எங்கள் சரவெடி 6
58) அழியாச்சுடர்கள் அவர்களே சொல்லியுள்ள படி நவீன இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம். தமிழின் அத்தனை இலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கு படிக்கலாம். உண்மையிலேயே பெட்டகம்தான். ஒருமுறை பார்த்துவிட்டு போதும் என்று சொல்ல முடியாத தளம்.
59) kashyapan மிக மூத்த பதிவர்களில் ஒருவர். தீக்கதிர் பத்திரிகையில் சப் - எடிட்டராக இருந்தவர். அரசியல் மற்றும் தனது பொதுவான கருத்துகளை இவர் தனது தளத்தில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். பின்னூட்டத்தில் சம்பந்தப் பட்டவர்களை விளிக்கும்போது அவர்கள் பெயரைச் சொல்லி 'அவர்களே' என்று அழைத்துதான் தன் கருத்துகளைச் சொல்வார். (உதாரணம் "அப்பாதுரை அவர்களே..."). கற்றுக் கொள்ள வேண்டிய, எங்களால் பின்பற்ற முடியாத (!), பாடம்.
60) முன்னர் அன்பே சிவம் என்ற பெயரிலும் இப்போது ரேகா ராகவன் என்ற பெயரிலேயேயும் வலைப்பூ நடத்துகிறார். ஒருபக்கக் கதைகள், கவிதை இவர் பக்கத்திலிருந்து!
61) இலக்கியம் : பெயரே தளத்தின் நோக்கத்தைச் சொல்லும். இலக்கியத்தில் மூழ்க இந்தப் பக்கத்துக்குச் செல்லலாம். சீனத்து இலக்கியப் பட்டு என்ற இந்தப் பதிவு படிக்க, ரசிக்க. மறைந்த எழுத்தாளர் சூடாமணிக்கு அஞ்சலி.
62) உப்புமடச் சந்தி... வானம் வெளித்தபின்னும் ஹேமாவின் இன்னொரு தளம்.கட்டுரைகள், ரசித்தவை, மரு த்துவக் கட்டுரை என்று பல்வேறு விஷயங்களும் எழுதுகிறார். புகைப் படம் ஒன்றைக் கொடுத்து 'எங்களை' எல்லாம் கவிதை எழுத வைத்தார்!
63) சித்தர்கள் இராச்சியம் சித்தர்களைப் பற்றிச் சொல்லும் சுவாரஸ்யத் தளம். மாதிரிக்கு சதுரகிரியும், போகரும்! சித்தர்கள் சொல்லும் பல மருத்துவக் குறிப்புகளைஇந்தத் தளத்தில் வாசிக்கலாம்.
64) மூலிகைவளம் திரு குப்புசாமி நடத்தும் மிக உபயோகமான தளம். இன்சுலின் செடி,அஸ்வகந்தா, அருகம்புல் என்று இன்னும் பலவற்றையும் பற்றித் தெரிந்து கொள்ள இந்த தளத்துக்குச் செல்லலாம்.
65),66) குறை ஒன்றுமில்லை லக்ஷ்மி அம்மா மூத்த பதிவர்களில் ஒருவர். சமையல் பகுதிகள், பயண அனுபவங்கள், கதை எல்லா தளங்களிலும் எழுதுபவர். இவரின் இன்னொரு தளம் தமிழ்விரும்பி. படித்தது, ரசித்தது ஆகியவற்றை இங்கும் பகிர்கிறார்.
67) டி.என். முரளிதரன் குரூப் IV பரீட்சை முடிவுகள், VAO பரீட்சை முடிவுகள் ஆகியவற்றை இவர் தன் தளத்தில் பார்க்கக் கொடுத்தது சிறப்பு. இதைப் படிக்கும்போது பாலகுமாரன் ரசிகர் என்று தெரிகிறது.
68) பிரியமுடன் வசந்த் திருமணமாகும்வரை மிக ஆக்டிவ் ஆக பதிவுகள் போட்டுக் கொண்டிருந்தார் முதலில் பல்வேறு, சுவைகளிலும், பதிவுகளிட்டாலும், பின்னர் கவிதைகள் இவரது ஸ்பெஷலாகிப் போயின. நீண்ட விடுமுறை விட்டிருக்கிறார் தன வலைப்பக்கத்துக்கு.
69) middleclassmadhavi சுவாரஸ் யம் குறையாத நல்ல பல பதிவுகள் தந்து கொண்டிருந்த இவரும் சமீப காலமாக நீண்ட விடுமுறைதான் விட்டிருக்கிறார். வல்லமையில் இவர் எழுதிய ஒரு நிறைவான சிறுகதை. பதின்மபருவத் துக் குழந்தைகளிடம் எப்படி பெற்றோர் நடந்துகொள்வது என்று அலசும் பதிவு.
70) மன்னை மைந்தர்களில் ஒருவன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மாதவன் எழுதும் சுவாரஸ்யப் பக்கம். மாத்தி யோசிக்கும் இயல்புடையவர். இதை இவரின் பின்னூட்டங்களிலும் காணலாம். நகைச்சுவையான பதிவுகள் , பின்னூட்டங்கள் இடும் இயல்புடையவர். ஏன் இப்பல்லாம் ஒண்ணும் எழுதறதில்லை மாதவன்?
71) எண்ணச் சிதறல் திருமதி கீதா சந்தானத்தின் பக்கம். அவ்வப்போது எழுதுவார். ஆனால் சுவாரஸ்யமாக எழுதுவார். எங்கள் ப்ளாக்கின் கதைப் போட்டியில் கலந்து கொண்டு இவர் எழுதிய கதை. திண்ணைப் பேச்சு என்ற தலைப்பில் இவரின் சுவாரஸ்யப் பதிவு.
================= ============================== ======================
எங்கள் வலையுலக அனுபவங்களை வைத்து,
பதிவர்களுக்குப் பத்து யோசனைகள்:
#1. ஐ எஸ் ஓ சான்றிதழ் பெற விழையும் தொழிற்கூடங்கள் / உற்பத்தியாளர் / சேவை மையங்கள், "வாடிக்கையாளர் திருப்தி" (customer satisfaction) என்னும் பதங்களை அடிக்கடி கேள்விப்படுவார்கள். வலைப் பதிவுகளுக்கு, வாசகர்கள்தான் வாடிக்கையாளர்கள். பதிவர் = உற்பத்தியாளர். வாசகர்களின் (வாடிக்கையாளரின்) உண்மையான கருத்துகளுக்கு, செவி சாயுங்கள், மதிப்பு கொடுங்கள். மாற்றம் தேவை
என்றால், மாற்றங்கள் செய்யுங்கள். வலைப் பதிவர்கள் ஐ எஸ் ஓ சான்றிதழ் பெறவேண்டும் என்று சொல்ல வரவில்லை. பதிவு படித்து திருப்தியடைந்த வாசகர், திரும்பத் திரும்ப உங்கள் பதிவுகளைப் படிக்க வருவார். நீடித்த வாசகர் ஆதரவு, ஒரு வலைப்பதிவு நீண்ட நாள் வாழ வழி கோலுகிறது!
#2. புதிய பதிவர்கள், இயன்ற வரையிலும், சிறிய பதிவுகளாக பதியுங்கள். உங்கள் பதிவின் மொத்த நீளம், ஒரு கம்பியூட்டர் திரை அளவு - அல்லது ஒன்றரை திரை நீளம் என்று இருத்தல் நல்லது.
#3. ஒரு பதிவில் ஒரு ஐடியா மட்டும் வாசகர்களுக்கு அளிக்கப் பாருங்கள். ஒரே பதிவில் நிறையக் கூறி வாசகர்களைக் குழப்பாதீர்கள்.
#4. சும்மா மேடைப் பேச்சு பேசுவதைப் போல, பிரவாளமாக (வளவளவென்று) எழுதாமல், சிறிய பாராக்கள், ஒவ்வொரு பாராவிலும் இரண்டு அல்லது மூன்று வாக்கியங்கள். ஒவ்வொரு வாக்கியத்திலும் அதிக பட்சம் பதினைந்து வார்த்தைகள். இவ்வாறு எழுத முயன்று பாருங்கள்.
#5. பதிவுகளில், தொடர்கதைகள் படிப்பவர்கள் மிகவும் குறைவு. வந்தோமா, பார்த்தோமா, படித்தோமா, கருத்துரைத்துவிட்டு (அல்லது கருத்துரைக்காமல்)வேறு பதிவுகளுக்குப் போனோமா - என்று இருப்பவர்கள்தான் அதிகம். (Click in / click out). புகழ் பெற்ற / பெயர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள் / பதிவுகள் மட்டும் அதிக அளவில் படிப்பவர்கள் இருப்பார்கள்.
#6. எங்களுக்குத் தெரிந்து, ஆன்மிகம், கர்நாடக சங்கீதம் பற்றிய பதிவுகள் அதிக அளவில் வரவேற்பு பெறுவதாகத் தெரியவில்லை. விதிவிலக்குகள் சில இருக்கலாம்.
#7. பதிவுலகில் கவிதைகள் பதிவது என்பது ஒரு ரிஸ்கான சமாச்சாரம். வெகு சிலரால் மட்டுமே கவிதை கொண்டு வாசகர்களைக் கவர இயலும். கவிதைகள் பதிவோருக்கு, ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கின்றது என்று அவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில், கவிதைப் பதிவுகள் பயனுள்ளவையே!
#8. திரை இசை, திரைப் பின்னணிப் பாடகர்கள், நடிகர்கள் பற்றிய பதிவுகள்,புத்தக விமரிசனம், திரைப்பட விமரிசனம், சொந்த அனுபவங்கள், பயணக் கட்டுரைகள், மற்றவரைக் காயப்படுத்தாத நகைச்சுவைப் பதிவுகள் ஆகியன பதிவுலகில் அதிக அளவில் வரவேற்பு பெரும் விஷயங்கள்.
#9. தலைப்பு முக்கியம் தலைவரே! பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கின்றோம் என்பது மிகவும் முக்கியம். பதிவு பக்கம் வருபவர்களில், பத்துப் பேர்களில் இரண்டு பேர்தான் பதிவை முழுமையாகப் படிக்கின்றார்கள். மீதி எட்டுப் பேர் தலைப்புகளைப் படித்துவிட்டு, அது பிடித்திருந்தால்தான் பதிவைப் படிப்பார்கள். உங்கள் பதிவுகளில், அதிகம் ஹிட் வாங்கிய பதிவுகள் என்னென்ன, அதன் தலைப்பு என்ன, அதற்கு நீங்கள் கொடுத்த லேபிள் / கீ வார்த்தைகள் என்ன என்று கொஞ்சம் அலசிப் பாருங்கள். ஹிட் சமாச்சாரம், பதிவர்கள், மற்றும் அவர்களைப் பின் தொடர்பவர்களின் இயல்பைப் பொறுத்தது. எதையும் இதுதான், இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.
#10. மனிதராகப் பிறந்தவர்கள் அனைவரும் சமம். யாரும் மற்றவர்களைவிட உயர்வோ தாழ்வோ கிடையாது. உங்களுக்கு எப்படி ஒரு நம்பிக்கை மற்றும் கருத்து கொள்ள, சொல்ல உரிமை இருக்கின்றதோ, அதே போல, எதிரான நம்பிக்கை, கருத்துகள் கொள்வதற்கு, சொல்வதற்கு மற்றவர்களுக்கு உரிமை உண்டு. அதை இங்கிதமாக சொல்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள். பதிவுலகில் சண்டை, சச்சரவுகளை ஏற்படுத்தும் பதிவுகள் வேண்டாம்.
================= ============================== ======================
மீண்டும் நாளை சந்திப்போம்!