07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மலைநாடான். Show all posts
Showing posts with label மலைநாடான். Show all posts

Wednesday, April 4, 2007

உன்னால் முடியும் தம்பி தம்பி!



சிந்தாநதி இந்தப்பொறுப்பைத் தரும் போதே ஒரு வேண்டுகோளையும் வைத்தார். அது ஒலிப்பதிவுகள் குறித்தும் ஒரு இடுகை கண்டிப்பாக இடவேண்டுமென்று. ஏனெனில் அது நீங்கள் சார்ந்ததுறை என ஒரு சொட்டும் வைத்தார். எனக்கு என்னமோ அது குட்டு மாதிரியே தெரிஞ்தது. இது குறித்து என் எண்ணங்களை எழுத முன் பலதடவைகள் யோசித்தேன். எழுதலாமா கூடாதென்றுதான். பின் சரி எல்லோரும் நம் நண்பர்கள்தானே..எதுவும் தவறாக எண்ணமாட்டார்கள் என்பதால் எழுதுகின்றேன். ஆனால் இதை ஒரு பொதுப்பார்வையாகவே வைக்கின்றேன்.

இணையத்தின் இன்றைய சிறப்பே, எல்லாவகை ஊடகப் பகுப்புக்களையும், இதற்குள் உள்ளடக்க முடிவதுதான். இந்தச்சிறப்பை நாம் இன்னமும் சரியாக உள்வாங்கவில்லை என்றே கருதுகின்றேன். ஏதோ ஒரு பதிவு எழுதிவிடுவோம் என்பதோடு முடிந்து போகிறது எங்களில் பலரது எண்ணச்செயற்பாடு. இதையும் தாண்டி இப்போது சில ஒலிப்பதிவு முயற்சிகள் நடந்தேறியுள்ளன. ஆனால் அவற்றின் போக்கு என்னவோ எனக்கு அது திருப்தி தருவதாக இல்லை.
என் சிறுவயதுமுதல் வானொலி மீதான ஈடுபாடும், அதிலே பலகாலம் பங்காற்றிய அனுபவங்களும், இணையப்பரப்பில், அத்தகைய ஒரு வாய்ப்பினைக் கண்டபோது அதைப்பின்பற்றத் தூண்டியது. அந்த ஆர்வத்தில் தொடங்கியதுதான் “இணையத்தில் இன்பத் தமிழ் “. இதன் தயாரிப்புக்காக நான் எடுத்துக்கொள்ளும் நேரமும் தேடலும் சற்று அதிகம்தான். ஆனாலும், அதை அவ்விதமே செய்ய வேண்டுமென்பதில் குறியாகவே இருக்கின்றேன். அப்படியிருந்தும், எனது எல்லா நிகழ்ச்சிப்பதிவுகளும், எனக்குத் திருப்தியாக அமைந்துவிடுவதில்லை.

நான் சென்று வாசிக்கும், பார்க்கும், கேட்கும், எந்தவொரு ஊடகத்திலிருந்தும் ஏதாவது ஒன்று என்னை ஒழுங்கமைக்க உதவுவதாக இருக்க வேண்டும் என்பதும், அதேபோல் என்பதிவுக்கு வரும் ஒருவருக்கு நானும் அப்படியே ஏதாவது வழங்குவதாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகின்றேன். அதனாலேதான் அனுபவங்களால் கற்றுக்கொண்ட, மற்றவர்கள் பலர் அதிகம் அறிந்திராத, என்தேசத்து வாழ்வியலையே அதிகம் பிரசவிக்கின்றன என் படைப்புக்கள். பலரும் உலாவரும் ஒரு ஊடகத்தில், நம்மால் படைக்கப்படும் ஒரு படைப்பு, அந்தப்படைப்பிற்குரிய பயன்பாட்டினைச் சரியாகத் தராதவிடத்து அதன் பெறுமதி கேள்விக்குரியதாகிவிடுகிறது. சிலவேளைகளில் கேலிக்குரியதாகவும் ஆகிவிடுகிறது.

நகைச்சுவை ஒரு இதமான ரசனை. அதனூடு பல செய்திகளை யாரும் வலிக்காத வண்ணம் சொல்லிவிட முடியும். நிதர்சனத்தின் தயாரிப்பில் வந்த ஒரு குறும்படத்தில் (பெயர் ஞாபகத்தில் இல்லை) ஒரு காட்சி. ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியை திறந்து, தான் மாற்ற வேண்டிய ஆடைகளை அதனுள்ளிருந்து ஒருவர் எடுப்பார். பார்வையாளர்கள் ஒரு கணம் சிரிப்பார்கள் ஆனால் மறுகணத்தில் அந்தச்சிரிப்பு மாறி, அதனுள்ளிருக்கும் துயரின் வலியை உணர்வார்கள். இப்படிப் பல சொல்லலாம்.

நாம் சார்ந்த சமுகத்திற்கு மேம்பாடான கருத்துக்களைத் தரக் கூடிய ஒரு ஊடகத்தில், நகைச்சுவை என்பதாக நமக்குள் பேசிக்கொள்வதையெல்லாம் அரங்கேற்றிக் கொள்வது ஆரோக்கியமானதாக எண்ணமுடியவில்லை. அதிலும் அவ்வாறான படைப்புக்களை ஆற்றுபவர்கள் மிகநல்ல திறமைசாலிகளாக இருந்தும், இப்படி இயங்குவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. “ எந்நேரமும் சிரீயஸாக இல்லாமல் இடைக்கிடை இப்படியும் இருக்கத்தானே வேண்டும்.. “ என்பவர்களுக்கு, இருங்கள் தப்பில்லை. அதற்குள்ளும் ஒரு தார்மீகத்தை தருவதற்கு முயற்சியுங்கள் என்பதே என் வாதம். சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களின் கொள்கை வாசகம் “ சிரிப்பே சீவியம் “ .அவரது வாழ்வும் அத்தகையதே. அதற்காக அவரது படைப்புக்கள் அத்தனையும், ஏதோ ஒரு செய்தி சொல்லி நிற்கவில்லையா. அதனூடாகவே அவர் ஒரு சமூகப் போராளியாக அறியப்படவில்லையா?. இப்படியெல்லாம் எழுதுவதால் ஏதோ நான் சிரிக்கத் தெரியாத ஆளென்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்.


இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால், வலைப்பதிவுலகில் ஒலிப்பதிவுகள் என்பது ஆரம்ப நிலையில் இருக்கும் இவ்வேளையில், அச்சுப்புத்தகங்கள் ஒலிப்புத்தங்களாகவும் உருவாக்கம் பெற்று வரும் இவ்வேளையில், உங்கள் குறுகிய முயற்சிகள் பிழையான முன்னுதாரணங்களாகப் போய்விடக் கூடாதெனும் ஆதங்கத்திலும் தான் இதைச்சொல்லவிழைந்தேன்.

காலங்கடத்தும் வாழுங்கலைஞராக, கலைஞனின் படைப்பாக, நீங்களும், உங்கள் படைப்புக்களும் வாழவேண்டுமெனும் ஆசையால் எழுதுகின்றேன். பின்னூட்டங்களின் வருகைக்குச் சிரிப்புத் தோரணங்கட்டுபவர்களாக இருக்காதீர்கள். உங்கள் சிறப்புக்கும் சிரிப்புக்கும் மற்றவர்கள் தோரணங்கட்டும்படியா ஆகிடுங்கள் என்றே சொல்கின்றேன். அது சுகமானதாகத் தோற்றம் தரலாம், ஆனால் ஒரு கட்டத்தின் பின் அவை உங்களுக்கே அலுத்துப்போகலாம். அல்லது அதற்குமேல் போகமுடியாதவாறும் போய்விடலாம். கூட்டத்தினர் கைதட்டலுக்கு ஆடும் வேடம்கட்டிய கோமாளியா? அல்லது ஒரு கூட்டத்தின் மேம்பாட்டிற்கான போராளியா? எதுவாக இருக்கப்போகின்றீர்கள் என்பது இறுதியில் உங்களுக்கானதே.


அன்மையில் நான் ரசித்த ஒரு ஒலிப்பதிவை இங்கே கேளுங்கள். இதுபோலல்ல, இதற்கு மேலாகவும் உங்களால் படைக்க முடியும். அந்தத்திறன் உங்களிடமெல்லாம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொண்டதால் சொல்கின்றேன் உன்னால் முடியும் தம்பி!தம்பி!.
மேலும் வாசிக்க...

Tuesday, April 3, 2007

எங்கிருந்து எங்கு....?

சென்ற வாரத்தில், இணைய நண்பர் ஒருவருடன் சிறுபராய நினைவுகள் குறித்து உரையாடும்போது சொன்னார், சின்னவயதில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் ஓட்டப்பந்தயங்களில் தன்னையும் சேர்த்துவிடுவார்களாம், தானும் போட்டியன்று அதற்கான உடையெல்லாம் அணிந்து, ஊட்டசக்திபெறவெனத் தரப்படும், குளுக்கோஸ் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, சத்தம் போடாமல் வேலிக்கால் புகுந்து, அருகேயுள்ள தன்வீட்டிற்குச் சென்று விடுவாராம். போட்டிநேரத்துக்கு போட்டியாளர்களை அழைத்தால், தன்னைக் காணக்கிடையாதென்று. கிட்டதட்ட அதுபோல்தான் வலைச்சரம் தொகுப்பாசிரியராக என் பதவிப்பொறுப்பும் இவ்வாரத்தில் ஆகிவிட்டது. பெரிய தடாலடியாக எழுத்தைப்பற்றியெல்லாம் எடுத்துவிட்டு, அதற்கு நாலுபேர் வந்து(உண்மையிலேயே நாலு பேர்தானுங்க:)) ஊட்டமெல்லாம் தந்து, உசுப்பேத்திவிட, இரண்டு பதிவு போட்டுவிட்டு, இருந்த இடமே தெரியாமல் ஒடிவிட்டேன்.
மன்னிக்க வேண்டும் நண்பர்களே! சிந்தாநதி நீங்களும்தான். இது ஒரு எதிர்பாராத நிகழ்வு. ஞாயிறு பகல் தமிழ்மணத்தின் வழங்குநிலைக் குழப்பமும், திங்கள் என் உடல்நிலைக்குழப்பமும், ஒன்றாகத் தாக்கியதால், ஆட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டி வந்திற்று. ஆனாலும் திரும்பவும் வந்தாயிற்று. நாளை பதவியிலிருந்து கலைப்பதற்குள் முடிந்தவரை, இடைவெளியை நிரவி, ஆட்டக்கணக்கிற்கு வந்துவிடுவேன் என்று நம்புகின்றேன். பார்க்கலாம்...:)) சரி மீள ஆரம்பிப்பதை ஒரு பம்பலா(அதுதாங்க கலக்கலா) ஆரம்பிப்போமே...

நேற்று ஒரு பதிவில், ஒரு அசைபடப்பாடல் கேட்டேன், அதைக் கேட்டபோது அதே போன்ற ஒரு தமிழ் பாட்டு ஞாபகத்துக்கு வந்தது. என் ஞாபகத்துக்கு வந்த இந்தப்பாடல் காதலிக்கநேரமில்லை படத்தில், மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அவர்களின் இசையில் வெளிவந்தது. வெளிவந்த வருடம் 1964. இங்கிருந்த அங்கு சென்றதா அல்லது அங்கிருந்து இங்கு வந்ததா?. எங்கிருந்து எங்கு சென்றதென எனக்குப்புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா எனப்பார்ப்போம். அதற்கு நீங்கள் இங்கிருந்து
அங்கு செல்ல
வேண்டும். சென்று பாரத்தபின் எங்கிருந்து எங்கு சென்றதெனவோ, அல்லது அங்கிருந்து, இங்கிருந்து, எங்கிருந்தும் எதுவும் செல்லவில்லை. அதது அங்கங்கேயிருக்கிறது என்கிறீர்களா?... எதுவாயினும் சொல்லுங்கள்.
மேலும் வாசிக்க...

Saturday, March 31, 2007

சிவாஜிக்குப் பின்..




சிவாஜிக்குப்பின், அடுத்த பிரம்மாண்டம் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

தமிழ்த் திரையுலகில் நடிப்பில் தனக்கென ஒரு தனித்துவத்தைக்காட்டி மறைந்த, நடிகர்திலகம் சிவாஜிக்குப்பின்னான ஒரு திறமை பற்றி, அல்லது மாராட்டிய வீரன் வீர சிவாஜிக்குப் பின்னான, ஒரு பெரும் வீரம்பற்றி, சிந்திப்பதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வியென இதை எண்ணும் அளவுக்கு சிந்தனை வீச்சு அற்றவர்களாக உங்களை நான் எண்ணிவிடவில்லை.

ஆக நீங்கள் எண்ணியபடியே, சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்துக்குப் பின், வரக் கூடிய அடுத்த பிரம்மாண்டம் பற்றிய தகவல்கள் மெதுவாகக் கசியத் தொடங்கிவிட்டன...

இதுபற்றி நீங்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லையா...அப்படியானால் கட்டாயம் இந்த இடுகையை , இந்தப் பதிவுகளை , நீங்கள் பார்க்க வேண்டும். அவற்றில் ஆங்காங்கே அத்தகவல்கள் கசிந்துள்ளன. கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். பார்ப்போம்....
மேலும் வாசிக்க...

Friday, March 30, 2007

குறிவைக்கப்படும் இந்திய இளந்தகமை.

நேற்று என் முதலாவது இடுகையை இட்டதும் பலர் நினைத்திருக்கக் கூடும், ஈழவிடுதலைப்போராட்டம் குறித்த விடயங்களைப்பற்றியே பேசப்போகின்றேன் என்று. பலர் வந்து பார்த்தும், மெளனமாய் போனதற்கும் இதுவே காரணம் என்பதையும் நன்கறிவேன். ஆனால் என் நோக்கம் அதுவல்ல. கட்டுப்பெட்டிகளாக இருந்த எங்கள் கண்களைத்திறந்து ஈழவிடுதலைப்போராட்டம்தான். தேசிய விடுதலைப்போர் என்ற எண்ணப்பாட்டினூடே எங்கள் தேசத்திலுள்ள ஏனைய ஒடுக்குமுறைகளையும் நாங்கள் அறியத் தொடங்கினோம்...

கிராமத்துத் தெருக்களிலும், வயல் நிலங்களிலும், கடற்கரைகளிலும், திரிந்தவர்களால், அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களின் துயர்களையும், துன்பங்களையும், நேரிடையாகத் தெரிந்து கொள்ள முடியும். அதைவிடவும், அதுபோன்ற துயர் நிகழுமிடங்களை அடையாளங்காணவும் முடியும். அண்மையில், விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் பேசிய ஒரு தமிழக இளைஞனின் உரையில், வளர்ந்துவரும் இந்தியாவின் வளங்கள் மீது வைக்கப்படும் குறிகள் பற்றி விளக்கமாகச் சொன்னான். யாரும் மறுப்புத் தெரிவிக்க முடியாத ஆணித்தரமான வாதம். அந்தளவில் அதைவிட்டுவிட்டேன்.

சென்றவாரத்தில் சுவிஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், இந்தியா மீதான ஒரு பார்வை ஆராயப்பட்டது. நிகழ்ச்சியின் காட்சிப்படிமத்தில் கமலும் சிநேகாவும் சுவிஸ் மலைகளில் நடனமாடுக் காட்சியைப்படமாக்கப்படுவதும் கூடக்காட்டப்பட்டது. ஆகா நம்ம தமிழ் நட்சத்திரங்கள் சுவிஸ் தொலைக்காட்சியில் என ஒரு கணம் புல்லரித்துப்போனாலும், நிகழ்ச்சி சொன்ன செய்தி, சூடாகவே இருந்தது. சுருக்கமாகச் சொல்வதாயின், தொழில்நுட்பத் தகமைகளில், திறன் பெற்றுவரும், இந்திய இளைஞர்களின் உழைப்பை, உழைப்பாகவும், உல்லாசமாகவும், பெற்றுக்கொள்வதற்கான திட்டமாகவே எனக்குப் பட்டது. இதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இனிவரும் காலங்களில் உலகெங்கிருந்தும் வரலாம். அவற்றில் கணேசாவும்(விநாயகர்), கமலஹாசனும், கைகோர்த்தும் வரலாம். அவற்றினூடு இந்தி இளைஞர்களின், திறமை, உழைப்பு, ஊதியம் என்பன, அவர்களறியாமலே உறிஞ்சப்படலாம். இதைப்பபற்றி, இளைய இந்தியா எண்ணிப்பார்க்கவில்லையா என்ற சிந்தனையோடு வலைப்பதிவுலகில் பார்த்த போது சில பதிவுகள், இடுகைகள், கண்ணில் பட்டன..

அசுரனின் இந்த இடுகையும், வேறுபல இடுகைகளும் இதுகுறித்துப் பேசியுள்ளது. இதுபோன்று ஆழியூரானின் நடைவண்டி., வரவனையான், ராஜாவனஜ், சபாபதி சரவணனின் துள்ளிவருகுது வேல் , என அவற்றை இங்கே அடையாளப்படுத்துகின்றேன். இதனால், இவர்கள்தான் என்றல்ல, இந்தப்பதிவர்களின் எல்லா இடுகைகளையும் படித்தவனும் என்றல்ல. ஆனால் இவர்களது ஏதோ ஒரு இடுகையைப் படித்தபோது இவர்களுள் உறைந்துபோயுள்ள உணர்வினைக் கண்டுகொண்டதால், குறிப்பிட்டுள்ளேன். இந்திய தேசத்தின் பரப்பு விசாலத்திற்கு இந்த உதாரணங்கள் ஒரு துளி மட்டுமே....
மேலும் வாசிக்க...

Thursday, March 29, 2007

ஒளிபடைத்த கண்ணினாய்...


என் தமிழ்மண நட்சத்திரவாரப் பதிவுகளில் ஒன்று, என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக். இதைப்படித்த தமிழக நண்பர் ஒருவர் மடலிட்டிருந்தார். அப்பதிவு வாசித்ததின் பின் சில தினங்களுக்கு ஒரு சிறுமியின் சிரித்த முகம் தன் நினைவில் வந்தபடியே இருந்ததென்று. அது என் எழுத்தின் வலிமை என்று நான் எண்ணவில்லை, என்தேசத்தின் வலியென்றே உணர்ந்தேன். அதனை மற்றொருவருக்கும் உணர்த்த முடிந்ததே என்பதில் நிறைவு. சில தினங்களுக்கு அவருக்கு நினைவில் வந்த சிறுமியின் முகம், அதுதான் சிகப்பியின் முகம் இருபது வருடங்களாக என் நினைவில் நிற்கிறதே.

நெடுந்தீவுக்கடலில் குமுதினிப்படகில் பயனித்தவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். செய்தி தெரிந்ததும், யாழ்ப்பாணத்திலிருந்து குறிகாட்டுவான் துறைமுகத்துக்குச் சென்ற செய்தியாளர்களுடன் நானும். அப்படியொரு கோரத்தை அதுவரையில் கண்டதில்லை. கண்டவற்றைப் படமாக்கியபடியிருந்த என் கமெராத் திரையில் நெஞ்சில், பைனைட் கத்தியால் குத்தப்பட்டிறந்த அந்தக் குழந்தை தெரிந்தபோது நடுநடுங்கிப்போனேன். காட்சி மங்கலாயிற்று. என்கண்களில் கண்ணீர் முட்டிற்று. கைகள் நடுங்கத் தொடங்கிற்று. அதற்கு மேல் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. அப்படியே அருகிலிருந்த கல்லொன்றில் அமர்ந்து கொண்டேன். எத்தனை இரவுகள் பகல்கள் கழிந்த போதும் அந்தக்காட்சி அழியவில்லை. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அதைவிடப் பயங்கரமான காட்சிகளை அதிர்வின்றி, ஏற்றுக் கொள்ள, மரணத்துள்ளான வாழ்வு எம்மை தயார்படுத்தியிருந்தது.

எண்பத்தைந்தில் ஒருபொழுது, இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிப்போயிருந்த சமயம், தொடர்ச்சியாகப் பதினெட்டுமணிநேர எறிகணைவீச்சு. எத்தனைபேர் இறந்தார்கள் என உடனே சொல்ல முடியாவாறு சதைப்பிண்டங்களின் சிதறல். உதவிக்குழு ஒன்றோடு செல்கின்றேன். உடலில் அசைவு இருந்தால் சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு அனுப்பு, இல்லையெனில் சவக்காலைக்கு அனுப்பு, என்றவகையில் வகைப்படுத்திய பரிதாபம். ஆனால் பணியாற்றிய யாரும் சளைக்கவில்லை. வைத்தியர்கள், உதவியாளர்கள், கடைநிலைப்பணியாளர்கள், தொண்டர்கள், போராளிகள், யாரும் சளைக்கவில்லையே. ஏன் மக்களும்தான். சதைப்பிண்டங்களாய் கூட்டி அள்ளிக் கொண்டுபோய் கொட்டிக் களைக்கையில், மக்கள் வெட்டித்தந்த இளநீரை எந்தவித அருவருப்பும் இல்லாது குடிக்க முடிந்த, மரணத்துள்ளான வாழ்வின் அனுபவம் அது.

எங்கள் தாயக விடுதலைப்போராட்டத்தின் நெடும்பயணத்தில், மகிழ்ச்சி, துக்கம், இணைவு, பிரிவு, என எல்லாம் வந்துபோயிருக்கிறது. முதற்தடவை பார்க்கும் எந்த மனிதருள்ளும் என்ன சோகம் மறைத்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியாதவாறு மரணத்துள் வாழப்பழகிக்கொண்டோம். ஆனாலும் என்றாவது, ஏதாவது ஒரு பொழுதில் விழித்துக்கொள்ளும் துயரம், சிலபொழுதுகள் விழிமூட விடுவதில்லை. கடந்த இரு தினங்களில் அப்படி நினைவைத் திரும்பத்திரும்பத் தோற்றுவித்த இடுகையது. அச்சம்பவம் நடைபெற்ற பொழுதுகளில் நான் புலம்பெயர்திருந்தேன். ஆனாலும் கொடூரம் அறிந்திருந்தேன். இருதினங்களுக்கு முன் சயந்தனின் சாரால் பதிவில் வந்திருந்த ஆனந்தன் அண்ணா நேற்றும் உங்களை நினைத்தேன்.அந்தப் இடுகை மீளவும் என்னைப் பாதித்தது. சாப்பிடமுடியவில்லை. தூங்கமுடியவில்லை. வலைப்பதிவுலகில் சிரித்துக் கொண்டே வரும் அந்த இளையவனின் உள்ளத்துக்குள் இப்படியொரு சோகம், ஒழிந்திருக்குமென எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?. பதிவைப் படித்தபின் எதுவும் செய்யத்தோணாவேளையில் சயந்தன் தொடர்பு கொண்டபோது சொன்னேன் “ இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களில் நிரம்பப்பிடிக்கும் வரிசையில் ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்,எனக்கு ரொம்பப் பிடிக்கும். கால் மாத்திரை, அரை மாத்திரை அளவிலெல்லாம் இசைப்புள்ளி வைத்து, ராஜா இசைக்கோலம் பண்ணியிருப்பார். எண்ணி ரசிக்கும் அந்தப்பாடலை இனி கேட்கும் போதெல்லம் எனக்கும் ஆனந்தண்ணை ஞாபகத்துக்கு வரப்போகிறார் “ என்று. அதுதான் மரணத்துள் வாழப்பழகிக் கொண்ட மனதின் திண்மை.

சயந்தனுடன் இணைந்து, சிரித்துக்கொண்டு வரும் சோமிதரனின் காற்றோடு வலைப்பதிவில் வந்த ஒரு இடுகை நிர்வாணராணுவம். இது சொல்லும் செய்திகள் பல. எங்கள் நிலத்தில் நெரிக்கப்படுகின்ற குரல்வளைகளால், ஒலிக்க முடியாமற்போன கதறலை இப் பதிவு ஒலித்ததாகவே உணர்கின்றேன். புலம்பெயர்ந்திருந்த போதும், நிலத்தோடிருக்கும் நேசத்தில், சோமியின் நெஞ்சின் வலி, வார்த்தையாகியிருப்பதை வாசிக்கலாம்.

ஈழத்தின் துயர் மட்டுமே எண்ணப்படும் என்றில்லை. ஏனென்றால் ஒடுக்கப்படும் மக்கள் உலகெங்குமிருக்கிறார்கள். ஆகையால் எண்ணங்கள் தொடரும்... தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பென்னவென்று கேட்கிறீர்களா? இந்தவாரத்தின் இறுதிவரை வந்திருந்து உறவாடுங்கள். உங்களுக்கே புரியும் அப்போது...

படம்: நன்றி, "மரணத்துள் வாழ்வோம்" ஈழத்துக்கவிதைகள் தொகுப்பு


மேலும் வாசிக்க...

எழுத்து என்பது...

வணக்கம் நண்பர்களே!

மற்றுமோர் அவதாரம். வலைச்சரத்தின் இந்தவாரத் தொகுப்பாசிரியராக.

வலைச்சரத்தின் ஆசிரியர் சிந்தாநதியிடமிருந்து, சென்றவாரத்தில் தேடிவந்த இப்பொறுப்பை, பணிகள் காரணமாக இவ்வாரத்திற்கென மாற்றிக் கொண்டேன். ஆனால் இப்போது நினைக்கின்றேன் சென்ற வாரமே செய்திருக்கலாம் என. காரணம், சென்றவாரத்தில் ஆசிரியராக இருந்த, சுப்பையா ஆசிரியர், அந்தளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சும்மா, சிலம்பம், கம்பு, வாள், எனப் பந்தாவாக, பக்காவாகச் சுழற்றி விளையாடியிருக்கிறார். அப்படி ஆர்ப்பாட்டமாக விளையாடிய களத்தில் , மருள விழித்தபடி நான். என்ன செய்யப்போகின்றேனோ?... எனும் ஒருவித அச்சத்துடனேயே வந்திருக்கின்றேன்.


என்னைப்பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. என்னசெய்யலாமென்பதை மட்டுமே இப்போது பேசலாமென் றெண்ணுகின்றேன்.


வலைப்பதிவில் எழுத வருவதென்னவோ பலருக்கும் உள்ளதைப் போன்ற ஒருவித ஆசையில்தான். ஆனால் அதே ஆசையில்தான் தொடர்கிறோமா? இல்லையென்றே எண்ணுகின்றேன். ஏனெனில் ஆசையில் எழுதுவதென்றால் அது ஒருகாலத்தின்பின் சலித்துவிடும். ஆனால் ஆசையால் எழுதுவதென்பது தொடரக் கூடியது. என்ன ஆசையால் என்பது அவரவர் விருபத்தேர்வு. ஆனால் ஒடுக்கப்படுகின்ற மக்களின் ஆசையென்பது விடுதலை நோக்கியதாகவே இருக்கும்.

சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க விரும்பும் ஆசையால் எழுதுபவர்களுக்கு,
எழுத்து, வெறும் ஊட்டமல்ல
எழுத்து, வெறும் சுவாசமல்ல
எழுத்து, வெறும் நேசமல்ல
எழுத்து வெறும் இயக்கமல்ல
எழுத்து வெறும் ஆயுதம் அல்ல

எழுத்து, ஒரு போராட்டம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசித்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும், ஒரு போராட்டம். அதை எழுதும் எல்லோரும், ஒரு சமூகப் போராளி. அப்படியாக நான் அடையாளங் கண்டு கொண்ட எழுத்துக்கள் சிலவற்றை இவ்வார வலைச்சரத்தில் தொடுக்க எண்ணியுள்ளேன், தொடரும் உங்கள் ஆதரவுக் கரங்களை இறுகப் பற்றியவாறே.....
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது