07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ரூபக் ராம். Show all posts
Showing posts with label ரூபக் ராம். Show all posts

Sunday, March 23, 2014

பனியைத் தேடி - சிம்லா நகர்வலம்

அன்று நதியில் துடுப்பு பிடித்ததும், பனியில் விளையாடியதும் உடலுக்கு தந்த சோர்வில் இரவு குளிரையும் பொருட்படுத்தாமல் நான்றாக தூங்கிவிட்டேன். மறுநாள் சிம்லா நகரை சுற்றி சில இடங்களுக்கு எங்கள் ஓட்டுனர் அழைத்துச் சென்றார். 

ஜக்ஹூ கோயில் (Jakhoo temple)

நாங்கள் அன்று காலை முதலில் சென்றது இங்கு தான். சிம்லா மலை மீது மற்றொரு மலை ஏறி எங்களை அழைத்துச் சென்றார். இதுவரை நாங்கள் சென்றதில் இதுதான் மிகவும் குறுகலான பாதை. ஒரு சீருந்து செல்லும் அளவு தான் சாலை இருக்க, மலை மேல் ஏறும் வளைவுகள், '<' இப்படித்தான் இருந்தன. அந்த சாலையில் வண்டி ஓட்ட ஒரு அசாத்திய திறமை வேண்டும். ஒரு வழியாக மேலே சென்றோம். இதுவரை பெரிதும் பேசாத எங்கள் ஓட்டுனர் 'குரங்குகள் இங்கு சேட்டை செய்வது அதிகம். மிகவும் ஜாக்கரதையாக இருங்கள்' என்று எச்சரித்தார். அது ஒரு ஆஞ்சநேயர் கோயில் அங்கு ஒரு மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை இருந்தது. வழக்கம் போல் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டு எங்கள் சீருந்தை நோக்கி இறங்கினோம். 

வரும் வழியில் அங்கு பிரசாதம் விற்பவர்கள் குரங்குகளை கொம்பு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர். சீருந்தின் அருகில் வந்து, உள்ளே ஹீட்டர் இருப்பதால், எனது ஜாக்கெட்டை கழற்றிவிட்டு, சீருந்தினுள் நுழையும் பொழுது, 'ஐயோ குரங்கு' என்று என் நண்பன் அலற அனைவரும் விரைந்து சீருந்தினுள் குதித்தோம். ஓட்டுனர் வண்டியை ஐம்பது அடி நகர்த்துவதற்குள், என் நண்பன் 'ஐயோ' என் கண்ணாடி?' என்று மீண்டும் அலறினான். ஓட்டுனர் வண்டியை நிறுத்தி விட, சம்பவ இடத்திற்கு நாங்கள் சென்று பார்த்தால், மரத்தின் மேல் ரே-பான் கண்ணாடியுடன் சோக்கா போஸ் கொடுத்தது அந்தக் குரங்கு. 

என்ன செய்வது என்றே எங்களுக்கு புரியவில்லை. சிறு வயதில் படித்த குல்லா கதைதான் நினைவுக்கு வந்தது. அதற்குள் எங்கள் ஓட்டுனர் ஒரு பிரசாத பாக்கெட்டை வாங்கி, மேலே வீச, யுவராஜ் சிங் போல அதை தாவிப் பிடித்தது அந்தக் குரங்கு. மனிதர்கள் போல் இல்லாமல், நேர்மையாக வாழும் அந்தக் குரங்கு, பிரசாதம் கைக்கு வந்தவுடன், கண்ணாடியை அழகாக என் நண்பன் கைக்கு வீசியது. 

ராஷ்ட்ரபதி நிவாஸ்

அடுத்து நாங்கள் சென்றது வெள்ளையர்களின் கோடைக்கால தலைமையகமாக விளங்கிய     ராஷ்ட்ரபதி நிவாஸ் மாளிகைக்கு. இது Indian Institute of Advanced Study நிறுவனத்தின் தற்காலிக கட்டிடமாக இருந்தாலும், வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த இடத்தின் சில பகுதிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். 

ஆங்கிலேயர்கள் ஹைட்ரோ-எலக்ட்ரிக் முறை மூலம் அந்நாளில் அந்த கட்டிடத்துக்காக தயார் செய்யப் பயன்படுத்திய மின் சாதனங்கள், இன்றளவும் அங்கு மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதை கண்டு வியந்தேன். 

ஜின்னாவின் கோரிக்கையின் படி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை தனி நாடாக பிரிக்க முடிவு செய்த வரலாற்று புகழ் பெற்ற, மவுண்ட் பாட்டன் தலைமையிலான 'சிம்லா கான்பிரன்ஸ்'  நடந்த அறையினுள் அந்த இருக்கைகைளையும் பராமரித்து வருகின்றனர். மாணவர்களின் ப்ராஜெக்ட் காட்சியளிப்பிற்காக இன்று அந்த அறை பயன்படுத்தப் படுகிறதாம். 

அங்கு விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில ஆங்கிலப் பிரபுகளின் படங்கள் இருந்தன. அதில் என்னை மிகவும் கவர்ந்தது மவுண்ட் பாட்டன் பிரபு அவர்களின் மனைவியின் புகைப்படம் தான். அந்த அம்முணி எம்புட்டு அழகு தெரியுமா. அந்த நிமிடமே அவருடன் என் மனதில் ஒரு மதராசபட்டின கனவு அரங்கேறியது.          

ஸ்ரீ சங்கட் மோச்சன் கோவில் (Shri Sankat Mochan Temple)

மீண்டும் எங்கள் ஓட்டுனர் ஒரு கோவிலுக்கு தான் எங்களை அழைத்துச் சென்றார். அந்தக் கோவில் மலை சரிவில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. முதலில் ஹனுமான் கோவிலாக உருவாகி, பின்னர் அனைத்து தெய்வங்களும் அங்கு ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

எனக்கும் கடவுளுக்கும் மிகவும் தூரம் என்பதால், என் நண்பர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு அவர்களை உள்ளே தரிசனம் காண அனுப்பிவிட்டு, வெளியில் இருந்த இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து, எனது நண்பனிடம் இருந்து உள்ளே வரச் சொல்லி கைபேசியில் அவசர அழைப்பு வரவே, காலணிகளை ஹனுமான் பொறுப்பில் விட்டு விட்டு உள்ளே சென்றேன். உள்ளே படி வழியாக இறங்கி சென்றால், ஒரு பெரிய மண்டபம் போல் இருந்தது. அங்கு வரிசையாக மக்கள் அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 'நண்பேன் டா!' என்று அவனுக்கு ஒரு சலாம் போட்டு விட்டு, நானும் அமர்ந்தேன். 

வெள்ளை நிறத்தில், பொங்கிய வடிக்கப்பட்ட அரிசி என் இலையில் பார்த்தவுடனே எனது மனம் தமிழகத்தை நோக்கிச் சென்றது. ராஜ்மா குழம்பு, பட்டாணி குழம்பு, மற்றும் ஒரு இனிப்பு என்று அசத்தலாக இருந்தது அந்த அன்னதானம். அந்த ஏழு நாட்களில் நாங்க உண்ட உணவில் மிகவும் சுவையானது அதுதான். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அன்றோ.                                                   
மால் ஸ்ட்ரீட் (Mall Street)

சென்னைக்கு எப்படி பாண்டி பஜார் மற்றும் ரங்கநாதன் தெருவோ அப்படித்தான் சிம்லாவிற்கு இந்த மால் ஸ்ட்ரீட். இங்கு அனைத்து அரசாங்க அலுவலங்களும் உள்ளன. அந்த அலுவலகங்களை தாண்டிச் சென்றால் வரும் பிரதான சாலையில் அனைத்து ரக பிரான்டட் கடைகளும் இருக்கும். அந்த பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் சற்று கீழே இறங்கினால் மலிவு விலைக் கடைகள் அனைத்தும் இருக்கும். 

அப்படி ஒரு சந்தினுள் ஒரே சாப்பாட்டுக் கடைகளாக இருக்க, ஒரு கடையின்  உள்ளே சென்று அமர்ந்தோம். அங்கு சுடச் சுட கிடைத்த சென்னா படுறா(சோலாபூரி) வின் சுவை இன்றும் என் நாவில் உமிழ் நீர் சுரக்ச் செய்கின்றது. 

மால் ஸ்ட்ரீடில் தென்பட்ட பொம்மைகளை ரசித்தபடி இனிதே எங்கள் சிம்லா பயணம் முடிவடைய, மறுநாள் விடியற்காலை கல்கா நோக்கி சென்றோம். ஆறு மணிக்கு கல்காவில் ரயில் என்பதால், நான்கு மணிக்கு சிம்லாவை விட்டு கிளம்பினோம். நான்கு மணிக்கு அந்தக் குளிரில் குளிக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல. சிம்லாவில் இருந்து மலை இறங்கும் அந்தப் பயணம் சந்திர ஒளியில் அழகா இருந்ததை நான் ரசித்துக் கொண்டே வர, என் நண்பர்கள் தூங்கி கொண்டே வந்தனர். சில நேரம் கடந்து தான் எங்களது சீருந்தின் என்ஜின் ஓடாததை உணர்ந்தேன், neutral கியரில் வண்டியை எங்கள் ஓட்டுனர் மலையில் இருந்து கீழு உருட்டிக்கொண்டு வந்தார் என்பதை அறிந்தவுடன் எனக்கு 'குபீர்' என்றானது. அவருக்கு என்னமோ அப்படி ஓட்டிப் பழக்கம் இருந்தாலும், மலையில் இருந்து கீழ் இறங்கும் வரை ஒவ்வொரு முறை அவர் பிரேக் அழுத்தும் பொழுதும் எனது உயிர் சந்திரனை தொட்டு விட்டு பூமி திரும்பியது.                
  

நிசாமுத்தின் ரயில் நிலையத்தில், 3 3௦ மணிக்கு வழக்கமாக வரும் சென்னை செல்லும் MAS-Durronto எக்ஸ்பிரஸ் அன்று மணி ஏழாகியும் வரவில்லை.

இன்றைய அறிமுகங்கள்:

*********************************************************************************************************

சமுதாய சிந்தனை மிக்கவர் இவர். இவரது கவிதைகள் நம் மனதைப் பல கேள்விகள் கேட்க வைக்கும்.

கே.ஆர்.பி. செந்தில் என்னும் தளத்தில், செந்தில் அவர்கள் எழுதிய 'பதின்ம இரவுகள்' என்ற பதிவு.

*********************************************************************************************************

எனக்கு பல சமயங்களில் வாழ்கையின் மீது வெறுப்புவருவதுண்டு. இவரது கதையின் நாயகனும் அப்படி ஒரு நிலையில் இருக்க கதை துவங்குகின்றது.

'கடற்கரை' என்னும் தளத்தில் விஜயன்  அவர்கள் எழுதிய 'வாழ்க்கையை வேறுத்தவர்க்ளுக்கான கதை' என்ற பதிவு.

*********************************************************************************************************

வரலாற்று சிறப்பு மிக்க குடந்தையூரில் இருக்கும் தR.V. சரவணன் அவர்கள், 'குடந்தையூர்' என்னும் அவரது தளத்தில் எழுதிய 'மருமகளான மாமியார்' என்னும் சிறுகதை.

*********************************************************************************************************

எனக்கு மிகவும் பிடித்த விஸ்வரூபம் படத்தை பற்றி 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்னும் தளத்தில் 'விஸ்வரூபம்' என்று RVS அவர்கள் எழுதிய பதிவு.
*********************************************************************************************************

'தெனாலி' என்ற தளத்தில் 'வலி' பற்றி எழுதிய பதிவைப் படித்துப்பாருங்கள். 

*********************************************************************************************************

இன்றுடன் எனது ஆசிரியர் பணி இனிதே நிறைவடைகின்றது. வாய்ப்பு அளித்த பிரகாஷ் மற்றும் சீனா அய்யா அவர்களுக்கும், தினமும் வருகை தந்த உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். 

இங்கிருந்து நான் பிரியா விடைபெற்று சென்றாலும், இங்கு கிடைத்து உற்சாகத்துடன் எனது தளத்தில் தொடர்ந்து எழுதுவேன். அங்கும் உங்கள் ஊக்கம் தொடர்ந்து தேவைப்படுகின்றது. என்னைத் தொடரப்போறவர்களுக்கும் நன்றி.

நன்றியுடன் 
ரூபக்
மேலும் வாசிக்க...

Saturday, March 22, 2014

பனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு

இந்த குளிர் செய்யும் தந்திரம், நமது தாகத்தை அடக்கி, உடலுக்கு தேவையான நீரை நம்மை அருந்தவிடாமல் செய்வதுதான். உணர்விழந்து நான் கீழே அமர, சில நொடிகள் என்ன நடந்தது என்ற நினைவு எனக்கு இல்லை. என் நண்பன் மேல் இருந்து கொண்டுவந்த நீரைப் பருகியதும் தான் உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கொஞ்சம் வலு பெற்று மெதுவாக ஒரு கடைக்கு முன் சென்று அங்கு நாற்காலியில் அமர்ந்தேன். ஆளுக்கு ஒரு ப்ளேட் மேகி (maggi) ஆர்டர் செய்தோம். அந்தத் தருணம், அந்தக் குளிருக்கு இதமாக சூடாக சுவைத்த மேகி எனது வாழ்நாளில் வேறு எந்தத் தருணத்திலும் அவ்வளவு சுவையாக இருந்தது இல்லை.

உணவு உண்டபின் கிடைத்த வலுவுடன், மீண்டும் தடைபட்ட எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். என் போலிக் குதிரையின் மேல் ஏறி மலை இறங்கத் தொடங்கினோம். இறங்குவது சற்று பயமின்றி சுலபமாகவே இருந்தது. அங்கிருந்து எங்கள் ஓட்டுனர் எங்களை அடுத்த இலக்கு நோக்கி அழைத்துச் சென்றார். அப்பொழுது சீருந்தில் இருந்த டிஸ்ப்ளே காட்டிய வெப்பம் 4 டிகிரி செல்சியஸ்.     

எங்களை தட்டா பாணி(Tata Paani) என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது சிந்து நதியின் ஒரு பிரிவான சட்லஜ் நதி பாயும் இடம்.  அண்ணன் பேரம் பேச அந்த நதியில் நாங்கள் ராப்டிங்(rafting) செல்ல தயாரானோம். எங்களது காலணிகளை சீருந்திலேயே விட்டு விட்டோம். எங்களது பணப் பை, கேமரா, கைபேசி அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டு கட்டி அந்த பலூன் படகின் ஒரு மூலையில் போட்டார் அந்தப் படகுக் காரர். எங்கள் படகில் படகுக் காரருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர், நதியில் மிதக்கத் தொடங்கினோம். 

என் வாழ்வில் தண்ணீரே பாயாத பாலாரைக் கண்டு வளர்ந்த எனக்கு வற்றாத நதிகளைக் கண்டால் கொஞ்சம் போறாமையாகத் தான் இருக்கும். நமது தென்னகத்து நதிகளுக்கு நேர் மாறாக கோடைக் காலத்தில், இமய மலையில் பனி உருகி, அந்த நதிகளில் வெள்ளம் இன்னும் அதிகமாக இருக்குமாம். அந்த நதியின் கரையில் காலை வைக்கும் பொழுதே அந்த நீரின் குளிர்ச்சி புலப் பட்டது. நீங்கள் ஐஸ் கட்டியில் கரைந்து வரும் நீரில் காலை வைத்து பார்த்ததுண்டா? அப்படித்தான் இருந்தது அந்த நீரின் குளுமை. 

படகுக்காரர் சொல்லும் கட்டளைகளை கேட்டு நாங்கள் துடுப்பு விட்டு மறுமுனை செல்ல வேண்டும். துடுப்பு விட பெண்களுக்கு மட்டும் விடுப்பு, அவர்கள் அழகாக மத்தியில் அமர்ந்து படகுச் சவாரியை ரசித்தனர். அந்த நதியில் படகு சீறிப் பாய்ந்து சென்றது. நதியின் சுழல்களுக்கு ஏற்ப அவர் திறமையாக எங்களை துடுப்பு பிடிக்கச் செய்து நதியில் படகை விரைவாக செலுத்திக்கொண்டிருந்தார். நான் மட்டும் நீருக்கு வலிக்காத வண்ணம் சற்று மெதுவாகவே துடுப்பை வலித்துக் கொண்டிருக்க. எனது பாசாங்கை அறிந்து நக்கலாக அவர் ஹிந்தியில் எதோ சொல்ல, அந்தப் பெண்கள் குபீர் என்று சிரித்தனர். 

ஒரு வழியாக நதியின் மறுமுனைக்கு திறமையாக வந்து சேர்ந்தோம். படகு செலுத்தும் சுவாரசியத்தில், எனது கால்களை கவனிக்க மறந்தே போனேன். எனது கால், படகினுள் புகுந்த குளிர்ந்த நீரின் சதியால், ரத்தம் செல்லாத வண்ணம் மறத்துப் போயிருந்தது. படகை விட்டு இறங்கி நொண்டிக்கொண்டு கரையை அடையும் பொழுது மற்றொரு அதிசயம் எங்களுக்காக காத்திருந்தது.


கரையின் ஓரங்களில், மணலில் இருந்து சூடான ஆவி கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த ஆவி கிளம்பும் இடங்களில் நீர் வெதவெதவென்று குளிருக்கு இதமாக இருந்தது. எனது கால், மற்றும் நீரில் நனைந்த மற்ற பாகங்களை அந்த சூட்டில் காட்டி இயல்பு நிலைக்கு கொண்டுவந்தேன். இப்படி இயற்கையாக உஷ்ணம் தோன்றும் இடங்களை ஆங்கிலத்தில் 'Sulfur Springs' என்று சொல்லுவார்கள். இயற்கையில் தான் எத்தனை விந்தைகள் அடங்கியுள்ளன?. அந்த குளிரில் அந்த சூடான மணலில் அமரும் பொழுது எத்தனை சுகமாக இருந்தது தெரியுமா? ஆனந்தம்! பிரியா விடைபெற்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.          

எங்கள் பயணத்தில் நாங்கள் எதிர் பார்த்து வந்த ஆசை நிறைவேறாத வருத்தமும், எதிர்பாராத பல சுவாரசியமான அனுபவங்கள் நிகழ்ந்த சந்தோஷமும், எங்கள் மனதை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு சென்றது. மலைகளை கடந்து, வளைந்து வளைந்து, மலையை ஒட்டி செல்லும் அழகான சாலைகள் எங்கள் மனதிற்கு குதூகலத்தை தந்தது. ஒரு இடத்தில மரங்களுக்கு நடுவில் சென்று சீருந்தை நிறுத்தி, எங்களை ஒரு மணல் பாதையில் அழைத்துச் சென்றார். பசுவின் பின் செல்லும் கன்றைப் போல அவரை பின் தொடர்ந்து சென்றோம். அந்தப் பாதை சற்று சரிவின் மேல் ஏறியது, எங்கள் உள்ள மகிழ்ச்சியும் இமயத்தின் மேல் ஏறியது. எங்கள் பயண இலட்சியத்தை நாங்கள் அடைந்தது அங்கேதான். எங்கள் கனவு நினைவானது அங்கேதான். அதுதான் நார்க்கண்டா (Narkanda) என்னும் இடம்.


எங்கள் கண் முன் தோன்றிய காட்சி வெள்ளைப் பனி சூழ்ந்த பனி மலை. அங்கு மக்கள் கூட்டம் எறும்புகள் போல் தெரிந்தது. படங்களில் காண்பது போன்ற பனி, என் முட்டி வரை அந்தப் பனியில் புதைந்தது. மீண்டும் மழலைகள் ஆகி, பனிப் பந்தெறிந்து விளையாடினோம். சற்று வளர்ந்து வாலிப வயதை எட்டி, ஜேம்ஸ் பான்ட் படங்களில் வருவது போல் பனி சறுக்கும் செய்தோம். எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். 'மீண்டும் அப்படி ஒரு நாள் வருமா?' என்று மனம் இன்றும் ஏங்குகிறது.  



இன்றைய அறிமுகங்கள்:

*********************************************************************************************************
எனது 'தேன் மிட்டாய்' உருவாக ஒருவித உத்வேகம் தந்தது இவரது இந்தப் பதிவு தான். எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லாவிட்டாலும், இவரது ஒயின்ஷாப்பிற்கு தவறாமல் செல்வது எனது வழக்கம்.

'பிரபாகரனின் தத்துபித்துவங்கள்' என்னும் தளத்தில் பிரபாகரன் அவர்கள் எழுதிய 'பிரபா ஒயின்ஷாப் - 15042013' என்ற பதிவு.        

*********************************************************************************************************

இவரும் தனது வாழ்வில் நடக்கும் அனுபவங்களை சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர்.

'மெட்ராஸ்பவன்' என்னும் தளத்தில் சிவா அவர்கள் வழங்கிய 'ஸ்பெஷல் மீல்ஸ் 9/4/13' .

*********************************************************************************************************

எனக்கு இவரை பற்றி நினைத்தால் ஏனோ சந்திரபாபு தான் நினைவுக்கு வருகின்றார். ஒரு வார்த்தை சொன்னாலும், அதை நெற்றிப்பொட்டில் பதிய வைத்து விடும் வல்லமை படைத்தவர் இவர்.

ஜீவன் சுப்பு அவர்கள் சொல்லும் அவர் 'கணினி கற்ற கதையை' படித்து தான் பாருங்களேன்.

*********************************************************************************************************
அரைஞாண் கயிறு எதற்காக பயன்படுத்தப் பட்டது என்பதை இவரது பதிவின் மூலம் நான் அறிந்தேன்.

'பட்டதும் சுட்டதும்' என்னும் தளத்தில் 'நம் முன்னோர்கள் நம் பெருமைகள்' என்ற பதிவு தான் அது.

*********************************************************************************************************
இவர் ஒரு காமிக்ஸ் காதலன் மற்றும் காவலன்.

'jsc Johnny' என்னும் தளத்தில் ஜான் அவர்கள் எழுதிய  'இயந்திரப் படையும்!!! இரும்புக்கை மாயாவியும்!!' என்ற பதிவு.                

*********************************************************************************************************

மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்   
மேலும் வாசிக்க...

Friday, March 21, 2014

பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல் - குப்ரி

அண்ணன் வர டன்னலின் அடியில் காத்திருக்கும் பொழுது தான், அங்கு நிலவிய குளிர் என் ஆடைக்குள் ஊடுருவத் தொடங்குவது தெரிந்தது. என் மாமா, அவர் அமெரிக்காவில் இருந்தபொழுது பயன்படுத்திய விண்டர் ஜாக்கெட் மற்றும் க்லவ்ஸ் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அதுதான் எனக்கு அந்தக் குளிருக்கு கவசமாக நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னைக் காத்தது. எங்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல எங்களுடன் சாலைக்கு வந்து காத்திருந்த விடுதிப் பணியாளர் வழி சொல்ல, ஒரு வழியாக அண்ணன் நாங்கள் காத்திருந்த டன்னலை வந்தடைந்தார். 

எங்களிடம் இருந்த மூன்று பளுவான பைகளை, அந்த விடுதிப் பணியாளர் தன் முதுகில் ஒன்றும், இரு கைகளில் ஒன்றுமாக யேந்திக்கொண்டு, ஒற்றையடிப் பாதைப் போல் இருந்த, சிமெண்ட் படிகள் மீது ஏறத் தொடங்கினார். பளு சுமந்த பொழுதும் மலை ஏறிப் பழக்கமான அவர் வேகமாக ஏற, நாங்கள் சற்று பின் தங்கியே தொடர்ந்தோம். மலை மீது ஒரு குட்டி மலையே ஏறி, அதன் பின் ஒரு சரிவில் இறங்கி எங்களது விடுதி முன் வந்து சேர்ந்தோம். இதற்குள் மணி ஏழாகி விட்டது. அன்றைய இரவு அறையில் தான் என்றானது.  'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வீடு போல், மலை உச்சியில் மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட அந்த அறைக்குள் சென்ற பொழுது, இதயம் சற்று 'பக் பக்' என்றே துடித்தது. இரண்டு முறை குதித்து உறுதியை சோதித்து பார்த்த பின்னே அடுத்த அறைக்குள் சென்றேன். 

குளிர் காலத்தில் சிம்லா சென்றால், குளிரின் உச்சகட்டத்தை உணரலாம் என்பது என் திட்டம். ஆனால் நான் அங்கு உணர்ந்ததோ நான் எதிர் பார்த்ததை விட மிகவும் கடுமையான குளிர். அந்த இரவை கடக்க நிச்சயம் நெருப்பின் துணை தேவை என்று தோன்ற, 'ரூம் ஹீட்டர்'  ஆர்டர் செய்யலாம் என்று நான் முனைய, என் நண்பன் என்னைத் தடுத்து, அலமாரியின் உள் இருந்து பஞ்சு மெத்தையில் பாதி கணம் இருக்கும் ஒரு வெள்ளை நிற ஜமக்காலத்தை(எனக்கு அதன் சரியான பெயர் தெரியவில்லை. அறிந்தவர்கள் சொல்லவும்) எடுத்து கொடுத்தான். இதையா போர்த்திக் கொள்வது என்று முதலில் நான் யோசித்தாலும், வேறு வழியின்றி மெத்தை மேல் அதை விரித்து அதற்கு அடியில் சென்றேன். சற்று நேரமாக, அது எனது உடலின் உஷ்ணத்தை பாதுகாத்து, நல்ல கத கதப்பை தந்தது. அருமையான ஒரு கண்டுபிடிப்பு அது. 

காலையில் குளித்து முடிப்பதற்குள் நான் பட்ட பாட்டை சொல்லி மாளாது.  ஹீட்டர் குழாயில் இருந்து வரும் சூடான நீர், வாளியை அடையும் முன், தன் சூட்டை இழந்து விட்டது. ஒரு வழியாக குளித்து முடித்து, தயாராகி, பனியைத் தேடும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். செல்லும் வழியில் ஒரு கோல்ப் மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி, அங்கு சென்று சுற்றிப்பார்க்கும்படி எங்களது ஓட்டுனர் சொல்லினார். முடியவே முடியாது எங்களுக்கு பனிதான் வேண்டும் என்று நாங்கள் மறுத்துவிடவே, எங்களை குப்ரி அழைத்துச் சென்றார். குப்ரி சிம்லாவில் இருக்கும் ஒரு சிகரம். அதன் அடியில் இருந்து உச்சிக்கு செல்வதற்கு குதிரை சவாரி செய்ய வேண்டும். அதில் நிஜ குதிரைகளும் சில போலி குதிரைகளும் உங்கள் அதிர்ஷ்டம் போல் கிடைக்கும். (குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்தது இந்த போலிக் குதிரை. இதை ஆங்கிலத்தில் mule என்பர்)

எனக்கு குதிரை ஏறிப் பழக்கம் இல்லாததால் சற்று பயத்துடன் நான் இருக்க, எனக்கு போலிக் குதிரையே வழங்கினர். எங்கள் நால்வரின் குதிரையையும் ஒரு சேர அழைத்துக்கொண்டு, அதன் பாகன் எங்களுடன் நடந்து வந்தான். அவன் முன்னே வழி காட்டிக்கொண்டு  செல்ல, எனது குதிரை கடைசியில் வந்தது. ஒற்றையடிப் பாதையாக மலை மேல் செல்லவும் இறங்கவும் ஒரே வழிதான். மேலிருந்து குதிரைகள் இறங்கும் பொழுது, எனது குதிரை சற்று பயந்து ஓரமாக ஒதுங்கிக் கொள்ளும்பொழுது, எனக்கோ 'எங்கே, குதிரை கால் இடறி  சரிந்து விடுமோ' என்ற பயம் தோன்றும். ஒரு முப்பது நிமிட 'திக் திக்' குதிரை சவாரிக்கு பின் குப்ரி சிகரத்தை அடைந்தோம். சிம்லாவில் இருக்கும் உயர்ந்த சிகரத்தில் நிச்சயம் பனி இருக்கும் என்ற எனது ஆசையில் மண் தான் விழுந்தது. அங்கு சில மேகி(maggi) கடைகளும் ஒரு தீம்(theme) பார்க்கும் தான் இருந்தன. 

தீம் பார்க்கில் சில மொக்கை ரைடுகளை தவிர்த்து ஒரு ரைடு மட்டும் எங்களைக் கவர்ந்தது, நானும் என் நண்பனும் மட்டும் அதில் ஏறினோம். மத்தியில் ஒரு கம்பம், அந்தக் கம்பம் தாங்கும் ஒரு வளைவான சக்கரம், அந்தச் சக்கரத்தில் வட்டமாக ஒருவர் மட்டும் அமரும் ஊஞ்சல். பார்க்க சாதாரண ஊஞ்சல் போல் இருந்தால், அது இருந்தது மலை உச்சியில் என்பதாலும், அது சுற்றிய வேகத்தாலும், ஆகாயத்தில் தூக்கி வீசப் படுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. எனது உணவுக் குழாயில் இருந்து வயிறு வரை அனைத்தும் ஒரு சக்சன்(suction) பம்ப் வைத்து உரியப்படுவது போல் ஒரு உணர்வு. ஒரு வழியாக சுற்றி நிற்க, நான் இறங்கலாம் என்று நிதானிக்கும் பொழுது, என் நண்பன் 'ஒன்ஸ் மோர் ப்ளீஸ்' என்று கேட்க, எனது உயிர் மீண்டும் ஊஞ்சல் ஆடியது. 

அங்கு அருகில் ஆப்பில் தோட்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைக்க, இதுவரை வாழ்வில் காணாத ஆப்பில் மரங்களைத் தேடிச் சென்றோம். சரிவாக செல்லும் பாதையில் நெடுந்தூரம் சென்றும் அங்கு ஆப்பில் மரங்கள் ஏதும் தென்படவில்லை. வழிதவறிவிட்டோம் என்று நாங்கள் உணரும் பொழுது, நாங்கள் மிகவும் எதிர் பார்த்திருந்த தருணம் வந்தது. சாலையில் உறைப்பனி தென்படத் தொடங்கியது. நாங்கள் எதிர்பார்த்து போல் இல்லை. வெள்ளை நிற சோப்பு நுரையை மணலில் கலந்தால் எப்படி இருக்கும், அது போலத் தான் அந்தப் பனி அழுக்காக இருந்தது. கிடைத்த வரை லாபம் என்று அதனுடன் விளையாடத் தொடங்கினோம்.


அந்தப் பனியை கையில் ஏந்தும் பொழுது, பல நாட்களாக டீப் ப்ரீஸ் (deep freeze) ஆகி உறைத்திருக்கும் உங்கள் பிரிட்ஜ் ப்ரீசர் பாக்சில் கை வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருந்தது. ஒருவர் மீது ஒருவர் அடிக்கும் பொழுது, எப்படியாவது சட்டையினுள் ஊடுருவும் பொழுது அந்தப் பனி உண்டாக்கும் சிலிர்ப்பை சொல்ல வார்த்தை இல்லை. பனியைக் கண்ட ஆனந்தத்தில் சற்று நேரம் கூடுதலாகவே செலவழித்துவிட்டோம். 

இறங்கும் பொழுது மிகவும் எளிதாக இருந்தப் பாதை, ஏறும் பொழுது சற்று கடினமாக மாறியது. அதிக இடங்களில் அமர்ந்து அமர்ந்து செல்லத் தொடங்கினோம். இந்த குளிர் செய்யும் தந்திரம், நமது தாகத்தை அடக்கி, உடலுக்கு தேவையான நீரை நம்மை அருந்தவிடாமல் செய்வதுதான். காலை டிபனும் நான்-ரொட்டி என்பதால் சற்று குறைவாக உண்ண, எனது உடலில் வலு வேகமாக குறைந்தது. எனது நண்பர்களை விட மிகவும் பின் தங்கத் தொடங்கினேன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது, அந்த குளிரிலும் நெற்றி வியர்த்தது. இனி ஒரு அடியும் நகர முடியாத நிலையில், எனது கால்களை பூமியில் என்னால் உணர முடியவில்லை.                                                                                                  
இன்றைய அறிமுகங்கள்:

*********************************************************************************************************
கௌபாய் படங்களின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. 2012 இல் வெளிவந்து என்னை மிகவும் கவர்ந்த கௌபாய் திரைப்படம் 'Django' , இந்தப் படத்தை பற்றி இவர் எழுதிய விமர்சனத்தை படித்தாலே அவரது சினிமா அறிவு நன்கு புலப்படும்.

'கருந்தேள்' என்னும் தளத்தில் ராஜேஷ் அவர்கள் எழுதிய 'Dijango unchained' என்ற பதிவு.

*********************************************************************************************************
கௌபாய் படங்களில் என்றுமே நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது 'The good. The Bad and the Ugly' தான்.

'சினிமா சினிமா' தளத்தில் ராஜ் அவர்கள் எழுதிய 'The good, the bad and the ugly' பதிவு.

*********************************************************************************************************

'Suba's Musings' என்னும் தளத்தில் சுபா அவர்கள் 'என் வீட்டுத் தோட்டத்தில்' என்ற பதிவு.

*********************************************************************************************************

'எளியவை' என்னும் தளத்தில் பந்து என்பவர் எழுதிய 'கர்ணனை விட பாவம்' என்ற மஹாபாரதத்தின் கிளைக் கதை.

*********************************************************************************************************

'அதீத கனவுகள்' என்ற தளத்தில் ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'அவள் என்னை ஒதுக்கினாள்' என்னும் பதிவு.

*********************************************************************************************************

மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்   
மேலும் வாசிக்க...

Thursday, March 20, 2014

பனியைத் தேடி - மலைப் பயணம்

பனியைத் தேடி - மலைப் பயணம்

புது டில்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த சமயம், எனது நண்பனின் அண்ணன், எங்களைப்போல் அங்கு ரயிலுக்காக காத்திருந்த ஒரு குடும்பத்துடன் சிநேகம் பிடித்துக்கொண்டார். அந்த சிநேகம் எங்களுக்கு பின் பேருதவி செய்ய காத்திருக்கும் என்பதை நாங்கள் அப்பொழுது அறியவில்லை. மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின் ஒரு வழியாக ரயில் வந்து சேர்ந்தது. மெட்ரோ ரயிலைக் கண்டு வியந்தது போலவே, ஷடாப்தி ரயிலின் உட்புறத்தைக் கண்டு வியந்தேன். மிகவும் சுத்தமாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. 

"'டாய் ரயிலுக்கு இந்த ரயிலுடன் கனெக்சன் இருக்கும். நமக்காக அது காத்திருக்கும்' என்று என் நண்பன் சொல்லிய மொழி சற்று ஆறுதல் தர எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். டிக்கெட் முன்பதிவுடன் காலை உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்தது எனக்கு ரயில் ஏறிய பின் தான் தெரியவந்தது. ரயிலில் ஏறியவுடன் எல்லா இருக்கைகளுக்கும் ஒரு தண்ணீர் பாட்டில், மற்றும் இரு மொழி ( ஹிந்தி & ஆங்கிலம்)   செய்தித்தாள் வழங்கினர். சற்று நேரம் கழித்து, காலை உணவு பரிமாறத் தொடங்கினர். பணியாளர்கள் அனைவரும் சுத்தமான சீருடைகளுடன் ராஜஸ்தான் மாநில சிப்பாய்கள் போல் காட்சியளித்தனர். 

இங்கும் பிரட் ஆம்லெட் மற்றும் வடை பொங்கல் தான். வட இந்திய பொங்கலை உண்ண விருப்பமின்றி, பிரட் ஆம்லெட் வாங்கிக்கொண்டேன். ஒரு ட்ரேயில் இரண்டு துண்டு கோதுமை ரொட்டி, ஒரு ஆம்லெட், அமுல் வெண்ணை, ஒரு பாக்கெட் ஜாம், கத்தி  மற்றும் முள் கரண்டியுடன் (fork) பரிமாறினார். அருகில் அமர்ந்திருந்தவர் ஸ்பூன் வைத்து பொறுமையாக அந்த ஒரு கரண்டி பொங்கலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டே உண்டார். எனக்கு கையில் உண்டுதான் பழக்கம் என்பதால், அந்த உணவை விரைந்து உண்டேன். இந்த இரண்டு துண்டு ரொட்டிகள் காலை உணவா, இதை உண்டு எப்படி உயிர் வாழ்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தபொழுது, நான் புது டில்லி நடைமேடையில் உண்ட பூரி எனது ஏப்பமாக வெளிவந்தது.

சற்று நேரம் கழித்து, அனைவருக்கும் ஒரு பிளாஸ்கில் வெண்ணீர் கொடுத்து, உடன் காப்பி தூள், டீத் தூள், அமுல் பால் பவுடர், சர்க்கரை முதலியவை வழங்கினர். எனக்கு காப்பி டீ குடிக்கும் பழக்கம் இல்லாததால், எனது நண்பனுக்கு டபுள் ஸ்ட்ராங் காப்பி கலந்து கொடுத்தேன். என் வாழ்வில் நான் முதல் முறை தயார் செய்த காப்பியும் அதுவே (ஹி ஹி ஹி ...). சற்றும் பயண அலுப்பே தராத அந்த ஷடாப்தி ரயில் பயணம் கல்கா வந்த பொது முடிந்தது. 

கல்கா ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது, அங்கு டாய் ரயில் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். ஆனால் எங்கள் ஆனந்தம் தொடர வில்லை. டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுது, அனைத்து டிக்கெட்களும் புல் என்று எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். அங்கிருந்து சிம்லா செல்ல வாடகை டாக்ஸி தான் ஒரே வழி என்று வெளியே வந்தால், அங்கு பெருங் கூட்டம் இருந்தது. நண்பனின் அண்ணன் விசாரித்ததில் அங்கு சின்ன கார்கள் அனைத்தும் புக் ஆகி விட்டன என்றும், டெம்போ மட்டும் தான் உள்ளது என்றும் தெரியவந்தது. நால்வர் மட்டும் செல்ல டெம்போ எடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்று நாங்கள் தயங்கி, சிம்லா எப்படி செல்வது என்று விழித்தோம். அடுத்து டாய் ரயில் மறுநாள் காலை புறப்படும் வரை ரயில் நிலையத்தில் தங்குவதுதான் ஒரே வழி என்று நாங்கள் முடிவு செய்யும் சமயம், ஒரு வழி பிறந்தது. 

புது டில்லி ரயில் நிலையத்தில் என் நண்பனின் அண்ணன் சிநேகம் செய்த குடும்பம் எங்களுடன் டெம்போவில் வர சம்மதிக்க, எங்கள் டாக்ஸி செலவு பாதியாக குறைந்து, சிம்லா நோக்கிய எங்கள் டெம்போ பயணம் தொடங்கியது. டாய் ரயிலில் செல்வதை விட டெம்போ விரைந்து சிம்லா சென்றுவிடும் என்று எங்கள் ஏமாற்றத்தை நாங்களே சமாதானம் செய்துகொண்டோம். ரயில் நிலையத்தில் இருந்து, ஊருக்குள் வந்தவுடன், டெம்போ ஒரு கடைக்கு அருகில் நின்றது. டிரைவர் மொழியை அண்ணன் மொழி பெயர்த்து 'சிம்லாவில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் வேண்டும் என்றால் இங்கே வாங்கிக்கொள்ளுங்கள்' என்றான். 

எனது ஏழாம் வகுப்பு ஆசிரியர் சாம், அடிக்கடி சொல்லும் 'If you can't break the rules, bend them' என்ற வாக்கியம் தான் என் நினைவிற்கு வந்தது. 'நீங்க எல்லாம் நல்லா வருவிங்க சாமி' என்று நான் அந்த டிரைவரை பார்த்து பல் இளிக்க, தமிழ் தெரியாத அவன்,  நான் எதோ அவனைப் புகழ்வது போல் எண்ணிக்கொண்டு பதிலுக்கு அவனும் இளித்தான். டெம்போவில் அந்தக் குடும்பம் பின் இருக்கைகளில் அமர, மலை சாலைகளில் வாகனம் செல்வதை எனக்குப் பார்க்கக் பிடிக்கும் என்பதால் நான் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன்.  

பொதுவாக வகானம் ஓட்டுபவர்கள் கைபேசியில் பேசுவது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இவனோ மலைப் பாதையில் ஓட்டும் பொழுது பேசிக்கொண்டே வந்தான். பேச்சு பின் சண்டையாகவும் மாறியது, சண்டையில் வண்டியின் வேகம் அதிகரித்தது, எனக்கோ 'பக் பக்' என்று இதயம் துடித்தது. சிம்லா மண்ணில் கால் வைத்து, வாத்தியார் போல் 'புதிய வானம் புதிய பூமி' என்று பாட வேண்டும் என்ற ஆசை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க, ஒரு வழியாக எந்த வித சேதமும் இன்றி எங்களை மலை மீது கொண்டுவந்து சேர்த்தான். சிம்லா நகரில் எங்கும் உறை பனி இல்லாதது கண்டு நான் அஞ்சியபோழுது, பனியைத் தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டினர்.   

முதலில் அந்தக் குடும்பத்தை அவர்கள் தங்கவிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டு பின் நாங்கள் செல்வது என்று முடிவு செய்தோம். அவர்களை இறக்கிவிட்டு நாங்கள் திரும்புகையில் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர்களின் ஒரு பை மட்டும் வண்டியிலேயே தவறவிட்டார்கள் என்று. சிம்லாவில் இருக்கும் சாலைகள் மிக மிக குறுகியவை, அங்கு வாகனத்தை நிறுத்தினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகம். மற்றவர்களுக்கு உதவும் பெரும் குணம் கொண்ட அண்ணன், ஓடும் வண்டியில் இருந்து எதையும் யோசிக்காமல் அவர்கள் பையுடன் இறங்கினார். 

எங்கள் விடுதிக்கு அருகில் இருக்கும் டன்னலில் (tunnel), இடம் தெரியாத அந்த புதிய ஊரில், அவர் வழி தவறாமல் சரியான பாதையில் வர, மொழி தெரியாத நாங்கள் பீதியுடன் காத்திருந்தோம்.      

*********************************************************************************************************
இன்றைய அறிமுகங்கள்:

நகைச்சுவையாக தனது அனுபவங்களை பகிர்வதில் இவருக்கு நிகர் இவரே தான். நகைச்சுவை நயம்பட வெளிவரும் எழுத்து இவருக்கு இயல்பான ஒன்று. தனது பாலிய கால நினைவுகளை அழகா தொகுத்து அதை வலையில் பகிர்ந்தார்.

'மின்னல் வரிகள்' தளத்தில் பால கணேஷ் எழுதிய 'என் பழைய கணக்கு' என்ற பதிவு தான் அது.    
             
*********************************************************************************************************

நகைச்சுவை பற்றி சிந்திக்கும் பொழுது, 'திடங்கொண்டு போராடு  காதல் கடிதப் பரிசுப் போட்டி'யின் முன்னோட்டத்திற்காக இவர் ஒரு கலகலப்பு கலந்த காதல் கடிதம்.

'Ideas Of Harry' என்ற தளத்தில் வாசகர் ஹாரி எதுதிய 'லவ் லெட்டரு எழுத ஆசபட்டேன்' என்னும் பதிவு.

*********************************************************************************************************
காதல் கடிதம் பரிசு போட்டியில் என்னை மிகவும் கவர்ந்த கடிதம் ஒன்று உண்டு. இவர் தற்பொழுது முகநூலில் அதிகம் இருப்பதாலும், நாட்டைக் காக்கும் பனியில் இருப்பதாலும் வலையில் அதிகம் எழுதுவது இல்லை.

'தம்பி' என்னும் தளத்தில் சதீஷ் அவர்கள் எழுதிய 'திருட்டுப் பார்வை பார்ப்பவளுக்கு' என்ற பதிவு.      

*********************************************************************************************************
பள்ளி காலத்தில் காந்தத்தை வைத்து நான் செய்யாத ஆராய்ச்சிகள் இல்லை, நண்பர்களுடன் போடாத சண்டை இல்லை. எனது கந்த நினைவுகளை தட்டி எழுப்பியது இவரது பதிவு.

'கரை சேரா அலை' என்ற தளத்தில் அரசன் எழுதிய 'நினைவுப் பாசிகள்' என்ற பதிவு.    

பொதுவாக எனக்கும் கவிதைகளுக்கும் வெகு தூரம். ஆனால் இவர் கவிதைகள் எனக்கும் புரியும்படி இருப்பது சிறப்பு. நீங்களும் ஒன்றை படித்து தான் பாருங்களேன் . 'மல்லிகைப்பூ தோலொன்று...'

*********************************************************************************************************
ஒரு சரித்திர நாவல் எழுத வேண்டும் என்பது இவரது ஆசை. அதற்கான பணியையும் தொடங்கி நிதானமாக பயணித்து வருகிறார். இவர் செய்யும் வரலாற்று ஆராய்சிகளை பார்க்கும் பொழுது இவரது படைப்பு சிறப்பாக வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

'இரவின் புன்னகை' என்ற தளத்தில் வெற்றிவேல் எழுதிவரும் 'வானவல்லி' என்னும் சரித்திர தொடர்.      

*********************************************************************************************************

விளம்பரம் : இன்று வாசகர் கூடத்தில் நான் எழுதிய பதிவையும் வாசிக்கவும். 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவின் தோல்வியடைந்த முயற்சி'  
*********************************************************************************************************
மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்   
மேலும் வாசிக்க...

Wednesday, March 19, 2014

பனியைத் தேடி - தலைநகரில்

நிசாமுதினில் இருந்து முதலில் நாங்கள் சென்ற இடம் புது டில்லி ரயில் நிலையம். நிசாமுதின் மற்றும் புது டில்லி ரயில் நிலையம், நமது எக்மோர் மற்றும் சென்ட்ரல் போல் என்று நானே யூகித்துக்கொண்டேன். வளர்ச்சியின் உச்சகட்டத்தில் நம் தலை நகரம் இருக்கும் என்ற எண்ணத்துடன், ரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கோ ஏழ்மை தலை விரித்தாடும் கோலத்தை கண்டேன். சென்னை சென்ட்ரலை விடவும் அதிக அளவில் தங்க இடம் இல்லாமல் நடைமேடையில் மக்கள் வசிப்பதைக் கண்டேன். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல் சென்னையில் நான் கண்டிராத மனித ரிக்சாக்களை அங்குக் கண்டு மனம் நொந்தேன். பல எதிர்பார்ப்புக்களுடன் தலை நகரில் வந்து இறங்கிய எனக்கு பெருத்த ஏமாற்றம் தான்.   

இந்திய ரயில்களுக்கும் நேரம் தவருவதுக்கும் ஒரு இனம் புரியா பந்தம் இருப்பதாலும், சென்னையில் இருந்து புது டில்லி  செல்லும் ரயில்கள் என்றுமே சரியான நேரத்திற்கு செல்வதில்லை என்பதாலும், டில்லியில் இருந்து எங்களது சிம்லா பயணத்திற்கு டிசம்பர் 24 அன்றே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். தினமும் காலை ஆறு மணிக்கு ஒரு முறை  மட்டும் கல்கா செல்லும் ஷதாப்தி  எக்ஸ்பிரஸ் அது.  என் நண்பனின் முன் யோசனைப் படி செயல் படாமல், அன்றே முன்பதிவு செய்திருந்தால் நிச்சயம் அந்த ரயிலை தவற விட்டிருப்போம். ஒரு நாள் பொழுது டில்லியில் என்றானது. 

புது டில்லி ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் MEM இன்டர்நேஷனல் ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொண்டு, டில்லியை சுற்றக் கிளம்பினோம். தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் பொழுதுதான் வேற்று மொழி எதுவும் கற்காதது அவமானமாக உள்ளது. குறிப்பாக ஹிந்தி தெரியாமல் வட தேசம் நோக்கி சென்றோமானால் ஒரு எலியைக் கூட யானை என்று ஏமாற்றி நம் தலையில் கட்டுபவர்கள் அதிகம். எங்களுக்கு மிக அருகில் அதிருஷ்ட தேவதை இருந்ததால், எங்கள் குழுவில் இருந்த நண்பனின் அண்ணனுக்கு  ஹிந்தி சரளமாக பேசவும் படிக்கவும் தெரியும். அவரது ஹிந்தி பேச்சினால் எங்கள் பயணத்தில் 4000 ரூபாய் வரை சேமித்தோம் என்பது இன்றளவும் நம்ப முடியாத உண்மை. மேலும் அவர் உயற்கல்வி பயின்றது டில்லியில் என்பதால், அவரது தலைமையில் எங்கள் தலை நகர் உலா தொடங்கியது. 

டில்லியில் அதிக பிரபலமான சில அங்காடித் தெருக்களுக்கு செல்வது என்று முடிவு செய்துகொண்டு, அங்கு பயணிக்க மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். மெட்ரோவில் எங்கு செல்லவேண்டுமானாலும் டோக்கன் தான். நமது இலக்கை சொல்லி காசு கொடுத்தால் அதற்கு ஒரு டோக்கன் தருகின்றனர், அதை பயன்படுத்தி தான் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முடியும். அதே போல் நம் இலக்கை அடைந்த உடன் அதை பயன் படுத்தினால் தான் ரயில் நிலையத்தை விட்டு வெளிய வர முடியும். இங்கு வழக்கமாக பயணிப்பவர்கள் பாஸ் வைத்துள்ளனர், பயண தூரத்தை நுழைவு மற்றும் வெளியேறும் ஸ்டேஷன் மூலம் கணினி கணித்துக் கொண்டு அதற்கேற்ப காசு கழித்துக்கொள்கிறது. 

அந்த ரயில் நிலையத்தில் வழக்கமாக காணப்படும் பாண் பராக் மற்றும் எச்சில் கரைகள் சுவரில் இல்லாததை கண்டு வியந்தேன். மெட்ரோ ரயில் வந்தவுடன் தானியங்கிக் கதவு திறந்து எங்களை வரவேற்தது. அந்த ரயிலின் உள்ளே சென்றவுடன், 'அம்மம்மா நாம் இந்தியாவில் தான் உள்ளோமா?' என்ற ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். மேல்நாட்டு சினிமாவில் காண்பது போன்ற மிகவும் சுத்தமாக, தட்ப வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதியுடன் நவீனமாக இருந்தது. ஒரு நாளைக்கு பல லட்சம் மக்கள் டில்லியில் மெட்ரோவை பயன்படுத்தினாலும்  இவ்வளவு சுத்தமாக வைத்திருப்பது பெரிய விஷயம் தான். 

டில்லியில் ரோட்டோரக் கடைகளுக்கு பஞ்சமே கிடையாது. எத்தனை வகைகள். எத்தனை கடைகள். இங்கு சாப்பாட்டு ராமன் அவதாரம் எடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் சற்று சுருக்கமாக கையேந்தி பவன்களை பற்றி சொல்லி விடுகிறேன். எமது நண்பரின் அண்ணன் டில்லியில் படித்தால் அவருக்கு பரிட்சயமான கடைகளுக்கு அழைத்துச் சென்றார். முதலில் குல்ச்சா வாங்கித் தந்தார், பின் பன்னீர் பிரட் பஜ்ஜி, ஆலு டிக்கி, ரசகுல்லா, பாணி பூரி, சிக்கன் மோமோ என அனைத்து வகைக்கடைகளிலும் ஒரு வேட்டை தான். எல்லாமே ரோட்டோரக் கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி வந்து விட்டு டில்லி அப்பளத்தை தவற விடுவோமா, அதையும் கொறித்து விட்டோம். இரவு ஒரு கோழிக்கு மோட்சம் கொடுத்துவிட்டு எங்கள் தலை நகர உலாவை முடித்து விட்டு அறைக்கு திரும்பினோம். 

மறு நாள் காலை, டில்லியில் வரலாறு காணாத பனி பொழிந்த அந்த வேளையில் கல்கா நோக்கி செல்லும் ரயில் பிடிக்க புது டில்லி ரயில் நிலையம் நோக்கி சென்றோம். ரயிலுக்காக காத்திருந்த வேளையில் அங்கு நடைமேடையில் ஒரு தள்ளு வண்டியை சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்க அங்கு சென்று பார்த்தோம். அங்கு பூரி விற்றுகொண்டிருன்தனர். பத்து ரூபாய்க்கு எட்டு பூரிக்கள் சப்ஜியுடன் தந்தனர். பூரிக்கு உருளை மசாலா மட்டுமே உண்டு பழக்கப் பட்ட நாக்கு அங்கு பசியின் பிடியில் அந்த நீர் போன்ற சப்ஜியுடன் வயிற்றை நிரப்பியது. 

ஆறு மணிக்கு இந்த ரயிலை பிடித்து கல்கா சென்று, அங்கிருந்து மலை வழியாக சிம்லா செல்லும் டாய் ரயிலில் செல்வதுதான் எங்கள் திட்டம். அந்த டாய் ரயில் நமது ஊட்டி ரயில் போல, அதில் சென்றால் தான் சிம்லா மலைகளின் இயற்கை எழிலை நன்கு அனுபவிக்க முடியுமாம். மணி ஏழானது, பின் எட்டானது, பின் ஒன்பது மணியையும் கடந்தது. தனது சேவை நாட்களில் ஷதாப்தி ரயில் என்றுமே நேரம் தவறியதில்லையாம். எங்கள் அதிஷ்டம் அதையும் தொத்திக்கொண்டது. ஷதாப்தி ரயில் வருமா, டாய் ரயிலை பிடித்து விடுவோமா?            

இன்றைய அறிமுகங்கள்:

*********************************************************************************************************
ஒரு முறை எனக்கு எழுதும் பொழுது ஒரு சந்தேகம் எழுந்தது. 'கருப்பு வெள்ளை' அல்லது 'கறுப்பு வெள்ளை' இதில் எது சரி என்று ஒரே குழப்பமானது. அப்பொழுது எனது குழப்பத்தை போக்கியது இவரது பதிவு. இவரும் இவர் நண்பரும் இணைந்து ஒரு வலைத்தளம் நடத்தி வருகின்றனர். இவர் நண்பரை சந்தித்துள்ளேன். ஆனால் இவர் இதுவரை 'முகமூடிப்' பதிவரகவே உள்ளார். மற்ற பதிவர்களைப் போல் இவரைக் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அது நிறைவேறுவது அவர் கையில் தான் இருக்கிறது.            

'எங்கள் ப்ளாக்' என்னும் தளத்தில் ஸ்ரீராம் சார் எழுதிய 'கருப்பும் கறுப்பும்' பதிவு தான் அது.  

*********************************************************************************************************

கூகுள் தந்த வலையை பயன்படுத்திக்கொண்டிருந்த நான், சொந்தமாக டொமைன் வாங்க முடிவு செய்து, இந்த ஆண்டு ஜனவரி அன்று எனக்கென்று ஒரு முகவரியை உருவாக்கினேன். blogspot.in  இல் இருந்து .com மாக மாறும் பொழுது எனக்கு சில இன்னல்கள் தோன்றின. அவற்றை சரிசெய்ய எனக்கு உதவியது இவரது பதிவு. அவரேவும் எனக்கு சில கோட்களை மாற்றித் தந்தார். பதிவர்களுக்கு டெக்க்னிலாக உதவும் தயாள குணம் படைத்தவர்.

'ப்ளாக்கர் நண்பன்' அப்துல் பாஸித் எழுதிய   'ப்ளாக்கரில் கஸ்டம் டொமைன் பிரச்சனை' என்ற பதிவு தான் அது.  

டொமைன் மாத்தி, புது பதிவும் எழுதி வெளியிட்ட பின், அதை தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை. அதற்கும் இவரிடம் தீர்வுடன் பதிவு உண்டு. 'பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு' என்ற பதிவு தான் அது.
            
*********************************************************************************************************
நான் என் வலை பயணத்தின் தொடக்கத்திலேயே 'களவு' என்ற தொடரை தொடங்கி கைவிட்ட பொழுதும், பின் 'நித்ரா' என்று மற்றொரு தொடரை எழுதினேன் அல்லவா. அதற்கு இவர் தொடராக எழுதிவந்த, ஒரு கல்லூரி கால காதல் கதையின் மூலம் கிடைத்த ஊக்கம் தான். நேரம் கிடைப்பின் நீங்களும் படித்துப்பாருங்களேன் உங்களுக்கும் பிடித்து விடும்.

'பயணம்' என்னும் தளத்தில் கோவை ஆவி அவர்கள் எழுதிவரும் 'ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!!' என்ற தொடர் தான் அது.

*********************************************************************************************************
நித்ரா எழுத ஊக்கம் தந்த தொடரை பற்றிச் சொன்னேன். ஒரு தொடர் கதையை நிறைவு செய்வதன் அவசியத்தை எனக்கு உணர்த்தியது இவரது தொடர்தான். எல்லாப் பகுதிகளையும் வரிசையாக வெளியிட்டு, வாசகர்களை தக்கவைத்துக்கொண்டார் இவர்.

'ஸ்கூல் பையன்' என்னும் தளத்தில் வெளிவந்த 'ரத்தம் பார்க்கின்' என்ற த்ரில்லர் தொடர் தான் அது.    

*********************************************************************************************************
என் தங்கையின் நண்பன். இவன் 'கல்கியின்- பொன்னியின் செல்வன்' போல் ராஜ ராஜ சோழன் காலத்தில் நடந்தது போன்ற ஒரு வரலாற்று பதினம் எழுதிவருகிறான். இதுவரை அவனது வலையில் அந்த பதினம் மட்டுமே எழுதி, பத்தொன்பது அத்தியாயங்கள் எழுதியுள்ளான்.

'Arayan' என்னும் தளத்தில் அவன் எழுதும் 'கழல்' என்னும் தொடர் தான் அது.

*********************************************************************************************************
மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்   
மேலும் வாசிக்க...

Tuesday, March 18, 2014

பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல்

என்னால் எழுத முடியாமல் தடைபட்டு போன நான் சிம்லா சென்ற பயண அனுபவங்களை உங்களுடன் பகிர விரும்பி, எனது அறிமுகங்களுக்கு முன் சிறு பகுதியாய் தினமும் எழுதவுள்ளேன்.

***************************************************************************************
சில ஆங்கிலப் படங்களிலும், தமிழ் சினிமா பாடல்களிலும் காட்டப்பட்டப் பனிப் பிரதேசங்களைப் பார்த்து, சிறுவயது முதலே உறைப்பனியை கையில் எடுத்து விளையாட வேண்டும் என்ற ஆசை மனதில் வளர்ந்து கொண்டு இருந்தது. பொருளாதார சிக்கல்களால் அலுவலகம் சேரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அலுவலகம் சேர்ந்து கல்லூரி நண்பர்களுடன் கலந்து பேசி, ஏழு பேர் கொண்ட குழு உருவாகி, டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் வேளையில் மனாலி செல்வது என்று முடிவானது.    

டிசம்பர் மாதம் என்பதால் அங்கு குளிர் உச்சக்கட்டத்தை அடைந்து, பனி உருவாகும் என்பது எங்கள் எண்ணம். அதே வானிலை மோசமான நிலையை அடைந்தால், சாலையில் பனிச் சரிவுகள் உண்டாகி, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு, அங்கேயே சில நாட்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகலாம் என்ற ஒரு செய்தியும் எங்களை கலக்கியது. பல குழப்பங்களுக்கு நடுவே எங்கள் இலக்கு சற்று மேற்கு திரும்பி, சிம்லா செல்வது என்று முடிவானது.       
   ​
ஏழு பேர் என்பதால், நால்வர்  மற்றும் மூவராக பிரித்து ரயில் சீட்டு முன்பதிவு செய்துகொண்டோம். வெய்டிங் லிஸ்ட் தான் என்றாலும் நிச்சயம் கன்பார்ம் ஆகி விடும் என்ற நம்பிக்கை முன்பதிவு செய்த என் நண்பனுக்கு அதிகமாகவே இருந்தது. சில நாட்கள் கழித்து நண்பர்கள் மூவர் பின்வாங்க, என்னுடன் சேர்த்து நால்வர் மட்டுமே செல்வது என்று இறுதியானது. நான், எனது நண்பன், எனது நண்பனின் பள்ளி நண்பன், மற்றும் அவனின் அண்ணன், இதுவே எங்கள் பயணக் கூழு.  மூவருக்கு என முன் பதிவு செய்த சீட்டில் என்னைத் தவிர மற்ற இருவரும் பின்வாங்க, தனிமையான ரயில் பயணம் எனக்காக காத்திருந்ததை அப்பொழுது நான் அறியேன். 

எனக்கும் எனது  நண்பனுக்கும்(பின் வாங்கியவர்களில் ஒருவன்) கல்லூரி முதலே ஒரு ஆசை உண்டு. முக்கால் காற்சட்டை அணிந்து, தோளில் பையுடன், கலர்க் கண்ணாடி அணித்து ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி போல் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான். என் நண்பன் என்னுடன் வராவிடினும், முக்கால் காற்சட்டையுடன் 2012, டிசம்பர் 21 ஆம் நாள் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, பனியைத் தேடிய  என் பயணம் ஆரம்பமாகியது.  

எனது நண்பனின் எண்ணம் போலே முன்பதிவு செய்த டிக்கெட்கள் கன்பார்ம்  ஆகின. மூவர் S3 யிலும் நான் மட்டும் S8 யிலும் என்று கணினி முடிவு செய்திருந்தது. சென்ட்ரலில் இறங்கியவுடன் ஹிக்கின் பாதம்ஸ் சென்று, மூன்று சுஜாதாவின் நாவல்களை வாங்கிக்கொண்டேன்.     

பயணிகள் பெயர் பட்டியல் வழக்கம் போல் தந்த ஏமாற்றத்துடன், எனது பெட்டியில் நான் அடியெடுத்து வைக்கும் பொழுது எதிரே ஒரு பூட்டு-சங்கிலி வியாபாரி வந்து என்னை தடுத்தார். பூட்டுடன் வலுவான சங்கிலி எனது உடமைகளை ரயிலில் பாதுகாக்க உதவும் என்று சொல்லி,  அறுபது ரூபாய்க்கு என்னிடம் விற்றார். இன்றளவும் எனது அனைத்து ரயில் பயணங்களிலும் அந்த பூட்டு சங்கிலி எனது உடமைகளுக்கு ஒரு அரணாக உள்ளது.  

எனது அனைத்து ரயில் பயணங்களுக்கும் மூன்று ஒற்றுமைகள் உண்டு:

1) கட்டாயமாக டூத் பிரஷ் எடுத்துச் செல்ல மறந்திடுவேன்.

2) எனது இருக்கை கழிவறைக்கு மிக அருகில் அமைவது வழக்கம்.

3) எனது வயதில் இருந்து +/- மூன்று வயது பெண்பால் பயணிகள் எனது பெட்டியில் பயணிக்கும் பாக்கியம் இதுவரை எனக்கு கிட்டவில்லை. (எல்லாம் ஆண்டிகளும் பாட்டிகளும் தான்)


இந்தப் பயணமும் இந்த ஒற்றுமைகளுக்கு விதிவிலக்கு அல்ல. ரயில் தொடங்கும் முன் என் மற்ற நண்பர்களை சந்தித்தேன், என்னிடம் இருந்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டுச் சென்றனர். எல்லாப் பெட்டிகளும் இணைக்கப் பட்டவை தானே இடையில் அவர்களை சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். வாங்கிய சங்கிலியுடன் எனது பையை கீழே பூட்டி விட்டு, சைடு அப்பர் பெர்த்தில்  நான்  ஏறி அமர, MAS - Durronto எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து தனது புது தில்லி நோக்கிய பயணத்தை தொடங்கியது.    

இரவு உணவு வீட்டில் இருந்து கொண்டுவந்த புளியோதரை மட்டும் அவித்த முட்டையுடன் முடித்த பொழுது, தமிழக உணவின் சுவையை அடுத்த எட்டு நாட்களுக்கு நான் இழக்கப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை. இரவு ரயில் ஆந்திராவை கடக்கும் பொழுது, காலை அலுவலகம் சென்று வந்த களைப்பில் நன்கு உறங்கி விட்டேன். காலை உணவாக பிரட் ஒம்லெட் ஆர்டர் செய்துகொண்டேன். அருகில் இருந்தவர் உண்ட பொங்கல் வடையைக் கண்ட பொழுதே எனது   பிரட் ஒம்லெட் பன் மடங்கு மேல் எனத் தோன்றியது.

ஆந்திராவை முழுவதும் கடந்து வடக்கு நோக்கி செல்ல, ரயில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நிற்கத் தொடங்கியது. அந்த ஊர்களில் ஏறுபவர் ஓபன் டிக்கெட் வாங்கினாலும், ஸ்லீப்பர் பெட்டிக்குள் ஏறி காலியாக இருக்கும் இடங்களை தங்கள் வசமாக்கி, அந்த சீட்டுக்கு உரியவரை ஓரம் ஒதுக்கி விட்டனர். எனக்கு சைடு அப்பர்  என்பதால் எனது அருகில் யாரும் வரவில்லை. எனது இருக்கையை காலியாக விட்டு நான் அசையமுடியாத, எனது மற்ற நண்பர்களையும் காணசெல்ல  முடியவில்லை. இருப்பினும் என் நண்பன் தன் இருக்கைக்கு ஒரு தமிழரரை காவல் வைத்து விட்டு, என்னைக் காண வந்தான். அவன் பெட்டியிலும் இதே நிலை தான் என்று புலம்பினான். ரயில் ஊர்களை நெருங்கும் பொழுது கழிவறைக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டேன்.         

மதியமும் இரவும், முட்டை பிரியாணியுடனும்  (சுவை தக்காளி சாதம் போலத் தான் இருந்தது), எனக்கு வழித்துணையாக பயணித்த  சுஜாததாவுடனும் சென்றது. தனிமையில் இரவு வருவதற்குள் அந்த ஒரு பகல் பல யுகங்கள் போல் தோன்றியது. அதிகாலை வேளையில் குளிர்ந்த வானிலை என்னை எழுப்ப, ரயில்  பனி மூட்டம் காரணமாக சற்று மெதுவாக செல்வதை உணர்ந்தேன். சீட்டை விட்டு இறங்கிய போது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த பலரும் எனது முக்கால் காற்சட்டையை பார்த்து வியந்தனர். ரயில் ஆக்ராவை அடையும் பொழுது, என்னால் குளிரை பொறுக்க முடியாமல், ஜீனுடன் சூவையும் மாற்றிக்கொண்டேன். குளிரில் மதுபானங்கள் பருகுவது எதற்கு என்பதை அந்த நிமிடம் என் அருகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் என்னிடம் சொல்லி, நக்கலாக சிரித்தார்.      

ஏழு மணிநேர தாமதமத்துடன் ரயில், நிஷாமுத்தின் ரயில் நிலையத்தை அடைய, பல வித எதிர்பார்க்புகளுடன், என் நண்பர்கள் மூவர் படை சூழ டிசம்பர் 23 அதிகாலை தலை நகரில், எனது வலது காலை எடுத்து வைத்தேன்.

தொடரும்.... 
***************************************************************************************
இன்றைய அறிமுகங்கள்:

நான் வலையுலகில் அடியெடுத்து வைக்கும் முன்னமே, மிகவும் ரசித்து படித்த பதிவை இங்கு முதலில் அறிமுகம் செய்யக் கடமைப்பட்டுள்ளேன். அது ஒரு பயணக் கட்டுரை. அந்த கட்டுரையை படித்த பின் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் என் மனதினுள் எழுந்தது. அந்தப் பதிவின் தாக்கம் அடுத்த ஆறு மாதத்தில் என்னை அங்கு அழைத்துச் சென்றது.

'திடங்கொண்டு போராடு' என்னும் வலையில் சீனு அவர்கள் எழுதிய 'தனுஷ்கோடி' பற்றிய பயணக்கட்டுரை அது.  

***************************************************************************************

சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்ததால், வலையில் இருக்கும் நல்ல சிறுகதைகள் தேடும் பொழுது, எனக்கு ஒரு கதை அறிமுகமானது. இதுவரை நான் படிக்காத, சற்று கருப்பு நிறமாக பிறந்து, திருமணத்திற்கு பல இன்னல்களுக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் உணர்சிகளை மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட கதை.

சிவகாசிக்காரன் என்ற வலையில் நண்பர் ராம் குமார் எழுதிய 'கலர்க்காதல்' என்னும் சிறுகதை தான் அது.

***************************************************************************************
நான் வலையில் ஆராம்ப காலத்தில் எப்படி என் தளத்தை பிரபலப் படுத்துவது என்று தவித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு மிகவும் உதவிய பதிவு இது. அவர் சொல்லியது அனைத்தையும் பின்பற்ற முடயாததால் ஏனோ என்னால் என் வலையின் வாசகர் வட்டத்தை அதிகரிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். வலை எழுதத் துவங்கும் புதியவர்களுக்கு இந்தப் பதிவு மிகவும் பயன்படும்.

'அவர்கள் உண்மைகள்' என்ற தளத்தில் மதுரைத் தமிழன் அவர்கள் எழுதிய 'புதிய பதிவாளர்கள் வெற்றி பெற எனது வலைத்தள அனுபவ டிப்ஸ்' என்னும் பதிவு.
  
***************************************************************************************

ஒரு கூட்டு முயற்சியாக, புத்தக விமர்சனங்கள் பற்றி மட்டும் எழுத உருவான தளம் 'வாசகர் கூடம்'. இதில் நானும் ஒரு பங்குவகிக்கின்றேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் மட்டுமல்ல நீங்களும் இதில் பங்குகொள்ளலாம். நீங்கள் எழுத விரும்பும் புத்தகத்தின் விமர்சனத்தை vasagarkoodam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பினால், அது வாசகர் கூடத்தில் வெளியிடப்படும்.

நீங்கள் அனுப்பும் பதிவு ஏற்கனவே வெளியானதாக இல்லாமல் புதிய பதிவாக இருக்க வேண்டும். வாசகர் கூடத்தில் வெளியான பின், அந்தப் பதிவை உங்கள் தளத்தில் வெளியிட்டுக்கொள்ளலாம்.

***************************************************************************************  
எனக்கு கல்லூரி காலத்தில் சுஜாதாவை அறிமுகம் செய்த எனது நண்பன், சில காலங்களுக்கு முன்னிருந்தே ஆங்கிலத்தில் வலையில் எழுதிக்கொண்டிருந்தான். 'வெட்டி பிளாக்கர் சிறுகதைப் போட்டியை' முன்னிட்டு தமிழில் வலை தொடங்கி சிறுகதை எழுதினான். நிறைய வாசிக்கும் வழக்கம் உள்ளவன்.

சரித்திர காலத்தில் நடப்பது போன்ற சிறுகதை, அதன் முடிவு என்னை மிகவும் ரசிக்கச் செய்தது. கதையின் தலைப்பே அவன் செய்த ஆராய்சிகளை பிரதிபளிக்கும்.

'பேச்சு காற்றோடு போகும். எழுது...' என்ற வலையில் அவன் எழுதிய சிறுகதை 'வளரி'.      

சென்ற ஆண்டு அவன் ஆங்கிலத்தில் எழுதிய பொழுதே எனக்கு மிகவும் பிடித்துப்போன சிறுகதை, தற்போது தமிழில் மேலும் மெருகேற்றி 'நாலு இட்லி ஒரு கலக்கி'  என புது உருவம் பெற்றுள்ளது.

இதுவரை மூன்று பதிவுகள் மட்டுமே எழுதி தமிழ் வலையுலகில் புதியவனாக உள்ள அவனை, உங்களது ஊக்கம் தமிழில் தொடர்ந்து எழுத தூண்டும் என்று நம்புகிறேன்.

***************************************************************************************

மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்
மேலும் வாசிக்க...

Monday, March 17, 2014

எனது வலையுலகப் பயணம்

பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் அனைவரைப் போல தமிழ் தான் எனக்கு மிகவும் கடினமான பாடமாக இருந்தது. உயற்கல்வியில் நான் அறியாமலேயே எனக்கு  தமிழ் மீது பற்று தோன்ற பெரும்பங்கு வகித்தவர் எனது தமிழ் ஆசிரியர் சேகர் ஐயா. கல்லூரியில் தமிழ் என்ற ஒன்று இல்லாமலே போக, காலத்தைக் கடக்க ஆங்கில நாவல்களை படிக்கும் சமயத்தில், என் கையில் கிடைத்த முதல் தமிழ் நாவல் கல்கியின் 'பார்த்திபன் கனவு'. ஆங்கில நாவல்கள் படிக்கும் பொழுது சில நேரங்களில் கதை எழுத வேண்டும் என்ற ஆசை தோன்றி மறைவதுண்டு. தட்டச்சு கலையை நான் அறியேன் என்பதால் அந்த ஆசை மீது எனக்கு பெரும் ஈர்ப்பு தோன்றவில்லை.

கல்லூரி இறுதியாண்டில் நண்பர்கள் மூலம் அறிமுகமானது சுஜாதாவின் படைப்புகள். அவரது நாவல்களை படிக்கத் தொடங்கிய பின் ஆங்கில நாவல்கள் பக்கம் ஏனோ செல்லவில்லை. பணியில் சேர்ந்த பின்பு, ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன் நேரே அம்பத்தூர் 'பொண்ணு சூப்பர் மார்கெட்' சென்று, கணேஷ்-வசந்த் தோன்றும் நாவலை வாங்குவதை, ஓராண்டு காலத்திற்கு வழக்கமாக கொண்டிருந்தேன்.       

இப்படி நாட்கள் செல்ல, அலுவலகத்தில் சென்ற ஆண்டு உடன் பணிபுரியும் சீனுவின் அறிமுகம் கிடைத்து, இணையத்தில் எழுத 'வலை' என்னும் மேடை இருப்பதை அறிந்தேன். ஜனவரியில் ஒரு நாள் புத்தகக் கண்காட்சிக்கு சீனு என்னை அழைத்துச் செல்ல, அங்கு விகடன் 'வட்டியும் முதலும்' புகழ் ராஜீ முருகன் சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார். அவர் 'கதைக்கு எங்கும் தேடிச் செல்ல வேண்டாம், சுற்றி உள்ள மக்களைப் படித்தால் போதும்' என்று சொன்னார். அது என் மனதினுள் மறைந்து இருந்த எழுத்து ஆசையை மீண்டும் வெளிக்கொணர்ந்து , கூகுள் தந்த விலையில்லா தளத்தில் 'கனவு மெய்ப்பட' என்ற வடிவம் பெற்று, 2013 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்து எட்டாம் நாள் தொடங்கியது உங்களுடனான என் வலையுலக வாழ்க்கை. 

என் முகநூலில் 'நான் எழுதும் முதல் கதை' என்று அந்த லிங்கை பகிர்ந்த பொழுது, எனக்குள் எதோ ஒன்று பெரிதாய் சாதித்த மகிழ்ச்சி தோன்றியது. எனக்கு தெரிந்த அனைவரையும் படிக்கச் சொல்லி தொல்லை  செய்தேன், ஒரு சிலர் லைக் கொடுத்தனர். திடீரென்று அடுத்த நாள் நிறைய கருத்துரைகள் வந்து என் மாடரேஷனுக்காக காத்திருந்தன. அதுவரை என் வாழ்வில் அறியாத பெயர்கள், யார் இவர்கள் என்று ஒரே குழப்பம். அந்த வாரம் சீனு வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தமையால் என்னை அறிமுகம் செய்துள்ளார் என்று பின் தெரிந்து கொண்டேன். அப்படி எனக்கு அறிமுகமான வலைச்சரத்தில் இன்று என்னையும் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்த 'தமிழ்வாசி' பிரகாஷ் அவர்களுக்கும், சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றி.    

ஆரம்பத்தில் சிறுகதை மட்டுமே எழுதிய நான், பின் 'களவு ' என்ற ஒரு தொடர் கதையை எழுதினேன். அந்த தொடருக்கு தக்க வரவேற்பு இல்லாத காரணத்தால், மேலும் தொடர ஊக்கமின்றி இடையிலேயே நிறுத்தி விட்டேன். சில மாதங்கள் கழித்து 'நித்ரா' என்ற தொடரை தொடங்கி முடித்தேன். 'நித்ரா' எழுதிய சமயத்தில் நண்பர்களிடம் இருந்து கிடைத்த ஊக்கம் தான் என்னை அந்த தொடரை நிறைவு செய்ய வைத்தது என்பதில் ஐயம் இல்லை.    

எனது பயண அனுபவங்களை பற்றி 'ஊர் சுற்றல்' என்ற பகுதியில் எழுதினேன். இந்தப் பகுதியை மேலும் தொடராமல் விட்டது சற்று வருத்தம் தான்.   

எனது தளத்தை பிரபலப் படுத்த ஒரே வழி சினிமாதான் என்ற நிலை உருவானது. புதுப் படங்களை பற்றி சூடாக விமர்சிக்க எனக்குள் ஆர்வம் இல்லாததால்,  கல்லூரிக் காலத்தில் என்னைக் கவர்ந்த சில 'உலக சினிமாபடங்களை குறித்து எழதத் தொடங்கினேன். அதில் கொஞ்சம் வரவேற்பு கூடியது. 

மே மாதத்தில் தொடங்கி எனது வாழ்கையில் நடக்கும் சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து 'தேன் மிட்டாய்' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். இன்றளவும் எந்த மாதமும் தேன் மிட்டாய் தடை படாது வெளிவருவதே என்னளவில் மிகப்பெரிய வெற்றியே.

இந்த நிலையில் எதுவும் யோசிக்காமல் விளையாட்டாக எழுதிய பதிவு 'மழை சாரலில் பஜ்ஜி' அதிக மக்களால் படிக்கப் பட்ட பொழுது, 'சாப்பாட்டு ராமன்' என்ற புதிய அவதாரம் எடுத்தேன். இன்று வரையில் நான் எழுதி அதிகம் வாசிக்கப் படுவது சாப்பாட்டு ராமன் பதிவுகள் தான். சினிமா மற்றும் உணவகங்களுக்கு தான் மக்களிடையே எத்தனை வரவேற்பு!  

என்னைப் பார்த்து என் நண்பர்கள் இருவர் தமிழில் எழுதத் தொடங்கியதையே எனது இந்த ஓராண்டுக் கால பதிவுலக வாழ்க்கையின் வெற்றியாக என்னால் பெருமிதத்துடன் கூற முடியும். 

சற்றும் சோர்வு இல்லாமல் உற்சாகத்துடன், சுஜாதா சொல்லியது போல், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.  சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசையுடன் வந்த என் பாதை எப்படியோ மாறினாலும், தொடர்ந்து எழுத எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு தத்தளித்து கொண்டே செல்கின்றேன், காலமும் நேரமும் உதவும் என்ற நம்பிக்கையுடன். ​

எனது பதிவுகளில் நான் மிகவும் ரசித்தவை 'தொடாமலே தொண்ணூறு' மற்றும் 'குள்ளன்'. நீங்களும் படித்துப் பாருங்களேன். நாளைய இடுக்கையில் சில அறிமுகங்களுடன் மீண்டும் சந்திப்போம்.  

புன்னகையுடன் 
ரூபக் 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது