07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 29, 2013

தேடித் தரும் தேன்சிட்டு-4

தினசரி தியானம்  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்  திருப்பராய்த்துறை

வணக்கம்  அன்பர்களே !  கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் முடிந்ததா? 
இன்றைக்கு நம்முடைய சுற்றுலா ‘தமிழ்த் தேன்’ - இதை எழுதும் பொழுதே ஒரு சந்தேகம்.
தமிழ்த் தேன் அல்லது தமிழ் தேன்  எது சரி ? 

இது எல்லோருக்கும், அதாவது என்னை மாதிரி முறையாகத் தமிழ் இலக்கணம் படிக்காமல் தடவித் தடவி எழுதுகிறவர்களுக்கெல்லாம் வரக்கூடியது தான். இந்தப் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கப் போகிறது. அதற்கு இணையத்துலேயே ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். முதலில் கிடைத்த வலைப்பூ கவிக்கோ திரு ஞானசெல்வன் அவர்களின் நல்ல தமிழ் என்ற வலைப்பக்கம் . தினமணிப் பத்திரிக்கையில் தொடராக வந்த இந்தக் கட்டுரைகளை வலைத்தளத்தில் திருவேங்கடம் என்னும் அன்பர் நல்லபடியாக நிர்வகித்து வருகிறார்.

நல்ல வேளையாக அவர்களே ” நல்ல தமிழ்” என்று எழுதிவிட்டபடியால் ”எது சரி ’நல்லத் தமிழ்’ அல்லது நல்ல தமிழ்” என்கிற குழப்பம் வரவில்லை. கூடவே ஒரு தெளிவும் வந்த மாதிரி இருந்தது ‘ல’ மெல்லின வர்க்கத்தை சேர்ந்ததால் வல்லின வர்க்கத்தின் ”த” ஒற்று பெறாமல் வரும் போலிருக்கிறது என்று நினைத்தேன். அப்படியானால் அதே மெல்லினத்தை சேர்ந்த “ழ” வைத் தொடரும் ‘த’ வும் ஒற்று பெறாமல் உச்சரிகபடவேண்டும். ஆகவே தமிழ் தேன் சரி என்று நினைத்தேன். 
அப்படியே அவர்கள் உதாரணங்களுடன் பிழை -சரி ஒப்பிட்டு காட்டியிருக்கும் பட்டியலைப் பார்வையிட்டேன். அங்கே தமிழ்த் தாய் சரி என்றும் தமிழ் தாய் பிழை என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  


 
 போச்சுடா ! அப்படியானால், ஒற்று மிகுத்து வரும் தமிழ்த் தேன் என்பதுதான் சரியானது எனத் தோன்றி அப்படியே எழுதி வைத்தேன்.  மிகுத்து /மிகுந்து எது சரி? -அன்பனே நீ இப்படி யோசித்துக் கொண்டிருந்தால் கட்டுரையை எழுதி முடிக்கப் போவதில்லை என மனம் பயமுறுத்தியது.  தெரிந்தபடி எழுதி முடி, வாசக அன்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று சொல்லியது . சரி, கண்டிப்பாக வந்து நிதானமாகப் படிக்க வேண்டிய பாடங்கள் இவை என்ற முடிவுடன் தேடலைத் தொடர்ந்தேன்  [என்ன! ரிடயரான பிறகா, மனசாட்சி கேலி செய்கிறது ].   

இதோ நீச்சல்கார(ர்)ன்  ஒரு ஜாவா மென்பொருளை மெனக்கெட்டு தயாரித்திருக்கிறாரே ! நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி  என்னும் இந்த மென்பொருள்  நன்றாகவே வேலை செய்கிறது என்பதை கீழ் கண்ட உதாரணத்தில் பார்க்கலாம்.


இதிலும் தமிழ் தேன் என்பதை சந்தேகத்தில் வகைப்படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழ்த் தேன் என்பதில் எவ்வித சந்தேகத்தையும் எழுப்பவில்லை. இரண்டு தவறுகளை வேண்டுமென்றே செய்து பரிசோதித்தேன். அவைகளை பரிந்துரையில் சரியான முறையில் சுட்டிக் காட்டியுள்ளது. மிக அற்புதமான ஒரு மென்பொருள். வாழ்த்துகள் நீச்சல்காரன். தங்கள் தமிழ்சேவை இன்னும் நல்ல முறையில் தொடரட்டும்.   அவருடைய இன்னொரு வலைப்பக்க மென்பொருள் தமிழ் புள்ளி. இது பலவகையான கோலங்களின் வடிவங்களை நம் தேவைக்கு ஏற்ப கணிணியில் போட்டுக் காட்டுகிறது. பெண்களுக்கு மிகவும் பயன்படும். அதையும் ஸ்மார்ட் ஃபோன் மூலம் செய்ய முடிந்தால் இன்னும் அமர்களமாயிருக்கும்!  

 என்னை விட சற்று மேல் தட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு  ஒரு அருமையான வலைப்பூ பசுபதிவுகள் மலர்ந்திருக்கிறது . பேராசிரியர் பசுபதி மரபுக் கவிதைகளுக்கான இலக்கணத்தை படிப்படியாகச் சொல்லிக் கொடுக்கிறார். இப்போது கவிதை இயற்றிக் கலக்கு என்ற பெயரில் அது புத்தகமாகவும் வெளி வந்துள்ளது  இது பல வருடங்களாக அவர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். அதைத் தவிர பழங்கால சஞ்சிகைகளிலிருந்து பல கிடைத்தற்கரிய தகவல்களை, துணுக்குகளை சித்திரங்களை யாவருடனும் பகிர்ந்து வருகிறார். கிடைத்தற்கரியத் தேன் இது. பிடித்துக் கொள்ளுங்கள்.    

   ஒவ்வொருவருக்கும் தமது தாய் நாட்டின் பெருமையை புகட்டினால் நாட்டுப்பற்று ஓங்கும் அது போல அவரவர் தாய் மொழி பிறரால் எப்படி மதிக்கப்படுகிறது என்பதை அறியும் போது மொழிப்பற்று ஓங்கும். அப்படி பிற தேசத்தவர் அறிய வேண்டுமானால் நல்ல தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவர்களால் போற்றப்பட வேண்டும். அப்படி மொழியாக்கம் செய்பவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு பிற மொழிகளில் அபார தேர்ச்சிப் பெற்றிருந்தால் மட்டுமே  இந்த மண்வாசனையை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். பிற மொழியினவர் வந்து தமிழ் கற்று மொழியாக்கம் செய்வதில் அவர்கள் மண்வாசனையை இழந்து விடுவார்கள்.  முனைவர் மு இளங்கோவன், புதுச்சேரியில் வசிக்கும்  மதனகல்யாணி அவர்கள் சிலப்பதிகாரத்தை பிரஞ்சு மொழிக்கு மொழியாக்கம் செய்திருப்பதைத் தெரிவிக்கிறார். மேலும் அவருடைய வலைப்பூவில் பல தமிழறிஞர்களைப் பற்றியும் அவர்களது தமிழ்த் தொண்டு பற்றியும் தொடர்ந்து வாசகர்களுக்கு எழுதி வருகிறார்.
-------------------------------------------------------------------------------------------
கதியால்கள் என்ற  வலைப்பூவின் ஆசிரியர் குணேஸ்வரன் புலம் பெயர்ந்தவர்களிடையே  தமிழ் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக வேற்றுநாட்டு அடையாளம் முழுதாக தமிழைக் காவு கொள்ளும்முன்னர் உணர்வாலும் செயற்பாட்டாலும் தமிழராய் உணர்தல். இது புலம்பெயர்ந்த முதற்தலைமுறைக்கு பிரச்சினையல்ல. அவர்களின் இரண்டாந் தலைமுறையினருக்குரிய பிரச்சினை. எனவே மொழிவழியாகப் பண்பாட்டைக் கடத்துவதற்கு ஒரு முயற்சியாகத்தான் தமிழைக் கற்கவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றனர். நான் யார்? என் தாய்நாடு எது? எது என் தாய்மொழி? ஆகிய கேள்விகள் எழும்போதுதான் தாய்நாடு பற்றியும் தமது மொழி பற்றியும் தமது பண்பாடு பற்றியும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய நிலையும் தமது வேர்களைத் தேடவேண்டிய நிலையும் வருகிறது
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் கல்வி  என்னும் கட்டுரையில் ஈழத் தமிழரின் புது சூழ்நிலைகளிலும் தமது கலாசாரத்தையும் மொழியையும் போற்ற வேண்டிய கடமையை விரிவாக விவரிக்கிறார். 
முதலில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஆளுமைகள் சிந்திக்கவேண்டும். அவர்களிடம் இருந்துதான் எதனைப் பிள்ளைக்குப் போதிக்கலாம். அதற்கு எவ்வாறான ஒழுங்குமுறைகளை (அகராதிகள் உருவாக்குதல். சொற்களஞ்சியத்தை உருவாக்குதல், பொருத்தமான கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம், பாடநூல், ஆசிரியர் பயிற்சிகள்) செய்யலாம் ஆகிய திட்டங்கள் வரவேண்டும். இம்முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதும் அறியப்படுகிறது. எனவே தமிழ் அடையாளத்தை தமிழ் மொழிவழியூடாக புதிய தலைமுறைகளுக்குக் கடத்துவதே இன்று எமக்குள்ள ஒரு வழியாகும். அதனூடாகத்தான் தமிழ்மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இனத்தையும் எதிர்காலத்தில் வாழவைக்கமுடியும்.
குறிப்பாக வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் மேல் கொண்டுள்ள காதல் தமிழ் நாட்டில் வாழும் குடிமக்களுக்கே இல்லாமல் போவது தான் விந்தை. இங்கே  புத்தக வெளீயீட்டில் தமிழ் சந்தைப் படுத்தப்படுவதைத் தான் பார்க்க முடிகிறது.
 -----------------------------------------------
இந்த சந்தைப்படுத்தும் நுணுக்கத்தைப் பயன்படுத்தி தொலைக்காட்சி ஊடகத்தின் மூலம் தமிழ் ஆர்வத்தை ஏன் தூண்டக்கூடாது என்பதை   முள்ளை முள்ளால் எடு  என்னும் என்னுடைய பழைய கட்டுரை ஒன்றில் எழுதியிருப்பதும்  நினைவுக்கு வருகிறது.
 தனியார் நிறுவனங்கள், தொலைக்காட்சியினர் இணைந்து பன்னிரண்டு முதல் பதினாறு வயது குழந்தைகைகளுக்கு ஆத்திச்சூடி ஆசாரக்கோவை, நன்னூல், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற நூல்களிலிருந்து அந்தாக்க்ஷரி, பொருளுரைத்தல், விட்ட இடத்திலிருந்து தொடருதல் என்பன போன்று பலவித போட்டிகளை கவர்சிகரமான பரிசுகளோடு நடத்த முன் வர வேண்டும். ஆயிரக்கணக்கான பள்ளிகளிடையே ஒவ்வொரு வருடமும் நல்ல கற்பனை வளத்துடன் நடத்த ஆரம்பித்தால் நமது குழந்தைகள் மட்டுமல்ல அவர்களது தாய் தந்தையரும் உற்சாகமாகத் தமிழ் கற்றிடுவர். நம் முன்னோர்களின் தீர்க்க சிந்தனையை பாராட்டும் பக்குவமும் வரும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது ?  வலைப்பதிவர்கள் கூடும்போது இம்மாதிரி விஷயங்களைப் பற்றி சிந்தித்து செயல்பட்டால் தமிழ் வளர வாய்ப்புகள் கூடும்.


மற்றுமொரு சிறப்பான தமிழ்பணி செய்து வருபவர் திரு மறவன்புலவு க. சச்சிதானந்தம் அவர்கள். அவர்  தருமபுர ஆதினத்தொடு இணைந்து பன்னிரு திருமுறையை பல மொழிகளில் மொழி பெயர்க்கும் பெருந்தொண்டினை செய்து வருகிறார்.பன்னிரு திருமுறையின் 18,246 பாடல்கள் அனைத்துக்கும் உரையுடனும் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் இசையுடனும், சமகாலத்தில் தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், தேவநாகரி, அரபி, தாய்லாந்து, பர்மியம், யப்பான், ஆபிரிக்கான்சு, கிறியோல், பிசின், மலாய், இந்தோனீசியன், சுவாகிலி, உருசியன், ஒலிக்குறி உரோமன், ஆங்கிலம் ஆய வரிவடிவங்களுக்கு ஒலிபெயர்த்துத் தருவதுமான மின்னம்பல தளத்தின் www.thevaaram.org (2006) அமைப்பாளர். அவரைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே சுட்டவும்

அந்த கால முழுநேர ரேடியோ நாடகங்கள்- தேசீய ஒலிபரப்பில் அடிக்கடி தமிழாக்கம் இரா.வீழிநாதன் என்ற பெயரைக் கேட்டிருந்தேன். சமீபத்தில் அவரைப் பற்றி  செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களின் வம்பளந்தான் முக்கு என்ற வலைப்பதிவில் விவரமாக எழுதியுள்ளார்.
அடுத்து, "கல்கி' இவரைப் பெரிதும் ஆட்கொண்டது. கல்கியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கூடவே, இந்தியில் தயாரான "மீரா' படத்துக்கு வசன மேற்பார்வையும், அதில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் பணியும் சேர்ந்தே நடந்தது "கல்கி' கிருஷ்ணமூர்த்தியே வீழிநாதனை சம்ஸ்கிருத, இந்திக் கதைகள், படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாக இருந்தார். தனது கதைகள், நாவல்களை இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார். சோலைமலை ராஜகுமாரி, பார்த்திபன் கனவு, அலையோசை ஆகியவை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டன. அலையோசை, "லஹரான் கி ஆவாஜ்' என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் ரா.வீழிநாதன் பெயர் தமிழ்-இந்தி இலக்கிய இதழியல் உலகில் மிகப் பிரபலமடைந்தது.
 செங்கோட்டை ஸ்ரீராம் பல முன்னணிப் பத்திரிக்கைகளிலும் வானொலி தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் அனுபவம் உள்ளவர்.
அவருடைய  வலைப்பூ கவனத்தில் இருக்க வேண்டிய ஒன்று.
-----------------------------------------------
மொழிப்பற்று என்பது பிற மொழிகளின் பால் கொண்ட வெறுப்பால் வெளிப்படுத்தப்படுவது அன்று.  என்னுடைய அன்னையை நான் நேசிப்பதற்கு  அடுத்தவருடைய  அன்னையை நான் குறை சொல்ல வேண்டுமா என்ன? 

இன்றைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.  நல்லது. தொடர்ந்து வாசியுங்கள். இந்த நாள் இனிய நாளாகட்டும். வாழ்க வளர்க

18 comments:

 1. அருமையான அறிமுகங்கள்...
  தமிழ்த் தொண்டு ஆற்றிவரும்
  உன்னதமான தளங்கள்..
  சென்று பார்க்கிறேன்...
  பகிர்வுக்கு நன்றிகள் பல...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுகளுக்கு நன்றி மகேந்திரன்

   Delete
 2. சந்திப்பிழை தவிர்த்துத் தமிழ் எழுத வழிகாட்டுகிறது இப்பதிவு.

  வலைச்சரத்திற்கு இது புதியது. அறிமுகங்களும் மிக நன்று.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். இப்பதிவு ஒரு வழிகாட்டி மரம் போலத்தான். நல்ல விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்வது அவரவர் கையில் உள்ளது.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. தனியார் நிறுவனங்கள், தொலைக்காட்சியினர் இணைந்து பன்னிரண்டு முதல் பதினாறு வயது குழந்தைகைகளுக்கு ஆத்திச்சூடி ஆசாரக்கோவை, நன்னூல், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற நூல்களிலிருந்து அந்தாக்க்ஷரி, பொருளுரைத்தல், விட்ட இடத்திலிருந்து தொடருதல் என்பன போன்று பலவித போட்டிகளை கவர்சிகரமான பரிசுகளோடு நடத்த முன் வர வேண்டும். ஆயிரக்கணக்கான பள்ளிகளிடையே ஒவ்வொரு வருடமும் நல்ல கற்பனை வளத்துடன் நடத்த ஆரம்பித்தால் நமது குழந்தைகள் மட்டுமல்ல அவர்களது தாய் தந்தையரும் உற்சாகமாகத் தமிழ் கற்றிடுவர். நம் முன்னோர்களின் தீர்க்க சிந்தனையை பாராட்டும் பக்குவமும் வரும்.//

  அருமையான கருத்து.
  இது நல்ல செயலை நடத்த முன் வருபவர்கள் சமுதாயத்திற்கு தொண்டு செய்தவர்கள் ஆவார்கள்.
  இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சுட்டிக் காட்டிய இடுகையையும் படித்து மேற்கோள் காட்டி பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி கோமதி மேடம்

   Delete
 4. இதுவரை நான் அறியாத சில வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. புது இடுகைகளை வலைச்சரத்திற்காக தேடிப்பிடித்துத்தான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். :) தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

   Delete
 5. முக்கியமான, தேவையான, தமிழ் இலக்கண வலைப்பூக்களையும், தமிழ்ப் பணியாற்றும் தொண்டர்களையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். குறித்துக் கொண்டேன். மிகவும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பயனுள்ள இடுகை என்று கருதுவதற்கு நன்றி கவிநயா ஜி. உழைப்பு வீண் போகவில்லை என்பதே பெரும் திருப்தி.

   Delete
 6. நீச்சல்காரன் தயார் செய்த மென்பொருள் ஒரு முன் மாதிரி.

  சந்தி , ஒற்று குறித்த இலக்கணக் குறிப்புகள் எல்லாமே
  மனதளவில் புரிவின் மட்டுமே சுத்தமான தமிழ் நடையாய் ஆகும்.

  செயற்கையாக இரு வார்த்தைகளை ஒன்று சேர்ப்பின் பொருள் விபரீதமாவதும் மாறுபடுவதையும் காண்கிறோம்.

  உதாரணமாக, தமிழ் , சந்தி , பிழை என்னும் மூன்று வார்த்தைகள் உள.

  இவற்றிற்கு மொத்தமாக என்ன பொருள் கூற நினைக்கிறோம் ?

  தமிழ் மொழியிலே சந்தி குறித்த பிழைகள் யாவை ?

  ஆக, சேர்க்கவேண்டிய வார்த்தைகள் சந்தி பிழை மட்டுமே.

  தொடர்ந்து, தமிழ் மொழியிலே அல்லது தமிழிலே சந்திப்பிழை என்று எழுதினால் மட்டுமே சரியாம்.

  தமிழ்ச்சந்தி பிழை என்று எழுத்தின், தமிழ் ஏதோ சந்தியில் நிற்பது போலவும், அல்லது, தமிழ்ச்சந்தி என்னும் பெயருடைத்த ஒரு நாற்சந்தி இருப்பது போலவும் அல்லவா தோற்றம் அளிக்கும் ?

  புலவர் இராமானுசம் அய்யா விளக்க வேண்டுகிறேன்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ///சந்தி , ஒற்று குறித்த இலக்கணக் குறிப்புகள் எல்லாமே
   மனதளவில் புரிவின் மட்டுமே சுத்தமான தமிழ் நடையாய் ஆகும்.///

   படிக்க ஆறுதலாக இருக்கிறது சுப்பு சார். மேல் விளக்கங்களுக்கும் மெத்த நன்றி.

   Delete
  2. sury Siva அவர்களே,
   உங்கள் ஐயம் தேவையற்றது. தமிழ்ச் சந்தி என்பதே சரி. இலக்கண ரீதியாகச் சொல்வதென்றால் ஆறாம் வேற்றுமைத் தொகை. பொருள்ரீதியாகச் சொல்வதென்றால் சந்தி என்பது சேரும் இடம் என்று பொருள். இரண்டு சொற்கள் சேரும் இடத்தில் வரும் தமிழ்ப் பிழை - தமிழ்ச் சந்திப்பிழை என்றுரைப்பதில் குழப்பமில்லை என்பது எனது கருத்து.

   KABEER ANBAN,
   ஆன்றோர் சபையில் தமிழ்ப் புள்ளி தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்.

   Delete
 7. அவசியமான, தமிழ் - வலைப்பதிவுகளின் அறிமுகம்!..நன்று!..தமிழைக் காக்கப் பாடுபடும் அனைவரும் மேலும் சிறப்பினை எய்துவார்களாக!..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜு க்கும் பயனுள்ள இடுகையாகத் தோன்றியிருப்பது மகிழ்ச்சி. கவிநயா மேடமிற்கு கூறிய அதே பதில் உங்களுக்கும் பொருந்தும்
   மிக்க நன்றி

   Delete
 8. நல்ல வலைப்பூக்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி குமார். தொடர்ந்து வாசிக்கவும். நன்றி

   Delete
 9. பேராசிரியர் பசுபதி அவர்களின் தளத்தில் எழுத்தாளர் தேவன் குறித்த பல பதிவுகளையும், அவரின் எழுத்துக்களையும் காணலாம். மறவன் புலவு ஐயா குறித்துச் சொல்ல வேண்டியதே இல்லை. திரு மு.இளங்கோவன் அவர்களும் ஓரளவுக்கு அறிமுகம் ஆனவரே. மற்றப் பதிவர்கள் தெரியாதோர். அருமையான மாணிக்கச் சரம்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது