சப்தப்ராகாரம் - நிலம்
➦➠ by:
ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள்
இன்று பெரிதாய் நிற்கும் ராஜகோபுரம் அந்த நாட்களில் எப்படி இருக்கு பார்த்தீங்களா..
ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிராகாரங்கள் நடுவில் இருக்கிறது உங்களுக்குத் தெரியும்..
மூலஸ்தானத்தைச் சுற்றி திருவெண்ணாழி சுற்று. பாற்கடலில் பரந்தாமன் துயில்வதைப் போல..
உத்திரை வீதி, சித்திரை வீதி, அடையவளைந்தான் என்று அடுத்தடுத்து சதுரமாய் வீதிகள். உத்திரை வீதியில் ஒரு புறம் மட்டுமே வீடுகள். இந்த வீதியில்தான் தை மாதம் ஓடும் தேர் இருக்கிறது.
சற்றே அகலமான வீதி சித்திரை வீதி. இங்குதான் கோரதம் என்னும் தேரும், சித்திரைத் தேரும்.
வையாளி என்னும் சிறப்பான குதிரை ஓட்டம் ஸ்ரீரங்கத்தின் ஸ்பெஷல். அதிலும் கோண வையாளி என்று குறுக்கு நெடுக்காக பெருமாளைத் தூக்கிக் கொண்டு ஓடுபவர்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். தேருக்கு முதல் நாள் நடக்கும் திருவிழா.
முன்பு சோலைகள் நிறைந்த ஸ்ரீரங்கம் இன்று பன்மாடிக் கட்டிடங்களால் நிரம்பி வழிகிறது. நிலம் விற்கும் விலை குதிரை விலை.. யானை விலை.. !
நிலம்.. பஞ்ச பூதங்களில் ஒன்றாய்..
இந்த மண் எத்தனை பேரைத் தாங்கி இருக்கிறது.. எத்தனை சாதனையாளர்கள்.. போராட்டக்காரர்கள்.. மனித நேயர்கள்..
நிலத்தில் நட்ட செடி மரமாகி பல வருடங்களுக்கு (நட்டவர் யாரோ..) பயன் தருகிறது..
‘இமயம் சரிகிறது’ என்று மரண செய்தி சொல்லும் போஸ்டர்களை அவ்வப்போது பார்க்கும்போது, பூமிக்கு மேலே நிற்கும் போது அவர்களின் வாழ்க்கைப் போக்கும், புதைந்ததும் விலாசம் தொலைகிற விசித்திரமும் சொல்லாமல் சொல்கிற கதைகள்தான் எத்தனை.. எத்தனை..
இருக்கும் நாட்களை அன்பில் கழிக்கும் ஜீவன்கள் எந்த நாளிலும் நினைவு கூரப்படுகிறார்கள். முகஞ்சுளித்து நகரும் ஆத்மாக்கள், இருக்கும் போதே விலகிப் போக வைத்து விடுகிறார்கள்.
அன்பைச் சொல்வோம்.. எந்நாளும்.
இனி நம் மனம் கவர் பதிவர்களைப் பார்க்கலாமா..
தஞ்சாவூர் கோபாலி என்று செல்லமாய் அழைக்கப்படும் தஞ்சாவூர் கவிராயர் தமது கவிதை, கதை, கட்டுரை, பேட்டி என பன்முகத் திறமைகளில் ஜொலிப்பவர். எழுத்தில் வாசிப்பவனை ஈர்த்து அப்படியே இழுத்துப் போகும் சாமர்த்தியசாலி.
எப்போதாவதுதான் பிலாகில் வருகிறார் என்கிற குறையைத் தவிர.. வரும்போது எழுத்து விருந்து நிச்சயம் என்கிற மகிழ்ச்சியில் இதோ..
பெரிய எழுத்து நிஜமாகவே பெரிய எழுத்துத் தான் அவருடையது.
அடுத்து பூ வனம் ஜீவி ஸாரை எனக்கு சமீபமாய்த்தான் அறிமுகம். உடன் அவரது பழைய பதிவுகளைத் தேடிப் போனால்.. ஆஹா.. அங்கே எனக்கு இலக்கிய விருந்து காத்திருந்தது. கவிதைகளும்.. ரசனையுமாக.. அவரது பழைய பதிவுகளில் நான் இப்போது சஞ்சரிக்கிறேன் உற்சாகமாய்.
உள்வாங்கி படிக்கும் மனிதர்களைக் கண்டால் எனக்கு பிரமிப்பு. ஜீவகீதம் என்னால் பலமுறை வாசிக்கப்பட்ட தொடர். கல்கியில் வந்ததை தாத்தா பைண்ட் செய்து வைத்திருந்தார். ஓவியங்களுடன் வாசிப்பதில பரம சுகம் உண்டு. தில்லானா மோகனாம்பாளை கோபுலு சித்திரங்களுடன் இன்னமும் ரசிக்கிறேன்.
இதோ வருகிறார் அப்பாதுரை.. ஒரு பிலாக் வைத்து மேய்ப்பதே சிரமம். நான்கு குதிரைகளை ஓட்டிக் கொண்டிருக்கும் எழுத்து சூரியன். மூன்றாம் சுழி ம்ம். எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனா? இல்லையெனில் இப்போது சொல்கிறேன். எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும். இப்படிச் சொல்கிறவரை எனக்குப் பிடிக்காமல் போகுமா..
இவரைப் பார்க்கணும் என்று எத்தனை நாளாய்த் தவம்.. போட்டோ பார்த்ததும் ஜென்ம சாபல்யம் ஆனது.. காமெடியில் இவரை பீட் பண்ண ஆளே இல்லை என்று சொல்லலாம். எழுத்தில் நகைச்சுவை மிளிர இவர் எழுதும் பதிவுகளைப் படித்து மிரண்டிருக்கிறேன்.. இப்படி எல்லாம் எழுத முடியுமா என்று. சேட்டைக்காரன் இவரைத்தான் சொல்கிறேன் என்று யூகித்தவர்கள் விலாசம் அனுப்பினால் என் சிறுகதைத் தொகுதி ஒன்று கூரியரில் அனுப்புகிறேன்.
நகைச்சுவையில் பிதாமகர் இவர். அதே போல சீரியஸ் ரைட்டிங்கும். என்னைப் பிரமிக்க வைத்த எழுத்தாற்றல் இவரிடமும். அத்தனை பெரிய எழுத்தாளர்...பழகுவதற்கு எத்தனை எளிமை.. கடுகு பல புனை பெயர்களுக்குச் சொந்தக்காரரான இவரை வாசிப்பது நம் வாசிப்பனுபவத்தை மெருகேற்றும்.
கதை கவிதை என நேர்த்தியாய் எழுத்துத் தேர் ஓட்டி வரும் இவரை ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். எழுதுவது அவ்வப்போதுதான் என்றாலும் தரமான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பதில் இன்னொரு கருத்துக்கு இடமில்லை. ராகவன் கவிதைகளும் தனி அனுபவம். போய்ப் படிங்க..
கேரக்டர் எழுதுவதில் இவரை மிஞ்ச ஆளில்லை.. எழுத்து இவரிடம் மண்டி போட்டு அமர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்..
பாமரன் பக்கங்கள் இவரின் பரம ரசிகனாய் நான் இருப்பதில் எனக்கு கூடுதல் சந்தோஷம்.
முள்ளும் இருக்கு, நிழலும் இருக்கு வாழ்வு போல..
ஹ்ம்ம்.. இவர் எழுத்தில் வாழ்க்கை இருக்கு.. வடிவும் இருக்கு..
ஏன் ஸார் எழுத்துல இடைவெளின்னு மனசு கெஞ்சுது இப்பல்லாம்..
கருவேல நிழல் பா.ரா. ஸாரின் பரம ரசிகர் வட்டத்தில் கொஞ்சம் எட்டி நின்று ரசிக்கும் கற்றுக்குட்டியாய் நான்.
இவருக்கு என்னதான் தெரியாது என்று தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கு.. சொல் புதிது.. பொருள் புதிது.. சுவை புதிது.. சொல்லிக் கொண்டே போகலாம்..இவர் பதிவுகளில் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வட்டத்தில் அடைக்க முடியாதபடி பல ரசனைகளின் கூட்டாஞ்சோறாய்.. ஒவ்வொன்றுமே அதனளவில் சிகரமாய்..
சுந்தர்ஜி மோதிரக்கை குட்டிற்கு ஏங்கும் மனசு எனக்கும்.
இது பொறுப்பதில்லை என்று இவர் எழுதும் வரிகளில் தெரிகிறது பாரதியின் அக்கினிக் குஞ்சு. சமகாலப் பிரச்னைகள் குறித்த இவரது அலசல் வாசிப்பவருக்கு யோசிக்கத் தூண்டும். எரிதழல் வாசன் ஸாரின் கைவண்ணத்தில் தீவிர எழுத்துக்களின் சங்கமம்.
மின்னல் வரிகள் பால. கணேஷ் அனுபவ நடைவண்டி பயணிக்காத பிரதேசம் இல்லை. பழகுவதற்கும் இனிமையான அவர் எழுத்துக்களில் எப்போதும் இளமையின் நர்த்தனம்.
இவர்களை நான் அறிமுகப்படுத்தவில்லை.. உங்களோடு சேர்ந்து நானும் ரசித்ததைப் பகிர்கிறேன்..
தொடரலாம்.. நாளை.,

