07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label முகிலன். Show all posts
Showing posts with label முகிலன். Show all posts

Sunday, January 30, 2011

டெத் ஓவர்ஸ்

கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது டெத் ஓவர்ஸ். அதாவது கடைசி 5-10 ஓவர்கள். ஃபீல்டிங் செய்யும் அணி களைத்துப் போயிருப்பார்கள் என்பதாலும் பந்து மிகவும் பழையதாகியிருக்கும் என்பதாலும் இந்த ஓவர்களில் சாதாரணமாக ரன் மழை பொழியும். இந்த ஓவர்களை குறைந்த ரன்கள் கொடுத்து வீச திறமையான பவுலர்களால்தான் முடியும்.

நான் ரசித்த திறமைசாலி பதிவர்களின் பதிவுகள் - பெரும்பாலும் பிரபலப் பதிவர்கள் - சிலவற்றைப் பார்ப்போம்.

வானம்பாடிகள் பாலா சார். இவர் எழுதும் கேரக்டர் பதிவுகள் புகழ்பெற்றவை. அதில் ஒன்று.

இரும்புத்திரை அரவிந்த். ஆணித்தரமாக விமர்சிக்கும் பதிவர்களில் ஒருவர். பாலுமகேந்திரா துவக்கியிருக்கும் பள்ளியைப் பற்றி எழுதிய விமர்சனம் ஒன்று.

நண்பர் ராஜநடராஜன். இவர் அரசியல் பார்வைகள் அசத்தலாக இருக்கும். அவற்றில் ஒன்று.

தண்டோரா மணிஜீ. இவர் தான் ஆணாதிக்கவாதியில்லை என்று அறிவித்த இடுகை.

நியுஜெர்சி நசரேயன். பிரிக்க முடியாதது என்று தருமி சிவபெருமானிடம் இப்போது கேட்டாரானால் நசரேயனும் எழுத்துப் பிழையும் என்று சொல்லுவார். எழுத்துப் பிழை இருந்தாலும் கருத்துப் பிழை இல்லாத ஆள் நசரேயன். அவர் எழுதிய பகடி ஒன்று.

டெக்ஸாஸ் கண்ட சோழன் குடுகுடுப்பை. பகடி செய்வது இவருக்குக் கை வந்த கலை. இவர் எழுதிய ஹிஸ்டரி ஃபிக்‌ஷன் ஒன்று.

நர்சிம். யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் என்ற வரிகளைத்தன் தளத்தில் பகிர்ந்திருப்பவர். அதற்கேற்றபடி எழுதியும் வருபவர். இவரது நடை பல இடுகைகளில் எனக்கு சுஜாதாவை நினைவுபடுத்தியிருக்கிறது. கிரிக்கெட்டைப் பற்றி இவர் சுழற்றிய ரீவைண்ட் இங்கே.

பலாபட்டறை ஷங்கர். கவிதை, கதை, தொகுப்புகள், புகைப்படங்கள், வரைந்த படங்கள், விமர்சனங்கள் என்று அனைத்து வகைகளையும் தொட்டுப் பார்ப்பவர். கேபிள் சங்கரின் புத்தகத்துக்கு இவர் எழுதிய விமர்சனத்தைப் படித்துவிட்டு கேபிள் மயங்கிவிட்டதாகப் பேச்சு. எனக்கு மிகவும் பிடித்தது இவர் எழுதிய ஏழாம் உலகம் விமர்சனம்.

எனக்கு ஒரு வாரம் வலைச்சரத்தில் இடம் கொடுத்த வலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கும், நான் எழுதிய பிதற்றல்களை வாசித்துவந்த வலைச்சர வாசகர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
மேலும் வாசிக்க...

Saturday, January 29, 2011

ஸ்பின் பவுலிங்

வணக்கம் நண்பர்களே! 


எனக்கும் கிரிக்கெட் தொடருக்கும் ஒரு ராசி. வழக்கமாக எழுத ஆரம்பித்து சூடு பிடித்துப் போகும்போது வேறு எதாவது ஒரு பிரச்சனை வந்து என் எழுத்துகளுக்குத் தடை போடும். அதுபோல இப்போது ட்விட்டர் தளத்தில் தமிழ் ட்விட்டர்கள் முன்னெடுத்து நடத்தும் கீச்சுப் புரட்சி #tnfisherman. தமிழ் பேசும் இந்திய மீனவர்களை நடுக்கடலில் தாக்கி சுட்டும் கழுத்தை இறுக்கியும் கொலை செய்கிறது சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் சிங்களக் கடற்படை. இந்தச் செயலை கை கட்டி வேடிக்கை பார்க்கின்றன தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய அரசும் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக அரசும். பத்திரிக்கைகளும் இதைப் பற்றி எட்டாவது பக்கத்தில் எட்டு வரிகளுக்குள் செய்தி வெளியிட்டு மறந்துவிட்டன. டாஸ்மாக்கில் ஸ்ட்ராங்க் பியருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதெல்லாம் தலைப்புச்செய்தியாக்கும் எச்சைப் பொறுக்கி பத்திரிகைகளுக்கு இதெல்லாம் முக்கியமே இல்லை. இதில் லங்கா ரத்னா ராமின் தி இந்து பத்திரிகையில் சிங்கள ஜால்ரா அமெரிக்கா வரை கேட்கிறது.


இணையத்தில் ட்விட்டும் தமிழர்களில் பெரும்பாலானோருக்கு அறிமுகமான பெயர் டிபிசிடி. இவர் முன்னெடுத்த இயக்கமே #tnfisherman. இவரது வேண்டுகோளைத் தொடர்ந்து மற்ற டிவிட்டர்களும் இந்திய, இலங்கை, தமிழக அரசுகளையும் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும் கண்டித்து டிவிட்டித் தள்ளிவிட்டார்கள். இரண்டு நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாக இருந்த இந்த #tnfisherman ஐ வெள்ளி இரவு 9-10 மணிக்குப் பேசி வைத்து ட்விட்டுகளாகத் தட்டித் தள்ளி உலக அளவில் முதலிடத்துக்குக் கொண்டு வந்து விட்டார்கள். முதலில் சும்மா வெட்டிப் போராட்டம் என்று புறந்தள்ளிய பலரும் பின்னர் இதில் குதித்தது ஆச்சர்யப் படத்தக்கதாய் இருந்தது. 


மீனவர் படுகொலைக்கு மன்னிப்பையும் இனி இது போல் நடக்காது என்ற உத்தரவாதத்தையும், கடந்த இரண்டு படுகொலைகளை நிகழ்த்திய கடற்படையினருக்கு தண்டனையையும் தரும் வரை இந்தப் போராட்டம் தொடரும். உங்களுக்கு டிவிட்டர் கணக்கு இருந்தால் நீங்களும் #tnfisherman என்ற டேகை இணைத்து ட்விட்டுங்கள். கணக்கில்லையென்றால் கணக்கைத் தொடங்கி ட்விட்டுங்கள். 

ஃபாஸ்ட் பவுலிங் பத்தி நேத்து பார்த்தோம். மிடில் ஓவர்ஸ்ல ஃபாஸ்ட் பவுலரை மட்டுமே நம்பிக்கிட்டு இருக்க முடியாது. ஸ்பின் பவுலிங் வேணும். ஒரு வேளை ஃபாஸ்ட் பவுலர்ஸ் ரொம்ப டைட்டா பவுலிங் போட்டுட்டாங்க, ரன் ஏறலை அதே சமயத்துல விக்கெட்டும் விழலைன்னு வச்சிக்கோங்க. டக்குனு ஒரு ஸ்பின்னரை உள்ள விட்டா அந்த பவுலிங்கை அடிக்க நினைப்பாங்க. அவுட்டாகிடுவாங்க. நிறைய பார்ட் டைம் பவுலர்ஸ் பார்ட்னர்ஷிப் ப்ரேக்கர்னு பேர் வாங்க இந்த சைக்காலஜி ஒரு காரணம்.

இந்த ஸ்பின் பவுலிங் இருக்கே, இதை ஆடுறது ரொம்பக் கஷ்டம். சப் காண்டினெண்ட் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ்) தவிர மற்ற நாட்டு ப்ளேயர்ஸ் ஸ்பின் ஆடத் திணறுவாங்க. பெரும்பாலும் ஸ்வீப் ஷாட்தான் ஆடுவாங்க. பந்து எந்தப் பக்கம் திரும்பும்னு பவுலர் கைய ரீட் பண்ணி பேட் பண்றதே ஒரு பெரிய கலை.

எழுத்துல என்னைப் பொறுத்த வரைக்கும் கவிதைங்கிறது ஸ்பின் பவுலிங் மாதிரி. குறிப்பா பின் நவீனத்துவக் கவிதைகள். அரைகுறையா இருக்கிற மாதிரி இருக்கும். கவிஞர் ஒரு மனநிலைல எழுதியிருப்பாங்க. நாம வேற மனநிலைல வாசிச்சா அது வேற ஒரு அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படிப்பட்ட கவிதைப் பதிவுகளைத்தான் இன்னைக்கிப் பார்க்கப் போறோம்.

முதல்ல பார்க்கப் போற வலைப்பதிவு - உதிரும் சருகுகள். ஆதி அப்பிடிங்கிறவர் தலைப்பே இல்லாத கவிதைன்னு அசத்தறாரு.

அடுத்தவரு நம்ம பக்கத்தூர்க்காரரு. சாத்தூர் மாய்க்கானு செல்லமா அழைக்கப்படுற இராமசாமி. அயல்நாட்டுல இருந்துட்டு நாடு திரும்பினதும் பெரும்பாலானவங்களுக்கு வர்ற உணர்வை இங்க அழகா சொல்லியிருக்காரு. ஊர் ஊரா சுத்தற சேல்ஸ் ரெப் மாதிரி வேலையில இருக்கிறவங்களோட நிலமையை இங்கே வலிக்கிற மாதிரி சொல்லியிருக்காரு.

யார் மேலயாவது கோவம் வந்தா சட்டுனு எதையாவது சொல்லிடறோம். ஆனா அது அவங்களை எந்த அளவுக்கு பாதிக்கும்னு நாம யோசிக்கிறதில்லை. வள்ளுவர் தீயினாற் சுட்ட புண்ணுள்ளாறும்னு திருக்குறள் எல்லாம் எழுதியும் நாம யோசிக்கறதில்லை. தமிழ் காதலன் சொல்லியா கேக்கப் போறோம்?

இவருக்கு என் பேருங்கிறதால நான் இங்க இவரை அறிமுகப் படுத்தலை. இவர் எழுதிய இந்தக் கவிதைல இருக்கிற சந்த நயமும் வார்த்தை அலங்காரமும்தான் இவரை இங்க பகிரத் தூண்டியது.

இவர கூகுள் பஸ்ல இருந்து பழக்கம். இந்தக் கவிதையில அவர் போட்டிருக்கிற படம் போல கத்தியால குத்துறது மாதிரி கவிதை எழுதுறதுல மன்னன் இந்த போகன். கவிதை மட்டுமல்ல நறுக்குன்னு நாக்கைப் புடிங்கிக்கிற மாதிரி கட்டுரைகளும் எழுதுவாரு.


இன்றைய அறிமுகங்கள் அவ்வளவுதான். நாளை நான் நமக்கெல்லாம் நல்லா அறிமுகமான சில பதிவர்கள் எழுதினதுல எனக்குப் பிடிச்ச பதிவுகளை பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். நன்றி. 
மேலும் வாசிக்க...

Friday, January 28, 2011

பே(p)ஸ் பவுலிங்

லஞ்ச் ப்ரேக் முடிஞ்சது. அடுத்து ஃபீல்டிங் எறங்க வேண்டியதுதானே? 

பேஸ் பவுலிங்க்னா ஃபாஸ்ட் பவுலிங். ஒரு டீமுக்கு ஃபாஸ்ட் பவுலிங் நல்லா இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நம்ம இந்திய கிரிக்கெட் டீம்ல ஒரு காலகட்டத்துல நல்ல ஃபாஸ்ட் பவுலர்ஸே கிடையாது. மீடியம் பேஸ் மட்டும் போட்டுட்டு அதுக்கப்புறம் ஸ்பின் வச்சே ஒப்பேத்துவாங்க. இப்பத்தான் கொஞ்சம் `ஃபாஸ்ட் பவுலர்ஸ் இந்தியா டீம்ல வந்திருக்காங்க.

ஃபாஸ்ட் பவுலிங்க்ல முக்கியமானது aggression. எதிர்ல பேட்டிங் செய்யறது பெரிய பேட்ஸ்மேன். பெஸ்ட் பேட்ஸ்மேன் அப்பிடின்னு எல்லாம் பாக்காம தைரியமா பவுலிங் பொடணும். மூஞ்சிக்கு நேரா பவுன்ஸர் போடவும் தெரியணும், காலைக்குறி வச்சி யார்க்கர் போடவும் தெரியணும். 

பதிவுலகத்துல ஃபாஸ்ட் பவுலிங்க்னா அது அரசியல் விமர்சனப் பதிவுகள் தான். யாரை விமர்சிக்கிறோம், அவங்க பெரிய ஆள்னு எல்லாம் யோசிக்காம எழுதணும். அப்படி எழுதுற பதிவர்களைத்தான் இன்னைக்கி பார்க்கப் போறோம். 

முதல்ல நாம பார்க்கப் போறது ஒரு மயிலாடுதுறைவாசி. இவரோட புனைப்பெயர் கொக்கரக்கோ. அபி அப்பா போல இவரும் ஒரு திமுக விசுவாசி மாதிரி காணப்படுறார். விவசாயம் பத்தி இவர் எழுதின பதிவு எனக்கெல்லம் நிறைய கற்றுக் கொடுக்குது. ஜெயிக்க என்ன செய்யணும்னு ஜெயலலிதாவுக்கு இவர் அட்வைஸும் கொடுக்கிறார். 

அடுத்ததா நாம பார்க்கப் போறது சங்கர் குருசாமி. இவர் தோழர்கள் ஆளும் கொல்கத்தாவுல வேலை பார்த்து வர்றார். பவுன்ஸர் போடுற ஃபாஸ்ட் பவுலர் இவர். இவர் போட்ட பவுன்ஸர்ல ஒண்ணு நமக்கு நாடாளுமன்றம் தேவயான்னு கேக்குது. மத்த சில பதிவர்களை மாதிரி புகார் மட்டும் சொல்லாம கொஞ்சம் யோசனைகளையும் குடுக்குறார். அப்பிடி இவர் சொன்னது அரசு மருத்துவமனைகளைப் பற்றி. 

அடுத்ததா பார்க்கப் போற இந்தப் பதிவர் பேரு இரா.சிவானந்தன். ஒரு படத்துல ராதிகா வெளிய பொழைக்க முடியாம ஜெயிலுக்குப் போனா சாப்பாடு கிடைக்குதுன்னு எல்லா கேஸையும் தன் மேல போட்டுக்கிட்டு ஜெயிலுக்குப் போவாங்க. அது மாதிரி இவர் வெளிய எதோ கஷ்டத்துக்காக ஜெயிலுக்குப் போயிட்டா நிம்மதின்னு நினைச்சி வேணும்னே ஒரு தப்பு செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போயி மீண்டிருக்காரு. தன்னோட சிறை அனுபவங்களையும், அது சார்ந்த சில செய்திகளையும் தன்னோட பதிவுல எழுதிட்டு வர்றாரு. நம்ம போலீஸும், அரசாங்கமும் பயமுறுத்துற குண்டர் சட்டத்தைப் பத்தி எழுதியிருக்காரு. தன்னோட சிறை அனுபவங்களைத் தொடரா எழுதி வர்றது இங்க

அடுத்ததா நாம பார்க்கப் போறவர் பேரு அன்பு. பெண்களூர்ல வாசம் செய்யறாரு. சமீபத்துல பெங்களூர்ல நடந்த பந்த் தேவயான்னு கேக்கறாரு. நடிகர்கள் அரசியலுக்கு வந்தா எடுபடுமான்னும் அலசறாரு. பெங்களூர்ல ஒரு கோவில்ல மனு தர்மத்தை அமல்படுத்துகிற மாதிரி இருக்கிற ஒரு சடங்கையும் சாடுறாரு. 

அடுத்ததா பார்க்கப் போறது ரதி. இவங்க இலங்கையைச் சேர்ந்த பதிவர். தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களையும், ஈழக் குழந்தைகளின் நிலையையும் அருமையா எழுதியிருக்காங்க. ஒரு இனத்தை அழிப்பதற்காக அந்த இனத்தின் இலக்கியத்தை அழித்த ஒரு இனம் ஆளும் மண்ணில் இலக்கியத் திருவிழா நடத்துறது சரியான்னு கேள்வி கேட்டிருக்காங்க. 

அடுத்ததா நாம பார்க்கப் போறதும் ஒரு இலங்கைப் பதிவர்தான். கிருத்திகன் குமாரசுவாமி, இப்ப வசிக்கிறது கனடாவில. இவர் 2009ல இருந்து எழுதிட்டு வந்தாலும் கடந்த வருடத்தில இருந்து ரொம்ப குறைவாத்தான் எழுதறாரு. ஆனா, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுங்கிற மாதிரி இவர் எழுதறதெல்லாம் நறுக்குன்னு தான் இருக்கும். புலம்பெயர்ந்த சில தமிழர்கள் வாழ்வு நிலையையும் அவங்க இன்னைக்கி இருக்கிற இலங்கையை எப்பிடிப் பார்க்கிறாங்கன்னும் அவர் எழுதியிருக்கிற இந்தப் பதிவோட கடைசிப் பாராவை படிச்சி கலங்காத கண்ணுல உயிரில்லைன்னு சொல்லுவேன். மன்மதன் அம்பு படத்துல ஒரு சர்ச்சையா சொல்லப்படுறது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் பாத்திரத்தைக் கமல் படைச்ச விதமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற வசனமும். அதைப்பத்தி இவர்  சினிமா என்ற தளத்தை பொருளாதாரத்தையும், ஈழத்தமிழர் நுகர்வதற்கு இந்திய சினிமாவுக்குப் போட்டி போடும் அளவுக்கு ஈழத் தமிழ் சினிமா உலகம் என்று ஒன்று இல்லாததையும் வச்சி எழுதின அலசல் கட்டுரை உண்மையிலேயே அசத்தல்.

இன்னைக்கி பேஸ் பவுலர்ஸ் அவ்வளவு தான். நாளைக்கி வேறு ஒரு வித்தியாசமான கலக்‌ஷனோட உங்களை சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் முகிலன். :))
மேலும் வாசிக்க...

Thursday, January 27, 2011

லன்ச் ப்ரேக்

ஒன் டே மேட்ச்ல ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிஞ்சதும் லஞ்ச் ப்ரேக். (டே நைட் மேட்ச்னா டின்னர் ப்ரேக்). இந்த லஞ்ச் ப்ரேக்ல வயிறு முட்ட சாப்பிடாம சத்தா, பசி அடங்குற அளவுக்கு சாப்பிடுவாங்க. அப்போதான் அடுத்ததா ஃபீல்டிங்கோ பேட்டிங்கோ செய்ய முடியும்.

இன்னைக்கி நாம பார்க்க போறது சமையல் பதிவுகளேதான். (உண்மையிலேயே புதிய சமையல் பதிவர்களைக் கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். எழுதுற ஆட்கள் எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்களா இருக்காங்க).

இந்த பதிவர் கோவையில வளர்ந்து திருமணத்துக்குப் பிறகு தில்லியில வாசமாம். அதுனால இவங்க வலைப்பதிவுக்குப் பேரே கோவை2தில்லி. முதல்ல சப்பாத்தியைச் சுட்டுப் போட்டுட்டு அப்புறம் அதுக்குத் தொட்டுக்க பாலக் பனீரும், சோலே மசாலாவும் வச்சிருக்காங்க. இவங்க சமையல் பதிவுதான் எழுதுறாங்கன்னு நினைக்காதீங்க. இப்பிடி ஆன்மிகச் சுற்றுப் பயணம் கூட கூட்டிட்டிப் போவாங்க.

அடுத்ததா நாம பாக்கப் போற அனுவுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். நான் புளூரல். இவங்க சிங்குலர். ஆமாங்க, இவங்க வலைப்பதிவுக்குப் பேரு பிதற்றல். சிக்கன் குருமா, சிக்கன் குழம்பு, சிக்கன் வருவல் எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். சிக்கன் பொரியல் கேள்விப்பட்டிருக்கீங்களா? இவங்க செஞ்சே காட்டியிருக்காங்க. இவங்க ஆங்கிலத்திலயும் சில சமையல் குறிப்புகள் எழுதியிருக்காங்க. சமையல் குறிப்புகள் தவிர சில சிறுகதைகளும் எழுதியிருக்காங்க.

அம்மா கொடநாட்டுல ரெஸ்ட் எடுக்கப் போனா இவங்க கொட நாடு பரோட்ட செய்யறது எப்பிடின்னு சொல்லித்தராங்க. இவங்களும் சமையல் குறிப்பு மட்டும் எழுதறதில்லை.

சப்பாத்தி, சிக்கன், பரோட்டான்னு சாப்டாச்சி. கொஞ்சம் டெஸர்ட் சாப்பிட வேண்டாமா? இங்க மிடில் கிளாஸ் மாதவி பொங்கல் அன்னைக்கி ஆங்கிலக் காய்கறியான கேரட்டைப் போட்டு கீர் செய்யறது எப்படின்னு சொல்லியிருக்காங்க.

கீர் குடிச்சாச்சி. ஒரு ஸ்வீட் சாப்ட்டுட்டா லஞ்ச் திருப்திகரமா முடிஞ்சிரும் இல்லையா? இங்க புவனேஸ்வரி ராமநாதன் அவல் பர்ஃபி செய்யறது எப்படின்னு சொல்லியிருக்காங்க. ஸ்வீட்டோட கொஞ்சம் காரமும் வேணும்னு நினைக்கிறவங்களுக்காக கதம்ப முறுக்கும் இருக்கு.

கொஞ்சம் ஹெவியான சாப்பாடுதான். நமக்கென்ன கவலை நாம என்ன கிரிக்கெட் விளையாடவா போறோம். பாக்கத்தானே போறோம்.

இன்னொரு வித்தியாசமான பதார்த்தத்துக்கான சமையல் குறிப்பு இங்க இருக்கு. இதைச் சாப்டுட்டு உங்க வயிறுக்கு எதாவது ஆச்சின்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.

நாளை இன்னும் கொஞ்சம் பதிவுகளோட உங்களைச் சந்திக்கிறேன். நன்றி
மேலும் வாசிக்க...

Wednesday, January 26, 2011

ஸ்லாக்கிங் அல்லது பேட்டிங் பவர்ப்ளே

எப்பிடி மிடில் ஆர்டர் விக்கெட் இழக்காம நிதானமா அதே நேரத்தில ரன் ரேட்டும் குறையாம ரன் எடுக்கிறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் பேட்டிங் பவர்ப்ளேயை செலக்ட் பண்றதும், கடைசி பத்து ஓவர்ல அதிரடியா ரன் குவிக்கிறதும்.

ஸ்லாக்கிங் (Slogging) அப்பிடிங்கிற வார்த்தைக்கு கன்னா பின்னான்னு சுத்துறது அப்பிடிங்கிற அர்த்தம் வந்தாலும், உண்மையில டெக்னிக் இல்லைன்னா ரொம்ப நேரம் நிக்க முடியாது. யூசுஃப் பதான், ஷாஹித் அஃப்ரிதி இவங்க எல்லாம் அருமையான ஸ்லாக் ஓவர் பேட்ஸ்மென்.

அதே மாதிரிதான் கிரிக்கெட் போன்ற விளையாட்டு பதிவு எழுதுறதும். குறிப்பா கிரிக்கெட் பத்தி எழுதினா அதிகம் பேர் படிப்பாங்கன்னாலும், டெக்னிக் தெரியாம சும்மா கும்மியடிச்சா ரொம்ப நாளைக்கி நிலைக்க முடியாது. கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க. இன்னைக்கி நாம பாக்கப்போறது கிரிக்கெட் இடுகைகளே..

முதல்ல நாம பார்க்கப் போறது விசு. இவர் ஒரு மாணவராம். இன்னும் இரண்டு வலைப்பதிவுகள் வச்சிருக்காரு. அதிலும் கிரிக்கெட் பத்தியே இருக்கு. இந்த இடுகையில 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில இந்திய அணியோட வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு, அணியின் ஒவ்வொரு வீரர்களோட பலம் எது பலவீனம் எதுன்னு அலசியிருக்காரு.

மழையால பாதிக்கப் படுற ஒரு நாள்/ 20-20 போட்டிகள்ல நாம கேள்விப்படுற ஒரு சொல் டக்வொர்த்-லூயிஸ் முறை. அப்பிடின்னா என்னான்னு இங்க சொல்றாரு கவிதை வீதி சௌந்தர். இவர் ரொம்ப நாளா எழுதிக்கிட்டு இருக்காரு. இருந்தாலும் இந்த இடுகை எனக்கு ரொம்பப் பிடிச்சதால இங்க பகிர்றேன்.

இலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியைக் கண்டாலே பிடிக்காது. ஆனாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் இந்திய அணியின் ரசிகர்களா இருக்காங்க. ஏன் அப்பிடின்னு நான் ரொம்ப நாள் யோசிச்சிருக்கேன். இவர் சொல்றாரு அதுக்கு பதிலை. இவர் பேர் கந்தசாமி. அக்டோபர் 2010ல இருந்து ப்ளாகிக்கிட்டு இருக்காரு.

இவரைப் பத்தி சொல்லியே ஆகணும். இவரோட புனைப்பெயர் புளியங்குடி. மொத்தம் மூணு வலைப்பதிவுகள் வச்சிருந்தாலும் நாம இங்க பாக்கப்போறது இவரோட கிரிக்கெட் சம்மந்தமான ஐபிஎல் நாடகம் மட்டுமே. கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடக்கிற போதெல்லாம் தினமும் ஒரு இடுகை அந்தப் போட்டிகளைப் பற்றி எழுதுவாரு. நல்லவிதமா எல்லாம் இல்லை. இந்த மாதிரி.  இவருக்குக் கிரிக்கெட்டே பிடிக்காதா அப்பிடின்னா இல்லை. இவருக்கு சச்சின் மேல ஏதோ காண்டு. அதை இவர் வலைப்பக்கத்துல இருக்கிற வாக்கெடுப்பிலே பார்க்கலாம். ஆனாலும் இவரோட வலைப்பூவோட கேப்ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும் - கூக்ளியில் ரேகைகளை இழந்து ஆஃப் ஸ்பின்னில் கட்டைவிரல் தேய்ந்து ஆங்கிலப் பரீச்சையை மறந்து அஞ்சாம் வகுப்பில் கோட் அடித்த சக நண்பர்களுக்காக

நாம அடுத்ததா பார்க்கப் போறவரும் ஒரு இலங்கைப் பதிவரே. இவரை, இவர் நட்பு வட்டாரத்தில ஸ்டேட்டிஸ்டிக்ஸ் புலின்னு சொல்லுவாங்க. யார், யார் கூட எப்ப ஆடினாங்க. அந்தப் போட்டியில யாரு எவ்வளவு ரன் அடிச்சாங்கன்ற புள்ளி விவரமெல்லாம் நல்லா சொல்லுவாரு. இவர் கூட சில இடுகைகள்ல விவாதம் செஞ்சிருக்கேன். கிரிக்கெட் சம்மந்தமாவும், கிரிக்கெட் இல்லாத விசயத்திலயும். உலகக் கோப்பை போட்டிக்கான இலங்கை அணியோட தேர்வு பற்றி இவர் இங்க அலசியிருக்காரு.

கிரிக்கெட் பதிவுகளை அறிமுகப் படுத்தன்னு வந்துட்டு இவங்க ரெண்டு பேரை சொல்லலைன்னா நல்லாவே இருக்காது.

முதலாமவர் பவன். இவர் நம்ம வலைமனை சுகுமார் சுவாமிநாதனைப் பார்த்துட்டு அவரைப் போலவே ஃபோட்டோ கமெண்ட்ஸ் போடுவார். சுகுமார் மாதிரி இல்லாம இவர் கிரிக்கெட் சம்மந்தமா மட்டுமே போடுவாரு. அதிலயும் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளைக் கலாய்க்கிறதுன்னா இவருக்கு லட்டு சாப்புடுற மாதிரி. சாம்பிளுக்கு இதைப் பாருங்க.

அடுத்தவரு லோஷன். இவரும் பிரபலப் பதிவரே. இவர் வெற்றி எஃப்.எம்மில் அறிவிப்பாளரா வேலை பாக்குறாரு. பொழுதுபோக்கா எழுதினாலும் நல்லாவே எழுதுவாரு. ஆஸ்திரேலிய அணியின் ரசிகர். கிரிக்கெட் போட்டிகளைக் கணிக்கிறதுல கில்லாடி. இவரோட கணிப்புகள் பெரும்பாலும் சரியாத்தான் இருக்கும். உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை, இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் தேர்வு பற்றி இவர் அலசியிருக்கிற இடுகை இது.

பவர்ப்ளே வெறும் அஞ்சி ஓவர்தான். அதுனால சட்டுனு முடிஞ்சிருச்சி. இனி நாளைக்கி வேற சில அறிமுகங்களோட பார்க்கலாம்.
மேலும் வாசிக்க...

Tuesday, January 25, 2011

மிடில் ஆர்டர்

ஒரு கிரிக்கெட் டீம்ல ஓப்பனிங் பேட்ஸ்மென் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மிடில் ஆர்டரும் முக்கியம். ஓப்பனர்ஸ் ஸ்ட்ராங்கா ஆரம்பிச்சிருந்தா, மிடில் ஆர்டரும் அந்த ரன் ரேட்டை குறைக்காம அடிச்சி ஆடணும். அதே நேரம், ஓப்பனர்ஸ் சீப்பா அவுட்டாகிட்டா அதுக்கு மேல விக்கெட் விழாம நிதானமாவும் ஆடணும். ஆக மொத்தம் எல்லா விதமாவும் ஆடத் தெரியணும்.

இன்னைக்கி நாம பாக்கப் போற ஆட்களும் அப்பிடித்தான். எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சி ஆடுறாங்க.

பண்புடன் குழுமத்துல இருக்கிற ஆட்களுக்கு இவர் நல்லாவே பரிச்சயம். பழைய பாட்டு மெட்டுல வரிகளை மாத்தி போட்டு சந்தம் மாறாம காமெடியா எழுதுறதுல இவரு கிங். பழங்கஞ்சின்னு பேர் வச்சிட்டு சுடச்சுட செய்திகளைக் குடுக்குறாரு.

அடுத்ததா தம்பி கூர்மதியான். ஏற்கனவே இவரோட இன்னொரு பதிவை நண்பர் எல்.கே அறிமுகப்படுத்தியிருந்தாரு. இது இவரோட இன்னொரு பதிவு. இதுபோக இன்னும் ரெண்டு பதிவு வச்சிருக்காரு. இதுல மொக்கை போடுறாரு. இங்க கவிதை எழுதுறாரு. இன்னொரு பதிவுல ஆங்கிலத்துல எழுதுறாரு. தமிழ் வலைப்பூக்களை மட்டுமே அறிமுகப்படுத்துறது வலைச்சர மரபுங்கிறதால அந்த ஆங்கிலப் பதிவுக்கு தொடுப்பு கொடுக்கலை.

அடுத்ததா நாம பாக்கப் போறது ஒரு புலம்பெயர் தமிழனோட பதிவு. இவர் சாதாரணன் அப்பிடின்னு சாதாரணமா பெயர் வச்சிக்கிட்டு சின்னச் சின்னச் செய்திகளா தொகுத்துக் குடுக்குறாரு. நிறைய வீடியோக்களும் இணைக்கிறாரு.

உங்களுக்கு ஒரு ஈஸியான கேள்வி கேக்கறேன். பாண்டவர்கள் அஞ்சி பேரோட பேர் சொல்லுங்க பார்ப்போம். சொல்லிட்டீங்க ஓக்கே. இப்ப அடுத்த கேள்வி. கௌரவர்கள் நூறு பேரோட பேரும் சொல்லுங்க பார்ப்போம். முழிக்கிறீங்க தானே? ஆனா ராஜி அசராம நூறு பெயரையும் இங்க எழுதியிருக்காங்க. அறியாத வாசனைன்னு தடாலடியா சிறுகதையும் எழுதறாங்க. புரியிற மாதிரி கவிதையும் எழுதறாங்க.

சொந்த கதை நொந்த கதைன்னு பதிவுக்கும், என்றென்றும் பதினாறு என்று தனக்கும் பெயர் வச்சிக்கிட்டு இருக்காங்க இந்த சகோதரி. பூமியில் கிடைக்கும் அமுது அப்பிடின்னு தாய்ப்பாலின் நன்மைகளையும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் எழுதியிருக்காங்க.

அடுத்தது யோகனா யாழினி. கிட்டத்தட்ட தினமும் ஒரு இடுகை போட்டுடுவாங்க. கதை, கவிதை, அனுபவம், பஸ்ஸில் பார்த்தது இப்பிடி எல்லாத்தையும் பதிவுல ஏத்துவாங்க.

இவரு கங்குலி மாதிரி எப்பயாவதுதான் எழுதுவாரு. ஆனா எழுதினா அருமையா இருக்கும். ஸ்பெ என்று அன்பாக அழைக்கப்படுகிற ஸ்டாலின் ஃபெலிக்ஸ். 2007ல இருந்து எழுதுறாரு. மொத்தமே 68 இடுகைகள் தான் எழுதியிருக்காரு. இவரு எழுதினதுல எனக்கு ரொம்பவும் பிடிச்சது அம்பேத்கர் பட விமர்சனமும், முத்துக்குமார் பற்றிய புத்தக விமர்சனமும்.

இன்னைக்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் இவ்வளவு பேருதான். நாளைக்கி இன்னும் சில பேரோட சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது, உங்கள் முகிலன். 
மேலும் வாசிக்க...

Monday, January 24, 2011

ஓப்பனிங்

அன்பு நண்பர்களே,

வலைச்சரம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

தமிழ் வலையுலகில், தமிழ் மண நட்சத்திரமும், வலைச்சர ஆசிரியர் பணியும் பத்மஸ்ரீ, பத்மபூஷனைப் போன்றவை. பத்மஸ்ரீ கடந்த வருடம் பெற்றாயிற்று. இந்த வருடம் பத்மபூஷன். என்னை இந்தப் பணிக்கு அழைத்த சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றி.

நான் முகிலன் என்று வலையுலகில் அறியப்படுகிறேன் என்றாலும் என் இயற்பெயர் தினேஷ் குமார். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் இந்தியாவில் என்றாலும், இப்போது குப்பை கொட்டுவது பெரியண்ணன் ஊரில்.

என் இடுகைகளை வலைச்சரத்தில் பல முறை பல ஆசிரியர்கள் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் நானும் என் பங்குக்கு என் வலைப்பூக்களை அறிமுகப்படுத்துவது என்பது வலைச்சர மரபாக இருக்கிறது. அந்த மரபைப் பின்பற்றி நானும்...

நான் பிதற்றல்கள் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது ஆதி மூலகிருஷ்ணனின் புலம்பல்கள் என்ற பெயரைப் பார்த்தபின் தான். அப்போது நாமக்கல் சிபி இதே பெயரில் இன்னொரு வலைப்பூ வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தபின் வலைப்பூ உரலியை மாற்றாமல் பெயர்ப்பலகையை மட்டும் முகிலனின் பிதற்றல்கள் என்று மாற்றினேன். சிபியும் பெரிய மனது வைத்து அவரது வலைப்பதிவை மூடிவிட்டார்.

நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து எதையெதையோ எழுத ஆரம்பித்துப் பின்னர் சிறுகதைகள் எழுதினேன். நான் எழுதியவற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை கீழே..

வித்தியாசமாக ரிவர்ஸ் க்ரோனோக்ராஃபிக் ஆர்டரில் நான் எழுதிய கதை

விவரணைகள் இல்லாமல் சம்பவங்களை விவரித்து பலரும் நல்ல நடை என்று பாராட்டிய கதை

ஒரே கதைக்குள் இரண்டு கதை

அதன்பிறகு சில தொடர்களும் எழுதினேன்.

என் மனைவியின் பிரசவத்தின் போது கூடவே இருந்த நினைவுகளை தொடராக எழுதியது

துப்பறியும் தொடர்கள் சில - அருண் என்ற கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்டு

இவை மட்டுமல்ல எனக்கிருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை வைத்து சில கிரிக்கெட் இடுகைகள் எழுதினேன். என் நண்பர்கள் சிலர் அதைத் தனி வலைப்பூவில் எழுதுமாறு அறிவுறுத்தியதால் கிரிக்கெட் பிதற்றல்கள் என்று ஒரு வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதிலும் சில இடுகைகள், குறிப்பாக ஏதாவது தொடர்கள் - ஐபிஎல், 2020 உலகக்கோப்பை போன்ற - நடக்கும்போது ஒவ்வொரு போட்டியையும் பற்றி முன்னோட்டம் மற்றும் அலசல் எழுதவேண்டுமென்று ஆரம்பிப்பேன். பெரும்பாலும் முடிக்க முடியாது. ஐபிஎல் நடக்கும்போது அதன் விமர்சனத்தை பாதியிலேயே முடிக்கக் காரணமாயிருந்த நிகழ்வை இந்தப் இடுகையில் எழுதியிருக்கிறேன்.

எனக்கிருக்கும் சிறு கிரிக்கெட் அறிவையும் இணையத்தையும் உதவியாய்க் கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு தொடர் கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள். இத்தொடரை கடந்த வருடம் ஃபிப்ரவரி மாதம் துவங்கினேன். ஆனால் பணிப்பளுவினால் அதைப் பாதியில் கைவிட வேண்டியிருந்தது. மீண்டும் இந்த வருடம் தொடர்கிறேன். பணிப்பளு அனுமதித்தால் தொடர்வேன்.

இந்த வலைச்சர வாரத்தில் என்னால் முடிந்த அளவு புதிய இடுகைகளையும், வலைப்பூக்களையும் பகிர்கிறேன்.

மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது