07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 28, 2013

தேடித் தரும் தேன்சிட்டு-3

 
தினசரி தியானம்  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்  திருப்பராய்த்துறை

வணக்கம் அன்பர்கள் யாவருக்கும் :)
இன்னிக்கு ப்ரோக்ராம் சித்திரகூடமலை.

சஹானா ராகத்துல ஒரு பழைய சினிமா பாட்டு. பார்த்தேன் சிரித்தேன்னு ஆரம்பிச்சு வரிக்கு வரி தேன் தேன்-ன்னு வந்து ”அந்த மலை தேன் இதுவென மலைத்தேன்!” அப்படீன்னு முடியும். அப்ப்டியொரு மலை தேன் இன்றைக்கு!

சித்திரகூடத்தில் மலைக்க வைக்கிற மாதிரி சில பதிவர்கள் வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. இன்றைக்கு கிருஷ்ண ஜன்மாஷ்டமி. அதனால் அவரையும் நினைச்சுகிட்ட புண்ணியம் கிடைக்கும் வலைப்பதிவையும் பார்த்தமாதிரி இருக்கட்டுமே அவருடைய சிந்தனைகளை தூண்டுகிற சில வலைப் பக்கங்களைப் பார்க்கலாம்.

நீங்க இங்க பார்க்கிற படம் வெறும் சாம்பிள் மட்டும் தான். பலருக்கு அந்தந்த வலைப்பக்கங்களுக்கு போய் இடுகையை பார்க்க நேரமில்லாமல் போய் விடுதே என்கிற காரணத்துக்காக ஒரு கொல்லஜ் உருவாக்கி கொடுத்திருகிறேன். கண்டிப்பா நேரம் ஒதுக்கி தனித் தனியாகப் பார்த்து ரசிக்க வேண்டிய வர்ண ஓவியங்கள் இவை.


 அடடா ! அந்த மரத்தடியில கால் மேல கால் போட்டு என்ன ரிலாக்ஸ்டா தன்னை மறந்து குழல் ஊதறாரு. பேசாமல் நாமும் அங்கேயே போய் உங்காந்துக்கலாம்னு தோணுது

அந்த சித்திரக்காரர் திரு கேசவ். ஹிந்து பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரைபவர் மட்டுமல்ல மிகத் திறமையான அளவில் வர்ண ஓவியங்களையும் வரைபவர். புதுமைகள் புரிந்து பார்க்க விழைபவர். அவர் கிருஷ்ணரை நவீனமாகவும் மரபு முறையிலும் பல விதமான வடிவில் வரைந்து அழகு பார்த்திருப்பதும் அதையெல்லாம் வலையுலகில் பகிர்ந்து கொண்டிருப்பதும் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

சங்கீதத்துக்கும் ஓவியங்களுக்கும் மொழி தேவையில்லை என்பதாலோ என்னமோ அவரது வலைப்பக்கத்தில் படித்து அறிவதற்கென்று எதுவும் சொல்லப்படுவதில்லை.  அவருடைய கிருஷ்ணர் ஸ்பெஷலான வலைப்பூ காமதேனு வுக்கு சென்றால் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வண்ண கிருஷ்ணர்களை காணலாம். இடையிடையே ராமாயணக் காட்சிகளும் பாகவத நிகழ்சிகளும் இடம் பெற்று ஆர்வத்தைகூட்டுகிறது. இவருடைய கேரிகேசர்  மற்றும்  கார்ட்டூன் துணுக்கு பக்கஙகளும் மிகவும் ரசிக்கத்தக்கவையாகும் ---------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து ருசிக்க இருப்பது  ராமரஸம்  என்ற பெயரில் உள்ள திரு பட்டாபிராமன் அவர்களின் வலைத்தளம்.  
கண்ணா கண்ணா என்று கண்மூடி அழைத்தாலே 
 கண் முன்னே வந்து நின்றிடுவான்  
கவலைகளைஎல்லாம் போக்கிடுவான்  
காலமெல்லாம் உடனிருந்து 
கண்ணிமைபோல் காத்திடுவான்  
அன்புடன்  தினமும் அவன் நாமம்  
நாவிலும் நினைவிலும் ஒலிக்க  விட்டால்  
ஒயாது சலிக்கும் மனமும் ஒடுங்கிவிடும்...  
என்று கவிதை பாடி மகிழும் இவர் அவரை ஓவியமாய் வரைந்தும் மகிழ்கிறார். இரண்டாம் வருட நிறைவை நெருங்கி கொண்டிருக்கும் இவரது வலைப்பூவில்  சித்திரங்கள் கவிதைகள் மட்டுமல்லாது  ஆந்திராவின் வேமன்னாவின் சொல்லமுதம்   ராமலிங்க பாகவதர் கீர்த்தனைகள் (19 ஆம் நூற்றாண்டு) கருத்துகள் என அசுர வேகத்தில் எழுதி   வருகிறார்   இதோ அவருடைய ஓவியங்களின் கொல்லாஜ்



----------------------------------------------------------------------------------------------------------

 இப்போ ஒரு ஆலிலை கிருஷ்ணர் . இந்த கிருஷ்ணருடைய படத்தை வரைந்தவர்  பின்னணி தெரிஞ்சா மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்

அவரைப்பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
இன்று இந்த சித்திரக்காரர் ஒரு MFPA  உறுப்பினர் . அப்படி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - இங்கே சுட்டவும்
 -----------------------------------------------------------------------------------

கீழே இருக்கிற கிருஷ்ணர் என்னுடைய முதல் ஆயில் பெயிண்டிங்.

சொல்லிக் குடுக்க யாருமில்லாம நான் பட்ட கஷ்டத்தை  கண்ணாரக் கண்டேன் என் கண்ணனை -ங்கற இடுகையில் பார்த்து படித்துக் கொள்ளலாம், நேரம் இருந்தால் :)
இதை விட சுவாரஸ்யமானது சிலேட்-ல செதுக்கிய கிருஷ்ணன். அதைப் பற்றிப் பார்க்க படிக்க :கிருஷ்ணருக்கு பாலீஷ் போடணும் என்கிற இடுகை.
---------------------------------------------------------------------------------
நான் வசிக்கும் ஜாம்நகர் கிருஷ்ணரின் துவாரகைகு மிகவும் அருகிலுள்ளது. நான்கு முறை தரிசனமும் செய்தாயிற்று. ஆனால் உங்களுக்கெல்லாம் தரிசனம் செய்விக்க ஒரு இடுகையும் எழுதவில்லை. ஆனால் என்ன அந்த குறையை போக்கி விடுகிறார் தேவராஜன் ஐயா . நீங்களும் அவரோடு ஒரு ரவுண்டு தரிசனம் பண்ணிக் கொள்ளுங்கள் 
--------------------------------------------------------------------------------
இன்றைக்கு நிறைய பேர் வலைப்பக்கங்களில் கண்ணன் பிறந்த கொண்டாட்டங்கள் கவிதைகள், கதைகள் எல்லாம் வரும். அவர்களுக்கு கண்ணன் அருள் நிறைந்து இருக்கட்டும்.
கோவிக்காத கண்ணன் பிறந்தான்
கோவிக்காமல் என்றும் இருப்பான்
கீதையோடு சேர்ந்து மகிழ்வான்
கீதம் நமக்கு இசைத்து வைப்பான்
கோடி கோடி வந்தனம் செய்வோம்
ஆடிப்பாடி இன்று மகிழ்வோம்
கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!
கண்ணன்  என்றும்  நம்மைக் காப்பான்
என்று பாடி மகிழ்கிறார் VSK  என்ற பெயரில் ஆத்திகம் வலைப்பூ வைத்திருக்கும் சங்கர்குமார் ஐயா.  கவிதையை முழுவதும் படிக்க இங்கே.

அவருடைய மயிலை மன்னாருடைய குறள் விளக்கம் என்றும் திகட்டாது
அதையும் விட்டு விடாதீர்கள்.
----------------------------------------------------------------------------
எல்லோருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள். மீண்டும் நாளை சந்திப்போம்.
( நேரமின்மை காரணமாக பின்னூட்டங்களுக்கு பதிலுரைப்பது தாமதம் ஆகிறது அல்லது முடியாமல் போகிறது. பொறுத்து கொள்ளவும்)
மேலும் வாசிக்க...

Tuesday, August 27, 2013

தேடித் தரும் தேன்சிட்டு -2

 தினசரி தியானம்,  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை

சுற்றி வருவோமா வலைப்பூக்களில் தேன் அருந்த ....கிளம்புங்கள்
முதலில் நெடுஞ்சாலை, விருதுநகர் பக்கம் போவோம்

எளிமையான வார்த்தைகளில் தெளிவாகக் கருத்துகளை சொல்ல முடிந்தால் அதுவே சிறப்பான எழுத்து. 
அது எவ்வளவு உண்மை என்பதை நெடுஞ்சாலை வலைப்பூவில் வேல்முருகன் அவர்கள் எழுத்தாளர் மலர்வதியின் வரிகளில் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.
”நாலுபேரு பாராட்டனும்னு பத்துபேருக்கு விழா நடத்தி உதவிசெய்வானுங்க ஆன தனியேபோய் உதவி கேட்டு போனா செய்யமாட்டாக என வசதிபடைத்தோரின் குணநலனை சாடும்போது   இன்றைய அரசியல்வாதிகளின் முகமுடிகளும் நம்முன் வந்து செல்கிறது.
  கிளைகளின் சலனம்
  ஊருக்கு தெரியும்?
  வேர்களின் அழுகை
  யாருக்கு தெரியும்?
  இப்படி நாவல்களின் இடையே கதாபாத்திரங்களின் வேதனைகள் கவிதைகளாக பதிவு செய்துள்ளது நாவலுக்கு   அழகுசேர்க்கின்றன
மேற்கண்ட வரிகள் சமீபத்தில் சாகித்ய அகடெமி விருது பெற்ற தூப்புக்காரி நாவலில் இடம் பெற்றுள்ளது. அதன் ஆசிரியை மலர்வதி அவர்களின் சந்திப்பைப் பற்றி தமது ஏப்ரல் மாத இடுகையில் வேல்முருகன் விவரிக்கிறார்.
..........திருவள்ளுவர் புத்தககடைக்கு சென்று கடையில் விபரம் கூறி தூப்புக்காரி நாவல் வாங்கிகொண்டு, நாவல் பெற்றுக்கொண்ட விபரத்தை நாவலாசிரியர் மலர்வதிக்கு போன்செய்து நன்றிகூற, அவர் கடைக்கு ஐந்துநிமிடத்தில் வந்துவிட்டார்,  விருது பெற்றவர் வாசகனை தேடி வந்து சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.
நாவல்களை படித்துவிட்டு நாவலாசரியர்களை சந்தித்த அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு ஆனால் நாவல் படிக்கும்முன்பே நாவலாசிரியரை சந்தித்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது....
மலர்வதி என்கிற நாவலாசிரியரின் எளிமையையும் மற்றும் அவருடனான நேர்காணலையும் அறிய இடுகைக்கான இணைப்பு  தூப்புக்காரி நாவல் 
வேல்முருகனே ஒரு நல்ல படைப்பாளி. தவிப்பு என்கிற பெயரில் அவருடைய கதையின் ஒரு துணுக்கைப் படியுங்கள்
“.........அப்படியே பூனை கழுத்தை பிடித்து தூக்கி ஜவுளி வாங்கும் போது தந்த கட்டை பையில் வைத்து பையை இருக்க மூடிபிடித்து கொண்டேன், மகளை பெப் ஸ்கூட்டரை ஓட்டசொல்ல பின்னால் உட்கார்ந்து கொண்டு, வீட்டில் இருந்து ஒரு கி.மீ தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பையை திறந்து பூனையை வெளியில் விட்டேன். வெளியில் வந்த பூனை எங்களை பார்த்துவிட்டு புதர்குள் ஓடிவிட்டது.
               அப்பாடா என நிம்மதி மூச்சை விட்டுவிட்டு வீடு வந்தேன். பாதியில் விட்ட சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உடைமாற்றி அலுவலகம் கிளம்ப பைக்கை வாசலில் இருந்து கீழே இறக்கிகொண்டு இருந்தேன், மியாவ் என குரல் கொடுத்துகொண்டே என்னை கடந்து என் வீட்டு தோட்டத்தில் நூழைந்த பூனையை நானும், என்னை வழி அனுப்பவந்த மனைவியும்,ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தோம்.........................
அப்புறம் என்ன ஆச்சு? விடை  - இடுகை தவிப்பு   என்ற பெயரில் 
எழுத்தின் மீது அதீத காதல் கொண்டவர் என்பது அவருடைய இலக்கிய நண்பர்களின் தொடர்பு பற்றி விவரிக்கும் போது நன்கு புரிகிறது.  இவரை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------
சாத்தான்குளம் வாசகசாலை: என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வரும் சொர்ணமித்திரனும் புத்தகவாசிப்பில் பெரும்பிடிப்பு உள்ளவர்,  தேரிக்காட்டில் ஒரு எழுத்துக்காடு என்னும் இடுகையில் ஒரு சிறுகதை எழுத்தாளரைச் சந்திக்கச் செல்கிறார். அதை அவர் சொற்களிலே காண்போம் 
”....அது சுற்றிலும் தொழிலாளர் மிகுந்த பகுதி. அங்கு அதில் பனை ஓலையால் வேயப்பட்ட சிறு கோழி இறைச்சிக்கடை. அதன் பின்னால் சிறு விறகு கடை.காலை நேரம் அந்தக் கைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கோழிகளை துண்டு துண்டுகளாக்குகிறது.  மின் நிறுவையில் போடுகிறது.  பணத்தை பெற்று கல்லாவில் போடுகிறது. அந்த கைகள் உழைத்து உழைத்து இறுகிப்போனதாய் தெரிகிறது.  அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் ஆறுமுகப்பெருமாள். வாடிக்கையாளர்களிடம் இன்முகமாய் பேசுகிறார்.  நாட்டு நடப்புகளை அலசுகிறார்.
முற்பகல் வியாபாரம் முடிகிறது.  இரத்தம் தோய்ந்த கைகள்  அலசப்படுகின்றன.
பிற்பகல் அதே கைகளில் இப்பொழுது பேப்பரும் பேனாவும் சிந்தனைகள் எழுத்துக்களாய் மாறி சிறுகதைகளாய் பிறக்கின்றன.  மாலை நேரம் அவரைத்தேடி இலக்கிய விரும்பிகள் வருகிறார்கள். இப்பொழுது அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் கண்ணகுமார விஸ்வரூபன். தமிழ் சிறுகதை எழுத்தாளர். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் படித்திருப்பதோ எட்டாம் வகுப்பு வரை மட்டுமே........
 மிகவும் அபூர்வமான நேர்காணல் வாசிப்பு. கண்டிப்பாக வாசியுங்கள்
சொர்ணமித்திரனின் குறுங்கவிதைகளும்  சுவையானவை
துருப்பிடித்து தவமிருக்கிறது  
செல்போன் அழியட்டும் என்று  
தபால்பெட்டி!  
ஆழிமழையும் அம்மாவின் மிக்ஸியும் என்னும் சிறுகதை இவரிடம் எழுத்து இயல்பாக இருக்கிறது என்பதை காட்டுகிறது .
இவருக்கும் வாசகர் வட்டம் பெருக வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------
சமூகத்தை பீடித்திருக்கும் அவலங்களையெல்லாம் சாடத் துடிப்பவர்  இவர். அது பொது நம்பிக்கையாகட்டும், பத்திரிக்கைகளாகட்டும் அல்லது வாழ்க்கை முறைகளாகட்டும் எல்லாவற்றையும் அலசுகிறார். சொல்ல வரும் கருத்தில் தெளிவு, எளிமை  இரண்டையும் காணமுடிகிறது
பிச்சைக்காரர்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை ஏனெனில் அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்க தகுதியற்றவர்கள்” என்று சொல்லி ஆரம்பிக்கும் காமராஜ் என்னும் காமகிழத்தன் அவர்களை வைத்து தான் நடத்திய பரிசோதனையை சொல்லுகிறார்
“நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்க மாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஒரு அவசரத் தேவைக்காகக் முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனுக்கும் அவன் குலதெய்வம்  நினைவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனை வானில் ஒரு சிறு பொறி.
இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய்  கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?
அவருக்கு என்னென்ன பதில்கள் கிடைத்தன என்பதை அறிய ’நான் நீங்கள் அவர்கள் ’ என்னும் வலைப்பூவில் சொல்கிறார் பத்து ரூபாய்களும் பத்து பிச்சைக்காரர்களும் கடவுளும்.  இவர் விதியோடும் கொஞ்சம் விளையாட யாவரையும் அழைக்கிறார் :
”என்னப்பா காமக்கிழத்தா, விதி விதின்னு நீ பாட்டுக்குக் கதை அளந்துட்டே போற? ஐந்தறிவு ஜீவன்களும் ஜடப்பொருள்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். மனுசங்க தங்களுடைய ஆறாவது அறிவைக்கொண்டுதான் சிந்திக்கிறாங்க; செயல்படுறாங்க. அவங்களை எப்படி விதி கட்டுப்படுத்தும்?”னு நீங்க கேட்க நினைக்கிறீங்கதானே?
அதே கேள்வியைத்தான், கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம்னு ஏதேதோ பேசுற ஆன்மிகவாதிகள்கிட்டே  நானும் கேட்க நினைக்கிறேங்க.”“என்னப்பா இது, விதிக்கு விளக்கம் தந்து, உதாரணம் எல்லாம் தந்த நீ இப்போ கட்சி மாறிப் பேசி குழப்புறே?”-இது நீங்க.
நான் கட்சியெல்லாம் மாறலீங்க....................
’’ அவருடைய முடிவு என்ன ?  -  படியுங்கள் “ வாருங்கள் விதியோடு  கொஞ்ச(சி)ம் விளையாடுவோம்
-------------------------------------------------------------------------------------------------------------------
எவனோ யாரோ - அப்படீன்னு அடையாளம் காட்டிக்கத் தயங்குறாரே அவர்தான் உதயா பகத் : 
GDP ன்னா என்னங்க ? அப்படீன்னு கேக்கிறவங்களுக்கு இங்கே சிம்பிளா பொருளாதார விளக்கம் தருகிறார்
நம்ம மதுரை ன்னு பழைய காலத்து மதுரை புகைப்படங்களை போட்டிருக்கிறார். மதுரை எவ்வளவு அழகா இருந்திருக்கு என்கிற ஏக்கம்தான் மிஞ்சுது  அவசியம் பாருங்க  நம்ம மதுரை
-------------------------------------------------------------------------------------------------------------
தென்பொதிகைத் தேன் எல்லாம் ருசியாய் இருந்ததா? 
மலர்வதி யும் விஸ்வரூபனும் பள்ளிக்கூடம் கூட படிச்சு முடிக்காதவங்க. அவர்களைப் போன்ற நிறைய பேர் - மலர்வதி அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்- தமிழ் என்னும் மரத்தின் வேர். அவர்கள் தான் இதயத்தின் ஒலியை சத்தாக மாற்றி தமிழ் மரத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பறிவு என்னும் காற்றில் சலசலக்கும் இலைகளாக நம் வலைத்தளங்கள் ஆகாமல் தரமான எழுத்திற்கு வேர்களாக மாற்றுவோம். ஏனென்றால் இலைகளுக்கு உதிர்காலம் உண்டு. விரைவிலேயே காணாமல் போய்விடும்.  வேர்களுக்கு அது இல்லை.

லேட்டாயிடுச்சு.  நாளைக்கு எங்க போறோம் என்கிறதையும் இனிமேதான் பார்க்கணும்.   நிர்வாகம் பற்றிய ஒரு கதை சொல்லியிருக்கேன் [ கார்பொரேட் ஸ்டோரி ] அதையும் படிச்சுகிட்டு இருங்க.
 நாளை மீண்டும் சந்திப்போம். அது வரை இனிய வாசிப்பு தொடரட்டும்.
மேலும் வாசிக்க...

Monday, August 26, 2013

தேடித் தரும் தேன்சிட்டு -1

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
நன்றி : தினசரி தியானம் - ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் -திருப்பராய்த்துறை
வலைச்சரம் பொறுப்பாசிரியர்  சீனாவுக்கும், வலைப்பூக்களின் ஆசிரிய பெருமக்களுக்கும், எழுதாமல் படித்து ரசிக்கும் வாசகர்களுக்கும் இனிய வந்தனங்கள். சற்றே ஒதுங்கியிருந்த என்னையும்  வலைச்சரம் கட்டி இழுத்து வந்துவிட்டது!

முதல்நாள் சுய அறிமுக நாள். அது  இணையத்தில் என் அனுபவமாக மலர்ந்ததைச் சொல்லுகிறேன்.
என் வலையுலகப் பயணம் மதுரையில் 2001-ல் ஆரம்பித்தது. தொழில்நுட்ப சம்பந்தமான எனது புத்தகம் ஒன்று பலருக்கும் இணயத்தில் பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் அதை வலையேற்றுவதற்காக HTML, java script code, போன்றவற்றை சுயமாக தேடித் தேடிக் கற்றுக் கொண்டேன். அந்த பலத்தில் Tripod என்கிற இலவச தளத்தில் மஞ்சரி என்ற பெயரில் ஒரு மின் சஞ்சிகை ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்கள் எனக்குப் பிடித்த நல்ல விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதி  வந்தேன். பின்னர் அந்த வலைத்தளத்தின் எரிச்சலூட்டும் POP UP விளம்பரங்களால் அதை கைவிட்டேன். 

அச்சமயம் வலைப்பக்கங்களில் தமிழில் எழுத யூனிகோடு முறை இல்லாமல் எழுத்துருப் பிரச்சனைகள் பரவலாக இருந்து வந்தது. அதனால் பரஹ மென்பொருள் கொண்டு நான் எழுதியதை Bitmap முறையில் மாற்றி மஞ்சரியில் சில கட்டுரைகளை வலையேற்றி தமிழில் எழுதும் ஆர்வத்தை ஓரளவு தணித்துக் கொண்டேன். தில்லியிலிருந்து கோவைக்கு 2006-ல் வந்த பின் தமிழ்பயணி சிவா Windows XP மூலம் இனிமேல் யாவரும் யூனிகோட்தான் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதால் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய வேண்டிய அவஸ்தைகள் வராது என்ற பெரிய மென்பொருள் ரகசியத்தைப் பகிர்ந்தது கபீரின் கனிமொழிகள் வலைப்பூவுக்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து பல்சுவை விஷயங்களை பகிர்வதற்காக கற்கை நன்றே வை ஆரம்பித்து பின்னர் என் பொழுது போக்கான ஓவியங்களுக்காக சித்திரமும் கைப்பழக்கம் என்கிற வலைப்பூவும் வடிவம் பெற்றன. இதைத் தவிர விளம்பரங்களில் காணப்படும் அபத்தங்களை சுட்டிக்காட்ட ஒரு வலைப்பூவையும் ஆங்கிலத்தில் வைத்திருக்கிறேன். 

இப்படியே நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. இணையத்தின் வாயிலாக பல பெரிய பதிவர்களின் அன்பும் நட்பும் கிடைத்தது எனது பாக்கியம். அவர்களில் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு இன்னமும் எனக்கு வரவில்லை. ஆனால் இடையில் இரண்டு வருடங்களாக எழுத இயலாத சூழ்நிலையில் இருக்கும் போது தனி மடல்களில் அவர்களின் தனிப்பட்ட விசாரிப்பு நெஞ்சைத் தொடுவதாகும். இணையம் என்பதும் எழுத்து என்பதும் எத்தனை சக்தி வாய்ந்தது என்பது அப்போது புரிந்தது.

அன்பின் சீனா வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த போது தயக்கமாகவே இருந்தது. படிக்காம ஊர் சுத்திகிட்டு இருக்கிறவன் கிட்ட நாளைக்கு பரீட்சைன்னு சொன்னா எப்படி இருக்கும் !  ஏதோ என்னால் முடிந்ததை எழுதுறேன். வலைப்பூ ஆசிரியர்களெல்லாம் சேர்ந்து பாஸ் பண்ணி விட்டுடங்க _/\_.  :)

எனக்கு எப்போதும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதன் காரணமாய் உருவானது தான் தேன்சிட்டு  என்னும் வலைப்பூ வளையம். இதில் ஒவ்வொரு ஆசிரியரும் தம் வலைப்பூவை இணைத்துக் கொண்டால் அது புது வாசகர்கள் நம் வலைப்பூவுக்கு வர ஒரு வழி வகுக்கும் என நினைத்து உருவாக்கப்பட்டது. இது alt-webring dot com வழங்கும் இலவச சேவை. கூகிள் ரீடர் போல இவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம் என்பது வேறு விஷயம். சில பதிவர்கள் அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி மீண்டும் நிரலை பொருத்தாமல் விடுவதால் சின்ன சின்ன சிக்கல் அவ்வப்போது வருவதுண்டு. உங்களுக்கும் பயன்படுமா என்று பாருங்கள்.

இதைப் போலவே தமிழ் கருவூலம் என்ற பெயரில் கூகிள் விட்ஜெட் செய்து வைத்திருக்கிறேன். இதன் மூலம் பல அரிய தமிழ் பெரியவர்களின் நற்சிந்தனைகளை  வலைப்பூவிற்கு வரும் வாசகர்களோடு எல்லா வலைப்பதிவர்களும் அவற்றை பொருத்தி பகிர்ந்து கொள்ள முடியும். த்ற்போது உலகநாதரின் உலகநீதி,  மதுரை கூடலூர் கிழாரின் முதுமொழி காஞ்சி  மற்றும் தாயுமானவரின் பராபரக்கண்ணி  ஆகியவற்றை அருஞ்சொற்பொருட்கான இணைப்புடனும் வலையேற்றியுள்ளேன். தமிழுக்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டால் மிக்க மகிழ்ச்சி தரும். 

நான் எழுதியதில் எனக்குப் பிடித்தவற்றை அறிமுகப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று வலைச்சரம் அனுமதி அளித்திருக்கிறது. இதை அவ்வப்போது பிறர் பதிவுகளை தொகுக்கும்போது நினைவுக்கு வருபவற்றோடு பகிர்கிறேன்.  கற்கை நன்றே வலைப்பூவில் குறிப்பாக Ching Chow என்று  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்து கொண்டிருந்த கார்ட்டூன் படங்கள்  தமிழில் சினா சோனா வாக வலம் வருவதையும், கர்நாடகத்தில் சாமானியனின் கீதை என்று போற்றப் பெறும் மக்குத்திம்மன் கருத்துகளையும் படித்துப் பார்க்கலாம். 
[மேலே உள்ள இரண்டு இணைப்புகளும் லேபிள் அடிப்படையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அனைத்து இடுகைகளும் ஒரே சன்னலில் திறக்கும்]  

கபீர்தாஸர் எப்படி என்னிடம் ஒட்டிக் கொண்டார் என்பது இன்றும் நான் ஆச்சரியப்படும் ஒரு விஷயம். அந்த வலைப்பூவை ஆரம்பித்த போது அதில் நூறு பதிவுகள் எழுதுவேன் என்ற கற்பனை கூட கிடையாது. ஒவ்வொரு கட்டுரையும் எனக்குப் பிடித்தமானதுதான். ஒரு சில கட்டுரைகளை மட்டும் எப்படி பரிந்துரைப்பது? அதற்கு ஒரு வழி தோன்றியது.

கபீர் வலைப்பதிவில் இடுகைகள் சதம் கடந்ததை ஒட்டி சில முன்ணணி வலைப்பதிவாளர்கள் முன் வந்து சிறப்புக் கட்டுரைகளை வழங்கி அதை கௌரவித்தனர். அவைகள் மட்டும் தொகுக்கப்பட்டு அன்பின் சங்கமம் என்ற பெயரில் மென்னூலாக பின்னர் வெளியிடப்பட்டது. கட்டுரை ஆசிரியர்களின் வலைப்பூக்களின் பெயர்களும், அவற்றிற்கான இணைப்பும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் ஜீவா வெங்கடராமன், S. கிருஷ்ணமூர்த்தி, ஜீவி, கீதா சாம்பசிவம், கே.ஆர்.எஸ், கவிநயா, YRSK பாலு, சூரி.சுப்புரத்தினம். இவர்கள் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பதிவர்கள். YRSK மட்டும் ஃபேஸ் புக்கில் சுறுசுறுப்பாயிருக்கும் யோகி ராம் சூரத்குமார் பக்தர். இவர்கள் யாவரும் போற்றும் கபீர்தாஸரின் பெருமையை  அன்பின் சங்கமம் என்னும் மின்னூலை தரவிறக்கம் செய்துகொண்டு படித்து மகிழவும்



அறிமுகப் பதிவிலேயே எட்டு பதிவர்கள் !! ( அன்பின் சீனா ஐயா, கணக்கில சேர்த்துக்குங்க :))
இணையத்தில் என் அனுபவம் எப்பொழுதும் மிக பயனுள்ளதாக, ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் ஒரு வடிகாலாக, நல்ல நட்பு வட்டம் தருவதாக இருந்து வந்திருக்கிறது. இதில் வலைச்சரம் ஒரு முக்கியமான மைல் கல். உங்களில் பலருக்கு என் அறிமுகம் கிடைக்க வழி செய்திருக்கிறது. என் மனமார்ந்த நன்றி.

இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். இந்த நாள் இனிய நாளாகட்டும்

பின் குறிப்பு:
என் நிறுவனத்தின் கணிணிகள் தனி மின்னஞ்சல்கள் வலைப்பூக்களுக்கு அனுமதி தருவதில்லை. ஆகையால் பின்னூட்டங்களுக்கு என் பதிலுரை மிகத் தாமதமாகவே வரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும் வாசிக்க...

Sunday, August 25, 2013

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அகிலா - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் கவனத்துடனும் பொறுப்புடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                                         : 007
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள்               : 033
இவர் அறிமுகப்படுத்திய பதிவுகள்                  : 067
இவர் பெற்ற மறுமொழிகள்                                  : 216
இவரது பதிவுகளைப் படித்தவர்கள்                  : 1060

அகிலாவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பதற்கு கபீரன்பன் அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார். 

இவர் பதிவுலகப் பெயர் கபீரன்பன்-
இயற்பெயர்  உமேஷ்- 
கல்வி  - வேதிப் பொறியியல் முதுகலை ;
உத்தியோகம் - மரபுசாரா எரி எண்ணெய் உற்பத்திக்கான ஆராய்ச்சி, பொறுப்பாளர்,
வாசம் - ஜாம்நகர், குஜராத்
இணையப் பக்கங்களில் பிரசுரம் -ஆங்கிலத்தில் 2001 லிருந்து ஆரம்பம்
தமிழ் வலைப்பூ பிரவேசம் - 2006 - கபீரின் கனிமொழிகள் 
என்கிற தளங்களில் எழுதி வருகிறார்.  

கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் சிறப்பான தமிழாக்கம் கபீரின் கனிமொழிகள் என்கிற தளம். 

நண்பர் கபீரன்பனை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் அகிலா

நல்வாழ்த்துகள் கபீரன்பன்

நட்புடன் சீனா 



மேலும் வாசிக்க...

கோவையிலிருந்து அகிலா – 7

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை

விடியலை காணாத ஓர் இரவு
விழித்திருந்தது உன்னோடு
விடிந்துவிட்ட மறு இரவு
விழித்திருந்தது உன் நினைவுகளோடு...
....

எழுத்தும் அதன் அழகும் : நவீனம்   
சிந்திக்கும் தன்மையை நுண்ணிய மன உணர்வுகளை தர்க்க ரீதியாக பகுத்தறிவை மட்டுமே பிரதானப்படுத்தி எழுதாமல் நளினமாகவும் சுருக்கமாகவும் படைப்பின் புரிதலை அவரவரின் கோணத்தில் கொண்டு வரும் இலக்கியமே நவீனமாகிறது. பின்நவீனத்துவம் தத்துவத்தை சாராமல் மன ஓட்டங்களை மட்டுமே முதன்மைப்படுத்தி நவீனத்துவத்தின் வழி சார்ந்திருக்கும்.  

படித்ததில் பிடித்த பதிவுகள் சில...  


கே ரவிசங்கர்

நகைசுவையாய் ஒரு கவிதை ஆறாவது பூதம் இவரது பதிவில்.

ஆகாயத்திலிருந்து
தொப்பென்று விழுந்து
புழுதி கிளப்பி
தொடுவானத்தைக் குத்தியபடி
படுத்திருக்கிறது ஒரு தண்டவாளம்


என்று ஆரம்பித்து அதை அவரின் டெஸ்க்டாப்பில் ஆறாவது பூதமாக்கியதை அழகாய் சொல்கிறார்.

ரவி ஆதித்யா என்னும் இந்த வலைப்பூவில் இவர் எழுதியிருக்கும் அம்மாவின் இழப்பு  என்னும் பதிவு நம் வீடுகளில் சாவின் விளிம்பில் இருக்கும் முதியோரின் நிலையைச் சொல்லிச் செல்கிறது. 



தேவாதிராஜன்

நற்குணங்களை பார்த்து வருவதே காதல் என்கிறார் இதுதான் காதல் என்னும் கவிதையில் மணவை தேவாதிராஜன் வலைப்பூவின் ஆசிரியர்.

அகிம்சையே வெற்றி என்னும் பதிவில் எளிய நடையில் கவிதையாய் நாம் அகிம்சாவாதியாக வாழ வழிச் சொல்லியிருக்கிறார்.


தவறு 

பார்க்க ரசிக்க என்று 
மான் சண்டை
சிங்கங்களின் குங்பூ
புகைபடங்களாய்த் தொகுத்து பதிவாக்கி இருக்கிறார் அறியது வலைப்பூவில்...
எழுத்துக்களின் அணிவகுப்பை மறந்து
கொஞ்சம் இதையும் சுகமாய் வேடிக்கைப் பார்த்தேன் என்பதே நிஜம்...
அருமை... 


மண்டையன்

கலகலப்பாய் இருக்கிறது படிக்க இவரின் கன்னி கணணி அனுபவம் 

மரியான் விமர்சனம், சினிமா துணுக்குகள் என்று இவர் தன் அஞ்சா சிங்கம் வலைப்பூவில் எழுதியிருக்கிறார்.


அவை நாயகன் 

இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் இவர் தனது அவை நாயகன் வலைப்பூவில் 

நான்கு சக்கர ஓட்டுனர்களுக்கும்  எடுத்துரைக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரியாக இருப்பதால் விபத்துக் குறித்தும் ஸ்டாப் லைன் குறித்தும் எழுதியிருக்கிறார். பயனுள்ள பதிவு...


நன்றிகள் அனேகம் :

இந்த வாரம் முழுவதுமாய் ஆசிரியர் பொறுப்பேற்று எத்தனையோ வலைப்பூக்களைப் படித்து தமிழோடு வாழ்ந்திருக்கிறேன். 

பதிவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நிகழ்வை, அனுபவத்தை, அறிவுரையை இந்த சமூகத்துக்குச் சொல்லியிருக்கிறார்கள். 

இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பர்களே...
படிப்பதுவும் எழுதுவதும் நம் மொழியை அழகாக்கும்...





நன்றி வலைச்சரம் ஆசிரியருக்கு 
என்னை தமிழ் சுவாசிக்க வைத்ததற்கு... 




மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது