07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சமுத்ரா. Show all posts
Showing posts with label சமுத்ரா. Show all posts

Sunday, June 9, 2013

நன்றி...

[அவசர வேலை காரணமாக ஊருக்கு செல்ல வேண்டி வந்து விட்டதால் 
இரண்டு பதிவுகள் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்...]



உயிரின் இறுதி ஊர்வலம் 
உடல் மேலேயே 
நடக்கிறது! - இது எதைக் குறிக்கிறது? விடை உள்ளே...

நாம் தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம்.  அவர்கள் சாதாரண மனிதர்கள். அமைச்சர்களோ, எம்.எல்.ஏ க்களோ , சினிமா ஸ்டார்களோ எழுத்தாளர்களோ அல்ல. சாதாரண மனிதர்கள்..ஆட்டோ ஓட்டுபவர், பஸ் கண்டக்டர், செருப்பு தைப்பவர், சவரம் செய்பவர், இப்படி....உண்மை என்ன என்றால் எம்.எல்.ஏ , எழுத்தாளர் இவர்கள் இல்லாவிட்டாலும் நம் நாட்கள் நகரும். ஆனால் இந்த 'சாதாரணர்கள்' இல்லை என்றால் நம் நாட்கள் நகர்வது கஷ்டம். இப்படிப்பட்டவர்களிடம் நாம் வலியச் சென்று பேசுவதில்லை.ஆட்டோவில் ஏறி அமர்ந்தால் இறங்கும் வரை உம்மணா மூஞ்சியாகவே வருவோம். ஏன் அவர்களைப் பார்த்து புன்னகைக்கக் கூட மாட்டோம்.

வீடு திரும்பல் மோகன்குமார் இப்படிப் பட்ட மனிதர்களுடன் வலியச் சென்று வாலண்டியராகப் பேசி, அவர்கள் சொன்னதை தன் ப்ளாக்கில் கேள்வி பதில் வடிவில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.


உதாரணத்துக்கு ஒரு பதிவு:

ஜிம் டிரெயினர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் 

செருப்பு தைப்பவர், மாவு மில் வைத்திருப்பவர், பஸ் டிரைவர், இப்படி நிறைய பேருடன் உரையாடி இருக்கிறார் மோகன்.

ஜிம் என்றதும் ஞாபகம் வருகிறது. இத்தனை வருட வாழ்க்கையில் (எத்தனை வருடம் என்பது சீக்ரெட்) ஒரே ஒரு முறை தான் ஜிம்  போயிருக்கிறேன். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு ஒரு மாதமோ என்னமோ போனேன். ஜிம் உடம்புடன் மாமிச மலை போல நடமாடுபவர்கள் மத்தியில் ஒரு எறும்பு போல உணர்ந்தேன். சில ஜிம் கன பாடிகள் என்னை பாண்டியன் சபையில் பாட்டெடுத்துக்கொண்டு நுழைந்த தருமியைப் போல துச்சமாகப் பார்த்தன.

எனக்கு என்னவோ எல்லா விஷயங்களும் சீக்கிரம் சலித்துப் போய் விடுகின்றன. உடம்பு அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டுமே, அதை ஏன் போய் அதைத் தூக்கு இதை முறுக்கு இதை இழு என்று தொந்தரவு செய்து கொண்டு என்று சும்மா விட்டு விட்டேன். மேலும் 

வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு


வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிரோத குரோதம் அடைந்து



என்ற சித்தர் பாட்டெல்லாம் நினைவு வந்து அப்படியே விட்டு விட்டேன்.


பார்க்க:




சரி...தொப்பையை ஏனைய்யா குறைக்க வேண்டும் என்கிறீர்களா? சிக்ஸ் பேக்ஸ் உடம்பை வைத்து யாரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும்?
கல்யாணமும் ஆகி விட்டது. தொப்பை அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருந்து விட்டுப் போகட்டும் என்கிறீர்களா? சரிதான்.

 தொப்பை ஓரத்தில் இருந்தால் சரி தான். தொப்பை வளர்ந்து உங்களை ஒரு ஓரத்தில் தள்ளாமல் இருந்தால் சரி தான்.

next என்ன எழுதுவது? link கிடைக்கவில்லையே....


லிங்க் என்றதும் நினைவில் வருகிறது. ஒரு விஷயத்தை ஆன்லைனில் படிப்பது எவ்வளவு வசதியானது? ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் 
அதில் வேறு புத்தகத்தைப் படியுங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். அந்தப் புத்தகத்துடன் உங்களை 'லிங்க் ' செய்ய முடியாது. புத்தகத்தில் இருந்து இன்னொரு புத்தகம் வருவது ஹாரி பாட்டரில் மட்டுமே நடக்கும்.
ஆன்லைனில் அந்தப் புத்தகத்தின் லிங்கை கொடுத்தால் போதும்! எனவே ஆன்லைனில் ஒரு புத்தகம் படிப்பது ஒன்பது புத்தகம் படிப்பதற்கு சமம். 
சில சமயம் லிங்கில் உள்ள புத்தகத்தில் மெய் மறந்து ஒரிஜினல் புத்தகத்தையே மறந்து விடுவோம் என்பது வேறு விஷயம். இன்டர்நெட்டில் 
broad knowledge கிடைக்குமே தவிர deep knowledge கிடைக்காது!

இருந்தாலும் நிஜ புத்தகங்களை வாசிக்கும் சுகமே தனி தான்.


I'm writing a book. I've got the page numbers done.
Steven Wright 

புத்தகம் படிப்பது எப்படி -எஸ்.ராம கிருஷ்ணன் 

excerpt :

ஏ 
வாசகனே!
உனக்குதான் 
எத்தனை 
எழுத்தாளர்கள் ! - நகுலன் 


நகுலனின் மற்றொரு கவிதை:



நான் 
இறந்த பிறகு எனக்கு 
அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம்.
ஏனென்றால் 
என்னால் வர முடியாது..

:)


இதே வலைப்பூவில் கல்யாண்ஜி யின் கவிதைகளும் ரசிக்க வைக்கின்றன.


அடிக்கடி பார்க்க முடிகிறது 
யானையைக் கூட 
மாதக் கணக்காகிறது 
மண் புழுவைப் பார்த்து!

சரி..இனி கவிதை எழுதினால் என்னை அடிக்க வருவீர்கள். ஒன்றே ஒன்று 
மெழுகுவர்த்தி பற்றி வைரமுத்து எழுதி இருப்பது இங்கே:

இந்தப் 
பிணத்துக்கு 
கொள்ளி வைத்த பிறகுதான் 
உயிர் வருகிறது 

அதோ 
உயிரின் இறுதி ஊர்வலம் 
உடல் மேலேயே 
நடக்கிறது!


-வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்? ஆமாம்...மெழுகு 
வர்த்தி செய்து கூட பிழைத்துக் கொள்ளலாம். இந்த சுட்டியில் பாருங்கள் 
நூறு பிசினஸ் டிப்ஸ்.


எல்லாமே பிசினஸ் ஆகி விட்டது அல்லவா இப்போது..கடவுளும் , பக்தியும் கூட..மூன்னூறு ரூபாய் கொடுத்தால் வி.ஐ.பி..ஐநூறு கொடுத்தால் வி.வி.ஐ.பி...'பணம்' என்ற ஒன்று இருப்பதே கடவுளுக்குத் தெரியுமா?


இதற்கு இன்னொரு கோணம் இருக்கிறது. ஓஷோ, கடவுள் எப்படி இலவசமாக கிடைப்பார் என்று கேட்கிறார். நட்சத்திர ஹோட்டலில் சாப்பாடு 500 ரூபாய்க்கு கிடைக்கிறது. கடவுள் இலவசமா????இலவசமாகக் கிடைப்பது எதுமே மதிப்பை இழந்து விடும் அல்லவா? கடவுளுக்காக 500 ரூபாய் கொடுக்கத் தயாராக இல்லாத நீங்கள் நாளை எப்படி உங்கள் உயிரை, உங்கள் ஆத்மாவை சமர்ப்பணம் செய்வீர்கள்?

'நான் வியாபாரி தான்...ஆன்மீக வியாபாரி' என்கிறார் புரந்தர தாசர்.

தாசரின் சில பாடல்களை நீங்கள் இந்தத் தளத்தில் தமிழில் காணலாம்.

மதுகர விருத்தி என்னது - 
அது பலு சன்னது 
பதுமனாபன பாத - பதும மதுபவெம்ப (மதுகர) 

தேனீயைப் போன்ற வாழ்க்கை என்னுடையது 
அது (வாழ்க்கை) மிக அருமையானது 
பத்மனாபனின் சரணத்தை - தாமரையாக பாவித்து 
அதை சுற்றி வரும் (மதுகர) 



மிக மிக எளிமையானது புரந்தர தாசரின் பக்தி மார்க்கம். கஷ்டமே படாதேப்பா என்கிறார். நீ தினந்தினம் வேலை செய்யும் போது கிருஷ்ணா என்று கூறு..போதும் என்கிறார்.

நீர நெரெவாக பார ஹொரிவாக 
கிருஷ்ணா என பாரதே 

மலகெத்து மெய் முரிது 
ஏலுத்த லொம்மெ ஸ்ரீ கிருஷ்ணா என பாரதே 

-நீரை இறைக்கும் போதும் பாரம் சுமக்கும் போதும் கிருஷ்ணா என்று கூறலாகாதா? தூங்கி எழுந்து சோம்பல் முறிக்கும் போது கிருஷ்ணா எனலாகாதா?

நுடிவ மாதுகலெல்லா கடல சயனன ஜபவு 
மடதி மக்களு எல்லா ஒடனே பரிவார 
நடு மனெய அங்களவே உடுப்பி பூ வைகுண்ட 
எட பலாத மனெயவரெ கடு பாகவதரு 

-சொல்லும் சொல் எல்லாம் ஹரியின் ஜபம் 
மனைவி மக்களே பக்திப் பரிவாரம் 
வீடே வைகுண்டம் உடுப்பி 
பக்கத்து வீட்டுக் காரர்களே பாகவதர்கள் 

- that 's  all பக்தி...


சில தளங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்:

மூலிகைகள் அவற்றின் மகத்துவங்கள் பற்றி அறிய 

மூலிகை வளம் 

அறிவியல் பற்றி விஷயங்கள் அறிய 
ஏன் எதற்கு எப்படி? - அறிவியல்புரம் 


புத்தகங்கள் பற்றி அறிந்து கொள்ள 

ஆம்னிபஸ் 

பல்சுவை 

ராஜன் லீக்ஸ் 


தகவல் தொழில்நுட்ப செய்திகள் 

தகவல் தொழில்நுட்ப செய்திகள் 


சமையல்:

அம்முவின் சமையல் 

பயனுள்ள பதிவுகள், அறிவியல் செய்திகள்:

வரலாற்று சுவடுகள் 


கதம்ப மாலை:


கதம்பமாலை 

கவிதைகள் 

கனவில் கிறுக்கியவை 

ஆன்மிகம் 

பரமாச்சாரியாரின் தெய்வீகப் பொன்மொழிகள் 


சமூகம்:

வாங்க காபி சாப்டுண்டே பேசலாம் 



இலக்கியம் 

அணிலாடு முன்றில் 



கட்டுரைகள் 


தமிழினியன் 

சுவாசிகா 

படங்கள்


அழகிய படங்கள் 




வாய்ப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 

சமுத்ரா 




மேலும் வாசிக்க...

Thursday, June 6, 2013

நீ பா த ச ம மா

இன்று என்ன எழுதுவது? யாருடைய பதிவுகளை பகிர்ந்து கொள்வது? 
ஒன்றுமே விளங்கவில்லை...Lets go with the flow !


'அ ' வில் இருந்து ஆரம்பிக்கலாம். அகத்தியர் எனக்குப் பிடித்த தமிழ் முனிவர். well , பொதிகையில் அகத்தியர் படம் பார்த்ததில் இருந்து. :)

அகத்தியர் படத்தில் ராவணனுக்கும் அகத்தியருக்கும் நடக்கும் இசைப் போட்டி ரொம்பவே சுவாரஸ்வம்.  

ச ம மா 
சரி ச ம மா 
ம த மா 
ச த மா 
நீ ச த மா 
ப ரி கா ச மா 
ம  நி தா 
நீ பா த க ம நி தா 

என்று வரும் ஸ்வராக்ஷரங்கள் அருமை!

முற்றிலும் ஸ்வராக்ஷரமாக ஒரு பாடல் பொருளுடன் எழுத முடியுமா?

-பாட்டி வீட்டில் பொழுது போகவில்லை என்றால் அடுத்த வீட்டு நியாயம் பேசவே மாட்டாள். பட்டு மாமி பேரன் பத்தாவது பெயிலாமே? சரஸா மருமகன் இப்போல்லாம் வேலைக்கு போறதில்லையாமே ??? ராஜியை பொண்ணு பாத்துட்டு போனாளே .என்னாச்சு வேணான்னுட்டாளா ?

ஹூஹும்.
.
பொழுது போகவில்லை என்றால் வர்ணங்களிலும் கீர்த்தனைகளிலும் வரும் சிட்டை ஸ்வரங்களுக்கு சாஹித்யம் எழுதிக் கொண்டிருப்பாள்.


உதாரணமாக கமாஸில் ப்ரோசேவாரெவருரா - சிட்டை ஸ்வரம் 

ஸா ஸ  நி த ப த நி ஸ நி நி த த ப ம பா த ம - க ம ப த நி 

என்றால் 

நீ பதமுலனு  மரி மரி பொகடுசு பாடுசு - நீ நாமமுனு 

என்று அழகாக இட்டுக் கட்டி பாடுவாள்...

ஒரு முறை , 'முற்றிலும் ஸ்வர சாஹித்தியமாக ஒரு பாட்டு கட்டேன்  பாட்டி' என்று கேட்டதற்கு,


நீ பா த    ச ம மா  - நி த நி த நி க ம  த ரி 
நீ பா த   ச ம மா 

பா பா ரி  ம நி த ரி ம த க ரி பா த பரி க ரி - நீ பா த 


[உன் பாதத்துக்கு சமமா - நிதமும் மறைகள் தம் உள்ளே தரிக்கும் 
உன் பாதத்துக்கு சமமா ?பாபங்களை அகற்றுபவனே...மணியை தரித்த மத யானையின் வேதனையை அகற்றிய உன் பாதம் சமமா] 

என்று பாடினாள் ...

MISS U பாட்டி... ஏதோ கொஞ்ச நஞ்சம் மூளை இருக்கிறது என்றால் அது பாட்டி தந்த ஜீன்ஸ் தான்.

ஜீன்ஸ் என்றதும் பரிணாமம் நினைவுக்கு வருகிறது.

பரிணாமம் கடவுளை சந்தேகத்துக்கு உரியதாக்குகிறது என்பது சிலர் வாதம். 
பூச்சி, பாம்பு, பூரான், புலி, புளியமரம் , பொன்னுசாமி எல்லாரையும் கடவுள் 
wholesale ஆகப் பார்த்துப் பார்த்து  படைத்தார் படைத்து விட்டு எல்லாவற்றிலும் தன் கையெழுத்தைப் போட்டார்  என்று மதங்கள் சொல்கின்றன. இல்லை கடவுள் சும்மா பிள்ளையார்சுழி மட்டுமே போட்டார். சும்மா சிம்பிளாக ஏதோ ஒரு ஒற்றை செல் உயிரியை படைத்து விட்டு இனிமே உன் சமத்து என்று சொல்லி விட்டு அகண்ட நித்திரை செய்யப் போய் விட்டார் என்கிறது பரிணாமம்.

 பதிவுலகில் பரிணாமம் குறித்த பதிவுகள் எப்போதும் சூடானவை தான். கமெண்ட் பாக்ஸில் சில சமயம் குடுமிப்பிடி சண்டை எல்லாம் கூட நடக்கும். ஜெய தேவ தாஸின் இந்தப் பதிவுகளை படியுங்கள் ...மறக்காமல் வவ்வாலின் பின்னூட்டங்களையும் படியுங்கள் :)

பதிவு 1

பதிவு 2

பதிவர் வவ்வால் புள்ளி விவரங்களுடன் தகவல்களைத் தந்து அசத்துபவர்.
அவரது வலைத்தளம். இது. .. ஆனால் இவரிடம் உள்ள கெட்ட பழக்கம் என்ன என்றால் உங்களை discourage செய்யும் படி பின்னூட்டங்களை எழுதுவார். ஆனால் நம்மை குத்திக் காட்ட, criticize செய்ய யாருமே இல்லை என்றால் நாம் தத்தியாகவே இருந்து விடுவோம்...'அருமையான பதிவு' 'உடன்படுகிறேன்' 'என்ன எழுத்து நடை' 'அபாரம்' 'சான்ஸே இல்லை' என்றெல்லாம் பின்னூட்டத்தில் ஐஸ் வைத்து விட்டால் நாமும் அடடா நாம் உலக இலக்கியம் எழுதி விட்டோமோ அடுத்த முறை புக்கர் பரிசுக்கு முயற்சிக்கலாம். என்று சாரு மாதிரி யோசிக்க ஆரம்பித்து விடுவோம். வௌவால் மாதிரி யாராவது நீங்கள் சொன்னது முற்றிலும் சரியல்ல என்று இடித்துரைத்தால் தான் 'அட இதற்கு இப்படியொரு 
பரிமாணமும் இருக்கிறதா..இதைப் பற்றி இன்னும் படிப்போம்..இன்னும் தெரிந்து கொள்வோம்...என்று நம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்வோம்'

ஒரு குட்டிக் கதை நினைவில் வருகிறது.

குருவி ஒன்று பனிக்காலத்துக்கு முன்பே வேறு இடத்துக்கு இடம் பெயர எத்தனித்து வானில் பறந்தது. ஆனால் கொஞ்சம் லேட் ஆகி விட்டதால் பனிக் காலம் வந்து விட்டது. பனி அதன் மேல் தாறுமாறாக பொழிந்து அதன் சிறகுகள் விறைத்துக் கொண்டு தொப் என்று கீழே விழுந்து குளிரில் கிட்டத் தட்ட செத்தே விட்டது. அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த எருமை ஒன்று ஒரு வண்டி சாணத்தை குருவி மேல் போட்டுப் போய் விட்டது. வெது வெதுப்பான சாணத்தால் கொஞ்சம் சூடு பெற்ற குருவி மகிழ்ச்சி தாங்காமல் பாடத் தொடங்கி விட்டது. இந்தப் பாட்டைக் கேட்டு அங்கே வந்த பூனை ஒன்று குருவியை சாணி மொந்தையில் இருந்து வெளியே கொண்டு வந்தது. குருவி நன்றி என்று சொல்லி முடிக்கும் முன்னரே பூனை அதைப் பிடித்து தின்று விட்டது.

'ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்' என்று மூன்று நீதிகளை எப்படி சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகிறதோ அப்படி இந்தக் கதையும் நமக்கு மூன்று நீதிகளை எடுத்துரைக்கிறது.

அவை ஆங்கிலத்தில்:
    1. Everyone who shits on you is not necessarily your enemy.
    2. Everyone who gets you out of the shit is not necessarily your friend.
    3. And, if you're warm and happy in a pile of shit, keep your mouth shut!

சிலப்பதிகாரத்தின் சில பாடல்களை பொருளுடன் நீங்கள் இங்கே படிக்கலாம்.

excerpt :


பெண்ணுரிமை மிக்க இந்தக் காலத்திலேயே… ஒரு பொண்ணு, நாடாளுமன்றத்துள் நுழைஞ்சி, “தேராப் பிரதமா” ன்னு பேசீற முடியாது; பிச்சிருவாய்ங்க:) “ஈழம்” ங்கிற தொன்மத்தின் பேரைக் கூட உச்சரிக்காதே -ன்னு இன்னிக்கும் Untouchability இருக்கத் தான் செய்யுது; ஆனா… ஊரு விட்டு ஊரு வந்து, மதுரையில் அடித்தளமே இல்லாத ஒரு பொண்ணு, அதிர்ந்து பேசியே அறியாத ஒரு soft பொண்ணு… “தேரா மன்னா” -ங்கிறா…
* எங்க ராசாவைப் பாத்து, மரியாதை இல்லாமப் பேசுறியா, சிறுக்கி?-ன்னு ஒருத்தன் சீறக் காணோம்!
* அதான் தென்னவன் அரசியல்; “தென்னவன் தீதிலன்” ன்னு பிற்பாடு கண்ணகியே சொல்லுறா!
இன்றைய அரசியலுக்கு, இது மூஞ்சியில் அடிச்சாப் போல ஒரு பாடம்!

back to அகத்தியர்.


சிவார்ப்பணம் என்று இந்த வலைத்தளத்தில் அகத்தியரின் வரலாறு உள்ளது.
சித்தர்களைப் பற்றியும், மெய்ஞானம் பற்றியும், தியானங்கள் பற்றியும் யோக முறைகள் பற்றியும் இந்தத் தளத்தில் தகவல்கள் நிரம்பி வழிகின்றன. என்ன? இவற்றை வெறுமனே தகவல்கள் என்று பார்க்காமல் இவற்றை நாம் ஞானம் அடைவதற்கு உத்திகளாகப் பார்க்க வேண்டும்.

வெறுமனே ஞானத்தை வைத்து என்ன செய்வாய்? ...தகவல்களின் மூட்டைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? எமன் வரும் போது எனக்கு சிலப்பதிகாரம் தெரியும் சோலார் சிஸ்டம் தெரியும் சாருகேசிக்கு ஸ்வரம் தெரியும் சொற்பொருள் பின்வருநிலை அணி தெரியும் , ஷேக்ஸ்பியர் தெரியும் விட்டுடு என்றால் விட்டு விடுவானா? என்று கேட்கிறது பஜகோவிந்தம்.

நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்சரனெ !

பஜ கோவிந்தத்தை அழகாக படங்களுடன் விளக்குகிறார் திருமதி. இராஜராஜேஸ்வரி இங்கே 

மேலும் பஜகோவிந்தம் இங்கே:


ஒரு மொழிபெயர்ப்பை அனுமதிக்கவும்.


மா குறு தனஜன யௌவன கர்வம் 
ஹரதி நிமேஷத்கால : சர்வம் |
மாயாமயமிதமகிலம் ஹித்வா 
ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷ விதித்வா ||


அகந்தை தருதோ உன் இளமை? சுற்றம்?
அழித்திடும் அனைத்தையும் நொடியினில் கூற்றம் 
அகிலமே மாயை என்று அறியத் தகுவாய் 
அந்தம் இல்லாத இறையினுள் புகுவாய் 


Take no pride in youth, wealth and your kith
All shall be gone in minutes with death
Know that everything is illusion
May the eternal truth be your passion


மாயாமயம் இதம்....மாயை என்றால் என்ன? இருப்பது போல் இருந்து பின் இல்லாமல் போய் விடுவது. காலையில் டாட்டா காட்டி விட்டுப் போனவர் மத்தியானம் ஆக்சிடெண்ட் ஆகி சதை மூட்டை போல வீட்டுக்கு வருவது.  நமக்கு ஏதேனும் மனித எத்தனத்துக்க் அப்பாற்பட்ட சம்பவங்கள் நிகழும் வரை கடவுளின் நினைவு வருவதில்லை என்கிறார் ஓஷோ. (பகவத் கீதை -ஒரு தரிசனம்)

கீதையில் பகவான் கிருஷ்ணர் ஒரு அற்புதமான சங்கிலி ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அது,

பரமாத்மா -> புத்தி -> மனம் -> இந்திரியங்கள்.

ஆனால் மனிதன் இந்த சங்கிலியை உல்டாவாக்கி விட்டான். பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டது புத்தி. புத்திக்கு கட்டுப்பட்டது மனம். மனத்துக்கு கட்டுப்பட்டது இந்திரியங்கள் (புலன்கள்)...ஆனால் நமக்கோ புலன்கள் மனத்தைக் கட்டுப் படுத்துகின்றன. பஜ்ஜி போண்டா வடை விற்கும் தள்ளுவண்டி கடையைப் பார்த்தால் நாக்கு மனதுக்குக் கட்டளை இடுகிறது....மனம் அங்கே எஜமானனாக இருப்பதில்லை. மனமோ புத்திக்கு கட்டளை இடுகிறது.(revenge at wrong place !) புத்தி 'வேண்டாம் இது ஆபத்து' என்று எச்சரித்தாலும் வாயை மூடு எனக்கு எல்லாம் தெரியும் ...என்று சொல்கிறது. புத்தியோ பரமாத்மாவையே கட்டுப் படுத்துகிறது.  'கடவுளே...எல்லாம் உன் சித்தம்' என்று சொல்வதில்லை...இது எனக்கு வேண்டும்...செய்து கொடு... நான் உன் பக்தன் அல்லவா...எனக்கு ஏன் இன்னும் நீ வேலை கொடுக்கவில்லை? (?) இப்படி இருப்பது உனக்கு அழகா...? என்றெல்லாம்..

வேலையாட்கள் எஜமானர்களை கட்டுப்படுத்தினால் அந்த வீடு எப்படி இருக்கும்? அப்படித் தான் இருக்கிறது நம் வாழ்க்கை..

குதிரை வண்டியில் உட்கார்ந்து செல்ல வண்டியை எஜமானன் இழுக்கிறான்!

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥


 மேலும்:

சுட்டியில் 

back to அகத்தியர் ..

அகத்தியரை தன் அவைக்கு விருந்தாளியாக அழைக்கிறான்  இந்திரன்.
ஊர்வசியை நாட்டியம் ஆடும்படி ஏற்பாடு செய்கிறான். சில பேர் வேலை பார்க்கும் இடத்தில் வேலை தவிர வேறெந்த விஷயத்துக்கும் இடம் தர மாட்டார்கள். நோ ஜி-மெயில் நோ பேஸ் புக்.'..நோ நான் சென்ஸ்..அது காதலியே ஆனாலும்...எஸ்.எம்.எஸ். அனுப்பினால் im at work என்று ஒரே ஒரு reply தான் வரும். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தான் அவர்களிடம் எதையாவது எதிர்பார்க்க முடியும்.

ஆனால் இந்த ஊர்வசிக்கு வேலை செய்யும் இடத்தில் காதலை எப்படி கையாள்வது என்று தெரிவதில்லை. டான்ஸ் ஆடிக்கொண்டே வசந்தனை ஓரக் கண்ணால் பார்க்கிறாள். அவனைப் பார்த்தபடியே டான்ஸ் ஆடுகிறாள். நீங்கள் விருந்தாளியாக செல்லும் வீட்டில் இப்படி இளவட்டங்கள் லுக்கு விட்டுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அகத்தியர் கடுப்பாகி அவர்களை சபித்து விடுகிறார். 

வேலை செய்யும் இடத்தில் ஜொள்ளு விடாதீர்கள்.....

ஊர்வசி என்றதும் ரம்பா ஞாபகம் வருகிறது. பதிவர் பிலாசபி  பிரபாகரன் 
ரம்பாவை சிலாகித்து, கொண்டாடி, கூத்தாடி, புகழ்ந்து, எழுதி இருக்கிறார் இந்தப் பதிவில்:

எக்ஸ்செர்ப்ட் :

2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் நாளில் அந்த துயர செய்தி ரம்பா ரசிகர்களின் காதுகளுக்கு எட்டியது. செய்தியை கேட்டதும் இதய பலவீனமானவர்கள் பலர் மாரடைப்பில் பலியானார்கள். நிறைய வீடுகளில் கோபத்தில் செய்தி வாசித்த ரேடியோக்களும் தொலைக்காட்சிகளும் நொறுங்கின. பத்திரிகை அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. செய்தி: நடிகை ரம்பா தொழிலதிபரை மணந்தார். திருமணமாகி சரியாக ஒன்பதே மாதங்களில் ரம்பா, குட்டி ரம்பாவை ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் கோபமிருந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டுபோய் நின்றால் கோபம் போய்விடும் என்பார்கள். ரம்பா ரசிகர்கள் விஷயத்தில் அது உண்மைதான், மானாட மயிலாட நிகழ்ச்சியில் தற்போது ரம்பாவை பல்லிளித்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமுத்ரா 

மேலும் வாசிக்க...

Wednesday, June 5, 2013

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!



பெங்களூருவில் ஒரு வாரம் மேகமூட்டமும் மழையுமாக இருந்து விட்டு இப்போது தான் கொஞ்சம் வெயில் எட்டிப் பார்க்கிறது. 

விநாயக முருகனின் மற்றுமொரு கவிதையை இங்கே குறிப்பிட அனுமதியுங்கள்.


ஒரு மழை சில 
கணங்கள்
 கால இயந்திரத்தில்
 பின்னோக்கி
 இழுத்து செல்கிறது 

ஒரு மழை 
புறக்கணிக்கப்பட்ட 
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது 

ஒரு மழை 
பிரிந்து சென்றவர்களை 
நினைவூட்டுகிறது 

ஒரு மழை 
பழைய காயங்களை கீறி 
வலியை நினைவூட்டுகிறது 

ஒரு மழை 
காதலியை
நினைவூட்டுகிறது 



கோடை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து விடை பெறுகிறது. கோடை ஒரு வித அழகு தான்...மாம்பழங்களுடன் , கோடை மழையுடன் , சீக்கிரமே விடிந்து விடும் இரவுகளுடன், நீண்ட மாலைப் பொழுதுகளுடன் , பள்ளி விடுமுறைகளுடன், சூரியனுடன், வியர்வையுடன் மாடியில் காயும் வடகங்களுடன் .. கோடை அழகுதான்...



மட்சுவோ பாஷோ (ஜப்பானியக் கவி) சொல்கிறார்: படித்தது: இங்கே:
(தளம்: முத்துச்சரம்- ராமலக்ஷ்மி)


குளிர்மழை 
ஆரம்பமாகிறது.
குடையில்லை.
அதனாலென்ன?

So what ! இது ஒரு டானிக் மந்திரம்...இன்று ஒரு நாள் மட்டும் சொல்லிப் பாருங்களேன். so what ..ஏன் சலித்துக் கொள்கிறீர்கள்...ஸோ வாட்? மழை பெரிதாக வருகிறது..ஸோ வாட்...குடை இல்லை..ஸோ வாட்? ஆட்டோ கிடைக்கவில்லை..ஸோ வாட்...நனைந்தால் ஜலதோஷம் வரும்...ஸோ வாட்..??!


சி.சரவண கார்த்திகேயனின் ஒரு கவிதையையும் பார்த்து விடுங்கள்:

"இங்கே மழை வருவது போல் இருக்கிறது"
என்கிறாள் அவள்;
"இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது"
என்கிறான் அவன்;
இடைப்பட்ட 350 கிமீ தேசிய நெடுஞ்சாலை
புன்னகைக்கிறது.

சில வாக்கியப் பிரயோகங்கள் சில மொழிகளுக்கு  பிரத்யேகமானவை. ஆங்கிலத்தில் அபூர்வமான நிகழ்வை once in a blue moon என்பார்கள்.. அதை தமிழில் மொழிபெயர்த்தால் சரி வராது. அப்படி தமிழில் இந்த 'குடைக்குள் மழை ' என்ற பிரயோகம் உள்ளது. அப்படியென்றால் என்ன? குடை ஓட்டை என்று அர்த்தமா? :):)

குடைக்குள் மழை என்பது மறைமுகமாக காதலை குறிக்கிறதோ? 


இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் out -of -box கற்பனைகளைப் படிக்க இங்கே:

இந்தப் பதிவில் சில out -of -box புதிர்கள் உள்ளன.உதாரணத்துக்கு ஒன்று:


 "தனது படையில் உள்ள யானைகளைக் கணக்கெடுக்கச் சொன்னார் மன்னர். அதிகாரி வந்து 60 தலைகள் என்று சொன்னார். இன்னொரு முறை கணக்கெடுக்கும்படி வேறு ஒரு அதிகாரியை அனுப்பினார் மன்னர். அவர் வந்து 64 தலைகள் என்று சொன்னார். அவையோர் புரியாமல் குழம் பினார்கள். ஆனால், மன்னர் 'இரண்டுமே சரி' என்றார். எப்படி?"


விடை: சுட்டியில் 


வரும் ஜூன் -21 ,(summer solstice) அதிக பகல் பொழுதாக இருக்கப் போகிறது. அதற்குப் பிறகு சம்மருக்கு official -ஆக விடை கொடுத்து விடலாம். ஹி ஹி,,, சென்னைக்கு இது பொருந்தாது...சென்னையின் மூன்று பருவங்கள் summer, summerer, summerest, என்கிறார் ஒரு பதிவர்.. மே மாதம் summerest ஆம்! :)

சாரி,,பதிவர் லிங்க் மறந்து விட்டது.


கோணலாக இருந்தாலும் என்னுடையதாக்கும் என்று குர் குரேவோ ஏதோ ஒரு விளம்பரம் வருகிறது. டேய் இது டபிள் மீனிங் வசனம் என்றான் நண்பன் ஒருவன். டபிள் மீனிங்கோ ட்ரிபிள் மீனிங்கோ கோணலாக இருக்கும் எதுவும் கெட்டது அல்ல என்று நினைக்கத் தோன்றுகிறது. பூமி கொஞ்சம் கோணலாக நிரந்தர கழுத்துவலி வந்ததுபோல சுற்றவில்லை என்றால் நமக்கு பருவங்கள் இல்லை. காலங்களில் அவள் வசந்தம் போன்ற பாடல்களும் இல்லை!



பூமி கொஞ்சம் சாய்வாக சுற்றாவிட்டால் இந்த பருவங்கள், கற்பனைகள், கவிதைகள் ஒன்றுமே இல்லை...


“If time and space are curved where do all the straight people come from?”

― R.J. Scott

காலமும் வெளியும் வளைந்து கொடுக்காமல் ஜிம் பாடி தமிழ் ஹீரோக்கள் மாதிரி இருந்தால் கோள் , துணைக்கோள், துணை-துணைக்கோள்   ஒன்றுமே இல்லை. நம் சூரியனை நாம் உரிமை கொண்டாட முடியாது. காலமும் வெளியும் வளைவதைப் பற்றி இங்கே:

வளையாத இரண்டு இணை நேர்க்கோடுகள் பிரபஞ்சத்தில் எங்கேயோ சந்தித்தே தீர வேண்டும் என்கிறது இயற்பியல்.:)

(சைக்கிள் கேப்பில் என் பதிவை நுழைத்து விட்டேனே!):):)

சரி. அது என்ன சைக்கிள் கேப்? சிக்னலில் பெரிய வாகனங்கள் கால் கடுக்க சாரி டயர் கடுக்க நின்று கொண்டிருக்க அங்கே ஒரு சைக்கிள் கம்பீரமாக கிடைத்த கேப்பில் எல்லாம் புகுந்து நுழைந்து வளைந்து நெளிந்து ஜோராக சிக்னல் விளக்கின் அருகே வந்து நிற்குமே? இது தான் சைக்கிள் கேப்பா??? 

நிற்க. பெங்களூருவில் சப்-வேக்கள் குறைவு. சாலைகளைக் கடப்பது ஒரு பகீரதப் பிரயத்தனம். கிடைத்த கேப்பில் உயிரைக் கையில்  பிடித்துக் கொண்டு குல தெய்வத்தை தாயார் சகிதம் மானசீகமாக வேண்டிக் கொண்டு  உள்ளே இறங்கி விட வேண்டியது தான். லாரி மெதுவாகத் தானே வருகிறது என்று திட சித்தத்துடன் இறங்கி விட்டால் எதிர்பாராத முக்குகளில் இருந்து வரும் ஆட்டோக்களும் , கேர்ள் பிரண்டை அமர்த்திக் கொண்டு அவளை இம்ப்ரெஸ் செய்ய அதிவேகத்தில் வரும் பைக்குகளும் நமக்கு பயங்கர விரோதிகள். பாத சாரிகளுக்கு இந்த பைக்குகள் தான் முதல் எதிரி! நாம் ஏன் நம் நாட்டில் பாதசாரிகளுக்கு முக்கியத்துவமே தருவதில்லை?

well , பைக் ஓட்டி , கார் ஓட்டிகளின் frame of reference இல் பாதசாரிகள் எதிரிகளாகத் தெரிவார்களோ என்னவோ? 'ஏதோ ஒரு சாவு கிராக்கி ரோட்டை க்ராஸ் செய்யுது,,என்னவாகப் போகிறதோ ..சனியன்கள்'..என்று திட்டியபடி அவர் கிளட்சில் கால் வைக்கக் கூடும்'! 'எங்க இருந்துதான் வர்றானுகளோ '

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே...

நாம் சந்திக்கும் எல்லாமும், எல்லாரும் 'நேராக' 'ideal ' ஆக  இருக்க வேண்டும் என்று நாம் ஏன் எதிர்பார்க்கிறோம்? டெர்மினலில் உள்ள ஒருவர் மெதுவாக டைப் அடித்தால் சலித்துக் கொள்கிறோம்! கோணல்களை, விகாரங்களை, கண்டு முகம் சுளிக்கிறோம்? இதைப் பற்றி என்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பஸ்ஸில் போகும் போது மாற்றுத் திறனாளி ஒருவர் உள்ளே ஏறுவதை நாம் எதிர்பார்ப்பதே இல்லை. நம்முடைய பஸ்கள் அவர்களுக்கு வசதியாக அமைக்கப் பட்டிருப்பதும் அல்ல. மாற்றுத் திறனாளிகளுக்காக என்று எழுதப்பட்டிருக்கும் இருக்கைகளில் வேறு யாரோ தான் அமர்கிறார்கள். நம்முடைய உலகம் எல்லாருமே நார்மல் தான் என்ற பார்வையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  நோயாளிகளையும் , முதியவர்களையும், மன நிலை பாதித்தவர்களையும், சுயபால் ஈர்ப்பாளர்களையும் நாம் ஏனோ விரோதமாகவே பார்க்கிறோம். அவனா நீயி என்று ஒருவரை கிண்டல் செய்ய நாம் ஏனோ தவறுவதே இல்லை... 'உனக்கு என்ன ப்ராப்ளம்...என்னிடம் மனம் விட்டு சொல்லு..என்னால் ஆனதை செய்கிறேன்' என்று சொல்ல நேரம் இல்லாத நமக்கு ஒருவரை புண்படுத்த, குத்திக் காட்ட, கிண்டல் செய்ய மட்டும் எங்கிருந்தோ நேரம் வந்து விடுகிறது.


பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் பக்கம்:


அஷ்ட வக்கிரர் பற்றி கேட்டிருக்கிறீர்களா? அவரது உடம்பில் எட்டு கோணல்களாம் ...அவரைப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறார்கள். என் உடம்பு கோணி இருக்கலாம். ஆனால் என் ஆத்மா கோணுமா ? தோலைப் பார்த்து மட்டுமே மாட்டை மதிப்பிடும் மாட்டு வியாபாரிகள், கசாப்புக் கடைக்கார்கள் நீங்கள் என்று சொல்கிறார் அஷ்ட வக்கிரர் ...முழுக் கதையை  இங்கே   படியுங்கள். 'சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ'



சிங்கம், புலி இவற்றை வைத்து கதை சொல்லுங்கள் அப்பா என்று குழந்தைகள் கேட்டால் நீங்கள் இனிமேல் பெப்பப்பே என்று முழிக்க வேண்டாம். இந்தத் தளத்துக்கு சென்று அதில் உள்ள ஏதேனும் ஒரு கதையை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் நச்சரிப்புகள் ரொம்பவே வித்தியாசமானவை. கதை சொல் என்று நச்சரிக்கும். பிளம்ஸ் பழம் கேட்டு நச்சரிக்கும். ச்சோட்டா பீம் பில்லோ கேட்டு நச்சரிக்கும்.ஹிப்பி நூடூல்ஸ் கேட்டு அதகளம் பண்ணும். ஒரு நாள் ரிமோட் ஏரோப்ளேன் கேட்கும். ஒரு நாள் டூர் போகலாம் என்று நச்சரிக்கும். 

பயணம் என்றாலே இனிமையானது. ஜவஹர் அவருடைய பயணக் கட்டுரைகள் நகைச்சுவை ததும்பபவை. படித்துப் பாருங்கள்:

Simplicity is making the journey of this life with just baggage enough.
Charles Dudley Warner 

உதாரணத்துக்கு:


சந்தித்த போது யார் யார் என்னென்ன வாங்கினோம் என்று பேசிக் கொண்டோம். நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்ன வாங்கினார் என்று கேட்டால் ஒரு மாதிரி சிரித்து மழுப்பிக் கொண்டே இருக்க, பையைப் பிடுங்கி சோதனை செய்ய முற்பட்டோம்.
 “இரு… இரு…” என்று தடுத்து விட்டு
“இந்த காத்தடிக்கிற இது… அதான் பொம்மை…. காத்தடிச்சா…” என்று குழற,
“ஐய்யய்யோ… அதெல்லாம் ப்ரோஹிபிட்டட் ஐட்டம், கஸ்டம்ஸ்ல பாத்தா அரெஸ்ட் பண்ணிடுவாங்க” என்றோம்.


பொம்மை- மனதை உருக்கக் கூடிய ஒரு சிறுகதை.ஜெயகாந்தனின் இந்த சிறுகதையை இங்கே படியுங்கள்

ஓஷோ ஜோக்.

.ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்.... பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் அதைத் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்...சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது...அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...

இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று
"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்.. 






சமுத்ரா 





மேலும் வாசிக்க...

Tuesday, June 4, 2013

பசிப்பிணி மருத்துவன் இல்லம்...

போர் முரசு ஒலி கேட்கிறதே..! எதிரி படையெடுத்து
வந்து விட்டானா, அமைச்சரே?

பயப்படாதீர்கள் மன்னா! மகாராணியார் உள்ளே
மிருதங்கம் பழகிக் கொண்டிருக்கிறார்கள்..!

—————————
மந்திரியாரே…தளபதி எங்கே?

பக்கத்து நாட்டில் தளபதி வேலை காலியாக இருக்கிறது…
இன்டர்வியூவுக்கு போயிருக்கிறார்..!

-இந்த ஜோக்கைப் பார்த்தது இந்தத் தளத்தில் 

ஜோக்கு மட்டும் இல்லாமல் நிறைய தகவல்கள் நிறைந்து கிடக்கின்றன.  பொது அறிவு விஷயங்கள், பொன் மொழிகள், கவிதைகள் இப்படி!

ஒரு கவிதை இந்தத் தளத்தில்:

ஆனந்த விகடனில் வந்ததைப் பகிர்ந்திருக்கிறார். இந்தக் கவிதை என்னையும் ஏதோ செய்தது.

தாத்தா…
யானை தெரியவில்லை…
திருவிழா கூட்டத்தில்
எக்கி எக்கிப்
பார்த்த குழந்தை
சொன்னது
-
‘இரு தூக்கிக் காண்பிக்கிறேன்’
யானை ரொம்ப கனம்
தூக்கிருவியா…?
என்றது குழந்தை!
-
——————–
மு.பழனிஇராகுலதாசன்
நன்றி: ஆனந்த விகடன்


-ஒரு கவிதை இப்படித்தான் படிப்பவருக்குள் ஒரு புன்முறுவலை ஏற்படுத்த வேண்டும்.

'அப்பா.
கிருஷ்ணர் ஏன் கையில் 
புல்லாங்குழல் வைத்திருக்கார்?
என்றது குழந்தை 
நான் 
'வாசிக்கத் தான்' என்றேன்.

-note that இது கவிதை அல்ல.. கடி ஜோக்.

எல்லா ஜோக்குகளும் இந்த  போலி டாக்டர், அழகான நர்ஸ், சமைக்கும் கணவன், மாமியார், அரசியல்வாதி, ராஜா,ஆபீசில் தூங்குதல், பண்டிகைக்கு வந்த மாப்பிள்ளை  இப்படி ஒரு  handful categories -க்குள் அடங்கி விடும் என்கிறார் சுஜாதா. sounds true !

இப்போது அந்த சங்கம் இந்த சங்கம் என்று ஒரு புது விதமான ஜோக்கு கிளம்பி இருக்கிறது. கடி ஜோக் என்று கூட சொல்ல முடியாது. கடி-கடி ஜோக்.

இப்படி

லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான்.

இப்படிக்கு டீக்கடையில் வடை சாப்பிட்டுக் கொண்டே யோசிப்போர் சங்கம்

தமிழன் தத்துவவாதி!

சரி...ஜோக்கு போதும்.


என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடி அலைகிறேன்.

இப்படி, கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை ஒருவர் தொகுத்துத் தருகிறார்.


இது அண்ணா இறந்த போது அவர் (அ .ரகுமான்)எழுதியது:

வெறும் தலைகளை எண்ணிய தலைவர்களிடையே
இதயங்களை எண்ணியவன் நீ
உன் எழுதுகோல்
தலை குனியும்போதெல்லாம்
தமிழ் தலை நிமிர்ந்தது.

அன்று இறந்ததோ நாம்;
புதைத்ததோ உன்னை!
நம்மைப்போல்
பைத்தியக்காரர்கள் யார்?

உடல்களைப் புதைக்கும்
உலகத்தில்
அன்று நாம் ஓர்
உயிரைப் புதைத்தோம்!

அப்துல் ரகுமான் எழுதியதில் இன்றும் என்னை பாதிப்பது இந்த வரி:

புத்தகங்களே 
சமர்த்தாய் இருங்கள் 
குழந்தைகளை 
கிழித்து விடாதீர்கள்!

இந்தக் கவிதையையும் படித்துப் பாருங்கள்:

குழந்தை என்றதும் இட்லி வடையில் வரும் 'சாதா குழந்தை டு ஸ்பெஷல் குழந்தை' நினைவுக்கு வருகிறது. நேரம் இருந்தால் படியுங்கள்:


சரி. கொஞ்சம் பேசுவோம்.


 ஆபீசில் வேலை செய்யாமல்  இதைப் படிப்பவர்கள் அப்படியே பேன்ட்ரி-க்குப் போய் ஒரு கப் டீ எடுத்துக் கொண்டு வந்து விடவும்.


 இலக்கியம் என்றால் என்ன? என்று நண்பர் ஒருவர் கேட்டார். சாரு நிவேதிதாவைக் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்கிறீர்களே? என்று நினைத்துக் கொண்டேன்.இலக்கியம்  என்பது தமிழ் எழுத்தாளர்கள் இடையில் இன்று ஒரு விவகாரமான சமாச்சாரம்.எல்லாரும் தாங்கள் எழுதுவது தான் இலக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கலை என்பது படைப்பவனை மட்டுமே சார்ந்தது அல்ல... ரசிகர்களையும் சார்ந்தது.

The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read.
-Oscar Wilde

இப்படி யாருக்கும் புரியாமல் எழுதுவது தான் இலக்கியமா? கேட்டால் எழுத்தாளர்கள் நம்மையே நையாண்டி செய்வார்கள்.

இதைப் புரிந்து கொள்ள நீ ஒரு ஜென் நிலைக்குப் போகவேண்டும் என்பார்கள்.
ஒரு பின் நவீனத்துவ அணுகுமுறை உனக்கு வேண்டும் என்பார்கள். காருக்குப் பெட்ரோல் இல்லையே, காபிப்பொடி இல்லையே என்பதை மறந்து விட்டு என்னைப் படிக்க வேண்டும் என்பார்கள். நீ எதைப் புரிந்து கொண்டுள்ளாய் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள? வாழ்க்கையைப் புரிந்து கொண்டிருக்கிறாயா? உன்னுடன் ஐம்பது வருடம் குடும்பம் நடத்திய மனைவியைப் புரிந்து கொண்டிருக்கிறாயா என்று எடக்கு மடக்காகக் கேள்வி கேட்பார்கள். 

 அய்யன்மீர், உங்கள் இலக்கியத்தைப் படித்தால் கவலை போகும் என்று வந்தால்  நீங்கள் முதலில் உங்கள் கவலைகளை மறந்து விட்டு பிறகு என் இலக்கியம் படி என்கிறீர்களே..

அன்ன தானம் செய்கிறேன்..அதற்கு முதலில் வயிறு முட்ட தின்று விட்டுவா என்று சொல்வது போலல்லவா இருக்கிறது இது?

வாசிப்பவன் எல்லாம் கடந்த ஜென் நிலையில் ஏற்கனவே இருந்தால் உங்கள் எழுத்தை ஏன் வாசிக்க வர வேண்டும்?

என்னைப் பொறுத்த அளவில் இலக்கியம் என்பது சிம்பிள்.

What is wonderful about great literature is that it transforms the man who reads it towards the condition of the man who wrote.

E. M. Forster


அவ்வளவு தான்.


"நெடிய மௌனப் பிரதேசத்தினூடே 
எரியும் நினைவுகளில் 
உட்புகுந்த 
வார்த்தை சருகு 
அல்லாடுகிறது 
எண்ணங்களின் புயலில்'

-என்றெல்லாம் எழுதினால் அது இலக்கியம் அல்ல.

இப்படியெல்லாம் எழுதினால் நீயே உன் திருப்திக்கு எழுதி பெட்டியில் மூடி வைத்துக் கொள். அல்லது draft -இல் வைத்துக் கொள். ஏன் publish செய்கிறாய்??
இவர் சொல்கிறார்:


புரிகிறதா?
அவர் என்ன மனநிலையில் எழுதினாரோ அதே மனநிலையை எட்ட முடிகிறதா? that 's all ...


 ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் ஆண்கள்
அந்த தெருவை
விரைந்து கடக்க முயற்சிக்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் பெண்கள்
அந்தரங்க சுவடுகளை
அழித்து விட்டு செல்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
பொம்மையுடன் வெளியேறும்
குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு பொறுப்புணர்ச்சி

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் குருவியொன்று
கூடுதல் வைக்கோல் குச்சிகளோடு
மீண்டும் உள்சென்று தாழ பறக்கிறது

-என்ன சொல்கிறார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

that's it ...இலக்கியம் நம் எல்லாரிடமும் இருக்கிறது. நம் எல்லாரின் பொதுச் சொத்து அது. கண்ணாடி போட்டுக் கொண்டு கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு, மீசை வைத்துக் கொண்டு பயமுறுத்தும் எழுத்தாளர்கள் சிலரின் பிரத்யேக  சொத்து அல்ல அது.


மனிதன், தான் நினைப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த மொழியை உருவாக்கினான். மொழியின் ஆதாரமான purpose அதுதான்.காட்டில் துணியின்றி துணிவின்றி திரிந்து கொண்டிருந்த போது அவன் 'மல்லிகையே வெண்சங்காய் வண்டூத ' என்று கவிநயத்துடன் கவிதை பேசி இருக்க மாட்டான். பசிக்கிறது, எனக்கு அந்த இடத்தில் வலிக்கிறது, குழந்தையை பார்த்துக்கோ, அவனுடன் போகாதே, ராத்திரி என் வீட்டுக்கு வா என்பது போன்ற சின்னச் சின்ன தகவல்களை பரிமாறிக் கொள்வது தான் மொழி ஒன்றின் நோக்கம். இலக்கியம் கிலக்கியம் எல்லாம்  ரொம்பப் பின்னால் வந்த ஒன்று. மனிதம் கொஞ்சம் செட்டில் ஆகி பசிக்கு ஒரு நிரந்தர வழி (விவசாயம்) கண்டுபிடித்து, செக்ஸில் சலிப்படைந்து , வேட்டையாடி விரக்தியடைந்து   பொழுதுபோகாமல் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிய ஒரு மத்தியானப் பொழுதில் கண்டுபிடித்தது இலக்கியம் என்று கூட சொல்லலாம்.

ஒரு மொழிக்கு கவிதைகள் எதற்கு? இலக்கியம் எதற்கு?

 இலக்கியம் என்பது ஒரு luxury ..சாதா பஸ்ஸில் போகாமல் ஏன் ஏ சி ஸ்லீப்பர் பஸ்ஸில் போகிறீர்கள்?

வீடு சும்மா வசிப்பதற்கு தானே? அதற்கு எதற்கு decoration ? interior ?திரைச்சீலைகள்?  பொம்மைகள்? அலங்காரங்கள்....அப்படிச் செய்தால் ஏதோ ஒரு நிறைவு கிடைக்கிறது தானே? அப்படி மொழிக்கு செய்யும் அலங்காரம் தான் இலக்கியம். அந்த அலங்காரம் கன்னா பின்னா என்று இருக்காமல் சிம்பிளாக இருக்க வேண்டும். பசிக்கிறது, வீட்டுக்கு வா,உப்பு பத்தலை  போன்றவற்றை கொஞ்சம் twist செய்து எல்லாருக்கும் எளிமையாகப் புரியும்படி கவித்துவமாக கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னால் அதுவும் இலக்கியமே.

ஒரு உதாரணம்:

"அம்மா என்ன தான் எனக்கு காவல் இருந்தாலும் நான் அவனைத்தான் விரும்புகிறேன்" என்று சொல்வது வாக்கியம்.

குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறும் கூடு காவல் கொண்டாள்

'காடை தன் கூட்டை விட்டு சென்று விட்டதை அறியாத வேடன் அதன் கூட்டை மட்டும் முட்டாள்தனமாக காவல் செய்து கொண்டு காத்திருப்பது போல என் மனம் எப்போதோ அவனிடம் சென்றுவிட, என் அம்மா என் உடம்பை மட்டும் காவல் காக்கிறாள் ' 

- இது இலக்கியம்.
நன்றி: சொக்கனின் தினம் ஒரு பா தளம்.

நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா என்று தேவயானி பாடுவது கூட கொஞ்சம் இலக்கியம் தான் ..

'காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் 
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்" - இதுவும் கூட .

ஏகதேச உருவக அணி கூட வருகிறது.

என்னடா? எல்லா சினிமாப் பாட்டும் இலக்கியம் ..அப்படி என்றால் வாலி வைரமுத்து தான் பெரிய இலக்கியவாதி என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இலக்கியம் என்பதற்கு clear -cut வரையறைகள் இல்லை.

 மத்தியான வெய்யில். உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. ஒரு வழிப்போக்கன் நடந்து வருகிறான். காலையில் இருந்து ஒரு காபி கூட இல்லை. பசி காதை அடைக்கிறது. வழியில் யாரோ ஒருத்தர் அவனிடம் 'அப்பா பக்கத்து ஊரில் ஒரு தர்மப் பிரபு வந்தவர்க்கெல்லாம் அன்னதானம் செய்கிறார். அங்கே போ' என்று சொல்லிச் செல்கிறார். அவர் வழியில் நன்றாக தொண்டை வரை சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக் கொண்டே வரும் ஒருத்தரைப் பார்த்து ,

'சார், இங்க சாப்பாடு போடுறாங்களே, அந்த வீடு எங்கே' என்று கேட்டால் அது வெறும் கேள்வி.

யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே


என்றால் இது இலக்கியம்....வார்த்தை புரியவில்லையே? அது எப்படி இலக்கியம் என்றால் நாம் ஆயிரம் வருசத்துக்கு முன்னே பிறந்திருந்தால் இது நமக்கு இன்று எப்படி லாலாக்கு டோல் டப்பி  நாக்கமுக்க ஹும்மாஹுனீயா எல்லாம் புரிகிறதோ அப்படித் தெற்றென விளங்கி இருக்கும்.


எல்லாரும் சாப்பிடும் சத்தம் கேட்கிறதே, எறும்புகள் எப்படி மழைக் காலத்துக்கு அஞ்சி மேடான இடம் நோக்கி தங்கள் முட்டைகளை எடுத்துச் செல்லுமோ அப்படி சிறுவர்கள் சாப்பிட்டது போக கையாலும் எடுத்துச் செல்கிறார்கள்..சும்மா சும்மா கேட்கிறானே என்று பேஜார் ஆகாதீர்கள்... வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு போல சொல்லுங்களேன்.....பசி என்னும் நோயை நீக்கக் கூடிய மருத்துவன் வீடு எங்கே தான் இருக்கிறது? பக்கமா? தூரமா?


 நன்றி:

இரா. முருகன் இதை

“Give us a straight answer, is the house
of that physician who cures hunger nearby or far away?”

என்று மொழிபெயர்ப்பு வேறு செய்திருக்கிறார். :):)

இதையே

Give us a straight answer and  tell us the way -
Is the house of the physician that cures hunger near or far-away?

என்று கொஞ்சம் திருத்தினால் கவித கவித !

 That's all and that's it....இலக்கியம்!

தீராத வயிற்று வலி ஒருவனுக்கு. ஆஸ்பத்திரி எங்கே ஆஸ்பத்திரி  எங்கே என்று வழியெங்கும் கேட்டுக்கொண்டே போகிறான். அதனுடன் இதை ஒப்பிட முடிகிறதா உங்களால்? அய்யோ ..இன்னும் ஆஸ்பத்திரி எத்தனை தூரமோ. .நர்ஸ் எல்லாம் வெள்ளை ட்ரஸ் அணிந்து வர்றாங்களே...ஆம்புலன்ஸ் எல்லாம் வரிசையா  வர்றதே...ஆஸ்பத்திரி எங்கேன்னு சொல்லித் தொலையுங்களேன்...ஒப்பிட முடிகிறதா ?

எப்படி பசியையும் பிணியையும் ஒப்பிடுகிறார் பாருங்கள்....பசி என்பதே பெரிய நோய் தானே...தினமும் மூன்று வேளை வந்து படுத்தும் நோய்.. Prevention is better than cure என்பது பசியைப் பொறுத்தவரை பொருந்தாது.!

அம்மா...அப்பாவுக்கு ரொம்ப பசிக்கிறதாம் என்று அம்மாவிடம் வந்து சொல்கிறது குழந்தை.

'டேய்..உங்கப்பாவுக்கு ரொம்பத்தான் பசி" என்கிறாள் 

"அப்பாவுக்கு அவ்ளோ பசியாம்மா"? என்கிறான் குழந்தை.

"ஆமாண்டா...என் வயித்துல இருக்கே..உன் குட்டி தங்கச்சி பாப்பா...அவ கூட அப்படித்தான் சொல்றா" என்கிறாள் அவள்.

-இலக்கியம் எல்லாரிடத்திலும் இருக்கிறது!


 இந்த பாட்டுக்கு பதிலாக அவர்  'சாப்பாடு எங்கே போடுறாங்க?' என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் அது காலம் தாண்டி நிலைக்குமா? இன்றைக்கும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிற்கிறதே! அது தான் இலக்கியம்.

சரி. பசி காதை அடைக்கும் போது யார் சார் இப்படி ஊணொலி அரவம், பொய்யா எழிலிஎன்றெல்லாம் பாடுவார்கள்? என்று விதண்டாவாதம் செய்யக் கூடாது. பசி காதை அடைக்கும் போதும் உங்களால் கவித்துவமாகப் பேச முடிந்தால் அது இலக்கியம்!

'ஓர் ஏர் உழவனார் ' என்று ஒருத்தர்...இன்னும் அவர் எழுதிய வரியாலேயே 
அறியப்படுகிறார். வீட்டில் கரண்ட் கட் ஆகி விடுகிறது. ஏதோ ஒரு வேலையை அவசரமாக செய்ய வேண்டும். மெழுகுவர்த்தி கிடைத்து விடுகிறது. என்ன தேடியும் தீப்பெட்டி கிடைக்கவில்லை. தட்டுத் தடுமாறி முட்டி மோதி கடைசியில் தீப்பெட்டி ஒன்று கைக்கு கிட்டுகிறது. அனால் திறந்து பார்த்தால் அதில் ஒரே ஒரு குச்சி மட்டுமே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையை தன் பாட்டில் வர்ணிக்கிறார் ஓர் ஏர் உழவனார் .


இலக்கியம் என்பது நிறைய விஷயங்களின் சங்கமம். அது 100% யதார்த்தம் அல்ல. (அப்படியானால் அது சுய சரிதம்) 100% கற்பனை அல்ல ( அது புனைவு நாவல்) இலக்கியம் ரொம்ப சீரியஸ் ஆனதும் அல்ல அதே சமயம் ஒரு முழு நீள காமெடி படமும் அல்ல. இலக்கியம் ரொம்ப சிறிதும் அல்ல மிகவும் பெரிதும் அல்ல...மிக ஜன ரஞ்சகமானதும் அல்ல...மிக ஜன விரோதமானதும் அல்ல.மிகவும் சந்தோஷமானதும் அல்ல. அழுகாச்சி சீரியலும் அல்ல. ரொம்பவே பழையதும் அல்ல..புதியதும் அல்ல...முற்றிலும் தெளிவானதும் அல்ல. முற்றிலும் குழப்பமானதும் அல்ல.ரொம்ப சுவாரஸ்வமானதும் அல்ல...மிகவும் சலிப்பானதும் அல்ல. காலத்தை முற்றிலும் சாராததும் அல்ல...சார்ந்ததும் அல்ல..ஒற்றைப் பரிமாணம் கொண்டதும் அல்ல..பல பரிமாணத்ததுமல்ல. என்ன? ஹிரண்யகசிபு கேட்ட வரம் போல இருக்கிறதா? that is இலக்கியம்...:)

ஞானக் கூத்தனின் கவிதை ஒன்று:

பசித்த வயிற்றுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன பற்பல
தாவரம்
ஒன்று ஆல். ஒன்று அரசு
ஒன்று வேம்பு…
அவனுக்கு வேண்டிய
ஒன்றோ
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது.

 உயிர் போகும் சோகம் என்றாலும் அதை கவித்துவமாக அழகாக உங்களால் மற்றவர்களுக்கு சொல்ல முடிகிறதா? நீங்கள் இலக்கியவாதி!

உதாரணம்:

இறந்த பிறகு வாருங்கள்:
=======================
எனக்கு இந்த 
அடர்ந்த தனிமையே போதும் 
நீங்கள் நான் இறந்த பிறகு 
வாருங்கள்..
அப்போது என்னைப் பற்றி 
என்ன வேண்டுமானாலும் நீங்கள் 
பேசிக் கொள்ளலாம்.
நல்லவன், ஞானி 
மானஸ்தன் 
பொறுமைசாலி 
என்று என்ன வேண்டுமானாலும் 
என்னைப் பற்றி 
கற்பனைக் கதைகள் கூட புனையலாம் 
நான் தான் பேச மாட்டேனே 
வெளியே போ என்று சொல்லமாட்டேனே 
உங்களை முறைக்கக் கூட மாட்டேன்..
எனவே 
நான் இறந்த பின்பு வாருங்கள்...

- வங்காளக் கவிஞர் ஜெசிமுதீன் 
  
 இந்தக் கவிதை உங்கள் மனதில் ஒரு கலவையான உணர்ச்சிகளை (mixed  feelings )உருவாக்குகிறதா? ஒரு வார இதழ் படிப்பதில் இருந்தோ , வடிவேலு ஜோக் பார்ப்பதில் இருந்தோ , மெகா சீரியல் பார்ப்பதில் இருந்தோ,துப்பறியும் நாவல் படிப்பதில் இருந்தோ, கடி ஜோக் படிப்பதில் இருந்தோ  வேறுபட்ட ஒரு உணர்ச்சியை உணர முடிகிறதா..?

அதுதான் இலக்கியம்..

வடிவேலு கூட தான் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கும் போது கூட 
'பல்பை பஞ்சர் ஆக்கிட்டானே பரதேசி' என்று காமெடி பண்ணுகிறார். அப்படியென்றால் வடிவேலு இலக்கியவாதியா? இருக்கலாம்.ஆனால்  உண்மையிலேயே அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் வடிவேலு நிச்சயம் வேறு விதமாக இருப்பார்.

நாளை சந்திக்கலாம்.

சமுத்ரா  
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது