07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 1, 2013

சே.குமார் கபீரன்பனிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சகபதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் கபீரன்பன் தான் ஏற்ற பொறுப்பினை, கடும் பணிச்சுமைக்கு நடுவினிலும் மிகுந்த ஈடுபாட்டுடனும், கவனத்துடனும், பொறுப்புடனும்  சரிவரச் செய்து , மிகுந்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                                         : 007
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள்               : 037
இவர் அறிமுகப்படுத்திய பதிவுகள்                  : 073
இவர் பெற்ற மறுமொழிகள்                                 : 099
இவரது பதிவுகளைப் படித்தவர்கள்                 : 631


இவர் ஒவ்வொரு பதிவினை அறிமுகப் படுத்தும் போதும் தளத்தினைப் பற்றியும், பதிவினைப் பற்றியும் வேறு வண்ணத்தில் ஒரு சிறு குறிப்பு தருகிறார். படிக்கும் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். 

கபீரன்பனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆரவத்துடனும் இசைந்துள்ளார் நண்பர் சே.குமார். 


இவர் தேவகோட்டைக்கு அருகில் பரியன் வயல் என்ற சிறுகிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.  படித்தது எம்.சி.ஏ., 
திருமணம் செய்தது மதுரையில்... மனைவி நித்யா,  ஸ்ருதி, விஷால் என இரண்டு செல்லங்கள். 

சொந்தமாக கணிப்பொறி மையம், கல்லூரியில் வேலை, தினமணியில் வேலை எனச் சுற்றிவிட்டு தற்போது மையம் கொண்டிருப்பது அபுதாபியில்.

கதை, கவிதைகள் பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது தாமரையில் இவரது கவிதை வெளிவந்தது. பொன்னீலன் அவர்களால் பாராட்டப் பெற்றார். மனசு வலைத்தளத்தில் நான்கு வருடத்துக்கு மேலாக எழுதி வருகிறார். இவரது கருத்தப்பசு என்ற கதை வம்சி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் வந்திருக்கிறது. 
சிறுகதை தொகுப்பும் குறும்படமும் செய்ய ஆசைப்படுகிறார்....... ஆசை நிறைவேற நல்வாழ்த்துகள். 

நல்வாழ்த்துகள் கபீரன்பன்

நல்வாழ்த்துகள் சே.குமார்

நட்புடன் சீனா

பி.கு : நாளை 02.09.2013  திங்கள் அன்று எங்களது நாற்பதாவது ( 40 ) திருமண நாள்.   நட்புடன் சீனா. 
மேலும் வாசிக்க...

தேடித் தரும் தேன்சிட்டு-7



அன்பு  வணக்கம் அன்பர்கள் யாவருக்கும்.
தினமும் இந்த கரும்பலகையைக் கண்ட மாத்திரத்திலேயே பலருக்கு வகுப்பறை நினைவுகள் வந்து உள்ளே நுழையாமலே சென்று விட்டனர் போலிருக்கிறது.:))

கவலை வேண்டாம். இன்றோடு இந்த ஆசிரியர் பணி முடிந்தது.

அந்தக் கரும்பலகைக்கும் தினசரி தியானத்திற்கும் என் வாழ்வில் ஒரு பங்கு இருந்தது. அதை நினைவில் கொண்டு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே அதை இட்டு வந்தேன். என் வலைச்சர ஆசிரியப் பணியின் முதல் நாள் பின்னூட்டத்தில் திரு துரை செல்வராஜு என் எழுத்தை கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படி என் எழுத்தில் ஏதேனும் ஈர்ப்பு பிறர்க்கும் இருக்குமானால் அதற்குக் காரணம் இந்த தினசரி தியானமும் கரும்பலகையுந்தான்.

 செட்டிநாட்டு வாசத்தின் போது எங்கள் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத ஒரு கரும்பலகை வாயிலில் இருந்தது. 1988 லிருந்து 1993க்கு இடைப்பட்ட காலத்தில் நாள் தவறாது சுவாமி சித்பவானந்தரின் தினசரி தியானம் புத்தகத்திலிருந்து அந்தந்த தேதிக்குண்டான தலைப்புகளையும் கருத்துக்களையும் எழுதி அதை பயன்படுத்தத் துவங்கினேன். நாட்பட நாட்பட என் கையெழுத்துத் திருந்தி அன்றைய செய்தி எந்த அளவில் இருந்தாலும் சரியாக கரும்பலகை அளவிற்குள் எழுதும் திறமை பெற்று விட்டிருந்தேன்.அப்போது என்னளவில் நான் புரிந்து கொண்ட மாறுதல் அவ்வளவுதான்.

1993-ல் வேலை மாறி தில்லிக்கு குடி பெயர்ந்ததால் அவற்றோடு இருந்த தொடர்பு அறுந்து போனது.  2006-ல் வலைப் பூ ஆரம்பித்து எழுதும் போதுதான் புரிந்தது அதற்கான அடித்தளம் இறைவன் சித்தத்தால் 12 வருடங்களுக்கு முன்பே போடப்பட்டிருந்தது. என்னிடம் அந்த புத்தகம் இல்லாதிருந்தாலும் நினைவின் ஆழத்திலிருந்து தேவைக்கேற்றார் போல் எழுதுவதற்கான கருத்துகள் உதித்தன.

இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால் நம்மளவில் ஒரு நல்ல செயலை  தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்து வந்தால் அது சமயம் வரும் போது பிறருக்கு பயன் தரும் வகையில் ஆக்கம் பெறும்.  சுவாமி சித்பவானந்தர் வாழ்ந்த காலத்தில் சென்று அவரை தரிசிக்காமல் விட்டேன் என்ற வருத்தம் எப்போதும் உண்டு. அவர், முன்னாள் மத்திய அமைச்சர் பாரத்ரத்னா சி சுப்பிரணியம் அவர்களின் சிறிய தகப்பனார் ஆவார்.

அவரைப் பற்றி தன்  நினைவுகளைப் பகிர்கிறார் திரு வ சோமு இன்றும்  சுவாமிஜி நிறுவியிருக்கும் ஆசிரமம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல வகையான தொண்டு பணிகளை தமிழ் நாடெங்கிலும் செய்து வருகிறது.  ஸ்ரீ ராமகிருஷ்ண  தபோவனம்  என்னும் அவர்களது வலைத்தளத்தில் மேலும் விவரங்கள் காணலாம். அந்த மானசீக குருவுக்கு என் வந்தனங்கள்’
---------------------------------------------------------------

குருவை நன்றியுடன் நினைவுகூர்தல் யாவரக்கும் நல்லதே செய்யும்.  பாலகுமார் பள்ளி இறுதித் தேர்வில்  தனக்கும் தன் உடன் படித்த மாணவர்களுக்கும் மிகவும் ஊக்கத்துடன் கூடவே விளையாடி, நீச்சலடித்து சினிமா பேசி, பாடம் சொல்லிக் கொடுத்த தம்  ஆசிரியரைப் பற்றி அழகாக விரித்துரைக்கிறார் குருகுலம் என்ற இடுகையில்
பின்னர் மாலை முழுவதும் விளையாட்டுதான் பாரதி சொல்லி வைத்தது போல. கிரிக்கெட், குண்டு விளையாடுதல் , கிணற்றில் நீச்சல் அடித்தல் . பின் எப்படி கசக்கும் இந்த டியூஷன்..................... ---------- நாங்கள் படித்தது ஒரு அரசினர் பள்ளியில் (R வெள்ளோடு). எனக்கு தெரிந்து ஒரு வருடம் 10th ரிசல்ட்-ல் வாஷ் அவுட் ஆனது கூட உண்டு. ..................இரண்டு குழுவாக பிரித்து கரும்பலகையில் மதிப்பெண் இடுவார். வெற்றி பெறுபவர்களுக்கு பேனா , பென்சில் என்று எதாவது பரிசளிப்பார். ஒன்று சொல்ல ஆசை படுகிறேன். அவருக்கு கற்றுதருதலில் கண்டிப்பாக ஒரு காதல் இருந்தது..................இதிலென்ன சாதனை இருக்கிறது? உங்கள் கேள்வி நியாயமானதுதான். 30 ஆண்டு கால பள்ளி வரலாற்றில் இது போன்ற ரிசல்ட் அதுவே முதல் முறை 
 நல்ல எழுத்துத் திறன் உள்ள பாலகுமாரின் வானம் வசப்படும் வலைப்பூவில்  நினைவுகள்பகுத்தறிவு பற்றிய இடுகைகளும் எளிய நடையில் மனதில் இடம் பிடிக்கின்றன
------------------------------------------------------------------------------------------------------------
இன்றைக்கு ஒரு குட்டிச் சுற்றுலாவுக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார் அனுசூயா. இடம் : தான்சானியாவில் உள்ள ஜான்சிபார் என்ற தீவு
எப்படியோ காடு மேடு ஏறி இறங்கி அந்த இடத்துக்கு போய் சேர்ந்தோம். அங்க பார்த்தா ஒரு கிணறு மட்டும் இருந்துச்சு அதுக்கு 1 டாலர் கட்டணம் வேற. திட்டிக்கிட்டே வாங்கிட்டு பக்கத்துல போனோம். அப்பகூடவே ஒரு பையன் வழிகாட்டி பணி ​செய்ய டார்ச் எல்லாம் எடுத்துகிட்டு வந்தான். அத பார்த்து நாங்க சிரிச்சோம் சின்ன கிணத்த சுத்தி பார்க்க இவ்ளோ ஆர்பாட்டமானு. அப்புறம் அசட்​​டையா கிணத்து படில இறங்க ஆரம்பிச்சோம் கொஞ்ச தூரம் போன பிறகு அப்படியே மலைச்சு போயி நின்னுட்டோம்.
அம்மாடி எவ்ளோ பெரிய குகை அசந்து போயிட்டோம். மேல பாக்க வெறும் கிணறு மாதிரி சின்னதா இருக்கு ஆனா உள்ளே பெரிய குகை. ............ஆனா உள்ள ஆயிரக்கணக்கான அடிமைகளை மறைச்சு வெச்சுக்கலாம். அது மட்டும் இல்ல இந்த குகைல இருந்து 3 கிமீ தூரத்துக்கு குகை போகுது அது கடற்கரைல போயி முடியும். இங்க இருந்து அடிமைய நிலத்துக்கே கூட்டி வராம அப்படியே குகை வழியா கடற்கரைக்கு கொண்டு போயி கப்பல்ல ஏத்தி வெளி நாட்டுக்கு அனுப்பிடலாம். 
ஏதோ மர்மக் கதையின் தொடர் போல கொண்டு போகிறார். ஆப்பிரிக்க பஸ் பயணம் போட் பயணம் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம், அனு என்கிற பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் அனுசூயா மேடம் பயமறியா பாவையர் சங்கத்திலேயும் மெம்பர். இப்ப அவங்க எல்லோரும் என்ன பண்றாங்கன்னு தெரியல இவருக்கு புகைப்படம் எடுப்பதிலும், திரை விமரிசனம் செய்வதிலும் ஆர்வம் உண்டு.
-----------------------------------------------------------------
என்னால் மறக்கமுடியாத ஒரு இடுகை. எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்தது. அதன் தலைப்பு ‘ஒரு உளுந்து சாகுபடிக்காரனின் சாபம்’
......இந்தக் கடிதத்தை எழுதத் தோன்றிய காரணத்தையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.உளுந்து விலை உயர்வுக்காக நீங்கள் வருந்தியும் கோபமுற்றும் வருகிறீர்கள். உங்களுக்காக முதல்வரும் பிரதமரும் பதிலளிக்கிறார்கள்.  காய்கறி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை குறித்தும் உங்களுக்குக் கோபம் உண்டு.ஹமாம் சோப்பு விலை வருடம் தோறும் உயர்வது குறித்து நீங்கள் யாரும் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனிக்கு எதிராகப் போராடியதாக நான் கேள்விப்படவில்லை. பாட்டா செருப்பு விலை உயர்வு குறித்து உங்களில் ஒருவரும் பாட்டா கடை முன் உரக்கப் பேசுவது கூட இல்லை. தேநீர் ஒன்று 5 ரூபாய்க்கும் 4 ரூபாய்க்கும் விற்கப்படுவதை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை.தண்ணீர் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்கப்படுவதையும் அதை நீங்கள் வாங்குவதையும் பார்க்கும் எங்கள் வயிறு எரிகிறதுதான்.....
ம. செந்தமிழன் என்பவர் காட்சி என்னும் வலைப்பூவில் எழுதியிருக்கும் இந்த திறந்த மடல் விவசாயிகளின் பிரச்சனைகளை அடுக்கடுக்காக எடுத்து வைக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.
காட்சி என்னும் வலைப்பூ எழுத்தார்வம் உள்ளவர்களின் ஒரு கூட்டு முயற்சி. பல்வேறு விஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்லும் ஒரு வலையிதழ். மேலும் அறிய....
-----------------------------------------------------------------------------------------------------
இதுநாள் வரை நான் அறிமுகப்படுத்த முனைந்ததெல்லாம் எனக்கே முதன்முறையாக படிக்க நேர்ந்த நல்ல எழுத்து வளமை உள்ள ஆசிரியர்களின் வலைப்பூக்களே. கூகிள் ரீடர் மூடப்பட்டுவிட்டதால் பல நல்ல பழைய இடுகைகளைத் தேடுவது முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. வலைச்சரத்தில் என்னால் குறிப்பிடப்பட்ட ஆசிரியர்களுக்கே தகவல் தெரிவிக்க இயலாத அளவு பணிச்சுமை, பின்னூட்டத்திற்கு பதில் அளிப்பதில் தாமதம் என்பதாக பல பிரச்சனைகளுக்கிடையே ஒருவாரம் ஓடிவிட்டது. பதிவர்களையும் இடுகைகளையும்  வகைப் படுத்தி  ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் வெளியிட ஆசை இருந்தாலும்  தற்போதைய என் சூழ்நிலையில் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.
என்னால் முடிந்த அளவுக்கு வலைச்சரத்திற்கு அதிகம் அறிமுகமில்லாப் பதிவர்களை அறிமுகம் செய்துள்ளேன். இங்கே புதுப்புது ஆசிரியர்கள் வந்து இன்னும் பல முத்துக்களைக் சரத்தில் கோர்க்கப் போகிறார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பாக எழுதி வலைச்சரத்திற்கு புகழ் சேர்க்கட்டும் என வாழ்த்துகிறேன். வாய்ப்பு நல்கிய அன்பின் சீனா சாருக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அடுத்து பொறுப்பேற்க இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்

 ஔவைப்பாட்டியின் வழியில் நானெழுதிய வாழ்த்துப் பாடல்
பெரியது கேட்பின் வலைச்சர மேலோய்..

பெரிது பெரிது வலைப்பூ பெரிது
வலைப்பூவோ ப்ளாகர்தம் படைப்பு

ப்ளாகரோ கூகிளுக்குப் பிறந்தோன்.
கூகிளோ இணையக் கடல் துயில்வோன் 

இணையமோ மென்பொருளில் அடக்கம்
மென்பொருளோ சர்வருள் ஒடுங்கும்

சர்வரோ கணிப்பொறிக் கடிமை
கணிப்பொறியும் எலியதன் தயவில்

எலியதோ வாசகர் விரற் சொடுக்குள்
வாசகர் பெருமை சொல்லவும் பெரிதே ஏஏ  :))
 என்னுடைய 2009 ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தும் நினைவுக்கு வந்தது அது எல்லா நாட்களிலும் எல்லா பதிவர்களுக்கும் பொருந்தும் என்பதால் இங்கே மீண்டும் நினைவுகூர்ந்து வாழ்த்துகிறேன்.

நில்லாத நீர் போலே ஓடும் காலம்
உலர்ந்த சருகானது கழிந்த காலம்
எல்லையில்லா மகிழ்வு தரும் புது நீரும்
புலருட்டும் நாளையொரு பொற்காலம்

தினம் ஒரு பூ மலரட்டும் தங்கள் பதிவிலே
      அன்பின் மணம் பரப்பட்டும் உலகிலே
      பின்னூட்டம் பாராது எழுதி குவிப்பீர்
       பின்னாலே வருவர் படிப்பவர் கோடி
வற்றாது பெருகும் வாசகர் எண்ணிக்கை  பெரும் அணி
போற்றிடும் என்றும் நுமது எழுத்துப் பணி
அன்பிலே வார்ப்பீர் எண்ணங்களின் தொனி
காலத்தால் வாடாது அன்பின் மொழி
                                                                                        - கபீரன்பன்

--------------- நன்றி  ;  வணக்கம் ---------------------------
மேலும் வாசிக்க...

Saturday, August 31, 2013

தேடித் தரும் தேன்சிட்டு -6



அன்பு வணக்கம் அன்பர்கள் யாவருக்கும்.
இன்றைக்கு நாம் திரட்டப்போகும் தேனுக்குப் பெயர் திண்மைத் தேன். அதற்கெனவே சில வலைப்பூக்கள் அவ்வப்போது சிற்சில மிக அரிய விஷயங்களைத் திரட்டி வைத்துள்ளன. அவற்றைப் பிரித்தெடுத்து படிப்பதால் நமது மனத்திண்மை கூடும். வாழ்க்கையின் சாரம் புரியும்.
 -----------------------------------------------------------------
Inspire Minds to change Lives     என்கிற வலைத்தளத்தின் தமிழ் வடிவில் பல இளம் சாதனையாளர்களின் உழைப்பும் வெற்றியையும் விரிவாக எடுத்து சொல்கிறது.
பக்கத்து ஊரான திசையன்விளை வரை சைக்கிளில் போய் டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர், ஊர்க் காரர்களுக்கு உதவ, விறகு வாங்கித் தருவதையே ஒரு தொழிலாக ஆரம்பித்தார். “அடிக்கடி சைக்கிள் பஞ்சரானதால் பஞ்சர் ஒட்ட கற்றுக்கொள்ள, சாத்தான் குளத்தில் முதல் முதலாக ஒரு பஞ்சர் ஒட்டும் கடை போர்டுடன் உருவானது. கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டும் அட்மிஷன் கிடைககவில்லை. மனம் வெறுத்துப் போன சங்கரலிங்கத்திடம், கடையைக் கவனத்துடன் கவனித்துப் பெரிதுபடுத்தும் யோசனையைச் சொல்லி ஆறுதல்படுத்தினார் தந்தை. ஆனாலும் அந்த இளைஞனின் மனத்தில் சாதிக்க வேண்டும் என்று கனன்று கொண்டிருந்த கனல் மெல்ல அனலாகி, உயரங்களைத் தொட நமக்கு வேண்டியது இந்தக் கிராமத்தில் இல்லை என்ற முடிவோடு கையில் முந்நூறு ரூபாயுடன் கோவைக்குப் பயணமானார்.........
என்று போகிறது  சங்கரலிங்கத்தின் பாதையில் பூக்களில்லை முட்கள் மட்டுமே   என்கிற  கட்டுரை. இவருடைய போராட்டத்தைப் போலவே  இன்னும் சிலருடைய வெற்றிகளும் இந்த வலைத்தளத்தில் காணலாம்  1)  டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி  2) எட்டாம் வகுப்புத் தேர்வை எழுதும் 60 வயதுப் பெண்

இப்படி பல தமிழ் நாட்டு சாதனையாளர்களை அவர்கள் வலைத்தளத்தில் காண முடிகிறது. மிக அருமையான தளம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------------
இன்னொரு அதிசயமான மனிதரைப் பற்றி  ரைட் மந்த்ரா என்கிற வலைதளத்தில் ஒரு நேர்காணல் வெளி வந்திருக்கிறது.
அண்ணல் காந்தியை பற்றி ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னபோது, “இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதையே வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” என்றார்.
 அதே வார்த்தைகள் இவருக்கும் 100% பொருந்தும். என்ன ஒரு சின்ன திருத்தம். இவரை பற்றி கூறினால் இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று நிகழ் காலத்திலேயே நம்ப மறுப்பார்கள் 
 இவர் 35 ஆண்டு காலம் நூலகராகப் பணியாற்றியவர். இந்தியாவின் தலைசிறந்த நூலகராகவும் உலகத்தின் பத்து சிறந்த நூலகர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர். ஐக்கிய நாட்டு சபை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்று போற்றி பாராட்டியது. பில் கிளிண்டனின் இந்திய விஜயத்தின் போது சந்திக்க விழைந்த இருவரில் இவரும் ஒருவர். அவர் பெயர் பாலம் கலியாண சுந்தரம்.    அவருடைய அபூர்வமான சாதனைத்தான் என்ன ? இந்த இணைப்பை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடாமல் உடனே படித்து முடியுங்கள்

right mantra வலைத்தளம் மேலும் பல அபூர்வ சாதனையாளர்ளை நேர் காணல் செய்து அவர்களின் சாதனைகளை உலகுக்கு அறிவிக்கிறது.வாழ்க அவர்கள் நற்பணி.  இந்த வலைத்தளத்தை நடத்திவரும் சுந்தர் அவர்கள் தன்னைப் பற்றியும் தன் குறிக்கோள் பற்றியும் சொல்லியிருப்பதே பல இளைஞர்களுக்கு உற்சாகம் தர வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.
 -----------------------------------------------------------------------------------
 ஒன்பதாம் வகுப்பு வரையில் மட்டுமே படிக்க முடிந்த திரு அ. முருகானந்ததின் வாழ்க்கைப் பாதை எவ்வளவு கடினமாயிருந்தது என்பதையும் மகளிருக்கான மலிவு விலை சானிடரி நாப்கின்ஸ் தயாரிப்பு முயற்சியில் அவர் பட்ட கஷ்டங்களையும் சொல்லி முடியாது. அவரது பயணத்தை தொடுவானம் சற்றே தொட்டுப்பார்க்கிறது. நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் அவருடைய சாதனையைப் பற்றிய கட்டுரை, காணொளி யாவற்றையும் காணலாம்.

அவர் நகைச்சுவையாய் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது பார்த்து ரசிக்க வேண்டியதொன்று. இதோ உங்களுக்கான காணொளி. TED TALKS
[ TED Talks என்பது மிக உயர்ந்த சாதனையாளர்களின் வெற்றியை பறைசாற்றும் வகையில் அவர்களை அழைத்து பேசச் சொல்லும் உலகளாவிய ஒரு முயற்சி. அதில் பேச அழைக்கப்பட்டு திரு முருகானந்தம் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பதே மிகப் பெரிய விஷயம். இந்த கருத்தரங்கில் பார்வையாளராக அமர்வதற்கே பல நூறு டாலர்கள் வசூலிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்]

இவருடைய சிறப்பான குணம் தன் உழைப்பின் வெற்றியை சுய வேலை வாய்ப்பு மகளிருக்கான முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்திருக்கிறார்.
தொடுவானத்தின் ஆசிரியர் காளிதாஸ் முருகய்யா. இவர் முருகானந்தத்தை பற்றி மட்டுமல்லாது வாழ்க்கை கோலங்கள் என்கிற தொடரில் சாதனைப் படைத்தலைப் பற்றி நிறைய எழுதி வருகிறார்.  அழகான கோலங்கள் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியவை
------------------------------------------------------------------------
 ஏற்கனவே நாம் இருவரின் உதாரணத்தில் இதைக் கண்டிருக்கிறோம். 
முதல் நாள் தூப்புக்காரி நாவலாசிரியர் மலர்வதி அவர்களைப் பற்றிய சந்திப்பு உரையாடல். எப்படி பள்ளிக்கூடப் படிப்பைக்கூட முடிக்க முடியாத ஒருவர் தம் விடாமுயற்சியாலும் திறமையாலும் தனக்கென சமூகத்தில் ஒரு அடையாளம் காட்டிக் கொள்ள இயலும் என்பதை அவருடைய வெற்றி சொல்லித் தருகிறது.

அடுத்து நாம் கண்டவர் ஜனா. எவ்வளவு பேர் அந்த ஆலிலைக் கிருஷ்ணனின் இணைப்பைச் சுட்டி ஜனாவின் வரலாற்றைத் தெரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை. கைகளை இழந்த பாலகன் தன் வாயினாலேயே எழுதுவதும் ஓவியம் வரைவதும் செய்து காட்டி தன்னம்பிக்கை உள்ளவர்களால் முடியாதது கிடையாது என்பதை உறுதி செய்திருக்கிறார்.
 ----------------------------------------------------------------------------------------
 இச்சாதனையாளர்களின் முன் நான் ஒரு துரும்பு போல் உணர்கிறேன். என்னால் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா என்பது போன்ற எண்ணங்கள் அவ்வப்போது வருகிறது. இறைவன் அவர்களைப் பற்றி உங்களிடமெல்லாம் பேச வைத்திருப்பதே இந்த கணத்தில் என்னால் முடியக் கூடிய தொண்டு.  அதற்காக வலைச்சரத்திற்கு நன்றி

இன்றோடு ஆறாவது நாள் பணி நிறைவடைகிறது. என்னோடு இவ்வளவு தூரம் பொறுமையுடன் வந்து கொண்டிருப்பவர்களுக்கு நன்றி. இந்த நாள் இனிய நாளாகட்டும்.
மேலும் வாசிக்க...

Friday, August 30, 2013

தேடித் தரும் தேன்சிட்டு-5

 தினசரி தியானம்; ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்  திருப்பராய்த்துறை

வணக்கம் யாவருக்கும்.   இன்றைக்கு சுற்றுக்கு ரெடியா ?
இன்றைக்கு ஒரு மாதிரிதான் ! ’ஒருமாதிரி’-ன்னா கவலைப்படணும்-கைவிடப்பட்ட கேஸ்.   ஆனால் பிரிச்சு ’ஒரு மாதிரி’ ன்னு எழுதினால் அதை ‘ஒரு உதாரணம்’ என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா?

வலைப்பதிவர் ஹிலால் முஸ்தாபா, அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ் புலவர் (தங்கபதக்கம்) பட்டம் பெற்றவர். அவருடைய பேச்சுப் பிரதேசம்-’எது மாதிரியும் அல்ல இது ஒரு மாதிரி’ என்று இரட்டைப் பொருள் வரும்படி எழுதியிருந்ததே என்னை அவருடைய வலைப்பூவில் கணிசமான நேரம் பிடித்து வைத்தது. நேரடியாக வெளிவரும் அவருடைய எழுத்து படிப்பவர் மனதை உடனே சென்று அடைகிறது. அது கதையாகட்டும் கவிதையாகட்டும் ஈர்ப்பு ஒரே மாதிரி தான்.
எதுவும் வரட்டும் துணிகின்றேன்!
நிறைவோ , குறைவோ வெறுப்பில்லை - நீ
நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை!
புத்தகம் ஆயிரம் படித்துவிட்டேன் - என்
புத்தியால் அதனைப் பிடித்துவிட்டேன்!
செத்ததும் எதுவும் தொடர்வதில்லை - என்
சிந்தனை அங்கே படர்வதில்லை!

 ‘எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்  என்ற கவிதையில்.

  இது எப்படி நடந்தது என்று தம் சுயசரிதத்தை சொல்லும் கட்டுரைத் தொடரும் வாழ்வின் திருப்புமுனைகளை சுவையாக சுட்டிக்காட்டுகின்றன. படிப்பில் தன் பின்தங்கிய அனுபவத்தை சொல்கிறார் 
 எக்ஸாம் நெருங்கி விட்டது. நான், என் கூடப் படித்த மாணவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டேன். கல்கத்தா போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கு நின்றிருந்த ஒரு ரயிலில் ஏறி சென்று விட்டோம். அரக்கோணத்தில் டிக்கெட் பரிசோதகர் பிடித்துக் கொண்டார். பள்ளிக் கூட புத்தகப் பையோடு நாங்கள் இருந்ததால் எங்களை மீண்டும் சென்னைக்குத் திருப்பி அனுப்பி விட்டார்.
மற்றொரு இடுகையில் அவருக்கு சிதம்பரத்தில் இருந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
ஒரு நாள் நல்ல வெயில் நேரம். மதியம். நகரத்தார் சத்திரத்தில் உள்ளே உள்ள கருங்கல் முற்றத்தில் நானும் ஐயாவும் உட்கார்ந்து வழக்கம் போல் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஐயா நல்ல தமிழறிஞர், அதே அளவு ஆங்கிலப் புலமை உள்ளவர். நகரத்தார் சத்திர வாசலில் ஒரு யாசகரின் பிச்சை ஒலி கேட்கிறது. ஐயா வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். நான் அவருக்கு எதிரே இருக்கிறேன். என் பிடரிக்கு பின்னால் வாசல் இருக்கிறது. ஐயா யாசகரை பார்த்து விட்டு திடுக்கிற்று "ஹிலால் திரும்பிப் பார், திரும்பிப் பார்" என்று சத்தமிட்டார். நான் உடனே திரும்பிப் பார்த்தேன். வாசலில் ஒரு சினிமாக் காட்சிப் போல் இருந்தது. யாசகர் தலைக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் நாங்கள் இருவரும் பார்க்கும் போது தோன்றி, நின்று மறைந்தது. யாசகம் கேட்டவர் எதையும் பெறாமல் வீதியில் இறங்கி நடக்கலானார். ஐயா பதறிப் போய் எழுந்து வாசலை நோக்கி ஓடினார்.அவர் ஓடியதால் நானும் ஓடினேன். வீதியில் இறங்கி யாசகரைப் பார்த்தோம். அவர் அங்கே தென்படவே இல்லை.  
மேலும் அறிய  குங்குலியம் செட்டியார் பற்றி படிக்கவும்.

ஹிலால் முஸ்தாபா பக்கீர் என்ற கதையில் எளியவனின் மனப்போராட்டத்தை சித்தரிக்கிறார் 

ஒரு நல்ல தமிழ் வளமுள்ள வலைத்தளம் ‘பேச்சுப் பிரதேசம்.

---------------------------------------------------------------------------------------------
அடுத்து நம் கவனத்திற்கு வருவது ’கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்’ அவருடைய பெயரை வைத்தே சொல்லிவிடலாம் இவர் ராணுவ வீரர் என்று. திருவாரூர் அருகில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் அண்டார்டிகா-தென் துருவத்தை - வெற்றி கொண்டவர்.
“அண்டார்டிகா ( தென்துருவம் ) -வில் உள்ள, “தக்‌ஷின் கங்கோத்ரி “ என்ற இந்திய ஆய்வு மையத்தின் தலைவராகத் திகழும் வாய்ப்பைப் பெற்றது எமது வாழ்விலோர் அதிசயம்! உலகிலேயே கொடுமையான குளிரும் ( -89.6C ), பனிக்காற்றும் ( 300 KM/Hr ) நிறைந்த அண்டார்டிகா ஒரு உலக அதிசயம். 480 நாட்கள் உலகத்துடன் எந்தத் தொடர்பும் இன்றி எமது தலைமையில் இயங்கிய இந்திய ஆய்வுக் குழு மகத்தான சாதனைகள் புரிந்து அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளின் தென் துருவ ஆய்வுக் குழுவினரின் பாராட்டுதலைப் பெற்று நாடு திரும்பினோம்” 
இவருடைய பதிவுகள் நிர்வாக இயலில் விருப்பம் உள்ளவர்களுக்கு மிகவும் விருப்பத்தைத் தரும். எண்ணங்களே வாழ்க்கை,  மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல தலைப்புகளை இவரது எழுத்து ஆட்கொள்கிறது. இவற்றில் விசேஷம் என்னவெனில் இவைகள் சொல்லவருவதை ரத்தினச் சுருக்கமாக சொல்லுகின்றன.
அகத்தூண்டுதல்கள் வாசகர்களுக்கு நல்ல சிந்தனைகளை வழங்க முயலும் வித்தியாசமான வலைப்பூ
 -------------------------------------------------------------------------------
 அடுத்து நாம் பார்க்கப் போவது ஒரு எழுத்தாளரது வலைப்பூ சில நேரங்களில் சில கருத்துகள் அவர் பெயர் பத்ரிநாத்
1995 முதல் 2000 வரையிலான ஒரு வித மன எழுச்சியில் எத்தனை கதைகள் எழுதினேன் என்பதே தெரியவில்லை.. உருப்படியாக 100 சிறுகதைகள் தேரும்.. ஒரு நாவல் ஒன்றும் எழுதினேன்.. 100ல் பெரும்பான்மை கதைகள் புத்தமாக வந்திருக்கிறது. 5 தொகுதிகளாக பிளஸ் ஒரு நாவல்.....
 படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத மிகச் சிறிய பதிவுகள். தன் கருத்துகளை முன் வைக்கும் போது கருத்து என்ற அளவிலேயே நிறுத்தி கொள்ளும் எளிமை எனக்குப் பிடித்திருக்கிறது.
அவர்கள் பேசிய விதம் body language பிற கலைஞர்களை பாராட்டும் விதம், தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தது ஆகியவை வைத்துப் பார்க்கும் போது “சே எத்தனை வெள்ளெந்தி மனிதர்களாக இருக்கிறார்கள்“ என்பது தெரிந்தது. அடித்துச் சொல்ல முடியும் ஒரு இம்மிளவுகூட கர்வமில்லாத வீண் வறட்டு கௌரவமில்லாத பேச்சு சிரிப்பு etc etc., சாதாரணமாக ப்ளாக் எழுதினாலே (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஏதோ கொம்பு முளைத்தைப் போல எண்ணும் சாதாரண மனிதர்கள் முன்பாக இந்தப் பிறவி திறமையாளர்கள் ஒரு இமயமலையைப் போலத் தெரிகிறார்கள்..
இப்படி யாரைப் பாராட்டுகிறார் இவர் ? அங்கேயே போய் பார்த்துவிட்டால் போச்சு.
[ இந்த வலைப்பூவின் முகப்பு டெம்ப்ளேட் சற்று குழப்பம் தருவதாக உள்ளது  ஏதோ ஒரு வணிக சம்பந்தமான முகப்பு. சற்று கூர்ந்து கவனித்ததில் அப்படி ஏதும் இல்லை என்பது புரிந்தது ]

மக்களிடம் புத்தகங்கள் சஞ்சிகைகளைப் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று கருதுகிறார்.  அவர் எழுதியிருக்கும் சில சிறு கதைகளுக்காக த்னியாக ஒரு வலைப்பூ BADRI STORY  என்ற பெயரில் வைத்து இருக்கிறார்.
 சிறுகதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அது கண்டிப்பாக பயன்படும்.அவருடைய எழுத்துப்பணி மேலும் தொடர்வதாக.
---------------------------------------------------------------------------------------------
  வளர்ந்து கெட்டவன் என்கிற வலைப்பூவில்  ஜனரஞ்சக மொழியில் அப்பட்டமான உண்மைகளை போட்டு உடைக்கிறவர் வளர்ந்து கெட்டவன். இரண்டுமே ஒன்றுதான். நம் சுதந்திரத்தின கொண்டாட்டத்தின் போது அவருடைய இடுகையில் சாடுகிறார்
................ஆனால் ...!!!. டேய் முட்டா பயலுகளா , எதிரிகள்  இந்த நாட்டுக்கு எதிராக ஒட்டி  வரும் டாங்கிகளும், பீரங்கிகளும் , , போர் படை விமானங்களும் உங்கள் கண்ணுக்கு சிக்க போவதே இல்லை ...ஏன் தெரியுமா ???/
அவைகளின் பெயரே  வேற ...
1.மொன்சாண்டோ,போஸ்கோ,ஹுவாய் ,வால்மார்ட், போர்ட் ,ஹயுண்டாய் , சி .என் ..என். ஸ்கை , ஒனிக்ஸ் ,இன்னும்,...இன்னும்..பன்னாட்டு கம்பெனிகள் என்ற போர்வையில் வரும்   அவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டு ஒற்றகளாக .......... !
... ஒரு கவிஞன் சொன்னதைப்போல 'நீ இந்த பட்டு கோவணத்தை பற்றி கனவுகண்டு கொண்டிரு , உன் இடுப்பில் இருக்கும் ஒற்றை கோவணமும் களவு போகும்.!!!!!
 இவர் பொள்ளாச்சி மண்ணைச் சேர்ந்தவர் என்பதை ,,,, மாநகர வரவேற்பு அறிமுக இடுகையில் தெரிய வருகிறது 
. .......15 வருடங்களுக்கு முன் ... ஒருஅதிகாலை போழுது,.. 'பொள்ளாச்சி'ல  பிழைக்கத் தெரியாத பையன் எந்த ஊர் போனாலும் பொழைக்க மாட்டான்'  என்ற எங்க ஊர் பழமொழியை பொய்யாக்க புறப்பட்டு சென்னை வந்து இறங்கிய அந்த நாள்  நினைவுகள் ....
... முதல் முதலாக 'மெட்ராஸ்' (கவனிக்கவும் சென்னை..அல்ல ) என்ற மாநகரில் காலடி எடுத்து வைக்கபோகிறோம் என்ற நினைப்பே பயம் கலந்த ஒரு சந்தோஷம்,அதுவும் யாருடைய துணையும் இன்றி ஒரு குருட்டு தைரியத்துடன் தனியாகவே புறப்பட்டு வந்தது.......
 சென்னையில் செம்புதாஸ் தெருவில் தன் அலுவலகத்தின் புதுக்கிளைக்கு மாற்றலாகி வந்த கதையை சென்னை மக்களின் வார்த்தைகளிலேயே விவரிக்கும் போது இவருக்குள் இருக்கும் எழுத்தாளனின் திறமை தெரிகிறது.
மேலும் நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து எழுதி  ஒரு நல்ல வலைப்பூவாக இவரது உழைப்பு மலரட்டும் என்று வாழ்த்துவோம். .
-----------------------------------------------------------------------------
இன்னும் இரண்டு நாள் தான். பின்னூட்டமிட்டு வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. மீண்டும் நாளை சந்திப்போம். வாழ்க வளர்க

மேலும் வாசிக்க...

Thursday, August 29, 2013

தேடித் தரும் தேன்சிட்டு-4

தினசரி தியானம்  ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்  திருப்பராய்த்துறை

வணக்கம்  அன்பர்களே !  கோகுலாஷ்டமி கொண்டாட்டங்கள் முடிந்ததா? 
இன்றைக்கு நம்முடைய சுற்றுலா ‘தமிழ்த் தேன்’ - இதை எழுதும் பொழுதே ஒரு சந்தேகம்.
தமிழ்த் தேன் அல்லது தமிழ் தேன்  எது சரி ? 

இது எல்லோருக்கும், அதாவது என்னை மாதிரி முறையாகத் தமிழ் இலக்கணம் படிக்காமல் தடவித் தடவி எழுதுகிறவர்களுக்கெல்லாம் வரக்கூடியது தான். இந்தப் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கப் போகிறது. அதற்கு இணையத்துலேயே ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். முதலில் கிடைத்த வலைப்பூ கவிக்கோ திரு ஞானசெல்வன் அவர்களின் நல்ல தமிழ் என்ற வலைப்பக்கம் . தினமணிப் பத்திரிக்கையில் தொடராக வந்த இந்தக் கட்டுரைகளை வலைத்தளத்தில் திருவேங்கடம் என்னும் அன்பர் நல்லபடியாக நிர்வகித்து வருகிறார்.

நல்ல வேளையாக அவர்களே ” நல்ல தமிழ்” என்று எழுதிவிட்டபடியால் ”எது சரி ’நல்லத் தமிழ்’ அல்லது நல்ல தமிழ்” என்கிற குழப்பம் வரவில்லை. கூடவே ஒரு தெளிவும் வந்த மாதிரி இருந்தது ‘ல’ மெல்லின வர்க்கத்தை சேர்ந்ததால் வல்லின வர்க்கத்தின் ”த” ஒற்று பெறாமல் வரும் போலிருக்கிறது என்று நினைத்தேன். அப்படியானால் அதே மெல்லினத்தை சேர்ந்த “ழ” வைத் தொடரும் ‘த’ வும் ஒற்று பெறாமல் உச்சரிகபடவேண்டும். ஆகவே தமிழ் தேன் சரி என்று நினைத்தேன். 
அப்படியே அவர்கள் உதாரணங்களுடன் பிழை -சரி ஒப்பிட்டு காட்டியிருக்கும் பட்டியலைப் பார்வையிட்டேன். அங்கே தமிழ்த் தாய் சரி என்றும் தமிழ் தாய் பிழை என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  


 
 போச்சுடா ! அப்படியானால், ஒற்று மிகுத்து வரும் தமிழ்த் தேன் என்பதுதான் சரியானது எனத் தோன்றி அப்படியே எழுதி வைத்தேன்.  மிகுத்து /மிகுந்து எது சரி? -அன்பனே நீ இப்படி யோசித்துக் கொண்டிருந்தால் கட்டுரையை எழுதி முடிக்கப் போவதில்லை என மனம் பயமுறுத்தியது.  தெரிந்தபடி எழுதி முடி, வாசக அன்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று சொல்லியது . சரி, கண்டிப்பாக வந்து நிதானமாகப் படிக்க வேண்டிய பாடங்கள் இவை என்ற முடிவுடன் தேடலைத் தொடர்ந்தேன்  [என்ன! ரிடயரான பிறகா, மனசாட்சி கேலி செய்கிறது ].   

இதோ நீச்சல்கார(ர்)ன்  ஒரு ஜாவா மென்பொருளை மெனக்கெட்டு தயாரித்திருக்கிறாரே ! நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி  என்னும் இந்த மென்பொருள்  நன்றாகவே வேலை செய்கிறது என்பதை கீழ் கண்ட உதாரணத்தில் பார்க்கலாம்.


இதிலும் தமிழ் தேன் என்பதை சந்தேகத்தில் வகைப்படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழ்த் தேன் என்பதில் எவ்வித சந்தேகத்தையும் எழுப்பவில்லை. இரண்டு தவறுகளை வேண்டுமென்றே செய்து பரிசோதித்தேன். அவைகளை பரிந்துரையில் சரியான முறையில் சுட்டிக் காட்டியுள்ளது. மிக அற்புதமான ஒரு மென்பொருள். வாழ்த்துகள் நீச்சல்காரன். தங்கள் தமிழ்சேவை இன்னும் நல்ல முறையில் தொடரட்டும்.   அவருடைய இன்னொரு வலைப்பக்க மென்பொருள் தமிழ் புள்ளி. இது பலவகையான கோலங்களின் வடிவங்களை நம் தேவைக்கு ஏற்ப கணிணியில் போட்டுக் காட்டுகிறது. பெண்களுக்கு மிகவும் பயன்படும். அதையும் ஸ்மார்ட் ஃபோன் மூலம் செய்ய முடிந்தால் இன்னும் அமர்களமாயிருக்கும்!  

 என்னை விட சற்று மேல் தட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு  ஒரு அருமையான வலைப்பூ பசுபதிவுகள் மலர்ந்திருக்கிறது . பேராசிரியர் பசுபதி மரபுக் கவிதைகளுக்கான இலக்கணத்தை படிப்படியாகச் சொல்லிக் கொடுக்கிறார். இப்போது கவிதை இயற்றிக் கலக்கு என்ற பெயரில் அது புத்தகமாகவும் வெளி வந்துள்ளது  இது பல வருடங்களாக அவர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். அதைத் தவிர பழங்கால சஞ்சிகைகளிலிருந்து பல கிடைத்தற்கரிய தகவல்களை, துணுக்குகளை சித்திரங்களை யாவருடனும் பகிர்ந்து வருகிறார். கிடைத்தற்கரியத் தேன் இது. பிடித்துக் கொள்ளுங்கள்.    

   ஒவ்வொருவருக்கும் தமது தாய் நாட்டின் பெருமையை புகட்டினால் நாட்டுப்பற்று ஓங்கும் அது போல அவரவர் தாய் மொழி பிறரால் எப்படி மதிக்கப்படுகிறது என்பதை அறியும் போது மொழிப்பற்று ஓங்கும். அப்படி பிற தேசத்தவர் அறிய வேண்டுமானால் நல்ல தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவர்களால் போற்றப்பட வேண்டும். அப்படி மொழியாக்கம் செய்பவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு பிற மொழிகளில் அபார தேர்ச்சிப் பெற்றிருந்தால் மட்டுமே  இந்த மண்வாசனையை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். பிற மொழியினவர் வந்து தமிழ் கற்று மொழியாக்கம் செய்வதில் அவர்கள் மண்வாசனையை இழந்து விடுவார்கள்.  முனைவர் மு இளங்கோவன், புதுச்சேரியில் வசிக்கும்  மதனகல்யாணி அவர்கள் சிலப்பதிகாரத்தை பிரஞ்சு மொழிக்கு மொழியாக்கம் செய்திருப்பதைத் தெரிவிக்கிறார். மேலும் அவருடைய வலைப்பூவில் பல தமிழறிஞர்களைப் பற்றியும் அவர்களது தமிழ்த் தொண்டு பற்றியும் தொடர்ந்து வாசகர்களுக்கு எழுதி வருகிறார்.
-------------------------------------------------------------------------------------------
கதியால்கள் என்ற  வலைப்பூவின் ஆசிரியர் குணேஸ்வரன் புலம் பெயர்ந்தவர்களிடையே  தமிழ் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக வேற்றுநாட்டு அடையாளம் முழுதாக தமிழைக் காவு கொள்ளும்முன்னர் உணர்வாலும் செயற்பாட்டாலும் தமிழராய் உணர்தல். இது புலம்பெயர்ந்த முதற்தலைமுறைக்கு பிரச்சினையல்ல. அவர்களின் இரண்டாந் தலைமுறையினருக்குரிய பிரச்சினை. எனவே மொழிவழியாகப் பண்பாட்டைக் கடத்துவதற்கு ஒரு முயற்சியாகத்தான் தமிழைக் கற்கவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றனர். நான் யார்? என் தாய்நாடு எது? எது என் தாய்மொழி? ஆகிய கேள்விகள் எழும்போதுதான் தாய்நாடு பற்றியும் தமது மொழி பற்றியும் தமது பண்பாடு பற்றியும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய நிலையும் தமது வேர்களைத் தேடவேண்டிய நிலையும் வருகிறது
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் கல்வி  என்னும் கட்டுரையில் ஈழத் தமிழரின் புது சூழ்நிலைகளிலும் தமது கலாசாரத்தையும் மொழியையும் போற்ற வேண்டிய கடமையை விரிவாக விவரிக்கிறார். 
முதலில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஆளுமைகள் சிந்திக்கவேண்டும். அவர்களிடம் இருந்துதான் எதனைப் பிள்ளைக்குப் போதிக்கலாம். அதற்கு எவ்வாறான ஒழுங்குமுறைகளை (அகராதிகள் உருவாக்குதல். சொற்களஞ்சியத்தை உருவாக்குதல், பொருத்தமான கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம், பாடநூல், ஆசிரியர் பயிற்சிகள்) செய்யலாம் ஆகிய திட்டங்கள் வரவேண்டும். இம்முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதும் அறியப்படுகிறது. எனவே தமிழ் அடையாளத்தை தமிழ் மொழிவழியூடாக புதிய தலைமுறைகளுக்குக் கடத்துவதே இன்று எமக்குள்ள ஒரு வழியாகும். அதனூடாகத்தான் தமிழ்மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இனத்தையும் எதிர்காலத்தில் வாழவைக்கமுடியும்.
குறிப்பாக வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் மேல் கொண்டுள்ள காதல் தமிழ் நாட்டில் வாழும் குடிமக்களுக்கே இல்லாமல் போவது தான் விந்தை. இங்கே  புத்தக வெளீயீட்டில் தமிழ் சந்தைப் படுத்தப்படுவதைத் தான் பார்க்க முடிகிறது.
 -----------------------------------------------
இந்த சந்தைப்படுத்தும் நுணுக்கத்தைப் பயன்படுத்தி தொலைக்காட்சி ஊடகத்தின் மூலம் தமிழ் ஆர்வத்தை ஏன் தூண்டக்கூடாது என்பதை   முள்ளை முள்ளால் எடு  என்னும் என்னுடைய பழைய கட்டுரை ஒன்றில் எழுதியிருப்பதும்  நினைவுக்கு வருகிறது.
 தனியார் நிறுவனங்கள், தொலைக்காட்சியினர் இணைந்து பன்னிரண்டு முதல் பதினாறு வயது குழந்தைகைகளுக்கு ஆத்திச்சூடி ஆசாரக்கோவை, நன்னூல், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற நூல்களிலிருந்து அந்தாக்க்ஷரி, பொருளுரைத்தல், விட்ட இடத்திலிருந்து தொடருதல் என்பன போன்று பலவித போட்டிகளை கவர்சிகரமான பரிசுகளோடு நடத்த முன் வர வேண்டும். ஆயிரக்கணக்கான பள்ளிகளிடையே ஒவ்வொரு வருடமும் நல்ல கற்பனை வளத்துடன் நடத்த ஆரம்பித்தால் நமது குழந்தைகள் மட்டுமல்ல அவர்களது தாய் தந்தையரும் உற்சாகமாகத் தமிழ் கற்றிடுவர். நம் முன்னோர்களின் தீர்க்க சிந்தனையை பாராட்டும் பக்குவமும் வரும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது ?  வலைப்பதிவர்கள் கூடும்போது இம்மாதிரி விஷயங்களைப் பற்றி சிந்தித்து செயல்பட்டால் தமிழ் வளர வாய்ப்புகள் கூடும்.


மற்றுமொரு சிறப்பான தமிழ்பணி செய்து வருபவர் திரு மறவன்புலவு க. சச்சிதானந்தம் அவர்கள். அவர்  தருமபுர ஆதினத்தொடு இணைந்து பன்னிரு திருமுறையை பல மொழிகளில் மொழி பெயர்க்கும் பெருந்தொண்டினை செய்து வருகிறார்.பன்னிரு திருமுறையின் 18,246 பாடல்கள் அனைத்துக்கும் உரையுடனும் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் இசையுடனும், சமகாலத்தில் தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், தேவநாகரி, அரபி, தாய்லாந்து, பர்மியம், யப்பான், ஆபிரிக்கான்சு, கிறியோல், பிசின், மலாய், இந்தோனீசியன், சுவாகிலி, உருசியன், ஒலிக்குறி உரோமன், ஆங்கிலம் ஆய வரிவடிவங்களுக்கு ஒலிபெயர்த்துத் தருவதுமான மின்னம்பல தளத்தின் www.thevaaram.org (2006) அமைப்பாளர். அவரைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே சுட்டவும்

அந்த கால முழுநேர ரேடியோ நாடகங்கள்- தேசீய ஒலிபரப்பில் அடிக்கடி தமிழாக்கம் இரா.வீழிநாதன் என்ற பெயரைக் கேட்டிருந்தேன். சமீபத்தில் அவரைப் பற்றி  செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களின் வம்பளந்தான் முக்கு என்ற வலைப்பதிவில் விவரமாக எழுதியுள்ளார்.
அடுத்து, "கல்கி' இவரைப் பெரிதும் ஆட்கொண்டது. கல்கியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கூடவே, இந்தியில் தயாரான "மீரா' படத்துக்கு வசன மேற்பார்வையும், அதில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் பணியும் சேர்ந்தே நடந்தது "கல்கி' கிருஷ்ணமூர்த்தியே வீழிநாதனை சம்ஸ்கிருத, இந்திக் கதைகள், படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாக இருந்தார். தனது கதைகள், நாவல்களை இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார். சோலைமலை ராஜகுமாரி, பார்த்திபன் கனவு, அலையோசை ஆகியவை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டன. அலையோசை, "லஹரான் கி ஆவாஜ்' என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் ரா.வீழிநாதன் பெயர் தமிழ்-இந்தி இலக்கிய இதழியல் உலகில் மிகப் பிரபலமடைந்தது.
 செங்கோட்டை ஸ்ரீராம் பல முன்னணிப் பத்திரிக்கைகளிலும் வானொலி தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் அனுபவம் உள்ளவர்.
அவருடைய  வலைப்பூ கவனத்தில் இருக்க வேண்டிய ஒன்று.
-----------------------------------------------
மொழிப்பற்று என்பது பிற மொழிகளின் பால் கொண்ட வெறுப்பால் வெளிப்படுத்தப்படுவது அன்று.  என்னுடைய அன்னையை நான் நேசிப்பதற்கு  அடுத்தவருடைய  அன்னையை நான் குறை சொல்ல வேண்டுமா என்ன? 

இன்றைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.  நல்லது. தொடர்ந்து வாசியுங்கள். இந்த நாள் இனிய நாளாகட்டும். வாழ்க வளர்க
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது