வானகமிங்கே தென்பட வேண்டும் என்று தட்டச்சும் போது என் மூத்த மகன் வந்தான். 'வானத்தை இங்கு தெரிய வைக்கணுமா, என்ன கண்ணாடி ஏதும் வைச்சு ரிஃப்லெக்ஷன் அது மாதிரி...' என்று கிண்டலாகவும் கொஞ்சம் பயத்தோடும் கேட்டான். காரணம், கணிணியில் ஏதாவது தெரிந்து கொள்ளணும் என்றால் அவனைத் தானே படுத்துவேன்!! 'இல்லையடா, இதன் அர்த்தம், சொர்க்கமே பூமிக்கு வரணும் - அதாவது பூமியே சொர்க்கமாக மாறணும்னு எடுத்துக்கலாம். இந்தத் தலைப்பில் எழுதப் போறேன்' என்று அவனிடம் சொன்னேன். 'ஏதோ பண்ணு, எனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டரில் பார்க்கணும், நீ வேலைய முடிச்சுட்டு கூப்பிடு' என்று சொல்லி விட்டுப் போனான்.
இன்று எந்தப் பதிவர்களைப் பற்றி இடுகையிடலாம் என்று யோசித்தவாறு, வலையை மேய்ந்து கொண்டிருந்தேன். கூடவே என் கணவர் பக்கத்து அறையில் கேட்டுக் கொண்டிருந்த மெல்லிசை, காதில் விழுந்து கொண்டிருந்தது. நானும் கம்ப்யூட்டரின் ஸ்பீக்கரை இயக்க வேண்டியிருந்ததால், கதவை ஒருக்களித்து மூடி விட்டு, தனிமையிலே இனிமையாய் வலைப்பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சொர்க்கம் இங்கு வந்தால் எப்படியிருக்கும் என்று யோசனை வேறு!
திடீரென்று பக்கத்தில் யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்து பார்த்தால், பாரதியார்! சுற்றி சுகந்தமான புகைமூட்டமாய் இருந்தது! 'யார், யார்..' என்று நான் உளற ஆரம்பிக்க, 'நான் தான் பாரதி..யார்! உன்னை பார்க்கணும்னு சொர்க்கத்தை இப்போது உன் அறைக்கு கொண்டு வந்திருக்கிறேன்!' என்றார். 'நிஜமாகவா, இது நிஜமா?' என்று நான் மேலும் உளற, அவர் புன்னகைத்தார்.
'நீங்கள் சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கீங்க, இங்குள்ள நடப்பெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, அதற்கும் ஒரு தெய்வீகச் சிரிப்பு! என்ன செய்வதென்று தெரியாமல், பக்கத்தறையில் என் கணவரைக் கூப்பிட வாயெடுத்தேன். 'நாம் பேசுவது யாருக்கும் தெரியாது' என்று பதில் வந்தது. அப்படியும் எட்டிப் பார்த்தபோது, கதவு சாத்தப்பட்டு இருந்தது. இசைச் சத்தமும் இல்லை!
என்ன பேசுவது என்று தெரியாமல், பக்கத்திலிருந்த கணிணியைக் காட்டி 'இப்பல்லாம் எல்லாரும் எழுதலாம்! வலைப்பூ என்றொரு விஷயம் கணடுபிடித்து, விரும்பியவர்கள் தாம் சொல்ல நினைக்கும் கருத்தைச் சொல்லலாம்! கணிணியின் மூலம் பலவும் சாத்தியமாயிருக்கிறது' என்று சொல்லி, 'உங்களுக்கு, இந்தப் பாட்டைத் தெரிகிறதா?' என்று கொஞ்சம் வம்புடனே, முந்தாநாள் போட்ட 'நெஞ்சுக்கு நீதியும்' போட்டுக் காண்பித்தேன். 'பாட்டைத் திறப்பது பண்ணாலே!' என்று பண்புடனே பதில் வந்தது. 'உஜ்ஜயினி' பாட்டையும் ரசித்ததாகத் தெரிந்தது. பதிவுகளைப் பார்த்தவர், 'இன்று யாரைப் பற்றிச் சொல்லப் போகிறாய்?' எனக் கேட்டார்!
மகாகவியல்லவா, முதலில் ஒரு கவிதைப் பதிவரைக் காண்பிப்போம் என எல் கேயின் கவிச் சோலைக்கு கூட்டிப் போனேன். சங்கப் பாடல்களையும் அவற்றுக்கு புதுக் கவிதைகள் படைத்துக் கொடுத்திருப்பதையும் ரொம்பவே ரசித்தார்! சமீபத்திய பதிவு செங்கால் மடநாராய் பதிவைப் பாராட்டினார்!
அப்படியே அதே பதிவரின் பாகீரதி யையும் காண்பித்தேன். உறுதி கதையையும் ஹேப்பி பர்த்டே கிருஷ்ணாவில் பாடல்களையும் மற்ற சமூக அக்கறைப் பதிவுகளையும் காண்பித்தேன். 'பலே பாண்டியா' என்றார்!
இவர் தொடர்கதைகளும் எழுதுவாரே என்றவுடன், தொடர் நாயகர்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள்! அவர்களின் பதிவுகளையும் பார்த்தோம்.
பெரிய சிறு கதைகளைத் தொடர்களாக வெளியிட்டு, அடுத்த பாகம் எப்போ என்று தேட வைக்கும் வை.கோபாலகிருஷ்ணன் - சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னடக்கமாகச் சொல்லிக் கொள்பவர், இப்போதைய பதிவுகளில் கதைக்கான ஓவியங்களையும் அவரே தீட்டுகிறார். இவர் கதைகளைப் படிக்கும் போது கண்முன்னே அந்தக் காட்சிகள் விரிவது மாதிரி, அழகாகக் கதை சொல்லுவார். சமீபத்திய பதிவுகளான ஏமாறாதே, ஏமாற்றாதே சிறுகதையையும் ஓவியத்தையும் சகுனம் சிறுகதை இரண்டு பகுதிகளையும் காண்பித்தேன். பாரதியாருக்கு மிகவும் பிடித்திருந்தது, அதுவும் இரண்டாவது கதை - மூட நம்பிக்கைகளின் எதிரி அல்லவா?!
அப்படியே அவரை எங்கள் Blog பக்கம் கூடடிப் போனேன். ஸ்ரீராம், kggouthaman, raman, kg, Kasu shobana என்று ஐவர் ராஜ்ஜியம் இது என்றவுடன் அவருக்கு ரொம்பவே சந்தோஷம். அதுவும் 'நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!! படிச்சுகிட்டே...இருங்க' என்ற வரவேற்பைப் பார்த்தவுடன் ஜாஸ்தியாகிவிட்டது! ஜே.கேயின் சிந்தனைகள், இந்த வார செய்தி அரட்டை எனப் பார்த்து ரசித்தார்! ஞாயிறு ஃபோட்டோக்கள், கேயைத் தே....டும் தொடர் எல்லாம் பார்த்தார்!
இப்போது பாரதி என்னை ஒரு கேள்வி கேட்டார் - 'நான் என்ன கடவுள் பாட்டுகள் மட்டுமா பாடியிருக்கிறேன்? கண்ணன், கண்ணம்மா பாடல்கள் உனககுப் பிடிக்காதா?' என்று! ஆகா, இப்படிக் கேட்டு விட்டாரே என்று வருந்தி, அவருடைய எல்லாப் பாடல்களும் பிடிக்கும் எனறும் உதாரணத்துக்கு ஒரு பாடலைப் போட்டுக் காடடுவதாகவும் சொல்லி, இந்தப் பாடலைப் போட்டேன்:
பாட்டை ரசித்துக் கேட்டபின், இன்னும் பதிவர்களைப் பார்க்கலாமா என்று பாட்டுக்கொரு புலவன் கேட்க, நானும் தயாரானேன். மோகன்குமார் என்றொரு சட்டம் படித்தவரின்
வீடு திரும்பல் பார்க்கலாமா என்று கேட்டவுடன், 'ஆகா, என் நண்பர் வ.உ.சி. போல் வக்கீலா' என்று ஆனந்தப்பட்டார்!
இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு? என்று கேட்கும் இந்தப் பதிவருடைய சமீபத்திய பதிவு
நடிகர் நாகேஷ் பற்றி! வானவில் என்று பல்சுவைக் குறிப்புகளாக எழுதும் இவர், அவற்றில் சட்டச்சொல் விளக்கங்களும் எழுதுவது எனக்குப் பிடிக்கும்! (நடிகர் நாகேஷை சொர்க்கத்தில் தெரியுமாம் பாரதிக்கு!!)
பின்னர் அரசியல் பற்றி எழுதும் ஒரு புதிய பதிவரின் இடுகைகளை எடுத்தேன்.
ராஜன் என்பவரின்
எல்லைகள் என்ற வலைப்பூவில்
நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா என்ற பதிவைக் காண்பித்தேன். இன்றைய அரசியல் அவல நிலை சொர்க்கத்திலும் எல்லாரும் வருத்தப்படும் டாபிக் என்றுவிட்டார் பாரதி!
இன்னொரு புதிய பதிவரைச் சற்றே பெருமையுடன் அறிமுகப்படுத்தினேன், ஸ்டாலின் என்பவர் மார்ச் 2011 முதல் எழுதும்
என்டர் தி வேர்ல்ட் -உனக்குள்ளே உலகம்! பற்பல செய்திகள் இருக்கிறது இந்த வலைப்பூவில், ஒரு செய்திச் சானலின் லிங்க்கும் இருக்கிறது!
கூகுளில் சில நகைச்சுவைத் தேடல்களைப் பார்த்து நாமும் முயன்று பார்க்கலாம்!
HTML தொடர்- லிங்க் பட்டன் உருவாக்குதல் பற்றித் தெரிந்து கொள்ளலாம்! சில வார இதழ்களின் பதிவிறக்கத்துக்கும் வழியிருக்கிறது! பாரதியார் 'பலே பாண்டியா' என்று மீண்டும் சொன்னது போல் காதில் விழுந்தது!
'வாருங்கள், இன்னொரு தளத்துக்குப் போகலாம்' என்று
ஓம் சிவாய நம என்ற வலைப்பூவிற்கு அழைத்துச் சென்றேன். ஆன்மிகமாக பல திருத்தலங்கள் பற்றி பதிவுகள் உள்ளன.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றி பதிவு அழகாய் இடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தைக்குப் புதியவரானால் இந்தப் பதிவைப் படிக்கலாம்!
இவையெல்லாம் பார்த்த பாரதியார், நல்ல முன்னேற்றம் என்று சொல்ல, நானோ அவரிடம் என்னை ஆசீர்வதிக்குமாறு கேட்டேன். அவர் காலில் விழுந்து வணங்க, அவர், 'எழுந்திரம்மா' என்றார்! என்னை அவர் திருக்கரங்களால் தொட்டு எழுப்பவும் செய்தார்!
என்ன, திடீரென்று அவர் குரல் வேறு மாதிரி மாறிவிட்டது? எழுந்து பார்த்தால் என்னைத் தட்டி மறுபடி எழுந்திருக்கச் சொன்னது என் மகன்! 'அம்மா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி அப்புறம் சமயம் இருக்காது என்று உன்னை அவர்கள் வீட்டுக் கொலுவுக்குக் கூப்பிட வந்திருக்காங்க!' என்றான். 'பாரதி எங்கே,புகை...' என்று நான் மறுபடி உளற, 'நீ தூங்கிட்டே, அப்பா உனக்குத் தொந்தரவாக இருக்கும்னு பாட்டை நிறுத்திட்டு ஹாலில் ஐபாடு கேட்கிறார்! பாட்டி சாம்பிராணி பத்தி ஏத்தினது தான் புகை!' என்று விளக்கமும் கொடுத்தான். நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை!!
வானவில்லாக வர்ணஜாலம் காட்டும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! அப்புறம். வானவில்லின் நடுவில் அரசோச்சும் பச்சை நிறம், வளமை, ஒற்றுமை, இசைவு, வளர்ச்சி இவற்றைக் குறிக்கிறதாம்!!