07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 26, 2014

நாளைய பாரதத்தின் நற்றூண்கள்!

அன்பார்ந்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும்
என் உளமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.



இதந்திரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி
பழிமிகுந்து இழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே
- பாரதியார்.

இன்று நாம் இந்தியாவின் அறுபத்தைந்தாவது குடியரசு தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நாடு இருக்கும் நிலையில் இந்தக் கொண்டாட்டமெல்லாம் தேவையா என்று நினைப்பவர்கள் உண்டு. 

இன்றைய தேதியில் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது. கல்வி வியாபாரமாகிவிட்டது. எல்லா இடங்களிலும் கையூட்டு வாடிக்கையாகிவிட்டது. சமூகப் பொறுப்புள்ள ஊடகங்கள் வன்முறை மற்றும் வக்கிரச்சாயத்தை வகையில்லாமல் பூசிய தன் அகோரமுகத்தைக்காட்டி இளித்துக்கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை இளைஞர் சமுதாயம் பகட்டுபோதையும் பாலியல் வேட்கையும் கொண்டு பொறுப்பற்றுத் திரிகிறது. போதாதென்று தொலைக்காட்சி வழியே வீட்டுக்குள் தணிக்கையின்றி நுழையும் தகாத காட்சிகளும் கருத்துகளும் பிஞ்சுத் தலைமுறையின் நெஞ்சங்களில் நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கின்றன.

நம்மைச் சுற்றி நடக்கும் சமூகச் சீர்கேடுகளையும் அவலங்களையும் சாடிக்கொண்டோ, புலம்பிக்கொண்டோ அதே சகதியில்தான் நாமும் உழன்றுகொண்டிருக்கிறோம். அடுத்தவரைக் குற்றஞ்சொல்லுமுன் நம் வரையிலும் நாம் சரியாக இருக்கிறோமா என்று நம்மையே சுயபரிசோதனை செய்துபார்ப்போமே இன்று.

நாம் புழங்கும் இடங்களான வீடு, சுற்றுப்புறம், தெரு, சாலை, பேருந்து, பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடங்கள் இவற்றில் நம்முடைய நடவடிக்கைகள் பிறர் குறை சொல்லாத அளவுக்கு இருக்கின்றனவா?

முதலில் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்கிறோம் என்று பார்ப்போமா? பொது இடங்களில் கண்ணியம் காக்கிறோமா? கைபேசியில் இரையாமல் பேசுகிறோமா? கூச்சல் கும்மாளங்களால் பிறருக்கு சங்கடங்கள் உண்டாக்காமலிருக்கிறோமா? ஆணோ பெண்ணோ, பொது இடங்களில் பொது நிகழ்வுகளில் சிரத்தை எடுத்து கவனமாய் உடையணிகிறோமா?

பொது இடங்களில் மற்றவருக்கு இடையூறாய் பக்கத்தில் நின்று புகைபிடித்தல், மதுத் தள்ளாட்டம், தகாத வார்த்தைகளை உச்சரித்தல், வெற்றிலை பாக்கு, பான்பராக் போன்றவற்றைக் குதப்பித் துப்புதல், எச்சில் சளியைக் காரி உமிழ்தல், சிறுநீர் கழித்தல் போன்று அடுத்தவரை முகஞ்சுழிக்கவைக்கும் அநாகரிக் செயல்களில் ஈடுபடாமலிருக்கிறோமா?

வரிசையில் நிற்கும்போது நம்மில் எத்தனைப் பேர் முன்னாலிருப்பவர்களின் சிபாரிசை எதிர்பார்க்காமல், வரிசையை மாற்றாமல் கலைக்காமல் தொடர முற்படுகிறோம்? யாரையாவது தவறிப்போய் இடித்துவிட்டாலோ மிதித்துவிட்டாலோ மன்னிப்பு கேட்கிறோமா? நம்மை யாராவது இடித்துவிட்டோ மிதித்துவிட்டோ மன்னிப்புக் கேட்டால் அந்த மன்னிப்புக்கு மதிப்பளித்து அதை ஏற்கிறோமா?

எந்த சந்தர்ப்பத்திலும் எவரிடமும் ஏதாவது பார்த்து செய்யுங்க சார்/மேடம்என்ற வாக்கியம் நம் வாயிலிருந்து வராமல் இருக்கிறதா?

நம்மில் எத்தனைப் பேர் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டிச்செல்கிறோம்? தலைக்கவசம் அணிகிறோம்? முறையான உரிமத்துடன் வாகனங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்? முதலில் சாலை விதிகள் இன்னின்னவென்று அறிந்திருக்கிறோமா?

பேருந்துகளில் செல்லும்போது தலையை வெளியில் நீட்டி வாந்தியெடுக்கும் அருவறுப்பான செயலைச் செய்யாமலிருக்கிறோமா? நமக்குப் பின்னால் சன்னலோரம் அமர்ந்திருப்பவர்களைப் பற்றியும் பேருந்துக்கு வெளியில் இருப்பவர்களைப் பற்றியும் எத்தனைப் பேர் நினைத்துப் பார்க்கிறோம்?

நம்மில் எத்தனைப் பேர் குப்பைகளை பொது இடத்தில் வீசாமல் அதற்குரிய இடத்தில் போடுகிறோம்? காணும் பொங்கலன்று மட்டும் மெரீனா கடற்கரையில் 46 டன் குப்பைகளை வீசிவிட்டு வந்திருக்கிறோம்.

நதிகளை அவர்கள் நாசமாக்குவது இருக்கட்டும். நம் வீட்டு வாயிலில் மழைநீர் ஓடுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருக்கும் வாய்க்கால்களை நாம் சுத்தமாக வைத்திருக்கிறோமா? குப்பைத் தொட்டியாக அல்லவா அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்? மழைநாளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியான பின்னர் டெங்கு, மலேரியா, யானைக்கால் வியாதி வந்து நாம்தானே கஷ்டப்படுகிறோம்!

மண்ணை மாசுபடுத்தும் என்றறிந்த பின்னர் என்றுமே மக்காத பாலித்தீன் பைகளைத் தவிர்த்துவிட்டவர்கள் நம்மில் எத்தனைப் பேர்?

இப்போது வீட்டுக்குள் வருவோம். நடுவீட்டில் தினவெடுத்து வீற்றிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியொன்று போதுமே, நம் இளகிய மனங்களை இறுகச்செய்யவும், பிள்ளை மனங்களைப் பிறழச்செய்யவும்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நம்மோடு நம் குழந்தைகளும் பார்க்கிறார்கள் என்ற உணர்வோடு, தேர்ந்தெடுத்த தரமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் நம்மில் எத்தனைப் பேர்? அறிவை மழுங்கச்செய்யும் அநேக நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் நேரம் விரயமாவதும் தவிர்க்கப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா நாம்?

படிப்பை விடவும் மதிப்பெண்களை விடவும் பண்பும் ஒழுக்கமும் முக்கியம் என்று குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் பெற்றோர்களா நாம்சுய ஒழுக்கமும் பகுத்தறியும் சிந்தனையும் கொண்ட ஒரு குடிமகனை உருவாக்குவதில் பெற்றோராய் நம் பங்கு என்னவென்று அறிந்து அதை சரியாய் நிறைவேற்றி வருகிறோமா? குழந்தைகளுக்கு முன்னுதாரணமாய் வழிகாட்டியாய் முதலில் நாம் நடந்துகொள்கிறோமா?

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் இளைப்பில்லை என்னும் எண்ணத்தைக் குழந்தை மனங்களில் அடுக்களையிலிருந்தே புகுத்தியவர்கள் எத்தனைப் பேர்? பெண்களையும் பெரியவர்களையும் மதிக்கவும், தங்கள் மீதான சுயமதிப்பை, சமூகத்தின் பால் தங்களுக்கிருக்கும் கடமையுணர்வை உணரவும்  நம் வீட்டு ஆண்/பெண் குழந்தைகளுக்குக் கற்றுத்தந்திருக்கிறோமா?

நம்மை நாமே அலசிப்பார்ப்போம். நமக்குள் மாற்றம் வரட்டும். வீட்டில் துவங்கும் மாற்றம் நாளை நாட்டையும் மாற்றும் என்று நம்புவோம். இந்தியாவின் இன்றைய நிலையை எண்ணி வெதும்பாது, எதிர்கால இந்தியாவை நல்லமுறையில் உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம்.

கோணலாய் வளர்ந்துவிட்ட மரங்களைக் குறைகூறுவதை விட்டு நாம் வளர்க்கும் செடிகளுக்கு நம்பிக்கையெனும் நீரூற்றி நற்பண்பெனும் உரமிட்டு சீராய் நேராய் நெடியதாய் வளர்ப்போம்.


வலைச்சர வாரத்தில் கடைசி நாளான இன்று நாளைய பாரதத்தைத் தாங்கவிருக்கும் நற்றூண்களான குழந்தைகள் பற்றிய பதிவுகளைப் பார்ப்போமா?

1. கதை கேட்டு வளராத குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா என்ன? குழந்தைகளுக்குச் சொல்லப்படும்கதைகள் குழந்தைகளிடத்தில் என்னென்ன விதமான மாற்றங்களையும் எண்ணங்களையும் உண்டாக்குகிறது என்று நாம் எதிர்பார்க்காத பல கோணங்களை முன்னிறுத்துகிறார் திரு.விழியன் அவர்கள். இனி குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும்போது இப்பதிவின் சாரம் நம் நினைவில் இருக்கும்.

2. சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். சின்ன அலட்சியம் கூட பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கிவிடும் அல்லவா? குழந்தைகளுக்கு ஆபத்துஏற்படாமல் தடுக்கும் சில ஆலோசனைகளை இந்திராவின் கிறுக்கல்கள் என்னும் தனது தளத்தில் பகிர்ந்துள்ளார் தோழி இந்திரா. அறிவோம் வாருங்கள்.

3. இருபத்திரண்டு வயதில் எனக்கிருந்த அறிமுகத்தை விட இரண்டு வயதில் என் மகளுக்கு இருக்கும் வட்டம்பெரிதாக இருக்கிறது என்ற பெருமிதத்துடன் தன் மகள் இளவெயினியைப் பற்றி எழுதுகிறார் திரு. செல்வேந்திரன் அவர்கள். இளவெயினி பற்றி இன்னும் பல சுவாரசியங்கள் அறிய அவர் தளத்துக்கு வாருங்கள்.

4. புதிய முறையில் குழந்தைகளுடன் விளையாட சுவாரசியமான பல கணித விளையாட்டுகளைக் கற்றுத் தருகிறார் தோழி தியானா தனது பூந்தளிர் தளத்தில். குழந்தைகளுக்கென்றே இயங்கும் இவருடைய தளத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்றபடியான பதிவுகளும் இடம்பெற்றிருப்பது சிறப்பு.

5. தன் பாடசாலையில் பயிலும் மூளைச்செயல்பாடு குறையுள்ள குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் மலர்ந்தமுகத்தையும் பற்றி தோழி இமா குறிப்பிடும்போது அக்குழந்தைகளுக்கு முன் நம் துயரெல்லாம் எம்மாத்திரம் என்ற எண்ணம் வந்துவிடும். சின்னப்பாதங்களின் தளர்நடை காண இமாவின் உலகம் வாருங்கள்.

6. பெற்றவரல்லாத மற்றவர்களின் பராமரிப்பில் விடப்படும் குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வளவு கேள்விக்குறியாகஉள்ளது என்னும் ஆதங்கத்தை இப்பதிவில் எடுத்துரைத்துள்ளார் தோழி ராமலக்ஷ்மி தனது முத்துச்சரம் வலைத்தளத்தில். பள்ளிகளும் குழந்தைக்காப்பகங்களும் பணம் பிடுங்குவதில் காட்டும் அக்கறையை குழந்தைகள் பாதுகாப்பிலும் காட்டவேண்டும் என்னும் அவருடைய கருத்தை எவரும் மறுக்கவியலாது

7. மழலைத்தூதுவர்கள் மட்டும் இல்லையென்றால் இல்லறப்போர் அவ்வளவு எளிதில் முடிவுக்கு வந்துவிடுமா? அழகிய கவிதையாய் அந்நிகழ்வை காட்சிப்படுத்தி மனந்தொடுகிறார் தோழி சாந்தி மாரியப்பன் தனது கவிதை நேரத்தில்.

8.  உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில் தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி என அறிவிக்கின்றது. ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த விரும்புவதாக தொலைபேசுகிறார். பக்கத்து மாநிலங்களிலிருந்து ஒரு சுற்றுலா போல வந்துபோகின்றனர்.

இப்படித்தான் தன் பதிவை ஆரம்பிக்கிறார் கசியும் மௌனம் தளத்தில் திரு. ஈரோடு கதிர் அவர்கள். அப்படி என்னதான் சாதித்துவிட்டது அப்பள்ளி? அறிந்துகொள்ள அவசியம் வாருங்கள். நாளைய இந்தியா பற்றிய நம் நம்பிக்கையை வலுப்படுத்தும் ஒரு மகிழ்வான நிகழ்வது.

9. சீசாவுக்குள் சுனாமியை அடைக்க முடியுமா? அடைக்கமுயன்றால் என்னவாகும்அப்படித்தான் குழந்தைகளை அவர்களுக்குப் பொருத்தமில்லாத நிகழ்ச்சிகளில் இருக்கைகளில் கட்டிப்போட்டு வைப்பதும் என்று கூறி அவற்றைத் தவிர்க்கும் ஆலோசனைகளையும் முன்வைக்கிறார் தோழி ஹூஸைனம்மா. அறிந்துகொள்வோம் வாருங்கள்.

10.  திரை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தரச்சான்றிதழ் படிதான் குழந்தைகள் அவற்றைப் பார்க்கலாமா கூடாதா என்று அனுமதிக்கப்படவேண்டும். ஆனால் நம் நாட்டில்தான் எதற்கும் தணிக்கையே கிடையாதே…  எவரும் எதையும் எங்கும் எப்படியும் பார்க்கலாம் என்ற நிலை! இதே மனநிலை அமெரிக்காவிலும் தொடர்ந்தால்? தோழி முகுந்த் அம்மா பட்ட பாட்டை அறிந்துகொள்ள அவரது தளத்துக்கு வாருங்கள்.

11. க்வில்லிங் எனப்படும் அழகிய கைவேலையில் தேர்ந்தவரான தோழி இளமதியின் தளத்தில் ஊஞ்சலாடும் குட்டிப்பெண்ணைப் பார்த்து ரசிக்கவாருங்கள். சிரிக்கும் பூவை சிங்காரித்து கவிதையால் அலங்கரித்த கரங்களைப் பாராட்டுவோம்.

12. எண்பது தொண்ணூறுகளில் திரையிசையில் வந்த, பார்க்கவும் கேட்கவும் தெவிட்டாத குழந்தைப் பாடல்கள் பலவற்றின் சுட்டிகளை ரேடியோஸ்பதியில் பகிர்ந்துள்ளார் திரு. கானா பிரபா அவர்கள். நாமும் பார்த்து ரசிப்போமா?



என்ன நண்பர்களேஇந்த வாரம் தங்கள் ரசனைக்கேற்ற அறிமுகங்கள் கிடைத்தனவா
இதுவரை என்னுடன் பயணித்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து ஆதரவளித்தமைக்கு 
அனைவருக்கும் என் அன்பான நன்றி
வணக்கம்.

 (படங்கள் நன்றி: இணையம்) 
மேலும் வாசிக்க...

Saturday, January 25, 2014

வாழ்க்கைப் பயணத்தினூடே சில வழிப்பயணங்கள்

வணக்கம் நண்பர்களே.


பயணங்கள் புதிய மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன; பயணங்கள் புதிய இடத்தை புதிய உணவுகளை புதிய வாழ்க்கை முறையை புதிய மனவோட்டங்களைஎன்று ஏராளமான புதுப்புது விஷயங்களை நமக்கு அறிமுகப்படுத்தி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் கண்டுணர உதவுகின்றன. ரசிப்புத்திறனை மேம்படுத்துகின்றன. இயற்கையை நேசிக்கவும் அதனோடு இயைந்து வாழவுமான வழிமுறைகளைக் கற்றுத்தருகின்றன.

இல்லத்துச் சாளரங்களின் வழியாகவும் கணினிச் சாளரங்களின் வழியாகவும் காணும் புற உலகைப் பற்றிய நம் கணிப்பையும் மதிப்பீட்டையும் மாற்றுகின்றன பயணங்களும் பயண அனுபவங்களும். உறவுகளுக்குள் புதியதொரு பந்தமும் பிணைப்பும் உருவாகக் காரணமாயிருக்கின்றன சிற்றுலா மற்றும் சுற்றுலாப் பயணங்கள். 

உலகம் ஒரு புத்தகம். பயணங்களை மேற்கொள்ளாதோர் 
அதில் வாசிப்பது அதன் ஒரு பக்கம் மட்டுமே 
என்கிறார் செயின்ட் அகஸ்டைன்.

நம்மில் எத்தனைப் பேர் அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்துடனே வாசிப்பை நிறுத்திவிடுகிறோம்? மிஞ்சிப் போனால் ஒன்றிரண்டு பக்கங்கள் கூடுதலாய் வாசிக்க முனைந்திருக்கலாம். ஆனால் நம் பதிவர்களுள் பலர் தங்கள் வாழ்க்கைப் புத்தகத்தின் ஏராளப்பக்கங்களை தங்கள் பயண அனுபவங்களால் நிறைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பயணம், உங்கள் வாழ்க்கையில் 
அன்பையும் ஆளுமையையும் மீட்டுக் கொணர்கிறது 
என்கிறார் கவிஞர் ரூமி.

வழக்கமான இயந்திரத்தனமான இயல்புவாழ்க்கையின்று விலகி புத்துணர்வும் ரசனையும் கூடியதொரு மாற்றத்தை மனத்தில் ஏற்றி, பின்வரும் காலத்தை வாழ்வதற்கான சக்தியைத் திரட்டிக்கொண்டு வருகிறோம் ஒவ்வொரு பயணத்தின்போதும்.

பயணிப்பது ஒரு கலை. அந்தப் பயணத்தை வெகு அழகாக வாசிப்போரின் மனங்கவரும் வண்ணம் எழுதுவது மாபெரும் கலை. தானும் பயணத்தில் கலந்துகொண்ட உணர்வை வாசகரை அனுபவிக்கச்செய்யும் எழுத்துக்குரியவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் நானறிந்த சிலரை இங்கே அறிமுகப்படுத்த விழைகிறேன்.

1. பயணங்கள் என்றதுமே நம் நினைவுக்கு சட்டென்று வருபவரும் தம் பயண அனுபவங்களை சுவைபட பல தகவல்களோடும் புகைப்படங்களோடும் நாம் அறியத் தருபவரும் டீச்சர் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான திருமதி துளசிகோபால் அவர்கள்தான். அவருடைய பயணக் குறிப்புகள் யாவும் அந்தந்த நாட்டுக்குச் செல்பவர்களுக்கு ஒரு கையேடு போல பயன்படக்கூடியவை. அவரோடு நாமும் சிங்கை சீனிவாசப் பெருமாளைத் தரிசிப்போம்  வாருங்கள்.

2. . பயணம் உங்களுக்கு வாழ்க்கையின் மீது வியப்பையும் காதலையும் உருவாக்கும் என்கிறார் கடல்பயணங்கள் என்றே தன் வலைப்பூவுக்கு பெயர் சூட்டியிருக்கும் திரு. சுரேஷ் குமார். உள்ளூர் வெளியூர் உலக நாடுகள் பலவற்றைப் பற்றிய அனுபவத் தகவல்கள் இவர் பதிவுகளில் இறைந்துகிடப்பதைக் காணலாம். ஜப்பானின் வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி அறிய ஆர்வமா?  வாருங்கள் அனுபவிப்போம்.

3. பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்துக்கு நீங்கள் தயாரெனில் திரு.பாரதிக்குமார் அவர்களின் வலையில் கொட்டிக்கிடக்கும் ஏராள அதிசயங்களின் இரகசியங்களைப் பார்வையிட வாருங்கள். பிரேசிலில் உள்ள முப்பது மீட்டர் உயர பிரும்மாண்ட ஏசு கிறிஸ்துவின் சிலையை அமைத்த விவரங்களை இங்கு காணலாம்சென்ற வாரப் புயலின்போது மின்னல் தாக்கி இச்சிலையின் வலக்கை விரலொன்று துண்டிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4.   தான் பார்த்து ரசித்த சுற்றுலாப் பயண அனுபவங்களை சுவைபட சொல்வதுடன் பயணங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் பற்றியும் பிற குடும்பங்களுடன் கூட்டுப்பயணம் மேற்கொள்ளும்போது உண்டாகும் சிக்கல்கள் பற்றியும் சிறப்பாக எழுதியுள்ளார் தோழி புதுகைத் தென்றல். கூட்டுப்பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் கட்டாயமாய் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு இது.

5. இந்தியத் தலைநகரில் வசிக்கும் திரு. வெங்கட் நாகராஜ் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா சென்றதோடு அவற்றைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் புகைப்படங்களுடன் தந்து நாமும் அங்கு சென்ற உணர்வை உண்டாக்குகிறார். அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளா பற்றி அறிய ஆர்வமா?  அவர் தளத்துக்கு வாருங்கள்

6. ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிப்பதென்றால் என்ன மாதிரி விசா விண்ணப்பிக்கவேண்டும், என்ன மாதிரி உடைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்னும் கூடுதல் தகவல்களோடு தனது ஐரோப்பியப் பயணத்தை, அழகழகான படங்களுடன் மிகவும் சுவைபட தனது ஊஞ்சல் தளத்தில் எழுதியுள்ளார் தோழி கலையரசி அவர்கள். இது மூன்றாம் கோணம் பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

7. ரயில் பயணங்களின்போது தான் சந்திக்கும் விதவிதமான அனுபவங்களை சிறப்பாகவும் தன் மனத்தில் தோன்றும் எண்ணங்களை மிகவும் ஆணித்தரமாகவும் பதிக்கும் தோழி அகிலா, பயணத்தில் இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டிய செய்திகளைப் பகிர்கிறார். பலருக்கும் பயன்படும் அவை என்னவென்று அறிந்துகொள்ள சின்ன சின்ன சிதறல்கள் தளம் சென்று பார்ப்போமா?

8. இளம்பதிவர்களோடு போட்டிப் போட்டுக்கொண்டு அசத்தலான பதிவுகளை வெளியிடுவதோடு பிற பதிவர்களின் பதிவுகளில் தான் ரசித்தவற்றைத் தனியே தொகுத்தளிக்கவும் ஒரு வலைத்தளம் பேணும், சுப்பு தாத்தா என்று பதிவர்களால் அன்புடன் அழைக்கப்படும், சூரி சுப்புரத்தினம் சிவா ஐயா அவர்கள் நியூயார்க்கில் தனது கலக்கலான அனுபவத்தை வழக்கமான நகைச்சுவையோடு பகிர்ந்துகொள்கிறார். ரசிக்க வாருங்கள்.

9. மடத்துவாசல் பிள்ளையாரடி, ரேடியோஸ்பதி, வீடியோஸ்பதி, உலாத்தல் போன்ற பல வலைத்தளங்களை நிர்வகிக்கும் திரு. கானா பிரபா அவர்கள் தனது பயணக்குறிப்புகளையும் அனுபவங்களையும் பதிவதற்கென்றே பேணும் தளம்தான் உலாத்தல். உலக நாடுகள் பலவற்றுக்கும் மேற்கொண்ட பயண அனுபவங்களை அழகாகத் தொகுத்தளித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஜெனோலன் குகைகளைப் பற்றிய பதிவைப் படங்களுடன் இங்கு காணலாம்.  குகைக்குள் தங்கள் திருமணம் நடைபெறவேண்டுமென்று மல்லுக்கட்டுபவர்களும் உண்டாம். 

10. லெபனான் போவதென்று முடிவான போதே எதைப் பார்க்கிறோமோ இல்லையோ கலீல் ஜிப்ரான் பிறந்த ஊரையும் அவர் வீடு மற்றும் மியூசியத்தையும் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட தோழி காயத்ரி சித்தார்த் அவர்களின் ஆசை நிறைவேறியதா? மிரட்டும் படங்களுடன் லெபனான் பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் அவரது பாலைத்திணை வலைத்தளத்தில்.


11. மலேசியாவின் மிக ரம்யமான மாநிலமான திராங்கனுவில் குடிநுழைவு குற்றச்செயல்களைக் கண்டறிந்து சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியிலிருந்த போது தனக்கேற்பட்ட அனுபவங்களையும் சந்தித்த நிகழ்வுகளையும் கடலின் மொழி – மரணம், கடத்தல், கொலைகள் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார் திரு. விக்னேஷ்வரன் அவர்கள். அறிந்துகொள்ள விக்னேஷ்வரனின்  வாழ்க்கைப்பயணத்தில் நுழைந்து பார்ப்போம் வாருங்கள்.

12. வழிப்பயணத்தில் தொலைத்தவற்றை மீளப்பெறும் சாத்தியமிருக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் தொலைத்தவற்றை?என்னைக் கவலைகள் தின்னத்தகாதென கன்னற் தமிழைச் சரணடைந்தேன் என்று சொல்லியபடி பால்யத்தின் நெருடலான தருணங்களை தமிழால் வருடி அழகுபார்க்கிறார் தொலைத்தவை எத்தனையோ என்ற தொடர்பதிவில் தோழி வேதா இலங்காதிலகம். பயண அனுபவங்கள் பல எழுதியிருந்தாலும் அவருடைய இந்த வாழ்க்கைப்பயணம் என்னை மிகவும் ஈர்த்தது.  

ஒரு தேர்ந்த வழிப்போக்கன் பயணத் திட்டங்களைத் தீட்டுவதுமில்லை,
திரும்பிவருவதைப் பற்றி சிந்திப்பதுமில்லை 
என்கிறார் அறிஞர் லாவோட்சு.

திட்டமிடாத பயணத்தின் நெருக்கடிகளில் சிக்கித்தவிக்க நாம் யாரும் விரும்புவதில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் பயணங்கள் அனைத்தையும் கூடுமானவரை முன்கூட்டியே திட்டமிட்டே செயல்படுத்துகிறோம்.  நம்மால் திட்டமிடவியலாத ஒரே பயணம் நம் வாழ்க்கைப் பயணமொன்றுதான். அதைத்தான் கவியரசர் இப்படிப் பாடுகிறார்,

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

இன்றைய நாளை இனிதே பயணிப்போம். 
இனிவரும் நாட்களும் இனிதாய் அமையும் என்னும்
 நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.






நாளை சந்திப்போம்.
நன்றி. வணக்கம். 

(படம் நன்றி: இணையம்)
மேலும் வாசிக்க...

Friday, January 24, 2014

வனந்துறந்தலையும் வனப்பேச்சிகள்

வணக்கம் நண்பர்களே...




வாழும் மரங்களை வெட்டினோம்
வாழாவெட்டியாகிப் போயினர்
வனப்பேச்சிகள்!


சமீபத்தில் இயற்கை எய்திய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம். 

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சில பதிவுகளை இன்று காண்போம். ஆலைகள், தொழிற்சாலைகள், குளிர்சாதனப் பெட்டிகள் இவற்றிலிருந்து நாம் வெளியேற்றும் கரிமச்சேர்வைகளால் எவ்வளவு கலகம்! கிடுகிடுவென உயரும் வெப்பத்தால் உருகிக்கொண்டிருக்கிறது உலகம்!

அவனை நிறுத்தச் சொல், நான் நிறுத்துகிறேன் என்று அடுத்தவரைக் கைகாட்டிக்கொண்டு தொடர்ந்து அழிவைத் தேடிக்கொண்டிருக்கிறோம் நாம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் சுற்றுப்புறச்சூழலைப் பேணுவதற்கான உறுதி எடுத்துக்கொண்டாலே போதும், பூமி வாழும். அப்படியொரு அற்புதமான முயற்சியில் மதுரைவாசிகள் ஒன்றிணைந்திருப்பது மன ஆறுதலை மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகம் தரும் வகையில் அமைந்துள்ளது.

மதுரையில் உள்ள சூழலியல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து பசுமை நடை என்ற பெயரில், மாதம் ஒரு முறை மதுரையை சுற்றியுள்ள வரலாற்று சின்னங்கள், மலைகள், சமணர் படுகைகள், குகைகள், பாறை ஓவியங்கள் என தொடர்ந்து பயணிக்கிறது இந்தக் குழுமம். இது வரை மதுரையை சுற்றியுள்ள முக்கியமான 12 வரலாற்று சின்னங்கள் நோக்கி பசுமை நடைகள் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் 250 பேர் ஆர்வமாக இதில் கலந்து கொள்கிறார்கள் என்கிறார் இந்த இயக்கத்தை உருவாக்கியவர்களுள் முதன்மையானவரான எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன்.

1. பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்றுத் தளங்களை எந்த அளவுக்கு நம் மக்கள், தங்கள் பெயர்களைப் பொறித்தும், குப்பைகளை வீசியும் அவமரியாதை செய்துள்ளனர் என்பதை இப்பதிவுகள் மூலம் அறிந்து மனவருத்தம் உண்டாகிறது. கொங்கர் புளியங்குளம் பகுதியில் நடைபெற்ற பசுமை நடை பற்றி மிக விரிவாக படங்களுடன் எழுதியுள்ளார் மதுரக்காரன் அவர்கள். 

2.   கருங்காலக்குடி பஞ்சபாண்டவர் மலைக்குச் சென்ற பசுமை நடை பற்றிய தன் அனுபவங்களைப் புகைப்படங்களோடு பகிர்ந்துள்ளார் திரு. வேல்முருகன் அவர்கள். ஏற்கனவே சென்றுவந்ததைப் போல் அல்லாமல் வேறு வேறு புதிய அனுபவத்தை தருவதால் மீண்டும் மீண்டும் பசுமைநடையில் கலந்துகொள்வதாகக் கூறுகிறார். உள்ளூரில் 
உள்ளவர்களே அறியாத பல அபூர்வத் தகவல்களைத் திரட்டி உலகறியச் செய்யும் அற்புதப்பணியின் செயல்வீரர்களுக்கு நம் அனைவரின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

3. கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம் என்பதைப் போல்பஞ்சபூதங்களும் தங்கள் சீற்றத்தைக் காட்டத்தொடங்கிய பின்னர்தான் சூழலியல் பற்றிய விழிப்புணர்வு நமக்குள் எழத் தொடங்கியுள்ளது.  காலம் காலமாகவே நமக்கு அத்தகைய விழிப்புணர்வை உருவாக்கப் பலரும் பாடுபட்டபோதும் பசுமை இலக்கியம் என்று தனியே அடையாளப்படுத்தப்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் சூழலியல் தொடர்பாக தமிழில் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளை அறியத் தருகிறது சஞ்சிகை தளம்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருது, இவ்வருடம் திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தியை சென்ற வாரம் அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். 

விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே 
பசும்புற் றலைகாண் பரிது. 

4. மழை – நினைக்கும்போதே மனம் நனைக்கும் இதம்வெளியில் உள்ள வெக்கையை மட்டுமில்லாமல், மனதில் உள்ள வெக்கையையும் குளிர்விக்கின்ற மழை நம் அனைவருக்குமான வரம் என்கிறார் தோழி தீபா நாகராணி தனது வலைத்தளத்தில். எதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம் என்கிறார். எனக்குத் தட்டுப்பட்டவை ஏராளம்.

5. பசுமை தமிழகம் என்னும் இத்தளத்தில் விவசாயிகளுக்கு உதவிகரமான வகையில் ஏராளமான வேளாண் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் தகவல்கள் நிறைந்துள்ளனகண்ட இடத்திலும் காட்டுச்செடியெனப் பரவி விதைகள் மூலம் காற்றை மாசுபடுத்தும்சுவாசக்கோளாறுகளை உண்டாக்கும் பார்த்தீனியம் என்னும் களைச்செடிகளை அழிக்கும் வழிமுறைகளை அறிந்துகொண்டு அதன்படி செயல்படுவோம்.

6. நம்முடைய சுயநலத்தாலும் பேராசையாலும் இயற்கையை அழித்து பல உயிரினங்களை அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறோம். அவற்றைப் பற்றி எடுத்துச்சொல்லி எச்சரிக்கிறது தடாகம் வலைத்தளம். கலை, இலக்கியம், சுற்றுச்சூழல், அரசியல், புத்தக ஆர்வலர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் ஒரு அற்புதமான இத்தளத்தின் மூலம் ஆபத்தான நிலையிலிருக்கும் செந்நாயினத்தைக்கண்டறிந்துகொள்ள வாருங்கள்.

7. கள்ளி முளையான், சிறுகுறிஞ்சான், சீந்தில், சிலந்தி நாயகம், நீர்முள்ளி, பாவட்டை, பழம்பசி, கடுகுரோகிணி இவையெல்லாம் யாருடைய பெயர்கள்? இவை ஆட்களின் பெயரல்ல. அரும் மூலிகைகளின் பெயர்கள். பாட்டி வைத்தியம் என்று தமிழிலும் Granny Theraphy என்று ஆங்கிலத்திலும் இயங்கும் இத்தளத்தில் கைவைத்தியம், அழகுக்குறிப்புகள், ஆரோக்கிய சமையல் போன்ற பல உபயோகமானக் குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நினைவாற்றலுக்கும் இலந்தைப்பழத்துக்கும் என்ன தொடர்பு? அறிந்துகொள்ள பாட்டியின் வைத்தியத்தளத்துக்கு வாருங்கள்.

8. முடி உதிர்தல் இன்றைய பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்களில் உண்டாகும் மாற்றங்களாலும் பணியழுத்தம், நேரமின்மை, பொறுமையின்மை போன்ற காரணங்களாலும் இது நேர்கிறது. முடி உதிர்தலைத் தவிர்த்து அடர்கூந்தல் பெறத் தேவையான இயற்கை வைத்திய முறைகளை வழங்குகிறது பெட்டகம் வலைத்தளம்.

9.  நம் வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமும் மாறிவருகிறதென்று சொன்னேன் அல்லவா? பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நூடுல்ஸ், பீட்ஸா பர்கர் என்று மாற்றுணவுக்குப் பழகிவிட்டனர்சோறு என்றாலே முகத்தை சுழிப்பார்கள். ஆனால் சோற்றில் எவ்வளவு நல்ல சத்தான விஷயங்கள் இருக்கிறது என்று பார்த்தோமானால் சோற்றை ஒதுக்க முன்வரமாட்டோம். வனப்பு வலைத்தளத்தில் சோற்றின் மகிமை குறித்து தோழி சந்திரகௌரி எழுதியுள்ளதைப் பார்ப்போம்.

10. வெறும் அரிசிச்சோறு மட்டும் சாப்பிட்டுக்கொண்டிராமல் சிறுதானியங்கள் பக்கமும் நம் கவனத்தைத் திருப்பவேண்டும். அப்படி செய்தால் மழையை எதிர்பாராத மானாவாரிப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் தஞ்சை விவசாயிகள் தற்கொலைகளிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்னும் அரியதொரு கருத்தை முன்வைக்கிறார் திரு. மது அவர்கள் தனது மலர்த்தரு வலைத்தளத்தில்.  

11. சிறுதானியங்களை இதுவரை சமைக்காதவர்கள் எனில் என்ன சமைப்பது, எவ்வாறு சமைப்பது என்று திணறத்தேவையில்லை. உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்கள் வரிசையில் தினை, பார்லி, கேழ்வரகு, வரகு, கம்பு, சாமை, குதிரைவாலி போன்ற தினைப்பயிர்களைக் கொண்டு சத்தும் சுவையுமுள்ள அநேக சிற்றுண்டிகளைத் தயார் செய்யும் முறையைப் படங்களுடன் மிராவின் கிச்சன் வலைத்தளத்தில் விளக்கியுள்ளார் தோழி காஞ்சனா ராதாகிருஷ்ணன். வாருங்கள் வரகு சர்க்கரைப் பொங்கல் உண்டு மகிழலாம். 

12. இப்போது நம்மில் பலருக்கும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் ஒரு பெரும் சவாலாக உள்ளது. நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே குறைவாகவே உள்ளதே காரணம். பழங்களில் இனிப்பு இருக்கிறது என்று அவற்றைத் தவிர்ப்பவர்கள் அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றை வெளுத்துக்கட்டுகிறார்கள். கேட்டால் அவற்றில் இனிப்பு ஏது என்கிறார்கள். சரியான புரிதலின்மையால் நோயின் தீவிரம் அதிகமாகி உடலுறுப்புகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனிக்க வேண்டியவற்றை  இங்கே அழகாகப் பட்டியலிட்டு எடுத்துரைக்கிறார் மருத்துவர் எம்.கே.முருகானந்தன் ஐயா அவர்கள். அறிந்து நலம்பெறுவோம் அனைவரும்.


நம்மால் இயன்றவரை இயற்கையின் வழியில் இணைந்து நடப்போம்
சூழலியல் காப்போம் என்று உறுதியெடுப்போம்
வாழ்விழந்து தவிக்கும் வனப்பேச்சிகளை வனந்திருப்புவோம்.



நன்றி நல்லுறவுகளே
நாளை மீண்டும் சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது