07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 4, 2013

காடும் காடு சார்ந்தும்...


நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மா மருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே!



முல்லைத் திணையில் பேயனார் பாடிய இப்பாடலுடன் வலைச்சர நண்பர்களை உள்ளியே விரைந்து வந்தேன் வணக்கத்துடன்!

இப்பாடலின் பொருள்: "உன்னைப் போல் மயில்கள் நடனம் ஆட,  உன்னுடைய அழகிய நெற்றியின் நறுமணம் போல் முல்லை மலர்ந்து நறுமணம் வீச, உன்னைப் போல மான்கள் மருண்டு நோக்க, உன்னையே நினைத்து கார்மேகத்தினும் விரைவாய் வந்தேன் " என்று தலைவன் தலைவியைப் பார்த்துப் பாடுவதாக அமைந்துள்ள ஐங்குறுநூற்றுப் பாடல் (எண்:492).

வாழும் நிலத்திற்கு ஏற்ப வாழ்வுமுறை வகுத்த நம் முன்னோர் காடும் காடு சார்ந்த நிலங்களையும் முல்லை என்று வழங்கினர்.


காடுகளில், குறிப்பாக மழைக்காலங்களில் அதிகம் மலரும் முல்லை மலரால் இப்பெயர் பெற்றது.
முல்லைத் திணையில் காதலர் காத்திருத்தல் உரிப்பொருளாகும். மான்,முயல்,முல்லை,மழை, மயில் போன்றச் சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

முல்லை திணைக்குப் பொருத்தமானவை என்று நான் எண்ணும் சிலப் பதிவுகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

1. SRH அவர்களின்  கவரிமானின் கற்பனைக் காவியம் என்ற தளத்தில்  காத்திருந்த காதல் இனிப்புகளுடன் வருவாயா என்று காத்திருக்கிறது.
இந்தக் காதலும் பதிலைத் தேடியபடி பொறுமையாய்க் காத்திருக்கிறது.
நீயே உயிரின் முதலானாய் என்று இந்தப் பதிவர் சொல்வது யாரை? பார்க்கவும் கண்ணோடு காடுகள்.
கோபுரம் கட்ட ஆசையாம், கூரை போடவாவது ஏதேனும் செய்வோமா? கவலை தேவதையைத் துரத்திடுவோமா? சமுதாயக் கவிதைகள் சதம் அடித்து விட்டது இவர் தளத்தில், ஒவ்வொன்றும் அருமை.
தமிழ் வளர்க்க அழகிய வழி சொல்லும் கவிதை இனிய தமிழ் இனி. தமிழுக்கு வயது 20000, ஆனால் என்ன என்றும் இனிமை தானே?

2. முகிலின் பக்கங்கள் என்ற வலைப்பூவில் திரு.தமிழ் முகில் அவர்களின் அழகியக் கவிதை மண்ணின் மைந்தர்கள், படித்து இரசித்துப் பின்  மரங்களைக் காக்க உறுதி கொள்ளலாமே! பசி, முல்லை, காகிதம் என்ற கவிதையில் பேனாவிற்கு இலக்கியப் பசி என்கிறார். பல பேனாக்கள் இலக்கியப் பசி கொண்டால் நல்லது தானே? உறுதியாய் இரு என்ற கவிதையில் இராஜாக்கள், இராணிகள், மந்திரிகள் என்று ஓரூ பெரிய இராஜாங்கத்தைப் பற்றியும் அதில் நிமிர்ந்து நிற்க வழியும் சொல்கிறார், பாருங்கள். இயற்கை என்ற இவரின் கவிதை அழகிய படத்துடன் அழகாய் உள்ளது.

3. என்றாவது உலகம் திரும்பிப் பார்க்கும் என்று காத்திருக்கிறேன் என்று சொல்லும் கவிதை கனவு மெய்ப்பட வேண்டும்.
திரு.கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் கவிதை வாசல் தளத்தில் உள்ள  ஒரு மழை நாளில்  அருமை.  காத்திருப்பு கவிதையானது எப்படி என்று பாருங்கள்.
காதல் காத்திருக்கும் தெரியும், தோல்விகளுமா? தெரிந்து கொள்ள பாருங்கள் வெற்றிக்கான விழுப்புண்கள்.

4. நெல்லை பாஸ்கர் அவர்களின் தமிழ் கவிதைகள் வலைப்பூ இந்த வருடம்தான் மலர்ந்துள்ளது.  "காடுகளை அழித்த பின் கானல் நீரில் தாகம் தணிக்க முற்படுவாயா?" - கூர்மையாய்க் கிழிக்கும் பல வரிகளில் இது ஒரு வரிதான் மரங்களைத் திண்ணும் மானுடன் என்ற அக்விதையிலிருந்து.
அச்சோ, இது புதுவிதமான கலப்படமாய் இருக்கிறதே! அட, அனைவரும் இப்படி புரிந்து கொண்டால் நலமாய் இருக்குமே..அதுவும் இன்றைய சூழலில் - மகளிர் தின வாழ்த்துக்கள்! அருமை! சிந்திக்கவேண்டிய கவிதை சிட்டுக்குருவி, என்ன செய்ய? நம் பெருமையின்  முத்தான மூன்று எழுத்துக்கள்!

5. உஷா அன்பரசு அவர்களின் இது எங்கள் கோட்டை வலைத்தளத்தில் காதலில் காத்திருத்தல் அலுப்பதில்லை என்கிறார் யுகந்தோறும் காத்திருப்பேன் என்ற கவிதையில்.
என்ன படிக்க கவிதை படித்து சிரித்தாலும், அது உண்மை தானே?

6. எண்ணிய முடிதல் வேண்டும் என்ற தளத்தில் பதிவர் சைலஜா அவர்கள் மாங்காயில் எவ்வளவு செய்திகள் சொல்கிறார் பாருங்கள்!
காண மயிலே! நீ எங்கள்  தேசியப் பறவையானது எப்படி மயிலே,மயிலே.
கருவின் கதறல் மனத்தைக் கலக்குகிறது.
உண்ணவா தின்னவா, இந்த தமிழ் படுத்தும் பாடு பாருங்கள்!

7. T.V.ராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழா தமிழா தளத்தில் வாரார் ஆயினும் வரினும் அருமையான முல்லைத்திணை பாடல் விளக்கத்துடன், அருமை!

இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்!

நாளை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

மேலும் வாசிக்க...

Wednesday, April 3, 2013

மலையும் மலைசார்ந்தும்...

" மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன் மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் வித்தன்றே"



குறிஞ்சித் திணையில் கபிலரால் பாடப்பெற்ற மலையின் அழகைக் கண் முன் கொண்டு வரும் இந்தப் பாடலுடன் வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!
 
இப்பாடலின் பொருள்: விண்ணைத்தொடும் மலையிலிருந்து குதித்து ஓடும் வெண் முத்தைப் போன்ற தூய அருவி கற்குகைகளில் எதிரொலிக்கும் பல மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச் சாரலில் வசிக்கும் அகன்ற தோள்களையுடைய குறவனின் இளம் மகள் , நீரைப் போன்ற மென்மையான சாயல் உடையவள், நெருப்பைப் போன்ற என் குணத்தை அணைத்துவிட்டாளே! என்று தன் மனதை ஈர்த்தப் பெண்ணைப் பற்றி த் தலைவன் தோழனிடம் சொல்வதாக அமைந்துள்ள குறுந்தொகைப் பாடல்(எண்: 95).
 
நம் முன்னோர் வாழும் இடத்திற்கேற்ப வாழ்வு முறை வகுத்து இனிது வாழ்ந்ததாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி எனப்படும். மலைகளில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரால் இப்பெயர் பெற்றது. குறிஞ்சித் திணைக்கு காதலர் இணைவதே உரிப்பொருளாகும். மலையோடு தொடர்பு கொண்ட விலங்குகள், மலர்கள், காலம், அங்கு விளையும் பொருட்கள்  இவையனைத்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும்.

என்னால் இயன்ற வரை இந்த வகையிலானப் பதிவுகளைத் தேடித் பகிர்கிறேன். தேர்ந்தெடுத்த வலைப்பூக்களில் இருந்து எனக்குப் பிடித்த வேறு சில பதிவுகளையும் பகிர்கிறேன்.

1. பல இனியக்  காதல் கவிதைகள் எழுதியுள்ளார், புரியாத வாழ்க்கைக்குள், புதைந்து கிடைக்கும் அன்பின் புதையலை, அன்போடு அனுபவிப்பவள் என்று சொல்லும் ரேவா.
தலைவனை நினைத்து தலைவி பாடும் பாடலோ எனக்குள் தான் நீ என்ற கவிதை, 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்றக் குறிஞ்சிப் பாடலை நினைவு படுத்தியது. சின்ன சின்னதாய் காதல் என்ற தலைப்பில் சில பதிவுகள் பாருங்கள்..அருமை! படங்கள் எங்கிருந்துதான் சரியாகக் கிடைக்கிறதோ இவருக்கு!!
மனதைத் தொட்டு உண்மைச்சூடு போடும் ஒரு பகிர்வு எதற்கு இந்த விலை.
2. வழக்கம் போல் என்ற தலைப்பில் வலைப்பூ எழுதிவரும் சதங்கா குழந்தைகளுக்காக எழுதிய யானைப்  பாடல் அருமை. இவரின்  'எங்கும் எதிலும் கலாம்' என்ற பதிவில் நம் வாழ்வில் 'கலாம்' எப்படி இணைந்திருக்கிறார் என்று சொல்கிறார் பாருங்கள். 
இவரின் வாக்கினிலே இனிமை வேண்டும் அழகான படத்துடன் நல்ல கருத்தைக் கூறுகிறது. 
புவி நாள் இந்தத் திங்களில் வருவதால் இதனைப் பகிர்வது பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். 
சதங்கா எழுதும் மற்றுமொரு வலைப்பூ சித்திரம் பேசுதடி. அதில் இருந்து யானைப் படம் உங்களுக்காக!

3. காதலி காதலை ஏற்றவுடன் காதலனுக்கு சுற்றுப்புறம் எப்படித் தோன்றுகிறது என்பதை பச்சைக்குள்ளொரு பச்சை என்ற கவிதையில் அழகாகச் சொல்லியிருக்கிறார் திரு.ச.முத்துவேல் தூறல் கவிதை என்ற தன் வலைப்பூவில்.
மலையடிவாரம் என்ற கவிதையில் மலையடிவாரத்தில் கேட்கும் ஓசைகள் பற்றிக் கூறுகிறார்.

4. திரு.மாடசாமி ராஜாமணி அவர்களின் வானவில் தளத்தில் காதல் கிறுக்கல் என்ற கவிதை தலைவனும் தலைவியும் பார்த்ததால் ஏற்பட்ட அலரைச் சொல்கிறதோ என்று நினைக்கிறேன். யோசிக்கவேண்டிய ஒரு கட்டுரை அறநெறிகளைப் பின்பற்றுகிறதா பள்ளிக்கூடங்கள்?

5.  டைரிக் கிறுக்கல்கள் என்ற தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் தளத்தில்
மலையரசி என்றக் கவிதை மலையின் அழகை, அதனைக்காக்க வேண்டியதை அழகாகச் சொல்கிறது. இவரின் அங்குசம் என்ற கவிதை அருமையாக உண்மை பேசுகிறது. ஈசல் மேகங்கள் வித்தியாசமான கவிதை.

6. இயற்கைமகள் என்று சொல்லும் ராஜியின் இதயப்பூக்கள் அன்பாக மணம் வீசுகின்றன. சமுதாயத்தின் நிலையைச் சொல்கிறது நாங்கள் மனிதர்கள் என்றக் கவிதை.
இவரின் காதல் கவிதை ஒன்று ஏனோ..என்ன..எதற்கு. இவர் வழக்கொழிந்த தமிழ் சொற்களையும் பட்டியலிடுகிறார்.

7. மழையில் நனையும் ஆசை பல பேருக்கு உண்டு, ஆனால் அதை கவிதையாக்கிவிட்டார், என்னவனும் நானும் மழையும் என்று. மழை மலையில் பெய்யும், காட்டில் பெய்யும், எல்லாவிடத்திலும் பெய்யும், இவரின் மனத்திலும், புரிந்துகொள்ள சாரல்கள் வாசிக்கவும். இந்த அழகிய கவிதைகளை  ஆழிமழை என்ற தளத்தில் படைத்த இவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

8. இன்று பூமி எங்கும் மாசு ஏற்படுத்தி மலைகளையும் காடுகளையும் அழித்துக் கொண்டிருக்கும் நமக்கு இந்த செய்தி மிகவும் அவசியம். அதாங்க..பிளாஸ்டிக் பயன்படுத்தாதிங்க...பூவிழி அவர்களின் இந்த குப்பையும் கோபுரம் ஆகுதாம் என்ற பதிவைப் பாருங்கள். அட, மழை வருமான்னு நத்தை சொல்லுமா? இதை நான் இங்கு பகிர்கிறேன்..நட்புகளே தயவு செய்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. அண்டிபயொடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா?

9. டினேஷ் பக்கங்கள் என்ற வலைப்பூவை எழுதி வரும் நண்பர் பதிவு செய்திருக்கும் பின்னவலவு பயணக் கட்டுரையில் யானை இலத்தியில் இருந்து காகிதம் செய்வதாகத் தகவல் சொல்கிறார். அழகியப் படங்கள் உள்ள பதிவு. ஆறு இவ்வளவு வண்ணமயமாக இருக்குமா....நீரில் ஒரு வானவில் பதிவைப் பாருங்கள். காதலர்களுக்காக சுரங்கப் பாதையா..இரகசியமாய்ச் சந்திக்கும் குறிஞ்சிக் காதலர்களுக்கு ஏற்றது போல! மலையும் மலை சார்ந்தும் என்று நான் தேடிக் கொண்டிருக்க இவர் மருத்துவமும் மருத்துவம் சார்ந்தும் என்று எழுதியிருக்கும் காதல் கவிதையைப் பாருங்கள்!!

இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்!

நாளை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!
மேலும் வாசிக்க...

Tuesday, April 2, 2013

உய்வு வேண்டும் அதனால்...

மணம் கமழும் வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்! 

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
ஒருவர் செய்யும் தினையளவு சிறிய நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகப் பெரிதாகக் கருதுவர்.

அந்த வகையில் பலர் கூறிய சிறிய பாராட்டாய் கருத்துரையாய் இருந்தாலும் அது என்னைப் பல மடங்கு ஊக்குவித்தது. இந்த இடுகைக்கு அது மட்டும் காரணமா, இல்லை பின்வரும் குறளும் காரணமா?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு வாழ்வில்லை.
திருவள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறாரே..எனக்கு கண்டிப்பாக உய்வு வேண்டும் வலைச்சர நட்புகளே! அந்த சுயநலமும் சேர்ந்துதானோ இன்றைய இடுகை! நான் நன்றி உரைத்து உய்வு பெறச் சிலரை இங்கு நினைக்கிறேன். சிலர் உங்களுக்கு அறிமுகமானவராய் இருக்கலாம், சிலர் புதியவராய் இருக்கலாம், ஆனால் அனைவரும் அசத்தலானவர்கள்.

சரி, ஊக்கமூட்டிய உள்ளங்கள் யார் யார் என்று பார்ப்போமா?

1. தன் பாராட்டுகளாலும் கருத்துக்களாலும் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் என்னுயிர்த் தோழி தியானாவின் வலைப்பதிவு பூந்தளிர். இதில் குழந்தைகளுடன் பயனுள்ள முறையில் நேரம் செலவழிக்க பல ஆர்வமிக்க செயல்பாடுகளையும் விளையாட்டுகளையும் அழகாக விளக்குகிறார். பூந்தளிரில் இருந்து சில வாசம் வீசும் பதிவுகள் உங்களுக்காக:
வசந்தம் நம் வீட்டில் எப்பொழுதும், பூக்கள் இதோ.
சமையல் செய்ய விடாமல் தொந்திரவு செய்கிறது குழந்தை என்று கவலைப்பட வேண்டாம், இதைப் பாருங்கள்!
சர்க்கரைப் பாகில் இனிப்பு செய்யத்தெரியும் எனக்கு, இவருக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது பாருங்கள். இந்த ஓவியத்தைப் பாருங்கள்!
வீட்டிலேயே அறிவியல் பற்றி சில புரிதல் கொடுக்க உதாரணங்கள்:
காற்றுக்கென்ன வேலி 
செடிகளின் நீர் கடத்தல் 
கணித விளையாட்டுகளையும் பார்த்து விடுங்கள்.

2. என்னைப் பாராட்டி ஊக்குவிக்கும் மற்றுமொரு நண்பர் கோவைவீரன் ஸ்ரீனி. இவருடைய வீரச் சுடர்கள் சில உங்களுக்காக:
மழலை மொழியை உயிர் எழுத்துக்கள் கொண்டு அழகாகப் புனைந்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளிகளைப் பற்றி வருந்தி வெகுண்டு புனைந்த கவிதை இது.
தமிழர் பெருமை பற்றி எழுதியிருப்பது விழித்து ஏழு தமிழா.
இராஜராஜ சோழனை மறந்து விட்டோமா என்று வரலாற்றுச் செய்திகளுடன் கேள்வி கேட்கிறார். நியாயமாகவே தோன்றுகிறது.
இவருடைய முதல் கவிதைக்கு இளங்கோவடிகளையும் புகழேந்திப்புலவரையும் துணை சேர்க்கிறார் பாருங்கள், அருமை! கவிதையும் அருமை.
இல்லறம் பற்றிய கவிதை  நல்ல சிந்தனை.

3. சங்க இலக்கியம் படிக்க எனக்கிருந்த ஆர்வத்தை ஊக்குவித்து சில புத்தகங்களையும் பரிந்துரைத்து என் கவிதைகளைப் பாராட்டி தமிழ் படைப்புகளைத் தனியாகப் பதிவு செய்ய ஊக்கம் கொடுத்த திருமதி.வைதேகி  ஹெர்பெர்ட் அவர்களையும் இங்கு நினைக்கிறேன். தமிழில் கலந்திருக்கும் வடமொழிச் சொற்களைப் பற்றியும் சொல்லித் தூய தமிழில் எழுத ஊக்கப்படுத்தும் அவரின் சங்க இலக்கியம் பற்றிய வலைத்தளம் இதோ உங்களுக்காக. தமிழ் என்று நினைத்துப் பயன்படுத்தும் பல சொற்கள் வடமொழி என்று நான் அறிய உதவிய தமிழில் உள்ள வடமொழிச்சொற்கள் இணைப்பு எனக்கு உபயோகமாய் இருக்கிறது. ஐந்து திணைகளையும் பற்றியும் படிக்க குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இணைப்புகளைப் பாருங்கள். குழந்தைகளுக்குத் தூய தமிழில் பெயர் வைக்க இந்த இணைப்பு  உதவுகிறது.

4. என் வலைப்பூ முகையாய் இருந்த நேரத்தில் இருந்து என்னை வாழ்த்தி ஊக்குவித்த திரு.ரமணி அவர்களையும் நினைவு கூறுகிறேன். இவரின் என்னை நானே அறிய விடு பிள்ளைகளுக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டாமல் அவர்களாகக் கற்று வளர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அவரின் இந்த இடுகை குப்பை முதல் காவியம் வரை எப்படி உருவாகிறது என்று சொல்கிறது. அவரின் மேலும் சில இடுகைகள் கவியாகும் காதலன் , காதல் என்றால் இதுதானா?

5. திடீரென்று ஒரு நாள் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருப்பதாக திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்கள் செய்தி சொன்னார்கள். எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன், அன்று தான் வலைச்சரம் பற்றி அறிந்தேன். முதன் முதலில் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கும் வலைச்சரத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் சூர்யப்ரகாஷ் அவர்களுக்கு நன்றி!
இவருடைய சுற்றுப்புறம் பாதுகாப்பது பற்றிய பதிவுகள் உங்களுக்காக:
மண்ணைக் காக்க மரம் நடுங்கள் 
பசுமை விடியல் 
மருந்து வாங்கும்போது கவனமாக இருக்க இதைப் படியுங்கள்.

6. என் முதல் வலைச்சர அறிமுகத்தை அறிவித்ததிலிருந்து என் வலைப்பூவிற்கு தவறாமல் வருகை தந்து என்னை வாழ்த்தி ஊக்குவிக்கும் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களையும் இங்கு நன்றியுடன் நினைக்கிறேன். திருக்குறளை இவர் விளக்கும் விதமே தனி அருமை, அப்படிச் சொல்லுங்க ஒரு உதாரணம்.
மற்றுமொரு அருமையான பதிவு எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது? 
ISO பற்றி அனைவருக்கும் கற்றுக்கொடுக்க ISO என்ற தலைப்பில் இவரின் பதிவுகளில் ஒன்று அட...அவ்வளவுதானா? ISO PART 1 . மேலும் கற்றுக்கொள்ள அவரின் ISO பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.
அவரின் மனிதனின் பிரச்னைக்கு காரணமான குணம் என்ன? பதிவில் ஆர்வமிக்க நல்ல கருத்துகளை வள்ளுவர் மற்றும் புத்தர் அவர்களின் துணையுடன் அழகாகப் பகிர்ந்துள்ளார். கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு.

7. இவரின் கருத்துரைகள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது, தமிழ் முனைவர் அவர்கள் பாராட்டுவது பெரிதல்லவா? என்னை வலைச்சரத்தில் அறிமுகமும் செய்தார். அவர் வேறு யாரும் இல்லை, நீங்கள் பலரும் அறிந்த வேர்களைத்தேடி முனைவர் இரா.குணசீலன். நம் தமிழ் மற்றும் தமிழரைப் பற்றிய பல செய்திகள் இவரின் பதிவுகளில் படிக்கலாம். ஒரு உதாரணம் ஏற்றுமதியான நாகரிகம்.
காற்றின் வேகத்திற்கேற்ப காற்றை வகைப்படுத்திய நம் முன்னோரின் அறிவை அறிந்துகொள்ள காற்றுக்கு இத்தனை பெயர்களா?
மண்ணைக் காக்க அறிவுறுத்தும் அழகான கவிதை மக்கு மனுசன்.
அட, இத சொல்லணுமே..தங்கம் பற்றிய சில தகவல்களுக்கு வாசியுங்கள் தங்கம் நேற்று, இன்று,நாளை?

8. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அரசன்.சே அவர்களுக்கு என் நன்றி. அவர் என் கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் என்று பல பதிவுகளில் பாடல் வரிகளுடன் படங்களை இணைத்து வழங்கியுள்ளார். வானம் பார்த்த பூமியின் இன்றைய நிலையை சொல்லும் கவிதை வெதை சோளத்தையாவது. பல நவீன விளையாட்டுப் பொருட்களும் நடைவண்டிகளும் வந்தாலும் பழைய மூன்று சக்கர நடை வண்டி தான் காலுக்கு நல்லது என்று ஒரு பத்திரிகையில் படித்தேன். அந்த நடை வண்டி பற்றிய ஒரு கவிதை நடைவண்டி.

9. சமீபத்தில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய திருமதி.அருணா செல்வம் அவர்களுக்கும் நன்றி! அவர் படைக்கும் கோழி வறுவல் உங்களுக்காக! காதலுக்கு கண் இல்லை என்பார்கள், நாள் இல்லை என்கிறார் இவர் அழியாக் காதல் என்ற கவிதையில். இதயம் ஏந்தி வணங்குகிறேன் என்று இவர் வணங்குவது யாரை என்று பாருங்கள், நீங்களும் வழிமொழிவீர்கள்!

10. நான் எழுதிய ஒரு கவிதைக்கு அழகான படம் இணைத்துத் தன் தளத்தில் வெளியிட்ட பிரேம் அவர்களுக்கு என் நன்றி! உள்ளூர நேசிக்கிறேன் உன்னை என்று இவர் சொல்வது யாரை? நானும் என்ற இவரின் பதிவு அழகிய படத்துடன் நல்ல கவிதை. கவிதை உலாவில் பிற பதிவர்களின் கவிதைகள் சிலவற்றை தள இணைப்புடன் வெளியிட்டும் ஒரு படத்திற்கு கவிதை எழுதவும் ஊக்குவிக்கிறார்.

இவர்களைத் தவிர என் வலைப்பதிவுகளைப் படித்து கருத்து கூறி என்னை வாழ்த்தி ஊக்கமூட்டிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி பல. இவர்களில் சிலர் பலருக்குத் தெரிந்திருந்தாலும் புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!
மேலும் வாசிக்க...

Monday, April 1, 2013

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!

அசைவளி கொணர்ந்த அதிரல் நறுமணம்
எழிலி கண்டுவிரிந்த மஞ்ஞை தோகை
பெரும்பெயல் பொழிந்து குளிர்ந்த மாடம்
இவற்றினும் மேலாக உள்ளம் உகள
தமிழே நீ வேண்டும் என்பதே என் நசை!

என் வலைப்பூவிலிருந்து தமிழ் காதல் என்ற இந்தக் கவிதையுடன் வலைச்சரப்  பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் என் பணிவான வணக்கம்!

என்னை வலைச்சர ஆசிரியராக அழைத்த திரு.சீனா ஐயாவிற்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைச்சரப் பதிவர்கள் அனைவரையும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பலரும் இனிதாய்த் தொடுத்த இந்த வலைச்சரத்தின் அழகு குறையாமல் நானும் சிறிது  தொடுக்க முயற்சிக்கிறேன்.

கணினிப் பொறியாளராய் சிறுது காலம் செக்கிழுத்துவிட்டு பின்னர் குடும்பத் தலைவியாய் வாழ்வை ரசிக்கும் சாதாரணப் பெண் நான்.

என் கற்பனைகளையும் எண்ணங்களையும் ஒரு வலைப்பதிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். தமிழில் நிறைய எழுதவேண்டும் என்ற உந்துதல் உயிர்த்தது. அதனைத் தனியாக ஒரு தமிழ் வலைப்பதிவில் செய்யலாம் என்று முடிவு செய்தேன். நல்ல தமிழ் பெயராகச் சூட்டித் துவங்கவேண்டும் என்னும் ஆசையில் பல திங்கள் ஓடியது.

அப்பொழுது,
தமிழ் தேனினும் இனியதன்றோ?
தமிழ்  மதுரத்திற்கு ஈடு உண்டோ?
இந்த இனிமை அனைவருக்காகவும் அன்றோ?
இப்படிச் சிந்தித்த நேரத்தில்
மனதில் ஒரு குரல் சொன்னது
இதைத்தானே மகாகவி பாரதி சொன்னார்
'தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவிடச் செய்தல் வேண்டும்' என்று!
மேலும், என் ஊர் மதுரை!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை!
அட! அருமை! இதுவும் இணைந்துள்ளதே 
என்னே ஒரு பொருத்தமான பெயர்!
இவ்வாறாக மலர்ந்தது என் வலைப்பூ
"தேன் மதுரத் தமிழ்"!

பின்னர் ஒரு நாள் என் நெருங்கியத் தோழி என் வலைப்பூவை தமிழ்மணத்தில் இணைக்க  வழிகாட்டினாள். அங்கு இணைந்தபின்னர் தான் தெரிந்தது எத்தனை வலைப்பூக்கள் தமிழ் பேசுகின்றன என்று. பின்னர் முந்தைய ஆசிரியர்கள் சிலரால் அறிமுகப்படுத்தப்பட்டு வலைச்சரத்தில் இணைந்தேன். இவ்வாறாக வலைச்சரத்தில் சேர்ந்து இன்று ஆசிரியப் பணி ஏற்றுள்ளேன். 
என்னுடைய பதிவுகளில் இருந்து சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அளவில்லா உவகை அடைகிறேன்.

தமிழ் மீதான என் காதலைச் சொல்லும் பதிவுகளில் சில:
இன் உயிர் தமிழ் அன்றோ
என் தமிழை உலகமே கேள்!

தாய்மை மற்றும் குழந்தைச் செல்வம் பற்றிய பதிவுகளில் இருந்து,
இனிமையினும் இனிமை
தாய் என்று ஆகும் வரை 

இயற்கை பற்றிய சில கவிதைகள்,
ஆறு பேசுகிறேன்
மேகம் 
கடற்கரை

காதல் கவிதைகள் சில:
தலைவன் தலைவி பாகற்காய் 
பொன்றாக் காதல்

சிறுவர்களுக்கு,
ஆத்திச்சூடி கதைகள்
எண்கள் பாட்டு 
உயிர் எழுத்துக்கள்

இன்னும் சில,
முல்லைப்பாட்டு முன்வைக்கும் மன்னன் மனம்
சுதந்திர தினம் 
தமிழ் தாத்தாவுக்கு நினைவாஞ்சலி
நீந்தப் பிடிக்காதவன் 
சம்மட்டி அடி

இங்கு குறிப்பிட்ட என் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நாளை மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!


மேலும் வாசிக்க...

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே 

நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற பூமகள் தான் ஏற்ற பொறுப்பினை சரிவர முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மிகுந்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்  : 7
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 35
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 77
பெற்ற மறுமொழிகள் : 91

பூமகளை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் கிரேஸ் பிரதிபா.

இவர் தேன் மதுரத் தமிழ் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். 



மதுரையில் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை முடித்து மதுரைக்காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து வளாகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பெங்களூரு சென்றவர். பின்னர் திருமணம், குழந்தை என்று ஓடிய வாழ்க்கையில் குழந்தைக்காகத் தற்காலிக பணி ஓய்வு எடுத்தவர். அது ஏழு வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது!! அவ்வப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிறுக்கும் கிறுக்கல்களை கணவரின் உந்துதலின் பேரில் ஒரு வலைப்பதிவில் சேகரிக்க ஆரம்பித்தார்.  பின்னர் தமிழுக்குத் தனியாக எழுத வேண்டும் என்ற ஆசையில் "தேன்மதுரத்தமிழ்" உருவானது. மதுரம் மதுரை, இரண்டையும் குறிப்பது தான் இடையில் உள்ள 'மதுர'. தமிழ்ப் பெயராக மின்னஞ்சலுக்கு 'கொடிமல்லிகை' தேர்வு செய்தார்.. பள்ளிப்பருவத்தில் இருந்தே தமிழ் மீது தனி அன்பும் ஈடுபாடும் கொண்டவர். சங்க இலக்கியங்கள் படிப்பதும் இவருக்குப்  பிடிக்கும்.அது வளர்ந்து மரமாகி சில நல்ல உள்ளங்களின் ஊக்கத்தில் இப்பொழுது கனி கொடுக்கிறது.  இக்கனிகள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறவர். 
குழந்தைகளுக்குத் தமிழ் நூல்களைக் கற்றுக் கொடுப்பதும் என்றாவது ஒரு நாள் புத்தகம் வெளியிட வேண்டும் என்பதும் இவரது விருப்பம். தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கிறார்.

கிரேஸ் பிரதீபாவினை வருக வருக ! கடமையைச் செவ்வனே செய்க ! என வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன். 

நல் வாழ்த்துகள் பூமகள்

நல் வாழ்த்துகள் கிரேஸ் பிரதீபா

நட்புடன் சீனா 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது