07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மதுமதி. Show all posts
Showing posts with label மதுமதி. Show all posts

Sunday, February 12, 2012

இத்துடன் முடித்துக் கொள்கிறேன்...

                வணக்கம் தோழமைகளே..இன்றோடு ஒரு வார காலமாக நான் மேற்கொண்ட வலைச்சரத்தின் ஆசிரியப்பணி முடிவடைகிறது. இன்று இறுதிப் பதிவை இட்டு நன்றி தெரிவிக்கலாம் என்று பதிவிட அமரும்போது ஒன்று தோன்றியது..நன்றியதனைச் சொல்லி விடை பெறாமல் எனக்கு பிடித்த சில பதிவுகளையும் இன்று சுட்டிக் காட்டிவிட்டு விடை பெறலாம் என்று.. நாளொன்றுக்கு ஒரு பதிவு என திட்டமிட்டே பணியைத் தொடங்கினேன். ஆனால் செவ்வாய் அன்று தோழர் மாய உலகம் ரமேஷ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அன்றைய தினம் நானும் பதிவிடவில்லை.. தொடர்ந்து மின் வெட்டின் காரணமாகவும் ஏழு பதிவுகள் இடலாம் என்று எண்ணி இருந்ததில் ஆறு பதிவுகளே இட முடிந்தது.சரி தோழர்களே நான் ரசித்த சில பதிவுகளை சுட்டிக் காட்டிவிட்டு பின் விடை பெறுகிறேன்..
            கவிதை வாசிப்பவன் கற்பனையோடு தன்னை புகுத்திக் கொள்கிறான். கதை வாசிப்பவன் யூகத்திலேயே வாசிக்கிறான்.கட்டுரை வாசிப்பவன் யோசித்துக் கொண்டே வாசிக்கிறான். எதை வாசகன் வாசிக்கிறானோ அந்த மனநிலைக்கு அவனை கொண்டு செல்வது என்பது எழுத்தாளனின் கடமை. அப்படி நடக்குமாயின் அவன் எழுத்தில் வெற்றி பெற்றுவிட்டான் என்று அர்த்தம். கவிதையிலும் கதையிலும் கட்டுரையிலும் ஒரு வாசகனை திருப்தி படுத்தி விட முடிகிறது.ஆனால் நகைச்சுவை படைப்புகளை கொடுக்கும்போது அதை வாசிக்கும் வாசகன் சிரிக்க யோசித்தாலோ அல்லது சிரிக்க முடியாமல் திண்டாடினாலோ அந்த இடத்தில் அதை எழுதிய எழுத்தாளன் தோற்றுப் போகிறான்.
         எழுத்துகளால் வாசிப்பவனை சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமில்லை.அப்படி வாசிப்பவனை சிரிக்க வைக்கும் எழுத்தாளர்கள் குறைவே.நகைச் சுவையாய் எல்லோராலும் எழுதிவிட முடிவதில்லை.அப்படி நான் வலைப்பதிவில் வாசித்து சிரித்த சில பதிவுகளை சுட்டிக் காட்டுகிறேன்.
        தன் மனதில் தோன்றிய நகைச்சுவை ஆனாலும் சரி தான் படித்து ரசித்த நகைச்சுவை ஆனாலும் சரி அதை அழகாக நமக்கு பகிர்ந்தளிப்பதில் மிகவும் கெட்டிக்காரர் ஐயா சென்னை பித்தன் அவர்கள்..நகைச்சுவையோடு ஒரு கருத்தையும் முன் வைப்பது சிறப்பு. அவற்றுள் கீழ் காணும் இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்   மற்றும் சொர்கத்துக்கு போன ஜோடி போன்றவை சமீபத்தில் நான் ரசித்தது.
       பதிவுலகில் தான் பிரபலமாவது மட்டுமில்லாமல் தன் மனைவியையும் பிரபலப் படுத்திய பதிவர் யாரென்றால் அது தோழர் கணேஷ் அவர்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன்..அவரது எழுத்துகள் குறும்பையே சுமந்து வரும்..பன்முக எழுத்தாளரான அவர் பேய் கதை எழுதினால் கூட அதில் ஒரு நகைச்சுவை இழையோடுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் சரிதா செய்த ஷாப்பிங் மற்றும் சரிதாவின் சங்கீதம் போன்றவை நான் மிகவும் ரசித்தவை.
        மதிப்பிற்குரிய பதிவர் அம்பலத்தார் எழுதிய சொல்லாதே யாரும் கேட்டால் என்னை கவர்ந்ததில் ஒன்று அவரது எழுத்திலும் குறும்புகள் குதூகலிக்கும்.. .அவரது தமிழை வாசிக்கவும் சுவையாக இருக்கும்.
        காதலனுக்கு காதலியும் காதலிக்கு காதலனும் எழுதிய பல காதல் கடிதங்களை வாசித்திருக்கிறேன்.ஆனால் இந்தக் கடிதம் வாசித்ததும் உணமையில் ரசித்தேன் சிரித்தேன். நீங்களும் அந்த கடிதம் வாசித்து ரசிக்க சித்தாரா மகேஷின் சுவர் தேடும் சித்திரங்களில் ராக்கெட் விடுறவங்களுக்கு பதிவுக்கு செல்லுங்கள்.
         கவிதைகள் வாசிக்க ரேவாவின் பக்கங்களுக்கு சென்றபோது இந்த மனுசனைக் கட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே என்ற சகோதரி ரேவாவின் கலாட்டாவையும் ரசிக்க நேர்ந்தது.புன்னகைத்த படியேதான் வாசித்து முடித்தேன்.
         இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா வைத் தெரிந்து கொள்ள அதிரடிக்காரனை அணுகினேன்.அவர் சொன்ன பயோடேட்டாவை நினைத்து சிரிக்காமல் வேறென்ன செய்யமுடியும்.
         அப்படியே சிரித்துக் கொண்டு சோலை அழகுபுரம் சென்றால் நமது கிரிக்கெட் அணியின் போட்டோ கமெண்ட்ஸ் என்னை தொடர்ந்து சிரிக்க வைத்தது.
       ஆமாம் தோழர்களே..நேரமிருக்கும்போது பதிவுகளுக்கு சென்று சிரித்து வாருங்கள்.நான் உங்களிடம் இருந்து விடை பெறும் தருணம் வந்துவிட்டது.
         பதிவுலகில் வளர்ந்து வரும் நிலையில் என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக பதவி உயர்வு கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கும் தோழர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
       அதே சமயம் என்னை முதன் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சகோதரி ஷக்தி பிரபா அவர்களுக்கும் இரண்டாவது முறையாக என்னை வலைச்சரத்தில் சுட்டிக் காட்டிய ஐயா சென்னைப் பித்தன்  அவர்களுக்கும் மூன்றாவது முறையாக வலைச்சரத்தில் பெருமைப் படுத்திய வீடு சுரேஷ் அவர்களுக்கும் எனது அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

           என் பெயர் மதுமதி
           கவிதைகள் விளைந்து கிடக்கின்றன
           சிறுகதைகள் சிதறிக் கிடக்கின்றன
           கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்
           அனுபவங்களை அனுபவிக்கலாம்
           இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

            மேற்கண்ட பதிவுகளை தொடர்ந்து வாசித்து வாழ்த்து சொல்லி கருத்திட்டு இந்த வார ஆசிரியப் பணியை சிறப்பாக செய்து முடிக்க உற்சாகம் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிதனை சமர்ப்பிக்கிறேன்..எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் விடை பெறுகிறேன் என்று சொன்னால் மனதில் ஒரு ஓரமாய் சின்ன வருத்தம் இருக்கும் அப்படித்தான் எனக்குள்ளும் இருக்கிறது.

நன்றி..நன்றி..நன்றி..

                    மதுமதி
         தூரிகையின் தூறல்
          
மேலும் வாசிக்க...

Saturday, February 11, 2012

அனுபவங்களை அனுபவிக்கலாம்


அனுபவங்களை அனுபவிப்போம்
     
            வணக்கம் தோழர்களே..என்னதான் இந்த அவசர உலகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருந்தாலும் கடந்து வந்த பாதைகளை அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அப்படி அனுபவங்களை அசைபோட்டு பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
     'அ' ன்னா 'ஆ'வன்னா எழுதிப் பார்த்தது..அழுதுகொண்டே முதலாம் வகுப்பு போனது..என்று ஆரம்பித்து முதல் சினிமா,முதல் முத்தம் ,முதல் காதல்,முதல் சண்டை,காதல் தோல்வி,பெண் பார்க்கச் சென்றது,திருமண சுப நிகழ்வு,முதல் வேலைக்கு போனது,பிரியமானவர்களை இழந்தது என்று எத்தனையோ நிகழ்வுகள் இன்னும் பசுமை மாறாமல் மனதிற்குள்ளே குடியிருக்கும். அப்படியான நிகழ்வுகளை நாம் அதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவோம் அல்லது நண்பர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவர். சந்தோசமான விசயத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது நமது சந்தோசம் அதிகரிக்கிறது.அதே துக்கங்களை நண்பர்களிடம் பகிந்து கொள்ளும் போது நமது துக்கங்கள் குறைகிறது..
     முன்பெல்லாம் நண்பர்களை நேரில் பார்த்தால் மட்டுமே அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிலை இருந்தது. இப்போது நிலைமை தழைகீழ்..வலைப்பூ மூலமாக தன் கடந்த காலங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.  
       சரி தோழர்களே..நம் வலைப் பூ தோழர்களின் அனுபவங்களை நாமும் அனுபவிக்கலாம் வாருங்கள்.
        சென்னை பாரி முனையில் ஒரு வருந்ததக்க சம்பவம்.பள்ளி ஆசிரியையை மாணவன் கொலை செய்தான்.சாதாரணமாக இந்த செய்தியை எடுத்துக் கொள்ள முடியாது.மாணவன் ஏன் இப்படி செய்தான்.அவன் மனநிலம் பாதிக்கப் பட்டதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்தால் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் திரைப்படங்கள் தான் காரணம் என்கின்றனர்.திரைத் துறையினரே மாணவப் பருவத்தை சீர்குலைக்கும் கதைக் கருக்களை விட்டுவிட்டு 'பசங்க' போன்ற கதைகளை படமாக்கலாமே.
        ஆசிரியை மாணவனுக்கான உறவு இவ்வளவுதானா என்று நான் வேதனை பட்டபோது அன்புடன் நான் தோழர் கருணாகரசு அவர்கள் கண்ணீர் கரைந்த தருணம் என்று தலைப்பிட்டு தன் ஆசிரியை சுசீலாவின் பிரிவைத் தாங்காமல் கதறிய அனுபவத்தை கட்டுரையாகத் தந்துள்ளதை வாசித்தேன்.அன்றைய மாணவனுக்கும் இன்றைய மாணவனுக்கும் உள்ள வித்தியாசத்தை  உணர முடிந்தது.

       சமீபத்தில் தோழி ஹேமாவின் ‘உப்புமடச் சந்தி’க்குப் போய்ப் படித்தபோது, இந்தப் பதிவின் மூலம் என் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீரை வரவழைத்தார். அதுவரை நாம்தான் வாழ்க்கையில் நிறைய சோகத்தைச் சந்தித்தவன் என்று சுய இரக்கம் கொண்டிருந்த நான், தலையில் குட்டிக் கொண்டு, ‘இதில் பாதியைக் கூட நீ அனுபவித்ததில்லை.’ என்று ‌சொல்லி, சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.


      இப்படி தோழர் திரு.கணேஷ் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டிருக்க அப்பதிவை தவறவிட்ட நான் விரைந்தோடி வாசித்தேன்.அந்த அனுபவத்தின் தலைப்பு பாணும் பஞ்சமும் சிறீமா அம்மாவும் என்னால் பாதிக்கும் மேல் வாசிக்க முடியவில்லை.அப்படியே எழுத்துகளில் கண்கள் நிலை குத்தி நின்றன.மனிதருள் எத்தனை சோகங்கள்.நம்முடன் அதை பகிர்ந்து கொண்டதற்கு பிறகு அவர்களின் மனது கொஞ்சம் இலகுவாகியிருக்குமென நினைக்கிறேன்.
     
     சரி கணேஷ் அவர்கள் என்னதான் வாழ்க்கையில் அனுபவித்தார் என்று கேட்பது தெரிகிறது.அதற்குதான் அவர் ஒரு மாதத்திற்கு முன்பே தன் அனுபவங்களை எல்லாம் திரட்டி நடை வண்டிகள் என்று பெயரிட்டு தனது பத்திரிக்கை அனுபவங்களை சுவை பட சொல்லி வருகிறார்..வேகமாக சென்று நடைவண்டியில் துண்டைப் போட்டு இடத்தைப் பிடியுங்கள்.ஏற்கனவே அதில் பயணிக்கும் ஆட்கள் அதிகம்.

"உங்கள் காதலைக் கழற்றி இந்தப் பக்கத்தில் ஒட்டிவிட்டீர்கள் போல..இதை வாசிக்க வாசிக்க மீண்டும் ஒருமுறை காதல் வயப்படலாம் என்ற ஆசை எனை அறியாமல் எனக்குள் எழுகிறது.. 

.காதலை விட ....காதலைச் சொல்லாமல் தேக்கி வைத்திருப்பது நிஜமாகவே சுகம்தான்......

உண்மை தான் அந்த சுகம் காதலை சொன்ன பிறகு கிடைக்காது..

கயல்.கயல்..கயல்.."

   மேற்கண்ட வாறு நான் வாசித்த என்னைக் கவர்ந்த ஒரு சுகமான பதிவிற்கு சென்ற மாதம் கருத்திட்டு வந்தேன்.இந்த மாதம் காதல் மாதம் என்பதால்  சுவாசமே காதலாக என்ற தோழர் தேவாவின் காதல் அனுபவத்தை குறிப்பிடுகிறேன்.
        
        கோவையில் இருக்கும் எனது தோழர் மகி.ஈரம் மகேந்திரன் அவர்களின் அனுபவங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலே அவரின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆதரவற்றோருக்கெல்லாம் ஆதரவு கொடுப்பவர் மகேந்திரன்.
   'மத்தவங்களுக்கு நல்லது செய்யனும்' என்ற வாக்கியத்தை தாரக மந்திரமாக சொல்லிக் கொள்கிறார்.இவரின் அனுபவங்கள் காதலைச் சார்ந்ததோ சொந்தங்களை தொலைத்ததோ இல்லை.தொலைத்த சொந்தங்களையும் தொலைந்து போன சொந்தங்களையும் மீட்டுத் தந்ததுதான்.யார் அந்த மகேந்திரன்  வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

        ஒவ்வொருவரும் தனது பாட்டியையும் அவரோடு வாழ்ந்த சொற்ப காலங்களையும் அசை போட்டு பார்ப்பது வழக்கம்.அப்படித்தான் சகோதரி ராஜி தனக்கும் தன் பாட்டிக்குமான உறவை மீண்டும் ஒருமுறை பிறப்போமா என்ற தலைப்பின் கீழ் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.ஆரம்பத்தில் நகைச்சுவை இழையோடினாலும் இறுதியில் சோகம் படர்கிறது.

      அனுபவங்கள் பலவகை.அதில் ஒருவகை அமானுஷிய அனுபவம். சமீபத்தில் நான் அப்படியான் அனுபவத்தை வாசிக்க வாய்த்தது.அமானுஷ்யம்-சிறுகதையாகவும் இருக்கலாம் என்று தன் அனுபவப் பகிர்வுக்கு தலைபிட்டிருந்தார் திரு.ரமணி அவர்கள்.இரவு நேரத்தில் வாசித்தேன். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது..ஆதலால் நீங்கள் இப்போதே சென்று வாசியுங்கள்.
      
         2009/04/21
செவ்வாய்க்கிழமை.

      ஒவ்வொரு நாட்களையும்போலவே பொழுது விடியத்தொடங்கியது-பயந்து பயந்து.ஆனாலும்,அன்றையநாள் வழமையைவிட இன்னும் கொஞ்சம் துக்கமும் ரத்தமும் தோய்ந்தநாள்.20ஆம் திகதி அதிகாலையில் .... 
   இப்படி ஆரம்பித்து தன் நினைவேட்டின் அழிக்க முடியாத பக்கங்கள் எல்லாவற்றையும் அணு அணுவாய் விவரிக்கிறார் தோழர் சுவடுகள்.
ஐய்யகோ..இந்த அனுபவம் இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்றே வாசித்தவுடன் நமது மனம் சொல்லும்.

     ஒரு வங்கியாளர் தான் கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்க்கிறேன் என்கிறார்.அவரின் நினைவுகளை வாசித்தாலே போதும் அவரைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம் ..அனுபவங்களைக் கூட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 'தொடரும்' போட்டு முடிக்கலாம் என்பதை அவரின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன்..படிக்க படிக்க சுவையாகவும் நமக்கு ஒரு பாடமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.அந்த வங்கியாளர் வேறு யாருமில்லை.ஐயா வே.நடன சபாபதி அவர்கள்தான்.

       இருபது வயது இளைஞர்கள் தான் காதலின் புகழ் பாட வேண்டுமா அறுபது வயதினர் காதல் பற்றி பேசக்கூடாதா..காதலை பற்றிய கருத்தரங்கிற்கு அழைப்பு விடுக்கும் மூத்த குடிமகனைப் பார்த்து மண் பூத்த சாலையில்  ஆச்சர்யப் பட்டதை நினைவு கூறுகிறார் தோழர் விமலன்.

       இன்றைய வாசிப்பு பழக்கம் நம் வாரிசுகளிடம் இல்லாததற்கு காரணம் நம் பெற்றோர்களே.ஆம் அவர்கள் தான் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை  ஊட்ட வேண்டும் என்ற கருத்தை தன் அனுபவத்தினூடாக பெற்றோரியல் என்ற தலைப்பில் சொல்கிறார் வேதா இலங்காதிலகம்.. பெற்றோர்களே தவறாமல் இந்த பதிவை வாசியுங்கள்..வாரிசுகளை வாசிக்க வையுங்கள்.

நாளை..

இத்தோடு முடித்துக் கொள்கிறேன்


                            நன்றி..
         மீண்டும் சந்திப்போம்..
                 மதுமதி
     தூரிகையின் தூறல்


         
மேலும் வாசிக்க...

Friday, February 10, 2012

கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்

கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்


                 மொழி,இனம்,பண்பாடு,நாகரிகம், மனிதம்,  கலாச்சாரம் என்று பல்வகை தலைப்புகளில் இறந்த காலத்தில் மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை நமக்கு எடுத்துக்காட்டுவது பண்டைய நூல்கள் தான். அவை இன்றைய மனிதன் புரிந்து கொள்ள முடியாதபடி செய்யுள் வடிவிலே இருந்த காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் பிற்பாடு வந்த பல அறிஞர்கள் பொறுமையாகவும் ஆழ்ந்தும் வாசித்து பொருளுணர்ந்து வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ள உதவும் என்ற நோக்கோடு உரை எழுதி வைத்து மாண்டார்கள் என்பது நாம் அறிந்ததே.உதாரணத்திற்கு வள்ளுவப் பெருந்தகை ஈரடியில் சொன்ன செய்தி பரிமேலழகர் உரையின் வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடிந்தது. நாளடைவில் மனிதன் மனிதனுக்குச் சொல்லும் செய்திகளை இலக்கண விதிகளுக்கு உட்படாமல் அதே சமயம் இலக்கண பிழைகளும் ஏற்பட்டு விடாமல் பண்டைய தமிழ் வார்த்தைகளுக்கு இனமான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி சொல்ல வந்ததை எளிய நடையில் சொல்ல ஆரம்பித்தான். சுருக்கமாக சொல்ல வந்ததை கற்பனை கலந்து சொற்ப வரிகளில் சொல்வதை கவிதை என்கிறோம்.அதைபோல சொல்ல வந்ததில் சிறிதும் கற்பனை கலக்காது உள்ளது உள்ளபடி சொல்வதை கட்டுரை என்கிறோம். மனிதன் இறந்த காலத்தையோ எதிர்காலத்தையோ நிகழ்காலத்தையோ கட்டுரை வடிவில் சொன்னால் மட்டுமே வாசிப்போருக்கு சரியாய் விளங்கும். செய்திகளுக்கு ஆதாரமாக கதைகளோ கவிதைகளோ திகழாது கட்டுரைகளே திகழும்.வலைப்பதிவுகளில் பொதுவாக கட்டுரைகள் எழுதுவது பிரபலமான எழுத்தாளர்களே..ஏனென்றால் செய்திகளைச் சேகரித்து வார்த்தைகளை வரிசையாய் வைத்து கட்டும்போது பொருள் சிதறிவிடுமோ என்ற அச்சம் தான்..சொல்ல வந்ததை நேர்த்தியாக சொன்னாலே போதும்.ஏனோ நம்மில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் கதை கவிதைகளிலே ஆர்வம் செலுத்துகின்றனர். நாமும் கட்டுரை எழுத முயற்சிப்போம்.சரி தோழர்களே இன்று நான் சுட்டிக் காட்டப்போவது நம் வலைப்பதிவர்கள் எழுதிய கட்டுரைகளில் என் கண்ணில் பட்ட சில கட்டுரைகள்தான்..வாருங்கள் அந்த கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்.
    ஒரு விசயத்தைக் கற்றுக் கொண்டாலே அது கல்வியாகி விடுகிறது.ஆனால் கல்வியென்றாலே பெரும்பான்மையாய் நாம் பொருள்படுத்திக் கொள்வது பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி என்றுதான்.ஒருவனின் கல்வியென்பது அவனுக்கு மட்டும் சொந்தமாகி விடுவதில்லை.அது அவன் பிறந்த நாட்டுக்கும் சொந்தம் தான்.அக் கல்வியால் அவன் பயன்படுவதோடு  மட்டும் இல்லாமல் நாடும் பயன் பெற வேண்டும்.அப்படியானால் அவன் தரமானதொரு கல்வியை கற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
    இந்த நிலையில் எது விழுமியம் தரும் கல்வி என்று தான் எழுதிய கட்டுரையின் மூலம் கேள்வி எழுப்புகிறார் கல்விக்கான சிறப்பு வலையின் மூலம் மதுரை சரவணன்.


     உலகின் பெரிய ஜனநாயக நாடு ..உலக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு.. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.. வளர்ந்து வரும் வல்லரசு நாடுகளில் ஒன்று என்று நாம் நம் நாட்டை பெருமை படுத்தி பேசுகிறோம் ஆனால் நாட்டின் முக்கிய வாழ்வாதாரமே வேளாண்மை என்பதை நாம் பெருமையாக சொல்ல மறுக்கிறோம்.. வேளாண்துறையை அழிக்கும் தொழிற்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு வேளாண்துறைக்கு கொடுக்கிறதா என்று யோசித்தும் பார்க்க வேண்டும். இதையெல்லாம் யோசித்துதான்..முன்னாள் ஊழல் ஒழிப்பு ,கண்காணிப்பு ஆணையர் வேளாண்மையும் பெருந்தொழிலாக வேண்டும் என்கிறார்.

      மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று நாமும் சொல்லிக் கொண்டும் கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோம்..ஆனால் சொல்பவனும் மரம் வளர்ப்பதாய்த் தெரியவில்லை.அதைக் கேட்பவனும் மரம் வளர்ப்பதாய்த் தெரியவில்லை.ஆனால் முற்றிலும் இல்லையென்று சொல்லமுடியாது சிலர் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தாலும் சிலர் ஆங்காங்கே நட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.சரி அது இருக்கட்டும் மரங்களை வெட்டுங்கள் அவற்றை வளர விடவேண்டாம் என்கிறாரே மனதோடு மட்டும் கௌசல்யா..ஏன் எதற்கு வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

       ஒரு இனத்தைத் தாங்கிப் பிடிப்பதே கலாச்சாரமும் பண்பாடுதான் அப்படி அவை இரண்டும் சீரழியும்போது அந்த இனமும் சீரழியும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பதாய் எனக்குத்தோன்றவில்லை..
           கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம் பண்பாடு ஏன் இப்படி என்று கேட்கிறார் தோழர் தெக்கிக் காட்டான்.
         
           ஒரு இனம் தோன்றவேண்டுமென்றால் அதற்கு மொழிதான் அடித்தளமாக இருக்கும் அந்த இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறதென்றால் சொல்லவே தேவையில்லை மொழியும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.எவன் ஒருவன் தாய்நாட்டில் தாய்மொழி பேசுகிறானோ அவன் மொழிக்கு அழிவில்லை.

சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற அளவில் தாய்மொழி புறந்தள்ளப்பட்டு வரும் அவலமும் மறுக்கமுடியாத ஒன்று .

         என்று கோபப்பட்ட ஈரோடு கதிர் இனம் காக்க மொழி காப்போம் வாருங்கள் தமிழர்களே என்கிறார்


                 தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி பல தமிழர்களுக்கு தெரிவதில்லை என்பது தெரிந்துதான் தமிழ் நண்பர்கள் தமிழ்மொழியின் சிறப்பு என்ற கட்டுரையை பகிர்ந்திருக்கிறார்கள்.தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை.


                நாகரிகம் என்றாலே சிந்து சமவெளிதான் நினைவுக்கு வரும் அதைப் பற்றி எத்தனைப்பேருக்கு தெரியும் ..அதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா..அப்படியானால் சிந்து சமவெளி வரலாறு அறிந்து கொள்ள வழிப்போக்கனது உலகத்திற்கு செல்லுங்கள்.
                 
              உலகில் முதலாவதாக உருவான நூலகம் எதுவென்று தெரியுமா அதன் பின்னனி என்னவென்று தெரியுமா..தெரியாதவர்கள் உடனே வரலாற்று சுவடுகள் வாசியுங்கள்.வேலைக்காக கலந்துகொள்ளும் நேர்முகத்தேர்வில் இக்கேள்வியைக் கேட்டாலும் கேட்கலாம்.


              இந்த ஆண்டு கணித ஆண்டு என்று சொன்னதோடு விட்டு விடாமல் கணித மேதை ராமானுசரைப் பற்றியும் சுவையான சில தகவல்களையும் தன் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார் தோழர் முத்தரசு..


அடுத்த அறிமுகப் படலம்


   அனுபவங்களை அனுபவிக்கலாம்
               
                                நன்றி
                 மீண்டும் சந்திப்போம்..
                          மதுமதி

மேலும் வாசிக்க...

Thursday, February 9, 2012

சிறுகதைகள் சிதறிக் கிடக்கின்றன

        பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் இருந்த வீடுகளில் தவறாமல் கதை புத்தகங்கள் நிச்சயம் இருந்திருக்கும்.பொதுவாக பள்ளி பருவத்தில் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு கவிதைகளை ரசித்துப் படிக்க ஆரம்பித்து அப்படியே சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்து மாத நாவல் வரை வந்து அடுத்த கட்டமாக வரலாற்று புதினங்களை வாசிக்க முனைந்திருப்போம்.ஒவ்வொருவரின் வாசிப்பு பழக்கம் இப்படித்தான் வளர்ந்திருக்கும். இன்றைய காலத்தில் வளர்கின்ற குழந்தைகளுக்கு வாசிப்பது என்பதே என்னவென்று தெரியாமல் போய்விட்டது. அதன் அடையாளமாக எத்தனையோ வார இதழ்கள் மாத இதழ்கள் காணாமல் போய்விட்டன. நூலகங்கள் கூட ஓய்வு பெற்ற மூத்த குடிமகன்களின் குடிலாகத்தான் காட்சியளிக்கிறது.இளைய தலைமுறையினரை அங்கே காணமுடிவதில்லை.
         அவசர உலகத்தில் அவசரமாகத்தான் மனிதன் பயணித்துக் கொண்டு இருக்கிறான். இதன் விளைவு மனிதனுக்குள் இருந்த பொறுமை என்பது வெறுமையாகிவிட்டதுதான். சமூக வலைத் தளங்களின் மூலம் நொடியில் உலகைப் பார்த்து விடுகிறான் மனிதன்.பதினைந்து வருடங்களுக்கு முன்னாடி தொலைக்காட்சிகள் வீடுகளை ஆக்கிரமிப்பு செய்தபோதே படிக்க வாங்கி வைக்கப்பட்ட பல புத்தகங்கள் அலமாரியில் அனாதைகளாகத்தான் காட்சியளிக்க ஆரம்பித்தன.போதா குறைக்கு இணைய தளம் இல்லத்திற்குள் குடிபுகுந்தது கேட்கவா வேண்டும்.போட்டதைப் பார்க்கும் தொலைக்காட்களுக்கே அடிமையானவன் மனிதன்.வேண்டியதைத் தேடிப் பார்க்கும் இணையம் இருக்கும்போது எப்படி அலமாரியில் இருக்கும் புத்தகங்களின் மீது பார்வை படும்.இன்று ஒரு வார இதழையோ மாத இதழையோ வாசகர்களிடம் விற்பனை செய்வது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.அதனால் இன்று கடைகளில் விற்பனையாகிக்கொண்டு இருக்கிற சில இதழ்களும் இலக்கிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் மெதுவாக குறைத்து கல்லூரி இளசுகளின் படங்களையும் பேட்டிகளையும் பிரசுரக்கிறது.அப்படி செய்தால் தான் நமது இளசுகள் அந்த இதழ்களை  வாங்குகிறார்கள். தரமான சிறுகதைகளைத் தாங்கி வரும் இலக்கிய இதழ்கள் அன்றாடம் நூலகம் வரும் சொற்ப வாசகர்களை மட்டுமே அடைகிறது. தொலை தூர ரயில் பிரயாணத்திற்கு மட்டுமே கதைப் புத்தகங்கள் பயன்படுகின்றன்.ஆனால் ஒரு நிம்மதி என்னவென்றால் புதிய வாசகர்கள் தான் உருவாகவில்லையே தவிர பழைய வாசகர்கள் இணையத்தின் மூலம் தேடித் தேடி நிறைய விசயங்களை படித்து பயன் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்த ஒரு வாசகர் தினமும் திரட்டிகளின் வாயிலாக பல்வேறு வலைப்பூக்களுக்கு சென்று சிறுகதைகள வாசித்து வருகிறார்.என்ன முன்பு போல நேரமெடுத்து கதைகளை வாசிக்க முடிவதில்லை.ஒரு கதைக்கு பத்து நிமிடங்கள்தான் ஒதுக்க முடிகிறது.அப்படி ஒதுக்கிய பொழுதுகளில் சிறுகதைகளை மட்டுமே வாசிக்க முடிகிறது.
           ஆரம்பத்தில் வலைப்பதிவுகளில் சிறுகதைகள் அவ்வளவாக எழுதப்படவில்லை.இப்போது கணிசமான பதிவர்கள் எழுதுவருகிறாகள் காரணம் பல திரட்டிகள் சிறுகதை போட்டி வைத்து பதிவர்களை ஊக்குவிப்பதே.. சரி தோழர்களே நான் வலையுலகில் சுற்றி வந்தபோது நிறைய சிறுகதைகள் சிதறிக்கிடந்தன்.என் கண்ணில் பட்ட சிலவற்றை இங்கே ஒன்று சேர்க்கப் போகிறேன் வாசியுங்கள் .கருத்தை சொல்லுங்கள்.சிறுகதை எழுதுவோரை நீங்களும் ஊக்குவியுங்கள்..

           பெண்ணுக்கு திருமணம் என்பது எவ்வளவு கடினமானதோ அதைப்போல அவளுக்கு நல்ல கணவன் அமைவதும் கடினமானதுதான்.கணவன் சரியில்லாத மனைவிகளின் பாடு எப்படியிருக்கும்..இடுப்பில் கைக் குழந்தை.. பசியைப் போக்க கையாலாகாத கணவன்..என்ன செய்வாள் பெண்?.. என்ன வேண்டுமானாலும் செய்வாள். சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களின் நாயகி கமலம் என்ன செய்கிறாள் என்று கதம்ப உணர்வுகள் சென்று காணலாம்..

         கவலைகளும் இயலாமையும் மனிதனை ஆட்டிப்படைக்கும்போது அது மனிதனின் வாழ்நாளை தீர்மானிக்கும் சக்தியாகிவிடுகிறது. பொழுது விடியட்டும் என்று சொல்கிறார் தோழர் ஸ்டார்ஜன்.. போய்ப்பாருங்கள்  இருண்டு போன பெரும்பொழுது ஒன்று விடியவேயில்லை.
         பெண் பிள்ளைகளை ஈன்றெடுத்த நடுத்தர தாய்மார்களுக்கு தினம் தினம் கவலையைக் கொடுக்கும் ஒரு நிகழ்வு எதுவென்றால் அது செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் சொல்லும் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு நானூறு ரூபாய் ஏறியிருக்கிறது என்று சொல்லுவதுதான்.

ஆன்- லைன் வர்த்தகத்திலிருந்து தங்கத்தை நீக்க 
உலக நாடுகள் ஒரு மித்த முடிவு.
தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!
அமெரிக்கன் டாலர் தடாலடி உயர்வு!
பங்கு வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம்!

மீடியாக்களில் கடந்த சில தினங்களாக இவைகள்தாம் தலைப்புச்செய்திகள்.   
      என்று சகோதரி ஸாதிகா சொல்கிறார்.என்னவென்று கேட்டால் ஆமாம்
தங்கமே தங்கம்  என்கிறார். 

  "மனிதன் தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறரால் நிமிர்த்தி   வைக்கப்பட்டவனாக இருக்கக் கூடாது."
  என்று மார்க்ஸ் அரேலியன் சொன்ன பழமொழிக்கேற்ப ஒரு கதை படித்து இருக்கிறீர்களா..படித்து விட்டீர்களா..என்னது இல்லையா..அப்ப ஈரம் காய்ந்து போவதற்குள் தோழர் ரிஷபன் வலைப்பூவுக்கு போலாம் வாங்க.

   உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது. 
காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. 
 மேற்கண்டவாறு நான் சொல்லவில்லை தோழர்களே..ஐயா வை.கோபாலகிருஷ்ணன் தான் சொல்கிறார்.எங்கு சொன்னார் என்று கேட்கிறீர்களா ..ஒரு சிறுகதையில சொன்னாரு..என்ன,சிறுகதை எங்க இருக்குன்னு கேட்கறீங்களா அவரோட காதல் வங்கி யில இருக்கு.வேகமா போய்ப் பாருங்க.

       
       பழக்கமில்லை..சரியாய் வராது என்றால்..எப்போதுதான் பழகிக் கொள்வது எப்படி சரியாய் வரும்..செய்யச் செய்ய தானே எதுவும் சரியாய் வரும்..என்று உணர்ந்து கோவையிருந்து டெல்லி சென்று பீட்ஸா சீடை செய்ய ஆரம்பிக்கிறார் சகோ ஆதி வெங்கட்..சென்று சுவைத்து விட்டு கருத்து சொல்லி இன்னும் நிறைய படைக்கச் சொல்லுங்கள்.

          " மனுஷனை மனுஷனா மதிச்சு நேசிக்கணும். ரொம்ப சாதாரணம். மத்தவங்க நம்மள எப்படி நடத்தணும்னு நாம விரும்புறோமோ அப்படியே நாமளும் மத்தவங்கள நடத்தணும்"


முதல்ல மத்தவங்க மேல நேசம் வைக்கனும் .இதை வச்சு அற்புதமான சிறுகதை எழுதியிருக்கார் இளையபாரதம் சரண்.

                தோழர் அப்பாவி தங்கமணி வலைப்பூவிற்கு போனால் என்ன சத்தம் இந்த நேரம் பாட்டு பாடவில்லை.அவர் எழுதிய சிறுகதையின் தலைப்புதான் அது.விடுவேனா நானும் வாசிச்சேன்..உங்களுக்கு முகவரிய கொடுத்துடுறேன்.
               
"அப்ப்....பா.....ன்னு வெண்புரவி கத்த ஓடிப்போய் பார்த்தேன்..அங்க ரெண்டு அப்பாக்கள் ரெண்டு மகன்கள்..மனசுக்கு ஒண்ணு மகிழ்ச்சியா இருந்தது.இன்னொன்று அந்த மகிழ்ச்சியைப் பிடுங்கிக் கொண்டது.நீங்களும் போய்ப் பாருங்கள்.
               
 பாஸ்வேர்டு எதெற்கெல்லாம் பயன் படுத்தலாம் என்று ஓரளவிற்கு நம்மால் சொல்ல முடியும்..ஆனால் அனைத்திற்கும் பாஸ்வேர்டு வேணும் என்கிறார் வீடு சுரேஸ்.ஐம்பது வருங்களுக்கு பின்னால் நடப்பதாய் நல்ல கற்பனையோடு PASSWORD ஐ எழுதியிருக்கிறார்.அவசியம் வாசியுங்கள்.முடிவில் சின்னதாய் ஒரு நகைச்சுவை இழையோடும்..
---------------------------------------------------------------------
அடுத்த அறிமுகப் படலம்


      "கட்டுரைகளின் கட்டவிழ்க்கலாம்"


                                   நன்றி..
                      மீண்டும் சந்திப்போம்..
                                மதுமதி
                  தூரிகையின் தூறல்
மேலும் வாசிக்க...

Wednesday, February 8, 2012

க'விதை'கள் விளைந்து கிடக்கின்றன.

          என் பெயர் மதுமதி என்ற எனது அறிமுக படலத்தை வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்திய தோழமைகளுக்கு நன்றி..

க'விதை'கள் விளைந்து கிடக்கின்றன


          'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்றான் பாரதி. இப்போது பாரதி இருந்து வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பு ஏற்று பல வலைப்பூக்களுக்கு  பயணம் செய்திருந்தால் 'எங்கெங்கு காணினும் கவிதையடா' என்றுதான் சொல்லியிருப்பான் என்றே எனக்குத்தோன்றியது.பெரும்பான்மையான  வலைப்பூக்களில் கவிதைகளே பூத்துக் குலுங்குகின்றன என்று சொல்வதை விட நம் பதிவர்கள் விதைத்த க'விதை'கள் பதிவுலகமெங்கும் விளைந்து கிடக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்..என் கண்களுக்கு எட்டிய வரைக்கும் அறுவடை செய்திருக்கிறேன். வாருங்கள் ருசித்து பசி தீர்ப்போம்.
        உலகமொரு நாடக மேடை அதில் நாமெல்லாம் சாதாரண பாத்திரங்களே என்றான் சேக்ஸ்பியர். எப்போது வேண்டுமானாலும் போட்ட வேடம் கலையலாம்ம் என்று நன்றாகவே தெரிந்திருந்தாலும் வேடத்தைக்கட்டிக் கொண்டு மனிதன் போடுகின்ற ஆட்டம் அதிகம் தான்.அவசர உலத்தில் இயற்கையை மறந்து செயற்கையாய்த்தான் நாட்களை செலவு செய்து கொண்டு இருக்கிறான் மனிதன். நூறு பேரில் எத்தனை பேர் இயற்கையாக நகைக்கிறார்கள் என்றால் சொற்பம் தான்.ஆளைக் கண்டவுடன் புன்னகைக்க வேண்டுமே என்று அவசர அவசரமாக ஒரு புன்னகையை உற்பத்தி செய்து உதடுகளை பணித்து பற்களால் பகிர்ந்து கொள்கிறான்.கட்டளைக்குட்பட்டு பாவம் உதடுகள் நடிக்கிறது. நான் புன்னகை என்று சொன்னதைத்தான் பூச்சரம் தொடுக்கும் சகோதரி பூங்குழலி அதை இளிப்புகள் என்கிறார் அது மட்டுமா
"பல வேடதாரிகளின்
 மேடையாக இருக்கிறது
 காலம்
 பல்லிளுப்புகளும் பாசாங்குகளும்
 கடவு சீட்டாக"
          என்று ஆரம்பித்து தலைப்புகளை வகைப்படுத்துவது போல இளிப்புகளை வகைப்படுத்துகிறார்.

சகோதரி யசோதா காந்த்
           சாதாரண பெண்ணவளுக்கே பாதுகாப்பில்லாத போது பார்வையற்ற பெண்ணுக்கு என்ன பாதுகாப்பிருக்கப் போகிறது இந்த நாட்டில்.தனக்கேற்பட்ட பாதிப்பையே தனக்கு பாதுகாப்பாய் பயன்படுத்திக் கொள்கிறாள் அப்பெண் என்று வெளிச்சம் இட்டு காட்டுகிறார் எண்ணப் பறவைகள் சிறகடிக்க வண்ணவண்ண கனவுகளோடு விண்ணில் பறக்கும் சகோதரி இதமான அலைகள் யசோதாகாந்த்.
           ஆனாலும் அவரது தேடல் இன்னும் தீரவில்லை. போய்ப் பாருங்கள் அவரது தேடல் எதுவென்று..
                       
         கிராமத்தில் விதைத்து கிராமத்தில் விளைந்தது எல்லாம் நகரத்திற்கு வந்து சேர்கிறது..வந்து சேர்ந்தது எல்லாம் விளைந்த நிலத்திற்கு மீண்டும் திரும்புவதில்லை.விளைந்த பொருளுக்கு நகரத்தில் மதிப்பு கூடுகிறது.
தென்றல் சசிகலா
விளைவித்த நிலமோ இன்னும் மழையை எதிர்பார்த்தபடி வறண்டு போய்தான் கிடக்கிறது. கிராமத்தில் விதைத்து கிராமத்தில் விளைந்தது நகரத்திற்கு வந்தது என்பது பயிர்கள் மட்டுமல்ல தோழர்களே மனித உயிர்களும்தான்.விதைத்தது அவர்கள்..விளைந்தவன் அவன்.நகரத்திற்கு சென்றவனின் பாதங்கள் மீண்டும் கிராமம் வாராதா கண்கள் தன்னைப் பாராதா அம்மாவென உதடுகள் கூறாதா என்று மழையை எதிர்பார்க்கும் நிலம் போல அங்கே தாய்மை முதுமையில் முனகிக் கொண்டிருக்கிறது. குழந்தையை இளமை தாலாட்டியது.முதுமையை இளமை தாலாட்டுவது தானே முறை.அதைத்தான் தென்றல் சசிகலா முதுமையைத் தாலாட்டுங்கள் என்கிறார்.
       
சகோதரி திவ்யா@தேன்மொழி
         சமுதாயத்திற்காக வாழவில்லை நமக்காகத்தான் வாழ்கிறோம் என்கிறோம். நாம் என்றாலே சமுதாயம் என்றாகிவிடுகிறது. கணவனோடு சேர்ந்து வாழும்போது சுமங்கலி என்று சொல்லும் சமுதாயம் தன் கணவன் தன்னை விட்டு உயிர் துறந்த மறு கணமே அவளுக்கு கொடுக்கும் நினைவுப் பரிசு என்னவென்று அவருக்கான பாணியில் கடலூரில் இருந்து சொல்லுகிறார் வலையுலகத்தின் புது வரவு சகோதரி தேன்சிட்டு திவ்யா@தேன்மொழி..
            ஆணுக்குத்தான் அதிகாரம் பெண்ணுக்கல்ல என்று இந்த நூற்றாண்டிலும் ஆண்கள் சொல்லிக்கொண்டு இருப்பதையும் ஆணுக்குப் பெண் சரிநிகர்தான் என்று மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்குவதையும் கவனித்துக்கு கொண்டுதான் இருக்கிறோம். இருபாலரும் அதிகாரம் யாருக்கு என்று இங்கே அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூன்றாம் பாலொன்று அடிப்படை உரிமைகளுக்காகவும் சமுதாய அங்கீகாரத்திற்காகவும் போராடிக் கொண்டிருப்பதை ஏனோ எப்போதும் இவ்விருபாலரும் கண்டு கொள்வதில்லை அரசும் பொருட்படுத்திக் கொள்வதில்லை.   மரியாதைக்கு உரியவர்களை 'திரு' முன்னால் சேர்த்து அழைப்பது வழக்கம்..மூன்றாம் பாலினத்தாரை திருநங்கை என்றுதான் அழைக்கிறோம் ஆனாலும் அவர்களுக்கான மரியாதை என்னவோ மட்டுப்பட்டுத் தான் இருக்கிறது.. அர்த்தனாரி என்று அழைத்து சிவனிடம் சரணடைபவன் கூட திருநங்கையரை கேலிக்கும் கிண்டலுக்குதான் ஆளாக்குகிறான்.இதைக் கண்ட சகோதரி பேரொளிஎஸ்தர் சபி உறங்கியது போதும் விழித்தெழு திரு நங்கையே என்று எழுப்பி 
"இந்நாளில் அகிம்சை விடியாதம்மா
 வளையல் விற்று
 வாளை வாங்கி போராடம்மா" என்று புது இரத்தம் பாய்ச்சுகிறார்.


சகோதரி ஸ்ரவாணி
    அரசிடம் உதவி கேட்டு விண்ணப்பம் செய்வோம் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வோம் குழந்தையை பள்ளி சேர்க்க விண்ணப்பம் செய்வோம். ஆனால் தமிழ்க் கவிதைகள் தங்கச்சுரங்கம் சகோதரி ஸ்ரவாணி கணிப்பொறி வல்லுநர்களிடம் ஒரு மென்பொருள் கேட்டு சென்னையிலிருந்து விண்ணப்பம் செய்கிறார்.அது எதற்கான மென்பொருள் என்று தெரிய விண்ணப்பத்தை பிரித்துப் பாருங்கள்..
        அடடே..
        ஆகா..
        இனிமை.
   என்று அகர வரிசையில் பாராட்டு பெறும் அளவுக்கு சகோதரி ஸ்ரவாணி அகர வரிசை வெண்பாக்கள் எழுதியிருக்கிறார்.வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதியதால் என்னவோ நிறைய பார்வைகளை சந்திக்காமல் இருக்கின்றன வெண்பாக்கள்.இப்போது உங்கள் பார்வைகளை கொண்டு செல்லுங்கள் அகர வரிசை வெண்பாக்கள் ஆனந்தம் கொள்ளட்டும்..     

       பெறும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நமக்கானதல்ல..அவற்றை நமது  பெயர்தான் பெற்றுக்கொள்கிறதாம்.
"கிரீடமும்
முள்முடியும் உனக்கன்று
உன் பெயர்க்கே"
சகோதரி சக்தி

       என்று புதுச்சேரியில் பெயர் துறப்பு விழா வில் சொல்லுகிறார் 
சகோதரி குறள் சக்தி.

      "வானத்தை வசப்படுத்தி
       தனக்குள் வைத்திருக்க
       பறவைகளுக்கு 
       சின்ன சிறகுகள் போதாது
       அதைப்போல
       உன் காதலை வசப்படுத்தி வைக்க
       சின்ன இதயம் போதாமல் தவிக்கிறேன் என்று யாழ்ப்பாணத்திலிருந்து கதைக்கிறார் தோழி காதல் தேசம் மதிவதனி.


சகோதரி மதிவதனி


         "நிகழ்காலத்தின் நிலைவாயிலில் நின்று கொண்டு
         என்றேனும் ஓர் நாள் உறுதியாய் வரவிருக்கும்
         விமோசனத்துக்காக தவமிருக்கிறேன்..
         சாப விமோச்சனமோ பாவ விமோச்சனமோ அல்ல" 
ஆஸ்திரேலியாவிலிருந்து சொல்கிறார் சகோதரி கீதமஞ்சரி..
         இரவுக்கும் பகலுக்குமான அன்றாடப் போராட்டத்தைப்பத்தி புதியதொரு பாணியிலே உயிர்ப்பதும் மரிப்பதுமாய். என்று தலைப்பிட்டு தன் எழுதுகோலை எழுத பணிக்க அது சகோதரியிடம் வார்த்தைகளை வாங்கி இறைத்திருக்கிறது.போய்ப் பாருங்கள் கற்பனை கரை புரண்டு ஓடும்..

    அவசரத்தில் விடிந்த அதிகாலை யைப் பார்க்கிறான் ஒரு கவிஞன் அந்த கவிஞன் மூக்கிருந்தும் மூச்சுக் காற்று வாங்க அனுமதியில்லாத இனத்தில் பிறந்தவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிற கவி அழகன்.

தோழர் கவி அழகன்

"காலைப்பொழுதில் கடைக்கு சென்று
பாலும் வெதுப்பியும் வாங்கிவந்து
சூடாய் கோப்பி குடிக்கும்போது-அவள்
ஸ்பரிசமென்று நா உணர்ந்துகொள்ளும்" 

வெட்கம் இன்றி வெளிநாடு வந்து நினைத்துப் பார்க்கிறார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக என்னதான் ஒன்று திரண்டு மக்கள் போராடினாலும் பயங்கர வாதம் ஒடுங்கியபாடில்லை மக்கள் இரத்தம் சிந்ததுவது நின்றபாடில்லை.
  "மிருக வேட்டையாடி
    பசியாறினான்
   ஆதி மனிதன்.
   மனித வேட்டையாடி
   குஷியாகிறான்
   நவீன மனிதன்."
என்று தன் மனக்குமுறலை அபுதாபியிலிருந்து மனித ரத்தம் புகட்டாதீர்கள் என்று கவிதையாலே சொல்லி பயங்கரவாதிகளின் மேல் கோபம் கொள்ளும் ரியாஸ் தன் காதலியிடம் மழலையாகிறேன் என்கிறார்..
    தாலாட்டு கேட்டுதான் தமிழரெல்லோரும் வளர்ந்திருப்போம்..சேகர் தமிழிலே ஒரு தாலாட்டை சமீபத்தில் கேட்டேன்..
"தாய்மொழி நான் சொல்ல
கனிமொழி நீ பேச
தமிழ்மொழிதான் வளர
தாய்மொழி நீ கற்று
தரணி ஆள்வாய்

தமிழ் மகனே கண்ணுறங்கு"
என்று பாடி முடித்தவிதம் அருமை.தமிழ்த் தாய்மார்கள் இப்படி தாலாட்டினால் நான் தமிழன் என்ற உணர்வு குழந்தையின் ரத்தத்திலேயே ஊறிவிடும்..தன் தோழியைப் பார்த்து
"இவைகளை நினைத்தால்
 இமைகளும் வலிக்கினறன
 உடல்கள் நடுங்குகின்றன
 கண்கள் குளமாகின்றன"
தோழர் தனசேகர்
என்று புலம்பித் தள்ளுகின்றார் என்னாயிற்று என்று தெரியவில்லை.வாங்க தோழி யிடமே கேட்டு விடுவோம்.. 
 ------------------------------------------------------------
            முடிந்தவரை புதியவர்களையே திரட்ட முயற்சித்தேன்.இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.. அவர்களது பதிவிற்கு செல்லுங்கள் வாசித்து கருத்திடுங்கள்..நன்றி
.
அடுத்த அறிமுக படலம்


          "சிறுகதைகள் சிதறிக் கிடக்கின்றன"


                                    நன்றி...
                    மீண்டும் சந்திப்போம்..
                                மதுமதி
                  தூரிகையின் தூறல்

மேலும் வாசிக்க...

Monday, February 6, 2012

என் பெயர் மதுமதி


       வலையுலக வாசகத் தோழமைகளுக்கும் என்னை பின்தொடரும் தோழமைகளுக்கும் நான் பின் தொடரும் தோழமைகளுக்கும் எனது அன்பான  வணக்கம்.இந்த வார வலைச்சர ஆசிரியராக எனக்கு பதவி உயர்வு கொடுத்த திரு சீனா ஐயாவுக்கும் தோழர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் தமிழ் ப்ரியன் ஆகியோருக்கு நன்றி..

 என் பெயர் மதுமதி

"அதோ போகிறான் பார் அவன் பெயர் பெயர் மதுமதி"
       என்று நான் ஒரு பாதையில் செல்லும்போது எதிர்பாதையில் செல்ல எத்தனிக்கும் ஆயிரம் பேரில் யாரோ ஒருவர் என்னைச் சுட்டிக்காட்ட
வேண்டும்..அதுதான் இந்த உலகில் வாழ்வதற்கான அர்த்தம் என்று நினைப்பவனாக நாளடைவில் மாறிப்போனவன் நான்.. ஆனால் "என் பெயர் மதுமதி" என்று என்னை நானே சுட்டிக்கொள்ளும் படி தலைப்பிட்டிருக்கிறேன். அதற்கு காரணம் நான் மதுமதியென்று முதலில் நான் நம்ப வேண்டும். என்னை நான் சொல்ல வேண்டும்.. பிறகுதானே அவன் பெயர் மதுமதி என்று ஊர் சொல்லும்."நீ யாரென்று முதலில் நீ காட்டு பிறகு உன்னை யாரென்று ஊர் காட்டும்" என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வதுண்டு. படைப்பை படைக்கும் முன்னரே தான் ஒரு படைப்பாளி என்று தன்னைத் தானே பிரகடனப் படுத்திக்கொண்டால் தான் படைப்பே முழுமை பெறுகிறது..
       இதை எதற்கு ஆரம்பித்திலேயே குறிப்பிடுகிறேன் என்றால்  வலையுலகத்தில் வட்டமிட்டபோது நிறைய நல்ல கவிஞர்களையும் கட்டுரையாளர்களையும் காண முடிந்தது.. வலைப்பூ ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக கவிதையோ கட்டுரையோ எழுதிவிட முடியாது..
கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதலாம் என்று எண்ணியே வலைப்பூ   ஆரம்பிக்கிறோம் .. நல்ல கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் சில தோழர்கள்  இது கவிதை தானா என்று கருத்துரை வரும் வரை சந்தேகத் தோடே காத்திருக்கிறார்கள்.கவிதை மாதிரி என்று அதற்கு சிலர் தலைப்பிட்டிருக்கிறார்கள்.கவிதை தான் அதில் என்ன சந்தேகம்.. நாமே சந்தேகப்பட்டு அதை கவிதை மாதிரி என்று குறிப்பிட்டால் அதை வாசிக்க வருபவரின் மனதிலும் அது குடியேறும். அது கவிதை தான் என்று அதை படைத்தவன் முதலில் நம்ப வேண்டும்.அதன் பின்பே படிப்பவன் நம்புவான்..
           புதுக்கவிதைக்கு ஏது வரைமுறை.அது பன் முகங்களில் அல்லவா வெளிப்படும்.பொதுவாக இயற்கையையும் இன்ன பிற விசயங்களையும் ரசிப்பவன் படைப்பாளி ஆகிறான்.அப்படித்தான் நாமெல்லாம் படைப்பாளியாகியிருக்க முடியும்.ரசிப்புத் தன்மையும் ரசித்ததை அழகாக சொல்லும் தன்மையும் போதும் ஒரு நல்ல படைப்பாளிக்கு.படைப்பு என்பது அற்புதமான விசயம்.நான் படைப்பாளி என்று தன்னை முழுமையாக நம்பினவனே படைத்தலில் வென்றிருக்கிறான்.முதலில் நாம் படைப்பாளி என்று மார் தட்டுவோம் அந்த சத்தம் கேட்டு நமது படைப்புகள் எழுந்து நிற்கட்டும்..வலையுலகம் வந்த நாள் முதல் மனதில் இருந்தது. அதனால் சொல்லவேண்டியதாகி விட்டது.தவறிருப்பின் மன்னிக்கவும்.

நானும் என் தூரிகையும் அதன் தூறலும்..

           நான் என் தலையெழுத்தை நம்பாமல் என் கையெழுத்தை  நம்பிக்கொண்டிருப்பவன். திராவிடத்தந்தை பெரியாரை ஈன்றெடுத்த மஞ்சள் மாநரமாம் ஈரோட்டில் தான் எனது தாய் என்னையும் ஈன்றெடுத்தாள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்றேன்..

திராவிடத் தந்தை

           என் பள்ளிப்படிப்பு கிறித்தவப் பள்ளியில் தான் என்றாலும் ஐயா வீட்டின் அருகாமையில் பள்ளி இருந்ததனால் என்னவோ திராவிட கொள்கைகளைப் பின்பற்றியே வளர்ந்தேன்..ஐயாவின் வரலாற்றை அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டுமென ஆசைப்பட்டே ஈரோட்டு சூரியன்  என்ற தலைப்பில் எனது தளத்தில் கவிதை நடையில் ஐயாவின் வரலாற்றை எழுதி வருகிறேன். எளிமையான நடையில் வாசிக்க ஏதுவாக இருக்கும்.
"ஏனுங்க அம்மணி தெங்க போயிட்டாரு உங்கூட்டுக்காரரு"
"அதை யேனுங்க மாமா கேட்கறீங்க.நான் ஏதோ கோவத்துல நாலு வார்த்த சொல்லிப்போட்டேன்..எதிர்கட்சி தலைவரு விஜயகாந்த் மாதிரி கோவமா கோழி கூப்பட வூட்டவுட்டு வயலு பக்கமா போனாரு பழய சோத்துக்கு கூட இன்னும் வல்ல .அப்படியே வயக்காட்டு பக்கமா போனீங்கன்னா அம்மணி கூப்புடுதுன்னு அந்த மனுசங்கிட்ட சொல்லிப்போடுங்க மாமா"
"ஆமா அம்மணி நீ என்ன சொன்னாலும் மன்மோகன் சிங்கு மாதிரியே தலையாட்டிக்கிட்டே இருக்கனும்ங்குற. அவந்தான் என்ன பண்ணுவான்"
        இப்படி கொஞ்சிப் பேசும் கொங்குத் தமிழிலே எதார்த்தமாக அரசியல் கலந்திருக்கும்.இந்த பேச்சைத்தான் நானும் கற்றேன்..பேசினேன்.. வாசித்தேன்.. நேசித்தேன்.. சுவாசித்தேன்..கொங்கு தேசத்தின் மையமான ஈரோட்டில்தான் இப்படியான பேச்சுக்களை இன்னும் கேட்க முடியும்.அதை நீங்களும் கேட்க ஆசைபட்டுதான் வாராவாரம் அம்மணியும் சின்ராசும் நாட்டு நடப்பை அலசும் கொக்கரக்கோ எழுதி வருகிறேன்..
          பள்ளி பருவத்தில் எழுத ஆரம்பித்து ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டாலும் நான் பயின்ற கல்லூரி முதல்வர் மற்றும் பேராசியர்கள் போன்றோரின் ஊக்குவிப்பால் தான் என் எழுத்தை ஊர் அறிந்தது என்று சொல்லலாம்.
         ''தலையெழுத்திலோர் பிழையெழுத்து'' என்ற நூலை நான் பயின்ற ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியே பதித்து வெளியிட்டு என்னை கவிஞனென ஊருக்கு உரைத்தது.எங்கு சென்றாலும் என்னை அடையாளம் காட்டிய எனது கல்லூரிக்கு நன்றி சொல்வதை மறப்பதில்லை. நான் அவ்வப்போது வலையில் எழுதி வரும் கவிதைகளைக் காண செல்லும் வழி பூட்டியிருக்கிறது பூட்டைத் திறந்து உள்ளே நுழையுங்கள்..பூட்டு.
          நான் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர வாசகனாக இருந்து அவரைப் போலவே நாவல் எழுதும் ஆர்வம் ஏற்பட்டு முதலாவதாக எழுதிய "வந்துவிடு காயத்ரி"என்ற க்ரைம் கதையை பிரசுரம் செய்து என்னை மாத நாவலாசிரியராக அறிமுகம் செய்த குமுதம்-மாலைமதிக்கு இவ்வேளையில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ராணி முத்துவில் நான் எழுதிய உயிரைத் தின்று பசியாறு க்ரைம் நாவலை எனது வலையில் வாராவாரம் தொடராக எழுதி வருகிறேன்.இதுவரை நான்கு அத்தியாயங்கள் முடிந்திருக்கின்றன.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்

          என்று ஐயன் சொன்னதைப் போல என் தாய் என்னைக் காணும் காலங்கள் தான் ஓடிக் கொண்டேயிருக்கிறது.எட்டிப் பிடித்து விடலாம். எங்கே போய்விடப் போகிறது.எனக்கும் மற்றவர்களைப் போல பிரபலமான குறட்பாக்கள் மட்டும்தான் மனப்பாடமாகத் தெரியும்.ஆனாலும் ஐயன் சொன்னதைத் திருப்பி நானும் வள்ளுவக் கவிதை  என கவிதை நடையில் புரியும் வண்ணம் சொல்லிக் கொண்டுதானிருக்கிறேன்.

             இடையில் திரைப்படத்திற்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையை என்னிடம் வெளிப்படுத்திய எனது எழுதுகோல் என்னை திரைத்துறையை நோக்கித் துரத்தியது..சொந்த நடையில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான் சந்த நடைக்கு எழுத ஆயத்தமானேன்..மண்ணுலகை விட்டுச் சென்ற பாடகி சொர்ணலதா அவர்களின் குரலில்தான் என் முதல் திரைப்படப்பாடல் பதிவாகி வெளிவந்தது...மூன்று படங்கள் வெளிவந்து மூன்றும் தன் முகவரியை இழந்ததால் என் முகவரியும் தெரியாமற்போயிற்று.தற்போது நான்கு படங்களில் பணியாற்றி வருகிறேன்.வரட்டும் பார்ப்போம் வெற்றி எப்போது அரவணைக்கிறது என்று..
          நான் எழுதிய பாடல்களில் ஒரு பாடலின் இணைப்பை மட்டும் இங்கே தருகிறேன்.                                   தீபா மரியம் குரலில் எனது வரிகள் . ஒரே ஒரு வெற்றிப் பாடலைக் கொடுத்துவிட்டு இன்னும் அடையாளம் காணப்படாத படங்களில் நான் எழுதிய பாடல்களை அடையாளம் காட்டுகிறேன்.


          சோர்ந்து விழும்போதெல்லாம் மீசைக்காரனின் இந்த வரிகள்தான் புதிதாய் எம்மை பிறக்கச் செய்கிறது.

அடுத்த அறிமுகப் படலம்

"க'விதை'கள் விளைந்து கிடக்கின்றன"


                          நன்றி..
            மீண்டும் சந்திப்போம்..
                       மதுமதி  
         தூரிகையின் தூறல்  
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது