கள்.. பெண்களும் அப்படிப்பட்ட நட்பில் சளைத்தவர்கள் அல்ல.. எங்களிடம் அது போன்ற ஸ்ட்ராங் ஃப்ரெண்ட்ஷிப் உண்டு என அவர் பொட்டில் அறைந்தாற் போல் சொன்ன பதிவையும் பாருங்கள்..

கவிதைகளும் அழகாக படைப்பார்.. ஆனால் என்ன, இரண்டு மூன்று முறை அதை வாசித்தால் தான் புரியும்.. மிக தேர்ந்த வார்த்தைகளும், உள்பொதிந்த அர்த்தங்களும் இருக்கும்.. ஒரு படைப்பு உருவாவதை அவர் எவ்வளவு ஆழமாக அழகாக கவித்துவமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.. இவர் எழுத்தின் ஆளுமை எனக்கு இந்த ஒரு கவிதையில் விளங்கிவிட்டது...

உங்களுக்கு ஔவையாரின் ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கிறதா? மிஞ்சி மிஞ்சி போனால் அறம் செய்ய விரும்பில் இருந்து ஔவியம் பேசல் வரை தெரியும்.. இந்தப்பதிவில் மொத்த ஆத்திச்சூடியும் இருக்கிறது பாருங்கள்..

நாம் வாழும் இந்த பூமியை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? இதில் இயற்கையாக அமைந்த ஆச்சரியங்கள் எவ்வளவு? இந்த அண்டவெளியில் பூமி என்பது என்ன? ஒரே பூமியில் ஒரு ஊரில் இருந்து அதற்கு அடுத்த ஊருக்கு நீங்கள் சென்றால் ஒரு நாள் பின்னோக்கி சென்று விடுவீர்கள்.. என்ன குழப்பமாக இருக்கிறதா? இதை படித்துப்பாருங்கள் பூமியின் ஆச்சரியங்களை தெரிந்து கொள்ள.. படிக்க படிக்க வாய் பிளப்பது உறுதி..

சுபத்ராவின் சொந்த ஊர் திருநெல்வேலி.. பொதுவாகவே சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை செய்யும் தென் பகுதி மக்களுக்கு தங்கள் ஊர் மீதும், தங்கள் பகுதி மொழி, பேச்சு வழக்கு மீதும் காதல் வந்துவிடும்.. எனக்கு எப்படி சிவகாசியும், மதுரைத்தமிழும் இருக்கின்றனவோ, அது போல் சுபத்ராவிற்கு நெல்லை தமிழ்.. சினிமாவில் மிகவும் கேவலாய் பேசப்படும் பேச்சு வழக்கு நெல்லை வழக்கு தான்.. இது வரை ஒருத்தரும் சரியான நெல்லை, நாகர்கோவில் வழக்கில் பேசி படம் எடுத்ததில்லை. தன் பகுதியின் பெருமையை பேசி அவர் படைத்த ஒரு படைப்பு..

சரி, திருநெல்வேலியில் இருந்து அப்படியே 90கி.மீ பயணித்து சிவகாசிக்கு வாருங்கள்.. ஒரு நாள் ரத்னவேல் ஐயா ஃபேஸ்புக் மூலம் ஒரு பெண்ணின் லின்க்கை அனுப்பினார்.. “இவர் உங்கள் ஊர் தான்.. மிகச்சிறிய பெண்.. கல்லூரி தான் படித்துக்கொண்டிருக்கிறார்.. என்னமாய் எழுதுகிறார் பாருங்கள்!” என சிலாகித்து அனுப்பினார்.. எனக்கு ரத்னவேல் ஐயா யாரையாவது புகழ்ந்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.. அது அவர் மேல் எனக்கிருக்கும் possessiveness & பாசத்தால்.. சரி அந்த குட்டிப்பெண் (என்னை அங்கிள் ஆக்கிவிடாதீர்கள், நானும் குட்டிப்பையன் தான், என்னை விட சிறியவர் என்பதால் அவர் குட்டிப்பெண்) அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார் என பார்த்தால், உண்மையிலேயே சொல்கிறேன், great.. இந்த வயதில் அவருக்கு இருக்கும் தெளிவான சிந்தனைகளும், குடும்பத்தின் மீது இருக்கும் பாசமும் (அது எங்க ஊர் ஸ்பெசல்), அதே நேரத்தில் படிப்பின் மீது இருந்த ஆர்வமும் என்னை மிகவும் வியக்க வைத்துவிட்டன.. அவர் தான் கண்மணி.. 

தீபாவளியோ பொங்கலோ, நீங்கள் ஆசை ஆசையாக பலகாரம் செய்து உங்கள் பக்கத்து வீட்டு உறவுகளுக்கு கொடுக்கிறீர்கள்.. அவர்கள், “அய்யோ இதெல்லாம் நீங்க சாமி முன்னாடி வச்சது, நாங்க சாப்புட மாட்டோம்” என்று முகத்தில் அறைவது போல் பேசினால் நமக்கு எப்படி இருக்கும்? அதாவது நம் அன்பை வேண்டாம் என்று புறக்கணித்த அவர்கள் குற்றவுணர்வே இல்லாமல் இருப்பார்கள், ஆனால் அன்பை காட்ட நினைத்த நாம் மனதிற்குள் கூனிக்குறுகி விடுவோம்.. இப்படி நம்மை கூனிக்குறுக வைத்து, அண்டை அயலாரிடம் மனஸ்தாபத்தை உருவாக்கும் பண்டிகைகள் தேவையா என மிகவும் நொந்து போய் அவர் எழுதிய பதிவு இது..

பொதுவாகவே பலருக்கும் தங்கள் விடலைப்பருவத்தில் இருந்து, வேலைக்கு போய் கல்யாணம் ஆகி குழந்தை குட்டி பொறுப்பு என்று வரும் வரை கடவுள் நம்பிக்கையில் பல கேள்விகள், சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கும்.. இப்படி தன் மனதில் இருக்கும் குழப்பங்களை அவர் தெளிவாக சொன்ன பதிவு இது..

கணவன் மனைவிக்கான உறவு பற்றி முத்தான 50 விசயங்கள் பற்றி அவர் வீட்டில் ஒரு புத்தகம் இருந்ததாம்.. அதில் இருக்கும் ஒவ்வொரு முத்தாக எடுத்து, அவர் வீட்டு சம்பவங்களோடு சொல்லி, அவர் விளக்கியிருக்கும் தொடர் பதிவு இது.. இதை படிக்கும் போது, ‘அட நம்ம வீட்லயும் இதே சங்கதி தான?’ என உங்கள் மனது ஒரு முறையாவது எண்ணி குதிக்கும்..

நான் அடிக்கடி பால் சோறு, பக்கோடா என்று சொல்வதை பலரும், ‘அப்படி என்னப்பா அதுல இருந்திறப்போகுது?’ என ஆச்சரியமாக கேட்பார்கள்.. எங்கள் ஊர் பால் சோறு/பழைய சோறு பாரம்பரியத்தை மிக நேர்த்தியாக எடுத்து சொன்ன பதிவு.. இதில் விடுதி வாழ்க்கையையும் லேசாக தொட்டுவிட்டு போயிருப்பார்.. என்ன தான் கறியும் சோறும் வெளியில் சாப்பிட்டாலும் வீட்டில் சாப்பிடும் பழைய சோறோ பால் சோறோ தான் எங்களுக்கு ஒஸ்தி..

சிவகாசியில் பால் சோறும் பழைய சோறும் உண்ட பிறகு அப்படியே ஒரு ஆம்னி பஸ்சை பிடித்து பெங்களூருவுக்கு வந்து விடுங்கள்.. அங்கு தான் கீர்த்திகா அவர்கள் இருக்கிறார்.. இவரும் ரத்னவேல் ஐயா மூலம் ஃபேஸ்புக் வழி அறிமுகமானவர் தான்.. ப்ளாக் உலகிற்கு மிக புதியவர்.. கடந்த 3 மாதங்களாகத்தான் எழுதுகிறார். இவருடைய பெரும்பாலான பதிவுகள் குழந்தைகள், கல்வி சார்ந்தவைகளாகவே இருக்கும்..

எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறை, குழந்தைகள் மீது நடக்கும் கொடூரங்கள் என தினமும் செய்தித்தாள்கள் பக்கத்தை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.. இதை தடுக்க நம்மாலான முயற்சிகளை ஆரம்பத்தில் இருந்து, நம் வளர்ப்பு முறை மூலம் குழந்தைகளுக்கு போதித்து வளர்க்க வேண்டும்  என்பதை பல முக்கிய சுட்டிகளுடன் தெளிவாக கொடுத்திருப்பார்..

படிப்பு என்றால் என்ன? ஒரு 200பக்க புத்தகத்தை பத்து மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு எழுத்தாக மூளையில் இருக்கும் குப்பைத்தொட்டிக்குள் அனுப்பி, பத்தாவது மாத முடிவில் தேர்வு என்கிற கருமத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அந்த குப்பை தொட்டியில் இருந்து கேள்விகளுக்கு ஏற்றவாறு சரியாக வாந்தி எடுப்பது என்று தான் நம் கல்வி முறை நமக்கு கற்பித்து வருகிறது.. ஒரு பள்ளி இருக்கிறது.. அங்கு மாணவர்களே, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணத்திற்குள் காய்கறி வாங்கி, சமைத்து, பாத்திரங்களை சுத்தம் செய்து, பள்ளி வளாகத்தில் விவசாயம் செய்து, ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து, முக்கியமாக மனப்பாடம் என்கிற குப்பை அறவே இல்லாமல் சொந்தமாக யோசிப்பது என பல நல்ல விசயங்கள் மூலம் சிறப்பாக இயங்கி வருகிறது.. அதை பற்றி படிக்க படிக்க நமக்கும் மீண்டும் ஒரு முறை பள்ளிக்காலத்திற்கு செல்லலாமா என ஆவல் பிறக்கும்...

கஞ்சா - தமிழ் சினிமா மட்டும் இல்லையென்றால் இந்த வார்த்தை என்னவென்றே நமக்கு புரிந்திருக்காது.. இப்போதெல்லாம் கேட்டாலே லேசாக மனதில் ஜிவ்வென்று ஒரு கிறக்கம் வரலாம் பலருக்கும்.. அந்த கஞ்சாவின் வரலாறும், அதை தடை செய்யப்பட்ட பின்னணியும், கஞ்சாவின் நற்குணங்களும் (!!!!!!) இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கின்றன..

போன மாதம் ப்ளஸ்2 தேர்வு முடிவுகள் வந்ததும் என் டீலர்கள் பலரும் என்னிடம், “சார் உங்களுக்கு தெரிஞ்ச இன்ஜினியரிங், மெடிக்கல் காலேஜ்ல எதாவது சீட் இருந்தா ‘வாங்கி’ குடுங்க”னு ஏதோ பஸ்ல சீட் பிடிச்சி குடுக்குற மாதிரி ஈசியாக கேட்டார்கள்.. இன் ஜினியரிங். மெடிக்கல் தாண்டியும் பல நல்ல படிப்புகள் இருக்கு என்று நான் அவர்களுக்கு என்ன தான் விளக்கி சொன்னாலும், அதை காதில் வாங்காமல், அவர் பிள்ளைகள் பெரிய இடத்திற்கு உயர்வதை நான் விரும்பவில்லை என கோவித்துக்கொண்டார்கள்.. அதை விட ஒருத்தர், “ஒங்களுக்கு ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் ஆள் தெரியும்னா ஓபனா சொல்லுங்க சார், அத விட்டுட்டு எம் பொண்ண மெடிக்கல் சேக்க வேண்டாம்னு ஏன் சொல்றீங்க?”ன்னார்.. ’ஊர் பூரா கவ்ர்மெண்ட் ஓங்க கொல தெய்வத்த தான்டா ஒரு மைலுக்கு ஒருக்க நட்டு வச்சிருக்கு’னு மனதிற்குள்ளே புலம்பி வந்துவிட்டேன்.. அது போன்ற பெற்றவர்களுக்கு ஏற்ற ஒரு நல்ல பதிவு தான் இது..

உங்களை பெங்களூரு வரை கூட்டி வந்தவன் அதோடு விட்டுவிட மாட்டேன்.. அப்படியே என்னோடு ப்ளைட் ஏறினால் உங்களை அமெரிக்காவும் அழைத்து செல்வேன். இவரும் பெண் பதிவர் தான்.  தன் பெயரையோ அடையாளத்தையோ சொல்ல விரும்பாதவர். என்னிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் அவர் பெயரோ வேறு எந்த விபரமோ என்னால் சொல்ல இயலாது.. 

இங்கு எழுத்தாலான பதிவுகள் பற்றி மட்டும் தான் சொல்ல வேண்டுமா என எனக்கு தெரியவில்லை.. ஆனால் இது பாடல்கள் சம்பந்தமான பக்கம்.. திருநெல்வேலிக்காரர் தான்.. இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.. பல அருமையான பாடல்களின் பெண் குரல்களுக்கு மட்டும் குரல் கொடுத்து ஆண் குரல்களை அநாதையாக தவிக்க விட்டிருப்பார் தன் ப்ளாக்கில்.. இவரின் பெரும்பாலான பாடல்கள் ஜானகியின் பாடல்களாக இருக்கும்.. குரலும் கேட்க இனிமையாக இருக்கும்... மன அமைதியை விரும்பும் போதெல்லாம் கேளுங்கள்..

அப்படியே அமெரிக்காவையும் கொஞ்ச நேரம் சுற்றி பார்த்துவிட்டு அவரவர் வீடுகளுக்கு செல்லுங்கள்.. மீண்டும் அடுத்த பதிவில் உங்களை வேறு எங்கு டூர் அழைத்து செல்லலாம் என ப்ளான் பண்ணிவிட்டு வருகிறேன்...

20 comments:

 1. முடிவில் உள்ள இரு தளங்களும் புது முகங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  ஒவ்வொரு பதிவைப் பற்றிய ரசனைக்கு... உங்கள் பாணியில் விளக்கத்திற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. என்னை வலைச்சரத்தில் (மறுபடியும்) அறிமுகப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி ராம்கி!

  உண்மையில் அந்தத் “தமிழ்-ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானதா?” பதிவின் சுட்டியைக் கொடுத்து மேலும் பலருக்கு அறிமுகப்படுத்திவிட்டீர்கள்.. அதற்கு சிறப்பு நன்றி!

  நான் பரீட்சையில் வெற்றிப் பெற வலைச்சர நண்பர்கள் அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்.

  மீண்டும் நன்றி....

  ReplyDelete
 3. :) என்னுடைய பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அறிமுகப்படுத்திய எல்லாத் தளங்களுக்கும் சென்றேன், வாசித்தேன்.

  டூர் ரொம்ப நல்லா இருந்தது! :)

  ReplyDelete
 4. :) அந்த கடைசி தளத்த இப்போ தான் பாத்தேன். :) கரோக்கிய தான் அப்டி சொன்னிங்களா... :D :P :D

  ReplyDelete
 5. எனக்கு அனைத்தும் புதிய தளங்கள்.பகிரப்பட்ட ஆக்கங்கள் நன்றாக இருந்தன.தமிழ் மொழி பற்றிய சுபத்ராவின் பதிவு அனைத்து வேண்டிய ஒன்று

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
  என்னை வலைச்சரம் என்கிற அற்புத வலைத்தளத்திற்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ராம் குமார். நான் எப்போதுமே வலைத்தளத்திலோ முகப்புதகதிலோ நல்ல கட்டுரையோ, கருத்துக்களோ, கதைகளோ படிப்பது வழக்கம். படித்துவிட்டு பாராட்டிவிட்டு தான் அங்கிருந்து நகர்வேன். அப்படி வாசித்து நட்பானவர்தான் என் அருமைத் தம்பி ராம் குமார்.
  பெயரை வெளியிடாம்மல் பரம ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதுவும் இல்லை. ஓரளவு நன்றாக பாடும் வரை இப்படியே இருக்கலாமே என்று தான். அப்படி பெரிசாக நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்பதும் இன்னொரு காரணம்.
  இப்போது இங்கே அறிமுகப்படுத்தியதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகமாகிறது. இன்னும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும்.
  மிக்க நன்றி அனைவருக்கும்.

  Time to expose who I am. Kalatmika alias Anandhi Rangarajan

  ReplyDelete
 8. அருமையான அறிமுகங்களுக்கு நன்றி..

  ReplyDelete
 9. வலைத்தளங்களை அறிமுகப்படுத்திய விதத்தில் புதுமை... வாழ்த்துக்கள் ராம். அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 10. அறிமுகங்கள் அருமை.

  ReplyDelete
 11. அறிமுகங்களுக்கு நன்றியும் அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளும்.

  எல்லோரையும் வாசிச்சுட்டு வரேன்.

  ReplyDelete
 12. இன்றைய அறிமுகங்களில் கண்மணியை நன்றாகத் தெரியும். அவரது எல்லாப் பதிவுகளையும் படித்து வருகிறேன்.நானும் அவரை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருந்தேன்.பன்முகத் திறமைசாலி.
  சுபத்ராவையும் படிக்கிறேன்.
  கிருத்திகாவின் தளத்திற்கு இன்றுதான் போய்வந்தேன்.
  கலாத்மிகாவின் குரலையும் கேட்டு ரசித்தேன். ரசித்துக் கொண்டிருக்கிறேன்!
  புதிதாக இரு தளங்களை அறிந்து கொண்டேன்.
  பாராட்டுக்கள், நன்றி!

  ReplyDelete
 13. அன்பின் ராம்குமார் @ சிவகாசிக் காரன் - தங்களீன் வலைச்சரப் பதிவுகள் நன்கு நடை போடுகின்றன. அறிமுகங்கள் அத்தனையும் அருமை - அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அருமை - பெண் பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தியது நன்று. அத்தனை சுட்டிகளையும் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. நான் அறியாத பல தளங்கள் அருமை

  ReplyDelete
 16. திறமையான பல பெண் பதிவர்களையும் அவர்களின் படைப்புக்களையும் சுவாரஸ்யமாக அறிமுகபடுத்தி அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete
 18. அறிமுகங்களுக்கு இனிய பாராட்டுகள்.

  இப்படிக்கு,

  நியூஸி நாட்டின் ஒரே பெண்பதிவர்:-)

  ReplyDelete
 19. அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.

  கண்மணி அவர்களின் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன்......

  மற்றவர்களது பக்கங்களையும் படிக்கிறேன்.

  ReplyDelete
 20. எனக்கு ரத்னவேல் ஐயா யாரையாவது புகழ்ந்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.. அது அவர் மேல் எனக்கிருக்கும் possessiveness & பாசத்தால்..

  Thank You Ram Kumar. I cannot control my dears.
  எனது மகன்களைக் கூட 'அருமை மகன்' என்ற வார்த்தை உபயோகித்ததில்லை. அந்த வார்த்தை உங்களுக்கும், ராஜவேலுக்கு மட்டும் தான்.
  எனது மனப்பூர்வ வாழ்த்துகள்.
  இந்த பதிவுகளுக்கு அந்தந்த நண்பர்களுக்கு link அனுப்பி விட்டீர்களா? இல்லையென்றால் அனுப்புங்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது