கடவுள் வாழ்த்து
===============
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
மலர்மிசை ஏகினான் மாணடி
சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்
ஆசிரியருக்கும் மற்றும் - வலைச்சரம் அனைத்து நிர்வாகிகளுக்கும்
முத்துக்கள் பல எடுத்து
ரத்தினங்கள் பல சேர்த்து
வைரங்கள் இடையே பதித்து
கோமேதகத்தை அதனுடன் சேர்த்து
மாணிக்கங்களையும் பதித்து
எந்திரங்கள் இல்லாமல் - கை
என்ற இயந்திரத்தைக் கொண்டு
ஒவ்வொன்றாய் கோர்த்து
வலைச்சரம் தொடுத்த
பல முத்து சரங்களையும்
நான் தொடுத்த மாலையுடன்
சேர்த்து மாலையாக்கி - மணி
மாலையாக்கி அணிவிக்கின்றேன் .
வணங்கி ஏற்கிறேன் வலைச்சர ஆசிரியர் என்ற மேன்மையான பொறுப்பை.ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் வலைச்சரம்ஆசிரியர்
சீனா அவர்கள். ஆசிரியர்
சீனா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு முன்னால்
நண்பர் ஜமால் அழகாக சரம் தொகுத்து வழங்கினார். இதற்கு முன் தொகுத்தவர்களும் மிக அழகாக தொகுத்து முடித்தார்கள். அந்த அளவிற்கு என்னால் முடியமா என்று தெரியவில்லை. தவறுகள் இருந்தால் சுட்டி காட்டி என்னை வழி நடத்தஆசிரியர்க்கும், என் நண்பர்கள் குழுவிற்கும் முழு சுதந்திரம் அளிக்கிறேன்என்பதை இங்கு மிகவும் தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.
வலைச்சரம் இப்படி ஒரு தமிழ் வலைப்பூ கதம்பம் இருப்பதே எனக்கு தெரியாது. இந்த வலைப்பூ உலகத்தில் எந்த சட்ட திட்டங்களும் தெரியாது, இன்னும் சொல்லபோனால் எதுவுமே எனக்கு தெரியாது, தினம் தினம் நான் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். தினம் தினம் நான் அறிவது எல்லாமே புதியவைகளாக நினைக்கிறேன்.
எது முடியும் எது முடியாது எனறெல்லாம் நான் யோசிக்க வில்லை. நண்பர் சீனா சொன்னார் வானமே எல்லை என்று. ஆம் எனது மனதில் ஓடும் மந்திரமும் அதே தான். என்னால் முடியும் என்ற நம்பிக்கை அது எனக்கு ரொம்ப முக்கியமா பட்டது. "நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலே அடக்கினாராம் ஆதி சங்கரர், கடலையே குடித்தாராம் அகத்தியர்." எந்த காரியத்தை செய்தாலும் கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு செய். அப்படி செய்தால் வெற்றி நிச்சயம் என்று எங்க வீட்டு பெரியவங்க சொல்லுவாங்க. அதை மனதில் வைத்து இதோ ஆரம்பித்து விட்டேன் எனது வலைச்சர பயணத்தை. வாருங்கள் போகலாம்.
வலைச்சரம் எனக்கு அறிமுகம் ஆனது, அது ஒரு சுவையான விஷயம்.
1. திரு.ச்சின்னப்பையன் இவர் தான் எனக்கு வலைச்சரத்தை அறிமுகப்படுத்தியவர். அந்த நல்ல உள்ளத்திற்கு இன்று இந்த மேடையில் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.
திரு.ச்சின்னப்பையன் அவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும்போது என்னை அறிமுகப் படுத்தினார்கள். அப்போ நான் எழுதிய இரண்டு பதிவுகள் அறிமுகம் ஆனது. அதில் இருந்து எனக்கு நிறைய பிண்ணுட்டங்களும் வந்தன.
நன்றி திரு.ச்சின்னப்பையன்.
2. திரு. கார்க்கி. இவர் எனக்கு வலைச்சரத்தில் இரண்டாவது அறிமுகம் கொடுத்திருக்கிறார். அந்த அறிமுகம் ஆன பதிவு எனக்கு தெரியாது. சில காரணங்களினால் நான் வலைப்பதிவு பார்க்காமல் இருந்தேன். அப்போது
நண்பர் ஜமால்,
நண்பர் கார்கி எனக்கு கொடுத்திருந்த அறிமுகம் பற்றி தொலை பேசி மூலம் தெரிவித்தார். மன்னிக்கவும்
கார்க்கி. காலம் கடந்து பார்த்து பிண்ணுட்டமும் அளித்தேன்.
நன்றி திரு. கார்க்கி.
சுய புராணம்
===========
நான் ஹைதையில் பிறந்து பள்ளி படிப்பு புதுகையில் முடித்து, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்து தற்சமயம் கணினித் துறையில் ஒரு உயர் பதவி வகித்து வருகிறேன்.
நான் பெண் என்பதால் பெண்களுக்காக மட்டும் எழுதுவேன் என்று நினைக்காதீர்கள். ரம்யா ஆண் / பெண் இரு பாலோருக்கும் தோழியானவள், சகோதரியானவள்.
நான் வலைப்பதிவிற்கு வந்தது சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க. நான் வாழ்க்கையை தொலைத்த, வாழ்வில் ஏமாந்த, வாழ்க்கை வாழ பயந்த ஒரு பிரிவிற்க்காகத்தான் இந்த வலை பதிவில் எழுத வந்தேன். அவர்களுக்கு மனத்தைரியமும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும், எந்த சமயத்திலும் தன்னைக் காப்பற்றி கொள்வதில் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு "வாழ்விழந்த பெண்கள் மறுவாழ்வு திட்டம்" என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தியது. அந்த அமைப்பு அரங்கேறும் நாளில் எனக்கு அவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள். ஏனெனில் நான் அங்கு அருகில் ஒரு பிரபல கணினி மையம் வைத்து நடத்திக் கொண்டு இருந்தேன். வேலைக்கு போவதை விட சொந்த தொழிலாக இருந்தால் பலருக்கு உதவலாமே என்ற ஒரு எண்ணம் தான் நான் முதலில் தொடங்கிய தொழிலுக்கு காரணம்.
அந்த மாவட்டத்தின் DRO அவர்களும் ஒரு பெண்தான். என் கணினி மையம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்தது. நானும் அந்த அழைப்பை ஏற்று கணினி மையத்தின் "நிர்வாகி" என்ற அடை மொழியுடன் அந்த விழாவிற்கு சென்றேன். கணினி பாடம் எல்லாம் எடுத்ததினால் மேடை பயம் எனக்கு இல்லை. ஏதோ அழைத்தார்கள் என்றுதான் போனேன்.
ஆனால் எனக்கு அங்கே கிடைத்த மரியாதை உள்ளதே என்னால் மறக்க முடியாது. பெரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்த மேடையிலே எனக்கும் ஒரு இடம். நான் உள்ளே நுழைந்த உடன் விழா மேடை அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீர் என்று கூட்டத்தில் ஓர் சல சலப்பு. என்ன வென்று பார்த்தால் அதிகாரிகள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட்டார்கள்.
கடவுள் வணக்கம் பாடி முடித்தவுடன் அந்த பெண் DRO என்னை மேடையில் வந்து அமருமாறு சொல்லி அனுப்பினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கட்டாயப் படுத்தியதால் மேடைக்கு செல்ல வேண்டியதாகியது.
அப்போதுதான் உணர ஆரம்பித்தேன் "கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு ". திடீரெண்டு என் அருகே ஒரு அதிகாரி வந்தார் உங்களை எங்கள் ஊர் மாவட்ட ஆட்சியாளர் பேசுவதிற்கு தயார் படுத்திக்க சொன்னாங்கன்னு சொன்னாரு.
ஐயோ மேடையில் பேசவா. எனக்கு முன்னறிவிப்பு எதுவுமே கொடுக்க
வில்லையே. என்ன பேச வேண்டும் என்று தலைப்பும் முன்பே கூறி இருந்தால் என்னை நான் தயார் படுத்திக் கொண்டிருப்பேனே, அதுதான் உதறல். அவர்களே அப்போதுதான் முடிவு செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். நான் என்ன பேச என்னால் முடியாது என்று மறுத்து விட்டேன். இல்லை பேச வேண்டும் என்று கூறி விட்டு அந்த அதிகாரி வெற்றி சிரிப்புடன் சென்று விட்டார்.
எனக்கு என்ன பேசுவது என்று ஒன்றுமே புரியவில்லை. ஆனால் எனக்குள் எப்போதும் ஒரு தைரியம் உண்டு. எங்கு சென்றாலும் வெற்றியுடன் தான் வருவேன் என்று என் உள் உணர்வு கூறிக் கொண்டே இருக்கும். அந்த தைரியத்தில் நான் பேசவேண்டிய நேரம் வந்தது. 3000 பேர் கூடி இருந்த சபையிலே என்ன பேசபோறோம்? உள்ளே உதறல், வெளியே தெரியலை. மைக் முன் செல்லும் வரைதான் போராட்டம். அதன் பின் என்ன, நான் அமர்ந்தது முதல் அங்கே நடந்த எல்லாவற்றையும்தான் கவனித்து வைத்திருந்தேனே, அது மிகவும் பயன் பட்டது நான் மேடையில் மேற்கோள் காட்ட. அப்பெண்களின் அறியாமைகளையும் அவர்களுக்குத் தேவையான தொழில் தொடங்க அறிவுரைகளும் அரங்கேற்றினேன். தகுதிக்கேற்ப தொழில் தேர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் கூறினேன். மேலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான வழி முறைகளை விரிவாகக் கூறினேன்.
எனக்கு பேசக் கொடுத்த அவகாசம் 20 நிமிடங்கள் மட்டும்தான். ஆனால் நான் பேசியதோ 45 நிமிடங்கள். அமைதி காத்து அனைவரும் நான் பேசுவதை கூர்ந்து கவனித்தார்கள். அது மிக பெரிய விஷயமாக எனக்கு இருந்தது. பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தது. அட பரவா இல்லையே நம்ப மானம் காப்பற்றப் பட்டு விட்டதாக என்னை நானே தேற்றிக் கொண்டு விழா மேடையில் இருந்து கீழே இறங்கினேன்.
மேடையை விட்டு இறங்கியவுடன் என்னிடம் அந்த சகோதரிகள் "ஆட்டோகிராப்" வாங்கினார்கள். அந்த நிகழ்வுகளை அசைபோட்டால் இப்போதும் கண்கள் பனிக்கின்றன. அங்கு நடந்தவைகளை என் சகோதரி பெருமையாக கூறும்போது மறுபடியும் என் கண்கள் பனித்தன. எனக்குள் ஒரு பொறி இந்த அபலை பெண்களின் அறியாமையை போக்க இந்த சமுதாயத்திற்கு என் பங்கு என்ன என்பதை உணர்ந்து பேசினேனே. பல வாக்குறிதிகளை கொடுத்தேன். அதை அதிகாரிகள் எதிர்பார்த்த நேர அவகாசத்தில் செய்தும் முடித்தேன். இன்றும் அவர்கள் மத்தியில் எனக்கு ஒரு நல்ல பெயரும், மதிப்பும் இருக்கிறது. இந்த என் வாழ்வில் கடந்து போன நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்த ஆசிரியர் மதிப்பிற்குரிய சீனா அவர்களுக்கு மறுபடியும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பின் என் பல சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். இப்போது சுற்றுகிறேன் உலகத்தை. என்னை சுற்றும் உலகம் அதை நான் சுற்றி வருவதும் ஒரே விளையாட்டுதான் போங்கள். அப்போது நலிவடைந்திருந்த பெண்கள் இப்போது பொருளாதாரத்தினால் உயர்வு அடைந்துள்ளார்கள் என்பதையும் இச்சபையினில் தெரிவித்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். வாழ்க்கை தரத்திலும் பொருளாதார அடிப்படையில் உயர்ந்து காணப் படுகிறார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே. இதுதான் என் தாரக மந்திரம்.
நான் பெண்களுக்காக மட்டும் பேச வர வில்லை. யார் கேள்விக்குறியாக நின்றாலும் அவர்களுக்கு ஆச்சிரியகுறி போட சொல்லி கொடுக்கலாம். இதுதான் என் மனதில் எப்போதும் ஓடும் எண்ணச் சிதறல்கள். என் மனதில் உள்ளவைகளை வெளிப்படுத்த ஒரு வலுவான இடம் தேடினேன். அதில் பலரால் அறிமுகப் படுத்தப்பட்டதுதான் இந்த வலைப்பதிவு உலகம். சின்ன உலகத்தில் வலம் வந்து கொண்டிருந்த நான் உங்கள் எல்லாருக்கும் அறிமுகப் படுத்தப் பட்டேன். எனது வலைப்பதிவு "வாழ்ந்து காட்டுவேன்". இதுதான் அதன் பெயர். சிறு வயதில் இருந்தே கவிதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். பல பெரிய படைப்பாளிகளிடம் பரிசும் வாங்கி இருக்கிறேன்.
என்னை நீங்க கேட்கலாம் இப்போ நீ என்ன சமுதாயப் பணி செய்கிறாய் என்று. செய்யத்தான் வந்தேன். ஆனால் ஆரம்பத்திலேயே முடக்கப்பட்டேன். இதை பிறகு சில அறிமுகங்களுடன் இவற்றிற்கு விளக்கம் கூறுகிறேன்.
அந்த என் அனுபவம் என்னை சரியான முறையில் அறிமுகப் படுத்த முடியாமல் அமிழ்ந்து போனேன். இதுதான் உனது தைரியமா? என்று பலர் கேட்பது என் காதில் விழுகிறது. யானைக்கும் அடி சறுக்குமாம். நான் என்ன ஒரு சின்ன எறும்பு. என் மனதும் சலசலத்து விட்டது.
இயற்கையிலேயே எனக்கு கொஞ்சம் குறும்பு அதிகம். அதனால் மறுபடியும் உயிர்த்தெழுந்தேன் சிரிக்கலாம் வாங்க என்று சிரிக்க ஆரம்பித்தேன். நிறைய இருக்கிறது. எழுதுவேன் எழுதிக் கொண்டே இருப்பேன்.
அந்த துடிப்பில் நான் எழுதிய சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த நான்கு பதிவுகளும் ஒரு மூன்றாவது நபராக அமர்ந்து படித்த போது என்னால் சிந்திக்க முடிந்தது , சிரிக்க முடிந்தது. இது எனக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். ஏன் என்றால் நான் ஒரு படைப்பாளி. நான் எழுதியதை பார்த்து எனக்கு சிரிப்பு வரக்கூடாது என்று நினைத்து படித்தேன். சிந்தித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.
1. சிந்திக்க.... ரம்யாவின் பங்கு.
இது ஒரு உண்மை சம்பவம். மிகவும் பிரபலமான ஒரு பள்ளி. அதில் 6 வயதே நிரம்பிய ஒரு சிறுவனின் கண்ணீர் சம்பவம் என் காதுகளுக்கு எட்டியது.
2. சிறு பையனும் மரமும்
பெற்றோர்கள் நமக்காக எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள், அவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம்? சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா? சிந்தித்தால் மட்டும் போதுமா! அவர்களை நல்ல முறையில் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியது.
சிறு பையனும் மரமும்.
3. வைகை புயலும் சுப்பிரமணியும்
எனக்கு எப்பவுமே சிரிக்க ரொம்ப பிடிக்கும். சிரிப்பவர்களையும் பிடிக்கும். சிரித்தால் எந்த நோயும் வராது என்பது பொதுவான கருத்து.
முதலில் சிந்த்திதேன், பிறகு சிரித்தேன். இரண்டுமே
தேன் தானே. இரண்டுமே நினைத்தாலே இனிக்குமே. இவ்விரண்டையும் கலந்து பதிவு போடுவதாக மனதில் உறுதி செய்து எழுத ஆரம்பித்தேன். இங்கே
பாருங்க சுப்பிரமணி படும் பாட்டை. வைகை புயலும் சுப்பிரமணியும்.4. வைகை புயலும் பார்த்திபனும்
இரண்டு பேரும் ஜோடி சேர்ந்தால் என்ன ஆவது?? ஒரே
களேபரம்தான் போங்க! இவர்கள் ஜோடி சேர்ந்து எல்லாரையும் சிரிக்க வைத்ததை வெள்ளித் திரையில் கண்டு களித்திருப்பீர்கள். நானும் இருவரையும் வைத்து ஒரு முயற்சி செய்து இருக்கேன். படிங்களேன்.
வைகைபுயலும் பார்த்திபனும்.
*************
எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்
------------------------------------
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
இன்று என் முடிவுரை
===================
நல்லதை நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்!!!
மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா