07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கவிப்ரியன். Show all posts
Showing posts with label கவிப்ரியன். Show all posts

Sunday, January 18, 2015

வருந்துகிறேன்...விடை பெறுகிறேன்

வலைச்சர ஆசிரியப்பணி என்பது சாதாரணமான வேலையில்லை என்பது இப்போதுதான் புரிந்தது. எத்தனை மெனக்கெட வேண்டும் என்பதும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதும் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டேன். பதிவுகளை அறிமுகப் படுத்துவதற்கும் நிறைய தேடல் வேண்டியிருந்தது.

முதல் முறை என்பதால் இந்த ஒரு வார கால பணி எனக்கு அத்தனை திருப்திகரமாக இல்லை. மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற மனக்கோட்டை கட்டியிருந்தேன். ஆனால் நான் தேர்ந்தெடுத்த நாட்கள் பொங்கல் திருவிழாவாக அமைந்து விட்டதால் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கின்ற வேளையில் இந்தப் பணியும் சுமையாக அமைந்து விட்டது. அதனால்தான் என்னால் சிறப்பாக செய்ய முடியவில்லை. தவிரவும் எனது கிராமத்தில் இணைய வேகமும் அத்தனை வேகமாக இல்லை. அதற்காக உளமாற வருந்துகிறேன்.

பிறிதொரு சமயத்தில் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உறுதியையும் ஏற்றிருக்கிறேன். இது எனக்கொரு சவால் மாதிரிதான். நமது தளத்தில் நம் விருப்பம்போல் எப்போது வேண்டுமானாலும் பதிவிட முடியும். ஆனால் இங்கோ தொடர்ந்து ஒரு வாரம் நாள்தோறும் தவறாமல் பதிவிட வேண்டும் என்ற கடமை பயமுறுத்திக் கொண்டே இருந்தது புதுமையான அனுபவம்தான்.

இன்றைய சில அறிமுகங்கள்; அகம் புறம் தளத்தில் தம்பி பிரபு இராமனைத் திட்டித்தீர்த்த காதை என்ற கவிதையில் சரித்திர நிகழ்வோடு தற்போதைய அரசியல் சமுதாய சீரழிவையும் அழகாக எடுத்துரைக்கிறார்.

செந்தூரனின் பதிவுகளில் மதி சுதாவின் தழும்பு -ஒரு சினிமாக்காரனின் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும் ஒரு குறும்படத்தைப் பற்றி பேசுகிறது.

சினிமா சினிமா தளத்தில் The World's End (2013) - அடிமைப்படுத்தும் தொழில்நுட்பம் என்ற பதிவில் 'தி வோல்ட்ஸ் என்ட்' திரைப்படம் இந்த நெட்வொர்க்கின் ஒழுங்கமைவை நகைச்சுவைப் பின்னணியில் சின்னதாக கோடிட்டு காட்டுவதை அழகாக விவரிக்கிறார் ராஜ் அவர்கள்.

விதவிதமான மூலிகைகள் அதன் பயன்கள் பற்றி மூலிகை வளம் என்கிற இந்த தளம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.

தமிழ் கம்ப்யூட்டர் காலேஜ் என்ற தளம் இணையத்தில் எப்படி எச்சரிக்கையாக உலவுவது என்பதைப் பற்றிய அருமையான பதிவு

 மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த தினமான இன்று எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இனி யாரைப் பாடுவேன் என்ற கவிதையை உத்தரவின்றி உள்ளே வா என்ற தளத்தில் பார்க்கலாம்.

இந்த சில அறிமுகங்களோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். வாய்ப்பு கொடுத்த சீனா ஐயாவிற்கும், வலைச்சர குழுவிற்கும் மீண்டுமொரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைச்சரத்தின் மூலம் எனது மறக்க முடியாத நினைவுகள் வலைத்தளம் இன்னும் கொஞ்சம் பிரபலமாகியிருக்கிறது. தொடர்ந்து வாசகர்கள் வரும் வண்ணம் எனது தளத்தை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. பல பதிவர்கள் முகநூல் பக்கம் போய்விட்டாலும் தொடர்ந்து வலைத்தளத்தையும் விடாமல் பதிவுகளை எழுத வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
கவிப்ரியன்.
மேலும் வாசிக்க...

Saturday, January 17, 2015

தமிழ் சோறு போடுமா?

அரசியல்வாதிகளின் பிழைப்புக்கு மட்டுமே தமிழ் என்றாகி பல வருடங்களாகி விட்டது. நகரத்தில் வளரும் பிள்ளைகள் யாரும் தமிழ் எடுத்து படிப்பதில்லை. குறைவான மதிப்பெண் எடுத்து வேறு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்காத சூழலில் தமிழ் படிக்கிறார்கள். யாரும் ஆர்வத்திலோ, வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலோ யாரும் தமிழ் படிப்பதில்லை. அரசும் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமையோ அல்லது வேறு எந்த சலுகைகளையோ கொடுப்பதில்லை.

ஒரு சில தன்னார்வலர்கள்தான் தமிழை பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கணிணித் துறையிலும் தன்னார்வலர்களே தமிழை முன்னெடுக்கிறார்கள். பழைய நூல்களை மின்னூலாக்கும் முயற்சியிலும், தமிழ் மென்பொருள் கண்டுபிடிப்பிலும் வெகு சிலரே ஈடுபடுகிறார்கள். தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பவர்களும் மிகக் குறைவு. முக்கியமாய் அரசு இதற்கெல்லாம் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு எதில் வருமானமோ அதில்தான் அக்கறையெல்லாம்.

இன்றைய அறிமுகத்தில் சில தமிழ் தொடர்பான வலைத்தளங்களை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

அலையல்ல சுனாமி என்ற தளத்தின் விச்சு அவர்கள், தமிழ் புத்தகங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய சிறப்பான இணையதளங்கள் பல உள்ளன. இவை எங்கே கிடைக்கும் என்று தேடி அலைவோருக்கு அவற்றினை மொத்தமாகத் தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி...என்ற முன்னுரையோடு இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை தரவிறக்க இணப்புகளை ஒரே இடத்தில் கொடுத்திருக்கிறார்.

நிலாக்கால நினைவுகள் என்ற தளத்தில் TNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண, பொது அறிவு நூல்களையும் சுஜாதாவின் அனைத்து நூல்களையும் தரவிறக்கம் செய்யலாம். மேலும் வண்ண வண்ண கண்களைக் கவரும் செந்தமிழ் ஃபாண்ட்களை தரவிறக்கம் செய்யலாம்.  

சகோதரன் ஜெகதீஸ்வரன் அவர்களின் TAMIL E-BOOKS DOWNLOADS தளத்திலும் தமிழ் நூல்களை தரவிறக்கம் செய்யலாம்.

தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? ஆசிரியர் வேலை தவிர்த்து வேறு எந்த வேலையும் தமிழ் படித்தால் கிடைக்காது என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது எத்தனை பெரிய தவறு என்பதை வா. மணிகண்டன் தன் நிசப்தம் தளத்தில் தமிழ் படித்தால் வாத்தியார் என்ற பதிவைப் படித்தபின்தான் புரிந்தது. 

எழுத்தாளர் ஆவதும் புத்தகம் வெளியிடுவதும் எல்லோருடைய கனவு என்றே சொல்லலாம். ஆனால் அந்த ஆசை எளிதில் நிறைவேறுவதில்லை. பதிவர்களின் படைப்புக்களை தொகுத்து அதை மின்னூலாக்கும் முயற்சியில் திரு. சீனிவாசன் அவர்கள் இறங்கி நூற்றுக்கும் மேலான நூல்களை அனைத்து கருவிகளிலும் வாசிக்கக்கூடிய  வகையில் உருவாக்கியிருக்கிறார். இணைப்புக்கான சுட்டி. இது பற்றிய விபரம் தெரியாதவர்களுக்கும்,படைப்புகளை மின்னூலாக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கும், மின்னூல்களை தரவிறக்கம் செய்ய விரும்புபவர்களுக்கும் இது உதவக்கூடும்.

அன்புடன்,
கவிப்ரியன்.
மேலும் வாசிக்க...

Friday, January 16, 2015

சினிமாவும் தமிழர் வாழ்க்கையும்


பாட்டும் கூத்தும்தான் பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு. உழைத்துக் களைத்தவர்களின் ஒரே கொண்டாட்டம் கோயில் திருவிழாக்களும் அது தொடர்பான கூத்தும்தான். அதன் பரிணாம வளர்ச்சிதான் நாடகமும் சினிமாவும். நாளடைவில் சினிமா கட்சி அதன் கொள்கைகள் என பிரசாரசார பீரங்கியாக மாறி சினிமா தொடர்புடையவர்களே ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு மாறிப்போனது.

நிஜ வாழ்க்கையின் பிரச்னைகளிலிருந்து கொஞ்ச நேரமேனும் வேறு ஒரு கற்பனா உலகத்துக்கு செல்வதையே ஒவ்வொரு மனிதனின் மனமும் விரும்புகிறது. நம்மால் முடியாததை சினிமா கதாநாயகன் சாதிக்கும்போது தானே சாதித்ததைப் போல கற்பனை செய்து கொண்டான். மறைந்த எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வெற்றி இதை உறுதிப்படுத்தியது.

சினிமாவால் எதையும் சாதிக்க முடியம் என்கிற நப்பாசை மற்றவர்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஆக சினிமா ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு ஊடகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நல்ல சினிமா எது? கெட்ட சினிமா எது? இதை எப்படி யார் வரையறுக்க முடியும்? சினிமாவின் வணிக வெற்றி மட்டுமே இதை தீர்மாணிக்க முடியுமா? அதே போல மக்களின் நிஜ வாழ்க்கையை சினிமா பிரதிபலிக்கிறதா? போன்ற கேள்விகளெல்லாம் விவாதிக்கப்படக் கூடியவை.


சினிமா பற்றி அவதானிப்பும் அவை பற்றி அறிந்து கொள்ள விழையும் மனங்களும் அதிகம். சினிமா பற்றி நாள் கிழமை பொழுது என்று பேசிக்கொண்டே இருக்கும் சமூகம் நம்முடையது. ஒரு பொழுதும் சுவாரசியம் குறையாதது... என்ற முன்னுரையோடு அருவி என்கிற தளத்தில் தியோடர் பாஸ்கரன் அவர்களின் எது நல்ல சினிமா? என்கிற உரை பதிவாக வெளிவந்திருக்கிறது. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

மொழியும் நிலமும் தளத்தின் ஜமாலன் அவர்களின் சினிமா பற்றிய மூன்றாம் வடிவம் எனும் திரைத்தனம் நோக்கி சலனிக்கும் மலையாள சினிமா மற்றும் திரைச்சலனங்களின் பிம்ப மொழியாக மலையாள சினிமா ஆகிய பதிவுகளில்  சினிமா கலையா? கேளிக்கையா? என்கிற உரையாடல் சினிமா தோன்றிய காலந்தொட்டு நடைபெற்றுவரும் ஒன்று. சினிமா என்பது கலையோ, கேளிக்கையோ அல்ல. சினிமா எப்பொழுதும், எல்லாவகையிலும் சினிமாதான். அது ஒரு புதிய வடிவம். மக்களின் பழகிய சிந்தனைக்குள் அல்லது ஒரு வகைமைக்குள் உட்படுத்திவிட முனையும் வகைப்பாட்டியல் சார்ந்த ஒரு விருப்பமே அது கலையா? கேளிக்கையா? என்கிற கேள்விக்கான அடிப்படை... என்று தொடங்கும் சினிமா பற்றிய முக்கியமாய் மலையாள சினிமா பற்றிய அலசல் கட்டுரைகள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று.

சினிமாவைப்பற்றி மட்டுமல்லாமல் சினிமா நடிக நடிகையர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதிலும் நம்மவர்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடியவர்கள். எத்தனையோ பழமையான திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், சினிமா சம்பவங்கள் என சினிமாவைப் பற்றி ஒரு சினிமா கலைக்களஞ்சியம் போல தனது வலைத்தளத்தை உருவாக்கி நகைச்சுவையாய் எழுதி வருகிறார் ஆர்.பி.ராஜநாயஹம் தனது தளத்தில். உதாரணத்திற்கு எங்க எம்.ஜி.ஆரா இருந்திருந்தா என்ற பதிவைப் படித்துப்பாருங்கள்.

அப்பா... எவ்வளவு விஷயங்கள், எத்தனை பெரிய பதிவு. அசத்தி விட்டீர்கள் காரிகன். எனக்கு மெதுவாக அசைபோட்டு, ரசித்துப் படிக்கவே அரை நாளானது. இதற்காக நீங்கள் எத்தனை நாள் மெனக்கெட்டீர்களோ? எப்படி அத்தனையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.  என்று நான் ஒரு தளத்திற்குப் போய் பின்னூட்டமிட்டிருந்தேன். எழுபதில் வளர்ந்தவர்களுக்கு இவரின் பதிவுகள் ஏகந்தமாய் இனிக்கும். மறக்க முடியாத நினைவுகளில் உங்கள் மனம் லயித்துப்போகும். அந்த தளம் காரிகனின் வார்த்தை விருப்பம்

தின வாழ்க்கையில் திரை இசைப்பாடல்களைக் கேட்காதவர்களும் உண்டா என்ன? அதுவும் பழைய பாடல்களை... இசை விரும்பிகள் XX-எழுபதுகளின் வாடாத வசந்தம் மற்றும் இசை விரும்பிகள் XXI-அலங்காரம் கலையாத அழகு என்ற காரிகனின் பெரிய பதிவுகளைப் படித்துப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இந்த தளத்தைப்போலவே திரையிசைப் பாடல்களைப் பற்றி அலசும் மற்றோரு தளம் இனியொரு... டி. சௌந்தர் என்பவர் தமிழ்த் திரை இசையில் ராகங்கள் என்ற தொடரை எழுதி வருகிறார். இசை விரும்பிகளுக்கு ஏற்ற தளம் இது.

நாளை மீண்டும் சில அறிமுகங்களோடு வருகிறேன்.

அன்புடன்,
கவிப்ரியன்.


மேலும் வாசிக்க...

Thursday, January 15, 2015

ஒடிஸாவைப் பற்றி கொஞ்சம்...



கிட்டத்தட்ட எட்டு வருடங்களாகிறது இந்த ஒடிஸா மாநிலத்திற்கு வந்து. இன்னும் இந்த மாநிலத்தை முழுமையாக சுற்றிப் பார்க்கவில்லை. ஒடிய மொழியையும் முழுவதுமாக கற்க முடியவில்லை. இடையில் ஒரு சில வருடங்கள் கர்நாடகத்தில் பணி புரிந்தாலும் இங்குதான் அதிக நாட்கள் இருக்க நேரிட்டது. இங்கு வாழ்ந்த அனுபவங்களை தொடராக எழுதலாம் என்று முயன்று அது பாதியில் நிற்கிறது. ஒடிஸா வாழ்பனுவங்கள் பற்றிய முதல் பதிவு கலிங்கநாடும் கலிங்க நகரும்

கன்ஜம் மாவட்டம் பிரம்மபூரில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை படா பஜாரில் நடக்கும் மாபுடி தாக்குராணி என்கிற விழா மிகவும் பிரத்தி பெற்றது. ஒவ்வொரு தெருவிலும் சாமி சிலைகளை நிறுவி ஒரு வார காலத்துக்கு வழிபாடு நடக்கும். ஜே ஜே வென்று ஜனத்திரள் கூடும்.


பிரம்ம்பூரிலிருந்து சுமார் 35 கி.மீ.தொலைவில் உள்ள தாரா தாரிணி கோவிலும் மிகவும் பிரபலமானது. மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மிகவும் செங்குத்தான ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்துதான் போகவேண்டும்.
பிரம்மபூரிலிருந்து புவனேஸ்வர் செல்லும் என்.எச்.5 தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சிலிகா என்கிற ஆசியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரி கடல் போல பரவிக்கிடக்கிறது. ஏரியினிடையே சிறு சிறு தீவுகளும் கோவிலும் அமைந்திருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.
அடுத்து உலகப்புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோவில். தென்னிந்திய கோவில்களைப் போலல்லாமல் பிரத்யேகமான பிரம்மாண்ட கோவில் அமைப்பு. லட்சக்கணக்கானவர்கள் கூடும் பூரி ரத யாத்திரை இங்கே மிக முக்கியமான நிகழ்வு.
புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜர் ஆலயமும் புகழ் வாய்ந்தது. இந்தக்கோவிலும் பூரி ஜகந்நாதர் கோவிலும் ஒரே காலத்தை கொண்ட கட்டிட அமைப்புடையவை.

அசோகச் சக்ரவர்த்தி இந்த நாட்டின் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மாண்டு ரத்த ஆறு ஓடுவதைப் பார்த்து மனம் வருந்தி இனி எந்த நாட்டின் மீதும் படையெடுப்பதில்லை என்று முடிவு செய்து புத்த மதத்தைப் பரப்புவதைக் குறிக்கோளாய்க் கொண்டு மனம் மாறியதும் இந்தப் பூமியில்தான்.
 
அடுத்து கலைகளின் உச்சம் என கொண்டாடப்படும் கொனார்க்கில் உள்ள சூரியனார்க் கோவில். பிரமிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் அதை அடக்கிவிடமுடியாத அற்புதம் இந்த கொனார்க் சூரியனார்க் கோவில். இத்தனை நுண்ணிய வேலப்பாடுகள் அதுவும் கல்லில் இன்றைய கணிணி யுகத்திலும் கூட சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.
இது தவிர தசரா, துர்கா பூஜை, காளி பூஜை, போன்றவை இங்கு கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகள்.

இனி இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா...

அதீதக்கனவுகள் தளத்தின் ராதாகிருஷ்ணனின் நகைச்சுவைப் பதிவைப் பதிவான 'பொய்யான மனிதர்களின் கூடாரம்' கடவுளும் பக்தனும் பேசிக்கொள்ளும் அருமையான பதிவு.  

சுடுதண்ணி தளத்தில் இணையத்தில் எச்சரிக்கையாக எப்படி செயல்படுவது என்பதைப் பற்றி தொடர் பதிவு இருக்கிறது. எல்லாம் தெரிந்தவர்கள்கூட சில நேரங்களில் தவறுகள் செய்து விடுகிறார்கள். முன்னேப்பதையும் விட சுய மோகம் எல்லோரிடத்திலும் அதிகரித்திருக்கிறது. தன்னைத்தானே வித விதங்களாக புகைப்படத்தை எடுத்து முகநூலிலும் வலைத்தளங்களிலும் பதிவு செய்வது அதிகரித்திருக்கிறது. அதன் விளைவுகளையும் விபரீதங்களையும் அழகாக எடுத்துரைக்கிறது இந்த இணையம் வெல்வோம் என்கிற எச்சரிக்கைப் பதிவு.

அக்கம் பக்கம் தளத்தின் அமுதா கிருஷ்ணா ஆண் அழகு என்ற பதிவில் ஆண் எப்போதெல்லாம் அழகாகத் தெரிகிறான் என்பதை மிகவும் அழகாக சொல்லிச்செல்கிறார். //அதிகாலை பனியில் நனைந்தபடி கோலம் போடும் பெண்ணிற்கு துணைக்கு நிற்கும்போது\\ இந்த வரிகளைப் படித்துவிட்டு இன்று காலை வீட்டம்மா கோலம் போடும்போது அருகில் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

விஜய் மகேந்திரனின் தளத்தில் ப்ரியா தம்பி அவர்கள் எழுதிய பதிவான டாய்லட் கிடைக்குமா ப்ளீஸ்... -ஐ கொஞ்சம் படித்துப்பாருங்கள். // அடிப்படைத் தேவையான கழிவறை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள் தான் இலவசங்களை இன்று அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆண், பெண் யார் ஆட்சி செய்தாலும் பெண்களின் பிரச்னைகள் யாருக்கும் உறைப்பதில்லை\\ இந்த வரிகள் உண்மையிலேயே சாட்டையடி.

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் சர்ச்சை அவரின் அறிக்கைக்குப் பின் முடிவுக்கு வந்த நிலையில், அந்த அறிக்கை வருத்தத்தையே கொடுக்கிறது. அவரின் எழுத்தை நான் வாசித்தது கிடையாது என்றாலும் ஒரு எழுத்தாளர் முடங்கிப் போவது ஜீரணிக்க முடியாத விஷயம். சர்ச்சைக்குரிய பக்கங்களை நீக்கிவிட்டு வெளியிட ஒப்புக்கொண்ட பின் 'பெருமாள் முருகன் இறந்துவிட்டான்' என்ற அவரின் வேதனையான வாக்குமூலம் வலியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. இது தொடர்பான ஒரு பதிவு ஆம்னிபஸ் தளத்தில் பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் என்ற தலைப்பில் நட்பாஸ் எழுதியதைப் பாருங்கள். 

மீண்டும் நாளை சந்திப்போம். 

அன்புடன்,
கவிப்ரியன்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது