நண்பர்களே! நாளை காலை (திங்கள்) எட்டு மணிக்கு தமிழகம் வருவதற்குக் கப்பல் என்பதால், நிறைய வேலைகள். அலுவலகப்பணி, சுயதொழிலில் உதவியாளர் விடுமுறையில் சென்றதால் அவரின் வேலையையும் நானே செய்ய வேண்டி இருந்ததால் நேரமின்மை காரணமாக, முழுமையான ஈடுபாட்டுடன் எழுத முடியவில்லை. அதற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். வேலைப்பளு இருக்கும் இந்த நேரத்தில், கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்க்காக ஆவலில் ஒப்புக்கொண்டு, குற்ற உணர்வுடன் விடைபெறும் நிலை. இருந்தாலும் என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர் சீனா ஐயா அவர்களுக்கும், பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி! நன்றி!
வலைச்சரத்தில் முன்னர் எழுதியுள்ள அனைவரும் புதிய,புதிய அறிமுகங்களைத் தந்திருந்தார்கள். இங்கு நானே புதிது என்பதால் புதியவர்களை அறிமுகப்படுத்த் தெரியவில்லை.ஒரு வாரம் என்னை வலைச்சர ஆசிரியராய் அங்கீகாரம் தந்த உங்கள் அனைவரிடமும் தலைவணங்கி விடை பெறுகிறேன்.கவிதைகள் தலைப்பில் இடம்பெற்ற கட்டுரையில் கவிஞர் நேசமித்ரன் அவர்களின் பின்னூட்டம் மிக அருமை. வலைச்சரம் எனக்கொரு அருமையான அறிமுகத்தை, அறியாதவர் பலருக்கும் தந்தது.வலைச்சரம் தந்த இந்த அருமையான வாய்ப்பினை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
உங்களிடம் விடை பெறும் இந்த நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒரு வேளை உங்கள் அனைவரிடமும் நேரில் விடைபெறும் தருணமாய் இருந்திருந்தால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப்போயிருப்பேன்.அடுத்த வீட்டில் இருப்பவர் யாரென்று அறிய முடியாத இந்தக்கால கட்டத்தில், உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கொண்டு, யாரோ முகமறியாதவர்களை நட்பாகவும், உறவாகவும் தரும் இந்த வலையுலகம் வாழ்க! வளர்க! என்றென்றும்.
நண்பர்களே! அவ்வப்போது என் வலைப்பக்கமும் வாருங்கள். ஊக்கமும், விமர்சனமும் தாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி!
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
மேலும் வாசிக்க...
குழந்தைகளின் உலகம் அது தனி! நாமும் கூட அந்த வயதைத்தாண்டி வந்தவர்கள் தான் என்றாலும் கூட, குழந்தைகளின் உலகில் நாம் திரும்ப நுழைய, நாமும் குழந்தை ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்களின் மழலை ஒரு கவிதை. ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் முதல் உலகம். அதுவும் தாய்மார்களுக்கு சொல்லவே வேண்டாம். குழந்தைகளின் லீலைகளை, அவர்களின் மழலைகளை, தப்பும் தவறுமாய்ப் பாடும் நர்சரி ரைம்ஸ், பிரார்த்தனை சுலோகங்கள் இவற்றை சொல்லிச்சொல்லி மாய்ந்து போவார்கள்.
வலையுலகில் இப்படிக்குழந்தைகளின் லீலைகளைச்சொல்லி நம்மையும் குழந்தைப்பருவத்திற்கு அழைத்துச்செல்லும் அருமையான வலைத்தளங்களைப் படிக்கும் போது நம்மையும் அறியாமல் நம் முகத்தில் புன்னகையும், மனதில் குதூகலத்தையும் பூக்க வைக்கும்.
1.சந்தன முல்லையின் பப்புவின் திருவிளையாடல்கள் -
2. தீபாவின் குட்டீஸ் நேஹாவின் குறும்புகளைப்பகிரும் வலை.
3. அமித்துவின் குறும்புகளும், மழலைப்பிதற்றல்களும் இடம்பெறும் அமித்து
4.பேரண்ட்ஸ் கிளப் - இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்டுரைகளையும் படித்தாலே போதும். இளம் தாய்மார்கள் முதல்,
வளர் இளம்பருவத்துக்குழந்தைகளின் தாய்மார்கள் வரை வழிகாட்டும் அருமையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உணவுப்பழக்கம் முதல் கல்வி,பழக்கவழக்கங்களை மேம்படுத்துவது, யோகா, தியானம் வரை குழந்தை வளர்ப்புடன் தொடர்புள்ள எல்லாமும் இருக்கிறது. மாண்டிசோரி ஆசிரியர் மற்றும் மருத்துவர்கள் எழுதிய கட்டுரைகளின் மீள்பதிவும் இடம்பெற்றுள்ளது.படித்துப்பயன் பெறும் பல பெற்றோர்களில் நானும் ஒருவர்.
http://parentsclub08.blogspot.com/
6. ஒரு ஆணின் பார்வையில் குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் குறும்பு, சேட்டைகளைக்கையாளும் விதத்தை நகைமுகத்துடன் விவரிக்கும் வலைப்பூ
http://abiappa.blogspot.com/
நன்றி!
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
மேலும் வாசிக்க...
வெற்றுச்சுவர்களும், கற்கள் அடுக்கிய அமைப்புகளும் அன்பு நிறை வீடாவது மகளீரால் தான். எங்கள் ஐயா காலத்தில் இருந்தே ஒருவர் திருவிழா, கல்யாணம் மற்றும் வைபவங்களுக்கு சமையல் செய்ய வருவார். அவரது கைப்பக்குவம் நளபாகம் தான். ஆனால் ஒரு வாய் அவர் சாப்பிட மாட்டார். "ஒரு பவண்டோ வாங்கியா! வேறொண்ணும் வேணாம்" என்று சொல்லுவார். ஏனென்று கேட்கும் போது, "வீட்டுல போயி எங்க வீட்டம்மா சோறு வடிச்சு புளிக்குழம்பு வச்சு வச்சிருக்கும்.கஞ்சி இருக்கும்.அதக்குடிச்சாத்தான் எனக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்" என்று அவர் சொன்னார். எத்தனை பெரிய உணவு விடுதியில் உண்டாலும் எப்போதோ விருந்தோ மருந்தோ என்று இருந்தால் தான் சுவை. வீட்டுச்சாப்பாடு அதன் சுவையும், அருமையும் கொண்டாடுபவர்களுக்குத் தான் புரியும். பெண்கள் எத்தனை தான் பெரிய படிப்பு, பதவிகளில் இருந்தாலும் தன் குடும்பத்தினருக்கு தானே சமைத்துப்போடுவது தான் அன்பைப்பெருக்கும்.
சமையலைப் போல வீட்டுப்பராமரிப்பு மற்றும் கைவேலை. எவ்வளவு தான் விலை கொடுத்துப் பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்தினாலும் நாமே நமது கையால் செய்த கைவினைப்பொருட்களால், வீட்டை அழகு படுத்தும் போது அதற்கு கிடைக்கும் பாராட்டுகளும், பெருமையும் தனிதான்.எனக்கு கை வேலை, விதவிதமான சமையலில் ஆர்வம் உண்டு. அதனால் அப்படிப்பட்ட வலைகளை அதிகம் தேடிப் படிப்பதுண்டு. அவற்றில் சில முக்கியமான வலைகளைப் பார்ப்போமா!
1. தமிழ்க்குடும்பம் - இந்த வலையில் போய்ப்பாருங்கள் சகோதரிகளே! மகளிருக்குத்தேவையான அனைத்து விஷயங்களும் இதில் உண்டு. சமையல், தையல், குழந்தைப்பராமரிப்பு, கைவினைப்பொருட்கள், ஓவியம், சமையல், எம்பிராய்டரி இன்னும், இன்னும். சகோதரர்களே! உங்கள் மனைவியருக்கு இந்த வலையை அறிமுகப்படுத்துங்கள். வீட்டில் தினம் தினம் திருவிழா தான்.
நான் பயன் பெறும் வலைகளை இன்று சகோதரிகள் பலருடன் பகிர்ந்து கொண்டேன். இந்த வலைகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான். என்ன நண்பர்களே! பெண்கள்னாவே இது தான். அவுங்க வேலையக்காட்டிட்டாங்க! என்கிறீர்களா? செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும், கண்ணுக்கும். நன்றி!
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
மேலும் வாசிக்க...
வலைப்பூ எழுத வந்த போதில் மற்ற யாருக்கும் கிடைக்காத சிபாரிசுகள், வரவேற்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு நல் உள்ளமும் என்னைத் தூண்டி துலங்க வைத்தது. திரும்பத்திரும்ப அவர்களின் பெயர்களைச்சொல்வது அவர்களைச்சங்கோஜப்படுத்தும். ஆகவே, அவர்களிடமிருந்து கற்றதையும், பெற்றதையும் மட்டும் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!
வலையில் வந்த புதிதில் வலைப்பூக்களைப் படிப்பது, கருத்துரைகள் எழுதுவது, ஓட்டுப்போடுவது இதெல்லாம் குறித்து எந்த அனுமானமும் இல்லை. முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் தான் தமிழ் மணம் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். தமிழ்மணத்தில் இணைந்த போதிலும், எனது வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் நண்பர்களின் வலைப்பூவை மட்டும் படித்து தயங்கித்தயங்கி பின்னூட்டமிடுவேன். அப்போது, சகோதரி! நாங்களும் வலைக்குப் புதியவர்களாய் இருந்து பழையவர்கள் ஆனவர்கள் தான் என்று எனது தயக்கத்தை உடைத்தெரிந்த வலையுலகச்சகோதரர்கள் இவர்கள்.
முகத்தைப்பாராமல் எழுத்து முகம் அறிந்து அன்போடு உறவு கொண்டாட முடியும் என்று உணர வைத்தவர்கள். வாழ்க வளர்க!
வலை ஆரம்பித்த நாட்களில் சக நண்பர்களின் வலையின் அழகும், அமைப்பும் என்னை ஈர்த்தது மட்டுமல்ல, என்னை பொறாமைப்படவும் வைத்தது.இதெல்லாம் எப்படி செய்கிறார்கள், ஒருவேளை மென்பொருள் நுட்பம் தெரிந்தவர்கள் மட்டும் தான் உருவாக்க முடியுமோ என்று எனக்குள்ளே தர்க்கித்து சோர்ந்த நாட்கள் உண்டு.வலை எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு Gadjet, widget, HTML இதற்கான அர்த்தங்கள் புரியவில்லை.நானே முயன்று கூகிளில் படித்து ஒருவாறு அர்த்தம் புரிந்தாலும் எப்படி செயல்படுத்துவது, மாற்றங்களை எப்படிக்கொண்டுவருவது என்று புரியவில்லை. அதற்கு வழிகாட்டிய வலைஞரை உங்களுக்குச்சொல்கிறேன். இது கண்டிப்பாக அறிமுகமில்லை. அவரின் வலையைப்படித்து பயன் பெற்றவர்களில் நானும் ஒருத்தி என்ற முறையில் ஒரு நன்றி நவிலலாக இந்தப்பதிவு.
1. சுமஜ்லாவின் இந்த வலையில் டெக்னிக்கல் என்ற தலைப்பில் எழுதியுள்ள தொழில் நுட்பப்பதிவுகளில் புதிய வலைஞர்களுக்கான டிப்ஸில் ஆரம்பித்து, nav bar நீக்குவது, ஓடும் எழுத்துக்களை உருவாக்குவது, இடுகைகளுக்கு சுலபமான இணைப்பு கொடுப்பது, கூகுள் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட் முதலான அத்தனை நுட்பங்களையும் படங்களுடன், எளிமையாக சொல்லித்தருகிறார். சுமஜ்லா! வலைப்பூவில் பூக்கொட்டுவது மட்டும் எப்படி என்று இன்னமும் கைவரவில்லை.
http://sumazla.blogspot.com/
என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் பத்து ஓட்டு வாங்குவதற்குள் ஒரு நாளில் பத்து முறை கணினியை உயிர்ப்பித்து, யார் யார் ஓட்டுப்போட்டது என்று பார்ப்பது என் வழக்கம். சில வலைஞர்களின் பதிவுகள் பெறும் ஓட்டுக்கள், பின்னூட்டங்கள் பார்த்து ம்... நிச்சயம் நல்ல பதிவு என்று முடிவு கட்டி படிக்கத்தொடங்கிய வலைப்பதிவுகள்.
1. கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா அவர்களின் சிரிக்க வைக்கும்,சமயங்களில்
சிந்திக்க வைக்கும் (!!!) சரளமான கட்டுரைகள் கொண்ட வலைப்பூ
2. அண்ணாமலையான் அவர்களின் நீங்களும் ஹீரோ ஆகலாம் பதிவு
3. ஈரோடு கதிர் அவர்களின் வலைப்பூ
4. பாமரன் பக்கங்கள்
5. முத்துச்சரம் ராம லெக்ஷ்மி அவர்கள்
இன்னும் நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன. பதிவு சுருக்கம் வேண்டி இத்துடன் முடிக்கிறேன்.நல்ல பல வலைப்பூக்கள் விட்டுப்போயிருந்தால் அதற்குக்காரணம் என் அறியாமையே அன்றி வேறில்லை. நன்றி!
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
மேலும் வாசிக்க...
கவிதைகள் - காலத்தின் உயிர்ப்பதிவு என்பார் கவியரசு வைரமுத்து. கவிதைக்கு இதைவிட அழகாக வரைவிலக்கணம் தர முடியுமா? தெரியவில்லை!
கவிதை காலத்தின் உயிர்ப்பதிவு மட்டுமல்ல. கவிஞனின் எண்ணங்களை, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.அவனின் துயரங்களை, துக்கங்களை, வியப்பை, சந்தோசத்தை, இன்பத்தை வடிக்கும் வார்த்தை வடிகால்.
கவிதை எழுதுபவர்களாலும், கவிதை படிப்பவர்களாலும் வன்முறை செய்ய இயலாது. கவிதையால் ஈர்க்கப்பட்டவர்களின் மனதை மென்மையாக மாற்றிவிடும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. நல்ல கவிதை நம்பிக்கை ஊட்ட வேண்டும், படிப்பவர் மனதை பரவசப்ப்டுத்த வேண்டும், படைப்பவனின் முகவரியாக இருக்க வேண்டும், ஞாபக அடுக்கில் சதா சுழல வேண்டும். அப்படி நல்ல கவிதைகளைத்தரும் வலைஞர்கள் பலர்.
அவர்களில் சிலரின் படைப்புகளைக் காண்போமா!.அந்தக்கவிஞர்கள் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர்கள் தாம்.
1.நேசமித்ரன் - இவரின் கவிதைகளின் நவீன சொல்லாட்சி என்னைக் கிறங்கடிக்கும். ஆனால் புரியாது!!இவரின் கவிதைகளுக்கு பின்னூட்டம் பார்த்தே பிரமித்துப்போனவள் நான். ஐயா! தங்கள் கவிதைகளுக்கு கொஞ்சம் விளக்கம் எழுதினால் இன்னும் மகிழ்வேன்.
http://nesamithran.blogspot.com/
2. பா.ரா. - இவரின் கவிதைகள் எளிமை + சிலேடை + நகை + உருக்கம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எழுத்தில் வடியும் அன்பு, பாசம் படிப்பவர்களை புரையேற வைக்கும். அது எப்படி அண்ணா, உங்களுக்கு மட்டும் வாய்த்தது இப்படி ஒரு எழுத்து நடை?
http://karuvelanizhal.blogspot.com/
4. சும்மா - அன்பின் தேனம்மை அக்கா, ஆச்சி! சும்மா எழுத வந்தே இப்படி ஒரு எழுத்தும் கவிதையும் உங்களுக்கு வாய்க்கிறது என்றால், இன்னும் வீர்யத்துடன் எழுதினால்? அன்பும், சமூகச்சாடலும் நிறைந்த இவரின் கவிதைகளின் மறைபொருள் புரியாது, நேரடி அர்த்தம் கொண்டு, பின்னூட்டமிட்டு அசடு வழிந்த நாட்கள் உண்டு.
http://honeylaksh.blogspot.com/
8. சுயம் தேடும் பறவைகள் வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்த முத்தான கவிதைகள்.
http://kkamalesh.blogspot.com/
இன்னும் கவிதைகள் சொல்லும் தளங்கள் உண்டு. பதிவின் நீளம் கருதி சுருக்க முடிக்கிறேன். இன்னும் நான் அறியாத அருமையான கவிதை வலைகள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள் தயவுசெய்து!
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
மேலும் வாசிக்க...
பெண் சுதந்திரம் என்பது சமூகமேம்பாட்டிற்கு வித்திடும் ஒரு தளம். எந்த ஒரு நாட்டில் பெண் இனம் அடிமைப்பட்டுக்கிடக்கிறதோ அந்த நாடும், எங்கே பெண் கண்ணீர் வடிக்கிறாளோ அந்தக்குடும்பமும் மிளிர்வதில்லை. அதே சமயத்தில் குடும்பங்கள் மிளிர்வதும் பெண் என்பவளின் தியாகத்தாலும், உழைப்பாலும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
குடும்ப வன்முறையிலும், வரைமுறையற்ற அடிமைத்தனத்திலும், பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகி, சிக்கிச்சீரழிந்து கண்ணீரில் மூழ்கி, தம்மை இழந்த பெண்கள் ஒரு புறம்.அடிப்படை உரிமைகள், கல்வி, சமுதாய மேம்பாடு, போதுமான விழிப்புணர்வு இத்தனையும் கிடைத்த போதிலும் விட்டுக்கொடுப்பதற்கும், அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் புரியாமல், குடும்பங்களைப் போர்க்களமாக்கி, குழந்தைகளின் வாழ்வை சீரழித்து, சொந்தங்களோடு உறவை பலப்படுத்தத்தெரியாது,பொய் வழக்குப்போட்டு உறவை அறுத்தெரிந்து, கொண்டதே கோலமெனும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே வருவது ஒரு புறம்.
அடிமையாய்க் கிடக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி, அவர்களை அந்தத்துன்பங்களில் இருந்து மீட்டெடுத்து, மறுவாழ்வு கொடுக்க தமது சுகதுக்கங்களை மறந்து பாடுபடும் சமூக சேவகர்களின் எழுத்தும், பேச்சும் உரியவர்களைப்போய்ச்சேருவதில்லை. மாறாக விழிப்புணர்வுடன் இருக்கும் பெண்களுக்கு அதீத விழிப்புணர்வு தர உதவுகிறது என்பது தான் உண்மையோ என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதனாலேயே பெண்ணீய எழுத்துக்களை அதிகம் வாசிப்பதிலை.ஆனால் நிதர்சனங்களை, எங்கோ மூலைகளில் நடக்கும் அநியாயங்களை நியாயமாக எடுத்துரைக்கும் பெண்ணீய எழுத்தாளர்கள் நம் வலையுலகில் உண்டு.
படித்துப்பாருங்கள் நண்பர்களே! பெண், ஆண் என்ற பேதமின்றி ஒரு உயிர் என்ற உணர்வோடு, ஏற்ற தாழ்வின்றி, அனைவரும் சமம் என்று அன்பை மட்டும் ஆயுதமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை ஒரு பூந்தோட்டம். தந்திரமற்று, ஜாலங்கள் இன்றி மனதில் நல் எண்ணங்களோடு வாழ்க்கையை வாழ்வோம். ஒன்றுபட்டு அநீதிகளை எதிர்ப்போம்.இனியொரு கயர்லாஞ்சி சம்பவம் உலகின் எந்த மூலையிலும் நடந்துவிடக்கூடாது என்ற பிராத்தனைகளுடன்.
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
மேலும் வாசிக்க...
தமிழே! என் தாய் தந்த சீதனமே! சங்கரனார் இறங்கி வந்து சங்கம் அமைத்து, தரணியில் வளர்ந்த மொழியே! உன்னை வணங்குகிறேன்.நமது தமிழ் மொழி உயர்ந்த வளமான இலக்கியப்பின்னணியையும், தொன்மையும் கொண்டது. காலப்போக்கில் சங்க இலக்கியங்களும், காப்பியங்களும் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணாக்கர்களுக்கானது என்று ஒதுக்கப்பட, அந்த பொக்கிஷங்கள் கால ஓட்டத்தில் நம்மால் அறியப்படாமல் போனது. பத்திரிக்கைகளும், ஊடகங்களும் வியாபார நோக்கில், ஜனரஞ்சகமாக, வாசகர்களின் விருப்பத்திற்கு படைப்புகளை முறைப்படுத்த, இன்று யாப்பு,செய்யுள்,வெண்பா, மரபுக்கவிதை இவையெல்லாம் அர்த்தம் புரியாத அகராதி வார்த்தைகளாக.
அன்னைத்தமிழின் அத்தனை அழகியல் ஆபரணங்களையும் மீட்டெடுக்கும் தமிழ் இலக்கியம் குறித்த வலைப்பூக்களை இன்று பார்ப்போமா!
முத்தமிழுக்கு சேவை செய்யும் பெரியோர்கள் மற்றும் புலவர்களைப் பற்றிய அறிமுகம், அவர்களைக் குறித்த உரைகள், அவர்தம் சேவைகள், தமிழ் இணையப் பயிலரங்கம் குறித்த கட்டுரைகள், நாட்டுப்புறப்பாடல்கள், சங்க இலக்கியங்கள் என்று அத்தனை பதிவுகளும் பயனுள்ள பதிவுகள் தாம்.பலர் படித்துப் பயன் பெறும் ஒரு தளம் இது.முனைவர்.மு.இளங்கோவன் ஐயா அவர்களின் வலை
http://muelangovan.blogspot.com/
ஆண்டாள், கண்ணகி, சங்க இலக்கியத்தில் காதல் இப்படி தமிழில் இலக்கியப்பாடம் சொல்லித்தரும் ஒரு ஓய்வு பெற்ற தமிழ்ப்பேராசிரியை எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களின் வலை இது.
http://masusila.blogspot.com/
தமிழ்மொழி, தமிழர்கள் பண்பாடு,வாழ்வியல் குறித்த அனைத்து செய்திகளையும் தமிழ்ப்பற்றுடன் தொகுத்து வழங்கும் சுப.நற்குணன் ஐயா அவர்களின் வலை.
http://thirutamil.blogspot.com/
நெடுநல் வாடை,குறுந்தொகை,அகநானுறு இன்னும் பல சங்க இலக்கியங்களின் பாடல்கள் விளக்கங்களுடன் தரப்பட்டுள்ள ஒரு பயனுள்ள தளம் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அவர்களின் வலை.
http://gunathamizh.blogspot.com/
இந்த வலைப்பூக்கள் அனைத்தும் நான் அறிந்த வரை எனக்குத் தெரிந்தவை. இன்னும் கூட நிறைய இருக்கலாம். பொழுது போக்கும் தளங்களை பல வேளைகளில் படித்தாலும் இப்படியான பொழுதை ஆக்கும் தளங்களை சில வேளைகளிலாவது படிப்பதால் தமிழின் இலக்கியப் பரிமாணங்களை உணர முடியுமென்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
நன்றி நண்பர்களே!
மேலும் வாசிக்க...
சின்ன வயதில் வாசிக்கும் ஆசை இருந்த போதிலும் ஆசைக்கேற்ற தீனியாக புத்தகங்கள் கிடைக்கவில்லை.மளிகைப்பொருட்கள் கட்டிவரும் காகிதங்கள், எங்கள் கடையில் வாங்கப்படும் தினத்தந்தி, அம்மாவிற்காக வாங்கப்படும் ராணி, ராணிமுத்து ஆகியன தான் வாசிக்கக்கிடைத்தவை.அதைத்தாண்டி வாசித்தது விகடன்,குமுதம், மங்கையர் மலர்
இன்று வலையுலகப் படைப்பாளிகள் பலரும் சொல்வது போல் ஆங்கில நாவல்கள்,பிற மொழி, நாடு சார்ந்த எழுத்துக்களைப்படித்ததில்லை.அதனால் பரந்து பட்ட அறிவு, எந்த ஒரு கருத்தையும் தீர்க்கமாக அலசி ஆராயும் ஞானம் கிடையாது. ஏதோ ஆர்வக்கோளாறால் என் மனதில் பட்டதை எழுதி வருகிறேன்.
கவிதைகள் எனக்குப்பிடிக்கும். என் வரை, கவிதைகள் நமது உணர்வுகளின் நுண்ணிய வெளிப்பாடு, நம் எண்ணங்களை அழகுற வடிக்கும் ஒரு படிமம், இப்படித்தான் எழுத வேண்டுமென்ற வரையறையை, கவிதைக்கு யாரும் கொடுத்து விட முடியாது.
எனது கவிதைகள் எனக்கு முதலில் பிடிக்கவேண்டுமே! அப்படி எனக்குப்பிடித்தவை.
கட்டுரைகள் பல எழுதியிருந்தாலும் கூட எனக்கே 'அட பரவாயில்லையே 'என்று எண்ண வைத்த எனது கட்டுரைகள்.
பிடித்தவர்கள் பாராட்டினால் நன்றி. பிடிக்காதவர்கள் விமர்சித்தால் இரட்டை நன்றி. காரணம் ஒரு படைப்பாளியை விமர்சனங்கள் பக்குவப்படுத்துகிறது. வலைச்சரத்தின் மூலம் நான் பக்குவப்படவே விரும்புகிறேன் தோழர்களே! தங்கள் அனைவரின் வழிகாட்டலில் மிளிர விரும்பும்,
என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.
நன்றி!
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக என்னை அழைத்தற்கு மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களை பணிவன்புடன் வணங்குகிறேன். ஐயா தாங்கள் வழங்கிய இந்த வாய்ப்பை என் வலையுலகப் பயணத்தில், எனக்குக்கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறேன்.நன்றி! நன்றி! நன்றி!
வலைச்சரத்தின் ஆசிரியர் குழுவிற்கும் மற்றும் வாசக நண்பர்களுக்கும் முதற்கண் பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரது படைப்புகள், ஆன்ம திருப்தியைத் தரவேண்டும். ஆன்ம திருப்திக்காக எழுதப்படும் ஒரு படைப்பு வாசிப்பவர்களையும் கவர்ந்து விட்டால் அது படைப்பவனுக்கு கிடைக்கும் வெற்றி என்பது என் தாழ்மையான கருத்து.
முதலில் நான் கவிதை என்று கிறுக்கும் கிறுக்கல்களை பதிய வேண்டி வலை தொடங்கி, புதுச்சேரி கல்லூரிப்பேராசிரியர் மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்களின் வழிகாட்டலில் கட்டுரைகள் எழுதத்தொடங்கி, இன்று வலைச்சரத்தில் உங்கள் முன் நான் உங்கள் அங்கீகாரத்தையும், வழிகாட்டலையும் வேண்டி நிற்கிறேன்.
எனது வலைப்பூக்களில், அந்தமான் தமிழோசையில் எனது வாழ்விடம் குறித்த பதிவுகளைப் பதிவதிலும், மற்றும் காந்தீய கிராமங்களில் எனது பிறந்த மண்ணின் பாரம்பர்யத்தை,மனக்கிடக்கைகளைப் பகிரும் முயற்சியிலும் இருக்கிறேன்.
"நா எழுதறது பிடிக்கலையா பின்னூட்டத்துல சொல்லுங்க! அதுக்காக இதுக்கெல்லாம் யாருப்பா இவ்ள பெரிய பொறுப்பக்குடுத்ததுன்னு தயவு செய்து சீனா ஐயா அவர்கள மட்டும் எதுவும் சொல்லிடாதீங்க!
இந்த ஒரு வாரம் எனக்கான, என் எழுத்துக்கான மேடையாக வலைச்சரத்தை ஆக்கிக்கொடுத்த ஐயா சீனா அவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மீண்டும் மனம் நெகிழ்ந்த, நிறைந்த நன்றி.
என்றும் அன்புடன்
க.நா. சாந்தி லெட்சுமணன்.
மேலும் வாசிக்க...