07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label VSK. Show all posts
Showing posts with label VSK. Show all posts

Sunday, March 16, 2008

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே"

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே"

தொடுக்க முடியுமா என மலைப்பாக இருந்த வலைச்சரத்தை ஒருவழியாக கட்டிவிட்டேன். உங்களால் நிச்சயம் முடியும் என ஊக்கம் அளித்த கயல்விழி முத்துலட்சுமிக்கு எனது மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு நிலையிலும் பொறுமையாக அவர் கூட இருந்து இதைக் கட்ட உதவியதை எப்போதும் நினைவில் கொள்வேன்.

அதேபோல, முதல் பதிவு தொடங்கி, இந்தப் பதிவு வரையில் கேட்டபோதெல்லாம் பதிவர்களின் சுட்டியை அலுக்காமல் எடுத்துக் கொடுத்த கோவியாருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இவருடைய உதவி இல்லாமல் என்னால் இதை இவ்வளவு மனநிம்மதியுடன் கட்டி முடித்திருக்க முடியாது என நன்றியுடன் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த நினைவுகளுடன் மயிலையில் மாடவீதியில் சென்றுகொண்டிருந்த போது, வழக்கம் போல நாயர் கடைக்கும் சென்றேன். நானே சற்றும் எதிர்பாராத வகையில், அங்கு டீயை உறிஞ்சியபடி மயிலை மன்னார்!

"இன்னா? ஒரே நன்றிமளையில நனைஞ்சுகிட்டு வர்றமாரி இருக்கேபோல!" எனக் கிண்டலடித்தான்!

'அதெப்படி உனக்கு தெரிஞ்சுது?' என ஆச்சரியத்துடன் வினவினேன்.

"இன்னாமோ
கயல்விளி, கோவின்னு பொலம்பிகிட்டு இருந்தியே! நமக்கு பாம்பு காது சாமி! நட்பு பத்தி நான் சொன்னதைப் பதிவாப் போட்டவந்தானே நீ! எனக்கா புரியாது! வா! வந்து குந்து இந்த வடையைக் கடிச்சுக்கினே நம்ம நாயர் டீயை அடி! இப்ப இன்ன, நீ அடிக்கடி கண்டுக்கற ஆளுங்களைப் பத்தி சொல்லணும் அவ்ளோதானே! மிச்சத்த நான் சொல்லிக்கறேன்!" என்றவனை நன்றியுடன் பார்த்தேன்!

நீ இந்த மாரி வலைப்பூ எளுதறதுக்கு
அருண் வைத்தியநாதன்ற ஒருத்தர்தான் காரணம். அவர் இப்ப தமிழ்ல எளுதறதில்ல அதுனால அவரை பேரை மட்டும் சொல்லிட்டு விட்டுருவோம்! சரியா! ஆனா, அவருக்கு ஒரு 'டேங்க்ஸ்' மட்டும் சொல்லிருவோம்! மிமிக்ரில தொடங்கி இப்ப குறும்படம் என்ற நிலையையும் தாண்டி, ஒரு முழுநீள திரைப்படத்தையும் இவர் தயார் பண்றாருன்னு கேள்விப் பட்ட்டேன்! வாள்ஹ இவர் முயற்சி!

'
மொகமூடி'ன்னு ஒருத்தரு! குஜாலா எளுதுவாரு! செமையா உள்குத்து வைச்சு எளுதறதுல மன்னன்! இவரோட பதிவுல பின்னூட்டம் போடணும்னுதானே நீ வலைப்பூவே ஆரம்பிச்சே!

அப்போ, எப்படி ஒரு வலைப்பூவைத் தொடங்கறதுக்கு ஒனக்கு ஒதவி பண்ணினது
டோண்டு என்னும் ஒரு பெரியவரு.

அப்புறம் ஒனக்கு இதுல ஒதவி பண்ணி நீ இப்ப வைச்சிருக்கியே, அந்த முருகன் படத்த ஒனக்கு கொடுத்து, ஒதவி பண்ணினது
செல்வன்ற ஒரு பதிவர். புரட்சிகரமான கருத்துகளை அஞ்சாது சொல்ற ஒரு ஆளு! வேலை ஜாஸ்தியாச்சுன்னு ரொம்ப எளுதறதில்ல இவரு!

எலவசக்கொத்தனார்னு ஒருத்தர்! ஒனக்கு ரொம்பவே ஒதவில்லாம் பண்ணிருக்கார்னு அடிக்கடி சொல்லியிருக்கே! பின்னூட்ட நாயகன்னு வேற இவருக்கு ஒரு பேரு இருக்குன்னும் சொல்லியிருக்கே! ரொம்பவே சிந்திச்சு எளுதற ஆளு! அதுவே கொஞ்சம் இவரோட பதிவுக்கு ஒரு ஆபத்தான விஷயம். இருந்தாலும், அதையெல்லாம் ஒரு அட்டகாசப் பின்னூட்டம் போட்டு திசை திருப்பி ஒரு 1000, 500 பின்னூட்டம் வாங்கி சொன்னதுலேர்ந்து எங்கியோ போயி.... சரி விடு! அடுத்த ஆளைப் பாப்பம்!

அதாரு? ஆங்! ஆசான் ஆசான்னு எப்ப பாத்தாலும் சொல்லிகிட்டே இருப்பியே!
சுப்பையா வாத்தியாரு... கண்ணதாசனைப் பத்தி எளுதினாரு பாரு! அத்த அடிச்சுக்க இதுவரைக்கும் ஆரும் இல்லேன்னு அடிச்சு சொல்லுவேன் நானு! இன்னாமோ தெரியல, அத்த அம்போன்னு விட்டுட்டாரு! சோசியம்லாம் கூட எளுதறாருன்னு சொன்னேல்ல! அவரையும் தவறாம படிச்சிருவோம்!

குழலின்னு ஒருத்தரோடத்தான் நீ மொத மொதல்ல சண்டை போட்டேன்னு சொன்னேல்ல! ஒரு கொள்கை வீரன்யா அவன்! தப்போ ரைட்டோ, எடுத்த சொல்லை தாண்ட மாட்டாரு.! இவரைப் படிச்சு வைக்கறது நல்லதுன்னு நீ சொல்லியிருக்கே! சரின்னுதான் எனக்கும் படுது!

சாமி சாமின்னு அலையுற ஒனக்கு தீனி போடற மாரி
கொமரன், ரவி, ராகவன்ன்னு சில தோஸ்துங்க இருக்காங்கன்னு தெரியும்! அல்லாரும் நல்ல ஆளுங்கதான்னுன்னாலும், அப்பப்ப ஒரு கொளப்பத்துல நாம இன்னா பண்றோம்னு தெரியாம, சிலது பண்ணிடறாங்க! கீதாம்மா, வல்லிம்மா, தி.ரா.ச., ஜீவா மாரி தான் செய்ய வேண்டியது இன்னான்னு இவங்களுக்கு இன்னமும் புரியலைன்னுதான் நான் சொல்லுவேன்! ஆண்டவனைப் பத்தி புரிஞ்சுகிட்டா, நடுவுல நடக்கற எதுவும் நம்மளை உறுத்தக் கூடாது. அல்லாமே ஒரு காரண காரியத்தோடத்தான் நடக்குதுன்றது புரிஞ்சிரும். அப்ப, நாம போயி கேள்வி கேட்டுகிட்டு இருக்க மாட்டோம்! அத்தக் கேக்கறதுக்குத்தான் சாமியே சில ஆளுங்களை வைச்சிருக்காரே! பொறவால, நமக்கு எதுக்கு அந்த வேலை? ஆனாக்காண்டியும், இவிங்க பதிவெல்லாமே நல்லாத்தான் இருக்கும். படிக்கறதுக்கு சுவையாவும் இருக்கும்!

சர்வேசன்னு ஒரு ஆளு! பதிவுன்னு ஒண்ணும் ஜாஸ்தியா எளுதறதில்லியாம்! ஆனாலும், இவரு சொல்றதைப் பாக்க பலபேரு இங்க வருவாங்க! போட்டி, சர்வேன்னு எல்லாரையும் தன்கிட்ட இழுக்கற இவரை படிச்சே ஆகணும்!

வடுவூர் குமாருன்னு ஒரு எஞ்சினீயர். சிங்கப்பூர்ல இருக்காரு. கட்டடக் கலை பத்தி ரொம்ப நல்லா எளுதுவாரு. தங்கமான மனுசன்! வம்பு தும்புக்கே போவாதவரு! சுவையா இருக்கும் இவரோட பதிவுங்கல்லாம்!

துபாயிலேர்ந்து ஒன்னோட தோஸ்த்து, அதான் முந்தி ஒரு தபா இட்டாந்தியே, சுல்தான்னு ஒருத்தர், சுருக்கமா ஆனா அதே சமயம் ஆழமா நல்ல கருத்தெல்லாம் சொல்லி பதிவு போடறாரு. அவரும் ஒரு மறக்க முடியாத ஆளுப்பா! நீ கூட ஒரு தபா அவரைப் போயி பாத்தேல்லே துபாய் போயி!

அல்லாத்தியும் சொல்லியாச்சுன்னுதனே நெனைக்கறே! ஒன்னோட தோஸ்த்து கோவி கண்ணனைச் சொல்லலைன்னா, இந்த வலைச்சரம் நீ எளுதினதுக்கே அர்த்தம் இல்லே! நீ சண்டை அதிகமா போடற ஆளும் இவருதான்! சந்தோசப்படற ஆளும் இவருதான்! இவருக்கும் ஒனக்கும் இன்னா பொருத்தம்னு பல நாளு யோசிச்சிட்டு, சரி, அது நமக்கு வேண்டாத வேலைன்னு விட்டுட்டேன்! இவரு பாட்டுல்லாம் ரொம்ப கட்டுவாரு. அதான் எனக்கு பிடிச்சது! எளுத மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாராமில்ல! ஆனா, அந்த கவிதைப் பதிவுலியாவது இவரு வந்து எளுதினா நல்லதுன்னு நெனைக்கறேன்!

இத்தோட நீ ஆட்டத்த முடிச்சுகிட்டு பளையபடி, ஒனக்குத்தெரிஞ்ச வேலைக்கு போறதுதான் நல்லதுன்னு சொல்லிக்கறேன் சாமி! ' என்றான் மயிலை மன்னார்!

'அதெப்படி ஒரு குறள் கூட சொல்லாம நீ முடிக்கலாம்?' என நான் செல்லமாகக் கோபிக்க,
'அட! இதானா? அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு!


"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" [100]

ஏதோ ஒரு ஆசையில இங்க வந்து எளுதற நீ! ஒன்னால நல்லா இனிப்பா சொல்ல முடியும்னா சொல்லு. இல்லாட்டி 'கம்'முன்னு இரு. இது எப்டி இருக்குன்னா, நல்ல இனிப்பான பளம் கண்ணுக்கு எதுருல இருக்கறாப, அத்த விட்டுட்டு, புளிக்கற காயைத் தின்ற மாரின்னு ஐயன் சொல்றாரு. புரிஞ்சா சரி!" எனச் சொல்லி விடை பெற்றான் மயிலை மன்னார்!

அதுதாங்க நானும் சொல்லிக்கறேன் உங்க எல்லாருக்கும்! சந்தோஷமா இருக்கத்தான் இந்த வலைப்பதிவுக்கு வந்திருக்கோம்! இங்க இருக்கற நேரத்தில் எல்லாரையும் மகிழ்த்தி, நல்ல கருத்துகளைச் சொல்லி, இங்கு வருபவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்க வைக்க வேண்டியது உங்கள் கடமை எனச் சொல்லி எனக்கு இந்த நல்வாய்ப்பினை அளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.

நன்றி.
வணக்கம்.
முருகனருள் முன்னிற்கும்!


மேலும் வாசிக்க...

Saturday, March 15, 2008

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள"

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள !!"

இது பெண்கள் மாதம்!

எல்லாத் துறைகளிலும் தங்கள் முத்திரையைப் பதித்துவரும் பெண்கள் வலைப்பூக்களையும் விடவீல்லை! வலைத்தளத்தில் தங்கள் பூக்களை விரித்து மணம் பரப்பி வரும் பெண் பதிவர்களைப் பற்றி எழுத எண்ணினேன்! யாரைச் சொல்வது, யாரை விடுவது என ஒரே குழப்பம்! பாரபட்சமின்றி எல்லாரையும் எழுதலாம்னு பார்த்தா, இன்னிக்கு பூரா எழுதிக்கிட்டே இருக்கணும்! எனவே, இதோ நான் படிக்கும் ஒரு சில பெண் பதிவர்களைப் பற்றிய சிறு குறிப்பு!

"கயல்விழி முத்துலட்சுமி"
இனிய நல்ல பதிவர்! இவர் தொடாத தலைப்பே இல்லை! ஆனாலும் அடக்கமானவர்! பன்முகம் கொண்ட இவர் எல்லார்க்கும் நல்லவர்! திரைக்குப் பின்னால் இருந்து இவர் ஆற்றிவரும் பணி அளப்பரியது! எனக்கு இவர் செய்திருக்கும் உதவிகள் என்றுமே என்னால் நன்றியுடன் நினைவு கூறத் தக்கது!

"செல்வி ஷங்கர்"
புதிய பதிவர் என்னும் உணர்வே வராமல் எழுதும் ஒரு இனிய பதிவர். இலக்கியம், வள்ளுவம், கவிதை எனப் பல முகங்களைக் காட்டுகின்ற இவரது பதிவுகள் ஒரு இனிய உணர்வைத் தருவதென்னவோ நிஜம்! நல்ல தரமான பதிவுகள் இவரிடமிருந்து வரும் என எதிர்பார்க்கிறேன்!

"முத்துலட்சுமி"
தன் நிலையைத் தான் உணர்ந்த பின்னர், தன்னுள் விளைவது ஒரு தன்னம்பிக்கை! இவரது பதிவுகளப் படித்தால் இது உங்கள் எல்லாருக்கும் புரிய வரும்! நியாயமான கோபத்தையும் இவர் பாங்காகத் தெரிவிக்கும் விதம், பெண்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும்!

"மதுமிதா"
அபரிமித அறிவு இருப்பது ஒரு விஷயம்! அதைத் தெரிவிப்பது மற்றொரு விஷயம்! எடுத்துக் கொண்ட தலைப்புகளை இவர் அலசி ஆரய்ந்து அளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்! சொல்லப்போனால், இவரது ஒரு 10 பதிவுகளாவது படித்து உணர்ந்த பின்னரே எவருமே பதிவெழுத வரலாம் என ஒரு சட்டம் வந்தால் கூட சரியோ என நினைக்கிறேன்! அந்த அளவுக்கு இவரது பதிவுகள் ஆளுமை வாய்ந்தவை என்றல் மிகையில்லை!

"பத்மா அர்விந்த்"
மிக மிகப் படித்தவர்! பொறுப்பான ஒரு வேலையில் இருப்பவர்! தனக்குத் தெரிந்தது மற்றவருக்கும் பயன்படட்டுமே எனத் துடிப்பவர்! பொதுநலச் சேவையில் தன்னை அர்ப்பணித்தவர்! இவரது பதிவுகள் எல்லாமே ஒரு ஆழ்ந்த சிந்தனையை உங்களுக்குள் உருவாக்கும். இவரை நான் சந்தித்து உரையாடியது ஒரு இனிய அனுபவம்!! தவற விடாதீர்கள்!"

"வல்லி நரசிம்மன்"
தமிழில் எழுதுவதையே தன் மூச்சாகக் கொண்டவர்! திருமாலின் பத்து அவதாரங்களையும் தன்னுள் கொண்டவர்!! ஆமாம்! தான் ஆசையுடன் வளர்க்கும் மீன் தொடங்கி, நடுவில் ஒரு நரசிம்மனையும் தனதாக்கிக் கொண்டு, சித்திர ராமாயணம் வரைந்த அருந்தகையவர்! எந்தத் தலைப்பிலும் எழுதக்கூடிய புலமை படைத்தவர்!

"ராமச்சந்திரன் உஷா"
தமிழ் வலைப் பதிவுலகில் மிகவும் அறிந்த ஒரு பெயர்! தளராது எழுதிக் குவிப்பவர்! தமிழ்மணம், தேன்கூடு, நிலாச்சாரல், தமிழ் ஓவியம், வெகுஜன பத்திரிக்கைகள் என இவர் எழுத்து புகாத் இடமே இல்லை எனச் சொல்லலாம்! எத்தனையோ சோதனைகளத் தாங்கியும்,ஒரு பெண்ணுக்கே உரித்தான அததனை தைரியத்துடன் அனைத்தையும் எதிர் கொண்டவர்! இவரது காலத்தில் நாமெல்லாமும் வலைப்பூ எழுதுகிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை!

"கீதா சாம்பசிவம்"
"தலைவி" என அனாஇவராலும் அன்புடன் அழைக்கப்படும்ம் இவர் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர்! ஆன்மீகப் பதிவின் இலக்கண்ணம் என இவரை நான் கொள்வேன்! ஒரு குழந்தையாய், விறுவிறுப்பான இளைஞியாய், முதிர்ந்த ஆன்மீகப் பழமாய் பன்முகங்களில் இவரது எழுத்துகள் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்! இவரை நான் சந்தித்து பழகியது எப்போதும் என் நினைவிருக்கும்!

"மதுரா"
புரட்சியின் மொத்த உருவம்! இவரைப் போல் எழுத மாட்டோமா என பல பெண் பதிவர்களையே ஏங்க வைத்தவர்! இப்போது ஏதோ சில காரணங்களினால் தமிழில் பதிவிடவில்லை! ஆனால், ஆங்கிலப் பதிவுகள் எழுதி வருகிறார்!! மீண்டும் நம்மை எல்லாம் மகிழ்விக்க இவர் வர வேண்டுமெனவிரும்புகிறேன்!

"துளசி கோபால்"
தமிழ்ப் பதிவுலகக் கடவுள் என இவரை நான் வைக்கிறேன்! 'டீச்சர்' என அன்புடன் எல்லாராலும் அழைக்கப் படுபவர்! அதை முழுக்க முழுக்க நியாயப்படுத்துபவரும் கூட! விரிவான, சுவையான், கண்ணைக் கவரும் படங்க்களுடன் இவர் அளிக்கும் பதிவுகள் எப்போதும் இன்பம் பயப்பவை!
எல்லாருக்கும் நல்லவர்! வல்லவரும் கூட!


"பொன்ஸ்"
எனது இனிய நண்பர்! பல சண்டைகள் இவருடன் போட்டிருக்கிறேன்! ஆனாலும், இன்றும் என் நலம் விரும்பும் ஒருவர்! யானையின் மேல் ஆஅசையுள்ளவர்! யானை போலவே நினைவாற்ற்றல் மிக்கவர்! கதை, கவிதை, கட்டுரை என இவர் எழுதியவை எல்லாமே மிக மிக நல்ல பதிவுகள்!


விட்டுப் போனவர் இன்னமும் எத்தனையோ பேர்! எல்லாரையும் சொல்ல இங்கு இடம் போதாது என்பதால் விடுக்கிறேன்! ஆனால், எல்லாருமே படிக்கத் தக்கவர்!

பெண்மையே நீ வாழ்க!
மேலும் வாசிக்க...

Friday, March 14, 2008

"இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை!"

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை!"

இசை என்பது நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் கூடவே இழைந்து வரும் ஒன்று.

தாயின் தாலாட்டில் தொடங்கி இறுதிவரை கூடவே வருவது.
நமது பதிவர்களில் பலர் இந்த ஒரு துறைக்குத் தாங்கள் கொடுக்கவேண்டிய மதிப்பைக் கொடுப்பதில்லையோ எனும் எண்ணம் வரும் அளவுக்கு, உரைநடைப் பதிவுகளை எழுதிக் குவிக்கிறார்கள்...அல்லது அவ்வப்போது மட்டுமே இதைத் தொட்டுச் செல்கிறார்கள்.
ஒரு சிலர் மட்டுமே இது ஒன்றையே, விடாது நமக்கெல்லாம் அளித்து மகிழ்விக்கிறார்கள்.

இங்கு குறிப்பிட்டிருக்கும் பதிவர்களின் பதிவுகள் அத்தனையும் ஒரு இசைக் களஞ்சியம்.
அடிக்கடி வரமாட்டார்கள் என்றாலும் நம்ம ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னா.. 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா' வருவாங்க! அப்படி வரும் போதெல்லாம் இவர்களைக் "கேட்டு ரசிக்க" நான் தவறுவதில்லை.
நீங்களும் ரசித்துவிட்டுச் சொல்லுங்களேன்!


"கானா ப்ரபா":

வேறு சில பதிவுகள் எழுதி வந்தாலும், இவரது கவனம் முழுவதும் இசை மீது மட்டுமே! யாழ் பதிவர் வரிசையில் இவர் வந்திருந்தாலும், இவர் இருக்க வேண்டிய இடம் இதுதான்! இசை மீது தனக்கிருக்கும் ஆர்வத்தை வாய்ப்பு வரும் போதெல்லாம், தெரிவிக்க இவர் தயங்குவதே இல்லை. கர்நாடக இசை தொடங்கி, திரை இசை வரை இவர் தொடுக்கும் இசைமாலைகளை இங்கே சென்று கேட்டு மகிழுங்கள்!

"பெப் சுந்தர்" என்கிற பத்மநாபன் சுந்தரேசன்:

'பாடும் நிலா' திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியன்!
தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தும் அறிந்த ஒரு பெயர்!

தன் கந்தர்வ கானக் குரலால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களைத் தன் இசை என்னும் இன்ப வெள்ளத்தால் நனைத்து, குளிப்பாட்டி மகிழ்த்தி வரும் ஒரு அற்புத இசைக் கலைஞர்!

இவருக்காக மட்டுமே தன் வலைப்பூவை அர்ப்பணித்து, இவரது பாடல்களைத் தொடர்ந்து அளித்து வரும் 'பெப்' சுந்தரின் சேவை மகத்தானது! பிரமிக்க வைப்பது!

தனக்குப் பிடித்த ஒருவரை மதிப்பது வேறு! அவரை அனைவரும் அறியும்படிச் செய்வது வேறு!

இதனை ஒரு தவம் போலச் செய்து வரும் [இது எப்படி என்பது எனக்கும் தெரியும்!] இவரைப் போற்றி, இவரது பதிவுகள் மூலம், 'மணி'க்குரலோனை
இங்கு சென்று கேளுங்கள்!

"CVR"

"CVR" என்கிற புனைப்பெயரில் ஒளிந்து,
உங்கள் முகத்தில் புன்னகை மட்டுமே பார்க்க விரும்பும் ஒரு எளிய நண்பன்!! :) A Simple friend who wants to put a smile in your face!! :)
என ஒரு அப்பாவி போலச் சொல்லி, அடுத்து,


உங்களுக்கு என்னதான்டா வேணும்?? ;-(

என ஒரு அதிரடி கொடுக்கும் வித்தியாசமான பதிவர்.

இத்தனை இளைய வயதில், இசையில் இவருக்கு இருக்கும் புலமை என்னை எப்போதும் அதிசயிக்க வைக்கும்!
ரவி கண்ணபிரான் தொடங்கி, வெட்டிப்பயல் வரை ஒரு பாடலைப் பதிவு செய்ததுமே இவரை அழைத்து "பாருங்க சார்'னு சொல்வதில் இருந்தே இவரது பெருமை புலப்படும்.
இவரை
இங்கே சென்று கேட்டு மகிழுங்கள்!

"ரவி கண்ணபிரான்":

'இசை இன்பம்' என்னும் தலைப்பில் ஒரு வலைப்பூ, இவரது பன்முகங்களில் ஒன்று!

இசையில் ஈடுபாடுள்ள மற்றும் சிலரைக் கூட்டு சேர்த்து, இந்தப் பதிவை நடத்தி வருகிறார்!
பலவிதமான இசை அனுபவங்கள்
இங்கு உங்களுக்கு கிடைக்கும்!

"ஸிமுலேஷன்':

திரை இசை அல்லது அதை ஒட்டிய இசையையே சொல்லிவரும் இசைப் பதிவர்கள் நடுவே, இவர் ஒரு வித்தியாசமான பதிவர்!
கர்நாடக இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!
இதை ரசிக்கும் "தமிழ்மணப் பதிவர்"களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த ஒரு சில பதிவர்களை மகிழ்விக்கப் பதிவிடும் இவர், என் மதிப்பில் மிகவும் உயர்ந்தவர்!

இவரது ப்ரொஃபைலுக்கும் சென்று, மேலும் சில வலைப்பூக்கள் மூலம் இவர் ஆற்றி வரும் பணியைப் போற்றி, கேட்டு, மகிழுங்கள்!
மனமிருந்தால், ஒரு பின்னூட்டமும் போடுங்கள்!

"CA. CHANDRASEKARAN ramaswamy" என்கிற "கௌசிகம்"

60 வயது இளைஞர்!

தி.ரா.ச. என பலருக்கும் தெரிந்த ஒரு மிகச் சிறந்ந்த மனிதர்!
அருந்தமிழ் இசைகாக மட்டுமே தன்னை அர்ப்பணித்திருப்பவர்!
இவரது வலைப்பூக்களைப் பார்த்தாலே தெரியவரும், இவருக்கு இசை மீது இருக்கு ஆர்வம் எவ்வளவு என!!

சொல்லித் தெரிவதல்ல இசைக்கலை!

அனுபவிக்கணும்! அனுபவிங்க...
இவரது பதிவுகளை!


"யாழ் சுந்தர்"

பாட்டுடைத் தலைவனென்று இவரைக் கடைசியில் வைத்தேன்!
இசை ஒன்றே இவரது மூச்சு!
திரை இசை பற்றி இவருக்கு இருக்கும் காதலைப் பார்க்கும் போது, பொறாமையாக இருக்கும் எனக்கு!
இவரைப் படிக்கப் புகுவதற்கு முன், இதைப் புரிந்து கொள்ளுங்கள்!
வெளிவரவே மனமிருக்காது உங்களுக்கு!

என்றும் மங்காத, எவரும் ஈடு சொல்ல இயலாத டி.எம்.சௌந்தர்ராஜனைப் பற்றிய இவரது பதிவுகள் இனிக்க இனிக்க இன்பம் தருபவை!

எனது இனிய நண்பர் சுல்தான் சொன்னது போல விடுப்பு எடுத்து படிக்கவேண்டிய பதிவர் இவர்!!

எண்டெர் அட் யுவர் ஓன் ப்ளெஷர்!!!!!! [எப்போதும்.... எப்ப வேண்டுமென்றாலும்!!]

என்ன சொல்லிப் பாடிடுவேன்!
மன்னுதமிழ் இசையினையே
தன்னுடைய தவமெனவே
பின்னூட்டம் ஏதும் பாராது
இங்கெமக்கு வழங்கிவரும்
இவர்களது சேவையினை!

இசையென்பது இவர்கள் மூச்சு!
வசை பாடும் பதிவர்க்கு நடுவினிலே
இசை ஒன்றை இசைவாய்க் கொண்டு
தசையினைத் தீ சுடினினும் கருதாது
அசையாது இசைபாடும் இவர் சேவை
இசைவாகப் போற்றிடுவேன் வாழ்க இவரென்று!

இசைமாலை தருகின்ற இவர்களுக்கு
இசைசரம் தொடுத்து வாழ்த்தி வணங்குகிறேன்!

மேலும் வாசிக்க...

Thursday, March 13, 2008

"குழலினிது "யாழ்" இனிது என்பர்"

"குழலினிது "யாழ்" இனிது என்பர்"

வசதியான சூழ்நிலை! நான் தமிழன் என்பதை, அரசியல் முதல், வீடு வரை நினைவுறுத்தும்.... பாராட்டும்.. ஒரு இடம்! அதுதான் தமிழ்நாடு!

இங்குதான், இது இத்தனை இருந்தாலும்..... சொந்தத் தமிழை மறக்கும் அவலம்!
அடிபட்டு,மிதிபட்டு, நசுக்குண்டு, ஊரை விட்டுத் துரத்தும் நிலை வரினும், தாய்த்தமிழை மறவேன் என ஒரு கூட்டம் இன்னொரு பக்கம் அலைவதைப் பார்க்கும் போது, ......பெருமைப்படுவதா,... இல்லை.. நம்மை நினைத்து அவமானப்பட்டுக் கொள்வதா என்பதே எனக்குள் எப்போதும் தோன்றும் உணர்வு.

இவர்கள் பதிவு... அது எத்தன்மையதாய் இருப்பினும்... விடாது படித்துவிடுவேன்!

இவர்கள் எல்லாருமே படிக்க வேண்டியவர்கள் என்றாலும், ஒரு சில மனதைக் கவர்ந்த பதிவர்களை இங்கு "யாழ் மாலை"யாய்த் தொடுக்கிறேன்!

"தூயா"

வீட்டில் சமைப்பதில் தொடங்கி, தமிழ்மணம் என்றால் உண்மையிலேயே என்ன என்பதைச் சொல்லுவதிலாகட்டும், ஈழத்தமிழரின் நிலையைப் படம் பிடித்துக் காட்டும் இவரது பதிவுகள் நெஞ்சை நிறைப்பவை. எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, சில ஆங்கிலப் பதிவுகளும் வைத்திருக்கிறார்! படித்துப் பயனுறுங்கள்!



"யோகன்-பாரிஸ்":


நான் அறிந்த பதிவர்களிலேயே மிக மிக எளிதானவர்! மிகவும் தன்னடக்கம் உள்ளவர்! தனது கருத்துகளை பிறர் பதிவில் மட்டுமல்லாமல், தனது பதிவுகளிலும் தெளிவாகச் சொல்லி வருபவர்!தமிழ் மீது இவருக்கு இருக்கும் பற்று என்னை எப்போதும் வியக்க வைக்கும்! தகராறு இல்லாத தரமான பதிவுகள் படிக்க இவரது வலைப்பூவைப் படியுங்கள்!

எம்.ரிஷான் ஷெரீப்":

"ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு பொழுதுகள் விடிகின்றன...! மாறாவடுக்களின் துயரஅலறல் தேசங்களெங்கும் முட்டிமோதி மனிதம் வாழும் இதயங்களெல்லாம் விழிநீரோடு எதிரொலித்திடினும் எவராலும் நீக்க முடியா ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு பொழுதுகள் கழிகின்றன...!"

புரிஞ்சிருக்குமே! ஆமாங்க! இவர் ஒரு கவிஞர்! யாழ் மக்கள் பற்றிய எண்ணங்கள், கவிதைகள், இஸ்லாம் பற்றிய தன் எண்ணங்கள் என இவர் எழுதும் பன்முகங்களைப் பார்க்கையில் இவர் மீது ஒரு தனி மதிப்பே வந்தது எனக்கு! படித்துப் பாருங்கள்! உங்களுக்கே புரியும்!

"கானா பிரபா"
Location: துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம், Sri Lanka

"ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்!"

கலன்ங்க வைக்கும்ம் இவ்வரிகளால்தான் ...இப்படித்தான்... இந்தப் பதிவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்! ஆனால், தன்னலமில்லாது, இசை மீதான அளப்பரிய ஆசையினால், இன்று தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் தனது இசை பற்றிய பதிவுகளினால், மிகவும் அதிகமாகவே அறிமுகமான ஒரு பதிவர் இவர்!. இவரது ஒவ்வொரு பதிவும் படிக்கத் தகுந்தவை! ரசிக்கத் தகுந்தவை! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை! இவரது சேவை ரேடியோ என்கிற நிலையிலும் இன்று தொடர்வது ஒரு பெருமைக்குரிய விஷயம்!

"வசந்தன்":

தன்னம்பிக்கை என்பதை மட்டுமே துணையாகக் கொண்டு தனிநடை போட்டு, தன் கருத்துகளைத் துணிவாகத் தொடர்ந்து எழுதிவரும் ஒரு துடிப்பான ஈழ இளைஞர். தமிழின் மீதும், தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும் இவருக்கு இருக்கும் ஈர்ப்பு எவருக்குமே ஒரு உத்வேகத்தை அளிக்கும். படித்து மகிழுங்கள்!

இவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள்! ஆமாங்க! எப்படி எனக்கு ரஜினியைத் தெரியுமோ, ஜார்ஜ் புஷ்ஷைத் தெரியுமோ அப்படித்தான் இவர்களை நான் அறிவேன்! இவர்கள் எவருக்காவது என்னைத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது!:)))))))))

ஈழத்துக் குரல்கள் இங்கு வெகுவாக வெவ்வேறு தொனியில் ஒலித்தாலும், தமிழ் என்னும் நமது பெருமையை முடிந்த வரையில் தங்களது பதிவுகளில் வெளியிடும் இவர்கள் அனைவரையும் பாராட்டி சரமாலை அணிவித்து மகிழ்கிறேன்!
மேலும் வாசிக்க...

Wednesday, March 12, 2008

"சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை"

"சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை"


இனிமேல் சொல்வதற்கு பாக்கி இல்லை என்னும் அளவுக்கு டீச்சரும், திரு. சீனாவும் வந்து எழுதிட்டுப் போயிட்டாங்க! பத்தும் பத்தாததுக்கு, நம்ம 'பாசமலர்' வரைக்கும் மீதி அத்தனை பேரும் வேற பின்னிப் பீராய்ஞ்சிட்டாங்க! உறவெனும் தெய்வத்தின் உதவியால், ஒரு நிறைவான பதிவை நேற்று கொடுக்க முடிந்தது! இன்னிக்கு என்னத்தை தொடுப்பது என மலைப்பாய் இருந்த போது, நினைவுக்கு வந்தது..... ஏதாவது வித்தியாசமா சொல்லலாமேன்னு!

அதாவது, தனக்குப் பிடிச்சிருக்கு என்னும் ஒரே காரணத்துக்காக மட்டும் பதிவுகள் எழுதி, பின்னூட்டம் வருவதைப் பற்றிக் கவலையே படாமல், தொடர்ந்து பதிவு எழுதும் சில பதிவர்களைத் தொடுத்து ஒரு சரம் கட்டலாமென!

உடனே நினைவுக்கு வந்தவர்களை எல்லாம் தொடுத்து இதோ ஒரு சரம்!

இவர்கள் எல்லாருமே என் மனதை நிறைத்தவர்கள்! தங்களுக்குத் தெரிந்த நல்ல கருத்துகளை வலைப்பூவில் வைக்க வேண்டும் என்னும் ஒரே ஒரு உந்தல் மட்டுமே இவர்களுக்கு! எத்தனை பின்னூட்டங்கள் வருகின்றன நம் பதிவுக்கு என்பதை விட, எத்தனை நல்ல விஷயங்களை நாம் சொன்னோம் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு, பின்னூட்ட ஆசைக்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளை முற்றிலும் தவிர்த்தவர்கள் என்ற வகையில் இவர்கள் எல்லாரையும் பாராட்டி, இந்தச் சரத்தை இவர்களுக்கு மாலையாக அணிவிக்கிறேன்!

திரு. ஞானவெட்டியான்:
சமயக் கருத்துகளோ, மனதுக்கினிய திரைப்படப் பாடல்களோ, இல்லை தத்துவங்களோ.... சுருக்கமாக, சுவையாகச் சொல்லி வருபவர்...இன்றும்!
இவரது சில பதிவுகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்! தனது எல்லையை இப்போது ஆங்கிலத்துக்கும் விரிவாக்கி இவர் செய்யும் சேவை அளப்பரியது!

திரு. மா. சிவகுமார்:
இவரது பதிவுக்கு நான் சென்றதே ஒரு தற்செயல் எனவே சொல்ல வேண்டும். சென்றதுடன் நில்லாமல், ஒரு திருக்குறளையும் போட்டு வெறுப்பேத்தினேன்! கொஞ்சம் கூடக் கோபப்படாமல், 'இன்னமும் நான் திருக்குறளைப் படிக்கவில்லை ஐயா! அதை நினைவு படுத்தியதற்கு நன்றி' என் இவர் பதில் சொல்லிய பண்பு என்னைக் கவர்ந்தது. சொன்னபடியே, இப்போது திருக்குறளும் பதிகிறார்!! பொருளாதாரம், அரசியல், சமூகம், பிரயாணம் என இவர் எழுதியிருக்கும் விஷயங்கள் பிரமிப்பூட்டுபவை! கணினி சம்பந்தமாக இவர் பதிவுலகத்துக்கு செய்திருக்கும் சேவை... பாராட்டத்தக்கது. இவரது பதிவுகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்!.... ஒரு 10 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு!!

டாக்டர். ப்ரூனோ:
ஆரவாரமில்லாமல் சமுதாயக் கருத்துகளை தனது பதிவுகளிலும், இதை வெளிப்படுத்தும் மற்றவர் பதிவுகளிலும், தாராளமாக அள்ளித் தெளிப்பவர். இவரிடமிருந்து இதுவரை ஒரு பின்னூட்டம் கூட நான் பெற்றதில்லை என்றாலும், இவரது கருத்துகளைத் தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில், இவரை இங்கு தொடுப்பதில், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!

திரு. நக்கீரன் பரமசிவன்:

பல்வேறு தலைப்புகளில் சுவாரசியமான பதிவுகளைப் படிக்க வேண்டுமென்றால் இங்கே செல்லவும்! அரசியல், சமூகம், மருத்துவம், தத்துவம், புகைப்படக்கலை என இவர் தொடாத விஷயங்களே இல்லை எனச் சொல்லுமளவுக்கு பதிவுகளை எழுதிக் குவிப்பவர்! சேர வேண்டியவர்களை சென்றடையும் என்பதில் இவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை, இவர் தொடர்ந்து இட்டுவரும் பதிவுகளில் இருந்து நீங்களே புரிந்து கொள்வீர்கள்! தவற விடாதீர்கள் இவரை!



திரு. ஜமாலன்:

இவரை எத்தனை பேருக்குத் தெரியும் என்பதை விட, இவரைத் தெரிந்தவர்கள் இவரை எப்படி மதிக்கிறார்கள் என்பதை வைத்து இவரது பெருமையை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன்.பல விஷயங்களில் மேம்போக்காக அறிவு இருப்பதே இங்கு நாம் பரவலாகக் காணப்படுவது! ஆனால், எடுத்துக் கொண்ட எந்த ஒரு விஷயத்திலும், ஒரு முழுமையான ஆளுமையை இவர் ஒருவரிடம் மட்டுமே நான் அதிகமாகக் கண்டேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு மிகவும் பெருமையே! எவராலும் எளிதில் எடுத்துக்கொள்ள அஞ்சப்படும்[!!] தலைப்புகளை எடுத்துக் கொண்டு அநாயசமாக இவர் கையாளும் திறமை என்னை பலமுறை வியக்கவைத்திருக்கிறது. படித்துப் பாருங்கள்... புரிந்து கொள்வீர்கள்!



இன்னும் சொல்ல நிறையப் பேர் இருக்கிறார்கள். இடமில்லை என்பதால் இத்துடன் முடிக்கிறேன். விட்டுப் போனவர்கள் எந்தவிதத்திலும் இவர்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை. வாய்ப்பிருந்தால், விரும்பினால், சொல்லுகிறேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, March 11, 2008

வாடாமாலை - வண்ணக் குழப்பம் (இராம் பிரசாத்)

வாடாமாலை - வண்ணக் குழப்பம் (இராம் பிரசாத்)

இனிமேல் சொல்வதற்கு பாக்கி இல்லை என்னும் அளவுக்கு டீச்சரும், சீனாவும் வந்து எழுதிட்டுப் போயிட்டாங்க! பத்தும் பத்தாததுக்கு, நம்ம 'பாசமலர்' வரைக்கும் மீதி அத்தனை பேரும் வேற பின்னிப் பீராய்ஞ்சிட்டாங்க! என்னத்தை தொடுப்பது என மலைப்பாய் இருந்த போது, நினைவுக்கு வந்தது..... ஏதாவது வித்தியாசமா சொல்லலாமேன்னு!

2006 ஆம் வருடம் நான் ஆத்திகம் வலைப்பதிவை
தொடங்கியபோது பார்த்த பல ஆக்டிவ் பதிவர்கள் தற்போது எழுதுவதில்லை. சொந்த காரணங்களாக இருக்கலாம். நல்ல எழுத்தாற்றல் உள்ளவர்கள் திடிரென்று பதிவுகளை எழுதாமல் விட்டுச் சென்றது நீண்ட நாட்கள் வெறுமையாக இருந்தது. இராம் பிரசாத் என்ற பதிவர் வண்ணக் குழப்பம் என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருந்தார். தமிழ் மணம் நட்சத்திரமாக எழுதியவர். பன்முகத்தன்மை கொண்டவர், அரசியல் தவிர்த்து அனைத்து பிரிவுகளிலும் எழுதி தள்ளியவர். அவரது "நான்கு தெருக்கள் மட்டும் அறிந்த நாய்" என்ற நாய் கவிதையை படித்தவுடன் அதே போல் 'நாயும் நானும்' என்ற ஒன்றை நான் எழுதினேன். பிறகு கோவியார் மற்றும் பலர் தொடர்ச்சியாக அதே போன்று எழுதினோம்.[நாயும் நானும் பின்னூட்டங்களையும் படியுங்கள்! கோவியார், ப்ரியன் இன்னும் சிலர் நடத்திய கவியரங்கமே இருக்கும்!] தற்போது ஒரே தலைப்பில் வெவ்வேறு பொருளில் கவிதைகள் வருவது குறைந்துவிட்டது.

நண்பர் இராம் பிராசாத் ஆன்மிகவாதி, ஆன்மிகம் தொடர்புடைய பல விடயங்களை அவ்வப்போது கட்டுரையாக்கி இருக்கிறார். நிறைய சிறுகதைகளை எழுதி இருக்கிறார். நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறார். சமூகம் தொடர்புடைய கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

அவருடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டது இல்லை, வலைச்சரம் மூலம் அவருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தாங்கள் மீண்டும் எழுதவரவேண்டும். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் அவருக்கு எனது வேண்டுகோளை சொன்னால் மிகவும் மகிழ்வேன்.

நண்பர் இராம் பிராசாத் எழுதியவைகளில் சிலவற்றின் இணைப்பு:

அக்னிப் பூ... (http://tamiltheni.blogspot.com/2006/07/blog-post_07.html)
எனக்குப் பிடித்தக் கதைகள் (http://tamiltheni.blogspot.com/2006/01/blog-post_27.html)
முதுமையில் இளமை (http://tamiltheni.blogspot.com/2006/01/blog-post_24.html)
அனைவரும் உறவினர். அனைவரும் உறவினர். (http://tamiltheni.blogspot.com/2006/01/blog-post_23.html)
ராமசாமி சுப்ரமணிய மனோகர் (http://tamiltheni.blogspot.com/2006/01/blog-post_13.html)
உள்ளே வெளியே (http://tamiltheni.blogspot.com/2006/04/blog-post_28.html)
நான்கு தெருக்கள் மட்டும் அறிந்த நாய் (http://tamiltheni.blogspot.com/2006/05/blog-post_15.html)
வளரிளமைக் காலம் (http://tamiltheni.blogspot.com/2006/06/blog-post_115001822528711020.html)
நட்சத்திர இடுகைகள் (http://www.thamizmanam.com/inc/star_post_list.php?date=2006-02-20)
மேலும் வாசிக்க...

Monday, March 10, 2008

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]

என் கதை சொல்லும் நேரமிது! [வலைச்சரத்துக்கு!]


நாம்பாட்டுக்கு நானுண்டு எம்பதிவுண்டுன்னு இருந்தேனுங்கோ!
அது பொறுக்கலை நம்ம பொன்ஸ் தாயிக்கு!
வலைச்சரம் எழுத வாடான்னூட்டாங்க!
ஊருக்குப் போறேம்மா, இப்ப வேணாமேன்னு டபாய்ச்சுப் பார்த்தேன்!
அதுக்கென்ன! தாராளமாப் போயிட்டு வந்து பொறவால எழுதுன்னுட்டாங்க!
தப்பிக்க வழியில்லை..... ஹிஹிஹிஹி.... உங்களைத்தான் சொல்றேன் சாமியோவ்!
இந்த ஒருவாரம் என்னிய நீங்கள்லாம் சகிச்சுகிட்டுத்தான் போகணும்!
என்ன ஒரே ஒரு நிம்மதி இதுலன்னா... ஒரு வாரம்தான்! சீக்கிரம் ஓடிப்போயிரும்!
முடிஞ்சா படிங்க! இல்லேன்னா அடுத்த வாரமா இந்தப் பக்கம் வாங்க!

சரி! இப்ப மேட்டருக்கு வருவோம்!

முதல் பதிவு என்னைப் பத்தி சொல்லணுமாம்!
என்னைப் பத்தி சொல்லிக்க அதிகமா ஒண்ணுமில்லீங்க!
தஞ்சையில் பிறந்து, தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் படித்து, சென்னையில் மருத்துவம் பயின்று, அங்கேயே மருத்துவப்பணியும் செய்து, இடையில் ஈராண்டு காலம் ஜாம்பியாவில் பணி புரிந்து, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இதைத் தொடரும் ஒரு சராசரி ஆள்தான் நான்.
தமிழில் எப்பொழுதுமே ஆர்வம் உண்டு.... படிக்க மட்டுமே!

வலைப்பதிவு என ஒன்று இருக்கிறது எனத் தெரிந்ததே 3 ஆண்டுகளுக்கு முன்புதான்!

பின்னூட்டத்தில் தொடங்கி ஒரு சிலரின் பார்வையில் பட்டு, அவர்களின் உந்துதலால், வலைப்பதிவு தொடங்கினேன்! [இவர்கள் யார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!]

"நல்லன சொல்வதில் நடுக்கமில்லை! அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!" எனத்தொடங்கிய இந்த 'ஆத்திகம்' வலைப்பூவில், 230-க்கும் மேல் பதிவுகள் இதுவரையில் எழுதியிருக்கிறேன் என.... இன்றுதான் பார்த்தேன்!:))

தொடக்கத்தில், என்ன எழுதுவது என ஒரு நிலையில்லாமல், மனதுக்குப் பட்டதையெல்லாம் எழுதிய பொழுதில், நண்பர் குமரன் என்னைத் திருப்புகழ் எழுதுமாறு கேட்டுக் கொள்ள, என் வலைப்பூவின் தலைப்புக்கு ஏற்றவாறு இருக்கிறதே என்ற மகிழ்வுடன், திருப்புகழுக்கு விளக்கவுரை கவிதை வடிவில் எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது! இன்றும் இருக்கிறது.... சற்றே நான் "நீட்டி முழக்கினாலும்"!
அருணையாரின் பாடலுக்கு எழுத வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்! அந்த வாய்ப்பில், தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வமே இந்த 'நீட்டி முழக்கியதின்' காரணம்! இதில் எனக்கு மகிழ்ச்சியே!

இப்படி தொடர்ந்து திருப்புகழே எழுதி வருகையில், நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு திருக்குறள் பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் என்னுள் ஒரு உந்தல் ஏற்பட்டு, உடனே உருவானான் மயிலை மன்னார்!
வலைப்பதிவு இவனையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டது என் அதிர்ஷ்டம் எனவே சொல்ல வேண்டும்! இன்னமும் தொடர்ந்து வருகிறான்! வாரம் ஒரு அதிகாரம் இவனைக் கொண்டு எழுத வேண்டும் என்பது என் அவா! வள்ளுவனும், முருகனும் அருள வேண்டும்!

இப்படி ஒரு நிலையில் எழுதி வரும்போது, 'திருவெம்பாவை' உரை விளக்கம் எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறு! 30 நாட்கள் அதைத் தொடர்ந்து எழுதியது மறக்க முடியாத ஒரு அனுபவம்!

'ஆல்கெமிஸ்ட்' என்கிற ஒரு அற்புதமான நாவலை நான் படித்தேன்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்பதே உண்மை! என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், எனக்குப் பிடித்தது எல்லாம் என் மனைவிக்கும் பிடிக்க வேண்டும் என வற்புறுத்துவது! இந்தக் கதையை அவரையும் படிக்கச் சொல்லி அவரிடம் இந்தப் புத்தகத்தைத் திணித்தேன்! படித்தவுடன் அவர் என்னிடம் முதன்முறையாக கேட்டது இதுதான்! 'என்னமோ ப்ளாக்கெல்லாம் எழுதறீங்களே! இதை ஒட்டி ஒரு கதை எழுதுங்க! இல்லாட்டி எழுதறதை நிறுத்திடுங்க!' இதை ஒரு சவாலாக ஏற்று, 40 நாட்கள் வேறு பதிவு எதுவுமே எழுதாமல் 'சித்தர்-- கனவு மெய்ப்படும்!' என 42 அத்தியாயம் எழுதி வெளியிட்டேன்! இதையே எனது வலைப்பதிவின் நிறைவாகக் கருதுகிறேன்!

நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 'கசடற' என்னும் வலைப்பூ தொடங்கி, பாலியல், இதயம் பற்றி எழுதிய இரு தொடர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையும் இங்கு குறிக்கிறேன்.

அவ்ளோதாங்க! +நேரம் கிடைக்கும் போது ஒரு நடை நம்ம பக்கம் வந்திட்டுப் போங்க!

நன்றி!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது