தமிழ் சோறு போடுமா?
➦➠ by:
கவிப்ரியன்,
தமிழ்,
மின்னூல்
அரசியல்வாதிகளின் பிழைப்புக்கு மட்டுமே தமிழ் என்றாகி பல வருடங்களாகி விட்டது. நகரத்தில் வளரும் பிள்ளைகள் யாரும் தமிழ் எடுத்து படிப்பதில்லை. குறைவான மதிப்பெண் எடுத்து வேறு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்காத சூழலில் தமிழ் படிக்கிறார்கள். யாரும் ஆர்வத்திலோ, வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ யாரும் தமிழ் படிப்பதில்லை. அரசும் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமையோ அல்லது வேறு எந்த சலுகைகளையோ கொடுப்பதில்லை.
ஒரு சில தன்னார்வலர்கள்தான் தமிழை பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கணிணித் துறையிலும் தன்னார்வலர்களே தமிழை முன்னெடுக்கிறார்கள். பழைய நூல்களை மின்னூலாக்கும் முயற்சியிலும், தமிழ் மென்பொருள் கண்டுபிடிப்பிலும் வெகு சிலரே ஈடுபடுகிறார்கள். தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பவர்களும் மிகக் குறைவு. முக்கியமாய் அரசு இதற்கெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு எதில் வருமானமோ அதில்தான் அக்கறையெல்லாம்.
இன்றைய அறிமுகத்தில் சில தமிழ் தொடர்பான வலைத்தளங்களை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.
அலையல்ல சுனாமி என்ற தளத்தின் விச்சு அவர்கள், தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று
தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத்
தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி...என்ற முன்னுரையோடு இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை தரவிறக்க இணப்புகளை ஒரே இடத்தில் கொடுத்திருக்கிறார்.
நிலாக்கால நினைவுகள் என்ற தளத்தில் TNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண, பொது அறிவு நூல்களையும் சுஜாதாவின் அனைத்து நூல்களையும் தரவிறக்கம் செய்யலாம். மேலும் வண்ண வண்ண கண்களைக் கவரும் செந்தமிழ் ஃபாண்ட்களை தரவிறக்கம் செய்யலாம்.
சகோதரன் ஜெகதீஸ்வரன் அவர்களின் TAMIL E-BOOKS DOWNLOADS தளத்திலும் தமிழ் நூல்களை தரவிறக்கம் செய்யலாம்.
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? ஆசிரியர் வேலை தவிர்த்து வேறு எந்த வேலையும் தமிழ் படித்தால் கிடைக்காது என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எத்தனை பெரிய தவறு என்பதை வா. மணிகண்டன் தன் நிசப்தம் தளத்தில் தமிழ் படித்தால் வாத்தியார் என்ற பதிவைப் படித்தபின்தான் புரிந்தது.
எழுத்தாளர் ஆவதும் புத்தகம் வெளியிடுவதும் எல்லோருடைய கனவு என்றே சொல்லலாம். ஆனால் அந்த ஆசை எளிதில் நிறைவேறுவதில்லை. பதிவர்களின் படைப்புக்களை தொகுத்து அதை மின்னூலாக்கும் முயற்சியில் திரு. சீனிவாசன் அவர்கள் இறங்கி நூற்றுக்கும் மேலான நூல்களை அனைத்து கருவிகளிலும் வாசிக்கக்கூடிய வகையில் உருவாக்கியிருக்கிறார். இணைப்புக்கான சுட்டி. இது பற்றிய விபரம் தெரியாதவர்களுக்கும்,படைப்புகளை மின்னூலாக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கும், மின்னூல்களை தரவிறக்கம் செய்ய விரும்புபவர்களுக்கும் இது உதவக்கூடும்.
அன்புடன்,
கவிப்ரியன்.
