இரண்டு வாரங்கள் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். அதனால் தான் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து என குறைவான பதிவர்களை மட்டும் அறிமுகப்படுத்தினேன். நேற்றைக்குத்தான் தமிழ்வாசியிடம் கேட்டேன், இன்னொரு வாரம் எழுத அனுமதிக்க முடியுமா என்று. ஆனால் அடுத்த வாரத்துக்கான பதிவருக்கு அழைப்பு விடுத்தாயிற்றென்று கூறிவிட்டார். அதை விட அருமை அடுத்த ஆசிரியரின் ஏழு பதிவுகள் டிராப்டில் இருக்கின்றன. முதல் பதிவே அட்டகாசம்.
இன்றைய அறிமுகங்கள்:
பதிவர் ஜெய்லானி நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போது எழுதுவதில்லை. சுவாரஸ்யமாக பதிவுகளை எழுதியவர் இப்போது ஏன் எழுதவில்லையென்று தெரியவில்லை. மீண்டும் எழுதுங்கள் சார்.
பாண்டியன் பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதும் நண்பர் பாண்டியராஜ் இலக்கியங்கள் அதிகம் படித்திருக்கவேண்டும். அவருடைய எழுத்து நடையிலேயே தெரிகிறது. பதாகை பக்கிரிகள் என்னும் பதிவு என்னை ஈர்த்தது. பொறியியலில் எந்தப் படிப்பு சிறந்தது? என்னும் பதிவு நம்மையும் யோசிக்க வைக்கிறது. நன்றாக எழுதக்கூடிய இவருடைய தளத்தில் பக்கப் பார்வைகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் தான் உற்சாகப் படுத்த வேண்டும்.
உங்களுக்கு சேக்காளி என்றொரு பதிவர் இருப்பது தெரியுமா? எனக்குத் தெரியாது. இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். பலருடைய பதிவுகளையும் படிப்பவர். நீங்கள் ஏதாவது தளத்தில் நல்ல பின்னூட்டம் இட்டிருந்தால் அங்கே ஒரு 'டிக்' போட்டுவிட்டுப் போவார். இவருடைய பதிவுகள்:
சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் முகநூலில் எனக்கு நண்பர். ஓரிரு முறை போனில் பேசியிருக்கிறேன். இவர் பதிவர் என்பது இப்போது தான் தெரியும். இவர் எழுதிய பதிவுகள்:
ஓரளவுக்கு அதிகம் அறியப்படாத பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை அறிமுகப்படுத்துகிறேன்.
நண்பர் ஒருவர் நேற்று போன் செய்திருந்தார். வலைச்சரம் எழுதறீங்க, வந்து கருத்து சொல்றவங்களுக்கு ஒரு நன்றி சொல்லலாமே என்றார். சொல்லலாம் தான், நேரமில்லை என்றேன். கஷ்டப்பட்டு நேரம் செலவழிச்சு பதிவர்களை அறிமுகப்படுத்தறீங்க, உங்களை மதிச்சு இங்க வந்து கமென்ட் போடுறவங்களுக்கு என்ன மரியாதை என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருக்குத் தெரியும், நான் என்ன வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று. இருந்தாலும் அவர் கேட்டது நியாயமான கேள்வி தான். பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் தான், ஆனால் நன்றியையே பலவிதமாகச் சொல்லவேண்டுமே.
இங்கே வரும் பின்னூட்டங்களை கவனிக்காமலில்லை. கைபேசியில் உடனுக்குடன் பார்த்துவிடுகிறேன். எந்தெந்தப் பதிவுக்கு யார் என்ன பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள் என்று என்னால் தூக்கத்திலிருந்து எழுந்து கூட சொல்ல முடியும். பின்னூட்டங்களைப் பதிவு செய்யுங்கள். பதில் சொல்லவில்லை என்பதற்காக கோபித்துக்கொள்ள வேண்டாம்.
--------------
தொடர்ந்து எழுதுபவர்களில் மேலும் சில முக்கிய பதிவர்களைப் பார்க்கலாம்.
பதிவர் புதுவை வேலு அவர்கள் குழல் இன்னிசை என்னும் வலைப்பூவில் எழுதிவருகிறார். நிறைய பதிவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட எல்லா வலைப்பூக்களிலும் இவரது பின்னூட்டங்களைக் காணலாம். இவருடைய பதிவுகள் சில:
கூட்டாஞ்சோறு என்னும் வலைப்பூவில் எழுதி வரும் செந்தில் குமார் தெரியாத நிறைய விஷயங்களைத் தொகுத்துத் தருகிறார். சமீபத்தில் தான் அவரது வலைப்பூவைப் பார்த்திருந்தேன். குறுகிய காலத்துக்குள் நூறு பதிவுக்கும் மேல் எழுதிவிட்டார். இன்னதென்றில்லாமல் அனைத்து பதிவுகளையுமே சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார்.
பரதேசி @ நியூயார்க் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் ஆல்பி அவர்கள் பதிவை சுவாரஸ்யமாக எழுதுவதில் வல்லவர். கூர்ந்து கவனித்தால் தெரியும் - கொஞ்சம் மெல்லிய நகைச்சுவை இழையோடும் இவரது பதிவுகளில். இசையும் அனுபவப் பதிவுகளும் வெகு சுவாரஸ்யம்.
எண்ணங்கள் என்னும் வலைப்பூவில் எழுதிவரும் கீதா சாம்பசிவம் அவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அனுபவங்களை ரசனையுடன் சொல்வது அவரது இயல்பு. எப்போதுமே உற்சாகமாக எழுதுவது எப்படி என்று இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
வற்றா நதி படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தான் கார்த்திக் புகழேந்தி. மிகப் பெரிய ஆளெல்லாம் இல்லை, சின்ன வயசு தான். மாதம் இரண்டு மூன்று பதிவுகள் மட்டுமே எழுதினாலும் ஒவ்வொன்றும் மண் மணம் மணக்கும் மணி முத்துக்கள். இவரது தளத்தில் இணைந்திடுங்கள், தொடர்ந்து வாசியுங்கள்.
தொடர்ந்து எழுதாதவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் இருக்கலாம். உண்மையிலேயே காரணங்கள் தானா அல்லது சப்பைக்கட்டா என்பது அவரவர்க்குத் தெரிந்திருக்கும். எனக்கும் காரணம் இருக்கிறது. தினமும் காலை எட்டு மணி அல்லது எட்டேகால் மணிக்குப் புறப்பட்டு மகனையும் மகளையும் பள்ளியில் விட்டுவிட்டு வேளச்சேரிக்குச் சென்று வண்டியை நிறுத்திவிட்டு எட்டு ஐம்பது மணி ரயிலைப் பிடித்தால் ஒன்பதரை மணிக்கு மயிலாப்பூர் அலுவலகத்துக்குச் சென்றுவிடலாம். மாலை ஐந்தரை மணிக்கு முடியும் என்றாலும் ஆறு மணிக்குக் குறைந்து வெளியேற முடியாது. ஆறு மணிக்குக் கிளம்பினாலும் வீடு வந்து சேர்வதற்குள் ஏழு மணி ஆகிவிடும்.
இதெல்லாம் ஒரு காரணமா என்கிறீர்களா? இல்லை. நான் ஜப்பானிய மொழி பயில்கிறேன். வரும் ஐந்தாம் தேதி அதற்கான தேர்வும் நடைபெற இருக்கிறது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் வகுப்பு நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரையும் ஞாயிறன்று காலை ஒன்பது மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் வகுப்புகள் இருக்கும். நல்ல வேளையாக சனிக்கிழமை மதியத்துக்குப் பின்னான வகுப்பு என்பதால் பிரச்சனையில்லை. எனக்கு சனிக்கிழமை மதியம் இரண்டு மணி வரை மட்டுமே அலுவலகம். முழு வேலை நாளாக இருந்திருந்தால் ஞாயிறு மட்டும் நடைபெறும் வகுப்பில் சேர்ந்திருக்கவேண்டும். இதில் சேர்ந்திருந்தால் அடுத்த மாதம் தேர்வு எழுத முடியாது. டிசம்பர் மாதத்தில் தான் எழுத முடியும்.
நம்மைப் பொறுத்தவரையில் ஜப்பானிய மொழி கொஞ்சம் கடினமான மொழி. ஆங்கிலேயர்களுக்கு மிக மிகக் கடினமான மொழி. தினம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்கள் செலவழித்தாலேயொழிய புரிந்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் கடினம். தொடங்கிய புதிதில் கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருந்த நான் சில நாட்களில் இம்மொழியின் கடினத்தை உணர்ந்துகொண்டதும் சீரியசாகப் படிக்கத் தொடங்கிவிட்டேன். மொழி பயில்வதற்காக செலவு செய்யப்படும் நேரமும் என்னை வலைப்பக்கத்திலிருந்து தள்ளிவைத்திருக்கிறது.
இந்த மொழி பயில்வதற்குத் தூண்டியவர் ஒரு வலைப்பதிவர் தான். அபயா அருணா என்ற பெயரில் எழுதிவரும் திருமதி.உமா மகேஸ்வரி அம்மா அவர்கள் தான். சென்னையில் தான் வசிக்கிறார். போனில் பலமுறை பேசியிருக்கிறேன், இருந்தாலும் இது வரை நேரில் சந்தித்ததில்லை. இந்தப் பதிவை பப்ளிஷ் செய்ததும் அழைக்கலாம் என்றிருக்கிறேன். இவரும் எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. இவருடைய பதிவுகளில் எனக்குப் பிடித்தவை:
இவரது பதிவுகளில் சென்று மீண்டும் எழுத வருமாறு அழையுங்கள்.
தொடர்ந்து உற்சாகமாக எழுதி வருபவர்களில் முக்கியமானவர் தளிர் சுரேஷ் அவர்கள். இவருடைய பாப்பா மலர், ஹைக்கூ கவிதைகள் மற்றும் நகைச்சுவைப் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை. பின்னூட்டங்கள் வருகின்றனவோ இல்லையோ - எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறார். இவருடைய வலைப்பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
எப்போதாவது எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் பதிவர் சீராளன். அக்கினிச்சுவடுகள் என்னும் வலைப்பூவில் கவிதைகள் மட்டுமே எழுதிவருகிறார். நம்முடைய பின்னூட்டங்கள் இவரைத் தொடர்ந்து எழுதச் செய்யட்டும்.
புத்தம் புதிய பதிவர் ஒருவரைப் பார்க்கலாமா? நண்பர் ப்ரீத்தம் கிருஷ்ணா முகநூலில் தீவிரமாக இயங்கி வருபவர். அங்கே வெளியிடும் சில பெரிய பதிவுகளை தனது ப்ரீத்தம் கிருஷ்ணா என்னும் வலைத்தளத்திலும் அவ்வப்போது வெளியிடுபவர். சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளே அதிகம் எழுதுகிறார். எல்லா பதிவுகளையும் முகநூலிலேயே படித்துவிடுவதால் நான் அதிகம் இவரது தளத்துக்குச் செல்வதில்லை. இவருடைய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
நேற்றைய தினம் படிக்கும் வேலை இருந்ததால் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தும் வலைச்சரத்துக்கு எழுத முடியவில்லை. அதில் வருத்தம் இருந்தாலும் நிறைய பாடங்களைப் படித்ததில் திருப்தி ஏற்பட்டுவிட்டது.
நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் - ஒரு பதிவு எழுதினால் அன்றைய தினம் மட்டும் ஐநூறு பேர் வருவார்கள். அடுத்த நாள் இருநூறு பேரும் எழுதாத மற்ற நாட்களில் சராசரியாக நூறு பேரும் வந்துகொண்டிருந்தார்கள். இப்போது ஒரு பதிவு எழுதினால் அன்றைய தினம் முன்னூறு பேர் மட்டுமே வருகிறார்கள். எழுதாத மற்ற நாட்களில் ஐம்பது பேர் வந்தாலே பெரிய விஷயம். சொல்லப்போனால் தொடர்ந்து எழுதாத காரணத்தால் பல வாசகர்களை இழந்துவிட்டேன் என்பது தான் உண்மை. ஏதோ ஒரு ஊரிலிருந்தோ பெயர் தெரியாத நாட்டிலிருந்தோ யாரோ ஒருவர் அலைபேசியில் அழைத்து "உங்க பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று சொல்லும்போது கிடைக்கும் ஆனந்தம் அலாதி.
தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் பதிவர் துளசி கோபால் அவர்கள். பல வருடங்களாக இவருடைய பதிவுகளைப் படித்து வந்தாலும் நேரில் சந்தித்தது என்னவோ கடந்த ஆண்டு மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் தான். இவர் எழுதிய "அக்கா" வாங்கி ஆறு மாதத்துக்கும் மேலாகிறது. இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. இவரது எழுத்துக்கள் உரைநடையாக இல்லாமல் பேச்சு வழக்கில் இருக்கும். சமீபத்தில் எழுதிய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
தொடர்ந்து உற்சாகமாக எழுதி வருபவர்களில் அடுத்ததாக விசுAwesomeமின் துணிக்கைகள் என்னும் தளத்தில் எழுதிவரும் RJ விசு அவர்கள். இவர் எழுதிய விசுவாசமின் சகவாசம் புத்தக வெளியீடு கடந்த ஆறாம் தேதி வேலூரில் நடைபெற்றது. அன்றைய தினம் என்னுடைய திருமண நாள் என்பதாலும் வகுப்பு இருந்ததாலும் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. இவரது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வந்தாலும் கருத்துரை இட்டதில்லை. இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
மதுரைத்தமிழன் என்றால் பதிவர்களில் அறியாதவர்களே இருக்கமாட்டார்கள். காரணம், ஒவ்வொரு பதிவரையும் அன்பாகக் கலாய்ப்பதும் பதிலுக்கு நாம் கலாய்த்தால் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்வதும் இவரது சுபாவம். தவிர, அரசியல் நையாண்டி பதிவுகள் இவரைப்போல் யாராலும் எழுதமுடியாது. போட்டோஷாப்பிலும் பலே ஆள். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவர் இந்தியாவுக்கு வரும்போது கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளிடமும் அடி வாங்குவது உறுதி என பலரும் பின்னூட்டத்தில் தெரிவிப்பதுண்டு. மிக சமீபத்தில் இவர் தமிழகம் வந்திருந்தார். பதிவர் விசு அவர்களின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டார். மதுரைத்தமிழனிடம் போனில் உரையாடும் வாய்ப்பு மட்டுமே கிட்டியது. இவரது பதிவுகளில் என்னைக் கவர்ந்தவை:
நல்ல உணவு வகைகளையும் வித்தியாசமான உணவுகளையும் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து ருசி பார்க்கும் பதிவர் ஒருவர் இருக்கிறார். அவர் கடல்பயணங்கள் என்னும் தளத்தில் எழுதிவரும் திரு.சுரேஷ் குமார். கடைக்கு தேநீர் அருந்துவதற்காக வெளியே சென்றவர் நல்ல தேநீரை சுவைக்க கொஞ்சம் கொஞ்சமாக கேரளா வரை சென்றுவிட்டவர். விதம் விதமான ஹோட்டல்களையும் சாப்பாடு வகைகளையும் ருசி பார்ப்பவர். ஹோட்டல் மட்டுமின்றி சிறு பிள்ளையாவோம் என்ற தலைப்பில் எழுதும் பதிவுகள் நம்மை இருபது இருபத்தைந்து வருடங்கள் முன்னர் இழுத்துச் செல்லும். இவரது சமீபத்திய பதிவுகளில் எனக்குப் பிடித்த சில
சுந்தரமூர்த்தி என்னும் பெயரில் முகநூலில் இருக்கிறார். செல்லா என்னும் பெயரில் வலைப்பூவில் எழுதிவருகிறார். சுவாரஸ்யமான கவிதைகளும் சில கதைகளும் எழுதியிருக்கிறார். இதுவரை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறாரா தெரியவில்லை. நிறைய பதிவுகள் எழுதியிருந்தாலும் ஏனோ பின்னூட்டங்கள் அதிகம் வந்ததில்லை. இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்ப்போமே! தொடர்ந்து எழுதுபவர்கள் சிலரே. தொடர்ந்து எழுதுபவர்கள் என்பதில் தினமும் எழுதுபவர்கள் மட்டுமல்ல, வாரம் ஓரிரு பதிவுகள் எழுதுபவர்கள், மாதம் இரண்டு மூன்று பதிவுகள் எழுதுபவர்களும் அடக்கம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வலைப்பதிவுகளில் கோலோச்சிய சில பதிவர்கள் கடந்த சில மாதங்களாக ஒன்றுமே எழுதாமல் இருக்கிறார்கள். வேலைப்பளு, நேரமின்மை எனப் பல காரணங்கள் கூறினாலும் அவர்களுக்கு சோம்பல் மற்றும் எழுதுவதற்கான உற்சாகமான மனநிலை இல்லை என்றே சொல்லலாம்.
இவர்களில் முக்கியமான ஒருவர் வாத்தியார். திரையுலகின் வாத்தியார் எம்.ஜி.ஆர். என்றால் வலையுலகின் வாத்தியார் எங்கள் பாலகணேஷ் அவர்கள் தான். அவரின் மின்னல் வரிகள் தளத்தில் பின்னூட்டம் இடுவதற்குப் பலமுறை போட்டி கூட நடந்திருக்கிறது. அவருடைய தளத்தைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்குத் தெரியும். அவருடைய சரிதா கதைகள், மொறுமொறு மிக்சர் உள்ளிட்ட பதிவுகளுக்கும் ஹாஸ்யமான எழுத்து நடைக்கும் பலர் அடிமை. இப்போது சில மாதங்களாக எழுதுவதே இல்லை. கேட்டால் இந்த வேலை இருக்கிறது, அந்த வேலை முடியட்டும், அதன் பின்னர் ஆரம்பிக்கிறேன் என்று சாக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்.
நான் பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் தனிப்பதிவில் எழுதியும் அவரை எழுத வருமாறு கேட்டுப் பார்த்துவிட்டேன். இப்போது வலைச்சரம் வாயிலாகவும் கேட்கிறேன். வாருங்கள் வாத்தியாரே! வலைச்சர வாசகர்களும் கேளுங்கள்.
யார் எழுதுகிறார்கள் என்று தலைப்பிட்டு தற்சமயம் எழுதாதவரை அறிமுகப்படுத்தி விட்டேன். ஆமாம், யார் எழுதுகிறார்கள்? எல்லாருமே உற்சாகமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். முகநூலில் சிலர் மூழ்கிவிட்டதால் இங்கே எழுதுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார்கள். தொடர்ந்து எழுதிவருபவர்கள் சிலரைப் பார்க்கலாமா?
அடுத்தது எங்கள் ப்ளாக் என்னும் வலைப்பூ. இது தனி நபர் வலைப்பூ இல்லை என்றாலும் ஸ்ரீராம் சார், கௌதமன் சார் ஆகியோர் உற்சாகமாக எழுதிவருகிறார்கள். சில சமயங்களில் ஒரே ஒரு படம் மட்டும் பதிந்து பின்னூட்டங்களை அள்ளிச்செல்பவர்கள். வெள்ளிக்கிழமை வீடியோ மற்றும் அலுவலக டார்ச்சர் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்த வலைப்பூவில் சில:
அடுத்தது சும்மா எனும் வலைப்பூவில் எழுதிவரும் தேனம்மை லட்சுமணன் அவர்கள். செட்டிநாட்டு வீடுகளாகட்டும், புத்தக அலசல்களாகட்டும், பயணக் கட்டுரைகளாகட்டும், சமையல் குறிப்பு, கோலங்கள் எல்லாவற்றிலும் வெளுத்துக்கட்டுபவர். இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
நம் புலவர் திரு.ராமானுஜம் ஐயா அவர்கள் எழுதிவரும் கவிதைகள் அனைவரும் அறிந்ததே. அவருக்கு இப்போது வயது எண்பதுக்கும் மேல். இந்த வயதிலும் தனது உடல் நலனையும் பொறுத்துக்கொண்டு தவறாது கவிதைகள் எழுதிவருகிறார். பின்னூட்டங்கள் தான் தன்னை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதாக ஒரு நாள் நேரில் பார்த்தபோது சொன்னார். அவரது கவிதைகளில் சில:
புத்தம் புதிய வலைப்பதிவர் ஒருவரைப் பார்க்கலாமா? முகநூல் நண்பர் செல்ல பாண்டியன். பெங்களூருவில் வசித்துவரும் இவரது வலைப்பூ The Tramp Times தற்போது தான் அறிமுகமானது. என்னுடைய பதிவுகளை யார் படிக்கப் போகிறார் என்று அங்கலாய்த்திருந்தார். நாமும் நமது பின்னூட்டங்களை அளித்து அவரை உற்சாகப்படுத்துவோம். இவரது தளத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளன. வலைச்சித்தர் உதவுவார் என்று நம்புவோம். இவர் எழுதிய பதிவுகளில் சில:
அனைவருக்கும்
வணக்கம். இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்பதில் எனக்கு நிறைய
மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாய்ப்பு
கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டேன் என்று நிச்சயமாகச்
சொல்லலாம். ஏற்கனவே வலையுலகில் நிறைய நண்பர்கள் இருந்தாலும் வலைச்சரம் வாயிலாக
இன்னும் பலரையும் காண்பதில் / காணப்போவதில் மிக்க மகிழ்ச்சி.
முதல்
நாள் சொந்தப் பதிவுகளை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்பதால் கடந்த வலைச்சரப்
பணிக்குப் பின் எழுதிய சில பதிவுகளை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
நம்மில்
பலர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்கிறோம். தொப்பையைக் குறைக்க, சர்க்கரை
அளவை கட்டுக்குள் வைத்திருக்க, கொழுப்பைக் குறைக்க, உடல்
உறுதி பெற என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் நாம் இப்படி மாங்கு மாங்கென்று
நடக்கிறோமே, நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்?
நாம் நடந்ததற்கு ஒரு அளவு சொல்ல முடியுமா? முடியும்
என்கிறது இந்த ஆண்டிராய்டு அப்ளிகேஷன்.
சென்னையிலேயே
மிகப்பெரிய ஹோட்டல் இதுதான். ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இது கிண்டி ஸ்பிக்
வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ளது. இனி வரும் காலங்களில் சோழா ஹோட்டலுக்கு
எதிரே ஸ்பிக் பில்டிங் அமைந்துள்ளது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் ஒருநாள் மதியம்
சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றிய பதிவு.
மின்னணு
சாதனங்கள் மனிதனை ஆக்கிரமித்திருக்கும் இந்த காலகட்டத்தில் இதனை எதிர்த்து ஒரு
பதிவு எழுதியிருக்கிறேன். படியுங்கள். கடைசியில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.
தாத்தா
பற்றிய பதிவும் ஆச்சி பற்றிய பதிவும் அதிக வரவேற்பைப் பெற்றன.
என்
தாத்தாவை எனக்கு எப்போதிலிருந்து பரிச்சயம் என்று தெரியாது. ஆனால் அம்மா
சொல்லுவார், நான் பிறந்ததும் முதல்முறையாக என் தாத்தாவின் கையில் தான்
கொடுக்கப்பட்டேன் என்று. என்னைக் கையில் வாங்கியதும், "பேரப்புள்ள"
என்று மகிழ்ந்து கொஞ்சியவர். அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தான் முதல் பேரக்குழந்தை
என்பது கூட காரணமாக இருக்கலாம்.
அந்த
சனிக்கிழமை இரவு ஒன்பது முப்பது மணிக்கு அம்மாவிடமிருந்து போன். "கோமதி ஆச்சி
போய்ட்டாங்க சரவணா" அம்மாவின் கண்களில் கண்ணீர் உகுத்திருப்பது குரலில்
தெரிந்தது. "என்னம்மா ஆச்சு?" மீதி
விவரங்களைக் கேட்டுக்கொண்டேன்.
சும்மா
ஹோட்டல், சினிமா, அனுபவம் என்று எழுதிக் கொண்டிருந்த எனக்கு சிறுகதைகள் எழுதும்
ஆசை வந்திருக்கிறது. சிற்சில கதை எழுதியிருக்கிறேன். சிலவற்றுக்குப் பாராட்டும்
சிலவற்றுக்குத் திட்டும் வாங்கியிருக்கிறேன்.
பாராட்டு
பெற்ற சிறுகதைகள்
அவள்
பெயர் நான்சி. அவளுடன் வாக்கிங் வருபவர் அப்படித்தான் அழைப்பார். தினமும் காலை ஆறு
மணிக்கெல்லாம் அவருடைய குரலைக் கேட்கமுடியும். நான்சி எங்காவது நின்றுவிட்டால்
"நான்சி கமான்" என்பார். சாலையில் கிடக்கும் தேவையில்லாத வஸ்துக்களை
அவள் முகர்ந்தால், "நான்சி டோன்ட்" என்பார். அவளும் அவருடைய சொல்பேச்சைத்
தட்டமாட்டாள். அவர்கள் வீடு இருக்கும் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள்
தாண்டித்தான் நான் வசிக்கிறேன். என் இருப்பிடத்தைக் கடந்துசென்று
தெருமுனையிலிருக்கும் கடையில் அவர் தினமும் தேநீர் குடிப்பார். நான்சிக்கு பிஸ்கட்.
நான்
இப்போது மீனாட்சியைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். தேடி என்றால் காணவில்லை
என்று பொருள் கொள்ளவேண்டாம். அவள் இங்கேயே தான் இருக்கிறாள். எனக்காகவே
காத்திருக்கிறாள். கொஞ்சமல்ல, பதினேழு வருடங்களாய்.
கொஞ்சம்
தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர்,
"தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன்.
போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே
நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு
மரக்கிளையை செருகியிருந்தார்கள்.
அலுவலகம்
முடிந்து வெளியே வந்தபோது மணி பத்தைக் கடந்திருந்தது. நான் எப்போதெல்லாம் ஊருக்குப்
போகவேண்டும் என்று திட்டமிடுகிறேனோ அப்போதெல்லாம் ஏதாவது முக்கியமான வேலையில்
மாட்டிக்கொள்கிறேன்.
இந்தக்கதையை
நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரம் நான் இறந்துபோயிருப்பேன். காரணம் -
விரக்தி. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன விரக்தி என்று கேட்கிறீர்களா?
மேற்கொண்டு படியுங்கள்.
இயக்குநர்
கேபிள் சங்கருடைய தொட்டால் தொடரும் திரைப்படம் வெளியாகவிருந்த சமயத்தில் அவர் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, "தொட்டால் தொடரும்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு
நிமிடத்தில் ஒரு நல்ல கருத்துள்ள குறும்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையொட்டி என் மனதில் தோன்றிய ஐடியா ஒன்றை நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க,அவருக்கும் இது பிடித்துப் போனது. அவ்வகையில் நான் எடுத்த குறும்படம் - தொட்டால் தொடரும்.
சுய
அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். நாளை முதல் பதிவர் அறிமுகம் தொடங்குகிறேன்.
நான் எழுதிய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். தங்களுடைய கருத்துக்களையும்
விமர்சனங்களையும் அந்தந்தப் பதிவிலோ அல்லது இங்கேயே பின்னூட்டத்திலோ சொல்லுங்கள்.
கவிஞர்களை மட்டும் நம்மால் ஒரே நாளில் அறிமுகப்படுத்திவிட முடியாது. இதோ, வலைச்சர நிறைவு நாளில் கலக்கல் கவிஞர்களின் அணிவகுப்பு.
கோவை மு சரளா
சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களாகியும் இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை வரிசைப்படுத்திக் கூறிவிட்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கிறார், சகோதரி சரளா.
ஒரு பெண்ணுக்கான அறிவுரையாக வரும் பெயர் சூட்டப்படாத இக்கவிதை அவள் ஏமாறுவது முகம் தெரியாதவர்களிடம் அல்ல, நன்கு பழகக்கூடிய உடனிருப்பவர்களே என்று கூறுகிறார்.
இன்று நம் பதிவர்கள் அனுபவம் என்ற பெயரில் எழுதியவற்றைப் பார்க்கலாம்.
திருச்சியைச் சேர்ந்த வினோத் என்கிற புதிய பதிவர் வெட்டிப்பயல் என்ற பெயரில் எழுதிவருகிறார். அவரது ஸ்படிக மாலை வாங்கிய அனுபவம். வலைப்பூ தொடங்கி நான்கு மாதங்களில் நான்கு பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார், வாருங்கள் அவரை உற்சாகப்படுத்துவோம்.
நெல்லை நண்பன் என்ற பெயரில் எழுதிவரும் திரு.ராம்குமார் அவர்கள் விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகாதபோது ஆந்திர மாநிலத்துக்குச் சென்று பார்த்துவந்த அனுபவத்தை சுவாரஸ்யமாக சொல்கிறார் பாருங்கள்.
பெருமாள் முருகன் என்னும் வலை நண்பர் கடந்த மூன்றாண்டுகளாக பதிவெழுதி வருகிறார். தமிழாசிரியரான இவர் இலக்கணம் கற்பித்த அனுபவம் எழுதியிருக்கிறார் பாருங்கள்.
நமக்கு "உட்கார்ற இடத்துல" கட்டி வந்தா என்ன செய்வோம்? நானாக இருந்தால் உடம்பு சரியில்லைன்னு சாக்கு மட்டும் சொல்வேன், நம் பதிவுலகின் ரெமோ மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களின் கட்டி உடை(த்)ந்த அனுபவம் இது. எவ்வளவு சுவையாக சொல்லியிருக்கிறார் பாருங்கள், கூடவே பின்னூட்டங்களையும் கவனிக்கவும்.
பதிவுலகின் காதல் மன்னனான இவரைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி இருந்தவர்கள் கூட இவரது காதல் கடிதம் பரிசுப்போட்டியின் மூலம் அறிமுகம் ஆகிவிட்டார்கள். இவரது சிறுகதைகளும் மனதைத் தொடும் வகையில் இருக்கும். இன்று பிறந்த நாள் காணும் இவரை வலைச்சரம் வாயிலாக வாழ்த்துவோம்.
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். இன்றைய கலக்கல் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் முன் ஒரு சிறு விஷயம். ஹீரோ என்பவர் யார்? சினிமாவில் நாற்பது அடியாட்களை ஒரே நேரத்தில் அடித்து துவம்சம் செய்து நம்மைக் கிறங்கடிப்பவரா? ஆனால் அவர்களைத்தான் நாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம். நிஜ ஹீரோ என்பவர் கடும் குளிரிலும் மழையிலும் சிரமம் பாராது நமக்காக எல்லையில் காவல் காக்கும் வீரர்கள் தானே? இவர்கள் இல்லையென்றால் நாமெல்லாம் நிம்மதியாக வீட்டில் உறங்க முடியுமா? எத்தனை முறை தீவிரவாதிகளின் ஊடுருவல், அண்டை நாட்டு ராணுவத்துடன் சண்டை என்று செய்தித்தாள்களில் வாசிக்கிறோம்? இந்தப் பிரச்சனைகளில் தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொண்டவர்கள் எத்தனை எத்தனை பேர்? இந்த சுதந்திர நாளில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து காவல் காக்கும் நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
நம் பதிவுலகிலும் ஒரு ஹீரோ இருக்கிறார். அவர் திரு.சதீஷ் செல்லத்துரை அவர்கள். எல்லை பாதுகாப்பு படையில் இருக்கும் அவர் நேரம் கிடைக்கும்போது பதிவு எழுதிவருகிறார். இந்த சுதந்திர நாளில் அவரது படைப்புகளை இங்கே அறிமுகம் செய்வதில் பெருமைகொள்கிறேன்.
இவரது பதிவில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோடு பற்றியும் வேலிகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார். பைனாகுலரில் செல்போன் கேமரா கொண்டு பாகிஸ்தானின் observation point-ஐ படம் பிடித்திருக்கிறார். அப்படியே இவர் வேலை செய்யும் அலுவலகத்தையும் பாருங்கள்.
கண்ணதாசன் என்ற பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ, தினம் தினம் கவிதைகளை எழுதித் தள்ளுகிறார். அத்தனையும் எதுகை மோனையுடன் நயம். இணைய எழுத்தாளர் என்பதையும் மீறி இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். இவரது கவிதைகளில் சில..
சொல்லாடல் என்றால்? எழுத்து நடையில் நம்மை இழுத்துச்செல்லும் தன்மை, வார்த்தைப் பிரயோகங்களில் புதுமை, கடினமான வார்த்தைகளைக் கொண்டு ஆடும் விளையாட்டு என்று சொல்லலாம் தானே. இப்படிப்பட்ட சொல்லாடல் வித்தகர்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.
1. அரசன்
இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிகம் கவிதைகள் மட்டுமே எழுதி வரும் இவர் சமீபத்தில் திடங்கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் எழுதிய கடிதத்தில் வரும் சொல்லாடல்கள்:
நான்குவரிகள் கூட கோர்வையாய் சேராமல், பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன. எங்கோ வெறித்து, எதையோ சிந்திக்க ஏதோ மனதில் உதிக்க, இப்படி சில நிலைகளை கடந்து தான் உன் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது இக்கடிதம்! சிரிக்காதே பவி, இந்த தெத்துப் பல் தான் என் சமீபத்திய தூக்கங்களை தின்று கொண்டிருக்கின்றது!
2. சேட்டைக்காரன்
சேட்டைக்காரன் வார்த்தை ஜாலத்தில் சேட்டை செய்கிறவர். இவர் எழுதும் நகைச்சுவைக் கட்டுரைகளைப் படிப்பவர்கள் வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியாது. அப்படி நகைச்சுவை ததும்ப எழுதிய பதிவு இது
காலையில் திருவல்லிக்கேணி புளியோதரை மாதிரி காரசாரமாக இருந்த ஜி.எம்.கமலக்கண்ணன், திடீரென்று திருப்பதி லட்டுபோல தித்திப்பாகப் பேசியது வீரபாகுவின் குழப்பத்தை அதிகரித்தது. அவனது கண்கள் மனைவி செய்து அனுப்பிய மைசூர்பாகை, அரசாங்க மருத்துவமனை நர்ஸ் கையிலிருக்கும் ஊசியைப் பார்ப்பதுபோல கலவரத்துடன் வெறித்துக் கொண்டிருந்தன.
3. கே.ஆர்.பி.செந்தில்
இவர் அனுபவப் பகிர்வு, கவிதை, சிறுகதை என்று எழுதி வருகிறார். இவரது சொல்லாடல்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். சில கட்டுரைகளை இரண்டாம் முறை படிக்கும்போது தான் புரியும். அப்படிப்பட்ட சொல்லாடல் வித்தகரின் பதிவு
அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம் என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன். மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடானான உறவில் இருந்து பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையை பிடிக்கும் உத்வேகத்தை அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடி அக்குடையை அடைந்த கணத்தில்தான் நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது.
4. பிரபாகரனின் தத்துபித்துவங்கள்
இவர் பெரும்பாலும் சினிமா, அனுபவம் என்று எழுதி வருகிறார். இவரது சொல்லாடல்கள் மிகவும் ரசிக்கும்படி இருக்கும். சமீபத்தில் இவர் கஜுரா என்ற இனிப்பு பண்டத்தை இவர் சுவைத்த அனுபவத்தை எப்படி சிலாகித்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.
டீ சொல்லிவிட்டு சட்டென திரும்பியபோது தான் அந்த காக்கி நிற வஸ்து என் கண்களில் பட்டது. அதற்கு கஜூரா என்று பெயர். முதலில் கஜூராவின் குணநலன்களை ஒப்பித்துவிடுகிறேன். கஜூரா கிட்டத்தட்ட சதுர வடிவத்தில் இருக்கும், சமயத்தில் மாஸ்டரின் கைவண்ணத்தை பொறுத்து வடிவம் மாறுபடும். போண்டாவை போலவே கஜூராவும் ஒரு இனிப்பு பண்டம். எனினும் போண்டாவைக் காட்டிலும் திடமானது. ஒரு கஜூராவை கையில் எடுத்தால் சாப்பிட்டு முடிக்க பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். நிற்க. என்னைப் போன்ற திறன் படைத்தவர்கள் இரண்டு நிமிடங்களிலேயே கூட தின்று முடிக்கலாம்.
5. ஜீவன்சுப்பு (வண்ணத்துப்பூச்சி)
கோவையைச் சேர்ந்த இவர் பெரும்பாலும் சொந்த அனுபவங்களையும் மற்ற விஷயங்களில் தன் சொந்தக் கருத்துக்களையும் எழுதுகிறார். சமீபத்தில் தன் மாமியார் இறந்தபோது பின்னிரவில் பயணப்பட்ட அனுபவத்தை சொல்கிறார். துக்கமான விஷயமாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் இவருடைய சொல்லாடல் அருமையாக இருக்கும்
மத்தியான வெயிலில் மைத்துனன் சாலையில் புரண்டு அழுகின்றான் அம்மா வேண்டுமென்று , என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவில்லை . ஆறுதல் சொல்கிறேனென்று ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்தேன் . நான் பிதற்றியது எனக்கே புரியவில்லை பாவம் அவனுக்கெங்கே புரிந்திருக்கும் . அழாதேப்பா என்று ஆளாளுக்கு அறிவுரை சொன்னார்கள் . என்னால் அறிவுரை சொல்லவும் முடியவில்லை , ஆறுதல் சொல்லவும் முடியவில்லை , அழுகட்டும் அழுது தீர்க்கட்டும் என்று அமைதியாக அவனை அணைத்துக்கொண்டேன் . அரவணைப்பைவிட சிறந்த ஆறுதல் வார்த்தை இருப்பதாக எனக்கு தெரியவில்லை .
6. மலரின் நினைவுகள்
சேலத்தைச் சேர்ந்த திரு. மலர்வண்ணன் என்பவர் மலரின் நினைவுகள் என்ற பெயரில் எழுதி வருகிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் தன் மனைவியுடன் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன அனுபவத்தை எப்படிச் சொல்கிறார் பாருங்கள். அதிசிறந்த சொல்லாடல் இல்லையென்றாலும் எழுத்து நடை ரசிக்கவைக்கிறது. படித்துப்பாருங்கள்.
Master check-up offer ஒருத்தருக்கு 2000 ரூபாய். ஆடி மாசம், ஜோடியா வந்தா ஏதும் discount உண்டா எனக் கேட்கத் தோன்றி அடக்கிக் கொண்டேன். ஒரு மாறுதலுக்கு பெயர் கொடுப்பது, பணம் கட்டுவது, ரசீது வாங்குவது, ஒவ்வொரு பரிசோதனைக்கும் எங்கெங்கு செல்வது, யாரைப் பார்ப்பது போன்ற அனைத்து வேலைகளையும் அம்மணியே செய்தார். சாதாரண நாட்களில் ஹோட்டலில் உப்பு வேண்டுமென்றால் கூட சர்வரிடம் நான் தான் கேட்டு வாங்கித் தர வேண்டும்.
7. கூடல் கூத்தன்
மதுரையைச் சேர்ந்த ராகவன் என்னும் இவர் கென்யாவில் வசித்து வருகிறார். அங்குள்ள இரண்டு இன மக்களின் வாழ்வை அலசும் இந்தப் பதிவு.
காய்ந்தஓடுகளாய்விளைநிலங்கள்அல்லதுகருகித்தீய்ந்தமேய்ச்சல்நிலங்கள்,ஒற்றைநீர்த்துளிகிடைத்தால்போதும்சிலிர்த்துமுளைக்கும்புற்கள். விவசாயவிளைநிலங்களும், மேய்ச்சல்நிலங்களுக்கும்நீராதாரபகிர்விற்கானநாவுகளைஎப்போதும்தாகத்துடன்வைத்திருக்கின்றன. மழைபெய்யும்காலங்களில்அதிகமழையும், மற்றநேரங்களில்வறண்டவானிலையும்இருந்தாலும், பசும்மரங்களும்,செடிகளும், புதர்களும்மண்டிக்கிடப்பதுஅண்டைநகரமும், சிறுகடல்தாண்டியஅண்டைநாடும்தின்றதுபோகமீதியே. 8. வண்ணதாசன் இலக்கிய உலகில் இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சமீபத்தில் நான் படித்த இவரது சிறுகதை உங்கள் பார்வைக்கு. கனியான பின்னும் நுனியில் பூ எனக்கும் மாதுளம் பழம் வாங்கத்தான் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் மாதுளம் பழத்துக்குச் சுளை இருப்பதுபோல் எட்டாக வகிர்ந்து, பூப் போல இதழ் இதழாக விரித்து நான்கு பழங்களை முன்னால் பார்வையாக வைத்துவிடுகிறார்கள். இந்த மாதுளம் பழ விதை, வெள்ளரிப் பிஞ்சு விதையை எல்லாம் இப்படி வரிசையாக அடுக்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுத்தார்கள். எனக்குத் தோன்றுவதுபோல தினகரிக்கும் தோன்றுமா? ‘யாருப்பா சொல்லிக்கொடுத்தாங்க?’ என்று அவள் என்னிடம் கேட்க வேண்டும்போல இருந்தது.
இன்றைய அறிமுகங்கள் எப்படி? கருத்துக்களை சொல்லுங்கள். அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள்.