07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 25, 2007

முத்துச்சரம்

எப்பவும் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி
பெரியவங்களுக்கு மரியாதை செலுத்தணும்னு சொல்வாங்க.
நானும் ரொம்ம்ப மரியாதையான பையன் அதனால வலைப்பூ
உலகத்துலயும் நிஜ உலகத்துலயும் கலந்து இங்கே இயங்கிக்
கொண்டிருக்கும் எழுத்தாளர்களை பார்க்கலாம்.


துளசிதளம் துளசிகோபால்


இவங்ககிட்ட இருக்கும் முக்கியமான விஷயமே உற்சாகம் என்ற
ஒரு வார்த்தைதான். இவர் பதிவை வாசிக்கும்போது அவங்க
நேர்லயே பேசற மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி வலைப்பதிவுல
இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் பூ இவருடையது.
நான் வலைப்பூ எழுத வந்த புதிதில் பின்னூட்டமிட்டு
ஊக்கப்படுத்தியவர் எனக்கு மட்டுமல்ல இன்றுவரை புதிதாக வந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் பின்னூட்டமிட்டு
உற்சாகப்படுத்துவார். வருங்காலத்துல குழந்தைகளுக்கு
பாட்டிகள் கதை சொல்லி சந்தோஷப்படுத்த மாட்டாங்க அந்த
குறையை துளசிதளம் தீர்க்கும். முயற்சி செய்தால் நியூசிலாந்து
பகுதி மற்றும் வீடு "வா வா"ங்குது தொடர்களை புத்தகமாக
வெளியிடலாம். பேதம் பார்க்காமல் அன்பு பாராட்டும்
இவரைப்போல இன்னொருத்தர் இருக்கார். அவரைத்தான் அடுத்து
நாம பாக்கபோறோம். I am very happy to welcome Mrs.வல்லிசிம்ஹன்.
(நேத்து காபி வித் அனுவ பத்தேன் அந்த எபெக்ட்)

வல்லிசிம்ஹன்

இவங்க பதிவை அதிகமா வாசிச்சது கிடையாது ஆனா என்னை
மாதிரியே எழுத்துலயும் வளர்ந்த குழந்தை. எப்படி தேடினாலும்
எழுத்தில் அன்பை மட்டுமே காணமுடியும். இவரை நேரில்
சந்தித்தபோது குழந்தையிடம் பேசியது போல அனைவரிடமும்
பேசியது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. பெரும்பாலும்
ஆன்மீக பதிவுகள் மட்டுமே எழுதுவார். நன்றாக புகைப்படம்
எடுப்பவர். எந்த பதிவுக்கு சுட்டி கொடுக்கறதுன்னு தெரில.
முழுவதும் அப்படியே படிக்கலாம் எல்லாமே சின்ன சின்ன
பதிவுகள்தான்.

கீதா சாம்பசிவம்

மற்ற இரு பதிவர்கள் மாதிரி இவங்க கிடையாது. கொஞ்சம்
இல்ல நிறையவே லூட்டி அடிப்பாங்க. எல்லாமே ரசிக்கிற
மாதிரி இருக்கும். திரும்பி பார்க்கிறேன் (கழுத்து வலியோடு)
இந்த தலைப்பை ரொம்பவே ரசித்தேன். தலைவின்னு சொல்லி
இவங்க படுத்துன பாடு மறக்கவே முடியாது. இவங்களுடைய
பதிவையும் நெடுநாளா வாசிக்கல. அதனால எந்த பதிவை
சிலாகிச்சு எழுதறதுன்னு குழப்பமா இருக்கு அதனால பூவின்
சுட்டிய சொடுக்கி பாருங்க பயங்கரமான சுவாரசியம் உள்ள
பதிவர். ஆன்மீக பதிவுகள் அதிகமா இவரும் எழுதுவார்.
ஏன் இந்த மாதிரி பெரியவங்க எல்லாம் ஆன்மீக பதிவுகள்
மட்டும் நிறைய எழுதறாங்கன்னு தெரில. :)

டோண்டு ராகவன்

வலைப்பூக்களில் மிகவும் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் இவர்
என்றாலும் மிகவும் பழுத்த அனுபவசாலி. இவரிடமிருந்து
கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முதலில்
சொல்ல வேண்டியது மொழிப்புலமை இரண்டாவது அத்தொழிலில்
கொண்டிருக்கும் நேர்த்தி. CPWD அனுபவங்கள் மற்றும் IDPL
நினைவுகள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. மத்திய
அரசு ஊழியர், அரசியல் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்,
மூத்த வலைப்பதிவர் இப்படி பன்முக புலமை பெற்றவர்
இவரின் பிடிவாதகுணம் வியப்பான விஷயங்களில் ஒன்று.

டாக்டர் டெல்பின்

முதலில் இவங்கள பத்தின பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை
ஆனால் எதேச்சையாக இவரின் அபாயத்து பாட்டி என்ற பதிவுதான்
என்னை மிகவும் கவர்ந்தது. வலைப்பூக்களில் மருத்துவ
விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக பதிவுகள் எழுதுவதை அனைவரும்
வரவேற்க வேண்டும். அடுத்ததாக இவர் வலைப்பூவின் தலைப்பு
"இலையிதிர்காலம்" கேட்கவே அழகான பல வடிவங்களை
மனதுக்குள் ஏற்படுத்தும் வார்த்தை.

தருமி

பேராசிரியர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், அனுபவசாலி,
அரசியல் விமர்சகர், மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்,
நல்லவர், வல்லவர், மதுரைக்காரர், கேள்வி கேட்பதில் வல்லவர்
(பதிலும் தெரிந்தே இருக்கும்) இப்படி நிறைய சொல்லலாம்.
புதிதாக வலைப்பதிய வருபவர்கள் காமா சோமா என்று பதிவு
எழுதாமல் மூத்த வலைப்பதிவர்களை பார்த்து உபயோகபூர்வமாக
எழுத வேண்டும். ஏன் சொல்றேன்னா இவருடை வலைப்பூ
பார்த்த பிறகுதான் பதிவு எழுதுனோம்னா அதுல பிரயோஜனமா
எழுதனும் அட்லீஸ்ட் சுவாரசியமாவாச்சும் எழுதனும். ரெண்டும்
இல்லாம நாலு பேர் மட்டும் ரசிக்கற மாதிரி கும்மிகள் அடிக்கறது
அந்த நேரத்துக்கு வேண்டுமானால் சுவாரசியமா இருக்கலாம்.
பின்னால நாம் என்ன எழுதிருக்கோம்னு பாக்கும்போது
"ஒண்ணுமில்லன்னு" தோணிட கூடாது. இந்த அனுபவம் இவர்ட்ட
கத்துகிட்டதுதான்.

இன்னும் அபிஅப்பா, கண்மணி டீச்சர், இலவசகொத்தனார்,
பெனாத்தல் மற்றும் அண்ணாச்சி அவர்கள் விடுபட்டுள்ளார்கள் அவர்களுக்கும் என் முதற்கண் மரியாதைகள். பதிவு ரொம்ப
பெருசா போச்சு அதனால அடுத்த பதிவுல எழுதறேன். :))
மேலும் வாசிக்க...

Monday, December 24, 2007

பேரன்போடு ஒரு சரம்

தனக்கான வலைப்பதிவில் அதிகம் எழுதாவிட்டாலும் பாலராஜன்கீதா அவர்கள் தன் வலைச்சரப்பதிவுகளில் விரிவாகவே அறிமுகங்களை வழங்கினார். எதை எழுதுவது எதை விடுவது என்று இணைப்புகளை அள்ளித்தந்தார். மேலும் பதிவுகளை இடுவதில் மழை காரணமாக இணையத்தொடர்பு பிரச்சனை அவருக்கு இருப்பதால் இதுவரை நமக்களித்த சரத்திற்கு பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி .

--------*******-------

அடுத்ததாக எழுத வரப்போறவர் பற்றி என்ன சொல்றது தலைப்பை வைத்தே பாதி பேரு கண்டு கொண்டிருப்பாங்க.. இந்த இந்த மாதிரி தம்பிகதிர்ன்னு ஒருத்தர் இருக்காருங்க (இவ்வளவு சொன்னாப்போதுங்காறார் ஆனா விடலாமா ) எந்த எந்த மாதிரி பதிவுகள் அவரைக்கவர்ந்ததுன்னு சொல்லபோறார் அன்போடும் பேரன்போடும் மட்டுமே இருப்பவராச்சே வாங்க படிக்கலாம்.... :) பொதுவா பார்க்கறவங்க பேசறவங்க எல்லா விசயத்தையும் அவர் பார்வையில் விமர்ச்சிக்கிறவர் எனவே பதிவுகளைப்பற்றிய விமர்சனங்களை விரிவாகத் தருவார் என நினைக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Sunday, December 23, 2007

பேரன்புடன் ஒரு சரம்

வலைச்சரம் இந்த வாரம் யாராக இருக்கும் என்று ஆவலாக
எட்டிப் பார்க்கும் வாசகர்களுக்கு எனது வணக்கம்.
விதிமுறைகளின்படி என் முதல் சரம் சுயபுராணமா இருக்க
வேண்டும் என்பதால் இங்கே எனது சுயபீத்தல்கள் மட்டுமே
இருக்கும். ஏற்கனவே பலர் வாசித்திருப்பீர்கள்
மீண்டும் அதை நினைவு படுத்தி உங்களை காயப்படுத்த
விரும்பவில்லை. இதுவரை என் பூவை வாசித்திராதவர்கள்
இச்சரத்தின் முதல் பூவின் மூலம் என்னை தெரிந்து கொள்ளலாம்.

ஏனைய நண்பர்களை போலவே எந்த நோக்கமும் இன்றி எழுத
ஆரம்பித்தவன் இன்றுவரை அதையே தொடர்கிறேன். என்
வலைப்பூவை ஆரம்பகாலத்தில் இருந்து வாசித்தவர்கள் இப்போதுள்ள மாற்றத்தை எளிதாக காணலாம். ஆரம்பத்தில் நகைச்சுவையாக
எழுதினேன். அப்போதுதான் நிறைய பேர் என்னை கவனித்தார்கள்
எனக்கு நிறைய நண்பர்கள் தந்த தண்டவாளத்துல ஒண்ணுக்கு
போனா தப்பா? பதிவுதான் என் முகவரி. இதை எழுதும்போது
பயங்கர காமெடின்னு நினைச்சேன், ஆனா இப்ப வாசிச்சா எனக்கே
சிரிப்பு வரமாட்டேங்குது.

வாலிப வயசு1 2 3 4 என்ற நகைச்சுவையும் வெகுவாக எல்லோராலும வாசிக்கப்பட்டது. தெருக்கூத்து பற்றி எழுதியது கிராமத்தையும்
மண்வாசனையும் பிரிந்து நகரத்து புழுதியில் கரைந்துவிட்ட
உள்ளங்களை என் பக்கம் சேர்த்தது. எப்படி என்ற வரிசையில்
அனைவரும் பதிவு எழுதிக் கொண்டிருந்த நேரம் வித்யாசமாக
வறட்டி தட்டுவது எப்படி? என்று நகைச்சுவையாக பதிவு போட
கிராமத்து நினைவுகளை கிண்டி கிளறி நோண்டி விட்டதாக பலர்
குற்றம் சாட்டினார்கள். மேலதிகமா ஒரு அம்மணி மாட்டு
சாணியவே பாத்ததில்லன்னு பின்னூட்டத்துல சொன்னாங்க.

இப்படி நகைச்சுவையா எழுதிட்டு இருந்தப்பதான் கொஞ்ச நாள்ல
போர் அடிச்சது(மேட்டர் இல்லன்றத இப்படியும் சொல்லலாம்)
ஆங்கிலப் படங்கள் பாத்துட்டு உதார் விடறது. சிறுகதை எழுதறதுன்னு
வேற பக்கம் போனேன். பள்ளில படிக்கும்போதே ஆங்கிலப்படங்கள்
அதிகமா பார்ப்பேன் அதுல்லாம் காட்சில்லா, ஜுராசிக் பார்க் மாதிரி
இங்க ரசனை வேற மாதிரி போய் நிஜங்களின் நிழல்களை உணர்த்தும்
படங்களை பார்க்க ஆரம்பிச்சேன். அப்படி பார்த்த படம் த்ரீ பரியல்ஸ்
(three Burials) நட்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து
எடுத்திருக்கும் படம் உலகத்துலயே இது ஒண்ணுதான்.

படைப்புகள்ல எனக்கு மிகவும் பிடித்தமானது சிறுகதைகள்தான்
சொல்ல வரும் கருத்தை, உணர்வை காட்சிப்பூர்வமா பதிவிக்க
சிறுகதையால் மட்டுமே முடியும்னு நம்பறேன். அந்த வகைல
என்னோட சிறுகதைகளுக்கு ஓரளவு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்
வாசகர்கள். எழுதின சிறுகதைகள் எல்லாமே சொந்த வாழ்விலும்
நேரிலும் பார்த்த அனுபவங்களே, ஒன்று கூட கற்பனை அல்ல.
எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருந்தாலும் எனக்கு
பிடிச்சதா மாணிக்கம் பொண்டாட்டி, பூனைகளுடன் உறங்கும்
கோபால் மற்றும் அன்பின் நிராகரிப்புகள் என்ற மூன்று கதைகள்.
சமீபத்தில் எழுதிய ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்
கூட புதிய முயற்சியாக trans gender சப்ஜெக்டை எடுத்திருந்தேன்.
இவை எல்லாம் சிறந்த கதைகள் என்று சொல்ல முடியாது
ஆனால் நல்ல துவக்கம் என்று சொல்லலாம்.

எனக்கு எல்லா விஷயத்திலும் சீக்கிரமே சலிப்பு வந்துவிடும்
ஆனால் சலிப்பு வராத விஷயம் இசை, சினிமா, புத்தகங்கள். இங்க
புத்தகங்கள் அதிகமா கிடைக்காட்டியும் நண்பர்கள் மூலமா
புத்தகங்கள் கிடைச்சது. புயலிலே ஒரு தோணி படிச்சதுக்கு
அப்புறம்தான் என்னோட வாசிப்பும் சரி எழுத்தும் சரி வேறு
தளத்துக்கு மாறுச்சு. அற்புதமான நாவல் பிறகு அய்யனாரிடம்,
ஆசிப்பிடமும் ஆட்டையை போட்டு படித்த நூல்களை வலைப்பூவில்
நூல்நயம் என்ற பிரிவின் கீழ் பீற்றிக்கொண்டதை பார்த்து
எலக்கியவாதி என்று ஊர் தூற்றியது உலகறிந்த கதை. அந்த
நூல் அறிமுக பதிவுகளில் எனக்கு பிடித்தது சதுரங்க குதிரை

கவிதை முயற்சி எல்லாமே சொதப்பலாதான் முடிஞ்சிருக்கு
ஆனால் அக்கா பிறந்தநாளுக்காக எழுதின கவிதையான
பேரன்பு கொண்டவள் என்ற கவிதைதான் எழுதியதிலேயே
சிறந்ததுன்னு சொல்வேன். தயவு செய்து கவிதை லேபிள் க்ளிக்கி
வேறெந்த கவிதையும் படிச்சிங்கன்னாஎன்னோட
இமேஜே காலியாகிடும்.

பத்து சுட்டிகளுக்கு மேல கொடுக்க கூடாதுன்னு பாத்தேன்.
பில்டிங்காச்சும்ஸ்ட்ராங்கா குடுப்பமேன்னு ஆர்வத்துல
அதிகாயிடுச்சு.
மேலும் வாசிக்க...

Friday, December 21, 2007

படித்ததில் பிடித்த இடுகைகள்

படித்ததில் பிடித்த இடுகைகள்

தமிழ்ப் பதிவுகளில் படித்த இடுகைகளில் பிடித்தவை அதிகம் இருப்பினும் அவற்றில் சிலவற்றை இங்கே அளிக்கிறேன்.

உங்களைப்போலவே தனித்துவமான இளவஞ்சியை வலையுலக வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர்.

காவல்துறையிலிருந்த தன் அப்பாவின் என்ஃபீல்ட் புல்லட் குறித்த இடுகையைச் சாதாரணமாக ஆரம்பித்து இறுதியில் வாசிப்பவரின் மனதைக் கவர்ந்திருப்பார்.

வென்று வாடி என் மகளே என்று தன் மகளிடம் சொல்லி அவளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைக்கும் இனிய முதல் நாளில் அவளுடன் இல்லாமல் இப்படி அயல்நாட்டில் இருக்கிறோமே என்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை இங்கே.

திருமணம் செய்துகொள்ளப்போகும் ரங்கமணி தங்கமணிகளுக்காகக் கல்யாணமாம் கல்யாணம் என்ற சிறு தொடர் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6 வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது எனலாம்.

எமிலி என்றொரு தோழி என்ற இடுகையில் தோழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க அது மிக வறட்சியாக இருக்கும் என்று தன் கட்சிக்கு ஆள் சேர்க்கிறார்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நாராயண் வாசகர்களைக் கவருவதற்காகவே உருப்படாதது என்பதைப் பதிவின் தலைப்பாக வைத்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

கணினி க்ராஷ் ஆனால் வரக்கூடிய பெரும் பிரச்சனை எதுவும் வராமல் காத்துக்கொள்ளும் சர்வம் செர்வர் மயம் விவரத்தைத் தருகிறார்.

இந்த இடுகையில் இந்தியாவின் சமச்சீரின்மைக்குக் காரணமாக பல கேள்விகளை எழுப்புகிறார்.

இறை நம்பிக்கையற்ற தன்னைப் போன்றவர்களுக்குக் கூட கடவுள் எனக் கருதப்படும் ஒரு உருவத்தினை இப்படிப் போட்டிருப்பது சங்கடத்தினை உண்டாக்குகிறது என்கிறார்.

எங்கோ போகிறோம் ஆனால் எங்கு போகிறோம் என்று தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார் இந்த இடுகையில்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நகைச்சுவைக் கலக்கல் பதிவர்கள் என்றால் எனக்கு முதலில் நினைவிற்கு வருபவர் டுபுக்கு அவர் எழுதியுள்ள ஜொள்ளித்திரிந்ததொரு காலம் தொடர் பதிவுகள் நகைச்சுவையின் உச்ச கட்டம்.

தனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி தனக்கே உரிய நையாண்டியுடன் படிச்சவன் பதிவக் கெடுத்தான் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

தங்கமணிக்காக டிஷ்வாஷர் வாங்கியதன் பின்புலத்தினை இங்கே வாசிக்கலாம்.

இந்த இடுகையைப் படித்தவுடனே நமக்கு எழும் எண்ணம் நாமும்தான் பல திருமணங்களுக்குச் சென்றிருக்கிறோமே இதுபோல நாம் ஏன் முன்னமே எழுதவில்லை என்பதாக இருக்கக்கூடும்.

பெரியவனா(ளா)னதும் என்னவா ஆகப் போற? என்பதற்குக்கூட இவ்வளவு நகைச்சுவையாக எழுத இயலுமா ?

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

அடுத்ததாக என்னைக்கவர்ந்த பதிவு மடத்துவாசல் பிள்ளையாரடி (பதிவர் கானா பிரபா)

கடந்த இரு வருடங்களாக வலை பதிந்து வரும் இவர், வருட இறுதியில், தான் அந்த வருடத்தில் எழுதிய இடுகைகளைத் தொகுத்து ஒரு இடுகையாகத் தருகிறார். மற்ற பதிவர்களும் இந்த உத்தியைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 2007ஆம் ஆண்டிற்கான தொகுப்பினுள் 2006ஆம் ஆண்டிற்கான தொகுப்பின் சுட்டியையும் அளித்திருக்கிறார்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மனதைக் கவர்ந்த பல பதிவுகளில் ஒன்று வே.சபாநாயகம் அவர்களின் நினைவுத் தடங்கள்

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
மேலும் வாசிக்க...

Wednesday, December 19, 2007

எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?

எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?

படித்த பதிவுகளில் பிடித்த இடுகைகளைத் தொகுப்பது எளிதான செயல் என்று நினைத்திருந்தேன். ஆனால் செயலாக்க முயன்றபோதுதான் ஒவ்வொரு பதிவரும் எழுதிய இடுகைகளில் சிறப்பான இடுகைகளைத் தொகுக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு தனி இடுகையாகும்போல் உள்ளது. முதல் தவணையாக பின்வருவனவற்றை இங்கே இடுகிறேன்.

தமிழ்ச்சொல் ஆராய்ச்சியாளர் இராம.கி. அய்யா அவர்களின் வளவு பதிவினைப் பலர் அறிந்திருக்கக்கூடும். அதில் வந்த இடுகைகளில் சில :

வலைச் சொற்களுக்கு (webterms) இணையான தமிழ்ச்சொற்களையும் விளக்கங்களையும் இங்கே காணலாம்.

"இனி" பின்னொட்டாக வரும் கணினி, கவிதாயினி, தொகுப்பாளினி சொற்கள் சரியா தவறா என்ற ஐயத்திற்கு விளக்கத்தை தருகிறார் இங்கே.

சந்த வசந்தம் மடற்குழுவின் "கையிற் கிடைத்த கனி" என்னும் பாட்டரங்கத்தில் பங்கேற்று மரபு வெண்பா வடித்து மகிழ்விக்கிறார்.

திரு நாகூர் ரூமி எழுதி திண்ணையில் வெளிவந்த "தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும்" என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக சற்றே அறச்சீற்றத்துடன் இட்ட இடுகை இதோ.

தேன்கூடு திரட்டி நடத்திய சுடர்வழிச்செய்தி தொடர் ஓட்டத்தில் அய்யா அவர்களின் இடுகை மூலம் காளையார்கோவில் பற்றிய பல புது செய்திகளையும் தமிழர்களின் தாழ்வு மனப்பாங்கினையும் அறிவியல் தமிழ் வளரவேண்டிய நிலைமையையும் அறிந்துகொள்ளலாம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
அடுத்ததாக விரிவெளித்தடங்கள் செல்வராஜ் அவர்களின் பதிவில் பிடித்த இடுகைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் அவற்றைத் தேர்ந்தெடுக்கச் சற்றே கடினமாக இருந்தது.

இந்தப் பதிவில் வருமுன் காப்போம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

கணினியில் பயன்படுத்தப்படும் ஐப்பீ முகவரி குறித்து எளிதில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் இங்கே அளித்திருக்கிறார்.

தேன்கூடு சாகரன் அவர்களுக்கு இதன்மூலம் நினைவஞ்சலி செலுத்துகிறார்.

இந்த இடுகையை வாசித்ததும் காரணமறியாச் சில மகிழ்தருணங்கள் உங்களுக்கும் நிகழ வாய்ப்புள்ளது.

குடும்பத்தினர் அடிக்கடி கலந்து பேசி மகிழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த இடுகையை ஏற்றுக் கொள்ளலாம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
வலை உலகிற்கு வந்த தாய்க்குலத்தில் ஒருவரான அப்டிப்போடு அவர்களின் அரசியல் அறிவு அபாரமானது எனலாம். சென்ற மாநிலத் தேர்தலில் அவரின் கணிப்புகள் ஏறக்குறைய சரியாகவே இருந்தன என்பதை அவரின் இடுகைகளை வாசித்தவர்கள் அறிவர். நல்ல வாய்ப்புகள் இருந்தும் தான் தமிழக அரசியலில் புக விரும்பவில்லை என்றுகூட அவர் ஒரு இடுகையில் எழுதியிருந்தார்.

அவர் தன் அன்பிற்குரிய பாட்டியை நினைத்து எழுதிய இடுகை இங்கே.

இந்த இடுகையில் அவரின் மஞ்சள் பை மகிமையைக் காணலாம்.

பினாத்தலாரின் வைஃபாலஜி தொடங்குவதற்குப் பல மாதங்கள் முன்பே கணவர்களை எரிச்சல்பட வைத்தார் :-)

இங்கே அவருடைய வாசிப்பு அனுபவத்தை அறிந்துகொள்ளலாம்.

அவர் எழுதிய தொடர் இடுகைகள் அரசு ஊழியர்கள் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4 வாசித்த அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
தமிழ் வலை உலகத்தின் முன்னோடிகளுள் ஒருவர் கவினுலகம் நா.கண்ணன்.

அவர் தமிழ்த்திரைப்படங்களைப்பற்றி எழுதிய தொடர் இடுகைகளை இங்கே காணலாம்.

சரஸ்வதி பூஜை குறித்துத் தான் வாசித்த கட்டுரை ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

இந்த இடுகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் புத்தம் புது பத்து கட்டளைகளை வாசிக்கலாம்.

பெரியார் திரைப்படம் குறித்து இப்படி எழுதியுள்ளார்.

தமிழ் உரைநடைப் பேச்சில் பிறமொழிக் கலக்கலை இங்கே சாடியுள்ளார்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
தமிழ் வலைஉலக ஜிரா அவர்களின் இனிய(து கேட்கின்) இடுகைகளைச் சுட்டிக் காட்டுவது மிக எளிது. அது பதிவின் சுட்டிதான் - எல்லா இடுகைகளும் இனியவைதாம். சிரமம் பார்க்காமல் எல்லா இடுகைகளையும் வாசித்து இன்புற வேண்டுகின்றேன்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
சுட்டிகளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். பின்னூட்டத்தில் தெரிவித்தால் சரி செய்துவிடுகிறேன்.
அடுத்த இடுகையில் மீண்டும் சந்திப்போம்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது