07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 8, 2011

வாசித்ததைப் பகிர்ந்து கொள்வது ஒரு சுகானுபவம்

அனைவருக்கும் வணக்கம்.

எழுதுவது ஒரு சுகானுபவம். வாசிப்பது அதை விட அதிகம் சுகம் தருகிறது. வாசித்ததைப் பகிர்ந்து கொள்வது அதை விடவும் சுகம்.
*
உங்கள் எழுத்தின் தரம் மேலும் கூடவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

‘நன்றாக எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்’, ‘எழுத்தில் மெருகேறி இருக்கிறது’ என்றெல்லாம் மற்றவர்கள் உங்கள் எழுத்துகள் பற்றிப் பாராட்ட வேண்டும் என்று விருப்பமா?

உங்கள் கட்டுரைகளில் அதிகாரபூர்வமான தகவல்களை எடுத்தாள எண்ணமா?

கதை சொல்லும் பாணியில் புதுமை அல்லது முன்னேற்றம் வேண்டுமென்று எண்ணுகிறீர்களா?

ஒன்றும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. நல்ல எழுத்துகளைத் தேடிப்படிக்க வேண்டும், அவ்வளவே.

அவ்வளவே என்று சுலபமாகச் சொல்லிவிட்டேன். நடைமுறையில் அது அவ்வளவு எளிதில்லை. எது நல்ல எழுத்து என்று தேடுவது வைக்கோல் போரில் குண்டூசி தேடிய கதைதான்!

இங்கேதான் வாசிப்பனுபவம் பற்றி இணையத்தில் எழுதப்படும் கட்டுரைகள் நமக்கு உதவுகின்றன. எவ்வாறு?

புத்தகம் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.

அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை வாசிப்பவர் அதில் குறிப்பிடப்படும் புத்தகத்தை ஏற்கனவே வாசித்திருந்தால் அவர் வாசிப்பில் விட்டுப் போன விவரங்கள், நுணுக்கங்கள் பற்றி இப்போது அறிந்துகொண்டு மீண்டுமொருமுறை வாசிக்கலாம்.

பதிவரின் கருத்துகளோடு உடன்பட முடியாத பட்சத்தில் உரையாடல் வளர்ந்து நூலைப் பற்றிய புரிதல் மேலும் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகளிலும் முடியலாம் சிலவேளைகளில் (பலவேளைகளில் அப்படித்தான் என்று நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை!)

ஒரு புத்தகம் குறித்துப் படிப்பதா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும்போது அந்தப் புத்தகம் பற்றி மேலும் அறிய வரும்போது ஒரு முடிவெடுக்க உதவுகிறது.

ஆக மொத்தம், புத்தகம் நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்க இந்தக் கட்டுரைகள் உதவுகின்றன.

சரி, புத்தகம் படித்தாகிவிட்டது அல்லது புத்தகம் பற்றிய புரிதல் அதிகமாகிவிட்டது. . அதனால் என்ன நன்மை? முதல் ஐந்து பத்திகளை மறுபடியும் படியுங்கள்!
*
இனி மனம் கவர் வாசிப்பனுவப் பதிவுகள் பற்றி:

நோபல் பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நாவலாயிற்றே, புகழ்பெற்ற எழுத்தாளராயிற்றே என்றெல்லாம் தயங்காமல் தான் படித்து உள்வாங்கிக்கொண்டதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் சகோதரி ஆசியா உமர். கிழவனும் கடலும் நாவல் பற்றிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். எழுத்தாளர் பற்றிய அறிமுகம், நாவலின் களம், முக்கியமான கட்டங்கள், நாவல் சொல்லும் செய்தி, பின்குறிப்பு என்று நேர்த்தியான வரிசையில் அசத்தி இருக்கிறார்.

அநேகமாக நம்மில் பலர் இந்நாவலைப் படித்திருப்போம். (நடுக்கடலில்) உப்பும் எலுமிச்சையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இவர் பதிவில் குறிப்பிடும் இடத்தை நான் அவ்வளவாகக் கவனத்துடன் வாசிக்கவில்லை. இந்தப் பதிவு படித்ததும் அந்த வாக்கியம் சொல்லும் செய்தியின் முக்கியத்துவம் உரைக்கிறது. (எந்தச் சூழலிலும்) மனிதன் பெரிதினும் பெரிது கேட்கிறான்!

புத்தகக் கடலில் மூழ்கித் தினமும் முத்தெடுப்பவர் நம் நண்பர் பார்வையாளன். ஜெமோவின் கொற்றவை, விஷ்ணுபுரம் நாவல்கள் பற்றிய இவருடைய பதிவுகளைப் படியுங்கள். சிலாகித்து எழுதி இருக்கிறார். கொற்றவை நாவல் பற்றிய பதிவில் அவர் ரசித்த சில இடங்கள் என்ற பத்தி டாப் கிளாஸ்.

கரமசாவ் சகோதரர்கள் நாவல் பற்றிய பதிவு எனக்குத் தெரிந்து இணையத்தில் இது ஒன்று மட்டுமே. வேறு பதிவுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். மிக்க நன்றி. ஆதித்த கரிகாலனின் திரை விமர்சனங்களும் தெரியுமா என்ற தலைப்பில் எழுதப்படும் விஷயங்களும் சுவாரஸ்யம்.

பெயர்தான் குட்டிப்பையா, ஆனால் எழுதும் விஷயங்கள் கனமானவை. சமீபத்தில் படித்தவை என்ற பதிவில் குறிப்பிடப்படும் நூல்களைப் பாருங்கள். எனக்கேயான அப்பா என்ற பதிவு நெகிழ்ச்சியின் உச்சம். ஆங், சொல்ல மறந்திட்டேன், இவருடைய எழுத்துகள் எனக்கு சமயத்தில் காதில் புகையை வரவைக்கும்!

He / she makes it look easy என்பார்கள் ஆங்கிலத்தில். வித்யா சந்திரசேகரன் எழுத்து அந்த வகை. எப்போது நாவலைப் படிக்க ஆரம்பிக்கிறார், எப்போது படித்து முடிக்கிறார் எதுவுமே தெரியாது. திடீரென்று பார்த்தால் பதிவு வந்துவிடும். கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை பற்றிய இந்தப் பதிவு நெகிழ்ச்சியின் உச்சம்.

லா.ச.ரா. அவருடைய துளசி சிறுகதை தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ‘துளசி’ சிறுகதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, “...இந்தக் கதையில் வாசகன் தன் பாட்டியையோ, தாயாரையோ, அல்லது தன் பிள்ளையையோ, பேரனையோ, அல்லது தன்னையோ ஏதோ ஒரு இடத்தில் அல்ல பாராவில், அல்ல ஒரு சொல்லில் அல்ல – அதுவும் வேண்டாம், ஒரு சொல்லின் பதப்பிரிவில் அடையாளம் கண்டுகொண்டுவிட்டால் அதுவே என் இத்தனை நாள் எழுத்தின் தவப்பயனை அடைந்ததுதான். மனிதநேயம் அடிகோல்வதே இப்படித்தான்....” என்று சொல்வார். வித்யாவின் பதிவைப் படித்ததும் எனக்கு இதுதான் நினைவிற்கு வந்தது.

வாசிப்பனுபவம், திரை விமர்சனம், சிறுகதைகள் என்று இந்த வலைப்பூவிற்குள் அநேக விஷயங்கள். தாகம், தூர்வை நாவல்கள் பற்றிய பதிவுகளைப் பார்த்துவிடுங்கள். சிறந்த பத்து நாவல்கள் பட்டியலும் முக்கியமான பதிவு

புத்தகத்திற்கென்றே ஒரு தனி வலைப்பூ நடத்தும் இவர்களின் சேவை போற்றுதலுக்குரியது. சமகால பிரபல எழுத்தாளர் ஜெமோ இந்த வலைப்பூ குறித்து சிலாகித்து எழுதி இருக்கிறார்.

புத்தகம் குறித்த பதிவுகள் நிறைய வரும் இன்னொரு வலைப்பூ இது. ஆனால் சில மாதங்களாகப் புதிதாகப் பதிவுகள் எதுவுமில்லை.

நானும் புத்தகங்கள் குறித்துச் சில பதிவுகள் இட்டிருக்கிறேன். நேரமிருந்தால் தஞ்சை பிரகாஷ் கதைகள், பின்தொடரும் நிழலின் குரல் நாவல் பற்றிய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். நன்றி.

முத்தாய்ப்பாக ஒரு விஷயம்। சில சமயங்களில் சில கதைகளை வேறு யாரேனும் எடுத்துச் சொன்னால் மட்டுமே புரிகிறது. திரு. விமலாதித்த மாமல்லன் அவர்களின் இந்தக் கட்டுரையைப் பாருங்கள். வாழ்நாளில் இதுபோல, இல்லை இல்லை, இதில் பாதி அளவுத் தரத்துடனும் புரிதலுடனும் ஒரேயொரு கட்டுரை எழுத முடிந்தாலும் போதும், என் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்.

நாளை சந்திப்போம் நண்பர்களே.
*
குறிப்பு: இதுவரை படித்திராவிடில் ஜெமோவின் கண்ணீரைப் பின்தொடர்தல், நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், எஸ்ராவின் கதாவிலாசம் ஆகிய புத்தகங்கள் பற்றிய புத்தகங்களை வாசித்துப் பாருங்கள். நன்றி.
மேலும் வாசிக்க...

Monday, November 7, 2011

பதிவுகள் பலவிதம்

சரம் என்பதை மாலையாகக் கொண்டால் ஒரு முழுச்சுற்று. ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்துவிடுவோம் .

இந்த ஒரு வாரம் முழுதும் பகிர்ந்துகொள்ளப் போகும் பதிவுகளும் அப்படியே மாலையாக அமையவிருக்கிறது. பல்சுவைப் பதிவுகளில் ஆரம்பித்து, வாசிப்பனுபவப் பதிவுகளினூடாகப் பயணித்து, பயணம் குறித்த பதிவுகளில் மானசீகமாக அந்தந்த இடங்களுக்குச் சென்று, கதைமாந்தர்களுடன் வாழ்ந்து, திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி மீண்டும் பல்சுவைப் பதிவுகளுக்குத் திரும்புவோம்.
*
ஈகைத் திருநாளான நேற்றே இந்தப் பதிவைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். ஹஜ் பயணம் பற்றிய ஹுசைனம்மாவின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். இவ்வளவு எளிமையாக அதே நேரம் சொல்ல வந்ததை ஒன்றுவிடாமல் சொல்லி இருக்கிறார். இது ஒரு கலை. இந்தப் பதிவைப் படித்ததும் எழுத்தாளர் நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடிய விரைவில் ஹுசைனம்மாவும் அது போல ஒரு புத்தகம் போட வாழ்த்துகள்! டிரங்குப் பெட்டி என்ற தலைப்பில் இவர் எழுதும் பதிவுகள் சுவாரஸ்யம்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரத்னவேல் ஐயா அவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆவணங்கள் போலப் பாதுகாக்கப்பட வேண்டியவை. மருத்துவம், தொழிலாளர் நல வருங்கால வைப்பு நிதி, ஸ்ரீவில்லிபுத்தூரின் கதாநாயகி ஆண்டாள் கொண்டாடும் ஆடிப்பூரம், சதுரகிரி மலை பற்றிய பதிவுகள் என்று ஒவ்வொன்றும் பொக்கிஷம்.

கிரியின் ரசனை பரந்து விரிந்தது. விளையாட்டு, விமர்சனம், வினா, பாடல், படங்கள் என்று நீண்டுகொண்டே போகும் இந்தப் பட்டியல். கதையும் எழுதுவார். இந்தக் கதையைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். விமலாதித்த மாமல்லன் கதைகள் பற்றிய இந்தப் பதிவையும் ஒரு முறை படித்து விடுங்கள்.

சிவகுமாரின் பலம் தங்குதடையற்ற மொழிதான். சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லிவிடுவார். சமீபத்தில் இவர் எழுதிய ஏழாம் அறிவு திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள்.

புத்தகங்களுக்கான முன்னுரை பற்றிய பதிவுகளைப் படித்துக்கொண்டே வந்தபோது நிலாமகளின் இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. மிகக் குறைவாக ஆனால் மிகச் செறிவாக எழுதுகிறார். சில சமயங்களில் எனக்குக் காதில் புகை வரவைக்கும் பதிவர்களுள் இவரும் ஒருவர்:-)

விஜியின் இந்தப் பதிவைப் படித்ததும் எனக்குக் காதில் புகை வந்தது. ஆணாய்ப் பிறந்ததால் எவ்வளவு இழக்க வேண்டி இருக்கிறது பாருங்கள்:-) Jokes apart, மகளின் பிறந்த நாளன்று அவள் முதன் முதலில் பிறந்த நாளை அசைபோட்டிருக்கிறார். Simply touching! அறுபது நாள் விடுமுறைக் கொண்டாட்டத்தின்போது குழந்தைகள் அடித்த லூட்டியையும், பள்ளி திறந்ததும் வீடு வெறுமையாகக் காட்சி அளித்ததையும் இங்கே பதிவு செய்திருக்கிறார்.
*
கதம்ப மாலை கட்டும்போது பூக்கள் மட்டும் வைத்துக் கட்டாமல் வேரையும் வைத்துக் கட்டுவார்கள். அப்போதுதானே பூக்கள் எடுப்பாகத் தெரியும். மேலும் ராஜி மேடம் என்னுடைய சுவாரஸ்யமான பதிவுகள் மேலும் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று போன பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். ஆகவே சுவாரஸ்யம் என்று நான் கருதும் என்னுடைய இந்தப் பதிவு.

மீண்டும் நாளை சிந்திப்போம் நண்பர்களே
மேலும் வாசிக்க...

முதல் சுவடுகளும் மனதிற்கு நெருக்கமானவையும்

அனைவருக்கும் வணக்கம்.

பதிவுலகத்திற்குள் எப்படி வந்தேன் என்பது பற்றிப் பார்த்துவிடுவோம். குமுதத்தில் வெளியான முதல் பத்து பதிவர்கள் பட்டியல் பார்த்துப் பதிவுலகத்திற்கு வந்தவன் நான். வந்த புதிதில் பதிவுகளைப் படிக்க மட்டுமே செய்தேன். அதுவும் ஒரே ஒருவரின் (பரிசல்காரன்) பதிவுகள் மட்டுமே. பின்னூட்டமிடத் தோன்றியதே இல்லை.

பரிசலின் நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பு வந்ததும் மகிழ்வாக இருந்தது. அவரை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாக இருந்தது. அதை மீறி அவருடன் அலைபேசியில் தொடர்புகொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.

அடுத்தடுத்து இருமுறை பெங்களூர் வந்திருந்தபோது அவரை சந்தித்தேன். ‘நீங்க பதிவுகள் எழுதுங்க’ என்று உற்சாகப்படுத்தினார். எழுதும் ஆசை ஒரு குட்டிப் பூனை போல என்னுள்ளும் எட்டிப் பார்த்தது. அலுவலகத்தில் எளிதில் அனுமதி கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக சம்பந்தப்பட்டவர்களைத் தொல்லை செய்ததன் பயனாக ஏகப்பட்ட நிபந்தனைகளுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

வலைச்சரம் பற்றி எப்படித் தெரிந்துகொண்டேன்? திருமதி. வித்யா சந்திரசேகரன் அவர்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது அவர் அது குறித்து ஒரு இடுகை இட்டிருந்தார். ‘வலைச்சர ஆசிரியர்’ என்பவர் யார் என்று அவரிடமே கேட்டேன். வலைச்சரம் எனக்கு அறிமுகமானது இப்படித்தான்.

மனதிற்கு நெருக்கமான என்னுடைய சில இடுகைகள் இப்போது:

சம்ஸ்காரா நாவல் பற்றிய பதிவு

அம்பேத்கர் திரைப்படம் பற்றிய பதிவு

பாஸ்கர் சக்தி சிறுகதைகள் பற்றிய பதிவு

சில முதல் சுவடுகள்:

முதல் பதிவு பள்ளி ஆண்டு விழா

முதல் சிறுகதை

பிடிவாதம்

முதன் முதலாக எழுதிய சினிமா சார்ந்த பதிவு

இனிது இனிது

மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே

இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.
மேலும் வாசிக்க...

Sunday, November 6, 2011

சென்று வருக சாகம்பரி - வருக வருக R கோபி

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற சகோதரி சாகம்பரி, தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, நம்மிடம் இருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

இவர் வித்தியாசமான முறையில் சிறு பொழுதுகளாகிய விடியல், காலை, முற்பகல், ஏற்பாடு, மாலை, இரவு என்ற தலைப்புகளில், பல பொருட்குறிப்புகளில், இடுகைகளைத் தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ முன்னூற்று இருபத்தைந்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப் படுத்திய பதிவர்களோ எழுபத்திரண்டு. அறிமுகப் படுத்திய இடுகைகளோ 82. ( சொந்த இடுகைகள் 10 உட்பட ) . இவரது கடும் உழைப்பு நன்கு பலனைத் தந்திருக்கிறது.

சகோதரி சாகம்பரியின் உழைப்பினைப் பாராட்டி, நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நாளை நவம்பர் 7ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் கோபி ராமமூர்த்தி அவர்கள்.

இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக R. கோபி என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார்.


இவர் பிறந்தது வளர்ந்தது கும்பகோணத்தில். படித்தது இளங்கலை வணிகவியல். மேற்படிப்பு Chartered Accountancy (CA). Financial Risk Manager (FRM).


இவருக்கு வாசிப்பின் மேல் மாறாத நேசமுண்டு. பக்கோடாத் தாளில் இருந்து டெலிஃபோன் டைரக்டரி வரை எது கையில் கிடைத்தாலும் வாசித்துவிடும் பழக்கமுண்டு!


ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடைய இவர் கடந்த பத்தாண்டுகளில் பல திவ்ய தேசங்கள் (97), திருமுறைத்தலங்கள் (88), மேலும் பல்வேறு கோவில்கள் எனச் சென்று வந்துள்ளார்.


காதலியை ஆறாண்டுகளுக்கு முன் கைப்பிடித்து, செல்ல மகன் ஒருவனைப் பெற்று இருக்கிறார். தற்போது வசிப்பது பெங்களூரில். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உத்தியோகம். இதற்குமுன் வசித்தது சென்னையில் (ஒரு வருடம்), மும்பையில் மூன்று வருடங்கள்.


இவருக்குப் படிப்பது, பாட்டுக் கேட்பது, பயணம் செய்வது, திரைப்படங்கள் படங்கள் பார்ப்பது என்று மனதிற்குப் பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு .


நண்பர் கோபி ராமமூர்த்தியினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


நல்வாழ்த்துகள் சகோதரி சாகம்பரி


நல்வாழ்த்துகள் கோபி ராம்மூர்த்தி


நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

இதம் தந்து விடை பெறும் இரவு -வலைச்சரம்.



பகல் முழுவதும் வேலை முடித்து மேற்கு வாசல் மறைந்திடும்
பரிதியின் பசிக்கு உணவாக கடவுள் தரும் சோற்று உருண்டை நிலா!
கதை சொன்ன  பாட்டி பிரபஞ்சத்தில் நட்சத்திரமானாளோ அல்லது
என்னுடைய மரபணுக்களில் ஒளிந்து மறைந்து வாழ்கின்றாளோ...
ஆனால் .....
இன்றைக்கும் நிலா மட்டும் தேய்வதும் வளர்வதுமாக வருகிறது.


எப்படி ஏமாந்திருக்கிறேன் பாருங்கள். சின்ன வயதில் நான் சற்று மக்கு குழந்தை போலும். ரொம்பவும் கேள்வி கேட்கமாட்டேன். ஆனால், சூரியனுக்கே உழைத்தால்தான் சாப்பாடு என்று உழைப்பின் முக்கியத்துவத்துவத்தை பாட்டி போதித்திருப்பது மட்டும் புரிகிறது.
     
இதோ கண்களை உறக்கத்திற்குள் ஆழ்த்தும் இரவு வந்துவிட்டது. நிலவின் வெளிச்சம் வெள்ளியை உருக்கி வார்த்ததுபோல உலகின் காட்சிகளை மாற்றிவிட்டன. இன்றைக்கு முழு நிலவு நாள் எனில் படகுத்துறைக்கு அழைத்துச்சென்றிருப்பேன். சுற்றிலும் முழுவதுமாக நீர் நிறைத்திருக்க பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையே எந்த மறைப்பு இன்றி முழு நிலவை பார்ப்பது மனம் கவரும் காட்சியாகும். அப்படியே அன்பையும் பரிமாறிக் கொண்டு கைப்பிடி உருண்டையாக நிலாச்சோறும் சாப்பிடலாம். 

      
ரொம்பவும் பேச முடியாத நேரம் இரவு. ஏனெனில் மௌனம் மிக மெல்லிய கண்ணாடித்திரையாக படர்ந்திருக்கிறது. சிறு ஒலிகூட திரையை உடைத்துவிடும் அபாயமிருப்பதால், இங்கு மூச்சு
க்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அமைதியாக அருகிருப்பவர் மறந்து மனமாகிய மாற்று உலகிற்குள் உள் நோக்கி பயணித்தால்.... இன்றைய நிகழ்வுகள், அதன் தொடர்ச்சியாக நேற்று.. பிறகு அதற்கு முந்தைய நாள்... சில வேளை ஒரே கணத்தில் வருடங்களைக்கூட கடக்க முடியும். இது போன்ற காலப்பயணங்கள் மிக அவசியம். அது கடந்து போன தோல்விக்கு  மயிலிறகு வருடல் தந்து ஆசுவாசப்படுத்தலாம் அல்லது செய்த தவறுகளுக்கு அக்னி குளியல் நடத்தி புடம் போடலாம். இந்த நேரத்து மந்திரம் - என்னிலிருந்து நான் பிரிந்து என்னை  புரிந்து கொண்டு தவறுகளை திருத்த மீண்டும் நானாகினேன்.
                                                    
இரவின் குறியீடுகளுள் முக்கியமான ஒன்று வயோதிகம் மற்றொன்று மரணம். இவை இரண்டுமே காலதேவனின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டவை. வெகு சிலர் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு தயாராக இருப்பார்கள். 

நம்மை மார்பிலும் தோளிலும் சுமந்து கை
ப்பிடித்து நடத்தி உலகில் வாழத்தகுதியான உயிராக ஆக்கியவர்களுக்கு நாம் அன்பையும் ஆறுதலையும் தர வேண்டிய நேரம். உள்ளுறுப்புகளின் செயலாக்கக் குறைவு உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும் நேரம். அவர்களை புரிந்து கொண்டு மகன்/மகளாக இல்லால் ஒரு தாதிக்குரிய பொறுப்புடன் கவனித்துக் கொள்வதே சரியான அணுகுமுறை என்பது என் கருத்து. 
     
  
இன்றைய குறிப்புகள்:  வயோதிகம், மென்மையான அன்பு, தனிமை, மரணம்.

1. மதிப்பிற்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூவில் இல்லறம் நல்லறமாகும் கருத்தை வலியுறுத்தி நிறைய அழகிய சிறுகதைகள் உள்ளன. குடும்பத்தின் பெரியோரின் மேன்மை மிக்க எண்ணங்களை போற்றும் இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
 முதிர்ந்த பார்வை

2. மதிப்பிற்குரிய  புலவர்.சா.ராமாநுசம் அவர்களின் வலைப்பூவிலிருந்து வாழ்க்கையை திறனாய்வு செய்ய வைக்கும் கவிதை படியுங்கள்.
  முடிந்தது வாழ்வுப் பாதையென... 

3. முதியோருடன் பழகும் முறை பற்றி வேர்களைத் தேடி வலைப்பூவில் முனைவர்.இரா.குணசீலனின் பதிவை படியுங்கள்.  சங்கத்தமிழை சிறப்பிக்கும் சிறந்த வலைப்பூகளில் ஒன்று.

4. திருமதி. கீதாவின் வணக்கம் வலைப்பூவில், உள்ள இந்த பதிவு மனம் கலங்க வைக்கிறது .ஆனாலும் தாயை மகளாக பாவித்து சேவை செய்யும் மகளை நினைத்து பெருமிதம் கொள்கிறது.    குழந்தையாக மாறிவிட்டாய் அம்மா.

5. கடம்பவனப்பூங்காவில், பாட்டியின் பாசத்திற்காக ஏங்கும் குழந்தையாக கவிதை தவிக்கிறது. தேவதையைத் தேடினேன்     

6. 
ஆயுத எழுத்து திரு.ராஜகோபாலன் எழுதுவதை குறைத்து விட்டார். இந்த பதிவினை இப்போது படியுங்கள். அடுத்த பிறவி.. 

7. நண்பர் விச்சுவின் வலைப்பூவில் முதியோர் பற்றிய இந்த பதிவை படியுங்கள். பாசத்திற்கு ஏங்கும் பாட்டி 

8. சகோதரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதரின் ஆச்சி ஆச்சி வலைப்ப்பூவில் முதியோர் இல்லங்கள் பற்றிய ஒரு பதிவு கவனத்தை ஈர்க்கிறது. முதியோர் இல்லங்கள் 

9. கதம்ப உணர்வுகள் மஞ்சுபாஷினியின் வலைப்பூவில் இந்த கவிதை வாழ்க்கை பற்றிய மற்றொரு பார்வையை பதிகிறது.   இருப்பேனா?? இறப்பேனா??. இது போல மற்ற கவிதைகளும் உணர்வுபூர்வமா
பதிவாகியுள்ளன.

10. வானம் தாண்டிய சிறகுகள் ஜீயின் வலைப்பூவில் வாழ்க்கை பற்றிய பார்வையை இந்த அருமையான கவிதை பதிக்கிறது. ஆடுகளம்! 

11. இன்னுமொரு சிறுகதை அப்பாவி தங்கமணியின் வலைப்பூவிலிருந்து.  அப்பாவி தங்கமணியின் வலைப்பூவை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். மதுரையிலிருந்து சென்னை செல்லும் நான்குவழிச்சாலையில்  சீரான வேகத்தில் செல்லும் மகிழுந்தில் பயணிப்பதைபோல நேரம் நழுவிச்சென்றுவிடும். 

என்னுயிர் நின்னதன்றோ.

12. நான் அறிமுகம் செய்யப்போகும் கடைசி வலைப்பூ இது. மகளிர் கடலில் கிட்டியது. இப்போது புதிதாக ஏதும் பதியப்படவில்லை. 'காலா என் அருகில் வாடா' என்று அறைக்கூவல் விடுத்
மீசைக்கவியின் காட்டம் தெரியும் இந்தக் கவிதையை படியுங்கள்.  பிரமிக்க வைத்த இந்த கவிதைக்காக மிக்க நன்றி கலகலப்பிரியா. 
  நத்தைக்குள்ளுறங்கும் தவளைகள்...


இப்போது விடைபெறும் நேரம்.
           நான் கூறியது போலவே, திங்களன்று ஆரம்பித்த இந்த வாழ்க்கைப் பயணம், இனிமையான நண்பர்களின் துணையுடன் புனித யாத்திரையாகிவிட்டது. ஏராளமான வலைப்பூக்களை படித்தாலும் வலைச்சரத்தின் தலைப்பிற்கு பொருத்தமாக சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டு.

          இந்த பெரிய பொறுப்பை எனக்களித்த மதிப்பிற்குரிய திரு.சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய மதிப்பிற்குரிய திரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்களுக்கும், ஊக்கமூட்டி கருத்துக்களை பதிந்த மதிப்பிற்குரிய  திரு.ரத்னவேல் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

         உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையிலும் இங்கு வந்து வாழ்த்தி கருத்து பதிந்த மதிப்பிற்குரிய புலவர் 
சா இராமாநுசம்
அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

         புதிதாக பள்ளிக்கு வந்த சிறுமியை புன்னகைத்து அழைத்து அருகில் அமர்த்தி பயம் விலக்கும் மூத்த மாணவர்களைப் போல் தங்கள் கருத்துரையின் மூலம் அபயம் தந்த மூத்த பதிவர்கள் - வல்லி சிம்ஹன் மேடம், மனோ சாமிநாதன் மேடம், ஆசியா மேடம், சகோதரி கோவைக்கவி, திரு.ரமணி சார், திருப்பூர். ஜோதிஜி., திரு.வெங்கட் நாகராஜ், சகோ.அமைதிச்சாரல், சகோ.ஷைலஜா, காஞ்சனா மேடம், திரு.எம்.கே.முருகானந்தம் ஆகியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
 
        அன்புத் தோழி ராஜேஸ்வரி, பிரியத்திற்குரிய ராஜி, கீதமஞ்சரி கீதா , மதுரகவி ரமாரவி, ஆச்சி ஆச்சி திருமதி.ஸ்ரீதர் ,குட்டி சுவர்க்கம் ஆமீனாஆகியோருக்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
       
         நம்முடைய தோழி பரிசு பெற்றால் கை குலுக்கி பாராட்டு தெரிவிப்பது போல தோழமையுடன் கருத்துக்களை பகிர்ந்த திரு.சண்முகவேல்,  சகோ..மகேந்திரன், திரு.சூரியஜீவா, திரு.சத்ரியன், தமிழ்வாசி பிரகாஷ், மதுரைத்தமிழன், திரு.கருன், திரு.நம்பிக்கை பாண்டியன், மாய உலகம் ராஜேஷ், தமிழ் உதயம் ரமேஷ், பிரபாதாமு, மிடில்கிளாஸ்மாதவி, சகோ.ரெவரி, பரிவை.குமார், முனைவர்.இரா.குணசீலன், அமைதி அப்பா, ராஜபாட்டை ராஜா, கவிப்பிரியன், விச்சு,எம்,ஆர், கோகுல்,   மதன்மணி, அரசன்,கல்பனா, பொன்மலர், ஆயிஷா அபுல், ஹேமா, நிஜாமுதீன், போளூர் தயாநிதி, தமிழ்க்காதலன், தங்கம் பழனி ,ஷீ-நிஷி.ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

வலைச்சரத்தில் வந்து வாழ்த்தி பாராட்டி ஊக்கப்படுத்திய அத்தனை நல் நெஞ்சங்களுக்கு என் இதயபூர்வமான  நன்றியை தெரிவித்து வாழ்த்து கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

    

இதயபூர்வமான  நன்றி!
    

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது